Wednesday, May 27, 2015

pisaku -story




பிசகு -எஸ்ஸார்சி





பெரியசாமி மீது எந்த தவறுமில்லை.எல்லாப்பிழைக்கும் எப்போதும்போல் நானேதான் பொறுப்பு.
மணி முத்தாறு வலமாகச்செல்லும் திருமுதுன்றம் என்னும் ஊரில் டெலிபோன் இலாகாவில் நானும் பெரியசாமியும் வேலையில் சேர்ந்தோம் சிலர் டெலிபோன் இலாகாவில் வேலை பார்த்தோம் என்பார்கள் ஒருசிலர் வேலைசெய்தோம் என்பார்கள் ஒரு அலுவலகத்தில் வேலையைப் பார்ப்பதா இல்லை செய்வதா என்கிற ஆராய்ச்சிக்குள் போய் யாருக்கும் ஒன்றும் ஆகப்போவது இல்லை.
எது எப்படி என்று கேள்விகள் எல்லாம் கேட்காதீர்கள் டெலிபோன் இலாகாவில் வேலை செய்கிறவர்களுக்கு தொழிற்சங்கம் அதன் தொடர்பான பணிகள் எல்லாம்தான் மூச்சுக்காற்று.வேறு எங்காவது வேலைக்குப்போயிருந்தால் தொழிற்சங்கம் இத்யாதிகள் இப்படியெல்லாம் அனுபவமாகுமா என்றால் அதனைச் சொல்லமுடியாததுதான்
.தொலைபேசிப்பணியாளர் தொழிற்சங்கத்தில் இரண்டு மூன்று பிரிவுகள் இருக்கும்.சிவப்பு, சிவப்பிலிலேயே கொஞ்சம் திக்காக வேறு பிற்கு வெள்ளை என ச்சங்கக்கொடிகள் கொண்டவை அவை.
என் நண்பர் பெரியசாமி நான் இருக்கின்ற தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இல்லை எப்படியாகிலும் விஸ்தாரமாய்ப் பேசி என் சங்கத்தற்கு அவரைக்கொண்டு வரவேண்டும்.. இது ரொம்ப நாளாக எனக்கு ஆசை எல்லோருமே நான் இருக்கும் தொழிற்சங்கத்தில் உறுப்பினராகிவிட்டால் தான் சரி என்று கூட எனக்குத்தோன்றும். இந்த் நோக்கத்தோடுதான் நான் எப்போதும் இருந்தேன். இது எல்லாம் சரிப்படுமா இல்லை உறுப்படுமா என்கிற விஷயம் எனக்கு எங்கே தெரிந்தது.அந்த பெரியநெசலூர் பெரியசாமி எந்த சங்கத்தில் இருந்தார் யாருக்குத்தான் என்ன என்று எல்லோரும் வேதாந்தியாய் இருந்துவிட்டால் சண்டை ஏது சச்சரவு ஏது
அப்படியெல்லாம் விட்டுவிடத்தான் முடிகிறதா என்ன. மனக்குரங்கு சதா சர்வகாலமும் விழித்துக்கொண்டு திருவிளையாடலைச் செய்துகொண்டே இருக்கிறதே எங்கே மனிதர்களைச்சும்மா இருக்க விடுகிறதா என்ன.. உலகமே ஒரு மாயை என்று சொல்லிகொள்வானேன் பின் அந்த ஆதிசங்கரர் காவிக்கட்டிகொண்டு கையில் கொடியும் கோஷமுமாய் பாரதம் முழுதும் திரிந்து திரிந்து சங்கர மட க்கிளைகள் நிறுவியது எல்லாம் எதற்கு?.ஆசையே துன்பத்திற்கு ஆதிமூலம் என்று சொல்லி போதி மரத்துக்கீழ் அமர்ந்த புத்தருக்கும் தன் கொள்கையை அகண்ட இந்தியா என்ன இன்னும் தாண்டி தாண்டி பரப்பிவிடத்தான் ஒரு பெரிய ஆசை இல்லாமலா போனது..
சில ஆசாமிகளை ப்பார்த்தால் கொஞ்சம் பேசினால் நான் இருக்கின்ற என் சங்கத்திற்கு வந்து விடுவார்கள் என்று தோன்றும்.சிலரைப்பார்த்தால் இதெல்லாம் ஒன்றும் தேறாதப்பா என்கிறபடிக்கு கல்லுப்பிள்ளையார் மாதிரி தோற்றமளிப்பார்கள்.ஒரு சிலரைப்பார்த்த மாத்திர்மே இவர்கள் நம் சங்கத்திற்கு வரவே வேண்டாம் தோன்றிவிடும். இதற்கெல்லாம் வெளியில் சொல்லிக்கொள்ளும்படியாய்க் காரணம் ஒன்றுமில்லை. ஆனாலும் மனதிற்கு சில ஆசாமிகளை ப்பிடிக்கவில்லையே என்ன செய்ய
தொழிலாளி என்பவனுக்கு வாங்குகிற சம்பளத்திற்கு வேலைசெய்யத்தெரிகிறதோ இல்லையோ கடன் எங்கே எப்படிக்க்ிடைக்கும் என்பது முதலில் தெரியவேண்டும்.கடன் கொடுப்பதற்கு ஒரு வங்கி. இருக்கிறதா என க்கண்டுபிடித்து அதனில் உறுப்பினர் ஆதல் என்பது மிக முக்கியம்.சம்பளம் போடும் அதிகாரியிடம் ஒரு கையெழுத்து வாங்கி சென்னையில் பத்திரமாக இருக்கும் அந்த சொசைட்டிக்கு விண்ணப்பத்தை அனுப்பிவைத்தால் கடன் தொகை கைக்கு வந்துவிடும்.சூரிடி என்பதாய் அதே நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு தொழிலாளி கடன் வாங்குவதற்கு ஜாமின் கையெழுத்துப்போட வேண்டும்.அவரும் கடன் கொடுக்கும் சங்கத்தில் உறுப்பினராக இருப்பது என்பதுதான் இதில் மிக மிக முக்கியமானது.
அந்தப்படிக்கு என் நண்பர் பெரியசாமிக்கு கடன் வாங்க வேண்டிய குடும்ப சூழல். வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்து அந்த பெரியசாமியும் கடன் கொடுக்கும் சங்கத்தில் உறுப்பினர். அவர் கடன் கேட்கும் பத்திரத்தில் சூரிடி கையெழுத்துப்போடத்தான் ஆள் கிடைக்கவில்லை. அவர் உறுப்பினராக இருக்கும் வெள்ளைக்கொடிஉடைய சங்கத்தில் அவருக்கு சூரிடி போட அதாவது ஒரு நபரின் கையெழுத்து வாங்க அலையோ அலை என்று அலைந்தார். ஒன்றும் கதை ஆகவில்லை.என்ன என்னமோ பேசிப்பார்த்தார்.குழைந்து பார்த்தார். நகைச்சுவையாக ப்பேசினார். வீிறாப்பாகப்பேசினார். விறைத்துக்கொண்டு பேசினார். யாரும் மசியவில்லை.
'எனக்கு ஒரு சூரிடி கையெழுத்து வேணுமே'
அவர் என்னிடம்கடைசியாக்கேட்டார்.
'உங்க வெள்ளைக்கொடி சங்கத்தில் உங்களுக்கு யாரும் போடலயா'
'இல்லயே கேட்டுப்பார்த்தேன் கையெழுத்துபோட யாரும் ஒத்துக்கொள்ளவில்லை'
'என் சங்க உறுப்பினருக்கு மட்டும்தான் நான் சூரிடி போடுவேன். உங்களுக்குப்போட முடியாதே.' நான் வெள்ளைக்கொடி சங்கத்தில் உறுப்பினராக இல்லை என்பதை அந்த ப்பெரியசாமி அறிந்தவர்தான்.
'நானு உங்க சாதா சிவப்பு சங்கத்துக்கு வந்துடுவேன். கொஞ்சம் பொறுங்க'
' அதுல என்ன பிரச்சனை'
'சாரு நானு கைமாத்தா அந்த வெள்ளைக்கொடி சங்கத்துக்காரர்கிட்ட வாங்குன பணத்தை த் திருப்பிக்கொடுத்துட்டு பெற்குதான் வரமுடியும்.இப்ப வரமுடியாதே'
'எப்ப அந்த கைமாத்த திருப்பிகொடுப்பிங்க எப்ப நீங்க என் சங்கத்துக்கு வருவிங்க'
'சாரு நீங்க என் சுசைட்டி கடனுக்கு இப்பவே சூரிடி கையெழுத்துப்போடுறீங்க். எனக்கு கடன்பணம் சுசைடியிலிருந்து வந்துடும். அதுல அந்த கைமாத்தயும் அடச்சி புடுவேன். பெறகுதான நானு உங்க சங்கத்துக்கு வர்ரது எல்லாம்'
பெரியசாமி சரியாகத்தான் சொல்கிறார்.நான் அவருக்கு சூரிடி கையெழுத்துப்போட்டுவிடுவது என முடிவுக்கு வந்தேன்.
பெரியசாமி தயாராக வைத்திருந்த சொசைட்டி கடன் விண்ணப்பத்தை நீட்டினார்.
'வார்த்தை மாறக்கூடாது. உறுப்பினர் சந்தா தொகை என் சாதா சிவப்பு சங்கத்துக்குசெலுத்தி ரசீது வாங்கி காட்டுணும். இல்ல நான் விடமாட்டேன்'
'நீங்க என்னை நம்பி சூரிடி கையெழுத்து போடுறீங்க.நானு பேச்சு மாறுவனா.எனக்கும் பேசுன வார்த்தை முக்கியம்' பெரியசாமி என்னிடம் உருக்கமாகப்பேசினார்.
நான் பெரியசாமிக்கு கடன் விண்ணப்பத்தில் சூரிடி கையெழுத்துப்போட்டேன்.. அவர் மகிழ்ந்து போனார். என் வாயைமூடிக்கொண்டு சும்மா இருந்திருக்கலாம் நான்தான் அவரிடம் சொன்னேன்.
' பெரியசாமி நீங்க எங்க சங்கத்துல உறுப்பினரா ஆன பிறகு வர்ர ஆண்டு மாநாட்டுக்கூட்டத்துல உங்களை கவுரவிக்கறம்.சென்னையிலேந்து வர்ர மா நிலச்செயலர் பெரிய தலைவரே உங்களுக்கு சால்வ போத்துவாரு. போதுமா'
'அப்படியே செய்யுங்க' என்றார் பெரியசாமி. கடன் விண்ணப்பத்தில் கடைசியாய் வாங்குகிற சம்பளம், பிடித்தம் இவை குறிப்பிட்டு கணக்கு அதிகாரியிடம் கையெழுத்து வாங்கியபின் கையெழுத்துக்கு அடியில் சீல்போட போய் நின்றசமயம் அலுவலகத்தில் யாரோ நோட்டம்விட்டு நான்பெரியசாமிக்கு சூரிட்டி கையொப்பம் போட்டிருப்பதை வெள்ளைக்கொடித்தலைமைக்குத்தகவல் சொல்லிவிட்டார்கள்,அதிலிருந்து என் நண்பர் பெரியசாமிக்கு மேற்படியார் தொல்லை பல கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.பெரியசாமி எப்படியும் சதா சிவப்பு சங்கத்திற்கு போய்விடுவார் என்பது பற்றி அலுவலகத்தில் குசு குசு பேசிக்கொண்டார்கள்.
'எனக்கு சூரிட்டி போட யாரு வருவாங்கன்னு நாயா பேயா அலைஞ்சன் அப்ப எந்த கழுதயும் வந்து தே நா இருக்குறன்னு வந்து நிக்குல. இப்ப சங்கத்து விட்டு பூடுவேன் அது இதுன்னு எதுக்கு புரளி பேசுறது.' பெரியசாமி ஓங்கிக்கத்தினார்.சில நாட்களுக்கு அமைதியான சூழலே அலுவலகத்தில் நிலவியது.
பிறகு பெரியசாமி புதியதாகக்கட்டிய வீட்டில் கிரகப்பிரவேசம் நடந்தது.நானும் பெரியசாமியும் பார்த்து பார்த்து பத்திரிகை கொடுத்தோம். சாதா சிவப்புசங்கத்திற்கு பெரியசாமி அப்போதுதான் வந்த சமயம் என்பதால் சாதா சிவப்பு சங்கத்தோழர்கள் ஒருவர் விடாமல் எல்லோருமே புதுமனைப் புகுதல் நிகழ்ச்சிக்கு வருகை தந்தனர்.
ஆண்டு மாநாடு வந்தது. மாநாட்டு நிகழ்ச்சியில் எல்லோரும் கூடியிருந்தார்கள்.புதியதாக உறுப்பினராகச்சேர்ந்த பெரியசாமியும் மேடைக்கு எதிரே அமர்ந்திருந்தார்.மாநாட்டுத்தலைவர் ஒரு அறிவிப்பு செய்தார்.
'அதாவது பெரிய நெசலூர் பெரியசாமி நம் சாதா சிவப்பு சங்கத்தில் புதிய உறுப்பினராகச்சேர்ந்துள்ளார். அவர் இப்போது நம் மாநிலச்செயல்ருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிப்பார்'
பெரிய நெசலூர் பெரியசாமி தன் இருக்கைய விட்டு எழுந்தார்.மேடைக்குச்சென்றார். விழாத்தலைவரிடம் சால்வையை வாங்கினார். பிரித்தார் .தானே தன் கழுத்தில் மாலையாக அந்த சால்வையை அணிந்துகொண்டார்.இரண்டு கைகளையும் கூப்பிப் பார்வையாளர்களை வணங்கினார்.தன் இருக்கைக்குச்சென்று அமர்ந்துகொண்டார்.
கூட்டம் அமைதியாய் நிகழ்ந்தது அனைத்தும் பார்த்துக்கொண்டது.நான் வேறு ஒரு சால்வை எடுத்துக்கொண்டேன். விழாத்தலைவரிடம் நடந்துவிட்ட விஷயம் சொல்லி ப்பின் மாநிலச்செயலருக்கு அதை அணிவித்து நிறைவு செய்தேன்.
'இது எல்லாம் அங்கங்க நடக்கிற சின்ன விஷயம்தான் விடுங்க' என்று சொல்லிய மாநிலச்செயலர் ஆண்டு மாநாட்டு அரங்கத்தில் நேர்ந்துதுவிட்ட நிகழ்வைச் சமாளித்து முடித்தார்.
அடுத்த நாளிலிருந்து பெரியசாமி என்னிடம் பேசவே இல்லை.அவருக்கு எதனை யார் எப்படி எப்படிச்சொன்னார்களோ நான் அருகில் போய் 'நண்பரே' என்றுபேச ஆரம்பித்தேன்.
'போதும் சாரு போதும் இனி ஒரு வார்த்தை எங்கிட்ட பேசாதீங்க அதான் ஆண்டு மாநாட்டுலயே அய்யாவை பாத்துட்டேனே நான் உப்பு போட்டுகினுதான் சாப்புடறன் மானஸ்தன்'
வெள்ளைக்கொடி சங்க தகவல் பலகையில் ஒரு செய்தி போட்டிருந்தார்கள். 'தோழர் பெரிய நெசலூர் பெரியசாமி தாய்ச்சங்கத்தில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டார்.எத்தனைக்காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே' நான் படித்துக்கொண்டேன். எத்தனைக்காலம்தான் ஒருவர் படிப்பது.
-------------------------------------------------------------------------------------------------


No comments:

Post a Comment