காந்தியை
அறிவோம் வாருங்கள்
’தென்னாப்பிரிக்காவில் காந்தி’ இந்த நூலின்
ஆசிரியர் ராமச்சந்திர குஹா.வரலாற்றாளார். எழுத்தாளர். 1958 ல் டெஹ்ராதூனில் பிறந்து தற்சமயம் பெங்களூரில்
வாழ்பவர். ஸ்டான்ஃபோர்ட் ஓஸ்லோ யேல் பல்கலைக்கழகங்களில் ஆசிரியராகப்பணியாற்றியுள்ளார்.
ஆங்கிலத்தில் எழுதப்பட்டு உலகப்புகழ் பெற்றுள்ள இந்நூல் Gandhi Before India.
இதனை சிவ சக்தி சரவணன் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். இதனைக் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 792 பக்கங்கள் விலை ரூ 700.
இந்த நூலை இந்திய தேசபக்தரும் தெனாப்பிரிக்க
ஜன நாயக வாதியும் உலகம் முழுவதிலும் இருக்கும் காந்திய அறிஞர்களின் நண்பரும் வழிகாட்டியுமான
திரு ஈ. எஸ் ரெட்டிக்கு சமர்ப்பணம் செய்துள்ளார் குஹா.
’பிரிட்டீஷ் சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராக
காந்தி பிற்காலத்தில் தொடுத்த போருக்கான ஆதாரப்புள்ளி தென்னாப்பிரிக்காதான் என்பதை ராமச்சந்திர குஹா அசாதாரணமான
முறையில் இந்நூலுலில் நிறுவியுள்ளார் என்பதை மொழிபெயர்ப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தப் பெரிய படைப்பை மொழிபெயர்த்துள்ள
சிவசக்தி சரவணன் குறித்து ஒரு பத்தி எங்கேனும்
சேர்த்திருக்கலாம். கிழக்கு பதிப்பகம் மொழிபெயர்ப்பாளருக்கு அந்த நியாயம் செய்யவில்லை.
காந்தியின் அறிமுகம் தொடங்கி மகாத்மா உருவான விதம் என்கிற வரைக்கும் அத்யாயங்கள் 22 இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
தென்னாப்பிரிக்காவில் தமிழர்கள் காந்தியோடு
எத்தனை நெருக்கமாக ஒவ்வொரு போராட்டத்திலும் இருந்து இருக்கிறார்கள் என்பதை வெளிச்சம்
போட்டுக்காட்டும் நூலாகவும் என்பார்வைக்கு இந்நூல் காட்சியாகிறது.
1887 ல் காந்தி அறிவாற்றலை சோதிக்கும் மிகக்கடினமான மெட்ரிகுலேஷன் தேர்வினை
எழுதுகிறார். அவர் எதிர் கொண்டு எழுதிய கேள்வித்தாள்கள் இன்றும் பாதுக்கக்கப்பட்டு
வருகின்றன
. ‘மலர்ந்த முகத்துடன் இருப்பதன் நன்மைகள்’ குறித்து 40 வரிகளில் கட்டுரை எழுதுகிறார்.
Pleonasm, apposition இவற்றிற்கு பொருள்
சொல்வது.
10 தசம தானங்களைக்கொண்டு எட்டும் சமன் பாடுகள் தீர்வு
வேதியியல் வாய்ப்பாடுகள் சில.
இங்கிலாந்தில் ப்யூரிட்டன் ஆட்சியின் வரலாறு
ரைன் நதியின் வரைப்டம்
ஆங்கிலத்திலிருந்து குஜராத்தி மொழிபெயர்ப்பு
விக்டோரியா பேரரசிக்கு சிலை வைத்து மரியாதைசெய்வது
பற்றிய கட்டுரை.
காந்தி விக்டோரியா பேரரசிக்குச் சிலைவைப்பதற்குப்
பதிலாக தொழில்மயமான இந்த உலகில் இந்தியா தனக்கான ஒரு இடத்தைப்பெறுவதற்கான நிதி ஒன்றைத்திரட்டுவதே
அவரது பொன்விழாவைக்கொண்டாட இன்னும் உகந்தவழி என்று வாதிட்டுக்கட்டுரை எழுதுகிறார்.
எது எப்படியோ தேர்வு எழுதியவர்களில்
30 % பேரே வென்றனர். காந்தியுமதனில் ஒருவர்.
லண்டனில் முதன் முதலில் பிரன் ஜீவன் மேத்தாவைச்
சந்திக்கிறார். ஆங்கில நன்னடத்தைகள் சில காந்திக்குச்சொல்லப்படுகிறது.
அவை மற்றவர்களின் பொருளைத்தொடாதீர்கள். ஆட்களைப்பார்த்தவுடன்
பிலு பிலு என்று வினாக்களைத்தொடுக்காதீர்கள்.
சப்தமாக பேச வேண்டாம். ‘
ஒருவருடன் பேசும்போது அவரை’சார் சார்’
என்று அழைக்காதீர்கள் அது அடிமை - எஜமானர் பேச்சு.
வாசகர்க்கு சுவாரசியமான விஷயங்களாக நூறு
ஆண்டுகளுக்குப்பின்னும் இவை தென்படுகின்றன.
காந்தி சைவ உணவு மாநாட்டில் ஒரு கலந்துகொள்ள லண்டனிலிருந்து போர்ட்ஸ்மெளத்
செல்கிறார். அங்கு ஒரு விடுதியின் பெண் உரிமையாளர்
காந்தியை சல்லாபப்பேச்சுக்களால் சிக்கவைக்கப்பார்க்கிறார். ‘நடுக்கமும் படபடப்புமாக
இதயம் வேகமாகத்துடிக்க வேட்டைக்காரனிடமிருந்து தப்பிக்கும் விலங்கப்போலத் தன் அறைக்குச்சென்று
காந்தி மாநாடு முடியும் முன்பாகவே கிளம்பிவிடுகிறார்.
தன் தாயுக்குச்செய்து கொடுத்த சத்தியம் அவரை நிமிர்ந்து நடக்கவைத்தது.
’ராமசாமி’ என்ற சொல் இந்தியர்களைக் குறிக்கும்.
தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்கள் மத்தியில்
வழங்கிய ஒரு இழிசொல் அது என்பதை குஹா எழுதிச்செல்கிறார்.
1888 ல் காந்தி பம்பாயை விட்டுப்புறப்பட்டார். ஒரு இந்து பனியாவாகத்தான் கிளம்பினார். ஆறு ஆண்டுகளில்,
கிறிஸ்துவர்களை நண்பர்களாகப்பெற்ற முஸ்லிம்களுக்கு வேலை செய்கிற இந்துவாக மாறிவிட்டிருந்தார்.
போராட்டக்காரராகவும் உருப்பெற்றார்.
1896 அக்டோபர் 26 அன்று மதறாஸ் விஜயம்
செய்கிறார். பச்சைப்பாஸ் ஹாலில் நடைபெறுகிறது கூட்டம். கூட்டத்தை அறிவித்த சுவரொட்டிகளில் 41 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
அதில் சர். ராமசாமி முதலியாரும்
ஒருவர். குஹா இதனைப்பதிவு செய்கிறார்.
காந்தி பீட்டர்மாரிட்ஸ்பர்க் புகைவண்டி
நிலையத்தில் முதல் வகுப்புபெட்டியிலிருந்து இறக்கிவிடப்படுகிறார். இதைக் காந்தியைப்பற்றிய
ஒரு செய்தியாக உலகத்தில் எல்லோரும் குறிப்பிடுவார்கள்.
லூயி ஃபிஷர் 1951ல் ’த லைஃப் ஆஃப் மகாத்மாகாந்தி’ என்கிற புத்தகத்தை வெளியிட்டார். அது தந்த செய்தியே
உலகம் முழுவதும் பரவியது. பி ஒரு திரைப்படம் வந்தது.இதனக்குஹா தவறாமல் குறிப்பிடுகிறார்.
பீச் குரோவில் வசித்துவந்த சமயம் காந்திக்கும் அவரது மனைவிக்கும் ஒரு பிணக்கு
ஏற்பட்டது. தமிழ் பேசும் எழுத்தரான வின்சென்ட் லாரென்ஸ் காந்தியோடு இருந்தார். அவர்
பஞ்சமர். கிறிஸ்துவமதம் தழுவியவர். கஸ்தூரிபா
எழுத்தரின் சிறு நீர்க்கலனை எடுத்துச் சுத்தப்படுத்த மறுக்கிறார். தன் கணவரும்
அதனைச்செய்யக்கூடாது. தீட்டுப்பட்டுவிடும் என்கிறார். காந்தி மனைவியை வாசல் கதவுவரை இழுத்துக்கொண்டு போகிறார்.
கஸ்தூரி பா அழுகிறார்.ஆதரவற்ற அன்னிய மன்ணில் பாவைக் கதறவைக்கிறார் காந்தி. பின்னர் சமாதானமாகிறார். நூலை வாசிக்கும் வாசகர் ஒவ்வொருவரும்
இவ்விடம் அதிர்ந்துதான் போவார்கள்..
ரஸ்கின் எழுதிய ‘கடையனுக்கும் கடைத்தேற்றம்’
என்கிற நூலை வாசித்த காந்தி ’அந்த நூலில் கூறியுள்ளபடி
என் வாழ்க்கையை நான் மாற்றி அமைத்துக்கொள்ளத்
தீர்மானித்து விட்டேன்’ என்கிறார்.
தொழிலதிபர் ஜே .என் டாட்டா பற்றி, காந்தி
இப்படிச்சொல்வதை குஹா நமக்குச்சொல்கிறார்.’ டாட்டா ஒரு போதும் தன்னலத்தை நாடவில்லை.
சாதி இனம் போன்ற வேறுபாடுகளைக்கருதியதும் இல்லை.பார்ஸிக்கள் முஸ்லிம்கள் இந்துக்கள்
எல்லோரும் அவருக்கு ஒன்றுதான்.
இந்நூலில் ’லண்டனில் ஆதரவு திரட்டுபவராக’ என்னும் பகுதியில் 1906 அக்டோபர்
2 அன்று மோஹன் தாஸ் காந்திக்கு முப்பதாம் வயதில் நுழைந்தார் என்று வருகிறது.1869ல்
பிறந்த காந்திக்கு அப்போது வயது 37 சில பிழைகள் சரியாகக் கவனிக்கப்படவில்லை என்பதும் உண்மை.
1908 ல் ஜோஹனஸ்பர்க்கில் ஒரு போராட்டம்.
காந்தி தாக்கப்படுகிறார். தம்பி நாயுடுவே காந்தியின்
உயிரைக்காத்திருக்கக்கூடும்.அந்தத்தமிழர் கையில் குடை வைத்திருந்தார்.அக்குடை கடைசியில்
உடைந்தும் விட்டது. இந்தத்தாக்குதலில் காந்திக்கு
முகத்தில் எற்பட்ட காயத்திற்காக ஆறு தையல்கள்
போடப்பட்டன.
மேத்தா காந்தியை மகாத்மா என்று வரலாற்றில் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் ரவீந்திர நாத் தாகூர்தான்
முதன் முதலில் காந்தியை’ மகாத்மா’ என்றழைத்தவர்.
தன் காம இச்சையை திருப்தி செய்வதர்காகத்
திருமணம் செய்துகொள்ளும் நபர் ஒரு விலங்கவிடக் கீழானவனே இதைத் தன் மகன் மணிலாலுக்கு எழுதியவர் காந்தி.
கருப்பின ஆப்பிரிக்கர்கள் குறித்த அனுதாபமற்ற விரோத மனப்பன்மை கொண்டிருந்த காந்தி பின்னர் மாறியிருந்தார்.
கருப்பின மாணவர்களோ வேறு நிறத்தவரோ வெள்ளையின மாணவர்களோடு அமர்ந்து தேர்வு எழுதக்கூடாது
என அந்த அரசாங்கம் தடைவிதித்திருந்தது. அதனை வன்மையாகக்கண்டித்தார் காந்தி.
ஃபீனிக்சில் ஓய்வு நேரங்களில் பெரும்பகுதி
தமிழ்க் கற்பதில் செலவாகிறது. இந்த சமீபத்திய சத்தியாக்கிரகத்தில் தமிழர்கள்தான் அதிகப்படியாகப்
பிரகாசித்திருந்தார்கள். இப்படி பதிவு செய்கிறார் காந்தி.
‘ நீங்கள்
ஒரு குறிப்பிட்ட பெண்ணுடன் உங்களைப்
பிணைத்துத்துக்கொண்டு அதே சமயத்தில் மனித
குலத்துக்காகப் பணியாற்ற முடியாது காந்தி நண்பர்
காலன் பாக்குக்கு எழுதிய கடிதத்தில் இப்படியும் குறிப்பிடுகிறார்.
ஜோஹனஸ்பர்க்தான் வள்ளியம்மையைக்கொடுத்தது.
நான் பேசிக்கொண்டிருக்கும் போது என் முன்னே அந்த சித்திரமே மனக்கண்முன் தெரிகிறது.
சத்தியத்துக்காகத்தன் உயிரைக்கொடுத்தவர் வள்ளியம்மை..
மூன்று தமிழ்த்தியாகிகளை காந்தி குறிப்பிடுகிறார். வள்ளியம்மை,
நாகப்பன் நாராயணசாமி. மூவருமே இருபது வயது
அடையாத இளஞ்சிறார்கள் சத்தியாகிரகத்தில் உயிர்
நீத்து இருக்கிறார்கள் என்கிறார் காந்தி.
ஒருவர் யாரையாவது பாராட்ட வேண்டுமென்றால் அப்பாராட்டு இறந்த இந்த மூவருக்குத்தான் போய்ச்சேரவேண்டும். நாகப்பனுக்கும் வள்ளியம்மைக்கும் பிராம்ஃபோண்டெய்ன் கல்லறையில் நினைவுக்கல் வெட்டுகளைத்
திறக்கிறார் காந்தி.
இந்திய வழக்கறிஞரை மகாத்மாவாக மாற்றியதற்கு
ஆப்பிரிக்க தமிழ்ச்சமூகம் ஆதாரமாக இருந்திருக்கிறது
என்பதை உணரவைக்கும் அரிய நூல். யார் இதை எல்லாம்
கல்விக்கூடங்களில் மாணவர்க்கு இன்று சொல்லிக்கொடுக்கிறார்கள்.
-------------------------------------------------------------------------
No comments:
Post a Comment