படி அளக்குறவரு
பரமசிவம்
குஞ்சுப்பாட்டிக்கு
வயது எண்பது இருக்கலாம். பாட்டியின் கணவர் என்றோ காலமாகிப்போனார். பாட்டிக்கு ஒரு கோவில்
வீடு. அதுவும் கூரை வீடுதான். தன் கணவருக்கு சிவன் கோவில் நிர்வாகம் சொல்ப வாடகைக்குக்கொடுத்தவீடு. வீட்டின்
தரை பிரளயகாலேஸ்வரர் கோவிலுக்குச்சொந்தம்
அன்றாடம்
கோவில் கிணற்றில் தண்ணீர் சேந்தி சுவாமி அபிஷேகத்துக்கு கொண்டு செல்வதுதான் அந்தத்தாத்தாவின் பிரதான வேலை. பெரிய சிவாச்சாரியார் கோவிலில் இட்ட சில்லறைப் பணிகள்
ஏதுமிருந்தால் அதனையும் செய்வார். கோவிலில்
இறைவனுக்குப்படைத்த இரண்டு பட்டை அன்னம் ஒரு தேங்காய் மூடி அவருக்கான பங்கென்று கொடுப்பார்கள். தினம் தினம்
கோவிலில் ரூபாய் ஐந்தோ பத்தோ பெரிய மனதுடையோர் அவருக்குத் தானமாய்க் கொடுத்துப்போவார்கள்.
இந்த தம்பதியர்க்கு
ஒரு மகன் இருந்தான். ஏதோ உள்ளூர் பள்ளிக்குப்போனான். பள்ளிப்படிப்பை நிறைவாய் முடிக்கவில்லை. துஷ்ட சகவாசம். அது எல்லாம் எப்படித்தான் வந்து சேருமோ. போதாத காலம்
வந்தால் அந்த அதுவும் பாம்பாகும் என்பார்கள்.
அப்படித்தான் அவனுக்கும் ஆனது. குடிக்க ஆரம்பித்தான்.
வேறென்ன உங்கள் கணக்குச் சரி. சாராயம்தான். முதல் இரண்டு
தினங்களுக்கு அவனை ஜானுவாச மாப்பிள்ளையாய் பலான நம்பர் கடைக்கு அவன் கூட்டாளிகள் அழைத்துப்போனார்கள்.
‘ குடித்துப்பார்லே
தெரியும்’ என்றார்கள்
‘ ஆகாயத்தில்
பறக்குறா போல தெரியும் பாரு அதான்
ஷோக் இதுல. நீ தான் ஒணருணும் நாங்க சொல்லி
ஆவுமா. ஆகாசத்துல இருக்குற மேகத்தில போயி ஒலாவிகிட்டு வர்ரது போல இருக்குமே. என்னமோ இந்த ஒடம்பு ஒரு காத்தாடி போல ஆயிடும். மனிஷனுக்கு வொடம்பு வலியாவது ஒண்ணாவது மூச். அவங்க
அவுங்க. குடிச்சு பார்த்தா தான் அந்த வெஷயம் அத்துபடி ஆவும். அடுத்தவங்க என்ன சொன்னாலும் அத எல்லாம் வெளங்கவைக்க முடியுமா. மனுஷப்பிறவி வாக்கறது
எப்பமோ ஒரு மொற அடுத்த பொறப்புக்கு
நாம நாயோ இல்ல நரியோ அத ஆரு கண்டா.
ஆக ரவ குடி. குடி ராசா இந்த அம்ருதத்த குடிச்சி பாரு. தவறினா நீ வருத்தப்படுவடா
என் கண்ணுல்ல’ தேனொழுகப்பேசினார்கள். சாராயக்கடையில்
சாராயம் விற்பனைசெய்பவன் இந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டே இருந்தான். புன்னகைத்தான்.
நண்பர்கள்
சாராயம் வாங்கிக் கொடுத்தார்கள்.
‘பாப்பார
புள்ள அதான் ரவ ரோசன பண்ணுது. பலான கடை முன்னால நிக்குறம். நீ அத வுட்டாலும் அந்தக்கடை உடுமா உன்ன’ கூட இருந்த அவர்களே சொல்லிக்கொண்டார்கள். அவன் கண்களிருந்து
இரண்டு சொட்டு கண்ணீர் வந்தது.
‘ இப்ப இங்க வந்துட்டு அழுவக்கூடாது. ராசா கணக்கா நிமிந்து நிக்குணும் ராசா நீ எப்பவும் ராசாதான், என்னா ரோசனை ஒனக்கு அதெல்லாம்
ஒண்ணும் வேணாம் சாப்புடு, ராசா குடுக்கறத வாங்கிக. சாப்புடு’ என்றனர்.
அவன் டம்ப்ளரைக்கையில்
வாங்கி வாயில் மடக் மடக் என்று வாயில் ஊற்றிக்கொண்டான்.வயிற்றுக்குள்
அதி இடி போல் இறங்கியது.
‘இனிமே நாயாட்டம் யாரு எங்க கூட்டாலும் வாலு ஆட்டிகிட்டு வருவாரு அய்யிரு’ அவர்களே சொல்லிக்கொண்டார்கள்
ஒரு நாள்.
இரண்டு நாள். பிறகு அவனே வீட்டில் காசு திருடினான் வெளி வீடுகளில் திருடினான். பேத்து மாத்து
பித்தலாட்டம் செய்தான். கன ஜோராய்க்
குடிக்கத்தொடங்கினான். மடா குடிகாரனான். தெருவில் புழுதியில் குப்பைத்தொட்டி அருகே
கிடந்தான். அவன் அருகில் சொறி நாயும் சேறு சகதி
பூசிக்கொண்ட பன்றியும் சுற்றி சுற்றி வந்தன.
கோவில் அய்யிரான
தந்தையும் தாயும் செய்வதறியாது திகைத்தனர்.
ஒரு நாள் தெருச்சாக்கடையில் வீழ்ந்து கிடந்தவனைச்சிலர்
‘ நம்ப செவன் கோவிலு அய்யிரு மொவன்’ என்று
அவன் அக்கிரகார வீட்டுக்குத்தூக்கிவந்து கிடத்தினார்கள். சில நாட்கள் கழிந்தன. என்ன கஷ்ட காலமோ ஒரு நாள் காலை அதே நம்பர் கடைக்குப்போனான்.
வாங்கி வாங்கி சாராயத்தை குடித்துக்கொண்டே இருந்தான். காசு எங்கிருந்து வந்ததோ. வீட்டில்
அம்மா அப்பா மளிகை சாமான்
அரிசி வாங்க வைத்திருந்த காசு திருடிக் கொண்டு வந்து குடித்தான்.
தீயதை எல்லாம் நல்லது எனப் பேசிடும் பழக்கம் எத்தனை எளிதாய்த்
தொற்றிக்கொண்டது. பாப்பான் குடிக்க ஆரபிச்சான்னா
அவ்வளவுதான் அவன் மூச்சடங்குனாதான் நிறுத்துவான்’ கடைக்கு வந்தவர்கள் பேசிக்கொண்டார்கள்.
‘’’போதும்
அய்யிரே நிறுத்து’ சண்டை போட்டர்கள். எங்கே
அவன் கேட்டான். வயிறு வீங்கியது. ஒரு கணத்தில் படார் என வெடித்துச்சிதறியது. வயிறு கூட அப்படி வெடிக்குமா என்ன? சாராயக் கடை முன்பாகவே பிணமானான். பரிதாபப்பட்ட சாராயக்கடைகாரர்கள் பிணத்தை அக்கிரகாரத்துக்கு தூக்கிவந்து
அவன் வீட்டு வாயிலில் போட்டார்கள். அவன் கதை
முடிந்தது.
மகன் இப்படிப்போனதை
எண்ணி எண்ணி அப்பா கலங்கினார். அத்தந்தை ஒரு நாள். மனையாளிடம் ’அங்கு வலி இங்கு வலி’ என்றார். அவரும் தன் வாழ்கைய முடித்துக்கொண்டார். இப்போது
அந்த குஞ்சுப்பாட்டி மட்டுமே இருக்கிறாள்.
கோவில்காரர்கள்.
அந்தக்கிழம் இருக்கிறவரை கோவில் மண்ணில் இருந்து
விட்டுப்போகட்டும் என விட்டு விட்டார்கள்.
குஞ்சுப்பாட்டி அக்கிரகாரம் முழுவதும் தெருவில் மாடுகள் போடும்
சாணி பொறுக்கினாள். ஒரு நாளைக்கு பத்து விராட்டிகள் அதிக பட்சம் தட்டுவாள். பாட்டிக்கும்
வயதாகிவிட்டதே. தன் வீட்டு சுவரில் அதனை வரிசையாக தட்டிவிடுவாள். அவை காய்ந்து பதமானபின்
அவைகளை அடுக்கு அடுக்காய் எடுத்து வைப்பாள். ஐம்பது நூறு என விராட்டிகளை இடுகாட்டிலிருந்து வாடிக்கையாய் பாட்டியைத் தேடிவந்து வரும் பிணம் சுடும் தொழிலாளர்கள் விலைக்கு வாங்கிப்போவார்கள். அந்த விராட்டிகள் வண்டியிலோ தலைச்சுமையாகவோ இடுகாடு போய்ச்சேரும்.
இப்படியாயக் கிடைக்கும் வருமானமே குஞ்சுப்பாட்டிக்கு
வாழ்வாதாரம். மழை தொடர்ந்து பெய்துவிடுமானால் பாட்டியின் பிழைப்பு அம்போதான். கோடைக்
காலம் என்றால் சரி. மழைக்காலம் குளிர் காலம் பனிக்காலம் என்று வந்தால் பாட்டி புலம்பித்தீர்ப்பாள்.
‘ஒரு கம்முனாட்டி
என்ன செய்துட முடியும். எந்த மொதலும் இல்லாம காசு
கொஞ்சம் வேணும்னா சாணி பொறுக்குவதுதான் ஒரே வழி. அதத்தான் நா செய்யுறேன். என்
புருஷன் சாமி சன்னதியில நல்ல படியாய் கைங்கர்யம்
செஞ்சாரு. அது என்னால ஆவுமா என்ன அந்த
வேலைக்கு வுடுவாங்களா. வயசு அதுபாட்டுக்கு
ஆவுதே. அது நம்ப சொன்னா நிக்குமா. தேகம் அதுக்க தக்கன கோணுது மாணுதுல்ல’.
புலம்புவாள்.
ஒருநாள் தெருவில்
பறை அறைந்துகொண்டு தோட்டியும் தலையாரியும்
நடந்துகொண்டிருந்தார்கள். இடு காட்டுத்தொழிலாளிகள் இருவர் அவர்களோடு உடன் வந்தனர்.
பாட்டி அவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என உற்றுக்கேட்டாள்.
‘டப் டப்
டப் டப்’
‘ இந்த பெண்ணாகடம் நகர வாசிங்க ஆணு பொண்ணு அத்தனையும் அறியவேண்டியது.
நாளையிலேந்து நம்ம ஊர் மயானத்துல கரண்டுஅடுப்பு வச்சி பிரேதம் எரிப்பாங்க. அதுக்கு
கட்டணம் ரூவா ஆயிரத்து இருநூறு அது சின்னதோ பெரிசோ எப்பிடி ஆனாலும். ரெண்டு நாளு உற்றாரு உறவுசனம்
மயானம் வரவேணாம். அலச்சல் இல்ல. அண்ணிக்கி
அண்ணைக்கே தகனம். .ரவ நாழில அஸ்திய டப்பால குடுத்துடுவாங்க. அவாள் அவாள் எங்க சவுரியமோ
அங்க அஸ்திய அப்பவே கரச்சிகிலாம்’
‘டப் டப்
டப் டப்’
பாட்டி அவர்களிடம்
நேராக சென்றாள்.
‘ கட்டய விராட்டிய
வச்சியும் சவத்த எரிய வுடலாமுல்ல’
‘அது அவாள்
அவாள் சவுரியம் ஏன் ஒன் விராட்டி இனிமேலுக்கு
விக்காதுன்னு பாக்குறயா’ திருப்பிக்கேட்டார் இடுகாட்டுத்தொழிலாளி.
‘ அப்பிடி
இல்லே.மாத்தம்னா எதுலயும் வருந்தான். பைப்புல தண்ணிவருது தெருவுல கரண்டு வெளக்கு எரியுது, கரண்டுல காத்தாடி சுத்துது, பொணம் வைக்க அய்ஸ்பொட்டி, பயனத்துக்கு காரு ரயிலு ஏராப்ளேன் எல்லாம் வந்து போச்சி, அது அதுஅதுலயும் மாத்தம் வருமுல்ல’
‘’ நல்லா
சட்டமா பேசுற பாட்டி’ என்றனர்.
குஞ்சு பாட்டி
விசனப்பட்டாள். அவளின் விராட்டி இனி விலை போவது சிரமந்தான். பாட்டியின் ஆழ்ந்த சிந்தனையை
அவர்கள் அவதானித்தார்கள்.
‘ நீ ஒண்னும் ஓசனை பண்ணாத பாலும் டீ தூளும் எங்க காசுல
வாங்கியாரம் நீ நெதம் டீ போடு. ரெண்டு
வேளக்கி போடு. நல்லா சூடு தாங்குற கூசாவுல ஊத்தி என்னண்ட
,குடு. நா மயானம் எடுத்தும் போறன்.
நாங்க அஞ்சி பேரு அவுத்த வேல பாக்குறம். இப்புறம்
நீ சாணிதான் பொறுக்கு இல்ல பொறுக்காம போ. உன்ன
செண்டுப்பா நாங்க பாத்துகறம். நீனு எங்கள்ள ஒரு ஆளுன்னே வச்சிகறம். பொணஞ்சுட எங்களுக்கு
விராட்டி அனுப்புனது நீதான. இப்புறம் உன்னால
என்னா செய்யவைக்கும். விராட்டியும் போணி ஆவாது. ஒரு நாளைக்கி
அம்பது ரூவா நாங்க உனக்கு தர்ரம். நீ வெசனப்படாதே’ இடுகாட்டுத்தொழிலாளி பாட்டியிடம் சொன்னார்.
‘ தெனம் ரூவா
அம்பது தர்ர’
‘ ஆமாம்’
‘’பொணம் வுழுவுலன்னா’
‘ இது என்னா
குறுக்கால பேச்சு. நீ கண்டது ஒரு
நாளைக்கி அம்பது ரூவா அதோட வுடுவியா‘
‘ ரொம்ப நல்லது
என் சாமி, படி அளக்குறவரு பரமசிவம்’ இரண்டு
கைகளாலும் கும்பிட்டாள் பாட்டி.
‘ எங்கள கும்பிடாத
நீ, நாங்கதான் எப்பவும் சாமின்னு உழுந்து கும்புடறது’ இடுகாட்டுத்தொழிலாளி சொல்லிக்கொண்டார்.
’டப் டப்
டப் டப்’ ஒலி வந்துகொண்டே இருந்தது.
---------------------------------
‘
,