Wednesday, July 5, 2023

கதை - தப்புக்கணக்கு

 

 

 

தப்புக்கணக்கு                                              

 

அம்மா நான் சிதம்பரம் போலாம்னு இருக்கேன்.’

‘என்ன விசேஷம்பா அங்க’

‘ தில்லைக்காளிய பாத்து  ரொம்ப நாளாயிடுச்சி, போயி  ஒரு கும்புடு போட்டு வரலாம்னு இருக்கேன்’

‘இப்பிடி எல்லாம் போமாட்டியே நீ இது ஏது புதுமாதிரியா இருக்கு’

‘என்னுமோ தோணுது போவுணும்னு’

‘போயிட்டுவா ‘

‘அப்பா கிட்ட சொல்லிடு’

‘அவர் இப்ப வந்துடுவார் நீ சொல்லிட்டு கெளம்பு’

‘அவர் எப்ப வருவாரோ  எனக்கு தெரியல நீயே சொல்லிடு’

அப்பா எங்கே போயிருப்பார். ரேஷன் ஷாப்புக்கு போயிருப்பார்.  அது இல்லை என்றால் போஸ்டாபீசுக்குப்போயிருப்பார்.எதாவது கோவிலுக்குக்கூட போவதுண்டு.  இது கோவில் திறந்திருக்கும் நேரம் இல்லையே.

 நான் யோசித்துக்கொண்டே பேருந்து நிறுத்தத்திற்கு விறு விறு என்று நடந்தேன்.

ஒரு கிலோமீட்டருக்கு வேகமாய் நடந்து தார்ச்சாலைக்கு வந்தேன். அரை மணிக்கு ஒரு சிதம்பரம் பேருந்து வருவது வழக்கம். பேருந்து நிறுத்தத்திற்கு அருகே இருந்த சிமெண்ட்  மதகின்மீது அமர்ந்திருந்தேன்.

நான் தில்லைகாளியைத் தரிசிக்கப் போவதாய்  அம்மாவிடம்  சொல்லிவிட்டுப் புறப்பட்டேன். அதில் ஓரளவுதான் உண்மையுண்டு.  சிதம்பரம்  கல்லூரியில் இளங்கலை  படித்தேன் முடித்தேன். நல்லதொரு  பணியில் சேர்ந்தேன். காலம் எத்தனை வேகமாய் ஓடிவிட்டது.  எதுதான் காத்துக்கொண்டு நிற்கிறது.  எனக்கு  இப்போது கல்யாண வயது வந்தாயிற்று. எங்கெங்கோ என் அம்மா ஓயாது எனக்குப் பெண் தேடிக்கொண்டுதான் இருக்கிறாள். எதுவும்  எனக்கு சரியாக அமையவில்லை.

சிதம்பரத்தில்தானே  நான் தங்கிப்படித்தேன்.   நான் தங்கியிருந்த வீட்டிற்கு அவுஸ் ஒனராய்  ஒரு மாமி  இருந்தார்கள். அந்த மாமிக்கு ஒரு மருமகள் ஒரு பேரன் பேத்தியும் இருந்தார்கள். மகன்தான் இல்லை.   மகனுக்கு ஈரல் குலையில் வியாதிவந்ததாம்.  வயிறு  வீக்கமாகி  ஏது ஏதோ வைத்தியம் பார்த்துமென்ன இளவயதிலேயே  அவர் காலமாகிவிட்டார். அந்த மாமிக்குச் சொந்த வீடுதான் அது. அவர்கள் வீட்டில் ஒரு  போர்ஷன்.  சிறிய  ரூம் காலியாக  இருந்தது. என் அம்மாவுக்கு  உடன்பிறந்த அக்கா அப்போது சிதம்பரத்தில்தான் குடி இருந்தார்கள்.  பெரியப்பா அண்ணாமலைநகர் கல்லூரியில்  செக்‌ஷன்  சூபரிண்டெண்டெண்ட் உத்யோகமாயிருந்தார். அந்த பெரியம்மாதான் எனக்கு அந்தச் சிறிய  போர்ஷனை வாடகைக்கு அமர்த்திக்கொடுத்தார்கள்.

