தமிழராய்ப்பிறந்தும்….
தமிழ் மொழியில் மூன்று நூல்கள் மிக முக்கியமானவை.அவை திருக்குறள் திருவாசகம் திருமூலம் .
திருக்குறளின் மாண்பு உலகறியும். திருக்குறளை விஞ்சி மானுட சத்தியம் பேசும் வேறு ஒரு நூல் உலகில் இருக்கமுடியுமா என்று தெரியவில்லை.
ஆயினும் உப நிடதங்கள் தத்துவார்த்த விஷயத்தில் சிகரம். பன்னரும் உப நிட நூலெங்கள் நூலே,பார்மிசை ஏதொரு நூலிதுபோலே என்பார் மகாகவி பாரதி. தத்துவ புருடர் ஓஷோ எவ்வளவு ஆழமாக ஆன்மீக சூக்கும கருத்தினை எடுத்துவைத்தபோதும் உப நிடத சமாச்சாரங்கள்தாண்டி தத்துவார்த்த உலகில் வேறு எதுவும் இருக்குமா என்பது அய்யமே.
மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற.
இத்திருக்குறளையும் தாண்டி ஒருவர் அறத்திற்கு இலக்கணம் சொல்லவேண்டுமா என்ன?
எத்துணையும் பேதமுறாதுஎவ்வுயிரும்
தம் உயிர் போல் எண்ணி, உள்ளே
ஒத்து, உரிமை உரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்? அவர் அவருளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும்
இடம் என நான் தேர்ந்தேன் அந்த
வித்தகர் தம் அடிக்கேவல்புரிந்திட என்
சிந்தை மிக விழைந்ததாலோ
என்பார் அருட்பிரகாச வள்ளலார். இங்கே உள்ளே ஒத்து என்பது என்கிற பதம் ஆழமான பொருளுடையது. நமது உள்ளம் நிறைவாய் ஒப்பது என்று நாம்பொருள் கொள்ளமுடியும். இதனில் இன்னொரு விஷயம் உள்ளம் ஒத்து பின் அதனில் உவக்கின்ற அந்த பெருநிலையும் வரவேண்டும்.
என்னடா இப்படி வசமாகமாட்டிக்கொண்டு விட்டோமே என்கிற நிலைசாதாரண மனித இயல்பு உள்ளே ஒப்பதும் அது கண்டு மனம் உவப்பதும் மனம் செம்மையானவர்களுக்கே சாத்தியமாகும்
திருக்குறளிலேயே மிகப்பிடித்த குறள் மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் என்று தொடங்கும் அந்தக் குறளே ஆகும்
To like keats is a test of fitness for understanding poetry என்பார் ஆங்கில நாவலாசிரியர் ஜார்ஜ் கிஸ்ஸிங். அந்த ஆங்கிலக்கவி கீட்ஸ் சொல்லுவார்
A thing of beauty is joy for ever அதற்கு மேல் சென்றும் பெருஞ்சேதியொன்று சொல்லுவார்.
Beauty is truth, truth beauty that is all
Ye know on earth and all ye need to know.
எப்பொழுதும் ஆனந்தத்தை வர்ஷிப்பது அழகு. நீல வானும் வெண்நிலவும் நீலக்கடலும் நீள் மலையும் அந்த வகையில் கொள்ள முடியும்.சத்தியமே அழகு அழகு என்பது சத்தியமே. இவ்வுலகில் வாழுகின்ற ஒவ்வொரு மனிதனும்அறியவேண்டியதும் அறியக்கிடப்பதும் சத்தியானந்தம் ஒன்றே என்கிறார் கீட்ஸ.
‘யாமெய்யாக்கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற’
என்று பேசுகிறது திருக்குறள் கொல்லாமை பற்றிப்பேசும் திருவள்ளுவர்
’ஒன்றாக நல்லது கொல்லாமை அதன்
பின்சாரப்பொய்யாமை நன்று’ என்று ஒரு நீதி சொல்கிறார். பொய்யாமை வேறு வாய்மைவேறு என்கிற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று
.இரண்டு முறை அல்லவா பொய்யாமையைச் சொல்கிறார்.செய்யாமையும் இரண்டுமுறைச் சொல்கிறார்தான். ஆனால் வாய்மை பற்றிக்கூறும் போது
’மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம் செய்வாரின் தலை’ என்று பேசுகிறார்.
