Saturday, October 30, 2021

புதிர் சிறுகதை

புதிர்                                           


வாலாஜாபேட்டை யில் நாளை காலையில் திருமணம் .உறவினர்களி!ல் முக்கியமானவர்கள் எல்லோரும் மாப்பிள்ளைவீட்டிற்கு வந்தாயிற்று. இந்த அம்பத்தூர் முதுநகரிலிருந்து வாலாஜாபேட்டை  திருமணத்திற்குச்செல்ல  ஒரு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு வந்திருக்கிறவர்கள் எல்லோரரையும் சேர்ந்தால் ஒரு ஐம்பது பேருக்கு வரலாம். திருமணம் முடி ந்து திரும்பி வருவதற்கும் சேர்ந்துதான் பேருந்துக்காரனிடம் வாடகை பேசியிருக்கிறார்கள்.

‘ஏண்டா ஞாபகமா  எல்லா ஜாமானையும்  எடுத்துக்கிட்ட மா'

அவன் அப்பா அவனிடம் ஒருமுறை எச்சரிக்கையாய் விசாரித்துக்கொண்டார்.அவன் தன்  அம்மாவிடம் அதனையே கேட்டுக்கொண்டான்.

வேல செஞ்சாதான் காரியம் ஆகும்  கேள்வி மட்டும் கேட்டா என்ன ஆகும் அப்பாவையும் பிள்ளையையும் பார்த்து குரல் உயர்த்திப்பேசினாள் அம்மா.

 கல்யாணத்திற்கு  தியாகராய நகரில் ஆ எம் கே வி கடையில் வாங்கிய ஜவுளிகள்   தெற்கு உசுமான் சாலை சின்ன ஜி ஆர் டி யில்  அதுதான் ஆகிவந்த கடை என்பதால்  வாங்கிய நகைகள் இன்னும் கல்யாணத்திற்கு வாங்கிய ஷாப்புக்கடை  வளையல் கடை சாமான்கள் என வகை வகையாய்த் தயாராக பெட்டிகளில் அடுக்கி  எடுத்து வைக்க ப் பட்டன.

அவர்கள் வீட்டு குடும்ப புரோஹிதர் அவசர அவசரமாக வீட்டின் உள்ளே நுழைந்து கொண்டார்.

.’என்ன ஆயிண்டீருக்கு எல்லாம் ரெடியா சொல்லுங்கோ' அவன் சந்தனம் தாம்பூலத்தை சர்க்கரைத்தட்டை அய்யருக்கு பவ்யமாக நீட்டினான்.

‘  என்ன மாப்பிள்ள  கல்யாண்ம்னா பொறுப்பு வந்துடறது. மராஜனா தீர்க்காயிசா இரு' சொல்லிய அய்யர்  தனக்கு  அளிக்கப்பட்ட மரியாதையைஏற்றுக்கொண்டார்

‘எல்லாம் ரெடி பண்ணியாச்சு, நீங்க யாத்ராதானம் அது இதுன்னு  பூஜை ஆரம்பிக்கலாம்' அவன் தந்தை அய்யரிடம் சொல்லி க் கொண்டார்.

வீட்டு வாயிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனியார் பேருந்துக்காரன் ஹாரனை இரண்டு முறை அடித்து ‘நான் ரெடி நீங்க ரெடியா' என்றான்.

‘ நாலு  எலுமிச்சம்பழம் ரெண்டு மொழம் பூவு  சூடம் கொஞ்சம் வெத்தல பாக்கு மஞ்சள்  குங்குமம் சந்தனம்  தட்சணை எல்லாம் பொறப்படுற வண்டிக்கி படைக்க கொண்டாங்க.நேரம் ஆவுது பொறப்படுணுமே'

டிரைவர்  கத்தி க் கொண்டிருந்தார்.

‘ கூழ்பாண்டம் ரெடியா இருக்கா' 

‘ சுவாமி அது என்னன்னு  சொல்லுங்க'

‘ பூசனிக்காய் ரெடியான்னுதான் கேட்டேன்' அய்யர் சொல்லி க் கொண்டார்.

‘ ரெடியா இருக்கு' அவன் அப்பாஅய்யருக்கு  பதில் சொன்னார்.

‘ பூசனிக்காய்னா ஒரு திருநெல்வேலி காரனா இருந்தா அவன்  கடைக்குப்போய் மஞ்சள் நெறத்துல ஒரு பரங்கிக்காய வாங்கிண்டு வந்துடுவான். அவன் பரங்கிய பூசனிம்பான் பூசனிய தடியங்காய்னு சொல்வான்' சொல்லிவிட்டு சிரித்தார் அய்யர்.

‘வெள்ள பவுடர் பூசிய காயதான் வாங்கிவச்சிருக்கம்' என்றார் அவனின் அப்பா.

‘ மாப்பிள்ள வந்து உக்காரணும் புள்ளயார் பூஜ ஆரம்பிக்கிறேன். கலச பூஜ கிரகப் ப்ரீதி பண்ணனும். பலதானம் இருக்கு.அப்புறம் யாத்ராதானம் அதுக்கப்புறம் இந்த பூசனிக்காய கல்பூரம்  ஏத்தி ஒரு சுத்து  சுத்திட்டு உடச்சி போடணும்.ஒரு தேங்காய சதுர்க்காய் விடணும்' அய்யர் சொல்லி முடித்தார்.

அவனை மணையில் அமர்த்தி முன்று கட்டுக்கழுத்திகள் சந்தன நலுங்கு வைத்தனர். அய்யர் ஒவ்வொரு சடங்கையும் செய்து முடித்தார். பேருந்தின்  டிரைவர் மற்றும் க்ளீனர் செய்யவேண்டிய சடங்குகள் முடித்து பேருந்து  தயார் என்று அறிவிப்பு செய்தனர்.

“ குலதெய்வ பிரார்த்தனை இஷ்ட தெய்வ பிரார்த்தனை  மங்கள ஹார்த்தி  பந்து ஜனங்கள் சபை ஆசீர்வாதம் எல்லாம் ஆச்சு. ராஜரத்னம் பிள்ளை நாதஸ்வரக் கேசட் தன் இஷ்டத்துக்கு பாடியதையே மீண்டும் பாடி க் கொண்டிருந்தது.

‘  நேரம் ஆயிண்டிருக்கு கெளம்புங்கோ. அமிர்த கடிகை பத்து  நிமிஷம்தான் இருக்கு' அய்யர் விரட்டிக்கொண்டிருந்தார்.

எல்லோரும் பேருந்து அருகில் நின்று கொண்டார்கள்.

‘ மொதல்ல ஒரு பச்ச புள்ள வண்டில ஏறி உக்கார சொல்லுங்க.  முருகா முருகா ன்னு சொல்லிகிட்டு பொறப்படறம்,’ வண்டியின் டிரைவர்  உரக்க சொல்லிக் கொண்டிருந்தார். மூட்டை முடிச்சுகள் வண்டியில் ஏற்றப்பட்டன.

அவனுடைய தாயும் தந்தையும் சாமி கு ம் பிட் டு விட்டு வாசலுக்கு வந்தனர்.புறப்படும் சரியான நேரத்தில் அவன் போன் அலறி அவனை அழைத்தது. இந்த நேரத்துல யாரு கூப்பிடறது அவன் தந்தை  சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்.

‘ நான்தான்  தேவி பேசுறேன்'  மாப்பிள்ளையிடம் அவள் பேசினாள்.

‘ யாரு நீங்க' இது அவன்.

‘ வாலாஜாபேட்டை தேவிங்க'

‘ சொல்லுங்க'

‘நீங்க யாரும் பொறப்பட்டு இங்க வரவேணாம். எனக்கு வேற ஒருத்தரோட திருமணம் முடிஞ்சி போச்சி.’

‘ யார் நீங்க  இப்ப  என்னத்த  பேசுறீங்க'

‘நாளக்கி கல்யாணம்னு பொறப்பட்டு வரவேண்டாம்'

‘ இந்த எழவு சேதிய இண்ணைக்கு அதுவும்  இப்ப வந்து சொல்லுறதா'

‘ பதிவு திருமணம்  மொதல்ல முடியட்டும்  பிறகு இதை  யாருக்கும்  சொல்லலாம்னு முடிவு அதான் எங்க அப்பா அம்மாக்கே  இப்பதான் இந்த விஷயம் சொல்லுறென்’


‘ நீங்க தேவியா சத்யமா சொல்லுங்க யாராவது பக்கத்துல பெரியவங்க இருந்தா அவங்கள  பேச சொல்லுங்க'

அவனுடைய தாயும் தந்தையும் அவன் அருகில் நின்று கொண்டு துடிதுடித்துப்போய் காணப்பட்டார்கள்.

‘ நான் தேவியோட அப்பா பேசுறேன் நீங்க யாரும் வாலாஜாபேட்ட வரவேணாம்.கல்யாணம்  இங்க எதுவும் இல்லை உங்க  சொந்த பந்தங்க எல்லாருக்கும் சேதி போவுணும்.பாவம்  வர்ர ஜனங்க கெடந்து திண்டாடும்'

‘ என்னா பேசுறீங்க நீங்க மொதல்ல ஒரு மனுசனா பேசுங்க”

‘ என்ன மன்னிச்சிடுங்க. நான் பெரிய பாவி .பாவிதான்.எனக்கும் இதுல எவ்வளவு பெரிய அவுமானம் தலையில  பாறாங்கல்லு   கல்லுதான்  வுழுந்திடுச்சி எத நான் சொல்றது. நீங்க யாரும் கல்யாண்ம்னு  வரவேணாம்'

அதற்குள்ளாக உறவினர் சத்தம் போட ஆரம்பித்தனர். பேருந்தின் டிரைவரும் க்ளீனரும் அதிர்ந்துபோய் நின்றுகொண்டிருந்தார்கள்.

 அய்யர்             ' இது இனி சரியாவரும்னு தோணல்ல. நான் ஒண்ணும் சொல்லறதுக்கு இல்ல. நாம ஏதோ  கணக்கு போடறம் பகவான் அபிப்ராயம் வேறதினுசா போகிறதுபோல. எதுலயும் நிதானம் இருக்கட்டும்.வேற எத சொல்றது நான்'          சொல்லிக்கொண்டு புறப்பட்டார்.

பேருந்தில் இருந்த டிரைவரும் க்ளீனரும் ‘  நாங்க  அப்புறம் வரம் இப்ப எதப்பேசுறது.  வூ டு புடிச்சிகினு எரியுது   பீடிக்கு நெருப்பு கேக்குலாமா' சொல்லிக்கொண்டே இடத்தைக்காலி செய்தனர்.ஓரிருவர் பாக்கி இருக்க உற்றார் உறவினர்கள் புறப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

‘ ஒத்த புள்ள பெத்தும்

 சந்தீலதான் நிக்கணுமா?

பீய  துண்ணனும்னு

பாழும் விதி  போட்டிருக்கா' அவன் தாய் ஒப்பாரிவைத்து அழுதாள்.

அவன் கண்களில்  நீர் நிறைநது கொண்டிருந்தது. அவன் தந்தை இனி செய்வது என்று அப்படியே இடிந்துபோய் அமர்ந்திரு ந் தார்.அவன் பெற்றோரைச் சமாதானம் செய்வது எப்படி என்று தெரியாமல் விழிக்கிறான்.

‘மங்கையராக ப்பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா'  தெருவில் ஒரு சிறுமி சன்னமாக ப் பாடிய படி அபிநயம் செய்கிறாள். வளமான குரல் அவளுக்கு .வயது ஐந்துகூட இருக்காது. எத்ததனை அழகு.

அவன் அச்சிறுமியையே பார்த்துக்கொண்டு ஏதோ யோசனையில் மூழ்கினான்.

………………………….






 













No comments:

Post a Comment