’பாவண்ணனின் வழிகாட்டி ம.இலெ தங்கப்பா’
இந்திய இலக்கியச்சிற்பிகள்
வரிசையில் ம. இலெ. தங்கப்பா குறித்து ஒரு சிறு இலக்கிய ஆவணத்தை சாகித்ய அகாதெமி வெளியிட்டுள்ளது.
இந்நூலை எழுத்தாளர் மொழிபெயர்ப்பாளர் பாவண்ணன்
தனக்கே உரிய அற்புத நடையில் படைத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில்
குறும்பலாப்பேரி என்னும் கிராமத்தில் 08/03/1934 அன்று தங்கப்பா பிறந்தார். பள்ளி ஆசிரியராகத் தொடங்கிய அவர் பணி வாழ்க்கை கல்லூரிப்பேராசியராக உச்சம் தொட்டது..
மரபுக்கவிதைகள் படைப்பதில் வல்லவரான தங்கப்பா பாடல்கள் பலவற்றை வழங்கியுள்ளார்.
’சோளக்கொல்லை’
என்னும் சிறுவர்கள் பாடல் நூலுக்காக குழந்தை இலக்கிய விருதினை 2011லும், ’ Love
Stands Alone’ என்னும் நூலிற்காக மொழிபெயர்ப்பு
விருதினை 2012லும், சாகித்ய அகாதெமி தங்கப்பாவுக்கு வழங்கிப்பெருமைப் படுத்தியிருக்கிறது..
2007 ல் சிற்பி இலக்கிய விருதினைப்பெற்ற தங்கப்பா தமிழக அரசின் புதுவை அரசின் பல்வேறு
விருதுகளைப்பெற்றுள்ளார்.
நூலாசிரியர் பாவண்ணன் தனது முன்னுரையில் தங்கப்பாவின் படைப்புக்களில்
காணப்படும் மையப்புள்ளி பற்றிச்சிறப்பாகக்குறிப்பிடுகிறார்.
‘உள்ளம் வேறு மனிதன்
வேறு அல்ல.உள்ளமே மனிதன்.மனிதனின் சிறப்பும் செம்மையும் அவன் உள்ளத்தைச்சார்ந்தவை.
உள்ளம் அமைந்திருப்பது உடலில் என்பதால் உள்ளத்தைப்பேணுதல் வேண்டும். உடலுக்கென்று தனி
வாழ்க்கை இல்லை. அப்படி வாழ்வதில் எந்தச்சிறப்பும் இல்லை.பயனும் இல்லை’
எதைத்தெரிந்துகொள்ள
வேண்டுமோ அதனைத்தெரிந்துகொள்ள மனிதர்கள் ஆர்வம்
காட்டுவதில்லை. புறத்தேவைகளில் உள்ள அக்கறை அகத்தேவைகளில் எழுவதேயில்லை. தங்கப்பாவின்
இந்த சிந்தனைகளை பாவண்ணன் உள் வாங்கியிருப்பதை அவரின் எழுத்துக்களை வாசிக்கின்றபோது
வாசகர்களாகிய நம்மால் உணரமுடியும்.
‘என் எழுத்துக்கு
மட்டுமல்ல. என் வாழ்க்கைக்கும் அவரே என் வழிகாட்டி. எல்லாவகையிலும் எனக்கு அவர் எனக்கு
ஆசான்’
பாவண்ணனின் இவ்வாக்கு
மூலம் நோக்குகின்றபோது பாவண்ணனின் எழுத்துச்சாதனைக்கு அடித்தளமாய் தங்கப்பாவின் அறிவுசால்
தொடர்பு அமைந்திருக்க வாய்ப்புண்டு என்றே தோன்றுகிறது.
15 ஆழமான கட்டுரைகளைகொண்ட
நூல் இது. . முதல் கட்டுரை மகத்தான மனிதர்
என்று அவரை ப்பேசுகிறது. இயற்கையோடு இயைந்து
வாழாத வாழ்க்கை மானுட வாழ்க்கையா ? என்று வினா வைக்கிறது. தன் முனைப்பு என்னும் குணம்
நோயாகி மனிதன் எப்போதும் தன்னை அடுத்தவரோடு
ஒப்பிட்டு அவருக்கு மேலாகத் தன்னை இறுத்திக்கொள்ளவே போராடுகிறான். இயற்கையை நேசிக்காத
மனித வாழ்க்கை ஆபத்தானது என்பதை மனிதன் உணர்வதே இல்லை. தங்கப்பா இயற்கையைப்போற்றும்
தகைமை நம்மைப்பிரமிக்கவைக்கிறது.
பரமக்குடியில்
அரசர் சேதுபதி அரசு உயர் நிலைப்பள்ளியில் தங்கப்பா பணியாற்றினார். அவ்வமயம் புயலும்
பெருமழையும் மழையும் வந்து பாடாய்ப்படுத்துகிறது.
பரணி என்னும் பாடல் வகையில் தங்கப்பா 36 பாடல்களை ஒரே இரவில் எழுதி முடிக்கிறார். இயற்கைச்சீற்றத்துக்கு
அஞ்சி கதவடைத்துக்கிடக்கின்றனர் பெண்டிர்.
அவரகள் வீட்டுக்கதவை பொருளீட்டச்சென்ற வேற்றிடம் சென்ற கணவன்மார்கள் ஊர் திரும்பி
வந்து தட்டோ தட்டென்று தட்டுகிறார்கள்..
இந்தப்பரணி படைப்புக்கு
’கிரணி’ என்று பெயரிடுகிறார் கவிஞர் தங்கப்பா.. கடவுள் வாழ்த்துக்குப் பதிலாக ’கடவுள்
வீழ்த்து’ என 10 பாடல்கள் பாடி முதல் பகுதியாக
இணைக்கிறார். கிரணி என்னும் பெயர் ‘புயற்பாட்டு’ என்பதாகப் பின்னர் மாற்றம்
பெறுகிறது..
கிறித்துவப்பின்புலம்
கொண்டவர் தங்கப்பா. கட்டுப்பாடுகள் மிக்க பிராமண பின்னணி கொண்டவர் விசாலாட்சி. இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி பதிவுத்த்திருமணம் செய்துகொண்டனர்.
மொழிபெயர்ப்புப்பணியை
ஆர்வத்தோடு மேற்கொண்டவர் தங்கப்பா. சங்கப்பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து Hues and Harmonies from an ancient land என்று தலைப்பிட்டு வெளியிடார். ருஷ்யக்கவிஞன் கம்சுதேவின்
அவார் மொழிப்பாடல்களை ஆங்கில வழித் தமிழுக்குக்கொண்டு தந்தவர் தங்கப்பா. எட்டுத்தொகைப்பாடல்களிலிருந்து 200 காதல் பாடல்களை
த்தேர்ந்து LOVE STANDS ALONE என்று தலைப்பிட்டு
அழகுதமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்தார். சாகித்ய அகாதெமி இந்நூலுக்கு 2012 ஆம் ஆண்டின் மொழிபெயர்ப்பு விருது
வழங்கிப்பெருமை சேர்த்தது.
’மரபுப்பாடல்கள்
மீது படிந்து அழுத்திக்கொண்டிருந்த பண்டிதத்தனத்தை அகற்றி அவை வேர்பிடித்து நின்று
இலைவிரித்து கிளை விரித்து அரும்பி மலர்வதற்குத்தேவையான ஆற்றலை வழங்கியவராக தங்கப்பாவை அடையாளப்படுத்தலாம்’ என்னும்
பாவண்ணனின் வரையரைத் துல்லியமானது.
’அறிவிலர் வாழ்க்கை’
எனும் கவிஞரின் பாடல் இப்படி
‘கமழ் நெய் உண்ணிய
கலன் நுழை எறும்பு
வீழ்ந்தே அதனுள்
வீழ்ந்தாங்கு உலகில்
பொருள்தேர் மாந்தர்
அப்பொருட்கே அழுந்தி
முழுது வாழ் நாளும்
மூழ்குவர்
அளிதோதானோ அறிவிலர்
வாழ்க்கை.’
இப்பாடலைச் சங்கப்புலவர்கள்
யாரும் யாத்திடவில்லை நம் காலத்தே நம்மோடு
வாழ்ந்த தங்கப்பாவே வழங்கி நம்மைத் திக்குமுக்காடவைக்கிறார்.
’சோளக்கொல்லை பொம்மை’
என்னும் சிறார் நூலுக்கு 2011ல் சாகித்ய அகாதெமி
விருதால் கெளரவிக்கப்பட்டார் தங்கப்பா.
‘வாய்க்காலிலே
வெள்ளம்
வாத்திரண்டும்
குள்ளம்
மூக்கிலே கருப்பு
முதுகு கொஞ்சம்
பழுப்பு’
எத்தனை அழகாய்
எளிமையாய் இனிமையாய் படைக்க முடிகிறது கவிஞரால்
எனச் சொக்கிப்போகிறோம் நாம்.
‘குருவி மூக்குக்காரன்
குண்டு தொப்பைக்காரன்
நண்டு பிடிக்கப்போனான்
வண்டு காலில் கடிக்க
நொண்டி நடக்கலானான்.’
இப்படி ஒரு பாடலைப்பாடும்
தமிழ்க்குழந்தை ஆனந்த வெள்ளத்தில் கூத்தாடித்தான் கவிஞனை கொண்டாடி மகிழும்.
மனித வாழ்க்கையின்
சூக்குமத்தை க்கண்டடைந்த பாவலர் தங்கப்பா மனித மனம் செம்மையுறாமல் சமுதாயத்திற்கு நன்மை
கிட்டுவது என்பது சாத்தியமே இல்லை என்பதை வலியிறுத்திச்செல்கிறார். மனமது செம்மையானால்
மந்திரங்கள் தேவையில்லைதானே..
அகப்புரட்சி என்னும்
சொல்லை அனேக இடங்களில் கையாள்வதாய் கவிஞரைப்பற்றிக்குறிப்பிடும் நூலாசிரியர் பாவண்ணன், சுய நலம் தொலைத்தலும் மானுடத்தின் ஒழுங்கைக்கடைபிடித்தலும் அகப்புரட்சியின்
இருபெரும் அடையாளங்கள் என்று வாசகர்க்கு நூற்பயனாய்க்கொண்டு
தருகிறார்.
மனித வாழ்க்கையை
’உரை நடை’ வாழ்க்கை ’பாட்டு வாழ்க்கை’ என ப்பிரித்துப்பார்க்கிறார் தங்கப்பா. காரியங்களை
அட்டவணைப்போட்டுக்கொண்டு காரியம் ஆற்றுவது உரை நடை வாழ்க்கை,. மனம் விரும்பியபடிக்
கற்பனையில் திளைத்து மகிழ்வோடு வாழ்வது பாட்டு
வாழ்க்கை.
விறைத்துக்கொண்டும்
முறைத்துக்கொண்டும் மட்டுமே வாழ்க்கையை வாழ்ந்து முடிக்காது இயற்கையை விளையாட்டை குழந்தைகளைப்புரிந்துகொண்டு
மனிதன் வாழவேண்டும் என்கிறார் தங்கப்பா.
பாவண்னன் ஒரு நல்லாசிரியரை
வெளிச்சமிட்டுக்காட்டியிருக்கிறார். ’என் கடன்.பணி செய்து கிடப்பதே’ என்னும் அப்பரோடு
அவரை எண்ணிப்பார்ப்போம்.
சாகித்ய அகாதெமி
தொடரட்டும் நற்பணி.
No comments:
Post a Comment