Saturday, March 2, 2019

vellam8


சென்னையில் வெள்ளம் 8

’கதவ வுடுங்க நான் கொஞ்சம் பாத்து சொல்றேன்’ ராஜசேகர் சார் சத்தமாகச்சொன்னார்.என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை.கதவு அசைந்து கொடுத்தால்தானே.
‘கதவ பூட்டை சாவிய போட்டு திறந்தாச்சா’
‘அது முடிஞ்சி போச்சி.ஆனா  கதவு புடிச்சிகிட்டு இருக்கு. நவுருவேனான்னு அடம் புடிக்குது’
நான் பதில்சொன்னேன்.
‘ஒரு ஸ்க்ரூ டிரைவர் வேணும்.அப்ப தான் வேல ஆவும்’
நான் மேல்தள வீட்டிற்குச்சென்றேன். ஸ்க்ரூ டிரைவர்கள் சின்னதும் பெரியதுமாக இரண்டு கொண்டுவந்தேன்.அதனை ப்பெற்றுக்கொண்ட ராஜசேகர் சார் கதவை கொஞ்சம் கொஞ்சமாக நெம்ப ஆரம்பித்தார்.கதவு சற்று இடம் கொடுக்க ஆரம்பித்தது.பத்து முறை நெம்பியிருப்பார்.அவ்வளவே.கதவு படார் எனத்திறந்துகொண்டது. சாக்கடைக்கும்பி துர் நாற்றம்.மூக்கைப்பிடித்துக்கொண்டோம்.
‘ஆ பாம்பு’ என் மனவி அலற ஆரம்பித்தாள்.
அதற்குள்ளாக ஒரு நீட்டுக்கழியொன்றை எடுத்துவந்தேன்.ராஜசேகர் பாம்பு அடிப்பதில் அனுபவம் உள்ளவர் என்பது தெரிந்தது.பாம்பு ஒரே அடியில் சுருண்டு போனது.
‘சாரதான்  இங்க எப்பவும்  வேற ஒண்ணும் நல்லதும் இல்லை விரியனும் இல்ல’
‘இது வெஷம் இல்லயா’ என்றேன்.
‘வெஷம்தான் செத்த கம்மியா இருக்கும்’
‘செத்த பாம்பை க்கழியால் நெட்டிக்கொண்டே தெருவுக்கு’ எடுத்துவந்து’
பாம்பை ஒருமுறை நீட்டாக படுக்கவைத்து,
‘எம்மாம் நீட்டு பாத்திங்களா.இது எப்பிடி ஊட்டு உள்ளாற  நுழைஞ்சிதுன்னு தெரியல. சன்னல்ல கம்பி வல போட்டு இருக்கம்.கதவு மூடி இருக்குது.இது எப்பிடி உள்ளாற வந்து இருக்கும்’
’அதுக்குதான் எப்பிடி வந்தம்னு  தெரியும்.பாத் ரூம் இல்ல டாய்லெட் வழியா வந்து இருக்குலாம்’
‘சரிதான் அப்பிடி வந்து இருக்கும்’ ராஜசேகர் ஆமோதித்தார்.
ஹால் முன்பாக இருந்த பீரோ சாய்ந்து கிடந்தது.சேறும் சகதியும் பீரோ மீது அப்பிக்கொண்டு கிடந்தது. குளிர்சாதன பெட்டி தலைக்குப்புற க்கிடந்தது.அதனுள் இருந்த சாமான்கள் அதனுள்ளாக எப்படியோ  இருக்கலாம்.புத்தக அலமாரி தொப்புற நனைந்து கொத கொத எனக்கிடந்தது.என் சின்ன பையனின் எஞ்சினீரிங்க் புத்தகங்கள் முற்றிலும் காலி.சமையல் அறையில் மிக்சி கிரைண்டர் மளிகை சாமான்கள் எல்லாம் குழப்பிக்கொண்டு கிடந்தன.ஹாலில் இருந்த துபாய் டிவி சமையல் அறையில் பரிதாபமாகக்கிடந்தது.
என் மனைவி பிரமைபிடித்தவள்போல் ஒவ்வொன்றையும் நோக்கிக்கொண்டு இருந்தாள்.
