கனவு
மெய்ப்படும்
எஸ்ஸார்சி
கனவு
மெய்ப்படும்
புதினம்
எஸ்ஸார்சி
முதற்பதிப்பு:2001
மணியம்
பதிப்பகம், குறிஞ்சிப்பாடி
பக்கங்கள்
: 8+234
விலை ரூ
"தொன்மந் தொட்டு
கிராமப்புற
மூலை முடுக்குகளில்
தன்
உழைப்பை நல்கி
அடக்கு
முறைகளுக்கும்
அவமானங்களுக்கும்
இன்றும்
இலக்காகும்
கபடத்தின்
நிழலே
அறியா
அந்த
உத்தம
உழைப்பாளர்களின்
உள்ளம்
தொழுது"......
முதலாம் பதிப்புரை
கவிதை, கட்டுரை, கதைநூல்கள் எனப் பல தளத்திலும் தமது படைப்புக்களை வழங்கிவரும் தரமான எழுத்தாளர் திரு,எஸ்ஸார்சி அவர்களின் நல்லதோர் புதினமாகக் கனவு மெய்ப்படும் எனும் வட்டார வழக்கு நாவல் தற்போது வெளிவருகின்றது.
புதுநெறிக் கவிஞர், பேராசிரியர் திரு.த.பழமலய் அவர்கள், திரு.எஸ்ஸார்சியின் முந்தைய நாவல் குறித்த பாராட்டுரையில் விருத்தாசலம் என்னும் திருமுதுகுன்ற வட்டாரத்திற்குப் பெருமை சேர்ப்பதாக இவர்தம் எழுத்தினைக் குறிப்பிட்டிருந்தார்கள். அவரது கூறறினை மெய்ப்பிக்கும் பாங்கில் இதோ ஒரு கிராமியக் காவியம் இப் புதினமாகப் பரிமளிப்பதை வாசக அன்பர்கள் சுவைத்து மகிழலாம்.
நிலாவில் கால்வைத்த...... இக்காலத்திலும் சாதிப் பேய்களின் சதியாட்டமும், வர்ணாசிரமப் பேதங்களின் முடக்குவாத நடைமுறைகளும், புதிய அரசியல் வன்மங்களும் கோலோச்சிய, தருமங்குடி என்னும் ஒரு கிராமத்தின் சகலப் பிரிவு மனிதர்களையும் உள்ளபடிச் சித்தரித்து ஆசிரியர் இப்புதினத்தை வடித்துள்ளார்.
திரு.எஸ்ஸார்சியின் இக்கதை, கருப்பொருளாலும், வட்டார வழக்கு நடையழகாலும் உயர்ந்து மிளிர்கின்றது.
இடத்திற்கும், பாத்திரத்திற்கும் பொருந்திய உயிரோடடமான உரையாடல் புதினமெங்கும் சுடர்வீசுகின்றன. கதை மாந்தர் எல்லோருமே யதார்த்தத்தின் அச்சுக்கள் என்றாலும், முடிதிருத்தும் நாகலிங்கமும், துணி வெளுக்கும் சிங்காரமும் மாசிமகத் திருவிழாவிற்காக நாள் முழுதும் பயணித்து, வழி நெடுக நேரும் அவர் தம் சுகானுபவக் காட்சிகளும் பேச்சுகளும்
படிப்போர் எவர்க்கும் நல்ல நகைச்சுவை தருவன.
நம் தமிழகத்தில்& தருமங்குடி என்னும மாதிரி கிராமத்தின் சூழலில், அங்குள்ள மக்களின் வாழ்வில் நேர்ந்த ஏற்ற, இறக்கங்களை வரைந்து காட்டும் இப்புதினம், நம் நாட்டின் இன்றைய ஒட்டுமொத்த சமூகத்திற்கு விழிப்பூட்டும நல்ல படிப்பினையாக அமைந்துள்ளது.
சீரிய சமுதாய இலக்கோடு கூடிய இப்புதின நூலை வெளியிட எங்கட்கு வாய்ப்பளித்த நூசிரியர் திரு எஸ்ஸார்சி அவர்கட்கும், இவ்வெளியீட்டில் துணை நின்ற நண்பர் திரு. குறிஞ்சிவேலன் அவர்கட்கும், இதனைச் சிறந்த முறையில் அச்சிட்டு வழங்கிய சுபம் அச்சத்தார்க்கும் எங்கள் நன்றிகள் உரியன.
சு.சம்பந்தன்
மணியம் பதிப்பகம்
குறிஞ்சிப்பாடி
என்னுரை (முதல் பதிப்பு 2001)
எழுத்தாளனின் படைப்பு விஸ்தாரமாய் வெளிப்படுவதற்கு நாவல் தகு ஊடகம். அவ்வகையில் இந்த நாவல் கனவு மெய்ப்படும் எனக்குப் பூரணமாய் விஸ்தீரணம் தந்தது.
நடு நாட்டுக் கிராமப்புற நிலவியல் அமைப்புக்களை, அங்கு உலா வருகின்ற அன்புச் சகோதர சகோதரிகளை,அவர்களிடை எழும் சிக்கல்களை, பெறப் படுகின்ற அவமானங்களை, அவ்வவமானங்கள் விளைவிக்கின்ற மன ரணங்களை, தன்மான எழுச்சி அங்கு தருவிக்கும் போரட்டாங்களை, அப்போராட்டங்கள் பின் சிறுமைப் படுத்தப்படுதலை, ஈன அரசியலின் சித்து விளையாட்டுக்களை, சுயம் பற்றிய சிலரின் சிந்தனைச் சிறுமையை, தருமங்குடி மக்களின் எளிமையை, வெகுளித்தனத்தை, கோபா வேசத்தை, வக்கிர உக்கிரங்களின் ஆக்கிரமிப்பு பெறாத பிஞ்சு உள்ளங்களை, எஞ்சி நிற்கின்ற பண்ணை அடிமைத்தனத்தின் கொடு விஷத்தை, பிரச்சனைகளின்றும் ஒதுங்கி வாழ்கின்ற சத்தியவான்களை, உழைத்து உழைத்து வயிற்றுப்பசி மட்டுமே ஆற்றி இற்றுக் கொள்ளும் மனித அவலங்களை ஓரளவுக்கேனும் இந்நாவலில் வெளிப்படுத்தியுள்ளேன்.
சமூகப் பிரச்சனைகளினின்றும் சாதாரண மக்களை மீட்டெடுப்பது அவ்வளவு சுலபமல்ல என்பதையும், கிராமப்புற வர்ணாச்ரம அடக்கு முறைகள் தொடர்ந்து உயிர்ப்போடு நிலவுவதையும், மாற்றம் என்பது புரட்சிகரமானதுவாய், வெகு எளிதில் கிட்டி விடுவதாய், வீழ்த்திவிட முடியாததுவாய், பூரணமாய் அமைந்து விடுவதில்லை என்பதையும் நிகழ் அரசியலில் அறம் மறந்து தன்னிருப்பு மட்டுமே துருத்துக் கொண்டு நிற்கின்ற அவலம் தொடர்கின்றவரை, புரட்சிகர மாற்றம் என்பது ஏமாற்றமே என்பதையும் இந்நாவல் மூலம் உணர்த்த விரும்புகிறேன்.
பிரதானமாய் இப்படைப்பு, கிராமப்புற தொன்ம வழிவந்த தொழிலாளர்களின் சோகம் பற்றிப் பேசுகிறது. முடிதிருத்தும் கலைஞனும், துணி வெளுக்கும் தொழிலாளியும் சந்திக்கின்ற மனித நேயமற்ற அன்றாட நடப்புக்களை வாசகனுக்கு எடுத்தியம்புகிறது.
மார்க்சியமும்
அறிவியலும் சமூகக் கொடுமைகளைக் களைவதில் தம்பங்கு ஆற்றுகின்றன என்பதை உள்வாங்கிய என்
சிந்தனை -மார்க்சியம் அதனின் நடைமுறை பலவீனங்கைளை கணக்கில் எடுத்துக் கொண்டும் கூட, இன்றளவும் வேறு மாற்று வெடிபடாததை, வேறு சிந்தனைத்தடம் அதனைப் புறந்தள்ள முடியாத
அற்புதத்தை, மார்க்சியம்
மீது சாதாரண மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத அற நம்பிக்கையை -நிறைவோடு இப்படைப்பில் யதார்த்தமாய் வெளிப்படுத்துகிறது.
கனவு
மெய்ப்படும் வெளிவர தோழமையோடு உதவி செய்த மதிப்பிற்குரிய பெருந்தகை, எழுத்தாளர் குறிஞ்சி வேலனார்க்கு என் வணக்கங்கள்.
இந்நாவலை
வெளியிட்டுப் பெருமைப்படுத்திய குறிஞ்சிப்பாடி மணியம் பதிப்பகத்துச் செம்மல் திரு சம்பந்தம் அவர்கட்கு என்றென்றும் நன்றி உடையவன் ஆவேன்.
சிதம்பரம்
சுபம் அச்சத்து நண்பர்கள் தட்சிணாமூர்த்தி, குருசாமி ஆகியோர்க்கும் என் நன்றி உரியதாகிறது.
வணக்கத்துடன்
எஸ்ஸார்சி
கனவு மெய்ப்படும்
1
அன்று
தருமங்குடியில்
இப்படி நடந்தது.
"டட் டட் டட்" பறை ஒலி எழுப்பிக்கொண்டு நான்கைந்து பேர்கள் ஊரை வலம் வந்து முடித்தார்கள். ஊரின் நடுவே நீலவானத்தை அளந்து நிற்கும் அரச மரத்துக்குக் கீழாய் நின்று கொண்டார்கள். மீண்டும் டட் டட் டட் ஒரு சேர ஒலி எழுப்பினார்கள்.
"ஊரு...காரங்களுக்கு அறிவிக்கிறது என்னண்ணா நாங்க தொழிலாளிங்க நாலு பேரும் இனிமேலுக்கும் வெட்டியானுங்கன்னு கெடயாது எங்களை அப்படிக் கூப்பிடறதும் முடிஞ்சிபோச்சி. நாங்க எதனா கூலி வேல செஞ்சி பொழச்சிக்கிறம். மாடு செத்ததுன்னு இனி எங்களுக்கு சேதி வரக்கூடாது. மாடு செத்ததுன்னு இனி எங்களுக்கு சேதி வரவே கூடாது அவுங்க செத்த மாட்டை அவுங்க அவுங்க அப்புறப்படுத்திக்னும்" டட் டட் டட் ஒருமுறை பறை ஒலி எழுப்பினார்கள்.
"ஊருகாரங்களுக்கு இதனால் அறிவிப்பது என்னண்ணா இனி பிரேதம் உழுந்துதுண்ணா சுடல வேலய அந்த அந்த ஜனம் பாத்துக்க வேண்டியது. எங்களுக்கு சேதி சொல்லுறது இனிவேணாம், நாங்களும் வரமாட்டோம்."
டட்
டட் டட் மீண்டும் ஒருமுறை பறை ஒலி,
"ஊரு காரங்களுக்கு இதன் மூலம் அறிவிப்பது என்னண்ணா எழவு சேதி சொல்லுறது, செரா பொளக்கிறது, பாடைகட்டிக் கொடுக்கிறது, சொக்கப்பானைக்கு மெலாறு கட்டுகிறது, அம்பு போடுறதுக்கு மண்ணு கொளப்பி கொண்டாறது, இதுக மாதிரியா எந்த வேலயும் எங்களுக்கு இனி கெடயாது. சாமியேன்னு கீழே உழுந்து நெட்டைத் தடியா தெண்டம் இடுறது இனி இல்லே. எல்லா செறுமையும் இன்னையோட முடிஞ்சி போச்சி.
டட்
டட் டட் மீண்டும் ஒலி.
நால்வரும்
சுட்ட மண்சட்டி போர்த்திய ஒலி எழுப்பும் பறைத் தோலைக் கிழித்து வீதியில் வீசினார்கன். நான்கு அம்மணச்சட்டிகளையும் கீழே போட்டு தம் கால்களால் ஓங்கி ஓங்கி மிதித்து முடித்தார்கள்.
இந்த
தொழிலாளர்களில்
வயதில் மூத்த ஒருவரை குரல் ஓங்கி அழைத்தார் நடுப்பிள்ளை. அவரோடு தருமங்குடி நாட்டாண்மை ராமலிங்கரும் உடன் இருந்தார் அவர்கள் இருவருக்கும் பின்னால் தருமங்குடி பஞ்சாங்க ஐயரும், நாவிதன் நாகலிங்கமும் நின்று கொண்டிருந்தார்கள்.
’பெரியவனே’
நடுப்பிள்ளை ஓங்கி அழைத்தார்
பறை
கிழித்த நால்வரும் நடக்க ஆரம்பித்தார்கள்.
’ஏம்பா
உங்களைத்தான்’
நால்வரும்
ஒரு சேர நின்றார்கள்
’ஏனுங்க’
’என்னத்தைச்
சொல்லிப்போறீங்க’
’மூணுதரம்
சொல்லுல’ என்றான் சிறியவன்.
’நாங்க
வெட்டியானுங்கன்னு
அந்த ஈன வேலய செய்யுறது வுடுறம் அவ்வளவுதான்’, என்றார் மூத்தவர், மீதமிருந்த மூன்று பேரும் அமைதியாய் இருந்தனர்.
’வெளி
ஊர்லந்து ஆளு வரவழிச்சிப் பாக்குலாம்’ என்றார் பிள்ளை வெடுக்கென்று.
சிறுவன்
விருட்டென்று பதில் சொன்னான்.
’அந்தக்
கதெ இங்க நடக்காது அந்த வேலவுள செய்ய எங்க சாதி சனம் எங்கிருந்தும் வராது. அவ்வளவுதான்’
’அப்பண்ணா
நாம்ப நாம்ப செஞ்சிகிறதா?’
’ஏன்,
செஞ்சிக என்ன தப்பு? நாம சூத்த நாம கழுவிக்கல’ என்றான் சிறுவன்.
’ஏலே
வாய்ப் பொத்துடா’ என்றார் மூத்த தொழிலாளி
’செத்தமாடு
தூக்குறது’ இது
நாட்டண்மை.
’சும்மா
வளத்தாதிங்க. நாங்க வெவசாயக் கூலியா இல்ல வேறு எதனா வேல செஞ்சி பொழச்சிகிறம். நீங்க தான் உங்க செத்தமாட்டை அப்புறப் படத்தனும்’.
விளக்கமாய்ச்
சொன்னார் மூத்தவர்.
’தோலு’
மீண்டும் நாட்டாண்மை.
’நீங்க
எடுத்துக் கழுவிக் காயப்போட்டு வித்துகுங்க உங்களுக்குத் துட்டு வரும்’
பதில்
சொன்னான் சின்னவன்.
வாயு
நீளுது என்றார் நடுப்பிள்ளை.
நால்வரும்
நகர்ந்து போயினர். நாட்டாண்மை ராமலிங்கரும் நடப்பிள்ளையும் தீவிர யோசனையில் இருந்தனர். தருமங்குடியில் இனி என்ன செய்வது என்று சிந்தனை அவர்களைக் கவ்விக்கொண்டது.
நாகலிங்கமும்,
பஞ்சாங்க ஐயரும் பேசிக்கொண்டார்கள்.
’இனி
வரமாட்டானுக’
’நாகலிங்கம்,
அவனுக போரபடி பாத்தா, வர மாட்டானுக போலத்தான்’
’காலம்
மலையேறிப் போச்சி. அவுகஅவுக அவுக வேலய பாக்குறதுன்னு வரும்போல சாமி’
நடுப்பிள்ளை
நாகலிங்கத்தை அழைத்தார். ’ஏலே நாகலிங்கம். நாளைக்கு சாயந்திரமா ஒரு பஞ்சாயத்து கூட்டணும். நாட்டமையும் சொல்லி இருக்காரு. ஊரு சனம் தலைக்கட்டுக்கு ஒரு ஆளு அவசியம் இருக்கணும். பிரச்சனை விபரீதம்’
’சேதி
சொல்லி விட்டுடுறேன்\ என்று பதில் சொன்னான் நாகலிங்கம்.
ஐயர்
நகர்ந்து நடுப்பிள்ளையிடம் வந்து நின்று கொண்டார்.
’நெசமா
பிள்ளை’
’ஐயர்வாள்,
தப்ப கிழிச்சி, சட்டியை ஒடச்சி போடுறது பாக்குல இதுல இன்னும் என்னா பெய்யி நெசம்?’
’ஆமாம்’
’நான்
என் வாயாலே சொல்லுணும்’
இல்லை
’நாளைக்கு
பஞ்சாயத்து கூடுது. சொச்சத்தை அதுலே பேசிக்கலாம்’ என்றார் நடுப்பிள்ளை.
நாட்டாண்மை
நடுப்பிள்ளை சொல்வதை முற்றாய் ஆமோதித்து நின்று கொண்டிருந்தார். ஐயரும் நாகலிங்கமும் கலைந்து சென்று கொண்டிருந்தனர். தருமங்குடி அச்சம் விரவிய ஆச்சரியத்தில் மூழ்கி இருந்தது.
2
தருமங்குடி கிராமத்துப் பஞ்சாயத்து காலையிலேயே கூட்டப்பட்டிருந்தது. நாட்டாண்மை, ராமலிங்கரும், நடுப்பிள்ளையும் அரசமரத்தடியில் நாற்காலியிட்டு அமர்ந்திருந்தனர்.
அடுப்புக்கரிக்கு
இணையான நிறத்தில் இருந்த பிள்ளையின், தலையில் இருந்த கட்டுக்குடுமி வெள்ளை வெளேர் என்று இருந்தது.
’வெட்டியானுங்க
வந்திருக்கானுக’
என்றார் நடுப்பிள்ளை.
’உரக்கப்பேசாதிங்க’
என்றார் நாட்டாண்மை.
தொழிலாளிகள் நால்வரும் வந்திருந்தனர்.நாகலிங்கமும் பஞ்சாங்க ஐயரும் வழக்கம்போல் ஒரு மூலையில் நின்று நடக்கப் போவதைக் கவனித்த வண்ணமிருந்தனர்.
’எல்லோரும் வந்துட்டமா?’
’ஆமாம்’ ஏகோபித்துச்சொன்னது கூட்டம்.
’எந்தத்தெருவும்
பாக்கி இல்லியே?’
’இல்லே’ என்றது கூட்டம்
’பிள்ளை நீங்களே வெஷயத்தைப் பேசுங்க’
என்றார் நாட்டாண்மை.
’எல்லார்க்கும்
வணக்கம். இன்னைக்கு நாம கூடி இருக்கிறது இந்த தொழிலாளிங்க பத்தித் தெரிஞ்சிக்கிறதுக்கும், புரிஞ்சிக்கறதுக்கும்’
கூட்டம் அமைதியாய் இருந்தது.
நான்கு தொழிலாளர்களில் மூவர் அமர்ந்து கொண்டிருக்க மூத்ததொழிலாளி மட்டும் நின்று கொண்டிருந்தார்.
’நீ எதாவது சொல்லணும்னா, சொல்லிடு’
’அதுவும் சரிதான்’ மூத்த தொழிலாளி பேச ஆரம்பித்தார். ’தருமங்குடி ஊரு சனங்களுக்கு வணக்கம் இது நாள் வரை தலமுறை தலைமுறையா நாங்க சவம் எடுக்கறதுக்கு துணை நிக்குறது, மாடுசெத்துதுன்ன தூக்குறதுன்னு வேல செஞ்சம். நீங்க இட்ட பல வேலைகளை முடிச்சம். ஆமாம் தப்பு அடிச்சம். இன்னிலேந்து நாங்க இதுக எதுவும் செய்யுறது இல்லேன்னு முடிவு’
கூட்டத்தின்
நடுவாய் அமர்ந்திருந்த ஒரு நெட்டை மனிதர் எழுந்து கொண்டார்.
’ஏன்னு
சொல்லணும் சும்மா பேசப்படாது’.
’நீங்க
அந்த ஜோலிகள ஏன் செய்யுறது இல்லே? அதுக கேவுலம்னு தானே கேவுலம்ங்கர வேலய நாங்க ஏன் செய்யுணும்?’
‘எல்லோருமா செஞ்சா, அந்த கேவுலம் பொதுவா பூடுமில்லே, அதான்’.
’நீங்க
செய்யப் போறது இல்லே. நாங்க வெளியூர்லந்து ஆள வரவழிச்சி அந்தக் கேவுலத்தைச் செஞ்சிகறம்! சொல்லி முடித்தார் நெட்டை மனிதர்.
தொழிலாளிகளில் மூத்தவர்
பதில் சொன்னார் ’நேத்திக்கு வுட்டகதெ இன்னைக்குத் தொடுறீங்க. சுத்துப் பட்டு கிராமத்துலயும் இதுக நிறுத்திப்புடுவாங்க. கொஞ்ச நாள் புடிக்கும், அவ்வளவுதான் இங்க வந்து இந்த ஈனவேலய யாரும் செய்ய மாட்டாங்க. செய்ய உடமாட்டம். இது செய்ய முடியாதுன்னுட்டு நாங்க வுடுல இதுக நாங்க செய்யறது இல்லேன்னு முடிவு செஞ்சி இருக்கம்’
நாட்டாண்மை
குறிப்பிட்டார்.
’திடீர்னு
ஒரு நாளைக்கு காலைல வந்து நாங்க எங்க வேலய நிறுத்திப் புடுவம்னா எப்படி? நாங்க அதுக்குத் தக்கன தயார் ஆவுறது இல்ல? மாத்து ஏற்பாடு செய்யறது அதுக்கு அவுகாசம் கொடுக்கறது இல்ல. நல்லா யோசனை பண்ணுங்க’
தொழிலாளியில்
மூத்தவரே பின்னும் பேசினார்.
’நாங்க
நேரம் சொல்லி நிறுத்தினா, நீங்க வேறு ரோசனையில் எறங்குவீங்க’
’அப்படி
போவுதா வெஷயம்’ நடுப்பிள்ளை வெடுக்கென்று பேசினார்.
’நீங்க
உங்க வேலய நிறுத்தினா, நாகலிங்கம் அவன் முடிதிருத்தறத நிறுத்தி ஐயரு சாமி படைக்கறத நிறுத்தி, சிங்காரம் தொரைப்பாட்டுல துணி வெளுக்கறதை நிறுத்தி, ஆசாரி, கொல்லன், தட்டான், கொயவன், குடியானவன் அவங்க அவங்க ஜோலிய வுட்டுட்டுப் போனா என்னா ஆவுறுது’
மூத்த
தொழிலாளி பட்டென்று பதில் சொன்னான்.
"எங்க சொடலயே வேற .பொணஞ்சுடறதுக்குன்னு உங்க சொடலயே வேற. எங்க சவத்த உங்க சுடலையில் வைக்கிறது இல்லே. அதுதானே இன்னைக்கும்."
நாட்டாண்மை
மீண்டும் குறுக்கிட்டார்.
’கதைக்கு
வருவம். மோளத்தை கிழிச்சிப்பிட்டானுவ. அடக்கம் அதுக்கு வரமாட்டானுவ. இனி அதை அதை நாமளே பாக்குறது எப்படின்னு யோசனை பண்ணணும்’
நடுப்பிள்ளை
’அது நம்மம கதை’ என்று முடித்துக் கொண்டார். தொழிலாளர்கள் மூவரும், இனி அவுங்க அவுங்க வேலய அவுங்க பாக்குலாம் என்று சொல்லய நால்வரும் இடத்தைக்காலி செய்து நடந்து கொண்டிருந்தனர்.
3
நாகலிங்கம்
தன் கத்திப்பெட்டியைக் கையில் எடுத்துக் கொண்டான். வெள்ளாழத்தெரு வழியாய வழக்கமாய் புறப்படுவான். தினமும் மழித்து கொள்பவர்கள். இருக்கவே செய்தார்கள். நாள் நட்சத்திரம் பார்த்து மட்டுமே பிள்ளைமார்களில் அனேகர் முடிதிருத்திக் கொண்டார்கள். செவ்வாய்க்கிழமைகளில் வெள்ளாழத் தெருவில் வேலை அருகி இருக்கும். வசதிமிகுந்த வெள்ளாழர்கள் கத்தியை அவர்களே வாங்கி வைத்துக் கொண்டு நாகலிங்கத்திடம் கொடுத்து தன் வரைக்கும் வேலைக்குக் கோடுத்து பத்திரமாய் மீட்டுக் கொண்டனர். வெள்ளாழக்கருத்தில் இதுவும் அடக்கம்.
வெள்ளாழத்தெரு முடிந்து
சிறிய அக்கிரவாரம் வழியாய் நடந்தான் நாகலிங்கம்.
பங்சாங்க
ஐயர் வீட்டு முன்பாய் சற்று நின்றான். சாமி இருக்காங்களா
’யாரு
நாகலிங்கமா டேய் உள்ளவாடா’
ஐயரின்
குரல்திரன் கேட்டது. ஊரில் அனேகருக்கு டா போட்டுத்தான் ஐயர் பழகி இருந்தார். மேல்தட்டு பிள்ளைமார்களில் யாருக்கும் இது பொருந்தாது.
ஐயரின்
வீடு ஒத்தைத் தாழ்வாரமாய் இருந்தது, ஒரு நீட்டு வாலாய் வீடு முடிந்து போய் இருந்தது, ஐயர் தலை கவிழ்த்து அமர்ந்திருநதார். அவரின் குடுமி கன்னா பின்னா என கலைந்து தெரிந்தது. க்ஷவரிக்கப்படாத முகம் அச்சத்தை பிரவாகித்துக் கொண்டிருந்தது அவரின் அருகே அவரின் மனைவி ஏதோ அழுத்தமாய் நினைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். ஆழ்ந்த துயரத்தில் இருப்பதாய் இருவரையும் அறிய முடிந்தது.
’சாமி
என்னா சமாச்சாரம்’
’நாகலிங்கம்
என் பசுமாடு போயிட்டுதுடா’
’ஏன்
என்னசாமி சொல்றீங்க’
’மாடு
சூலா இருந்திச்சி மாடு கண்ணு போடுன்னானுவ. நேத்திலேந்து தெறணிச்சி படுத்துது. சாணம் போடுல. தீனி எடுக்கல’
’பெறகு’
’காசியத்தான்
அழச்சி
கிட்டு வந்தேன்’
காசிதான்
மாட்டு வைத்தியம் என்னும் வாகடம் தருமங்குடியில், பயின்றவன். அடிக்கடி உருட்டுக்கட்டைக் கணக்காய் சுருட்டு ஊதுவான். சிரித்தமுகமாய். கரேர் என்ற நிறத்தில் இருப்பான். ஏதேனும் பச்சிலையைக் கையில் குழைத்துக் கொண்டே இருப்பான்,
"வாகுடம் காசி மாட்டு ஆசனவாயிலே சுருட்ட ஊதி பாத்து இருப்பாரே"
’எல்லாம்
செஞ்சான் கத ஆவுல’
’வேற
எவனும் இல்லையா’
’காசிதான்
பாத்தான் பெறகுமாடு அலறி கத்திச்சி. கையுகாலு உதச்சிகிச்சு கண்ணு இரண்டும் சொருகி வயித்துல கண்ணு குட்டி வேற’
கண்களைத்
துடைத்துக் கொண்டார் ஐயர்
’பிரசவம்
ஆகாத படிக்கு சன்னி வச்சிருக்கும்’
’அதான்னு
நெனக்கிறேன்’
’யாரு
குடுத்த மாடு சாமி’
’ நடுப்பிள்ளை குடுத்த
மாடு அவுங்க வீட்டுல அந்த கெழ ஆச்சி காலம் ஆகையிலே வாலை உறிவி கைலாயம் போனாங்க நான்தான் மாட்டைச் படிச்சிக்கினு வூட்டுக்கு வந்தேன் மாடு சாது. லட்சுமி மாதிரியா’
’கெழ
ஆச்சி கைலாயம் போயிட்டங்களா’
லேசாய்
சிரித்து கொண்டான் நாகலிங்கம்
’கோதானம்
மாடு மாதிரி தெரியல சாமிஅது நல்ல ரட்சணமா இருந்திச்சி’
’நல்லா
கேட்ட நாகலிங்கம் கத்தி கையிலேன்னாலும் கனமூளைடா உனக்கு கெழ ஆச்சி கண்ணைமூடும்போது, நடுப்பிள்ளை மாட்டுக்காரனை ஒரு பசுமாட்டை புடிச்சி கிட்டு வாடான்னாரு. அவன் பாட்டுக்கு நல்ல ரட்சணமா ஒரு பசுவை குளிப்பாட்டி பொட்டு வைச்சி கொண்டாந்து நிறுத்திட்டான். பெறகு நடுப்பிள்ளைக்கு ஒன்னும் சொல்ல முடியாம இருந்துது. அதெ மீண்டும் கொட்டாயிலே கட்டிட்டு வேற ஒரு சப்பையா கெழமா கொண்டாந்துடுலாம்னு யோசனை பண்ணினாரு.
’மாட்டுக்காரன்தான் மாட்டைக்கழுவி பொட்டு
போட்டப்பறம் கொட்டாயில கட்டக்
கூடாது தானம் கொடுக்க கொண்டாந்ததுன்னு கறாறாச் சொல்லிப் புட்டான் கெழ ஆச்சியும் வாலை புடிச்சிக்கினு கைலாயம் போயிட்டா அப்பறம் மாடு எங்கிட்டேதான்’
’இப்ப
வுட்டுட்டிங்களே’
’என்ன
செய்ய என் நேரம் கிரக பலன் சரியில்லே. சனி எட்டுல வந்து இருக்கான் பெறகு
அவனோட படாதபாடு படுறேன்’
’வேற
தெருவுக்கு போவுணும் சாமி’ என்று நாகலிங்கம் லேசாகத் தன் பணியை நினைவு படுத்திக் கொண்டான்.
’நாகலிங்கம்
உன்னைக் கூப்பிட்டது. எதுக்குத் தெரியுமோ. ஒரு யோசனை கேக்கத்தான். மாடு செத்தது செத்துப் போச்சி. இப்ப என்ன செய்ய’
’ஆமாம்
மறந்து போனேன் சாமி அவாளு வர மாட்டாக கறாரா பேசிட்டு போயிட்டாங்க இப்ப மாட்டை அப்புறப்படுத்தணுமே’
’நீ
செத்த ஒத்தாசை செஞ்சின்னா தேவலாம்’
’சாமி
கவுறு ஏதும் வச்சி இருக்கிங்களா’
’மாடு
கட்டுற கவுறு இருக்கு’
ஐயரின்
மனைவி இன்னும் சோகமாக அமர்ந்திருந்தாள் எதுவும் பேசாமல் இருந்தாள். நாகலிங்கம் ஐயர் வீட்டு அம்மாளை ஒர் முறை பார்த்துக் கொண்டான். நாகலிங்கமும் ஐயரும் தோட்டத்து பக்கமாய்ச் சென்னறார்கள் மாடு வேப்பமரத்துக்குக் கிழாய்க் கிடந்தது. வயிறு பெருத்து உப்பி இருந்தது.கண்கள் பிதுங்கி அசிங்கமாய் இருந்தன. பச்சை சாணி வெளிப்பட்டுச் கிடந்தது. ஒரிரு காக்கைகள் மாடு இறந்து விட்டது உணர்ந்து சுற்றும் முற்றும் பறந்து மகிழ்ச்சி பாவித்துக் கொண்டன.
’சாமி
மாட்டு மேல என்ன குறி’
’அது
எட்டு போட்டுறப்பான். கெடக்காரன் ஆறுமுகம் மாடு கறப்பு இல்லேன்னா கெடயில கெடக்கும் அப்ப ஆறுமுகக் கோனாரு சூட்டான் கோலால எட்டு போட்டுட்டான், அடையாளத்துக்குத்தான். அதுபோட்டு வருஷம் பல ஆச்சி’
’வண்ணான்
துணிக்கு குறி போடுற மாதிரிதான்’ பட்டென்று சொன்னான் நாகலிங்கம்.
நாகலிங்கம்
மாட்டின் கால்களை ஜோடி ஜோடியாய்ப் பிணைத்துக் கட்டினான். இழுத்துப் பார்த்தான்.அசையாக் கல்லாய்க் கிடந்து அது.
’இது
ஒண்ணும் ஆவுற கதெ இல்லே’ என்றான் நாகலிங்கம்
’மாடுயாரு
மேய்க்கிறது’
’நம்ம
ராமசாமி ஊராகாலிதான். அவன் இப்ப வந்துடுவான் வர்ர நேரம்’
’ஆவுட்டும்
அவனும் வரட்டும், மாட்டு வவுத்துல கன்னு இருக்கு அது இந்நேரம் செத்திருக்கும் . அதுவும் வவுத்துல இருக்கிறபடியா அடக்கமும் ஆவாது.’
’அந்த
வுவத்தெரிச்ச வேற’
ஐயர்
அமைதியாய் நின்றார். தன் கண்களை ஒரு முறை துடைத்துக் கொண்டார்.
’சாமி’
என்று கத்தினான்
’நீ
போய் உள்ள குந்து’ என்று ஐயரை அதட்டினான்
’கன்னுக்குட்டிய வெளிய
கொண்ணாந்து ஆகாயம் காட்டணும். செனமாடுல்ல’ என்று முடித்தான்
ஐயர்
தன் கண்களை இடுக்கிக் கொண்டு வீட்டின் உள்ளாய்ச் சென்று வீட்டுப் பின் கதவை பட்டென்று சாத்திக் கொண்டார்.
’நீம்புரு
எப்ப வந்திரு.’
’காலைதான்
ஐயருகிட்ட மாட்டிகிட்டேன். பாவம் மாடுவேற செத்துகிடந்தது. ரவ வவுத்த கிழிச்சாலும் போதுங்கறேன்’
நாகலிங்கமும் ராமசாமியும் மாட்டினை பரபர என்று இழுத்து கொண்டு நகர்ந்தனர். ஐநூறு அடிதூரமாவது எப்படியோ கடந்து ஒருகாட்டு முள்மர நிழலில் நின்று கொண்டனர். கால்களை அவிழ்த்து கயிறு மீட்டுக் கொண்டான் ராமசாமி. நாகலிங்கம் தன் கூரிய கத்தியால் மாட்டின் வயிறு கீறி கன்றுக்குட்டியின் தலை தெறிய வைத்து முடித்தான்.
’இனி
நாயுவ இல்ல நரியுவ’ என்றான் ராமசாமி.
’மலை
கழுவுவ எமனாட்டம் ஆபாரு’ என்றான் நாகலிங்கம். தூரத்து நாட்டுக்கருவ மரத்தில் கழுகுகள் ராணுவ அணிவகுப்பில் தயாராய் அமர்ந்து இவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தன.
4
தருமங்குடியின் விபரம்
அறியாச் சிறுவர்கள் முதலாய் நாகலிங்கம், நாகலிங்கம் என்றே அவனை பெயர்ச்சொல்லி அழைத்தனர். துணிவெளுக்கும் பணியை சிங்காரவேலு என்கிற சிங்காரம் செய்து கொண்டிருந்தான். சிங்கார வேலுவோடு அவனின் உடன் பங்காளி கந்தனும் இருக்கவே செய்தான்.
தருமங்குடியில் நாகலிங்கமும்,
கந்தனும், சிங்கார வேலுவும், ஊரைச் சுற்றிச்சுற்றி வருபவர்களாய்தென்பட்டார்கள். தொழிலாளி என்பது தருமங்குடியில் இவர்களை மட்டுமே குறித்தது.
தருமங்குடி
தருமைநாதன் கோவிலில் சிவராத்திரி பூசை விசேஷமாய் நடைபெறும் இரவு நான்கு யாமமும் நான்கு காலபூசை. நாகலிங்கத்திற்கு இரண்டாவது கால பூசையும் சிங்காரவேலுவுக்கு மூன்றாவது காலபூசையும் என்றோ ஒதுக்கப்பட்டு இருந்தன,
இந்த
மண்டகப்படிகள்
அவர்களுக்கு பெருமை கூட்டு வனமாய் இருந்தன. அன்றுமட்டுமே தருமங்குடி தருமை நதான் கோவிலில் அவர்கட்கு மாலை அணிவித்து கௌரவம் சேர்க்கப்பட்டது. முதல் விபூதியும் கட்டனை தாரர் என்ற முறையில் அவர்கட்கு அன்று வழங்கப்படும். இது காலம் காலமாய் தொடர்ந்து வருகின்ற ஒன்று.. இவை எப்போது தொடங்கின என்பது ஆய்ந்து.சொல்ல முடியாமல் இருந்தது.
தருமைநாதன்
சன்னதியில் ஊரில் உள்ள தலைக் கட்டுகளின் பிரதிநிதியாய் தெரிபவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒருகட்டனை வழங்கப்பட்டு இருந்தது. அன்று அவர்களின் செலவு அபிஷேகமும் நிவேதனமும்.
சித்திரை
மாதம் தொடங்கும் வருடப்பிறப்பிலிருந்து மாதாமாதம் வரும் பௌர்ணமி, சிலமாதங்களில் எப்போதேனும் வரும் இரண்டு,பெர்ணமிகள், வைகாசி விசாகம், ஆனித்திருமஞ்சனம், ஆடி வெள்ளிகள்,
ஆவணி மூலம், புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி கந்தசஷ்டி விழா, கார்த்திகை சோமவாரங்கள், மார்கழி விடியற்காலை பூசை, தை வெள்ளிகள், மாசிமகம், பங்குனி உத்திரம் என்று அடுக்கடுக்காய் வைபவங்கள் இருந்தன. இவை அன்றியும் இடுக்குகளில் சில சிறிய விசேஷங்கள் இருக்கவே செய்தன.
நாககலிங்கத்தின் மனைவி.
அவனுடன் எப்போதும் உழலும் அவள் மொட்டை என்ற பெயரிலேயே தருமங்குடியில், அறியப்பட்டிருந்தாள். ஆனால் அவள் மொட்டையாய் தென்பட்டதே இல்லை. அவளுக்கு அடர்ந்த கருங்கூந்தல் இருக்கத்தான் செய்தது.
நாகலிங்கத்திற்கு ஒரு
மகன் அவனுக்கு ஊர் நடுப்பிள்ளையின் பெயர் சூட்டப்பட்டிருந்தது. நடுப்பிள்ளைக்கு ஞானசம்பந்தம் என்று அழகுப் பெயர் உண்டு. இதனை எப்படியோ அந்த நாகலிங்கம் அறிந்து கொண்டிருந்தான். தன் வாரிசுக்கும் அப்பெயரே சூட்டி மகிழ்ந்து போனான்.
ஊருக்கு
நாகலிங்கத்தின்
வாரிசு சின்னவன் அவனை சின்னான் என்றும் கூட ஊர்மக்கள் அழைத்து பழகி இருந்தனர்.
தெழிலாளிக்கு
கல் வீடா என்பதில் அனேகர் தருமங்குடியில் ஆச்சரியப்பட்டதுண்டு கல்வீடு என்பது செங்கற்களால் கட்டப்பட்டு நாட்டுவில்லை ஓடுகளால் நெளிநெளி வரிசையாய் போர்த்தப்பட்டிருக்கும். தொழிலாளர்கட்கு கல் வீடென்பது தருமங்குடியில் என்றோ தொடங்கி இருந்து
வருவதாய். அது
தருமங்குடியின்
அதிசமாயும் அறியப்பட்டது. அக்கிராமத்தின் மண்விளைஞர்கள் நான்குபேரும்கூட கல்வீடுகளிலேயே வசித்து வந்தார்கள். துணிவெளுக்கும் சிங்காரத்திற்குமே கூட கல்வீடு. . ஆசாரிகள். தச்சர்கள் கல் வீடுகளில். அக்கிரஹாரத்துப் பஞ்சாங்க ஐயர்வீடும், சிவாசாச்சரியார் வீடும் நெடுக்கு
வாக்கில் கல்வீடுகளாய்,
கிராமங்களில்
கல்வீடுகள், குடியிருப்போரின் பெருமை அறிவிப்பன. கூரைவீட்டார்கள் கல்வீட்டார்களை கௌரவம் கூட்டியே கணக்குப் போட்டார்கள்.
சிவராத்திரியன்று தருமைநாதன்
கோயில் இரண்டாவது யாமத்துப். பூசை உபயம் நாகலிங்கத்திற்கானதாய் இருந்தது. சந்நிதியில் திராவிட தோத்திரங்கள் பாடுவதற்தாய் ருத்திராட்சம் கட்டிய பேரூர் பிள்ளை நிச்சயம் இருப்பார் பேரூர் என்னும் ஊரில் பிறந்து, இதத்தருமங்குடிக்கு மாப்பிள்ளையாய் வந்துத் தங்கிப்போனவர் அவரின் பெயர் வேறு ஏதும் இருந்திருக்கலாம். ஆனால் ஊர் அவரை பேருர் பிள்ளையாய் மட்டுமே சொல்லிப் பழகி இருந்தது. அவரின் குரல் வளம் சற்றுக்குறைந்ததுதான். ஆனால் அவரின் உழைப்பு பெரிது. தேவாரப் பாடல்களை அவர் அதி நுணுக்கமாய் அறிந்திருந்தார். குரல் வளம் அவருக்குக் குறைந்து போனதற்காய் ஊரில் யாரும் அலட்டிக் கொள்ளாமல் இருந்தனர். தருமை நாதன் சந்நிதியில் சிவாச்சாரியார் தேவாரம் பாடுவதற்கான சமிக்ஞை கொடுத்து விட்டால் போதும் சிவா திருச்கிறறம்பலம் என்று தொடங்கி விடுவார் பிள்ளை. கையில் தாயாராய் வெண்கலத்தில் தாளம் ஒன்று வைத்திருப்பார். அது பளபள என்று தேய்பட்டு மின்னிக் கொண்டு நிற்கும் காதில் கடுக்கன் வெள்ளைக்கல் வைத்ததுவாய் கழுத்தில் சிவப்புக்கயிறு. அது ஒரு உருத்திராட்சத்தை சுமந்து நெருக்கிக் கொண்டு நிற்கும் அவரின் தேவாரப்பாட்டு நிறைவு பெற்றதற்காய் மீண்டும் சிவா திறச்சிற்றம்பலம் என்று சொல்லிவிட மாட்டாரா என்று சிலர் ஏங்கிக் கொண்டு நிற்பர், பாடுகின்றபேதெல்லாம் அவரின் கண்களிலிருந்து தாரை தாரையாய் நீர் சுரந்து ஓடிக் கொண்டு நிற்கும். தோடுடைய செவியனும், சொற்றுணை வேதியனும், பாலுக்குப் பாலகனும், பொன்னும் மெய்ப் பொருளும் தருவானும் நிச்சயமாய் அவரின் பாட்டுக்களில் இடம்பிடிக்கும்.
ஒவ்வொரு
நாள் சிறப்பு பூசைக்கு பின்னால் பேரூர் பிள்ளைக்கு மரியாதை நிமித்தம் ஒரு தேய்காய் மூடி வைத்துக் கொடுப்பதை சிவாச்சாரியார் விடாமல் அனுசரித்து வந்து கொண்டிருந்தார்.
5
நடுப்பிள்ளையின் தூரத்து
உறவுக்காரர் ஒருமுறை சிதம்பரத்தை அடுத்த சிவாயத்திலிருந்து தருமங்குடி வந்திருந்தார். அவரை நடுப்பிள்ளை வீட்டு கிழநாய் கடித்துவிட்டது. அந்த நாய்க்கடிக்கு நாகலிங்கம்தான் சிகிச்சை செய்து முடிந்தான். நாகலிங்கம் ஊர் கோடியிலுள்ள ஓர் தென்னந்தோப்பின் வேலியிருந்து இரண்டு விதமாய் பச்சிலைகள் எடுத்து அரைத்துக் கொண்டு வந்து கட்டினான்.
தருமங்குடியில் மஞ்சள்
காமலை நோய்க்கும் அவனே பச்சிலை மருந்து கொடுத்து வந்தான் கிராமத்து மக்கள் நாகலிங்கத்தை அணுகி தாமே பச்சிலை பெற்றும் போயினர்.
அக்கிராமத்தில் அப்போதைக்கு
அப்போது கேள்விப்படும் காணாக்கடிகளுக்கும் நாகலிங்கம் பச்சிலை மருந்து தருவான். எது கடித்தது என்பது அறியாத போது அதனை காணக்கடி என்று பெயரிட்டு மக்கள் அழைத்து பழகியிருந்தனர்.
தேள்கடிக்கு
ஒரு கை கண்ட பச்சிலையை வைத்திருந்தான். நாகலிங்கம் அதனைக் கொட்டு வாயில் வைத்துவிட்டால் போதும் விஷம் முறிக்கப்பட்டு வலி குறைய ஆரம்பிக்கும். ஆனேக நோய்களுக்கு மருத்துவ சேவை செய்பவனாய் நாகலிங்கம் அறியப்பட்டான்.
தன்
மனைவி மொட்டைக்கும் பச்சிலைகளையும் அவற்றின் குண விஷயங்களைப் பற்றியும் அவள் சொல்லிக் கொடுத்திருந்தான். மொட்டை ஊரில் பிரசவம் பார்க்கும் பணிப்பெண்ணாய் வலம் வருவாள் தருமங்குடியில் மொத்த குழந்தைகளின் பிரசவத்திற்கும் மொட்டைதான் மருத்துவச்சியாய் இருந்தான்.
சின்னவன் தான் ஒரு
நாள் கேட்டான்.
’ஏம்மா
உன் யேரு என்ன!
’ஏன்
மொட்டை’
அதுவேதான்
உன் பெயரா ஆமா ஏன் மாத்தி வைச்சிகலயா
’போவுட்டும்
எது இருந்தா என்ன
’என்
பேரு’
’சின்னவன்’
’இல்லே
சொல்லு’ என்று தாயிடம் அமைதியாய் கேட்டான் அவன்
’நா
சொல்லமாட்டேன். அது தப்புல்ல. நடுப்பிள்ளை பேருன்று அப்பன் சொல்லும்’
தன்
மனதிற்குள் சிரித்துக் கொண்டாள் மொட்டை.
நாகலிங்கம்
எங்கோ சென்று தன் தொழில் பார்த்து விட்டு வீடு திரும்பிய வண்ணம் இருந்தான்.
’கையில்
என்ன’ என்றாள் மொட்டை
’வாழக்கச்சலு
ரெண்டு’
’யாரு
குடுத்தது’
’யாரு
குடுப்பா’
’ஐயரு
வூட்டுல’
’பின்ன’
நாகலிங்கம் சிரித்துக் கொண்டான்.
’இந்த
கழுத எங்கே’
’ஏன்
அப்டி சொல்லூற’
அஞ்சி
வருஷம் முழுசா பள்ளிக்கொடம் போக இல்லே. கத்திப் புட்டிய தூக்கிகினு அல்லல் படப் போவுது கழுதே
’அதுக்கென்ன’
என்றாள் மொட்டை
’அதான்
கழுதென்னேன்’
’இதுக்கு
ஒண்ணும் குறைச்சலில்லே’ என்றாள் மொட்டை. சின்னவன் அங்கு வந்து நின்று கொண்டான். வாழக்கச்சல்களை புரட்டி புரட்டி பார்த்துக் கொண்டான். ’நல்லத்தான் இருக்கு’ என்றான்
6
தருமங்குடியில் எந்த
ஒரு நபரும் நாகலிங்கம் என்ற பெயர் சூட்டிக்கொண்டிருக்க மாட்டார்கள்.
அதனில்
ஊர் மக்கள் கூடுத்ல் அக்கறையுடன் இருந்தார்கள். தெருவில் போவோரும் வருவோரும் கூவிக் கூவி அழைத்த அந்தப்பெயர் ஈனப்பட்டுப் போனதுவாய் எண்ணினார்கள் மற்றும் யாரேனும் தன் பிள்ளையை பெயர் மட்டுமே கருதி ஊர்த்தொழிலாளிக்குப் பதிலாய் என்று நினைத்துக்கொண்டு விட்டால் என்ன செய்வது என்ற பெருங் கவலையில் அப்படி இருந்தார்கள்.
சிங்காரவேலு,
சிங்காரம் என்கிற பெயரும் சலவைத் தொழிலாளியினது ஆகி அப்படியே ஆயிற்று தம் வாரிசுகட்கு சிங்காரம் என்ற பெயர் வைக்கப்படாமல் இருக்க ஊர் மக்கள் கவனமாய் இருந்தார்கள்.
நாகலிங்கமும்
சிங்காரமும் அடுத்த ஊரில் கம்பத்துக் காரர்களின் திருப்பெயர்களாவும் இருக்கலாம். தருமங்குடியைப் பொருத்தவரை அவரை நீசப்படுத்தப்பட்டு விட்டதாய் மக்கள் முடிவு செய்து கொண்டார்கள். அருவருக்கும் பெயர்களாகி அவை முகம்சுளிக்கவே துணையாயின. ஆனால் நாகலிங்கமும் சிங்காரமுமே ஊரில் நிகழும் சாவுக்கும் வாழ்வுக்கும் துணை நின்றார்கள். ஈனக்கூலி பெற்றுக்கொண்டார்கள். அவர்கள் நடத்தப்படும் விதம் அவர்கட்கு நெஞ்சில் ரணத்தையே தருவிக்கும் ஒன்றாயிருந்து. ரணம் சுமப்பதே வாழக்கையாய்ப் பழகிப் போனது.
சிங்காரத்திற்கு ஒரே
மகன் அவன் சிங்காரபாலன். அவனை ஊரில் சிங்காரபாலன் என்பதற்குபதிலாய் பாலன் என்றே அழைத்து மகழ்ச்சி பாவித்தார்கள். பாலன் என்ற பெயரும் இனி தருமங்குடியில் ஈனமாகிவிடும்தான். தந்தையோடு அழுக்கு மூட்டைகளைச் சுமந்துகொண்டு வந்தான் பாலன். தருமங்குடிக்கு ரெவின்யூ இன்ஸ்பெக்டர் எனும் பெரும் பதவி வகிக்க ஒரு நாமதாரி வந்திருந்தார். அவர் நாமம்தரித்து மட்டுமே வெளிக்கிளம்புவார். அவரை நாமதாரி ராமதாரி ராமக்கார ஆபிசர் என்றே தருமங்குடி அழைத்தது.
ராமதாரிக்கு
துணி சலவை செய்து சிங்காரம் நேர்த்தியாய் அளித்துக்கொண்டடிருந்தான். அவரின் துணிகளைத் தொட்டு அலசிப்பிழித்து காயாவைத்து மடித்துக் கொடுப்பதில் இனம் புரியாத கர்வம் ஏனோ அப்போது அப்போது தலைகாட்டிச் சென்று கொண்டிருந்தது உண்மை. சிங்காரம் ஓர்நாள் சிங்காரபாலனை ராமதாரி வீட்டுக்கு அழைத்துக் கொண்டு சென்றான்.
ராமதாரி
தான் கேட்டார்.
’பையன்
என்ன படிக்கிறான்’
’நாலு
கௌாஸ் படிச்சது கழுதெ அதோடு சரி’
’கழுதை
படிக்கறதுக்கு
என்ன’
சிங்காரபாலன்
சிரித்துக் கொண்டான்.
’படிக்குலாம்’ என்றான்
ஏன்
படிக்கறது
பாலன்
அமைதியாய் நின்றான்.
’வாயுல
கொழுக்கட்டை வச்சிருக்காறு’ என்றான் சிங்காரம்.
’அப்பனோடு
சுத்தறத்தகுத்தான்
நேரம் சரியா போவுது’ என்றான் பாலன்.
’அரி;
ரொம்ப தாண்டுது. புண்டம் திங்கல புண்டம்’
’சும்மா
இரு சிங்காரம் நான் பேசிக்கிட்டு இருக்கன்ல’ என்றார் இன்ஸ்பெக்டர்.
பாலன்
அமைதியாய் இருந்தான். ராமதாரி சிரித்துக் கொண்டார்.
’இவனை
எங்கிட்டயே வுட்டுடு
சிங்காரம் நான் பார்த்துகறேன்’. ராமதாரி அழுத்தமாய்ச் சொன்னார். சிங்காரம் நெடுஞ்சாண்கிடையாய் ராமதாரியின் முன்பாய் கீழே விழுந்து அவரின் கால்களைப் பற்றிக்கொண்டுக் கிடந்தான்.
’கல்லுக்குக்குனிஞ்சி மல்லுக்கு நிக்குறது என்னோடு போவுட்டும் என்சாமி’
’எழுந்திரு
சிங்கராம் இது அசிங்கம்ல’
தன்தகப்பனையே
வெறித்துப் பார்த்தான் பாலன். தன் தந்தையின் கண்கள் நிறைத்துக்கொண்டு நீர் இருப்பதை நோக்கினான். குரல் கனத்துப் பேசினான் சிங்காரம்.
’கடவுளே,
ஏழுமலையானே, ஐயாரூபத்தில பாக்குறேன்’ என்றான் சிங்காரம்.
’கழுதை
உழுந்து கும்புடலாம்லே’ என்றான் சிங்காரம்.
பாலன்
கீழே விழுந்து ராமதாரியின் கால்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டான்.
சிங்காரம்
பேச ஆரம்பித்தான். குரல் இன்னும் கம்மித்தான் இருந்தது. ’சாமி நீங்க காலால வுடுற வேலய ஏன் கையாலே செய்யுறேன். இந்த நாயி தாயத்தது தாய முழுங்கிட்டு நிக்குது உலக்கயா. நீங்க கண்ணு தொறந்து வுடுங்க. என் செம இறக்கி வைக்கதான் அந்த கடவுளு உங்களை இங்க கொண்டாந்திருக்காரு’
கண்களைத்துடைத்துக் கொண்டாள்
சிங்காரம். பாலன் தன் தந்தையை உற்று நோக்கினான். தன்னிடம் எப்போதும்
ஜம்பம் பேசும் தனது தந்தை இப்படிக்கூனிக் குறுகி நின்று குரல் கம்மிப்பேசுவது அவனுக்கு ஒரே அதிர்ச்சியாய் இருந்தது.
’பையன்
இங்க இருக்கட்டும் நீ போ’ என்றார் ராமதாரி. அன்று பாலனை விட்டுவிட்டு வந்ததுதான். ஆண்டுகள் பல உருண்டோடின.
இப்போது
பாலனுக்கு அரசாங்க வேலையாகவே ஒரு சிறிய பணி கிடைத்து விட்டது என்றும் நல்ல சம்பளம் என்று பேசிக்கொண்டனர். ஊர் ஊராய் பணி மாற்றத்தில் அவன் அடிக்கடிச் செல்வதாயும் ஊரார் அறிந்திருந்தனர்.
7
தருமங்குடிக்கு அண்மையில்
தெரியும் நகரம் நெய்வேலி, தருமங்குடியிலிருந்து நடந்தே சென்றுவிட முடியும். ஐந்து மைல் இருக்கலாம். அங்கு நிலக்கரி வெட்டி எடுப்பது பற்றியும் நாடே அறிந்துதான் இருந்தது. இங்கு மின்சாரம் எடுப்பதும் ஒரு பிரதான வேலையாய் இருந்தது. என்றோ முந்திரிக்காடாய் இருந்த ஊர். செம்மண் பெட்டையாய் அறியப்பட்டும் கிடந்தது. தருமங்குடி ஐயர் தான் சொல்லிக் கொண்டிருப்பார்.
’ஒரு
ரயில்ரோடு, ஒரு ரயிலுபெட்டி ஓரமா நிக்கும். அதுல வர்ர
கார்டு ரயிலு வரும்போது, எறங்கி டிக்கட் குடுத்துட்டு அப்படியே ஏறிகினு போய்விடுவார் அவ்வளவு தான் வேறு என்ன இருந்திச்சி. கடலூர் தொறைமுகத்தி லேர்ந்து விருத்தாசலம் வழியாய் சேலம் போவுற லைனு இது.’ என்பார் ஐயர்,
நாட்டாண்மை
ராமலிங்கம் எட்டு கண்ணு விட்டெறியும் ஜபர் தஸ்துக்காரர், ஐயரோடு சேர்ந்து கொள்வார்.
’சம்புலிங்க
மொதலி வெள்ளாமைக்கு கெணரு வெட்டிப்பாக்கையிலே கரப்பா மெதந்தது. தாசில்தாரு வந்தாரு. அப்புறம் யாரோ எவுரோவந்தாங்க. ஆராட்சி பண்ணி இது பிஞ்சி நெலக்கரிண்ணு முடிவு பண்ணினாங்க. ஒண்ணுக்கும் ஆவாது செவுத்துல முட்டிக்கிறதான்னு ஓரங்கட்டினதை
ரஷ்யாக்காரனுங்கதான்
கரண்டு எடுக்கலாம் பாருன்னு மாரு தட்டுனானுவ’ இப்படித்தான் ராமலிங்கம் சொல்லிக்கொண்டே போவார்.
’’அந்த
நேரு மெனக்கெட்டது இவ்வளவும்’ என்பார் ஐயர். நேருபற்றிப் பேசும்போது ஐயரும் நேரு
ஆயிடறதா நெனச்சிக்குவாருதான்’ என்று கேலி பேசி சிரிப்பார் நாட்டாண்மை.
’கோஷ்ன்னு
ஒரு வடக்கத்தி எஞ்சினியர் நெய்வேலியில் தங்கி அடிநாள்ல வேலை செஞ்சாரு. இப்ப மந்தாரகுப்பம்
ரோட்டுக்கும் வடக்கால கெடக்குற பழைய கல்லுவூட்டுலதான் தங்கி இருந்தாரு. அந்த வூட்டுல இப்ப டெலிபோன் ஆபிசு அது இது வச்சிருக்கானுவ. கோஷ் ஆர்ட்டிஷன் பம்புபோட்டு போட்டு தண்ணி வரவழிச்சி காட்டுனாறு. தானா தண்ணீவருர குழாயுங்க இந்த பக்கத்தில் கனமா அப்பத்தான் வந்தது! என்பார்
நாட்டாண்மை.
அப்போதுதான்
தருமங்குடியில்
இரண்டு ஆர்டிஷன் குழாய்கள் போடப்பட்டன. அவை தண்ணீரைக் கொப்பளித்து கொப்பளித்து கோபுரமாயக் கொட்டின. இவைகள் இப்போது கண்ணில் தென்படாதபவைகளாயின. ஆர்டிஷன் ஊற்றுக்கள் இருந்த இடம் தூர்ந்து போய் குழாய்கள் மருத்து அடைபட்டுப்
போயும் இருக்கலாம்தான்.
சுரங்க
நகரம் நெய்வேலியில் ஒரு சினிமா அரங்கம் இருந்தது. பாண்டியநாயகம் என்ற பெயருடைய அத்தியேட்டரில் அப்போது சரசுவதி சபதம் ஓடிக்கொண்டிருந்தது. சிங்காரவேலுவும் நாகலிங்கமும் நெய்வேலி சென்று சரசுவதி சபதம் பார்த்துவிட்டு வருவதாய் முடிவு செய்தார்கள்.
’நடந்த
பூடுலாம்’ என்றான் சிங்காரம்
’பின்ன
காருல ஏறிபோணுமா கொழுப்பா’ சொல்லி முடித்தான் நாகலிங்கம்.
இருவரும்
நெய்வேலி நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். ஊமை வெயிலாய் இருந்தது. தருமங்குடிக்கு வடக்குப்பகுதி வயல் வெளியில் ஐந்துமைல் நடந்தால் நெய்வேலி வரும். ஒற்றையடிப் பாதையாய், நெல்வயல்களுக்கு நடுவே வழி சென்று கொண்டிருந்தது. இருவரும் ஆராபுரி ஏரிக்கரைமீது நடந்தார்கள். அந்த எரிக்கு ஆராபுரி என்றே பெயர் வழங்கப் பட்டு வழக்கில் இருக்கிறது. ஏரிக்கரையில் கருப்புமண் பொறுக்கு பொறுக்காய்க் கிடந்தது. அதன் மீது நடப்பது பொறுபொறு என்று அத்தனை இதமாய் இருந்தது. இருவரும் தொடர்ந்து நடந்தார்கள்.
தூரத்தில்
நெய்வேலி செல்லும் ரோட்டுப்பாதை தெரிந்தது.. அப்பாதையில் மாட்டு வண்டிகள் வைக்கோல் ஏற்றிக்கொண்டு ஊர்ந்து சென்றன.
’ஏன்
சிங்காரம் மிதியடி போடுவியா’
நாகலிங்கம்
பல்லெல்லாம் வெளித்தெரிய ’களுக்’ கென்று சிரித்தான்.
’என்னா
புதுப்பழக்கம்
இனிமேதானா வரப்போகுது’
சிங்காரம்
பட்டென்று பதில் சொன்னான்.
ஆராபுரியில்
நடுத்திட்டாய்
நீர்பரப்பு சுருங்கித் தெரிந்தது. அதனை அடர்த்தியாய் கோரைகள் வளர்ந்து நெருங்கி மறைத்த வண்ணமிருந்தன. ஓரிரு எருமைகள் கோரைப்புற்களை அசமடக்கி தலையை தூக்கி ஆட்டிக் கொண்டிருந்தன.
’தோ
தெரியற மாதிரில்ல இருக்க’
’அப்படித்தான் தெரியும்
ஆனா போவப் போவ போய் கிட்டே இருக்கும்’
’மண்ணு
மலையாட்டம் கெடக்குதல்ல அதுதான் சுரங்கத்துல வெட்டுறது. கொஞ்சம் உசரத்துல ராட்சத குரங்கு வாலு சுருட்டிகினு குந்துனாபுல இருக்குதே அது மண்ணு கொணாந்து கொணாந்து கொட்டுகிற மெஷினு’.
சிங்காரம்
முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தன.
’உசர
உசர குழாயா நாலு நிக்குது பாரு அங்கதான் கரண்டு எடுக்காருணுவ’
நாகலிங்கத்துக்கு விஷயங்கள்
தெரிந்தே இருந்தன. சிங்காரதிற்கும் நாகலிங்கம் மூத்தவன் என்றாலும் செய்திகள் அறிந்து கொள்வதில் பிறருக்குச் சொல்வதில் அனுபவமாகி இருந்தான். ஆராபுரி ஏரியின் மீது விவசாயிகள் ஓரிருவர் மும்முராமாய் நடந்து கொண்டிருந்தார்கள்.
