Friday, October 15, 2021

எங்கேயும் சுற்றி - சிறுகதை

 

 

 

’எங்கேயும் சுற்றி’       சிறுகதை

 

மலர் அங்காடிப் பேருந்து நிலையம்.  உங்களுக்கு சட்டென்று நினைவில் வருகிறதே அந்த ஊர் தான்.  கழுத்து மாரியின் சிலை ஒன்று  பேருந்து நிலைய கிழக்கு மதில் சுவரை ஒட்டினாற்போல் இன்றைக்கும் இருக்கிறது..  அதனைக் குட்டியாக ஒரு கோவில் என்று  சொல்லலாம். அதற்கு யாரோ என்றோ ஒரு ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டால், இப்படியும் அப்படியும் கம்பங்கள் நட்டு ஒரு கொட்டகை மாதிரிக்கு போட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த ஊரோ என்ன பேரோ.. யாருக்கும்தெரியுமா என்ன?.

 இப்போது அவனும் இவனும்  ஒவ்வொரு இரவும் அந்த ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகையில் தான் உறங்கி முடிக்கிறார்கள்.

. மலர் அங்காடிப் பேருந்து நிலையம்  மலர்கடைதெரு  அடுக்கு மாடி தொலைபேசி நிலையம் பெரிய நீதி மன்றம் அப்படி இப்படி என்று கையில் ஒரு தட்டோடு ஒரு சுற்று சுற்றி வந்தால் நூறு ரூபாயுக்குத்தேரும். காலையில் ஒருவரும் மாலையில் ஒருவரும்  எனப் பாகம் போட்டுக்கொண்டு அந்த திருப்பணியைச்செய்வார்கள்

.கொட்டகையில் ஒருவர் கட்டாயம்  இருக்கவெண்டும். இல்லாவிட்டால் அந்த இடம் அம்போ. பிறகு குந்தி முடங்க  இடம் பிடிப்பது என்பது சாதாரண விஷயமில்லை. அந்தப் பகீரதன் கங்கைக்குப்போராடினமாதிரிப் போராடினால் பிச்சைக்காரர்களுக்குக் குந்த  இடம் கிடைக்கும். எல்லாவற்றிற்கும் நேரம் காலம் சரியாய்  அமையவேண்டும்.

 போது விடிந்தது. இருவரும் கழுத்து மாரி கோயில் முன்பாக குந்தியிருந்தார்கள்.‘ ’

காலத்துக்கும் தட்டு எடுத்துகிணு  சுத்தி சுத்தி வர்ரதுதானா  நம்ப பொழப்பு’ இவன் பேச்சைத்தொடங்கினான்.

‘ வேற என்னா தெரியும்.  ஓயாம ஒரு  வெடத்துல ஒழைக்கறது  போவுறது எல்லாம் இனி யம்மாலே ஆவுறகதையில்லே’ அவன்’

‘ நாலு பேருகிட்ட கைய நீட்டூனா  ஒருத்தன்  கட்டாயம் காசு போடுறானே அதுக்கு என்னா சொல்லுற’’

‘ அதான் அங்க  சூச்சுமம். இல்லாகாட்டி நாம ஏன் இதுல கெடந்து அழியறம். நாலு பேரு நம்மள எட்ட போடா நாயின்னு அன்னிக்கே  சோட்டால அடிச்சி  தொரத்தியிருந்தா இன்னிக்கு இந்த தும்பம் இல்ல. ஆனா  அதை ஒரு நாயிம்  செய்யிலயே.’

  சரி வுடு பெரிய வார்த்தை எதுக்கு. உனக்கு சோசியம் எதானு வருமா கிளி சோசியம் கைரேகை பூவு சோழி வச்சி பாக்குறது’

‘ அதுக்கு படிக்கிணும்.  அது அதுக்கு பொஸ்தகம் இருக்கு.  அந்தக் கதெ  இங்க சும்மா ஆவாது. உனக்கும் எனக்கும் என்னா படிக்க வரும் நாமதான்  படிக்காத முண்டமாச்சே’

‘ எனக்கு  ரொம்ப நாளா ஒரு  ரோசனை சொல்லுலாமா’’

 அது என்னா ரோசனை

 நீனு விவிதி சந்தணம் நெத்தில வுட்டுக   செண்டர்ல வட்டமா கொங்கம் வச்சிக. இடுப்புல துண்டு கட்டிகினு கழுத்து மாரி முன்னாடி சம்மணம் போட்டு குந்திக  நானு போயி.  முழுங்கி தட்டுல எனக்கு புடிச்சத வாங்கியாந்து உன் முன்னால நீட்டுறன். காட்டுறன்’.

‘ இது தேவுலாம்பா. அப்புறம் சொல்லு’

செத்த நாழி நீ பாவுலா காட்டு. அப்புறமா என் தட்டுல இருக்குற பண்டத்தை உன் கையால தொடு நீ எடுத்துக. உட்னே நானு  கீழ வுழுந்து சாமியோவ் ஒன்  உத்தரவுன்னு  சொல்லி கும்புட்டு எழுந்து அப்பால போயிடுவேன்.. நாலு நாளுக்கு இத உடாம செஞ்சா நம்ம தொழிலு பிக்கப் ஆயிடும்  இத பாக்குற சனம் தட்டு தட்டுன்னு  கையில எடுத்துகினு அதுல  எதனா வாங்கிய்யாரும். செலது காசு பணம்னு தட்டுல  வைக்கும். பத்து தட்டு வந்துதுன்னா. நாலுக்கு ஒண்ணுன்னு கணக்கு வச்சி நீ தட்ட கையால தொடு அப்புறம்  அதுல உள்ளதை  எடுத்துகு. சாக்கு பையில  இல்ல ஒரு கூடையில  கொட்டிக. வந்த தட்டுங்கள்ள பாக்கியா உள்ளத நீ தொட்றக்கூடாது.  இப்ப கெரகம் ஆவுல நேரம் காலம் கூடி வருல சாமி உத்தரவு தருலேலேன்னு நானு அவாளுண்ட மொழங்கிடுவேன். நீனு வாயவே தொறக்கவேண்டாம்.  என்னா நான் சொல்லுறது’

‘ ’நீ கூடம்  சோரா தான் ரோசன பண்ணுற’ நானு உன்ன ஏதோ சம்பலா கணக்கு போட்டிட்டன்’

‘ நாளயிலேந்து இந்தக்கதை ஆரம்பம். நானு சின்ன தட்டுல எதான வாங்கியாந்து ஒன் முன்னாடி  வச்சிகிட்டு நிப்பன். நீ  அத ஒன் கையால  எடுத்துக.’ சாமியோவ்  ஒன் உத்தரவுன்னு சொல்லி கீழ வுழுந்து கும்புட்டு நானு அப்பால போவன். பாக்குற சனத்துல நாலுக்கு ஒண்ணு பழுது இல்லாம  இதுவுள கண்ணுகொட்டாம பாக்கும்.   எட்ட நிக்குற சனம் உன் கிட்ட கிட்ட வரும் தட்டு தாம்பாலம்னு கொண்டாரும். அதுல பலானது  வாங்கி வக்கிம் அப்புறம் ரூவான்னும் அது இதுன்னும் தட்டுல வக்கறதுக்கு ஆரம்பிக்கும்.. அப்பிடியே நம்ப பொழப்பு போவுறதுதாம். கழுத்து மாரிக்கு ரவ   நல்ல எண்ண வெளக்கு சூடம் வத்தி ஒரு மொழம் பூவு  ரவ கொங்கம் ரவ மஞ்சளு செலவு ஆவும்தான் அத எல்லாம் பாத்தா பொழப்பு ஆவுமா’

 எங்கயோ போவுது  ஒன் ரோசனை . நாளைக்கே  இத தொடங்குறம்’ என்றான் இவன்.

முதல் ரெண்டு நாட்களுக்கு  மக்கள் யாரும் இவ்விஷயத்தைக் கண்டு கொள்ளவில்லை. பிறகு ஒரு நடுத்தரவயதுபெண்மணி ஒரு சீப்பு வாழைப்பழம் தட்டில் எடுத்துக்கொண்டு வந்து தருவி தருவி நின்றாள். அப்புறம்  மூன்று நான்கு ஐந்து  என்று  ஆண்கள் பெண்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது.

ஆப்பிள் சாத்துக்குடி  கொய்யா வாழைப்பழம் தேங்காய் திராட்சை எனத்தட்டுக்களில் வர ஆரம்பித்தன.

‘ சாமி உத்தரவு தருலன்னா தட்டுல உள்ள அந்த பழத்த இல்ல பண்டத்த என்னா செய்யுறது’

 வந்திருந்த  பெண்மணி கேட்டாள்.

‘அவன் பட்டென்று பதில் சொன்னான்.’ ஒன் யோசனை ஏன் இப்பிடி கோணலா போவுது  சாமி  உத்தரவு தருலேன்னா. உனக்கு தோஷம் இருக்குதுன்னு அருத்தம். அந்த பண்டத்த அப்படியே பசு மாட்டுக்கு வையி. இல்ல  காசு பண்ம்னா ஏழப் பாப்பானுக்கு குடுத்துடு. ஒண்ணும் ஆவுல்லன்னா கோவில்ல எம்மானோ சனம் குந்தி கெடக்கு அங்க குடு. ஒண்ணும் ஆவுலன்னா  ஒடுற தண்ணில வுட்டுடு. இல்ல சமுத்தரத்துக்கு கொண்டும் போ அங்க வுடு.   மீனுவ திங்கும் ஆனா ஒன் வூட்டுக்கு கீட்டுக்கு எடுத்துகினு போயிடாதே. அதுல  மட்டும் உசாரா இரு. தெரிதா

‘சரி சாமி’ என்றாள் அவள்.

முதல் முதலாக அவனை இப்போதுதான் சாமி என்று ஒருவர்  அழைத்து அவன் கேட்கிறான். மனதிற்கு  இந்த ’சாமி’  எத்தனை   இதமாக இருக்கிறது என்று நினைத்தான்.

நான்கு தட்டுக்கு ஒரு தட்டு இவன் கையால் தொடமாட்டான். அதில்மட்டும் உறுதியாக இருந்தான்..  தட்டில் ரூவா நோட்டு எது இருந்தாலும் அதனைக்கண்களால் இவன் பார்க்கவும் மாட்டான்.

கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக பெருகிக்கொண்டே இருந்தது.  மலர்க்கடை பஸ் ஸ்டாண்ட் குறிசொல்லுற மாரி கோவில்னு அதனை மக்கள் பேசிக்கொண்டார்கள். கழுத்துமாரிக்கு ஒருகால பூசை செய்ய ஒரு நொண்டி குருக்கள் வந்து  அவர்களோடு சேர்ந்துகொண்டார். கோவில் முன்பாக இரண்டு மூன்று பழக் கடைகள் பூக்கடைகள் செயல்படத் தொடங்கின. வெற்றிலைபாக்கு பழ வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.

ஒரு மஞ்சள் பை நிறைத்துக்கொண்டு காணிக்கைக் காசு பணங்கள் சேர்ந்துவிட்டன. பூசைக்கு வரும் நொண்டி  குருக்கள்தான் காசு எண்ணி எண்ணி  அவர்கட்கு வருமானக் கணக்குச் சொல்லுவார். அவருக்கு மாதச் சம்பளம். அதனைத்  தவறாமல் கொடுத்தார்கள்.  நொண்டிக்குருக்களுக்கும் பரம திருப்தி.  நல்லபடியாக அவர்கள் எல்லோரின் காலமும் போய்க்கொண்டிருந்தது.

இப்படிக்கூடவா நடக்கும் என்று கேட்டால்,. நடக்கும்தான். நடந்ததே.’ ஒரு நாள் அதிகாலை மலர்க்கடை ப்பேருந்து நிலையம் வந்த அதிகாரிகள் பெரிய கேட்டை இழுத்துப் பூட்டினார்கள்.  இங்கிருந்து புறப்படும்  பேருந்துகள் இனி சாலையில் அங்கங்கே நிற்கும். ஆட்டோவில் அறிவிப்பு செய்தார்கள்.. பேருந்து நிலைய  சிமென்ட் ஷீட் கூரையை மாற்றி  ஆர் சி  கான்க்ரீட் போட்டு ஓட்டப்போகிறார்களாம். காண்ட்ராக்ட் எடுத்த கம்பெனிக்காரர்களின் தொப்பித்தலை ஆக்கிரமிப்பு எங்கும் தெரிந்தது.

இவனும் அவனும் இனி என்ன செய்வது ?  இருவரும் கழுத்து மாரி முன்பாக கைகளைப்பிசைந்து கொண்டு நின்றார்கள்.கண்கள் கலங்கி இருந்தன.

‘ யாரு இங்க எடத்தக்காலி பண்ணு. வேல செய்யுற கம்பெனி ஆளுவள தவுற பாக்கி யாருக்கும் இங்க எடமில்ல. நவுறு நவுறு.’ என்று காவலர்கள் விரட்டிக்கொண்டே இருந்தார்கள்.

’ எங்க ரெண்டு பேரு  பொழப்பு. அந்த நொண்டி குருக்களு சேத்தா மூணு ஆளுங்க  இங்க குந்தி சனங்களுக்கு தெனம் தெனம்   குறி சொல்லுவம். இதோ  ங்க இருக்குற கழுத்து மாரி சந்நிதில. அது போச்சே  இப்ப அது  எல்லாமே போச்சே’

இருவரும்  ஓங்கி ஓங்கி கத்திக்கொண்டு இருந்தார்கள்.

காண்ட்ராக்ட் கம்பெனியின் வாட்ச்மென்  கையில் தடியோடு இருவரையும் நெட்டித்தள்ளி  இரும்பு கேட்டுக்கு அப்பால் கொண்டுவிட்டான்..

குறி கேட்க சில ஆண்களும்  பெண்களும் கையில் தட்டோடு கழுத்துமாரிகோவிலை எங்கே என்று தேடிக்கொண்டு இருந்தார்கள்.

‘ ஏன் என்ன ஆச்சு குறி சொல்லுற சாமிவ எங்க’ என்று மக்கள் வினவியபடி இங்கும் அங்கும் தேடிக்கொண்டே இருந்தார்கள்.

கையில் தடியோடு இருந்த கம்பெனி வாட்ச்மென் சொன்னான்.

‘சாமிவ  ரெண்டும் கயிலங்கிரி போயிருக்கு. அங்க இருக்குறது  குருசாமி. அதான் பெரியசாமி  இவாள அங்க வரச்சொல்லி. உத்தரவு. ஆயிட்டுது... எப்ப  இங்கன திரும்ப வரும்கறது ஆரு கண்டா’

இவனும் அவனும் அந்த வாட்ச்மென் சொன்னதை ஒருகணம்கேட்டு விட்டு ப்பிரமித்துப்போய் நின்றார்கள்.

‘ இதுவும்கூட தேவுலாம்’ என்றனர் இருவரும்.

‘இங்கன  எம்மானோ மேம்பாலம் கட்டி கட்டி  கெடக்குது. எதனா ஒரு மேம்பாலத்துக்குத்தாழ பெரிய பெரிய  செமெட்டுத் தூணுவ இருக்குமே அது சுத்தி  அங்க அங்க நம்ப ஆளுவ மொத்தமா குந்திகினு  இருக்கும்.  மேல பாலம்  தாரு ரோடு  அதுல காருவ  பஸ்ஸுவ போவும். பாலத்துக்கு கீழ நாம அப்பிடி இப்பிடி இருந்துக்கறதுதான் அந்த ப்பாலங்க கட்டுனது பின்ன எதுக்குன்றே’

என்றான் அவன். காசு பணம் திணித்து  இருக்கும் மஞ்சள் பையை க்கெட்டியாகப்பிடித்தபடியே இவன் அவனோடு மெல்ல மெல்ல  நடந்துகொண்டிருந்தான்.

‘ ஆ தெரியுது பாரு  இன்னும் ஒரு மைலு இருக்கும் அதுதான மேம்பாலம். நட நட.’

என்றான் அவன்.

  மொத  நாம தூக்கிகினு சுத்தி வருவமே அந்த  தட்டுவ ரெண்டும் பத்திரமா இருக்குல்ல’ கேட்டான் இவன்.

’ஒன் புத்தி ஏன் இப்பிடி கீழ கீழயே போவுது’ அவன் பதில் சொல்லி நடந்து’ கொண்டிருந்தான்.

-----------------------------------------------------

 

 

 

 

.

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment