Thursday, May 19, 2022

விட்டல் ராவின் ஓர் அன்னாடு காச்சியின் சேலம்

 

ramachandran sundaresan <essarci@yahoo.com>
To:Editor Virutcham
Thu, Apr 28 at 7:25 PM

விட்டல் ராவின் எழுத்துச்சித்திரம்

,’ஓர் அன்னாடு காச்சியின் சேலம்’.                   -எஸ்ஸார்சி

 வெளியீடு சந்தியா பதிப்பகம் சென்னை 83.  145 பக்கங்கள் விலை ரூ 150.

விட்டல் ராவ் மூத்த எழுத்தாளர். பெங்களூரில் தற்காலம் வசித்துவருகிறார்.தொலைபேசித்துறை எத்தனையோ எழுத்தாளர்களை தமிழ் எழுத்துக்களத்திற்கு அனுப்பி இருக்கிறது. அந்த எழுத்தாளர் திருக்கூட்டத்தில் விட்டல் ராவ் பெருமைக்குறியவர். 

சேலம் அவர் இளமைக்காலத்தில் வாழ்ந்த பெரு நகரம். ஒரு சாதாரணன் பார்வையில் சேலம் எப்படி இருந்தது என்பதனை விருவிருப்பான நடையில் ‘ஓர் அன்னாடு காச்சியின் சேலம் என்னும் நூலாக விட்டல் ராவ் படைத்துள்ளார். இது  உலர் சுவை கட்டுரை நூல் அன்று. தன் வரலாறும் அன்று .புதினம் என்றும் இதனைச்சொல்லமுடியாது. விட்டல் ராவின்  சுவாரசியமான எழுத்துக்களால் உருவான எழுத்துச்சித்திரந்தான்  இந்நூல்.

விட்டல் ராவ் எழுதிக்குவித்தவை  நாவல் 12, குறுநாவல்2, சிறுகதை தொகுப்பு 4, கட்டுரை நூல் 10. இந்த நூற்றாண்டின் சிறுகதைகள் என்னும் மாபெரும் இலக்கியப்பணியை மூன்று பெரும் தொகுதிகளாகச் சாதித்தவர் விட்டல் ராவ்.  வெளியீடு கலைஞன் பதிப்பகம்.’ நதி மூலம்’ இவரின் பேசப்பட்ட புதினமாகும்.

எழுத்துமட்டுமல்ல இவர் நுழைபுலம் இன்னும் , ஓவியம் சிற்பம் திரைப்படம் என்று விரிந்து செல்கிறது.  விட்டல் இசையில் ஈடுபாடும் நல்ல  குரல் வளமும் படைத்தவர்.

 ’ஓர் அன்னாடு காச்சியின் சேலம்’ என்னும் நூலை  எழுத்தாளர் அமரர் சா. கந்தசாமிக்கு அன்புக்காணிக்கையாக்கியுள்ளார்.என்னுடைய சக பயணியும் குடும்ப நண்பருமான கந்தசாமி என்று பெருமையோடுஅவரைக் குறிப்பிடுகிறார்.

சேலம் என் ஊர்,என் மண்,என்னை ஆளாக்கிய புனித பூமி. அதைப்பற்றி எழுதுவது என் கடமைகளில் ஒன்று என்று நிறைவோடு பேசுகிறார்.

12 பகுதிகளாக  இந்நூல்  வாசகனுக்கு வழங்கப்பட்டுள்ளது. ’குல தெய்வம்’ தொடங்கி ’சேலம் இன்று’ என்பதோடு நூல் முடிகிறது.

விட்டல் ராவின் குல தெய்வமான ‘எல்லம்மா’வை பவ்யமாய்க்குறிப்பிடுறார். சேலத்தில் பிரசத்திபெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் பற்றி எழுதுகிறார். கூடவே ஜாதிய சதி பற்றியும் இப்படி விமர்சிக்கிறார்.

‘ ஜாதீயத்தை  ஏற்படுத்தியவன் கூடவே தாங்கள் உண்டாக்கிய சாமிகளையும் உயர் ஜாதி கடவுள்கள், கீழ் ஜாதி கடவுள்கள் எனவும்,சட்டென பார்வைக்குப்படும்படியாய் வகைமைப்படுத்தி வைத்தான்.’

 தேர் முட்டி  அருகே இருந்த வில்வாத்திரி பவன் என்னும் உணவகத்தை அதன் சிறப்பை விளக்கமாகக்குறிப்பிடுகிறார்’பழுப்பேறிய வேட்டியை தூக்கி க்கட்டிக்கொண்ட வயதான பிராமணர்கள் அங்கு பரிசாரகர்களாக இருந்தனர் என்பதைப்பதிவு செய்கிறார்.

கிழக்கிந்திய கம்பெனியின் கர்னல் அலெக்சாண்டர் ரீட் (1792 வருடம் ) சேலத்தில்  கலெக்டராகவும் சூப்பரின்டெண்டாகவும் இருந்தவர். போலீசு,  என்ஜினியரிங், நீதி  இந்த மூன்று துறைக்கும் அன்றைய சேலம் மாவட்டத்துக்கு அவர் ஒருவரே.

அன்று மக்களிடம் கடிகாரம் கிடையாது. தினம் மூன்று பீரங்கிக்குண்டுகள் முழக்கப்பட்டன. காலை 6 மதியம் 12 இரவு 8 என்பவை  அந்த நேரங்கள்.

நேஷனல் ஓட்டல் என்னும் நட்சத்திர விடுதி கட்டப்பட்டபோது  எதிரே இருந்த சர்க்கிள் ஏரி காணாமல் போனதை வருத்தத்தோடு எழுதுகிறார்.

விக்டோரியா மைதானம் சூரிய அஸ்தமனத்திற்குப்பின் ஓரினப்பாலுறவு மைதானமாக மாறிய செய்தியை விடாமல் குறிப்பிடுகிறார்.

தான் படித்த சிறுமலர் உயர் நிலைப்பள்ளி பற்றிப் பெருமையொடு பதிவு செய்கிறார். அந்நாள் தலைமை ஆசிரியர் ரெவெரெண்டு ஃபாதர் புஷ்ப நாதர், ’சிறிய புஷ்பம்’ உயர் நிலைப்பள்ளி என்றுதான் குறிப்பிடுவாராம்.

நடிகர் அசோகன் அப்பள்ளியில் தாமஸ் என்ற பெயரில்படித்ததை இவண் நாம் அறிகிறோம்.

சேலம் மத்திய சிறைக்குப்பின்னே காடும் புதருமாய் மண்டிக்கிடக்கும். மாடர்ன் தியேட்டர்ஸ்ஸாரின்படப்பிடிப்புக்கள் அனேகம் அங்கு நடைபெறும். அங்குள்ள ஓடையைச்சுற்றி சிறுகளா,காரை,சூரப்பழம்,அழிஞ்சி,சங்கம்,கறிவேப்பிலைக்கு சக்களத்தி,காட்டிலந்தை,சப்பாத்தி, கள்ளி ஆகிய செடிகள் செழித்திருக்கும். இவை இவை பேசப்படுகின்றன.

‘பேரு சொல்லாம திங்கணும்,பேரு சொல்லி போட்டு தின்னா கசக்கும்,புளிக்கும்’ சங்கப்பழம் பற்றிச்சுவையான செய்தியை விட்டல் குறிப்பிடுகிறார்.

மாம்பழங்களின் வகை, மல்கோவா,கிளிமூக்கு,குதாதாத், ஜஹாங்கீர்,குண்டு ஈமாம் பசந்து,தில் பசந்து என சேலத்து அற்புதக்கனி குறித்து இனிமையாய்ச்சொல்லிப்போகிறார்.

 இராமாயண ஜடாயு என்னும் கழுகு மரித்த இடமான சுண்ணாம்புக்கரடு பற்றியும், கல்கி   ஒரு புதினத்தின் தலைப்பாய்க்குறிப்பிட்ட ‘பொய்மான் கரடு’பற்றியும் அனேக செய்திகளை இங்கே வாசகர்கள் அறியவாய்க்கிறது.

அயோத்தியாப்பட்டிணம்என்னும் ஊர் பற்றிய கதையொன்று வருகிறது. ராமனும் சீதையும் ராவண சம்ஹாரத்திற்குப்பிறகு  புஷ்பக விமானத்தில் அயோத்திக்குச் செல்கின்றனர். நடுவானில் இருட்டிவிடவே சேலம் பகுதியில் கீழிறங்கித் தங்கினர். விடிந்து மறு பயணம் புறப்படுவதற்குள்   பட்டாபிஷேகத்திற்கு குறித்த நேரமும் வந்துவிடுகிறது.  ராம பட்டாபிஷேகத்தை அயோத்தியாப்பட்டிணத்திலேயே முடித்துக்கொண்டு இருவரும்  புறப்பட்டனர். அயோத்திக்குச் சென்றவுடன் சம்பிரதாயத்துக்கு ஒரு பட்டாபிஷேகம்  நடத்திக்கொள்வதாய் ஒரு முடிவானது. அச்சமயம்  ராவணின் தம்பி விபீடணனும்  ராவணன் அடக்கம் முடித்து விட்டு  அவர்களோடு அயோத்தியாபட்டினத்தில் வந்து சேர்ந்துகொண்டானாம். விட்டல் ராவ் விவரமாய்த்தான் சொல்கிறார்.

 எழுத்துலகில் எழுத்தாளர் சேலம் பகபில பகடாலு நரசிம்மலு நாயுடு’ தட்சிண இந்திய சரித்திரம்’  என்னும்  அரிய பெரிய நூலை எழுதியவர். இது நமக்குப் படிக்க கிடைக்குமா தெரியவில்லை

 நாமக்கல் கவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை  என் கதை,மலைக்கள்ளன் நூல்களைத்தந்தவர்.

 எழுத்தாளர்கள் கு. சின்னப்ப பாரதி,தமிழ் நாடன்,சி. மணி, பாக்கியம் ராமசாமி,மகரிஷி, திலகவதி ஐ பி எஸ்,பெருமாள்முருகன் கலைஞர்கள் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், சேலம் ஜெயலட்சுமி என சேலத்துப்பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகிறார் விட்டல் ராவ்.

விட்டுப்போனவைகள் என்று சில  இருக்கலாம்.   விட்டல் ராவால் சொல்லப்பட்ட விஷயங்கள்  மிக அழகாகச்சொல்லப்பட்டுள்ளன. படிக்கத்துவங்கினால் படித்து  முடித்துவிட்டுத்தான்  மறுவேலை என்கிறபடிக்கு வாசகனைப்பந்தப்படுத்துகிறது விட்டலின்  எழுத்துநடை.

பாவண்ணன் பெங்களூரை எழுதினார் சந்தியா நடராஜன் மயிலாடுதுரையை எழுதினார், சுப்ரபாரதிமணியன் புதுச்சேரியை எழுதினார் விட்டல் ராவ் சேலத்தை எழுதினார். இன்னமும் சில இவ்வகையில் இருக்கலாம். இது ’ஊரும் பேரும்’ காலமோ என்னவோ.

-----------------------------

 

 

 




No comments:

Post a Comment