’ஆராபுரிய
கொழப்புனா எதாவது தேறுமா’
என்றான்
சிங்காரம்
’உன்னால
என்னால ஆவுற கதெ இல்லே’.
’ஆனையை
கட்டி இதுங்கறதுன்னு சொன்னா அதுக்குத்தன வேணுமில்ல’
’நான்
கொழப்பி கெண்ட புடிச்சிகுக்கேன் கொண்டாந்து ஆக்கித் தின்றுருக்கேன்’
’ஆமா
எனக்குத் தெரியா கதெ திருட்டுத்தனமா சனம் கூத்துப் பாக்கையில் பொதகட்டக் குழியில ராவிருப்பே’ சிங்கராம் சிரித்துக் கொண்டான்.
ரவ
நேரம்னாலும் ராசாதான்
’ஆம்மாம்
கூசாதான்’ என்றான் நாகலிங்கம் நாகலிங்கம் ஓர் துணிப்பை வைத்திருந்தான். அதற்கு காது ஒன்று மட்டுமே இருந்தது.
’இத
என்னா செவுட்டு பையா’
’ஆமாம்
குருட்டு பையி’ நாகலிங்கம் வெடுக்கென்று பதில் சொன்னான்.
’என்னா
அதுவுள்ள’
’சொக்கா
வைச்சிருக்கேன்
டவுனுகிட்ட போகையிலே போட்டுக்கிலாம்னு’
நாகலிங்கம்
கள்ளத்தமைமாய்ச்
சிரித்து பாதியில் நிறுத்தினான்.
’நெத்துதான்’
’நான்
சட்டை கொண்டாந்து இருக்கேன் யோசனை பண்ணித்தான்’
’என்னா
யோசளை’
’நெய்வேலில
மொட்டை யோட தம்பி இருக்கான் அவன் கடை வச்சிருக்கான் அம்பட்டன் கடைதான் ஆனா வெள்ளக்காரனுவளுக்கு செரக்கிறான்று கேழ்வி’ தன்தோள் மீது இருந்து துண்டை எடுத்து மீண்டும் அதே இடந்திலேயே அதனை இருத்தி நடந்தான் நாகலிங்கம்,
’சட்டை
நடுப்பிள்ளயது
தானே’
’சிங்கராம்
ஊரு சட்டையுவ கல்லுல மொத்தி வெளுக்கறது நீ உன்கிட்டநான் என்ன மறைக்கக்கெடக்குது’
’ஆனா
இது வர்ரைக்கும் ஒரு சட்டை போட்டுகினது இல்ல’
’எப்படி
ஆவும்’
’சட்டை
போட்டுகினு சாமின்னு மாடாட்டம் உழுந்து கும்புட்டம்னா நல்லா இருக்குமா’.
’சட்டி
ஒரு கையில புட்டி ஒரு கையில போனா எப்படி ஆவும்’
ஆராபுரி
முடியும் தரவாயில் ஓர் சிறியவரப்பு வந்தது அதன் அருகே நீர் குட்டையாய்த் தேங்கிக் கிடந்தது அதனில் புதைக்கட்டை போட்டிருந்தார்கள் பனை மரத்தையோ, தென்னைமரத்தையோ உள்ளாய்க் குடைந்து விட்டு ஒரு பக்கத்தில் பொத்தலிட்டும் வைத்து இருந்தார்கள் குட்டை நீர் அதன் வழியே வெளிப்பட்டு சலசலத்துக் கொண்டு இருந்தது நீர் பிரவாகத்தை எதிர்த்து மகிழ்ச்சி பாவித்த அப்பாவி மீன்ள் புதைக்கட்டைக்கு அப்பால் உள்ள குழியில் விழுந்து சிறைபட்டுத் துடித்துக் கொண்டிருந்தன.
’ஆளு
யாரையும் காணும்’
’ஒரு
கை அள்ளி இப்ப என்னா செய்யுவ’
’சரசுபதி
சபதம் பாக்கப்போறம் இது ஏன் இப்ப இமுஷை’
’ஆமாம்
தருமங்குடி கூத்துல சரசுபதி வேஷம் கட்டுறவரு சந்தரக் கோனாரு புறாமார்க்கு சுருட்டை புடிச்சிகினு கெடப்பாரு நாலுவரி பாடுனா சுருட்டை இரண்டு இழுப்பு இழுப்பாரு சரசுபதியே சுருட்டுச் குடிக்கிற மாதிரி இருக்கும்’.
சிங்காரம்
ஒரு முறை சிரித்தான். புதைகட்டைப் போட்டவனை யெங்கும் காணவில்லை,
சிங்காரமும்
நாகலிங்கமும் நடந்து கொண்டிருந்ததார்கள் இடையே பரவானாறு குறுக்கிட்டது.
’தட
தடன்னு பாரு தண்ணீ கருப்பா’
’கரி
கழுவி வர்ர தண்ணி கருப்பா கர்ரேர்ன்னு’
பரவனாற்றில்
முழங்கால் அளவு நீர் இருந்தது ஒரத்தில் சம்மங்கோரை உயரமாய் வளர்ந்திருந்தது சம்புகள் பூத்தும் இருந்தன நாகலிங்கம் முன்னதாக நடந்து கொண்டிருந்தான் சிங்காரம் பைய பின்னால் நடந்து வந்தான்.
’இதில
மீனு இருக்குமா’
’இல்லாம
என்ன’
’கரப்பா
தண்ணி வந்த அண்ணிக்கி முழுச்சிருக்கும் அப்பறம் அதுவேருசியாய் போயிருக்கும் என்னா’
இருவரும்
நடந்து கொண்டிருந்தார்கள். இப்போது நெய்வேலி கண்களுக்குப் பெரிதாய் தெரிந்தது.
’சினிமா
கொட்டகை தெரியுதில்ல’
’ஆமாம்
மஞ்சளா உசரமா தெரியுதே அதான்’
பாதைக்குப்
பக்கத்தில் சம்புலிங்க முதலியார் பைப் வந்தது இந்தப்பகுதியில் தான் சம்புலிங்க முதலியார் தங்கி விவசாயம் செய்து இருக்கிறார். குட்டையொன்று கன்னா பின்னா என்று கிடந்தது குட்டையின்மேற்குக்கரையில் ஒரு பாம்பு புத்தென்று உயரமாய்த் தெரிந்தது அதன் அருகில் சுட்டமண் பொம்மைகள் இரண்ட இடுப்பில் கைவத்து பாதையில் செல்பவர்களை வேடிக்கை பார்த்த வண்ணமாய் இருந்தன செங்கற்கள் நான்கு குத்து வாட்டில் நின்று யாரோ என்றோ நம்பிக்கையில் வைத்துவிட்டுப் போனதை பத்திரமாய் காத்து நின்றன.
’சந்தைதோப்பு
நெருங்கிகிட்டு
இருக்கோம்’
’சரிதான்’
என்றான் சிங்காரம்.
செவ்வாய்தோறும் சந்தை
நடக்கிற இடம் ஆடுகள், மாடுகள் காய்கறிகள் அரிசி, புளி வெல்லம் இத்யாதிகள் விலைக்கு வந்துபோகும்.
’நானு
வந்தது இல்ல’
’நான்
நாலஞ்சி தர்ரம் வந்திருக்கேன்’. என்றான் நாகலிங்கம் வேகமாய். பழைய நெய்வேலி வந்தது. இரண்டு தெருவுக்கு கூரைவீடுகளாய்த் தெரிந்தன. ஒருசிறு பிள்ளையார் கோவில் தெரிந்தது. அது தாண்டி ஒரு குட்டை பாசி படர்ந்து பச்சைப்பசேல் என்றிருந்தது. ஒரு பிள்ளையார் சிலையும் முதிர்ந்த ஆலமரமம் இருந்தன.
’மணி
எத்தனி இருக்கும்’
’நாலு
ஆவும்’
நான்குமூலை
ரோடு வந்தது. நான்கு ரோடுகளின் சந்திப்பே இப்படி பெயர் பெற்றது .அவரவர்கள் குறுக்கும்நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தார்கள்.
’கெழக்க
சொயளனும்’ என்றான் நாகலிங்கம்
’ஆள,
டவுனு வந்துட்டம்’ சிரித்துக்கொண்டான் சிங்காரம். நாகலிங்கம் பையில் பத்திரமாய் வைத்திருந்த சட்டையை இன்னும் தொடமால் இருந்தான்.
’அண்ணே
நீ வேஷம் கட்டுல’
’அடடா’
என்றான் நாகலிங்கம். அவசர அவசரமாய் தன் துணிப்பையுள் ஒளிந்து கிடந்த சட்டையை வெளியில் எடுத்து உதறிக்கொண்டான்.
’பாண்ச்ர்’
என்று குரல்கொடுத்து தன் இருகைகளை நுழைத்து பொத்தான்களைப் பொருத்தி, ஓர்முறை தன்னையே பார்த்துக் கொண்டான்.
’நல்லாத்தான்
இருக்கு’ என்றான் சிங்காரம். நான்கைந்து கடைகள் தாண்டின. நாகலிங்கம் ஓர் மாதிரியாய் நடக்க ஆரம்பித்தான் செயற்கை கூடிய தன் நடையை தானே ரசித்துக்கொண்டான் நாகலிங்கம் தலையை ஓர் முறை கோதிவிட்டுக் கொண்டான்,
’நல்லாத்தான்
இருக்க வுடு’
’என்னா
பண்ணுறது’
நாகலிங்கம்
தன் மைத்துனன் சலூன்கடை வாயிலில் நின்று கொண்டான். சலூன் ஒரு புளிய ரத்தின் கீழாய் இருந்தது.
’கடைபேரு
என்னா’
’பேரு
என்னா நான்கண்டேன் ஆறுவிரலு ஆறுமுகம் சலூன்னு சொன்னா தெரியும்’
’அது
என்னா ஆறுவிரலு’
’தம்பிக்கு
சோத்துகையில ஆறுவிரலு’
சலூன்
வாயிலில் உள்ள கண்ணாடிக்கதவில் பிள்ளையார் பட்டி விறாயகர் கருமையாய் சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தபடிக்கு, படம் ஒட்டப்பட்டிருந்தது.
சிங்காரமும்
நாகலிங்கமும் கடை உள்ளாய்ச் சென்றார்கள். ஆறுவிரல் ஆறுமுகம் தாடிக்கார பாய் ஒருவருக்கு தலையை மழித்துக்கொண்டிருந்தான். பாய் இடுப்பில் பச்சை பட்டை
பெல்ட்டும் கைலியுமாய் இருந்தார். அவருக்கு முன்பாய் இருந்த மரத்தட்டில் கண்ணாடிக்கு முன்பாய் குல்லாய் அடக்கமாய் அமர்ந்திருந்தது.
’ஏலே
ஆறுமுகம்’
ஆறுமுகம்
திரும்பினான்.
’வா
மாமா’
நிறைவாய்
சிரித்தான் ஆறுமுகம்.’ பாய் ஜோலி முடிச்சிட்டு வந்துடறன்,’ பாய் லேசாய்ச் சிரித்தார்.
’பெஞ்சில்
குந்துங்க’ என்றார் பாய்
சிங்காரமும்
நாகலிங்கமும் பெஞ்சில் அமர்ந்து கொண்டார்கள்.
’அண்ணே
சௌக்கியமா’ சிங்காரத்தைக் கேட்டான் ஆறுமுகம்
’சௌக்யந்தான்’
’எங்க
ரெண்டுபேருமா’,
பாயின்
கழுக்கத்தில் முடிவழித்துக் கொண்டிரந்தான் ஆறுமுகம்.
’சரசுவதி
சபதம் பாக்குலாம்னு’
’ரைட்
ரைட்’ என்றான் ஆறுமுகம்
பாய்
தன் மூக்குமுடியை காண்பித்து கொண்டிருந்தார். ஆறுமுகம் நீண்ட கத்தரிக் கோலால் சர்ரக் சர்ரக் இரண்டு முறை கத்தரித்து முடித்தான் பாயின் வாயில் முடிஏதும் விழுந்திருக்க வேண்டும்.
’வாயில
பூட்டுது’ என்றார் பாய்.
’வாயத்துறந்து துண்டால
ஒத்தி எடுத்துடுங்க பாய் சரியாப்பூடும்’ என்றான் ஆறுமுகம்
பாய்
சுழல் இருக்கையைவிட்டு எழுந்து தன் கைலியைச் சரிசெய்து உதறிக் கட்டிக்கொண்டார். குல்லாயை கையிலெடுத்து ஒரு முறை முறைத்து அதனை மீண்டும் தலையில் இருத்திக்கொண்டார். தன் இடுப்பு பெல்டிலிருநது ஒரு பததுரூபாய் நோட்டின எடுத்து ஆறுமுகத்திடம் ஒப்படைத்தார் பாய். ஆறுமுகம் அதிகப்படியாய்ச் சிரித்து அதனை பெற்றுக் கொண்டான். பாய் தன் பணி முடிந்து போன கம்பீரத்தில் வாயிலைக் கடந்து வெளிப்பட்டுக் கொண்டார்.
ஆறுமுகம்
டீக்கு ஆாடர் செய்தான்.
நாகலிங்கமும்
சிங்காரமும் கடையை நோட்டம் விட்டபடி இருந்தனர்.
’பொம்பளைகள்
அம்மணக்குண்டிகளா
தேவுலாம்’ சிரித்தான் சிங்காரம்.
’இவுரு
பாக்காதவரு’ வெடுக்கென்று சொன்னான் நாகலிங்கம்.
’பாக்காத
கதெ இல்ல. ஆசை வுடுதா. அப்ப அப்ப எட்டிப்பார்க்கும். ஆரு இல்லேன்னா!’
’பாரு
பாரு நல்லா பாரு, என்னாத்த பேத்துஎடுத்துகினு போப்பறம். மண்ணு திங்கப் போற வுசிறு’
டீக்கடை
பையன் டீ கொண்டுவந்தான். நாகலிங்கமும் சிங்காரமும் தலா ஒரு கிளாசைக் கையில் எடுத்து உறிஞ்சிக் கொண்ருடிந்தனர்.
’உம்
பயனை அனுப்புனா என்னா?’
’சரி’
என்றான் நாகலிங்கம்
’என்னா
சரி?’ சின்னவன் வந்தா என்னா, தொழிலு பழவுலாம். நாலு வெஷயம் தெரியும் டவுனுல்ல’
’சரி’
மீண்டும் சொன்னான் நாகலிங்கம்
’என்னா
மழங்குற, அனுப்பிவிடு, ஒண்னும் சம்பலா யிடாது, நான் பாத்துக்கிறேன்’
’யோசனை
பண்ணி செய்தி அனுப்புறேன்’ என்று முடித்தான் நாகலிங்கம்.
’படத்துக்கு
போவுனும்றே, நேரம்ஆவுதில்லே. புறப்படணும் நம்ம கதெ பின்னால’ வேகமாய்ச்
சொன்னான் சிங்காரம்.
ஆறுமுகத்திற்கு இரண்டு
கிராக்கிகள் உள்ளே நுழைந்து கொண்டிருந்தனர்.
’பின்ன
உன் பொழப்பைப் பாரு நாகலிங்கம்’ வெளிப்பட்டான்.
நடுப்பிள்ளைக்கு நெய்வேலியில்
ஓர் உணவு விடுதி இருந்தது. அதுவும் பாண்டிய விறாயகர் திரை அரங்குக்கு செல்லும் வழியில்தான்.
’மணி
ஆயிடுமா?’
’ஒண்ணும்
ஆவாது’
இருவரும்
வேகுவேகு என்று நடந்து கொண்டிருந்தார்கள்.
’நெய்வேலின்றானுவ.
நம்ப பக்கத்து ஆளுவுள காணுமே’ என்றான் சிங்காரம்.
’ஏலே
எவண்டா இவன் மாடு ஆடு மேய்ச்சி முந்திரி மரத்து தாழ நிக்கயில நம்ப ஆளுவ மட்டும்தான் இருந்தான். இண்ணைக்கு கரி, கரண்டு, ஊரியா அதுஇதுன்னு மணக்குது. அப்ப இங்கிட்டு நாயுவுளுக்கு இங்க
என்னா வேல இருக்கு, ஜோலி இருக்கு.’
’சரிவுடு’ என்றான் சிங்காரம்.
’அந்த
ஓட்டல் தானே’
’ஆமாம்
ஓட்டல் அதுதான்.
’ஏலே
ஓட்டல்னா இன்னதுன்னு இல்லியா’
’அது
என்ன சனியனோ, பேரு நினைப்புவல்ல’
இருவரும்
பாண்டிய விநாயகர் உணவு விடுதியைத் தாண்டிக் கொண்டிருந்தார்கள். இருவரையும் வழிமறித்து ஒரு சிறுவன் கூப்பிட்டான்.
’ஐயா
கூப்புட்டாங்க’
இருவரும்
திரிதிரி என்று விழித்தினர்.
’யாரு
அய்யா’
ஓட்டல்
முதலாளிதான் கூப்பிட்டாறச் சொன்னாரு.
இருவரும்
அந்த்சசிறுவனின்
பின்னே சென்றார்கள். பாண்டிய விநாயகர் ஓட்டல் கல்லாபெட்டியில் நடுப்பிள்ளை அமர்ந்து தன்தலையைக் கோதிக்கொண்டிரந்தார்.
’ஏலே
வாங்க என்னா ரெண்டு பேருமா கிளம்பிட்டிங்க?’
நடுப்பிள்ளை
சிரித்துக்கொண்டார். சிங்காரம் ஏதும் பேசாமல் இருந்தான்.
’இந்தக்கழுதை
சினிமா பார்க்கணும்னுது’
என்று
சிரித்துக் கொண்டே சொன்னான் நாகலிங்கம்.
’சரசுவதி
சபதம்ல’
சிங்காரம்
இப்போது தான் தலையை ஆட்டினான்.
’கழுதைங்க
சாப்பிட்டிச்சா?’
’எங்க
சாப்புடறது. இப்பதான் வாரம்’ நாகலிங்கம் மெதுவாய்ச் சொன்னான்.
நடுப்பிள்ளை
தள் மேசைமீது இருந்த மணியை அடித்தார். வழி மறித்து அழைத்துப் போனச் சிறுவன் மீண்டும் வந்தான்.
’எலே
ரெண்டு பிளேட்டுல நவ்வாலு இட்லி வைச்சி கொண்டாந்து வை’ சொல்லிச் சிரித்துச் கொண்டார் பிள்ளை.
’சட்டுனு
சாப்புட்டுப் போங்க நான் போன் பண்ணி சொல்லி புடறன்’.
சிங்காரவேலுவும்,
நாகலிங்கமும் அவசர அவசரமாய் தட்டைக் காலி செய்து முடித்தார்கள்.
’கொட்டாயுக்கு போறம்’
என்றான்
நாகலிங்கம். நடுப்பிள்ளை ஓர் சீட்டொன்றைக் கொடுத்து, ’மானேஜர்கிட்ட கொடுங்க உங்களை வுட்டுடுவாரு’ என்றார் நடுப்பிள்ளை.
சீட்டைப்
பெற்றுக் கொண்டனர் இருவரும்.
’நான்
இங்க இருக்கறது தெரிஞ்சித்தான் புறப்பட்டீங்களா?’
’தெரியாதுங்க,
நாங்களேதான் பொறப்பட்டம்’
திருட்டு
பயலுவளாச்சே
இருவரும்
சிரித்துக்கொண்டனர். உணவு விடுதியை விட்டுப் புறப்பட்டார்கள். இருவரும் சினிமா அரங்கம் நோக்கி, தாண்டுத் தப்படியில் நடந்தனர்.
’சீட்டுப்
பத்திரம்’
’அதெ
வுடுவனா’
நாகலிங்கம்
ஒருமுறை சீட்டினைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான்.
பாண்டிய
விறாயகர் அரங்கின் வாயிலில் ஒரே கூட்டம் கிராமத்து மக்கள் கட்டை வண்டிகள் கட்டிக் கொண்டு வந்து நிறுத்தியிருந்தனர். படம் இன்னும் ஆரம்பிக்கவில்லை என்பதனைச் சுற்றுப்பட்டு ஆரவாரம் உணர்த்திற்று. இசைத்தட்டு ஒரே இரைச்சலாய் இரைந்து கொண்டு இருந்தது. நாகலிங்கமும், சிங்காரமும் தியேட்டர் மானேஜர் முன்பாய் நின்று கொண்டிருந்தனர். மானேஜர் ஏளனமாய்ப் பார்ப்பதாய் சிங்காரம் உணர்ந்தான்.
’இதுல
ஒன்னும் குறச்சல் இல்லை’.
உயரம்
மிகக் கூடிய மானேஜர், அவருக்கு ஏனோ காதுமடல்கள் முறம்போல் இருந்தன.
’பாரு
இவரு காதை’ என்றான் சிங்காரம் முடிக்காமல்.
’சுத்தமட்டியா இருப்பியா?’
நாகலிங்கம் வெடுக்கென்று சொன்னான்.
’உள்ளே
போங்க’ சொன்னார் மானேஜர்.
’நடுபுள்ள நாம வர்ர விவரம் சொல்லி இருப்பாரு’ நாகலிங்கம் முணுமுணுத்தான்.
நாகலிங்கமும்
சிங்காரமும் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்கள். மாடிக்குச் செல்லும் படி வழி இருந்தது. அதன் வழியாய் ஏறி நடந்தார்கள்.
’போவுலாமா’
என்றான் சிங்காரம்.
’ஐயரு
கிட்ட கேக்கனும். நடுப்புள்ள சீட்டு. நம்ப ஊருக்காரரு கொட்டா. ஏண்டா எல’
’இது
கொட்டாயா?’
’ஆமாம்
இது. வேலயப்
பாருண்றேன்’
நாகலிங்கமும்
சிங்காரமும் உள் நுழைந்து அமர்ந்து கொண்டார்கள். வாயிலில் சீட்டுக் கிழித்துப் பாதி தருபவன்கூட இன்னும் வந்த பாடில்லை. ஒரு சிறுவன் அரை டிராயர் போட்டுக் கொண்டு விளக்கமாறும்கையுமாய் வந்து கொண்டிருந்தான்.
’நல்லா
கூட்டு ஆல’ என்றான் சிங்காரம். அந்தப் பையன் முணு முணுத்தான். நாகலிங்கம் அவனை உற்று நோக்கினான். நாகலிங்கத்திற்கு அவனைப் பார்க்கப் பரிதாபமரக இருந்தது.
கூட்டிட்டு
என்னா செய்வ என்ற நாகலிங்கத்திற்கு
’நான்
ஓட்டல் ஏனம் வௌக்குவேன்’
’அவன்
கிட்ட என்னா பேச்சு?’ என்றான் சிங்காரம். அவனை அல்பமாய்ப் பார்த்தான்.
’சீட்டு
வாங்கினிங்களா’
என்றான் அரை டிராயர்.
’நாங்க
புள்ள ஊரு, தருமங்குடி அவரு சிவாரிசுல சீட்டு கொடுத்து இருக்கோம்’
என்றான்
சிங்காரம் விரைத்துக் கொண்டு,
’பின்ன
ஏன் இங்க வந்து குந்துனீங்க?’
’எங்க
குந்துனா ஒம்புருக்கு என்னா?’
’இல்ல.தருமங்குடி ஆளுவ எல்லாம பெஞ்சில், கீழதான் குந்தும்’.
’ஏண்டா
ஒன் வேலைப்பாரு’ என்றான் சிங்காரம்.
’கண்ட
கழுதைகிட்ட’ என்று நாகலிங்கம் சொல்ல, அரை டிராயாருக்கு முகம் சுருங்கிப் போனது. நாகலிங்கமும் சிங்காரமும் நல்ல இருக்கையைத் தேர்ந்தெடுத்து, மின்விசிறிக்கடியில் உட்கார்ந்து கொண்டனர்.
’மேலே
காத்தாடி பாத்தியா’
’மழங்குதுன்றேன்’
’பெரிய
மனுஷன் பெரிய மனுஷன்தான்’ என்றான் சிங்காரம். கொஞ்சம் கொஞ்சமாய் மேல் பகுதி இருக்கைகள் நிரம்பிய வண்ணம் இருந்தன. வருகின்ற அனைவரும் இவர்கள் இருவர் அமர்ந்திருப்பதையும் ஒருமுறை அதிர்ந்து பார்த்தபின்னரே, வேறு இருக்கையில் அமர்ந்துகொண்டனர்.
’ஒரு
சட்டை கொண்டாந்து போட்டுகினுஇருக்கலாம்.’
’ஆத்து
நெறய தண்ணி போனாலும் நா நக்கித்தான் குடிக்கும்’, என்றான் நாகலிங்கம்.
’ஆமாம்
அண்ணே, ஆளுக்கு ஆளு ஒரு மாதிரியா பாக்குறானுவ’.
’மின்ன
பின்ன செத்து இருந்தா, சுடுகாட்டுக்கு வழி தெரியும்’.
’ஆமாம்
ஒரு கதையைக் கேளு. அப்படித்தான் ஒரு சட்டையைப் போட்டுகினு போயிட்டேன்’
’யாருது?’
’’ராமக்காரரு
ஆபீசர்து. எம்மொவன் வேலைக்குப்போயி சேந்தான்ல அந்த ஆபீசர்து. வண்டி மொளக் குச்சில மாட்டுகினு சட்டை டர்ரன்னு பூட்சி. அவரு வுட்டாரு பாட்டு ஒரு மொழம் பின்னாலே’.
’எங்க
போகையிலே இந்த கதி, மளுக்குனு சொல்லுற கதை’.
’கல்ல
நத்திப் பொழைக்கிற கழுதைங்க, துறைப்பொங்க படைக்க கம்மாவரத்தாண்ட புத்தூரு போனப்பத் தான். வண்டி கட்டிகினு போனம்’
’மணிமுத்தாத்துல துறைப்
பொங்கலா?’
’ஆமாம்.
ஆசை மானம் அவுமானம் பாக்குதா? போட்டுகினு போயி சின்னப்பட்டேன்’
’வேட்டி
சலவைக்கு வந்ததுவுள எடுத்து கட்டிகிறது?’
’தருமநாதா
நா தொடருது இல்லண்ணே’ என்றான் சிங்காரம்.
படம்
ஆரம்பித்து ஓடிக்கொண்டிருந்தது.
’வார்ரீலு
போடுறான்’
’ஆமாம்’
டார்ச்
விளக்கோடு ஒருவன் வரிசைக்கு வரிசை அடித்து ’இங்க தருமங்குடி ஆளு யாரு’ என்று கத்தினான்.
இருவரும்
எழுந்து நின்றார்கள்.
அப்படியே
வெளியே வாங்க என்றான்.
முழுக்கை
சட்டை அணிந்த ஒருவரும், அவரின் இடுப்பு அளவு இருந்த அவரின் மனைவியும் பட்டென்று அந்த இடத்தில் அமர்ந்து கொண்டனர்.
’நாங்க
திரும்பி வந்து புடுவம்’ என்றான் சிங்காரம்.
டார்ச்
விளக்கோடு வந்தவன், ’நீங்க உக்காகருங்க, படம் பாருங்க’ என்றான்.
’நாங்க
தருமங்குடி புள்ள அனுப்புன ஆளுவ தெரியுமா’
’தெரியும்’
’படம்
பாக்குறது இல்லயா?’
’உண்டு.
அதுக்குத்தக்கன
இடம் உண்டு’
’படம்
ஆரம்பிச்சிட்டுது’
என்று சிங்காரம் சொல்லி வேக வேகமாய் நடந்தான்.
சிங்காரவேலும்,
நாகலிங்கமும் முறக்காது மானேஜர் முன்பாய் நின்று கொண்டிருந்தார்கள்.
’மேல
பூட்டிங்களா, காஞ்சமாடு கம்பல பூந்தாபுல’
பக்கத்தில்
நின்று கொண்டிருந்த அரை டிராயர் பையன் களுக் என்று சிரித்தான்.
டார்ச்லைட்
சகிதமாய் நின்று கொண்டிருந்தவன் நாகலிங்கதின் மேல் சட்டையையும் தன் சட்டையையும் ஒரு முறை பார்த்துக்கொண்டான்.
’நடுப்பிள்ளை
கொடுத்ததா?’
’ஆமாம்’
என்று சிரித்தக்கொண்டே சொன்னான் நாகலிங்கம்.
’என்னதும்
அவரு கொடுத்ததுதான்’
’பின்ன
சட்டம் சரா பேசுறீர்?’ என்றான் சிங்காரம்.
’பேச்சுல
சுருக்கம் வேணும்’ சட்டென்று சிங்காரத்திடம் சொன்னான் நாகலிங்கம்.
டார்ச்சுலைட்காரன் பெஞ்சுப்
பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். முதல் இரண்டு பெஞ்சுகள் காலியாய்க் கிடந்தன. நாகலிங்கமும் சிங்காரமும் தலா ஒரு பெஞ்சில் அமர்ந்துகொண்டனர்.
’நீங்க
பாட்டுக்கு படம் பாருங்க, ஆரு கேக்கப் போறா’ என்றான் டார்ச்லைட்டுக்காரன்.
’நீங்க
குந்துங்களேன், படம் பாக்குலாம்’ என்றான் சிங்காரம்.
சிங்காரத்தை
ஒருமுறை முறைத்த டார்ச்சுக்காரன்,
’சே
வேலயப் பாரேன்’ என்று கூறி வெளிப்பட்டான்.
சிங்காரமும்
நாகலிங்கமும் அதே பெஞ்சில் படுத்துக் கொண்டு படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
’இதுவும்
தேவுலாம்’
’என்னா
தேவுலாம்? மூட்டைப் பூச்சி அப்பும்பாரு, ரவ நேரத்துல’ என்றான் நாகலிங்கம். சரசுவதி சபதம் ஓடிக் கொண்டிருந்தது. கல்வி, செல்வம், வீரம் இவற்றிற் கிடையே போட்டி கடுமையாய் இருந்தது.
சோடா
விற்கும் சிறுவர்கள் சோடா கலர் என்று முழங்கிய வண்ணமிருந்தனர். அடிக்கொரு தரம் அவர்களே ஓடும் படத்தைப் பார்த்துக் கொண்டும் நின்றார்கள். ’சோடா, கலரு’ என்று முழங்குபவர்கள், படம் பார்ப்பவர்களின் கால்களை மிதித்துக் கொண்டு சென்றனர்.
வெண்
திரைச்சீலைக்கு
அருகே நான்கு நரிக்குறவர்கள் அமர்ந்து படம் பார்த்தக் கொண்டிருந்தனர். நால்வரில் ஒரு பெண் குறத்தியும் இருந்தாள். அவர்களுக்குள் வாக்கு வாதம் தொடர்ந்து கொண்டும் இருந்தது. அவர்களே இடை இடையே சிரித்தக் கொண்டும் தென்பட்டார்கள்.
’இது
ஒண்ணும் லாயக்குப்படாது’ என்று நாகலிங்கம் பெஞ்சில் எழுந்து அமர்ந்து கொண்டான்.
’சோடா
குடிக்கலாம்.’
’அது
வெறும் தண்ணீ ‘என்றான் சிங்காரம்.
’வெறும்
வாயி என்னமோ மாதிரி இருக்கு’
’கள்ள
உண்டை வாங்கலாம்’.
’அதனாச்சிம்
பாரு’
இருவரும்
எழுந்து திரை அரங்கிற்கு வெளி வராந்தாவுக்கு வந்தார்கள் சிறுநீர் அங்கங்கே பெய்து விட்டுப் போனது நாறிக்கொண்டிருந்தது. சினிமாக் கொட்டகைக்குள்ளாக ஒரு பெட்டிக் கடையும் டீக் கடையும் இயங்கிக் கொண்டிருந்தன. நாகலிங்கம் தன் மூக்கை இருக்கிப் பிடித்துக் கொண்டான்.
’மூத்திரக்கவுச்சி’;
சிங்காரம் தன் முகத்தைச் சுளித்துக் கொண்டான்.
’காசு
வாங்குறானுவ, கழுவுறது இல்ல’
’நீம்புரு
காசு அவுத்துப்புட்டீரு’!
’நம்புள
வுடு. காசு அவுக்கிற சனம்’ என்றான் நாகலிங்கம்.
’யாரால்
ஆவுற கதை. காசு பாக்குறவன் காசு பாக்குறான். கடிபடுறவன் கடிபடுறான். அவனவன் இதுங்கறேன்’.
’எதுங்கிறே’
’சரி
வுடு’
’காசு
தம்பி காசு’
இருவரும்
கடலை உருண்டை இரண்டு வாங்கினார்கள். கடலை உருண்டை இரண்டும் சேர்ந்து ஒரு ரூபாய் என்றளவில் இருந்தது. விலை குறித்து இருவரும் அதிர்ந்து போனார்கள்.
ஒருவழியாய்
சரசுவதி சபதம் முதல் ஆட்டம் முடிந்து இரண்டாவது ஆட்டத்திற்கு அரங்கம் தயாரகிக் கொண்டிருந்தது. பாண்டிய விநாயகம் தியேட்டர் இப்போது திரை இசையை பிரவாகித்து மக்ளை அழைத்துக் கொண்டிருந்தது. நாகலிங்கமும் சிங்காரமும்அதே பெஞ்சில் அமர்ந்து மீண்டும் படம் பார்ப்பதென முடிவு செய்தனர். அதே நரிக்குறவர்கள் மீண்டும் வெண் திரை சீலைக்கு அருகில் காலை நீட்டிக் கொண்டு அமர்ந்திருந்தனர்.
’கரண்டு
பூட்டுது’ என்றான் சிங்காரம்
பக்கத்தில்
அமர்ந்திருப்பவர்
டார்ச் விளக்கால் வெண்திரையை நோக்கி அடித்துக் கொண்டிருந்தார். விசில்சப்தம் ஓயாமல் வர்ஷித்தது.
’காலுல
என்னா சிலு சிலுன்னு’
’புள்ளவ
எதனாச்சிம் ஒண்ணுக்கு இருந்திருக்கும்’
’வெத்திலை
போட்டு முழிஞ்சிருப்பானுவ போல, கசமாலம்.’
தியேட்டர்
முழுவதும் புகையாய் இருந்தது. படம் இப்போது மீண்டும் தொடங்கி ஓடிக்கொண்டிருந்தது. நாகலிங்கமும், சிங்காரமும் வெண்திரை நோக்கி முறைத்த வண்ணமிருந்தனர்.
படம்
முடிவதற்குள்ளாய்
இருவரும் தூங்கிப்போனார்கள்.
8
தருமங்குடியில் பஞ்சாயத்துத்லைவர் தேர்தல்
அறிவிக்கப்பட்டிருந்தது.
ஷெட்யூல்டு இன மக்களை உள்ளடக்கிய பஞ்சாயத்து, தருமங்குடி. ஊர்மக்களில் சிலர் நடுப்பிள்ளையைத் தலைவர் தேர்தலில் நிறுத்த வேண்டும் என்று கூறிக்கொண்டிருந்தனர். வெள்ளாள இன மக்கள் ஒரு தெருவுக்கு இருந்தார்கள். அவர்களின் எண்ணிக்கை ஊர்மக்கள் தொகையில் பத்தில் ஒரு பங்கு கூட இருக்காது. ஆனால் வெள்ளாளர்கள் விபரம் தெரிந்தவர்களாய்க் காணப்பட்டார்கள்.
ஷெட்யூல்டு
இன மக்களின் ஓட்டுதான் ஊர் மக்களின் மொத்த வாக்குகளில் பாதியைத் தொட்டுக்கொண்டிரந்தது. அவர்களின் நிர்ணயிப்பே பிரதான விஷயமாய் இருந்தது.
இம்முறை
தருமங்குடி ரிசர்வ் பஞ்சாயத்து என அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது.
நாட்டாண்மைக்கு ஊரின்
ஜனத்தொகையில் பெருமளவு சொந்தபந்தங்களாய்த் தென்பட்டார்கள். நாட்டாண்மைக்கு தானே தலைவர் பதவிக்கு வரவேண்டும் என்ற ஆசை தான். அது இனி நடக்கிற விஷயம் என்பது இல்லாமல் போயிற்று.
ஆக
ஷெட்யூல்டு இன மக்களின் முழு ஆதரவு யாருக்கோ, அவர்களே தலைவராதல் என்பது நிதர்சனம். நடுப்பிள்ளையும் நாட்டாண்மையும் புதுயுக்தியை சிந்திக்கத் தொடங்கினார்கள், நடுப்பிள்ளையும் ராமலிங்கரும் இது விஷயமாய் பேசிக்கொள்ளவே இல்லை. இருவரும் தனித் தனியாய் ஆட்களைத் தயார் செய்துவிட்டு அவரவர் வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தனர். ராமலிங்கரைப் போய்ப்பார்த்து கேட்டிருந்தால் ஒருக்கால் அவர் தனது கையாளின் வேட்புமனுவை வாபஸ் வாங்கி இருக்கலாம் தான். ஆனால் பிள்ளைக்கு அவரிடம் சென்று இப்படிக் கேட்பதைவிட கேவலம் வேறில்லை என்கிறவிதமாய் இருந்தது. எப்படியும் ஷெட்யூல்டு இனமக்கள் தன் ஆளை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை நடுப்பிள்ளைக்கு. அடி மனத்தில் அவரின் உறுதிக்குச் சில காரணங்கள் யதார்த்தமாய் இருக்கத்தான் செய்தது.
நாகலிங்கத்தின் பையன்
சின்னவன் ஐயர் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தான். வெள்ளாளத் தெருவைத் தாண்டிக் கொண்டிருந்தான்.
’ஏலே
சின்னவனே? ’சந்து வீட்டு வத்தை ஆச்சிதான் அழைத்தாள்.
’என்னங்க
ஆச்சி’
’செத்த
இந்த தேங்காய உறிச்சிக் குடுத்துட்டு போயேன்’
சின்னவன்
ஆச்சியின் வீட்டு வாயில்படியில் ஏறித் தேய்காயைப் பெற்றுக் கொண்டான். ஆச்சி தேய்காங் உறிக்கக் கொடுவாளைத் தயாராய் வைத்திருந்தாள். ஆச்சி சிரித்து கொண்டாள்.
’வேல
அத்தவன் வெள்ளாளத் தெருவுக்குப் போம்பானுவ’ என்றாள் ஆச்சி.
’அதுவும்
அத்தவன் பாப்பாரத் தெருவுக்குப் போவுணும்’.
’லேசுபட்டவன்
இல்லேடா நீ’
’நான்
சின்னவன்தானே’!
தேய்காய்
முழுவதுமாய் உறிக்கப்பட்டு ஆச்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. சின்னவன் வெள்ளாள்த்தெருவைத் தாண்டிக் கொண்டிருந்தான். ஐயர் வீட்டுக்குச்சென்று ஒரு யோசனை கேட்கலாம் என்று முடிவு செய்தான். ஐயர் வீட்டில் இருக்கவேண்டுமே என்ற கவலை. கிராமத்தில் ஐயன்மார்கள் மதியம் வரை வீட்டில் இருப்பதில்லை எனினும், மதிய உணவிற்கு நிச்சயம் வீடு வந்து சேர்ந்து விடுவார்கள்தான். மதியம் சாப்பாடு முடித்து திண்ணையில் படுத்தும் உருட்டிக்கொள்வார்கள். தலைக்கு இதமாய் உயரம்வைத்து திண்ணையிலேயே ஒரு பகுதி தென்படும். ஐயர் வீட்டுத்திண்ணையில் பத்திரமாய் ஏதேனும் பிரஸ்தாபிக்கமுடியும் என்று சிலர் வருவார்கள்.
அரசமரம்
வந்தது. அரச மரத்தோடு இணைந்து கொண்டு ஒரு வேப்பமரம் இருந்தது இரண்டு விரட்சங்களுக்கமே திருமணமகிவிட்டது என்பதை ஊரில் சொலிக் கொண்டார்கள். அரசமரத்துக்குக் கீழாய் ஒரு விநாயகர் சிலையும் ஒரு நாகர் கல்லும் இருந்தன. அதனைக் கண்ணுற்ற சின்னவன் ஒரு முறை தனக்குள்ளாய் சிரித்துக் கொண்டான் ஐயர் வெளியில் வந்து கொண்டிருந்தார். வீட்டு வாயிலின் முன்பாய் நின்று கொண்டிருந்த சின்னவனுக்கு ஐயரைப் பார்த்ததும ஏக குஷியாய் இருந்தது.
’சாமி’
’வாடா
ஒன்னத்தான் காணும்னு பாத்தேன்’
’ஏன்
சாமி’
’சும்மா
சொன்னண்டா கழுதை’
’உங்ககிட்டதான் வந்தேன்’
’அப்பன்
எங்க?’
’எழவுக்கு
கோயிருக்காரு’.
சொந்தமா
’தொழிலுதான்’
’சரிவுடு
விஷயத்துக்கு வா.
நீண்ட
நாளா உங்ககிட்ட பேசுணும்னு’
ஐயர்
திண்ணையில் உட்கார்ந்துகொண்டார் சம்மணமிட்டபடிதான். ஐயர் வீட்டில் ஒன்றும் அரவம் இல்லாமல் இருந்தது.
’ஏன்
சாமி எலக்ஷன் வருது’
’ஆமாம்
ஊரு தலைவரு எலக்ஷன்’
’யாரு
யாருநிக்கப்போறா’
’இதுல
என்னடா கேழ்வி.நிக்கறவன் நிப்பான்’
’இல்ல,
அவுகளேதான் நிக்குணமா’
’கேள்வி
சரியில்லையே. என்ன ஆச்சி சின்னவனே’
ஐயர்
சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டார். யாரும் இல்லை என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டு பேசத் தொடங்கினார்
’வேலைக்கு
ஆவுறது வேலைக்கு
வெறகுக்கு
ஆவுறது வெறவுக்கு.’
’மரத்தைப்பத்தி சொல்றீங்க
மனுஷனைப்பத்தி’
’நல்லத
செஞ்சா நல்லவன்
கெட்டத
செஞ்சா கெட்டவன்’,
’மரத்துல
வேற வேற இருக்குது. புளிக்குது, கசக்குது, இனிக்குது, தொவக்குது இப்படி இப்படி’
’மனுஷனுக்கு
சுய அறிவும் இருக்கு. சூழ்நிலையும் இருக்கு’ என்றார் ஐயர்.
’’சாதி
இரண்டொழிய வேறில்லைன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்களே?’
’யாரு
இல்லேன்னா, வௌங்குறது வௌங்கிப் போச்சின்னா உனக்கும் எனக்கும் பிரச்சனையே இல்ல’
சாமி
இப்ப ஒண்ணு கேக்குணும் நான் எலச்சன்ல நின்னு பிரசிடெண்டா வரமுடியுமா?
’அடிசக்கை,
பனங்கொட்டை ஏது ஏது’
ஐயர்
சிரித்துக்கொண்டார்
’ஆவுற
கதை எதனா இருந்தா பாக்குலாம். நல்லாத் தானே இருந்தே நீ. என்னா ஆச்சி? உன் அப்பன் கத்திபுட்டி தூக்கிகிணு தெருவுல சுத்தி சுத்திவரான். நீ என்னடான்னா’
’கேக்குறத
சொல்லுங்க சாமி. நான் எலட்சன்ல நிக்குலாமா கூடாதா?’
’நானாலும்
நீன்னாலும், இன்னும் துணி வெளுக்குற சிங்காரவேலுன்னாலும், மரஞ்சேத்தர ஆசாரின்னாலும், தட்டாரா இருந்தாலும் இரும்பு தட்டுற ஆசாரின்னாலும் குசவன்னாலும் நாம தொழிலு தானே செய்யுறம். வான்னா வரணும், போன்னா போகணும், கழுதை கத்தினா எதனா ஆவுமா சொல்லு’.
’காலனிக்காரங்க’
ஐயர்
அமைதியாய் இருந்தார். இன்று ஏதோ நேரம் சரியில்லையோ என்று கூட எண்ணினார். ஆனால் சின்னவன் நியாயவாதிதான் என்று எண்ணிக்கொண்டார்.
’வோட்டு
இருக்குது. ஜனம் இருக்குது.
உனக்கும் எனக்கும் என்னா இருக்கு’.
’அவங்ககிட்டபோய்க் கேட்டுப்
பாக்குறேன்’
ஐயருக்கு
அங்கே நிற்பதற்கு அச்சமாய் இருந்தது.
’உனக்குப்
புத்தி சுவாதினமாய் இருக்குதா, நல்லாத் தானே இருந்தே, ஏன் என்ன ஆச்சு?’
ஐயர்
வீட்டுள்ளாய்ச்
சென்று மறைந்து கொண்டார்.
சின்னவன்
நேராய் தன்வீடு நோக்கி வந்து கொண்டிருந்தான். வெள்ளாழத் தெருவைக் கடந்துகொண்டிருந்தான், தேங்காய் உரித்துக் கொடுத்துவிட்டு வந்த அதே வீட்டு வாயிலில் அதே ஆச்சி இப்போது கையில் ஒரு நீண்ட கயிறு வைத்துக் கொண்டிருந்தாள். யாரேனும் வருவார்களா என்ற தோரணையில் நின்று கொண்டிருந்தாள்.
’நல்ல
நேரத்துக்கு வந்துட்ட சின்னவனே, ஏலே சின்னவனே, ஆ நிக்குது பாரு கன்னுக்குட்டிய புடிச்சி இதே தூணிலே கட்டிடு’ பல் முழுதும் வெளியத் தெரிய சிரித்தாள் ஆச்சி.
’ஏது
ஐயரு வூட்டுக்குப் போனியா?’
’ஆமாம்
ஆச்சி. ஐயருகிட்ட ஒரு யோசனை கேக்குணும்னு போனேன். கதெ ஒண்ணும் ஆவுல’.
’என்ன
யோசனை’
’அது
எதுக்கு உடுங்க’. கயிற்றினை வாங்கிய சின்னவன் கன்றுக்குட்டியை கழுத்தில் கட்டி இழுத்துக்கொண்டு வந்து தூணில் கட்டினான்.
’அப்ப
நான் வர்ரட்டுங்களா’
’வழியில்
சிங்காரத்தைப்
பாத்தின்னா, ஆச்சி கூப்பிட்டாங்கன்னு சொல்லு, துணி கெடக்கு, வரவர சுத்த சோம்பேரி ஆளா போயிகிட்டு இருக்கான்’. சின்னவன் தலையை ஆட்டிக்கொண்டு நின்றான். அந்த இடத்தை விரைவாய் காலி செய்துகொண்டு புறப்பட்டான்.
தன்
வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தான் சின்னவன் தன்னோடு படித்த, பழகிய தோழர்களைப்பற்றியெல்லாம் எண்ணிப் பார்த்தான். ஷெட்யூல்டு இன மக்களின் தள்ளியிருந்த குடியிருப்புப் பகுதியினின்றும் சிவபெருமான் என்பவனின் நினைவு வந்தது. அவன்தான், ஐந்தாம் வகுப்பு வரை, சின்னவன் படித்து நின்று விட்டபோதும் நண்பனாய் இருந்தான்.
தருமங்குடிப்
பள்ளியில் மணி என்று சாக்பீசில் எழுதப் பட்ட கோணல் தண்டவாளத்துண்டு உயரத்தில் கட்டப்பட்டு இருக்கும். அது யாருக்கு எட்டுமோ அவர்கள் மட்டுமே சட்டாம் பிள்ளையாய் வரமுடிந்தது. அந்தப் படிக்குமே கூட சிவபெருமான் தான் சட்டாம் பிள்ளை. அவன் சட்டாம்பிள்ளை ஆனதற்கு தருமங்குடியில் கண்மணி ஆசிரியரின் வருகைதான் காரணமாய் அமைந்தது. அந்த கண்மணி ஆசிரியர் புதிய விஷயங்களைச் சொல்வதிலும், புதிய புதிய யோசனைகளை மாணவர்களிடம் முன்வைப்பதிலும் முனைப்பு காட்டிய அற்புத மனிதர்.
சிவபெருமானிடம் சென்று
தலைவர் தேர்தல் பற்றிப் பேச வேண்டும் என்று முடிவு செய்தான் சின்னவன். சிவபெருமான் தருமங்குடி ஊர் தாண்டி, நகரம் சென்றும் மேலும் படித்து முடித்தவன். அது இன்னது என்று தெரியாமல் தான் சின்னவன் இருந்தான். ஊருக்குள் அகப்படாமல், காலனியில் இருக்கும் சிவபெருமானைச் சந்தித்து தலைவர் தேர்தல் பற்றி பேச வேண்டும் என்பதில் அவன் உறுதியாய் இருந்தான்.
சின்னவனின்
வீடு நெருங்கிக் கொண்டிருந்தது. தன் வீட்டின் வாசலில் தந்தை நாகலிங்கம் தயாராய் நின்று கொண்டிருந்தான்.
’எங்க
கழுதை இம்மாம் நாழி’
சின்னவன்
அமைதியாக இருந்தான். மீண்டும் நாகலிங்கம் தொடர்ந்தான் ’இருக்கிறது ஒரு சப்பை மாடு, ஒரு கண்ணுக்குட்டி, அதுவ கெட்டிக் கிடக்குது நீம்புரு பாட்டுக்கு பூட்டிரு. எங்க போன’
’ஐயரு
வூட்டுக்குப் போனேன்’
’என்ன
சேதி’
’ஒரு
வெஷயம்’
’என்னா
அந்த பள்ளிக்கூட வாத்தியாரு ஒன்னை கொழப்பி வச்சிருக்காரு. அவரு இந்த ஊருக்கு வர்ரப்பவே நெனைச்சேன். நீம்புரு படிக்கலன்னாலும் அவரு சவகாசத்தைவுடல’.
’நல்ல
மனுஷன்னு கூட பழகக் கூடாதா?’
’பெரிய
காமராசரு’
’ஆமாம்
அதுக்கு என்ன? வாத்யார் நல்லதைச் சொல்லித் தர்ராரு யோசனை சொல்லுராரு மனுஷனா வாழறதுக்கு எது எது தேவைன்னு தெரிய வைக்குறாரு’
’கத்திப்புட்டி தூக்கிகினு
நாலு வீடு ஏறி இறங்குனா?’
’ஏன்
எதுக்கு, எனக்கும்
தெரியும் தொழிலு.. செரைக்கத் தெரியும். ஆனா கழுதையவ வேணும்னா, இங்கு என் எடத்துகு வரட்டுமே, நாம ஏன் அவுக வூட்டுக்கு போயி நிக்குணும்?’
’சோத்துக்கு
நக்குறதா’ என்றான் நாகலிங்கம்.
சின்னவன்
உள்ளாகச் சென்று கொண்டிருந்த்தான். நாகலிங்கம் தன் பேச்சை நிறுத்திக் கொண்டான்.
’மாடு
கெடக்கட்டும்;கன்னுக்குட்டிக்கு ரெண்டு பில்லுகில்லு பிச்சிப் போடு கழுதை’
லேசாய்
சிரித்துக் கொண்டான் நாகலிங்கம். தான் ஏதோ சாதித்து விட்டதாய் நினைத்துக் கொண்டான்.
9
தருமங்குடியில் ஐந்தாம்
வகுப்பு வரைக்கும் துவக்கப்பள்ளி இருந்தது. அந்தப் பள்ளியில் மூன்று ஆசிரியர்கள்: ஒருவர் பார்ப்பனர், தன் வேலை உண்டு வித்துண்டு என கன கச்சிதமாய் போய்விடுவார். அடுத்து ஒரு பெண்மணி. அவர் அண்டையிலுள்ள சிதம்பரத்திலிருந்து தருமங்குடிக்கு வந்து போவார். எஞ்சிய ஒரு ஆசிரியர்தான் கண்மணி. அவர் இன்ன சாதி என்றுமே இன்று வரை ஊருக்குத் தெரிந்திருக்கவில்லை.
அவர்
அவர்கள் அவர்களுக்குத் தெரிந்த சாதி ஒன்றை அவருக்குக் கொடுத்து திருப்தி அடைந்து நின்றனர். கண்மணி ஐயர் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு திண்ணைரூமில் குடியிருந்தார். அவரின் குடும்பம் இத்யாதிகள் அவரின் சொந்த ஊரில் இருந்தது. சொந்த ஊர் உடையார் பாளையத்திற்கு அருகில் ஓர் குக்கிராமம் என்று சொல்லிக் கொள்வார். சின்னவன் அவரிடம் அடிக்கடி சென்று வருவான். சின்னவன்தான் சாப்பிடும் நேரம் தவிர்த்து கண்மணி ஆசிரியரின் ரூமிலேயே தங்கி இருப்பான். மாலை நேரங்களில் அவர் சொல்வதை கேட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்பான். தான் பள்ளிசென்றதை ஒருமுறை எண்ணிப் பார்ப்பான். படிக்காதுநின்று விட்டதற்காய் வருந்துவான். பின் கண்மணி ஆசிரியரின் தொடர்புக்காய் பெருமைப்படுவான்.
அன்று
ஒருநாள் விடுமுறை அனேகமாய் கண்மணி ஆசிரியர் தன் கிராமம் சென்றிருக்கலாம் என்று எண்ணினான். ஐயர் வீட்டுக்குப் பக்கமாய் திண்ணையில் இருக்கும் கண்மணி ஆசிரியரின் அறைக்குச் சென்று பார்த்து வருவது என்று தீர்மானித்தான். ஐயர் தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்த ஏதோ படித்துக் கொண்டிருந்தார்.
’சாமி
வாத்தியார் கண்மணிய பாத்திங்களா?’
’வாடா
சின்னவனே, ஊசி மொளகாடா நீ, உன்னத் தான் எங்கன்னு பார்த்தேன், வாத்யார் எதுக்கு’
’உங்ககிட்ட
கேட்ட யோசனை, அவருகிட்டயும் கேக்லாம்னு’
’குறத்தி
பாஷை குறவனுக்கப் புரியும்தான்’
சின்னவன்
சிரித்தான். ஐயர் சரியாய் புரிந்து கொண்டுள்ளார் என்றே நினைத்தான்.
’நீங்க
என்ன சாமி படிக்கீறீங்க?
ருத்ரம்
பாராயணம் பண்ணுறேன். உனக்கு எதுக்கு இதெல்லாம்? பனங்கொட்டைய பல்லி என்ன பண்ணும்’
’இல்ல
படிக்கிறீங்க. என்ன வெரம்னு சொல்லுங்களேன் சாமி’
அய்யர்
திரிதிரி என்று விழித்தார். பிறகு சட்டென்று உள்ளாய் எழுந்து சென்றார். வாயில் கதவை வெடுக்கென்று தாளிட்டார். சின்னவன் அதிர்ந்து போனான். ஐயர் மனம் புண்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணினான். மீண்டும் ஒருமுறை பார்க்கும் போது அவரிடம் மனிப்பு கேட்க வேண்டும் என்றுகூட முடிவு செய்தான்.
கண்மணி
ஆசிரியர் ஊரில்தான் இருந்தார். அவரின் அறைக்குள்ளாய் சின்னவன் அரவம் கேட்பதை செவிமடுத்தான்.
’சார்’
’வாப்பா’என்றார் கண்மணி.
’ஏன்
ஊருக்கு ஏதும் போவுலிங்களா?’
’போவுணும்தான்.
ஒரு மாதிரியா இருந்திச்சி அதான்’
’ஒரு
யோசனை’
’கேளு’
’இல்ல,
நம்மூர் எலட்சன் வருது,’
கண்மணி
புன்னகைத்தார். பிறகு யோசனை செய்தார்.
’ஆமாம்
வருது’
அதான்
சார் கேக்குறேன்
’இப்ப
தருமங்குடி ரிசர்வ் பஞ்சாயத்துன்னு அறிவிப்பு வந்திருக்கு தெரியுமா சின்னவனே’.
’ஐயருக்கு இது தெரியாதுபோல. சிறிது
நேரம் அமைதியாய் இருந்தான். அப்ப அவங்கமட்டுமே தேர்தல்ல நிப்பாங்க’
’யாரைத்
தேர்தல்ல நிப்பாட்டு வாங்க’
’நம்ப,
சிபெருமானை நிக்கவைச்சா’
’யாரு?’
’காலனில
இருக்குறாரே, அவரு உங்களுக்குத் தெரிஞ்சவரு’.
கண்மணிஅதிர்ந்து போனார்.சின்னவனுக்கு இப்படியும் ஒரு யோசனை என்று எண்ணி மகிழ்ந்து போனார்.
’நல்லா
யோசனை பண்ணித்தான் சொல்லுறயா சின்னவனே?’
’நல்லா
யோசனை பண்ணிச் சொல்லறேன் சார், அந்த சிவபெருமான் பள்ளிக்கூடத்தில் சட்டாம் பிள்ளையா இருந்தவன்’
’தெரியுமா,
அவனைச் சட்டாம் பிள்ளையா ஆக்கி அவன் கொடிக்கு வணக்கம் செஞ்சி உறுதிமொழி சொன்னப்ப, ஊருஜனம் என்ன சொல்லிச்சி, எப்படி பாத்துது வெஷயத்தை?’
’எல்லாம்
பேசுனாங்க’.
’அவன்
நல்ல பையன். அவனைச் சட்டாம் பிள்ளையாக்கினேன். நல்லா இனிமையாக்கூட பாடுவான், ஞாபகம் இருக்கு. பாக்கி எந்த பையனுக்கும் குரல்வளம் செம்மையா இல்ல. ஒழுக்கம் இருந்திச்ச அவன்கிட்ட. பசங்க சந்தேகத்தைத் தீத்து வச்சான். ஊரு ஜனம் வாயமூடிக்கிச்சி’
’ ’அடிக்குற மணி அவனுக்கு
எட்டுனது; அதனாலே வாத்தியாரு சட்டாம் பிள்ளையாக்கிப் புட்டாருன்னு ஊருல பேசினாங்க’.
’மணி
எட்டுலன்னா செத்த கீழ இறக்கிக் கட்டுறம். அது ஒரு வெஷயம்னு.’...
சின்னவன்
சிரித்தான்.
’சிவபெருமான்
நின்னா, தேர்தல்ல ஜெயிக்க வாய்ப்பு இருக்கு. ஆயிரம் சிக்கலு வந்தாலும் சமாளிச்சுக்கலாம்’.
’சிவபெருமான்கிட்ட கேக்குலாம்னு
இருக்கேன்’.
’இப்ப
இது ஊருக்குத் தெரிய வேண்டாம். நீ சிவபெருமான்கிட்ட பேசுறது ரகசியமா இருக்கணும். ரொம்ப ஜாக்கிரதை கதை
கெட்டுறப் போவுது சின்னவனே’.
கண்மணி
மீண்டும் ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார். ’காரியம் முடிக்க காச வேணும். காசோடு காரியம் முடிக்கிற பக்குவம் இருக்குணும். சாமர்த்தியமா இருக்கணும். எப்ப கீழ விழுவும்னு உலகம் பாக்கும். ஏறி மிதிச்சிடும்’.
தலையை
மெல்ல ஆடினான் சின்னவன்.
’காயா
பழமா சின்னவனே?’
பழம்
என்றான். சின்னவன்.
தாளிட்ட
கதவைக் திறந்து ’பழம் ஆவுட்டுமே’ பட்டென்று சொல்லி வெளிவந்த அந்த ஐயர் நடந்து கொண்டிருந்தார்.
10
சிவபெருமானைச் சென்று
பார்த்துவிட்டு
வந்துவிட வேண்டும் என்று சின்னவன் முடிவு செய்தான். எப்படியும் தருமங்குடியின் தலைவர் பதவி சிவபெருமானுக்கு என்பதில் உறுதியாய் இருந்தான் சின்னவன்.
ஊரில்
மேல் சாதி குடியிருப்புகள், பிற. இவைகளினின்றும் சிவபெருமானின் வீடு ஊரிலிருந்து விடுபட்டதாய் இருந்தது சிவபெருமான்
ஒத்தோரின் வீடுகள் தள்ளியே இருந்தன. அவன் ஒரு வண்டிப் பாதை மட்டுமே ஷெட்யூல்டு இனமக்களின் வாழ்வில்லங்களைத் தொட்டுக் கொள்ளச் சென்றது.
சின்னவன்
தனியாய் அந்தப் பாதையில் நடந்த வண்ணம் இருந்தான். வழி நெடுகிலும் தென்னை மரங்கள் நன்கு வளர்ந்திருந்தன. அவை தென்னங்காய்களைப் பந்துக்களாய் அடுக்கி ஒன்றோடு ஒன்று முட்டிக் கொண்டு நின்றன. சின்னவன் அவைகளை அண்ணாந்து பார்த்துக் கொண்டான். இதே தென்னங்கன்றுகள் தருமங்குடி முழுவதந்குமாய் தெருக்களில் நடப்பட்டவைதான். அவைகளை ஊரார் தலா ஒன்றாய்ப் பிடுங்கி மறுநாளே தங்கள் தங்கள் வீடுகளில் கொணர்ந்து நட்டு சாமர்த்தியம் பார்த்துக் கொண்டனர்.
சின்னவன்
எட்டி நடந்து கொண்டிருந்தான். தென்னை மரங்கள் இருமருங்கிலும் அடர்ந்து நிழல் தந்து கொண்டிருந்தன. சில மரங்கள் இளநீர்க் குலைகளை வைத்துக்கொண்டு இருமாந்து நிற்பதாய்த் தோன்றியது.
கண்ணுக்கு
எட்டிய தூரத்தில் தெரிந்தது ஏரி. இதுதான் தருமங்குடி ஏரி. இந்த கிராமத்த நிலபுலங்களை விளைச்சல் காண வைக்கும் வித்தைக்காரன். அதனுள் தெரிவது அமுதம்.. ஏரியின் அக்கரையில் என்றோ நடப்பட்ட கருவேல மரங்கள் வானைத் தொட்டுக் கொண்டு நின்றன. ஏரிக்கரை மீது கம்பீரமாய் நின்ற பனைமரங்கள், ஆண்டுக்கு ஆண்டுக்கு தம் எண்ணிக்கையை குறைத்துக் காட்டின. ஏரியின் கரையில் எப்படி வரிசையாய் இவைகளை நட்டு வளர்க்க முடிந்தது என்கிற ஆச்சரியம் என்றும் பார்ப்போக்கு . முளைவிட்டு நட்டவன் இது மரமாகி பார்த்து இருக்க மாட்டான்தான். இது தெரிந்தே இவைகளை நட்டு ஆளாக்கிய பெரிய மனது படைத்தவர்கள் இருந்துதான் இருக்கிறார்கள். சின்னவன் இவைகளை அசைபோட்டுக் கொண்டான். மனதில் ஒரு நிறைவு வந்தது உணர்ந்தான்.
பள்ளிக்கூடம்
வந்தது. பள்ளி விடுமுறையாய் இருக்க வேண்டும். யாரையும் காணோம். தருமங்குடி அரசுப்பள்ளி என்று அறிவித்துக்கொண்டு அப்பலகை திருகிக்கொண்டு நின்றது. பள்ளியின் வாயிலில் கைப்பிடியைத் தொலைத்து விட்டு நிற்கும் கைப்பம்பு ஒன்றுமிருந்தது.
சின்னவன்
சிவபெருமானின்
வீடு நோக்கி நடந்து கொண்டிந்தான். சிவபெருமானின் வீட்டு முன்பாக, மேய்ச்சல் தவறுதலாய் பயிர் நிலங்களில் பசி ஆற்றிய மாடுகளின் அடைபடும் கொட்டகை இருந்துது. அந்தப் பட்டியின் சுவரில் ஏகத்துக்கு கரிக்கட்டியினால் சின்னஞ் சிறுசுகள கிறுக்கி எழுதிவிட்டிருந்தார்கள்.
சிவபெருமான்
வீட்டு முன்பாய் நின்று கொண்டான் சின்னவன். சிவபெருமான் சிவபெருமான் என இருமுறை அழைத்துப் பார்த்துக்கொண்டான். ஒரு பெண் உள்ளிருந்து வெளிப்பட்டாள்.
’அண்ணன்
இருக்கு, வரும்’ என்றாள்.
சின்னவன்
லேசாய் ’சரி’ என்று சொல்லிக்கொண்டு தயங்கி நின்றான்.
ஒரு
நாற்காலி திண்ணையில் கிடந்தது.அதனில் ’அமருங்கள்’ எனச் சைகை காட்டினாள். இப்படியுமா அவன் நினைத்துக்கொண்டான்.
சிவபெருமான்
அதனில் அமர்ந்து கொண்டான். ஒரு புத்தகம் எடுத்துக்கொடுத்தாள் அந்தப்பெண். அது ஏதோ பழைய புத்தகமாய் இருந்தது அதனை ஒரு முறை புரட்டிப் பார்த்துக் கொண்டான். புத்தகத்தில் மனம் லயிக்காமல் ஏதோபோல் உணர்ந்தான். சிவபெருமான் சாப்பிட்டு முடித்து தோளில் துண்டொன்றோடு வெளிப் பட்டான்.
’வணக்கம்
வணக்கம் வாங்க’
’வணக்கம்
சிவபெருமான்’ என்றான்
சின்னவன்.
’ஏது
இவ்வளவு தூரம்?’
’உங்களை
பார்த்திட்டுப்
போலாம்னு’
’என்ன
வெஷயம்’
’தெரிஞ்ச
விஷயம்தான்’
’ஏன்னா,
இந்த பக்கம் ஊர்க்காரங்க வர்துன்னா அது சாதாரணம் இல்ல. அதான் கேக்கிறேன்’
’அது
தெரிஞ்சித்தான்
சொல்லுறேன். உன்னைப் பார்க்கத்தான் வந்திருக்கேன்’
’என்ன
வெஷயம்?’
’வாத்யாரும்
போய் பார்க்கச்சொன்னாரு’
’சிவபெருமானுக்கு ஏதோ
பாதிபுரிகிற மாதிரி இருந்தது.’
’தலைவர்
எலக்ஷன் வருதுல்ல, அதான் என்றான் சின்னவன்.’
’அதுக்கு?’
’நீ
நிக்கணும் தலைவர்க்கு’
சிவபெருமான்
அமைதி ஆனான். இது ஏது பிரச்சனை கனம் பெற்று இருக்கிறது என்று தன் மனதிற்குள் எண்ணிக் கொண்டான்.
சிவபெருமானுக்குச் சின்னவனை
நினைத்து வேடிக்கையாய் இருந்தது. இவனுக்கு நாம் தேர்தலில் நிற்க வேண்டும் என்ற ஆசை ஏன் அரும்பியது என்று மனதிற்குள் வினா எழுப்பிக் கொண்டான்.
இரண்டு பேரும் தோட்டத்திற்கு போகலாமா
என்றான் சிவபெருமான். இருவரும் நடந்து வீட்டுத் தோட்டத்துப் பக்கமாய் நடந்து கொண்டிருந்தார்கள். சிவபெருமானின் தாயாராய் இருக்கவேண்டும் என்று யூகித்தான் சின்னவன். வாழைச்செடிகளுக்கு அடியில் கொத்திக் கொத்தி ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தாள் ஒரு மூதாட்டி.
’ஆர்ரா
இது’ என்று இழுத்துச் சொன்ன மூதாட்டி தனது வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தாள்.
அம்மாதான்’
என்றான் சிவபெருமான்.
சின்னவன்
என்று தன் பெயரைத் தானே சொல்லிக் கொண்டான்.
’அதாம்
பேரா இல்ல வேறு எதானிச்சிம்’ என்றாள் மூதாட்டி
’உண்டு’ என்று சொன்னான் சிவபெருமான்.
’எம்பேரு
உனக்கு நினைப்பு இருக்கா?’ என்று சிவபெருமானிடம் கேட்டான் சின்னவன்.
’ஏன்?
ஞானசம்பந்தம் எனக்குத்தெரியுமே’
சின்னவனுக்கு
ஆச்சரியமாய் இருந்தது.
’யார்ரா
இது’ என்றாள் மூதாட்டி மீண்டும்.
’ஊரு
தம்பி’
’யாரு’
நாகலிங்கம்
மகன் என்றான் சின்னவன்.
’பரியாரியாடா’
’அம்மா’
என்று அதட்டலாய்ச்சொன்னான் சிவபெருமான்.
’சொல்லுறது
சரிதானே’ என்றான் சின்னவன்.
’சரிதான்.
தொழிலாளி மகன்னு சொல்லுணும் இல்லையா! என்றாள் மூதாட்டி.
’ஏன்
இன்னைக்கு சவரம் பண்ணிக்கற? நம்மதொழிலாளி இல்ல. ஊரு ஆளு இதுக்கு வருலாமா. நாளைககு பொழப்பு போயி தெருவுல நிக்கப் போவுது’ என்றாள் மூதாட்டி.
‘வயசானா எதானா பேசிட்டுப் போறதா. கொஞ்சம் சுருக்கிப் பேசுனா நவ்லதும்மா’ என்றான் சிவபெருமான்.
சிவபெருமான்
அதிர்ந்து போனான். சின்னவன் எதையும் பொருள்படுத்தாமல் இருந்தான். சிவபெருமான் ஒரு கொட்டகையினுள் நுழைந்து கொண்டான். சின்னவனை அந்தக் கொட்டகையில் அமர வைத்தான். அந்தப் பகுதியைப் பார்த்து வியந்து போனான் சின்னவன். அங்கு சிலரது உருவப்படங்கள் இருந்தன. அவைகளை மலைக்க மலைக்கப் பார்த்து நின்றான் சின்னவன். படங்களில் சில, முறுக்கிய மீசையை வைத்துக் கொண்டிருந்தன.
’இவுக
எல்லாம் யாரு’
’சொல்லுறேன்.
கொஞ்சம் கொஞ்சமாத்தான் சொல்லுணும்’
’சின்னவனே
நீ இங்க வர்ரது யாருக்கும் தெரியுமா?’
’தெரியாது
கண்மணி வாத்யாருக்கு மட்டும் சொல்லி இருககேன்’
’அது
சரி, தப்பு இல்ல’.
’வேறு
யாரு கண்ணலயும் படுலயே’
’இல்லை.
அப்படித்தான் நினைக்கிறேன்’
சுவர்
ஒரமாய் ஒரு நான்கு தட்டுக்கு குறையாது ஒரு அலமாரி இருந்தது. அந்த அலமாரியினுள் வரிசைவரிசையாய் புத்தகங்கள் அழகாய் அடுக்கப்பட்டிருந்தன. புத்தகங்களைத் தொட்டுதொட்டுப்பார்த்தான் சின்னவன். சில ஆங்கில நூல்களும் சில தமிழ் நூல்களும் கலந்து இருந்தன.
’இது
எல்லாம் எப்ப எங்க கத்துகினு வாங்கின’ புத்தகங்களையே முறைத்து கொண்டிரந்தான் சின்னவன்.
’அப்ப
அப்ப வாங்குறதுதான்’.
புத்தகங்களுக்கு இடையே
சிறியதாய்ப் புகைப்படம் ஒன்று செருகிக்கொண்டிருந்தது. அந்தப் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தான். சின்னவன். சமீபத்தில் எடுக்கப்பட்ட படம் போன்று தெரியாமல் இருந்தது. இருவர் நிற்கிற படமாய் அது. சின்னவன் அதனை உற்று நோக்கினான்.
’ஒண்ணு
நீ’
’சரி’
என்றான் சிவபெருமான்.
’இன்னொண்ணுஎன்று இழுத்தான்
சின்னவன். அவனே மீண்டும் கண்மணி சாரு வாய் திறந்து சிரித்தான் லேசாய் சின்னவன்.’
’ஆமாம்’
’வாத்யாரும்
நீயுமா’
’ஆமாம்
சாரும் நானும் தான்’.
சின்னவனுக்கு
பொட்டில் ஏதோ உணர்த்திய மாதிரி இருந்தது. அறையுள்ளாய் ஓர் கட்டில் கிடந்தது. அதன் மேல் சில நாளிதழ்கள் கிடந்தன. தாறுமாறாய்க் கிடந்தவைகளைச் சரி செய்தான். சிவபெருமான்.
’இப்போ
பிரச்சினைக்கு
வருவோம்’.
’சரி’
’நீ
என்ன சொல்லுறே?’
’நான்
என்ன சொல்ல? நான் சாதாரணமாய் வந்தவன். இங்க வர வர, சில சில விஷயங்கள் வெளிச்சமாய் தெரிய வருது’ சிவபெருமான் அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தான்.
’நீ
தலைவர் தேர்தல்ல நிக்கணும். ஊரு தலைவரு நீயாவே வரணும் ‘என்று முடித்தான்.
’ஏன்
சின்னவனே?’
’இல்ல,
நான் ஆசைப்படுகிறேன்’
’அது
எப்படி?’
’நீ
தேர்தல்ல நில்லு
நிக்கறேன்
வச்சுக்க’
’அது
போதும் நீ நின்னா செயிச்சிடுவ’.
’எப்படி
உன் கணக்கு?’
’நாட்டாமை
நடுப்பிள்ளை கோஷ்டிங்க ஊரு ஓட்டைப் பிரிச்சுடுவாங்க. இங்க இருக்கிற உங்க சனம் முடிவு பண்ணுவது தான் முடிவு.’
’எப்பவும்
எங்க ஜனம் பண்ணுறதுதான் முடிவு. ஆனா எங்க ஜனம் இன்னும் என்ன முடிவு பண்ணனும்னுதான் ஒரு முடிவுக்கு வராம மயங்கிக் கெடக்கு’
’ஒரு
கேள்விக்குப் பதில் சொல்லு சின்னவனே, நீ ஏன் நான் தலைவரா வருணும்னு சொல்லுறே’?
’அது
ஒண்ணும் இல்லே சிவபெருமான். நான்யோசனை பண்ணிப் பார்த்தேன். என்பேரு நடுப்பிள்ளை பேரு, ஆனா அதச் சொல்லி யாரு என்ன கூப்பிடறது இல்லே. உனக்குத் தெரியுமே எங்கப்பா நாகலிங்கம். அந்தப் பேரு ஊருல ஈனப்பட்ட பேரா ஆயிடுச்சி, ஏன்னா தெருவுல உள்ள வாண்டு கூட நாகலிங்கம் மவன்னுதான் கூப்பிடுது? இல்லை சின்னவன்னு கூப்பிடுது. சிங்காரவேலு பேரும் கேவலமாய் போயிடுச்சி. எங்கம்மா மொட்டை. அது எப்படி மொட்டைன்னு ஆச்சி தெரியல. ஆனா மொட்டைன்னு கூப்பிடறது சரின்னு சனம் நெனைக்கிது’.
சிவபெருமான்
அதிர்ந்துபோய்
பார்த்துக் கொண்டிருந்தான்,’ உங்கப்பாவும் சிங்காரமும் தெருவுல சட்டை போட்டுகினு நடந்துண்டா?’ அமைதியாய்க் கேட்டான் சிவபெருமான்.
சின்னவன்
தன் கண்கள் ஈரமாகி இருந்ததைத் துடைத்துக் கொண்டான்.
’அப்பா
சட்டை வச்சிருக்காரு. சட்டையை ஒரு துணிப்பையிலுள்ளார மறச்சி மறச்சி வெச்சி இருப்பாரு. வெளியூரு போனா அங்கு போயிப் போட்டுகினு சுத்துவாரு. ஊருக்குள்ள வரும்போது சட்டையை அவுத்து மடிச்சி வச்சிகிவாரு. சிங்காரவேலு ஊருல உள்ள அத்தினி பேருக்கும் துணி வெளுப்பாரு. ஆனா அவரு ஒரு சட்டை போட்டது இல்ல’.
’ஊரு
பந்தில குந்தி உங்கப்பா சாப்பிட்டதுண்டா?’
’சோறு
உருண்டிதான் கொடுப்பாங்க, சட்டியில சருவத்துலதான் கொடுப்பாங்க. இல போட்டு சாப்பிடுறது ஏது?’
’நாங்க
செத்த தூரத்தில இருக்கம். நீங்க அவுத்தயே இருக்கீங்க. அவ்வுளவுதான். அவுங்களுக்கு உங்க தொழில் வேண்டியதாய் இருக்கு நம்ப ஐயரைக் கேட்டேன், சிவன் கோயில் பக்கத்துல இருக்காருல்ல அவுரை’.
’என்னா
சொன்னாரு’
’என்ன
சொல்வாரு. மாட்டிகிட்டு முழிக்கிறம்னு அவரும் சேந்துகினு பேசுறாரு’.
’இருக்கும்.
எல்லாம் உண்டுதான்’
’எங்களுக்கு
ஐயர் வேற. வள்ளுவருங்க இங்க சலவைத் தொழிலாளியும் சவரத் தொழிலாளியும் இருக்காங்க. அவுங்க அவுங்க வேற. இங்கயும் ஒசத்தி மட்டம் எல்லாம் இருக்கு. ஒழக்கில கிழக்கு மேற்கு என்ன செய்ய?’
’கதை
பெரிய கதை நேத்திக்கு இண்ணைக்கு கதையா, பல நூறு ஆயிரம் வருஷமா நடக்குற கொடுமை. பல ராசா பாத்தது’.
’நாங்க தொட்டுக்க முடியாதுன்னு சனம் இங்கேயும் அனேகமுண்டு. கீழ மேல எல்லாம். கொள்வன கொடுப்பன இல்லே’.
’ஆமாம்
கதைக்கு வருவம். நானும் ஐயருகிட்ட பேசினேன் தேர்தல் விஷயத்தை. இது ஆபத்துன்னு சொன்னாரு, அப்பத்தான் சுள்ளுன்னு புரிஞ்சிது சமாச்சாரம்’
’பெறகு?’
’வாத்தியாருகிட்டயோசனை கேட்டு புட்டு இங்க வந்தேன்.அதான் கண்மணி சாரு’.
சிவபெருமான்
அமைதியாய் இருந்தான். புத்தக அடுக்கு களைப் பார்த்துக் கொண்டிருந்தான். சிவபெருமான் வெளிப்பட்டுக் கொண்டிருந்தான்.
இதோ
வருகிறேன். அம்மா கூப்பிடுது.
சின்னவன்
அமைதியாய் அமர்ந்திருந்தான்.
தம்பி
தம்பி சிவபெருமானின் தாய்மீண்டும் குரல் கொடுத்துக் கொண்டிருந்தாள். சிவபெருமான் சின்னவனுக்கு ஒரு புதிராய் தெரிந்தான். ஏனோ தன்மானம் தன்னை
வாட்டி வதைக்க வழி தேடிய சின்னவன், கண்மணியையும் சிவபெருமானையும் கண்டு சற்று ஆறுதல் அடைந்தான். மனிதனை நேசிப்பவர்கள் அற்றுப்போனதுவாய் எண்ணி இருந்தவனுக்கு அடிவயிற்றில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி லேசாய் கொப்பளித்தது; சிவபெருமான் உள்ளிருந்து வெளிப்பட்டான். கையில் ஒரு எவர்சில்வர் சொம்பு பளிச் சென்று தேய்த்து அது நிறைந்தபடிக்குத் தூக்கி வந்தான் சிவபெருமான்.
’அது
என்னா?’
’சும்மா
கொஞ்சம் மோரு.அம்மா கொடுத்துது, சாப்பிடு’
’இந்த
சிரமம் எல்லாம் எதுக்கு’? என்றான் சின்னவன்.
’அதுக்குள்ள
ரொம்ப பெரியமனுஷன் ஆயிட்டாப்போல.இப்பத்தான் பேசிகிட்டு இருக்கம் யதார்த்தமா. ரொம்ப பிகு பண்ணிக்கவேண்டாம். வாழ்க்கையைப் புரிஞ்சிகிட்டு பாக்கிறம் நாம்’
. ஒன்றும் புரியாமல் சின்னவன் விழித்துக் கொண்டிருந்தான். சிவபெருமான் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். செம்பினை வாஙகிய சின்னவன் கடகட என குடித்துக் காலிசெய்தான்.
’நல்லபசி
போல’
’ஆமாம்
என்றான் சின்னவன்’.
’ஒரு
வெஷயம், நான் தேர்தல்ல நிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். எங்கபகுதி மட்டும்னு இல்ல. ஊர்வலயும் பலபேரு எனக்கு வோட்டுப் போடுவாங்க.’
’என்னைப்
போல பலவங்களும் இருப்பாங்க’
’நீதான்
தெரிஞ்சிருக்கே. இன்னும் இன்னும் இருப்பாங்க. அந்த ஐயரு இருக்கிறாரே, அவரும் எனக்குத்தான் போடுவாரு. ஏன் தேவாரம் பாடுற பேரூர் பிள்ளையும்
எனக்கு வோட்டுப் போடுவாரு இன்னும் ஏக ஜனம் இருக்கு. இதுல ஒண்ணும் சந்தேகம் இலல; வெளிய தெரிஞ்சா அவங்க அவங்களுக்குப் பிரச்சனை வேற’
’இது
எல்லாம் எப்படி’
’எப்படின்னா
அப்படித்தான். நல்லது எது கெட்டது எதுன்னு தெரிஞ்சவங்க உண்டு. இங்க என் உறவா இருக்கிற வங்க சிலபேரு கூட நடுப்பிள்ளைக்கோ நாட்டாண்மைக்கோ வேலை செய்வாங்க. சிக்கலானது நம்ப சமூக சமாச்சாரம்’
’அது
என்ன வெஷயம்’
’அது
அப்படித்தான். உலகம் இது. ஆச்சரியப்பட ஏது மில்லே சின்னவனே. அப்படித்தான் ஒவ்வொருவருக்கும் ஒரு சின்ன கணக்கு இருக்காதா?’
சின்னவன்
புதிய புதிய விஷயமாய் பிடிபட முகம்மலர்ந்து கொண்டிருந்தான். நேராய் கேட்டு விட்டான்.
’இதுங்க
எல்லாம் எங்க பேசக் கத்துகிட்ட, ஒண்ணும் வௌங்காம நிக்குறேன்.’
’மனுஷங்களைப்
புரிஞ்சிகிறது, அவங்க பிரச்சனையைப் புரிஞ்சிகிறது, அதுக்கு தீர்வுகாண முயற்சி பண்ணறது எல்லாம் ஒரு வெஷயம்தான் காலம் காலமாய் நடந்து கிட்டுத்தான் வருது, வரும். கொஞ்சம் இருட்டு, கொஞ்சம் வெளிச்சம், மாறி மாறித்தான் எல்லாம். ஆனா முழு இருட்டா மாறிடாது ஒர நாளும்’.
சின்னவன்
அமைதியாய் இருந்தான்.
’நான்
வந்த வேலை முடிந்திருச்சே’!
’இன்னும்
முடியல, இது தான் ஆரம்பம். இது எங்க இப்ப முடியறது? நாம மெனக்கெடறது. அதுக்காக நேரத்தை, பொருளைச்செலவு பண்ணுறது. அது பத்தி சிந்திக்கிறது இதுகளைச் செஞ்சிகிட்டே இருக்கணும். முயற்சிதான் வாழ்க்கை. அதுதான் லட்சியம் வெற்றி எல்லாமும்’
சின்னவன்
கட்டிலிலிருந்து
எழுந்து நின்றான்.
’நான்
கௌம்பட்டுமா?’
’ஆனா,
இங்க வந்தது போனது எதுவும் வெளியில தெரிய வேண்டாம் தெரிஞ்சா நல்லது இல்லே’.
’நான்
ஏன் சொல்லப்போறேன்?’
’இல்ல
யாராவது பாத்து இருக்கலாம். செவுத்துக்கும் காது இருக்கும், கண்ணு இருக்கும்பாங்க’
’ஜாக்கிரதையா
பாத்துக்கறேன், கண்மணிசாருக்கு ஏதும் செய்தியுண்டா?’
’நான்
அவரப்பார்த்து
பேசிக்குறேன், விசாரிக்சேன்னு மட்டும் சொல்லு’.
ஒரு
புத்தகத்தை கையில் எடுத்தான். அது சிறிய புத்தகமாய் இருந்தது. நான் ஏன் நாத்திசுன் ஆனேன் அதன் தலையில் எழுதியிருந்தது. குல்லா வைத்துக் கொண்ட மீனசக்காரன் படம் சிவப்பு வண்ணத்தில் பெரிதாய் இருந்தது.
’இது
என்ன?’
’இது
ஒரு பெரிய மனுஷன் எழுதியது. அவரு உன்னைப் போல ஒருவருதான். மனுசங்களுக்காக வாழ்ந்து மடிஞ்சவரு. அவரு என்ன சொல்லுறாருன்னு படிச்சிப்பாரு. உனக்குத் தெளிவாகும்’.
’திரும்ப
கொண்டாந்து குடுத்துடறேன்’.
’அதுக்குச்
சொல்லலே. திரும்ப திரும்பப் படிச்சிப்பாரு. உனக்கப் புரியும். உனக்குப் புரியலைன்னா யாருக்கு புரியும்? பிறகு மனசுல இருக்குற அக்கினி உன்னைச் சும்மாவிடாது. அந்த அக்கினி இந்த புத்தகத்துல இருக்குது.’
புத்தகத்தை
சின்னவன் வாங்கி வைத்துக் கொண்டான் சிவபெருமானின் தாயார் இப்போது அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் அந்த நடை வழியே நடந்து சின்னவன் வெளிப்பட்டுக் கொண்டிருந்தான்.
’பாவிக
அழிச்சிப் புடுவானுவ. பணத்தை, பலத்தை வச்சி அழிச்சிப் போடுவானுவ: சாக்கிரதையா இருக்கணும்’
சின்னவன்
ஒன்றும் புரியாமல் தலையை ஆட்டினான். மீண்டும் ஒரு முறை சிவபெருமான் சொன்னதைச் சொல்லிப் பார்த்துக் கொண்டான். நல்ல நட்பு ஒன்று கிடைத்துவிட்ட தாய், மனம் இனம் புரியாத மகிழ்சியில் சிக்கித் தத்தளிப்பதை முதல் முதலாய் உணர்கிறான் சின்னவன். தன் கையில் அந்தப் புத்தகம் பத்திரமாய் இருக்க, வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
11
நடுப்பிள்ளை
தெற்கு வெளி நோக்கி விறு விறு நடை போட்டு வந்து கொண்டிருந்தார். கையில் தூக்கிப் பிடித்த குடை இருந்தது. அது அவருக்குத் தேவையில்லை தான். அதனை ஒரு மிடுக்கிற்காய் அவர் கைக் கொள்வதாய் அறிய மடிந்தது. தெற்கு வெளியில் அவருக்கு முப்பது ஏக்கருக்கு குறையாமல் நன்செய் நிலங்கள் இருந்தன.
நெய்வேலியில்
பழுப்பு நிலக்கரி கண்டு பிடித்த தருணத்தில்தான் இந்தப் பகுதியில் நிலத்தடி நீரின் அழுத்தம் கூடுதலாய் இருப்பதாய் புவியியல் ஆய்வாளாகள் அறிவித்தார்கள். பிறகு ஆர்டிஷியன் ஊற்றுக்கன்
கண் திறந்தன. நடுப்பிள்ளையும்ஆர்டிஷியன் ஊற்று ஒன்றுபோட்டு, வெள்ளாமை செய்தவர்தான். அது இப்போது வரலாறு ஆகிவிட்ட விஷயம். தற்போதைய தேவையை மோட்டார் பம்பு செட்டுகள்தாம் தீர்த்து வைக்கின்றன. வயலில் அனேகமாய் நெல் பூத்து நிற்கும் பருவம் என்பதால் அடிக்கொருதரம் வயலுக்குச் சென்று வருவார் பிள்ளை. வயலின் வரப்பு மீது அமர்ந்து பயிர்களைப் பார்த்துக் கொண்டிருப்பார். அவருக்குப் பயிரின் மீது கவனம் கூடிய பிரியம் இருக்கத்தான் செய்தது. வயல்களைச் சுற்றி வரும் போதெல்லாம், பயிர்களைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு சராசரி மனிதனாய் அவர் ஆகிப்போவது என்னவோ ஆச்சரியம். அவர் தன் வயலின் மேற்பார்வையோடு மட்டும் நிறுத்திக் கொள்ளமாட்டார். பயிரின் வளர்ச்சி. அதன் செய் நேர்த்தி, அறுவடை விஷயங்கனை அடிக்கடி பிரஸ்தாபித்துக் கொண்டே இருப்பவர். ஆனால் வரப்பினின்று சற்று இறங்கி வழிப்பாதைக்கு வந்தாலோ அவரிடம் அகந்தை எங்கிருந்தோ வந்து இறுக்கிப் பிடித்துக் கொண்டு உலுக்கத் தொடங்கிவிடும். நெல் களத்து மேட்டிலும் தன் ஜபர்தஸ்து, தன் ஆளுகை இவை இவை கொப்பளிக்கவே நடந்து கொள்கிற அரிய சுபாவம்தான் அவருடையது.
சின்னவன்,
சிவபெருமான் வீட்டுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தான். நடுப்பிள்ளை வருவதைப் பார்த்து விட்ட சின்னவன். வழியோரமாய் நிற்கும் தென்னை மர மறைவில் தன்னைப் பொருத்திக் கொண்டான். அவன் தன் முகத்தை வேறு பக்கமாய் திருப்பிக் கொண்டு விரைத்தபடி இருந்தான்.
நடுப்பிள்ளையின் கழுகுக்கண்கள் எங்கு
எங்கு நடப்பதையும் கண்டுபிடித்து விடும்தான். சின்னவன் ஒதுங்கவதைகவனித்த அவர் அவனையே முறைத்துக் கொண்டு நின்றார்.
’என்னா
முறைக்கிற மூதி. கத்திப்புட்டி புடிக்கிற கையில என்ன சினிமா பாட்டு பொத்தகமா, இதுக்கு ஒண்ணும் குறைச்சலில்லே, எங்க பொட்டச்சி மூத்திரம் வுடுவான்னு பதுங்கிகினு பாக்குறயா?’
சின்னவன்
அமைதியாய் நின்றான்.
’சொல்லுடா’
’சும்மா
ஒரு கண்ணுகுட்டி தேடிகிட்டு வந்தேன்’
’முழிக்கிற
முழியப் பாத்தா தெரியல. கண்ணுக்குட்டி தேடுறாராம். ஆவுட்டும் ஒப்பன்கிட்ட சொல்லுறேன். கழுதைக்கு காலுகட்டு போட்டா சரியா பூடும். இல்ல எவன் வெள்ளாமையாவது பாழா பூடும்’.
சின்னவன்
இன்னும் அமைதியாய் இருந்தான்.
’முழிக்கிறான்’ என்றார்
பிள்ளை.
மேலே
கழுத்தில் வெள்ளையாய்ய உடல் முழுவதுமாய் இரத்தச் சிவப்பில் பருந்து ஒன்று வட்டமிட்டது. தன் கால்மிதியடிகளை கழட்டி விட்டுச் கொண்டார். கிருஷ்ணா கிருஷ்ணா இரண்டு முறை சொல்லித் தன் கன்னத்தை கைவிரல்களால் மாறி மாறித் தொட்டுக் கொண்டார். மிதியடிகளுக்குள தன் கால்களை மீண்டும் நுழைத்துக் கொண்டார்.
சின்னவனுக்கு
லேசாய் சிரிப்பு வந்தது.
கைபிடித்திருந்த குடையைச்
சுருக்கிச் சின்னவனிடம் கொடுத்து ’என்னா சிரிப்பு? சாமிடா சாமி, கெடக்கட்டும் கழுதை என்னாத்தைக் கண்டுது? இந்த கொடைக்கழிய ஆச்சிகிட்ட கொடுத்துடு. காபி போட்டு வைக்கச்சொல்லு, தே வந்துடறன்.’
’வெவரம்
கெட்ட கழுதைவ, சே மூத்திரக்கவுச்சி நாறுதப்பா இவ்விடத்த’
நடுப்பிள்ளை
சிரித்துக்கொண்டார். தன் உச்சிக் குடுமியை கோதி , ஒருமுறை விட்டு முடிச்சிட்டுக் கொண்டார். தன் வயல் நோக்கி மீண்டும் நடந்தார் பிள்ளை. கையில் குடை இல்லாத பிள்ளையைப் பார்க்க உறித்துவிட் கோழியாய் வெறிச்சென்று இருந்தது.
சின்னவன்
குடையை தன் கையில் மாட்டிக்கொண்டு நடந்தான்.வெயில் சற்றுக கடுமை குறைந்திருந்தது. குடையைப் பார்க்குந்தொறும் சின்னவனுக்கு ஆத்திரமாய் வந்தது. பிள்ளை சின்னவனைப் பேசிய வார்த்தைகள் ஒன்றும் புதியவை அல்ல. அவன் தந்தை பிள்ளையிடம் வாங்குபவற்றில் இவை கொசுறு என்பதைச் சின்னவன் அறிவான்.
நடுப்பிள்ளையின் குடையை
லேசாய்ப் பிரித்துப் பார்த்தான். தலைக்கு நேராய்ப் பிடித்துக்கொண்டான். இன்றுதான் முதல் முதலாய் ஒரு குடைக்குக் கீழாய் அவன் நின்றிருக்கிறான். பத்து அடிகள் குடை பிடித்து நடக்க ஆரம்பித்தான். இரண்டு புறமும் தென்னை மரங்கள் அடர்ந்து இருந்தன. தென்னை மரங்கள் அருகி வெற்றுப் பாதையும் வந்தது. சின்னவன் ஊரைத்தொட்டுக் கொண்டு இப்போது நடக்கிறான். குடையை மடக்கி விடலாமா என்று யோசித்தான். மடக்காவிட்டால் என்ன ஆகிவிடும் என்று எண்ணிப் பார்த்தான். உச்சி வெயில் இன்னும் இருந்ததுதான்.
வழி
ஓரமாய் வாகடம் காசி மும்முரமாய் பச்சிலை தேடிக்கொண்டு இருந்தான்.
’யாரு
குடை’
’சின்னவன்’
’அடிச்
செருப்பால, ஆமாம் ஆமாம் கொடை! இது எப்படி வந்தது? சில்லா கலட்டரு துரை’
’சின்னவனே
என்னா முழிக்கிறே. உன் அப்பனுக்குத தெரிஞ்சா உன்கதி என்ன? உன் அப்பன் கதி தான் என்ன? வெரலுக்குத் தக்கன வீக்கம் வேணு’ம்டா’
கொடை
கையில சுருக்கி இருந்தா என்ன? விரிச்சி புடிச்சாஎன்ன?’
’மாட்டை
மேக்குறவன், கறக்குறவன், குடிக்கிறவன் வேறவேறங்கறேன்.’
’இது
நடுப்பிள்ளை குடை’
வாகடம்
காசி பல் அத்தனையும் தெரியச் சிரித்தான், பச்சிலை தேடுவதை நிறுத்திச் சின்னவனிடம் நெருங்கி வந்தான்.
ஆலே
கொடைய குடேன். நான் செத்த புடிச்சி பாக்குறேன் கெஞ்சினான் வாகடம். சின்னவனுக்குப் பரிதாபமாய் இருந்தது. இத்தனை வயதில் இப்படி என்று எண்ணி வியந்து போனான். நடுப்பிள்ளையின் குடையைப் பிடித்து அப்படியும் இப்படியும் ஆட்டி ஆட்டி நடந்து பார்த்தான் காசி.
’ஆனை
ஆனைதான், குதிரை கதிரைதான் ‘என்றான்.மீண்டும் முறைத்தான் சின்னவன்.
’ஏண்டா
முறைக்கிற சின்னவனே?’
’என்ன
தேடுறீரு’
’கண்டங்கத்திரி வேரு
வேணும். ஒரு மாட்டுக்கு காயிலா பாக்குறேன்’
’அப்படியா?’
காஷாயம்
வைக்குணும்; வேல இருக்குது, ஜோலி இருக்குது
’தேடு
நான் வர்ரேன்’
’சின்னவனுக்கு ஒரு
சேதி நான் குடை புடிச்சதை யாருகிட்டயும்சொலிப்புடாதே. நடுப்பின்னைக்குத் தெரிஞ்சா நரம்பு எடுத்துடுவாரு’
’சொல்லிப்புடுவேன்’ சிரித்தான்
சின்னவன்.
’உட்ருவணா,
நீம்புரு முதல்ல புடிச்சிகிட்டு திருட்டுப் பய மாதிரி முழிக்கில, அந்தக் கதை வெளியில வந்துபுடும்.சிரித்தான் காசி’.
’நான்
ஏன் சொல்லப் போறன் நீ பச்சிலை தேடி மாட்டைப் பாரு. நடுப்பிள்ளைக்கு காபி போட நான் சேதி சொல்லணும் நான்போறன். சின்னவன் குடையோடு வேகு வேகு என்று நடந்தான். தெரு முழுவதும் ஒரே புழுதியாய் இருந்தது ஊராகாலிகள். மாடுகளையே விட்டு விட்டு இலுப் மரத்தடியில் கூசிக்கூவி ஆடுபுலி விளையாடியது கேட்க முடிந்தது.’
இரட்டை
இலுப்பைத் தோப்பு சிவன் கோவிலுடையது தான். இலுப்பைக் கொட்டைகள் பிழிந்து பெறப்படும் நெய்யே விளக்குகள் எரிக்க முழுவதுமாய்ப் பயன்பட்டது வரலாறு, இப்போது மரங்கள் அருகிக் கொண்டு வருகின்றன. புதிய மரங்கள் வளர்ப்பது என்பது சிந்தனையிலேயும் கருக்கொள்ளாமல்தான். தருமங்குடிப் பெரியவர்கள் வளர்த்துவிட்டு இருக்கும் ராட்சத மரங்கள் அவர்களின் பெருமை பேசி நிற்கின்றன. மின்சார விளக்குகள் என்று வந்த பிறகு எண்ணெய் விளக்குகள் ஒருபுறமு்அல்பமாயும், மறுபுறம் தெய்வீகமாயும் மாறிப்போயின. இலுப்பை மரங்களின் அடிப் பகுதி வேர்கள் முண்டும் முடிச்சுமாய் படுத்துக் கிடந்தன. அவைகளில் கால்நடைகள் சிறு கயிற்றால் பிணைக்கப்பட்டுக் கிடந்தன.
சின்னவன்
அண்ணாந்து பார்த்தான். ஆகாயத்தை மறைத்து பச்சைப் பசேல் என்று இலுப்பை இலைகள் அடைத்துக் கொண்டு நின்றன. மாடு மேய்க்கும் சிறுவர்களின் எண்ணிக்கை மூன்றுக்கு மேல் இருக்காது. யாருக்கும் மேல் சட்டை இல்லை. ஒருவன் கோவணம் மட்டுமே கட்டியிருந்தான்.மற்ற இருவரும் பின் பகுதி ஒட்டுப்போட்டு தைக்கப்பட்ட கால்சட்டைகள் அணிந்து கொண்டிருந்தனர்.
அவன்
தன் தந்தையை எண்ணிக் கொண்டான் நாகலிங்கம் தான் இந்தச் சிறுவர்கட்கு முடிவெட்டி விடுபவன். காலம் காலமாய் இவர்களின் மூத்தோர்களுக்கும்
நாகலிங்கத்தின்
குடும்பத்தினரே
முடிதிருத்தி இருப்பார்கள். அதில் கூட சின்னவனுக்கு ஒரு பெருமையும் வெறுமையும் கலந்து
தெரிந்தது. அம்மூன்று மாடு மேய்க்கும் சிறுவர்களும் எழுந்து ஒருவரை ஒருவர் கை பிடித்துக் கொண்டார்கள்.
’சின்னவரு
சின்னவரு
கையிகுடை
மன்னவரு
சார்க்கு
புர்ர்க்கு
பட்டாளத்து
முறுக்கு
போவுது
பாரு கிறுக்கு
கும்புடறோம்!
கும்புடறோம்! கும்புடறோம்!’
வேகமாய்ப்
பாடி முடித்தான் கோவணம் கட்டியவன். வெடிச் சிரிப்பு சிரித்தான்.
சின்னவன்
அவர்களை முறைத்துப் பார்த்து அப்படியே நின்றான்.
என்னா
சின்னவரே பார்வையே சரியில்லையே என்றான் கோவணங் கட்டியவன்.
’மாடுவுள
மேய்ங்கப்பா’
என்று
சொல்லி சின்னவன் பைய நடந்து கொண்டிருநதான்.
வேளாளர்
தெரு வந்தது. பெரிய தெரு வெறிச்சென்று கிடந்தது. சொறி நாய்கள் இரண்டு அருகருகே படுத்து அரை உறக்கத்தில் இருந்தன. அனேகமாய் தெரு ஜனங்கள் உண்டு விட்டு உறங்கும் சமயம் இது.
சின்னவன்
குடையைப் பத்திரமாய் வைத்துக்கொண்டு நடந்த வண்ணமிருந்தான். சிவபெருமான் கொடுத்த புத்தகமும் பத்திரமாய் இருந்தது. நடுப்பிள்ளை வீட்டு முன்பாய் நின்று கொண்டான்.
’ஆச்சி,
ஆச்சியோவ்’
இரண்டு
முறை கத்தி முடித்தான்.
நடுப்பிள்ளையின் ஆச்சி
நடுத்தர வயதிருக்கும்; தலையில் அழகு நரை ஒன்றிண்டு தெரிய ஆரம்பித்திருந்தது.
’’யாரு’
என்று இழுத்து நிறுத்தினாள்.
’சின்னவன்’
ஆச்சி
வாயில் கதவு வரை வந்து நின்று கொண்டாள். அசட்டு சிரிப்பு ஒன்று ஆச்சியிடமிருந்து வெளிப்பட்டதை சின்னவன் நோட்டமிட்டான்.
’உள்ர
வரமாட்டாரு துரை?’
சின்னவன்
அப்படியே நின்றுகொண்டிருந்தான்.
’ஒரு
சின்ன வேல இருக்குதுடா. வாடா சின்னவனே’
ஆச்சி
சன்னமாய் ஆரம்பித்தாள்.
’நடுப்பிள்ளை
காபிபோட்டு வைக்கச் சொன்னாரு, இப்பவந்து புடுவாரு’.
குடையை
ஆச்சியிடம் நீட்டிமுடித்தான்.
’லே
உள்ற பட்டாசாலை மச்சியிலே பெரிய தாம்பாளம் ஒண்ணு கெடக்குது. அது எடுத்துக் கொடுடா.’
சின்னவனே
குடையை இப்போது ஆச்சியிடமிருந்து வாங்கி ஆணி ஒன்றில் மாட்டி முடித்தான்.
’ஏறுடா
சின்னவனே’.
தயாராய்
இருந்த ஏணியின் பழுதுக்கழிகளில் கால் வைத்து, வைத்து, மச்சிக்குச் சென்று கொண்டிருந்தான் சின்னவன். பெரிய தாம்பாளம் ஒன்றினைக் கையில் பிடித்து ’ஆச்சியோவ்’ என்றான்.
ஆச்சி
அருகில் வந்து கொண்டிருந்தாள். தாம்பாளத்தைக் கையில் வாங்கி இறக்கி வைத்துக் கொண்டாள்.
’எத்தனி
நாளா இந்த வேல ஆவாம கெடக்குது,’ என்று இழுத்து நிறுத்தினாள்.
’ஆளு
ஆப்புடுணுமே, அது ஏறுதா எறங்குதா வாயி வவுறு மட்டும்தான்’.
ஆச்சி
பிள்ளையைப் பற்றித்தான் அழுத்திச் சொல்லி்ககொண்டாள்.
சின்னவன்
கால் வைத்து ஏணியின் பழுதில் இறங்கிய வண்ணமிருந்தான். ஏணியின் அடிக்குச்சியை தொட்டுக் கொண்டிருந்தான்.
சின்னவனின்
தலையில், முகத்தில், புயத்தில், மார்பில் தன் முகத்தை அழுத்தி அழுத்தி ஆச்சி முத்தமிட்டாள். அவன் உடல்முழுவதும் தன் உடலோடு இணைத்துக் கண்களை மூடிக்கொண்டாள்.
சின்னவன்
பேயறைந்த மாதிரியாய் உணர்ந்தான். இது ஆச்சிதானோ, வேறு ஏதும் விபரீதமோ என்கிற யோசனைக்கும் வந்தான். ஆச்சியியின் கால்கள் தரைதொட்டு நிற்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டான்.
ஆச்சியை
ஒரு முறை முறைத்தான். ’தாம்பாளம் எடுக்கச் சொன்னேன் அதானே’, என்றாள் ஆச்சி எதுவுமே நடக்காததுவாய்.
’பெறகு
என்ன? புள்ள வர்ர நேரம், இடத்தைக் காலி பண்ணுடா சின்னவனே’ என்றாள்.
சின்னவனுக்கு
ஆச்சியின் செயல் ஒன்றுமே பிடிபடாமல் இருந்தது. ஆச்சி அப்படி நடந்து கொண்டதாகவே ஆச்சியின் பேச்சுக்கள் இல்லை. தன் எஜமான தொனிக்கு அவள் மீண்டும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டாள்.
’தேவுலாம்’
என்றான் சின்னவன்.
’இவுருதான்
சொல்லுணும்னு’
என்றாள் ஆச்சி.
’இங்கதானே
வெச்சன்’ சொல்லிக் கொண்டே தேடினான்.
சிவபெருமான்
கொடுத்த புத்தகத்தை மீண்டும் அவனிடம் எடுத்துக் கொடுத்தாள் ஆச்சி.
’இது
என்ன புத்தகம்?’
’சினிமா
பாட்டுவ’ பொய்சொன்னான்.
’அடி
செருப்பால’.
சின்னவன்
ஒருமுறை சிரித்துக்கொண்டாள் ஆச்சியைப் பார்ப்பதற்குப் பாவமாய்கூட இருந்தது.
’மேல்
துண்டபுடி’ என்றாள்
ஆச்சி.
சின்னவன்
மேல்துண்டைப் பிரித்துப் பிடித்துக்கொண்டு நின்றான்.
நொய்
அரிசியாய் அரைபடிக்குக் கொட்டினாள் ஆச்சி.
’ஆவுட்டும்,
கழுதை சிரிப்பைப் பாரு’.
சின்னவன்
துண்டை முடிந்து கொண்டான். புத்தகத்தை கக்கத்தில் பத்திரமாய் இறுத்திக் கொண்டான். வெள்ளாளத் தெரு வழியே தன் வீடு நோக்கி நடந்தான்.
நாகலிங்கமும்
சிங்காரவேலுவும் எங்கோ
கிளம்புவதற்கு
தயாராய் நின்று கொண்டிருந்தனர்.
’வாடா
சின்னவனே எங்க பூட்ட ஆளக் காணம் ’என்றான் நாகலிங்கம்.
’என்ன
புத்தகமும் கையுமா?’ என்றான் சிங்காரம்.
12
சிங்காரவேலுவும் நாகலிங்கமும்
மாசி மகத்திருவிழழ காண கூடலையாற்றூர் வெள்ளாற்றுக்கு கிளம்பியவண்ணமிருந்தனர். சிங்காரம் கையில ஒரு மூட்டை வைத்திருந்தான். நாகலிங்கம் வெளியூர் செல்லும்போது கையில் சட்டை ஒன்றை வழக்கம்போல் வைத்திருந்தான்.
கூடலையாற்றூர் தருமங்குடியிலிருந்து தெற்கில் நான்கு கிலோ மீட்டர் இருக்கலாம். அந்த ஊரில்தான் மணிமுத்தாறும் வெள்ளாறும் ஒன்று சேர்கிறது. ஆகத்தான் அது கூடலையாற்றூராய் பெயர் தாங்கி இருக்கிறது. இந்த வெள்ளாறு சோழ நாட்டு வடவெல்லை;வெள்ளாற்றின் வடகரையோ அன்றைய நடுநாடு.
மாசி
மகத்தன்று சுடலையாற்றூரில் சுற்றுப்பட்டு ஜனத்திரள் கூடி, மறைந்து போன முன்னோர்கட்காக திதித்தானம் கொடுத்துப் பின் இறைவனை வழிபட்டு முடித்துக்கொள்கிறது
நாகலிங்கம்
தன் இடுப்பில் ஒரு பத்து மூபாயுக்கு வைததிருந்தான். அதனை ஒருமுறை தொட்டுப் பார்த்துக் கொண்டான். சிங்காரவேலுவும் தன் பங்குக்கு ஏதோ கையில் பணம் வைத்தகாண்டுதான் கிளம்பினான்.
’மறந்தது
மகத்துல குடும்பானுவ.’
’பொழக்கிற
வழிங்கறேன்’.
’நீம்புருந்
தானே போறீரு.’
’வௌக்கம்
கேக்குறாரு செத்த’.
இருவரும்
தருமங்குடியின்
தெற்கெல்லையில்
நடந்து கொண்டிருந்தார்கள். தென்னை மரங்கள் வரிசையாய் நின்று கொண்டிருந்த பாதை.
’இன்னைக்கு
என்னா என்னா வேல?’
’என்னா
புதுசா வேல? எப்பவும் பாக்குறது’, பதில் சொன்னான் நாகலிங்கம்.
சுற்றுப்பட்டு கிராமத்து
மக்கள் கூட்டம் கூட்டமாய் நடந்து கொண்டிருந்தார்கள். அனைவரிடமும் ஒரு பையொன்று பத்திரமாய் இருந்தது. அதனுள் உணவுப் பொட்டலம் கட்டி எடுத்து வந்தவர்கள் அநேகம் பேர் இருந்தனர்.
கூடலையாற்றூர் வெள்ளாற்றில்
குளித்து நீர்க்கரை ஓரமாய் அமர்ந்து, திதி கொடுக்கக் காத்திருக்கும் ஐயர்களிடம், மறைந்து போனவர்கட்காய் அரிசித் தானம் கொடுக்கவே? அநேகம் பேர் வந்திருந்தார்கள்.
வழக்கமாய்
சிறுவர்கள் குடைராட்டினம் ஆடுவதில், நீட்டுவாக்கில் ஊதும்புல்லாங்குழல் வாங்குவதில் அக்கரையாய் இருப்பர். பெண்கள் உலக்கை, சல்லடை, இரும்புச் சாமான்கள் வாங்குவதில் கவனம் செலுத்தி முடிப்பர்.
தருமங்குடி
ஷெட்யூல் இனமக்களின் வாழ்வில்லங்களைக் கடந்து இருவரும் நடந்து கொண்டிருந்தார்கள். சிங்காரவேலு வேடிக்கை பார்த்துப் பார்த்து நடந்து கொண்டிருந்தான்.
தருமங்குடியின் ஏரிக்கரை
வந்தது. ஏரியினுள் கருமை நிறத்தில் மண் பொறுக்கு பொறுக்காய்க் காய்ந்து கிடந்தது. தருமங்குடியி்ன் மண்ணுக்கும் ஏரியுள்ளிருக்கும் மண்ணுக்கும் நிறபேதம் இருந்தது.
ஏரிக்கரைமீது
கண்மணி ஆசிரியரும், சிவபெருமானும் நின்று ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் நாகலிங்கமும சிங்காரமும் வருவதைக் கவனித்தனர்.
’ரெண்டு
பேருமா கூடலையாத்துருக்கா’
’ஆமாம்’ சிரித்தான் சிங்காரம்.
’மறந்தவங்களுக்கு மகத்துல
குடும்பானுவ’ ஓங்கிச் சொன்னான் நாகலிங்கம்.
’ஏன்
மறக்கணும்?’ என்றார் கண்மணி.
’வாத்யாருல்ல.
ஏன் மறக்கணும் ஏன் கொடுக்கணும்ங்றீங்’க.
’அப்படி
இல்லே. நீங்க கொடுங்க. உங்களுக்கு அது சரின்னு மனசுக்குத் தோணுது. அதுகள வாங்குறவனும் ஒன்னும் மச்சிவீடு கட்டிகிட்டு மரியாதயா வாழுல’.
’வாங்கறவனுக்கும் வௌங்காது
கொடுக்கிறவனுக்கும்
வௌங்காது இது’ என்றான் சிவபெருமான்.
’அப்படி
போடு’ என்றான் சிங்காரம்.
’பின்ன
என்ன கண்ட, நீ அரிசிகொட்டுற முட்டி போடுற, நாணபுல்ல மோதிரமா செஞ்சி விரல்ல மாட்டுறாரு ஐயரு இப்படி கதெ ஆயிடுச்சி.’
’பாண்ச்சர்
அப்படியே சொல்லுறீரு அவ்வளவு கச்சிதமா ‘என்றான் சிங்காரம்.
’பாக்குற
கதெதான் நான் என்னா சீமையிலிருந்தா வந்திருக்கேன்’.
’மனம்
திருப்தி முக்கியம். அதுல மனம் திருப்தி அடைஞ்சிதுன்னா ஆவட்டுமே என்னா இப்போ’.
நாகலிங்கம்
தன் சட்டையைப் பையிலிருந்து எடுத்து மாட்டிக்கொண்டான்,
’இப்போ
போயி சட்டை போடுறாரு’ என்றான் சிவபெருமான்.
’ஊரு
தாண்டி போச்சி இனி ஜம்முனு சட்டைதான்’ என்றான் சிங்காரம்.
கண்மணி
ஒருமுறை நாகலிங்கத்தைப் பார்த்துக் கொண்டார்.
’நடுப்பிள்ளை
சட்டைதான்’ சிரித்து முடித்தான் நாகலிங்கம்.
சிங்காரமும்
நாகலிங்கமும் நடை கட்டினர். தருமங்குடி ஏரியின் கரைமீது இன்னும் நடந்து கொண்டிருந்தார்கள். பனைமரங்கள் இருமருங்கிலும் அடர்ந்து நெருக்கமாய் இருந்தன. சிங்காரம் அடிக்கடி அண்ணாந்து பார்த்துக் கொண்டான்.
’ஒரு
வெஷயம் பாத்தியா, இதுவுள்ள ஆணு பொண்ணுன்னு’.
’ஆமா
பனை சாதில ஆணு பொண்ணுண்டுதான்’.
’’வௌங்காத
வெஷயம் எவ்வளவோ பூமில. அதுக்குன்னு மூலயில குந்திகிட்டு மொடங்குருதா?’
’அடிய
பாத்துவா முள்ளு, மொறா ஓடுவ கெடக்கும்’.
’எனக்கு
ஒரு ஆசை சாவுறதுக்குள்ள ஒரு மிதியடி வாங்கிக்கலாம்னு’ என்றான் குழந்தைக் கணக்காய் சிங்காரம்.
’ஆவுற
கதை இல்லே. நடக்க புடிக்க வருமாங்கிறேன். இனிமே தான் பழவப் போறம் நாம.’
எரி
காய்ந்து கருமையாய்க் கிடந்தது. இந்தக் கருமை நிறத்துக்கும் தருமங்குடி மண் நிறத்துக்கும் தொடர்பே இல்லைதான். கரையி்மீது மக்கள் இடம்
விட்டுவிட்டு நடந்து கொண்டிருந்தார்கள். சிலர் தமக்குத் தெரிந்த பாடல் வரிகளை பாடிக்கொண்டே சென்றார்கள்.
முன்னதாய்
இருபெண்கள் நடந்து கொண்டிருந்தார்கள். அவர்களும் கூடலையாத்தூர் மகம் பார்க்கச் செல்பவர்களாய்த் தான் தெரிந்தனர். அவர்களின் செயற்கையான அலங்கரிப்புகள் அவர்களுக்குத் தொடர்பில்லாமல் காட்சி அளித்தன. அந்தப் பெண்கள் சிங்காரத்தையும் நாகலிங்கத்தையும் ஒரு முறை திரும்பிப் பார்த்தனர்.
’ஏரிக்கரை
மேல போறவளே பெண்மயிலே நில்லு கொஞ்சம் நானும் வாரேன்’ சன்னமாய் இழுத்து விட்டான் நாகலிங்கம்.
’சரி
உனக்கு என்ன மதமா.’
’நான்
பாடுனா ஆவாதா’.
’ஆவும்
முதுவு அகுலமா இருக்கணும்’
’உனக்கு
இம்மாங் கிருது ஆவாது.’
முன்பாய்
சென்று கொண்டிருந்த பெண்கள் மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்த்தனர். நாகலிங்கம் பாடல் வரி இழுத்ததை அவர்கள் கேட்டிருக்க வேண்டும் என்றே தோன்றியது. இரண்டு பெண்களில் உயரமாய் இருந்தவள்,
’பாட்டு
வர்ருது ஏன் நின்னு போச்சி’ என்று சொல்லிக் கொண்டே நடந்தாள்.
’விட்டதை
நீ பாடுறது’ என்றான் நாகலிங்கம்.
’ஏம்
பாடமுட்டேனா?’
’அதான்
பாடுன்றேன்’
’உனக்கு
இது வேணுமா’ என்றான் சிங்காரம்.
தருமங்குடி
ஏரிக்கரை முடிந்து போயிற்று. ஏரிக் கரையின் தென்கரையில் கலுங்கு தெரிந்தது. ஏரி காய்ந்து இருந்ததால், கலுங்கு ஜீவனற்றுக் கிடந்தது. ஏரி நிறைந்து விட்டால் கலுங்கு உயிர்பெற்று வழிய ஆரம்பிக்கும்; ஹோ என்ற ஒலி தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். மீன்கள் துள்ளிக் குதிக்கும், கும்மாளமிடும்.
ஏரியின்
கலுங்கு அழகாய்க் கட்டப்பட்டிருந்தது.
கருங்கல்கள்
குத்துவாட்டில்
வரிசையாய் நின்று அழகு சேர்த்தன.
’வெள்ளக்காரன் கட்டுனது’.
’ஆமாம்
வெள்ளக்காரன் கட்டுனதுதான் அக்குறும்பு இல்லாத நம்ம சனம் உழைச்சிக் கட்டுனது’.
’வெள்ளக்காரன் அக்குறும்புக்காரன் தான்’.
’ஆமாம்
யாரு இல்லேன்னா’.
இருவரும்
அண்ணாந்து பார்த்தனர் வானத்தில் ஒலி காதடைக்கும் படிக்கு வந்து கொண்டிருந்தது.
’என்னா’
’ஏரோப்ளான்’
’தெரிது.’
’வெள்ள
மேகத்துல பாரு’.
’தெரில’.
’’நல்லாபாரு.’
சிங்காரத்தின்
தோள்பட்டையைப்
பிடித்து, ஆட்காட்டி விரலை ஆகாயத்தில் பாய்ச்சிக் காட்டினான் நாகலிங்கம்.
’தெரிது.தோள முறிச்சிடுவ போல’.
’கீழே
அப்படியே வுழுந்தா எப்படி இருக்கும்’.
’எது?’
’ஏராப்ளான்’
’உள்ள
சனம்இருக்குமே’.
’மறந்தே
போனேன்.
’’பின்
என்னான்னு நெனைச்சே
’அதப்
பாத்தா உள்ள சனம் இருக்குற மாதிரி தெரில; காக்கா குருவி போவுற மாதிரில்ல போறது’.
’உழுந்துதுன்னா.’
’ஒரு
ஆசைதான் பாக்குலாம்னு.’
’பேராசை.’
’ஏராப்ளான்
உழுந்தா, நாம அதப் பாத்த மாதிரி இருக்கும்.’
’கழுத,
உடன் அது
பூட்டுது மேற்க’.
தட்டான்
ஒடை என்னும் குக்கிராமம் நெருங்கிக் கொண்டிருந்தது. இதற்கும் சிறியதாய் ஒரு கிராமம் இருக்க முடியும் என்று சொல்ல முடியாது. இருக்கும் இரண்டு தெருக்கள்; இரண்டும் தெருக்களும் ஒன்றையொன்று பார்த்து கொண்டு இருந்தன. ஊருக்கு இடையே தெருக்களை குறுக்காய் வெட்டிக்கொண்ட தாலுகா எல்லை. . மேற்குப் பகுதி ஒரு தாலுகா. கிழக்குப்பாதியோ இன்னொரு தாலுகா. இந்த ஊர் மக்களுக்கு சாலை வசதி கிடையாது. பேருந்து பயணங்கள் வெகுதூரம் நடந்து மட்டுமே சாத்தியப் படுகிறது.
இன்னும்
ஆலம்பாடி பாக்கி இருக்கிறது. ஆலம்பாடியை இந்தப் பகுதி மக்கள் ஆலம்படி என்றே செல்லமாய் அழைத்து மகிழ்ந்தனர். இந்தப் பெரிய கிராமத்தைத் தாண்டினால்தான் வெள்ளாறு கண்ணில படும்.
நாகலிங்கமும்,
சிங்காரமும் கன்னிக்கால்வாய் மீது நடந்து கொண்டிருந்தனர். மகம் பார்க்கச்செல்பவர்கள். ஒருவர் பின் ஒருவராய்ச் சென்று கொண்டிருந்தனர்.
தட்டான்
ஓடை தெருமுடிந்து ஒரு மாரியம்மன் கோவில் இருந்தது. கோவிலுக்கு ஒரு புறமாய் இருந்த குட்டையில் இரத்தச்சிவப்பில் அல்லி மலர்கள் பூத்து இருந்தன.
’எப்பவும்
இது தெரு ஒண்ணுதானே’.
’ஆராட்சி
பண்ணுற. தெரிஞ்சி நாளா ஒரே சனம், வன்னிய சனம் மட்டும்தான் இங்க இருக்கு’.
’அவுசரம்
அக்கறைக்கு’.
அண்டைவூரு
சனம், ஆளுவுதான் வரும் போவும்.
’ரொம்ப
செருமம்’.
தட்டானோடை
முடிந்து போயிற்று.
’அங்க
பாறேன்’ என்றான் நாகலிங்கம்.
எங்க?
குட்டைக்
கரையில.
ஆமாம்
ஒரு பொட்டை நாயைச் சுற்றி பத்து நாயுவ நிக்குது.
’அதெப்
பாக்குறது அதுவுளுக்கும் தாழண்ணு ஆவும்’
’சரி
ஆவுற கதெயப் பாரு’.
’ஏரோப்ளான்
இந்நேரம் எங்க இருக்கும்’.
’அந்தக்
கதெ எதுக்குன்னேன்’.
’அது
ஊரு போய்ச் சேர்ந்திருக்கும்’.
’’நீம்புரு
ரயிலு பாத்திருக்கிறீரா?’
’இல்ல
ஆள’ என்றான் சிங்காரம் பரிதாபமாய்.
சம்பாஷணை
ஏரோப்ளேனிலிருந்து
புகைவண்டிக்குத்
தாண்டிக் கொண்டிருந்தது.
’நானு
ரெயிலு நெய்வேலியில பார்த்துருக்கன், இன்னும் ஏறிக் குந்துனது தான் இல்ல.’
’இன்னும்
ஏறிப் போவுல’.
’நீரு
பாக்குல, நான் அதுல போவுல எது தேவுலாம்’.
’நாம
ரெண்டுபேரும் ரயிலுல ஏறி போவுனும்னு ஆசை’ என்றான் சிங்காரம் சன்னமாய்.
’பாப்பம்’ என்றான் நாகலிங்கம்.
நாகலிங்கம்
இன்னும் ரயிலில் ஏறியது கிடையாதுதான். சிங்காரம் நிஜ ரயிலைப் பார்த்தும் இல்லை. ஆனால் இருவரும் பறக்கும் ஏராப்ளேன் பார்த்து இருக்கிறார்கள். ரயில் தண்டவாளத்தின் மீது ஊரத் தொடங்கி ஆண்டுகள் பல நூறு ஆகித்தான் முடிந்து இருக்கிறது. புகைவண்டி என்ன என்பது தெரியாமல் இன்னும் மக்கள்...
வயல்
நிறைத்து கொண்டு பச்சைப்பயிறு உளுந்துச் செடிகள் அடர்த்தியாய்ப் பசுமையாய் இருந்தன. அவை மஞ்சன் நிறப்பூக்களைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு நின்றன. வயல்களின் நடுவே ஒற்றையடிப் பாதை பட்டையாத் தெரிந்தது. மக்கள் வரிசையாய் ஒருவர் பின் ஒருவராய் சென்றபடி இருந்தனர். ஆலம்பாடி ஏரிக்கரையை இருவரும் தொட்டு நடந்து கொண்டிருந்தார்கள். ஏரிக் கரையின் ஏறுவழியில் மனித மலங்கள் திட்டு திட்டாய்க் காய்ந்து கிடந்தன. இருவர், ஏரியில் ஓராமய் தேங்கி நிற்கும் தண்ணீரில் தங்கள் பிஷ்டங்களை அழுத்திச் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
’சுதிமதி
இல்லாத பயலுவ’ தன் மூக்கைப் பிடித்துக் கொண்டான் நாகலிங்கம்.
’பின்ன
என்னா செய்வான் வவுத்த வலிச்சா’.
’கண்ட
எடத்துல கோமணத்த அவுத்துகிறதா?’
’இவரு
ஜில்லா கலக்டரு’ என்று சிரித்தான் சிங்காரம்.
ஆலம்பாடி
ஏரியின் தென்கரை வந்தது. இறங்கு முகத்தில் ஒரு பிள்ளையார் கோயில். விநாயகருக்கு வெள்ளைத் துணி கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. சாமிக்கு முன்பாய் நின்று கொண்டான் சிங்காரம்; தன் கண்களை மூடிக்கொண்டான்.
பாலும்
தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும்
கலந்துனக்கு நான் தருவேன் கோலம்செய்
துங்கக்
கரிமுகத்துத் தூமணியேநீ எனக்குச்
சங்கத்
தமிழ் மூன்றும்தா.
சொல்லி
முடித்துத் தன்காதுகள் இரண்டையும் மாறி மாறி கைகளர்பிடித்துக் கொண்டு, பாவனையாய் தோப்புக் கரணம் மூன்று போட்டு முடித்தான்.
’இதுல
ஒண்ணும் கொறச்சல் இல்ல’.
’ஏன்
எதுல குறைச்சலு?’
’சாமி
கும்பிடறவன்னலா
ஒழுங்கா?’
’கும்பிடாதவன் ஒழுங்கா’.
’இந்தக்
கதெ பெரிய கதெ வுடு’, என்றான் நாகலிங்கம்.
இருவரும்
நடந்து கொண்டு இருந்தார்கள். ஆலம்பாடி வீதியில் நின்று அவ்வூர் மக்கள் கூடலையாற்றூர் செல்வோரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நின்று கொண்டிருந்த கட்டை வண்டி ஒன்றி்ன் முக்கணை மீது அமர்ந்து ஒரு கிழவி வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தாள். கிழவுயின் தலை முடி சுத்த கருப்பாய் இருந்தது.
’சனம்
இந்த வருஷம் அவ்வளவா காணும்’, என்றாள்.
வெற்றிலையை
மீண்டும மெல்லத் தொடங்கினாள்.
’போயி
வர்ரதில்லயா? என்னா பெராக்கு’, என்றான் நாகலிங்கம்.
இருவரும்
யாதவர் வீதி வழியாய் நடந்து கொண்டிருந்தார்கள். அங்கங்கு ஆடுகள் நின்று வீதியைச் சுறுசுறுப்பாய் வைத்துக் கொண்டிருந்தன. மாடுகள் மூலைக் கொன்றாய் படுத்து அசை போட்டுக் கொண்டேயிருந்தன.
ஆலம்பாடி
முடிந்து போயிற்று என்பதை ஊர் முடிந்த சுடுகாடு உணர்த்திற்று. பிணம் ஒன்று எரிந்து கொண்டிருந்தது. இருவர் அதன் அருகே நின்று வேடிக்கை பார்த்த வண்ணமிருந்தனர்.
’இன்னிக்குப்
போய் ஒருத்தன் செத்து இருக்கான்.’
’சாவுறதுக்கு
நாளு பாத்து ஆவுற கதையா’.
இருவரும்
ஒற்றையடிப்பாதையில்
தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார்கள். வயல்களில் துருத்திக் கொண்டு துவரைச் செடிகள் பம்பையாய் இருந்தன.
’இங்க
எப்டி துவர’
’மணலு,
கொஞ்சம் பொட்டை, ஆற்று ஒட்டு&அதாம்’. என்றான் சிங்காரம்.
தூரத்தில்
ஆறு வெள்ளை நிறப்பட்டையாய்த் தெரிந்தது. ஆற்றில் மக்கள் கூடியிருப்பது சிறுசிறு எறும்பு உருவங்களாய்க் காண முடிந்தது. கூடலையாற்றூர் நெருங்கி விட்டது என்பது மக்கள் எழுப்பும் ஓசைகளால் அங்கிருந்தே உணர முடிந்தது. குடைராட்டினம் சுழன்றுகொண்டிருப்பது. தெரிந்தது. வெள்ளாற்றின் கரை தொட்டு இருவரும் ஆற்று மணலுக்குள் இறங்கிக் கொண்டிருந்தார்கள்.
’முதல்ல
குளிக்கணும்
நல்ல
வெடமா பாப்பம்’.
சில
சில இடங்களில் பெண்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். ஓரிரு இடங்களில் சிறுவர்கள் குளித்து, கும்மாளம் அடித்தார்கள். குளித்த சில பெரியவர்கள் கதிரவனை நோக்கி வணக்கம் செலுத்திக் கொண்டிருந்தார்கள்.
கரையோரங்களில் பார்ப்பனர்கள் துணியைப்
பந்தலாய் அமைத்து அமர்ந்து கொண்டிருந்தார்கள்.
’நா
அரிசி குடுக்கணும்’.
’இங்க
எனக்குப் பழக்கமில்ல.’
’எனக்குப்
பழக்கம்’ , பதில் சொன்னான் நாகலிங்கம்.’.
வெள்ளாற்றில்
இடுப்பளவு தண்ணீர் சென்று கொண்டிரந்தது. தண்ணீர்பளிச்சென்று கண்ணாடி போல தெளிந்து இருந்தது. வெள்ளாற்றில் எப்போதும் இப்படித்தான். மணிமுத்தாற்றில் இதை விட தண்ணீர் தூய்மையாய்த் தெரிவதுண்டு. இரண்டும் கூடித்தான் இப்படி பிரவாகித்து வருகிறது. கிழக்குப் பக்கமாய்த் திரும்பி இருவரும் தலையை நனைத்து நனைத்து நின்று கொண்டிருந்தனர் நாகலிங்கம் மூக்கைப் பிடித்துக் கொண்டு மூழ்கி எழுந்தான்.
’என்னா
சுகம்.
ஓடுற
தண்ணில வுழுந்தா சொகம் தான்.
’ஆத்தைச்
சொல்லுகிறேன்’.
’நானும்
இந்தத் தண்ணீயைத்தான் சொல்லுறேன்.’
நாகலிங்கம்
எங்கோ செருகி வைத்திருந்த விபூதியைக் குழைத்துப் பட்டை பட்டையாய் தன் உடலில் இட்டுக் கொண்டான். சிங்காரமும் தன் பங்குக்கு பட்டை இட்டுக் கொண்டான்.
’உலக்கைக்குப் பட்ட
போட்ட மாதிரி’.
என்று
சிரித்தான் சிங்காரம்.
’உலக்கை
ஒண்ணும் லேசுல்ல’.
இருவரும்
ஆற்றுத் தண்ணீர் ஒழுக்கு ஓரமாய் நடந்து கொண்டிருந்தார்கள்.
’ஒரு
ஐயரைப் பார்க்கணும்!.
என்று
சொல்லிக் கொண்டான் நாகலிங்கம். தன் சட்டைப் பையில் வைத்திருத்த பத்து ரூபாயை எடுத்து தடவிப் பார்த்துக் கொண்டான்.
’அரிசி.’
’எல்லாம்
இதுக்குள்ளாறதான்’.
நாகலிங்கம்
ஒரு கிழப் பார்ப்பனரிடம் தோதாய் அமர்ந்து கொண்டான். பத்து ரூபாயை நீட்டினான்.
’அரிசி
கொண்டாருல?’
’எல்லாம்
இதுக்குள்ள’.
’எதுக்குள்ள.’
’பத்துக்குள்ள.’
சரி
என்ற முதியவர் வாழைஇலை ஒன்றைப் பரப்பி பச்சை அரிசியும் ஒரு வாழைக் காயையும் வைத்து கொத்தவரங்காய் சிலதுகளை அள்ளித்தெளித்தார். ஒரு வெற்றிலையும் பாக்கும் கூடவே இருந்தது. தர்ப்பைப் புல்லால் ஆன மோதிரம் போல் ஒன்றை நாகலிங்கம் தன் கையில் அணிந்து கொண்டான். வலது கையில் அவன் மோதிர விரலில் அணிவது பார்த்து,
’ஆம்
அப்பிடித்தான்’
என்றார் ஐயர்.
தனக்குத்
தெரிந்த, புரிந்த புரியாத, வடமொழி மந்திரங்களைச் சொல்லி திதி நடத்திக் கொண்டிருந்தார் முதியவர். மண்டியிட்டு எள்ளும் நீரும் இறைத்தான் நாகலிங்கம். நாகலிங்கத்திற்கு நெற்றியில் மஞ்சளும் அரிசியும் கலந்து ஒருதிலகமிட்டார் முதியவர்.
முதியவர்
தன் பணியைத் தொடர்ந்து கொண்டிருந்தார். ஒரு சிறு வயது பெண்ணொருத்தி தன் கணவருக்காய் திதி கொடுக்க, முதியவர் முன்பாய் குந்தி அமர்ந்திருந்தாள்.
’இது
என்னா சேதி?’
’இது
என்னா, பூச்சி மருந்து குடிச்சிருப்பான் தூக்கு மாட்டிகின ஈரப்பானுவ. இது திதிக்கு வந்திருக்கு. அவன் கைலாயம் போயிருப்பான்.’
’பச்ச
மண்ணு பாவம்’.
’அந்தப்
பொண்ணா நான் ஏதும் சொல்லுல’.
சிறுவயதுக்காரி ஒருமுறை
முறைத்துப் பார்த்தான். நாகலிங்கத்திற்கு அச்சமாய் இருந்தது.
’கரண்டுகம்பி
முறிஞ்சி விழுந்திருச்சி: கண்ட மேனிக்கு பேசுற சரியில்ல. பெரியவங்களாச்சே’.
’தப்பு
தப்பு’ என்றான் நாகலிங்கம். முதியவர் தன் பணிக்கு அப்பெண்ணைத் துரிதப் படுத்திக் கொண்டிருாந்தர்.
’விதிம்மா
விதி, நம்ம செயலு இல்லே! என்றார்.
அவள்
தான் கொண்டுவந்த அரிசி, கறிகாய், கடுகு மிளகு, சீரகம், துவரம்பருப்பு, சிறு புளி உருண்டை இத்யாதிகளை கீழே தயாராய் இருந்த வாழை இலையில் அடுக்கினாள். முதியவர் சிரித்துக் கொண்டார்.
நாகலிங்கமும்
சிங்காரமும் சிறிது நேரம் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். பிறகு இருவரும் நடையைக் கட்டினார்கள். ஒரே கூட்டமாய் இருந்தது. கராபுரா என்ற சத்தம் வந்து கொண்டே இருந்தது வெயில் விர்விர்ரென்று ஏறிக் கொண்டிருந்தது.
மேசை
ஒன்றை வைத்து அதன்மீது துணி விரித்து கலர் கலராய் கண்ணாடித் தம்பளர்களில் நீர்நிறைத்து,
’சர்பத்சர்பத்’ என்று
ஒருவன் கத்திக் கொண்டு இருந்தான்.
’சிங்காரம்
இது குடிப்பமா?’
நாகலிங்கம்
அங்கேயே நின்று கொண்டான்.
’இது
மருந்து போட்டாதா, சர்க்கரை போட்டதா?’ என்றான் சிங்காரம்.
கடைக்காரன்
திரிதிரி என்று விழித்தான்.
’இது
மருந்து போட்டதா சர்க்கரை போட்டதா?’ என்றான் மீண்டும் சிங்காரம்.
’மசுறு
போட்டுது.’
’அதுவும்
சரிதான்’ என்றான் நாகலிங்கம். கடைக்காரன் லேசாய்ச் சிரித்தான்.
’நம்ப
ஆளு போல’ என்றான் சன்னமாய்.’
’ரவ
மருந்து போட்டு, அண்டாத் தண்ணிய இனிப் பாக்குறானுவன்னு சொன்னானுவ.’ சொல்லி நடந்தான் சிங்காரம்.
’மொகற
எகிறிப்பூடும்’
என்றான் சர்பத் கடைக்காரன்.
சர்பத்
சர்பத் ஓங்கிக்
கத்தினான்.
’சாமி
எப்ப வரும்’.
’வரும்
உறுமத்துக்கு’.
’வந்தபறம்.’
’அப்ப
ஒரு தரம் குளிக்கணும்’.
’பெறவு’.
’கோயிலுக்கு
போயி, நம்ப ஊரு பேரூர் பிள்ளைய பார்த்து சோத்துக் கதெக்கு ஒரு வழி பண்ணனும்’.
’வூட்டுக்கு
எதானிச்சிம் வாங்குணும்’.
’சும்மாவும்
போவுலாம்’.
’செமந்துகிட்டும் போவுலாம்’.
இருவரும்
ஆற்று மணலில் நடந்து கொண்டிருந்தார்கள்.
ஒரு
சக்கரத்தைச் சுழற்றிவிட்டுக் கொண்டு, அது நிற்கும் இடத்தை முன்கூட்டியே கணிப்போருக்குப் பரிசு வழங்குவதாய்ச் சொல்லி, ’கால்ரூபா வச்சா அரை ரூபா, அரை ரூபா வச்சா ஒரு ரூபா, ஒரு ரூபா வச்சா ரெண்டு ரூபா’ என்று கூவியபடி தலைப்பாகை வைத்தவன் அலறிக் கொண்டிருந்தான்.
அவனைச்
சுற்றி இரண்டு மூன்று பேர்வழிகள் நின்று கொண்டிருந்தனர். யார் யாரோ பணம் வைத்து ஏமாந்து இடத்தைக் காலி செய்து கொண்டிருந்தார்கள். நாகலிங்கம் அந்த சக்கரச் சுழற்சியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு ரூபாய் நாணயத்தை ஒரு கட்டத்தில் வைத்து, இப்ப சுத்திவுடு என்றான்.
சக்கரம்
சுழன்று நாகலிங்கம் காசு வைத்த இடத்தில் நின்று கொண்டது.
’வாண்சர்
அடிச்சது பாரு ரூபா ரெண்டு’ என்றான், சிங்காரம்.
சக்கரக்காரன்
ரெண்டு ரூபாய் நோட்டை அவனிடம் ஒப்டைத்தான்.
’உங்க
காசு எனக்கு வேணாம்’ என்றான்.
’ரொம்ப
யோக்கியரு’ என்றான் சிங்காரம்.
சக்கரக்காரன்
சிங்காரத்தை ஒருமுறை முறைத்தா
’சாவு
கெராக்கி’ என்றான்.
’நீம்புரு
காசு வக்கிறது’.
’நான்
வைக்கமாட்டேன். இது ஒரு பொழப்பா’.என்றான் சிங்காரம்.
இருவரும்
வரிசை வரிசையாய் சாமான்கள் அடுக்கப் பட்டிருக்கும் கடைகளை நோக்கிக் கொண்டே சென்றார்கள். வாழைப்பழ வண்டிகளும், கரும்பு வண்டிகளும் எதிர் எதிர் வரிசையில் வரிசையாய் நின்று கொண்டிருந்தன.
’அப்படியே
அஞ்சி நாலு, மூணு, அடிரெண்டு யாருக்கு வேணும்? தங்கரேக்கு, பவுனுதாம்பாளம், ரஸ்தாளி, ராஜாவூட்டுப் பண்டம்! போனாவராது பொழுது போனா கெடக்காது!’ வாழைப்பழக்காரன் தனக்குக் கட்டுப்படி ஆகாத சீப்புகளை மீண்டும் வண்டியினுள் அடுக்கிக் கொண்டான்.
கரும்புகளை
இரண்டு மூன்று எனக் கட்டிக் கொண்டுகத்தை கத்தையாய் விற்றுக்கொண்டு கரும்பு வண்டிக் காரர்கள் நின்று கொண்டிருந்தனர். இடை இடையே பலூன்காரர்களும் புல்லாங்குழல்காரர்களும் புகுந்து புகுந்து ஒலியெழுப்பி வியாபாரம் செய்து கொண்டு இருந்தார்கள். ஒரு முதியவர் 28 நெம்பர் பாம்பு பஞ்சாகத்தை கூவிப் கூவி விற்றுக்கொண்டிருந்தார்.
சில
டீக்கடைகளும் டிபன் கடைகளும் இருந்தன. தூரத்தில் ஒரு பந்தல் போடப்பட்டு இருந்தது. அதனுள் கூடலையாற்றூர் இறைவனும்இறைவியும் வந்து தங்கி, இங்கு கூடியிருக்கும் மக்களுக்கு அருள்பாலிக்க இருக்கின்றார்க்கள் என்பதை அறிய முடிந்தது. பந்தலுக்கு முன்பாய் பிச்சைக்காரர்கள் வரிசை வரிசையாய் அமர்ந்து கையில் உளள கிண்ணத்தை நீட்டிக் கொண்டிருந்தார்கள்.
பிச்சைக்காரர்களின் வரிசைக்குப்
பின்னால் கால்களை ரத்த சிவப்பாக்கி, ’ஐயோ அம்மா இந்த பாவத்தைப் பாருங்கோ, தாயி இந்தக் கொடுமையைப் பாருங்கோ, தருமதுரைகளே இந்த பாவிக்குத் தருமம் தருமம்" என்று ஒருவன் கத்திக் கொண்டிருந்தான்,
நாக்கில்
அம்பு செருகி, பிச்சை எடுத்துக்கொண்டு ஒரு பெண்மணி நடந்து கொண்டிருந்தாள். கையில் வேல்முருகன் படத்தை வைத்துக்கொண்டு,
ஆண்டி முருகன்
வேடமிட்டு,ச் சிறுவன் ஒருவன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். சிலர் ’’ரெண்டு கண்ணும் தெரியாத பாவிங்கோ’’ என்று சொல்லி
அமர்ந்திருந்தனர். ரெண்டு கால்களும் சரி
இல்லாத பிச்சைக்காரர்கள் சிலர், அவர் அவர்களின் மனைவியர் துணையோடு பிச்சை எடுத்துக் கொண்டிருந்தனர்.
’ஒரு
பட்டாளம் இருக்கு’.
’பின்ன
என்னா செய்யும்’.
"நாட்டு நிலைமை அப்படி. பிச்சைக்காரர்களில் நெசமானதும் இருக்கும்; வேஷம் கட்டுனதும் இருக்கும் வாழ்க்கை
எல்லாம் சேர்ந்ததுதான். என்னா செய்ய?"
’நம்மால
ஆவுற கதெயா இது’.
’ஆவுற
கதெ ஆவாத கதெ, நம்பளாட்டம் மனுஷன் நம்ப முன்னாடி அழுது நிக்கிறோனே, அவனை ஒரு தாய் பெத்துப் போட்டு ஆளாக்கி இருக்கு. நம்பளை மாதிரி ஆஷாபாஷம் உள்ள உசிருதானே இது. கூனிக்குருகி நாயாட்டாமா கெஞ்சிக்கேவி நிக்கக்குள்ள, நமக்கு இந்தக் கதி வர எந்நேரம் ஆவும்ங்கற பயம் வேற உள்ளாற வருதே, என்ன செய்வே?’
வெள்ளாற்றின்
தென்கரையில் உள்ள இலுப்பை மரத் தோப்பிலிருந்து வெடிச்சத்தம் கேட்டது. வாண வெடிகள் மேல் சென்று வெடித்துச் சிதறின. அவைகளின்
ஒளி மட்டும் பகல் என்பதால் அவ்வளவாக வெளிச்சம் இல்லாதிருந்தது.
’சாமி
கௌம்பி வருது’.
’இன்னும்
அரை மணி ஆவுலாம்’ என்றான் சிங்காரம்.
ஒரு
பெஞ்சைப் போட்டு அதன்மேல் பொட்டலம் பொட்டலமாய் அடுக்கிச் கொண்டு ஒரு முதியவர் அமர்ந்திருந்தார்.
’சில்லறை
சில்லறை! தருமம் போடுறதுக்கு சில்லறை’ என்று கூவிக்கொண்டிருந்தார்.
’இது
என்னா சேதி’ என்றான் சிங்காரம்.
’இந்தப்
பொட்டலத்துல ஒன்பது ரூபாயுக்கு சில்லறை இருக்கும். ஆனா நாம பத்துரூபா கொடுத்து அதெ வாங்குணும் பிச்சைகாரங்களுக்கு போடுறதுக்கு சுளுவா இது.’
’இந்த
சில்லறை ஏது?’
’அந்த
பிச்சக்காரர்கள் கிட்ட
வாங்கியாந்து வாங்கியாந்து பொட்டலத்தைக் கட்டி வச்சிக்க வேண்டியதுதான். பெறகு பொழுப்ப பாக்குறதுதான்.’
தன்
வசமிருந்த நாணயங்களைப் பொறுக்கி, சிலதுகளைக் கையில் எடுத்துக் கொண்ட சிங்காரம், கண் தெரியாதவர்களாய்ப் பாத்துப் போட்டுக் கொண்டே போனான்.
’போவுக்குள்ள
வர்ரீங்களா’ என்றான் சிங்காரத்திடம் ஒருவன்; அவன் குள்ளமாய் இருந்தான்.
’யாரு’
என்றான் சிங்காரம்.
குள்ளன்
விகாரமாய்ச் சிரித்து.
’போவுக்குள்ள
வர்ரதா’, என்றான் நாகலிங்கம்.
’அந்த
எலந்த மரத் தண்ட.’
நாகலிங்கம்
குள்ளனை முறைத்துப் பார்த்தான்.
’என்னா
சேதி, எனக்கும் ஏதும் தெரிஞ்சவங்களா?’
சிங்காரத்தை
முறைத்தான் நாகலிங்கம் தூரத்தில் எலந்தை மரம் தெரிந்தது. அதனை ஒருமுறை நோக்கினான். தன் இடுப்பைத் துழாவி சில காசுகளை எடுத்து அந்தக் குள்ளனிடம் கொடுத்தான்.
’சாமி’
என்று சிங்காரத்தின் கால்களைத் தொட்டுக்கும்பிட்டான் குள்ளன்.
’போய்
வேலயப் பாரு உன் தலைஎழுத்து இப்படி’ என்றான் சிங்காரம்.
’என்னாண்ணே
என்னாண்ணே’.
’அட
ஒன்னுமில்லே, தெரிஞ்ச கழுத; அதுக்கு அந்த ஈன
பொழப்பு நாம வர்ரத போர்ரதபாக்குதுல்ல’.
’என்னா
சொல்லுறே நீ’?
’இன்னும்
புரியில? நீ ஒரு கேணயா. எலந்த மரத்திண்ட பலானதுக்கு அவ குந்திக்கெடக்குறா. குள்ளனை அனுப்பி ஆளப் புடிக்குறா. புட்டு புட்டு உனக்கு நான் சொன்னாதான் விளங்குமாண்ணேன்’.
நாகலிங்கம்
அமைதி ஆனான். இந்தப்படிக்கு எல்லாம் இருக்கும் என்று அவன் நினைத்துப் பார்த்ததில்லை.
வானத்தில்
வேட்டு ஒலி தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது நாதசுர ஒலியும் தொடர்ந்து கேட்டது. கொட்டு மேளத்தின் ஒலி வெள்ளமாய்க் கொட்டியது.கூடலையாற்றூர் நெறிகாட்டும் இறைவன் இளைவியோடு கூடும் ஆறு நோக்கி வந்து கொண்டிருக்க வேண்டும் இறைவன் தீர்த்தவாரி தரும் இடத்தில் கும்பல் அடர்ந்து காணப்பட்டது. ஒரு பெரியவர் தோடுடய செவியன் என்ற பாடலை ஓங்கிப்பாடிக்கொண்டிருந்தார். கையில் பள பள என்ற வெங்கலத்தாளம் இருந்தது கழுத்தில் உருத்ராட்ச மாலைகள் அடர்த்தியாய் கொலு இருந்தன.
நாகலிங்கம்
பேரூர் பிள்ளையைத் தேட ஆரம்பித்தான். இறைவனைத் தூக்கிக்கொண்டு நடப்பவர்கள், திணறித் திணறி நடந்து கொண்டிருந்தார்கள். சங்கும் செயகுண்டும் ஒலித்துக் கொண்டிருந்தன. எல்லோரும் வெள்ளாற்றில் ஆழ்ந்து மூழ்கி எழுந்து கொண்டார்கள். "ஹர ஹர" என்ற ஒலி வந்து கொண்டிருந்தது. தாய்மார்கள் ஒரு புறமாய் நின்று நீராடி முடித்தார்கள். இறைவனைத் தூக்கிக் கொண்டவர்கள், அதற்கென அமைக்கப்பட்ட பந்தலை நோக்கி அசைந்து அசைந்து நடந்தார்கள், நாகலிங்கமும் சிங்காரமும் பேரூர் பிள்ளையைத் தேடிக் கொண்டிருந்தனர்.
’இனி
வவுத்து கதய பாக்குணும்’ சத்தமாய்ச் சொன்னான் நாகலிங்கம்.
’எங்கயும்
சுத்தி எம்பேர் முத்தி
அதான் கதை’ என்றான் சிங்காரம்.
’எங்க
பேரூர் பிள்ளை இருப்பாரு’ என்று தேட ஆரம்பித்தார்கள் இருவரும்.
தண்ணீர்
சற்று அதிகமாய் கழுத்துவரைக்கும் வரும் பள்ளமாய்ப் பார்த்து நீராடிக் கொண்டிருந்தார் பேரூர் பிள்ளை; "சிவா சிவா" என்று ஓங்கிச் சொல்லிய வண்ணமிருந்தார். நீரிலிருந்துவெளிப்பட்டார்: கரையோரம் வந்து திருநீற்றைக் குழைத்து மந்திரமாவது நீரு என்று சொல்லிச் சொல்லி தன் உடல் முழுவதும் இட்டுத் கொண்டார்.கழுத்தில் உருத்திராட்ச மாலை ஆடி ஆடி அழகாய்த் தெரிந்தது. நடுவானில் நின்ற சூரியனைப் பார்த்து வணங்கிக் கொண்டார்.
’இங்குள்ள
நல்லதும் கெட்டதும் உன்னோட, நாங்க எல்லாம் உன் பிள்ளைகள். என் அப்பனே சூரிய நாராயணா, சரணம்’ என்று சொல்லி இறை வணக்கம் முடித்தார்.
’ஆ;
இருக்காரு பிள்ளை’ சிங்காரம் சொன்னான். இருவரும் பேரூர் பிள்ளையை நோக்கி நடை கட்டினர்.
’கும்பிடறம்’
என்றார்கள் இருவரும்.
என்னா,
சாமி கும்பிட்டாச்சா?
’ஆச்சுது.’’
தன்
விபூதியை எடுத்து இருவருக்கும் கொடுத்தார் பிள்ளை. சிவா சிவாண்ணு சொல்லி பூசிக்கணும். பொணத்துக்கு மாவு தடவுற கதெ இல்லே தெரிதா?’
பேரூர்
பிள்ளை கூடலையாற்றூர் இறைவன் சந்நிதிக்கு கிளம்பத் தயார் ஆனார்.
’என்னைக்கு
கிளம்பி வந்திங்க?’
’நாலு
நாளு ஆவுது.தெனம் தேவார கோஷ்டிதான். சாமிக்குத் தமிழ்ப்பாட்டெ நாமதான் பாடணும். இதெவுட்டுப்புட்டுமனா பெறகு என்னா ஆவுறது?’
’சாப்புடணும்’ என்றான்
சிங்காரம்.
’இதெச்
சொல்லணுமா நான் பாத்துகறேன்.நீங்க ரெண்டு பேரும் என் பின்னாடி வந்தீங்கன்னா சாப்பாடு என் பொறுப்பு’. இருவரும் நிறைவாய்ச் சிரித்தார்கள் பேரூர் பிள்ளை நடந்து கொண்டிருந்தார்.
இலுப்பைத்
தோப்பைத் தாண்டி மூவருமாய் நடந்து கொண்டிருந்தார்கள் தாறுமாறாய் மக்கள் கூட்டம் நகர்ந்து கொண்டிருந்தது. சிலர் கருப்புக் கரும்பினை கையில் வைத்துக்கொண்டு போயினர். வாழைப்பழச் சீப்பினை கையில் பிடித்துக்கொண்டு சிலர் நடந்து சென்றனர். கட்டை வண்டிகள் பாதை ஓரமாய் ஓய்வெடுத்தன. காளை மாடுகள் அசதியில் படுத்திருந்தன.
’கோவில்ல
எப்ப சாப்பாடு போடுவாங்க’ என்று இழுத்தான் சிங்காரம்,
’இதெல்லாம்
என்ன கேள்வி ’என்றார் பிள்ளை.
’என்ன
பண்ணப்போறீங்க?’
’சொல்றன்
இரண்டு சத்திரங்க இருக்கு. ஐயமாருங்க சாப்பிடறது ஒண்ணு அடுத்தாப்புல எல்லாருமா சேர்ந்து சாப்பிடறது இன்னொண்னு’!
’ஏன்
இரண்டு?’.
’ஒண்ணும்
ஒண்ணும் ரெண்டு’ சிரித்தார் பிள்ளை.
’நாம
எல்லாம் ஒண்ணா சாப்பிடறம்’ என்றான் நாகலிங்கம்.
’நீ
சொல்லுறது ரொம்பச் சரி’ என்றார் பிள்ளை.
அவரே
மீண்டும் தொடர்ந்தார்.
’எம்
பக்கத்துல குந்தி நீங்க ரெண்டு பேருமா சாப்பிடுறீங்க. நெத்தில திருநீறு இருக்கணும்’ கண்டிப்பாய்ச் சொன்னார்.
தன்
வாய் தேவார அடிகள் சிலதுகளை முணு முணுத்துக் கொண்டிருக்க நடந்து கொண்டிருந்தார் பிள்ளை.
திருக்கோவில்
சமீபமாய் வந்தது. நேராய் மூலவர் சந்நிதியை நோக்கி ஒருமுறை சேவித்தார் பிள்ளை. சிங்காரமும், நாகலிங்கமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சிங்காரம் இங்க நடைபெறும் ஏதும் புரியாமல் திரி திரி என்று விழித்துக்கொண்டிருந்தான்.
கோவிலுக்கு
வடக்குப் புறமாய் இருந்த பெரிய சத்திரத்துக்குள்ளாய் நுழைந்து கொண்டார். நாகலிங்கமும் சிங்காரமும் உடன் சென்ற வண்ணமிருந்தனர்.
சத்திரத்தில்
சிலர் முன்பாகவே சென்று அமர்ந்து கொண்டிருந்தனர். பேரூர் பிள்ளையோடு நாகலிங்கம் சிங்காரம் இருவரும் அமர்ந்து சாப்பிடத் தயார் ஆகினர்.
’ஒரு
ரகசியம்.’
’என்னங்க
பிள்ளை’.
’நான்
சாப்பிட்டு எழுந்திரிக்கிற வரைக்கும் நீங்களும் உக்காந்து தான் இருக்கணும்.’
’சரிங்க
இதுல என்ன’ என்றனர் இருவரும். சாப்பாடு பரிமாரப் பட்டது. பந்தியில் இந்த இருவரும் அமர்ந்து உணவு உண்பது என்பது ஒரு பெரிய விஷயம். அது எப்போதேனும்அதிசயமாய் நிகழும் விஷயமே.
’வானாகி
மண்ணாகி வளிாகி ஒளியாகி
ஊனாகி
உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகியான்
எனது என்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி
நின்றாயை என்கொல்லி வாழ்த்துவனே’
சொல்லி
முடித்தார் பிள்ளை.
மாணிக்கவாசகர் பாடலைப்
பாடிய பிள்ளை, நமப் பார்வதி பதயே என்றார் வேகமாய். அமர்ந்திருந்தவர்கள் அனைவரும்
"ஹர ஹர மகாதேவா" என்று பின்பாட்டு பாடினர். "தென்னாடுடைய சிவனே போற்றி" என்றார் பிள்ளை. கூட்டத்தினர் ஏகமாய், "எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என்று பதிலுரைத்தனர். ’சிவா திருச்சிற்றம்பலம்’ என்று முடித்துக் கொண்டார்.பிள்ளை.
’ஹர
ஹர’ என்றார் பிள்ளை. அனைவரும் ’ஹர ஹர’ திரும்பிக் கூறினர்.
இலையில்
பரிமாறப்பட்டிருந்த
அன்னத்தை இரண்டு கைகளாலும் தொழுதுவிட்டுச் சாப்பிட ஆரம்பித்தார். பிள்ளை. அனைவரும் சாப்பிட ஆரம்பித்தனர். நாகலிங்கமும் சிங்காரமும் சாப்பிட்டு மகிழ்ச்சி பாவித்தனர். பேரூர் பிள்ளையும் சத்திரத்தை விட்டு வெளிப்பட்டார். நாகலிங்கமம் சிங்காரமும் விடைபெற்றுப் புறப்படத் தீர்மானித்தனர். பேரூர்பிள்ளை இரண்டு ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொண்டு ’இந்தா இது புடிங்க’ என்று அந்த நாணயங்களைத் தலா ஒன்றாய் விடுவித்தார்..
இருவரும்
தலையை ஆட்டி முடித்தனர்.
’நாங்க
வர்ரம்’.
’சரி
ஆவுட்டும்’ என்றார் பிள்ளை.
இருவரும்
நடக்க ஆரம்பித்தனர்.
’செம
வெயிலு’ என்றான் சிங்காரம்
’எல்லாம்
சரியாப்பூடும்’, பதில் சொன்னான் நாகலிங்கம். இலுப்பைத் தோப்பு தாண்டி இருவரும் இறங்கிக் கொண்டிருந்தனர். வெள்ளாற்றுப் படுகை வந்தது.
சிறுவர்கள்
கபடி ஆடிக் கொண்டிருந்தனர்.
’ராகுகாலத்தில் பொறந்ததா
இருக்குமோ?’
’வாய
மூடிட்டுவா நாமளும் அப்படித்தான்; அதுவுளும் அப்படித்தான்’, என்றான் சிங்காரம் சிரித்துக்கொண்டே ஆற்றுநீர் ஒழுங்கு தாண்டி, ஒருவன் மேசை மீது நாடாவை வைத்து, கோணி தைக்கும் ஊசி ஒன்று வைத்து நின்று கொண்டு இருந்தான்.
’நாடாவைக்
கோணி ஊசியாலே குத்தி நிறுத்திப் புட்டின்னா வைச்ச காசு டவுளு வைச்ச காசு டவுளு வர ராஜாவா, அதுஷ்டத்தை சோதிச்சிப் பாரு வாவா ஓடியா ஓடியா’, என்று ஓங்கி ஓங்கிக் கத்தினான்..
நாகலிங்கம்
அதனையே பார்த்துக் கொண்டிருந்தான். சிங்காரமோ அதனைச் சட்டை செய்யாமல் இருந்தான். நாகலிங்கம் அந்த நாடாக்காரனை ஒரு தரம் ஏற இறங்கப் பார்த்தான்.
’நாடா
குத்தப்போறன்’.
’ஆவுற
கதையா.’
’இருக்கட்டும் பாக்குறது.’
’புள்ள
குடுத்த காசு வைக்கிறது?’
’அதான்’
சிரித்தான் நாகலிங்கம்.
பத்து
பேருக்கு மேலாய் நாடாவைக் குத்த முயன்று தோற்றுப் போய், கையைப்பிசைந்துகோவமாகி நின்றார்கள்.
’வெடத்தைக்
காலி பண்ணு. பட்டப்பவுலு காசு, வைக்கிறே. தோத்தா போச்சு; குத்துனா காசு, நவுறு நவுறு’, என்றான் நாடாக்காரன்.
பிள்ளை
கொடுத்த ஒரு ரூபாய் நாணயத்தை, நாடாக்காரனிடம் கொடுத்து ஊசியைக் கையில் எடுத்துக் கொண்டான் நாகலிங்கம்.
டபுக்கென்று
நாடாமேல் குத்துமுடித்தான் நாகலிங்கம். நாடாக்காரன் அதிர்ந்து போனான். நாடாவின் நடுப்பகுதியில் ஊசிகுத்திக்கொண்டு நின்றது. ’எடுகாசியை’ என்றான் நாகலிங்கம்.
இரண்டு
ரூபாய் நோட்டொன்றை நாகலிங்கத்திடம் கொடுத்தான் நாடாக்காரன்.
சிங்காரம்
அதிர்ந்து போனான் மீண்டும் அந்த இரண்டு ரூபாயை நாடாக்காரனிடம் கொடுத்து ஊசியைக் கையில் எடுத்துக் கொண்டான் நாகலிங்கம்.
’நீ
குத்தன்’.
’ஓங்காசில
வேணுமுன்னா பாக்குறேன்’.
’தேவுலாம்
கதெ’ என்றான் நாகலிங்கம்.சிங்காரம் அமைதி ஆனான். நாகலிங்கம் மீண்டும் நாடாவின் நடுமுதுகல் குத்தி நான்கு ரூபாய் பெற்றுக் கொண்டா சிங்காரத்திற்கு ஒரே ஆச்சரியமாய் இருந்தது.
நான்கு
ரூபாயை நாடாக்காரனிடம் நீட்டி ஊசியைக் கையில் எடுத்துக் கொண்டான் நாகலிங்கம்.
’வேணாம்’.
’ஏன்?
’பொழப்பு.’
’சொன்னது
என்னா?’
’குறிப்
பாத்து குத்துறதுக்குள்ள சட்டுன்னு நாடாவை இழுத்துப்புடுவேன். ஆனா கதெ ஆவுல. நீங்க உங்க கதெய பாருங்க’ என்று கையெடுத்துக் கும்பிட்டான் நாடாக்காரன்.
’முடியாது’
என்றான் நாகலிங்கம்.
’வேணாம்’.
’என்னா
வேணாம்’.
’எடத்தைக்
காலி பண்ணு’ என்றான் நாடாக்காரன்.
’நாம
போவுலாம்’ என்று யோசனை சொன்னான் சிங்காரம்.
நாகலிங்கம்
அங்கேயே நின்று கொண்டிருந்தான். நாகலிங்கத்தின் கன்னத்தில் ஓங்கி பளார் என்று அறைந்தான் நாடாக்காரன்.
வோடுடான்னா
மசுறு என்றான். சிங்காரம் பதறிப் போனான். நாடாக்காரனின் சிண்டை எட்டிப்பிடித்தான்
.நாகலிங்கம். பத்து பேருக்கு கூட்டம் கூடி விட்டிருந்தது. நாகலிங்கத்தையும் நாடாக்காரனையும் சிலர் பிரித்து விட்டனர். சிங்காரம் நாகலிங்கம் கையைப்பிடித்துத் தரதர என்று இழுத்து அந்த இடத்திலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்தான்.
’காந்தித்
தாத்தா கடைக்கு வந்துருக்காரு; நாடா குத்துராரு’. என்று புலட்பித் திரும்பவும் தன் பணி தொடங்கினான்.
’நாடா
குத்துனா டவுளு டவுளு! வா வா ஓடியா ஓடியா, நாடா குத்துனா டவுளு டவுளு,’
பாட்டாய்ப்
பாடிக் கொண்டிருந்தான் நாடாக்காரன்.
ஆற்றுமணலை
இரண்டு கைகளிலும்அள்ளி ’நாசமாய் போய்’ என்று
வீசினான், நாகலிங்கம். சிங்காரம் சமாதானம் செய்து கொண்டிரந்தான்.
’நாலுரூபா
இருக்குல்ல’.
’அது
இருக்கு. ஒண்ணு நாலு ஆச்சி’, அவ்வளவுதான்.
’அவன்
பொழப்பு இருக்குல்லே. நீம்யுரு அம்பேல் ஆக்கிப்புட்டா, என்ன ஆவும்?’
நாகலிங்கம்
சிரித்தான்.
அதுவும்
சரிதான் என்றான். இருவரும் நடந்தார்கள். ஆற்றுமணலில் கொஞ்சம் சூடு அதிகமாய்த் தெரிந்தது.
’ஆ,
தெரியுது எலந்த மரம்’ என்றான் சிங்காரம்.
’அந்த
வவுத்தெறிச்சலைக்
கௌப்பாதே’ எனச் சிரித்தான் நாகலிங்கம்.
மக்கள்
சாரைசாரையாய் எறும்புபோல் ஊர்ந்து கலைந்து கொண்டிருந்தனர் வெள்ளாற்று வட கரைமீது ஏறி இருவரும் திரும்பிப் பார்த்தனர். குடை ராட்டினம் சுழன்று கொண்டிருந்தது பார்க்க முடிந்தது. மக்கள் வெள்ளம் புள்ளி புள்ளியாய்த் தெரிந்தது.
மகத்
திருவிழா கண்டு ஊர்திரும்பும் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் காணப்பட்டார்கள். தலா ஏதேனும் ஒன்றும் கையல் வைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு கரும்போ ஒரு சீப்பு வாழைப்பழமோ, ஒரு சட்டிப் பானையோ ஒரு இரும்பு சல்லடையோ கையில் தூக்கிக்கொண்டு நடந்தனர். சிறுவர்கள் பலூன் குச்சியோ, புல்லாங்குழலோ, புகையிலைத்தாள் ஒட்டிய சிவப்புக் கண்ணாடியோ வைத்துக் கொண்டு ஊர்ந்து கொண்டிருந்தனர்.
தருமங்குடி
ஏரிக்கரை தொட்டு நாகலிங்கமும் சிங்காரமும் நடந்து கொண்டிருந்தார்கன். கதிரவன் அநேகமாய் மேலைத் திசைக்க வந்துவிட்டிருந்தான். கிழக்குத்திசையில் பவுர்ணமி நாள் என்பதால் முழு நிலவு அரசபுரசலாய்த் தெரிவதற்கு எத்தனித்தது. பறவைகள் பனைமரக்கூண்டுகளில் இரைச்சலை ஏற்படுத்தி மகிழ்ச்சிக் கும்மாளமிட்டன. இருவரும் கால்கள் வலிப்பதை உணர்ந்து நடந்தனர். நாகலிங்கம் தான் அணிந்திரந்த சட்டையைக் கழட்டித் துணிப்பையில் திணித்து எச்சரிக்கை ஆனான். ’பெறகு பாப்பம்’ என்றான் சிங்காரம் இருவரும் தத்தம் வீடுநோக்கி நடந்து கொண்டிருந்தனர்.
13
சித்திரை
மாதம் தருமங்குடியில் கருமை மாரித் திருவிழா ஆண்டு தோறும் நடைபெற்றது. பௌர்ணமி அன்று ஊரே அமர்க்களப்படும். காலையில் காவடிகள் ஊர்வலம் வரும் இரவு கருமை மாரியின் ஊர்வலப் புறப்பாடு.பிரதான வீதிகள் சுற்றி, மறுநாள் அதிகாலை புறப்பட்ட இடம் வந்து சேரும். தஞ்சாவூர் கரகாட்டக் காரர்களும், பொய்க்கால் குதிரை ஆட்க்காரர்களும் ஏக அமர்க்களம் குறவன் குறத்தி, பபூன் காரர்கள் தங்கள் கலைவரிசை காட்டுவார்கள்.
தருமங்குடி
தெற்கு வெளிக்கு போகும் பாதையில் ஒரு பெரிய ஆலமரம் உயர்ந்து படர்ந்திருந்தது. ஆல மரத்தை ஒட்டி நடுப்பிள்ளையின் நன்செய் நிலங்கள் இருந்தன. நிலங்களில் உழுவோருக்கும், நாற்று நடுவோருக்கும், அறுவடை செய்வோர்க்கும் சற்றே அமர்ந்து ஓய்வு எடுக்க அம்மரம் பேருதவி செய்தது.
வயல்களில்
நடவுக்கு வரும் தாய்மார்கள் தங்கள் சிறுசுகளை அலுமரத்தின் கீழ் உறங்க வைப்பதுண்டு, அம்மரத்துக் கிளைகள், பச்சைக்குழந்தைகள் தூளியில் தொங்கி ஆடுவதற்கு ஆதரவாயும் இருந்தன. இவை ஆண்டாண்டு காலமாய் தருமங்குடியில் தொடர் கதையாகி வந்த விஷயமே.
ஆலமரத்து
நிழலிலே தருமங்குடி விவசாயிகள் விவாதிக்க, கூடிக் கலைய ஒரு தகுஇடம் என்றாயிற்று. அதன் நிழலில் அயர்ந்து உறங்கி எதனையும் சட்டை செய்யாத ஓரிருவர் இருந்தும் போகின்றனர்.
கருமைமாரித்
திருவிழாவுக்கு
செலவு ஆயிரம் ஆயிரமாகும் மாரிக்கு என்று நிலங்களுண்டு. அவை நடுப்பிள்ளை வசமிருந்தன. கருமை மாரிக்கு பூசைசெய்ய என்று, தேய்ந்து போன பிராணனை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு பூசாரி இருந்தான் அவன்தான் மாரியின் கரகம் தூக்கி ஆடி வருவான். பச்சை வேப்பிலை அடர்ந்து செருகிய கலசத்தைத் தன் தலையில் அழகாய்ச் சுமந்து ஆடி ஆடி வருவான். தருமங்குடி மாரி மீது பத்து பாடல்களைப் பாடி முடித்து மட்டுமே கரகம் தூக்குவான். தன் வாழ்க்கைபற்றி எல்லாம் பூசாரி குப்பன் கவலைப்பட்டது இல்லை தனக்கு விதிக்கப் பட்டது அதுவே என்று நிறைவடைந்து விடுவான்.அவன் வளம் ஏதும் பெறாததைக்கண்டு கருமை மாரியும் அலட்டிக் கொண்டதாய்த் தெரியவில்லை. தன் குடிசை வீட்டையும் யாரோ பிள்ளைமார் ஒருவரின் சொந்த மண்ணில் கட்டிக் கொண்டு அவரின் விரட்டலுக்கு எப்போதும் ஆளானான்.அந்த நேரங்களில் பூசாரிக் குப்பன் அடிமைப் புழுவாய் நெளிவான்.
கருமை
மாரிக்கு விழா எடுக்க முன்பணம் தேவை என்பதைக் காரணமாக்கி ஆலமரத்தை வெட்டிவிட மனதிற்குள் திட்டமிட்டார் நடுப்பிள்ளை. ஆலமரத்தைத் தொழிலாளர்கள் பயன்படுத்தி இளைப்பாறுவதை, ஓய்வு எடுப்பதை, முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இதுவே. தகுந்த வழி என்று நிம்மதியானார். கருமை மாரிக்கு விழா எடுக்க, இந்த ஆலமரத்தை ஏலம் விடுவது என்று முடிவானால் தன்னுடைய சிறுமை அற்புதமாய் ஒளிந்து கொள்ளவும் இடம் கிடைக்கும் என மகிழ்ந்து போனார்.
நாட்டாண்மை
ராமலிங்கரும், நடுப்பிள்ளையும் இந்த ஆலமரத்தை ஏலம் விடுவதில் ஒற்றுமையாய் இருந்தனர்.
சின்னவன்,
கண்மணி வீடுநோக்கி நடந்து கொண்டிருந்தான். வெள்ளாளத்தெருவைக் கடந்து கொண்டிருந்தான். சில மாடுகள் வீதியில் படுத்துக்கிடந்தன. பிள்ளைமார்களின் வீட்டு வாயிலில் மாடுகள் குடிக்க ஏதுவாய் கருங்கல் தொட்டிகள் இருந்தன. சில கருங்கல் தொட்டிகள் குப்புறப் படுத்து நிம்மதி கொண்டன. சில உடைந்துபோய் ஈனமாய் வேஷம் காட்டின. சின்னவன் இன்னும் வீதியில் நடந்து கொண்டிருந்தான்.
தெரு
வழியே சினிமா போஸ்டர் ஒட்டுபவன் கூழ் வாளியைத் தொங்க விட்டுக்கொண்டு கிர்கிர் என்று தன் சைக்கிளை விட்டுக்கொண்டு போனான்.
’கொட்டாயில
என்ன படம்’.
’ஒட்டுறன்
பாத்துக்க’.
’சொன்னா
ஆவாதா’.
’ஒட்டுறதைப்
படிச்சா ஆவாதா’.
சின்னவன்
சிறிது நேரம் நின்றான். நோட்டீஸ்காரன் சைக்கிள் காரியரில் அமைதியாய் இருந்த நோட்டீஸ் ஒன்றினை கையில் எடுத்துக்கொண்டு, கூழு வாளியில் கையை முக்கிமுக்கி எடுத்து நடந்தான்.
’ஜகன்
மோகினி’ சொல்லிச் சிரித்தான் போஸ்டர்காரன்.
’விட்டலாச்சார்யார் படம்’.
’அஞ்சி
டான்சு இருக்கு ரகளையா இருக்கும்’.
நோட்டீஸ்
ஒட்டி முடித்து சைக்கிளை உருட்டி நடுப்பிள்ளை வீட்டு வாயிலில் நிறுத்தி வைத்துவிட்டு உள் நுழைந்தான். ஒருமுறை கையைத் துடைத்து சரியா எனப் பார்த்து நிம்மதி ஆனான்.
ஐயர்
துண்டைத் தோளில் குறுக்காய்ப் போட்டுக் கொண்டு வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தார்.
’எங்கடா
சின்னவனே’.
’சாமி
வாத்யாரைப் பாக்கப் போறன்’.
’வெஷயம்
கத்துகிற, நல்லது தெரிஞ்சிக்கோ.’
சின்னவன்
திகைத்து நின்றான்.
’ஏன்
அப்படி பாக்குறே’.
’என்னமோ
சொன்னீங்க’.
’நல்லது
தெரிஞ்சுக் கோப்பா’.
’நல்லதுன்னா
சொல்லுங்க சாமி’.
’நமக்கு
எது நல்லது, அதுதான்’.
’எல்லாருக்கும் நல்லதுன்னு
ஒண்ணு இருக்குமுல்லசாமி’.
ஐயர்
அமைதி ஆனார். தோளில் இருந்து துண்டை எடுத்து மெதுவாய் அடுத்த தோளில் போட்டுக் கொண்டார்.
’இல்லப்பா,
குருவி பஞ்சாயத்துக்குபோன கதையா ஆகிடப்படாது’.
’என்ன
சாமி அது?’
’அது
கொஞ்சம் பலான கதை வேற. நான் சொன்னா நல்லாவும் இருக்காது நாய் கொலைக்கணும் கழுதை சுமக்கணும், மாடு உழுணும், பலது பலது இருக்குல்ல. ரொம்ப தெரிஞ்சிகினா ஆபத்து’.
’யாருக்கு
சாமி?’
’தெரிஞ்சிகிறவாளுக்கம் ஆபத்து.’
’சாமி
அந்தக் குருவி கதெ’.
ஐயர்
சிரித்தார். மவுனமானார். குருவிக் கதை நான் சொல்லப்டாது.யாரையும் கேட்டுப்பாரு ஜோரா சொல்லுவா. ஐயர் நடந்து கொண்டிருந்தார். சின்னவன் விடைபெற்றுக்கொண்டு, கண்மணி ஆசிரியர் வீட்டுவாயிலில் முன்பாய் நின்று கொண்டான்.
’சார் ஓங்கி
அழைத்தான்’.
பள்ளிக்குக்
கிளம்புவதற்குத்
தயாராய் இருந்தார் கண்மணி.
’வா
சின்னவனே’.
’வரேன்
சார் வணக்கம்.’
’நான்
அவசரமாய் பள்ளிக் கூடம் போறன். சின்னவனே, ஐயரைப் பாத்தியா?’
’எங்கப்
போறாரு தெரியுமா?’
’தெரியாது
சார்.’
’அவரும்
சொல்லி இருக்க மாட்டாரு’.
’ஆமாம்
சார்.’
’இன்னைக்கு
ஆலமரம்ஏலம்’.
’ஏது
நம்ம தெற்கு வெளி.’
’ஆமாம்
அதேதான் அதை ஏலம் விட்டு கருமைமாரிக்கு செடல் விழா செலவுக்குன்னு முடிவு பண்ணி இருக்காங்க. நடுப்பிள்ளையும் ராமலிங்கரும் இதுல ரெம்ப ஒத்துமையா இருக்காங்க’.
’மரத்தை
வெட்டுறது’.
’அங்க
உழவுக்காரங்க, தாய்மாருங்க அந்த நெழல்ல குந்தி, பேசிப் பேசி காலம் போக்குறாங்களாம். அதுக்கு ஒரு முடிவு கட்டுறாரு. இதவுட முடியுமா? நீ ஒரு காரியம் செய் சின்னவனே,
நேரா கருமாரி கோயிலுக்குப் போய் ஏலத்துல கடைசி கேள்வியை உன்னுதா வை யாரு என்னா கேட்டாலும், கூடப் பத்து ரூபாய்ன்னு சொல்லு’.
’பணம்’.
’பணமா?
உன்னைக் கேள்வி கேட்க வுடுவாங்களான்னு தெரியல’.
சின்னவன்
ஒரு நிமிடம் கண்களை மூடித் திறந்தான்.
’அப்படி
உன்னை விட்டாலும், நீ எடுத்தா அவங்க ஒத்துப்பாங்களான்னு தெரியாது. ஒரு தகராறு பண்ணு. மரத்தை ஏலத்தை எடுக்கறேன்னு பேசு.’
’மரத்தை
வெட்டுறது’.
’மரம்
வெட்டுறது கூடாது, அது என்ன வெல ஆனாலும் ஆவுட்டும், அது வெட்டுறது இல்லை’
’ஏலம்
எடுத்தா வெட்டுணும்பானுவ.’
’ஏலத்துக்கு
பணம் கட்டணும். கருமைமாரி கோவில்ல அந்த செடல் நடக்கணும், அவ்வளவுதானே’.
’மரம்
வெட்டுணும்ங்கறதுதான்
நடுப்பிள்ளை வேல’.
’முதல்ல
நாம பொறுப்பாய் இருக்குறதைக் காட்டு வோம். பிறகு பிரச்சினையைப் பாக்கலாம்’.
தன்
சட்டைப்பையில்
இருந்த ஒரு கத்தை நூறுரூபாய் நோட்டினைச் சின்னவனிடம் கொடுத்தார் கண்மணி.
’இதுல
இரண்டாயிரம் இருக்கு. ஏலத்தைப்பாரு. யாரு குடுத்தாங்கன்னு தெரியவாணாம் உனக்கு ஏது பணம்னு கேப்பாங்க.’
சின்னவன்
ஆமாம் என்றான்.
’உன்
நெய்வேலி மாமன் இல்ல உன் உறவுக்காரங்க யாரோ கொடுத்தாங்கன்னு சொல்லிப்புடு. மரத்தை நாம காப்பாத்தணும். இந்த ஊரையே காப்பாத்துது அம்மரம். உயிர்காற்றுத்தருர
மரம், பச்சைக்கிளிகள் சிட்டுக்குருவிகள்னு கொஞ்சுகிற மரம், செறுசுகுகள் காதல் பேசுகிற நிழலுஇடம் முடியாதவங்க குந்திட்டு ஓய்வு எடுக்கிற இடம், ஒரு தாயைக் காப்பத்துவோம். இதுலதான் ஊன்னோட சாமர்த்தியம் இருக்கு. நீ வெடிச்சி வெளியில வரஒருநேரம் இது.’
’ஏன்
நீங்க வரலாமே?’
’எப்படி?
நான் அண்டையூர் அசலூர்னு பேசுவாங்க. அவங்களுக்கு தாளம் தட்டுனா அவங்க சகோதரன். அதெல்லாம்அவுமா?’.
சின்னவனுக்கு
சரி என்று பட்டது. ரூபாய் நோட்டுக்களைத் தன் சட்டைப்பையில் திணித்துக் கொண்டான். கருமைமாரி கோவில் நோக்கி நடக்க ஆரம்பித்தான். இது எல்லாம் எப்படி நடக்கும் என்று யோசித்தான். இது கண்மணி ஆசிரியர் வேலை மட்டுமா அல்லது சிவபெருமானும் கூட யோசனை சொல்லி இருக்க முடியுமா? என்றும் எண்ணிப் பார்த்தான். அது கேட்டுத் தெரிந்து கொள்ளவும் இப்போது நேரமில்லைதான்.
கருமை
மாரி கோவிலில் ஒரு பெஞ்சு போடப் பட்டிருந்தது. பெஞ்சின் மையமாய் நாட்டார் ராமலிங்கம் அமர்ந்திருந்தார். வாகடம் காசி தரையில் அமர்ந்து மண் மீது ஏதோ குச்சியால் கீறிக் கொண்டிருந்தான். ஊரில் உள்ள மூத்தவர்களில் அனேகமாய் அனைவரும் வந்திரந்தனர். திட்டுத்திட்டாய் அமர்ந்து அவர்கள் காணப்பட்டார்கள்.நாகலிங்கம சிங்காரமும் கருமை மாரி கோவில் முன்பாய் உள்ள வேப்பமர நிழலில் அயர்ந்து
அமர்ந்திருந்தனர். ஐயர் ஸ்டூல் ஒன்றில் ஓரமாய் உட்கார்ந்திருந்தார். அவரின் அருகே தரையில், தேவாரம் பேரூர் பிள்ளை சம்மணமிட்டு அமர்ந்திருந்தார்.
நாட்டார்தான்
ஏலம் ஆரம்பித்தார். தருமங்குடி ’கருமைமாரியின் கோவிலில் செடல் தொடக்க செலவுக்கே பணம் இல்லை. ஆனதுனாலே தெற்கு வெளி ஆலமரத்தை ஏலம் விடப்போறம். ஏலத்தை வெறகு கடை வெச்சிருக்கற வங்களோ, சூளை போடுறவங்களோ, இன்னும் யாரோ எடுக்கலாம். நல்ல செலவுக்கு வுடுறோம். கருமைமாரிக்கு குளுமை செறப்பு. மனசு வைக்கணும் மனசு வைக்கணும் நல்லவங்க பெரியவங்க.’
குப்பன்
பூசாரி கருமைமாரிக்கு பூசை முடிந்து திருநீறு தாம்பளத்தோடு வெளிப்பட்டான்.
ஆத்தாளை
எங்கள பிராம வல்லியை அண்டமெல்லாம்
பூத்ாளை
மாதுளம் பூநிறத்தாளைப் புவியடங்கக்
காத்தானை
அங்குச பாசங்குசமும் கரும்பும் அங்கை
சேர்த்தாளை
முக்கண்ணியைத்
தொழுவார்க்கொரு
தீங்கிலையே,
என்று
சொல்லி கற்பூரத் தட்டோடு தரையில் அமர்ந்து கொண்டான்.
நாட்டாண்மை
ராமலிங்கர் எழுந்து நின்று கொண்டார். ’தெக்கு வெளி ஆலமரம், கருமாரி செடலுக்கு ஏலம் ஏலம். ஏலம் ரூவா நூறு, ரூவா நூறு கேக்குறவங்க கேக்குலாம்.’
அனைவரும்
அமைதியாய் இருந்தனர். யாரும் ஏலம் கேட்கப் போவதாகவே தெரியவில்லை. அவர் அவர்கள் தங்கள் தங்கள் கதையைப் பேசிக் கொண்டிரந்தனர்.
நாட்டாண்மை
மீண்டும் சளசளன்னு ஓயாம பேசுறீங்க. வந்த காரியத்தைப் பாக்குணம்னு இல்லை. ’ரூவா நூறு ஆலமரம், தெக்கு வெளி ஆலமரம் ரூவா நூறு’.
சிங்காரமும்
நாகலிங்கமும் வேப்பமரத்திற்கு கீழே, தரையில் ஆடு புலி ஆட்டத்தை அரவம் வெளிப்படாமல் ஆடி நேரம் கழித்தனர்.
நடுப்பிள்ளை
எழுந்து நின்றார்.
’ரூபாய்
இருநூறு’ ஒருமுறை கூட்டத்தை நோட்டம் விட்டார். வாகடம் காசி, நடுப்பிள்ளையே நோக்கி ஒரு புன்முறுவல் செய்தான். நடுப்பிள்ளை அமர்ந்து கொண்டார்.
’நடுப்பிள்ளை
ரூபாய் இருநூறுக்கு
கேக்குறாரு. ஆலமரம்& தெற்குவெளி ஆலமரம் ஆத்தா செடலு செலவுக்குத்தான். ரூபாய் இருநூறு ஒரு தரம் ஒரு தரம்’ என்று கூறினார்.நாட்டாண்மை.
சின்னவன்
எழுந்து நின்றுகொண்டான். சுற்றிலும் ஒருமுறை பார்த்துக் கொண்டான். நாகலிங்கமும் சின்னவனும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர்.
’இந்தக்
கழுதை ஏன் நிக்குது’ லேசாய் முணுமுத்தான் நாகலிங்கம்.
’ஏன்
வந்தான்னு பாக்குறயா?’
’எதுக்கு
இந்த கழுதை இங்க, கொல்லம் பட்டறையில ஈக்கு என்ன வேல சோலின்றேன்’.
’நீம்புரு
எதுக்கு வந்தீரு?’
’பாக்குறம்.அதான் வாயத் தொறக்குறது ஆவுற கதையா தொறக்குலாமா’.
இப்படியே
பூடுமா? இல்ல எதானா என்று இழுத்தான் சிங்காரம்.
’என்னா
சொல்லுறே’
’எல்லாம்
மாறும் ஆனா காலம் ஆவுமுல்லே? சாதாரண வெஷயமா, பத்து மாசம் வவுத்துல தங்குனாதான் புள்ளே.’
சின்னவன்
சுதாரித்து நின்று கொண்டான்.
’ரூபாய்
இருநூற்றுப்பத்து’
அழுத்தம் திருத்தமாய் ஓங்கிச் சொன்னான்.
’இது
என்னட வெபரீதம்?’ எழுந்து கத்தினான் நாகலிங்கம் சின்னவனை நோக்கி.
’சுருக்கிகணும் கழுத,
வௌக்கமாறு தேவைன்னு மடியில வச்சிக மாட்டாங்க, செரைக்கறண்ணைக்கு கையில கத்தி வச்சிகினு தலைய குனின்னு ராசாவுக்கூடம் சொல்லுலாம். அது நெசங்கதை ஆவுறதா? சின்னவனே குந்து, எட்டப்போய் குந்து’ உணர்ச்சி மேலிட்டுக் கத்தினான் நாகலிங்கம்.
சின்னவன்
நாகலிங்கம் சொன்னது எதனையும் காதில் போட்டுக் கொள்ளாமல் இருந்தான். சிங்காரத்திற்கு உள்ளூர மகிழ்ச்சியாய்க்கூட இருந்தது. தரையைப் பார்த்த வண்ணமே அமர்ந்திருந்தான்.
நாட்டாண்மை
அமைதியாய் இருந்தார். ஐயரும் பேரூர்பிள்ளையும் என்ன நடக்கிறது என்பதை கூர்மையாய்ப் பார்த்து கொண்டிருந்தனர். கூட்டம் அமைதியாய் இருந்தது. சின்னவன் இப்போது அமர்ந்து கொண்டான். நாட்டாண்மை எழுந்த நின்று கொண்டார்.
’இப்ப
யாரு கேள்வி கேட்டது தெரிதா? சின்னவன், பரியாரி நாகலிங்கம் மொவன், யாருக்கும் தெரிஞ்ச வெஷயம் தொழிலாளிங்க, பொது வெஷயங்கள்ள கலந்துக்கறது, ஏலம் கேள்வி வைக்குறது, நாட்டமை ஆவுறது, பெறகு தலைவரு ஆவுறது இதெல்லாம், ஊரு காட்டுல என்னைக்கும் நடக்குற கதெ இல்ல. பாப்பான்ல இருந்தாலும் சரி, ஆசாரி, அம்புட்டன், கொசவன், தட்டான், வண்ணான், குருக்கரு ஐயரு பூசாலி யாரு தொழிலாளியா இருந்தாலும் ஏலம் கேள்வி வைச்சா செல்லாது அந்த கவுரதியெல்லாம் அவுவுளுக்கு கெடையாது தெரிதா’.
பெரிய
விளக்கமாய் கொடுத்து முடித்தார் நாட்டாண்மை.
ஒரு
மீசைக்காரர் எழுந்து நின்றுகொண்டார்.
’என்ன
சரி, என்னா சரியில்ல?’ என்று கேள்வி வைத்தார்.
நாட்டாண்மை
மீண்டும்...
’ஊரு
காரியம் பாக்குறதுக்கு தொழிலாளிய வச்சிருக்கு. ஆட்டுக்குட்டி மணையில் குந்துறது முடியுமா கத்திபுட்டி கமுக்கட்டோடு சாமின்னு காசு வாங்கிக் கையெடுத்து கும்புடறவங்கிட்ட போய், நம்ப ஒரு ரோசனை கேட்டு செய்யுறது கேபுலம் இல்ல?’
சிறு
விளக்கம் கொடுத்தார்.
’ஏலம்
விடுறம். காசு கனமா வந்தா, ஆத்தாளுக்கு ஆவுது இதுல என்னா செத்த அவுரு இவரு’ என்றார் மீசைக்காரர்.
’நாம
சோறு திங்குறமா, பீய துன்றமா, யாரு எது செய்யுணும்னு இருக்குல்ல?’
நடுப்பிள்ளை,
’யாரு இது குறுக்கால’ என்று மீசைக் காரரை நோக்கிக் கேட்டார்.
’ஏன்
சந்திரகாசுதான். என்னா செத்த சந்தேகம் இதுல?’
’மீசை
வைக்கிறது பெரிய மனுஷன்னு அர்த்தமில்ல. காரியம் செய்யுறதுல தெரியுணும், யாரு எவருன்னு?’ அமைதியாளார் நடுப்பிள்ளை.
நாட்டாண்மை
ஊரு மக்களைப் பார்த்து,
’சின்னவன்
கேள்விய எடுத்துகுறமா இல்லையா?’ என்று கேள்வி வைத்தார்.
நாகலிங்கம்
எழுந்து நின்று கூட்டத்தைப் பார்த்து வணங்கினான்.
’எல்லாருக்கும் கும்புடறன்
செரைச்சி பொழக்கைிற சாதிய மன்னிச்சிடுங்க. எம்மொவன் நெகா தெரியாம கேள்வி கேட்டுப்புட்டான். எளியவன என்ன உத்தேஷம் பண்ணி கழுதைய வுட்டுடுங்க. சாமிவுள நான் கும்புடறன்.’
நாகலிங்கம்
தன் கண்களில் நிரம்பிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அப்படியே நின்றான்.
நடுப்பிள்ளை
கலகல எனச் சிரித்தார் ’தேவுலாம்டா கதை’ என்றார்.
மீசை
சந்திரகாசு இன்னும் நின்று கொண்டிருந்தார்.
’நாகலிங்கத்துகு இதல
பேச்சு இல்ல. இது ஏலம். சின்னவன் கேக்குறான். அப்பன் புள்ள இந்தக் கதை இங்க வேணாம். சின்னவன் என்னா வாயில வெரல வைச்சா கடிப்பானா மாடடானா, மீசை மொளஞ்சி இருக்குதில்லே? கேக்குட்டும் அவன் கேள்வி நிக்குது மேலே கேக்குறவன் கேக்குலாம்.’
சந்திரகாசு
கர்ஜித்துப் பேசியதைக் கண்ணுற்ற நாகலிங்கம் இனி ஒன்றும் நடக்காது என்ற தோரணையில் அமர்ந்து கொண்டான். சிங்காரம் கூடுதல் பொறுமையாய் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
நாட்டாண்மை
எழுந்து,.
’சின்னவன்
கேள்வி ரூவாப் இருநூற்றுப் பத்து, மேல கேக்குறவங்க கேக்குலாம். சின்னவன் கேள்வி ரூவா இருநூற்றுப் பத்து’. ஓங்கிக் கூவினார்.
நடுப்பிள்ளை
ஒருமுறை சின்னவனை நோட்டம்விட்டு கூட்டத்தையும் பார்த்துக் கொண்டார்.
’ஆவுட்டும்
ஆவுட்டும்’ என்றார்.
மீசை
இந்தமுறை எழுந்து அமைதியாய்ப் பேசினார்;
’ஏலம்
கேக்குறவன் பூரா பணத்தையும் ஏலம் கலையறதுக்குள்ள எடுத்து வச்சிடணும். சின்னவனே ஏலம் கேக்குறது பெரிசில்ல, செய்யிணும் தெரிதா’ என்றார்.
’காசு
கையில இல்லாம நான் இங்கு வருலய’ என்றான் சின்னவன்.
நாகலிங்கமும்
சிங்காரமும் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்தனர். சின்னவனுக்கு இவ்வளவு பணமும் பேச்சும் எப்படி வந்தது. இது ஏதும் விபரீதமாய் முடியுமோ என்று நாகலிங்கம் அச்சம் கொண்டான் இனி இங்கிருப்பது ஆபத்தில் கொண்டுவிடுமோ என்று எண்ணிப் பார்த்தான். சிங்காரத்திடம்&
’கௌம்புலாமா’
என்றான்.
’ஏன்?’
’பிரச்சனை
கௌம்புறதுக் காட்டியும் பூடுலாம்.’
ஒண்ணும்
ஆவாது பாக்குலாம் சின்னவன் லேசு பட்டவன் இல்லே என்றான் சிங்காரம். நாட்டாண்மை மீண்டும் சின்னவன் கேள்வியைக் குறிப்பிட்டு ஒருதரம் ஒருதரம் என்றார். நடுப்பிள்ளை எழுந்து ரூபா ஐநூறு என்று சின்னவன் கேள்வியை முடமாக்கிச் சிரித்தார். சின்னவன் அமைதியாய்க் கையைக் கட்டிக்கொண்டு நின்றான்.
’ஆயிரம்
ரூபாய்’ என்று பலமாகச் சொன்னான் சின்னவன்.
நடுப்பிள்ளை
வெலவெலத்துப் போனார். இதில் சூழ்ச்சி இருப்பது ருசுப்பட்டதை உணர்ந்து கொண்டார். இவ்வளவு பணம் சின்னவனுக்கு எப்படிக் கிடைத்திருக்கும் என யோசிக்கத் தொடங்கினார்.
’பணத்தை
ஏலம் முடியறதுக்குள்ள எடுத்து வைக்குணும். இல்ல கோவிலு சூலத்துல வச்சி வறிஞ்சிப் புடுவம்’ என்றார் நாட்டாண்மை.
சின்னவன்
சிரித்தான்.
’தெரிஞ்சித்தான் கேக்குறேன்’
என்று பதில் சொன்னான்.
’தெற்குவெளி
ஆலமரம் ஆத்தா செடலுக்கு அமொகமா வருமானம். ரூபா ஆயிரம், ரூபா ஆயிரம்’ நாட்டாண்மை முழங்கினார்.
’வுடு
ஏலத்தை, கழுதை என்னா செய்யிது பாப்பம்’ என்று முணுமுணுத்தார் நடுப்பிள்ளை.
’நாக்கைச்
சுருக்கிப் பேசுணும். பெரிய மனுஷனுக்கு வார்த்தை சிறுசா வர்ருது ஆமாம்’ என்றான் சின்னவன்.
நாட்டாண்மை
எழுந்து,’ ரூபா ஆயிரம், ரூபா ஆயிரம் சின்னவன் கேள்வி ஒருதரம்’ என்றார். சுட்டம் அமைதியாய் இருந்தது.
ரெண்டுதரம்
என்றார். கூட்டம் இன்னும் அமைதியாய் இருந்தது.
’மூணுதரம்
ஆயிரம்’. என்றார் நாட்டாண்மை.
சுட்டம்
சின்னவனையே பார்த்த கொண்டு நின்றது. நாகலிங்கம் இடத்தைக் காலி செய்துகொண்டு தன் வீடு நோக்கி நடந்தான்.
சின்னவன்,
கண்மணி ஆசிரியர் தன்னிடத்தில் கொடுத்த பணத்தில் ரூபாய் ஆயிரத்தை மட்டுமே எண்ணி எண்ணி நாட்டாண்மையிடம் ஒப்படைத்தான்.
’பத்து
நாளுல மரம் காலி ஆவுணும் தெரிதா.’ என்றார் நடுப்பிள்ளை அவரே தொடர்ந்து ’சின்னவனே மரத்தை வெட்டிக்கணும்.பத்து நாளுல வெட்டிக்கணும், ஏலம் கேட்டது இல்லன்னா காலி ஆயிடும்’ என்று முடித்தார். ’மரத்தை ஏலம் எடுத்துப்புட்டவன் வெவரங்கெட்டவனா? மரத்தை வெட்டிக்குவான், இதுல என்னா யோசனை’ பேரூர்பிள்ளை முடித்தார்.
ஐயரும்
பேரூர் பிள்ளையும் கருமை மாரி கோவிலிலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்தனர்.
’ஆமாம்
இதுல ஏதோ சூது இருக்கணும், சின்னவனுக்கு யாரு யோசனை சொல்லறான்னு பாக்குணும்’ என்று முணு முணுத்த நடந்தார் பேரூர் பிள்ளை. ஐயரும் பேரூர் பிள்ளையும் நடந்து கொண்டிருந்தனர்.
’மொட்டை
மொட்டை மொட்டோய்’ ஓங்கி அழைத்தான் நாகலிங்கம். நாகலிங்கம் வீட்டு வாயிலில் எப்போதும் காவலிருக்கும் கிழ நாய் ஒன்று எழுந்து நின்றது. வாலை ஆட்டியது, முன்னும் பின்னும் நெளிந்து நெளிந்து பாசம் காட்டியது. என் எசமானே ஏன் கதறுகிறாய் என்றபடிக்கு அதன் உணர்வுகள் இருந்தன.
’நீ
எட்டப் போ கழுதை’ என்றான் நாயைப் பார்த்து.
’மொட்டை,
மொட்டை’.
மொட்டையை
அழைத்துக் கொண்டிருந்தான். மொட்டை தூரத்தில் வந்து கொண்டிருந்தான். தன்னுடைய இடுப்பில் ஒர செப்புக் குடத்தை வைத்திருந்தாள். சேலை முழுவதும் தண்ணரில் நனைந்து வழிந்து கொண்டிருந்தது. அவள் விறுவிறு என்று நடந்து வந்தாள். நாகலிங்கம் அவளையே பார்த்து கொண்டிருந்தான்.
’ஏன்
என்ன ஆசி, ஏன் கேவுற?’
குடத்தைப்
பைய கீழ் வைத்தாள் மொட்டை. நனைந்திருந்த முந்தாணையைப் பிழிந்து விசிறிச் செருகிக் கொண்டாள்.
’இப்ப
சொல்லு என்ன ஆச்சி?’.
’நான்
என்த்தைச் சொல்லுவேன் மொட்டை.’
’சின்னவனைப்
பெத்ததோமே.
சீரழிஞ்சிப்
போனோமே’.
ஒப்பாரி
வைத்து அழுதான்.
’பொட்டச்சி
தேவுலாம் போல. சீ கேவுற என்னா நடந்தது சொல்லு, பச்ச புள்ளயாட்டம்.’
மொட்டை
நாகலிங்கத்தின்
கண்ணகளைத் துடைத்தாள்.
சீ,
வோடேன் என்று இழுத்துச் சலித்துச் கொண்டாள்.
"கத்திப் புட்டி கையிருக்க
ஊருல
ஒரு குடியா
செரச்சிப்
பொழச்சோம்படி
மொட்டை!
செரச்சிப்
பொழச்சோம்டி
பெத்த
மொவுனாலே
பேரழிஞ்சிப்
போனாம்படி"
மீண்டும்
அழுத்தான் நாகலிங்கம்.
ஏன்
மொவன் என்ன செஞ்சான்?
’அந்த
அநியாயத்தை என்னா சொல்லுவேன்? தெற்குவெளி ஆலமரம் ஆயா செடலுக்கு ஏலம் உட்டாங்க ஊருல சின்னவன் நடுப் பிள்ளையோட போட்டி போட்டுகினு ரூவா ஆயிரத்துக் கு ஏலம் எடுத்து இருக்கான் ஏது காசி யாரு குடுத்த யோசனைன்னு தெரியலடி, மொட்டை மூதி பெத்த புள்ள கேவுலத்தை என்னன்னு சொல்வேண்டி’.
மூக்கில்
ஒழுகிய சளியைத் துடைத்துச் சுவரில் வீசி யெறிந்தான்.
’சீ,
இதுக்குப் போயி, இப்பஎன்ன நடந்திடுச்சி. சின்னவன் ஏலம் எடுத்தான். ஆலமரத்தை. இப்ப என்னங்கறே இருக்கட்டுமே’.
நாகலிங்கம்
மிரள மிரள விழித்தான்.
’உனக்கு
என்ன பித்துப் புடிச்சிப் போச்சா’.
ஓங்கி
மொட்டடையை அறைந்தான்.
’தடி
செரக்கி என்னா பேசற’ என்றான்.
’ஆமாம்,
வேணுமுன்னா வெல்லக்கட்டி. இல்லன்னா
தடிச்செருக்கிம்பே’ ஏளனமாய்ச்
சிரித்தாள் மொட்டை.
’நீ
இப்ப என்னா பேசுற?.’
மொட்டையின்
தலை மயிரை ஒருகையால் பிடித்தான். தலையை வளைத்து முதுகில் ஓங்கி ஓர் அடிஅடித்தான்.
அம்மா
என்று அலறினாள் மொட்டை.
"ஐய்யய்யோ போனேனே
அந்த
ராசியா ஆனேனே
கூவி
அழுவுறதும்
ஆருக்கும்
கேக்கலையா
ஐய்யய்யோ"
என்று
அலறினாள் மொட்டை.
’நல்ல கத்துடி மூதேவி,
சாவுடி சனியனே’ சொல்லிய நாகலிங்கம் சுவரில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.
கிழநாய்
சண்டையை எட்டிப் பார்த்து, காது கூர்மையாக்கியது. பின் கண்களை மூடிப்படுத்துக்கொண்டது.
சின்னவன்
வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தான். தன் வீட்டில் தன் தகப்பன் தாயோடு ஏதும் பிரச்சினை பண்ணியிருப்பானோ என்று யோசித்துக் கொண்டே வந்தான். ஊரில் தான் வாங்குகிற வசவுகளுக்குத் தன் மனைவியை வாடிகாலாய் தன் தந்தை ஆக்கிவருவதை அவன் அறிவான் தன். வீட்டு வாயில் படிகளில் அடி எடுத்து வைத்தான்.
’ஏலே
நில்லுடா நாயே ’என்றான் நாகலிங்கம்.
’ஏம்பா
இப்ப என்ன நடந்தது?’
’உனக்கு
என்ன கொழுப்பு அதப்பு இருந்தா, அந்த ஆலமரத்தை ஏலம் எடுப்ப? ஊருல கஞ்சித் தண்ணி குடிச்சி கொற காலம் குண்டி கழுவுற்து எப்படின்றே, ஏண்டா மூதி’
சின்னவன்
அமைதியாய் நின்னறான். மொடடை மூக்கைச் சிந்திக் கொண்டிருந்தாள். தன் தாயை நோக்கினான் அவள் வாழ்நாள் பூராவும் உழைத்து உழைத்து ஓடாய்ப்போன ஒர புனித இருப்பை எண்ணி எண்ணி வருந்தினான்.
’கால
கைய கழுவிச் சோறு சாப்புடப்பா. குறை கதைய பெறகு பேசிக்கலாம்’. என்றாள் மொட்டை.
’அடி
செருக்கி, புத்தி பீய துன்னுதா’ அடிக்க ஓங்கிக் கொண்டு வந்தான் நாகலிங்கம்.
’நாயுளுவுக்கு புத்திங்கறது
ரவனாச்சிம்’ என்று கத்தினான். கிழநாய் எழுந்து நாகலிங்கத்தைப் பார்த்து வாலை ஆட்டிக் கொண்டு நின்றது.
சின்னவன்
குறுக்கே குறுக்கே பாய்ந்து, தன் தாயை நாகலிங்கத்திடம் இருந்து காப்பாற்றினான்.
’அம்மாவ
எதுக்கு அடிக்குற?
வேற
யார அடிக்குலாம்?’
நாகலிங்கம்
ஓவென்று அழுதான். சட்டென்று அழுகையை எப்படியோ நிறுத்தி அடக்கினான்.
’நீ
அழுவாத. என் சாமி, என் சாமி அலறினாள் மொட்டை, தன் கணவனின் கால்களைப் பிடித்துக் கெஞ்சினாள்.’
’ஆலமரத்தை
ஏலம் எடுக்க யாரு காசி கொடுத்தா? யாரு, யாரு வாத்தியாருதானே.’
’புள்ள
சாப்பிடட்டுமே, பெறகு பார்க்குறது’ என்று புலம்பினாள் மொட்டை.
சின்னவன்
குறுக்கிட்டான், ’அது கேளு சொல்லுறேன். கண்மணி வாத்யாரு காசி தந்தாரு. ஏலம் எடுக்கச் சொன்னாரு அவரு யோசனைதான் சரியா இருக்கும், அதான் ஏலம் கேட்டேன்’.
’உன்னப்
பீயதிங்க சொல்றாரு திம்பியா?’
’அவரு
அப்படி சொல்ல மாட்டாரு’.
’அட
சொல்றாரு’.
’சொல்ல
மாட்டாரு.’
’சொன்னா?’
’அதப்
பாத்துக்கலாம்’.
’ஏண்டா,
உனக்கு சுதிமதி அத்துப் போச்சுதா. இந்தஊருல மயிர வழிச்சி வயிர கழுவறம். அக்களைத் தொட்டு அடிசவரஞ் செஞ்சி கஞ்சி குடிக்கறம். நான் சட்டைன்னு போட்டு நீ பாத்திருப்பியா?’
’நீ
பேசுறது தப்புப்பா.’
’என்னா
சொல்லுறே முண்டம்’.
’தப்பு
இல்லே, சும்மா சொன்னேன்’ என்றான் சின்னவன்.
மொட்டை
இருவரும் பேசிக்கொள்வதைப் பார்த்தாள்.
தெருவில்
படுத்திருந்த கிழ நாய் தன் கண்கள் இரண்டையும் ஒருமுறை திறந்து பின் மூடிக்கொண்டது.
’செத்த
மாட்டைத் தூக்குறது, பொணம் சுடறது, பாடை கட்டுறது எல்லாம் நிறுத்துனப்ப என்ன ஆச்சுது?’
’எலே
அதுக்கும் இதுக்கும் என்னடா?’
மொட்டை
இருவர் பேசிக்கொள்வதையும் ஒருமுறை மீண்டும் பார்த்தாள்.
’அதுக்கும்
இதுக்கும் இருக்கு. உன்னைத் தொடுறாங்களா, நீ தொட்டா குளிக்கிறாங்க உன் வூட்டு இறப்புக்கு உட்கார்ந்து சோறு தின்றாங்களா, இல்லை உன்வீட்டுஎழவுக்குத் குந்தி அழுவுறாங்களா, சட்டை போட்டுகிணு நீ தெருவில் நடந்ததுண்டா பெறகு என்னா? நீயும் சிங்காரமும் எப்படி சின்னப்படறீங்கன்னு தெரியுமில்லே?’
நாகலிங்கம்
ஒன்றும் பேசாமல் இருந்தான். இதற்கு இவ்வளவு அடாத்தியான பின்புலம் இருப்பதை இப்போது தான் முதன் முதலாய் அவன் உணர்ந்து பார்க்கிறான்.
’உன்
பேரு சொல்லி இந்தத் தெரு ரவ வாண்டுப் பசங்க கூப்பிடறாங்க உன் பேரு இந்த ஊர்ல யாரக்கும் உண்டா? நீயும் சிங்காரமும் உங்களுக்கு வைச்ச பெயரையே நீசமாக்கிப்பிட்டதாக நெனைக்கிறாங்களே’.
நாகலிங்கம்
ஒருமுறை கண்களை மூடித் திறந்தான்.’ நீ முதல்ல சாப்புடு சின்னவனே, சொச்சத்தைப் பிறகு வெச்சிக்கலாம்’ என்றாள் மொட்டை.
நாகலிங்கம்
அவள் சொல்வதும் சரி என்கிற பாணியில் தலை ஆட்டினான்.
’வெரப்பு
செறப்பு இப்ப எங்க போச்சு?’ என்றாள் நாகலிங்கத்திடம் மொட்டை. நாகலிங்கம் லேசாய் சிரித்துக் கொண்டான்.
கழுதை
வேலயப் பாரேன் என்றான் நாகலிங்கம். உள்ளுக்குள் ஏதோ அச்சத்தை உணர்ந்தான். அவனால் சின்னவனைப் புரிந்த கொள்ள முடியாமல் இருந்தது.
15
அன்று
கருமை மாரி கோவிலில் செடல் உற்சவம் நடந்து கொண்டிருந்தது. தருமங்குடி தெருக்கள் முழுவதும் சுத்தமாய் காணப்ட்டன. எல்லா வீடு வாசல்களும் கழுவி இருந்தன. சித்திரை மாதம் என்பதை வேப்பமரங்கள் தம் பூக்களால் காட்டிச் சிரித்தன. அவை கொத்து கொத்தாய்ப் பூக்களை காற்றில் அசைத்து அசைத்து மணம் பரப்பின.
தருமங்குடியில் இருக்கின்ற
அனைவர் வீட்டிலும் உறவினர்கள் வந்திறங்கி இருந்தனர். தருமங்குடியில் பிறந்து மணமாகிச் சென்ற பெண்கள், தம் குழந்தைகளோடு கணவன்மார்களோடு வந்திரந்தனர்.
காலையில்
காவடிகள் கருமைமாரி கோவிலிலிருந்து புறப்பட்டன. காவடியில் ஏக தினுசுகள் இருந்தன. ஏழைகளுக்கு என்று சில காவடிகள் ஓலை வேய்ந்துகொண்டு காட்சி அளித்தன.
அக்குருத்தோலைகள்
பளபளத்து தம் புத்தம் புதுமையை அறிவித்துக் கொண்டன. பணம் படைத்தவர்கள் மயில் காவடி எடுத்து, தம் வளப்பத்தைப் பறைசாற்றிக்கொண்டார்கள். வெளியூரிலிருந்து வரவழைக்கப் பட்ட நாதசுரக்காரர்கள், மேளக்காரர்கள் காவடி ஆட்டத்திற்கு இசைய மட்டுமே, தம் கருவிகளை இயக்கிக் கொண்டிருந்தனர். கருமைமாரி கோவிலின் பூசாரி வேப்பிலை கரகத்தினை தலையில் அமர்த்தி நடந்து வந்து கொண்டிருந்தான். அவனின் இடுப்பு வேட்டி மஞ்சளில் தோய்ந்திருந்தது. கழுத்திலும் கைகளிலும் அவன் மல்லிகைச் சரத்தைச் சுற்றிக்கொண்டிருந்தான். கைகளில் சின்னதாய் இரு வேப்பிலைக் கொத்தினை வைத்து அசைத்துக் கொண்டிருந்தான்.
சிங்காரமும்
நாகலிங்கமும் தலா ஒன்று எனத் தீவட்டியைப் பிடித்துக்கொண்டு நின்றார்கள். பகலில் தீவட்டிகள் அழுது அழுது எரிந்தன. வீடுகள் முன்பாய் காவடிகள் தீப ஆராதனைப் பெற்று நடந்து கொண்டிருந்தன. பல காவடித் தூக்கிகள் விடாமல் ஆடிய வண்ணமிருந்தனர். அனைவரின் பாதங்களிலும் மஞ்சள் நீர் ஊற்றி, தொட்டு வணங்கி தாய்மார்கள் சுற்றி சுற்றி வந்தனர்.
சிலருக்குச
சாமி கூடுதலாய் வந்ததால் அவர்களிடமிருந்து காவடிகள் விடுவிக்கப்பட்டு அவர்களுக்குத் திருநீறு அளிக்கப்பட்டு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. தாய்மார்கள் குடம் கடமாகத் தண்ணீர் கொண்ட வந்து தெருக்களில் தெளித்து, தெருவை அழகாக்கிப் புழுதி பறக்காமல் செய்திருந்தனர். சில வீடுகளின் வாயில்கள் கோலங்களைப் பெரிது பெரிதாய் தாங்கி இருந்தன.
வெயில்
கடுமையாய் இருந்து காவடித் தூக்குவோர் உடல் முழுவதும் மஞ்சள் நீர் நனைத்துவிட்டிருந்தது. சிறு சிறு அம்புகளை உடல் முழுவதும் குத்திக்கொண்டு நடந்தனர். காவடி தூக்குவோரின் நாக்குகள் சிறு அம்புகளால் குத்தப்பட்டு இருந்தது. இடை இடையே அவர்கள் தண்ணீர் பருக வாய்திறந்து காட்டினர்.
கரகம்
தூக்கிவரும் பூசாலிக்குத் துணையாக வெளியூரிலிருந்து வரவழைக்கப்பட்ட பம்பைக்காரர்கள் முழக்கிக் கொண்டிருந்தனர். பம்பை எழுப்பும் ஒலி கணீர் கணீர் என்று வந்து கொண்டிருந்தது. காவடி ஊர்வலம் ஊரைச் சுற்றிக் கொண்ருநதது. நாகலிங்கம் வீட்டு வாயிலிலும் தேங்காய்ப்பழம் வைத்து மொட்டை தயராய் இருந்தாள்.
காவடிகள்
ஊர்ந்த கொண்டிருந்தன. முதுகில் அம்பு வைத்து, சிறு சிறு தேர்களை சிலர் இழுத்துக் கொண்டிருந்தார்கள். சிலர் அம்பு தைத்து இரும்புக்காவடிகளை தூக்கிக்கொண்டு நடந்தார்கள். குழந்தைகளும் தாய்மார்களும் செடல் போட்டுக்கொண்டு, கையில்வேப்பிலை வைத்துக் கொண்டு நடந்தார்கள். மாடுகளும் அவைகளின் கன்றுகளும் அம்புகள் சில தைத்துவிடப்பட்டு ஊர்வலத்தில் பங்கு பெற்றன. காவடித் தூக்கிகளின் காவடிகளில் சிறு சிறு செம்புகள் பால் நிறைத்துக் கட்டப்பட்டிருந்தன. கருமைமாரி கோவிலில் ஒலி பெருக்கி, சதா அலறிக் கொண்டே ஏதோ ஒரு அறிவிப்பைச் செய்து கொண்டிருந்தது.
மாலைநேரம்,
கருமை மாரி அம்மனின் வெண்கலச் சிலை பளிச்சென்று தேய்த்து வைக்கப்பட்டிருந்தது. ஊர் வலத்திற்கென்று தயாராய்ச் சீர் செய்யப்பட்டு, சகடை கழுவிக் கொணரப்பட்டு கோவிலுக்கு முன்பாய் நின்று கொண்டிருந்தது. திருமுதுகுன்றத்து மாலைகள் கூடைகளில் தருவிக்கப்பட்டுத் தயாராய் இருந்தன. சணலும் துணியும் வாழை நாறும் சிறு கம்பிகளும் என்று அம்மன் சிலையை வரிந்து கட்டிக் கொண்டிருந்தனர். பழைய துணிகள் இடம் நிரப்ப அணிவிக்கப்பட்டு, அவைகளுக்கு மேலாய் புதிய புடவைகள் அணி செய்து கொண்டிருந்தன. அம்மனுக்கு என்று பிரத்யேகமாய் வைக்கப்பட்டிருந்த காசி மாலையும், கையமரும் வெள்ளிக்கிளியும் சேர்ந்து, கருமை மாரி கம்பீரமாய் காட்சி அளித்துக் கொண்டிருந்தாள், நாணல்புல்களைக் கச்சிதமாய் நறுக்கி, கையும் காலும் என வைத்துக்கட்டி,ய வெள்ளி உறுப்பு உருவங்கள் அணிசெய்து கொண்டிருந்தன.
பேரூர்
பிள்ளை கம்பீரமான குரலில் அபிராமி அந்தாதியிலிருந்து தனம் தரும் கல்லி தரும் ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும் என்று பாடிய வண்ணமிருந்தார். வாணவெடிகள் சீறிச் சீறி ஆகாயத்தில் சென்று டொப் டொப் என்று வெடித்துச் சிதறின. கருமைமாரி சகடையில் அழகுக் கோலத்தில் அமர்ந்திருந்தாள். நாதஸ்வரக்காரர்கள் மல்லாரி வாசித்து முடித்து இருந்தார்கள்.கலர் கலராய் காகிதக் கொடிகள் சுற்றிலும் செருகப்பட்ட பெரிய கரகத்தின் உச்சியில் ஒரு பசசைக்கிளி அழகு செய்ய, பூசாரி அதனைத் துக்கிக்கொண்டு நின்றார். கையி்வெள்ளிச் சிலம்புகளை வைத்துக்கொண்டு, அதனை ஆட்டி ஆட்டி ஒலி எழுப்பிக் குனிந்து குனிந்து எழுந்து கொண்டிருந்தார். பம்பைக்காரர் அடித்த அடித்து, கரகக்காரரின் அசைவுக்கு இதம் கொடுத்தார். பம்பைக்காரர், வளர்த்திருந்த தாடி அசைந்து அசைந்து அழகாய்த் தெரிந்தது.. பம்பைக்காரர் ஒரு பாடலொன்றையும் பாடினார்.
ஆயா
தருமங்குடி
வாழும்
பூரணி
குலம்
விளங்கு
கும்குமக்
காரணி
அன்னம்
தண்ணி
அள்ளித்தரும்
அன்னவாகனி அம்மா.
என்று
தன் இச்சைக்குப் பாடி, பம்பையை அடித்துக் கொண்டிரந்தார். சுற்றி நின்றவர்கள் அம்மா அன்னவாகனி என்று கோரஸ் தந்தனர்.
சகடை
இன்னும் நிலையை விட்டு நகராமல் அப்படியே இருந்தது. நடுப்பிள்ளையும் நாட்டாண்மையும் வந்து கொண்டிருந்தார்கள்.
நாகலிங்கமும்
சிங்காரமும் தலா ஒரு தீவட்டியைப் பிடித்துக் கொண்டு நின்றார்கள். தீவட்டிக்கு அடிக்கடி எண்ணெய் விட்டுக் கொண்டிருந்தார்கள். எண்ணெய் ஊற்றப்பட்டதால் தீவட்டி கொழுந்து விட்டெறிந்தது.
சின்னவனும்
கண்மணி ஆசிரியரும் சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்தனர். தஞ்சாவூர் கரகாட்டம், குறவன் குறத்தி, மயிலாட்டம் ஆடுபவர்கள் கால்களிலிருந்து சலங்கை ஒலி ஜல்ஜல் என்று வந்து கொண்டிருந்தது. குறவன் வேடம் கட்டியவன் ஆஜானுபாகுவாய் இருந்தான். குறத்தி வேடம் கட்டிய பெண் அழகாய் குள்ளமாய் இருந்தாள். அவள் ஏனோ அடிக்கடி பல் அத்தனையும் காட்டிச் சிரித்தாள்.
வாகடம்
காசி ஆட்டக்காரர்கள் பின்னாலேயே வந்து கொண்டிருந்தான். தன்னையில் ஆட்டக்காரர்களின் சில வித்தை சாமான்களைச் சுமந்து கொண்டு வந்தான்; தனக்கு ஆகப் பெரிய பொறுப்பு வழங்கப்பட்டு விட்டதாய் அவன் பூரித்து போனான்.
கருமை
மாரிக்கு தீப ஆராதனைகாட்டி நடுப்பிள்ளைக்கும் ராமலிங்கருக்கும் முதலில் கற்பூரத்தட்டு காண்பிக்கப் பட்டது. ஆட்டக்காரர்கள் ஆட்டத்தைத் துவக்கி ஆடினர். ஊரே திரண்டு ஆட்டக்காரார்கள். என்ன என்ன செய்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தனர்.
குறத்தி
வேடம் கட்டிய பெண்ணின் ஜாக்கெட்டில் ஜிகினாக்கள் ஏகத்துக்கு பளபளத்துக் கொண்டிருந்தன. அவளுடைய முகமும், ஓரு பவுடரால் தடவப்பட்டு சிவந்து ஜொலித்தது. அவள் வெற்றிலை பாக்குப் போட்டு தன் வாயைச் சிவக்க வைத்து, ஜபர்தஸ்து காட்டிக் கொண்டிருதாள். அவளின் இடுப்பு பாவாடையின் உயரம்
முழங்கால் வரை மட்டுமே
இருந்தது. அவளின் ஆட்டத்தின்போது அவளின் உள்ளாடை கண் சிமிட்டும் நேரத்துக்கு காட்சிப் பொருளாகி தன்னிருப்பை அறிவித்தது.
பேரூர்
பிள்ளை தொடர்ந்து தன் தேவாரப் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார். அவரது கண்கள் அடிக்கொருதரம் மூடித் திறந்தன.
16
கருமை
மாரியின் சகடை நகர்ந்து கொண்டிருந்தது. ஊரின் மக்களில் பாதிக்குமேல் சகடையின் முன்புறமும் பின்புறமும் ஊர்ந்து கொண்டிருந்தார்கள். நாகலிங்கமும் சிங்காரமும் தீவட்டிப் பராமரிப்பில் தொடர்ந்து கொண்டார்கள்.
ஐயர்
நிறைவாய் திருநீறு அணிந்து கருமை மாரி கோயில் முன்பாய் நின்று கொண்டிருந்தார். நடுப்பிள்ளை ஐயரை அழைத்தார்.
‘ஐயா,
ஐயா’.
‘தோ
வந்துட்டேன்’ ஐயர் நடுப்பிள்ளை அருகே போய் நெருங்கி நின்று கொண்டார். நாட்டாண்மை ஐயரின் வேகநடையைக் கவனித்தார்.
‘இந்த
ஓட்டம் எங்க இருந்து கத்துகிட்டிங்க’. என்றார் நாட்டாண்மை.
ஐயர்
சன்னமாய்ச் சிரித்தார். தன் வயிற்றை ஒரு முறை ஏனோ தொட்டுக் கொண்டார்.
’அந்த
வாத்யாரை ஒரு தரம் வரச் சொல்லுமே’. என்றார் பிள்ளை.
ஐயர்
வேகு வேகு என நடந்தார். வாத்யாரும் சின்னவனும் நின்று பேசிக் கொண்ட இடத்திற்குச் சென்று, பிள்ளை அழைப்பதை கண்மணி ஆசிரியரிடம் தெரிவித்தார்.
’வாத்யாரே,
புள்ள கூடப்புடறார்’
கண்மணி
ஐயரை நோக்கினார்.
’என்னயா?’
’ஆமா
உம்மைத்தான்’.
’எதுக்கு
ஐயா?’
ஏன்
எதுக்குன்னு எனக்குத் தெரியுமா?
சின்னவனுக்கு
மனதில் ஒரே கலக்கமாய் இருந்தது.
’தோ
வந்திடறேன்’ சொல்லியபடி பிள்ளையை நோக்கி நடந்து கொண்டிருந்தார் கண்மணி.
நாட்டாண்மை
வேறு பக்கமாய் திரும்பிக்கொண்டார்.
’வா,
வாத்யாறே வா’.
’ஏன்
கூப்பிட்டிங்களா?’
ஆமாம்,
வெத்திலை பாக்கு வச்சி கூப்புடணும்?
நல்லபடியா
பேசுவோம்.
’நீ
சின்ன புத்தி படைச்சவன். வெஷத்தை வெதச்சிட்டு நிக்கறே’.
கண்மணி
எதுவும் பேசாமல் இருந்தார்.
’ஆலமரத்தகு
ரூவா அள்ளி்தந்தாரு துரை.’
’தப்பு
இல்லயே. கருமைமாரி செலவுக்குத தானே அது’.
’ஒன்றும்
தெரியாத பாப்பா, போட்டுக்கிட்டாளாம் தாப்பா.’
கண்மணி
எதுவும் பேசமால் இருந்தார். மீண்டும் தொடர்ந்து கொண்டார் பிள்ளை.
’அது
கெடக்கட்டும். ஊரை பீ ஆக்காதே, தெரிதா? கழுதை கழுதைதான்; குதிரை குதிரைதான், வாலைச் சுருட்டிட்கினு இருக்கறதா இருந்தா இரு, இல்ல உன் ஊரப் பாக்கப் போவுலாம்’.
’நான்
என்ன தப்பு செஞ்சுட்டேன்?’
’என்ன
தப்பு செஞ்சுட்டனா? தேவுலாம்டா கதை, அவுனுவ அண்ணிக்கு
மோளத்தை கிழிச்சி போட்டது முதற்கொண்டு சின்னவனைத் தயார் பண்ணி ஆலமரத்தை அசமடக்குனதுன்னு பலதுக்கும் நீ தானே புறத்தாலே காரியம் பாக்குற’.
நாட்டாண்மை
திரும்பினார்.
’ஊருல
எலக்சன் வருது. அதுலயும் பலான ஆளுக்கு ஏதும் செய்யுறதா வேற கேழ்விப்படறம்.’
முகத்தை
இருக்கிக் கொண்டார். நாட்டாண்மை. கருமைமாரி ஊர்வலம் தொடர்ந்து கொண்டிருந்தது.
’நீளும்
போல கதை. தண்ணிக்குள்ள குசுவுட்டா தெரியாதுண்ணு நெனப்பா, இன்னிக்கு மாப்பு, நாளைக்கு தோப்பு போய் வா வாத்யாரே’, முடித்துக் கொண்டார் பிள்ளை. சின்னவன் இங்கு நடப்தையே கவனித்துகொண்டு நின்றான்.
நடுப்பிள்ளையும் ராமலிங்கரும்
வெள்ளாளத் தெரு பக்கமாய் நடந்து கொண்டிருந்தனர். கண்மணி அமைதியாய் சின்னவன் நிற்குமிடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அவன் கண்மணியின் வரவுக்காய் நின்று கொண்டிருந்தான்.
’எல்லாம்
கேட்டுகிட்டுத்தான்
இருந்தேன்’ என்றான் சின்னவன்.
’இதுக
எல்லாம் சேர்த்துத்தான் வாழ்க்கைங்கறது,’ என்றார் கண்மணி.
17
மீசை
சந்திரகாசு தெருவில் நொண்டி நொண்டி நடந்து நாகலிங்கம் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.அவனக்கு காலில் ஏதோ அருவிக் கொண்டிருக்க வேண்டும். அடிக்கொரு தரம் கண்களை மூடிக்கொண்டான். நாகலிங்கம் வீடு சமீபித்தது. மீசை நாகலிங்கம் வீட்டு வாயிலில் நின்று கொண்டான்.
’நாகலிங்கம்
இருக்காப்பலயா?’
’இல்லிங்கோ’
என்றாள் மொட்டை, உள்ளிருந்து எழுந்து வாயிள்படி அருகே நின்று கொண்டாள்.
’சின்னவன்
இருக்கானா?’
’இல்லிங்கோ’.
’எங்க
ரெண்டு பேருமா?’
’எடத்தெருவுல
ஒரு எழவுன்னு சேதி.’
’ஓகோ,
சுதந்திரக் கோனாரு, ஆமாம் அவருதான். தவறி இருக்குணும், காயிலா கெடந்தாரு.’
’இருக்கும்’
என்றாள் மொட்டை.
’சுதந்திரக்கோனாரு மாட்டுத்
தரவு வேலபாத்தவரு ஊருல இருக்கிற ஆடு மாடுவுள புடிச்சிகிட்டு போயி பக்கத்து ஊரு சந்தைவுள்ள வித்துப்புட்டு வருவாரு. வரும் போது எதும் கையில புடிச்சிகிட்டுதான் வருவாரு’.
’ஆமாம்’
என்றாள் மொட்டை.
மீசை
அங்கேயே நின்று கொண்டிருந்தான். தன் கால் வலி பொறுக்கமுடியாமல் இருந்தது. தன் கண்களை அடிக்கடி மூடித்திறந்தான்.
தெருவில்
சைக்கிள்காரன்
ஒருவன் ’பழையசெருப்பு தகரம் பிளாஸ்டிக், பேப்பரு வாங்குறது’ என்று குரல் கொடுத்துச் சென்று கொண்டிருந்தான்.
’ஏன்
எதாவது வைச்சிருக்கறியா?’ என்றான் மீசை.
’கந்த
செரப்பு நாலு பொறக்கியாந்து வச்சிருக்கேன்’ என்றாள் மொட்டை.
சைக்கிள்காரன் நாகலிங்கம்
வீட்டையே நோக்கிக் கொண்டிருந்தான். அமைதியாய் நின்றான்.
’ஏது
இதுக?’
’வெள்ளாளத்
தெருவுல தூக்கி எறிஞ்சது, பொறுக்கியாந்து கெடக்குது வேற ஏது?’
என்னா
குடுக்கற சைக்கிள்காரனிடம் கேட்டாள் மொட்டை.
’சவாரிக்கட்டைதான்.
இப்ப என்ன புதுசு-’
’வேறவேற
மாத்திப்பிங்களே
நீங்க?’
’எனக்கு
கால்காணி புஞ்செய் சவாரிக்கட்டை கெடக்கு. அதெ எடுத்துகினு சுத்தி வரேன். ரவிக்கு சேந்த பழஞ்சாமன விருத்தாலத்து வஹாப் பாயிண்ட போட்ருவன். என் சவாரி கட்ட வித்தாப்புல இருக்கும், எனக்கும் பத்து காசு கெடைக்கும்’.
கந்தல்
சாக்குப் பையில் கிடந்த நான்கு ஐந்து அறுந்த பிளாஸ்டிக் செருப்புக்களை எடுத்து அவனிடம் நீட்டிக் கொண்டிருந்தாள் மொட்டை.
சைக்கிள்காரன் ஒரு
குச்சிக் கிழங்கை எடுத்து மீசைக் காரனிடம் கொடுத்து.
’தின்னுப்
பாரு’ என்றான்.
’ஆமாம்
தின்னது இல்லே கிண்டலா’.
’கெடக்கு
மாவாட்டம்’. மீசை வாயிலில் சிறுதண்டைப் போட்டுக் கொண்டு சிரித்தான்.
சைக்கிள்காரனின் தராசு
சகிக்க முடியாமல் வளைந்து நெளிந்து சுருங்கி கன்னா பின்னா என்று தேய்ந்துக் கிடந்தது.
’
தராசு எங்க புடிச்சிங்க?’
’பாய்
கொடுத்ததுதான்’
’சரியா
நிறுக்குமா?’
’ஆமாம்
பவுனு விக்குறம், வாங்குறம்.போங்களேன்’
’எது
வித்தாதான் என்னா’’ என்றாள் மொட்டை, மொட்டை தராசில் குச்சிக் கிழங்குகளை அடுக்கிக் கொண்டிருந்தாள்.
சைக்கிள்காரன் ’பழைய
செருப்பு, வாளி, தகரம், பிளாஸ்டிக் சாமானுகளுக்குக் கெழங்கு’ என்று ஓங்கிக் கத்தினான்.
ஒரு
சிறுவன் சைக்கிளில்
இருந்த குச்சிக் கிழங்கு சாக்கைத் தொட்டுப் பார்த்துக் கொண்டே நடந்தான்.
’ஏய்
எட்ட நவுறு.’
சிறுவன்
நகராமல் நின்றான்.
’நீ
நவுற மாட்ட.’
சைக்கிள்காரன் சைக்கிளில்
ஏறிப் பெடலை அமுத்தினான்.
சைக்கிளில்
செயின் கழன்று இருந்ததால் ’படக்கு’ என்று ஒலியோடு
சைக்கிள் நிலை குலைந்தது.. கன்னா
பின்னா என்றபடி கால்களை முக்கோணத்தில்
நுழைத்துக் கொண்டு. சைக்கிள் காரன் திணறினான்.
சிறுவன்
சைக்கிள்காரனைத்
தாங்கிப் பிடித்து உதவி செய்து, பெருமைப்பட்டுக் கொண்டான். பல் அத்தனையும் காட்டி நின்றான். சைக்கிள்
காரனுக்கு வெட்கமாய் இருந்தது. ஒரு குச்சிக் கிழங்கை ஒடித்துச் சிறுவனிடம் நீட்டினான்.
சிறுவன்
சிரித்துக் கொண்டான்.
’எனக்கு
வேணாம் நீயே வச்சிகு’.
’ஆலே,
அம்மாம் ரோசமா’.’
சிறுவன்
முறைத்துக் கொண்டு சைக்கிள்காரனுக்கு எதிர்புறமாய் சென்று கொண்டிருந்தான்.
’பொடுசுக்கு
என்ன ரோசம்’.
மீசை
நடந்த கதையெல்லாம் நோக்கிக் கொண்டிருந்தான். சிறுவனை எண்ணி மகிழ்ச்சி பாவித்தான்.
தெருவில்
நான்கைந்து பன்றிக்குடடிகள் உருமி உருமி மேய்ந்து கொண்டிருந்தன. அவை பார்ப்பதற்கும் அழகாய் இருந்தன. நாய்கள் சில சீறிக்கொண்டு அக்கும்பலில் புகுந்து வெளிப்பட்டன.
’நாயுவுளுக்கு பண்ணிய
பாத்தாலே ஆவுல’.
’நாயுளுக்கு
நாயுவுள பாத்தாலும் ஆவாதுதான். சோற போட்டா வாலை ஆட்டும், திருட்டுப்பய போட்டா கூடம் தான்’.
’விசுவாசம்
மட்டும்தான். நியாயம், நல்லது கெட்டது நாயுவுளுக்கு ஏது’
மொட்டை அழுத்திச் சொன்னாள்.
’அப்புறம்
எடத்தெருவுக்கப்
போனவங்க பொணம் அசமடக்கிப்பிட்டு வர நாழி ஆவும் ரெண்டு பேரும் ஒண்ணாத்தான் வருவாகளா?’ என்றான் மீசை.
’ஆமாம்’.
’சின்னவன்
இதுக்கு எல்லாம் போவுறான்ல?’
’அப்பனுக்கு
உடல் சுகம் இல்ல. உடன் நானே வர்ரேன்னு போயிட்டான்.’
பெருமை
வெளிப்பட சிரித்துக்கொண்டாள் மொட்டை.
’கால்ல
முள்ளு.அத எடுத்துட்டா தேவுலாம்’.
’ரொம்ப
வலியா?’
’ஆமாம்.
இல்லண்ணா இங்கு வருவேனா’?
’எடத்தெருவுக்குப் போனா
அவுளக பாக்குலாம்’.
’எழவு
வூட்டுல போயி, நாம கால காட்டிகிட்டு நின்னா நல்லா இருக்குமா’?
மாடத்தில்
கிடந்த சாம்பல் திட்டைச் சீண்டி, அதனுள்ளாய்க் கிடந்த சிறிய கத்தியை எடுத்துக் கொண்டாள் மொட்டை.
’அப்படியே
குந்து?’
’ஏன்?’
’குந்து
குந்து’.
மீசை
வலி பொறுக்காதவனாய் அமர்ந்திருந்தான். காலை நீட்டினான். மீசைக்கு ஆச்சரியமாய் இருந்தது.
’நீயே
எடுத்துடுவியா?’
’கால
காட்டு, செத்த ரவ நாழி’.
மீசை
வலிக்கும் இடத்தைத் தொட்டுக் காட்டினான். ஒரு நொடியில், மொட்டை முள் இருக்கும் இடத்தைச் சுற்றிலும் சிறுவட்டமாய் அரிந்தான். லேசாய் ரத்தம்
கசிந்தது. முள் அகற்றப்பட்டது.
’போய்
ரவயோண்டு எருக்கம் பால அடி. சோத்து உப்பை துணியில முடிஞ்சி, சாமி வௌக்கு எண்ணையில நனைச்சி சூடு வையி சரியாப்பூடும்’.
தெருவழியே
வாகடம் காசி சென்று கொண்டிருந்தான். நாகலிங்கம் வீட்டில் என்ன நடைபெறுகிறதை என்பதை நோட்டம் விட்டான். மீசையின் கால்களை, மொட்டை தொட்டுக் கொண்டிருப்பதற்கு தப்புத்தப்பாயக் கணக்குப் போட்டான்.
’நெருப்பு
இல்லாது புகையாது’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு வாகடம் நடந்தான். நாகலிங்கம் வீட்டைக் கடந்து அவன் வெள்ளாளத் தெரு பக்கமாய் நடந்து கொண்டிருந்தான்.
18
சுதந்திரக்கோனார் வீட்டு
வாயிலில் இன்னும் நின்று கொண்டிருந்தான் நாகலிங்கம். சின்னவன் பாடைகட்டிக் கொண்டு இருந்தான். பச்சைக் குறுத்தோலைகளை நறுக்கி அவைகளைத் தோரணமாய் தொடுத்துக் கொண்டிருந்தான். அவை வளைந்து தொங்கி காற்றில் ஆடிக் கொண்டிருந்தன. பிணத்தின் தலைமாட்டுக்கு வைக்கோலால் ஒரு தலையணை தயாரித்து வைத்தான். வளைந்த கூடுப்பகுதியில் உள்பக்ககமாய் துணியை இழுத்துக்கட்டி முடிபோட்டான் சின்னவன். சின்ன சின்ன ஈர்க்குச்சிகளில் காகிதக் கொடிகளை கலர் கலராய்ச் சொறுகியும் ஒட்டியும் அவைகளை வாழைப்பட்டையில் நெடுக குத்தி, அந்தி வரிசைகளைப் பட்டையின் மேல்புறமாய் அழகுற ஒழுங்கு படுத்தினான்.
நாட்டாண்மை
பாடை கட்டப்படுதலையே கவனித்துக் கொண்டிருந்தார். ’தூக்குற வாட்டத்துல இருக்கிற மூங்கில்ல கணுவுள கழச்சிட்டயா?’ என்றார் நாட்டண்மை.
’எல்லாம்
கச்சிதமா செஞ்சிருக்கன்’ என்றான் சிங்காரம்.
சுதந்திரக்
கோனாரின் மகன்கள் இருவருக்கும் மொட்டை அடித்தான் நாகலிங்கம். கோடித்துணியை சிங்காரம் சவத்திற்கு என்றும், பூணலுக்கு என்றும், நெய்ப்பந்தத்திற்கு என்றும் கிழித்துப் பங்கீடு செய்து கொண்டிருந்தான்.
சுதந்திரக்
கோனார் வீட்டு வாயிலில் தட்டைப் பந்தல் போடப்பட்டு இருந்தது. இங்கொண்றும் அங்ககொன்றுமாய் பெஞ்சுகள் இருந்தன. வீட்டினுள்ளாய் பெண்கள் புலம்பி புலம்பி அழுதனர். அந்தக் கூட்டத்தின் நடுவே சுதந்திரக் கோனாரின் மனைவி உட்கார்ந்து பேதலித்துப் போய் இருந்தாள். அச்சமிகுதியில் அந்த பேதலிப்பு ஜனித்திருக்க வேண்டும்.
’’ராசாவே
ராசாவே திண்ணை மேல நீ குந்த,
ராசாதி
ராசரெல்லாம் தரை விழுந்து நெடுமரமாய்
சாமீன்னு
கும்புடற
&சந்தோச காட்சி எல்லாம்
இனி
எங்கேந்து காம்பேனோ’.
நீட்டமாய்ப்
பாடினாள், சுதந்திரக் கோனாரின் மனைவி. அடிக்கொருதரம் மூக்கைச் சிந்தினாள். இவை அத்தனையும் கேட்டுக்கொண்டு சுதந்திரக் கோனாரின் சவம் சிரித்துக்கொண்டிருப்பதாய்த் தோன்றியது, சவத்தின் தலைமாட்டில் காமாட்சி விளக்கொன்று எரிந்து கொண்டிருந்தது.
இருவர்,
இன்னும்கூட இரு பெண்டிர் தண்ணீர் எடுக்கக் குடங்களைக்கொண்டு சென்றனர்.
’ஆம்புள
ராசா ஆவுறது காலு கட்டைவெரலை கட்டின பின்னாலேதான்’ என்றான் சிங்காரம்.
’அரவம்
இல்லாமப் பேசு’ பதில் கொடுத்தான் நாகலிங்கம்.
வாய்க்கரிசிக் கூடைகள்
ஏகத்துக்கு வந்திருந்தன. அண்டையூரிலிருந்து அழைத்து வரப்பட்ட குறவன் குறத்தி டான்ஸ்காரர்கள், நையாண்டி மேளத்துடன் நடனமாடி அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தார்கள். வாய்க்கரிசிக் கூடைகளைத் தூக்கி வந்தவர்கள் பெருமிதமாய் நடந்து வந்தார்கள். தண்ணீர் குடங்கள்கொண்டு வரப்பட்டு, சுதந்திரக் கோனார் சடலத்தின் மீது ஊற்றப்பட்டுக் கொண்டிருந்தது.
’கால்மாட்டிலிருந்து ஊத்துணும்’
என்றார் நாட்டாண்மை.
’சொச்சம்
இல்லாம ஊத்தியாச்சா’ என்று கண்டிப்புடன் ஒரு கேள்வி வைத்தார்.
பளிச்சென்று
ஒரு நாமத்தை நெற்றியில் தாங்கிக் கொண்டிருந்தது சவம்.
சின்னவனும்
சிங்காரமும் பாடையை எடுத்துக்கொண்டு வீட்டு வாயில் முன்பாய் வைத்து நின்றனர். பெண்கள் ஓங்கி அடித்துக்கொண்டு அலறி அலறி அழுதனர். உறவின் முறைகள் தெருவின் முனையிலிருந்து அழுது புலம்பிக்கொண்டு, ஓட்டமும் நடையுமாய் வந்து கொண்டிருந்தன.
ஐயர்
தெருவின் ஓரமாய் நடந்து கொண்டிருந்தனர் அனேகமாய் காலை மாலையில் இப்படி உலா வருவார். இயற்கை அழைப்புக்களைத் தீர்த்துக்கொள்வதற்காவும் அவை இருக்கும்.
சிங்காரம்
கேட்டான்!
’ஐயரு
ஓரமாய் நெளிச்சிக்கிட்டுப் போறாரு. ஏன் சுதந்திரக் கோனாரு என்னா பண்ணிட்டாரு அப்படி?’
’அவுகளுக்கு
சாவு, பொணம்னா அச்சம், அதான்’ என்றான் நாகலிங்கம்.
’பொழப்பப்
பாரு, வாய்க்கரிசி கூடை வருமானம் வந்திருக்கா பாரு, நெய்ப்பந்தம் புடிக்கிறவங்க காசு தந்தாங்களா’
கணக்கில்
குறியாய் இருந்தான் சிங்காரம்.
ஐயர்,
இதனில் எதுவும் தன் காதில் விழாதமாதிரி நடந்து கொண்டிருந்தார்.
சுதந்திரக்
கோனாரின் உறவினர்கள் நால்வர். மயானத்தில் குழி வெட்டி முடிந்த கையோடு வந்து கொண்டிருந்தனர்.
நாட்டாண்மை
நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தார். சின்னவன், ’இங்க நடுப்புள்ள வருவாரா-?’ என்றான்.
’உனக்கென்னா
அது பத்தி’ என்றான் நா.லிங்கம்.
’நாலு
அடிக்கு ஆழம் ஆறு அடிக்கு நீளம் ஒண்ணறை அடிக்கு அகலம் குழி எடுத்துருக்கு’ என்றான் குழி எடுத்து வந்தவர்களில் குள்ளமாய் ஒருவன்.
’கச்சிதம்தான்’ என்றார்
நாட்டாண்மை.
’எவ்விடத்துல
குழி?’
’வன்னி மரத்துக்கு தெக்கே
இருபது கால் தப்படி வச்சி, சொச்சபாகத்துலதான் வெட்டி இருக்கு.’
சின்னவன்
சிங்காரத்தை ’நோக்கி இது என்ன விவரம்’ என்றான்.
’அது
ஒண்ணும் பெரிசு இல்ல. தருமங்குடி சொள்ளையில வடக்கே இருந்து ஆரம்ச்சி இருவது கால் தப்படி பாப்பானுவ, அப்புறம் வெள்ளாளனுவ, செட்டி மக்கள், அப்புறம் வன்னிய சாதி பிறகு கோனாரு கடைசியா விசுவகர்மா அதான் ஆசாரின்னு அது முடிஞ்சி பூடும்’ என்றான் சிங்காரம்.
சுதந்திரக்
கோனாரு சனிக்கிழமை காலமாகியதால் ஒரு சேவலை அறுத்துப் பாடையில் கட்டித் தொங்க விட்டிருந்தார்கள். மொட்டை அடித்தக்கொண்ட இருவரும் சடங்குகளை அனுசரித்து கொண்டிருந்தார்கள்.
மயானத்தில்
மண்குடம் மூன்றுமுறை சுற்றி வந்து மூன்று நீர்க்கோடுகளிட்டு சுக்கல் சுக்கலாய் உடைக்கப்பட்டது. ’சொர்க்கம் சேர கைலாயம் சேர’ என்று சுதந்திரக் கோனாரின் மகன்கள் இருவரும் சொல்லிக்கொண்டே சுற்றி வந்தனர்.
’சொர்க்கம்
சேர, வைகுண்டம் சேர’ என்று திருத்திச் சொன்னான் நாகலிங்கம்.
’வாண்சர்
தேவுலாம்’ என்று அதிர்ந்து சொன்னான் சிங்காரம் சின்னவன் வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்தான். கூட்டம் கலைந்து சென்று கொண்டிருந்தது. பால் தெளியும் உடன் முடிந்த காரணத்தால் நாகலிங்கத்திற்கும், சிங்காரத்திற்கும் மறுநாள் மயானம் வரவேண்டிய நிர்ப்பந்தம் இல்லாமல் போயிற்று.
’இது
தேவுலாம். பொணத்தைச் சுட்டா மறுநாளும் நாம வருணும்’.
’’இப்ப
பட்டணத்துல கரண்டுல சுடறாங்க பொணத்தை, அங்கேயும் கதெ அன்னன்னையோடு சரி’ என்றான். நாகலிங்கத்திற்குப் பதிலாய் சின்னவன்.
’காரண்டு
சட்டுனு நின்னுப்போனா?’
’கெடக்குற
வேலய விட்டுப்புட்டு, சென ஆட்டுக்கு மசுறு புடுங்கற’ என்றான் நாகலிங்கம். சிங்காரத்திற்கு முகம் ஜிவ்வென்று போயிற்று.
தேங்காய்கள்
சில ஒரு படிக்கு நெல் வெற்றிலைப் பாக்கு, பச்சரிசி ஓரளவு, வெள்ளைத்துணி கொஞ்சம் இவை இவை எடுத்துக்கொண்டு இருவரும் திரும்பிக்கொண்டிருந்தார்கள். சின்னவன் குளித்துவிட்டு வீடு நோக்கி முன்பாக நடந்து கொண்டிருந்தான். நாட்டாண்மை நாகலிங்கத்திற்கும், சிங்காரத்திற்கும், தலா ரூபாய் ஐம்பதைத் தரச் சொல்லி ஆணை பிறப்பித்தார். இருவரும் தனித்தனியாய் ரூபாய் ஐம்பது பெற்றுக் கொண்டனர்.
’இன்னிக்க
கதெ இப்படியா’ என்றான் நாகலிங்கம்.
’வேற
என்னாத்த கிழிச்சுடப் போறம்?’
’இதுவுளும்
ஆகவேண்டிய கதவதானே ’என்றான் சிங்காரத்திடம் அவன்.
எம்மாச்சான்
மாதிரி காத்தாடிக்கும் தாழ ரேடியால பாட்டு கேட்டுகினு செரைக்கிலாம். காசியும் வரும்தான் அதுக்கு கொடுப்பன வேண்டாமா?
’ஆஷ
இருக்கு தாசில் பண்ண, அமிசம் இருக்க கழுதை மேய்க்கண்ணேன்’ என்று கட கட என்று சிரித்தான் சிங்காரம். இருவரும் தம் தம் வருமானத்தைத் தலையில் முடிந்து வைத்துக் கொண்டு வீடு நோக்கி நடந்தனர்.
19
அதிகாலையிலேயே மொட்டை
வீட்டில் இல்லை. அவளை உடையார் வீட்டுப் பிரசவத்துக்கு அழைத்துப் போயிருக்கிறார்கள். தருமங்குடி குழந்தைகள் அத்தனை பேரையும் அவள்தான் முதன் முதலில் தூக்கிப் பார்த்தவன்; மொட்டையின் கைகளால் குளிப்பாட்டப்பட்ட குழுந்தைகளே அனேகமாய் அத்தனை பேரும் காலம் சற்று மாறி நகரத்திலிருந்து சில நர்ஸ்கள்.வந்து பார்த்துச் செல்கிறார்கள். நகரத்து் நர்சுகள் வருவதற்கு முன்பாய் மொட்டையையும் பார்த்து வந்துவிடுகிறார்கள். ஐந்தாம் மாதம் முதலே மொம்டையிடம் யோசனை கேட்டு மட்டுமே அக்கிராமத்த கர்ப்பிணிகள் எதனையும் செய்து வந்தனர். எதனையும் என்பது அந்த அதனையும் சேர்த்துத்தான்.
ஏன்
இன்னது சாப்பிடவேண்டும், இன்னது கூடாது என்று அவள்தான் யோசனை சொல்வாள்.
இலவு
நேரங்களில் அதிகம் கண்விழிக்கக் கூடாது என்று கட்டளை தருவாள் மொட்டை. தனியே செல்லக் கூடாது என்பாள். இரவு நேரங்களில் கூடுதல் அக்கறையுடன் இருக்கவேண்டும் என்பாள்; கிரகண காலங்களில் எவ்வளவு பொறுப்புடன் இருக்கவேண்டும் என்பதை நினைவு படுத்துவாள். கணவனுடன் சண்டை சச்சரவு இல்லாமல் இருக்கக் கேட்டுக்கொள்வாள். பிறந்த குழந்தை சோறு தின்கின்ற பழக்கத்தைத் தொட்டுக் கொள்ளும் வரை மொட்டைத் தன் பணி தொடர விரம்புவாள். வளர்ந்து விட்ட பிள்ளைகளுக்கு ஆறுவிரல் எப்படி, நெத்தி தாம்பாளமாய்
இருப்பது, சூத்து மச்சம், குஞ்சு மசசம் இத்யாதிகள் அறிந்திருப்பாள். அவைகளை எல்லாம் ’அதான்’ என மனதில் எண்ணிச் சில சமயம் சிரிப்பாள்.
தருமங்குடியில் இரண்டு
உடையார் குடும்பங்கள் இருந்தன. அவர்கள் மண் உடையார்கள் பானை, சட்டி, மடக்கு, கலயம், அகல், ஐயனார்குதிரை, சாலங்கரகம் இத்யாதிகள் செய்து சூளையில் சுட்டு விற்பளை செய்து வந்தனர்.
திருமங்கல
உடையார் வீட்டில்தான் இன்று பிரசவம். அவரின் மனைவிக்கு இது மூன்றாவது தடவை. அவளுக்கு இரட்டை பிள்ளை பிறக்கும் என்றபடி ஊரே அறிந்திருந்தது. மொட்டைதான் முதலில் அதனை அறிவிப்பு செய்தாள்.
விடிவதற்கு
முன்பாய் திருமங்கல உடையார் வீட்டுப் பிரசவத்தில்& மொட்டை தன் பணி செய்து கொண்டிருந்தாள். பிரசவ இல்லங்களில் மொட்டையும், சிங்காரமும் சந்தித்துப் பேசுவார்கள். உடையார் வீட்டில் இரண்டும் பெண் குழந்தைகளாய்ப் பிறந்திருந்தன. இரண்டு சிசுக்களும் அழகாய் இருந்தன.
’ரெண்டும்
பொட்டை’ உடையாரின் தாயார் புலம்பிக் கொண்டே வீட்டின் வெளியே வந்தாள்.
’ஆமாம்,
அதுக்கென்ன, இரண்டும் ராசாத்தி மாதிரி’ என்றாள் பதிலுக்கு மொட்டை.
உடையார்
வீட்டில் பூண்டு அடுப்பில் புகைந்து கடு மணம் பரப்பிக் கொண்டிருந்தது. உடையார் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து ஒருதரம் வெற்றிலை போட்டுக் கொண்டாள் மொட்டை. பிறகு தன் வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தாள். வழியில் படையாட்சி மக்கள் வீடுகள் வரிசையாய் இருந்தன. வழி முழுவதும் உற்று நோக்கிக் கொண்டே வந்தாள். சிலர் வீட்டு வாயிலில் நின்று கொண்டு மொட்டையைப் பார்த்து லேசாய் சிரித்துக் கொண்டனர்,
’நாம
எல்லாரு இப்பிடித்தான் பொறந்தம். இதுல என்னா சிரிக்கறதுக்கு’ என்று முணுமுணுத்துக் கொண்டே நடந்தாள் மொட்டை.
ஒரு
மாட்டுக் கொட்டகையின் வாயிலில் வாகடம் காசி நின்று கொண்டிருந்தான்.
’எங்கே
போய் வருது?’
’உடையார்
வூட்டுல பலான வெஷயம்.’
’இங்கயும்
அதே சேதிதான்’ சொல்லிச் சிரிதத்தான் விகடம்.
’உறுப்புக்கொடி போட்டுடுச்சா?’
’இன்னும்
போடுல. பொறைக்குத்தான் போடும்’.
’கொளம்பு
கிள்ளியாச்சா’?
’இன்னும்
இல்ல, செத்த வாயேன் ஆயா’.
’காரியம்
ஆவுணும்னா ஆயாதான்’. மொட்டை உள்ளாக வந்தாள். கன்றுக்குட்டி தன் தாயை நக்கிக் கொண்டு நின்றது. அப்படியே அலாக்காய்த் தூக்கி, படுக்க வைத்துக் குளம்புகளைக் கிள்ளிக் கிள்ளி எறிந்தாள் மொட்டை.. தாய்ப்பசு சீறிக்கொண்டு நின்றது. கன்றுக் குட்டியைத் தன் இரு கால்களுக்கிடையே இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் மொட்டை.
’’ஆம்
ஆச்சு’’ என்று எழுந்தாள். கன்றுக்குட்டி துள்ளிக் கொண்டு ஓடி, தன் தாயிடம் நின்று கொண்டது.
’நான்
போவுட்டா?’
’ஒருதரத்துக்கு வெற்றிலை
இடக்குமா?’ சிரித்தான் வாகடம்.
இது
தேவுலாம் தன் மடியிலிருந்த முடிச்சிலிருந்து ஒரு வெற்றிலையும் பாக்கும் எடுத்துத் தந்தாள்.
’காளகண்ணு’
சொல்லிக் கொண்டே வெற்றிலையைத் தன் வாயில் போட்டுக்கொண்டான் வாகடம்.
’அது
சரி’.
பதில்
சொல்லிய மொட்டை தன் வீடு நோக்கிப் பரபர என்று நடந்தாள்..
20
தருமங்குடியில் பஞ்சாயத்துத்
தேர்தல் முஸ்தீபுகள் தொடங்கி விட்டிருந்தன. ஊரின் சில சுவர்கள் சின்னங்கள் சிலதுகளைத் தாங்கி நின்றன. ஊர் மூன்று கூறாகப் பிரிந்து கிடந்ததை மூன்று சின்னங்கள் உணர்த்தின. தருமங்குடியின் பஞ்சாயத்துத் தலைவர் பதவி ஒரு ஷெட்யூல்டு இனத் தவருக்கு என அரசாங்கத்தால் உறுதி செய்யப்பட்டிருந்தது.
சிவபெருமான்
தேர்தலில் இறங்கியிருந்தான். அவனுக்கு வண்டிச் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. நடுபபிள்ளையின் கையாளாய் ஷெட்யூல்டு இன மக்களின் பகுதியிலிருந்து ஒருவரையும், நாட்டாண்மையின் ஆளாய் ஒரு நபரையும் முறையே லாந்தர் சின்னம், முகம் பார்க்கும் கண்ணாடிச் சின்னம் என வழங்கி தேர்தலில் நிறுத்தியிருந்தனர். நடுப்பிள்ளை, நாட்டாண்மை என ஊர் ஓட்டு பிரிந்து இரு கூறாய்க் கிடந்தது. ஷெட்யூல்டு இன மக்களின் ஓட்டுக்ளை மூன்று கூறுகளாய் பிரிக்கும் யுக்தி செயல்படத் தொடங்கியது
சிவபெருமான் தேர்தலில் நிற்பான் என்று நாட்டாண்மையும் ராமலிங்கரும் எதிர்பார்க்கவில்லை. இது எல்லாம் கண்மணி ஆசிரியரின் வேலை என நடுப்பிள்ளை சரியாகவே ஊகித்தார். தேர்தலுக்குள் கண்மணி ஆசிரியரை, தருமங்குடியை விட்டு மாற்றிலில் அனுப்பிவிட்டால் தேவலை எனத் திட்டம் தீட்டப் பட்டது.
மாவட்டத்
தலைநகரிலுள்ள கல்வித்துறையின்
மூத்த அதிகாரியைச் சந்தித்து, ஒரு மனு கொடுத்துக் கண்மணியை வேறு ஊருக்கு மாற்றி விடலாம் என்று யோசனையில் நடுப்பிள்ளை இறங்கினார்.
ஆலமரம்
இன்னும் வெட்டப்படாமல் இருந்தது. அது நடுப்பிள்ளையை இன்னும் உறுத்திக்கொண்டே இருந்தது. ஆலமரத்தை அத்தனை ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தமைக்கு, ஏதும் கூடுதலாய் சூது இருக்கம் என்பதுவே அவருக்குள்ளாய்த் துளைத்துக் கொண்டிருந்தது.
சின்னவனின்
ஆளுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நடுப்பிள்ளை கண்டு கொள்ளத் தவறவில்லை. கண்மணி ஆசிரியரை ஊரை விட்டு மாற்றலில் அனுப்பி விடுவது, வின்னவனின் செயல்பாடுகளைக் குறைத்து விடும் என நடுப்பிள்ளை கணக்குப்போட்டார்.
சின்னவன்
வீடு வீடாகச் சென்று ஓட்டுக் கேட்டான். சிவபெருமானுக்கு ஓட்டுச் சேக்ரிப்பது எனத் தீர்மானம் செய்துகொண்டான். நாட்டாண்மை இந்த விஷயங்களை யெல்லாம் ஊன்றி கவனித்து வந்தார். கண்மணியின் போக்கு பிடிபடாமல் இருந்தது.
நாட்டாண்மையின் ஆட்களும்,
தன்னுடைய ஆட்களும் தருமங்குடி தலைவர் தேர்தலில் காலைவாரி விட்டால் என்ன செய்வது என நடுப்பிள்ளை ஒரே கவலையாய் இருந்தார். இது நாள் வரையில் தருமங்குடியில் இவர்கள் இருவருக்கும் எதிராய் யாருமே செயல்பட்டது இல்லைதான். ஆங்கங்கே எதிர்ப்புக்ககள் இருந்திருக்கும். ஆனால் அவை உருப்பெற்று வெளிவராமல்தான் இருந்தன. ஒரு வேளை சிவபெருமான் தலைவராகி விட்டால் தன் செல்வாக்கு தருமங்குடியில் என்னவாகும் எனக் கலங்கிப் போனார் நடுப்பிள்ளை.
நாட்டாண்மையும் கண்மணி
ஆசிரியரை, தருமங்குடியை விட்டுக் கிளள்பபி விடுவதில் கூடுதல் கவனம் செலுத்தினார். மனு ஒன்றினை எழுதி நடுப்பிள்ளையையும் நாட்டாண்மை யையும் கையொப்பமிடச் செய்தனர். தருமங்குடியை கலவரப்பகுதியாய் ஊரைவிட்டு மாற்றலில் அனுப்பி விடுமாறு கோரிக்கை வைத்து, மாவட்டக்கல்வி அதிகாரியிடம் எடுத்துக் கொண்டு போவதாய் முடிவு. அந்த மனுவில் இன்னும் பத்து பேருக்கு மேலாகக் கையொப்பமிட்டிருந்தனர்.
நாட்டாண்மை
அதனை எடுத்துக் கொண்டு மாவட்ட அதிகாரி அலுவலகம் சென்று வரவேண்டும் எனத் தீர்மானமாகியது.
’செலவுக்கு,’
என்று லேசாய்ச் சொன்னார் நாட்டாண்மை.
’ஏன்
ஆலமரம் வித்தபணம் அப்படியே இருக்குல்ல?’ முள்ள முள்ளாலத்தான் எடுக்குணும், என்று பதில் சொன்னார் நடுப்பிள்ளை.
நாட்டாண்மை
பிரச்சினையை கையிலெடுத்துக் கொண்டு மாவட்டத் தலைநகர் நோக்கிப் பயணமானார். எப்படியும் கண்மணியை ஒரு வழியாய்த் தருமங்குடியை விட்டு வேறு ஏதேனும் ஒரு குக்கிராமத்துக்கு அனுப்பி விடுவது என்பதுவே உறுதியாயிற்று.
ஊர்மக்கள்
கண்மணி ஆசிரியரின் மாற்றல் பற்றியும் பேசிக்கொண்டார்கள். சிலர் அடிமனத்தில் மிகவும் பதமாய் வருத்தப்பட்டார்கள் அது வெளித் தெரியாமலும் பாதுகாத்துக் கொண்டார்கள். தருமங்குடியில் ஒரு புதிய திசையை தரிசிக்க வைத்த ஆசிரியர், ஊரை விட்டுச் சென்று விடுவது என்பது சிவபெருமானுக்கு கலக்கத்தையே உண்டு பண்ணியது.
கண்மணி
இந்த மாற்றல் விஷயத்துக்கு எல்லாம் அலட்டிக் கொண்ட மாதிரியாய்த் தெரியவில்லை. அரசு உத்யோகம் என்பது மாற்றத்தோடு பிணைக்கப்பட்ட ஒன்று என்பதனை, கண்மணி வெகு எளிமையாக எடுத்துக் கொண்டார். தருமங்குடியில் தங்கி இருக்க, இப்போதைக்கு மிக நீண்ட விடுப்பு மட்டுமே மிகச் சரி என்று முடிவுக்க வந்தார்.
இது
இந்தப்படிக்கு
புஸ்ஸென்று போய்விடும் என்று நாட்டாண்மையும், நடுப்பிள்ளையும் எண்ணிப் பார்க்க வில்லை. அவர்களுக்கு இது விஷயம் பெருத்த ஏமாற்றத்தையே அளித்தது.
கண்மணி
அனேகதடவை சிபெருமானுக்கு யோசனை சொல்வதாய் அவன் வீட்டுக்குசென்று வந்து கொண்டிருந்தார். தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவது எப்படிச் சாத்தியமாகும் என்பது பற்றிய யோசனையிலேயே சிவபெருமான் இருந்தான்.
நாட்டாண்மையின் ஆள்,
நடுப்பள்ளையின்
ஆள் இருவரும் இந்தத் தேர்தலில் நிறுத்தப்பட்டிருப்பது குறித்துக் கண்மணியும் சிவபெருமானும் விவாதித்தார்கள். தருமங்குடியின் தாழ்த்தப்பட்ட பகுதி மக்கள் ஓட்டு, ஒரு ஓட்டுச் சிதறாமல் சிவபெருமானின் வண்டிச் சின்னத்திற்கு வந்து விடவேண்டும் என்பதில் அக்கறையாய் இருந்தார்கள். நாட்டாண்மையும் நடுப்பிள்ளையும் தத்தம் ஆகளுக்குப் பணத்தை அள்ளி அள்ளி வீசினார்கள். சிவபெருமானும் நாட்டாண்மையும் ஒருவரை ஒருவர் பார்க்கும் போது லேசாய்ச் சிரித்துக் கொண்டார்கள். நடுப்பிள்ளைக்கு அந்தச் சிரிப்பும் வர மறுத்தது. தருமங்குடியின் ஊர் பகுதி வோட்டுக்கள் நாட்டாண்மைக்கும் நடுப்பிள்ளைக்கும் எனப் பிரிந்தது. இருவரையும் பிடிக்காத ஊர் மக்கள் இருக்கவே செய்தார்கள். அவர்கள் தங்கள் வோட்டுக்களை சிவபெருமானுக்கு அளித்துவிடுவது என்று முடிவு செய்தார்கள். கண்மணியும், சிவபெருமானும் ஒவ்வொரு வரையும் தனித்தனியே அணுகி வோட்டுச் சேகரித்துக் கொண்டே யிருந்தார்கள்.
21
ஐயர்
வீட்டுத் திண்ணையில் கண்மணி ஆசிரியர் ஒரு நாள் மாலை நேரத்தில் அமர்ந்திருந்தார். அப்போது ஐயரும் அவர் மனைவியும் உடன் இருந்தனர்.
’யாருக்கு
வோட்டு போடப் போறீங்க?’
’என்ன
வாத்யாரே யாருக்குப் போடுணுமோ அவங்களுக்குத்தான்’, என்றாள் கண்மணியிடம் ஐயரின் மனைவி.
’ஏன்
வண்டிச் சின்னத்திலே சிவபெருமானுக்குபோடுறது?’
’நாங்க
ஊர்ல குடுத்தனம் பண்றதா இல்லையா, உங்களை மாதிரி உத்யோகத்தை மாறுதல் பண்ணிக்க முடியுமா வெடுக்கென்று கேட்டார் ஐயர்’.
’நல்ல
மனுஷக்குப் போடுங்க, அதான்’.
’தெரியும்
தெரியாமலா?’ என்றார் ஐயர்.
’நாம
உள்ளே போயிடலாம். இது எதானா விபரீதத்திலே கொண்டுபோய் விட்டுடும்’ என்று சொன்ன ஐயரின் மனைவி ஐயரையும் இழுத்துக்கொண்டு தன் வீட்டுக்குள் சென்று மறைந்தாள்.
’சிவபெருமான்
நல்லவன்தான். யாரு இல்லேன்னா?’ என்று சொல்லிய ஐயரின் மனைவி கதவை லேசாய்ச் சாத்திக் கொண்டாள்.
22
சின்னவனை,
தருமங்குடியை விட்டு விரட்டி விட்டால் தேவலை என்று முடிவு எடுத்தார் நடுப்பிள்ளை. தேர்தல் முடியும் வரை அவன் தருமங்குடியைக் காலிசெய்தால் தனக்கு ஒத்தாசையாய் இருக்கம் என்பதில் திண்ணமாயிருந்தார். அப்போது வாகடம் காசி அந்தத் தெருவழியே வந்து கொண்டிருந்தான். வாகடத்தை வீட்டின் உள்ளாக அழைத்தார் நடுப்பிள்ளை.
’வாகடம்
இப்படி வந்துட்டுப் போறது’.
வாகடம்
சிரித்தான். பிள்ளை தன்னையே அழைப்பது மிகப் பெரிய கௌரவமாக எண்ணினான் வாகடம். நெகிழ்ந்து போனான்.
’உள்ள
ஆச்சி இருக்காங்களா? எட்டிப் பார்த்துக் கொண்டான். ’அவ இருந்தா என்ன, இல்லாட்டி என்ன?’ என்றார் பிள்ளை. வாகடம் அப்படியே நின்று,
’என்னங்க
புள்ள’ என்று லேசாய் இழுத்தான்.
’சின்னவன் பிரச்சனை பெரிய
பிரச்சனையா இருக்கு. நீ அவனைப்பாத்தியா? அந்த வாத்திப்பயலோட சேர்ந்து கிட்டு பெரிய இமுஷை. செரைக்கிற பயலுக்கு எம்மாங்கிருதுங்கற?’
வாகடம்
மிகவும் அமைதியாய் நின்றுகொண்டிருந்தான்.
’உள்ள
அரவம் கேக்குது’.
’உன்னை
நான் கேக்குறது என்னா, நீ பேசுறது என்னா?’
’அது
இல்ல?’
’எது
இல்ல?’
’ஆச்சி
இருக்காங்களா?’
’ஏன்?’
சும்மா
கேப்பங்களா பிள்ளை.
’செமந்து
கிட்டுத்தான் கேளு. கழுதை, சின்னவனைப் பத்தி கேட்டா ஆச்சி இருக்காங்களா, பூச்சி இருக்காங்களான்னுகிட்டு’.
’அது
அதுல ஒரு இது இருக்கு’.
’எதுலயும்
ஒரு இது இருக்கட்டும். நீ சின்னவனைப் பத்தி யோசனை சொல்லு’.
’அண்ணைக்கு
ஒரு நாளு, அந்த மீசை சந்திரகாசு கால்ல முள்ளு குத்துனப்ப மொட்டை அவன் கால்லிருந்து முள் ளைப் புடுங்கினதைப் பாத்தேன்’.
’அப்பறம்.’
’பெறகு
என்னா நடந்ததுண்ணு யாருக்குத் தெரியும்? எதானா நடந்திருக்கும் அம்மானுக்குப் பொருத்தமா குந்தி இருந்தாங்கத்தான்.’
வாகடம்
உளளாகப் பார்த்துக்கொண்டான். யாரேனும் தன்னைப்பார்த்து விடுவார்களோ என்ற அச்சத்தில் இருந்தான்.
’அந்த
மீசை, ஆலமரத்தை ஏலம் வுடக்குள்ள சின்னவன் பக்கமா சைடு அடிச்சானா, அவனுக்கு ஒரு வேட்டு வைக்கணும்’!, என்றார் பிள்ளை.
வாகடம்
இந்த மாதிரி விஷயங்களைக் கேள்விப் பட்டாலோ, பார்த்தாலோ, அதனைத்தாங்கிச் செல்வதற்கு லாயக்கில்லாதவனாய் இருந்தான். யாரிடமேனும் அது அதனைச் சொல்லிவிட்டால்தான் அவன் நிம்மதி அடைகிறான். நடுப்பிள்ளையின் பெருங்கணக்கெல்லாம் வாகடத்திற்குத் தெரியாத ஒன்று.
நாகலிங்கத்தின் குடும்பத்தில் ஒரு
கலவரத்தை உண்டு பண்ணிவிட இதுவே சரியான சந்தர்ப்பம் என நடுப்பிள்ளை முடிவுக்கு வந்தார்.
’நீ
போய் நாகலிங்கத்தை வரச்சொல்’.
’ஏன்
இன்னிக்கு சவரம் பண்ணிக்கிறிங்களா?’
’இது
இன்னாத்துக்கு
உனக்கு’.
’இல்ல
கத்தி புட்டியோட வருவாப்புல அதான்’.
’அது
அவனுக்கு தெரியும் உன் வேலயப் பாரு’ வெள்ளென்று விழுந்தார் பிள்ளை.
’சட்டுன்னு
போய்ச் சொல்லி, அவனை வரச்சொல்லு’. ஆணை பிறப்பித்தார்.
23
நாகலிங்கம்
தன் வீட்டு வாயிலில் நின்றுகொண்டிருந்தான். ஒரிருவர் நாகலிங்கத்திடம் பேசிக்கொண்டிருந்தனர். வாகடம் நாகலிங்கத்தை நோக்கி நடந்தான்.
’உன்னைப்
புள்ளவரச் சொல்றாரு.’
’எந்தப்
புள்ள’’.
’’நடுப்புள்ள’.
’ஏன்?’
’போய்ப்பாரு,
நான் என்னாத்த கண்டேன்’.
’இன்னிக்கு
பாட்டியமாச்சே, வேல ஜோலி இருக்காத’.
’வேறு
எதானா இருக்கும் பாரு’.
’சரி,
நான் போய் வர்ரேன்’.
வாகடம்
விடை பெறும் சமயம் உள்ளாக எட்டிப் பார்த்தான்.
’எங்க
மொட்டை?’
’அது
எங்கானா போயிருக்கும். குச்சி இல்ல அடுப்புக்கு’.
’சரி
வர்ரேன்.’
நாகலிங்கம்
தன் வீட்டு நாய் வாயைத் திறந்து கெட்ட ஆவி விடுவதைப் பார்த்தான்.
’ராகண்ணு
முழிப்பு’ சிரித்துக்கொண்டே வாகடம் நடந்தான். நாய் லொள் என்றது.
’சும்மா
கெடயேன் கழுதை’ என்றான் நாகலிங்கம். நாய் திரும்பவும் கண்ணை மீண்டும் மூடிக்கொண்டது.
நாகலிங்கம்
கத்திப்பெட்டியை
தன் கையில் எடுத்துக் கொண்டான். எதுக்கும் இருக்கட்டும் என்று சொல்லிக் கொண்டான். வெள்ளாழத்தெரு வெறிச்சென்று இருந்தது.ஆடுகள் அனேகமாய் இந்தத் தெருவில் காண முடியாது. இன்று ஓரிரு ஆடுகள் தெருவில் நின்று கொண்டிருந்தன. சுதந்திரக் கோனாரின் ஆடுகளாய் இருக்க வேண்டும். நடுப்பிள்ளைத் தயாராய் நின்று கொண்டிருந்தார்.
’வாடா’.
’வர்ரேனுங்க,
இன்னிக்குப் பாட்டியமாச்சே.’
’அதுக்கு
இல்ல உள்ளவா.’
’ஆச்சி
இருக்காங்களா’.
’யாராவட்டும்ஆச்சி பாச்சி
இருக்காங்களா இது என்னா கேழ்வி’?
’யாரு’
நாகலிங்கத்தை நோக்கி ஆச்சியின் கேள்வி வந்தது.
’நாகலிங்கங்க’ என்றான்.
’போவுக்குள்ள
ரெண்டு தேங்கா கெடக்கு, உறிச்சி கொடுத்துட்டுப் போயேன்’.
’நாகலிங்கம்
நான் வரச்சொன்னேன். அதைக் கேளு’, என்றார் பிள்ளை.
’நாகலிங்கம்,
உன் மகன் சின்னவன் போறபோக்கு சரியில்லை.அவன் சிவபெருமானோட சேர்ந்து கிட்டு நிக்குறான். கண்மணி வாத்தியாருதான் குரு. நீ இருந்த இருப்பு என்ன, உன்மவுன் இருக்கிற இருப்பு என்ன; கொற காலம் எப்படி தள்ளுறதுண்ணு யோசனை அய்யாவுக்கு. ஆமாம் அந்த மீசைக்கு கால்ல முள்ளு எடுத்தாளாம் மொட்டை. அது வெஷயம் கேள்விப்பட்டேன். அதயும் வுட்டுப்பபுட்டு நிக்கப்போற, மொதலு முக்கியம்’.
அமைதியாய்
நின்றான் நாகலிங்கம். ஒன்றும் பேச பிடிக்க வில்லை அவனுக்கு.
’நா
சொல்லுநன். நீ நீக்குற அப்படியே.’
’அந்த
ஆலமரம் ஏலத்தண்ணிக்கே மீசையைப் பாத்தேன். சின்னவனோட சேர்ந்துகினான்’.
நாகலிங்கம்
இதற்கும் ஒன்றும் பதில் பேசாமல் இருந்தான்.
’என்னா
நா மடையனா? நீ பாட்டுக்கு நிக்குற’.
’நீங்க
சொல்லுறத சொல்லிப்புட்டிங்க அதோட வுடுங்க, மொட்டை மேல குத்தம் எதவும் இருக்காது. அது எனக்குத் தெரியும்’ அழுத்தமாய்ச் சொன்னான்.
’அப்ப
நான் வேல அத்தவனா?’
’அதுவும்
இல்லங்க. எம்பெமாட்டயைச் சொன்னா, கண்ணு அவிஞ்சி பூடும்ங்க’ ஓங்கிக் கத்தினான் நாகலிங்கம்.
’சின்னவன்
சேதி’ அதட்டினார் பிள்ளை.
’அதான்
வௌங்குல எனக்கு’. அமைதி ஆனான்.
’இந்தத்
தேங்கா ரெண்டு கெடக்கு. உறிச்சி குடுத்துட்டுப் போ’ ஆச்சி அடுப்பங்கரையிலிருந்து கத்திக்கொண்டிருந்தாள்.
’நாகலிங்கம்
நான் சொல்லுறதைக்கேளு, குறுக்கப் பேசாதே’ தன் கதியைக் கூட்டிக்கொண்டார்.
’நான்
குறுக்கப் பேசுல’ என்றான்.
ஆச்சிதான்
உள் வீட்டிலிருந்து குறுக்கே பேசினான் என்பது இருவருக்குமே தெரியும்.
’உன்
மகன் சின்னவன் போகிற போக்கு சரியில்ல. அவன் சிவபெருமான் வாத்திக்கு ஓட்டு சேர்க்கறதக்கு கண்மணி வாத்தியாரோடு சேர்ந்து மெனக்கெடுறான்.. சிக்கலு பண்ணுறான். இதெல்லாம் நல்லா இல்ல, தெரிதா?’ நாகலிங்கம் ஒரு முறை கண்களைமூடித் திறந்து கொண்டான்.
’நீ
இருந்த இருப்பு என்ன, இப்ப உன் மவன் இருக்கிற இருப்பு என்ன, யோசனை பண்ணிக்க, கையில அந்த கத்திப் பெட்டியோடு கொறகாலம் தள்ளுணும் நீ, ஆமாம் அந்த மீசை சந்திரகாசு என்ன, உன் வீட்டுக்கு அடிக்கடி வர்ரதா கேள்வி. அது வெஷயம் தெரியுதா?’
’என்
மொட்டையைப் பத்தி எனக்குத தெரியும்க பிள்ளை வைரம் அது வைரம். அதுகிட்ட எந்த நாயும் வால கீல ஆட்டிட முடியாது. ஆனா சின்னவன் பண்ணுறது எனக்கும் விளங்குல. கண்மணி வாத்யாரு நல்லவருன்னு கேள்வி. ஆனா ஊரு சிக்கல்ல சின்னவனை மாட்டி வுடுறாறுன்னுதான் நெனக்கிறேன்’.
’அது
கெடக்கட்டும். அந்த சந்திரகாசு ராயக்கரு என்ன உன் மவனுக்குசப் போட்டு.’
’அதுவும்
பாக்குணும்க’.
’ஆமாம்
நான் சொல்லுறேன். அந்த சந்திரகாசுக்க கால்ல முள்ளு எடுக்குறாளாமே உன் வீட்டுக்காரி, எல்லாருக்கும் எடுப்பாளா?’
’அடிச்செருப்பால.
எந்த பேமானி சொன்னான்?’
நான்
கேள்விப்பட்டேன்.
அப்படி
இருக்காதுங்க தன் குரலைத் தாழ்த்திக் கொண்டான். கத்திப் பெட்டியை ஒரு முறை கீழே வைத்து மீண்டும் எடுத்தான்.
’இல்ல
கேட்டுப்பாரு. உன் வீட்டுக் காரிய நீ கேட்டுப்பாரு. அதுல எதனா வெஷயம் இருக்கும். உன் மவன் சின்னவனை அடக்கிவை. காலம் வர வர சரியில்ல. நீ கைகட்டி சேவகம் பண்ணின. கத்திப்பெட்டி தூக்குவானா உன் மவன்? அவன் போக்கு ரொம்ப தப்பு, சாமிக்கு அடுக்காது’.
பிள்ளை
தன் வீட்டு உள்ளாய் மடமடவென்று சென்று கொண்டிருந்தார்.
இங்கு
நடந்தது ஏதுமரியாத ஆச்சி வெளிப்பட்டாள்.
’சின்னவன்
ஊருல இருக்கானா?’
’இல்லாத
எங்கு போறான்?’
அழுத்திச்
சொன்னான் நாகலிங்கம்.
’ஏன்,
புள்ள ஏதாவது சொன்னரா?’ அது குணங்கெட்டது. எதானா தொணதொணன்னு பேசும்.’
தன்னிடம்
தயாராய் இரண்டு மட்டையோடு கூடிய தேங்காய்களையும், ஒரு அரிவாளையும்கொடுத்தாள்.
நாகலிங்கம்
அந்த இரண்டு காய்களை உரித்து வைத்து அந்த இடத்தைச் சுத்தப்படுத்தினான்.
’நான்
வர்ரேன்’.
’இடுக்குல
இப்படி அப்படி வந்துட்டுப்போ. உன் மவன் கிட்டவும் சொல்லு. நான் சொன்னேன்னு சொல்லு’.
24
நாகலிங்கத்திற்கு
கண்கள் சிவந்த இருந்தன. தன் மனைவி மொட்டையைப் பற்றி பிள்ளை கூறியது அவனை உறுத்திக்கொண்டிருந்தது.அப்படி இருக்காது என்று எவ்ளவு தூரம் தன் மனதிற்க சமாதனம் சொன்னாலும், திரும்பவும் மனது குறுகுறுத்துக் கொண்டதான் இருந்தது.
இன்னும்
தன் வீட்டு வாயிலில் இரண்டு நாய்கள் படுத்து உறங்கிக்கொண்டிரந்தன.
’சீ வோடு’ என்று விரட்டினான்.
மொட்டை வீட்டில் இருக்கிறாளா என்று எட்டிப் பார்த்தான். பிள்ளை சொல்லியதில் ஏதும் உண்மை இருக்குமோ என்று எண்ண அவன் உடல் நடுங்கியது.
’மொட்டே மொட்டே’ இருமுறை அழைத்தான் அவன் சன்னமாய் குரல் கொடுத்தாள்.
’உள்ள என்ன செய்யுற?’
’ஏன்?’
நாகலிங்கம் உள் சென்றான். மாடத்தில் மாடு கட்டும் கயிறு ஒன்று இருந்தது. அதனைத் தன் கையில் எடுத்துக் கொணடான்.
மொட்டையின் தலைமயிரை இழுத்துப் பிடித்துக் கொண்டான். அவளின் கண்கள் பிதுங்கி நீரைச் சொரிந்தது. தன்கயிற்றை ஓங்கினான்.
’ஐய்யய்யோ’ என்று அலறிகாள் மொட்டை. தன் சக்திக்கு ஓங்கி ஒங்கி அடித்தான். அவள் முதுகு முழுவதும் அடிகள் பளிச் பளிச் என்று விழுந்து கொண்டிருந்தன.
’ஏன் அடிக்குற, என்ன ஏன் அடிக்குற?’ ஓங்கிக் கத்தினாள். அடி விழுந்த இடத்தில் எல்லாம் ரத்தம் கட்டியிரந்தது.
’என் உசிறு போனாலும். போகட்டும் அது பத்தி இல்ல. நீ ஏன் அடிக்கிற சொல்லு?’
மொட்டைக்கு மூச்சு வேக வேகமாய் வந்து கொண்டிருந்தது தேம்பித் தேம்பி அழுத வண்ணமிருந்தாள்.
’சந்திரசாசு
வந்தாரா? அவரோடு உனக்க என்னா, அது சொல்லு’.
’என்சாமி என்சாமி’
என்று இரண்டு முறை ஓங்கிக் குரல் கொடுத்தாள் ’மொட்டை.எந்தத் தப்பும் பண்ணுலய. கால்ல முள்ளுன்னு உன்னைத் தேடி வந்தாரு நீ இல்ல. துடியா துடியா துடிச்சாரு. நான்தான் கத்தியால கீறி முள்ளு எடுத்து அனுப்புனேன். நான் மருத்துவச்சிதானே! இதுல என்ன? என்னா எப்படி தப்பிப் போயிட்டேன். ஈன புத்தி எங்கிருந்து வந்திச்சி உனக்கு. நீ எல்லாம் ஆம்புளயா? கேட்பார் பேச்ச கேட்டுட்டு அடிக்குற சொந்த புத்தி இரவலு கொடுத்திட்டு மோசம் போயிட்டயே இது தேவுலாமா கடவுளே!’
அழுது
அழுது முகம் வீங்கி இருந்தது மொட்டைக்கு. புடவை நனைந்திருந்தது. முதுகில் லேசாய் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.
’அம்மா
அம்மா’ சின்னவன் குரல் கேட்டது. நாகலிங்கத்திற்கு அச்சமாய் இருந்தது. அவனால்தான், எத்தனை தொல்லை என்று எண்ணினான்.
25
நாகலிங்கம்
வீட்டு வாயிலில் ஒரு அரசாங்க ஜீப் நின்று கொண்டிருந்தது. டிரைவர் வெளிப்பட்டுக் கொண்டிருந்தார். சின்னவன் வீட்டு வாயிலில் நின்று கொண்டிருந்தான்.
’அம்மா
அம்மா’ என்று குரல் கொடுத்தான்.
சிங்காரபாலன்
தான் வந்து கொண்டிருந்தான். சின்னவனுக்கு அவனை அடையாளம் தெரியாமல் இருந்தது. சிங்காரபாலன் கண்களில் கருப்புக் கண்ணாடி அணிந்திருந்தான். ஃசபாரியோடு பேண்ட்டை அணிந்திருந்தான்; நறுக்கிய மீசை வைத்திருந்தான்.
’யாருங்க,
இது தொழிலாளி நாகலிங்க வீடு’ என்று இழுத்தான் சின்னவன்.
’ஏய்
சின்னவனே’.
குரல்
கேட்ட மாதிரி என்று சன்னமாய்ச் சொன்னான் சின்னவன். சிங்காரபாலன் தன் கண்ணாடியை நீக்கி,
’பாலன்
தாண்டா,’ என்றான்.
’பாலனா,
சிங்காரம் அய்யா மொவனா.’
’ஆமாண்டா
சின்னவனே.’
சின்னவன்
அவனையே உற்றுப் பார்த்தான்.
எவ்வளவோ
மாறிவிட்ட, ஊருல உங்க அப்பா ஒரு வெள்ள சட்டை போட்டுகிட பயப்படுவாரு, நீ சீமான் மாதிரில்ல வந்திருக்க.கண்களை அகலத் திறந்து பார்த்தான் சின்னவன். பாலன் சின்னவனை ஒரு தரம் கட்டிக்கொண்டான்.
’எங்க
அம்மா?’
’இருக்காங்க.
பாப்பம்டா, இப்ப வெளிய போயிருக்கும்’.
’கண்மணிசாரு
எப்படி இருக்காரு?’
’அவரயும்
பாப்பம்.’
’ஆமாம்.
தாசில்தாரு வந்திருக்காரு அவரு ஊரு அதிகாரியோட ஏதோ கணக்கு வழக்கு பாக்குறாரு. நம்ம, வா இந்த
சீப்புலய போவுலாம்’.
சின்னவன்
ஜீப்பில் அமர்ந்து கொண்டான். ஜீப் வெள்ளாளத் தெரு தாண்டிச் கொண்டிருந்தது. சின்னவன் ஜிப்பில் உட்கார்ந்து போவதை அனைவரும் பார்த்து திகைத்துப் போயினர். ’காலம் கெட்டுக் கெடக்கு’ என்று ஓரிருவர் முணுமுணுத்தனர்.
நடுப்பிள்ளை
தன் வீட்டு வாயிலில் நின்று கொண்டிருந்தார்.
ஜீப்பை
மெதுவாக ஓட்டினான் சிங்கார பாலன்.
’வணக்கமுங்க’
என்றார் பிள்ளை.
கண்ணாடி
அணிந்து கொண்டிருந்த பாலனை அடையாளம் தெரியாத பிரச்சனையைப் பார்க்க சின்னவனுக்கு பரிதாபமாய் இருந்தது.
’கத்திப்புட்டி தூக்குற
கசமாலத்தை ஏன் இட்டுகினு போறான்’ பாலன் காதில் விழும்படியாய்ச் சொன்னார் பிள்ளை.
’படுத்த
கல்லுல பசிய ஆத்துகிற கூட்டத்துக்காரன் இங்க வண்டிய ஓட்டுறான்’ என்றான் பாலன் வேகமாய்.
’சபாஷ்’
என்றான் சின்னவன்.
பிள்ளை
ஒரு முை மீண்டும் ஜீப்பைப் பார்த்துவீட்டுத் திரும்பிக் கொண்டார். தெருவில் படுத்திருந்த நாய்கள் மெதுவாய் எழுந்த ஓரம் நின்றன.ஜீப்பைப் புதியதாய் பார்த்த சிறுவர்கள் ஆரவாரம் செய்தனர்.
நடைபெற
இருக்கும் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தவே தாசில்தார் வந்திருந்தார். தேர்தல் அலுவல் தொடர்பாய் சில விபரங்களைச் சேகரித்துக் கொண்டிரந்தார்.
’கண்மணி
எப்படி இருக்காரு?’
’அவருக்கத்தான் பிரச்சனை.’
’கேள்விப்பட்டேன்.
அவருக்க மாத்தல் ஆகி இருக்குதாம். அவரு லீவுல இருக்காருண்ணு அரசபுரசலா கேள்வி.’
’அப்படித்தான்.’
’தேர்தல்ல
யாரு ஜேயிக்க இருக்கா?’
ஊரே
மூணா பிரிஞ்சிக் கெடக்கு. தலா ஒரு ஆள நிக்க வச்சி நடுப்பிள்ளையும், நாட்டாண்மையும் மோதிக்கிறாங்க. சிவபெருமான் நிக்கிறாரு தனியா’.’
’சிவபெருமான்
நிக்குறானா?’
’ஆமாம்’.
’சட்டாம்
பிள்ளையா இருந்தவன்’.
’ஆமாம்’.
’ஓரே
குழப்பமாய் இருக்கு. யாரு செய்ராங்க இது எல்லாம்.’
’எத்தனி
நாளக்கித்தான். சனம் குனிஞ்சிக் கெடக்கும். ரவனாச்சிம் நிமிற வேண்டியது நெயாயம்ல’ என்றான் சின்னவன்.
கண்மணி
ஆசிரியர் அறைமுன்பாய் ஜீப்பை நிறுத்தி இருவரும் இறங்கி நின்றனர். கண்மணி ஆசிரியர் அறை பூட்டப்பட்டிருந்தது. இருவரும் என்ன செய்வது என்று விழித்தனர்.
ஐயர்
தன் வீட்டை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தார்.
’யாரு?’
’நான்தான்
சிங்காரம் மகன் சிங்கார பாலன்’.
ஓஓஓ...
நம்ப சிங்காரம் புள்ளயா?
’ஆமாம்.’
’இப்ப
என்ன பண்றே?’
’தாசில்தாரு
ஆபிசுல வேல, வண்டி ஒட்டுறேன்’.
’குப்புத்த
கல்லு உனக்கு
நட்ட
கல்லு எனக்கு...
இது
எல்லாம் மாறி
தருமைநாதன்
கண்ணு தொறந்து இருக்காரு. யாருக்கு வர்ரதை யாரு நிறுத்தறது’ ஐயர் சிரித்துக் கொண்டார்.
’அதுசரி,
இந்தத் தருமை நாதனுக்கு ஏதும் செய்யக் கூடாதா?’
’என்ன
செய்யணும்.’
’ஒரு
நூறு ரூபாய் அனுப்பிவையேன்’.
’என்னத்துக்கு சாமி’?
’இல்லப்பா,
இரண்டு குடமும் ஒழுகுது. அது சரிப்பண்ணணும், அதான் பாக்குறென்.’
’நடுப்பிள்ளைகிட்டே கேக்குல?’
என்றான் சின்னவன் வெடுக்கென்று.
’அந்தக்
கதைய கேக்காத, அது அம்பட்டன் குப்பே.’
’சுத்தி
சுத்தி எங்ககிட்ட வந்துடுங்க எல்லாரும்’.
’இல்ல
சின்னவனே. நெசத்தைச் சொன்னேன்’.
சிங்காரம்
தன் சட்டைப்பையிலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டினை எடுத்து ஐயரிடம் கொடுத்து.
’வச்சுகுங்க
சாமி’ என்றான்.
’நன்னா
இருப்பே.’
’கண்மணி
சாரைப் பாக்குணுமே’.
’ஆகா
பேஷ். நன்னா ஞாபகம் வச்சிருக்கே. சிவபெருமான் கிட்டேயிருந்து இரண்டு ஆளு வந்து அவரைக் கூட்டிப் போனது. வேற சேதி தெரியல, இனிமேதான் அது என்னன்னு தெரியுணும்’.
’இப்ப
ஒன்ணும் ஆவுற கதையில்ல’ என்றான் பாலன்.
ஜீப்பில்
இருவரும் அமர்ந்த கொண்டனர். சிவபெருமான் வீடு நோக்கி ஜீப் சென்று கொண்டிருந்தது.
’தாசில்தாரு
தேடப்போறாரு’.
’தேடமாட்டாரு.
கொஞ்சம் வேல கனமா இருக்கு’.
தென்னை
மரங்கள் அடர்ந்த சாலையை ஜீப் கடந்து கொண்டிருந்தது. தென்னை மரங்கள் நன்கு குலை குலையாய்க் காய்த்து இருந்தன. சிவபெருமான் வீட்டு வாயில் முன்பாய் இருவரும் நின்று கொண்டிருந்தனர். சிவபெ’ருமான் வீடு ஏதும் அரவமற்று இருந்தது.
சிவா,சிவா’ இருவரும் ஒரே குரலில் அழைத்தனர்.
சிவா
இல்லை எதிர்குரல் வந்தது.
’சிவா
எங்கே?’
’அவரும்
கண்மணியும் ஆறாபுரி ஏரிப் பக்கம் போனாங்க.’
ஆறாபுரி
ஏரி தருமையூரின் வடக்குப் பகுதியில் இருந்தது.
’இப்போ
சிவபெருமானைப்
பார்க்க முடியாது போல? நான் கௌம்புகிறேன்’ என்றான் பாலன்.
’தாசில்தாரு
தேடுவாரு’.
’ஆமாம்
நேரமாச்சி.’
’நான்
சிவபெருமானைப்
பாத்துட்டு வர்ரேன், நீ போ’ என்றான் சின்னவன்.
’வந்தின்னா,
வண்டில கொண்டு விடுறேன்.’
’இல்ல
வேணாம். நான் பாத்துகிறேன், நீ போ’ என்றான் அழுத்தமாய் சின்னவன்.
சிங்கார
பாலன் ஜீப்பை நகர்த்திக் கொண்டிருந்தான்.
26
சின்னவன்
இன்னும் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.மீண்டும் அந்தப் பெண்குரல் கேட்டது.
’சிவபெருமான்
இல்லை’.
’வரட்டுமே’
என்றான் சின்னவன்.
உள்ளிருப்பது
சிவபெரமான் தங்கையாய் இருக்க வேண்டும் என்று சின்னவன் ஊகித்தான். பருவம் அடைந்த பெண்ணாய் இருந்தாள். தலையில் அடர்த்தியாய் கூந்தல் கருகரு என்று இருந்தது. உடல் உழைப்பு மிகுதியில் களை கட்டித்தெரிந்தது. முகம் பார்க்குந்தோறும் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதாய்த் தோற்றமளித்தது. கையில் புத்தகம் ஒன்றை வைத்துக்கொண்டும் இருந்தாள். சிலருக்குக் கையில் புத்தகம் கூடுதலாய் அழகு தருகிறதுதான். சின்னவன் அசதியாய் உணர்ந்தான். அது என்ன புத்தகம் என்று கேட்டுவிடலாமா என்று எண்ணினான்.
’அது
என்ன புத்தகம்’ கேட்டுவிட்டு நின்றான்.
’ஏன்?’
’இல்லை.
தெரிஞ்சிக்கலாம்ன’.
’ஆங்கிலப்
புத்தகம் பெர்ட்ரண்ட் ரசல் எழுதினது’.
’நீங்க
படிக்கறீங்களே. உங்களுக்கு இதுக எல்லாம் அறிமுகம் எப்படி? விபரமாய்க் கேட்டான் சின்னவன். கண்மணிசாருதான் புத்தகம் தருவாரு. ஏதும் சந்தேகம்னா வௌக்கிடுவாரு’.
’அண்ணன்
எப்ப வருவாரு மீண்டும் தன் விஷயத்துக்கே வந்து நின்று கொண்டான் சின்னவன்’.
’அண்ணன்
வர நேரம் ஆகும்’.
’அண்ணன்
வர்ரவரைக்கும்
இங்க இருக்கலாமா?’
’தாராளமா
இருங்க.’
’உங்க
பேரு?’
’செம்மலர்’
அழகாய்ச்
சொன்னாள். அதிர்ந்து போனான் சின்னவன்.
அவளின்
பெயர் அவன் மனதிற்கு இதமாய் இருந்தது. கண்மணியையும் செம்மலரையும் தன் மனதிற்குள் ஒரு தரம் எண்ணிப் பார்த்தான். பெர்ட்ரண்ட் ரசல் புத்தகம் வந்து குறுக்காய் நின்று அப்பிணைப்பை அர்த்தமாக்கி அழகு தந்தது. தருமங்குடியில் மேலைப் நாட்டுச் சிந்தனையை& ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் அமுக்கி வைக்கப்பட்ட சமூகத்தில் அதுவும் ஒரு பெண்பிள்ளை படிப்பதை எண்ணி எண்ணிப் பெருமைப்பட்டுக் கொண்டான். கண்மணி ஆசிரியரின் மதிப்பு அவன் மனத்திரையில் பல மடங்கு கூட்டிக்கொண்டு தெரிந்தது. மனதில் கண்மணி ஆசிரியருக்கு, வணக்கங்கள் பல சொல்லிக் கொண்டான்.
சுடச்சுட
டீ எடுத்து வந்து நீட்டினாள் செம்மலர். கூடவே ஒரு புத்தகம் ஒன்றை எடுத்து வந்து கொடுத்தாள். தன்னையே மறந்து நின்று கொண்டிருந்தான் சின்னவன்.
’இது
என்ன புத்தகம்?’
"இயக்க இயல் பொருள் முதல்வாதமும், வரலாற்றுப் பொருள் முதல்வாதமும்."
சின்னவனுக்கத் தலை
சுற்றியது.
இது
படிங்க ஒண்ணும் கஷ்டம் இல்லை. மனிதன் உலகை அறிகிற இயல்பு வரலாற்றில் அவன் செய்யுற பணி, அவன் முன்னேற்றம் இவை இதனுள்ளாய் சொல்லப்பட்டுக் கிடக்ன்றன, என்றாள்.
சின்னவன்
புத்தகத்தைப் புரட்டினான்.
இயக்கவியல்,
வரலாற்றுப் பெருள் முதல்வாதம் என்னும் மார்க்சிய லெனினியத் தத்துவ ஞானத்தின் அடித்தளத்தைப் பற்றியது இந்நூல் தத்துவ ஞானத்திலும், நமது காலத்திய அவசரப் பிரச்சிகளிலம் அக்கறை யுள்ளவர்களுக்காக எழுதப்ட்டுள்ளது, என்பதை மெதுவாய்ப் படித்தான்.
’விஷயம்
கனமானது, தேவையானது, பிரதானமானது,’ என்றாள் செம்மலர்.
தலையை
ஆட்டினான் சின்னவன்.
’இன்னும்
ஏதும் புத்தகம் வேண்டுமா?’
’இல்லை’
என்றான்.
’நெறையப்
படிக்கணும், நெறைய தெரிஞ்சிக்கணும், அதன்படி கடுகளவாவது நிக்கணும்’, என்றாள் செம்மலர்.
செம்மலரைப்
பார்த்தது அவனுக்குப் புதிய விஷயமாய் இருந்தது.
விடைபெற்றுக்
கொண்டான் சின்னவன். கையில் அந்தப் புத்தகம் பத்திரமாய் இருந்தது. அதனை ஒரு முறை தடவிப் பார்த்துக்கொண்டான். மனிதனுக்கு எத்தனை அனுசரணையாய் இந்த நூலின் சிந்தனை என்று எண்ணி எண்ணி நடந்து கொண்டிருந்தான்.
27
நாகலிங்கம்
மொட்டையைப் பார்த்துக்கொண்டே நின்று கொண்டிருந்தான். அவள் கண்களை மூடிப் பயந்து போய் கிடந்தாள். நாகலிங்கத்தின் இதயம் பட் பட் என்று அடித்துக்கொண்டது. ஏதோ பெரிய தவறு செய்து விட்டதாய் அவன் அடிமனத்தில் உணர்ந்தான்.
சன்னல்
முகட்டில் கிடந்த தைல சீசாவைக் கையிலெடுத்து, தைலத்தை கையில் கொட்டி, மொட்டையின் உடல் முழுவதும் தேய்த்து முடிந்தான் தண்ணீர் ஒரு குவளை எடுத்து வந்து அவள் முகத்தில் தெளித்து நிறுத்தினான்.
’மொட்டை,
மொட்டை.’
அவள்
முணறிக்கொண்டிருந்தாள்;
அது ஆழ்கிணற்றிலிருந்து கேட்பதுபோல் இருந்தது.
’ரொம்ப
அடிச்சுட்டேன்’
என்றான்.
மொட்டை
ஏதும் பதிலுக்குப் பேசமாட்டாளா என ஏங்கினான்.
அவள்
கண்களிலிருந்து
நீர் தாரையாய் வந்து கொண்டிருந்தது.
’ரொம்பவும்
வலியா?’ என்றான்.
மொட்டை
லேசாய் இருமினாள்.
’நான்
ஒரு முண்டம்’ என்று வேகமாய்ச் சொன்னான்.
மொட்டை
கண்களைத் திறந்த பார்த்தாள்.
’என்
தலைவிதி மொட்டை, ஒரு பிள்ளையைப் பெற்றேன். அதுவும் தறுதலையா நிக்குது’.
’இல்லை’
என்று தன் கைகளால் சாடை காட்டினாள்.
’என்னைக்கு
நீ ஒத்துக்கிட்ட?’ என்றான்.
அவள்
தன் கண்களிலிருந்து வழியும் நீரை ஒதுக்கினாள்.
நாகலிங்கம்
சுவரில் தன் தலையை மொத்திக் கொண்டான்.
’என்
நேரம், என் நேரம்’ ஓங்கிக் கத்தினான்.
மொட்டை
நாகலிங்கத்தை இழுத்து நிறுத்தினாள்.
’என்ன
செய்யுற சாமி’ என்று அழுத்தாள் மொட்டை.
’எனக்கு
ஒண்ணும் விளங்குல.’
’தெரியும்’
என்றாள்.
’முந்தி
விரிச்சிவ முண்டமாயிட்டேன்,’ மீண்டும் மொட்டை புலம்பினாள்.
நாகலிங்கம்
அவள் கையைப் பிடித்துக்கொண்டு சிறு பிள்ளையாய் அழுதான்; அவன் அவளது முகத்தைத் துடைத்துக் கொண்டிருந்தான்.
’தெரு
கதவு.’
’தாப்பா
போட்டிருக்கேன்’
என்றான் நாகலிங்கம்.
இருவரும்
அப்படியே கிடந்தார்கள். இருவருக்கும் இடையே மயான அமைதியாய் இருந்தது.
தருமங்குடியில் தலைவர்
தேர்தல் முடிந்திருந்தது.. சிவபெருமானின் வண்டிச் சின்னமே ஜெயித்தது. கண்மணி ஆசிரியரும் அவரொத்த சிலரும் சிவபெருமானை வெற்றி ஊர்வலம் கொண்டு சென்றார்கள். ஊர் அமைதியாய்க் கிடந்தது. சின்னவன் வெற்றி ஊர்வலத்தில் பிரதானமாய் தோன்றினான். சந்திரகாசும் சிவபெருமானுக்கு அருகில் நடந்து கொண்டிருந்தான். அந்த ஊர்வலத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிந்தான் வாகடம் காசி. ஐயரும் வாகடம் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார்.
’ஊரு
ஓட்டு உழுந்திருக்குமா?’
’இருக்கும்’
என்றார் ஐயர்.
’சிவபெருமானைப் புரிஞ்சவங்க
ஓட்டுப் போட்டிருப்பாங்க’.
சிவபெருமான்
கழுத்தில் பூமாலை ஒன்றினை அணிந்திருந்தான். வண்டிச் சின்ன ஓவியத்தை ஒருவன் தலையில் தூக்கிக் கொண்டு தபக் தபக் என்ற நடந்தான், வண்டிச் சின்னத்திற்கு மாலை போட்டிருந்தார்கள். சில வீடுகளின் வாயில்கள் தாழிப்பட்டிருந்தன. சிலர் என்ன தான் நடக்கிறது. என சன்னல் வழியாய் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தராகள்.
கருமை
மாரி கோவிலுக்கு முன்பாய் கூட்டம் நின்றது. பூசாரி அம்மனுக்கு உள்ளாய் அபிஷேகம் செய்த வண்ணம் இருந்தார். கூட்டம் கோவிலுக்குள் திபு திபு என்று நுழைந்தது. சின்னவன் தயாராய் வைத்திருந்த பூ பழம் தேய்காய்த் தட்டினை ஒரு ஐம்பது ரூபாயுக்கு வைத்து நீட்டிக்கொண்டு நின்றான்.
பூசாரி
இப்போது தான் மதல் முறையாய் சிபெருமானுக்கு மாலை அணிவித்துக் கௌரவம் செய்கிறார். சின்னவன் கைகட்டிய வண்ணம் இருந்தான். கண்மணி சிவபெருமானுடனேயே நின்று கொண்டிருந்தார். கருமை மாரி கோவிலை வலம் வந்து முடித்த சிவபெருமான் கோவிலிலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்தான். ஊர் மக்கள் சிலர் கருமைமாரி கோவில் முன்பாய் வேடிக்கை பார்த்த வண்ணமிருந்தனர். தருமங்குடியின் மையப் பகுதியான ஒரு மைதானத்தில் சிவபெருமான் நின்று கொண்டான்.
சின்னவன்
கடப்பாரை கொண்டு தரையைக் குத்தி, ஒரு கம்பு நட்டு அதனில் தேசியக்கொடியை ஏற்றி வணங்கி நின்றான். சிவபெருமானின் வெற்றிக்கு உழைத்தவர்கள் அந்தக் கொடியைச் சுற்றி நின்றார்கள்.
வாகடம்
காசி இன்னும் ஓரமாய் நின்று என்ன நடக்கிறது என்பதனை நோட்டம் விட்டான். நடுப்பிள்ளையும் அவரது சகாக்களும் மைதானம் நோக்கிப் பைய வந்து கொண்டிருந்தனர். நாட்டாண்மை மைதானத்தில் ஓரமாய் வந்து நின்று வேடிக்கை பார்த்தார். அனைவரும் அமைதியாய் இருந்தனர். சிங்காரமும், நாகலிங்கமும் பக்கம் பக்கமாய் அமர்ந்து என்ன நடக்கப் போகிறது என்பதனைக் கவனித்தார்.
கண்மணி
தேசிய கீதத்தைப் பாட சிவபெருமான் அமைதியாய் நின்று கொண்டிருந்தான். நடுப்பிள்ளை மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை வாயடைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். நாட்டாண்மைக்கோ இது எல்லாம் விந்தையாக இருந்தது. அவர் பயந்து போய் இருப்பதாயும் தெரிந்தது.
சிவபெருமான்
இரண்டு வார்த்தை பேசினான்;
’தருமங்குடி
வாழ் என் சகோதரப் பெரியவர்களே, உங்களைப் பாதம் தொட்டு வணங்குகிறேன். தருமங்குடி மக்களின் ஒற்றுமைக்காவும் வளர்ச்சிக்காகவும் நான் மெய்யாகவே பாடுபடுவேன்’, என்று கூறிய சிவபெருமான் கொடி மரத்தைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டான்.
இதனைப்
புரியாத விஷயமாய் சிலர் நோக்கிக் கொண்டிருந்தனர். விளங்கிக்கொள்ள முடியாமல் சிலர் விழித்துக் கொண்டிருந்தனர்.
நாட்டாண்மை
கண்மணியைப் பார்த்துக் கேட்டார்,
’வேலை
மாத்தல் ஆயிட்டுதுன்னு கேள்விப்பட்டேன்’.
’ஆமாம்’.
’அப்புறம்?’
’இங்க
கொஞ்சம் வேல இருக்குது’.
’சரிதான்’
என்றார் நாட்டாண்மை.
’ஒழக்கு
ஒழக்கு தான்’.
’எது
ஒழக்கு எது கிழக்குன்னு தெரியல’ என்றான் சின்னவன் கண்மணியிடம்.
’என்ன
வார்த்தை தடிச்சி வருது?’
’ஒண்ணும்
இல்லிங்க’ என்றான் சின்னவன் நாட்டாண்மையிடம்.
கண்மணி
அமைதியாய் இருந்தார். இதற்கு மேல் இதனை இப்போது சீண்ட வேண்டாம் என நாட்டாண்மை முடிவுக்கு வநதார்.
28
தருமங்குடி
கண்மணி ஆசிரியருக்கு, துபாயில் வசதி படைத்த தீன்பாய் என்னும் பள்ளிக்கூட நண்பர் இருந்தார், தீன்பாயுக்கு துபாயில் ஏகப்பட்ட செல்வாக்கு இருந்தது. தருமங்குடிக்கு ஏதும் ஒரு பெரியஉதவி செய்யவேண்டும் எனக் கண்மணி, தீன்பாயைக் கேட்டிருந்தார். தீன்பாயும் அது சாத்தியம் என்றே வாக்குக் கொடுத்திருந்தார். தருமங்குடியில் ஒரு சர்க்கரை ஆலையை அமைக்கலாம் என்கிற யோசனை சொன்னவர் கண்மணி ஆசிரியர்தான்.
இவ்விஷயத்தை
சிவபெருமான் அறிந்து மகிழ்ச்சி மேலிட்டான். வாகடம் இது விஷயம் அறிந்து கொண்டு அங்கேயே நின்றான்.
’உங்க
மாற்றல் இன்னும் அப்படியே இருக்குதா’ என்றான் வாகடம்.
’என்
டிரான்ஸ்பரைச்
சொல்லுறீங்க. பார்ப்போம் அஞ்சி வருஷம் கூட லீவு போடுலாம் அந்த லீவுல இந்த ஊருக்கு உழைச்சி ஏதும் செய்யலாம்னு இருக்கேன்’.
சிவபெருமானின் தங்கை
தன்னோடொத்த மகளிரை, சிறுமிகளை ஒன்று திரட்டியிரந்தாள். அவர்கள் அனைவரையும் தருமங்குடி ஆலலல மரத்திற்குக் கீழாய் அமரச் செய்திருந்தாள். அன்று மாலை மூன்று மணி இருக்கலாம். அந்தக் கூட்டத்தில் ஆடவர் யாவரும் இல்லாமல இருந்தார்கள். இத்தனை மகளிரை எப்படிக் கூட்டமுடிந்தது என அனைவரும் வியப்பு மேலிட்டார்கள். இந்த ஆலமரம் வெட்டப்படாமல் இருப்பதற்கு செம்மலரும் காரணம். அவளே சிவபெருமானிடம் மரம் வெட்டப்படுதல் கூடாது என்ற யோசனையைப் பலமாய்ச் சொன்னவள். சிவபெருமானும் கண்மணி ஆசிரியர் மூலம் சின்னவனை வைத்து ஏலம் கேட்டு மரத்தைக் காப்பாற்றி இருக்கிறார்கள்.
செம்மலர்
அந்தக் கூட்டத்தில் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்தாள்.
"தருமங்குடி வாழ் தாய்மார்களே, சகோதரிகளே, இந்த ஊரின் இந்த ஆலமரத்தின் கீழாய் நாம் ஒரு முடிவு செய்கிநோம். இனி சாராயம் குடித்து விட்டு, தருமங்குடி தெருவில் யாரும் நடக்க் கூடாது அப்படி நடந்தால் அவர்களை ஊரைவிட்டு அப்புறப்படுத்துவோம்."
அனைவரும்
அமைதியாய் இருந்தனர்.
இது
ஏது விபரீதமாய்
என்றாள் மூதாட்டி ஒருத்தி. நாம் அனைவரும் தருமங்குடியின் அனைத்து தெருக்களிலும் இவ்விஷயத்தை எடுத்துச் சொல்லுவோம் என்றாள் செம்மலர் தான் சுருட்டி வைத்திருந்த துணி பேனர் ஒன்றைச் சட்டென்று பிரித்துக் காட்டினாள்.
தருமங்குடியில் குடித்துவிட்டுத் தெருவில்
யாரும் நடக்கக்கூடாது என்று கொட்டை எழுத்துக்களில் அந்த பேனரில் எழுதியிருந்தது. ஒரு நடுத்தர வயது பெண்மணி அதனைக் கண்ணுற்று,
’இது
ஆவுற கதையா’ என்றாள்.
’ஆவுற
கதைதான்’ என்று செம்மலர் அழுத்தமாய்ச் சொன்னாள்.
’இன்னொரு
விஷயத்தையும் இன்னிக்கு ஒரு முடிவு பண்றம். இந்த ஊர்ல அரசியல் கட்சிக் கொடிங்க எல்லாம் ஒரு பொதுவான எடத்துலதான் பறக்கணும்’ என்றாள் செம்மலர்.
இது
எல்லாம் நல்ல ரோசனை என்றாள் மூதாட்டி. அந்த மூதாட்டியை இரு சிறுமிகள் கைத்தாங்கலாய்ப் பிடித்து இருந்தனர்.
செம்மலர்
குரல் கொடுத்தாள்!
’தருமங்குடியில் இனி
சாராயம் விற்கக்கூடாது. சாராயம் குடித்துவிட்டுத் தெருவில் நடைபோடக்கூடாது. இது தருமங்குடித் தாய்மார்களின் கட்டளை’ என்று வேகமாய்க் கூறி நடந்து கொண்டிருந்தாள். அனைவரும் பின் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.
கூட்டம்
தென்னை மரங்கள் அடர்ந்த சாலை வழியாய் போய்க்கொண்டிருந்தது.
நடுப்பிள்ளை
இவைகளை எதிர்பார்த்து இருக்க மாட்டார்தான். நாட்டாண்மைக்கு மயக்கமே வருவதாய் இருந்தது. தருமங்குடியை இனி எப்படி தம் கட்டளைக்குக் கீழ் கொணர்வது என்று குழம்பிப்போய் இருந்தார்கள். தருமங்குடியை ஏதோ நோய் சூழ்ந்து கொண்டதாய் எண்ணினார்கள் இது நாள்வரை இப்படி எல்லாம் நடந்தது இல்லைதான். நாட்ாண்மையும் நடுப்பிள்ளையும் சொல் வதைக் கேட்டுக்கொண்டே எல்லாரும் நடந்து கொண்டார்கள். இத்தனைக் குளறுபடிகள் தோன்றுவதற்கு கண்மணி ஆசிரியரின் வருகையே காரணம் என்று முடிவுக்கு வந்தார் நடுப்பிள்ளை. நாட்டாண்மைக்கம் இந்த விஷயத்தில் முழு உடன்பாடு.
ஐயர்
வீட்டுத் திண்ணையில் இப்போது நடுப்பிள்ளை அமர்ந்து கொண்டிருந்தார்.
செம்மலர்
முன்பாய் செல்ல,
அந்த ஊர்வலம் எல்லாத் தெருக்களிலும் நுழைந்து நுழைந்து வெளிப்பட்டது. நடுப்பிள்ளை வீட்டு ஆச்சி வாயிலில் நின்று கொண்டு
அனைத்தையும் நோக்கிக் கொண்டிருந்தாள். அந்தக் கூட்டத்தையே முறைத்துப் பார்த்தாள். தெருவின் நடுவே பறந்து கொண்டிருந்த கொடிமரத்தைக் கூட்டத்தில் வந்தவர்கள் பிடுங்கிக்கொண்டிருந்தனர்.
’இனிமேல்
பொதுவா ஒர இடத்துல வரிசையா கொடி மரங்களை நடுவோம் மூலைக்கு மூலை நடவேண்டாம்’, என்று ஒரு பெண் கூட்டத்தாரிடம் போதித்தாள்.
சிங்காரம்
துவைத்து முடித்த ஈரத் துணிகளைச் சுமந்து கொண்டு சென்றான். வெள்ளாழத்தெருத் துணிகளையும் ஐயர் வீட்டுத் துணிகளையும் அழுக்கு மட்டுமே நீக்கி ஈரமாய்ச் சுமந்து அவர் அவர்களிடம் ஒப்படைப்பான் சிங்காரம். அவர்களே அவைகளை உலர்த்தி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுவாய் நடப்பு..
தருமங்குடித்
தெருக்களில் ஏதோ புது விஷயங்கள் நடப்பதை எண்ணி எண்ணி வியந்து போனான் இவை எல்லாமே புரியாத புது விஷயங்களாய் அவன் உணர்ந்தான். மனதிற்குள் ஏதோ இனம் புரியா மகிழ்ச்சியும் கொப்பளிப்பதை அவனால் அறிய முடிந்தது.
ஊரில்
கருமை மாரி அம்மன் கோயிலுக்கு முன்பாய் பறந்து கொண்டிருந்த கட்சிக் கொடிகளை, நாகமணிந்த விநாயகர் கோவில் முன்பாய் பறந்து கொண்டிருந்தவைகளை, ஊரில் மாட்டுப்பட்டிக்கு முன்பாய் நின்று கொண்டிருந்த கம்பங்களை எல்லாம் இப்போது காண முடியாமல் இருந்தது. அவைகளை ஊரின் மையமாய் ஓரிடத்தில் வரிசையாய் நட்டிருந்தார்கள்.
’இனி
ஊருல கொடிமரங்க ஒரு இடத்துலதான் நின்னு பறக்கணும்’ ஊரில் பேசிக் கொண்டார்கள்.
’நடுப்பிள்ளைக்கு தாம்
ஊரில் இருக்கிறோமா இல்லையா’ என்ற சந்தேகம் மேலிட்டது. ஆலமரத்தை. வெட்டிவிடவேண்டும் என்ற நடுப்பிள்ளை போட்ட கணக்கெல்லாம் தவறாகிப் போயிற்று. தலைவர் தேர்தலும் அம்போ, ஊரில் கட்சிக்கொடிகள் அகற்றப்பட்டு ஒரு இடத்தகு வந்து நின்றன. புதிய விஷயமாய் சிவபெருமான் கருமைமாரி கோயிலுக்கு வந்து மாலை மரியாதை செய்து கொண்டு போனான். இனி தருமங்குடியில் சாராயம் மது விற்பனை இல்லை. குடித்து விட்டு தெருவில் நடக்க முடியாது என்பது அமுலுக்கு வந்து விட்டது. ஆரம்பத்தில் பிணம் சுடுதல், சவக்குழி தோண்டுதல், பாடைகட்டுதல், இறந்த விலங்குகளை அப்புறப்படுத்துதல், இவை காலம் காலமாய் செய்து வந்த மக்களிடமிருந்த இற்றுக் கொண்டன. பறை கொட்ட முடியாது என்று துவங்கிய விஷயம் இன்று என்னென்வோ புரட்சிகளைச் சாதித்துக் கொண்டு நிற்கிறது. நடவு நட்டு, பச்சமிளகாய் கடித்து பழையது உண்ணும் சனம் எல்லாம் மாறிப் போனது கண்டு அதிர்ந்து போனார் நடுப்பிள்ளை.
ஒரு
பக்கத்தில் சிவபெருமான், மற்றொரு பக்கத்தில் கண்மணி வேறு இடத்திலிருந்து சின்னவன், அவனக்குத் துணையாய் இந்த சந்திரகாசு இது என்ன விபரீதம் என எண்ணினார் நாட்டாண்மை. செம்மலர் நடத்திய ஊர்வலத்தைப் பார்த்து, இனி தான் நாட்டாண்மை என்று சொல்லிக் கொள்ளவே வெட்கிப் போயிருந்தார்.
நாட்டாண்மையும் நடுப்பிள்ளையும் இனி
பிரச்சனை அளவு கடந்துவிட்டதாயும், தருமங்குடியில் பழைய ஜபர் தஸ்து தாக்கு பிடிக்குமா என்றும் யோசிக்க ஆரம்பித்தனர்.
ஐயர்
வீட்டுத் திண்ணையில் இன்னும் அமர்ந்திருதார் நடுப்பிள்ளை. நாட்டாண்மை வந்து அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டு பேச்சைத் தொடங்கினார்.
’ஐயரு
இல்லையா’.
’அவரு
கோவில்ல அபிஷேகத்துக்குப் போயிருக்காரு’
’அந்த
அம்மா’.
’அவங்க
நாகம் கும்புட அரசமரத்தடிக்குப் போயி இருப்பாங்க. வழக்கமாய்ச் செய்யுறது’.
’வாத்தியார்
இருக்காப்புலயா?’
’கண்மணியா’
சிரித்தார் பிள்ளை.
’அவரு
நமக்கு வேட்டுத்தயார் பண்ணுறாரு. என்னா சொல்லுறீரு?’
’கண்மணிக்குச் சினேகிதன்
ஒருத்தர் துபாயில் இருக்கிறாரு’.
’அது
என்ன சேதி’.
’தருமங்குடியில கரும்பு
பிழிஞ்சி சக்ககரை எடுக்கிற ஆலய கட்டித் தாரேன்னு கடுதாசி எழுதி இருக்காறாருன்னு கேழ்வி’,
’என்ன
கதெ வுடுறீரு?’
’இல்லை.
வெஷயம் வாகடம் சொன்னதுதான். அவனுக்கு அரசபுரசலா சேதி கெடச்சிருக்கு’.
’கனவு
கினவு காணுறமா? இல்ல, இதெல்லாம் நெசமா’ கிள்ளிப் பாத்துக்கறேன்.
’நாம
இரண்டு பேருமா டவுனுக்குப் போயி அந்த சுத்த முற்போக்கு கட்சித் தலைவர்விட்ட யோசனை கேட்டு வர்ரணும்’.
’அந்த
அதிசுத்த முற்போக்கு கட்சி கிட்டப் போனா?’
’சுமுக ல
இருக்கிறவர ஜாதி பாசம் கொஞ்சம் உள்ளவரு; அந்த அசுமுக சும்மா வெறும் ஆளு.’
’இல்ல
ரெண்டு பேரையும் பாப்பம். சுமுக தலைவருவீரன் செங்குன்றத்து டவுன்ல அந்த நடுத்தெருவுல தான் சாகை’.
’சரி
போவுறது’ என்றார் நாட்டாண்மை.
’சாரயக்கடை.’
’என்னான்றே?’
’இங்க
குடிக்கக் கூடாதுன்றானுவ. கடைவைச்சியும் பாக்க முடியாது’.
’புலி
வர்ரவரைக்கும்
நரிவ குதியாளம் போடும்தான்’.
’புலின்னா?’
’வீரரு.’
’அதிசுத்த
முற்போக்கு கட்சில என்னா எலியா இருக்கு’?
’அப்படிச்
சொல்லுல கதெ முக்கியம்.ஒரு யோசனை கேட்போம்’.
தெரு
வழியே ஒரு வெள்ளை நிறக்கார் ஒன்று வீச்சென்று சென்று கொண்டிருந்தது. அது அசுரவேகத்தில் சென்றது.
’இது
என்னா காரு?’
’நீங்க
சொல்லுறது சரியாபோச்சி.’
’இதுவும்
அந்த கண்மணி வாத்தி வேலத்தான்.’
நடுப்பிள்ளையும்.
நாடடாண்மையும்
திண்ணையை விட்டு இறங்கி நின்றுகொண்டார்கள். எதிரில் பேரூர் பிள்ளை வந்து கொண்டிருந்தார்.
’நமஸ்காரம்’
என்றனர் இருவரும் ஒன்றாய்.
’கோவிலுக்கு
இன்னிக்குப் பருவம்.’
’எல்லாருக்கும் இன்னிக்குப்
பருவம்தான்’ என்றார் நாட்டாண்மை சிரிப்பாக.
’உங்களுக்கு
என்ன பருவம், கிருத்திகை, பிரதோஷம் இதுகதான்,’ நடுப்பிள்ளை சன்னமாய்ச் சொன்னார்.
’இதுல
உங்களுக்கு என்னா எடஞ்சல்?’ என்றார் பேரூர் பிள்ளை.
’இல்ல
ஊரு பீயா போவுது’.
’ஊரு,
இப்பத்தான் ஊரு ஆவுது.’
’ஏது?
சங்க கெட்டுப்போச்சுது’ என்றார் நாட்டாண்மை.
’காரு
போவுது பாத்தீரா?’ என்றார் பேரூர் பிள்ளை.
’பாத்தேன்’.
’ஆரு
இது’ நாட்டாண்மை.
’ஆரு?
கண்மணி, சிவபெருமான், சின்னவன் அப்புறம், அந்த தாடி வச்சிரகிறபாயி’ பேரூர் பிள்ளை பதில் சொன்னார்.
’வண்டி
நின்னு போச்சி.’
வண்டியிலிருந்து தாடிக்காரர்
இறங்கிக் கொண்டார்.
’வணக்கமுங்க’
ஓங்கிச் சொன்னார்.
’பேரூர்
பிள்ளை வணக்கம் வாங்க’ என்று பதில் சொன்னார். நாட்டாண்மையும் நடுப்பிள்ளையும் திரும்பிக் கொண்டு நின்றனர். இருவரும் முணுமுணுத்துக் கொண்டிருந்தனர். தாடிக்காரர் மீண்டும் வண்டியில் ஏறிக்கொண்டார். கண்மணி சிவபெருமான், சின்னவன் யாரும் வண்டியை விட்டு இறங்காமல் அப்படியே அமர்ந்து கொண்டிருந்தனர்.
’அந்த
பக்கமா திரும்பிக்கிட்டா வெஷயம் நின்னுபுடும்னா’ என்றார் பேரூர் பிள்ளை.
’தாண்டிப்
பேசுறீர் ’என்றார் நடுப்பிள்ளை.
’நேரம்
சரியில்லை. உம்மப் பெரிய மனுஷன்னு நெனைச்சேன்’.
நாகலிங்கம்
தெருவில் பைய நடந்து வந்து கொண்டிருந்தான்.பேரூர்பிள்ளை தருமைநாதர் கோவிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
’இவுனுவ
பாடு தேவலாம்’ என்றார் நாகலிங்கத்தைப் பார்த்த நாட்டாண்மை.
நாகலிங்கம்
பிள்ளையிடம் வந்து வணங்கி நின்றான். நாட்டாண்மை நாகலிங்கத்தை முறைத்துக் கொண்டு நின்றார்.
’சின்னவரு
காருல போறாரு?’ என்றார் நடுப்பிள்ளை.
’சிங்காரம்
மொவன் சீப்புல ’போறாரு’ நாட்டாண்மை.
’போவுட்டுமே
காலத்துக்கும்
அப்படியே இருக்கணுமான்னுதான்’.
’ஏலே
என்னா பேசறே?’ என்று அதட்டிப் பேசினார் பிள்ளை.
’ஒண்ணும்
இல்லிங்க’ சிரித்துக்கொண்டான் நாகலிங்கம்.
’காரு
எங்க போவுது?’
’காரு
தெற்க போவுது’.
’என்ன
சேதி?’
’சேதி
போனாத்தான் தெரியும் ஏதும் பெரிய விஷய மாத்தான் இருக்கும்’.
பிள்ளையிடம்
அழுத்தமாய்க் சொன்னான் நாகலிங்கம். பிள்ளை, நாட்டாண்மை, நாகலிங்கம் மூவரும் நடந்து கொண்டிருந்தார்கள்.
தென்னை
மரச்சாலையில் நின்று கொண்டிருந்தது கார். வண்டியிலிருந்து நால்வரும்
இறங்கிக் கொண்டிருந்தார்கள்.
’என்னா
செய்யுறானுவ’ என்று ஆரம்பித்த வாகடம் ’வெஷயம்’ என்று ஓங்கிக் கத்தினான்.
’வாகடம்
இங்கு எங்க?’ என்றார் நாட்டண்மை.
’ஒரு
தேன்கூடு இருந்திச்சு அதான் தேடுறேன். அமாசிக்குள்ள அழிச்சிப்புணும். இல்லன்னா அம்புட்டு தேனும் போச்சு.’
’உனக்கும்
எதாவது ஆப்டுகினு இருக்கு’ என்றார் நாட்டாண்மை
வாகடம்
சிரித்தான்.
’காரு
போவுது பாத்தியா?’
’பார்த்தேன்’
’பின்ன,
தேனு கீனுங்கறே’.
’எல்லாம்தான்’.
’வெஷயமாத்தான் நீனும்
பேசுறே’.
சிரித்தான்
வாகடம்.
அனைவரும்
கார் நிற்கும் இடத்திற்குச் சென்று கொண்டிருந்தார்கள்.தாடிக்கார பாயி, காருள் அமர்ந்து முக்கிய மானதொரு விஷயத்தை விவாதித்துக் கொண்டிருந்தபடியே இருந்தார்.
சிவபெருமான்.
நடுப்பிள்ளையும
நாட்டாண்மையும்
வருவதைப் பார்த்து அதிர்ந்து போனான்.
’எல்லாருக்கும் வணக்கம்’
என்றான் சிவபெருமான். ’இவுரு தீனுபாய்’ வேகமாய்ச் சொன்னான் சிவபெருமான். தீன்பாய் வணக்கம் சொன்னார்.
நடுப்பிள்ளையும் நாட்டாண்மையும்அறிமகம் சொல்லி முடித்தனர்.
’நம்ப
சின்னவன் அப்பா நாகலிங்கம், இது வாகடம் காசி’ அறிமுகம்
சொன்னான் சிவபெருமான்.
’ஏதும்
சினிமா கொட்டா கிட்டா’ என்று ஆரம்பித்தார் நடப்பிள்ளை.
’அப்படி
எல்லாம் ஒண்ணுமில்லே’.
’பின்ன
வேற’ என்றார் பிள்ளை பாயிடம்.
’சிவபெருமான்
வயல்ல ஒரு ஆல போட்டம்னா, இந்த பக்கத்து சனம் கரும்பைச் சுமந்துகிட்டு அலையவேணா அதான் ஒரு சின்ன யோசனை’ என்றார் தீன்பாய்.
’ரொம்ப
சின்ன வெஷயம்’ என்று சிரித்தான் வாகடம்.
’சக்கரை
ஆலை’ கத்தினான் நாகலிங்கம்.
நடுப்பிள்ளை
அடிமனத்தில் மலைத்துப் போனார்.
’ரொம்ப
நல்ல வெஷயம்’ என்றார்.
’ஏகத்துக்கு
ஆவுமே’ என்றார் நாட்டாண்மை.
’ஆவுட்டுமே’
என்றார் தீன்பாய்.
நாட்டாண்மைக்குக் கண்
இருட்டிக்கொண்டு
வந்தது. ஒருமுறை கண்மணியைப் பார்த்துக் கொண்டார். இவ்வளவு விஷயத்தையும் தன் மனதிற்குள் போட்டுக் கொண்டு அழுத்தி அமுத்தமாய் எப்படி இந்த கண்மணி?என்று மனதிற்குள் கணக்குப் போட்டார்.
’எல்லாருமா
பார்த்துக்கணும்’
என்றார் தீன்பாய். சிறிது நேரம் அமைதியாக நின்றார் அவரே மீண்டும் தொடர்ந்தார்.
’நான்
கண்மணியோட தொடர்பு கொண்டுதான் இதுக எல்லாம் திட்டம் போட்டம். சொல்லனும்னா கண்மணி எனக்கு கிளாஸ்மேட். அவரு
முதல் ராங்கு வாங்குவாரு, நான்சாதாரணமாப் படிப்பேன் அவ்வளவுதான். கண்மணி ஒரு காரியம் ஆசைப்பட்டாரு; அதைச் செய்து முடிக்கணும்னு முடிவு செஞ்சேன்’,
’தலைவரு
என்ன சொல்லுறாரு?’
சிவபெருமான்
சிரித்துக் கொண்டான்.
’இன்னும்
கொஞ்சம் நாள்ல இங்க ஆலை திறக்கப்பட்டு இயங்கும் உங்கள் எல்லாருக்குமபொறுப்பு மேல பொறுப்பு இருக்குது’.
’எப்படி?’
என்றார் பிள்ளை.
’எல்லாத்தையும் போகப்
போக பாக்கலாம்’ என்றார் பாய்.
வாகடம்
பொத்தென்று தரை மீது நெடுஞ்சாண்கிடையாக விழுந்து பாயின் இரண்டு கால்களையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான் யாருமே சிறிதும் எதிர்பார்க்காமல் இது நடந்தது குறித்து அசூசைப் பட்டான் சிவபெருமான்.
’இது
எல்லாம் என்ன?’ நடுப்பிள்ளை வெடுக்கென்று கேட்டார்.
’அல்லா’
என்றார் பாய்.
’கட்வுளே,
உங்க ஆலைல கூட்டித்தள்ளி அள்ளுற ஒரு லேல குடு பாய் உங்க செருப்பாய் தேங்சி உழைப்பேன்’ தேம்பித் தேம்பி அழுதான் வாகடம்.
வாகடத்தைத்
தூக்கி நிறுத்தினார் பாய் தன் சட்டைப் பையில் இருந்த இரண்டு ஐநூறு ருபாய் நோட்டினை எடுத்து வாகடம் கைகளில் வைத்துக் கையை மூடினார்.
’இந்த
ஆலைக்கு முதல் ஆளு நீதான். வாட்ச்மேனா வேலை பாக்குற’, கண்மணியும் சிவபெருமானும் எல்லா பொறுப்பையும் பாத்துகுவாங்க’ என்றார் பாய். இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டினைத் திருப்பி திருப்பிப் பார்த்துக் கொண்டான் வாகடம்.
ஐநூறு
ரூபாய் நோட்டு என்று கத்தினார் நாட்டாண்மை வாகடத்திற்குப் பல் அத்தனையும் வெளித் தெரிந்த மறைந்தது.
’ஆயிரம்
ரூபாய்’ என்று ஓங்கிக் கத்தினான் வாகடம்.
’வுடுங்க
பெரிய விஷயம் இல்லே’ என்றான் சிவபெருமான்.
தீன்பாய்
காரில் ஏறிக்கொண்டார். வாகடம் காரைத் தொட்டுப பார்த்துக்கொண்டான் மீண்டும் மீண்டும் காரைத் தடவினான் கண்மணி ஆசிரியருக்கும் தீன்பாயுக்கும இப்படி ஒரு தொடர்பா என்று எண்ணி வியந்து போனான் வாகடம்.
29
நடுபபிள்ளையும் நாட்டாண்மையும் ஒரு
பூகம்பம் நிகழ்ந்து போனதாய் எண்ணினார்கள். இனி தீன்பாய், கண்மணி, சிவபெருமான், சின்னவன் இப்படியாய் ஊரில் பெரிய மனிதர்கள் உருவாகிப் போவார்கள் என்று எண்ணி அதிர்ந்து போய்க் காணப்பட்டார்கள். நடுபபிள்ளையும் நாட்டாண்மையும் இன்னது செய்வது என்று தெரியாமல் காணப்பட்டார்கள். இது எல்லாம் எப்படி நடக்கிறது என்பது அறியமுடியாமல் திக்குமுக்காடினார்கள்.இருவரும் அருகிலுள்ள தாலுக்கா நகரம் செங்குன்றத்துக்குச் சென்று அதிசுத்த முற்போக்குக் கட்சித் தலைவரையோ, சுத்தமுற்போக்குக் கட்சித் தலைவரையோ அணுகி இதற் கெல்லாம் யோசனை கேட்பது என்று தீர்மானித்தார்கள்.
அன்று
அதிகாலையிலேயே
நடுப்பிள்ளையும்
நாட்டாண்மையும்
கிளம்பினார்கள்
இருவரும், சாலைப் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து கொண்டிருந்தனர். இன்னும் தருமங்குடி விழித்துக்கொள்ளாமல் இருந்தது. பஸ்ஸைப் பிடித்து இருவரும் ஏறி அமர்ந்தகொண்டார்கள். அரைமணி நேரப் பயணம்தான். பயணம் முடியும் தருவாயில் இருவரும் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டனர்.
’தலைவரு
பதவிக்கு உம்பர ஆளு நிக்காம வாபஸ் வாங்கி இருந்தீர்னா, இப்ப இப்படி ஆவுமா?.’
’உம்பரு
ஆளு வாபஸ் வாங்கிருக்கலாம்ல?’ என்றார் நாட்டாண்மை.
’ரெண்டு
பேருமா கோட்ட வுட்டுப்புட்டம்.’
’அதுக்கு
இப்ப என்ன செய்யறது?’ என்றார் நாட்டாண்மை.
’வந்த
கூத்தியா ரயிலுல போவுறா, நாம குசுவு குடுச்சிகினு போவுறதுதான்’.
’நாம
அதுக்கு என்ன செய்ய?’
’எல்லாம்
அந்த வாத்தியால வந்த வெனை’ என்ற தலையில் அடித்தகொண்டார் பிள்ளை.
’கட்சிகாரப்
பயலுவ வோட்டு வாங்குற காலத்துல நாம்ளை துரத்துவானுவ. இப்ப நாமதான் அவனுளை தேடுணும்’.
’அது
அதுக்குக் காசு வாங்கிக்கறம்ல, சும்மாவா செய்யுறம்’ என்றார் பிள்ளை.
முதலில்
அதிசுத்த முற்போக்குக் கட்சித் தலைவர் இல்லம் நோக்கி இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.
’நடந்தே
போவுறதா.’
’இல்ல,
ஏரோப்ளான்லு வோறம்’ என்றார் நடுப்பிள்ளை. செங்குன்றத்து பிரதான வீதியில் இருவரும் நடந்து கொண்டிருந்தார்கள். வீதியின் கடைசியில் அய்யனர் கோவில் ஒன்று அழகாய் இருந்தது.
’ஊரு
கடைசிலதான் அய்யனார் கோவிலு இருக்கும்’.
’இப்பவும்
கடைசிலதான் இருக்கு. ஊரு பெருத்து நீண்டு போயிடிச்சு, அதான் காரணம்’.
அதிசுத்த
முற்பாக்குக் கட்சி ஆதிமூலத்தின் வீட்டை இருவரும் நெருங்கிக் கொண்டிருந்தனர்.
’ஆமாம்
ஆதிமூலத்தின் அதே வெள்ளைக்காரு. அ.ச.மு.கன்னு எழுதிஇருக்கு’
’ஆமாம்’
என்றார் நடுப்பிள்ளை.
’உள்ளாற
யாரு இருக்கா?’ என்றார் நாட்டாண்மை. ஆதிமூலத்தின் வீட்டு வாயில் காவலாளிகள் இருவரும் நின்று கொண்டிருந்தனர்.
’ஐயாவைப்
பாக்கணும்’ என்றார் பிள்ளை.
’உள்ற
ஆளு இருக்கு’ ஒரு காவலாளி.
’யாரு?’
’தீனுபாய்’.
’துபாய்க்காரரு?’
’ஆமாம்
அவரேதான். தங்கதுரை, தருமதுரை, தருமங்குடில ஒரு ஆலை கட்டுறார்னு கேள்வி. அது வெஷயமாத்தான் பேச்சு நடக்குது.’
ஆதிமூலத்தின்
வீட்டு வாயிலில் கட்சிக் கொடிக் கம்பம் பளபள என்று இருந்தது. சலவைக்கல்லால் சுற்றிலும் அதற்கு பீடம் இருந்தது. கொடிமரத்துக்குக் கீழாய் வான்கோழி சிலை ஒன்று சிறகு விரித்துக்கொணடிருந்தது. அ.ச.மு.கவின் சின்னம் வான்கோழி என்பதை அறிவித்த வண்ணமாய் அச்சிலை அழகாய்க் கொலுவிருந்தது.
அ.சு.மு.கவின் ஆதிமூலத்தை யாரும் சாதாரணமாய்ப் பார்த்துவிட முடியாதுதான். வீட்டு வாயிலில் ஒரு தாடிக் காரர் வந்து நின்று கொண்டார்.
’என்ன
சேதி?’
’தலைவரு
பாக்கணும்’.
’நீங்க
எந்த ஊரு?’
’தருமங்குடி’.
’யாரு?’
’நடுப்பிள்ளை,
நாட்டாமை’.
’சரிதான்’
அணாயாசமாய் தலையை ஆட்டினார் தாடிக்காரர்.
’உள்ளார
தீனுபாய் இருக்காரு.அவரு ஒரு சக்கரை ஆலை கட்டுற வெஷயமாய்ப் பேசுறாரு’.
’எங்களுக்கும் தெரியும்’.
’இருக்கலாம்
ஆனா தீனுபாயுண்ட கைமாத்து வாங்கித் தான் அ.சு.மு.கட்சி எலட்சன்ல நின்னுது. ஐயா செயிச்சு வந்தவரு. தீனுபாயு எப்ப வெளில வர்ராரோ அப்பதான் உண்டு தீனுபாயு பெரிய சமாச்சாரம், நீங்க நெனைக்கிற மாதிரி சாதாரண வெஷயம் இல்லே என்றார் தாடிக்காரர்’.
’பெறகு’
என்றார் பிள்ளை.
’போயி
வாங்க பேசிக்கலாம்’ தாடிக்காரர் கறாராய்ச் சொன்னார்.
பிள்ளையும்
நாட்டாண்மையும்
பேந்த பேந்த விழித்தனர்.
’செத்த
நாழி செண்ணு வரலாம்.’
இருவரும்
தாடிக்காரர் சொன்னதைக் கேட்டு வெளியே வந்தனர்
’இது
ஒண்ணும் ஆவுற கதெ இல்லே’.
’மோசத்துல
மோசம் இது’ என்றார் நாட்டாண்மை.
’நேரா
சுத்த முற்போக்கு கட்கிக்காரரு வூட்டுக்குப போவுலாம்’ என்றார் பிள்ளை.
’அதுதான்
சரிப்பட்டு வரும்’ என்று பதில் சொன்னார் நாட்டாண்மை.
தூரத்தில்
நின்று கொண்டிருந்த தாடிக்காரர்,
’காபி
செலவுக்கு எதானிச்சிம்’ என்று குரல் கொடுத்தார்.
’வர்ரம் வர்ரம்’’ என்று
இருவரும் புறப்பட்டனர். சுத்த முற்போக்கு கட்சித் தலைவர் வீடு ஊர் கோடியில் இருந்தது.
சு.மு. கட்சித் தலைவர் எப்படியும் பிரச்சனைக்குக் கை கொடுப்பார் என்று. இருவரும் நம்பிக்கை கொண்டனர்.
சு.மு.கட்சி தலைவர் வீரன் வீட்டு வாயிலில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நின்று கொண்டிருந்தன. இரண்டு நாய்கள் சண்டையிட்டு மண்ணைப் பிராண்டிக் கொண்டிருந்தன.
மீசை
இல்லாத ஒரு கிழம், தலைவர் வீட்டு வாயிலில் அமர்ந்து யோசனையில் இருந்தார்.
’யாரைப்
பாக்குணும்?’
’தலைவரை’
என்றார் நடுப்பிள்ளை.
செத்த
இருங்க என்ற கிழம் உள்ளே சென்றது
நடுப்பிள்ளையும் நாட்டாண்மையும் சு.மு.கட்சி தலைவரின் உதவி மட்டுமே தங்களுக்கு வேலைக்கு ஆகும் என்ற முடிவில் திண்ணமாய் இருந்தனர்.
வீட்டின்
உள்ளிருந்து சன்னக் குரலில் ஒரு பதில் வந்தது.
’பூசையில்
இருக்காரு’.
’நாங்க
இருக்கிறோம். ஐயா வரட்டும்’ என்றார் நடுப்பிள்ளை,
சற்று
நேரத்திற்கு எல்லாம் மீசை இல்லாத பெரியவர் மீண்டும் வெளிப்பட்டார்.
’நீங்க
குந்துங்க.’
’தலைவரு
வருவாரா?’ நாட்டாண்மைதான் கேட்டார்
’எதுக்கு்ம்பொறுமை வேணும்.
பூசையில இருக்காரு. இன்னிக்கு வெள்ளிக்கிழமை. கொஞ்சம் கூடுதலா நேரம் ஆவும்’.
’மலைக்குப்
போறாரு போல’ என்றார் நாட்டாண்மை.
’ஆமாம்’
என்றார் பெரியவர்.
பூசை
முடிந்து இருக்கவேண்டும். சு.மு.கட்சி தலைவர் வெளிப்பட்டார். கழுத்தில் பல மணிமாலைகள் கொலுவிருந்தன. இடுப்பில் கட்டியிருந்த மேல் துண்டை எடுத்து உதறிக்கொண்டார்.
’சாமி
சரணம்.
சாமி
சரணம்’ என்றனர் இருவரும்.
’யாரு,
தருமங்குடி சாமிவுளா?’
’சாமி,
தருமங்குடில சின்னப் படுறோம்.’
’என்ன
கேலி பேசுது சாமிவுள்ளாம்.’
’ஆமாம்
சாமி, கேலி இல்லே. ஊரு பீயா நாறிக் கெட்டுகிட்டு வருது. தலைவரு பலான ஆளு, தங்களுக்கு தெரிஞ்ச வெஷயம்தான்’ என்றார் பிள்ளை.
’ஆமாம்.
நீங்க சின்ன புத்தி படைச்சிங்க, சின்னப் படுறீங்க’.
’அந்த
வாத்தியால வந்ததுதான் வென எல்லாம்’.
’அந்த
வாத்தி சுத்த பேக்குன்றேன். அவனைக் கோழி அமுக்கிறாப்புல அமுக்குணும். ஊருக்கு வாத்தி வெவரமா வந்தா நாமதான் எச்ரிக்கையா இருக்கோணும்’.
’என்னா
செய்யுணும்? ஒண்ணும் புரியல சாமி’
’வெவரமா
இருக்கிறவனுக்கு
வேல குடுத்துகிட்டே இருக்கணும்; இல்லன்னா ஆபத்துதான். தெருவுல பஞ்சாயத்து ஊருல திருவிழா, வெளியூர்ல மாநாடு தோளில துண்டு, கழுத்துல மாலை, காபி டிபன் சோறு, நாற்காலி மாலை மரியாதெண்ணு எதாவது கெளப்பி
வுட்டுகிட்டே இருக்குணும், எதிலயாவது படிச்சவன் லபக்குன்னு வாயப் பொளந்து புடுவான்.
நெசண்ணு நம்பி குப்புத்துகுவான்’, உங்களுக்கு வெஷயம் தெரியல சாமி என்றார் சுமுக தலைவர்.
பற்களை
எல்லாம் காட்டிச் சிரித்தார் நடுப்பிள்ளை.
’இப்ப
சிரிச்சி என்ன ஆவுறது? பத்துகாசுல, பல ஆயிரங்கதை ஆவும்’.
’சாராயம்
ஊர்ல கிடைக்கிறது இல்லே. குடிச்சவன் தெருவுல நடக்கக் கூடாதுன்னு ஊரு கட்டுப்பாடு’ என்றார் நாட்டாண்மை துயரத்துடன்.
’ஆரு
யோசனை?’
’அந்த
வாத்தியால வந்ததுதான் இதுக எல்லாமே.’
’அடி
மடியில கைய வைக்கிறான் வாத்தி’ என்றார் தலைவர்.
நடுப்பிள்ளைக்கும் நாட்டாண்மைக்கும் சற்று
நிம்மதியாய் இருந்தது.
’ஊரு
தலைவரு தங்கச்சி செம்மலரு, கட்சி கொடிகள் எல்லாம் புடுங்கி ஒரு மைதானத்தில வரிசையா நட்டுப்புட்டா அது ஒரு கொளறுபடி.’
’நம்ம
சுமு கட்சி கொடியையுமா?’
’ஆமாம்’
என்றார் நாட்டாண்மை.
’மயிரைப்
புடுங்கிகிட்டு
இருந்துட்டு இப்ப செய்தி கொண்டாரிங்களா?’
இருவரும்
கைகளைப் பிசைந்து கொண்டு நின்றனர்.
’கெவுரவம்
போவுது மானம் மரியாதை போவுது, அப்பறம் உசிரு என்ன மசுறு.’
நாட்டாண்மையும் பிள்ளையும்
ஒருவரை ஒரவர் பார்த்துக் கொண்டனர்.
’ஒரு
பதது ரூபாய் தயார் பண்ணுங்க. மதத கதைய நான் பாத்துகறேன். எரியறது இழுத்தம்னா கொதிக்கிறது நிக்குது’
சுமு
கட்சியின் தலைவர் எழுந்த உள் சென்றார். நாட்டாண்மையும் நடுப்பிள்ளையம்
’அப்பறம்
வந்து ஐயாவைப் பாக்குறம்’ என்றனர்.
’சாமி
சாமின்னு பேசிகினு இருந்தவரு எப்படி சட்டுனு ஆசாமியா எறங்கிகிட்டாரு பாத்தியா?’ என்றார் நாட்டாண்மை குசுகுசு என்று.
ஒண்ணும்
பேசாத இப்ப; வெஷயம் எட்ட இருக்கிற வரைக்கும் மரியாதைதான், நெருக்கமா ஆனாத்தான் தெரியுது ஜுடு! சொல்லிப் புறப்பட்டார் பிள்ளை. வீரன் வீட்டு வாயிலில் சண்டையிட்டுக் கொண்ட நாய்கள் ஒன்றை ஒன்று நக்கி, நட்பு பாராட்டிக் கொண்டிருந்தன. மீசை இல்லாத பெரியவர் உறக்கத்தில் இருந்தார்.
’இவருகிட்டச்
சொல்ணுமா’
’பழ
முறத்துண்ட பாத்தியம் கொண்டாடுறமா?’ வேலயப் பார் என்றார் பிள்ளை.
30
தருமங்குடித்
தெருவில் குழாய்கள் தண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தன. தருமங்குடி பள்ளி சரியாய் நடை பெறுகிறது. சிவபெருமான் ஊரை நன்கு கவனித்து வந்தான். தருமங்குடித் தெருக்கள் சுத்தமாய் இருந்தன. ஊர்க் குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படுவது உறுதி செய்யப்பட்டது.
வாகடம்
காசி முழுக்கைச் சட்டை அணிந்து கொண்டிருந்தான். வேட்டி அணிவது நிறுத்தி முழுக்கால் சட்டை அணிந்து அனைவரையும விந்தையில் ஆழ்த்தினான். சர்க்கரை ஆலை கட்டுமானம் தளவாடங்கள் வந்திறங்கிக் கொண்டிருந்தன. ஊரில் லாரிகளில் சாமான்கள் வருவதும் போவதுமாக இருந்தன. சர்க்கரை ஆலை நிர்மாணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. கண்மணி தொடர்ந்து அந்தப் பணியையே கவனித்து வந்தார். சர்க்கரை ஆலை வருவது குறித்து தருமங்குடியே பெருமை கொண்டது. தருமங்குடியின் மேல் சாதி மக்கள் வாழும் பகுதிக்கும், தாழ்த்தப்பட இன மக்கள் வாழும் பகுதிக்கும் இடை சர்க்கரை ஆலை அமைந்து நிறைத்துக் கொண்டது. அறிவியல் சாதனைகள், அதன் வேறு வடிவங்கள் சமுதாயப் பிரிவினைகளை அப்போதைக்கு அப்போது விழுங்கித்தான் வந்திருக்கின்றன. போக்குவரத்தும் மருத்துவக் கண்டுபிடிப்புக்களும், கல்விக்கூடங்களும் பொழுது போக்குக் கூடங்களும் ஆலைகளும் தொழிற்கூடங்களும் சமுதாயத்தின் நச்சுப் பிரிவினைகளின் முனை மழுங்கவேசெய்திருக்கின்றன. மகளிர் விடுதலையில் அறிவியல் தன் பெரும்பங்கினை ஆற்றி அவர்களைச் சரிமனிதர்களாக உணர வைத்திருக்கிறது. தருமங்குடிக்கும் அறிவியலின் தாக்கம் வெகுவாகிப் போனது. வாகடம் காசியை முழுக்கால் சட்டை அணிந்து நெஞ்சை நிமிர்த்தி நடக்க வைத்தது ஒரு பெரிய விஷயமே. தருமங்குடி இரண்டு பகுதியாய் பிரிந்து கிடந்தது என்பது பழைய கதை. உழைப்புத் தேவதை, மக்களின் பல பகுதியினரையும் ஒன்றிணைக்கத் தொடங்கினாள். தருமங்குடி ஒரு புதிய கலாச்சாரத்தை சுவாசிக்கக் கற்றுக் கொண்டது. தரமங்குடியின் ஊர் துவக்க எல்லையிலே ஒரு விளம்பரப் பலகை இப்படி அறிவித்தது!
"இந்த ஊரில் குடிப்பழக்கம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. இங்கு பெண்கள் கண்ணியத்துடன் நடத்தப்படுகிறார்கள். சாதிச் சண்டைகள் உருவாக்க நினைப்போர் தருமங்குடியினின்று நிரந்தரமாய் விலக்கி வைக்கப் படுவார்கள்."
சந்திரகாசு
தலைநிமிர்ந்து
நடந்து கொண்டிருந்தான். வாகடம் ஒரு நாள் சந்திரகாசு தெருவில் நடந்து செல்லும் போது பொத்தென்று அவனின் கால்களில் விழுந்தான்.
’என்னை
மன்னிச்சுட்டேன்
சொல்லு.
ஏன்
என்ன வெஷயம்?’ என்றான் சந்திரகாசு.
’அத
கேக்காதே. நான் ஒரு
அலுப. சின்ன புத்தி படைச்சவன்.’
’அது
எல்லாம் ஒண்ணும் இல்லே’.
வாகடம்,
சந்திரகாசுவை மொட்டையோடு தொடர்பு படுத்தி தப்பு தப்பாய்ச் சேதி சொன்னதை எண்ணி மனம் வருந்திப் பேசினான்.
’வுடு
பச்சைப் புள்ள யாட்டம் நடந்துக்காத’ என்றான் சந்திரகாசு.
சந்திகாசுக்கு இது
எல்லாம் அறிந்து கொண்ட விஷயமாய்ப் படவே இல்லை மனம் சுத்தமாய் அப்பழுக்கு அறியாததாய் பழகிக் கொண்ட சந்திரகாசுக்குச், சில்லரை விஷயங்களின் ஆக்ரமிப்பு என்பது அறியாத ஒன்றாய்த் தெரிந்தது.
சந்திரகாசு
தன் வழியில் சென்று கொண்டிருந்தான். ’நமக்குத்தான் ’ஈன புத்தி’ என்று சொல்லிக்கொண்டு நடந்தான் வாகடம்.
’ஆலை
வேல ஆவுதா’ ஒருவரியில் கேட்டான் சந்திரகாசு.
’அனேகமாய்
முடிஞ்ச மாதிரி’ என்றான் பதிலுக்கு வாகடம். ஊரில் புதிய புதிய மனிதர்களாய்த் தெரிந்தார்கள். அடிக்கடி கட்டுமானப் பணியாளர்கள் வந்து போனார்கள். ஆலையின் புகைக்குழாய் தருமங்குடிக்கு ஒரு அடையாளச் சின்னமாய் வானைத்தொட்டுக் கொண்டு நின்றது.
சின்னவன்
இப்போதெல்லாம்
ஒய்வின்றி அலைந்து திரிந்து கொண்டே இருந்தான். கண்மணிக்குத் துணையாய் தான் இருப்பதில் தனிப்பெருமை கொண்டு செயற்பட்டான். சின்னவன் எந்த சந்தேகத்தையும் கண்மணி ஆசிரியர் மூலமாய் நிவர்த்தி செய்து கொண்டு வந்தான். கண்மணி இன்னும் நெடிய விடுமுறையிலே இருந்து வந்தார் ஒரு நாள் சின்னவன் கண்மணியிடம்.
ஒரு
பகுதி மக்களைத் தனியாய் ஊரின் புறமாய் வைத்த கொடுமைக்குக் காரணம் கேட்டான்.
கண்மணிக்குத்
தெரிந்த காரணங்களை எல்லாம்சொல்லி சின்னவனுக்கு விஷயத்தை விளக்கலானார். மாட்டிறைச்சி உண்பது மட்டுமே பிரதான காரணமாய் இருந்திருக்க வேண்டும் என்று விளக்கம் சொன்னார். மாட்டிறைச்சி ஆடு மீன் புலால் உண்ட மேல் சாதிக்காரர்கள், புத்த மதம் தோன்றியபின். எப்படி எப்படி மாறிப்போனார்கள் என்று விளக்கினார். அம்பேத்கார் எழுதிய நூல்களிலிருந்து மேற்கோள் காட்டி விஷயத்தைப் புரிய வைத்தார் . சின்னவன் இவற்றை எல்லாம் கேட்டு மலைத்துப் போய் நின்றிருக்கிறான் தன் தந்தை கத்திப் பெட்டியுடன் தெருத்தெருவாய் வலம் வருவதும், மிஞ்சிப் போனவற்றை சட்டியில் வாங்கிச் சாப்பிடுவதும், சிங்கார வேலுவின் சின்னப்பட்டுப்போன வாழ்வும் ஏன் இப்படி? ஆகிப்போனது என்று எண்ணுவான்.
’ இத்தனை க்கேவலமாக நாம் ஏன்
லோலு படுறம் இதுக்கு க்காரணம்
என்ன ?’ என்று தத்துவார்த்த விஷயமாயும் சில சமயங்களில் கண்மணியுடன் விவாதிப்பான்..
கடவுள்னு ஒரு சக்தி இங்க நடக்குற கொடுமைங்க அத்தனையும் பாத்துட்டு
சும்மாதான் இருக்குதா’
’
யாருக்கும் இன்னும் அது வௌங்காத வெஷயம்’ என்பார் கண்மணி.
’இன்னைக்கு
அம்மணமாய் நிக்கிற சனங்களுக்கும, பசின்னு தவிக்கிற மக்களுக்கும் ஏதும் செய்யாம, புதுசா நாம ஒண்ணும் மானத்தைப் பொளந்திட்டுச் சாதிக்க முடியாது’ என்பார் கண்மணி.
தேசபிதா
காந்தி பற்றியும் விடுதலை இயக்கத்தை மக்கள் இயக்கமாய் மாற்றிய மகோன்னதம் பற்றியும் கண்மணியுடன் விவாதித்தான் சின்னவன் சின்னவன் நாளுக்குநாள் நிறைமனிதனாய் மலர்ந்து வருவது குறித்துப் பெருமை கொண்டார் கண்மணி. இப்போதெல்லாம் சின்னவன் மேல்சட்டையோடு அதன்மேல் ஒரு துண்டு அணிவது வழக்கமாகக் கொண்டான். இடுப்பில் வெள்ளை வெளேர் என்ற எட்டுமுழு வேட்டியைக் கட்டிக்கொண்டு வந்தான். மொட்டைக்குத் தன் மகனைப் பார்ப்பது பெருமையாக இருந்தது.
கண்மணிதான்
கேட்டார்
’உன்
பேரு சின்னவனே?’
’இன்னிக்கு,
இவ்வளவு நாள் கழிச்சிக் கேக்குறீங்க’.
’ஆமாம்.
என்னைக்கு கேட்டா என்னா?’
ஞான
சம்பந்தம்’.
’பின்ன
ஏன் சின்னவன் ஆகிப் போனே?’
’நடுப்பிள்ளைப் பேரு
ஞானசம்பந்தம். அதுதான் எனக்கும் வைச்சிருக்காரு எங்க அப்பன்’.
’அவருதான்
நடுப்பிள்ளையாகி, ஞானசம்பந்தங்கறது யாருக்கும் தெரியாம வைச்சிருக்காரு. உம் பெயரு சின்னவன்னு தெரிஞ்சி, ஞானசம்பந்தம்கறதுதான் மறைஞ்சி போயிக் கெடக்குது.’
சின்னவன்
அமைதியாய் நின்றான்.
இனி
உன்னைத் தோழர் ஞானன்னுதான், கூப்பிடப் போறேன். சின்னவன் ஒருமுறை தோழர் ஞானன் என்று சொல்லிப் பார்த்தான். மீண்டும் ஒரு முறை இப்புவியில் தான் பிறந்ததாய் எண்ணிக் கணநேரம் பெருமை கொண்டான்.
31
சுமு
கட்சியின் வீரன் யோசனைப்படி நடுப்பிள்ளையும், நாட்டாண்மையும் தலா ரூபாய் ஐயாயிரம் என்று பத்தாயிரத்தைச் செங்குன்றத்துக்கு அனுப்பினார்கள். சுமுகவில் அடி ஆட்கள் நிரந்தரமாய் இருந்தார்கள். அவர்கள் வசம் கண்மணிக்கு எப்படி பாடம் புகட்டுவது என்பதுபற்றி வீரன் விபரமாய்ச் சொல்லி இருந்தார். அவர்களைத் தருமங்குடிக்கு அனுப்பிக் கண்மணியைச் சரியாய் கவனித்து விடுமாறு கட்டளை தந்த முடித்தார்.
தருமங்குடிக்கு லாரிகளும்
ஜீப்புகளும் வந்து போய்க் கொண்டு இருந்தன. இவைகளில் ஒன்றைப் பயன்படுத்தி ஊருக்குள்ளாய் நுழைந்து திட்டத்தை நிளைவேற்ற வீரனின் அடியாட்கள் முனைப்பாய் இருந்தனர்.
இரவு
பத்து மணிக்குமேல் என்பதால் தருமங்குடி சற்று கூடுதல அமைதியாய் இருந்தது. ஆங்காங்கு ஓரிரு நாய்கள் மட்டுமே தொடர்ந்து குரைத்த வண்ணமிருந்தன. முழுக்கைச்சட்டை அணிந்த இருவர் கண்மணி வீட்டு வாயிலல் நின்று கொண்டிருந்தனர்.
கண்மணி
உள்ளாக உறங்கிக் கொண்டிருந்தார். ஐயர் வீடு பூட்டியிருந்தத. அனேகமாய் அவர் அன்றிரவு வெளியூர் சென்றிருக்கலாம்.
முழுக்கைச்
சட்டைககாரர்களில்
குள்ளமானவன் கண்மணி வீட்டின் கதவைத் தட்டினான்.
’சார்
சார்’.
கண்மணி
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருக்க வேண்டும். மீண்டும் கதவினை லேசாய்த் தட்டினான் குள்ளன் கண்மணி விழித்துக் கொண்டார்.
’யாரது?’
’நாங்கதான்’.
’யாரு?’
’ஆலைக்கு
மணலு அடிக்கிற ஆளுவ.’
’ஏன்?’
’ஒரு
பாட்டரி விளக்கு உடனே வேணும்’.
’அப்படியா?’
கண்மணி
கதவினைத் திறந்தார் கையில் தயாராய் வைத்திருந்த கட்டையால் கண்மணியின் தலையில் பலமாய் ஓங்கி அடித்தான் நெட்டை மனிதன். கண்மணி நிலை குலைந்து சரிந்தார். குள்ளன்
அறைக்கதவின் பின்பாக தொங்கிக்கொண்டிருந்த பூட்டை எடுத்து அறையைப் பூட்டி முடித்தான். இருவரும் கண்மணியை அலாக்காய்த் தூக்கி லாரியுள் போட்டு முடித்தனர்: இன்னும் கண்மணி மயக்கத்திலேயே கிடந்தார். கண்மணிக்கு மண்டையிலிருந்து குருதி கசிந்து கொண்டிருந்தது. லாரி செங்குன்றம் நோக்கி விரைந்து சென்றது லாரியை செங்குன்றத்து மேற்குப்புறத்து இருப்புப்பாதை ஓரமாய் நிறுத்திக் கண்மணியை இருவரும் தூக்கிக் கொண்டனர். இருப்புப்பாதை மீது நடந்து கண்மணியை அப்படியே தலை கவிழ்த்தபடியாய்ப் படுக்க வைத்துப் புறம்போயினர். இரவு முழுவதும் இரயில் வண்டிகளின் நடமாட்டம் கண்மணியைச் சின்னாபின்னப்படுத்தி
நிணக்குவியலாய் மூலைக்கு ஒரு பாகமாய் விசிறித் தள்ளி ரயில் வண்டிகள் பணி முடித்தன. ரயில் ரோட்டில் ஒரு அனாதைப் பிணம். அடையாளம் தெரியாதபடி கிடந்ததாய் ஒரு செய்தி வெளியிட்டு ஓய்ந்து கொண்டது ஒர் தினசரி.
32
கண்மணி
அறையின் சாவியொன்று சின்னவனிடம் இருந்தது. கண்மணி இல்லாத நேரங்களில் சின்னவன் அவர் அறையில் தங்கி ஏதேனும் படித்துக் கொண்டிருப்பான். அந்தப்படிக்கு அவன் சாவி வாங்கி வைத்திருப்பது உபயோகமாக இருந்து வந்தது.
கண்மணி,
அவர் அறையில் காணப்படாதது பற்றி மிகவும் வேதனைப்பட்டான். சிறு கடிதமேனும் எழுதி வைத்து விட்டுச் சென்றிருக்கலாம். தான் ஏனோ அதுவும் செய்யாது சென்று விட்டாரே என சின்னவன் யோசித்ததுப் பார்த்தான்.
நாட்டாண்மைக்கும் நடுப்பிள்ளைக்கும் கண்மணி
இல்லாதது நிறைவு அளித்திருக்க வேண்டும்.
ஏனோ
நடுப்பிள்ளை இப்போதெல்லாம் தருமங்குடியில் இருப்பது இல்லை என்றும், அடிக்கடி அவரின் உடல்நிலை சீர்கெட்டு விடுவதாயும் ஊரில் பேசிக் கொண்டார்கள். அவரை அடிக்கடிச் சென்னைக்கு இட்டுச் சென்று காண்பிப்பதாகவும். அவரின் பேச்சுத்திறனும்கேட்கும் திறனும் அறவே அற்றுப் போய்விட்டதாயும் பேசிக் கொண்டார்கள். தருமங்குடியில் நாட்டாண்மை மட்டுமே தனித்து இருந்து வந்தார்.
சின்னவன்
இப்போது சந்திரகாசோடு நிறையவே அளவளாவிக் கொண்டிருந்தான். சந்திரகாசு அனேகவிஷயங்களில் சின்னவனுக்கு ஒத்தாசையாய் இருந்தான். சந்திரகாசு விடம் இப்படி ஒரு அப்பழுக்கற்ற தன்மை இருக்கம் என்பதைச் சின்னவன் எதிர்பார்க்கவே இல்லை.
. எதையும்
வெளிப்படச் சொல்லும் திறனும், செயல்திறனும் சந்திரகாசுக்கு இருந்ததை எண்ணிச் சின்னவன் மகிழ்ந்து போனான்.
சர்க்கரை
ஆலையின் பணிகள் தொடர்ந்து நடை பெற்றுக்கொண்டிருநதன. அதே சமயம் ஆலை இன்னும் சிறிது நாட்களி்ல் திறந்து செயலுக்க வரும் என்பது ஊர்ஜிதமாகியது. தாழ்த்தப்பட்ட இன மக்களின் பகுதியில் இருந்து வந்த முத்துமாரிகோவில் இப்போது புதுப்பொலிவுடன் காணப்பட்டது. முத்துமாரி கோவிலுக்கு முன்பாய் தருமங்குடி மக்களின் முழுத்தொகையும் இப்போது வணங்கிச் செல்லப் பழகிக் கொண்டிருக்கிறது. ஆலையின் வருகை ஆண்டவனுக்குக் கூட கூடுதல் விடுதலை அளித்திருப்பதை எண்ணிப் பார்த்தான் சின்னவன். சிவபெருமானுக்கும் அவன் இல்லத்து மக்களுக்கும் குலதெய்வமாய் விளங்கிய முத்துமாரி இன்று கம்பீரமாய் நிற்கிறாள்.
கண்மணி
அறைக்கு அடுத்துக் குடியிருக்கும் ஐயரே முத்துமாரிக்கும் பூசைக்கு என்று ஏற்பாடு ஆகியது. ஆலையின் பணியாளர்கள் என்ற மொத்தக் கணக்கில் ஐயரின் பெயரும் இடம் பெற்றிட வாய்ப்பு உண்டாகியது. முத்துமாரியின் பூசையோடு ஆலையில் இருக்கும் சிறுசிறு தெய்வப் படங்களுக்கும பூசைபோட ஐயர் அழைககப்பட்டு பணியிடப்பட்டார்.
பேரூர்பிள்ளை,
தருமைநாதன் சன்னதியோடு இப்போது நின்று விடுவதில்லை. தன் பெரிய பளபள தாளத்தோடு மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் என்று பாடிக் கொண்டு முத்துமாரிக் கோவிலின் வாயிலில் அனேக தடவை நின்றுகொள்கிறார். முத்துமாரி அருள்பாலிக்கும் அம்மனாகித் தருமங்குடியை வளமுள்ள பேரூராய் மாற்றிக் கொண்டிருக்கிறாள். என்று மக்கள் பரவலாய்ப் பேசிக் கொண்டனர்.
பேரூர்
பிள்ளையும், ஐயரும் தன் உடுப்பு மாற்றி ஆலையின் சில வேலைகளுக்கும் சென்று பணி ஆற்றத் தொடங்கினர் முழுக்கால் சட்டையும் முழுக்கை சட்டையும் காக்கித் துணியில் அணிந்து, ஆலைப் பணியாளர்களாயும் தங்களை அறிவித்து மகிழ்ந்து போனார்கள்.
வாகடம்
காசி இப்போதெல்லாம் உறங்கும் நேரம் தவிர்த்து, மற்ற நேரங்களில் யூனிஃபாரத்தில் தோற்ற மளித்துக் கொண்டிருந்தான்.
வாகடமும்,
ஐயரும், பேரூர் பிள்ளையும் ஆலையின் பகுதியைச் சுற்றிச் சுற்றி வந்து வேலை செய்து நிறைவு பெற்றார்கள். வாராது வந்த மாமணியாய் அந்த ஆலையின் இருப்பை அவர்கள் தரிசித்து மகிழ்ந்தார்கள்.
தீன்பாயின்
தொடர்ந்த கவனிப்பு, ஆலைக்கு உயிர்ப்பு அளித்துக் கொண்டிருந்தது ஆலைத் தொழிலாளர்கட்கு என்று சிறு சிறு வீடுகள் ஆலை அருகிலேயே கட்டப்பட்டுத் தயாராகிக் கொண்டிருந்தன.
தருமங்குடி
ஓர் ஆலை ஊர் ஆனது. தருமங்குடி மக்கள் ஆலையோடு தொடர்புடைய மக்களாய் ஆகிப் போனார்கள்.
கண்மணியைப்
பற்றிச் செய்தி ஏதும் தெரியாது சின்னவன் அதிகம் நொந்து போய் இருந்தான். சந்திரகாசு சின்னவனைக் கண்மணியின் கிராமம் சென்று பார்த்து வருமாறு கேட்டுக் கொண்டார். வாத்தியாரைக் காணுமே என்று ஊர் புலம்பித் தீர்த்தது. சிவபெருமான் கைஒடிந்த மாதிரிக் காணப்பட்டான். இன்னது செய்வது என்று அறியாது விழித்துகொண்டிருந்தான். தருமங்குடியின் ஆன்மா தொலைந்து போனதாய் சின்னவன் உணர்ந்தான்.
33
சின்னவன்
ஒரு நாள் கண்மணியின் கிராமமான திருக்குடி நோக்கிப் புறப்பட்டான். திருக்குடியே கண்மணியின் ஊர் என்பதை எப்படியோ கேள்விப்பட்டிருக்கிறான் சின்னவன். அதன் இருப்பு நோக்கிப் பயணமானான். செங்குன்றத்துக்கு தெற்குத் திக்கில் முப்பது கிலோ மீட்டர் இருக்கும் என்று கண்மணி என்றோ சொல்லியது சின்னவனுக்கு நினைவு வந்தது. அதிகாலையிலேயே பேருந்தைப் பிடித்து திருக்குடி வந்து சேர்ந்தான் சின்னவன். சாலையில் நின்றிருப்போரிடம் கண்மணி ஆசிரியர் பற்றி விசாரித்துப் பார்த்தான். அப்படி ஒருவர் இருந்ததாய் அந்த ஊர்மக்கள் அறியாமலே இருந்தனர். இதுகுறித்துச் சின்னவன் ஆச்சரியப்பட்டுப் போனான். திருக்குடியின் நடுத்தெருவில் நடந்து கொண்டிருந்தான். கண்மணியின் வயது
இருக்கலாம் என்று முடிவுக்கு வந்த மனிதர்களிடம் கேட்டுப் பார்த்தான்.
’பலான
ஆளுன்னா தானே தெரியும்’, என்றார் ஒரு முண்டாசுக்காரர்.
’பலான
ஆளுன்னா?’
’என்னா?
சாதி வர்ணம்ன்னுதான்’.
’அது
தெரியலயே,’
கடகட
எனச் சிரித்தார் பெரியவர்.
’ஆடுமாடுவுளுக்கு,
மரமட்டைக்கும்
சாதியுண்டு தெரியுமா தெரியாதா? பின்ன பேசுற ’என்றார் முண்டாசுக்காரர்.
’எங்க
ஊர் தருமங்குடி, அங்க வாத்யார் வேலை பார்த்துகிட்டு இருந்தாரு திடீருனு ஒரு நாள் காணும் அவரை.’
அப்படிச்
சொல்லு, வாத்தியருன்னு.
’ஊருல
வாத்திமாரு மூணுபேரு, காலனியில ரெண்டு பேரு ஒரு வாத்தியாரு ஊருல இருக்காரு, காலனில வெசாரிச்சுப் பாக்கலாம்’.
முடிவுக்கு
வந்தார். முண்டாசுக் காரர். சின்னவன் இது பற்றியெல்லாம் கண்மணியிடம் பேசியதே இல்லை.
