Saturday, October 2, 2021

பிழைப்பு

 

 

பிழை(ப்பு)                        

 

 அதிகாலையிலேயே  மொட்டை மாடியில் இருக்கும்  சிண்டெக்ஸ் தண்ணீர்த் தொட்டி காலியாகியிருப்பது தெரிந்தது. அவன்  நீர் மோட்டார் சுவிட்சைப்போட்டான். சப்தம் வித்தியாசமாக வந்தது. இப்படியெல்லாம் வந்ததே இல்லை.  ஹூம் ஹூம்  என்று ஒரே ஹம்மிம்ங் ஓசை.

 ஏதோ கோளாறு  அது  மட்டும் தெரிந்தது. உடனேயே மோட்டார் நின்றும் விட்டது. மோட்டார் அருகே சென்று தொட்டு தொட்டுப் பார்த்தான். ஒன்றும் விளங்கவில்லையே.  உள்ளே எங்கேனும்  பியரிங்லில் பிடிப்பு இருந்தாலும் மோட்டார் ஓடாதுதான். ஆக தேங்காய் எண்ணெய் கொண்டுவந்து மோட்டாரின் கிடைத்த இடுக்கில் எல்லாம் நீண்ட ஸ்க்ரூ டிரைவரால் தொட்டுத் தொட்டு தடவினான். மோட்டார்  சுவிட்சைப்போட்டால்  அது ஓடினால்தானே.    ஹம்மிங் ஒலி  லேசாக மட்டும் வந்தது. பழைய ட்யூப் லைட்கள் எரியும் போது அப்படித்தான் ஒரு வண்டின் ரீங்காரம் வரும்.எத்தனையோ திருக்கோவில்களில் இப்படி குழல் விளக்குகள் எரிவதுண்டு. அவன்  தெரு   நிற்கும் மின்விளக்கும் கூட  இவ்விதமாய் ரீங்கரிப்பது கேட்டிருக்கிறான்.

   மோட்டார் ஏர் வாங்கியிருக்குமோ என்று அந்தப்பித்தளைத் திருகினை பலங்கொண்ட மட்டும் அழுத்தித்திறந்தான்.  அதெல்லாம் ஏர் ஒன்றும் வாங்கவில்லை. தண்ணீர் பீறிட்டுக்கொண்டு கொட்டியது. அந்தப் பிரச்சனையில்லை. தண்ணீர் அந்த சந்து வழி ச்சரியாக  வெளி வந்தால் கீழே ஃபுட் வால்வும் கூடச் சரியாகத்தான் இருக்கும். அவனுக்கு இதற்குமேல் என்ன செய்வது என்று தெரியவில்லை. திணறினான்.

அவன் வழக்கமாக அழைக்கும் பிளம்பரை க்கைபேசியில் அழைத்தான். இரண்டு முறை அழைத்தால்தான்  அவன் போனை எடுப்பது வழக்கம். அப்படித்தான் ஆகியது இம்முறையும்..

தண்ணீ மோட்டர் ஓடுல. என்ன பிரச்சனன்னு தெரியல. நீங்க உடனே வரணும். வீட்டுல சுத்தமா தண்ணி இல்ல.  நான் ஒண்ணுமே புரியாம நிக்குறன்’

’ ஒரு அரை மணி ஆவும் இங்க ஒரு  சின்ன வேலைல இருக்கன். நீங்க இப்புறம்  அந்த மோட்டார கீட்டார  போடாதிங்க. வெஷயம் தெரியாம யாரும் போட்டுற  கீட்டுற போறாங்க. பாத்துகுங்க  மோட்டாரு காயில் பூடும். நா வந்துடறன்’

பிளம்பர் கைபேசியை நிறுத்தினான்.  அவன்  அந்த பிளம்பர்  வருகைக்காகக்காத்திருந்தான்.

‘ முக்கியமான வேலய இருந்தா அத மட்டும்  பாரு. தண்ணி மோட்டாரு  ரிப்பேரு. அத ஞாபகத்துல வை’ அவன் மனைவியிடம் எச்சரிக்கையாய்ச் சொல்லிக்கொண்டான்.

‘சரிங்க.எதுவும் செய்யுல நான்’

‘பொங்குற வேல ஆவுட்டும். அத நிறுத்திடாதே.  தண்ணி சிக்கனமா ஆவுட்டும்.’’

அவன் மனைவிக்கு யோசனை சொன்னான்.

‘இண்ணைக்காவது வெளியில எங்காவது போயி சாப்புட்டுக்குவம்’

‘ஏற்கனையே  வூட்டுல மோட்டாரு பூட்டுது. இதுல சாப்பாட்டு செலவு  ஓட்டல்ல வேறயா’ அவன்  அதிர்ந்து பதில் சொன்னான்.

பிளம்பர் வரும் அரவம் கேட்டது. அவனது டிவிஎஸ் எக்செல்.  அது எழுப்பும் ஒலியே அலாதி.

பிளம்பர் வண்டியை நிறுத்தினான். கழுதை கனம் கனக்கும் டூல்ஸ் பை ஒன்றோடு மோடாரிடம் போய் நின்றான்.

‘மோட்டாரைப்போடுங்க’

‘ தோ போடுறன்’

அதே ஹம்மிங்க் ஒலி வந்தது.  மோட்டார் ஏர் வாங்குகிறதா எனப்பார்த்தான் . எல்லாம் சரியாகத்தான் இருந்தது.

மோட்டாரின் மேல் மூடியைக்கழட்டினான். திரும்பவும் மூடினான். மோடாருக்குப்பக்கத்தில் அதனோடு ஒட்டிகொண்டு இருந்த கண்டென்சரைக்கழட்டி சோதித்தான்.

‘ கண்டென்சர் போயிடுச்சி. அதான்’

‘ இப்ப என்ன செய்ய’

‘ நா சேட்டுகிட்ட போயி புதுசு வாங்கியாறன்.  ரூவா முந்நூறு கொடுங்க’

என்றான்.

அவனிடம் அவன் கேட்ட பணம்  கொடுத்தான்.  பிளம்பர் தனது வண்டியில் புறப்பட்டு சேட்டுக்கடைக்குப்போனான்.

‘தோ வந்துடறன்’ சொல்லிப்போனான்.

இரண்டு மணி நேரம் ஆகியது. இன்னும் பிளம்பரைக்காணோம். அவனுக்குப்போன் போட்டான். அவன் எடுக்கவே இல்லை.. அவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

பிளம்பரின் வண்டி சத்தம் உடனேயே கேட்டது. இம்முறை தன்னோடு ஒரு இளைஞனையும் அழைத்து வந்தான்.

‘இவுரு  மெக்கானிக்கல்  படிச்சவரு.  நாம  இந்த தொழிலு  அனுபவத்துல பழகுனம் அவ்வளவுதான்’’ பிளம்பர் சொன்னான்.

உடன் வந்திருந்த இளைஞன் மோட்டாரிடம் சென்று அந்த பழைய கண்டென்சரை கழட்டிவிட்டு புதிய ஒன்றை அவ்விடத்தில்  பொருத்தினான்.

’ இப்ப மோட்டாரை போடுங்க’

திரும்பவும் அதே ஹம்மிங் ஒலி. ஆனால் இம்முறை சற்று அதிர்வு ஒலி கூடுதலாகக்கேட்டது.

’ மேல தொட்டியில பாருங்க தண்ணி அங்க உழுவுருது தெரியும்’

அவன் மொட்டை மாடிக்குச்சென்று சிண்டெக்ஸ் தொட்டியின் மூடியைத்திறந்து பார்த்தான். தண்ணீர் குழாயில் கொஞ்சமே வந்தது. அரை குழாயுக்கு இருக்கலாம். அதனை ப்பார்த்துக்கொண்டான்.

\தண்ணி சீரா வருது. மொத மாதிரி இல்ல. அர குழாயிக்கு இருக்கும்’

‘இங்க மோட்டாரு பாடியில கரண்டு லீக்கு ஆவுது, இங்க பாருங்க டெஸ்டரை’

டெஸ்டரில் இருந்த விளக்கு  அழுமூஞ்சியாய் எரிந்தது.

‘ மோட்டரு சரியில்லங்க. இத மாத்தினாதான் வேலைக்கு ஆவும்’

‘ ரிப்பேரு செய்யலாமா’

‘ என்ன சாரு இத ரிப்பேரு பண்ணுறதுக்கு புதுசே வாங்கிகலாம் பிரச்சனை இல்லாம ஓடும்’

உடன் வந்திருந்த இளைஞன் தலை ஆட்டி அதுவே சரி என்றான்.

‘ புதுசுன்னா எவ்வளவு வரும்’

‘ அது பத்து ரூபாயுக்கு வரும்’

‘ பத்தாயிரமா’

‘ மேலயும் ஆவும் சாரு. இப்ப வெல வாசி என்னா’ பிளம்பர்  ஆகாயம் பார்த்தான்.

அவன் மனைவி எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

‘ ஆக வேண்டிய ஜோலிய மொத  பாருங்க இது தண்ணி பிரச்சனை’ என்று  மனைவி சத்தம் போட்டாள்.

‘ ஸேட்டுகிட்ட நீங்க  வாங்க பேசிக்கலாம். நா அங்க இருக்கன்.’ பிளம்பர் புறப்பட்டான்.

அவன் மயங்கி மயங்கி நின்றான்.

‘ வேலய பாருங்க. இப்ப  என்னதான் செய்வ நீ’  தனக்கு மரியாதை  ட்க்கென்று  குறைந்து போனதை எண்ணிப்பார்த்தான்.

சேட்டுக்கடை நோக்கிப்புறப்பட்டான். கடை வாயிலில் பிளம்பர் நின்று கொண்டிருந்தான். கூட வந்த இளைஞனும் அவனுக்குத்துணையாக அங்கே இருந்தான்.

‘சேட்டு என்ன சொல்றாரு’’

‘ சாரு நா சொல்ல என்ன இருக்குது. ரூவா பதிமூணு சூப்பரு மோட்டாரு  

குசுணா மோட்டாரு. மேங்கொண்டு சாமான் கூலி இருக்கு’

 அவன் தன் சட்டைப்பையில் இருந்த ஏடிஎம் கார்டு இருப்பதை உறுதி செய்துகொண்டான்.

‘ ஒரு வருசம் காரண்டி’. மோட்டாரு நல்லா ஓடும்.இது வரக்கும் இந்த அயிட்டம் நூறு பீஸ் ஒடி இருக்கு. ஒரு ரிமார்க்கு இல்ல. பாத்துகுகுங்க. செய்யுறது நல்ல செய்யுணும். பேரு முக்கியம். பேரு கெட்டா ஒருத்தர நா கூடம் மதிக்காதில்ல’

சேட்டு சொல்லி நிறுத்தினான்.பிளம்பர்  ஒரு தரம் கண்களை மூடித்திறந்தான்.

ஒரு பத்தாயிரம் ரூபாய் அட்வான்ஸ்  கை மாறியது. மோட்டர் வாங்கியாயிற்று. அதனைப்பொறுத்தும் சாமான்கள் ஒரு  சின்ன பையுக்கு இருந்தது. மூவரும் திரும்பவும் வீட்டிற்கே வந்தார்கள்.

‘ சமையல் செஞ்சியா என்னா’

‘ எல்லாம் ஆச்சி. அதுல கொற வப்பனா’ அவன் மனைவி பதில் சொன்னாள்.

புது மோட்டார் இப்போது பிணைக்கப்பட்டது.  கழட்டிய பழைய மோட்டாரை ஒரு ஓரமாக எடுத்து வைத்தான் பிளம்பர்.

‘ இது எடைக்குக்கூடம் தேறாது’ சொல்லிக்கொண்டான்.  திரும்பவும் பழைய மோட்டாரை த்தொட்டுப்பார்த்தான்.

‘இப்ப மோட்டார்  சுவிச் போடுங்க’ என்றான்.

அந்தப்புது மோட்டாரும் ஓடினால் தானே. எந்த ஒலியும் இல்லை. அவனுக்குத்தலை சுற்றியது. புது மோட்டாரும் ஓடாதா இது என்ன கஷ்ட காலம் என யோசித்தான். பிளம்பர் சேட்டுக்குப்போன் போட்டான்.  புது மோட்டார் ஓடவில்லை என்றான்.

சேட்டு என்ன சொன்னாரோ தெரியவில்லை.  பிளம்பர் அடுத்த வீட்டுக்குச்சென்றான். கரண்டை  டெஸ்டுக்கு என்று கேட்டு வாங்கினான். ஒரு பெரிய ஜங்க்‌ஷன் பாக்ஸ் வழியாக  புதிய மோட்டாருக்கு அந்த  மின்சாரத்தைக்கொண்டுவந்தான்.. அவர்கள் அப்படி எல்லாம் கொடுத்து உதவிடவும் விட மாட்டார்கள். பிளம்பருக்கு என்ன சாமர்த்தியமோ. அவர்களும் டெஸ்டுக்கு என்று ஒத்துக்கொண்டு கரண்டு கொடுத்தது சாதாரண விஷயமில்லை.. ’என்னடாவோ உலகம்’ இது அவன் நினைத்துக்கொண்டான்.

‘சாரு ஒண்ணும் யோசனை வேண்டாம். அவுங்க வீட்டு மெயின் செவுத்துல சமையலறை கழுவுத்தண்ணி லீக் ஆவுது. அத அடுத்ததா நா போய் பாக்கணும். இல்லன்னா அவுங்க  மெயின் செவுறு போயிடும். அதான் செத்த டெஸ்டுக்கு கரண்டு  கொடுங்கன்னுகேட்டேன். ஒ கே எடுத்துகன்னாங்க’ பிளம்பர் அவனுக்கு விளக்கம் சொன்னான்.

புது மோட்டாருக்கு அடுத்த வீட்டு கரண்டு கனைகஷன் கொடுத்தார்கள். சுவிட்சை ஆன் செய்தார்கள். மோட்டார் கும்மென்று ஓடத்தொடங்கியது. அவன் மொட்டை மாடி ஏறிப்பார்த்தான். குழாய் நிறைத்துக்கொண்டு தண்ணீர் தொட்டியில்  கொட்டிக்கொண்டிருந்தது.

‘ சாரு ஒரு சேதி.  கரண்டு ஆபிசுல எழுதி வையுங்க.  உங்க வீட்டுக்கு வர்ர நியூட்ரல் சரியா வரலன்னு. அத அவுங்க வந்து சரி பண்ணுவாங்க. கரண்டு மரத்துலேந்து வர்ர  நியூட்ரல் சரியில்ல அத  உங்க வீட்டுக்கு வர்ர கரண்டு போஸ்டுல ஏறி  ஈ பி காரனுங்க அவுங்கதான் சரி பண்ணணும்’.

அவன் கரண்டு ஆபிசுக்கு போன் போட்டான்.  நடந்த சேதி சொன்னான்.’ இன்னும் ஒரு மணி நேரத்துல ஆளு வரும்’ என்று பதில் சொன்னார்கள்.  அப்படி இப்படி என்று  ஒரு மணி நேரம் ஆனது. ஈபி காரர்கள்  ஆணி அடித்தாற்போல் வந்தார்கள். கரண்டு மரம் ஏறி  நியூட்ரலை பிரித்து அடித்துச் சரிசெய்தார்கள். இப்போது அவன் வீட்டு க்கரண்டு  கனைக்‌ஷன் கொடுத்து மோட்டார் சுவிட்சை ப்போட்டார்கள். புது மோட்டார் கும்மென்று தண்ணீர் இறைத்தது.

கொடுக்கவேண்டிய மாமூலைக்கொடுத்து கரண்டுகாரனை அனுப்பியாயிற்று.

‘இன்னும் சேட்டுக்கு பாக்கி நாலாயிரம் தரணும் குடுத்துடுங்க. எனக்கு கூலி ரெண்டாயிரம். இந்த பழைய மோட்டாரு அத ஐநூறுக்கு நானே எடுத்துகறன்.   அது ஒரு முந்நூறுதான் பொறும்  போவுட்டும். நாம எம்மானோ சம்பாரிக்கறம். இதுல என்னா. ஆக எனக்கு  இன்னும் ஆயிரத்து ஐ நூறு குடுங்க போதும்’

‘ இந்த மோட்டாரு  ஐ நூருதான் போவுமா’

‘ சாரு இது முந்நூறுக்குத்தான் போவும் யாரு எடுத்துகுவா குப்ப நானு போனா போவுதுன்னு  எடுத்துகிறன். உங்களுக்கு ஒரு  எர நூரு சேத்து தர்ரேன்’ பிளம்பர் அழகாகவே சொன்னான்.

அவனோடு துணைக்க வந்த இளைஞன்  பழைய மோட்டாரை அலாக்காகத் தூக்கினான். பிளம்பரின்  டூ வீலரில் பதனமாக இறுத்திவைத்தான்.

‘ சேட்ட பாத்து  அந்த பாக்கிய குடுத்துடுங்க’ சொல்லிய பிளம்பர்  தன் கூலி ஆயிரத்து ஐநூறு வாங்கித்தன்  சட்டைப்பையில்  பத்திரமாய்ப்போட்டுக்கொண்டான். வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

‘ஏங்க அந்த பழைய மோட்டாருக்கே அடுத்த வீட்டு கரண்டை கொடுத்து   மோட்டார ஓட்டி  பாத்து இருக்கலாமுல்ல. நம் வீட்டுக்கு வர்ர நியூட்ரல்லதானங்க  பிரச்சனை இருந்திச்சி..  அப்படின்னா புதுசா ஒரு மோட்டார  நாம  என்னாத்துக்கு வாங்குணும்.  நமக்கு இருக்குற கஸ்டத்துல’’ அவன் மனைவி  சன்னமாக ஆரம்பித்தாள்.

   நீ சொல்லுறது சரிதான்’’ அவன் திகைத்துப்போய் நின்றான்.

        எல்லாமே எனக்கும் காதுல வுழுவுது. சாரு’’

சொல்லிய பிளம்பர் வண்டியை நகர்த்தி ஓட்டிக்கொண்டு போயே சேர்ந்தான்.

-------------------------------------

.

 

 

 

.

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment