Friday, October 15, 2021

தோழமை - சிறுகதை

 

 

 

 தோழமை                           -

 பணி ஓய்வு பெற்று பதினைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆச்சரியமாக  இருக்கிறது. திரும்பிப்பார்ப்பதற்குள்  வயது  ஓடிப்போய்விடும் என்பார்கள்.அது சரியாகத்தான் இருக்கிறது.. முதுகுன்றம் நகரில் அவனுக்கு ஒரு காலி மனை இருந்தது. அதனை சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ’ஏதாவது ஒன்று இருக்கட்டுமே’ என்று வாங்கிப்போட்டான்.

அந்த நகரத்தில் அரசாங்கம்  அவனுக்குக்  குடியிருப்பு வழங்கியிருந்தது. அதனில்தான் குடியிருந்தான். பணி ஓய்வுக்குப்பின்னர் சென்னை மாநகருக்கு வந்துவிட்டான்.  பெற்றபிள்ளைக்குச் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை. பிள்ளையோடு அவனுக்கு ஓய்வுக்காலம் சென்றுகொண்டிருந்தது.

முதுகுன்ற நகரில் இனி  ஆக வேண்டியது ஏதுமில்லை.. அங்கே இருக்கும் அந்தக்காலிமனையை விற்றுவிடலாம். முடிவு செய்தான். ஒரு நாள்காலை முதுகுன்றம் நகரத்துக்குப் ப்புறப்பட்டுபோனான்.

காலிமனை முதுகுன்றத்திலிருந்து சிதம்பரம் செல்லும் சாலையில்  தனலசட்சுமி எண்ணெய் ஆலைக்குப்பின்புறமாக இருந்தது. முதுகுன்றம் பேருந்து நிலையம் இறங்கி அங்கிருந்து ஆட்டோ பிடித்து அந்தக் கணபதி நகருக்குப்போனான். கணபதி நகர் லேஅவுட்டில்தானே அந்தக்காலிமனை இருக்கிறது.

எண்ணெய் ஆலைக்கு ப்பக்கத்தில் ஒரு மாரியம்மன் கோவில். அதன் காம்பவுண்ட்டை ஒட்டித்தான்  கணபதி நகர் லே அவுட்.. ஓரிருவர் வீடு கட்டிக்கொண்டு அங்கே குடியிருந்தார்கள். நேராகத் தன் காலி மனைக்கு நடந்தான். ஒரே முள்ளும் புதருமாக இருந்தது. எல்லைக்கற்கள் எங்கே என்று தேடினான். நான்கு கல்லுக்கு ரெண்டு கற்கள் மட்டும் இங்கொன்றும் அங்கொன்றுமாக  அவன் கண்ணில் பட்டன.

‘சாரு வணக்கம்’  இப்படி வணக்கம் சொன்னான் ஒரு நடுத்தர வயதிருக்கும் ஒருவன்.

‘ என்ன சேதி’

‘ அய்யா இங்க வீடு கட்டிகிட்டு வர்ரதா இருக்கிங்களா’

‘ஏன் கேக்குறீங்க’

‘தெரிஞ்சிக்கலாம்னுதான். நானு ரியல் எஸ்டேட் புரோக்கரு’

யோசனை செய்தான். புரோக்கர் என்றாலே அவனுக்கு அச்சமாகக்கூட இருந்தது. இருந்தாலும் இந்தக்காலிமனையை இனி வைத்துக்கொண்டும் என்ன செய்வது. தன் மகனுக்கு  இந்தப்பக்கம் வருவது என்பதில் எல்லாம் நாட்டம் இல்லை. ஆக இந்தக்காலிமனையை விற்றுவிட வேண்டியதுதான் அவன் மனம்  முடிவாய்ச் சொல்லியது.

புரோக்கருக்கு இவன் மனதில் எண்ணியது எப்படித்தெரிந்ததோ. அவன் விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினான்.

‘ தேவைக்கு என்ன கூப்புடுங்க . பேரு  பங்காரு.. நமக்கு இதுதான் தொழிலு. எதுலயும்  ஒரு  சுத்தம் இருக்கணும்’

அவன் விசிட்டிங் கார்டை வாங்க்கிகொண்டான்.

‘ இங்க செண்ட் என்ன வெல போவுது’

‘ ‘செண்ட் வந்து ரெண்டுக்குள்ள போவும். ஓரம் சாரம்  சந்துகுத்து மூல மொடக்குன்னு ஒண்ணரைதான்  போவும். மொத மாறி இல்லங்க இந்த பிசினசு. அதுலயும் இந்த் பாழாப்போன கொரானா வந்தப்பறம் சனங்ககிட்ட காசி ஏதுங்க. சனம் சின்ன படுதுல்ல’

‘ சரி தேவப்பட்டா போன் பண்ணுறன்’ பதில் சொன்னான்.