‘இங்க பாருங்க லாப்டாப் பீரோவுக்கு அடியில மாட்டிகிட்டு கெடக்கு.முற்றாக நனைந்து விட்ட லாப்பை எடுக்கமுடியாமல் இருந்தது.
கல்யாண ஆல்பம் நிச்சயதார்த்த ஆல்பம்.சின்னவனது தண்ணீரில் நனைந்து நாறிக்கிடந்தது.
‘இதுக்கு வேற காபி இருக்கும்ல’
‘சம்பந்தி கிட்ட ஒருகாபி திருச்சியில இருக்கும்’ மனைவி பதில் சொன்னாள்.
ராஜசேகர் சார் கதவைத்திறந்துகொடுத்துவிட்டு தெருவுக்குச்சென்றுவிட்டார்.
அவருக்கு இன்னும் எத்தனையோ வேலைகள் பாக்கி இருக்கும்தான்.
எலக்ட்ரிகல் சாமான்கள் முற்றிலும் வீணாகி இருந்தன. வீட்டில் இருந்த துணிமணிகள் படுக்கை மெத்தை கட்டில் எல்லாம்கொழ கொழ என அருவருப்பாகக்கிடந்தன.
‘ஏன் கண்ணு கலங்குற வுடு. நாம ஆளு தப்பிச்சி இருக்கம். எதையும் நாம சம்பாரிச்சிகலாம் வேலய பாரு’ என் மனைவிக்கு ஆறுதல் சொன்னேன்.என் மனதிற்குள்ளும் ரணம் இருக்கத்தானே செய்தது.
சமையல் அறையிலிருந்த காஸ் சிலிண்டர் எங்கோ மூலையில் உருண்டுகிடந்தது.காஸ் அடுப்பெல்லாம் சேறும் சகதியும்.சமையல் அறையில் நத்தைகள் வித விதமாக ஊர்ந்து கொண்டிருந்தன.
தோட்டப்பக்க கதவு பாத் ரூம் கதவெல்லாம் திறந்து திறந்து பார்த்து க்கொண்டேன். எதுவும் நிம்மதியாகவே இல்லை.
‘என்ன செய்யலாம்’
‘ஆதம்பாக்கம் கெளம்புவோம்’ பதில் சொன்னேன்.
‘ரெண்டு ஆள வச்சி கீழ் வீட சுத்தம் பண்ணணும்’
‘வீட்ட சுத்தி இருக்குற  வெள்ளத்  தண்ணி வச்சிதான் மொதல்ல சரி பண்ணணும்’
‘ரெண்டு ஆளு பத்துமான்னு சொல்ல முடியல.
‘ நாளைக்கு நீங்க மட்டும் இங்க வாங்க.வீட்ட சுத்தம் பண்ணுங்க இத விட்டு நீங்க கெளம்பகுள்ள .ஒரு மினி லாரி இல்ல  சின்ன வண்டி எதனா புடிச்சி முக்கியமான  வீட்டுசாமான எடுத்துகிட்டு குரோம்பேட்ட அந்த குமரன் குன்றம் ஜாகைக்கு கொண்டு சேத்துடணும் அத செய்யணும் அது முக்கியம்’
‘மருமகளுக்கு அந்த இடம் பிடிக்கணுமே’
‘மிஞ்சி போனா ஒரு மாசம் அங்க இருப்பம்.அதுவே ஜாஸ்தி’
‘புடிக்குது புடிக்கல அது எல்லாம் பாக்குற நேரம் இது இல்லங்கறத புரிஞ்சிகிணும்’
‘இல்லன்னா ஒண்ணும் இல்ல அவங்க ஒரு எடம் பாக்கட்டும். நாம வேணாம்னு சொல்லலயே’
இருவரும் கதவை இழுத்து பூட்டிவிட்டு வெளியில் வந்தோம்.
நேதாஜி நகருக்குப்பக்கத்தில் விரிவு என்கிற பகுதி. அதனில் ஒரு ஐம்பது வீடுகள் இருந்தன. அவை அடையாற்றின் கரையிலேயே இருந்த நீர்நிலை  புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்ட சொந்த வீடுகள். எல்லாம் நாசமாகி ஆள் பிழைத்தால் போதுமென ஓடிப்போய் உயிர் பிழைத்து இப்போது திரும்பி வந்து  குடியிருந்த வீட்டில் என்னதான்  பாக்கி இருக்கிறது என்று ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். பெண்களின் அழுகுரல் அங்கிருந்து வந்துகொண்டேஇருந்தது.ஆண்கள் என்னவெல்லாம் தேறும் என்கிற ஆராய்ச்சியில் தீவிரமாக இருந்தார்கள்.
‘இருட்டிவிடும் கிளம்பி விடுவோம்’
‘சரி’ என்றேன்.
தலை முழுவதும் வழுக்கையாகி பள பள என்று இருந்த ஒருவர். ராணுவத்தில் வேலை செய்து பணி ஓய்வு பெற்று இந்த புறம்போக்குப்பகுதியில் இடம் வாங்கி இரண்டு மாடிக்கு வீடு கட்டியிருந்தார். அவர் ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் ஏதேனும் ஒரு மோசமான ஆசாமி ராகு இல்லை  கேதுவோடு  சேர்ந்து உட்கார்ந்திருக்கலாம். இல்லை என்றால் இந்த மடுவுக்கு வந்தா வீடு எல்லாம் கட்டி வாழ்ந்துகொண்டிருப்பார்.
‘தல வழுக்கையா இருக்குமே அவுரு வர்ராரு.அவுரு பேரு என்ன’
‘சாமின்னுதான் அவுரு பேரு’ பதில் சொன்னேன்.
அவர் என்னிடமே வந்துவிட்டார்.
‘எப்பிடி இருக்கு வீடு’ சாமி ஆரம்பித்தார்.
‘தரைதளம்.என் சின்ன பையன் குடும்பம் இருந்தது.இப்ப ஒண்ணுமே பாக்கி இல்ல.மொத்தமா போயிடுச்சி துணி மணி எதுவுமே இல்ல.பிரிட்ஜ் மிக்சி வாஷிங் மெசினு கம்ப்யூட்டரு.டிவி எலக்ட்ரிகல் அயிட்டம்க  டூவீலரு தண்ணீ எறைக்கிற மோட்டார்  வீட்டு சாமானுவ எதுவுமே பாக்கி இல்ல. புதுசா வயரிங் பண்ணி சுண்ணாம்பு பெயிண்ட்டிங்க் எல்லாம் செஞ்சாதான் வூடு தேறும்’
‘எல்லார் கதயும் அப்பிடித்தான் இருக்கு.சென்னையில பாதி சனம் சின்னா பின்னமாயிடுச்சி.அரசாங்கத்துல கணக்கு எடுக்க வர்ராங்களாம். நீங்க அப்ப அப்ப வந்து பாருங்க.அவுங்க வர்ரகுள்ள நாம கூட இருந்தா அது ஒரு மாதிரி இல்லன்னா அவுங்க என்ன எழுதுறாங்களோ அதுதான்’
‘என்னாவோ  எழுதுவாங்க என்னாவோ  குடுப்பாங்க’
‘அத யாரு கண்டா’
‘ தெனம் நானு வருவேன்,வேற என்ன செய்ய இருக்கு’
‘இப்ப குடும்பம் எங்க இருக்கு’ சாமி விடாமல் என்னை க்கேட்டுக்கொண்டார்.
‘ஆதம்பாக்கத்தில் அண்ணன் வீட்டுல இருக்கன். இண்ணைக்கி குரோம்பேட்டையில ஒரு வாடகைக்கு  வேறு ஒரு இடம் பாத்து இருக்கோம் .அங்க தங்கி கிட்டே இந்த வீடு எல்லாம் வந்து வந்து சரி பண்ணிகிணும். பெறகுதான் இங்க வர்ரதபத்தி யோசனை பண்ணணும்’ சாமிக்கு ப்பதில் சொன்னேன்.
----------------------------------------------

 







                                                                                                                                                                

No comments:

Post a Comment