Wednesday, February 1, 2023

 

  ஆயிரம் இடர்வரினும்  நாவலில் சில வரிகள்

 

மனிதனுக்குச் சில நம்பிக்கைகள் தேவைப்படுகின்றன. அவை  வாழ்க்கையில் குறுக்கிடும் துன்பங்களைச் செரித்துக்கொள்ள அவனுக்குத் துணைசெய்கின்றன. மூட நம்பிக்கைகள் இவை என்று தெளிந்து, சவால்களை சமாளிக்கும் ஞானம், அவனுக்கு வசப்படமாட்டேன் என்று அடம்பிடிக்கிறது.  ( பக்கம் 72)

ஆனா ஒண்ண உறுதியா சொல்லணும்.அன்ணல் அம்பேத்கார்  இல்லன்னா எனக்கு கெடச்சியிருக்கே இந்த ரவ வாழ்க்கை அதுவும் இல்ல. இப்பத்தான் எங்க சனம் கண்ண தொறந்து இந்த மண்ணுல இதுவரைக்கும் என்ன நடந்துது, இப்ப என்ன நடக்குதுன்னு பாக்குது.  (  பக்கம் 74 )

நாம தெய்வம்னு தெனம் தெனம் கும்புடற அயோத்தி ராமனும் மதுரா கிருஷ்ணனும் மாமிசம் சாப்டவாதானே.  ( பக்கம் 79 )

 படிப்பு பெரிசு. படிப்புதான் பெரிசுன்னு நா தெரிஞ்சிகிட்டவன். மனம் அப்ப அப்ப குரங்காயிடுது. அத ஒழுங்கு படுத்துறது சின்ன வேல இல்ல.( பாகம் 179 )

 மனுஷன் கிட்ட சாரம் போய்ச்சேரல  திருக்குறள் ஒரு நீதிநூல் வந்து எத்தனைக்காலம் ஆயிடிச்சி. இன்னும் அதன் தேவை கூடிகிட்டேதான் போவுது. ஒரு கன்னத்தில் மறு கன்னத்தைக்காட்டுன்னு பைபிள் சொல்லுது. ஆனா எத்தினி யுத்தம் இங்க நடந்திருக்கு.எத்தினி கோடி பேர் செத்துப்போயிருக்காங்க.  ( பக்கம் 188 )

மனிதர்கள் அடுத்தவன் என்ன இனம் என்பதை அறிந்து கொண்டுவிட ஏனோ இப்படி துடியாய்த் துடிக்கிறார்கள் அதனை அறிந்துகொள்வதால் நன்மை ஒன்றும் விளைந்துவிடப்போவதில்லை.. (  பக்கம் 206 )

கடவுள் பரமசிவன் நெத்தில பொற நெலா இருக்கு. அதுக்கும்தான் ராக்கெட்ல போறான்.நாறிப்போன பழசெல்லாம் வச்சிண்டு ஊர்கோலம் போகணுமா என்ன.        ( பக்கம் 213 )

இப்படித்தான்  இருக்கும். எதுவும் தானா நடந்துடாது . சும்மா வந்துடாது. எதிர்ப்புக்கள் இருக்கவே செய்யும். நாம மனசாட்சிக்கு நேர்மையா செயல்பட்டா போதும். ஆனா செயல் படணும். அது மிக முக்கியம். மற்றதை காலம் பாத்துகும்.

‘காலம்னா’

‘ மக்கள்தான்’         ( பக்கம் 319 )

 

‘ கிராமங்கள் ஒருநாள் சாதிச்சகதியிலிருந்து மீண்டெழும். சமூகப்பெரியவர்கள் சொன்ன வார்த்தை பொய்யாகிவிடாது. ஆயிரம் இடர்வரினும் நமது பணி தொடர்ந்து செயல்படுவதுதான்.    ( பக்கம்  320 )

 

  

என்னுரை - ஆயிரம் இடர்வரினும்

 

 

 

என்னுரை

                                           

 

………ஆயிரம் இடர்வரினும் ……………………………….. என்னுடைய ஏழாவது புதினம்.இந்திய தேசத்தைச் சாதி என்னும்  சமூகநோய்ப் பிடித்து உலுக்கி எடுத்துக்கொண்டே இருக்கிறது. அறிவியலின் ஆளுமை  அந்த சாதிய  நஞ்சின் வீர்யத்தைக் குறைத்து வைத்திருப்பது நிதர்சனம். இருப்பினும் சாதியை வைத்துச் சுயநலத்தைத் தக்கவைத்துக் கொள்வதில் சாமர்த்தியமாகச் செயல்படும் ஒரு சமூக அமைப்பாக நாம் மாறியிருப்பது  காலம் வழங்கிய ஒரு சாபம்.   

             இச்சாதிச்சகதியைக் காப்பதில்   அன்றாடம் நாம் தொழும்  இறையைக்கொணர்ந்து நிறுத்தியிருக்கிறார்கள்.  உலகெங்கும் மக்களாட்சி மலர்ந்தபிறகு பொதுவுடமைக்கட்சிக்காரர்கள் கூட இம்மண்ணில் சாதியை ஒரு கணக்கு வைத்துக்கொள்ளாமல் தேர்தலைச் சந்திப்பது சாத்தியமில்லாமல் போயிற்று. கிராமங்கள் இன்னும் சாதியின் பிடியில்.   சாதி  கெட்டிப்பட்டு நிற்பதுவே சாதாரணமாய் நமக்கு அனுபவமாகிறது.

தேசபிதா மகாத்மா காந்தி இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் வாழ்கிறது என்பார்.  இந்திய கிராமங்களோ சாதியத்தின்  தந்திர ஆளுகையில் இக்கணம் வரைத் தம் மூச்சுவிட்டுக்கொண்டிருக்கின்றன.

இப்புதினத்தின் வரும் மக்கள் சாதியத்தின் கிடுக்குப்பிடியினை எதிர்கொண்டு உயர்ந்த லட்சியத்தோடு ஆரோக்கியமானதொரு சமூகத்திற்கு பாடுபடுவதைப் பேசுகிறது இப்புதினம்.

எனது இப்புதினம் வெளிவரத் தோழமையுடன் என்றும் போல் உதவிக்கரம் நீட்டும் எனது தோழமைச் செல்வங்கள்  எழுத்தாளர் எஸ். சங்கரநாராயணன் பதிப்பாளர் உதயகண்ணன் ஆகியோர்க்கு எனதுபணிவும் நன்றியும்.

                                                                                                            அன்புடன்

                                                                                                            எஸ்ஸார்சி

 

 

 

 என் அன்பு நண்பர்  மூத்த  தமிழ் எழுத்தாளர்  கி.விட்டல் ராவ் அவர்களை வணங்கி

தமிழ்மணம்

 

 

 

தமிழ்மணம் நுகர்வோம்.

 சங்க இலக்கியமான எட்டுத்தொகையில்  நற்றிணை  முதல் நூல். அக நூலான இந்நற்றிணையில் வரும்  177 வது பாடல்.  காமுற்று வருகிறான் தலைவன். தலைவனைக்  கவனப்படுத்துவதாக தோழி இவண் கூறுகிறாள்.

‘இதோ நிற்கிறதே  இது வெறும்  புன்னை மரம்தான் என்று எண்ணிவிடாதே.   வெண்மணலில் புன்னை விதையைப்  புதைத்து  வைத்து மூடுவோம்.  அது எங்கே புதைந்து இருக்கிறது காட்டு காட்டு எனச்  சிறார்களொடு  விளையாடியது ஒரு  காலம். அன்று ஒரு நாள்  மழை வந்து விட்டது.   வெள்ளை மணலில் புன்னை விதையை  மூடிப்புதைத்து விட்டுச்சென்றோம்.   நான்கைந்து நாட்களில் அப் புன்னை விதை மரமாக வளர்ந்தது. அது வளர  வளர நெய்யொடு இனிய பாலை அன்றோ அத்தலைவியின் தாய் ஊற்றினாள்.  அம்மரத்தைத்  தலைவிக்குச் சகோதரி என்றாள்.  தலைவியினும் சிறப்பு மிக்கவள்தான் அப்புன்னை. அய்யய்ய !    இணையே  உம் தலைவி  நாணுகிறாள்.  அவளுக்கு வெட்கமாக இருக்கிறது.. தலைவனோடு சோதரப்புன்னை மரத்தருகே எப்படித்தான்  அவள் நகைத்து விளையாடுவது? ’

’நற்றிணைப்பாடலைக்காண்போம்.

விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி

மறந்தனம் துறந்தகாழ் முளை அகைய

நெய்பெய் தீம்பால் பெய்து இனிது வளர்ப்ப

நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று

அன்னை கூறினள் புன்னையது சிறப்பே

அம்ம! நாணுதும் நும்மொடு நகையே’.

 

-எஸ்ஸார்சி