Monday, May 16, 2022

 பெரு விருப்பம்

 

வாழும் புவி மனிதர்களிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கிறது. அளப்பரிய செல்வங்களை  மனிதகுலத்திற்கு  வழங்கியது இயற்கை. மனிதர்கள் மிகுந்த பொறுப்புள்ளவர்களாக நடந்துகொள்ளவேண்டும்.. மனித குலம் அமைதியாய்  நிறைவாய்த் தொடர்ந்து வாழவேண்டும் எனத்தான் இயற்கை அவாவுகிறது. ’புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்’  இது புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பெரு விண்ணப்பம்..

வாழும் .இவ்வுலகம் போரின் கொடுமைகளிலிருந்து விடுதலை பெற்றபாடில்லை. உக்ரைனும் ரஷ்யாவும்  உக்கிரமான மோதலைத்தொடர்கின்றன. நேட்டோவின் கரத்தை அசுரத்தனமாய் வலுப்படுத்த அமெரிக்காவும் மேலைய நாடுகளும் திட்டமிடுகின்றன.  உலக அரங்கில் சாமாதானத்தூதுவனாய் விளங்கிய  அன்றைய சோவியத் ஒன்றியம் இன்றில்லை.

புடினின் ரஷ்ய அரசாங்கம் ஜன நாயகத்தை மதித்துச்செயல்படுகிறதா என்றால் அதுவும் இல்லை.  இந்த இக்கட்டான  சூழலில் இந்திய தேசம் நடு நிலை வகிக்கிறது..

பல்லாயிரக்கணக்கில் மனித  உயிர்ப்பலியோடு கோடான கோடி செல்வ வளமும்  தீக்கிரையாகி அழியும் காட்சிகள் கண் முன்னே அரங்கேறுகிறது. கொரானா என்னும் பெருந்தொற்று உலக மக்களில் பல லட்சக்கணக்கானோரை  விழுங்கி உலகை  உலுக்கி எடுத்தது.  அந்த சோகம் இன்னும் முடிந்த பாடில்லை. பெருந்தொற்றால்  உலகப்  பொருளாதாரம் திணறிப்பெருமூச்சு விடுகிறது. நம் அருகிருக்கும் இலங்கையோ  தத்தளிக்கிறது. இலங்கை மக்களை வீதிக்கு வந்து போராடவைத்திருக்கிறது. இலங்கை அரசாங்கம் திணறித்திக்குமுக்காடுகிறது.

ஒரு மகத்தான விஷயம் நமது நாட்டு விவசாயிகள் பல்லாயிரம் பேர் டில்லித்தலை நகரில் விவசாயக்கருப்புச்சட்டங்களை எதிர்த்து மாதக்கணக்காய் போராடினார்கள். நூற்றுக்கணக்கில் மடிந்தார்கள். மோடியின் பாரதிய ஜனதா அரசு போட்ட கருப்புச்சட்டங்கள் பின்னர் ரத்தாயின.

இந்திய விவசாயிகள் பெருந்தொற்றுக்காலத்திலும் வயல்வெளிகளில் கடுமையாய் உழைத்து மக்களைப் பசியினின்று காப்பாற்றி அமோக  விளைச்சலை  இவண் சாத்தியமாக்கியிருக்கிறார்கள். நமது விவசாயிகள் என்றும் வணக்கத்திற்குரியவர்கள்.

நமது பொதுச்சொத்து  இன்று கொள்ளை போகிறது. ஏர் இந்தியா டாடாவுக்கு தாரைவார்த்தாயிற்று. அனேக விமான நிலையங்கள் விற்கப்பட்டுள்ளன. மக்கள் செல்வமான  எல் ஐ சியை ஏலம் விடுகிறார்கள். பொதுத்துறை வங்கிகளை நிர்மூலமாக்க திட்டம் தீட்டப்படுகிறது. சாதாரண மக்களின் அன்றாட  வாழ்க்கைக்கு அத்யாவசிய,மான கேஸ்சிலிண்டர் விலை விண்ணைத்தொடுகிறது.

தினம் தினம்  நமது  பொதுத்துறை. பி எஸ் என் எல்  நெருக்கப்படுகிறது. ஒன்றிய அரசுக்குப்  பொதுத்துறைகள் வாழ வேண்டும் என்கிற சிந்தை இல்லை. அம்பானி அதானி டாடா பிர்லா என்பவர்களோ கொழித்துக்கொண்டு உச்சம்  போகிறார்கள். ஏழைகள் வாழ்வு மட்டும் தொடர்கதையாய் இன்னும் இருளில்... நல்ல  கல்வியும்  நிறைவான மருத்துவமும் சாதாரண ஏழைக்குக்கிட்டுவது என்றுமில்லை..

தொழிலாளர்களாகிய நாம்  மக்கள் சமூகத்தை பிரித்துப்பிரித்து ஒன்றை  ஒன்றுக்கு எதிராக நிறுத்தி தனது அரசியல் நாடகத்தை அர்ங்கேற்றும் பாசிச சக்திகளைத்தெரிவோம். உழைக்கும் மக்களை ஒன்று திரட்டி, போராடும் பெருஞ்சக்தியாய் மாற்றும் கடமை  நமக்கே உண்டு என்பதனை நெஞ்சில் நிறுத்துவோம். நமது செங்கொடி விண்ணைத்தொடுக.. நாம் எழுப்பும் கோஷங்கள் இடி முழக்கங்களாகட்டும்.

நாம் இருக்கும் நாடு நம்தென்பதறிவோம். மக்கள் நலம் காக்கும்  நமது பொதுத்துறைகள் நமது மூச்சென்று உணர்வோம். பாரத்தாய் பெற்றெடுத்த வீர மக்கள் நாம். நமது  சங்கச்செயல்பாடுகள்  அதனைப் பறைசாற்றட்டும்.


No comments:

Post a Comment