  நான் நான்காண்டுகள் அந்த அறையில்  தங்கிப்படித்தேன். மாலை நேரத்தில்  அவுஸ் ஓனர் பேத்திக்கு டியூஷன் சொல்லிக்கொடுத்தேன். அதற்குக் காசு எதுவும் வேண்டாமென்று கண்டிப்பாகச்சொல்லிவிட்டேன். சொன்னதற்குக்காரணம் இல்லாமலா. அவர்கள் சும்மா இருப்பார்களா என்ன. காபியும் டிபனும் அவ்வபோது எனக்குக்கொடுத்தார்கள்.  அப்படியே இடுக்கில்  என் பெரியம்மா வீட்டிற்குப்போவேன். வருவேன்.

என் அறையில் மண்ணெண்ணெய் ஸ்டவ் ஒன்று வைத்துக்கொண்டு கைச்சமையலும் செய்துகொள்வேன். எப்படியோ  நான்காண்டுகள் ஓடின. படித்து வாங்கிய  மதிப்பெண்ணை வைத்து  எனக்கு ஒரு உத்யோகமும் கிடைத்துவிட்டது.

நான் டியூஷன் சொல்லிக்கொடுத்த அந்த அவுஸ் ஒனர் பேத்தி திருமணத்துக்குத்தயாராக இருப்பதாயும் அவர்கள் அந்தப்பெண்ணுக்கு  வரன் பார்ப்பதாகவும் சேதி வந்தது.  என்னோடு அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒருவன் சிதம்பரத்தில் அதே தெருவில் இருந்து தினமும் வந்துகொண்டிருந்தான். அவன் சொல்லாவிட்டால்  இந்த விஷயம் எனக்கு எங்கே இது தெரியப்போகிறது.

பேருந்து வரும்  ஓசை அருகிலேயே கேட்டது. ஆமாம் சிதம்பரம் செல்லும் பஸ்சே தான். கை காட்டினேன். வண்டி நின்றது. ஏறி அமர்ந்துகொண்டேன். மனதில் என்னவெல்லாமோ கற்பனைகள் ஓடின. டியூஷன் சொல்லிக்கொடுத்தவன் எங்கே பாடம் சொல்லிக்கொடுத்திருப்பான்   இந்த விஷயம்தான்  பேசியிருப்பான் என்று சுற்றும்முற்றும் இருப்போர்  நாளை பேசக்கூடும். அப்படி எல்லாம் நான் இருக்கவுமில்லை. அந்தச் சிந்தையுமில்லை. எனக்கு கல்லூரிப் படிப்பு மட்டுமே குறியாக இருந்தது. வேலைக்குப்போனால்தான் சோறு. என் குடும்பம் அப்படி. அப்பா எதோ ஜோதிடம் பார்ப்பார். ஓமத்திற்கு போய் கூட மாட உட்கார்ந்து ஜபம் சொல்லுவார். இது எல்லாம் ஒரு  நொண்டி  உத்யோகம்தானே. பார்ப்பனர்கள்   பிழைக்க வேறு வழியே இல்லை என்றால் தலை எழுத்தே என்று பார்ப்பதுதான்.