‘எல்ல கல்லு புடுங்கி கெடக்கு.  ஒரே முள்ளு கள்ளு. ஆடு மாடு மேயுது. சாராயம் குடிக்கிறவன்க இங்கதான் இருட்டுனா வந்து ஒதுங்குறான்.  மோசம் மோசங்க. நீங்களும் எங்கயோ தூரத்துல இருக்கிங்க என்னா செய்விங்க. வயசும் ஆவுதுல்ல’

அவன் பேசுவது சரியாகத்தான் இருந்தது.

‘’உங்க போன் நெம்பரு விலாசம்’

  நானு இங்க  இந்த ஊர்ல இருந்தவந்தான். பூதாமூர் கோர்டர்ஸ்ல குடியிருந்தேன்.. வேல முடிஞ்சி போச்சி. ரிட்டேரானேன். சோத்துக்கு  பென்சன் வருது. ஆண்டவன் என்னை கைவுடல. சென்னையில பையனோட இருக்குறன்’

அவன் பதில் சொன்னான்.

‘ ஊருக்குப்போயி போன்  பண்ணுங்க. இது தானே உங்க பிளாட்டு. என்னா ஒரு நாலு செண்ட் வரும்’

‘ஆமாம் நாலு செண்ட்தான்’

‘ பாக்குலாம்  ஒன்ண  மொத ஞாபகம் வச்சிகிங்க. இந்த இடம் ஒண்ணும் சரியில்லாத இடம். வா பந்தல் போட்டுதான் இத விக்குணும்.  விஷயம் தெரிஞ்சவன் இந்த பக்கம் பிளாட் வாங்கி வூடு கட்டி  குடி வரமாட்டான். குடிகார க்கழுதிவ வரும். இல்லன்னா பலான பலான  ஆளு வரும்’ சட்டமாய்ப்பேசினான் புரோக்கர்.

அவன் விடைபெற்றுக்கொண்டு சென்னைக்குத் திரும்பினான்

பத்து நாட்கள் சென்றது.  முதுகுன்றம்  ரியல் எஸ்டே புரோக்கர் சொன்னது அவன் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருந்தது.

புரோக்கர் கொடுத்திருந்த விசிட்டிங் கார்டை தேடிக்கண்டுபிடித்தான்.

முதுகுன்றத்துக்காலி மனையை விற்றுவிடுவது என்று முடிவு செய்தான். அவனுக்குத்தான் போன் போட்டான்.

‘பங்காரு, நான் கணபதி நகரு பிளாட்காரன் பேசுறன்’

‘ சொல்லுங்க சாரு ரெம்ப சந்தோசம்’

‘ இப்ப செண்ட்  அங்க எப்பிடி போவுது’

‘ என்ன சாரு பத்து நாளு ஆவுல அதுக்குள்ள வெல ஏறிபுடுமா’

‘ இல்ல கேக்குறன்’

‘’ உறுதியா செண்ட் ரெண்டுக்கு முடிக்கிலாம். ரெண்டுன்னா ரெண்டு லச்சம். உங்களுக்கு தெரியும் இருந்தாலும் சொல்லுறன். எனக்கு ரெண்டு பர்செண்ட் கமுஷன் தருணும். அதுவும் சொல்லிபுடுறன்.  அது எனக்கு பதினாறு ரூவா வரும்.’

‘கமுஷன் எவ்வளவு’

‘ இந்தக் கமுஷன்னா முட்டும்  சனங்களுக்கு காதுல  வுழுவாது.  ஆராயிருந்தாலும் இது இப்படிதான்.  எனக்கு  ரூவா பதினாறு ஆயிரம். உங்களுக்கு மொத்தமா எட்டு லச்சம்’ ’

‘ ஆவுட்டும் சட்டுனு ஒரு பார்ட்டிய பாரு. எனக்கு சேதி வரட்டும். மனைக்கு  அட்வான்சு தர்ரது அது இது எதுவும் வேணாம். நேரா கிரயத்துக்கு நான் வர்ரன் அண்ணைக்கு பணத்த மொத்தமா என் கணக்குல பாங்குல போட்டுடுணும்.  நானும் ரிஜிஸ்டர் ஆபிசுல கையெழுத்து போடுவேன்

‘ சட்டமா பேசுறீங்க’

‘ இது ரூவா சமாச்சாரம்’

‘ நானு எல்லாம் ரெடி பண்ணிகிட்டு சேதி சொல்லுறன். இதுதான உங்க போன் நெம்பரு. சாரு, நானு  பெறகு பேசுறன்’

புரோக்கர் போனை வைத்துவிட்டான்.

அவனிடமிருந்து போன் வரும் வரும் என்று அவன்  காத்திருந்தான். புரோக்கர் போன் செய்யவே இல்லை. வீதியிலிருக்கும் வழித்துணை  விநாயகருக்கு வேண்டியும் வைத்துள்ளான். முதுகுன்றம் காலிமனை விற்றுவிடவேண்டுமென்றும் அதற்கு. அவர்தான் கண்திறக்கவேண்டும் என்று காத்திருந்தான். நாட்கள் ஓடின.

புரோக்கரிடமிருந்து  ஒரு போன் வந்தது.

‘ நானு  பங்காரு’

‘ சொல்லுங்க. ரொம்ப நாளா போன் வல்லியேன்னு இருந்தன்’

 

‘ நீங்க இண்ணைக்கு பதினைஞ்சா நாளு முதுகுன்றம் வர்ரீங்க. மொத்த பணம் நீங்க சொன்ன மாதிரிக்கு  பெரிய ரூவா எட்டும் பாங்குல வுழுந்திடும் பிளாட் சம்மந்தமா எல்லா ரெக்கார்டும் அப்ரூவல் சேத்து  ஒரு செராக்ஸ் அனுப்புங்க.  இண்ணைக்கே இப்பவே அனுப்பி நாளைக்கு எனக்கு  அதுவ என் கையுல கெடக்கிணும். ஒர்ஜினல் எல்லாம் ரீஸ்டர் அண்ணைக்கு  இக்கட வந்துபுடணும்’ புரோக்கர்  பங்காரு சொன்னான்.

அவன் எல்லா ரிக்கார்டுகளுக்கும் ஒரு நகல் எடுத்து முதுகுன்றம்  பங்காருக்கு  புரொஃபஷனல் கொரியரில் அனுப்பி வைத்தான்.

 அவன் ரிஜிஸ்டர் நாள் அன்று  அதிகாலை கிளம்பினான். எல்லா ஒரிஜினல் ரிகார்டுகளுடன் வங்கிப் பாஸ்புத்தகத்தோடு முதுகுன்றம் ரிஜிஸ்டர் ஆபிஸ்  முன்பாக வந்து நின்றுகொண்டான்..

பங்காரு புரோக்கர் அங்கே தயாராகக்காத்திருந்தான். அவன் வங்கி பாஸ்  புத்தகத்தை  பங்காருவிடம் நீட்டினான்.

‘ இன்னும் அரை மணியில பணம் உங்க கணக்குல வுழுந்துபுடும்’

வங்கி விபரம் எல்லாம் தன் கைபேசியில்  பங்காரு படமெடுத்துக்கொண்டான்

‘ இங்கயே இருங்க ரிக்கார்டுவ பத்திரம்’  பங்காரு சொல்லிப்போனான்.

ரிஜிஸ்டர் ஆபிஸ் முன்பாக  அவன் ஒரு கொடி மரத்தின் கீழ் அமர்ந்துகொண்டு இருந்தான். கொடிமரத்தில் கொடி ஏதுமில்லை வெட்டையாக இருந்தது..

ஒரு நடுத்தர வயது பெண் அவள் குழந்தை இருவரும்  ஒரு ஆட்டோவில் அங்கே வந்து அங்கே இறங்கினர்.  அவனுக்கு அந்தப்பெண்ணை எங்கேயோ பார்த்த மாதிரிக்கு இருந்தது.

‘ நீங்க  கிரயம் வாங்க வந்து இருக்கிங்களா’

‘ ஆமாம்.’

‘ எந்த மனை கிரயம்’ அவன் தொடர்ந்தான்.

‘ ‘ கணபதி நகருல ஒரு  நாலு செண்ட் கிரயம்’

‘ ‘ நாந்தாம்மா அது கிரயம் தர்ரது,. உங்க சாரு’

‘ அவரு  வரல்லே.  எங்கப்பா வருவாரு. பாங்குக்கு போயிருக்குறாரு பணம் போட்டுட்டு வருவாரு. அந்த பார்ட்டி நீங்கதானா’

‘ உன்ன எங்கயோ பாத்த மாதிரிக்கு இருக்குது’ அவன் சொன்னான்.

‘ எங்கப்பா மோகன்ராசு. டெலிபோன்ல லைன்மெனா வேல பாத்தாறு. உங்களுக்கு தெரியுமா என்னா’

அதற்குள்ளாக வங்கியில் பணம் செலுத்திவிட்டு பங்காரு ரசீதோடு அங்கு வந்துகொண்டிருந்தான். கூடவே அந்த மோகன்ராசு வந்து கொண்டிருந்தார்.

‘ நீ மோகன் ராசுதானே’

‘ ஆமாம் சந்திரன்தானே நீங்க’

அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாகப்பார்த்துக்கொண்டார்கள்.. முதுகுன்ற நகரத்து பொதுவுடமை கிளையில் இருவரும் பலகாலம் உறுப்பினராக இருந்தவர்கள்.. எத்தனையோ நிகழ்வுகளில் பங்கேற்றவர்கள். இருவரும் எத்தனையோ போராட்டங்களில் பங்கு பெற்றவர்கள்.. தண்டனைகள் பலபெற்றவர்கள்..

’சொல்லப்போனால்  ’’நாம் இருவரும் தோழர்கள்’’ சொல்லிக்கொண்டார்கள்.

‘’ நீந்தான்  தோழர் விக்கிற நான் என் பொண்ணுக்கு வாங்குறன்’ அவனிடம் மோகன்ராசு சொன்னான்.

‘ பேசினவரைக்கும் இருக்கட்டும் இது என்னா நேரம்.  உத்தி பிரியற நேரமா, ஒப்பு ஒறவு பேசுற நேரமா. உள்ள ஆபிசரு கூப்பிடறாரு  நேரம் ஆவுது. நம்ப செலாட் வந்து போச்சி   உள்ள போங்க .போயி ஆவுற காரியத்தை பாருங்க’ சத்தம் போட்டான் பங்காரு.

அவன் ரிஜிஸ்டர் அலுவலகம் சென்று கையெழுத்துபோட்டு முடித்தான். மோகன்ராசுவின் பெண்ணும் தன் பணி முடித்தாள். ரிக்கார்டுகள் கை மாறின.

தயாராக வைத்திருந்த பதினாறு ஆயிரத்தை புரோக்கர்  பங்காருவிடம் அவன் ஒப்படைத்தான்.  எல்லாம் முன்னரே முடித்துவிட்ட மோகன்ராசு தன் மகளோடு விடைபெற்றுக்கொண்டான்.

அவன் ஆட்டோ பிடித்து பேருந்து நிலையம் வந்தான். சென்னை ப்பேருந்தைத்தேடினான். ஒன்றையும் காணோம்.

’சந்திரன் சந்திரன்’ மோகன்ராசுவின் குரல் கேட்டது.

திரும்பிப்பார்த்தான்.

மோகன்ராசுதான். விஷயத்துக்கு வந்தான்.

‘ நீ செண்ட்டு என்ன விலைக்கு கொடுத்த’ வேகமாய்க்கேட்டான்.

‘ நானு செண்ட் ரெண்டு லச்சம்னு. குடுத்தன்’

’ எங்கிட்ட செண்ட் மூணுன்னு  பங்காரு காசு வாங்கிகிட்டான். பத்திர செலவு ஒண்ணு  ஆயிடுச்சி எழுத்துக்கூலி,, பெறவு ரெஜிஸ்தர் ஆபிசுக்கு  கொடுக்குற மாமுலு பத்து’

   ஆக புரோக்கரு பங்காருக்கு  வரவு நாலு செண்டுக்கும் நாலு லச்சம். என்கிட்ட ஒரு  பதினாறு ஆயிரம் கமிசன்.. உங்கிட்டயும் கமிசன் வாங்கியிருப்பாந்தான்’

‘ நானும் பதினாறாயிரம் கமிசன் கொடுத்தேன், ’

‘ ’ரூவா பத்தாயிரம்  இந்த மன வாங்ககுள்ள  அப்பத்திய செலவு... . ஆயிடுச்சி  முப்பது  வருஷம் . இண்ணைக்கு அது  எட்டு லச்சம் . ஆனா இந்த புரோக்கரு பங்காருக்கு  கை மொதலே இல்லாம லபக்குன்னு   நாலரை.  லச்சம்  இது எப்பிடி இருக்கு’

 தோழர் இதுக  எல்லாம் நமக்கு எண்ணைக்கும் வெளங்காது. வுட்டுடு’.. இங்கன  நா  இன்னும்  நம்ம கச்சிலத்தான்  இருக்கேன்’’

   அங்க சென்னையில நானும்தான்’  அவன் பதில் சொன்னான். சென்னைக்குச்செல்லும் பேருந்து ஆரவாரமாக அங்கே வந்து நின்றது.

தோழர்கள் பிரிந்து  அவரவர்கள்  வசிப்பிடம் நோக்கிச்  செல்கிறார்கள்.

----------------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 .

 

 

 

.

No comments:

Post a Comment