இங்கு ஈகை அறம் ஆகிய விஷயம் மட்டுமல்ல தவம் செய்யும் முனிவர்களையும் தாண்டிப்போகிறது வாய்மை மொழிபவன் செல்வாக்கு.பொய்யாமையைவிடவாய்மைஉயர்வானது வெல்லும் வாய்மையே என்பது வேத வாக்காகிறது.பொய்யாமையே வெல்லும் என்பது சற்றுக்கனமிழக்கிவே செய்கிறது.
வள்ளுவருக்கு வருகின்ற அறச்சீற்றம் உச்சமானது.பாரதி ‘தனியொருமனிதனுக்குணவிலை எனில் இச்சகத்தினைஅழித்திடுவோம்’என்பார் திருவள்ளுவர் இன்னும் சற்றுத்தாண்டியும் போகிறார்.
’இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்
பரந்து கெடுக இவ்வுலகிற்றியான்’. கடவுளுக்கே பிடியப்பா என் சாபம் என்கிறார் திருவள்ளுவர்.
இன்பத்துப்பாலிலே ஆயிரம் கவித்துவம் பெய்து எழுதியிருக்கிறார் திருவள்ளுவர் எடுத்துக்காட்டுக்கு ஒரு குறள்.
’மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படுவார்’.
அந்த சிலர்களில் யார் யார் வருவார்களோ.ஆகவே வெகு சிலரே வாழ்வில் இல்லற இன்பம் என்பது என்ன என்று நிறைவாய் அறியும் வாய்ப்பு பெறுகிறார்கள்.
இரண்டாவதாக திருவாசகத்துக்கு வருவோம்.தெய்வத்தமிழ் இலக்கியங்களில் முதன்மையானது திருவாசகம் திருவாசகத்துக்கு உருகாதார் எவ்வாசகத்துக்கும் உருகார் என்கிற ஆன்றோர் வாக்கிலிருந்து அதன் பெருமை நமக்குப்புலனாகும்.
வடலூர் வள்ளல் இராமலிங்கர்
’வாட்டமிலா மாணிக்க வாசக நின்வாசகத்தை
கேட்டபொழுது அங்கிருந்த கீழ்ப்பறவை சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞான
நாட்டமுறும் என்னிலங்கு நான் அடைதல் வியப்பன்றே. என்று மனம் உருகி மணிவாசகப்பெருமானின் வாசகங்களுக்குப்பெருமை சேர்க்கிறார்.
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்று
அவரவரைக்கூத்தாட்டுவானாகி நின்றாயை
என் சொல்லி வாழ்த்துவனே. என்று மறை பொருளுக்கு விளக்கம் தருகிறது திருவாசகம். இதனில் உண்மையுமாய் இன்மையுமாய் என இறையை க்குறிப்பிடுவது கூர்ந்து நோக்கத்தக்கது அப்படியே யான் எனது என்று அவர்அவரைக்கூத்தாட்டுவான் அந்த இறைவன் என்று பேசுவதும் கூடுதலா நம்மைக்கிறங்கவைக்கிறது.
‘சாதிகுலம் பிறப்பென்னும் சுழிபட்டுத்தடுமாறும்
ஆதமிலி நாயெனை அல்லல் அறுத்து ஆட்கொண்டு
பேதைகுணம் பிறர் உருவம் யான் எனது என்னுரை மாய்த்து
கோதிலா அமுதினானை குலாவு தில்லை கண்டேனே.
இவண் சாதிகுலம் பிறப்பு என்பதை சுழி என்கிறார் மாணிக்கவாசகர்.அதனில் அகப்பட்டுக்கொண்டவர்கள் வெளியேறுதல் அரிது.ஆக அம்மூன்றிலும் சிக்காமல் மனிதன் காப்பாற்றப்படவேண்டும். பிறகு,
பேதை குணம்
பிறர் உருவம்
யான்
எனது
என்னுரை
இத்தகைய விஷயங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பது மனிதனின் கீழ்மைக்குணம். இவைகளை மாய்த்து என்னை மீட்டு எடுத்தக்குறை ஒன்றிலா அமுதினன் மகிழ்ச்சி பொங்கும் தில்லையில் உள்ளான் அவனை க்கண்டுகொண்டேன் என்கிறார் மானிக்கவாசகர்.
மண்ணில் நல்ல வண்ணம் மனிதன் வாழ் நெறி காட்டும் திருவாசகம் ஒப்பற்ற ஒரு ஞானக்கருவூலம்.
அடுத்து நாம் திருமூலர் இயற்றிய திருமூலம் சற்றே காணலாம்.
அடுத்தவேளை உணவு இல்லாத ஏழை நம்முன்னே நிற்க நாம் கோவிலில் கோண்டுபோய் பாலும் தேனும் குடம் குடமாய்க் கொட்டி இறைவனை ஆராதிப்பது வழிபடுவது நியாயமில்லை என்று சமத்துவம் பேசும் தெய்வத்மிழ்நூல் திருமூலம்.
பமடமாடக்கோவில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக்கோவில் நம்பர்க்கு ஆங்கு ஆகா
நடமாடக்கோவில் நம்பற்கு ஒன்று ஈயில்
படமாடக்கோவில் பகவற்கு அது ஆமே
எழையின் சிரிப்பில் இறைவனைக்காண்பது அது. ஏழையின் மகிழ்ச்சியில் இறைவனைக்காண்பது என்று சொல்வது பொருத்தம் கூடித்தெரியலாம்.
ஆயிரம்ஆயிரம் என வேதம் ஓதியஅந்தணர்களுக்கு உண்விடலினும் திரு நீறு பூசிய ஒரு எளிய தொண்டனை உள்ளத்தால் நினைத்து ப்பார்த்தல்சாலச் சிறந்தது. ஒர் பிடி அன்னம் அவர்க்கு அன்பாய் வழங்க அதுவே நற்பேறு.
’ஆறிடும் வேள்வி அருமறை நூலவர்
கூறிடும் அந்தணர் கோடிபேருண்பதில் நீறிடும் தொண்டர் நினைவின் பயனிலை
பேறு எனில் ஓர் பிடி பேறதுவாமே’.
இதைவிட நெஞ்சிற்கு நேர்மையாய் வேறு ஏதும் சொல்லிவிட வாய்க்குமா என்ன?
ஆடம்பரமும் ஆரவாரமும் ஆங்காரக்கூச்சலும் தெய்வ வழிபாடு என்று வாடிக்கையாகி கண்முன் நிற்கிறது. திருமூலரின் எளிமையைத்தான் என்று நாம் விளங்கிக்கொள்ளபோகிறோமோ?
’யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கின்னுரைதானே.’
இறைவழிப்பாட்டை இத்தனை எளிமையாய் நேர்மையாய் என்று நாம் பயில்வதுவோ?
என்னுடைய தந்தை நிறைவாழ்வு வாழ்ந்து இவ்வுலகினின்று விடைபெற்றுக்கொள்ளும்வரை தெருவில் நின்று கொண்டு தினம் ஒரு பிடி பசும்புல்லை தன் கையாலே பறித்து அதனை ஏதேனுமொரு பசுவிற்கு வழங்கியபின்னரே தனது மதிய உணவு என்பதை வழக்கமாக க்கொண்டிருந்தார் என்பதை இங்கு வெகு அடக்கத்தோடு பதிவு செய்துகொள்கிறேன்.
இறைவன் ஒருவனே அவனை அடைதற்கு ஆறுகள் பல. இது சிறந்தது அது சிறந்தது என்று பேசுவதைத் திருமூலர்
’’நன்றிது தீதிது என்றுரையாளர்கள்
குன்று குரைதெழு நாயை ஒத்தார்களே’. என்று வலிந்து குரல் கொடுக்கிறார்.
’ஒன்றே குலம் ஒருவனே தேவன்
நன்றே நினைமின் நமனில்லை.’
கச்சிதமாய்ச்சொன்ன திருமூலரை ஆழ்ந்து படிக்க ஞானம் கைகூடும்.
ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று என்று ஒதிய திருமூலர் தமிழர்தம் அறிவுப்பெட்டகம்.
ஆகத் தமிழராய்ப்பிறந்த ஒவ்வொருவரும்
திருக்குறளை திருவாசகத்தை திருமூலத்தை படிக்காமல் தம் வாணாளை வீணில் போக்குதல் நியாயமே ஆகாது.
-----------------------------------------------------------------------
No comments:
Post a Comment