ஐயர்
ஒருவர் சைக்கிளில் சன்னமாய் ராகம் இழுத்துச் சென்று கொண்டிருந்தார்.
’சாமி’
என்றான் சின்னவன்.
ஐயர்
’ஏன்?’ என்றார்.
’கண்மணின்னு
ஒரு வாத்யாரு, இந்த ஊரு காரரு அவரு வீடு எதுன்னு தெரியுல’.
ஐயர்
தன் சைக்கிளை விட்டு இறங்கி நடந்து வந்தார்.
’நீங்க
யாரு?’
’நான்
தருமங்குடி. அவரு என்சினேகிதர்.’
’ஏன்?
அவருக்கு நீங்க’?
’நண்பர்
அவ்வளவு தான்’.
’இது
தேடுற இடம் இல்லே. நேரா வடக்குப் பக்கமா போயி, அந்த தென்னஞ்சாலைத் தாண்டுனா ஒரு ஓட்டப் பிள்ளையார் கோவிலு வரும், அங்கதான் காலனி அங்க வெசாரிச்சிங்கன்னா வெவரம் புரியும்.’
’அவரு
அந்த இனம்னு’ என்று இழுத்தான் சின்னவன்
’ஆமாம்’
என்றார் ஐயர்.
’நீங்க
பாத்ததுண்டா?
பேஷா’.
’எப்படி?’
’ரொம்ப
வருஷம் ஆச்சு.’
’ஏன்
அவரைப் பத்தி யாருமே ஒண்ணும் சொல்லல,’ என்றான் சின்னவன்.
’அதுலதான்
வெஷயம் இருக்கு கண்மணி நல்ல மனுஷன் அவன் நல்லதுக்குப் பாடுபட்டான். ஊரு ஜனங்களுக்குப் புரியல புஸ்தகங்கள் விற்பான் . கூட்டம் போடுவான். அது பெரிய கதை’, என்றார் ஐயர்.
’சின்னவன்
சொல்லுங்க’ என்று ஓங்கிக் கத்தினான்.
’ஒரு
நாள் ஊரு கோவிலுக்குள்ள பலான அந்த நாலு பசங்களோட வந்து நுழைஞ்சான். அவன் ஒரு தீவிரவாதி. அவனோடு பசங்க யாரும் சேரக் கூடாது’. அப்படி அவனோட சேர்ந்தா இந்த
ஊருல அவுங்களுக்கு
வேல எதுவும் கொடுக்க மாட்டோம்; அவன் கலகக்காரன்னு போலிசுல சொல்லி, திருக்குடிப் பக்கமே அவன் வரக்கூடாதுன்னு செஞ்சுட்டாங்க’’.
ஐயர்
மீண்டும் அவர் அருகே யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டார்.
’அந்தக்
கோவிலுக்குத்தான்
இப்ப பூசைக்குப போறன்.’
’கண்மணி
தங்கி இருந்த இடம்’.
’பேஷா
போயிப் பாக்கலாம்! நான் சொன்னதா வெளியில எதுவும் சொல்ல வேண்டாம்’
சின்னவன்
குழம்பிப் போனான், கண்மணி ஒரு ஆசிரியராய், ஒரு நல்ல வழிகாட்டியாய், பொறுமை மிக்க மனிதராய்த்தான் அவன் பார்த்திருந்தான். திருக்குடியின் கதை சற்று வேறு விதமாய் இருப்பது குறித்து வியப்புற்றான்.
ஊர்தாண்டிச்
சென்று கொண்டிருந்தான் சின்னவன். அவன் ஒரு தென்னந்தோப்பு ஒன்றினைத் தாண்டிச் சென்றான். தென்னை மரங்கள் ஏகத்துக்கு இளநீர்க் காய்களைச் சுமந்து கொண்டு நின்றன. ஒவ்வொரு மரமும் தேங்காய்களின் எடையில் தள்ளாடிய வண்ணம் தென்பட்டன. தோப்பு முடிந்து ஓட்டை விறாயகர் கோவில் வந்தது. அது. ஒரு விநாயகர் சிலையை தன்னுள்ளாய்க் கொண்டிருந்தது. கருமையாய்த் தெரிந்த விநாயகர் சிலையின் கழுத்தில் ஒரு துண்டு கிடந்தது. பக்கத்தில் விளக்க ஒன்று எரிந்து கொண்டு தன்னிருப்பை அறிவித்தது. ஒரு மூதாட்டி கோவிலுக்கு முன்பாய் நின்று கொண்டிருந்தார்.
’ஆயா’.
’யாரு?’
’கண்மணின்னு
ஒருத்தரைத் தெரியுமா?’
மூதாட்டி
அமைதியாய் நின்றுகொண்டிருந்தாள்.
’உங்களைத்தான் ஆயா,
கண்மணியைத் தெரியுமா?’
மூதாட்டி
மீண்டும் அமைதி கலையாமல் நின்றிருந்தாள்.
சின்னவனுக்கு
அச்சமாய் இருந்தது. சின்னவன் நடக்க ஆரம்பித்தான். ஒரு வேளை மூதாட்டிக்குக் காது கேட்காமல் இருக்குமோ எனச் சிந்தித்தான். ’கண்மணியைத் தெரியுமா?’ என ஓங்கிக் கத்தினான்.
’காது
நல்லா கேட்கும்’ என்றாள்’ தன் முதல் பதிலாய் அவள். சின்னவனின் கையைப்பிடித்தாள்.
’என்னோட
வா’.
’சரி’ என்றான் சின்னவன்.
சின்னவனைப்
பார்த்து நாய்கள், இரண்டு முறைத்து உறுமின.
’சே
ஓடேன் கழுதைவ’ என்றாள் நாய்களைப் பார்த்த மூதாட்டி.
ஒரு
கூரை வீட்டு முன்பாய் நின்று கொண்டாள் கதவு என்றோ பூட்டப்பட்டுக் கிடந்தது. சுவர்கள் கீலமாகிக் கிடந்தன. கூரை வீட்டின் மேல் பகுதி உருக்குலைந்து கிடந்தது.
’இது
யாரு வீடு?’
’கண்மணி
வீடு,’
இரண்டு
முறை தலையை ஆட்டினாள் மூதாட்டி; சின்னவனின் இரண்டு கைகளையும் இறுகப் பிடித்துக் கொண்டாள். சின்னவனுக்கு ஒன்றும் பிடிபடாமல் இருந்தது.
’போய்ப்பாரு’
என்றாள் சின்னவனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. சின்னவனுக்கு கூடுதல் குழப்பமாய் இருந்தது. ஓட்டை விநாயகர் கோவில் நோக்கி நடக்க ஆரம்பித்தாள் மூதாட்டி.
’இது
என்ன, ஒண்ணுமே விளங்குலயே ஆயா’.
’மேல
பேசாத. வந்த வழியப் பாரு ராசா’
இதுவே
அவளின் கடைசி வார்த்தையாக வெளிப்பட்டது. தெருவில் நடந்து போனவர்கள் அவளைச் சட்டை செய்ததாய் தெரியவில்லை. இனி ஒன்றும் தெரியாது என்ற முடிவுக்கு வந்தான் சின்னவன். வண்டி ஓட்டி ஒருவன் கோவணத்தோடு தலையில் முண்டாசு கட்டி வண்டி ஓட்டிச் சென்றான்.
’கண்மணி
சாரைத் தெரியுமா?’
’இது
நமக்குத்தெரியாத
சமாச்சாரம்’ என்றான் வண்டிக்காரன்.
’யாரைக்
கேட்டா வௌங்கும்?’
’செல்லும்
சொல்லாததுக்கு
செட்டிமாரு, வௌங்கும் வெங்காததுக்கு ஐயமாரு!’ சொல்லிவிட்டுத் தன் வண்டிச் சவாரியைத் தொடந்தான்.
’ஐயரு
வீடு’ என்று இழுத்தான் சின்னவன்.
’ஊரப்
போயி கேளு சாரு’.
சின்னவன்
ஊர் நோக்கி நடந்தான். தான் சந்தித்த ஐயராய்த்தான்
அது இருக்க முடியும் என்ற நம்பிக்கைக்கு வந்தான்.
அங்கு
நின்று கொண்டிருந்தான்
ஒரு சிறுவன்., கையில் சைக்கிளில் பணி முடிந்து ஓய்ந்து போன டயர் ஒன்றுடன் சின்னவனை நோக்கிக் கொண்டிருந்தான்.
’ஐயரு
வீடு’.
’பின்னாலயே
வாங்க’.
அவன்
சைக்கிள் டயரை சிறு குச்சிகொண்டு உருட்டினான். ஒரு ஓட்டு வீட்டின் வாயில் சுவரில் சிவப்பும் வெள்ளையுமாய் சுண்ணாம்புப் பட்டைகள் அடிக்கப்பட்டிருந்தன. அனேகமாய் அதுவே ஐயர் வீடாக இருக்கலாம்.
’தோ
ஐயரே வர்ராரு’ என்றான் சிறுவன்.
தூரத்தில்
சைக்கிளைத் தள்ளிக்கொண்டு அவரே வந்து கொண்டிருந்தார். சிறுவன் தன் சைக்கிள் டயர் ஓட்டும் பணிக்குத் தன்னை விடுவித்து விட்டதாய் எண்ணிக்கொண்டு ஓடினான்.
ஐயர்
சின்னவனை நெருங்கிக்கொண்டு இருந்தார்.
’நீரா?’
’நான்
தான்’.
’புறப்படலயா?’
’அந்தக்
கண்மணி பத்தி ஒண்ணும் தெரியல’.
’யோவ்
மொதல்ல
நீர் ஊரைக் காலிப் பண்ணும். இது ஏது விபரீதமாய்ப் போகுது. அதுவும் என் வீட்டு வாசல்ல, சிவசிவா’.
இனித்
திருக்குடியில்
தங்கிக் கண்மணியைப் பற்றி விசாரிப்பது அவ்வளவு நல்லதல்ல என்ற முடிவுக்கு வந்தான். இந்த ஐயரே இவ்வளவு. விஷயங்களைச் சொல்லி விட்டு இப்போது ஜகா வாங்குவது ஏனோ என்று எண்ணினான். தருமங்குடிக்குத் திரும்பிவிடுவது என்று முடிவுக்கு வந்தான், சின்னவன் கண்மணி ஆசிரியரைத் தேடி திருக்குடிக்கு வந்தது அவனுக்குப் புதிய குழப்பத்தைக் கொடுத்துவிட்டிருந்தது. தருமங்குடிச் சென்று சிவபெருமானிடம் இவை அத்தனையும் அப்படியே ஒப்புவித்து விடவேண்டும் என்று முடிவு செய்தான்.
34
தருமங்குடியில் சர்க்கரை
ஆலைத் தன் நிறைவுப் பணியைத் தொடாந்து கொண்டிருந்தது. சிவபெருமானும் தீனுபாயும் ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து கொண்டிருந்தார்கள். அ.சு.மு.கட்சித் தலைவன் தீன்பாயுடன் அடிக்கடி காணப்பட்ான்.
தருமங்குடி
ஆலைக்கு, கண்மணி கரும்பு பிழியும், ஆலை எனப்பெயரிடப்பட்டிருந்தது. இதனை ச்சின்னவனே யோசித்து முன்மொழிந்தான். தீன்பாய் நெகிழ்ந்துபோனார். இந்த ஆலையின் வருகைக்கு மூலகாரணமாய் இருந்த கண்மணியின் முயற்சினை எண்ணி எண்ணி மகிழ்ந்தார் தீன்பாய்.
தருமங்குடி
ஒரு மாதிரி கிராமமாய்& சாதிக்கலவரங்கள் அறியாததுவாய், மதக்கலவரங்கள் தொடாததுவாய் ஒரு புதுமைப் பொக்கிஷத்தைத் தன்னுள் வளர்த்துக் கொண்டு தலை நிமிர்ந்து நின்றது.
இப்படியும்
ஒரு கிராமம் ஆரோக்கியத்துடன் இருக்கமுடியும் என்பதனை ஊருக்கு எல்லாம் பறைசாற்றியது.
நடுப்பிள்ளை.
சென்னையிலேயே தன் நோய் குணமடைந்து பின்னர் தங்கிவிட்டதாயும் ஊர் மக்கள் பேசிக்கொண்டார்கள். நாட்டாண்மை மட்டுமே அவரை அடிக்கடி போய்ப் பார்த்து வந்து கொண்டிருந்தார்.
கண்மணியின்
கதை முடித்த சு.மு.கட்சியின் தலைமை இனி தருமங்குடிக்கு என்ன சதி செய்வது? என்பது குறித்து அடிக்கடி தொடர்பு கொண்டது. நாட்டாண்மையும் செங்குன்றத்து சுமுகட்சித் தலைவரைச்சென்று அடிக்கடி பார்த்து வந்த வண்ணமிருந்தார்.
தருமங்குடி
கண்மணி கரும்புப் பிழியும் ஆலைமவாயிலில் வாகடம் நின்று கொண்டிருந்தான். கட்டுமானப் பணிகள் முடித்திருந்த பொறியியல் வல்லுனர்கள் இயந்திரங்களை, இயக்கி இயக்கி, அவைகள் பணிக்குச் சீரடைவதை உறுதி செய்து கொண்டிருந்தனர்.
சிவபெருமான்
ஏதோ வேலையாய் வெளியூர் சென்றிருந்தான்.
கரும்பு
ஆலை வாயிலில் இருந்த முத்துமாரி கோவிலில் பூசை முடிக்க ஐயர் நடந்து கொண்டிருந்தார்.
வெள்ளை
நிறத்தில் ஒரு போலீஸ் வேன் அசுர வேகத்தில் வந்து முத்துமாரிகோவில் முன்பாய் நின்று கொண்டது இருபது போலீஸ்காரர்களுக்குக் குறையாமல் அதனின்று வெளிப்பட்டுக் கொண்டிருந்தார்கள்
ஆலையின் இரும்புக்கம்பி வாயிலை நெட்டித்தள்ளிக்கொண்டு உள்ளே விரைந்தார்கள்.
ஐயர்
இவை அத்தனையும் நடப்பதைக் கூர்ந்து கவனித்துக் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தார். ஐயருக்கு வயிற்றைக் கலக்கிக்கொண்டு இருந்தது.
வாயிலில்
நின்றிருந்த வாகடம்,
’என்ன
சேதி?’ என்று அலறினான்.
’மூடு
வாயை’ என்றான் குள்ளமாய்த் தெரிந்த போஸ்காரன்.
’அரீ’என்றான்
கோபமாய் வாகடம்.
’பருப்பை
எடுத்துடுவேன்’
என்று அதட்டினார் போலிஸ்காரர்.
’எதுக்கு
நுழையற நீ?’ முறைத்தான் வாகடம்.
;நீம்புரு
இங்க என்ன புடுங்கிறீரு’ என்றபடி குள்ள போஸ்காரன் வாகடத்தை ஓரங்கட்டி உள்ளே சென்றான்.
போலிஸ்
அதிகாரி தன் சட்டைப் பையிலிருந்த விசில் ஒன்றை எடுத்து நீட்டமாய்
ஊதிய வண்ணம் இருந்தார்.
’இங்கு
வேலை செய்யுற அனைத்து ஆட்களும் அப்டி அப்டியே கட்டுத்துணியோட வெளியேறுணும். ஆலையுள்ள வெடிகுண்டு தயார் ஆவுறதா எங்களுக்குச் சேதி, இடத்தைக் காலிபண்ணு, இடத்தைக் காலிபண்ணு’ என்று கர்ஜித்த வண்ணமிருந்தார் அந்த அதிகாரி.
ஆலையின்
சொச்ச கட்டுமானப் பணியிலிருந்த அனைவரும், அதை அதை அப்படியே விட்டுவிட்டு வெளியே ஓடிக்கொண்டிருந்தனர். வாகடம் ஒவ்வொருவரையும் பிடித்துக் கெஞ்சினான்.
’ஏம்பா
ஓடுறீங்க? என்ன செய்தி?’ என்று அலறினான். போலிஸ்
வேன் ஓட்டிவந்த டிரைவரின்
இருகால்களை இறுகப் பிடித்துக் கொண்டு கெஞ்சினான்.
’என்னா
சேதி? ஏன் கலாட்டா பண்ணுறீங்க? என்ன ஆச்சு உங்களுக்கு?’ என்று அழுது கொண்டே கேட்டான் வாகடம்.
ஐயர்
தன் பூசை முடித்துக் கோவில் வாசலில் அப்படியே நின்று கொண்டிருந்தார்.
’சாமி,
பூமரத்தை அழிக்கறானுவ. என்ன சேதின்னு தான் தெரியல. ஒரு பெரிய ஆத்தா மாதிரி ஆலை யிங்க உசந்து நிக்குது. ஏனோ ஒரே கலாட்டாவா, ரப்ச்சரா இருக்குதே நான் என்ன பண்ணுறது’ என்று புலம்பினான். வாகடம், விழுந்து புரண்டு எழுந்தான். போலீஸ் வான் டிரைவர், வாகடத்தையும் ஐயரையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டேயிருந்தார்.
ஐயர்
டிரைவரிடம் சென்று பைய ஆரம்பித்தார். தன் மடியிலிருந்து விபூதிப் பையை வெளியில் எடுத்துக் கொண்டார். அதை அவர் டிரைவரிடம் கொடுத்து விடுவதாயும் இல்லை டிரைவரே அதனைத் தனக்கு வேண்டும் எனக் கேட்பார் என்பதறிந்தே ஐயர் பையை வெளியில் எடுத்துக் கொண்டார்.
டிரைவர்
தன் கையை நீட்டி ’சாமி திருநீறு கொடுங்க’ என்றார்.
ஐயர்
ஒரு சிட்டிகை திரு நீற்றை அள்ளி முத்துமாரி என்று சொல்லிக் கொண்டே டிரைவரின் கையில் வைத்தார்.’ என்ன இது எல்லாம்? எதும் செய்தி உண்டா?’ என்றார் ஐயர்.
’தீனு
பாயி இங்கனு வெடிகுண்டு பதுக்கி வைச்சிருக்கார்னு சேதி. இந்த ஆலை ஒரு சதித்திட்டத்திற்கு ஏற்பட்டதாம். அப்படி இப்படி அரசபுரசலா போலீசுல பேசிக்கிறாங்க. பெரிய இடத்து சமாச்சாரம், கப்சிப்’ என்று வாயை மூடிக் கொண்டார் டிரைவர்.
’அடக்
கடவுளே, இது அநியாயம், ஊரை பீ ஆக்குறாங்க இங்க பெரிய சதி நடக்குது ; கேக்க
ஆளு இல்லடா கடவுளே!’
’சேதி
வெளிய தெரிய வேணாம். அப்படியே முழுங்கிக் கிங்க சாமி, தெரிஞ்சா
எங்கதை அம்போ’ சொல்லிய
வேன் டிரைவர் வேறுபக்கம் திரும்பிக் கொண்டார்.
’முத்துமாரி
முத்துமாரி ’என்று இரண்டுமுறை ஓங்கிக் கத்தினார் ஐயர்.
’உனக்கு
என்னா ஐயரே, கல்லு நிக்குது, வவுறு துக்குது,’
’இது
கொலை பாதகம், சதி இது பெரிய சதி."
’ உம்மகிட்ட நான் சொன்ன
சேதிக்கு எம் புத்தியை ஜோட்டால அடிச்சிகிணும்’ என்றார் டிரைவர்.
ஐயர் முத்துமாரிக் கோயிலை
நோக்கிச் சென்று கொண்டிருந்தார். வாகடம் கோவில் முன்பாய் நின்று கொண்டு, தனக்குத் தெரிந்த தோத்திரப் பாடல்களைச் சொல்லிக் கொண்டே இருந்தான்.
தருமங்குடி
கண்மணி ஆலையிலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டிருந்தனர். இது மட்டுமே உறுதி செய்யப்பட்டது. சாக்கு மூட்டைகள் இரண்டு ஏதோ திணித்து, வெளியே கொண்டு வரப்பட்டு போலிஸ் வேனில் ஏற்றப் பட்டன. வாகடம் பேந்த பேந்த விழித்துக் கொண்டிருந்தான்.
’ஆலை
பொருளு வெளில போவுது’ என்று கத்தினான் வாகடம். ’
’ஓண்ணும் புரியல’ என்றான்.
’ஆர்ரா
நாயி கூவுறுது’ என்றான் குள்ளப் போஸ்காரன் பதிலுக்கு.
’என்
உசுறு போவுட்டும் தீனு பாயு வந்தா என்னா சொல்லுவேன்? ஆலை பொருளு வெளில போவுது.’
வாகடம் அங்கு
நடப்பது என்ன என்பதே தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.
’அவரு
இங்க வரமாட்டாரு. கதை கந்தலாயிட்டு’ என்றான் குள்ளப் போலிசுகாரன். ஐயர் அத்தனை விஷயங்களையும் கவனித்துக் கொண்டிருந்தார். போலிஸ் வாகனத்தின் முன்பாய் நின்று கொண்டு வாகடம் அழுத வண்ணம் இருந்தான். ஆலை முன்பாய் கூடிய திரள், திணறி திணறி யோசித்து அச்சத்தில் ஆழ்ந்து கொண்டது.
’சே,
எட்ட நவுறு கழுத’ என்ற போலிஸ் அதிகாரி வண்டியை நகர்த்தச் சொன்னார்.
தருமங்குடி
கண்மணி சர்க்கரை ஆலையின் கதவுகள் பூட்டப்பட்டுச் சீல் வைக்கப்பட்டிருந்தன. ஆலை வாயிலில் இருந்த பெயர்ப்பலகையில் கண்மணி என்ற பகுதி சிதைந்து கிடந்தது.
போலீஸ்
வேன் நகர்ந்ததை உறுதி செய்த ஐயர், வாகடத்திடம் வந்து நின்று கொண்டார்.
’தீனுபாயி
வெடி குண்டு ஏதும் இதனுள்ளே செய்யறதா கேள்வின்னு அந்த டிரைவரு சொன்னாரு. இது என்ன சதி, என்ன சூழ்ச்சி, என்ன சமாச்சாரம்’ என்று வௌங்குல தீனுபாயி நல்ல மனுஷன்; என உறதியாய்ச் சொன்னார் ஐயர்.
எங்கிருந்தோ
சின்னவன் ஓடோடி வந்து தருமங்குடி
ஆலை முன்பாய் நின்றான். போலிஸ் ஜீப்நகர்ந்து முடித்தது. வாகடம் கோவென்று அழுதான். சின்னவனைக் கட்டிக் கொண்டு கண்கலங்கினான் கீழே விழுந்து எழுந்து நின்று கொண்டான் வாகடம்.
’வாத்யாரே
வாத்யாரே
கண்ணுமணி
வாத்யாரே
தங்கத்
துரையத்தான்
தாரை
வாத்துப்புட்டு
தறுதலையா
நிற்குறமே
தருமங்குடி
சனமெல்லாம்’
ஒப்பாரி
வைத்து அழுதான் வாகடம். ஐயருக்கு என்ன செய்வது என்று, விளங்காமல் இருந்தது. தருமங்குடி தன் ஜீவ களையை இழந்திருந்தது. சின்னவன் அமைதியாய் நடந்தான். வெளியூர் சென்றிருந்த சிவபெருமான் ஊர் திரும்பி ஆலைச்சேதி
அத்தனையும் கேட்டு அதிர்ந்து
போனான்.
35
சிவபெருமானைப் பார்ப்பதற்காகத் தென்னை
மரச் சாலையின் வழியாய்ச் சென்று கொண்டிருந்தான் சின்னவன். சிவபெருமான் தன் வீட்டு வாயிலில் நின்று கொண்டிருந்தான். தன் கையில் ஒரு கத்தரிக்கோல் கொண்டு தன் முடியை அப்படி இப்படி, கத்தரித்த வண்ணம் இருந்தான்.
’வாங்க’.
’வர்ரேன்’
என்றான் சின்னவன், எதிரே வைத்திருந்த கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டான் சிவபெருமான்.
’ஆலை
போச்சி’ சன்னக்குரலில் சிவபெருமான்.
’ஆசிரியர்
முதலில், கரும்பு ஆலை அப்புறமா, கொடுமை இது’.
அந்த
நாட்டாண்மைக்கு
தெரியாம எதுவும் நவுறாது
அழுத்திச் சொன்னான் சிவபெருமான்.’நடுப்பிள்ளைக்கும்தான்’ ’ரொம்ப சங்கடமான நேரம்; ரொம்ப தைரியம் வேணும்.’வேறு என்ன செய்ய, சின்னவனே?’
’இனி
என்ன, திரும்பவும் தாயம் போட்டு ஆரம்பிக்கணும்’.
’சின்னவனே,
மேல மாத்தரம் புனுகு பூசிட்டா புண்ணு ஆறுமா. நாம செஞ்சது அப்படித்தான் ஆகிப்போச்சின்னு தோணுது. கொஞ்சம் வெவரம் சொல்ல கண்மணி இருந்தாரு. அவரைத் தொலச்சப்பவே நாம உசாராயிருக்கணும். முதல்ல முளைய ஒழிச்சாங்க, இப்ப ஆலைங்கற செயல் பாட்ட அழிச்சாங்க; ஊரே இருண்டு கிடக்கு, இது எல்லாம் இருக்கத்தான் செய்யும். மோதி மோதிதான் பாக்குணும், ஒவ்வொண்ணும் ஒரு அனுபவம் , ஒரு பாடம், தொடர்ந்த பயணம்’.
’ரொம்ப
வெல.’
’கோடி
உயிரை வெல குடுத்து உலகத்துல, போர் நின்னு போச்சுதுன்னு சொல்ல முடியுமா?’
’அந்தக்
கத்திரிக்கோலக்
காட்டு. உன் தலையச் சரி பண்ணுறேன்’ என்றான் சின்னவன்.
கத்திரிக்கோலைக் கொண்டு,
நீட்டிக்கொண்டு
விகார மாய் நின்ற முடியை வெட்டி எறிந்தான் சின்னவன். சின்ன விஷயம்தான்.
இவை
அத்தனையும் பார்த்துக் கொண்டுதானிருந்தாள்
செம்மலர். தெருவழியாய் நாட்டாண்மை அனுப்பிய ஆள் சென்று கொண்டிருந்தான். அவன், சின்னவன் சிவபெருமான் முடியைச் சரிசெய்வதை நோட்டம் விட்டுக் கொண்டே சென்றான். நேராக நாட்டாண்மை வீட்டுக்கு நடந்தான்.. நாட்டாண்மை தன் வீட்டு வாயிலில் நின்று கொண்டிருந்தார்.
’கட்டையா
வா’,
’வர்ரேன்’
என்றான் கட்டையன்.
’என்ன
சேதி?’
’ஒரு
சேதி. ஊர் பரியாரி அந்த
நாகலிங்கம் மொவன் சின்னவன்
சிவபெருமானுக்கு
முடி வெட்டுறதைப் பார்த்தேன். அதுவும் சிவபெருமான் வூட்டுலயே’.
’அப்படியா
சேதி!’
’ஆமாம்
என் கண்ணாலப் பாத்தேன்’ என்றான் கட்டையன்.
நாட்டாண்மை
தன் வீட்டுள்ளாக நுழைந்து ஒரு நெடிய
பிரம்புடன் வெளிப்பட்டுக் கொண்டிருந்தார்.
தெருவின்
மையத்துக்கு வந்தார் நாட்டாண்மை.
’ தருமங்குடி ஊருல திங்குற சோத்துல
உப்புபோட்டு திங்குறவங்க வாங்க, உடனே வாங்க’,
இரண்டு
முறை கத்தினார்.
வெள்ளாளத்
தெருவிலிருந்தும், மண்உடையார்த்தெருவிலிருந்தும், இடைத் தெருவிலிருந்தும், வன்னியர் தெருவிலிருந்தும் ஆட்கள் வந்தவண்ண மிருந்தனர். வந்தவர்களில் இருவரிடம் நூறு ரூபாய் நோட்டுக்கள் சிலவற்றை அமுக்கினார்
.’ வைச்சிக. காரியத்தைப் பாரு’
கட்டளையிட்டார்..
’நாம
சிவபெருமான் வூட்டுக்குப் போறம்’.
’என்ன
சேதி’ என்றனர் கூட்டத்தினர்.
’தருமங்குடி
ஊருக்குள்ளாற இன்னும் நாகலிங்கம் இருக்கான். நாம உப்புப் போட்டு சோறு திங்கறம்’.
’வெஷயத்தைச்
சொல்லுங்க, நாட்டாமை’.
’சிவபெருமான்
வூட்டுக்குப் போடா, கதை தெரிஞ்சிக் கலாம்’.
கையில்
பிரம்புடன் வேகு
வேகு என நடந்தார் நாட்டாண்மை.
36
சிவபெருமான்
வீட்டு வாயிலில் நாகலிங்கம்
மகன் சின்னவன் இன்னும்
நின்று கொண்டிருந்தான்.
’வாத்தியாரு
ரூமூ சாவி?
எங்கிட்ட
இருக்கு’ என்றான் சின்னவன் செம்மலரிடம்.
’ஏன்?’
’புத்தகம்
எதனா இருக்கும், படிக்கலாம் அதான்’.
’அவசியம்
படியுங்க. கட்டுகட்டா அடிக்கி வைச்சிருக்கிறாரு கண்மணி சாரு. அதுக்ளைப் படிச்சி அறிஞ்சிக வேண்டியதுதான்’.
தன்
வசமிருந்த சாவியை செம்மலரிடம் கொடுத்தான். சின்னவன்.
’நன்றி’
என்றாள் செம்மலர்.
கையில் பிரம்போடு நாட்டாண்மை சிவபெருமான் வீட்டு வாயிலில் வந்து நின்று கொண்டார்.
’இது
ஏது கதை ஒரு மாதிரி பூடும் போல. சம்மந்தம் போடுறதா எதாவது யோசனையா’.
சின்னவன்
சிரித்தான்.
நாட்டாண்மைக்கு ஆத்திரம்
அதிகமாய் வந்தது. ’நான்
கேக்குறேன், நீ சிரிக்கிற. இதுங்க எல்லாமே காலட்டாடா. நீ சிவபெருமான் தலையத் தொட்டு செறைச்சியா, எனக்கு சேதி ஆம்புட்டுது’.
’ஆமாம்’
என்றான் கச்சிதமாய் சின்னவன். நாட்டாண்மையுடன் வந்த நால்வர் சின்னவனைச் சுற்றி நின்று கொண்டார்கள்.
’இனி
ஊருல என்னா மசுறு வேல?’ கொக்கரித்தார் நாட்டாண்மை.
சிவபெருமான்
அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்தான்.
’அண்ணா,
என்ன பாத்துட்டு நிக்குற?’ என்றான் செம்மலர்.
’இதுல
அவசரம் ஏன்?’
சின்னவன்
அமைதியாய் இருந்தான். தருமங்குடியில் தன் குடும்பமே ஆட்டம் காணுவது போல்
உணர்ந்தான்.
’நீ
இனிமே உங்கப்பன் வூட்டுக்குள்ள கால வக்கப்படாது. அது மீறி வைச்சின்னா, உங்கப்பன் நாகலிங்கம் ஊருல செறைக்கக் கூடாது, ஆமாம்’.
சின்னவன்
ஒன்றும் பேசாமல் இருந்தான்.
’ஒண்ணு
நீ காலி பண்ணு, இல்ல உங்கப்பன் குடும்பத் தோட தருமங்குடியத் தலை முழுவணும்.’
சின்னவன்
தலையை ஆட்டிக்கொண்டு நின்றான். தன் தந்தையின் நிலை பற்றி எண்ணிப்பார்த்தான். சிவபெருமான் ஒன்றும் பேசாமல் இருந்தான்.
’ஏன்
நீ பேசாம இருக்கே?’
’இல்ல,
ஆத்திரக்காரங்ககிட்ட
பேசி என்ன ஆவும்?’
சிவபெருமானும் செம்மலரும்
ஆழ்ந்த யோசனையில் இருந்தனர்.
நாட்டாண்மையோடு வந்த
நால்வரும் தென்னை மரச்சாலையில் நடந்து கொண்டிருந்தனர். நாட்டாண்மை அவர்களின் பின்னால் சென்று கொண்டிருந்தார்.
கருப்பு
ஆலை மூடப்பட்டுக் கிடந்ததை ஒரு முறை பார்த்து திருப்திப் பட்டுக்கொண்டார் நாட்டாண்மை. அருகிருந்த முத்துமாரி கோவிலில் கதவு பூட்டப்பட்டிருந்தது. மாரியம்மனை நோக்கித் தலை தாழ்த்தினார்.
’இது
இப்ப நம்ம சாமியா ஐயம்’ வந்தது நாட்டாண்மைக்கு.
அரைகுறை
மனதுடன் இரண்டு கைகளையும் சேர்த்து வணங்கிய பாவனை செய்து கொண்டார்.
"சாமில அவுனுவ சாமின்னு உண்டு.
அது நாம
கும்புடறதுக்கு
சரிப்படாது, நம்ம
சாமிய அவுனுவ கும்புடலாம் அதுக்கு மட்டும் வழி சுளுவுபோல" மனதில் எண்ணிக் கொண்டார்.
"இது என்ன, கூடவே கிறுக்கனாட்டம் யோசனை’ " என்றும் எண்ணினார் நாட்டாண்மை.
வெள்ளாழத்தெரு தாண்டி
நாகலிங்கம் வீட்டு வாயிலில் நின்று கொண்டார். நாகலிங்கம் தன் வீட்டு வாயிலில் வேலிக்கருவை முட்களைக்
கத்தை கத்தையாய் நறுக்கிக் கட்டி கட்டி வைத்துக் கொண்டிருந்தான்.
’இங்க
எவன் மசுற புடுங்கற?’
’இல்லிங்களே,
முள்ளுதான் நறுக்குறன்.’
’எனக்கு
என்னா கண்ணு பொட்டயா? டேய் உம்மவன் என்னா செய்யுறான் தெரியுமா’.
’ஏன்?
ஏதும் சவரம் செய்யுணும்களா?’
’ஒரு
மசுறும் வேணாம். சின்னவன் சிவபெருமானுக்கு செரைக்கிறான். நான் பாத்தேன்.’
’சாமி
சாமி ,பீய துன்னுது நாயி’.
’இவுறு
ரொம்ப யோக்கியரு’.
மொட்டை
தன் வீட்டின் உள்ளிருந்து வெளிப்பட்ட வண்ணம் இருந்தாள்.
எப்ப
பாத்தாலும் வாயி பேசி பேசித்தான் குடியைக் கெடுத்திட்டே என்று சொல்லிக் கொண்டே வந்தான்.
’ஒண்ணு
நீ இங்க இரு. அவன் அங்கன இருக்கட்டும் இல்ல, உங்க குடும்பத்தையே தருமங்குடியவுட்டு காலி பண்ணிடுவேன் தெரிதா?’
’என்னா
பெரிய பெரிய வார்த்தை, ஏதோ ஏதோ பேசுறீங்க சாமி’ என்றாள் மொட்டை.
’உன்
மவன்சின்னவன் சிவபெருமானுக்கு செரைக்கிறான். இனி உன் குடும்பத்துக்கு ஊருல வேலஇல்ல.’
’நாலு
வூட்ல பிச்சை எடுத்துப் பொழைச்சிகிறம் சாமி’ என்றாள் மொட்டை.
’உன்
வேலைப்பாரு மொட்டைக் கழுதை. மொவனை வளத்து வச்சிருக்கிறா முழுங்கி முள்ளு கணக்கா வாயி பேசுதோ?’ என்றான் நாகலிங்கம். நாட்டாண்மை தன் பிரம்புடன் தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார். நால்வரும் உடன் சென்று கொண்டிருந்தனர்.
தருமங்குடியில் நாகலிங்கம்
தன் சவரத் தொழிலை நிறுத்தினான். இப்போதெல்லாம் ஏதும் கூலி வேலை கிடைத்தால், நாகலிங்கமும் மொட்டையும் சென்று செய்து வருகின்றனர்.
ஒரு
ஏற்பாடாய், வெளியூரிலிருந்து தருமங்குடிக்கு சைக்கிளில் சவரத் தொழிலாளி ஒருவன் வந்து போய்க் கொண்டிருந்தான்.
சின்னவன்,
தன் வீட்டுக்கு வந்து போவது உண்டு. தன் தாயுடன் மட்டுமே பேசுவான். நாகலிங்கத்துடன் பேசுவது இல்லை. நாகலிங்கம், தன் தொழில் ரீதியான உறவுகள் அறுந்து போனதற்காய் துளியும் வருத்தம் அடையவே இல்லை. பிறப்பு, இறப்பு, திருமணம், கரும காரியம், கோவில் உற்சவப்பங்கு இவை அத்தனையும் இப்போது நாகலிங்கத்துக்கு இல்லை.
மொட்டை
இதபற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளவே தெரியாமல் இருந்தாள்.
கத்தியைத்
தொலைத்து சின்னவன் குடும்பம் இப்படி யெல்லாம் ஆனது பற்றி சிவபெருமான் மகிழ்ச்சி பாவித்தான். நாகலிங்கத்திற்கு தொழில் அற்றுப் போன தையும் கணக்கில் எடுத்துக் கொண்டான். சிவபெருமானே நல்ல கறவைமாடு ஒன்றினை சின்னவனின் குடும்பத்துக்கு ஒட்டிவிட்டான். இழப்பை ஓரளவுக்கு அந்தமாடு ஈடுகட்டும் என்கிற முடிவில் இரந்தான்.
’ஊரு
பூரா மசுறு அள்ளுனது இப்ப என்ன ஆச்சு?’ என்றாள் மொட்டை.
’ஒரு
கறவை மாட்டை மேச்சிக் கறந்து போட்டிருந்தா பொழச்சிருக்கலாம்’ என்றான் நாகலிங்கம்.
37
சுமு
கட்சியின் ஆட்கள் சிலர் தருமங்குடிக்கு லாரியில் வந்து இறங்கினார்கள். அவர்கள் அனைவரும் சந்திரகாசு வீட்டு வாயிலில் நின்று கொண்டார்கள்.
’அதோ
வராரு அண்ணன், என்றான் ஒருவன்.
’வாழ்க,
அண்ணன் வாழ்க, சந்திரகாசு அண்ணன் வாழ்க’ என்று கோரஸில் முழங்கினர். வந்த கூட்டத்தில் இருவர் ஆளுயர மாலையைப் பிடித்துக் கொண்டு நின்றனர்.
சந்திரகாசு
வீட்டில் இல்லை. அவர் தன் வயலிலிருந்து மாடுகளை ஓட்டிக்கொண்ட தன் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார். சந்திரகாசு வீடு நெருங்கும் சமயம்.
’அண்ணன்
சந்திரகாசு!
’வாழ்க
வாழ்க’ என முழக்கம் வெளிப்பட்டது.
’சுமு
கட்சியின் மாவட்டத் தலைவர் சந்திரகாசு!
’வாழ்க
வாழ்க! ஓங்கி முழக்கமிட்டனர்.
ஆளுயர
மாலையைச் சந்திரகாசுக்கு அணிவித்து கரகோஷம் செய்தனர்.
வாகடம்
அந்த வழியாய் வந்து கொண்டிருந்தான்,
’ஏன்
என்ன ஆச்சு, நல்லாத்தான் இருந்தாரு’ என்றான்.
’சந்திரகாசு
மாவட்டத் தலைவரு ஆயிட்டாரு. சுமு கட்சியின் தலைவரு பெரிய தலைவரு, மந்திரி ஆனாலும் உண்டு முதல் மந்திரி ஆனாலும் உண்டுதான்’என்றார்கள் கூடியிருந்தவர்கள்.
வாகடம்
வாயைப்பிளந்து
பார்த்துக் கொண்டிருந்தான். இது எல்லாம அவனுக்கு ஒன்றுமே விளங்காமல் இருந்தது.. சந்திரகாசுவும் கழுத்தில் மாலையைத் தொங்க விட்டுக்கொண்டு நிற்பதைப் பார்த்தான் வாகடம்,
இப்படி
எல்லாம் கூட சந்திரகாசு ஆகிவிடுவான் என்பதைத் தருமங்குடியில் யாரும் எதிப்பார்த்து இருக்கமாட்டார்கள் தான். வாகடம் தெருவழியே சென்று கொண்டிருந்தான்.
’ஆவுற
கதை ஆவுது, போவுற கதை போவுது’ என்று கூறிக் கொண்டே நடந்தான்.
38
நடுப்பிள்ளை
கார் ஒன்றில் தருமங்குடிக்கு வந்து இறங்கினார். ஊரே மாறி இருந்தது.
இப்போது
தருமங்கடி பட்டினத்தான் வாய்க்காலில் மதுக்கடை ஒன்று துவங்கப்பட்டு இருந்தது. சுமுகவின் செங்குன்றத்து வீரன்தான் சாராயக் கடையின் முதலாளி என்று ஊரில் அனைவரும் பேசிக் கொண்டனர் மதுக்கடை வாயிலில் "குடிகுடியைக் கெடக்கும். குடிப்பழக்கம் நாட்டைக் கெடுக்கும்" என்று கொட்டை எழுத்தில் எழுதித் தொங்கவிடப் பட்டிருந்தது. இந்தச் சாராயக் கடையில் வரும் லாபத்தில் பாதிபங்கு சந்திரகாசுக்கு என்பது ஊரே அறிந்திருந்தது. தருமங்குடிக்கு வந்து போகிறவர்களில் அனேகம் பேர் சந்திரகாசுக்கு வேண்டியவர்களாய்த் தென்பட்டனர். சந்திகாசுவின் வீட்டில் கொடி ஒன்று சுமு கட்சியின் சின்னமான நெடியவாள் படத்தோடு பறந்து படபடத்தது. சந்திரகாசுவின் வீடு, மாடி வீடாய் பார்ப்பதற்கு அதிகம்பீரமாய்த் தென்பட்டது.
அனேகமாய்
மாதத்தில் பாதி நாட்கள் சந்திரகாசு ஊரில் இல்லாமல் இருந்தார். பாலம் கட்டும் காண்ட்ராக்டராய் சந்திரகாசு பிரபலமாகி இருந்தார். சாராயக்கடையும், காண்ட்ராக்டும் சந்திரகாசுக்கு செல்வத்தைச் சொரிந்து தரும் வழிகளாய்த் தெரிந்தன. சுமுகவி்னவீரன் அரவணைப்பில் எப்போதும் சந்திரகாசு தென்பட்டார்.
கொஞ்சம்
கொஞ்சமாய் கண்மணியை ஊரே மறந்து விட்டிருந்தது சின்னவன் சற்று சோர்ந்துபோய் காணப் பட்டான். இந்த சந்திரகாசு இப்படி ஒரு கருப்புள்ளியாய் மாறியது அவனக்கு வியப்பபைத் தந்தது.
சிவபெருமான்,
சின்னவன், செம்மலர் மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
எங்கிருந்து
கடிதம்? என்றான் சின்னவன். செம்மலர் ஒரு கடிதத்தைத் தன் கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
’சென்னையிலிருந்து’ பதில்
சொன்னாள் செம்மலர்.
’கடிதத்தைப்
படி’ என்றான் சிவபெருமான்.
செம்மலர்
படிக்கத் தொடங்கினாள்.
சென்னையிலுள்ள பிரதான
பேருந்து நிலையத்தில் இறங்கி, படங்களுக்குப் பிரேம் போடும் கண்ணாடிக்கடை அருகில் நிற்கவும் உங்களைத் தோழர்கள் அழைத்துச் செல்வார்கள். வரும் ஞாயிறு மாலை உங்களை எதிர்பார்க்கிறோம். படித்து நிறுத்தினாள் செம்மலர். இப்போது செம்மலர் கண்மணியின் அறையிலிருந்த அனைத்து நூல்களையும் படித்து முடித்து விட்டிருந்தாள். இனி, செயல்படும் விதம் பற்றி. அவள் தெரிந்த கொள்ள நிறையவே இருக்கிறது.
சிவபெருமான்
சின்னவனையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான்.
’என்ன
செய்யலாம்?’
’என்ன
செய்யறது போய்?’ என்றான் சின்னவன்.
’செம்மலரக்குத் தெரியலாம்’
பதிலுரைத்தான்
சிவபெருமான்.
’கண்மணிக்குத் தொடர்புடைய
நண்பர்கள் இக்கடிதம் எழுதியிருக்கலாம்’.
’கண்மணியைத்
தான் தொலைச்சிட்டோமே!’ சிவ பெருமான் ஆழ்ந்த வருத்தத்தோடு கூறிக்கொண்டான்.
’ஆமாம்
சிவபெருமான், அவரை இழந்துதான் போனோம். இன்னைக்கு ஊரு வேரோடு மாறிக் கெடக்கு, அந்த கண்மணி சார் இல்லாதது ரொம்பவும் இருட்டாக்கிடிச்சி. மூவருமாய் மாறி மாறி, பேசிப் பேசி அயர்ந்து போயினர். இப்படியாய் அனேக தடவைகள்...
ஒரு
தடவை செம்மலர் வருத்தமாய்க் காணப்பட்டாள். இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது? மெல்லிய குரலில் ஆரம்பித்தான் சிவபெருமான்.
’முட்புதர்கள் மட்டுமே
கவனிப்பாரற்றுக்
கிடப்பினும் செழித்து வளரும். ஒரு பவழமல்லியை அப்படி வளர்த்து விட முடியுமா?’ என்றான்.
’கண்மணி
இல்லாததால், தீன்பாயி முயற்சிகள் நாசமாகியது. சந்திரகாசு சோரம்
போனது இதுக எல்லாமே சதி, பெருஞ்சதி. இன்னும் எத்தனையோ?’ என்றான் சிவபெருமான்.
’சிந்திக்கச்
சொன்னதுக்கு, சாக்டீரசுக்கு, வெஷம் கொடுக்கல?’ என்றாள் செம்மலர்.
39
சிவபெருமான்
அளித்த பசுவின் கன்றுக்குட்டியோடு நாகலிங்கம்மேல வெளி நோக்கிச் சென்றதாயும் அங்கேயே மயங்கி விழுந்து கிடப்பதாயும் ஒரு சிறுவன், தருமங்குடி முழுவதும் கேட்குமாறு சொல்லிக் கொண்டே சென்றான்.
முட்டுமுட்டாய் சிலர்
திரண்டு நின்று கொண்டிருந்தார்கள். மொட்டை வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஓடினாள். அவளுக்குப் பின்னால் வாகடம் காசி வேகு வேகு என்று நடந்து கெண்டிருந்தான்.
சிங்காரம்
தன் தலையில் கயிற்றுக் கட்டில் ஒன்று தூக்கிக் கொண்டு மேல வெளிக்கு நடக்க ஆரம்பித்தான்.
’கடளே
கடவுளே
நானு
என்ன பண்ணப் போறேன்?’
புடவைத்
தலைப்பைத் தன் தலையில் போட்டுக் கொண்டு அழுது கொண்டே நடந்தாள் மொட்டை.
மேல
வெளியில் கன்றுக்குட்டியின் கயிறு கால்களில் சுற்றிக் கிடக்க நாகலிங்கம் குப்புறக் கிடந்தான்.
மொட்டை
’வீல்’ என்று கத்தினாள்.
’என்சாமி
என்சாமி என்சாமி’ என்று பதறி அடித்துக் கொண்டாள் மொட்டை.
’ஐயோ’
அலறி விழுந்தாள்.
சிங்காரம்
நாகலிங்கத்தைத்
தொட்டுப் பார்த்தான். உதட்டைப் பிதுக்கினான். தன் கண்களில் வழியும் நீரைத் துடைத்துக் கொண்டான்.
’இனி
கட்டில்ல போட்டுத் தூக்குவோம்’, என்றான் வாகடம்.
என்ன
அண்ணே என்றாள் மொட்டை.
’ஒண்ணுமில்லை’ சிங்காரம்
பதில் சொன்னான்.
நாகலிங்கம்
உயிர் விடை பெற்று
விட்டிருந்தது. கால்களில் சுற்றிக் கொண்ருந்த கயிற்றினைப் பிரிந்து எடுத்து, கன்றுகுட்டியைத் தன் கையில் பிடித்துக் கொண்டு நின்றான் வாகடம். நாகலிங்கத்தின் உடலைக் கட்டிலில் கிடத்தித் தூக்கிக் கொண்டு நின்றனர்
சிங்காரம்
முன்பக்கமாய் தலை சுமந்து நின்று, ’நட’ என்றான்.
’மோசம்
போனேனே
மொட்டைமரம்
ஆனேனே’
என
அலறினாள் மொட்டை.
நாகலிங்கம்
விஷம் தீண்டி இறந்து போனதாய் பேசிக் கொண்டனா. சின்னவன் அலறி அடித்துக் கொண்டு தன் வீடு நோக்கி ஓடினான். நாகலிங்கம் வீட்டு முன்பாய் ஒரே கூட்டமாய் இருந்தது.
நாட்டாண்மையும் நடுப்பிள்ளையும் நாகலிங்கம்
வீட்டு வாயிலில் ஒரு பெஞ்சில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
மொட்டை
தன் பிரக்ஞை இழந்து காணப்பட்டாள்
’ஆகவேண்டியதைப் பாருங்க.
எழவு சொல்லுறதுக்க, ஆளுவ போவுட்டும், பெற ஏற்பாடும் ஆவுட்டும்’ என்று சத்தம் போட்டார் நாட்டாண்மை.
ஆளுக்கு
ஒன்றாய் ஏதோ காரியம் பார்த்துக் கொண்டிருந்தனர். சின்னவன் ஏற்பட்டுவிட்ட இழப்பு பற்றித் தீவிரமாய் சிந்தித்துக் கொண்டிருந்தான். நடுப்பிள்ளை ஒருமுறை இருமி செருமி, தான் இருப்பதை அனைவருக்கும் நினனவுபடுத்தினார்.
சிவபெருமான்
நடுப்பிள்ளையைப்
பார்த்து ’வணக்கம்’ என்றார்.
’வணக்கம்’
என்றார் நடுப்பிள்ளை பதிலுக்கு.
நாட்டாண்மை
இருவரையும் பார்த்துக் கொண்டே இருந்தார்.
சின்னவன்,
சிவபெருமானின்
கைபிடித்துக் கண்கலங்கி நின்றான்.
’மேல
மேல இடி’ அழுத்தமாய்ச் சொன்னான் சிவபெருமான்.
சின்னவன்
சிறுபிள்ளையாய்
அழுது கொண்டிருந்தான். சிங்காரமும் வாகடமும் மூங்கில் கழிகளை நறுக்கிச் சுத்தம் செய்து பங்கீடு செய்தவண்ணமாய் இருந்தனர்.
நாட்டாண்மை
சிவபெருமானிடம்
சென்று நின்று கொண்டார்.
’ஒரு
சேதி’.
’என்ன?’
’சுடலைக்குக்
சின்னவன் வருலாம். ஆனா சடங்கு ஏதும் நடத்த அவனுக்கு உரிமை இல்லே.’
’ஏன்?’
’ஆளா
வரட்டும்.ஆனா காரியம் ஏதும் அவன் செய்ய ஒத்துக்க மாட்டோம்.’
’ஏன்?’
’அவன்
ஊருக்குச் செரைக்கிறதில்லே. ஊரு சுடலைல அவன் காரியம் பண்ண முடியாது’.
’அவன்
அப்பனாச்சே’.
’யாரா
இருந்தா என்ன?’
சிவபெருமானுக்குத் தலை
சுற்றியது. சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டான். நாகலிங்கம் உடல் அருகில் சின்னவனும் மொட்டையும் அமர்ந்து கொண்டிருந்தனர். மொட்டையின் கண்களிலிருந்து நீர் வழிந்து முகம் என்னமோபோல் இருந்தது.
’இது
அநியாயம் அக்கிரமம்’ என்றான் சிவபெருமான்.
நடுப்பிள்ளை
இரண்டுமுறை இருமி இவை அத்தனையும் தனக்குத் தெரிந்த விஷயமே என்கிறபடி பார்த்துக் கொண்டார்
சிவபெருமான்
சின்னவனை அழைத்துக் கொண்டான்.
’ஏன்ன,
என்ன சேதி ஏதும்?’ என்றான் சின்னவன்.
’நீ
ஊருக்குத் தொழில் பண்ணலயாம், நீ சுடலைல காரியம் பண்ணக்கூடாதுன்னு சொல்லுறாங்க’.
’சின்னவன்
அப்படியா?’ என்றான்.
நேராய்
நடுப்பிள்ளையிடம்
சென்று நின்றான் சின்னவன்.
’எங்கப்பா
ஆயிரம் சவத்துக்கு இதே சுடலைல கடமை முடிச்சிருக்காரு நான் எங்கப்பனுக்குச் செய்ய நீங்க தடை போடுவீங்களா?’
’ஆமாம்’.
’ஏன்?’
’ஊரு
கட்டுப்பாடு’.
’எங்கப்பனுக்கு நான்
பெறந்தேன்.’
’ஆரு
இல்லன்னா? ஊரு சுடலை ஊரு கட்டுப்பாடுல வரும். சின்னவன் நிதானித்துக்கொண்டான்.
சிங்காரமும் வாகடமும்
பாடை கட்டிமுடித்து விட்டிருந்தனர்.
சிங்காரத்தை
அழைத்தான் சிவபெருமான்.
’சின்னவன்
சுடலைக்கு வரமாட்டான். வரக்சுடாதுன்னு சொல்லிட்டாங்க. சின்னவன் செய்யவேண்டிய சடங்கு எல்லாத்தையும் இங்கேயே முடிச்சிடணும்.’
’ஏன்?’
’அவன்
ஊருக்கு இதுங்கலயாம்.’
’அப்படின்னா
எம்மொவன் சேதி’.
’நாக்கச்
சுருக்கிக்க’ என்றார் நாட்டாண்மை சிங்காரத்திடம்.
’எங்கப்பன்
காரியம் நான் போறேன். ஆரு தடுப்பான்னு பாக்குலாம்" என்றான் சின்னவன்.
’இறப்பை
ஒரு சாதாரண நிகழ்ச்சியாய், எடுத்துக் கிட்டம்னா இந்தச் சடங்கு விஷயத்தைப் பெரிசு பண்ண வேண்டாம்’ என்றான் சிவபெருமான்.
’அப்ப’.
’செய்ய
வேண்டியதை இங்கேயே செஞ்சி பொணத்தை காட்டுக்கு அனுப்புவம்’.
அழுத்தம்
திருத்தமாய்ச்
சொன்னான் சிவபெருமான்.
’சரி’.
’நாமரொம்ப
தூரம் போயி ஆவுற காரியம் நெறய இருக்கு. சட்டுனு ஆசைப்பட்டா, அது சரின்னாலும் ஆவுற கதை இல்லே’ தொடர்ந்துகிட்டேதான்
இருக்கணும் போராட்டமும்..
மொட்டை
ஏதும் அறியாது, இன்னும் நாகலிங்கத்தின் உடல் அருகே மூக்கைச் சிந்தக்கொண்டே இருந்தாள்.
சடங்குகள்
முடிக்க சிங்காரம் உதவினான். சின்னவன் தன்னை ஊர்வலத்திலிருந்து விடுவித்துக்கொண்டான். நாகங்கத்தின் உடலைத் தூக்கிய கூட்டம் சுடலை நோக்கி நடந்து கொண்டிருந்தது.
சின்னவனும்
சிவபெருமானும்
நடந்து, சுடலை வழியில் ஓடும் பட்டினத்தான் வாய்க்கால் மதகில் அமர்ந்து கொண்டார்கள்.
’ராமானுஜர்
எங்க மனுஷரைத் தலையில் தூக்கி ரெங்கனாதரை வழிப்பட்டதா சொல்லுறாங்க’.
’அதுக
எல்லாம் கதைன்னுதான் நினைக்கிறேன்’.
’நந்தன்
தில்லை அம்பலத்தானைத் தரிசித்தது’.
’நான்
நம்புல’.
’கண்ணப்பன்ற
கொறவரு, சிவபெருமானுக்குத் தன் கண்ணைப் புடுங்கி அப்பினது.’
’கோவில்ல
நுழஞ்ச கண்ணப்பருக்கு கண்ணு நோண்டிக்கொன்னு உயிர் போயிருக்கும். கதைய திரிச்சிவுட்டிருப்பாங்க.
’தீர்மானமாத்தான் சொல்லுறயா
சின்னவனே?’
’பின்ன,
நெலாவுல காலு வச்ச காலத்துலயே இங்க தன்மானத்தோட வாழ முடியலயே. கல்லுல முட்டிக்கிற சிங்காரமும், கத்தியில் மயிற வழிக்கிற எங்கப்பனும் இன்னும் கேவலமாத் தானே’!
’ஆமாம்’
அழுத்தமாய்ச் சொன்னான் சிவபெருமான்.
’ ‘வடலூரார் ராமலிங்கரு கதவச் சாத்திகிட்டு முடிஞ்சிபோனதா, நம்ப கண்ணு முன்னாலயே கதசொல்லுலயா?’
’நமக்கு
ரவ சுரணை வரல்லே இன்னும்தான்.’
ஊர்த்தொழிலாளிகளுக்கு சுடலையில் ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்து
சிங்காரத்தின் கூச்சல் வந்து கொண்டிருந்தது.
’அப்பாவை
இந்நேரம்
மூடி இருப்பாங்க’
‘ உங்களை ஓதுக்கி அங்க
காரியம் நடக்குது’
‘காலம் காலமா எவ்வளவோ அநியாயம்’
’சாவு
மட்டும் இல்லன்னா இந்த உலகத்துல ஏழை பாழைங்க, ஓரஞ்சாரமாகூட வாழ முடியுமா தீச்சிப் புடுவாங்க தீச்சி’.
’சரியா
சொன்னீங்க’.
’தருமங்குடிக்கு எல்லாம்
அத்துப்படி, இயற்கை ஒரு கணக்கு வச்சிருக்கும். நாளானாலும் அதுக்கும் ஒரு தீர்ப்பு இருக்கும்’.
’இந்தப்
பட்டினத்து வாய்க்காலு நாமதான். தருமங்குடியும் நாமதான் தண்ணீ, இந்த ஊரு மண்ணு, காத்து மரம் மட்டை மாடு, சனஞ்சாதி, காக்கா, குருவி ஈ எலும்பு பில்லு நெல்லு எல்லாம்’ வேதாந்தமாய்ச் சொன்னான் சிவபெருமான்.
’சரிதான்
அப்படின்னு சொல்லி
ஓரமா குந்திகிட்டம்னா, சாணி காஞ்சி போனது மாதிரி ஆயிடுவோம்’ என்றான் சின்னவன்.
பட்டினத்தான்
வாய்க்கால் சலசலத்துச் சென்று கொண்டிருந்தது. துவங்கிய இடத்திலிருந்து பல்வேறு மக்களின் அகம்பாவங்களைக் கழுவிக்கொண்டு வருவதாய் அதுதோற்றமளித்தது.
நாகலிங்கத்தைப் பூமி
அன்னையிடம் ஒப்படைத்த கூட்டம் திரும்பிக் கொண்டிருந்தது.
’எத்தனி
பேருக்கு சொர்க்கம் கைலாசம் சேர்த்தான் நாகலிங்கம். ஆண்டவரே அவருக்கு நல்ல பொசுப்பக் குடு.’
சொல்லிக்
கொண்டே வாகடம் நடந்து வந்தான்.
’கதை
முடிஞ்சிதா?’ என்றான் சின்னவனிடம்.
’முடியற
கதை இல்ல’ பதில் சொன்னான் சிவபெருமான்.
சிவபெருமானும் சின்னவனும்
பட்டினத்தான் வாய்க்காலில் மூழ்கி எழுந்து நின்று கொண்டனர்.
’மனம்
அதைர்யமாய் இருக்குதா?’
’இல்லை’.
’இருக்கும்,
இருக்கணும்’.
’இல்லை’.
’நாளைக்குத்
தெரியும்’ என்றான் சிவபெருமான். தருமங்குடி நாகலிங்கத்தைத் தொலைத்து முடித்தது.
40
தருமங்குடி
மாடுகள் மேய்ச்சலுக்குச் சென்று கொண்டிருந்தன.
’மண்ணில்
நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்’. பழையபடி பேரூர் பிள்ளை தருமைநாதனை வலம்வந்த வண்ணமிருந்தார்.
சந்திரகாசு
சாராய வியாபாரமாயும், தலைவர் பதவியாயும் அலைந்தபடியே இருக்கிறான். நடுப்பிள்ளையும் நாட்டாண்மையும் சுருதி குறைந்து, சூட்சுமம் குறையாமல் சுயத்தைப் பேணுகின்றனர்.
சிங்காரம்
அழுக்கு மூட்டைகளைச் சுமந்து, பட்டினத்தான் வாய்க்கால் கரையில் படுத்திருக்கும் கிடப்புக்கல் நோக்கி நடக்கிறான்.
சின்னவனும்
சிவபெருமானும்
அந்த ஆலமரததுக்குக் கீழாய் அமர்ந்து அடிக்கடி பேசுகின்றனர். செம்மலர் வேறு எங்கோ சென்றிருப்பதாய் தருமங்குடி பேசிக்கொள்கிறது.
’தொடர்ந்து
போராடுவது மட்டுமே ஜீவனுள்ள வெற்றி. அந்த அக்கினியைக் காப்பாத்தறதுதான் ரொம்ப ரொம்ப பெரிய வேலை’. என்றான் சிவபெருமான்.
’ரொம்ப
தொலைதான்’, என்றான் சின்னவன்
ஆலமர
நிழலில் அவர்களை அடிக்கடி காணமுடிந்தது.
இன்னும்
வாகடம் மட்டும்,பூட்டிப் பாழய்க் கிடக்கும் சர்க்கரை ஆலைமுன் காவல்காரனாய் அமர்ந்து கொண்டு தன் கண்களைக் குளமாக்கிக் கொள்கிறான்; பின் எழுந்து போகிறான். மீண்டும் அமர்கிறான்,
அந்த
செம்மலரின் வருகைக்காய்த் தருமங்குடி இன்னும் வழிமீது விழிவைத்துக் காத்துக் கிடக்கிறது. காலம் கனியும்; கனவு மெய்ப்படும்.
-------------------------------------------------------------------------------------------------------------