சைவ சித்தாந்த முனி தத்துவராயர் வாழ்ந்திட்ட எறும்பூர் வழியாக பேருந்து சென்றது. அவருக்கு ஒரு மடம் கூட இவ்வூரில்   கட்டி இருக்கிறார்கள்.எறும்பூரில் என் நண்பன் ராஜா இருக்கிறான்.அவனும் என்னோடு பள்ளியில்  கல்லூரியில் படித்தவன்.   நாம்  சிதம்பரம் போகும்  இந்தப்பேருந்தில்  அவன்  வந்து ஏறுவானா என்று ஆசையோடு எதிர்பார்த்தேன். இப்படி எல்லாம்  எதிர்ப்பார்ப்பது எப்படிச்சரி சொல்லிக்கொண்டேன்.  எப்போதேனும் சில சமயங்களில் நாம் எதிர்ப்பார்ப்பது நடந்தேவிடுவதும் உண்டு. அப்படித்தான் எறும்பூர் பேருந்து நிறுத்தத்தில் ராஜா தயாராக சூட் கேசோடு நின்றுகொண்டிருந்தான்.

‘ வாடா ராஜா’

‘நீ எங்க கெளம்பிட்ட’

‘ சிதம்பரம் வரைக்கும்’

‘என்ன சேதி’

‘தில்லைக்காளிய பாத்துட்டு வரலாம்னு ஒரு யோசனை’

‘நீயா அப்படி எல்லாம் போற ஆளு’

‘இல்ல  நா போறேன்’

‘அம்மா ஏதும் போசொன்னாங்களா’

‘இல்ல. நானேதான் போறன்’

‘ஆமாம் என்னை எங்க போறன்னு கேக்குலயே’

‘நீ   தூத்துக்குடிக்குபோவ’

‘அது சரி தான் தூத்துக்குடி போறன்’

ராஜா தூத்துகுடியில் ஸ்பிக் உர ஆலையில் வேலையில் சேர்ந்து இருந்தான். நானும் அவனும்  கெமிஸ்ட்ரி ஒரே கல்லூரியில்தான் படித்தோம். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை அவனுக்குக்கிடைத்தது. நான் தான் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஒரு குமாஸ்தா வேலையில் சேர்ந்தேன். என் கிராமத்துக்கு அருகிலேயே  ஒரு நகரம். அந்நகரில்  ஒரு பீங்கான் தயாரிக்கும் ஆலை. அதுவே என் பணியிடம்.

 நண்பன் ராஜாவைத்திருமணம் செய்துகொள்ள ஒன்றுவிட்ட அக்கா பெண்  ஒருத்தி ரெடியாக இருந்தாள்.  சொந்த தாய் மாமனின் மகளும் அவளே. அவன்  காலத்தே திருமணம் செய்துகொண்டான்.

‘ஏண்டா பொண்ணு  அமையிலயா, ஏன் தள்ளிகிட்டே போவுது’   என் கல்யாணம் பற்றிக்கேட்டான்.

‘ஆமாம் இன்னும் நேரம் வருல’

‘வர்றத  எல்லாம் நீ வேணாங்கிறயா, என்ன பிரச்சனடா’

’ஒண்ணு இருந்தா ஒண்ணு சரியா வரமாட்டேங்குது இப்பிடியே  காலமும் போவுது’

பேருந்து சென்றுகொண்டே இருந்தது. புவனகிரி தாண்டியது. சிதம்பரம் தூரத்தில் தெரிந்தது. பெரிய கோவில் கோபுரங்களைப்பேருந்தில் அமர்ந்தே தரிசிக்க முடிந்தது.

‘ பார்க்கிறது எல்லாம் பொண்ணாயிடாது.    உனக்கு  எது  சரிப்பட்டு வருமோ அதமட்டும் பாரு.  வேற பெரிசா எதுவும் நமக்கு வேணாம்.     முடிவுன்னா  அத  ஒழுங்கா எடுக்கணும்.  அதுக்குன்னு கால நேரத்தயும் வளத்திகிட்டு போவாதே’

‘நீ எங்க பஸ் ஸ்டேண்டுலதான் எறங்குவ’

‘ஆமாம் நான் தூத்துகுடி பஸ்ச புடிக்கணும்’

‘நானு கஞ்சிதொட்டி ஸ்டாப்பிங்கிலயே இறங்கிகுவன்’

பேருந்து சிதம்பரம் நெருங்கிக்கொண்டிருந்தது. நான் கஞ்சிதொட்டி நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டேன்.

‘காலா காலத்தில்  இன்விடேஷன் அனுப்பி வையி தெரிதா’ என்றான் ராஜா. அப்படி  அது என்ன சாதாரண விஷயமா.

 கஞ்சிதொட்டி  நிறுத்தத்தில் இறங்கி தில்லைக்காளி கோவில் நோக்கி நடக்க ஆரம்பித்தேன். வடக்கு ரத வீதி மய்யமாயிருந்த ஒரு விநாயகர் கோவிலைப்பார்த்துக்கொண்டே இடதுபுறம் திரும்பி அம்பலத்தாடிமடம் தெருவில் நடந்தேன். ஒரு ஆரம்பப்பள்ளி கண்ணில் பட்டது. இந்த அம்பலத்தாடிமடம்  ஆரம்பப்பள்ளியை எத்தனையோமுறை பார்த்துதான் இருக்கிறேன்.    அந்தக்கால ஸ்திதி மாறவேயில்லை. அப்பள்ளி பூட்டிக்கிடந்தது.

மாலை நேரம். மணி ஆறு. பொடிநடையாய் நடந்து தில்லைக் காளி கோவிலை நோக்கித்தான் சென்றுகொண்டிருந்தேன். சிலர் கடை வைத்துத்  தேங்காய்  வத்தி கற்பூரம் பூ பழம் நல்லெண்ணெய் குங்குமம் எலுமிச்சம்பழம்  வெற்றிலைப்பாக்கு என விற்றுக்கொண்டிருந்தார்கள்.  நான் எதுவும் வாங்காமல் சென்று கொண்டிருந்தேன்.

‘அருச்சனை தட்டு வாங்கிகிணு போங்க’ நச்சரித்தார்கள்.

எல்லாவற்றிர்க்கும் சேர்த்து உண்டியலில் காசாய்ப் போட்டுவிடலாம் என்று சொல்லிக்கொண்டேன்.

காளி கோவில் கோபுரவாயில் பக்கமாய் சேவார்த்திகள் தமது காலணிகளை கன்னா பின்னாவென்று  விட்டு விட்டு அம்மனைத்தரிசிக்கச்சென்றுள்ளனர். நானும் எனது காலணியை ஒரு ஓரமாக பத்திரம் செய்துவிட்டு கோபுரவாயிலில் நுழைந்தேன்.  வழக்கம்போல் வினாயகரை  அடுத்து தில்லையம்மனை பிறகு தில்லைக்காளியை வணங்கினேன். தில்லைக்காளி எப்போதும்போல் குங்குமம் போர்த்திக்கொண்டு இருந்தாள். எலுமிச்சம்பழமாலை அணிந்து கைகளில் சூலத்தோடு உக்கிரமாக காட்சி தந்தாள். குங்குமம் வாங்கி நெற்றியில் வைத்துக்கொண்டேன். கோவிலை  மூன்று சுற்று சுற்றினேன். தரை வீழ்ந்து வணங்கினேன். சிறிது நேரம் சந்நிதியிலேயே அமர்ந்திருந்தேன். கோவில் முழுவதும் தாய்க்குலங்களின் கூட்டம்தான் அதிகம் இருந்தது.

சூறைத்தேங்காய் உடைப்பவர்கள்  தம் நேர்த்திக்கடனைத் தொடர்ந்து நிறைவேறிக்கொண்டிருந்தார்கள். உடைந்த தேங்காய்களின் பாகங்கள் ஒரு தொட்டியில் சேமிக்கப்பட்டுக்கிடந்தன. அவைகளை எப்படிக் கோவில் நிர்வாகம் பங்கீடு செய்து முடிக்குமோ எனக்கு மலைப்பாக இருந்தது.

தில்லைக்கூத்தனோடு நடனமாடித் தோற்றுப்போன மாகாளி  நகரின் வடக்கே வந்து  தங்கிவிட்டதாய்த் தல புராணம் சொல்வார்கள். தில்லை நடராஜன்தான் உண்டு.நடராஜி என்ற பெயரை யாரும் எங்கும் கேள்விப்பட்டது இல்லையே.

கோவிலைப்பார்த்தாயிற்று. இனி நமது திட்டப்படி நாம் தங்கிப்படித்த வீட்டிற்குச்சென்று அந்தப்பெண்  நமக்கு ஏதும் சரியா வருமா பார்க்கவேண்டும். இந்தக்கோவிலில் இருந்து  அருகேதான் இருந்தது அவர்களின் வீடு.  ஏழெட்டாண்டுகள் முன் இந்தப்பகுதியில்தான்  நானும்  என் நண்பன் ராஜாவும் சுற்றிக்கொண்டும் இருப்போம்.கல்லூரி நாட்கள் எப்போதும் நினைக்க நினைக்க மகிழ்ச்சியைத்தரும் விஷயந்தான்.

தில்லை டாக்கிஸ் எனும் ஒரு திரையங்கு வழியாய் வாகீச நகர் வளைவு பார்த்துக்கொண்டே  அந்த புதுத்தெருவுக்குள் நுழைந்தேன்.  அந்தத்தெரு ஓரச்சாக்கடையில் பன்றிகள் ஒன்றன் பின் ஒன்றாக சென்றுகொண்டிருந்தன. நாய்கள் அவைகளை ஓயாமல் துரத்தின. மேலப்புதுத்தெருவில் மய்யமாய் ஒரு வேத பாராயண மடம் இருந்தது. அது எப்போதும் பூட்டியே கிடக்கும். வேதமாவது பாராயணமாவது இப்போது  அவாள் எல்லோரும் அமெரிக்காவாசம்.அம்மடத்தின் அண்டை வீடுதான் நான் தங்கிப்படித்த வீடு.

வீட்டு வாயிலில் ஈசி சேர் போட்டுக்கொண்டு  அவுஸ் ஓனர் பாட்டி அமர்ந்திருந்தாள்.  முழுவதுமாய்ச்  சாய்ந்தே அமர்ந்திருந்தாள்.

‘மாமி நான் சந்திரன்’

‘யார்ரா இது’

‘உங்க வீட்டுல தங்கி காலேஜ் படிச்சனே அந்த சந்திரன்’

‘ வயசாயிடுச்சி. லேசுல ஞாபகம் வர்ரதில்லே. ஓ நீ நம்ப பேத்திக்கு டியூசன் சொல்லிக்கொடுத்தியே அந்த தம்பிதானே’

‘ ஆமாம்’

வீட்டின் உள்ளிருந்து குரல் கேட்கிறது. நான் பாடம்  அன்று சொல்லிக்கொடுத்தேனே அந்தக் குழந்தை. அது உயரமாக வளர்ந்து கல்யாணப்பெண்ணாகி  இதோ தனது தாயோடு வாயிலை நோக்கி வருகிறது.

‘யாரு சந்திரனா சவுக்கியமா எப்பிடி இருக்கே’

அந்தப்பெண் குழந்தையின் அம்மாதான் என்னை விசாரித்தார். என்னிடம் பாடம் படித்த அந்தப்பெண் கல்லூரிப்படிப்பை முடித்து நிற்கிறாள்.

அவளை உத்தேசித்துத்தான் நான் இன்று  சிதம்பரத்திற்கே வந்திருக்கிறேன். அது எனக்குமட்டுமே  தெரிந்த செய்தி. என் தாயிடம் கூட இந்த ரகசியத்தைச் சொல்லாமல்  நான் இங்கு  வந்திருக்கிறேன்.

‘கல்யாணம் எல்லாம் ஆயிடுச்சா இல்லன்னா எப்ப’

பாட்டியம்மா கேட்டாள்.  மற்ற இருவரும் பாட்டி சொல்வதைக்கேட்டு என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

‘ பாத்துகிட்டு இருக்காங்க. இன்னும் நேரம் சரியா அமஞ்சி வருல’

‘ நம்மூரு  தில்லக்காளிய  மனசுல  நெனச்சி வேண்டிக்க. டக்குன்னு ஒரு எடம் செட்டில் ஆயிடும். எம்மானோ பேருக்கு அப்பிடி கல்யாணம் கூடியிருக்கு  நா பாத்திருக்கேன்’

‘சரிங்க பாட்டி’   அவர் எனக்குச்சொன்ன செய்திதானே இது.

‘என்ன இவ்வளவுதூரம். ஏது விசேஷமா’

அந்தப்பெண் குழந்தையின் தாய் என்னை வினவினாள்.

‘ நாளைக்கி வெடிய காலையில சிவகாமி அம்மன் கோவில்ல ஒரு கல்யாணம். ஆறு ஏழரை. என்னோட படிச்சவன். அதுக்குத்தான்  நா  வந்தேன். அப்பிடியே ஒரு எட்டு  உங்களை எல்லாம் பாத்துட்டு போவுலாம்னு ஒரு யோசன’ பொய் சொன்னேன்.

‘ ரொம்ப சந்தோஷம்’

‘ எப்பிடிம்மா இருக்க. சவுமி. என்ன படிச்ச’ அவள் பெயர்  நன்கு நினைவில் இருக்கிறது.

‘ பிஎஸ்சி கெமிஸ்ட்ரி படிச்சேன். அவ்வளவுதான். மேல படிக்க வக்கில.  அம்மா இது  போதும்னு சொல்லிட்டாங்க’

லேசாய்ச்சிரித்துக்கொண்டாள்.

‘பையனுக்குத்தான்  ஏர்ஃபோர்ஸ்ல செலக்ட் ஆகியிருக்கு.  அந்த ஆடர் வரணும் எதிர் பாத்துகிட்டு இருக்கான். இப்ப  நடராஜா கோவிலுக்கு போயிருக்கான். வந்துடுவான். சவுமியின் அண்ணன் பற்றிச்சொல்லி முடித்தாள். சவுமியை ஒரு முறை நன்றாகப்பார்த்துக்கொண்டேன்.  மிக அழகாகத்தான் இருக்கிறாள்.  இன்னமும் அவளுக்குக்  குழந்தை முகமே இருந்தது.

மணி ஏழு இருக்கலாம். நான் இன்னும் காபி டீ எதுவும்  சாப்பிடவில்லை. அவர்களே கேட்பார்கள் என நினைத்தேன். கேட்டபாடில்லை. வீட்டிற்கு  வழக்கமாய் வரும் தினமலர் நாளிதழ் திண்ணையில் கிடந்தது. அதனை எடுத்து புரட்ட ஆரம்பித்தேன்.

‘வீட்டுல எல்லாரும் நலமா’ சவுமியின் தாய் விசாரித்தார்கள்.

‘ நலம்’ பதில் சொன்னேன்.

‘ நாளைக்கு காலையில்  சிவகாமி அம்மன் கோவில்ல கல்யாணம்னு சொன்னியா’ மரியாதை இடித்தது.

‘ ஆமாம்’

‘அப்ப இரவு இங்க தங்குற ‘

‘ஆமாம்’

‘சந்தோஷம், இரவு டிபன் ரெடி பண்ணப்போறன், உனக்கும் சேர்த்துத்தான்’

‘ரொம்ப ஸ்ரமம்’ சும்மாதான் சொன்னேன்.

அவுஸ் ஓனர் பாட்டி ஈசிசேரில் அயர்ந்து உறங்கவும் ஆரம்பித்துவிட்டார். சவுமி அவள் தன் தாயோடு அடுப்படிக்குப்போனாள். தினமலர் பத்திரிகையை ஒரு வரி விடாமல்  படித்து முடித்தேன். இனி என்ன செய்வது. நாளைக்குக் கல்யாணமும் இல்லை ஒன்றும் இல்லை. முகூர்த்த நாள் என்று காலண்டரில் போட்டிருந்தது அது பார்த்தேன் அவ்வளவே.

யூனிகானில் வந்த  சவுமியின் அண்ணன் வீட்டு வாயிலில் அதனைக்கச்சிதமாய் ஸ்டேண்ட் போட்டு  நிறுத்தினான்.

‘சார் யாரு’

‘சவுமிக்கு டியூஷன் சொல்லிக்கொடுத்த சந்திரன்’

‘ அந்த சாரா வாங்க’

பாட்டி கண்விழித்துக்கொண்டாள். ‘யாரு வந்துருக்கா பாத்தியோ’

‘பாத்தேன்’

‘உன் படிப்பு உத்யோகம் சொல்லுடா’ பாட்டி ஆரம்பித்தாள்.

 கட்டாயம்  என் அம்மா  சொல்லியிருக்குமே’

‘ஆமாம் அம்மா சொன்னார்கள்’ நானே பதில் சொன்னேன்.

ஏர்ஃபோர்ஸ்ல் வேலைக்குப் போக இருப்பதைப்பற்றிச்சொன்னான். எஞ்சினீரிங் முடித்துவிட்டு  எல்லா வேலைக்கும் மனு செய்ததைச் சொன்னான்.  அவன் தான் என் சி சி யில் அண்டர் ஆபிசராய் பொறுப்பில் இருந்ததைச்சொல்லிகொண்டான்.

‘ நீங்க முதுகுன்றம் பக்கம் தானே’

‘ஆமாம்  அதே  பீங்கான் பாக்டரி வேல’

சவுமியின் அண்ணன் வீட்டின் உள்ளே போனான்.

பாட்டிக்கும் எனக்கும் இரண்டு வேறு வேறு தட்டுக்களில் தோசைகள் எடுத்துக்கொண்டு  சவுமியின் அம்மா வீட்டு வாயிலுக்கு வந்தாள். எனக்கும் பாட்டிக்கும்  தலா ஒரு தட்டு கொடுத்தாள்.

‘பராக்கா சாப்பிடுங்க’

‘உங்களுக்கு  இவ்வளவு சிரமம்’

‘இதுல என்ன சிரமம்’

தோசையும் மிளகாய்ப்பொடியும் சிறிது எண்ணையும் இருந்தது. சவுமி இரண்டு செம்புகளில் தண்ணீர் கொண்டுவந்தாள்.

‘ஒண்ணு சாருக்கு ஒன்ணு பாட்டிக்கு’

நான் ஒரு செம்பைக்கையில் வாங்கி கை சுத்தம் செய்துகொண்டேன். டிபன் சாப்பிட்டேன். செம்பில் மீதமிருந்த தண்ணீரால் கை சுத்தம் செய்துகொண்டேன். பாட்டி இன்னும் சாப்பிட்டுக்கொண்டுதான் இருந்தாள்.

‘சட்டுன்னு சாப்டுட்டிங்க’

‘ஆமாம். எப்பவும் நான் அப்பிடிதான்’ சவுமிக்குப்பதில் சொன்னேன். எனக்குப்பசி.

சவுமியின் அண்ணன்  சவுமியின் அம்மா அனைவரும் வீட்டின் உள்ளேயே டிபன் முடித்திருக்கலாம்.  சவுமியின் அண்ணன் அறுதல் பழசாய் ஒரு பாயும் ஒரு முழம்  நீல வண்ணக் கல்தலையணை ஒன்றும் எடுத்துவந்து திண்ணையில் வைத்தான்.

‘சார் உங்களுக்கு’ என்றான்

‘ரொம்ப சரி ‘

  நா படுத்துக்க உள்ள போயிடுவேன்’  அவுஸ்ஓனர் பாட்டி எனக்குச்செய்தி சொன்னாள்.

‘நா ராவுல ரெண்டு தரம் மூனு தரம் எழுந்திரிச்சி  அப்பிடி இப்பிடி போய் வருவேன்’’  பாட்டி எனக்கு அவளின் ஆரோக்கியத்தகவல் சேர்த்துச் சொன்னாள்.

சிறிது நேரத்திற்கெல்லாம்  அவுஸ் ஓனர் பாட்டி வீட்டின் உள்ளே சென்றாள். நான் அவன்   கொடுத்துவிட்டுப்போன பாய் தலையணையோடு திண்ணையில் அமர்ந்து  இருந்தேன்.

சவுமியின் அண்ணன் அங்கு வந்தான்.

‘திண்ணையில் படுத்துகுங்க,  வெடிய காலையில் எழுந்திரிச்சி கல்யாணத்துக்கு போவுணும்னா நீங்க பாய தலையணை திண்ணையில் ஓரமா வச்சிட்டு போயிக்கலாம். எப்பிடி உங்களுக்கு சவுகரியமோ அப்பிடி செய்துகுங்க’

அவன் வாயில் கதவைத்தாளிட்டுக்கொண்டு போனான். நான் திண்ணையில் அந்தத்தேய்ந்த  கோரைப்பாயை விரித்துப்படுத்தேன். தெருவில் மின்சார விளக்கு எரிவதும் அணைவதுமாக இருந்தது. மழை வருமோ என்று  யோசனையில் இருந்தேன். தூக்கம் எங்கே வந்தது. கொசுத்தொல்லை. அதுவும் சிதம்பரம் என்றாலே ஜாதிக்கொசுக்களின் பிரிய வாசஸ்தலம் என்பார்கள்.

அதிகாலை நான்கே முக்காலுக்கு மசூதியின் முதல் அழைப்பு பிரமாதமாகக்கேட்டது. எழுந்து அமர்ந்தேன். நான் பாடம் அன்று சொல்லிக்கொடுத்தேனே  அந்த  சவுமியா எல்லாம் இப்போது இங்கு இல்லை. இந்தச்சவுமி வேறு  இவள் வேறு. இது மட்டும் உறுதி. இனி ஆகப்போவது ஒன்றுமில்லை. நாம் போடும் கணக்கு எத்தனையோ முறை தவறித்தான் போயிருக்கிறது. அதனில் இதுவும் ஒன்று

.பாயைத் தலையணையை ஓரம் செய்துவிட்டு கஞ்சித்தொட்டி நிறுத்தம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன். தில்லைக்கூத்தனின்  வடக்குக் கோபுரத்தில்  மின்சார விளக்குகள் பிரகாசமாக எரிந்துகொண்டிருந்தன.

செஞ்சி செல்லும் பேருந்து என் கிராமம் வழியாகத்தான் செல்லும்.  எனக்காக அது தயாராக நின்றுகொண்டிருந்தது. ‘கோகுலத்தில் பசுக்களெல்லாம் கோபாலன் குழலைக்கேட்டு நாலு படி பால் கறக்குது  ராமாரி’ என்று பக்திப்பாடல்களை  பேருந்தின் ஆடியோ வழங்கிற்று.

‘உனக்கு எது சரிப்பட்டு வருமோ அத மட்டும்  பாரு’ நண்பன் ராஜா சொல்லிவிட்டுப்போனது மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்தது. என் அம்மாவுக்கு தெரியாது.   நான் சிதம்பரம்  போய் வந்ததன்  உட்கதையை உங்களுக்கு மட்டும்  சொல்லியிருக்கிறேன்.

------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment