Monday, September 18, 2023

புதினம் - ஆயிரம் இடர் வரினும்

ஆயிரம் இடர்வரினும்                                             

தருமங்குடி ஒரு கிராமம். அது குக்கிராமம் இல்லை.  முதுகுன்றம் நகரிலிருந்து சிதம்பரம் நகருக்குச்செல்லும்   நெடுஞ்சாலையில்  20 கிலோமீட்டர்பயணிக்க அந்தத் தருமங்குடிப் பேருந்து  நிறுத்தம் வரும். 

 தருமங்குடிப் பேருந்து நிறுத்தத்திற்கு வடக்கே பிரம்மாண்டமாய்க்காட்சி தருவது ஆராபுரி ஏரி. அந்த ஆராபுரி  ஏரியின் பாட்டைக்கரை மீது ஏறிப் பார்த்தால் தூரத்தில் தெரிவது சுரங்க நகரம்  நெய்வேலி. 

அங்குள்ள பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்குச்சொந்தமான அனல் மின் நிலையத்தின் புகைபோக்கி குழாய்கள், உயரம் உயரமாய், ரகம் ரகமாய் தெரியும்   தொழிற்சாலைக்கட்டிடங்கள், அங்கிருக்கும் பழுப்பு நிலக்கரி ச் சுரங்கத்தை  வெட்ட வெட்ட  கன்வேயர் பெல்ட் வழியே கக்கிய வெள்ளைக்களி மண், அக்குவிப்பு  பிரசவித்த   மண்மலைகள்.  இவை அனைத்தும் இங்கேயே என  விலாசம் காட்டும்   மின்சார விளக்குகளின் மொத்த  வெளிச்சம்.  நெய்வேலி  நகரமோ பார்ப்போருக்கு  இரவு நேரத்தில் சொர்க்க புரியாய்க்காட்சிதரும்.

 ஓய்வென்பதில்லாமல் சுரங்கத்தில் இயங்கும்   ராட்சத எஞ்சின்களின் உறுமல் ஒலி.   இடையிருக்கும் தூரம்  விழுங்கிய அப்பேரொலி வெகு சன்னமாய் நம் காதுகளில் ரீங்கரித்துக்கொண்டே அனுபவமாகும். இயற்கையோடு மனித முயற்சியின் இடையறாச்சண்டையை, சாகசத்தை அவை  கேட்போருக்குப்பிரகடனப்படுத்தும்.

சந்திரன் பிறந்த ஊர் இந்தத்  தருமங்குடி . சந்திரனுக்கு முதுகுன்றம் நகரில் டெலிபோன் ஆப்ரேடர் வேலை.

தருமங்குடிகிராமத்தில்  டெலிபோன் வசதி எல்லாம்  அன்று இருக்க வில்லை. ஒரு எக்ஸ்ட்ரா டிபார்ட்மெண்டல் போஸ்டாபீசு மாத்திரம்  உண்டு.  காலை பத்து மணிக்கு கிளை அஞ்சலக  வேலை ஆரம்பித்து  மதியம் ஒரு மணிக்குள் கட்டு எடுத்துவிடுவார்கள்.   கட்டு எடுப்பது   இது தபால்கள் க்ளியரன்ஸை குறிக்கும். இங்கும் டெலிபோன்  தந்தி இத்யாதி வசதிகள் கிடையாது. 

 எப்போதேனும் டெலிகிராம் மட்டுமே கம்மாபுரம்  சப் ஆபிசிலிருந்து எடுத்துக்கொண்டு மெசெஞ்சர்கள் வருவார்கள். டெலிவரி செய்துவிட்டுப்போவார்கள். அதுவும் டபுள் எக்ஸ் எனப்படும் இறப்பு செய்திக்கு மட்டும் ஆட்கள்  சைக்கிளில் சுறு சுறுப்பாக  வந்து  போவார்கள்.

தருமங்குடி கிராமம்  முதுகுன்றம் தாலுகாவைச்சேர்ந்தது. அதுதானே அருகிருக்கும் நகரம். 

 முதுகுன்றநகரத்து ஒன்றிய அரசின் ஓர் அலுவலகம்.தொலைபேசி நிலையம்தான் அது.அன்றைய நடப்புப்படிதொலைபேசிஎண் எதுவேண்டுமோ அதனை ‘ நம்பர் ப்ளீஸ்’ என்று லைனில் வரும் டெலிபோன் ஆப்ரேடர்களிடம்சொல்லிப்  பெற்றுக்கொண்டு பின்னர்தான் பேசவேண்டும். பேசிமுடித்தவுடன் ஆப்ரேடர்கள்தொலைபேசி இணைப்பைத்துண்டித்துவிடுவார்கள்.உள்ளூர்அழைப்புக்கள்வெளியூர்அழைப்புக்கள் எதுவாக இருந்தாலும் டெலிபோன்ஆப்ரேடர்கள் அப்படித்தான் கொடுப்பார்கள் பேசிமுடித்தபின் அவர்களே துண்டித்தும் விடுவார்கள்

சொந்தமாய்த் தொலைபெசி இல்லாதவர்கள் அஞ்சலகம் சென்று காத்திருந்து  பொதுமக்கள் தொலை பேசியில் பேசுவார்கள். கண்ணாடிக்கதவுடன் கூடிய ஒரு  மரப்பெட்டி  அறை .அதற்குள்ளே சென்று  டெலிபோன் பேசுவார்கள் . மூன்று நிமிடம் என்பது ஒரு யூனிட். அதன்படி . பேசி முடித்தபின்  அஞ்சலக எழுத்தரிடம் காசு கொடுத்துவிட்டுப் பின் ரசீதுபெற்றுக்கொள்வார்கள்   அவர்களுக்குள்ளாக சின்ன சின்னச் சண்டை வந்து வந்து போகும். அன்றைக்கு அப்படித்தான்

.  ஒரு மாத சம்பளத்தை வைத்துக்கொண்டு மூன்று நிமிட  அழைப்புக்கள் மூன்று  முதுகுன்றத்திலிருந்து புதுடில்லிக்குச்செய்யலாம். அவ்வளவே. .மூன்று அழைப்புக்கும் முன்னூறு ரூபாய் வந்து விடும்.வார்த்தைகளை எண்ணித்தான் பேசவாய்க்கும்.  அடுத்த முனையில் இருப்பவர்க்கு  பேசுவது சரியாகக்கேட்குமா என்றால் அதனையும்  உறுதியாய்ச் சொல்ல முடியாது. இடை இடையே ஆப்ரேடர்கள் வந்து செய்தி பரிவர்த்தனை செய்து உதவுவார்கள். நாய்சி கிராஸ்டாக் ஹம்மிங் ஒன் வே ஸ்பீச், ஸ்பீச் லோ இவை எல்லாம் அன்றைய தொலைபேசி சங்கடங்கள்.

 தொலைபேசி அலுவலகத்தில் செல்லமுத்து சார்   சந்திரனுக்கு அதிகாரியாய் இருந்தார். அவரின் கீழ் பணிபுரியும்   முப்பது பேரும்  பணிக்கு  வந்ததும் அவருக்கு வணக்கம் சொல்வார்கள்.  அலுவலகப்பணி என்பது அப்படித்தான் ஒவ்வொரு நாளும் தொடங்கும். பணியில் மூத்தோருக்கு வணக்கம் சொல்லி விட்டு அன்றைய வேலையை கையிலெடுப்பார்கள். ஆப்ரேடர்களுக்குத் தொண்டை வரளும் இரண்டு கைகளும் ஓய்ந்து போகும். ‘மில்க் அலவன்ஸ் ஆப்ரேடர்களுக்குத்தர வேண்டும்’  என்கிற கோரிக்கை எழும், தானே  விழும்.  ஒவ்வொரு நாளும் தே நீர் அருந்தப் பிரதான கடை வீதிக்குப்போய் வருவார்கள். உடன் திரும்புவார்கள். இருவர் அல்லது  மூவர்.தேநீர் அருந்தச்சென்று விட்டால் ஏனையோர் அவர்களின் பணியையும் சேர்த்துப் பார்த்துக்கொள்வார்கள்.

’சந்திரன் நாளைக்கு உங்க ஊருக்கு வர்ரேன்’

‘வாங்க சார் எனக்கு இண்ணைக்கு நைட் டியூட்டி  நாளைக்கு வீட்டுலதான் இருப்பேன்’ சந்திரன்  சூப்பர்வைசர் செல்லமுத்துக்குப் பதில் சொன்னான்.

’எதுக்கு வர்ரேன் தெரியுமா சந்திரன்’

‘அத கேக்க மறந்துபோனேன்’

‘எங்கிட்ட ஒரு பசுமாடு இருக்கு.அத ஒரு  கெடையில வுட்டிருந்தேன். சந்திரகாசுக்கோனார தெரியுமா’

‘தெரியும் சார். அவுரு தான் வழக்கமா தருமங்குடியில மாடு கெட கட்டுறவரு’ ’

சந்திரனின் ஊர் தருமங்குடி.அந்த ஊரில் ஒரு பழமையான சிவன் கோவில் அந்தத் தருமை நாதன் கோவிலுக்கு அருகில் சந்திரனின் வீடு.இறைவியின் திருப்பெயர் தருமாம்பிகை.மாபாரதக்கதையில் வரும் பஞ்ச பாண்டவர்களில் மூத்த தருமன் பூசித்த சிவலிங்கம் இங்கே உள்ளது. ஆக தருமனுக்கு ஒரு  தனிச்சந்நிதியை இந்தக்கோவிலில் காணலாம்

சந்திரனின் அப்பா தருமங்குடிகிராமத்துக்குப்புரோகிதர்.  ’பஞ்சாங்கக்கார அய்யிரு’ அப்படித்தான் ஊர் அறியும்.

சந்திரன் தினம் தினம் முதுகுன்றம் நகரத்துக்கு  பேருந்தில் பயணித்துச்சென்று வருகிறான்.

‘ எம் பசுமாடு கண்ணு போட்டுருக்குன்னு  கோனாரு சேதி சொல்லி அனுப்பினாரு. நானு போயி  அதுவுள  முதுகுன்றம் ஓட்டியாரணும். அதனாலதான் உங்க ஊரு தருமங்குடிக்கு வரேன்’

‘எப்ப கெளம்புறீங்க’

‘ நீங்க நைட்டு முடிச்சிட்டு  எந்த வண்டில  சந்திரன் ஊருக்கு போவீங்க’

‘சார் நான் திருவண்ணாமலேந்து  சிதம்பரம் போற வண்டில ஏறுவன். அந்த வண்டிய காலைல  ஏழரை மணிக்கு முதுகுன்றம்   பாலக்கரை ஸ்டாப்பிங்குல பாக்குலாம்’

‘சரியா மணி எழரைக்கு நானு அங்க வந்துடறன். நாம ரெண்டு பேரும் சேந்து  அந்த திருணாமல  வண்டியிலயே போயிடலாம்’ செல்லமுத்து சந்திரனிடம் சொல்லி முடித்தார்.

அவன் இரவுப்பணி முடித்தான்.  அலுவலகத்துக்குப் பின்புறமே ஆறு. அந்த  மணி முத்தாறு தாண்டினான்.ஆற்றில் சிலு சிலு என்று நீர் ஓடிக்கொண்டிருந்தது. பாதம் நனையலாம் அவ்வளவே. ஆற்றில்  அந்த நாளைப்போல்  தண்ணீர் எங்கே ஓடுகிறது. அங்கங்கே ஊர் மக்கள் தடுப்பு அணை கட்டியிருக்கிறார்கள்.அந்தக் கோமுகி அணை கட்டியிதிலிருந்து வெள்ளக் காலத்தில் மட்டும்தான் மணிமுத்தாற்றில் தண்ணீர் ஏகத்துக்குப் பார்க்க வைக்கிறது.

ஆற்றோரம் பன்றிகள் குடும்பம் குடும்பமாக மேய்ந்து கொண்டிருந்தன.சந்திரன் அவைகளை நோட்டம் விட்டுக்கொண்டே நடந்தான். ஆற்றங்கரைச்  செல்லியம்மன் கோவிலுக்குப்பின்னால்  ஒரு கீற்றுக்கொட்டகையில் பன்றி ஒன்றைக் கால்களைக்கட்டி தீயில் சுட்டுக்கொண்டிருந்தார்கள். பன்றியின் உடல் விரைத்து நீட்டிக்கிடந்தது. கூறு போடும் சின்ன பெரிய  கத்திகள், நிணம் பரப்ப பச்சை இலைகள், குருதிபிடித்துவைக்கக் குவளைகள் என ச்சுற்றிலும் பரப்பிக்கொண்டு கிடந்தன. மஞ்சள்பொடியை நீரில் கரைத்து பன்றியின் உடல் முழுவதும் பூசி முடித்திருந்தார்கள்.பன்றியின் விரைத்த உடல் கூறுபோடத்தயாரானது.சந்திரன் அந்த பன்றியைப்பார்த்துக்கொண்டே நடந்தான்.கீழே  நைஸ் ஆற்று மணல். கால்களை அழுத்தி அழுத்தி வைத்து நடந்தான்.காலை வேளை என்பதால் மணல் ஜில்லென்று இருந்தது.செல்லியம்மன் கோவில் சுவரில் வெள்ளை அடித்திருந்தார்கள்.அது கதிரவன் ஒளியில் பளிச்சென்று தெரிந்தது’.கோவில் பகுதி அசுத்தம் செய்யாதீர்கள்’ என்று கொட்டை எழுத்துக்களில் எழுதியிருந்தார்கள்

 சந்திரன் .கையில் பிளாஸ்டிக் கூடை வைத்திருந்தான்.அவன் அம்மா தரும் சாப்பாடு கொணரும்  அப்பாத்திரங்கள் ஏதோ ஒலி எழுப்பிக்கொண்டே வந்தன.  ஆற்றின்  கீழைக்கரையில் லாரி   புரோக்கர் ஷெட் வைத்திருப்பவர்கள்  கீத்துக் கொட்டகை போட்டு அலுவலகம் வைத்திருந்தார்கள்.

‘என்ன கெளம்பியாச்சா” லாரி ஷெட்டுக்காரர் சந்திரனிடம் வினா வைத்தார்.தொலைபேசி நிலயத்தில் வேலை செய்பவர்களை ஊரார்  நன்கு அறிந்துவைத்திருந்தனர்.  அவர்களுக்கு அடுத்த ஊரோடு தொடர்புகொள்ளத் தொலைபேசி நிலயமே ஒரே ஒரு வசதி என்றிருந்த காலம்.

தமிழ் நாடு எனும் விலாசமுடைய லாரி ஷெட்டின் ஒனர் ரெங்கன்’ என்ன சார் கெளம்பியாச்சா’ சந்திரனைக்கேட்டார். சந்திரனுக்கும் அவர் நண்பர்தான்.

‘’பஸ் புடிச்சி ஊருக்கு போவுணும்  திரும்பவும் ஒடியாரணும்’ அவன்  அவருக்குப்பதில் சொன்னான். இது என்ன ஒரு கேள்வியோ  தான் சொல்வது என்ன பதிலோ  அவன் மனதிற்குள் சொல்லிக்கொண்டான்

சாலைக்குச்செல்லும் சிறிய சந்தில் வரிசையாக நாய்கள் படுத்துக்கிடந்தன திட்டுத் திட்டாய் மணல் கொட்டிக்கிடந்தது..அங்கு நாய்கள்  சில அவனை அறிந்து வைத்திருந்தன. ஓசையே எழுப்பாமல் அவை கண்களைத்திறந்து ஒரு முறை பார்த்துக்கொண்டன.’ இவன் எப்பவும் வர ஆளு’ அவை சொல்லிக்கொண்டனவோ என்னவோ  தம்  கண்களை  மீண்டும்  இறுக்கி மூடிக்கொண்டன.

முதுகுன்றத்திலிருந்து கடலூர் செல்லும் சாலையில் நடந்துகொண்டிருந்தான்.பாலக்கரை சமீபம் இதுதான் பேருந்து நிற்குமிடம்.மணி ஏழரைக்கு அந்த திருவண்ணாமலைப் பேருந்து அங்கு வந்துவிடும்

.செல்லமுத்து சூப்பர்வைசர் எங்கே என்று தேடினான்.அவரும் தருமங்குடிக்கு இன்று அவனோடு வருவதாக நேற்றே சொல்லியுமிருந்தார்.

‘ சந்திரன் நான்  தே இங்க நிக்குறன்’ செல்லமுத்து சார்தான் அவனை அழைத்துக்கொண்டிருந்தார்.

‘வணக்கம் சார்’

‘குட் மார்னிங்’ என்றார் செல்லமுத்து.

‘மணி ஆயிடுச்சி இன்னும் வண்டி வருல’

‘ செத்த மின்ன பின்ன ஆவுலாமில்ல’

‘இல்ல சாரு கொஞ்சம் மிந்தி வருவான் ஆனா லேட்டா மட்டும் வரமாட்டான்’

அவன் பதில் சொன்னான்.

‘ கையில கொடை’

சின்னக்குடை. அழகாய் அடக்கமாய் இருந்தது. சந்திரனுக்கு த்தன் தந்தை தாழங்கொடை எடுத்துக்கொண்டு மழையில் போவது நினைவுக்கு வந்தது.

‘ ஆமாம் சந்திரன் மழையோ வெய்யிலோ கையில கொடை இருக்கணும்’ சந்திரனுக்கு பதில் சொன்னார் செல்லமுத்து.

‘ வண்டி வரான்’

பாலக்கரையில் திருவண்ணாமலையிலிருந்து  சிதம்பரம் செல்லும் அந்த வண்டி வந்து நின்றது.

‘ எங்க போவுணும்’ கண்டக்டரின் ஓங்கிய குரல்.

‘தருமங்குடி’

‘ஏறுங்க’ கண்டக்டர் அனுமதி அளித்தார்.அவர்கள் இருவரும் பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டார்கள்.இருவர் அமரும் இருக்கை.

‘ கொஞ்சம் மின்னாடி போயிடுவோம். தூக்கி தூக்கி போடும்’

‘’ அந்த சேதி உங்களுக்குத்தான் தெரியும்’ சொன்னார் செல்லமுத்து. டிரைவர் அருகாமையில் காலியாய் இருக்கும் ஒரு சீட்டுக்கு மாறி உட்கார்ந்தார்கள். எங்கனா ஒரு இடம் பாத்து உக்காருங்க’ அதட்டினார் கண்டக்டர்.

‘ நாந்தான் டிக்கட் வாங்கணும்’

‘ இல்ல சார் நான் வாங்குறன்’

‘ நானு சூப்பர்வைசர்’ என்றார் சந்திரனிடம் செல்லமுத்து.

பெட்டிப்பாம்பாக  அவன் அடங்கிப்போனான் வண்டி லொட புட என்று சப்தமிட்டுக்கொண்டு சென்று கொண்டிருந்தது.சாலை சரியாகச் செப்பனிடப்படாமல் குண்டும் குழியுமாக இருந்தது. சாலை நெடுகிலும் புளிய மரங்கள் அடர்ந்து இருந்தன.நம்மை ஆண்ட வெள்ளைக்காரன் வைத்துவிட்டச்சென்ற மரங்கள் அவை.புளியமரங்களை வளர்த்துவிட்டு விட்டால் போதும்.  அவ்வளவே அவை பலன் கொடுக்க ஆரம்பித்துவிடும்.மரத்திற்குத்தண்ணீர் பாய்ச்சுவது பராமரிப்பது எதுவும் தேவையேயில்லை.அவை அவையே அவைகளைப்பார்த்துக்கொள்ளும்

வழி நெடுக சிறு சிறு கிராமங்கள்.அவைகளை நோட்டம் விட்டுக்கொண்டே வந்தார் செல்லமுத்து.நெல் வயல்களும் கரும்பு வயல்களும் கண்களுக்கு நிறைவாய்க்காட்சி அளித்தன.இடை இடையே வாழை தென்னை மரங்கள் ஆங்காங்கே தென்பட்டன. பூதாமூர் பொன்னேரி கார்குடல் ஆதனூர்  குமாரமங்கலம் என ஊர்களைப்படித்துக்கொண்டே வந்தார்.

கரம் சிரம் புறம் நீட்டாதீர்கள் பூவையர் படியில் பயணம் நொடியில் மரணம்  பேருந்தில்   எழுதியிருந்த இவைகளைப்படித்த செல்லமுத்து ’கவிஞருங்க சாஸ்தியாகிட்டாங்க சந்திரன்’

‘ஆமாம் சார்’

‘ நரிக்குறமங்கலம்’ ஓங்கிக் கத்தினார் கண்டக்டர்.

இரு விவசாயிகள் நரிக்குறமங்கலத்தில் இறங்கினர்.

‘கொறவங்கள காணும்’

‘ ஸ்டாப்பிங் பேரு நரிக்குறமங்கலம். இங்க ஒரு ஊரு அந்த பேருலதான் இருந்திச்சி, அண்ணைக்கு இருந்த முதல்வர் .காமராஜர்  ஏற்பாடு செஞ்சாரு.  அந்த ஊர்லக்கொறவங்க  இப்ப யாருமில்ல. அரசாங்கம் கட்டிக்கொடுத்த வீட்ட வேண்டாம்னு சொல்லிட்டு இலவசமா கொடுத்த மாட்டை  மட்டும்  கையில புடிச்சிகிட்டு ஊர காலி பண்ணிட்டே போயிட்டாங்க. அவுங்களாலே இருக்க முடியில’

‘ரெண்டு பேரு எறங்கினாங்களே’

‘ சார் அவுங்க  கீணனூர் ஆட்கள். கீணனூரு கிராமத்துக்குப் போகக்கூட இதுதான் ஸ்டாப்பிங்’

‘ கலைஞர் கருணாநிதி அவுரு ஆட்சியில பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுக்குன்னு ஒரு ஏற்பாடு செஞ்சாரு. கட்டிடம் கட்டிக்கொடுத்து  இலவசமா உணவு கொடுக்கவும் ஏற்பாடு செஞ்சாரு. அந்தக் கதையும் அப்பிடித்தான் ஆச்சி.‘எங்கள வுட்டுடுங்க சாமின்னு’ பிச்சைக்காரர்கள்  கெளம்பி போயிட்டாங்க.  சட்டுன்னு எதையும் மாத்திக்க முடியில.  இது உளுந்தூர்பேட்டயில நா  கண்ணால பாத்த கதை’

கம்மாபுரம் வந்தது.

‘இதுதான் நான் படிச்ச ஹைஸ்கூல்’ அவருக்குக்காட்டினான்.

‘ உங்க ஊரு எவ்வளவு தொல இருக்கும்’

‘ நாலு மைலு வரும்’

  ஸ்கூலுக்கு எப்பிடி வர்ரது’

‘ நடந்து தான்’ சந்திரன் பதில் சொன்னான்.

‘அது ஒரு காலம்.இப்ப அது எல்லாம் சாத்தியமில்ல.’

‘ இப்ப எங்க ஊருலயே பிளஸ் டூ வரைக்கும் இருக்கு’

‘ நானு கேள்விபட்டிருக்கேன். வெல்ஃபேர் ஸ்கூல் தானே அது’

‘ ஆமாம் சார்.’

  தருமங்குடி காலனி ஜனங்க மெஜாரிட்டி இருக்குற ஊரு. அதுவும் நானு கேள்வி பட்டிருக்கேன்’

செல்லமுத்து சொல்லிக்கொண்டார்.

‘தோ தெரியுது பாருங்க நெய்வேலி கரண்டு தயார்  பண்ணுற ஆலைங்க.  நிலக்கரி எடுக்க எடுக்க  தோண்டுன   சொரங்கத்து மண்ண மலயாட்டம் கொட்டி வச்சியிருக்காங்க’

‘ நானு இந்தப்பக்கம் இப்பதான் வர்ரேன்’

அஜீஸ் நகர் செட்டில்மெண்ட் சிறுவரப்பூர் கத்தாழை சாத்தப்பாடி ஆதனூர் என ஊர்கள் வந்தன.

‘ அஜீஸ் நகருக்கு இப்படியும் போவுலாமா. அந்த காலத்துல வெள்ளக்காரங்க இந்த  ஜனங்கள எல்லாம் கொண்டாந்து இந்த மாதிரிக்கு அங்க அங்க  எடம் கொடுத்து  தங்க வச்சி  கைத்தொழிலு எதாவது  பழக்கி க்கொடுத்தாங்க. அவுங்கள குற்றப்பிரிவு எனமா அண்ணிக்கு சமூகம் பாத்துச்சி. அது எல்லாம் ஒரு காலம்’

சந்திரனுக்கு இவை புதிய செய்திகளுமல்ல. அவன் கம்மாபுரத்தில் பயின்றபோது அவனுக்கு அஜீஸ் நகரில் இருந்து கம்மாபுரம் பள்ளிக்கு வரும் வகுப்புத்தோழர்கள் இருந்தார்கள்.

‘கூளாத்தூர் போற வழி இது தானே’

‘ஆமாம் சார் கூடலையாற்றூர் போற வழி இதுதான்.சிறுவரப்பூர் மொதல்லவரும்.அப்பிடியே போனா அந்தக் கூடலையாற்றூர் போகலாம்.அங்க மணிமுத்தாறும் வெள்ளாறும் கூடுற இடம்.அதான் கூடலையாற்றூர்னு சொல்றது. நானு நெறய தடவை மாசிமகத்துக்கு போயிருக்கேன்’

பேருந்து இங்கெல்லாம் நிற்காமல்  சென்றுகொண்டே இருந்தது. கண்டக்டர் ட்ரிப் ஷீட்டை வைத்துக்கொண்டுஏதோ கணக்கு பார்த்துக்கொண்டே இருந்தார்.சாத்தப்பாடி விளக்கப்பாடி கத்தாழை ஆதனூர் எனத்தொடர்ந்து ஊர்கள் வந்தன.

‘ ஆதனூர் னு பேர்ல எத்தினியோ ஊருங்க இருக்கு’

செல்லமுத்து சொல்லிக்கொண்டார்.தருங்குடி பள்ளிக்கூடக் கட்டிடம் தெரிந்தது.கண்டக்டர் விசிலடித்தார்.‘ தர்மங்குடி எறங்கே’ வேகமாக க்கூச்சலிட்டார்.  சந்திரனும் செல்லமுத்து சாரும் இறங்கிக்கொண்டார்கள்..

தருமங்குடி செல்லும் கிராவல் சாலை நீட்டாகத்தெரிந்தது.ஆடு மேய்ப்பவர்களும் மாடு மேய்ப்பவர்களும் அவைகளை ஓட்டிக்கொண்டு சாலைக்கு வடக்கே இருக்கும் ஆராபுரி   ஏரிக்குச்சென்றுகொண்டிருந்தார்கள்.ஆராபுரி என்பது அருகேஇருக்கும் வளையமாதேவி என்னும் பெரிய கிராமத்தின் பாசன ஏரி.முதுகுன்றத்து மணிமுத்தாறுதான் இந்த ப்பக்கத்து ஏரிகளை எல்லாம் நிரப்பி செழிக்கவைக்கிறது.

‘சாமி ஆத்துல தண்ணி எப்பிடி’ தருமங்குடி  மாடசாமி தான் சந்திரனைக்கேட்டார்.தருமங்குடி வாசிகள் ஒருவர் மாற்றி ஒருவர் இப்படி ஆற்றில் தண்ணி எப்பிடி’ கேட்டுக்கொண்டேதான் இருப்பார்கள்.எல்லோரும் இங்கு விவசாயிகள்.

‘ குதிகால் நனையும்’ சந்திரன் பதில் சொன்னான்.

‘சந்திரகாசு கோனார் கிடைக்கு எப்பிடி போகணும்னு’ கேட்டு சொல்லுங்க சந்திரன்’

சந்திரன்  மாடசாமியைக் கேட்டான்.

‘ நம்ப ஊருக்கு கெழக்கெ சின்ன  நெற்குணத்து வெளியிலதான் கோனாரு கெடை கட்டியிருக்காரு. நேத்திக்கி அவர பாத்தேனே’

மாடசாமி  சந்திரனுக்குப்பதில் சொன்னார்.

‘ ஏன் என்ன சேதி’

‘சாரு எங்க ஆபிசுல எனக்கு மேல ஆபிசரு. அவுரு பசு மாடு கண்ணு போட்டு இருக்குன்னு சேதி’

‘ வணக்கம் சாரு.  இந்த சாமி வீட்டுக்கு பின்னால போயி அப்பிடியே காலனியும் தாண்டி போனீங்கன்னா ரெக்கணத்து வெளி.அந்த ரெக்கணம் ஊருக்குப்போகவேணாம். மின்னாடியே கெட கட்டியிருக்குறாரு கோனாரு’

மாடசாமி  சொல்லி முடித்தார்.

‘ நம்ப  ஊரு ‘அய்யிரு மொவன் கொஞ்சம் பாத்துகுகுங்க’ அவரே செல்லமுத்து சாரிடம் சொல்லி நிறுத்தினார்,

’ நானே கூட வருலாம் ஆனா  எனக்கு வேற ஒரு சோலி. சேத்தியாதோப்பு சந்தையில. ஒரு பஞ்சாயத்து இருக்குது.திருட்டு ஆட்டை ஒரு வெயாபாரி வித்துட்டு போயிட்டான். அத நம்ப ஊரு ஆசாமிதான் வாங்கியாந்துது வழியிலயே  மாட்டிகிச்சி. ஆட்டுக்கு சொந்தக்காரன் புடிச்சிகிட்டான்.நட போலிசு சேஷனுக்குன்னு ரப்ச்சரு   சண்டை. நம்ப ஊரு ஆளு புடிச்ச ஆட்ட வுட்டுபுட்டு  துண்டக்காணும் துணியக்கானும்னு ஊருக்கு வந்துப்டான்  திருட்டு ஆடு வித்த  சந்த வெயாபாரிய எனக்கு தெரியும் . போயி இதுக்கு  இப்ப  என்னா செய்யிலாம்னு கேக்குணும்’

பேருந்து ஒன்று முதுகுன்றத்திலிருந்து வந்து தருமங்குடியில் நின்றது. மாடசாமி வேக வேகமாக ஓடினார்.’ ஓல்டேன்  ஒல்டேன் ஓல்டேன்’ குரலை உயர்த்திக்கொண்டே பேருந்து நோக்கிச்சென்றார்.

‘ நாம நம்ப ஜோலிய பாக்குலாம்’

சந்திரன் சூபர்வைசர் செல்லமுத்துவோடு நடந்து கொண்டே இருந்தான்.

‘தருமங்குடி சுடலை இது’

‘ஊரு சொடலை’

சந்திரன் சற்றுக்குழம்பினான்.

‘’அதான் எங்க சனத்தை இங்க வைக்கமாட்டாங்க’

‘ஆமாம் சார்’ சந்திரன் பதில் சொன்னான். சந்திரனுக்கு அப்போதுதான் செல்லமுத்து சார் சமுதாயத்தின் எந்தப்பகுதியிலிருந்து  வந்திருக்கிறார் என்பது  உறுதியானது..

‘ நான் யார்ன்னு உங்களுக்கு த்தெரியாதா சந்திரன்’

‘ இதுவரைக்கும் தெரியாது சார்.’

‘ யாரும் சொல்லுலயா’

‘அது பத்திபேசுனதே   இல்ல சார்’

‘எனக்கு நம்ப முடியல சந்திரன். இப்பிடிக்கூட  இருப்பாங்களா,  இருக்கறது  நல்லதுதான்’ சூபர்வைசர் செல்லமுத்து பதில் சொன்னார்.பட்டினத்தான் வாய்க்கால் சமீபித்தது. வாய்க்காலில் பாதி அளவுக்கு செம்மண் நிறத்தில் தண்ணீர் சென்றுகொண்டிருந்தது.

‘இது  மணிமுத்தாத்து தண்ணி இல்ல, அங்க பக்கத்துல ஓடுற மாரி ஓடை தண்ணீ ரத்தமாட்டம்’

‘ இது இவ்வளவு நாளும் எனக்கு த்தெரியாது சார்.’

பட்டினத்தான் வாய்க்கால் மதகு மீது ஒரு பெரியவர் பாடிக்கொண்டிருந்தார்.சந்திரன் அருகில் சென்று பார்த்தான்.விளக்கப்பாடி சிங்கு தான் பாடிக்கொண்டிருந்தார்.சந்திரன் சிங்கை நன்கு அறிவான். அவருக்கு க்கண்கள் இரண்டும்  பழுதானவை. கால்களும் வளைத்துக்கொண்டு விகாரமாக இருக்கும்.இந்தக்குறைகள் அவருக்குப்பிறவியிலேயே வாய்த்தவை.சிங்குக்கு வயது நாற்பது இருக்கலாம்.

‘ நல்லா இருக்கு குரலு. வள்ளலாரு ராமலிங்கரு பாட்டை பாடுறாரு’

‘காதாலேயே எல்லாபாட்டையும் கேட்டு கேட்டுத்தான் சிங்குக்கு மனப்பாடம். சித்தர்ங்க பாடலு திருமூலர் பாடலுங்க பலது அவருக்கு மனப்பாடம்’

‘யாரு அய்யிரு மொவன் சின்னவரா’  விளக்கப்பாடி சிங்குதான் கேட்டார்.

‘ஆமாம் சிங்கு. எப்பிடி இருக்கிங்க’

‘ நல்லா இருக்குறன். சொல்லிக்கிலாம். நீங்க பாக்குறீங்க.பொய்யிதான். எம்மானோபொய்யி.   இங்க எனக்கு  கண்ணும் தெரியில காலும் விளங்குல. அருப்பா பாடுறன் அதுதான் எனக்கு ரவ சோறு போடுது.  அந்த மகான் வார்த்தயில்லயா. எனக்கு  ராமலிங்கரு அய்யாதான் தொண’

‘ஒரு பாட்டு பாடுங்களேன் கேட்போம்’ என்றார் செல்லமுத்து.

‘யாரு புதுசா இருக்கு கொரலு’

‘முதுகுன்றத்துல எனக்கு ஆபிசரு. பேரு செல்லமுத்து’

‘ சாரு வணக்கமுங்க.  இந்த அய்யிரு தம்பி  எனக்கு ரொம்ப நாளு பழக்கம்’ சிங்கு செல்லமுத்துக்குச் சேதி சொன்னார்.

‘இங்க இவ்வளவு தூரம் என்ன சோலியோ’

‘எம் பசு கண்ணு போட்டு இருக்கு கெடயில வுட்டுருந்தேன் அத ஓட்டின் போவுணும் அதான்’

‘கோனாரு கெட கட்டியிருப்பாரு’ சிங்குக்கு தெரிந்துதான் இருந்தது.

‘ஒரு பாட்டு பாடுங்களேன் கேப்பம்’

‘எம்பாட்ட  எல்லாரும் கேக்குறது இல்ல. செலரு கேப்பாங்க  நானு செனிமா பாட்டுங்க பாடுறது இல்ல அவ்வளவுதான்’

‘ இருக்கட்டும் உங்களுக்கு எது வருமோ அத பாடுங்க’

சிங்கு யோசித்தார்.’ பாடுறேன்’ என்றார்.

‘கல்லார்க்கும் கற்றவர்க்கும்

களிப்பருளும்  களிப்பே

கணார்க்கும் கண்டவர்க்கும்

கண் அளிக்கும் கண்ணே

வல்லார்க்கும் மாட்டார்க்கும்

வரமளிக்கும்  வரமே

மதியார்க்கும் மதிப்பவர்க்கும்

மதி கொடுக்கும் மதியே

நல்லார்க்கும் பொல்லார்க்கும்

நடு நின்ற நடுவே

நரர்களுக்கும் சுரர்களுக்கும்

நலம் கொடுக்கும் நலமே

எல்லார்க்கும் பொதுவில் நடம்

இடுகின்ற  அரசே

என்னரசே யான் புகலும்

இசையும் அணிந்தருளே.’

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி

சிங்கு பாடி முடித்தார் .செல்லமுத்துவின் கண்கள் குளமாகியிருந்தன.தன் கண்களைத் துடைத்துக்கொண்டார்.தன் சட்டைப்பையிலிருந்து ஒரு ஐம்பது ரூபாய் நோட்டொன்றை எடுத்து ’அய்யா கிட்ட இத குடுங்க’ சொல்லி சந்திரனிடம் கொடுத்தார்.

சந்திரன் அதனை சிங்குவின் கைகளில் வைத்தான்.

‘ அந்த  வடலூர் ராமலிங்கருதான் எனக்கும்  சோறு போடுறாரு. இது என்னா சாமி’

‘ எங்க சாரு கொடுத்தாரு அம்பது ரூவா’

‘ நல்லா இருக்கணும் சாரு கொடுக்குற கையி’ சிங்கு சொல்லிக்கொண்டார்.

சந்திரனும் செல்லமுத்துவும் மேலகுளத்துக்கரை நடந்து குயவர் வீதி தாண்டி வெள்ளாழத்தெரு வழியாகச்சென்று கொண்டிருந்தனர்.

 தருமங்குடி நாவிதர் நாகலிங்கமும்  சலவையாளர் சிங்காரமும்   வேக வேகமாக ஏதோ பேசிக்கொண்டே எதிர் வந்தனர்.

‘ இங்க எங்குளுக்குள்ள ஒரு பஞ்சாயம்’ நாகலிங்கம் சொல்லிச் சிரித்தான்.

தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு ராஜகோபால் பிள்ளை தனது வீட்டு வாயிலில் நின்றுகொண்டிருந்தார்.  நெற்றியில் சிவப்பு நாமம் அழகாக இருந்தது. அவர்தான் தருமை நாதன் கோவிலில்  விழாச்சிறப்பு நாட்களில் தேவாரம் பாடுபவர். சந்திரனுக்கு ராஜகோபால் பிள்ளையை ரொம்பப்பிடிக்கும். அவர் பாடும்போது  சந்திரன் கவனமாகக்கேட்பான்.

‘சவுரியம்தானே’

’சவுரியங்க புள்ள’ சந்திரன் பதில் சொன்னான்

.தருமங்குடி சிவன் கோவிலில் தேவாரம் வழக்கமாகப்பாடும் இன்னொரு பெரியவர் பேரூர் பிள்ளை  அவரையும் தெரிந்துகொள்ளவேண்டாமா? அவருக்கும்  இதே தெருவில்தான் வீடு.   அவருக்குக் கட்டுக் குடுமியும் காதில் குண்டலமும் அழகாக இருக்கும் கையில் பள பள க்கும் வெங்கலத்தாளம் ஒன்று வைத்துக்கொண்டுதான் தேவாரம் பாடுவார். .சந்திரனுக்கு அவர் மீதும்  ஒரு தனி மரியாதை.. தேவார திருவாசகப்பதிகங்களை  நெஞ்சம் உருகி உருகிப்பாடக்கூடியவர் அந்தப் பேரூர் பிள்ளை. அவருக்குப் பெயர் இல்லாமலா. வைத்யநாதன் அவர் பெயர். பேரூரிலிருந்து வந்து இங்கு குடியேறி வாழ்பவர். தருமங்குடியில் பிறந்த பெண்ணைத்திருமணம் செய்துகொண்டார். என்றோ  தில்லை மூதூர்   தேவாரப்பாடசாலை மாணாக்கர். அவருக்கு ஆயிரம் பாடல்களுக்கு மேல் மனப்பாடம். நல்ல தமிழ் அறிவு .குரலும்  நல்ல வளமை. எந்தச்செயலுக்கும்  தேவையான நிதானம் அவருக்கு  இயல்பாகவே இருந்தது. ‘ சந்திரன் வீட்டில் நுழையும் போதே ‘ அம்மா வீட்டுக்கு விருந்து வருது’ என்று சொல்லிக்கொண்டே நுழைவார்’ சந்திரனுக்கு அது  எப்போதும் வியப்பாகவே இருந்தது.

வெல்ளாழத்தெரு முடிந்து அரசமரம் தெரிந்தது.பெரிய முதிய மரம் அது.அந்த மரத்திற்குக்கீழாகப் பிள்ளையார் சிலை ஒன்று.  அதனோடு இணையாக எட்டு போட்டுக்காட்டும்  ஒரு நாகர் சிலை .பருத்த   ஒரு வேப்பமரம் அரச மரத்தோடு பின்னிக்கொண்டு க்காட்சியானது.செல்லமுத்து எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே சந்திரனோடு வந்துகொண்டிருந்தார்.

தருமை நாதன் கோவில் தூரத்தில் தெரிந்தது.  கோவில் அருகே இரண்டு வீடுகள். சந்திரன் வீடு  ஒன்று அதனை ஒட்டினாற்போல் சாமி நாதக்குருக்களின் வீடு. இரண்டுமே நாட்டோடு போடப்பட்ட வீடுகள். இரண்டு வீட்டிற்கும்  வாயிலில்  பெரிய பெரிய திண்ணைகள் இருந்தன. திண்ணையின் முன் பக்கத்தில் சிவப்பும் வெள்ளையுமாய்  வண்ண வண்ணப் பட்டைகள் பளிச்சென்று தெரிந்தன.

‘அய்யிருங்க வீடுன்னா தெரு வாச சுவத்துல  இந்த செவப்பு வெள்ள  பட்டைங்க இருக்கும்’ செல்லமுத்து சொல்லியபடியே மெதுவாக நடந்துகொண்டிருந்தார்.

சாமி நாத குருக்கள் கையில் நைவேத்ய தூக்குடன் தன் வீட்டினின்று வெளியில் வந்தார். சந்திரனைப்பார்த்தவுடன், ‘ எப்பிடி இருக்கே’ சம்பிரதாயமாகக்கேட்டார். ‘ நல்லா இருக்கேன் மாமா’ சந்திரன் பதில் சொன்னான்.

‘ சார் யாருடா இவனே’

‘ சார் எங்க ஆபிசரு மாமா’

‘ நமஸ்காரம் சார்’  சாமி நாதக்குருக்கள் செல்லமுத்துவுக்குச் சொன்னார்.

‘ நமஸ்காரம் அய்யா ’ செல்லமுத்து குருக்களுக்கு ச்சொன்னார். சந்திரனுக்கு மிகவும் பெருமையாக இருந்தது.

‘வாங்களேன் சாமி தரிசனம் பண்ணிட்டு ப்போலாம்’

செல்லமுத்து சந்திரனைப்பார்த்தார் .

‘சார்  நீங்க இங்க எல்லாம்  வர்ரது அபூர்வம் அதுலயும்  தருமை நாதன்  கோவிலுக்குப்போறது ரொம்ப விசேஷம்’ சந்திரன் செல்லமுத்து சாருக்கு நேராகவே பதில் சொன்னான்.

‘ நா இப்ப கோவிலுக்கு வர முடியாது இன்னும் ஸ்நானம் பண்ணணும் இன்னும் அந்த முக்கியமான வேல ஒண்ணும் பாக்கி இருக்கு ’ சந்திரன் குருக்களிடம் மெதுவாக  சொல்லிக்கொண்டான்.

‘ அப்ப  நீங்க வாங்க சார். நா அழைச்சிண்டு போறன்’ குருக்கள் செல்லமுத்து சாரிடம்  சொன்னார்.

‘ நீங்க சாமி தரிசனம் முடிச்சிகிட்டு வீட்டுக்கு வந்துடுங்க. நா ரெடியாயிடுறேன்’’ சந்திரன் விரு விரு வென்று தன் வீட்டிற்குள் நுழைந்தான்.

சந்திரனின் அம்மா மட்டும் வீட்டின் அடுப்பங்கரையிலிருந்தாள். அவனது தந்தையைக்காணவில்லை.

‘அப்பா எங்கே’

‘தோட்டத்து ப்பக்கமாய்ப்போனார்’

‘ அம்மா என்னோட சூப்பர்வைசர் இண்ணைக்கு இங்க வந்துருக்கார். அவரோட பசு மாடு கண்ணு போட்டுருக்காம். நம்மூர் சந்திரக்காசு கோனார் கிடையில. அத முதுகுன்றம் தன் வீட்டுக்கு ஓட்டினுபோகணும்னு வந்துருக்கார்’

‘பரவாயில்லயே. நல்ல சேதி. இப்ப எங்க அவர்’

சந்திரனின் அம்மா சொல்லிகொண்டே அவனுக்கு மட்டும்  ஒரு காபியைக்கொண்டுவைத்தார்.

‘ வந்துருக்கிற சாருக்கு காபி கலக்கட்டா,   சக்கரை எப்பிடின்னு தெரியணும்’

] அவர பக்கத்தாத்து குருக்கள் மாமா  சாமி கோவிலுக்கு அழைச்சிண்டு போயிருக்கார். சாமி தரிசனம் முடிச்சிட்டு இப்ப வந்துடுவார்’

சந்திரன் காபியைக்குடித்து முடித்தான்.  உடன் அவசரமாகக் குளித்து முடித்தான். தயார் ஆனான்.

‘எங்க கெளம்பறடா இப்பத்தானே வந்தே அதுக்குள்ள குளிச்சிட்டு ரெடியாயிட்டே’

‘ நானும் சாரோடு கிடைக்குப்போறன்’

‘ரொம்ப சரி உங்க ரெண்டு பேருக்கும்  நான்  டிபன் ரெடிபண்றேன்’

சந்திரனின் அம்மா மீண்டும் அடுப்பங்கரைக்குள்ளாகத் தன்னை நுழைத்துக்கொண்டாள்’

கூடத்தில்ஃபேனுக்குக்கீழாக இரண்டு டிபன் இலைகளைப்போட்டுச்சந்திரன் தயார் செய்தான். இருவரும் அமர்வதற்கு ஓலைத்தடுக்குகள் எடுத்துப்போட்டான்.

செல்லமுத்துவை அழைத்துப்போன சாமிநாத குருக்கள்  தருமை நாதனுக்கும் தருமாம்பிகைக்கும் கல்பூர ஆரத்தி காட்டினார். செல்லமுத்து சாருக்குத் திருநீறு கொடுத்துவிட்டு

‘ இங்க  நேரா இருக்கு பாருங்கோ தருமர் சன்னிதி பஞ்ச பாண்டவாள்ளயே  தருமர் மூத்தவர்  இதோ  தருமரைப்பாருங்கோ, இந்த ஊர் பேர் அவராலே தான் தருமங்குடின்னு ஆகியிருக்கு.  ரொம்ப  ரொம்பவிசேஷம். அந்த தருமர் சிவனை சேவிச்ச எடம்.  தருமர் வில்வ  பத்திரம் எடுத்துதான் சிவனை பூஜை பண்ணினார். அதானல  அந்த  வில்வமரம்  இங்க ஸ்தல விருட்சமா இருக்கு’

‘அந்த வில்வ மரமா சாமி இது’

குருக்கள் கலகல என்று சிரித்தார். ’எனக்கு  பெரியவங்க சேதி  சொன்னாங்க. நா உங்களுக்கு சொல்றன்’.

‘சாமி பேரு’

‘தருமை நாதர் தருமாம்பிகை’

‘எனக்கு இண்ணைக்கு ஏதோ கொடுப்பினை  சாமிய எல்லாம் தரிசிக்க முடிஞ்சிது’

தனது சட்டைப்பையிலிருந்து ஒரு ஐம்பது ரூபாய் நோட்டொன்றை  எடுத்து அருகிருந்த  விபூதி மடல் மீது வைத்துக் குருக்களுக்கு கொடுத்தார் செல்லமுத்து.

‘ பெரியவங்க வாங்கிகணும்’

‘இது எல்லாம் ஜாஸ்தி சார்’ சொல்லிய சாமிநாத குருக்கள் அதனைக் கையில் எடுத்துக்கொண்டு ‘தருமை நாதா எல்லாம் உன் செயல்’ என்றார்.

‘அப்ப நா பொறப்படறேன்’

‘ ரொம்ப திருப்தி’

‘ நாந்தான்  பெரியவங்களுக்கு நன்றி சொல்லணும்’

செல்லமுத்து கோவிலை விட்டுப் புறப்பட்டார்.   நெற்றியில் திருநீறு பூசிக்கொண்ட  செல்லமுத்து கோவிலை விட்டு வெளியே வந்தார்.

சந்திரனின் தந்தை தன் வீட்டுத்திண்ணையில் அமர்ந்து பாம்பு பஞ்சாங்கத்தை ப்பார்த்துக்கொண்டிருந்தார். அருகில்  பெரியநோட்டு ஒன்றை வைத்துக்கொண்டு அதனையும் பஞ்சாங்கத்தையும் பார்த்து பார்த்து குறிப்பு ஒன்றைத்தயார் செய்துகொண்டிருந்தார். சந்திரன் வாசலுக்கு வந்தான். செல்லமுத்து சார் வருவதை எதிர்பார்த்துக்கொண்டிருந்தான்

‘தரிசனம் முடிஞ்சிதா சார்’

‘ ஆச்சி சந்திரன்’

அப்பாவை செல்லமுத்து சாருக்கு  சந்திரன் அறிமுகம் செய்துவைத்தான். சந்திரனின் அப்பா மிக மகிழ்ச்சியாகக்காணப்பட்டார்..

‘இந்த தர்ப கட்டு தூக்கிண்டு வீடு வீடா போய் அரிசிக்கும் வாழக்கச்சலுக்கும் நிக்குற வேல என்னோட போகணும்னு தெனம்  தெனம் தருமாம்பாள வேண்டிண்டு இருந்தேன். அம்பாள் எனக்கு  படி அளந்தா.. அதானலதான் நீங்க இண்ணைக்கி என் வீட்டுக்கு வந்திருக்கேள். என் புள்ள முதுகுன்றம் வேலக்கி போயிட்டு வரான்.  தருமை நாதன் கிருபை’

‘என்ன எதுவோ எழுதிட்டு இருந்தீங்களே’

‘ அது யார் யார் வீட்டுல எண்ணைக்கு திதி அதான் தெவசம் வருதுன்னு எழுதி வச்சிருக்கேன். ஒரு வாரம் முன்னால அவுங்க அவுங்களுக்கு நா சேதி சொல்வேன். ஆளு வீட்டுல இல்லன்னா  அவுங்க வீட்டு செவுத்துல எழுதிட்டு வந்துடுவன் அவுங்க பாத்துகுவாங்க.  தெவசத்துக்கு மொத நாளு ஒரு வேள அதையும் அவாளண்ட  சொல்லணும்’

சந்திரனின் அம்மா இப்போது வாசலுக்கு வந்தார்.

‘ சந்திரன்  நீ சார  கூட்டிண்டு உள்ள வா. கூடத்துல எல போட்டு இருக்கே. சாரு கை கால் அலம்பிகிறாளா’

‘ நீங்க சாப்புடுங்க எனக்கு நேரா சாப்பாடுதான். நா டிபன் சாப்பிடறது இல்லே. கொஞ்சம் மின்னாடியே சாப்டுட்டுவன்.’ சந்திரனின் அப்பா சொல்லிமுடித்தார்.

சந்திரனும் செல்லமுத்து சாரும் சந்திரன் வீட்டு க்கூடத்தில் அமர்ந்து டிபன் சாப்பிட்டனர். சந்திரனின் அம்மா இட்டளி செய்திருந்தார். காபி கொண்டு வந்து இருவருக்கும் வைத்தார். காபியின் மணம் கம்மென்று வீசியது.

‘முத்துராம் காபிதான் முதுகுன்றத்துல கடைத்தெருவுல இருக்குற கடையிலதான் வாங்குறது’

 ’ முதுகுன்றம் கடைத்தெரு குட்டி அய்யர் ஓட்டல் கடைக்கு எதிரே இருக்குற அந்த  நாட்டுக்கோட்டை செட்டியார் கடைதானே அது ’

‘ஆமாம்’ ஆமோதித்தான்.

‘சக்கர போடுல எப்பிடி வேணுமோ அப்பிடி போட்டுகுங்க’

சந்திரனின் அம்மா சொன்னாள். இருவரும் காபி சாப்பிட்டு முடித்தனர்.

‘ நா எதுக்கு வந்தன்னு உங்களுக்கு தெரிஞ்சியும் இருக்கலாம். எம் பசு கண்ணு போட்டுருக்கு’ அது நெற்குணம் வெளியில  இருக்குற சந்திரகாசு கோனாரு மாட்டு கிடையில. அங்கதான் இப்ப போறம்’ செல்லமுத்து சொல்லிக்கொண்டார்.

இதனைக்கேட்டுக்கொண்டே வந்த சந்திரனின் அப்பா, ’ கோவிலுக்கு வடக்கால இருக்குற திருக்குளம் வழிபோயி கோவிந்தராசுபிள்ளை எஞ்சின் கொட்டா தாண்டுங்க. பெறகு பத்து வயலு தாண்டுனும். பெரிய மண்மோடு வரும் . அதுல ரெண்டு பனை மரம் நிக்கும். அத தாண்டிதான் காலனி வரும். அப்பிடியே போனா  பெரிய ஆல மரம். அதுல கண்ணுபோடுற மாட்டு உறுப்புக்கொடிங்க வைக்கோல்ல சுத்தி கனமா கட்டி இருப்பாங்க. அந்த ஆலமரத்துக்கு கீழ ஒரு கன்னி வாய்கால், அது மேலயே நடந்து போனா அந்த  மாட்டு கெடக்கே போயிடலாம்’

‘ ரொம்ப நீட்டா சொல்லீட்டிங்க’

இருவரும் வாசலுக்கு வந்தனர்.   தருமை நாதன் கோவிலுக்கு வடக்குப்பக்கமாயிருக்கும் திருக்குளக்கரை மீது நடந்தனர்.

‘கொளத்துல அல்லி செவ்வல்லி’

‘ ஆமாம் சாரு’

பேசிக்கொண்டே கோவிந்தராசு பிள்ளை எஞ்சின் கொட்டகையைத் தாண்டினர்.  தொடர்ந்து வயல்கள் பச்சைப்பசேல் என்று இருந்தன. பெரிய வரப்பின் மீது நடந்த இருவரும் பனை மரம் நிற்கும் மண் மேட்டுக்கு வந்தார்கள்.

  இது ரெண்டுமே ஆண் பனை இதுல  பூ மட்டும் தானிருக்கும்  நொங்கு காயுவ வராது ’

செல்லமுத்து சந்திரனுக்கு ச்சொன்னார்.

‘ இந்த மரத்துப் பூவை பறிச்சி  சுட்டு கரியாக்கி பொடியாக்கி கார்த்திகைக்குப் பொட்டலம் கட்டுவம்  அத கவ கழி ஒண்ணு வெட்டி அதுல வைப்பம்.  அந்த பொட்டலத்துக்கு நெருப்பு வைச்சி. அந்த கவையை கயித்துல கட்டி ராத்திரியில  சுத்து சுத்துன்னு சுத்துவம் அப்பிடியே பூ பூ வா நெருப்பு பொறி வட்டமா அதிலேந்து  அழகு அழகா  கீழே விழும்’

‘எல்லா ஊர்லயும் செய்யுறது’

 மண் மேட்டின் மீது தருமங்குடி அஞ்சாபுலி  அமர்ந்து புல் அறுத்துக்கொண்டிருந்தான். சந்திரனுக்குத் தெரிந்தவந்தான் இந்த அஞ்சாபுலி.

‘ வாங்க சாமி வணக்கம்’

‘ என்னா அஞ்சாபுலி எப்பிடி இருக்கெ’

‘ நல்லா இருக்கன் உங்க புண்யத்துல. இங்க எல்லாம் சாமி வராதே. என்னா சேதி’

‘ சாரு எங்க ஆபிசரு . சாரு  பசுமாடு கண்ணு போட்டுருக்கு கெடயில. அத்த ஓட்டிகினு  போவுணும்’

‘ சந்திரகாசு கோனாரு கெடயிலதானே’

‘ ஆமாம் அஞ்சாபுலி’

‘ சாரு வணக்கம் சாரு. நானு அஞ்சாபுலி.  தருமங்குடி காலனிக்காரன். அய்யாவுக்கு பிரண்டு’

‘சொல்லுங்க அஞ்சாபுலி’

‘ நீங்கதான் சொல்லுணும் நாங்க கேட்டுகுணும்’

‘ நானு கூட காலனிக்காரன் அஞ்சாபுலி’

  சாரு அந்தக்கதை வேற. நீங்க படிச்சவரு. உத்யோகம் பாக்குறவரு. நானு  இன்னும் முண்டம்தானே’

‘ இல்ல அப்பிடி சொல்லக்கூடாது அஞ்சாபுலி.’

அஞ்சாபுலி சிரித்துக்கொண்டான்.

‘இன்னார் வவுத்துல நாம பொறக்குறம்கறது நமக்கு முன் கூட்டி தெரியுதா.  அது தெரிஞ்சா அப்புறம் சொல்றதுக்கு என்னா இருக்கு’ அஞ்சாபுலி கனமான விஷயத்தை அனாயசமாகப்பேசினான். செல்லமுத்து அஞ்சாபுலியைப் பார்த்து மகிழ்ச்சி பாவித்தார்.

‘ நானு வளையமாதேவிக்கு போறன். ஒரு சேதி.  உறவுல ஒரு பொண்ணு அமுத்துற சமாச்சாரம். நா வரன்’ அஞ்சாபுலி வணக்கம் சொல்லிவிட்டு ப்புறப்பட்டான்.’ வளையமாதேவி அண்டை கிராமம். நடந்தே சென்றுவிடலாம். அங்க நான் ஸ்கூல் படிச்சேன்’

‘ வழியில கம்மாபுரம்னு சொன்னிங்க’

‘ இல்ல எட்டாவது வரைக்கும் வளையமாதேவியில. படிச்சன்’

இருவரும்  தருமங்குடி காலனியைத்தாண்டி ஆலமரம் நிற்கும் இடம் நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள்.

‘ வந்துட்டம் ஆலமரம்’

‘ தோ தெரியுதே மாடுவ கும்பலா’

இருவரும் பேசிக்கொண்டார்கள். ஆலமரத்தின் கிளையொன்றில் நொள்ள மடையான்  அமர்ந்து அவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டது.

‘கொக்கு சுத்தமா வெள்ளயா இருக்கும்’

‘ இது கொஞ்சம் சாம்பல் நெறத்துல  இருக்குது’

‘ உங்க அப்பா சொன்னதுபோலே ஆலமரமத்து கிளைகள்ள வைக்கோல் பொட்டலங்கள கட்டிவிடப்பட்டு ஊஞ்சல் ஆடிட்டிருக்கு. அதுல பசுவோட உறுப்புக்கொடிவ வைச்சிருப்பாங்க’

‘மனுஷன் சந்திரமண்டலம் இல்ல செவ்வா மண்டலம் போனாலும் செலத மாத்தமுடியாது சார்’

‘ நம்பிக்கை அதுதான் மனுஷ வாழ்க்கையில சுவாரசியம். இந்த உறுப்புக்கொடிய நாயிவ தின்னுடக்கூடாது. அது முக்கியம். பசு நம்ம ரெண்டாவது தாய் மாதிரி. பசுவோட பாலு இல்லன்னா பூமில பாதி சனம் இல்ல முக்காலு சனமும் செத்துபோயிடுமே. அந்த பசுவோட உறுப்புக்கொடிமேல மனுஷாளுக்கு ஒரு மரியாதைன்னு சொல்லுணும்’ செல்லமுத்து சொல்லிக்கொண்டே போனார்.

‘வாங்க வாங்க உங்களத்தான் எதிர் பார்த்துகிட்டு இருக்கன்’

‘சவுகரியமா கோனாரே இண்ணைக்குதான் வர முடிஞ்சிது’

‘ உங்க பசுவோட  இன்னும் ரெண்டு மாடு கண்ணு போட்டுது அது அது அந்த எசமான்கிட்ட போய் சேந்துபோச்சி. இது தான் பாக்கி’

‘ ஆ மேயிதே  உங்க பசு  கீழண்ட வரப்புல. கிட்ட பக்கத்துலயே நிக்குது பாருங்க  அந்தக் கண்ணுக்குட்டி  கூடம்’ சந்திரக்காசு க்கோனார் சொல்லி முடித்தார். சந்திரன் அங்கு மேயும்மாடுகளை ப்பார்த்துக்கொண்டான். ஒவ்வொன்றும் ஒரு ரகமாய் இருந்தது.

‘ என்ன பாக்குறீங்க சாமி’

‘ இல்ல கோனாரே இதுவ  உங்க சொன்ன பேச்சி கேக்குமா. இல்ல மூலைக்கு ஒண்ணா போனா என்னா செய்வீங்க’

‘ என்னா சாமி இதுவ  எல்லா என்  கொழந்த புள்ளிவமாதிரி எனக்கு ஒரு தும்பமும் குடுக்காது  குடியானவன் வயல்லு ராவுல இதுவுள  எல்லாத்தையும் அசமடக்கி படுக்கவுட்டுறவன்.  ரா முச்சூடும் சாணி மூத்திரம் அதுவ வுடும் அப்பிடியே பவுனு ல்ல. அந்த கொல்லைக்கி.  ஒரமாவது ஊரியாவவுது இது கிட்ட நிக்குமா’ கோனார் விளக்கமாய்ச்சொன்னார்.

செல்லமுத்து தான் கொண்டுவந்த மஞ்சள் நிற பையிலிருந்து ஒரு கயறு ஒன்றினை எடுத்துக்கொண்டு வந்து கோனாரிடம் நீட்டினார்.

‘ இதுதான் வெபரம் உள்ள மனுஷாள்ங்கிறது.  புடிச்சிகிட்டு போற மாட்டுக்கு நா என் கவுறு குடுக்க மாட்டன். அது என் ரட்சுமியாசே’

கோனார் கயிறை செல்லமுத்துசாரிடமிருந்து பெற்றுக்கொண்டார். பசுமாட்டைக்கழுத்தில் கட்டி இழுத்துவந்தார். கூடவே கன்றும் துள்ளிக்குதித்துக்கொண்டு ஓட்டமாய் வந்தது. மற்ற எல்லா மாடுகளும் விடைபெறுகின்ற தாய்ப்பசுவையும் கன்றையும் ஒரு முறை பார்த்துவிட்டு  மேய்ச்சலை மீண்டும் தொடங்கின.

‘ மாடுன்னா லேசு இல்ல இண்ணைக்கி  வந்துருக்கு டிராக்டரு அது இது ஆனா  இந்த மாடுவதான் ஆயிரம் வருஷமா நம்மள காபந்து பண்ணின சீவனுவ’. சந்திரக்காசுக்கோனார் பெருமையோடு குறிப்பிட்டார்.

‘ ஆடும் மாடும் உங்க சொத்து இல்லயா’

’ சரியான வார்த்த சாரு’

செல்லமுத்து தன் சட்டைப்பையில் கை விட்டு  ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்து கோனாரிடம் கொடுத்து’ வச்சிகுங்க’

என்றார். ‘ பெரிய மனசு பெரிய மனசுதான். எல்லருக்கும் வாச்சிடாது சாரு.  கொடுக்குறதுக்குக்கும் ஒரு கொடுப்பன  ராசின்னு வேணும். எல்லாரும் கொடுத்துடமுடியாது’

மாட்டைப்பிடித்துக்கொண்டு செல்லமுத்து நடக்க ஆரம்பித்தார். கன்று தன் தாயைப்பார்த்துக்கொண்டே அதன் பின்னால் நடந்தது. சந்திரன் கோனாரிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டான்.

‘போயி வாங்க சாமி’ கோனார் சந்திரனுக்குச்சொன்னார். வந்தவழியே இருவரும் நடந்து சந்திரன் வீடு வந்து சேர்ந்தனர். மாடும் கன்றும் சந்திரன் வீட்டு வாயிலில் உள்ள தென்னை மரத்திற்குக்கீழாக நின்றுகொண்டு  சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்தன.

சந்திரனின் அம்மா வீட்டின் வாயிலில் உள்ள ஆளோடிக்கு  வந்தார்.

‘மாடு வந்தாச்சா’ சொல்லிய  சந்திரனின் அம்மா வீட்டின் உள்ளே சென்று குங்குமம் எடுத்துவந்தார். பசுவுக்கும் கன்றுக்கும் குங்குமம் வைத்து இரண்டையும் ஒரு சுற்று சுற்றி வந்தார். தரை மீது விழுந்து வணங்கி எழுவதுவாய் பாவனை செய்தார்.

‘இண்ணைக்கு வெள்ளிக்கிழமை அதான்’ செல்லமுத்து சொல்லிக்கொண்டார்.

‘அப்பா எங்கே’

‘ அவர் வெளியில ஏதோ காரியம்னு போனார்’

‘ பசுமாடு ஒங்களுக்கு தேவைப்படுமா’

‘சார் அத மேய்க்க  பாத்துக ஆளு வேணும்.  அதுகள கட்டறதுக்கு கொட்டாய் வேணும்.  அதுகளுக்கு வைக்கோல் போடணும். பால் கறக்கவும்  ஒரு ஆளு அது தெரிஞ்சமாதிரிக்கி வேணும்  இதுக்கு எல்லா  எங்க போறது’

சந்திரன் சிரித்துக்கொண்டான்.

’ அம்மா சொல்றதுல என்னா பெசகு’’  சந்திரனுக்குப்பதில் சொல்வதாய் சொல்லி நிறுத்தினார்.

‘அஞ்சாபுலின்னு ஒத்தரு பாத்தமே அவுரு இங்க வருவாரா’

‘சார் தெனம் எங்க வீட்டுக்கு வந்து வெத்திலை பாக்கு வாங்கிகிட்டுதான் போவான். எங்க அம்மாதான் குடுப்பாங்க’

‘’போவாருன்னு சொல்லுங்க சந்திரன்’ முதல்  குட்டு வாங்கினான்.

‘தப்புதான் சார் இனிமே அப்பிடி சொல்லமாட்டேன்’

‘ அவுரு வந்தா இந்த மாட்டை கண்ண பாத்துக சொல்லுங்க. நா முதுகுன்றத்துக்கு போயி ஆள அனுப்பறேன்.  ஒரு ஆளு மாட்ட பிடிச்சிகிட்டு வணும். கண்ணுகுட்டி எளசு நடக்காது. அத தட்டுக்கூடையில உக்காரவச்சி கட்டி சைக்கிள் காரியர்ல வச்சிகலாம். சைக்கிள தள்ளிகிட்டே போவுலாம்’

‘சார் நீங்க சொல்றது பழயகதை. இப்ப சின்ன லாரிவ எவ்வளவோ கெடக்குது. அதுல  ஒண்ண பிடிச்சி ஏத்திகினு போயிடலாம். இம்சை இல்ல’

சந்திரன் சொன்னான்.

 பாலக்கரை ‘தமிழ் நாடு லாரி செட்டுக்காரர்கிட்ட சொல்லுங்க. அவுரு கொண்டாந்து   சேத்துடுவாரு. மாட்டையும் கண்ணையும்’

சந்திரன் மீண்டும் சொன்னான்.

செல்லமுத்து கிளம்புவதற்குத்தயார் ஆனார். அந்த நேரம் பார்த்து சொல்லிவைத்தாற்போல் அஞ்சாபுலி தலையில் புல் கட்டோடு அங்கு வந்து சேர்ந்தான்.

‘சாரு கெளம்பிட்டாப்புலயா’

‘ஆமாம் அஞ்சாபுலி’ சந்திரன் பதில் சொன்னான். அஞ்சாபுலி செல்லமுத்து சாரைப்பார்த்தான். பசுவையும் கன்றையும் ஒரு முறை பார்த்துக்கொண்டான்.

‘இதுவ எப்பிடி முதுகுன்றம் போவுறது’ சொல்லிய அஞ்சாபுலி தான் கொண்டுவந்த புல் கட்டை பசுவுக்கு பரப்பி வைத்தான். பசு ஆசையோடு புல்லைத்தின்ன ஆரம்பித்தது.

‘அது அதுக்கு அதன் ஆகாரம்’ அஞ்சாபுலி சொல்லிக்கொண்டான்.

‘அஞ்சாபுலி நீ  பசுமாட்டை பாத்துக. ஆளு அனுப்பறன். இல்ல சின்னயானை வண்டி ஏற்பாடு பண்ணி அனுப்பறன்.’

செல்லமுத்து பசுமாட்டை ஒரு முறைத்தொட்டுப்பார்த்தார். கன்றையும் தொட்டுக்கொண்டார்.

‘பசுமாடு உனக்கு வேணுமா அஞ்சாபுலி’

‘’  வேனும்னாலும் நான் வாங்குறது எப்பிடி சாரு. கையில காசு வேணுமே.  இது இப்பக்கி என்னால ஆவுற கதை இல்ல சாரு’

  பசுமாடு  தேவைன்னு சொல்ற.  நீ ஓட்டிம்போ அஞ்சாபுலி. மாடு  கறக்கும்ல  அந்தப்பால வித்துக் காச  எனக்கு குடு. சந்திரன்கிட்ட கொடுத்தா சரித்தான். அவுரு என்னண்ட சேத்துடுவாரு’

‘எம்மாம்  ஆவுது.. நான் எவ்வளவு அனுப்பறதுன்னு தெரியுணும்ல’ பரிவோடு கேட்டான்.

‘உனக்கு த்தெரியாதா’

 கெடக்காரர் ‘சந்திரக்காசு கோனார கேப்பம் அவுரு  என்னா சொல்றாறோ  அவரு சொல்ற  படிக்கு நா மாசம் மாசம் பணம் அனுப்பி  கணக்கு நேர் பண்ணிடுவேன்’  சொல்லிய அஞ்சாபுலி மாட்டைத்தடவிக்கொடுத்தான்

‘யார் யாருக்கு என்னா பொசுப்போ அப்பிடி’ அஞ்சாபுலி சொல்லிக்கொண்டான்.

‘ நா வர்ரேன்’ சந்திரனின் அம்மாவிடம்  செல்லமுத்து  சொல்லிக்கொண்டார்.

‘ மாடு இனி  உன்னுது. நல்லா பாத்துக. நா கெளம்புறன்’

‘சின்ன அய்யா சேஞ்ச பெரிய ஒத்தாசை’ அஞ்சாபுலி சந்திரனைப்பார்த்துச்சொன்னான்.

சந்திரனின் அம்மா எல்லா நடப்புக்களையும் கவனித்துக்கொண்டார்.    எல்லாமே நிறைவாக இருந்தது. சந்திரன் செல்லமுத்து சாரோடு  தருமங்குடி பேருந்து நிறுத்தம்  நோக்கிப்புறப்பட்டான்.

‘ நான் சார பஸ் ஏத்திவிட்டுட்டு வந்துடறேன்’

‘ நானு வர்ரம்மா. அய்யா இல்லபோல. வந்தா சொல்லுங்க.  ரொம்ப திருப்தி ரொம்ப சந்தோஷம்’

‘ சந்திரனையும் பாத்துகுங்க’

செல்லமுத்து புன்னகை செய்தார்.  இருவரும் சற்று வேகமாகவே நடந்தனர்.  ஆசாரி தெரு வழியாய் நடந்து வன்னியர் வீதி வந்து பட்டினத்தான் வாய்க்கால் பாலம் தாண்டி  முதுகுன்றம்  சிதம்பரம் சாலையிலுள்ள  பேருந்து நிறுத்தம் அடைந்தனர்.

‘வந்த வேல நல்லபடியா முடிஞ்சுது  பேருந்து இங்க எப்பிடி உடனே வருமா’

   அரை மணிக்கு ஒண்ணு வரும்’

சந்திரன் சொன்னான்.

  எனக்கு ’ ஒண்ணும் அவசரமில்ல. நீங்களும் மதியம் சாப்பாட்டுக்கு போனா போதும் இல்லயா’

இருவரும் சாலை ஓரம் இருந்த சிமெண்ட் மதகில் அமர்ந்துகொண்டனர்.

‘ சந்திரன் நா காலனிக்காரன். இண்ணைக்கு ஊர்ல அதுவும்  தருமங்குடி அக்கிரகாரத்துல அய்யிரு வூட்டு கூடத்துல பாயிபோட்டு உட்கார்ந்து சாப்பிட்டு இருக்கன். இது  இண்ணைக்குக்கூட  என் சொந்த  ஊர்லயும் ஆவுற கதை இல்ல. அஞ்சாபுலி யாரு.  அவுரு உங்க வீட்டுக்குள்ளார வந்திருக்காரா. வரமுடியுமா, சாப்பாடு  அய்யிரு வீட்டு மாமிங்கதான் பரிமாறுவாங்களா’

சந்திரன் பேசாமல் கேட்டுக்கொண்டே நின்றான்.

‘ எனக்கு  தருமங்குடி ஊர்ல  எல்லாரும் வணக்கம் சொன்னாங்க. என் ஊர்ல இது இண்ணைக்கும் நடக்காது’

‘ தருமை நாதர் கோவிலுக்கு போனேன். குருக்களு தீவாராதனை காட்டி எனக்கு மரியாதை செஞ்சாரு.    இதே  தருமங்குடிக்காரன் அஞ்சாபுலிக்கு இப்படி நடக்குமா ?

‘ அக்கிரகாரத்துல ஒரு அய்யிரு வீட்டுத் திண்ணையில நா  உக்காந்ததே இன்னிக்குத்தான் ஊர் ஜனங்க யார் வீட்டுத்திண்ணையிலும் நா உட்கார்ந்து விடமுடியுமா?

 ’இது இப்பக்கி போதும்னு நினைக்கிறேன். நீங்க நாளைக்கு டியூட்டிக்கு வாங்க நமக்கு கிடைக்கிற நேரத்துல  இப்பிடி  பல சமாச்சரங்களைப் பேசுவம். உ ங்களுக்கும் இந்த மண்ணுல  என்னதான் சதி நடந்துதுன்னு தெரியணும். அது முக்கியம். நானே சொன்னா அது சரியாவும் இருக்கும்னு நெனக்கிறேன்’

சந்திரன் தலையை ஆட்டினான்.    சார் சொல்லும் விஷயங்கள் அவனுக்குப்புதியவை   இல்லை என்றாலும்    அவற்றின் விரிவும்  ஆழமும்   அவன் அறியாதவையே.

சேத்தியாத்தோப்பிலிருந்து முதுகுன்றம் செல்லும் பேருந்து விரைவாக  வந்தது. தருமங்குடி நிறுத்தத்தில் யாரோ ஒருவர் இறங்கினார் அவ்வளவே.

செல்லமுத்து அந்தப் பேருந்தில் ஏறி அமர்ந்துகொண்டார்.  வண்டி புறப்பட்டது.  ஒரு புதிய வெளிச்சம் ஒன்று கிட்டியதாய்  சந்திரனின்மனம் சொல்லிக்கொண்டது. சந்திரன்  சிவந்து கிடக்கும் மண் சாலையில், தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

------------------------------------

                                                              2.

அன்று மதிய சாப்பாடு முடித்த சந்திரன் படுத்து உடன் உறங்கிப்போனான். இரவுப்பணி முடித்த களைப்போடு வேலைகள் சில. முதுகுன்றத்திலிருந்து செல்லமுத்து சாரின் வருகை  ஒன்று கூடிக்கொண்டது.

சந்திரனின் அம்மா  வீட்டு வேலைகள் முடித்து ஓய்வு எடுத்துக்கொண்டாள். சந்திரனின் தந்தை வழக்கம் போல் வீட்டுத்திண்ணையில் அமர்ந்துகொண்டு தருமங்குடிக்காரர்கள் சிலரோடு பேசிக்கொண்டிருந்தார். நெய்வேலிக்காரன் எப்போது வருவான்? இது நிச்சயம் தருமங்குடிக்காரர்கள் பேச்சில் எப்படியாவது வந்துவிடும்.

 ஒன்றிய அரசின் நெய்வெலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தார் தருமங்குடியை இன்னும் இந்தப் பக்கத்துப் பத்து கிராமங்களை ஆர்ஜிதம் செய்ய இருப்பதாக ஓயாத பேச்சு  அங்கங்கே நடப்பதுண்டு. இங்கு பூமியில் பழுப்பு நிலக்கரி பாதாளத்தில் இருப்பதை  விவசாயி  ஜம்புலிங்க முதலியார் முதன் முதலில் கண்டு பிடித்து   எல்லோருக்கும் அறிவிப்பு செய்தார். நேருபிரான்  அன்று  பிரதமராக இருந்ததும் ரஷ்ய நாட்டார்  ஆளுகையின் உச்சத்தில் இருந்ததும் நெய்வேலி சுரங்கமும் மின்சார நிலயமும் தோன்ற ஆதாரமானவை.  நல்லவர்கள் நல்லவை செய்த காலம். முதல் சுரங்கம் இரண்டாம் சுரங்கம்  என்றாகி  வளர்ந்து வளர்ந்து மூன்றாவது சுரங்கத்திற்கு தருமங்குடி ப்பகுதியை கணக்குப்போட்டிருக்கிறார்கள்

 நெய்வேலிக்காரன்  தருங்குடியை க்காலி செய் என்று  புல் டோசரை  எடுத்துக்கொண்டு  வந்தால்  நமக்குக் கையில் காசு கொடுப்பானா அப்படி க்கொடுத்தால்  எவ்வளவு கொடுப்பான் எப்படிக்கொடுப்பான் யாரிடம் கொடுப்பான் வீட்டுக்கு ஒருவருக்கு சுரங்கத்தில் வேலை கொடுப்பானா, வேறு எங்கோ கண் காணாத ஒரு இடத்தில் இலவச  வீட்டு மனைதந்து வீடு காட்டிக்கொள் என ஏதும்  ரொக்கமாய்த்தருவானா இப்படி அடிக்கடி கூடி க்கூடி விவாதிப்பார்கள்.

தருமங்குடி சாமி நாத குருக்கள் நிச்சயம் விவாததில் கலக்காமல் இருக்கமாட்டார். ‘  தரும நாதர் கோவில இடிப்பானா மாட்டானா என்பார் அப்ப  நமக்கு வேற கோவிலு  புதுசா கட்டித்தருவானா’ கேள்வி வைப்பார்.

‘கல்லு வீடு மெத்த வீடு கூரை வீடு  மரம் மட்டை வயலு நஞ்ச புஞ்ச  எல்லாத்துக்கும் எப்பிடி  எப்பிடி வெல போடுவான்’ இப்படித்தொடங்கி ஆளுக்கொன்றாய் யோசனை சொல்வார்கள்.

‘சொடலய க்கூட நோண்டி எடுத்துடுவான்’ பேசிக்கொள்வார்கள். சிதம்பரம் முதுகுன்றம் சாலைய எல்லாம் தூக்கி புடுவாங்க ,பள்ளிக்கூட கட்டிடம் எல்லாமும் இடிச்சுடுவாங்க’ இப்படிப்போகும் பேச்சு.

சந்திரன் வீட்டுத்திண்ணை சற்றைக்கெல்லாம் காலியானது. சந்திரனின் அப்பா மட்டும் அமர்ந்து  கலியாண சாமான் ஜாபிதா எழுதிக்கொண்டிருந்தார். ஊரில் யாருக்கேனும் திருமணம் என்றால் அவர் தானே புரோகிதராக இருந்து அதனைச்செய்து வைப்பவர்.

சந்திரன் வாயில் திண்ணைக்கு வந்தான்.

‘ அப்பா எனக்கு ஒரு கேள்வி’

‘ சொல்லுடா நீ மட்டும் என்ன பாக்கி கேளு’

‘அஞ்சாபுலி  இன்னும் அந்த காலனிக்காரா எல்லோருக்கும் நெய்வேலிக்காரன் பதில் சொல்லணும் வேற வழிய  காமிக்கணும் தானே’

‘ பேஷா’

‘ அங்க யாருக்கும் வயல் எங்கப்பா இருக்கு. எல்லாருமே  தருமங்குடி வயல்ல கூலி வேல செய்யுற ஜனங்களாச்சே. அவாளுக்கு பொழைக்க வழி வேணுமே’

‘ ஆமாண்டா அவாளுக்குத்தான் சொரங்கத்துக்காரன் மொதல்ல வேல தரணும்’

‘ வீட்டுமனை கொடுத்தா  காலனிக்காரளுக்கும் ஊர் காராளுக்கும் எப்பிடி   கொடுப்பா’

‘சொரங்கத்துல வேல செய்யுற தொழிலாளிக்கு நெய்வேலி டவுன்சிப்ல எப்பிடி எப்பிடி வீடு குடுத்துருக்கு. அது மாதிரிதான்’

‘ஊருன்னு  ஒண்ணு காலனி இன்னொண்ணு.   தருமங்குடிலரெண்டு இருக்கு. தூர தூரமா பிரிஞ்சி பிரிஞ்சி  கெடக்கே. அது இனிமே இல்லே’

‘ எல்லாம் இனி ஒண்ணுதான்.’

‘காலனிக்கு ஒரு மாரியாத்தா சாமி ஊருக்கு வேற மாரியாத்தாசாமி. காலனில ஒரு பிள்ளையார் கோவில் ஊர்ல  வேற ஒரு புள்ளயார் கோவில் முடிஞ்சி போச்சி அந்த கதை எல்லாம்’

‘சொடலை இங்கயும் அங்கயும்  வேற வேறங்கறது’

 இது என்ன கேள்வி ‘எல்லாம் இனி ஒண்ணேதான்’

சந்திரன் சற்று நிம்மதி ஆனான்.செல்லமுத்து சாரோடு விவாதிப்பதற்கு ஏதோ விஷயம் அவனுக்குக் கிடைத்து விட்டது.

சந்திரனின் அப்பா அவ்வப்போது இங்கும் அங்கும் பார் த்துக்கொண்டார். கோணல் மனிதர்கள் அங்கு யாருமில்லை என்பதை உறுதிசெய்துகொண்டார்.

‘என்னப்பா  பாக்குற’

‘ எதுவும் தப்பா ஆயிடமா இருக்கணும். நா பேசறது’

‘ஒண்ணும் தப்பு இல்லயே’

‘தப்பு இல்ல. ஆனலும்  நான் காலம் தள்ளி ஆகணும்.’

சந்திரன் அப்பா என்ன சொல்லவருகிறார் என்பதனைத்தெரிந்துகொண்டான்.  கிராமத்து வாழ்க்கை என்பது அவ்வளவு சுலபமானதல்ல என்பதனை மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.

                                                                 3.

   இரவு உறங்கினான் நல்ல உறக்கம் என்று சொல்லமுடியாது. அலுவலகத்தில் இரவுப்பணி பார்த்துவிட்டுவந்தால் அன்று பகல் முழுவதும்  அவனுக்கு களைப்பாக இருக்கும்தான். அப்படித்தான் இருந்தது. செல்லமுத்து சார்  வீட்டுக்குவந்திருந்தார். அவரோடும் கொஞ்சம் இங்கும் அங்கும் அலைந்தான்.

 இன்று காலை ஆறு மணி டியூட்டி. முதுகுன்றம் அலுவலகத்தில் அவன் ஆறு மணிக்குள் இருக்க வேண்டும். விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்து விட்டான். சந்திரனின் அம்மாவோ  அவன் எழுவதற்கு முன்னதாகவே எழுந்துவிட்டாள். டிபன் அவனுக்கு ரெடியாகி   இருந்தது. காஸ் அடுப்பும் இல்லை மிக்சியும் கிரைண்டரும் ஏது. விறகு அடுப்பு. கல் உரலும்,  கல் இயந்திரமும்  கல் ஆட்டுக்கல் அம்மியும்தான்  குல தெய்வங்கள். மின்சார விளக்கும் மின் விசிறியும்  சந்திரன் வீட்டில் உண்டு. அவையும் சமீபமாய்தான் விஜயம் செய்தன. முன்பு எல்லாம்  சதுரமாய் இருக்கும் தகரக் கவசம்  போர்த்திக்கொண்ட ஒரு டேபிள் ஃபேனை துயிலத்தில் தலைகீழாகக்கட்டி தொங்கவிட்டிருந்தார்கள். அதுதான் வீட்டுக்கூடத்தில் காற்று வழங்கியது.

 சந்திரன்தான் சரியான மின் விசிறி ஒன்றை வாங்கிப்பொருத்தினான். கையில் பாட்டரி விளக்கோடு அங்கும் இங்கும் திரிவான். காலைக்கடன்கள் சட்டு புட்டென்று முடித்து முதுகுன்றம் கிளம்ப ரெடியானான்.

‘ மணி என்ன’ சந்திரனின் அப்பா கேட்டார்.

‘ நாலு இருவது’

’ நாலு நாப்பதுக்கு அந்த செஞ்சி வண்டி வந்துடுவான்’

‘ நான் கிளம்பிட்டேன்’

‘ஒரே ஒரு சேதி உன் கிட்ட’

‘என்னப்பா’

‘ நேற்று வந்தாரே அவர் யாரு என்ன இன்னாறுன்னு நீ சொல்லலியே’

‘எனக்கு சூப்பர்வைசர். பேர் செல்லமுத்து. அவுருக்கு ஊர் மதுரவல்லின்னார்’

‘ எனக்கு வேற ஒண்ணும் தெரியாது’

‘ நீ சமத்தா இருந்தாசரி. நாம  இந்த ஊருலதான் குடி இருக்கோம். நாம என்ன செய்றோம்  ஏது செய்றோம் யாரோட போறம் வர்ரம்னு இந்த ஊரு கவனிச்சிபார்த்துண்டே இருக்கும்’

‘அவனுக்கு நேரமாச்சு’ அம்மா குறுக்கிட்டாள்.

‘ நா வர்ரேன்’ அவன் செறுப்பை மாட்டிக்கொண்டு டிபன் காரியர் பையோடு தருமங்குடி பேருந்து நிறுத்தம் நோக்கி வேக வேகமாய் நடந்தான்.

சந்திரனின் அப்பா வீட்டுத்திண்ணையில் அமர்ந்துகொண்டார்.

‘ பையன்கிட்ட எது எது கேக்கணும்னு இருக்கு’

‘ நீ என்ன எனக்கு வாத்யார் ஆயிட்டயா’

‘இனி  அவன் கிட்ட இப்பிடி கேக்குறத நிறுத்திகோங்க. அவன் பாக்குற உத்யோகம் வேற. அந்த  ஊர் வேற. உங்க  கண்ணாடிய நீங்க மாட்டிண்டு உங்க ஒலகத்தோட  மட்டும் இருங்கோ’

 ’இத நீ எனக்கு சொல்லணுமா. நாந்தான்  இந்த தர்ப கட்ட உத்யோகம் என்னோட போயிடனும்னு  தருமாம்பாள் அம்மன அன்னாடம்  சுத்தி சுத்தி வந்தவன்.  நாம  இருக்குற ஊர்ல குடித்தனம் நடத்தி கொறகாலம் ஓட்டணும். அது லேசான சமாச்சாரம் இல்லே.  பசுமாட்டை அஞ்சாபுலிய ஓட்டினு போன்னு  அந்த சார் சொன்னதும்,  மாட்டுக்கு பணம்   அது கறக்குற பால வித்து மாசா மாசம் கொஞ்சம் கொஞ்சமா சந்திரன் மூலமா அனுப்புங்க போதும்னு, அந்த சார் சொன்னதும் அவுரு யாரு எப்பிடின்னு  இந்த ஊர் ஜனங்களுக்கு   சேதி போயிருக்கும்.  அது  இல்லன்னாலும் ஆயிரம் வழி இருக்கு. ஒரு சமாச்சாரம் வெளில தெரிஞ்சத்துக்கு அப்புறம் அது  நமக்கு  இடஞ்சலாயிடும்  இல்லையா.   அவர்  நம்மாத்து கூடத்துல ஒக்காந்து சாப்பிட்டது வெளில இதராளுக்குத் தெரிஞ்சிதுன்னா என்னா ஆகும். அவர் நம்ம ஆத்து திண்ணலே ஒக்காந்து இருந்தத்துக்கும் சாமிநாத குருக்கள்  சிவன்கோவில்ல கல்பூரம் காமிச்சதுக்கும் என்ன என்ன பேச்சு வருமோ. எம் பொழப்பு போயிடுமே’

‘எம் பையனுக்கு இந்தத்தொழிலே வேண்டாம்னு சொல்வீளே இந்தக்கஷ்டம் என்னோட போயிடணும்பேளே. அது நெஜந்தானே’

‘அதுக்கும் இதுக்கும் என்ன.  என் தலவிதி வேற. அவனதாவது நல்லா இருக்கட்டுமே’

‘’காலம் மாறிண்டு இருக்கு. ரொம்ப பயப்படறதும் தப்பு. கரண்டுகாரங்க நம்ம ஆத்துக்குள்ள வந்து  மெயின் பாக்ஸ்ல பழுது  எல்லாம் பாக்கலயா, கோவில்   ஆபிசர்ங்க கோவிலுக்குள்ளார  வந்து அந்த  சாமிநாத குருக்கள  சாமி சன்னிதில வச்சி  கேள்வி மேல கேள்வி கேக்கலயா அவாள்ளாம் யாருன்னு எவுருன்னு தருமங்குடிக்காரா யாராவது விஜாரிச்சாளா இல்ல கேள்விதான் கேட்டாளா. அப்பிடியே இருக்குமா எல்லாம்.  தப்பு எல்லாம்  உதுந்துதானே போகணும். போகும் . நாமளும் திருந்தத்தான் வேணும் அப்பிடியே  பாஷாண்டியா இருக்கப்பிடாது’

சந்திரனின் அம்மா அமைதி ஆனாள்.

  தருமங்குடில  நான் நாலு  ஆத்துக்கு போயி உடம்ப குறுக்கிண்டு  நின்னு அரிசி வாழக்கான்னு வாங்கறேன்.  அதுலதானே   நாம இண்ணைவரக்கும் பசி ஆறினம்  இடுப்புல கட்டிண்டு நிக்கறனே   என் மானத்த மறைக்கறதுக்கு  ஒரு வேஷ்டி. அது அவாதான வாங்கி குடுத்துறாக்கா,  இந்த உடம்பு அவா போட்ட அன்னத்துலதான் ஜீவிச்சிண்டுருக்கு. உன்னையும் நம்ம கொழந்தையும்  ஒருவேள பசி பட்டினின்னு இல்லாம யாரு பாத்தது ? அதுக்கு எதானு அபாவம் வந்துடுமோன்னு அஸ்தில  பயம் எனக்கு.  மற்றபபடி இனி  சந்திரன்கிட்ட   அப்பிடி  எதுவும்  தப்பா கேக்கமாட்டேன்  என்ன வுட்டுடு’

சந்திரனின் அப்பா கண்கள் குளமாகியிருந்தன. முகத்தைத்துடைத்துக்கொண்டார். ‘ராம ராமா’ என்றார்.

‘ எதுன்னாலும்  நாம  நமக்குள்ள பேசிப்போம்  அவனண்டமட்டும்  வேண்டாம்’

சந்திரனின் அம்மா விருட்டென்று வீட்டின் உள்ளாகச்சென்று அமர்ந்துகொண்டாள்.  சந்திரனின் அப்பா  திண்ணையிலேயே அமர்ந்து மெதுவாகக்   கந்த சஷ்டி கவசம் சொல்லத்தொடங்கினார்.

                                                                  4.

வழக்கமாக முதுகுன்றம் பாலக்கரையில்தான் இறங்குவான். அவன் வந்த அந்த  செஞ்சி செல்லும்  பஸ்ஸில் அத்தனைக்கூட்டம் இல்லை. விடியற்காலை நேரம்.  நகரத்தில்  முக்கியமாக ஏதும் வேலை இருப்பவர்கள் மட்டுமே பேருந்துப்பயணத்தில் இருப்பார்கள். இன்னும் சரியாக விடியவில்லை.  இருள் அப்படியே ஆங்காங்கு தென்பட்டது. கையில் ஒரு டார்ச் விளக்கோடுதான் தருமங்குடி பேருந்து நிறுத்தம் வந்தான். ஆறு மணி  டியூட்டி என்றால் இப்படித்தான். ஆற்றில் இறங்கி குறுக்குவழியாகப்போகலாமா என்று யோசித்தான். இயற்கை அழைப்பு. விடியற்காலை. ஆற்றில் அங்கும் இங்கும் மக்கள் நின்று கொண்டிருப்பார்கள். தாய்மார்களும் பெண்களும்கூட இருக்கலாம். எதற்கு  ஆற்றுவழி ச்செல்லவேண்டும். போதிய நேரமும் இருக்கிறது. ஒன்றும் அவசரமில்லை. மணிமுத்தாற்று பாலத்தின் மீது நடக்க ஆரம்பித்தான். பழமலை அப்பனின் திருக்கோவில் கோபுரத்தை ஒரு முறை பார்த்து வணங்கினான். கைகளை பாவனையாக அப்படி இப்படி வைத்துக்கொண்டான். ஒவ்வொருமுறை அப்படி வணங்கும்போதெல்லாம் அவனுக்குள் ஒரு வினா எழும். ’ கைகூப்பி வணங்கினால்தான்  இல்லை கோவிலைச்சுற்றி சுற்றி வந்தால்தான் கடவுள் நம் செயலுக்கு  எல்லாம்  துணையாக இருப்பாரா இல்லாவிட்டால் எப்படியேனும்  கெட்டுப்போடா நீ  என்று விட்டு விடுவாரா’ .

இது என்ன வினா வேண்டிக்கிடக்கிறது. பெரியவர்கள்  இப்படிச் செய்தார்கள் செய்கிறார்கள் அதனில் ஒரு நன்மையைக்கண்டும் இருப்பார்கள். நமக்கு இப்போதைக்கு அது விளங்காமல் கூட இருக்கலாம். சமாதானம் சொல்லிக்கொள்வான்.

 காய்கறிமார்க்கெட் அருகில் இருந்தது. முதுகுன்ற நகரத்து மக்களும் சுற்றுப்பட்டு கிராமங்களின் சனங்களும் இங்கேதான் காய்கறி வாங்கக்கூடுவார்கள். கூடையில்  காய் கீரை எதுவும் கொண்டு வந்து விற்கும் ஆயாக்கள் தாய்மார்கள் ஒவ்வொருவராக வந்துகொண்டிருந்தார்கள். அருகில் குதிரை வண்டி நிறுத்தம். இரண்டு வண்டிகள் நின்றுகொண்டிருந்தன. குதிரைகள் தயாராய் சவாரிக்கு நின்றுகொண்டிருந்தன.

கொளஞ்சி அப்பர்  கோவிலுக்கும்   வேடப்பர் கோவிலுக்கும் குதிரை வண்டிகள் சென்று சென்று திரும்பின. செவ்வாயில் கொளஞ்சியப்பருக்கும் வெள்ளிக்கிழமையில் வேடப்பருக்கும் மக்கள் கூட்டமாய்ச்செல்வார்கள். இதுவன்றி  முதுகுன்றம் ரயில்வே ஜங்க்‌ஷன் போகின்ற மக்களும் இருக்கவே செய்தார்கள்.  மிகவும் பிரசத்திபெற்ற சந்திப்பு இது. இங்கிருந்து சேலம் பெங்களூர் செல்லமுடியும். நெய்வேலி வழியாக் கடலூர் செல்லும் இருப்புப்பாதையும் இங்கே தொடங்குகிறது. சென்னை திருச்சி குறுக்குவழி ரயில் பாதையில் இதுதான் பெரிய ஸ்டேஷன் என்று சொல்ல வேண்டும். இந்த சந்திப்பில் கல்யாணராமய்யர் அய் ஆர் ஆர்  காண்டீன் மதிய உணவு மிகவும் பிரசித்தம். கொல்லத்திலிருந்து   எழும்பூர் செல்லும் ரயிலும் எழும்பூரிலிருந்து கொல்லம் செல்லும் விரைவு ரயிலும் இங்கே மதிய சாப்பாட்டிற்காக நிறுத்துவார்கள். கல்யாணராமய்யர் போடும் காண்டீன்  லன்ச் சாப்பாட்டிற்கு  எப்போதும் கூட்டம்தான்.

நல்லதம்பி என்னும் தொலைபேசி ஆப்ரேட்டர் சந்திரனோடு பணியில் இருந்தார். அவரின் தந்தை முதுகுன்ற ரயில்வே ஜங்க்‌ஷனில் சானிடரி டிவிஷனில் மேஸ்திரியாய் வேலைபார்த்தார்.   அந்தக் காலத்துல வெள்ளைக்காரனிடம் வேலை பார்த்தவன் நான் என்பார். கடிகாரமுள்ளு தப்பா ஓடும் ஆனா  வெள்ளக்காரன் ஓட்டுன ரயிலு எண்ணைக்கும் தப்பா ஓடாது’ என்பார். சந்திரனுக்கு  நல்லதம்பியின் தந்தையை மிகவும் பிடிக்கும். நல்லதம்பி சந்திரனை எத்தனையோ முறை அந்த காண்டீனுக்கு அழைத்துபோயிருக்கிறார்.

‘சந்திரா வா வா’

யார் நம்மை அழைப்பது சந்திரன் திரும்பிப்பார்த்தான். நல்லதம்பிதான்.

‘ உனக்கும் ஆறு மணி டூட்டியா’

‘ ஆமாம். சாயந்திரம் திருச்சிக்கு போறன்’

சொல்லிய நல்லதம்பி சைக்கிளைவிட்டு இறங்கி சந்திரனோடு வண்டியை உருட்டிக்கொண்டே வந்தார்.

நல்லதம்பி குட்டி அய்யர் கடை வாசலில் சைக்கிளை நிறுத்தினான். கிருஷ்ண பவன் என்னும் ஹோட்டலைத்தான் முதுகுன்ற நகரத்து மக்கள் குட்டி அய்யர் கடை என்று செல்லமாய் அழைத்தார்கள்.

இருவரும் காபி சாப்பிட குட்டி அய்யர் கடைக்குள் நுழைந்தார்கள். உள்ளே மேசையில் காபியை ஆற்றிக்கொண்டே செல்லமுத்து சூப்ப்ர்வைசர் நின்றுகொண்டிருந்தார்.

‘ நாராயண அய்யர் இங்க  இன்னும் ரெண்டு காபி’ செல்லமுத்து ஓங்கிக்குரல் கொடுத்தார்.

‘வாங்க வாங்க’ காபி குடித்து முடித்தார் செல்லமுத்து.

‘ நீங்களும் இண்ணிக்கு இங்கதானா’ சந்திரன் செல்லமுத்து சூப்பர்வைசரை விசாரித்தான்.

இருவரும் சூப்பர்வைசருக்கு வணக்கம் சொல்லிவிட்டு  காபி சாப்பிட்டார்கள்.

‘இந்த மாதிரி  டிகாக்க்ஷன் மணம்  எந்த ஒலகம் சுத்தினாலும் கெடைக்காது’

செல்லமுத்து சொல்லிக்கொண்டார். மூவரும் தொலைபேசி நிலயம் நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.

‘ நீங்க  ரெண்டு பேரும் சைக்கிள்ள போலாம்’ சந்திரன் சொன்னான்.

‘ அது எப்பிடி’

’நடந்தே நாம சைக்கிளை  உருட்டுகிட்டு போலாம் சார்’ நல்லதம்பி   வண்டியை தள்ள ஆரம்பித்தார்.

மூவரும் தொலைபேசி நிலயம் நோக்கி நடக்க ஆரம்பித்தனர். இரட்டை பாப்பாரத்தெரு தாண்டி போலிஸ் ஸ்டேஷன். அதையும் தாண்டி வலது பக்கம்  போனால் ஒரு காலத்தில் பலான பெண்கள்  வாழ்ந்து இருந்த சந்து.  கடைத்தெருவின் இடது பக்கம் திரும்பினால் பெரிச்சி சந்து. பேரி செட்டியார்கள் என்னும் செட்டிமார்களில் ஒரு பிரிவினர் அதிகம் வசித்த சந்தாக இருந்ததாம். பெரிச்சி சந்தில் நுழைந்து  மூவரும் வணிகச்செட்டியார் சந்தை அடைந்தார்கள். அங்குதான் தொலைபேசி நிலையம் இருந்தது. தொலைபேசி நிலயத்துக்கு ஒருவர்  வீட்டை வாடகைக்கு விட்டால்  பிறகு வீடு  எதற்கும் தேராது என்பது மக்களின் கணிப்பாக இருந்தது. குதிரைவண்டி ஸ்டேண்டு அருகே பட்டாணிக்கடை வைத்திருந்த சேலத்துக்காரர் ராமசாமி உடையார்தான் இந்த ஆபிசுக்குத்தனது வீட்டை வாடகைக்குக்கொடுத்து இருக்கிறார். ஜீப்பும் காரும் நுழைய முடியாத சந்தாயிற்றே.

‘சந்திரன் ஒரு சேதி’

‘சொல்லுங்க சார்’

  டூட்டி உனக்கு  ஒண்ணரைக்கு முடியும். அப்புறம்  மலயாள மாமி மெஸ்ல சாப்புடுவ.  பெறகு அய்யனார் கோவில் தெருல நீ தங்கியிருக்குற சேக்கிழார் லாட்ஜ்க்கு போவியா இல்ல நேரா  தருமங்குடிக்கு கிளம்புவயா’

‘இண்ணைக்கு சாப்புட்டு முடிஞ்சதும்  நேரா தருமங்குடிக்கு கெளம்பிடுவன்’

‘ நானு உன்னை பஸ் ஏத்துறன். பாலக்கரையில நிக்குறன்’

‘ ஏன் சார்’

‘ அங்க பேசிக்குவம். இது ஆபிசு  இங்க எதுக்கு அந்த விவரம். நாம வேல செய்யுற ஆபிசுல  வச்சி அந்த இது எல்லாம் பேசிக்க வேணாம்’

‘ நீங்க சொன்னா சரிதான்’ சந்திரன் செல்லமுத்து சூப்பர்வைசருக்குப்பதில் சொன்னான். அவர் என்ன சொல்லவருகிறார் என்பது அவனுக்கும் புரியாமல் இல்லை.

‘ நாம பேசிக்கறது நம்மோடவே இருக்கட்டும். இது எல்லாருக்கும் தெரிஞ்சி இப்பவே பிரச்சனைங்க   எல்லாம் சரியாயிடும் நா நெனைக்கல. உனக்கு சில சமூக விஷயங்கள்  அத்துபடி ஆவுணும்னு எம்மனசுக்குத்தோணுது. அவ்வளவுதான் சந்திரன்’

ஆறு மணிக்கு வருபவர்கள் இரவுப்பணி முடித்தவர்களை விடுவிப்பார்கள். பிறகு எட்டு மணி, ஒன்பது  மதியம் ஒண்ணரை மூன்றரை நான்கரை இப்படி ஆப்ரேட்டர்களின் பணி விதம் விதமாக இருக்கும். சிலர் உள்ளூர்  தொலைபேசி சேவை மட்டும் பார்ப்பார்கள் சிலர் வேளியூருக்கு டிரங்கால்  போடும் வேலையை கவனிப்பார்கள்.

சந்திரன் இன்றைய அலுவலகப்பணி முடித்தான். மணி  மதியம் ஒன்றரை ஆகிக்கொண்டிருநதது.   ஒரு நாளுக்கான நேரத்தை  ரயில்வே அலுவலகம் போலத்தான் இங்கேயும்  24 மணி என்பார்கள். 2359 என்பதுண்டு ஆனால் அதற்குப்பிறகு  மணி அது 0,  பிறகு 1, 2, எனப்போகும். அவனைப்  பணி இருக்கையிலிருந்து விடுவிக்க  வேறு ஒருஆப்ரேட்டர் தயாராக நின்றுகொண்டிருந்தார். சந்திரன் அவன்  பார்த்த பணியில்  இன்னும் பாக்கி உள்ளது எதுவென்றும் முக்கியமான தகவல்  இன்னது என்றும் சொல்லி விட்டு எழுந்துகொண்டான். பணி முடித்ததற்கான கையொப்பமிட்டுவிட்டு மலயாள மாமி மெஸ் நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

 நல்லதம்பி தன் பணி முடித்துகொண்டு அவருடைய  பூட்டிய சைக்கிளைத்திறந்து தள்ள ஆரம்பித்தார்.

‘ நாளைக்கி’

‘ இதே தான்’

‘ எனக்குமே’

நல்லதம்பியும் சந்திரனும் மறு நாள் பணிபற்றி பேசி முடித்தார்கள். ஆப்ரேடர்கள் அவர்களுக்கென்று  ஒருமொழி ப்பிரயோகத்தைக் கையாள்கிறார்கள்.

எல்லா ஊர்களுக்கும் ஒரு பிரத்யேக கோட் (code)  புழக்கத்தில் இருந்தது. ஆங்கில எழுத்துக்களால் ஆன கோடு மட்டுமே இங்கு  உபயோகமாகும்.. ஊர்களின் பெயரைக் கோடு வைத்து மட்டுமே ஸ்பெல் செய்வார்கள்.  A for apple B for brother C for cinema D for dog  என்று  ஆரம்பித்து இது Z for zebra  வரை செல்லும். Table Raja   என்றால்  TR திருச்சியைக்குறிக்கும்,இப்படி எல்லா ஊர்களுக்கும்தான்.

சந்திரன் மலயாள மாமி மெஸ்ஸில் மதிய உணவு முடித்துக்கொண்டான். தொலைபேசி நிலயத்துக்கு அருகாமையிலேயே அது இருந்தது. அந்த மெஸ்ஸில் வங்கி ஊழியர்கள் தாலுக்காஆபிஸ் போஸ்ட் ஆபிஸ் ஊழியர்கள் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் அனேகம் பேர்  சாப்பாட்டுக்கணக்கு வைத்திருந்தார்கள்.முதுகுன்றம் நகரில் இன்னும் தெலுங்கு மாமி, மெஸ்  கன்னட மாமி மெஸ் என்று இன்னும்  மெஸ்கள்  இருக்கத்தான் செய்தன.

சந்திரன் மதியம் சாப்பிட்டதற்காக தேதியிட்டு குறிப்பொன்றை  அத்ற்கான கணக்கு நோட்டில் பதிந்துவிட்டுக்கிளம்பினான். மலயாள மாமி மெஸ்ஸின் மாமா அங்கும் இங்கும் ஓடி வேலைசெய்துகொண்டிருந்தார். மாமி சமைப்பது மட்டுமே பிரதான வேலையாகக்கொண்டு செயல்படுவார். பரிமாறுவது இத்யாதிகள் மாமாவின் பொறுப்பாகஇருந்துவந்தது.

கால்களில் செருப்பை மாட்டிக்கொண்டான்.’ வரேன் மாமா’ என்று  சொல்லி சந்திரன் மெஸ்ஸை விட்டுக்கிளம்பினான். கடைத்தெருவில் வேக வேகமாக நடந்து கொண்டிருந்தான். மதிய வெயில்.ஆற்றின் குறுக்காக இந்த வெயிலில் எப்படி நடப்பது. அது சாத்தியமே இல்லை. மணிமுத்தாற்றுப்பாலம் மீது நடந்தான். ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் ஸ்ரீமுஷ்ணம் பெண்ணாடம் திட்டக்குடி திருச்சி வேப்பூர் சேலம் ஆத்தூர் கள்ளக்குறிச்சி என பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக  பாலத்தில் ஊர்ந்துகொண்டிருந்தன. நடை பாதைக்கென ஒதுக்கிய பகுதியில்தான் சந்திரன் நடந்தான்.இந்த வெயிலிலும் பிச்சைக்காரன் ஒருவன்  அலுமினியக் கிண்ணத்தைவைத்துக்கொண்டு’அய்யா தருமம் அய்யா’ என்று கூவிக்கொண்டிருந்தான். தன் சட்டைப்பையிலிருந்து ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து அவன் கிண்ணத்தில் போட்டுவிட்டு சந்திரன் நடக்க ஆரம்பித்தான்.பழமலையப்பனின் பெரிய கோபுரத்தை ஒரு முறைபார்த்துக்கொண்டான்.’ மனிதர்கள் இப்படி எல்லாம் அவஸ்தைப்படுவது  நியாயமா என்ன’ சொல்லிக்கொண்டான்.

பாலக்கரை கிழக்குப்புறமாக நகராட்சிப்பூங்கா இருந்தது. அதற்கு செல்வராசு பூங்கா என்கிற பெயர்ப்பலகை  ஒரு காலத்தில் தொங்கிக்கொண்டுதானிருந்தது. அந்த ப்பெயர் பலகையை எல்லாம் இப்போது இல்லை. வானொலிக்கு என்று ஒரு சிறிய கட்டிடமும்  ஒலி பெருக்கி அமைப்பும் இருந்த காலமுண்டு. வானொலிச்செய்திகளளை மக்கள் கவனமாய்க்கேட்பது விடைபெற்றுக்கொ ண்டு எத்தனையோ காலமாயிற்று. மாமரங்கள் சில பூங்காவில் இருந்தன. பாக்குமரங்களும் சில வளர்ந்து உயரமாகக்காணப்பட்டன. தங்கப்பட்டி மரங்களும் நெட்டிலிங்க மரங்களும் ஏகத்துக்கு வளர்ந்து இருந்தன. மர நிழலில் தனியாகக்கிடந்த சிமெண்ட் பெஞ்சின் மீது செல்லமுத்து அமர்ந்திருந்தார்.

‘ வாங்க சந்திரன் இப்படி உக்காருங்க’

சந்திரன் அந்த சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டான்.

‘ நான் சாப்பிட்டு  முடிச்சிட்டு வந்து இருக்கேன் நீங்க இன்னும் சாப்புடணும்’

‘ ஒரு பத்து நிமிஷம் பேசிக்குவம். நான் இங்க தான போறன் நீங்கதான் வெகு தொல போவுணும்.  அதனால சாப்புட்டுபோறிங்க’

செல்லமுத்து அமைதி ஆனார். கண்களை மூடித்திறந்தார்.

‘ நான் தொடக்கத்துல  படிச்சது  வேப்பூர்ல.  பெறகு முதுகுன்றம் வந்து  படிச்சன்’. அப்ப பெரிய பள்ளிக்கூடம்னா தாலுக்காவுக்கு ஒண்ணு இருக்கும்.  அந்த படிப்புதான் இண்ணைக்கு என்ன ஒரு ஆபிசுல வேல பாக்க வச்சிருக்கு. ஆமாம் அந்த அஞ்சாபுலி தருமங்குடியில  பாத்தம். பசு மாட்ட அவர்கிட்ட வெலைக்கு குடுத்தம். எல்லாம் சரி. அவுரு உங்க வீட்டுக்குள்ள வந்துருக்காரா ?

‘இல்ல சார்’

‘இதுவரைக்கும் அந்த சனங்க யாராவது உங்க வீட்டுக்குள்ள வந்து இருக்காங்களா’

‘இல்லவே இல்ல சார்’

  ஆயிரம் ஆயிரம் வருஷமா  அப்பிடி ஒண்ணு நடந்திருக்க முடியாது அப்ப நான்தான் எங்க இனத்துல  மொத  மொதல்ல   தருமங்குடி அக்கிரகாரத்துல உங்க வீட்டுக்குள்ள வந்துருக்கன் உங்க வீட்டு கூடத்துல உங்க அம்மா டிபன்  பரிமாற  இலைபோட்டு சாப்பிட்டு இருக்கன். உங்க வீட்டு திண்ணையில உக்காந்து  பேசி இருக்கன். தருமை நாதர் கோவிலுக்குப் போயி சாமிய கும்பிட்டு குருக்களய்யா கையால  விபூதி வாங்கி நெற்றியில  பூசி இருக்கன். சட்டத்துக்கு முன்னாடி எல்லாரும் சமந்தான். அது அழகா எழுதி வச்சிருக்கம். ஆனா நடைமுறையில அத  நாம எங்க  போய் தேடறது?’

‘ நீங்க சொல்றதுசரிதான் சார்’

‘ படிச்ச படிப்பு நாமள ஒண்ணா  உக்காந்து பேசப் பழக  வாய்ப்பு உண்டாக்கிகொடுத்து இருக்கு. படிக்காதவனா  ஒரு நல்ல உத்யோகத்துல  இல்லாதவனா இருந்தா நானும் அஞ்சாபுலி ரெண்டுபேரும் உங்களுக்கு ஒன்ணுதானே. சொல்லுங்க’

சந்திரன் மவுனமாக நின்றான்.

‘மவுனம் சம்மதம்னு எடுத்துகணும். எடுத்துகறேன். இந்த சமுதாயத்துல எங்க சனம் பட்ட கஷ்டங்கள் சொல்லி முடியாது.  எழுதி முடியாது.அப்பிடி  பட்ட கஷ்டம் எல்லாம் இண்ணிக்கு முடிஞ்சி போச்சின்னு யாராவது சொன்னா அது பொய் ,அதத் தான்  தருமங்குடியில நேரா பாத்தம். இல்லயா’

கனமான ஒரு சமுதாய பிரச்சனையை செல்லமுத்து சந்திரனிடம் பேச ஆரம்பித்தார்.

‘ நானு வேப்பூர் ஸ்கூல்ல படிக்கையில. எங்க பசங்களுக்கு  எல்லாம் உக்கார தனியா பலக இருக்கும். ஊரு சனங்களோட  அந்தப்பிள்ளைங்க  உக்கார பலகைங்க தனியா இருக்கும்’

சந்திரன் அமைதி ஆனான்.

‘எல்லா வாத்தியாருங்களும்  தலயில சிண்டு வச்சிருப்பாங்க. தலையில டர்பன் கட்டியிருப்பாங்க. வேட்டிய கீழ்ப்பாய்ச்சி மடிச்சி கட்டியிருப்பாங்க  நாங்க எல்லாம்  குடிக்கிறதுக்குன்னு தண்ணி தனியா ஒரு பானையில இருக்கும்.   ஊரு பசங்க குடிக்க வேற பான தனிய்யா வேற எடத்துல  இருக்கும். பானய மாத்தி கீத்தி  பசங்க  தண்ணி குடிச்சிட முடியாது’

‘சொல்லுங்க சார்’

 ’வாத்தியார் பசங்கள அடிக்க மேசையில பெரம்பு வச்சிருப்பாரு. ஊரு பசங்க கொட்டம் பண்ணினா  அவங்கள அவுருகிட்ட கூப்பிட்டு அந்த கம்பால நேராவே பட்டு பட்டுன்னு அடிப்பாரு,

காலனி பசங்க கொட்டம் பண்ணினா அந்த பசங்கள கிட்ட கூப்பிடமாட்டாரு. நாங்க இருக்கிற இடத்துலதான் இருக்கணும். காலனி பசங்கள பாத்து பாத்து கம்ப  தூக்கி  தூக்கி கெடாவுவாரு.    எங்கள  கிட்டக்கூப்பிட்டு கம்பால நேரா அடிச்சா  அந்த  கம்பால எங்கள  அவுரு தொடற மாதிரி ஆயிடுமே. அது கூடாதுல்ல. ஆக கம்ப எடுத்து  எங்கள பாத்து  பாத்து வீச்சு வீச்சுன்னு கெடாவுவாரு.    எங்கள பாத்து கெடாவுன கம்ப நாங்க கொண்டு போய் அய்யா மேசயில மரியாதயா வைக்கணும். எங்கள பாத்து கெடாவுன கம்ப கொண்டு போய் சாரு கையில  எல்லாம்  நேரா கொடுத்துட முடியாது. அவுரு வாங்கிக்கவும்  கூடாது’

‘சார்’

‘ அப்பிடித்தான் நான் படிச்சேன் சந்திரன்’

‘ நினச்சி பாக்கவே  இது  கொடுமையா இருக்கு சார்.’

‘ எங்கப்பா ஊரர்ல வயல் வேல செய்வாரு .  அவருக்கு அன்னாடம் கூலி.. அது வெள்ளக்காரன்  நம்ம  நாட்ட ஆண்ட காலம். அதனாலதான் இப்பிடி  கஷ்டப்பட்டாவது பள்ளிக்கூடம் போனம். படிச்சம்.  இல்லன்ன நானும் அப்பாவோட  மண்வெட்டியும் கையுமா  வயக்காட்டுல சுத்தி சுத்தி அலைய வேண்டியதுதான்’

‘படிப்புதான் எல்லா பிரச்சனைக்கும் கொஞ்சம்  தீர்வகொண்டு தந்து இருக்கு’

‘ நாங்க  பள்ளிக்கூடம் போனதே பெரிய புரட்சிதான். அந்தக் காலத்துல  நினச்சி பாக்க முடியுமா பள்ளிக்கூடம் போறது படிக்கறது எல்லாம்.’

 சந்திரன் கவலையோடு செல்லமுத்து சூப்பர்வைசரை ப்பார்த்துக்கொண்டிருந்தான்.

‘மணி ரெண்டேகாலு சார் அந்த குஞ்சிதம் சர்வீஸ் பஸ் வர்ர நேரம் ’

  . இண்ணைக்கு இத்தோடு நிறுத்திகறம். நாளைக்கு இதே நேரம் மீண்டும்  இங்க வருவம்.  நா பட்ட கஷ்டத்தை எங்க சனம் காலம் காலமா பட்ட  இண்ணைக்கும் படுற  கஷ்டத்தை  உங்கிட்ட சொல்லுணும்னு எனக்கு மனசுல தோணுது. அது ஏன்னு தெரியல.   சொல்லுலன்னா  இது  எல்லாம் உங்களுக்கு எப்பிடி  தெரியர்து’

‘சரி சார். நானும் என்ன என்ன  அவஸ்த  அந்தக்காலனி ஜனங்க தருமங்குடியில  பட்டாங்கன்னு   நானும் என் காதால கேள்வி பட்டதை உங்ககிட்ட சொல்லணும் சார்’

‘ அப்பிடியே செய்வோம் சந்திரன். நானு கெளம்புறன் நீங்களும்  உங்க பஸ்ஸை புடிங்க’

‘ ரொம்ப  பசிக்கும்  சார்’

‘ அதெல்லாம்  வுடுங்க, ஒண்ணுமில்ல. இதுதான நமக்கு முக்கியம்’ சொல்லிய செல்லமுத்து சைக்கிளை உருட்டிக்கொண்டு கடலூர் சாலையில் நடந்தவண்ணம் இருந்தார். திட்டக்குடியிலிருந்து  முதுகுன்றம் வழியாக  சிதம்பரம் வரை  செல்லும் குஞ்சிதம் பஸ்.  அதைப் பாலக்கரை நிறுத்தத்தில் சந்திரன் பிடித்தான். தருமங்குடி நோக்கிப் பயணித்தான். மிகவும் அலுப்பாகத்தான் உணர்ந்தான். முதுகுன்றத்தில் அலுவலகப்பணி  காலை ஆறு மணிக்கு என்றால் எப்போதும் இப்படித்தான். விடியற்காலையிலே எழுந்து கிளம்வேண்டியிருப்பதால் இரவு உறக்கம் கோழி உறக்கம்தான்.

குஞ்சிதம் பஸ்ஸில்  அன்று நல்ல கூட்டம். எப்போதும்  இந்தப் பேருந்தில் இப்படித்தான் இருக்கிறது. சந்திரனைப்பார்த்த கண்டக்டர் ’பின்னடி ஒரு இடம் இருக்கு போங்க போய் உக்காருங்க’ என்று ஆணை தந்தார்.அவன் அந்த இடத்தைத்தேடி அங்கே சென்றான்.

‘ வாங்க அய்யா’ என்றது ஒரு குரல். சந்திரன் அந்தக்குரல் யாருடையது என்று ஊகித்தான். பழக்கப்பட்ட குரலாகவே இருந்தது.  தருமங்குடி அஞ்சாபுலி தான் ‘வாங்க அய்யா’ என்று குரல் கொடுத்தது. அஞ்சாபுலி அமர்ந்திருக்கும்  சீட்டுக்குப்பக்கத்தில்தான் அந்தக்காலி இடம் இருந்தது. சந்திரன்  அந்தக்காலியிடம் நோக்கி ப்போனான்.

‘ நீங்க உக்காருங்க நானு நின்னுகறேன்.’

‘இல்ல. அஞ்சாபுலி. நீங்க உக்காருங்க. ஒங்க பக்கத்துல நானும் உக்காந்துக்கறேன்’  அஞ்சாபுலியை சந்திரன் ’வாங்க போங்க’ என்கிற மரியாதைச்சொல்லோடு  இப்போதெல்லாம் பேச ஆரம்பித்தான்.

அஞ்சாபுலிக்கு சந்திரன் பக்கத்தில் உட்கார்ந்து பழக்கம் ஏது. அவர் திணறிக்கொண்டே இருந்தார்.

‘யாரு எவுருன்னு தெரியாம இருந்தா குந்தலாம்’

‘அப்பிடி இல்ல.  நீங்க உக்காருங்க அஞ்சாபுலி  நானும் உக்காந்துகிறேன்’

‘ நம்ம ஊரு ஜனம் இத  பாத்துதுன்னா என்ன நெனைக்கும்’

‘ எது நினைச்சாலும் நெனைக்கட்டும்’’

சந்திரன் சற்று அதிர்ந்த குரலில் சொன்னான்.

இருவரும் அருகருகே அமர்ந்துகொண்டனர்.

‘ எங்க இவ்வவளவு தூரம்’

  கறக்குர பசு மாடு உங்க  ஆபிசருது  ஒண்ணு, அய்யா மூலம்  என்கிட்ட வந்து இருக்குல்ல. அதுக்கு வைக்கறதுக்கு புண்ணாக்கு பருத்திக்கொட்டை இன்னும் செலதுக வாங்கிகினு போலாம்னு டவுனுக்கு  வந்தன். வாங்குனேன். கெளம்பிட்டேன்’

’ மாடு எப்பிடி இருக்கு’

‘அதுக்கென்ன ரட்சணமா இருக்கு. மாடு சாது. காலயில மாலயில ஒரு ஒரு லிட்டரு கறக்குது. என் வூட்டுக்காரி பால கறந்துடுவா. நானு  வளயமாதேவி கூடலூரார் டீ கடையில கொண்டு போட்டுறவன். அண்ண அண்ணக்கி காசு வந்துடும். மாட்டு செலவு போவ பாக்கி இருக்குற பாலு வித்த காசி அப்பிடியே ஒரு மூடி போட்ட டப்பால வச்சி இருக்கன். ஆவுட்டும். ஒரு நாள் அத உங்க கையில குடுத்து போடணும் அது அந்த சாருக்கு போயி சேருணும்

‘வாங்குன கடனு அடையணும்

வாயும் வயிரும் நெறயணும்’  விளக்கமாகச்சொன்னான் அஞ்சாபுலி.

‘ மாடு என்ன வெலன்னு சந்திரகாசு கோனார் சொன்னாரு. நீங்க கேட்டிங்களா’

‘அதுக்கு எனக்கு நேரம் ஒழியுல. வெல எம்மாந்தா இருந்தா என்ன நாம குடுக்குறம். அந்த சாரு நல்ல மனுஷாலு. பசு மாடுன்னா சும்மாவா அது மாலட்சுமி இல்லயா’

இருவரும் ஏதோ பேசிக்கொண்டே வந்தனர். குஞ்சிதம் பஸ் வேக வேகமாய் போய்க்கொண்டே இருந்தது.

‘ஊரு வந்து போச்சி’

‘ ஆமாம் நேரம் போனது தெரியல’

கண்டக்டர் விசில் கொடுக்க வண்டி நின்றது.

‘ தருமங்குடி எறங்கு வா வா. சட்டு புட்டுன்னு ஆவுட்டும்’ கண்டக்டர் விரட்டிக்கொண்டே இருந்தார்.

அஞ்சாபுலியும் சந்திரனும் தருமங்குடி செல்லும் மண்சாலையில் இறங்கி நடந்து கொண்டிருந்தார்கள்.

சுடலை தாண்டி பட்டினத்தான் வாய்க்கால் மதகு மீது  மாடசாமி  அமர்ந்திருந்தார்.

‘ என்ன எச்சேஞ் கெடயில கெடந்த பசு மாட்ட அஞ்சாபுலிக்கு ஓட்டிவிட்டுட்ட’

சந்திரனை அந்த மாடசாமி எப்போதும் ’எச்சேஞ்ச்’’ எச்சேஞ்ச்’ என்று அழைப்பது வழக்கமாகியிருந்தது. டெலிபோன் எக்சேஞ்ச் அலுவலகத்தில் சந்திரனுக்குப்பணி என்பதால் அப்படி  அவர் அழைப்பது ஊருக்கே தெரிந்த செய்தி.

  அண்னைக்கி கெடக்கி போவகுள்ளயே அந்த சார நானு பாத்தன்’

‘ நானும்தான் பாத்தன்’  மாடசாமி அஞ்சாபுலிக்குப் சொன்னார்.

‘ எதுக்கும் ஒரு பொசுப்பு இருக்குணும்’

‘ அண்ணைக்கு நானு எக்ச்சேஞ்ச் கூட கோனாரு கெடக்கி போவுலாம்னு இருந்தன். ஆனா எனக்கு   சேத்தியாதோப்பு மாட்டு சந்தையில ஒரு திருட்டு மாட்ட வாங்குன பஞ்சாயம் இருந்துச்சி’

‘ சரி வுடு. எனக்கும் ஒரு பசு தேவதான்’ சொல்லிய  மாடசாமி

‘ வேற மாடு எதனா வந்தா எனக்கு சொல்லு அஞ்சாபுலி’ என்று முடித்துக்கொண்டார்.

சந்திரன் விறு விறு என்று நடக்க ஆரம்பித்தான். மேலகுளம் வட கரை மீது நடந்து சந்திரன் வெள்லாழத்தெரு பக்கம் போனான்.

‘ அப்ப நானு வர்ரேன் அய்யா’

‘சரிங்க அஞ்சாபுலி பெறகு  பாப்பம்’

அஞ்சாபுலி காலனி நோக்கி நடக்க ஆரம்பித்தான். மேற்கு பாத்த நாகமணிந்த விநாயகர் கோவில், கோனார்தெரு,  அதுவும் தாண்டி வன்னியர் தெரு பிறகு  சின்ன இலுப்பைத்தோப்பு  பெரிய இலுப்பைத்தோப்பு சின்ன காலனி  அது தாண்டினால் அந்த பெரிய காலனி அங்கேதான் அஞ்சாபுலியின் கூரை வீடு இருந்தது.

                                                       5

சந்திரன் வீட்டினுள் நுழையும்போது  மாலை மணி நான்குக்குமேல் ஆகியிருந்தது. சந்திரனின் அம்மா காபி சாப்பிட்டுக்கொண்டு இருந்தாள். சந்திரனின் அப்பா  தகரப்பெட்டி ஒன்றை த்திறந்து வைத்துக்கொண்டு கணக்கு வழக்கு ஏதோ பார்த்துக்கொண்டு இருந்தார். தனது புரோகிதத்தொழிலில்  அவருக்குத் தானமாக வந்த வேட்டி துண்டுகள் சில அந்தப்பெட்டிக்குள் பத்திரமாக இருந்தது. தருமங்குடியில் யார் யாருக்கு எவ்வளவு கடன் கொடுத்து இருக்கிறோம் என்பதுவும் அவைகளின் திரும்ப வந்த விபரங்களும் குறிக்கப்பட்ட நோட் புக் ஒன்றை அந்தப்பெட்டியுனுள்தான் சந்திரனின் அப்பா வைத்திருந்தார்.

‘என்னடா வந்தாச்சா’

‘ வந்தாச்சி’

‘ நாளைக்கி டூட்டி’

‘ இதேதான்’

‘வெடியகார்த்தால போகணும்’

சந்திரன் தான் கொண்டுவந்த டிபன்பாக்ஸ் இத்யாதிகளை முற்றத்தில் ஒரு மூலையில் வைத்தான். கைகால்களை சுத்தம் செய்துகொண்டான்.

‘ காபி வச்சிருக்கேன் எடுத்துருக்கோ’

சந்திரன் காபியை சாப்பிட்டான். ‘காபி பொடி இருக்கா’

‘இன்னும் நாலு நாளுக்கு வரும்’

அம்மா பதில் சொன்னாள்.

‘தபால் எதாவது வந்துதா’

‘ தோ பாரு வச்சிருக்கேன்’

அவனுக்கு வந்திருந்த கடிதங்களை படித்தான். நண்பர்கள்  இருவர்  அவனுக்கு க்கடிதம் எழுதியிருந்தனர். நெய்வெலி சிவராமனும் தூத்துக்குடி ராஜாராமனும் எழுதிய கடிதங்கள் அவை. சிவராமன் சிதம்பரம் கல்லூரி நண்பன். ராஜாராமன் பள்ளிக்கூட நண்பன்.

சந்திரன் திண்ணையில் போய் அமர்ந்துகொண்டான். அவன் அப்பாவும் வந்து  அருகில் அமர்ந்துகொண்டார். செல்லமுத்து சார் அவனோடு பேசிய விஷயங்கள் அவன் மனத்திரையில் ஓடிக்கொண்டு இருந்தன.

‘ ஏம்பா இந்த சிவன் கோவிலுக்கு அஞ்சாபுலியெல்லாம் வர்ரதில்ல’

‘இது ஏது விபரீதமா ஒரு கேள்வி வர்ரது’

‘திரும்பவும் கேக்கறேன். இந்த தருமை நாதர் கோவிலுக்கு ஏன் அஞ்சாபுலி எல்லாம் வர்ரதில்ல’

‘ டீ மினாட்சி, இங்க வா இங்க வா’

சந்திரனின் அம்மா  வாயில் திண்ணையை நோக்கி வந்தார்.

‘ இவன் என்ன கேக்கறான் தெரியுமா நோக்கு’

‘’ என்னடா சந்திரா என்ன கேட்டே?’

‘ நம்ப சிவன் கோவிலுக்கு அஞ்சாபுலி எல்லாம் சுவாமி கும்புட ஏன் வர்ரதில்ல? ’ சந்திரன் திரும்பவும் கேட்டான்.

சந்திரனின் அப்பா திண்ணையை விட்டு எழுந்தார். ‘வாடா  நம்மாத்துள்ள கூடத்துல போய் பேசிக்கலாம் எழுந்திரு வா வா’

‘பகல்ல பக்கம்பாத்து பேசணும் ராத்திரில அதுவும் பேசக்கூடாது’ என்றாள் அம்மா.

‘செவுத்துக்கும்  காது இருக்கும்’ என்றார் சந்திரனின் அப்பா.

சந்திரனின் அம்மா வாயில் கதவைத் தாழ் இட்டாள்.

‘கதவ எல்லாம் எதுக்கு மூடற’

‘ இல்ல சந்திரா உனக்கு இந்த  விஷயம் எல்லாம் சரியா தெரியாது. நீ செறு பையன்’

என்று சொல்லிய சந்திரனின் அம்மா கதவைத்தாழிட்டதை மீண்டும் உறுதி செய்துகொண்டாள்.

‘ அப்பாவும் புள்ளயும் எத வேணா இப்ப பேசுங்கோ’ என்றாள் சந்திரனின் அம்மா.

‘அஞ்சாபுலி அவா மனுஷா யாரும் ஊர் தெருவுல ஒருத்தர் ஆத்துள்ளயும் வரமாட்டா. அக்கிரகாரத்துல தூரமா நின்னுதான் அவா பேசணும். கோவிலுக்குள்ள எங்க வர்ரது சொல்லு?’

‘முதுகுன்றத்துல பழமலை அப்பன் கோவில்ல எல்லாரும் போறாதானே’

  நீ சொல்ற அந்த சேதி எல்லாம் இப்பதான்.  அவா எல்லாம் கோவில்ல நுழையறுதுக்கு  நல்ல மனசுகாரா பெரிய  மனுஷா எவ்வளவோ போராட்டம் பண்ணியிருக்கா. அது லேசுபட்ட சமாச்சாரம் இல்ல’

‘ அவாளும் நம்ம மதத்துக்காரதானே. இதுவும் அவாளுக்கு சாமிதானே’

‘யாரு இல்லேன்னா. நம்ம மதத்துக்காராதான். அவாளுக்கும் பிளளையார் கோவில் மாரியம்மன் கோவில்னு காலனியில இருக்கு.  அங்கயும் பூஜை நடக்கிறது. உற்சவம் நடக்கறது. காவடி  எடுக்கறா கரகம் சுத்தரா எல்லாம்தாம். ஆனா நம்ம கோவிலுக்கு அவா வரமாட்டா. நாம அவா கோவிலுக்கு போறது இல்லே.’

‘ அவா பிள்ளையார் அவா மாரியம்மன் நமக்கும் சாமிதானே’

‘ரைட்டா’

‘அப்புறம்’

‘இது எல்லாம் என்ன கேக்கற. நான் எதோ பெரியவா  எங்கிட்ட சொன்னதை  அடுத்தவாளுக்கு சொல்றேன். அவா செஞ்சத வாய மூடிண்டு  செய்றேன். வயறு இருக்கு. பசிக்கறதே.  வேற  எதனா ஒரு வேலயும் எனக்கு தெரியலயே. என்ன பண்ணுவேன்’

சந்திரனின் அப்பா தரையைப்பார்த்துக்கொண்டே இருந்தார்.

‘ நீ இத எல்லாம் எனக்கு சொல்லலயே’

‘அதான் தர்ப கட்டு தூக்கற உத்யோகம் என்னோட போகணும்னு சொன்னேனே அதுக்கு அர்த்தம் என்னன்னு தெரிஞ்சிண்ட’

சந்திரன் அவன் தாயை பார்த்துக்கொண்டான். சந்திரனின் தாய் அவன் தந்தை சொல்வதை ஆமோதிப்பதாகவே முகத்தை வைத்துக்கொண்டாள்.

‘ நம்மாத்து இதே கூடத்துல  என் தாத்தா சாமி அய்யர் காலத்துல காஞ்சி ப்பெரிய பெரியவாள்  சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் உக்காந்து பூஜை பண்ணி இருக்கார். மூண்ணாள் தங்கி இருக்கார். அது ஒரு சமாச்சாரம். ஆனா இந்த தருமங்குடி  கோவில் திருக்குலத்துள  அந்த காலனிக்காரா கால் நனைக்க முடியாத காலம் ஒண்ணு இருந்து இருக்கு. எங்கப்பா எனக்கு சொல்லியிருக்கார். காலனிக்காராளுக்கு தலயில முண்டாசு கிடையாது. கால்ல செறுப்பு கிடையாது. சைக்கிள உருட்டிண்டு போய்  பட்டினத்தான் வாய்க்கால் கரையிலதான் சீட்டுல ஏறி உக்காரமுடியும்’

  அந்த இது எல்லாம் இண்ணைக்கு இல்ல. ஆனா அந்தக் கொடுமை எல்லாம்  இன்னும் முழுசா சரியாயிட்தான்னா அதுதான் இல்ல. மிச்சம் சொச்சம் அப்படியே இருக்கு’

‘ ஆமாண்டா தப்புதான்’

‘இல்ல சதி’

‘ பொண்களுக்கு நம்ம சமூகத்துல எவ்வளவு கொடுமை பண்ணியிருக்கம் அது சொல்லிமுடியாதுடா’

‘எந்த சாதியா  எந்த மதமா  அது எந்த நாடா இருந்தா என்ன பெண்கள்ன்னா அவா ரெண்டாம் பிரஜைதான் இல்லயா’

சந்திரன் தன் தந்தையைப்பார்த்து க்கேட்டான். அவர் பதில் ஏதும் சொல்லாமல் அமைதி ஆனார்.

‘ அடுத்த  மனுஷன மனுஷனாவே பாக்கத்தெரியாத இவாளுக்கு எல்லாம் பகவான் வந்து காட்சி கொடுப்பானா சொல்லு’ சந்திரனின் அம்மா சொல்லிமுடித்தார்.

இரவு சாப்பாட்டு நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. சந்திரனின் அம்மா அனைவருக்கும் டிபன் தயார்செய்து தயாராக வைத்திருந்தாள்.

‘ சாப்பிட்டு படு . இண்ணக்கி  இந்த கதை  பேசினது போறும். வெடிகார்த்தால செஞ்சி பஸ்ஸை  புடிக்கணும் நீ முதுகுன்றம் போகணுமே.’

‘கதை இல்லப்பா இது. வதை.’ என்றான் சந்திரன்.

                                                                   6

மறு நாள் அதிகாலை அம்மா தயார் செய்துகொடுத்த டிபன் கையில் எடுத்துக்கொண்டு சந்திரன் தருமங்குடி பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தான். எப்போதும் வேக வேக மாக நடந்தே அவனுக்கு பழக்கமாகிவிட்டது.அதிகாலை  மணி நாலரை தாண்டி இருந்தது. ஐந்து மணிக்குள்ளாக செஞ்சி பஸ் வந்துவிடும். பிளாஸ்டிக்  வயர் கூடையை சாலை ஒரம் இருந்த சிமெண்ட் மதகின் வைத்துவிட்டு சிதம்பரம் சாலையில் வெளிச்சம் வருகிறதா என்று உற்றுப்பார்த்தான். மூன்று விளக்குகள்  ஃ எழுத்து  போன்று எரிந்தால்தான் அது பேருந்து.  இரண்டு எரிந்தால் அது லாரி . ஒன்று மட்டும் என்றால் பைக்காகவே இருக்கும்.  நன்கு விடிந்துவிட்டால்  இந்த பிரச்சனை எல்லாம் கிடையாது.  எது வருகின்றது என்பதனை  இங்கிருந்தே சொல்லிவிட முடியும்.

மணி இன்னும் ஐந்தாகவில்லை. செஞ்சி வண்டியைத்தான் காணோம். அந்த வண்டிக்கு என்ன ஆயிற்றோ என்கிற கவலை சந்திரனை யோசிக்கவைத்தது. அடுத்த வண்டி ராஜலட்சுமி. அது ஐந்தரைக்குள்ளாக தருமங்குடி பேருந்து நிறுத்தம் வந்துவிடும்.  அந்த ராஜலட்சுமி பேருந்தில் போனால் ஆறுமணி டூட்டிக்குப்போவதற்கு சிரமமாகத்தான் இருக்கும். எப்போதேனும் இந்த செஞ்சி வண்டி இப்படி மக்கார் செய்துவிடுவதுண்டு. அப்போதெல்லாம் ராஜலட்சுமியில் டூட்டிக்குப்போவான். நேரம் டைட்டாக இருக்கும்.

ராஜலட்சுமி பஸ்தான் வந்து நின்றது. அதனில் ஏறிக்கொண்டான். வண்டியில் பத்துபேருக்கு இருக்கலாம். அவ்வளவே. ராஜ லட்சுமி பஸ்ஸில் டேப் ரிகார்டர் அம்சமாகப்படிக்கொண்டிர்ந்தது.’ கோகுலத்தில் பசுக்கள் எல்லாம் கோபாலன்  குழலைக்கேட்டு நாலுபடி பால்கறக்குது இராமாரி! மோகனின் பெயரைச்சொல்லி மூடி வைத்த  பாத்திரத்தில் மூன்று படி நெய் இருக்குது கிருஷ்ணாரி- என்று டேப்பில் ஒடிக்கொண்டிருந்தது   சந்திரனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. கவிஞன் எப்படி எல்லாம்  கற்பனை செய்து பார்க்கிறான். சந்திரன் மனதில் அசை போட்டான். செஞ்சி பஸ் மாதிரி இது இல்லை. சற்று வேகம் அதிகம். ஆறு மணிக்கு  இன்னும்   பாக்கி  ஐந்து நிமிடம். அவன் பேருந்தைவிட்டு இறங்கி தமிழ் நாடு லாரி ஷெட் சந்து வழியாக  சல சலத்து ஓடிக்கொண்டிருக்கும் மணிமுத்தாற்றை வேக வேகமாக க்கடந்தான்.  மணலில் நடப்பது சந்திரனுக்கு ச்சிரமமாகத்தான் இருந்தது. ஆலமரத்து  படித்துறை அருகே வந்து  ரெட்டைத்தெரு அக்கிரகாரம் அருகே  மணி முத்தாற்றை விட்டுக்கரையேறினான்.   ஆலமரத்தின் கீழாக  மரச்செக்கு அமைதியாக நின்றுகொண்டிருந்தது. அதன் அருகே செக்குமாடுகள் அரை உறக்கத்தில் படுத்துக்கிடந்தன. அருகே வாணியர் வீதி இருந்தது. அங்கு குடி இருக்கும்  வாணியச்செட்டியார் ஒருவர்தான் இந்த செக்குக்கு ப்பொறுப்பு. அவரை அனேக தடவை சந்திரன் செக்கடியில் பார்த்து இருக்கிறான்.

 சரியாக ஆறு மணிக்கு தொலைபேசி நிலயத்துக்குள் சந்திரன்  நுழைந்து வருகைப்பதிவேட்டில் கையொப்பமிட்டான். ஆறு மணி டூட்டிக்காரர்கள் இன்னும் இருவர் முதுகுன்றத்தில் தங்கியிருப்பவர்கள் சந்திரனுக்குப்பின்னால்தான் வந்தனர். கையொப்பமிட்டனர்.

செல்லமுத்து சார் அவசர அவசரமாக சைக்கிளை நிறுத்திப்பூட்டிவிட்டு உள் நுழைந்தார்.

‘சார் வணக்கம்’ எல்லோரும் ஒருமித்து சொன்னார்கள். ‘ எல்லாருக்கும் வணக்கம்’ சொல்லி முடித்தார் செல்லமுத்து. நைட் டூட்டி பார்த்த இருவர் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டார்கள்.

‘ என்ன சந்திரன் இண்ணைக்கு கரக்ட் டையத்துக்குத்தான் வந்தீங்க போல.’

‘ ஆமாம் சார்  இண்ணைக்கு மொத பஸ் எனோ வரல. அடுத்த வண்டியிலதான்  நான் வரவேண்டியதாயிட்டுது.’

‘ இருந்தாலும் நீங்கதான் மொத கையெழுத்து போட்டு இருக்கிங்க’

‘ ஆமாம் சார்’ சந்திரன் பதில் சொன்னான்.

உள்ளூர் சேவை வெளியூர் சேவை என அலுவலகம் இரண்டு                    செக்‌ஷன்களாக பிரிக்கப்பட்டுக்கிடந்தது. ஒருவர் தன்னுடைய பணியில் இரண்டு செகஷனிலும் மாறி மாறி அமர்ந்து வேலை பார்ப்பது வழக்கம். வெளியூர் சேவை வழங்கும்  பலகைகள்  சென்னை திருச்சி கடலூர்  மூன்று என்று பகுதியாகப்பிரிந்து இருக்கும்.

 முதுகுன்றத்திற்கு மேற்குப்புறத்தில் உள்ள பெரு நகரங்களான சேலம் கோவை  நாமக்கல் முதலியன திருச்சி வழியே பெறப்படும்.

எண்களை சுழற்றிப்பெறும் வசதி  முதுகுன்றத்திலிருந்து சென்னைக்கு இருந்தது. அந்தத் தடத்தின் வழியே வெவ்வேறு எண்களைப் போட்டு பல பெரு நகரங்களின் தொலைபேசி எண்களையும் பெற்று உள்ளூர் சந்தாதாரர்களுக்கு க்கொடுக்கமுடியும். சந்திரன் இங்கும் அங்குமென அமர்ந்து தன் பணியை முடித்தான். பணி முடித்தமைக்குச்சான்றாக நேரத்தைக்குறித்தான். கையொப்பமிட்டுக் கிளம்பினான்.

செல்லமுத்து சந்திரனை அழைத்தார்.

‘ மெஸ்ல சாப்பிட்டு உடனே வந்துடுங்க. நானு அங்க அதே இடத்துல உங்களுக்காக  வெயிட் பண்றேன்’

‘ சரிங்க சார். நான் வந்துடறேன்’

பதில் சொல்லிவிட்டுப்புறப்பட்டான். மலயாள மாமி மெஸ்ஸில் அன்று கூட்டமும் இல்லை. ஏதேனும்  உள்ளூர் விடுமுறையாகவும் இருக்கலாம்.

‘ இண்ணைக்கு ஆனித்திருமஞ்சனம் சிதம்பரத்துல நடராஜாகோவில்ல தெரிசனம் நடக்கறது. அதனால இந்த மாவட்டத்துக்கு லோகல் ஹாலிடே. . மெஸ்ல கூட்டம் இல்ல. இந்த லீவ வேற ஒரு நாள் வேல செஞ்சி  சரி செய்வா’

விளக்கமாகச்சொன்னார் மலையாள மெஸ் மாமா. மாமி ஏதோ சமையல் கட்டில் பாத்திரங்களை உருட்டி உருட்டி க்கழுவி வைத்துக்கொண்டிருந்தார்.  இவர்களுக்கு இரண்டு பையன்கள். ஒன்றும் பெரிதாக ப்படிக்கவில்லை. பெரியவன் சென்னை அடையாறு கேட் என்னும் பெரிய உணவு விடுதியில் ரூம் பாயாக வேலை பார்த்தான். ஹோட்டலில் வேலை பார்ப்பதில் பல சவுகரியங்கள். முதலில் சாப்பாட்டுப்பிரச்சனை இல்லை. இரண்டாவது தங்குமிடம் ஹோட்டல்காரர்களே கொடுத்து விடுகிறார்கள். அணிந்து கொள்ள சொக்காயும் பேண்ட்டும் அவர்களே வழங்கி விடுகிறார்கள்.  எப்போதேனும் டிப்ஸ்.  வேறு என்ன பிரதான தேவை இருக்கிறது. உண்டியும் உறையுளும்தானே மிக மிகத்தேவை. அது பூர்த்தியாகிவிடுகிறதே. பிறகென்ன? மலயாள மெஸ் மாமா மாமிக்கு அந்தப்பையன் குறித்துக்கவலை இல்லை. இரண்டாவது பையன் பஜ்ஜி ஸ்டால்  ஒன்றை நான்கு சக்கர வண்டியில் வைத்துக்கொண்டு முதுகுன்றம் கடை வீதியில் காவல் நிலயத்துக்கு அருகில் வியாபாரம் பார்க்கிறான். நான்கு சக்கர வண்டிக்கு வாடகை நாள் ஒன்றுக்கு ஐம்பது ரூபாய் என்கிறார் மெஸ் மாமா.

மலையாள மெஸ் மாமாவுக்கு ஒரு பெண். அவளை ஹைதராபாத்தில் ஒரு சமையல்காரனுக்குக்கட்டிக்கொடுத்தார். சந்திரன் அவன் நண்பர்கள் மெஸ் வாடிக்கையாளர்கள் எல்லாரும் சேர்ந்துதான் அந்த க்கலயாணத்தை  விருத்தாம்பிகை சன்னதியில் நடத்திமுடித்தார்கள். அந்தப்பெண் ஹைத்ஜராபாத் போனாள்.  ஒரு நாள் அழுதுகொண்டே  முதுகுன்றம் திரும்பி வந்து விட்டாள்.

’ அவர்  ஒரு கல்யாண வேலை எனக்கு.  நான் போறேன்னு போனார். ரெண்டு நாள் மூணு நாள் ஒருவாரம் ஆளக்கணும். என்னால முடிஞ்ச வரைக்கும்  அங்க இங்க தேடினேன் அலைஞ்சேன். ஆள க்கண்டு பிடிக்க முடியல.  அந்த ஊர் பாஷயும் சரியா தெரியல. அவர் என்ன ஆனாரோ எங்க போனாரோ  என்னால அங்க இருக்க  முடியல. பசிக்கறது. பயமா இருக்கு. என்ன பண்ணுவேன் நான்.  நீ வாங்கி கொடுத்த பித்தள சொம்பு குத்துவிளக்கு வெங்கல பானை இதை  பாத்திரக்கடையில வித்துட்டு அந்தக்காசுல ரயில புடுச்சு சென்னைக்கு வந்துட்டேன். அதுகளயும் நீ பித்தளையில வாங்காம எவர் சில்வர்ல வாங்கி க்கொடுத்திருந்தா நா அங்கயே ரயில்ல உழுந்து செத்துதான் இருக்கணும்.

பெறகு பூக்கடை பஸ் ஸ்டேண்டுல   நம்ம ஊர் பேரு முதுகுன்றம்னு  நமக்குத்தெரிஞ்ச  அந்த பாஷையில  எழுதி நிக்குற பஸ்ஸை பாத்தேன். அப்பதான் எனக்கு கண்  கொஞ்சம் பளிச்சின்னு தெரிஞ்ச மாதிரிக்கு இருந்துது.  அப்பா நான்  இங்கயே  வந்துட்டன்.  திரும்பவும்  ஒனக்கு ஒரு பாரமா  வந்துட்டன்’

 சொல்லி சொல்லி அழுதாள். மாமாவும் மாமியும்  தாம் பெற்ற பெண்ணைக்கட்டிக்கொண்டு அழுது  அழுது முடித்தார்கள்.அத்தோடு சரி அந்த ஹைதராபாத் மாப்பிள்ளைக்கதை. இப்போது இந்த மெஸ்ஸில் பாத்திரம் துலக்கிக்கழுவிவைப்பது கூட்டுவது துடைப்பதுதான் தான் அந்தப்பெண்ணின் பிரதான வேலை.

சந்திரன் மெஸ்சில் சாப்பிட்டு முடித்தான். இன்றைக்கு வெயில் அவ்வளவாக இல்லை. ஆற்றில் இறங்கி குறுக்கு வழியே தமிழ் நாடு லாரி ஷெட் சந்து வழியாக பாலக்கரை சென்றுவிடலாம் என்ற முடிவோடு நடக்கத்தொடங்கினான்.

ஆற்று மணல் இன்றைக்கு அவ்வளவு சூடாகவும் இல்லை. ஆற்றில் ஊற்று போட்டு அந்த ஊற்று நீரில் துணி வெளுக்கும் சலவையாளர்கள் துனிகளை உலர்த்திக்கொண்டிருந்தார்கள். அவை பளிச்சென்று தெரிந்தன.சந்திரன் அண்னாந்து பார்த்தான்.ஆகாயத்தில் கருடன்கள் சில வட்டமிட்டுக்கொண்டிருந்தன. வியாழக்கிழமை மாலை அவைகளைத்தரிசிக்க மணிமுத்தாற்றின் பாலத்தின் மீது எத்தனையோ மக்கள் காத்துக்கிடப்பார்கள். மனிதனுக்கு சில நம்பிக்கைகள் தேவைப்படுகின்றன. அவை வாழ்க்கையில் குறுக்கிடும் துன்பங்களை செரித்துக்கொள்ள அவனுக்குத்துணை செய்கின்றன.மூட நம்பிக்கைகள் இவை என்று தெளிந்து, எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கும் ஞானம் அவனுக்கு வசப்படமாட்டேன் என்று அடம் பிடிக்கிறது.

பாலக்கரை இறக்கம் வந்தாயிற்று அந்த செல்வராசு பூங்காவிற்குள்ளாக செல்லமுத்து அமர்ந்து சந்திரனை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். சந்திரன் அந்த சிமெண்ட் பெஞ்சின் மீது அவருக்குப்பக்கத்தில்போய் அமர்ந்துகொண்டான்.

‘முதுகுன்ற  நகரத்துல பல வக்கீல்கள் உனக்கு தெரிஞ்சி இருக்கும்ல சந்திரன்’

‘ தெரியும் சார்’

‘ இண்ணைக்கி இது பத்தி பேசுறோம். நம்ப ஊர்ல இருக்குற வக்கீல்ல யாரு எந்த வகுப்பினர்னு உங்களுக்கு தெரியும். அய்யரு அய்யங்காரு ராவு பிள்ளை செட்டியாரு  முதலியாரு படையாட்சி  கோனாருன்னு அதுபாட்டுக்கு நீண்டுகிட்டே போவும். ஆனா காலனிக்காரங்க பேரு சொல்லிப்பாருங்க. வருதா’

‘’ஒருத்தரு பேரு  மட்டும் எனக்கு தெரியும்’

‘அதான் விஷயம் காலனிக்காரங்க வக்கீலுக்கு படிக்கறது ரொம்க அபூர்வம்’

‘ ஏன் சார்’

‘அதுல விஷயம் இருக்கு சந்திரன். எதுவும்  லேசு பட்டது இல்லே    ஒரு கேசுன்னா  அந்த காலனிகார வக்கீலுகிட்ட  போய் கும்புடு போட்டு நிக்கணும். அதுக்கு எந்த   ஊர்க்காரனுக்கு மனசு வரும் சொல்லமுடியுமா?.. நமக்கு எது  நெயாயம்னு சொல்லுறதுக்கு இவன் யாரு?  ன்னு யோசனை வந்துடும். அந்த வக்கீலுகிட்ட போய்  நாம கும்புட்டு காசும் கொடுக்கணும். அவரு சொல்லித்தர்ரதை நாம கூண்டுல ஏறி  ஜட்ஜ பாத்தும் சொல்லுணுமா? அது வேணாம்னுதான் பேசுவாங்க’

‘இவ்வளவு நுணுக்கமான விஷயம் நீங்க சொல்லித்தான் .எனக்குத்தெரியும் சார். இப்பிடியெல்லாம் நான் சிந்திச்சி பாக்கவே இல்ல’

சந்திரன் செல்லமுத்துசாருக்குச்சொன்னான்.

‘ நான் பாத்து இருக்கன் கேள்விபட்டுமிருக்கன்.  அனுபவிச்சிம் இருக்கன்  பொழப்புக்கு ஒரு கடை கண்ணி வச்சாலும் இப்பிடித்தான்.  கொடுமை.  கொடுமையோ பொல்லாத கொடுமை.சனங்களுக்கு  இன்னும்  மனசு தெளியல எத்தினி மகாத்மா வந்தா என்னா? எத்தினி யேசு நாதரு வந்தா என்ன?’

சந்திரன் செல்லமுத்து சொல்வதையே கவனமாகக்கேட்டான். இத்தனை விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு வேதனையோடுதான் இந்த சார் இருக்கிறார்  உத்யோகம் பார்க்கிறார். சாரை நினைக்க நினைக்க அவனுக்கு மிக வருத்தமாக இருந்தது.

‘சட்டமேதை மேதை  அந்த அம்பேத்கார்தான் நம்ம அரசியல் சட்டத்தையே உருவாக்கியிருக்கிறார். அவர் ஒடுக்கப்பட்ட சமுதாயத்துக்காரரு இல்லயா சார்’

‘ அது பெரிய கதை சந்திரன்.  சட்ட மேதை அவுரு. உலகம்பூரா சுத்தி   படிக்காத படிப்பு இல்ல. வாங்காத பட்டம் இல்ல.  ஆனா    இந்தியா   திரும்பி வந்தததும்   அவுருக்கு என்ன மரியாதை கிடைச்சிது.  உங்களுக்கு மட்டுமில்ல  அது இந்த உலகத்துக்கே  தெரியும். அவுரு என்ன துன்பம்  எல்லாம் அனுபவிச்சாருன்னா அந்த அய்யாவோட மனசுக்குத்தான்  முழுசா தெரியும்.  கால்ல இருக்குற செறுப்பு எங்க கடிக்குதுன்னு அத போட்டுகினு இருக்குறவனுக்குத்தான் நல்லாத் தெரியும்

.ஆனா ஒண்ண  நான் உறுதியா சொல்லுணும் அண்ணல்  அம்பேத்கார் இல்லன்னா  இண்ணைக்கு எனக்கு கெடச்சியிருக்கே  இந்த  ரவ வாழ்க்கை  அதுவும் இல்ல.இப்பத்தான்  எங்க சனம்  கண்ண தொறந்து       இந்த மண்ணுல , இதுவரைக்கும்  என்ன நடந்துது,  இப்ப என்ன நடக்குதுன்னு பாக்குது’

‘ ஸ்கூல்ல  அம்பேத்கருக்கு  மகாதேவ அம்பேத்கர்னு ஒரு ஆசிரியர்  ரொம்ப உதவியிருந்துருக்காரு. பரோடா மன்னர்  ஷாயாஜி ராவ்   அண்ணல் அம்பேத்கர்  மும்பை ப்பல்கலைக்கழகத்தில படிக்கவும்  பெறகு  அமெரிக்கா  போயி  கொலம்பியா பல்கலைக்கழகத்தில படிக்கவும்  உதவி செஞ்சாருன்னு படிச்சி இருக்கென்’

‘ அப்புறம் என்ன சந்திரன். உங்களுக்கு  வரலாறு எல்லாம் தெரிஞ்சிதான் இருக்கு’

‘ எல்லாம் தெரிஞ்சி இருக்குதுன்னா அது தப்பு சார். நா இப்பதான்  எல்லாத்தையும்   சரியா தெரிஞ்சிகிறேன்’

‘ பரீட்சைக்கு ப்படிக்கறது   மார்க் வாங்கறதுக்கு படிக்கறது  எல்லாம்  படிப்பு இல்ல. வாழ்க்கைக்கு நாம  படிக்கறதுதான் சரியான படிப்பு. அம்பேத்காரை விட  படிச்சவங்க யாரு இருக்கா.   தான் படிச்ச படிப்ப   இந்த சமூகத்துக்கு பயன்படணும்னு அவர் முடிவு  பண்ணினாரு.’

’ சார் நேரம் ஆயிட்டுருக்கு. குஞ்சிதம் பஸ் வர்ர  நேரம்’

‘கரெக்டா ஞாபகப்படுத்துனீங்க  . நம்ப பேச்ச நாளைக்கு த்தொடருவும் சந்திரன்  ’ஆடுகளைத்தான் கோவில்களின் முன்பாக வெட்டுகிறார்களே ஒழிய சிங்கங்களை அல்ல   அம்பேத்கர் அய்யா சொன்னதுதான்.  ஒடுக்கப்பட்டவன் தன்ன சிங்கமா எண்ணைக்கு உணருவான்?’. செல்லமுத்து எழுந்து நின்றுகொண்டார்.

‘ அறியாமையிலேந்து மக்கள் விடுபடுணும் அதுதான் இங்க  ரொம்ப முக்கியம்.  நன்றி சார்  நான் வரேன்.’

 சந்திரன் வேக வேகமாக நடந்து பாலக்கரை பேருந்து நிறுத்தம் நோக்கிச் சென்றான். செல்லமுத்து தன் சைக்கிளை உருட்டிக்கொண்டு கடலூர் தார்ச்சாலையில் சென்றுகொண்டிருந்தார்.

இன்று ஆனித்திருமஞ்சனம் சிதம்பரம் நடராஜா கோவிலில் விசேஷம்  என்பதால்  எல்லா பேருந்திலும்  நல்ல கூட்டம்.  சிதம்பரம் செல்லும் குஞ்சிதம் பஸ்ஸில் கால்வைத்து ஏற இடமில்லை. நின்றுகொண்டே பயணித்து சந்திரன் தருமங்குடிக்குப் போய்ச்சேர்ந்தான்.  அவன் மனதில் அம்பேத்கர் பற்றிய சிந்தனைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது.

வீட்டின் வாயிற்கதவு சும்மா மூடியிருந்தது. வாயிற்கதவைத்தள்ளி த்திறந்துகொண்டு  வீட்டினுள் நுழைந்தான். வயர் கூடையை  மூலையில் வைத்துவிட்டு.

‘ அம்மா அம்மா’ என்றான்.

அம்மாவும் இல்லை அப்பாவும் இல்லை. தோட்டத்து புளியமரத்தின் கீழாக அம்மா புளியம்பழம் பொறுக்கி பொறுக்கி ஒரு கூடையில் போட்டுக்கொண்டு இருந்தாள். அப்பா புளிய மரத்தில் ஏறியிருக்கிறார். புளியமரக் கிளைகளை ஒவ்வொன்றாக   உலுக்கி உலுக்கி விட்டுக்கொண்டிருந்தார்.  புளியம்பழங்கள் தரை மீது சட சட என்று விழுந்தன.

‘சந்திரன் வந்துட்டான் நீ போ’ அவர் மரத்தின் மீதிருந்தே என்னைப்பார்த்து விட்டார்.  உடன் அப்பா அம்மாவுக்கும் கட்டளை தந்தார்.

‘ தோ வந்துட்டன் தோ வந்துட்டன்  ’ அம்மா சொல்லிக்கொண்டே என்னை நோக்கி வந்துகொண்டிருந்தார்.

‘யாரையாவது ஆளு வச்சி புளி உலுக்கலாமே. அப்பாதான் உலுக்கணுமா’

‘ நம்ம ஆத்துல தென்ன மரம் ஏறுறது புளியமரம்  உலுக்கறது நம்ம காலுகாணி வயல்ல   கள  எடுக்கறது எல்லாம் அப்பாதான். எப்பவும் அவர்தான். இண்ணைக்கு நேத்தா இது’

சந்திரன் பதில் ஏதும் சொல்லாமல் தன் தந்தயைப்பார்த்துக்கொண்டே இருந்தான்.

‘ இண்ணைக்கு போதும்  எறங்கிடு எறங்கிடு’   சந்திரன் தன் தந்தையை நோக்கிக்கூவினான்.

‘ பழுத்தது மட்டும் உலுக்கிட்டு வந்துடறேன் தோ வந்துடறேன்’

அவனுக்குப்பதில் சொல்லிவிட்டு அவர் தன் பணியைத்தொடர்ந்தார்.

‘ காபி போடறேன் சாப்பிடு’

‘ சரிம்மா நீ சாப்டாச்சா அப்பா’

‘ நாங்க காபி  சாப்புட்டுட்டுதான் மரத்தண்ட போனோம்’

                                                     7.

‘ நாளைக்கும் இதே டூட்டிதானே’

‘ ஆமாம் அம்மா சொல்ல மறந்துட்டேன்.’

‘ நா தோட்டத்துல இருந்தேன்’

 சந்திரனின் தந்தை இரவு உணவை எப்போதும் சற்று முன்பாகவே எடுத்துக்கொண்டுவிடுவார். அப்படித்தான் அவர் பழகியிருந்தார். சந்திரனும் அவன் தாயும் தாமதமாகவே சாப்பிட்டனர்.

சந்திரன் தனது தந்தையின் அலமாரியைத்திறந்து ஏதேனும் படிக்க புத்தகம் இருக்கிறதா  என்று தேடினான். ரத்தின நாயக்கர் சன்ஸ் வெளியிட்ட சிவப்பு மஞ்சள் அட்டைபோட்ட  பழைய புத்தகம் ஒன்று கிடந்தது.  அந்தப்புத்தகத்தின் பெயரைப்பார்த்தான்.’ மனு தர்ம சாஸ்திரம் என்று எழுதியிருந்தது. அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து அதனில் என்ன விஷயங்கள் சொல்லப்பட்டு  இருக்கிறது என்று பார்க்க ஆரம்பித்தான்.

’என்னடா என்னத்த நோண்டற’

‘’ நோண்டினாதான் உள்ள என்ன என்ன  பண்டம் எல்லாம்  இருக்கும்னு தெரியும் ’ தன் தந்தைக்குப்பதில் சொன்னான்.

திடீரென்று ஒரு பக்கத்தைப்படித்தான். அவனுக்கு  ஆச்சர்யமாக இருந்தது பித்ருக்களுக்கு  திருப்தி காலமும் நாம் சமர்ப்பிக்கும்  பண்டமும் என்கிற தலைப்பை வாசித்தான்.

‘அப்பா அப்பா இதை வாசிக்கறேன் கேட்கறியா’

‘ கேட்டுக்கறேண்டா சொல்லு’

’எள்ளு அரிசி உளுந்து  இவை பித்ருக்களுக்கு   ஒரு மாதம் திருப்தி,

மீன்                                     ரெண்டு மாதம்

மான்                                   மூன்று மாதம்

ஆடு                                     நான்கு மாதம்

பறவை                               ஐந்து  மாதம்

வெள்ளாடு                        ஆறு மாதம்

புள்ளி மான்                       ஏழு மாதம்

கறுப்பு மான்                     எட்டு மாதம்

கலை மான்                       ஒன்பது மாதம்

முள்ளம் பன்றி                 10 மாதம்

ஆமை முயல்                    11 மாதம்

பசுவின் பால் தயிர் நெய்       ஒரு வருடம்

 வெள்ளாட்டுக்கிடா                 12    வருடம்

வாளை மீன்                            அளவிட முடியாத காலம்’.

சந்திரன் தன் தந்தயைப்பார்த்தான். அவர் மவுனமாக இருந்தார். அம்மா அங்கு நின்றுகொண்டு என்ன நடக்கிறது என்பதைக் கவனித்தார்.

‘ சந்திரன்,  நானும் அப்பாவும் படிச்சுட்டு வச்சிருக்கிற புத்தகம்தான் அது’

அம்மா அவனுக்குச்சொன்னாள். சந்திரனின் தந்தை லேசாகப் புன்னகை செய்தார். ’அம்மா சொல்வது சரி’ என்றார்’

‘ எல்லாரும் தெவசத்துக்கு ஒரு  வெள்ளாட்டுக்கிடா கொடுத்தா. அவா  அவா பித்ருக்கு 12 வருஷம் திருப்தி.   தெவசத்துல  வாளை மீனா தானம் கொடுத்தா  அப்புறம்  காலத்துக்கும்  வேற  ஒருதெவசமே கொடுக்கவேண்டாம்.’

‘ ஆமாண்டா அப்பிடித்தான்  அந்த புத்தகத்துல எழுதியிருக்கு’

‘ பிராம்ணா தெவசத்துல  மாமிசம்  இதுகள் எல்லாம் தானமா வாங்கி  சாப்புட்டு இருக்காளா’

‘ அப்படி ஒரு  பழக்கம் அந்த காலத்துல இருந்துது.  அதெல்லாம் புத்தர்னு ஒரு மகா ஞானி  உபதேசிக்காத இருண்ட காலம். அவர் பொறந்துதான்  நல்லது இது  கெட்டது இதுன்னு சொன்னார். அதுல பல நல்ல விஷயங்களை கடன் வாங்கித்தான் பிராம்ணா  அவா  நடமுறைய  துளிபோற  திருத்திண்டா. அதனாலதான் நீனும் நானும் மாமிசம் திங்கல’

சந்திரனின் தந்தை கட கட என்று சிரித்தார்.

‘ நாம தெய்வம்னு தெனம்  தெனம் கும்புடற  அயோத்தி ராமனும் மதுரா கிருஷ்ணனும்  மாமிசம் சாப்டவாதானே’

‘ அவா ரெண்டுபேரும்  க்‌ஷத்ரியாதானே. மாமிசம் மச்சம் சாப்பிடாம இருப்பாளா’ சந்திரனின் தாய் தனக்குத்தெரிந்ததைப்பகிர்ந்துகொண்டாள்.

’ராம ராமா,  போறும்  இப்படி கோணா மாணான்னு பேசறத நிறுத்துங்கோ’ சந்திரனின் அப்பா  அதிர்ந்த குரலில் பேசினார்.  அப்படியும்  இப்படியும் திருப்பித்திருப்பி சந்திரன்  அந்த புத்தகத்தையே  முறைத்துப் பார்த்துக்கொண்டே இருந்தான். பின் அப்படியே உறங்கிப்போனான்.

                                                            8.

விடியற்காலை எழுந்து தன் பணிமுடித்து,   அவனுடைய அம்மா செய்துகொடுத்த டிபனை  கையில் எடுத்துக்கொண்டு  சந்திரன் தருமங்குடி பேருந்து நிறுத்தம் வந்து நின்றான். சரியாக நாலே முக்காலுக்கு எல்லாம்  அன்று செஞ்சி வண்டி வந்துவிட்டது. பஸ்ஸைப்பிடித்து ஐந்தரை மணிக்கு முதுகுன்றம் பாலக்கரை வந்தடைந்தான். இன்னும் சரியாக விடியவில்லை. விடிந்தும் விடியாமலும் இருந்தது. முதுகுன்ற நகரத்து கடைவீதி வெறிச்சோடிக்கிடந்தது. கோவில்மாடுகள் தார்ச்சாலையில் அங்கங்கே படுத்துக்கொண்டு அசைபோட்டன.  மாடுகளின் வயிறு  புடைத்துக்கொண்டுதான் இருந்தது. அவை எங்கு மேய்கின்றன என்பது ஆச்சரியமாகவே இருந்தது. அவை பழமலை நாதனுக்கு நேர்ந்துவிடப்பட்ட பசுக்களாகவும் இருக்கலாம். வீதி ஓர மின்கம்பத்து தெருவிளக்குகள்  இன்னும் எரிந்துகொண்டிருந்தன. தே நீர்க்கடைக்காரர்கள் கடை திறந்து வியாபாரத்தை ஆரம்பித்தார்கள்.

திருச்சியிலிருந்தும் சேலம் ஆத்தூரிலிருந்தும் காய்கறி பழங்கள் சரக்காக ஏற்றிவந்த லாரிகள் தம் சுமைகளை மார்கெட் அருகில் வழக்கம்போல் இறக்கிக்கொண்டிருந்தன. பனியன் அணிந்து  தலையில் முண்டாசுகட்டிய சுமை இறக்குவோர் குரல் உயர்த்தி பேசிக்கொண்டே இருந்தார்கள். சந்திரன் கடைவீதியில் பைய நடந்துகொண்டிருந்தான்.நியூஸ் ஏஜண்ட்டுகள் பத்திரிகைகளைக் கட்டு கட்டாக இறக்கி வைத்துக்கொண்டு அவைகளை ப்பங்கீடு செய்துகொண்டு இருந்தார்கள். சுற்றுப்பட்டு கிராமங்களுக்கும் சிறு நகரங்களுக்கும் அவை பிரித்துப் பிரித்து சிறு சிறு கட்டுக்கட்டாய்க் கட்டி அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.

சைக்கிளில் பணிக்கு வந்த நண்பன் நல்லதம்பி சந்திரனை முதுகில் தட்டினான்.’ வாப்பா இண்ணைக்கும் ஆறு மணி டூட்டிதான் எனக்கு’

‘வாங்க நல்லதம்பி வணக்கம்’

‘ நேரத்த பாருங்க. சரியா ஆறுமணிக்கு  நாம ஆபிசுல இருக்கணும்’

தான் கட்டியிருந்த ஃபேவர் லூபா கடிகாரத்தை  நல்லதம்பி ஒருமுறை பார்த்துக்கொண்டான்.

’இதுல ரேடியமும் இருக்கு ராத்திரி எந்த நேரமும் மணி வேணும்னா பாத்துக்கலாம்’

‘எல்லாம் ஒரு வசதிதான்  மனுஷனுக்கு எதுவும் தேவையாதான் இருக்கு’

‘சைக்கிள உருட்டிகிட்டே வர்ரீங்க, நீங்க ஏறிகிட்டு போவுலாம். ஏன் நடக்குணும்’

‘ நான் இப்ப போயி என்ன செய்யிணும். ஆறு மணின்னா ஆறு மணிதான். முன்னாடி போறதும் தப்பு. லேட்டா போனாலும் தப்பு.’

‘ அப்பா ரயில்வேகாரராச்சே’

  அப்பா அவுரு அந்த நாள் ரயில்வேகாரரு. வெள்ளக்காரங்ககிட்டயே சபாஷ் வாங்கினவரு’

‘ரெட்ட பாப்பாரத்தெரு வழியா போவுலாம்’

இருவரும்  முதுகுன்றம் அக்கிரகாரம் வழியாகத்திரும்பி நடந்துகொண்டிருந்தார்கள்.

‘என்ன சந்திரன் காலையிலயே இந்த தெருவழியா. என்ன ஏதும் சேதி’

‘ நீங்க நெனைக்கிறமாதிரி ஒண்ணும் இல்லே’

‘பின்ன என்னா’

‘பெரிச்சி சந்து வழியா போவுலாம்.  அப்பிடி போனா ஒரே மூத்திரக்கவுலா இருக்கு நல்லதம்பி’

‘சரியாத்தான் எப்பவும்  பதில்  சொல்வீரு’ நல்லதம்பி சிரித்துக்கொண்டான்.

வாசலைப்பெருக்கி க்கோலம் மாமிகளும் பெண்குழந்தைகளும் ஆங்காங்கே தென்பட்டார்கள் வண்ண வண்ண க்கோலங்களும் வெள்ளை மாவுக்கோலங்களும் தெருவெங்கும் அழகு கூட்டின

’கோலத்தை மிறிக்காம வா’

‘அப்பிடிதான் வர்ரேன். சைக்கிள தள்ளிட்டு வர்ரன் அதுல ஒண்ணு ரெண்டு பிசகாயிடுது  மெறிச்சிடறேன்’

சூப்பர்வைசர் செல்லமுத்து மணிமுத்தாற்றின் குறுக்கே நடந்து அரசமரத்தடியில் கரை ஏறிக்கொண்டிருந்தார்.

‘வாங்க சாரு வண்டி என்ன ஆச்சு’

‘ டூட்டிக்கு கெரெக்டா கெளம்பிட்டு வண்டிய  தெருவுல தள்றன். பேக் வீல்ல காத்து  சுத்தமா இல்ல. அப்பிடியே வண்டிய கெடாவிட்டு நடந்து வர்ரன். ஆத்துல எறங்கி குறுக்கால நடந்தேன்’

நல்லதம்பிக்கு செல்லமுத்து பதில் சொன்னார்,

‘என்ன  இண்ணைக்கு பாப்பாரத்தெரு வழி வர்ரிங்க’

‘சந்திரன் நீ தான்  இதுக்கு‘ பதில் சொல்லணும்’

‘ பெரிச்சி சந்துவழியாப்போனா  ஒரே மூத்திர நாத்தமா இருக்கு சார்.  அதனால்தான்.’

‘ஒண்ணும் தப்பு இல்ல. ஒரு தமாசுக்குக் கேட்டேன்’  சிரித்துக்கொண்டார் செல்லமுத்து.

‘எல்லாரும் ஒரே கோட்டுலதான் இருக்கோம்’ நல்லதம்பி சொன்னான். மூவரும் தொலைபேசி நிலயத்தை அடைந்தார்கள். ஆறுமணி டூட்டிக்காரர்கள் இன்னும் இருவர் பணியிடம்  வந்து நைட் டூட்டிக்காரர்களை விடுவித்துக்கொண்டு இருந்தார்கள்.

‘ஆல் ஆஃப்  யூ குட் மார்னிங்க்’

‘ குட் மார்னிங் சார்’ எல்லோரும் சூப்பர்வைசருக்கு வணக்கம் சொன்னார்கள்.

சந்திரன் எப்போதும்  எல்லார்க்கும் வணக்கம்  என்று மட்டுமே சொல்லிப்பழகியிருந்தான். இன்று மதியம் செல்லமுத்து சார் என்ன விஷயங்கள் சொல்ல இருக்கிறாரோ என்று யோசித்துக்கொண்டும் இருந்தான். டிபனுக்கு முன்பாக உள்ளூர் தொலைபேசி சேவையும் டிபன் சாப்பிட்டபின் வெளியூர் சேவையும் பார்ப்பது அவனுக்குப்பிடித்ததாக இருந்தது. தினம் தினம்  ஒவ்வொரு வெளி நாட்டு அழைப்பு கோறும் முதுகுன்ற சந்தாதாரர்கள் இருக்கத்தான் செய்தார்கள். அந்த விபரங்களையெல்லாம் சென்னைதொலைபேசிக்கு உடனுக்கு உடன் சொல்லிவிடவேண்டும். அவர்கள் அந்த விபரப்படி முதுகுன்றத்து சந்தாதாரர்களை  அழைத்து வெளி நாடு வாழ்  தொலைபேசி சந்தா தாரர்களோடு பேசவைப்பார்கள்.

 வெளி நாட்டுக்குப்போன் கனெக்ட் செய்யும் ஆப்ரேட்டர்கள் மிகக்கவனமாக அந்தச்சேவையை ஆற்றி முடிப்பார்கள். சூப்பர்வைசர்கள் உடன் இருந்து அந்த ஆப்ரேட்டர்களுக்கு உதவி செய்வார்கள். ஆலோசனை சொல்வார்கள்.

 மின்னல்வேக கால்கள், இயற்கைச்சீற்றம் பற்றிய கால்கள், மிக முக்கிய அதிகாரிகளின் கால்கள், தேர்தல் அவசரக்கால்கள்  இறப்புச்செய்தி சொல்லும் கால்கள், உயிர் காக்கும்  மருத்துவ மனைக்கு ப்போடும் கால்கள் என ரகம் ரகமாய் தொலைபேசி அழைப்புக்கள் இருந்தன.

டூட்டி முடியும் நேரம் வந்தாயிற்று. சந்திரன் கிளம்புவதற்குத்தயார் ஆனான். எல்லா ஆப்ரேட்டர்களுக்கும் ஒரு ஹெட்செட்  எனும் தலைக்கவசம் கொடுத்திருந்தார்கள். அதனைத்தலையில் மாட்டிக்கொண்டால் இரண்டு காதுகளுக்கும் பொருந்தும் படியாக ஸ்பீக்கர் அதனில் இருக்கும். வாய்க்கு  நேர் எதிரே நிற்கும் மவுத் பீஸ் ஆப்ரேட்டர்  பேசுவதற்கு வசதியாக அதனோடு  பொருத்தப்பட்டு இருக்கும்.  அதனைத்தலையில் மாட்டிக்கொண்டுதான் பணி தொடங்கவெண்டும். பணி முடியும் போது அதனை அவரவர்களுக்குக்கொடுத்திருக்கிற லாக்கரில் வைத்து அதனைப்பூட்டிவிட்டுத்தான் கிளம்பவேண்டும். சந்திரன் ஹெட்செட்டை லாக்கரில் வைத்துப் பூட்டிவிட்டுக்கிளம்பத்தயாரானான்.

‘ சார் சைக்கிள் கொண்டுவல்லபோல. மெஸ்ல இண்ணைக்கு என்னோட சாப்பிடுங்களேன் சார்’

‘வேற ஒரு நாள் சாப்பிடுவோம். இண்ணைக்கு வேண்டாம். ஏன்னா வீட்டுல நான் வருவேன்னு எதிர்பாத்துகிட்டே இருப்பா.  அவ எனக்கும் சேத்து சமைச்சி இருப்பா.’

‘சரி சார் நான் மலயாள மெஸ்ல சாப்பிட்டு வந்துடறேன். நீங்க இங்கேந்து ஒரு பத்து நிமிஷம் கழிச்சி பொறப்படுங்க. நானு மெஸ் வாசல்ல நிக்குறன். நாம ரெண்டு பேரும்சேந்து  ஆத்த கிராஸ் பண்ணிட்டு அப்பிடியே பாலக்கரைக்குபோயிடலாம்’

‘ நல்ல யோசனை. நானு சாயந்திரம் என் சைக்கிள பஞ்சர் பாக்கணும் அது ஒரு வேல எனக்கு புதுசா மொளச்சியிருக்கு’

செல்லமுத்து அலுவலகத்திலேயே சற்றுத் தங்கிவிட்டு ப்புறப்பட்டார். சந்திரன் மெஸ்ஸுக்குச்சென்று சாப்பிட்டு முடித்தான். இருவரும் அரசமரத்தடி செக்குமேட்டு படித்துறையில் இறங்கி ஆற்று மணலில் நடந்தார்கள்.

‘ இண்ணைக்கு வெயில் ஜாஸ்தி’

‘ மணல் காந்துது. கொஞ்சம் ஃபாஸ்ட்டா நடங்க சார்.’

‘ இல்ல என்  செருப்பு வெயில்தாங்குற செருப்புதான்’

சந்திரன் சற்று  வேகவேகமாக நடந்து தமிழ் நாடு லாரிஷெட் சந்து வழியாக கடலூர் சாலையை அடைந்து செல்லமுத்து சாரை எதிர்பார்த்துக்கொண்டு நின்றான். செல்வராஜு பூங்கா எப்போதும்போல் ஆள் அரவமற்றுக்கிடந்தது. அவர்கள் இருவரும்  வழக்கமாக அமர்ந்து பேசும் சிமெண்ட் பெஞ்சின் மீது ஒரு முதியவர் காலை நீட்டிப் படுத்து நல்ல உறக்கத்தில் இருந்தார். காலியாகக்கிடக்கும் வேறு ஒரு சிமெண்ட் பெஞ்சைத்தேடினார்கள். பெஞ்ச் இருந்தது ஆனால் உட்கார்ந்துபேச மரநிழல் வசதியாக இல்லை. பூங்காவின் வடக்குப்பகுதியில் ஒரு நந்தி கோவில் இருந்தது. இந்த நந்தி கோவில் பழமலை நாதர் கோவிலுக்குச்சொந்தமானதாக இருக்கவேண்டும். நந்திகோவிலின் பின்னே தெப்பக்குளம் இருந்தது. இந்த திருக்குளத்தில்தான் மாசி மாத மக உற்சவத்திற்கு மறு நாள்  இரவு தெப்பல் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். பழமல நாதரும் விருத்தாம்பிகையும் தெப்ப மேடைய அலங்கரிப்பார்கள். வண்ண   வண்ண விளக்குகளும் வாண வேடிக்கைகளும் நிகழ்வை மெருகு கூட்டும்.  சந்திரன் ரெண்டு மூன்று முறை இந்த தெப்ப உற்சவ நிகழ்வைப்பார்த்து இருக்கிறான்.

நந்திகோவிலின்பின்பாகத்தில் இருவருக்கும் உட்கார நல்ல இட வசதி இருந்தது. சந்திரனும் செல்லமுத்துவும் அங்கே அமர்ந்துகொண்டார்கள்.

’இந்து மதக்காரங்களுக்கு புனித நூல் எதுன்னு சொல்லுங்க சந்திரன்’ நேராகக் கேள்வியுடன் ஆரம்பித்தார்.

‘பகவத்கீதை’ சந்திரன் பதில் சொன்னார்.

‘எப்பிடியோ அது இண்ணைக்கு இந்துக்களுக்கு புனித நூல்னு வழங்கப்படுது. அதுல ஆயிரம் கேள்விகள் வரலாம். அத விடுங்க.’நான்கு வர்ணத்தை நானே படைத்தேன். செய்யும் தொழிலை  அதற்கு அடிப்படையாக்கினேன்.’ இது யார் சொன்னது தெரியுமா?’

 அந்தக்‘கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதயில சொன்னது’

‘ அந்த பகவத் கீதை  ஸ்லோகம் தெரிஞ்சா சொல்லுங்களேன்’

‘ சதுர்வர்ணம் மயா ஸ்ருஷ்டம், குண கர்ம விபாகஸஹ்.’

‘ சரியா ச்சொன்னீங்க,யாரு சொல்லிக்குடுத்தாங்க இது எல்லாம்’

‘ நான் சிதம்பரத்துல மேலப்புதுத்தெருவுல  தங்கியிருந்துதான்  அண்ணாமலை பல்கலைக்கழகத்துல டேஸ்காலரா பட்டவகுப்பு படிச்சேன். அது என்  அம்மாவுக்கு தமக்கை வீடு.  எங்க பெரியம்மா வீடுன்னு சொல்லுலாம் . அவுங்க நெறய இறை விஷயங்கள் திருவாசகம் திருமூலம்னு  தத்துவங்கள் எல்லாம் படிச்சவங்க. எனக்கு முக்கியமானதை அப்பப்ப சொல்லிக்கொடுப்பாங்க அவுங்க எனக்கு  இன்னொரு தாய்மாதிரின்னு சொல்லுவேன்’

‘ ரொம்ப சந்தோஷம். இப்பிடி விஷயங்கள் தெரிஞ்சி மனமும் விஸ்தாரமா இருந்தா விவாதிக்கறதுக்கு எவ்வளவோ சவுகரியம் அப்படி ஜனங்க அமையணும் எல்லாருக்கும்  அப்படி கெடைக்குமான்னு சொல்லமுடியாது.. நல்ல நண்பர்கள் அமையறது ஒரு ஆசீர்வாதம் சந்திரன்,’

‘முன் ஒரு காலத்துல  சமூகத்துல  நாலு வர்ணம்  மட்டும்தான் இருந்துச்சி. ஆசிரியர்தான் படிக்குற பிள்ளைகள படிப்பு முடிஞ்சதும் பிராம்ணன்                                    க்‌ஷத்ரியன் வைசியன் சூத்திரன் ன்னு தரம் பிரிப்பாரு.கல்வி வீரம் கணிதம் இதுல சிறப்பா இருந்தா, முதல் மூணு பிரிவு  பிராம்ணன்                         க்‌ஷத்ரியன் வைசியன்ன்னு பிரிப்பாங்க,  பெறகு இந்த மூணு பிரிவு காரங்களும் சொல்ற வேலய செய்யுற ஜனம்னு வேற  ஒரு பிரிவு.  அததான் சூத்துரன்னு சொல்றது.பிராம்ணனுடைய பிள்ளை சூத்திரனாவும் ஆகலாம். சூத்திரனுடையபிள்ளை பிராம்ணனாவும் ஆவுலாம். க்‌ஷத்ரியனாவும் வைஸ்யனாவும்  ஆகலாம். அப்படி தகுதி வச்சி வர்ணம் வர்ணமா  பிரிக்கிற அந்த முக்கியமான வேலய  பாடசாலைகள் மட்டுமே செய்தன.’

‘ இது நல்லாதான் இருக்கு சார்’

‘முதல் மூணு பிரிவுக்கு பூணல் போட்டு இருக்காங்க  நாலாவதா இருக்குற சூத்திர வர்ணத்துக்கு  பூணல் இல்ல அந்தப் பாடசாலை ஆசிரியர்தான் பூணல்னு ஒண்ணு எல்லாருக்கும் போட்டு இருக்காரு.. அவ்வளவுதான்’

‘சொல்லுங்க சாரு. இப்பிடி ஒரு  விஷயத்தை நான் இப்பதான் கேள்வி படறேன்’

‘ இதெல்லாம் நான் சொல்லுல.  அண்ணல் அம்பேத்கர் பார்ப்பனியத்தின் வெற்றி’ ங்கிற புத்தகத்துல சொல்லி கிட்டேப்போறாரு’

‘ நல்ல   விஷயம்’

‘இப்பிடி  பாடசாலையில படிச்சி முடிச்ச மாணவர்கள  நாலு வர்ணமா தரம் பிரிக்கிற  வேலய அவுங்களுக்குக் கற்பிச்ச பாடசாலை ஆசிரியர்கள் கிட்டேந்து    பையனோட தந்தைக்குத் தந்திரமாக க்கொண்டு சேத்துட்டாங்க. ஒவ்வொரு தந்தையும் தான் பெத்த மகனை  தன் வர்ணத்துலயே கெட்டியா இருத்தி வச்சிக்கிட் டாங்க.   அது பரம்பரை பரம்பரையா தொடருர விஷயமாயிடுச்சி.  இண்ணய வரைக்கும்   அது தொடர்கதை..  மநு நீதி எழுதி  இந்த சமுதாயத்தை கூறு கூறு  போட்ட மநுதான் இந்தக் கொளறுபடி எல்லாத்தையும் ஆசீர்வதிச்சி தொடங்கி வச்சவரு. அதனாலதான் இண்ணைவரைக்கும்  சமுதாயத்துல இவ்வளவு  பிரச்சனை’

‘ரொம்ப கனமான விஷயம் சார். நீங்க சொல்றது எனக்கு  இப்ப தான் சரியாவே வெளங்குது’

‘ இந்த  நாலு வர்ணத்துக்கு அப்பால இண்ணக்கி  சமுதாயத்துல  அவர்ணம் இல்லன்னா பஞ்சமர் ஒரு இனம் வந்துருக்கே அது   பெரியகொடுமை இல்லயா’

‘கொடுமைதான் சார்’

‘ பசுவ   இந்துக்கள் அவுங்க கும்புடற தெய்வமா ஏத்துகிட்டாங்க. யாரும்  பசுவ கொல்லக்கூடாதுன்னு முடிவாயிடுச்சி.  மாட்டுக்கறி திங்கறவங்கள அத விட முடியாதவங்கள இந்த சமுதாயம் பஞ்சமர்னு ஒதுக்கி வச்சிடுச்சி’  இதையும்  அன்ணல் அம்பேதகர்தான் சொல்றாரு.’

‘புத்தகம் பேரு சார்’

‘தீண்டப்படாதவர் வரலாறு’

‘ மநு, மாமிசம் சாப்பிடறத விஷயம் பத்தி என்ன சொன்னாரு சார்’

‘ மநு மாமிசம் சாப்பிடக்கூடாதுன்னு  எங்கயும் பிராமணர்களுக்கு   சொல்லவே இல்ல. ஜீவ காருண்யத்துல பவுத்த மதத்தையும் தாண்டி  எங்க இந்து மதம்ன்னு நிலை நிறுத்தத்தான்  மேல்சாதிக்காரங்க மாமிசத்த விட்டாங்க. வங்காளத்து பிராமணர்கள் மட்டும்  கங்கை மீன் சாப்பிடாம எங்களால் உயிர்வாழவே முடியாது. நாங்க அந்த மீனு மட்டும் சாப்பிட்டுக்கிறோம்னு ஒரு சமரசத்துக்கு வந்துட்டாங்க. இன்ணைக்கும் கொல்கத்தா அய்யர் வீட்டுக் கல்யாணத்துல மீன் இல்லாம விருந்து கிடையாது.

 இந்து மதத்துல  பிராமணர் அல்லாதோர் பலருக்கு மாமிசத்த விடமுடியல ஆக ‘ மாட்டிறைச்சிய மட்டும் சாப்பிடறது இல்லேன்னு’ ஒரு முடிவுக்கு  வந்தாங்க. அப்பத்தான் மாட்டிறைச்சி சாப்பிடறத விடமுடியாதவங்க எல்லாம்  தீண்டத்தகாதவங்களா ஆனாங்க. இது இப்பிடித்தான் ஆகியிருக்கணும்னு ஆராய்ச்சியாளர்கள் முடிவு. அண்ணல் அம்பேத்கர் அய்யாவும் இத  சரிதான்னு   சொல்றார்’

சந்திரன் விழித்துக்கொண்டவன் போல  தன் கைக்கடிகாரத்தப்பார்த்தான்.

‘ என்ன நேரம் ஆயிடுச்சா’

‘ ஆமாம் சார்’

‘ சரி பாக்கிய அப்புறம் பாப்பம்’ செல்லமுத்து எழுந்து கொண்டார். மதிய வெயில் சுள்ளென்று அடித்துக்கொண்டு இருந்தது. சந்திரன் தன் வயர் கூடையைத்தூக்கிக்கொண்டான். பூங்காவில் அவர்கள் இருவரைத்தவிர யாரும் இல்லை.

‘ அந்தக்கிழவனை க்காணும் சார்’

‘ அவன் இன்னும் சிமெண்ட் பெஞ்சில  படுத்தா இருப்பான். அவனுக்கு பசிக்காதா’

‘சார் நீங்க சாப்பிடாதது மறந்து போனேன். சாரி’

‘ பேசுற விஷயம் அப்பிடி பசி மறந்துபோவுது’

‘ரொம்ப ஆழமான கனமான சமாச்சாரங்கள்தான் சார்’

‘ நானு வர்ரன்’ செல்லமுத்து விடைபெற்றுக்கொண்டார். அவர் வீட்டுக்கு நடந்தேதான் செல்லவேண்டும்.

‘சைக்கிள் பஞ்சர்  ஒட்டற வேல வேற  உங்களுக்கு  இருக்கு சார்’

‘ ஆமாம் சந்திரன்  அதயும் பாக்குணும்’

தூரத்தில் குஞ்சிதம் பஸ் வந்துகொண்டிருந்தான்.  பாலக்கரை பேருந்து நிறுத்தத்தில் யாரும்  அதிகம் இல்லை. அவன் மட்டுமே நின்று கொண்டு வரும்  வண்டிக்கு ’ நிறுத்தப்பா’ என்று சைகை காட்டினான். சிதம்பரம் செல்லும் அந்தப் பேருந்து பாலக்கரை நிறுத்தத்தில் வந்து நின்றது.

                                                 9.

சந்திரன் பேருந்தில் ஏறிக்கொண்டான். அடுத்தது ஸ்டேட் வங்கி நிறுத்தம். அது மேல் நிலைப்பள்ளிக்கு அருகில் இருந்தது. நான்கைந்து பேர் நின்று கொண்டு வண்டிக்கு கை காட்டினார்கள். வண்டியை நிறுத்தச்சொல்லித்தான். வண்டி நின்றது. பேருந்தில் கூட்டமே இல்லை.

‘இது என்ன இந்த சனமா இருக்கும்போல. வண்டிய நாஸ்தி ஆக்கிடுமே’

‘ வண்டி காலியாபோவுதேன்னு பாக்குறன்’ என்றார் டிரைவர்.

‘என்ன சாமி நாங்க ஏன் வண்டிய நாஸ்தி பண்றோம். குளிச்சி மொழுவி சுத்தமா வந்துருக்கோம் சாமி. ஏறுப்பா நம்பாளு எல்லாரும் ஏறு] அந்தகூட்டத்தில் ஒருவன் சொல்லிக்கொண்டே பேருந்தில் ஏறி அமர்ந்தான்.

‘ பாதயில ஒக்காராதே’

‘ இல்ல சாமி  சீட்டுல ஒக்காந்தா  அய்யா சண்டைக்கு வருவ. சத்தம் போடுவேன்னுதான்’

‘ நல்லா சீட்டுல ஏறி குந்து சீட்ட வீணாக்கிடாதே. எங்க போவுது எல்லாம்’

‘தீப்பஞ்சா கொவிலு’

‘ இந்த பஸ்  அந்த ஊருக்கு போவாதே’

‘அப்புறம்.செத்த கண்ணெடுத்து பாருங்கசாமி ஒரு ஒதவி ஒரு ஒத்தாசை’

பேருந்தில் ஏறிய நால்வரில் அவனே உயரமாக இருந்தான். வேறு யாரும் ஒன்றும் பேசாமல் இருந்தனர்.

‘சேத்தியாதோப்புல  நாலு பேரும்எறங்கிகிங்க அப்பிடியே நாலு தப்பிடி அந்த வெள்ளாத்து ஆத்து பாலத்த தாண்டுனா தீப்பாஞ்ச நாச்சியார் கோவில். பெறகென்ன’

‘ நல்ல ரோசனை சாமி’

‘ நீங்க நாலு பேரு, ரெண்டு சீட்டுல ஒரு பக்கமா உக்காருங்க.’

‘வண்டி காலியாத்தான கெடக்கு’

‘’ பேச்சு பேசாதே உங்கள ஏத்துனன். அது என் தப்பு’

‘சாமி எம்மாம் நாளு நாங்க இந்த பஸ்ல  எல்லாம் ஏறாம நடந்தே போவுறது. சாமி  நாங்களும் சோப் போட்டு குளிக்கறம் பல்ல நல்லதான் வெளக்குறம். துணிய தொவச்சிதான் கட்டுறம்.  தல முடிய  பரியாரிகிட்டதான் வெட்டிகறம். நாங்களே  ஒத்தருக்கு ஒத்தர் வெட்டிகறது அந்தக்காலம்’

‘தேவுலாம் நல்ல பேசுற’

‘ நாங்க எப்பவும்  ரயில்ல சும்மாதான் ஏறுவம். ரயிலு வந்த நாளா இப்பிடித்தான்சாமி  ஆனா ஒரு சமாச்சாரம்  ரயில்ல டிக்கட்டு காட்டுன்னு யாரு எவுரு எங்கள கேட்டா,  நாங்க பாட்டுகு ஏறுவம் எறங்குவம்.   அந்த  ரயிலு ஆபிசண்டதான்  நாங்க  மொத்தமும் குடியிருக்கறம் இண்ணைக்கு நேத்தி சேதியா இது’

‘ எனக்கு ஜோலி இருக்கு. உன் கத கேக்க நானா ஆளு’ சொல்லிய கண்டக்டர் டிரைவருக்குப்பக்கத்து சீட்டில் அமர்ந்துகொண்டு  டிக்கட் கணக்குப்பார்த்துக்கொண்டு இருந்தார்.  தோளில்  தொங்கும்  தோல் பையில் இருக்கும்  ரூபாய் எவ்வளவு என்று எண்னிக்கொண்டார்.

சந்திரன் நரிக்குறவர்களையே பார்த்துக்கொண்டு வந்தான். அவர்கள் வித்யாசமான மொழி ஒன்றைப்பேசினர். குறத்தி பாஷை குறவனுக்குப்புரியும் என்ற ஒரு பழமொழியை தருமங்குடி சாமிநாத குருக்கள் பலமுறை  சொல்லக்கேட்டும் இருக்கிறான்.

’ ஏன் நீங்க தமிழ் பேசுறது இல்ல’

‘ இல்ல சாமி’ உயரமானவன்தான் பதில் சொன்னான்.

‘ அது ஏன்’

‘ எங்கள கேட்டா  அந்தக்கத எப்பிடி ஆவுறது’

‘ நீங்க பேசுற பாஷ யாரு எல்லாம் பேசுவாங்க. அவுங்க எங்க எல்லாம் இருக்குறாங்க’

‘ரயிலு போவுற ஊருல சின்ன ஊருன்னாலும்  அங்க . எங்க சனம் இருக்கு சாமி. இந்த பஸ்ல எல்லாம்தான் நாங்க ஏறக்கூடாதுன்னு  கண்டபடி பேசுவாங்க. தொறத்துவாங்க. ஆனா  நங்க லாரில ஏறி போறதுண்டு. சினிமா கொட்டாயில நாங்க எங்க குந்துவம் நீங்க  பாத்து இருப்பிங்க. அந்த தெர சீல கிட்டதான்.  சிமெண்ட் தரையில் குந்துவம்.  எங்களுக்கு  பசின்னாலும் ஓட்டலு  உள்ள  நாங்க போமுடியாது சாப்புட முடியாது. ஓடு ஓடுன்னு தெரத்தி அடிப்பாங்க சாமி’

‘ நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க பாட்டு தெரியுமா’

‘ சாமி எங்க பாட்டு அது எங்க  தலைவரு பாடுனது. ஒளி விளக்குன்னு படம் வந்துதுல்ல. நானு முப்பது தபா அந்த படம் பாத்தன்’

‘ முப்பதுன்னு  உனக்கு எழுதத் தெரியுமா’

 கடகட என்று சிரித்தான். ’அது எல்லாம் இன்னதுன்னு தெரிஞ்சா நா பூமில நிக்கமாட்டன். கோவிச்சுகாதிங்க சாமி . எனக்கு அது கூடம் மானம்பாக்கும் சாமி.  எனக்கு ஒண்ணுமே தெரியாது சாமி.  வெத்து மண்ணுதான் சாமி நாங்க மொத்தமா’

சந்திரன் அவன் சொல்வதைக் கவனமாகக்கேட்டுக்கொண்டிருந்தான். இந்த  நரிக்குறச்சமுதாயம் இன்னும் எவ்வளவு காலம்தான் இருளில் கிடக்கும் என்று எண்ணிக்கொண்டே  பேருந்தில் அமர்ந்திருந்தான்.

‘ சாரு தருமங்குடி வந்தாச்சி’

கண்டக்டர்  ஓங்கிச்சொன்னதும்தான் அவனுக்கு ஊர் நினைவு வந்தது. தருமங்குடி நிறுத்தத்தில் இறங்கி  மண் சாலையில்  நடக்க ஆரம்பித்தான். வெயில் சுத்தமாக இல்லை.  வானம் மப்பும் மந்தாரமாக இருந்தது. மழை வந்துவிடுமோ எனக்கூட அச்சமாக இருந்தது. கோடைகாலத்தில் அவன் குடை எடுத்துக்கொண்டு வெளியில் வரும் பழக்கம் இல்லாமல்தான் இருந்தான்.

----------------------------------------------------------------------------------

                                                           10.

வீட்டு வாயிலில் சந்திரனின் அம்மா  புளியம்பழங்களை உடைத்துக்கொண்டிருந்தாள். கூடை நிறைய புளியம்பழங்கள் இருந்தன. வீட்டு வேலைகளில்  பத்து பாத்திரம் தேய்த்தல்  வீடு கூட்டிப்பெருக்குதல்  என அம்மாவுக்கு ஒத்தாசையாக தங்காயாதான்.  புளியம்பழங்களை உடைத்தல்  கொட்டை நீக்குதல்  என்றாலும் எப்போதும் அவளே ஒத்தாசை. தங்காயாவின் கணவன் குப்பன். அவன்தான் தருமங்குடி மாரி கோவிலில் பூசாரியாக வேலைபார்த்தான். விழாக்காலங்களில்  அந்த மாரியம்மனின் வேப்பிலைக்  கரகம் தூக்கி ஊர் சுற்றி வருவான்   குப்பனுக்கு வயதும் ஆகியது உடலும் தளர்ந்து போனது. அவன் காலமாகி ஒரு பத்து வருடங்கள் ஆகியிருக்கலாம்  இவர்களின் மகள் சகுந்தலா. சந்திரனோடு   தருமங்குடி ஆரம்பப்பள்ளியில் மூன்றாம் வகுப்புவரை படித்தாள்.  படிப்பு அத்தோடு சரி..

தங்காயா சகுந்தலாவை கம்மாபுரம் அருகே கீழப்பாலையூர் என்னும்  கிராமத்தில் திருமணம் செய்து கொடுத்தாள்.  சகுந்தலாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.  கூலி வேலைதான் ஏதோ காலம் ஒடிக்கொண்டு இருந்தது. ஒரு நாள் சகுந்தலாவின் கணவன் சுரெமெனப்படுத்தான். அவ்வளவுதான். போய்ச்சேர்ந்தான்.  பின்னர்  பெற்ற குழந்தைக்கும் வயிற்றுப்போக்கு என வந்தது. சகுந்தலா இங்கும் அங்கும் அலைந்து கை வைத்தியம் பார்த்தாள். அதுவும் ’ போதுமம்மா நீ ஏன்  கஷ்டப்படுகிறாய்’ என்று  போய்ச்சேர்ந்தது. தனி மரமாக நின்றாள் சகுந்தலா.  தனது  அம்மா தங்காயாவிடமே   தருமங்குடி  கிராமம் வந்து சேர்ந்தாள்.

அம்மாவும் மகளும் என தருமங்குடி  கார்காத்தார் பிள்ளை ஒருவரின் காலி மனையில் சிறிய கூரை வீடு கட்டிக்கொண்டு வாழ்ந்து வந்தனர். தங்காயா அந்த சைவப்பிள்ளை வீட்டுக்கும்  வீடுகூட்டவும்  பத்து பாத்திரம் தேய்க்கவும் தினம் தினம் போய் வருவாள். தாட்சண்ணியம்  ஆயிற்றே  அவள் போய்த்தான் ஆகவேண்டும்.

‘தம்பி வந்துடுச்சி   நம்ப தம்பிக்கு எப்ப கால் கட்டு போடுறது தங்காயா கேட்டாள்.

‘அதுக்கெல்லாம் இன்னும் நாளு இருக்கு தங்காயா. இப்பக்கி ஆவுற கதையில்ல’

‘ நாம தெம்பா இருக்கக்குள்ள செய்துடுணும். போவுணும் வருணும். நாம குந்திட்டம்னா அப்புறம் அது வாட்டப்படுமா’

சந்திரன் தங்காயா சொல்வதைக்கேட்டுக்கொண்டேதான் வீட்டின் உள்ளே நுழைந்தான். விளையாட்டுக்குத்தான் தங்காயா இப்படிப்பேசுகிறாள். அவனுக்கும் தெரியாதா என்ன?

‘ ஆமாம் நா எழுந்திரிக்கிறேன்’ சந்திரனின் அம்மா எழுந்து வீட்டின் உள்ளே போனாள். சந்திரன் தனது வயர் கூடையை  ஒரு ஓரமாய் வைத்துவிட்டு கை கால்களை அலம்பிக்கொண்டான்.

‘’ நாளைக்கும் ஆறு மணி டூட்டிதான்’

‘ சரிப்பா’

‘ காபி கொடேன்’

அம்மா அடுப்பங்கரைக்குச்சென்றாள். தபால் ஏதேனும் வந்ததா என வழக்கமாய் அவை வைக்கப்படும் இடத்தை ஆராய்ந்தான்.

‘தபால் ஒண்ணும் வரல’

அம்மா அடுப்பங்கரையிலிருந்து சத்தமாகச்சொன்னாள். காபி கொண்டு வந்த அம்மா அதனை அவனிடம் கொடுத்தா

‘ டிகாஷன் சரியா இருக்கா.  எனக்கு போறாதுன்னு தோணித்து’

‘ உனக்குப்போறாதுன்னு’

‘இல்லடா காபில  டிகாஷன் போறுமான்னு. அதான்’ சிரித்துக்கொண்டாள்.

‘ எல்லாம் அமர்க்களமா இருக்கு’ சொல்லி காபியை சாப்பிட்டு முடித்தான்.

‘அப்பாவக்காணுமே’

‘அவர் வளையமாதேவி வரைக்கும் போயிருக்கார். நாலு இடத்துல திவசம் அவா அவாளுண்ட சேதி சொல்லணும்னு சீட்டுல குறிச்சிண்டு போயிருக்கார். நம்பாத்து தோட்டத்துல பாகற்காய் காச்சி இருக்கே அத பறிச்சிண்டு போயிருக்கார். அப்பாவுக்கு சினேகிதம் அங்கப்பன். அதான் அங்கப்ப படையாச்சின்னு. வளையமாதேவி கீழ் பாகத்துல  வேதபுரீஸ்வரர் கோவிலண்ட வீடுன்னு சொல்லுவார்.  அந்த அங்கப்பனுக்கு  நம்பாத்து பாகற்காய்னா கொள்ள பிரியமாம்.நான் எங்க அங்கப்பன் வீடெல்லாம் பாத்தன் சொல்லு’

  அடைமழை காலத்துல காஞ்ச வெறகா பாத்து அத  சின்ன சின்ன கட்டா கட்டி அங்கப்பன் கொடுத்துருக்கார். நீ ஈர வெறகு வச்சிண்டு அடுப்பங்கரயில முழி முழிண்டு இருப்பே.  நான் வளையமாதேவி போய்  அந்த அங்கப்பன் கிட்டேந்து அந்த காஞ்ச வெறக எடுத்துண்டு  அதுகள சைக்கிள் காரியரில்ல எடுத்து  வச்சு கட்டி கொண்டு  நம்மாத்துக்கு வந்துருக்கன். அங்கப்பன் செஞ்சது  சின்ன உதவிதான் அந்த நேரத்துல அது எவ்வளவு  பெரிய ஒத்தாசை தெரியுமா’

‘ சமைக்கிற பொம்மனாட்டி  நா  அது எனக்குத்தெரியாதாடா.’ சந்திரனின் அம்மா சொல்லிக்கொண்டிருந்தாள்.

‘அம்மா  கூடைல கெடந்த  எல்லா சோட்டாணும் புளியாக்கி ஆச்சி. வெயில்ல ஒரு தரம்  அத போட்டு எடுத்துடா  பெறவு கொட்ட எடுத்துடலாம்’

‘சரி தங்காயா இண்ணைக்கு இதோட இருக்கட்டும். நாளைக்கு கொற கத பாக்கலாம்’

‘ நானு வர்ரன்மா.’

மதியம் மீந்துபோன உணவு இத்யாதிகளையும் இன்று புளி உடைத்ததற்கான கூலியும் தங்காயாவுக்கு சந்திரனின் அம்மா கொண்டு கொடுத்தாள்.

‘ எங்க சகு’  சகுந்தலாவை  அவன் அம்மா அப்படியும் அழைப்பதுண்டு.

‘ அது புள்ள வூட்டுக்கு போயிருக்கு. இன்னும் வருல’

‘ நாளைக்கு அந்த சகுவும் வந்துதுன்னா புளி வேல சட்டுபுட்டுன்னு ஆவும்’

‘ சொல்றேன். அதயும் இட்டாறன்’

அம்மா கொடுத்த பாத்திரங்களில் சிலவோடு தங்காயா தன் வீட்டுக்கு நடந்தாள்.

சந்திரன் சற்றுப் படுத்து சற்று ஓய்வு எடுத்துக்கொண்டான்.  சந்திரனின் அம்மா  அடுப்படியில் ஏதோ வேலையைத்தொடர்ந்து செய்துகொண்டிருந்தாள். 

கிணிங் கிணிங் என்று ஒற்றை ஒற்றையாய் சைக்கிள் மணி அடித்துக்கொண்டு சந்திரனின் தந்தை வெள்ளாழத்தெரு வழியாக வீட்டுக்குத்திரும்பிக்கொண்டிருந்தார். சைக்கிள் காரியரில் அங்கப்பன் அனுப்பிய  சிறு சிறு விறகுக்ககட்டுக்கள் இருந்தன. வழியில் தேவாரம் ராஜகோபால் பிள்ளை நின்றுகொண்டிருந்தார். அவரைப்பார்த்ததும் சைக்கிளை நிறுத்திவிட்டு கீழிறங்கி, ’

அய்யா திவசம் வருது’ என்றார்.

‘தெரியும்  ஸ்வாமி ஆனி மாசம் பருவத்துக்கு எட்டாவது நாள்  அந்த அஷ்டமி திதி தெரியுமே எனக்கு’

‘ நானு சொல்லவேண்டிய மொறைக்கு சொல்றன்’

‘ அதுவும் சரிதான்  சந்திரன் வீட்டுல இருக்காரா’

‘ நான் பாக்குல. நா மதியமே பொறப்பட்டேன். அனேகமாய் வந்துருப்பான்‘ நான் இப்பதான் வளையமாதேவி போயிட்டு வர்ரன்’

‘ அவுருகிட்ட செத்த பேசிகிட்டு இருக்கலாம்’

‘ பிள்ளைவாள்  எங்கிட்ட எல்லாம் பேசமாட்டிங்களா’

‘ அய்யாகிட்ட பேசுறது வேற சந்திரன் கிட்ட பேசுறது வேறயாச்சே’

சரியாகத்தான் சொல்கிறார் பிள்ளை என்பதை கணக்குப்போட்ட சந்திரனின் அப்பா’ அவன் கொஞ்சம் படிச்சவன்’ என்றார்,

‘படிச்சவரு ன்னு  சொல்றதைவிட படிக்கவேண்டியத படிச்சவருன்னு சொல்லுலாம்’

பிள்ளை பதில் சொன்னார்.

சந்திரனின் தந்தை சைக்கிளை உருட்டிக்கொண்டே  போனார்.

‘ அய்யா இது என்ன காரியர்ல’

‘ காஞ்ச வெறகு  அடுப்புக்கு வளையமாதேவி  அங்கப்பன் என் செனேகிதன் கொடுத்தான்’

‘ அதுக    அய்யிரு வீட்டு  அம்மா  அடுப்பங்கரையில   வளக்குற ஓமத்துக்கு’ பிள்ளை சொன்னார்.சந்திரனின் அப்பா சிரித்துக்கொண்டார்.

இருவரும் பேசிக்கொண்டே அரசமரம் கடந்து  சந்திரன் வீட்டுத்திண்ணைக்கு வந்தனர். பெரிய திண்ணையில் அமர்ந்துகொண்டார்கள்  சந்திரன்  அப்போதுதான் எழுந்து வாசலுக்கு வந்தான். தந்தை சைக்கிளில் கொண்டுவந்த விறகுக்கட்டை எடுத்து ஓரம் செய்தான்.சைக்கிளை ரேழியில் தள்ளி வைத்து ஸ்டாண்ட் போட்டான். வாயில் திண்ணைக்கு வந்தான்.

‘வாங்க பிள்ளை நமஸ்காரம்’

‘ நல்லது  அய்யா வாங்க’ சந்திரனுக்கு ப்பதில் சொன்னார் பிள்ளை

, என்னங்க பிள்ளை எப்பிடி இருக்கிங்க’

 நல்லா இருக்குறன். குறுவக்கி வயல்ல வேல நடக்குது’

‘ தண்ணி வசதி எப்படி’

‘ போர்செட் இருக்கு. எஞ்சினும் இருக்கு. எண்ணெய் வாங்கி ஊத்தணும் குறுவைக்கு இந்தகதெ. சம்பாவுக்கு ஏரி தண்ணி வரும் மழயும் பெய்யும்’

சந்திரனின் அப்பா வீட்டின்  உள்ளிருந்து  வெளியே வந்தார்.‘ நடக்கட்டும்’ என்றார்.’ நீங்கள் உங்கள் வேலயை ப்பாருங்கள் நான் என் வேலய பார்க்கிறேன்’ என்பதுவே அந்த நடக்கட்டும் என்பதற்குப்பொருள். அங்கப்பன் கொடுத்தனுப்பிய விறகுக்கட்டை த்தூக்கிக்கொண்டு வீட்டின் உள்ளே சென்றார்.

‘ நான் எடுத்துட்டு வந்து வைக்கிறன்’

‘ பரவாயில்லேடா. நீங்க  பேசிகிட்டு இருங்க, நா செய்யுறது இது பெரிய வேல இல்லே’ சொல்லிக்கொண்டே தன் வேலையைத்தொடர்ந்து கொண்டிருந்தார். கனமான விஷயங்களை அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை அவரும் காதில் வாங்கிக்கொள்ளாமல் இருப்பதில்லை.

‘ வடலூர் வள்ளல் ராமலிங்கர் பயிர் வாடுவதைக்காண்பார். கண்டு தனது மனக்கஷ்டத்தை பாடியிருப்பார் உங்களுக்கு த்தெரியாதது இல்ல’

‘ ஆமாம் என்றார். தனது கண்களை மூடிக்கொண்டார் ராஜகோபால் பிள்ளை,  பாடவும் ஆரம்பித்துவிட்டார்,

வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே

வீடுதோறிரந்தும் பசியறாதயர்ந்த வெற்றரைக்கண்டுளம் பதைத்தேன்

நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர் உறக்கண்டுளந்துடித்தேன்

ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.

சரிதானா’

‘ரொம்ப சரிங்க பிள்ளை’

‘இங்க வாடிய  பயிரைங்கற வார்த்தையை போடுறார் பாருங்க’

‘ ஆமாம் விவசாயிங்க  மத்தியில வாழ்ந்தவரு. எளிய விவசாய குடும்பத்து மனுஷன் அல்லவா,   அந்தக்காவிரி நீர் கொள்ளிடம் வழியா வீராணம் வந்து பின்   வள்ளல் ராமலிங்கர் பொறந்த  மருதூர் பகுதி முச்சூடும் வளம்  சேர்ப்பதாயிற்றே’ என்றார் பிள்ளை.

’ வாடுவதும்,பதைப்பதும்,துடிப்பதும், இளைப்பதும்  தனக்கு இங்கே  நேர்வதாய்  அய்யா குறிப்பிடுகிறார்’

‘ வாடிய பயிர்  வயலில் பாடுபட்ட  வெவசாயியின் துயரத்தைச்சொல்லுது’

‘ ஏழைகளாய் இருக்கிறார்கள் ஆனால் ஒப்பற்ற தன் மானம் உள்ளவர்களாய் இருக்கிறார்கள்.   அவர்கள்   நெஞ்சு இளைத்துப்போகிறது. இவை கண்டு தானும் இளைத்துப்போவதாய் அய்யா  இங்க குறிப்பிடுகிறார்’

  வள்ளலார் தெய்வப்பொறப்பு,  ’கருணை இலா ஆட்சி கடுகி  ஒழிக அருள் நயந்த நன் மார்க்கர் ஆள்க’ன்னு எழுதினவரு. நீங்க வடலூர்ல   ஜோதி எல்லாம் பாத்து இருப்பிங்களே’

‘ நானு மொத மொதல்ல  வடலூர்ல சேஷசாயீன்னு ஒரு   பீங்கான்  கம்பெனியில வேல பாத்தன்.  அது கரண்ட் போஸ்ட் டு மரத்துல முடுக்குவாங்களே அந்தப் பீங்கான் இன்சுலேட்டர்  கொவளைங்க தயார் செய்யுற ஆலை பெறகுதான முதுகுன்றம்  டெலிபோன் ஆபிசுல ஆப்ரேட்டர் வேலைக்குக்கு வந்தன். வடலூர்ல அங்க எங்க சின்னம்மா இருந்தாங்க’

‘ பங்குசம்தான சின்னம்மா, எனக்குத்தெரியாதா அந்த  கோவால் அய்யா  உங்க சித்தப்பா கடியாரம் வாச் ரிப்பேர் கடை வச்சிருந்தாரு’

பங்கஜம் பங்குசமாக, கோபாலன் கோவாலாக அவர் பேச்சுமொழியில் வெளிப்பட்டது சந்திரனுக்குப்புதிது இல்லை. தருமங்குடி மக்கள் அப்படித்தான் அழைத்துப்பழகியிருந்தார்கள்.

‘ சரியாத்தான் சொல்றீங்க பிள்ள’

  வடலூர்ல பெரிய ரோட்டுக்கும் தெக்க பார்வதிபுரம்னு ஊர் இருக்கு. அங்கதான் அய்யா  ராமலிங்கரு ஆண்டவனை ஜோதி ரூவத்துல வழிபட்ட சத்ய ஞான சபை இருக்கு. தைப்பூசம்  இங்க  ரொம்பரொம்ப விசேஷம்.  பூசத்தண்ணிக்கு ஏழு திரைங்க நீக்கி  அந்த ஜோதி தரிசனம் காட்டுவாங்க. கற்பூர ஆரத்திதான் அது கண்ணாடியில ஓகோன்னு சூரியன் கெளம்புற கணக்கா தெரியும். அது வருஷத்துக்கு ஒரு மொறதான் அது. தை மாசத்துல வரும். மத்தபடி   மாசா மாசம் பூச நச்சத்திரத்துல ஆறு திரை நீக்கி அங்க  ஜோதி காட்டுவாங்க அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதின்னு கோஷமா போடுவாங்க. ரொம்பதான் ஜனம் வரும்.  சாமி கும்புடும். ஏகத்துக்கு அன்னதானம் அங்க அங்க நடக்கும். பசின்னு அன்னிக்கு  வடலூர்ல ஒரு மனுஷன் தன் வாயால சொல்லவே முடியாது. பல பல கடைங்க வரும். கரும்பு வாழைப்பழம்னு ஏலம் நடக்கும். ஜே ஜேன்னுதான் இருக்கும் நானு போயி வந்துருக்கன்.   தே இந்த வளையமேதேவி தாண்டுனா குறுக்க மதுவானைமேடுன்னு  ஒரு ஊரு அப்புறம் நடந்தே வடலூரு போயி வந்துடுவன்.  வடலூர்ல அய்யா ஏழபாழைங்களுக்கு அன்னதானம்னு செஞ்சவரு. அய்யா அண்ணைக்கி அந்த அன்னதான தருமத்துக்கு  சோறு பொங்குன  அதே அடுப்புல  இண்ணைக்கும் அக்னி  எரியுது   போனா எல்லாரும் பாக்குலாம். மனுஷனுக்கு வவுத்துப்  பசிதான பெரிய கொடுமை. அத அய்யா பெரிய சமாச்சாரமா முக்கியமா பாத்து இருக்குறாரு.  திருக்குறள் வகுப்புன்னு கூடம் ஜன்னங்களுக்கு நடத்தி  அறிவு தானம் பண்ணின பெரியவரு .வடலூருக்குப்பக்கம் மேட்டுக்குப்பம் னு கிராமம் அங்க  ஒரு ரூம்புல போயி கதவ தாப்பா போட்டுகுனாரு. அவ்வளவுதான்.  அப்பிடியே ஜோதியில கலந்து மறஞ்சிட்ட  பெரிய மனுஷனாச்சே. அங்க போயி பாத்திங்களா’

‘ போயிருக்கேன்  அந்த கட்டிடத்த பாத்து இருக்கன்’

‘ அவுரு பொறந்த மருதூர்’

‘அங்கயும் போயி அவுரு பொறந்த வீட்டைப்பாத்தன். அது மருதூரு ஒரு குக்கிராமம். பூபுரா பூரா நஞ்சை. அய்யா பொறந்த  வீடு சின்ன வீடு ஒரு குத்து விளக்கு எரியுது  அதான்  அய்யா மறைஞ்ச  அந்த மேட்டுக்குப்பமும் கிராமந்தான்.  அய்யா ஏற்படுத்துன  சத்திய ஞான சபை இருக்குற வடலூரு மாத்திரம் என்ன  இப்ப இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சம் டவுனாயிட்டு வருது. சென்னை கும்பகோணம் போற ரோடும் கடலூர் சேலம் ரோடும் சந்திக்கிற எடம்  அங்க கூட்டு ரோடு இருக்கு. அங்க செல கடைங்க வந்துருக்கு. கம்பெனிங்க சிலது  இப்ப இப்ப  தொறந்து இருக்காங்க   அங்க அங்க வேலங்க நடக்குது’

  பக்கத்துல நெய்வெலில பெரிய  பெரிய நிலக்கரி ஆல கரண்டு தயாரிக்கிற ஆலன்னு வந்து  இந்தப்பக்கம் ஏகமா வளந்து தான் இருக்கு. வடலூருல ரயில்வே ஸ்டேசன் கூட இருக்குதே. கடலூர் சேலம் ரயிலு இப்பிடித்தான் போவுது’ என்று தனக்குத்தெரிந்த சில செய்திகள் சொன்னார் பிள்ளை.

‘ மணி எட்டு  ஆகி இருக்குமா’

  அதுக்குள்ளயா எட்டுன்னு சொல்றீங்க’

சந்திரனின் அம்மா வாயிலுக்கு வந்தார். இருவரும் பேசிக்கொண்டிருப்பதைக்கவனித்தார்.

‘ சத் சங்கம் நடக்குதுபோல’

‘ இல்லம்மா ரவ பேசிகிட்டு இருக்கம். ஒண்ணும் அக்கப்போர் இல்ல. நல்ல சேதிங்க பேசிக்கிட்டு இருக்கம்’

’சாப்பிடலாம் பிள்ள’

‘ இல்லம்மா ஆச்சி எதிர்பார்த்துட்டு இருப்பாங்க. நானு கெளம்புறன்’ துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு கிளம்பினார் பிள்ளை.

‘ நம சிவாய’ என்று  ஒரு முறை சொல்லிக்கொண்டார். அருகில் இருக்கும்  தருமை நாதன் கோவில் கலசங்களை நோக்கினார்.

‘ நம சிவாய, சிவாய நம இரண்டு வேற வேறங்களா பிள்ளை’

’ நல்லாதான் கேட்டிங்க தம்பி. ரெண்டும் ஒண்ணுதான் இருந்தாலும் சிவாய நமன்னா இங்க கஷ்டம் கொறையும், நம சிவாயன்னா அங்க கஷ்டம் கொறையும்.  இங்க, அங்க, இதுக என்னன்னா இப்ப  வாழுற வாழ்க்கை இங்க,  இந்த  வாழ்க்கைக்குப்பெறவு எதுவோ அதுதான் அங்க.  இது இப்பிடி  இப்பிடின்னு எல்லாம் எனக்கு யாரோ பெரியவங்க சொன்ன சேதிதான். இதுல எல்லாம் நீங்க ரொம்பக்கி வுள்ள  வுள்ள போவாதிங்க. மனுசனுக்கு  பொய்யில்லாம மனஞ்சுத்தமா இருக்கோணும், பசின்னு வர்ரவனுக்கு   மொகம் கோணம  ரவ சோறு போடணும்  இது ரெண்டுபோதும்.   திருமூலர் அய்யாவ படிச்சிம் இருப்பிங்க  அவுரு  நமக்கு  என்ன சேதி சொல்றாருன்னு  பாக்குலாம். இன்னொரு நாளு வச்சிக்குவமே’  ஆளோடியைத்தாண்டினார் பிள்ளை.

‘ நானு வர்ரன் சந்திரன் பெறவு பாப்பம்’

சந்திரன் மகிழ்ச்சியோடு விடைகொடுத்துப் பிள்ளையை அனுப்பினான்.

                                                                    11.

இரவு உணவுக்கு தந்தையும் மகனும் அமர்ந்து கொண்டார்கள்.

‘ அம்மா  நீயும் எங்களோட உக்காரலாம்’

‘என்னடா புது பழக்கம்’

‘ அம்மா இது ஒண்ணும் புது பழக்கம் இல்லே. நீ  பண்ணியிருக்குற டிபன  கூடத்துல எடுத்து வச்சிகறம் . மூணு பேரும் ஒண்ணா உக்காந்து சாப்பிடறம்’

‘ புருஷா  மொதல்ல சாப்பிட்டு முடிக்கணும்  அதுக்கு அப்பறம்தான் பொம்மனாட்டி சாப்பிடுவா’

‘ அதுதான் ஏன்’

’ புருஷா வேலைக்கு போறவா  வெளியிடத்துக்கு போறவா. அவா வயறு நிறய சாப்பிடணும்.  பொம்மனாட்டி  ஆத்துல இருக்கறவா  அவா கடைசிலதான் சாப்பிடணும். காலம் காலமா அதுதான் பழக்கம்’

சந்திரனின் தந்தை  இங்கு இவர்கள் இருவரும் பேசிக்கொள்வதைக்கவனித்துக்கொண்டே இருந்தார். புன்னகைத்தார்.

‘சரியாத்தான் சொல்றான். அதுல என்ன தப்பு.  இனி நம்ப ஆத்துல  ஆம்பளைக்கி ஆகாரம்  போட்டுட்டு பொம்மனாட்டி சாப்பிடறதுங்கறது மாத்திக்கவேண்டியதுதான். பசி எல்லாருக்கும் ஒண்ணுதான். எல்லாரும் ஒண்ணா ஒக்காந்து சாப்பிடறம். நாமளும் ஒண்ணா சாப்பிடும்போது  ஒருத்தருக்கு ஒருத்தர்  கூட மாட உதவி பண்ணிக்கணும்’

சந்திரனின் அம்மா தன் கணவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டே இருந்தார். சந்திரன் மூன்று இலைகள் போட்டு பரிமாறினான்.

‘ மூணு எல போட்டு பரிமாறப்பிடாது. தெவசத்தண்ணிக்குதான்  ஆத்துல மூணு எல போட்டு பரிமாறுவா. ரொம்ப தப்பு’ என்றாள் சந்திரனின் தாய்.

‘ ரெண்டு இல போடறேன். அப்பா அம்மா நீங்க  உக்காருங்கோ. நான் உங்களுக்கு  டிபன் வக்கறேன். நீங்க சாப்பிடுங்கோ அதுக்கப்பறம் நா சாப்பிடறேன். இப்ப சரிதானே,  அம்மா  ஒரு சேதி   கண்மூடிவழக்கம்னு சொல்லுவா அதுதான் இந்த மூணு இல சமாச்சாரம். உன் மனம்  இப்ப  கோணப்பிடாதுன்னுதான் பாக்கறேன்  அவ்வளவுதான்’

சந்திரனும் தாயும் தந்தையும்  மவுனமாய்ச்சாப்பிட ஆரம்பித்தார்கள்.  இரவு உணவைச் சந்திரனும் சாப்பிட்டு முடித்தான்.

---------------------------------------------------------------------------------

                                                                        12

மறு நாள் காலை ஆறு மணி டியூட்டி. சந்திரன் ஆறு மணிக்கெல்லாம் முதுகுன்றம்  அலுவலகம் வந்து சேர்ந்தான். செல்லமுத்து சூப்பர்வைசரும்  காலை அதே பணிக்குத்தான் வந்திருந்தார்.அலுவலகத்தில் வழக்கம் போல் பணி நடைபெற்றது. அவரவர்கள் அவர்களுக்கிட்ட பணியை செவ்வனே முடிப்பதில் கவனமாய் கவனமாய் இருந்தார்கள்

‘சந்திரன் ஒரு சேதி’  செல்லமுத்து சந்திரனுக்குச்சொன்னார்.

’சார் சொல்லுங்க’

’இண்ணைக்கு    நாம ரெண்டுபேரும் மதுரவல்லிக்கு போய்வருவோம்’

‘ அது உங்க சொந்த ஊர்  மதுரவல்லிதான சார். அங்கு என்ன விசேஷம் சார்’

‘இண்ணிக்கு ஆடி ப்பருவம்  சாமி பொறப்பாடு’ மாரியம்மன் ஊர்வலம் வாணவேடிக்கை கரகாட்டம் கொறவன் கொரத்தி டான்ஸ் எல்லாம் இருக்கும்’

’ நாம மலயாள மாமி மெஸ்ஸில் சாப்புடறம். அப்பிடியே கிராமத்துக்கு கெளம்பிடறம்’’

‘ நா டூட்டி முடிச்சி வீட்டுக்கு   வருவேன்னு அம்மா நெனச்சிகிட்டு இருப்பாங்க. அதான் யோசனையா இருக்கு.’

’ சேதி சொல்லி அனுப்பிட்டா போச்சி யாரும் தருமங்குடிலேந்து தெனம் தெனம்  டூட்டிக்கு  இங்க வரலயா’

‘கச்சேரி போஸ்டாபீசுல வைகுந்தன் ஒரு தம்பி இருக்கு.  ஈ டி யா வேல செய்யிது. அது தெனம் வரும் சாயந்திரம் ஊருக்குத் திரும்பிடும். நாலு பசங்க கொளஞ்சியப்பர் கல்லூரிக்கும் படிக்க வர்ராங்க. யாருகிட்டயாவது சேதிசொன்னா எங்க அம்மாகிட்ட சொல்லிடுவாங்க’

‘அப்பிடியே செஞ்சிடுவோம். அந்த பாலக்கரையில ரவ நாழி நின்னா யாராவது போறவங்கள பாக்குலாம்’

என்றார் செல்லமுத்து. மதியம் ஆயிற்று. ஒண்ணரை மணி டூட்டிக்காரர்கள் டைம் அர்ரிவ்ட்-  ல் கையொப்பமிட்டு  தங்கள் பணிக்குத்தயாரானார்கள். செல்லமுத்துவும் சந்திரனும்  பணிமுடித்து மலயாளமாமி மெஸ்ஸிற்கு நடந்து சென்றனர்.

‘சைக்கிள் இங்க கெடக்கட்டும். வந்து எடுத்துக்கறேன். நாம இப்ப பஸ் புடிச்சிதான மதுரவல்லி போறம்’

‘சைக்கிள்ள போற தூரமில்ல.  இன்னும்  அதிகம் இருக்கும்ல சார்’

‘ஆமாம் சைக்கிள் போறதுன்னா முடியாது. பஸ்லதான் போவுணும். மதுரவல்லிக்கு டவுன் பஸ் இருக்குது’

மெஸ்ஸில் ஒரே கூட்டம். கெஸ்ட் கெஸ்ட் என எல்லோருமே தன்னோடு யாரையேனும்  அழைத்துக்கொண்டு வந்திருப்பார்கள் என சந்திரன் கணக்குப்போட்டான்.

‘என்ன மாமி கொஞ்சம் ரஷ் இண்னைக்கு’

‘ குட்டி அய்யர் கடை இண்ணைக்கி லீவு. அவுங்க உறவு மொறயில யாரோ தவறிட்டாங்கன்னு கேள்வி. அதான்  அங்க வழக்கமா சாப்பிடறவங்க நம்ம மெஸ்ஸுக்குவந்துருக்காங்க’ மலயாள மாமி பதில் சொன்னாள்.

செல்லமுத்து சாரும் சந்திரனும் சாப்பிட்டு முடித்தார்கள். சந்திரன் கணக்கு நோட்டை எடுத்து தனக்கென உள்ள பக்கத்தில் இன்றைய தேதிக்கு சாப்பாடு ரெண்டு என குறித்துமுடித்தான்.

‘சாம்பார் ரசம் எல்லாம் ரொம்ப நல்லாவே இருக்கு. மெனக்கெட்டு செய்யிராங்க. பொழப்பு இது தானே. இத காப்பாத்தி வச்சிகிணும்’

‘’அவுங்க அவுங்க உழைப்பு. வெளி ஆளுங்க யாரையும் கூலிக்கு வைக்கல அதனால  மெஸ்  நல்லா ஓடுதுன்னு சொல்லுணும்’

இருவரும் மணிமுத்தாற்றைக்கடந்து பாலக்கரை நோக்கி நடந்தார்கள்.

‘சார் இப்பிடி லாரி ஷெட் பக்கம்  போயி போக வேணாம்.அதுக்கு பக்கத்து சந்தாட்டி  நேரா போனா நேரா ஸ்டேட் பாங்கு. அத தாண்டுனா அந்த கச்சேரி   போஸ்டாபீசுக்கு போயிடுவோம் சார். பக்கம்தான். கவர்மெண்ட் ஸ்கூலுக்கு எதிரே  தான இருக்குது. வைகுந்தன் அங்கதான் இருப்பாரு’

இருவரும் அந்த சந்தில் நடந்து ஸ்டேட் பாங்கு தாண்டி, கச்சேரி அஞ்சலகம் அடைந்தார்கள்.

அஞ்சலகத்தில் வைகுந்தனைக்காணவில்லை.

‘ சார் வைகுந்தன் இருக்காரா’

அஞ்சலக அதிகாரி செல்லமுத்துசாரைப்பார்த்து ‘வாங்க சாரு. உள்ள வாங்க’

‘ நீங்க உங்க  டூட்டி பாருங்க. வைகுந்தன் இருந்தா  தருமங்குடிக்கு ஒரு சேதி சொல்லி அனுப்பணும். வேற ஒண்ணும் இல்ல’

‘ இண்ணைக்கு வைகுந்தன் டூட்டிக்கு வருல. ஆடிப் பருவம். கோவில்ல விசேஷம்  ஒரு வேண்டுதல்னு லீவு’ அஞ்சலக அதிகாரி பதில் சொன்னார்.

‘ ஆடிப்பருவம்  ஊருக்கு ஊரு விசேஷம்தான்.  சரி வேற யாராவது ஆள பாக்குணும்.  செதி சொல்லி அனுப்பணும்.  பாலக்கரை ஸ்டாப்பிங்குக்கே போயிபாக்குறன்’   சொல்லிய செல்லமுத்து சந்திரனுடன் பாலக்கரை நோக்கி நடந்துகொண்டிருந்தார்.

பாலக்கரை நிறுத்தம் வந்தாயிற்று. தருமங்குடி ஆட்கள் யாரேனும் தென்படுகிறார்களா என்று சந்திரன் நோட்டம் விட்டான்.

‘ நாம மதுரவல்லி பஸ்ஸ புடிச்சாவணும். ஒரே ஒரு  டவுன்   பஸ்ஸுதான் போவுது வருது. திருவிழா நேரம். கூட்டம் சொல்லிமாளாது. பஸ் ஸ்டேண்டுக்கு போயிட்டம்னா கூட ரொம்ப நல்லது ’

‘அப்ப நடங்க பஸ் ஸ்டேண்டுக்கே போயிடலாம்’

இருவரும் பஸ்ஸ்டேண்ட் நோக்கி வேக வேக மாக நடக்க ஆரம்பித்தார்கள். வழியில் தருமங்குடி ஆட்கள் யாரேனும் தென்படுகிறார்களா என்று சந்திரன் தேடிக்கொண்டே நடந்தான்.

‘சந்திரந்தானா’

கேட்ட குரலாகவே இருந்தது. திரும்பிப்பார்த்தான்.

தருமங்குடி சாமிநாத சிவாச்சாரியார்தான் கையில் சாமான்களோடு பேருந்து நிலயம் நோக்கி நடந்து கொண்டிருந்தார்.

‘சாரையும் தெரியுமே எனக்கு’ செல்லமுத்து சாரைப்பார்த்து சொன்னார் சிவாச்சாரியார்.

‘ நல்லா நெனப்பு வச்சிருக்கீங்க. ரொம்ப சதோஷம் சாமி.

‘மாமா ஒரு சமாச்சாரம். நான் இண்ணைக்கு ஒரு வேலயா வெளியூர் போறன். அம்மா கிட்ட சொல்லிடுங்க. இண்ணைக்கி தங்கிட்டு நாளைக்கி  என் டூட்டி முடிச்சுட்டு சாயந்திரம் வந்துடறேன்னு’

‘ ரொம்ப தூரமா’

‘ இல்ல பக்கமாதான், சார் ஊர் வரைக்கும் போயிட்டு வரலாம்ன்னு இருக்கேன்’

‘ அது என்ன ஊரு’

‘ மதுரவல்லின்னு கிராமம் நல்லூருக்குப்பக்கத்தில இருக்கு’

‘ போனது இல்ல நான்’

‘ இண்ணைக்கி அந்த ஊர்ல சாமி  பொறப்பாடு அதான்’

‘ நீ அவ்வளவு லேசுல கோவிலு கொளம்னு கெளம்பி போற ஆளு இல்லயே. இது என்ன புது சேதி’

செல்லமுத்து ஒருமுறை லேசாகச்சிரித்துக்கொண்டார்.

‘ சார் ஊரு. சார் கூப்பிடறார்.’

‘ பேஷா போயிட்டு வரவேண்டியதுதான். நா என்ன செய்யணும்.  உன் அம்மாகிட்ட  நீ  இண்ணக்கி வரல. நாளைக்கி சாயந்திரம் வரேன்னு சேதி சொல்லணும்’

‘ அவ்வளவுதான் மாமா. நீங்க எங்க? இவ்வளவு தூரம்’

‘’ கோவில்  ஆடிப்பருவ விசேஷத்துக்கு சாமான் வாங்கலாம்னு வந்தேன். வாங்கியாச்சு. இண்ணைக்கி பருவத்து மண்டகப்படிகாரர்  ஐநூறு ரூபா கொடுத்து செலவுக்கு வச்சிங்கோ. சேம்பரம் வரும்போது. விபூதி குங்குமம் பிரசாதம் கொடுத்திங்கன்னா சரின்னு சொல்லிட்டார். அவுரு செதம்பரம் மேலபுதுத்தெருல இருக்கார். டாக்டர் நடராஜன்னு பேரு. எம் பொறுப்பாபோச்சி எல்லாமே என்ன செய்வே’

‘ மாமா குஞ்சிதம் பஸ் வந்துட்து’ சந்திரன் கையை க்காட்டி வண்டியை நிறுத்தினான்.

’எல்லாருக்கும் வரேன்’ சொல்லிய சிவாச்சாரியார்  குஞ்சிதம் பஸ்ஸில் ஏறிக்கொண்டார்.

‘ நாம மதுரவல்லி பஸ்ஸ புடிக்கணும்’

இருவரும் பேருந்து நிலயத்தை சுற்றி வந்தார்கள். ஒரு டவுன் பஸ்ஸையும் காணோம். முதுகுன்றம் பேருந்து நிலையத்தில்  டவுன் பஸ்கள் ஒரு புறமும் ரூட் பஸ்கள் ஒரு புறமும் நின்றுக்ப்ண்டிருக்கும். டவுன்பஸ் நிற்கும் பகுதியில் பெண்ணாடம் செல்லும் பேருந்து  புறப்படத்தயாராக நின்றுகொண்டிருந்தது. செல்லமுத்து பெண்ணாடம் பேருந்து டிரைவரிடம் சென்று மதுரவல்லி பஸ் பற்றி விசாரித்தார்.

‘என்ன சார் பஸ் எப்ப வரும்னு எதாவது சொன்னாரா’

‘வர்ர நேரம்தான்னு சொன்னார்’

  நாம இங்க தான் நிக்கணுமா’

‘’ இதே கட்டையில வண்டிய போடுவாங்க’

கட்டை என்பது பிளாட்பாரம் என்போமே அதுவேதான்.

லொட புட சத்தத்தொடு மதுரவல்லி பேருந்து ஸ்டாண்டுக்குள் நுழைந்துகொண்டிருந்தது. மக்கள் எங்கிருந்தார்களோ தெரியவில்லை. நொடியில் ஒரு கூட்டம் சேர்ந்துவிட்டது.

‘சென்னைக்குபோற பஸ்ஸுங்க லொட புடன்னு ஆடிச்சின்னனா அத டவுன் பஸ்ஸா மாத்தி வுட்டுடுவாங்க. அப்பிடித்தான் இந்த பஸ்ஸும்சென்னைக்கு போயிட்டு இருந்த பஸ்தான்.  இப்ப மதுரவல்லிக்கு டவுன் பஸ்ஸா போவுது’.

மதுரவல்லி பேருந்திலிருந்து இன்னும் இறங்கவேண்டியவர்கள் இருந்தார்கள்.

‘யாரும் ஏறாதிங்க. இறங்குற ஜனம் எறங்கட்டும்’

கண்டக்டர் சத்தம் போட்டுக்கொண்டேயிருந்தார். பேருந்தின் உள்ளேயிருந்து சிலர்’ எறங்க உடுங்கப்பா’ என்று கத்திக்கொண்டேயிருந்தார்கள்

 ’வண்டில குந்திருந்த‘சனங்கள கொஞ்சம் முன்னாடியே எறக்கி உடலாம். வெறும் வண்டியா ஸ்டேண்டுக்கு கொண்டாருலாம். இது கூட தெரியாமலா வண்டி ஓட்டுறாங்க’ என்று ஒரு முதியவர் புலம்பிக்கொண்டேயிருந்தார்.

‘ஆர்ரா இங்க காந்தி தாத்தா வந்துருக்காரு. பஞ்சாயம் பண்ணுறாரு’ வேறு ஒருவர் அந்த முதியவருக்குப்பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.

செல்லமுத்து சாரும் சந்திரனும் எப்படியோ வண்டிக்குள் ஏறி விட்டார்கள்.

‘ நின்னுகிட்டுதான்  சார் போவுணும்’

‘ ஒரு அர மணி ஆவும். அவ்வளவுதான்’

வண்டி புறப்பட்டது. கண்டக்டர் இரட்டை விசில் கொடுத்தார்.

‘ வண்டில மதுரவல்லி சீட்டு மட்டும்தான் இருக்கணும். வண்டி குறுக்கால எங்கயும் நிக்காது. வழி சீட்டு இருந்தா இப்பவே  எறங்கிக்க.. சீட்டு போடக்குள்ள குறுக்கால ஊரு சீட்டு குடுகிடுன்னு கேட்டா அந்த எடத்துலயே எறக்கி வுட்டுடுவன். யாரு எவுருன்னு பாக்க மாட்டன்’   கண்டக்டர் உச்ச கதியில்பிரசங்கம் செய்து முடித்தார்.

‘எத்தினி கண்ரக்டரை பாத்து இருக்கோம்’  ஒரு  வயதான பெண்மணி சொல்லிக்கொண்டிருந்தாள்

வண்டி எங்கும் நிற்காமல் ஜங்க்‌ஷன் ரொடில் சென்றது. பாலக்கரையில் திரும்பி பாலத்தின் மீது சென்றது. கடைத்தெருவில் கூட நிற்கவில்லை. கடைத்தெரு நிறுத்தத்தில் பேருந்துக்கு க்காத்திருந்த சனங்கள் வண்டி நிற்காமல் சென்றதற்காக கன்னா பின்னா என்று கண்டக்டரையும் டிரைவரையும் திட்டித்தீர்த்தனர்.

‘ வண்டியில ரவ எடம் இல்ல. எப்பிடி ஏறுவ’ அவர்களே நியாயம் சொல்லிக்கொண்டார்கள்

‘தென்கோட்டை வீதியில் திரும்பி சேலம் சாலையில் தங்கமணி தியேட்டர் அருகே பேருந்து நின்றது.

‘கையில காசு  எடுத்து வை. அது அது  சீட்ட வாங்கு. ஆவுட்டும் சீக்கிரம்’ பேருந்தின் ஒட்டுனர் குரல் கொடுத்தார்.

சந்திரன் மதுரவல்லிக்கு இரண்டு சீட்டு வாங்கினான். செல்லமுத்துவும் சந்திரனும் வண்டியில் தொத்திக்கொண்டு நின்றனர்.

‘கையில பை ஜாமானுவ கொழந்த புள்ளிங்க வயசானது காயிலா கருப்பு இதெல்லாம் இமிச’ என்றான் ஒருவன்.

‘யார்ரா இங்க  நாட்டாம பண்ணுறது’ என்றான் இன்னொருவன்.

‘எல்லாம் இருக்கும்தான்.சனம்னா பின்ன என்னா’ வேறு ஒருவர் நியாயம் சொல்லிக்கொண்டிருந்தார். அவரும் கையில் தூக்கமுடியாத பைகள் இரண்டு வைத்துக்கொண்டு அவஸ்தை பட்டுக்கொண்டு இருந்தார்.

‘கண்டக்டர் இரட்டை விசில் கொடுத்தார்’ வண்டி புறப்பட்டது.

சென்னையிலிருந்து திருச்சி செல்லும் ரயில் மார்க்கம் முதுகுன்றம் வழியாகச்செல்கிறது. அந்தக் கடலூரிலிருந்து சேலம் செல்லும் பாதையும் கூடத்தான்.,

வண்டி கொளஞ்சியப்பர் கோவிலைத்தாண்டிச்சென்றது. இந்த இடத்தில் கொளஞ்சிச்செடிகள் வனமாக இருந்ததாகவும் இங்கே முருகக்கடவுள் அருள் பாலிப்பதாகவும் மக்கள் நம்பிக்கையோடு கூட்டம் கூட்டமாக வந்துபோகின்றனர். இங்கு  பதினெண் சித்தர்களில் ஒருவரான அகப்பேய் சித்தர்  இவ்விடத்தே  சித்தி அடைந்த தாகவும் கூறப்படுகிறது. முருகன் சிலை எல்லாம் இங்கு நிறுவப்படவில்லை. ஒரு பலி பீடம் போன்ற அமைப்பு.  அதுவே கருவறையும் மூலஸ்தானமும் எல்லாமும்.

‘ அகப்பேய்   சித்தர் அடக்கமான அந்த எடத்துல ஒரு  பலி பீடம் வைக்கப்படிருக்கலாம்’’

‘கொளஞ்சியப்பர் கோவிலைச் சொல்றீங்களா சந்திரன்’

‘ஆமாம் சார்’ பதில் சொன்னான் சந்திரன்.

‘தமிழ் நாடுன்னா முருகக்கடவுள்தான்.   அறுபடை வீடும் இங்கதான். வேற எங்க போய் முருகன தேடுவீங்க. தமிழங்க எங்க இருந்தாலும் முருகன் கோவில் ஒண்ணு நிச்சயம் இருக்கும்.  அவ்வைக்கிழவியோட  தமிழ் மொழியோட   பந்தமுள்ள சாமின்னா அது முருகன்சாமிதான். மதுரையில  ’கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோன்னு’  நக்கீரரோட வாதாடுன   பரமசிவக்கடவுளும் தமிழ் அறிஞ்சவருதானே’

 பேருந்தின்  உள்ளே  இருந்த கூட்ட நெரிசலிலும் இருவரும் சத்தான சமாச்சாரங்களை பேசிக்கொண்டேதான் பயணித்தனர். பேருந்தில் யாரும் இந்த இருவர் பேசுவதை சட்டை செய்யவில்லை.

 மதுரவல்லி செல்லும்  நகரப்பேருந்து இந்தத்தார்ச்சாலையில் நல்லூர் வரை சென்று பிறகு தெற்காகத்திரும்பும். அப்படியே  ஒரு பத்து கிலோமீட்டர் சென்றால்  அங்குதான் மதுரவல்லி உள்ளது. மதுரவல்லியிலிருந்து இன்னும் தெற்கே ஐந்து கிலோமீட்டர் போகப் பெண் ஆ கடம்  நகரம் வரும்.

மதுரவல்லிப் பேருந்து நல்லூர் நெருங்கியது. பேருந்தில் பாதிக்குமேல் இறங்கத்தயாரானார்கள்.

‘ நல்லூர் இங்க ஒரு புராதன  சிவன் கோவில்  இருக்கு அது மணிமுத்தாத்துக்கு நடுவுல கட்டியிருப்பாங்க. நானு போயி பாத்து இருக்கன்’

சந்திரன் தலையை ஆட்டினான்.

உட்காருவதற்கு இப்போதுதான் இடம் கிடைத்தது. இருவரும் அமர்ந்துகொண்டார்கள். பச்சைப்பசேல் என்று இருக்கும் வயல்களுக்கிடையே பேருந்து சென்றுகொண்டிருந்தது.

‘மதுரவல்லியை நெருங்கிக்கொண்டிருக்கிறோம்’

‘எங்க எறங்கணும் பாத்துகுகுங்க’

‘மணி ஆறு இருக்குமா’

‘ஆமாம்சாரு’

’மதுரவல்லி மொத ஸ்டாப்பிங்கா ரெண்டாவதா’ கண்டக்டர் செல்லமுத்துவை கேட்டார்.

‘ நீங்க எப்ப வேலைக்கு சேந்தது’

‘ஒரு மாசம் ஆவுது. நா திருமுட்டம் ஆண்டிமடம் வண்டில ஓடுனேன். மாத்தி வுட்ருக்காங்க. திரும்பவும் அந்த வண்டிக்கு போயிடணும்’

கண்டக்டர் விளக்கமாகச்சொன்னார்.

‘மொத ஸ்டாப்பிங்க்ல எறங்கிகறம்’

கண்டக்டர் ‘ஓல்டேன்’ என்றார். வண்டி நின்றது. செல்லமுத்து சாரும் சந்திரனும் பேருந்தைவிட்டு இறங்கி நின்றார்கள்.

’இது என்ன ஸ்டாப்பிங்க்’

‘இது காலனி சனங்க எறங்கறது, அடுத்தது ஊர் ஸ்டாப்பிங்க் அங்க ஊர் சனங்க எறங்கும்’

‘வாங்க மொதல்ல என் வீட்டுக்கு போவும்’

‘ நமக்கு  என்ன ப்ரொகிராம் சொல்லுங்க’

‘ நாம சாமி கும்புடவந்தம்னு இங்க இருக்குறவங்க கணக்கு போட்டாலும் நாம வந்ததுக்கு வேற காரணம் இருக்கு. அத தெளிவா தெரிஞ்சிக்கணும் சந்திரன். இண்ணைக்கு கோவில்ல விசேஷம். ஊர்லயும் உண்டு காலனியிலும் உண்டு.’

‘சார் நம்ம வீட்டுக்கு வந்துட்டமா’

‘ எதிரே இருக்குற மாடி வீடுதான். கூர வீடு அத மாடி வீடா மாத்திட்டேன். தாய் தகப்பன் ரெண்டுபேரும் இங்க இருந்தாங்க.  இந்த மெத்த வூட்டுலதான் காலமாயிட்டாங்க. வீடு பூட்டி கெடக்கு. கொஞ்சம் நஞ்ச நெலம் இருக்கு. நா அப்ப அப்ப வருவேன்.  என் வயிஃபும் கூட வருவாங்க. மற்றபடி சொந்த பந்தம்  இங்க  இருக்கு’

வீட்டு சாவியைப்  பத்திரமாக எடுத்து வந்திருந்தார் செல்லமுத்து. வீட்டைத்திறந்தார். நீண்ட நாட்களாக பூட்டிக்கிடக்கும் வீடு. அதன் நெடி இருந்தது. கட்டிலை எடுத்து வெளியே போட்டார். தொடப்பம் எடுத்து ஒருமுறை வீட்டைகூட்டினார். தெருவில் கைபம்பு இருந்தது. அதனில் தண்ணீர் எடுத்து வந்து வீட்டு வாயிலில் தெளித்தார். வீட்டிலிருந்து ஒரு ஜக்கு எடுத்து வந்து அதனைக்கழுவி அதனில் குடிக்கத்தண்ணீர் கொண்டுவந்தார். வீட்டு வாயிலில் மின்சார விளக்கு எரிந்துகொண்டிருந்தது. ரெண்டு தெருக்கள் அடர்ந்து வீடுகள் இருந்தன. கூரை வீடுகளுக்கு இடையில் ஆங்கங்கே மெத்தை வீடுகள் இருந்தன.

வீட்டு வாயிலைப்  பெறுக்கி த்தண்ணீர் தெளித்து கோலம் போட்டிருந்தார்கள். எல்லா வீடுகளின் வாசல்களும் பளிச்சென்று ’இருந்தன.

கட்டிலில் இருவரும் அமர்ந்திருந்தனர். தெருவின் கோடியில் ஒரு டீக்கடை திறந்து வியாபாரம் நடந்துகொண்டிருந்தது.

‘மணி ஏழுக்கு மேல இருக்கும். நாம முதல்ல டீக்கடைக்கு போவம். நாலு நா இட்டிலி சாப்பிடுவம் டீயும் குடிப்பம். பெறவு இந்த காலனி மாரியாயிகோவிலுக்குபோறம் இப்பிடி அப்பிடி பாத்துட்டு அப்பிடியே ஊரு மாரியாயி கோவிலுக்கும் போவம்.’

‘ ரொம்ப கச்சிதமா ப்ரொகிராம் போட்டு இருக்கிங்க’

‘வாங்க டீக்கடைக்குப்போவம்’

வீதியில் ஒரிருவர் வாங்க தம்பி என்றனர். மற்றபடிக்கு செல்லமுத்துசாரை அறியாமல்தான் பலர் இருந்தனர்.

‘ நா முதுகுன்றம் போனபெறவு பொறந்த ஆணு பொண்ணுக்கு என்னை த்தெரியாது. என்னை தெரிஞ்ச மனுஷங்க நெறய பேரு காலமாயிட்டாங்க’

‘ அது இயற்கைதானே சாரு’

டீக்கடையில் ஒரு முதியவர் ‘ வா செல்லா’ என்றார்.

‘’ இவுரு என் சித்தப்பா’

‘வணக்கம் அய்யா’ சந்திரன் சொன்னான்.

‘யாரு செனெகிதமா சாரு’

‘ஆமாம் என் கூட வேல பாக்குறாரு’

‘ ரொம்ப நல்லது. கொவிலுக்கு வந்திங்களா ரெண்டு பேரும்’

‘ஆமாம் சித்தப்பா’

சொல்லிய செல்லமுத்து சார் ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து சித்தப்பாவிடம் கொடுத்து ‘டீ கீ சாப்பிடு வச்சிக’

‘ ஏ ப்பா இது எல்லாம்’

‘ சும்மா வச்சிக சித்தப்பா. பின்ன எப்பிடிதான்  சித்தப்பனுக்கு எம் பிரியத்தை சொல்லுவேன்’

‘குடுத்தாதான் வருமா பிரியம் என்னா செல்லா’

’சரி அப்பு றம் பாப்பம் சித்தப்பா’ செல்லமுத்து அவரிடம் விடைபெற்றுக்கொண்டார்.

‘ஒன் வூட்டு திண்ணையிலதான் படுக்க எனக்கு. பாத்துக செல்லா’

‘சரி  சித்தப்பா நா பாத்துகறேன் கவல படாதே நீ’

தள்ளாடி தள்ளாடி நடந்து போனார் முதியவர்.

  சித்தப்பாவுக்கு ஒரு பையன் இருந்தான், என் கிளாஸ்தான். என்னோட படிச்சான்.  தொடர்ந்து படிக்காம நின்னு போனான்.  கூட்டாளிங்க சரியில்ல.குடிச்சி குடிச்சி வயிறு வெடிச்சி  செத்துப்போனான். அந்த  சின்னம்மாவும் இல்ல. காலமாயிட்டுது. உறவு காரங்கதான் சித்தப்பாவை அப்பிடி இப்பிடி பாத்துகிறாங்க. முதுகுன்றம் வந்துடு நா பாத்துகறேன்னு சொன்னேன். ஒனக்கு செருமம் எதுக்குங்கறாரு’

டீகடைக்காரருக்கு செல்லமுத்து சார் அறிமுகம் இல்லை.

’ நீங்க இதே வூரா’ டீக்டைடக்காரரை செல்லமுத்து விசாரித்தார்.

‘ இல்ல. நானு வேப்பூரு.  பக்கத்துலதான். நெல்லு அறப்புக்கு     மதுரவல்லிக்கு வந்தன். அப்ப இங்க டீகடை எதுவும் இல்ல.  டீகடை போடுலாம்  நல்லா ஓடும்னாங்க’

‘ நானு இதே வூருதான். உத்யோகத்தும்பேருல வெளில போயிட்டன்’ இப்ப முதுகுன்றத்துல சொந்த வீடு கட்டிகிட்டு இருக்கன். உங்க கடையில  டீ குடிச்சிட்டு  இப்ப போனாரே ஒரு  பெரியவரு அவரு எங்க சித்தப்பன்.’

சந்திரன் அவர்கள் பேசிக்கொள்வதையே கவனமாக பார்த்துக்கொண்டிருந்தான்.

  ஆளுக்கு நாலு நாலு இட்டிலி குடுங்க. டீ குடுங்க. நாங்க சாமி பாக்க வந்தம். இண்ணைக்கி ஆடிப்பருவம்ல. அதான்’

‘வேட்டு சத்தம் கேக்குது. மாரியாயி சகடை கெளம்பி இருக்கும். பதினோரு மணிக்கு   இந்தக்காலனிய சுத்தி வந்துடும் ரெண்டு தெரு தான. சாமி சகடை   இப்பிடியே போயி அப்பிடி சொழண்டு வந்தா சரியாபோச்சி.  தஞ்சாவூர்லேந்து வந்து எறங்கியிருக்குற  ஆட்டக்காரனுவ எப்ப முடிக்கிறானுவுளோ அத்தோட  திருவிழா சரிதான். நாளைக்கு மஞ்ச தண்ணி. வேப்பில கரவம் ஒரு சுத்து  சுத்திவரும்’

டீக்கடையின்  உள் பகுதியில் இருந்த நடுத்தர வயதிருக்கும் ஒரு பெண்’ வாங்க மாமா’

‘யாரு அது’ என்றார் செல்லமுத்து.

‘ என் வீட்டுக்காரிதான்’ என்றார் டீக்கடைக்காரர்.

‘ நா சுசீலா’

‘ யாரு’

‘ இப்ப டீகுடிச்சிட்டு போனாரே அவுரு ஒங்க சித்தப்பா.என் சொந்த அத்ததான் அவுருக்கு வாக்கபட்டுது. அவுரு மொவன நான் கட்டிக்கிட்டன். குடிச்சி குடிச்சே அது  போய் சேந்துடிச்சு.  அந்த ஏக்கத்துல  அந்த அத்தயும்  முடிஞ்சி போச்சி.  இங்கயும் அங்கயும்னு நானு ஒண்டியா  ஓடிகிட்டு கெடந்தன். தே  இது அறப்புக்கு இங்க மதுரவல்லிக்கு வந்துது. நாங்க ரெண்டு பேருமா அறப்புக்கு போனம் வந்தம். தொடர்பும் ஆயிட்டுது  இப்ப இங்க இவரோட இருக்குறன். நானு இதே ஊரு.  என் புருசன் அவுரு மாமான்னா  நீங்க  பெரிய மாமான்னு ஆவுது’

‘இந்தக்கதை மொத்தம்  இப்பதான் விவரமாதெரியுது’

செல்லமுத்து சுசீலாவிடம் சொன்னார்.

‘எல்லார் கிட்டயும் சொல்லமாட்டன். உங்க கிட்ட சொல்லிட்டன். அது கூட தப்புதான்‘ ஊரெல்லாம் திருடுனாலம் கன்னக்கோல் சாத்த வெடம் வேணுமில்ல’ என்றாள் சுசீலா.

சந்திரனுக்கு டீக்கடைக்காரரைப்பார்ப்பதற்கு பாவமாகக்கூட இருந்தது.

‘ உங்க சித்தப்பாரு ஏற்பாடுதான் இது. அவுருதான்  யோசனை சொன்னாரு.  எங்கிட்ட பேசுனாரு. சுசீலாகிட்ட பேசுனாரு. அறுப்பு அறுக்க அவரும் அண்னிக்கி வந்திருந்தாரு.  நாங்க ரெண்டு பேரும் அறுப்புக்கு போயிருந்தம். தாயா தகப்பனா பேசுனாரு. சாடிக்கேத்த மூடிதான் போ  இதுல ஒண்னும்  தப்பில்லைன்னு சொன்னாரு. உங்க  சித்தப்பா இங்கதான் சாப்புடுறாரு. அவுருக்கும் யாருமில்ல. கூட மாட எங்களுக்கு  கடையில ஒத்தாசையா இருந்தவரு. இந்த  கடை எடம் பொறம்போக்கு எடம். அவுருதான் இத மடக்கி கொட்டா போட்டு குடுத்தாரு.  இந்த மஞ்செவுரு அவுரு சேத்த கொழப்பி வச்சதுதான்.  இப்ப  அய்யாவுக்கு முடியல. வயசு ஆவுதே’ விளக்கமாகச்சொன்னார் டீக்கடைக்காரர்.

  எல எடுத்து போடு இட்டிலி எடுத்து வையி  சுசீலா. ரெண்டு பேருக்கும். சட்டினி சாம்பாரு போடு. மொளாபொடி நெத்திலிக்கருவாடு போட்டு இடிச்சி வச்சிருக்கம் வேணுமான்னு கேளு.   ரவ நல்ல எண்ண ஊத்து. குடிக்க  தண்ணி   ரெண்டு கிளாஸ்ல வையி.  சக்குல கூடம் தண்ணி வையி. நானு டீ போடுறன்’

சுசீலா பர பர என்று வேலை செய்தாள். செல்லமுத்துவும் சந்திரனும் கைகளை அலம்பிக்கொண்டு இலையில் அமர்ந்து டிபன் சாப்பிட்டு முடித்தார்கள்.

கூரைக்கொட்டகை.  புகை அடைந்த கூரை.மண் சுவர். யாமிருக்க பயமேன்னு எழுதின பழனி முருகன் காலண்டரு மாட்டியிருந்தது. அடுப்பு மேடை. அதன் ஒரு ஓரமாய் டீ பைலர். சிமெண்ட் தொட்டி பாத்திரம் ட்டீ கிளாஸ்  கழுவ  மண் மேடையில் புதைக்கப்பட்டு இருந்தது.  தொட்டியின்  வெளிப்புறத்தில் நீட்டிக்கொண்டிருக்கும் குழாயோடு  வீணாகிப்போன சைக்கிள் டியூப்பின் துண்டு இணைக்கப்பட்டிருந்தது. அதன் கீழாக ஒரு குழி. அதனில் கழிவு நீர் அடைக்கலமாகிக்கொண்டிருந்தது. ‘சாப்பிட்ட பின் எலை எடுக்கவும்’ சுவரில் சாக்பீசால் எழுதப்பட்டு இருந்தது. அந்த எழுத்துக்குக்கீழாக சதுர வடிவத் திறப்பு. அதன் வழி இலையை எறிந்து விட்டு வாளியில் இருந்து  தண்ணீரை பிடியில்லா மக் ஒன்றால் எடுத்து கை அலம்பிக்கொள்ளவேண்டும்.

‘சாப்பிட்டு எல எடுக்காதிங்க நா எடுத்துக்கறன்’ பவ்யமாய் சொன்னாள் சுசீலா.

‘ஏன் உனக்கு செருமம்’

‘ அது மொற யில்ல. நீங்க எம் மூத்தாருதான ஒரு வகையில’

 டீக்கடைக்காரர் இடை புகுந்து’’ நீங்க கை அலம்பிகுகுங்க டீ ரெடி’

சந்திரனும் செல்லமுத்துவும் கைகளை அலம்பிக்கொண்டு டீ குடித்தனர்.

‘ எவ்வளவு ஆச்சி’

‘ மாமா இது என்னா பேச்சு. இங்க டிபன் சாப்பிட்டதுக்கு காசு கொடுப்பீங்களா. போய் வாங்க சும்மா. யாரு எவுரு’ என்றாள் சுசீலா.

‘ உன் மாமாவ பாத்துக. என் சித்தப்பனதான் சொல்லுறன்’

செல்லமுத்து தன் சட்டைஇபையிலிருந்து இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து சுசீலாவிடம் கொடுத்தார்.

‘இதெல்லாம் எனக்கு எதுக்கு’

‘ இல்ல சுசீலா நீ   எங்களுக்கு  போட்ட டிபனுக்கு காசு வாங்கல. ஏன்’

‘ யாரு நீங்க நானு காசு வாங்குலாமா’

‘அப்ப இந்த பணத்த வாங்கிகினும்ல’

‘அய்யா சொல்றது சரி’

என்றார் டீக்கடைக்காரர்.

‘ உங்க பேரு சொல்லுல’

‘உங்க பேருதான்’

‘ என் பேரு செல்லதொரை. நானு மொதல்லயே  அத சொல்லியிருக்கணும். எம் பெசகுதான்’

‘ நானு செல்லமுத்து நீங்க செல்லதுரை’ திருத்திச்சொன்னார் செல்லமுத்து.

’மாமா நேரா கோவிலுக்குதான போறிங்க’

‘ ஆமாம். இந்த தெரு தாண்டினா. சக்கிலிவ தெருவு அப்புறம் வள்ளுவ அய்யிரு தெரு. அஞ்சாரு அஞ்சாரு வூடுவதான்’ என்றாள் சுசீலா.

‘ தெருகூட்டி கோலம் போட்டு இருப்பாங்களா. தீவார்த்தன எல்லாம் பாப்பாங்களா அவுங்க’

  புதுசா  கேக்குறிங்க மாமா. அதுதான் எண்ணிக்கும் இல்ல. நம்ப மாரியாயி அருந்ததி சனம் குடுக்குற மரியாத  எதயும் ஏத்துக்காது. வள்ளுவ சனம்    மொத்தமா அவுங்க  வூட்டுக்கதவ கூடம் அடச்சி வச்சிகும்  நம்ப மாரியாயி வள்ளுவங்களுக்கு  ஆவாது.. மாரியாயி சகடை இங்க  எங்கயும் நிக்காது. கட கடன்னு உருட்டிகிட்டு வந்துடுவாங்க. சக்கிலி சனங்க நமக்கும் தாழ. வள்ளுவ சனம் அய்யிருங்க. அவுங்களுக்கு எல்லாம் நாமதான் தாழ. இந்த ரெண்டு பிரிவு சனத்தையும்  சகடையில வர்ர  நம்ம மாரியாத்தா சாமி கண்டுகவே கண்டுகாது.’

‘ ஆ சாமி வருது போல. கட கடன்னு சகட வருது. பாருங்க. சக்கிலிங்க  வூடு.. வள்ளுவங்க வூடு இங்க யாரும் தேங்கா  தட்டு தாம்பாளம் வச்சிகிட்டு நிக்குல.’ என்றார் செல்லதுரை என்கிற டீக்கடைக்காரர்.

  இது இண்ணிக்கு நேத்தி கதயா. மாமா தெரியாதமாதிரிக்குல்ல என்ன கேக்குது’

சந்திரன் செல்லமுத்து சாரைப் பார்த்துக்கொண்டான். அவர் புன்னகை செய்து எல்லாம் தான் அறிந்ததே என்று சொல்லிக்கொண்டார்.

‘சாரு யாருன்னு சொல்லுல’

‘என் ஆபிசு காரரு. சும்மா வரேன்னு சொன்னாரு. இட்டாந்தேன்’

‘திருவிழா பாக்குலாம்னு வந்து இருப்பாரு’

சுசீலா சொல்லிக்கொண்டாள்.

‘ நாங்க போய் வரம்’ செல்லமுத்து சொல்லிக்கொண்டார்.

சந்திரன் தலையை ஆட்டி நிறுத்தினான்.

‘ வர்ரேங்க’ என்றான்.

குறவன் குறத்தி வேஷம் கட்டியவர்கள், அவர்களோடு பஃபூன் வேடம் கட்டியவர் முன்னே வந்து கொண்டிருந்தார்கள். மக்கள் ஆங்காங்கே நின்று அவர்கள் பேசுவதை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தார்கள்.

குறத்திவேடம் கட்டிய ஆண் பார்ப்பதற்கு அழகாக இருந்தார். அவரின் குரல் அவர் ஆண் என்பதை க்காட்டிக்கொடுத்தது.

தனக்குத்தெரிந்த ஜோக்குகளையெல்லாம் இந்த மூவரும் சொல்லி சொல்லி மக்களை உற்சாகப்படுத்தினார்கள். திரை இசைப்பாடல்களை உறுமி செட்டுக்காரர்கள் வாசிக்க வாசிக்க குறவனுக் குறத்தியும் நடனம் ஆடினார்கள்.   பேசிய ஜோக்குகள் எல்லாம் பாலியல் தொடர்பு கொண்ட ஜோக்குகளாகவே இருந்தன.

’தொர வராரு தொர வராரு

தொற நீ தொற

மருவாத கெட்டுடும்

மற அத மற.

வாராரு வாராரு

கொட புடிச்சி வராரு

காளையா  வாராரு

பாளையத்தார் வராரு

தொற நீ தொற.

மகமாயி பாக்குறா

மவராசன் நோக்குறான்

 மற நீ மற’

’காலக்காட்டுறா பாலக்காட்டுறா

எங்கொறத்தி எங்கொறத்தி

வால ஆட்டாதே கோலக் காட்டாதே

எங்கொறவா எங்கொறவா’

 கூடியிருந்தவர்கள் இவை கேட்டு ரசித்து மகிழ்ந்தார்கள்.  பாலியல் ரசனை மனிதனைச்  சுகாடுவரை துரத்தித்தானே பார்க்கிறது.  மானுடச்சாம்பலுக்கு மட்டுமே சபலங்கள் இல்லை போலும். கோவில் மண்டபங்களிலும் ரதங்களிலும் காணப்படாத  பாலியல்  விவகாரங்கள்  மனிதக் கற்பனைக்கும் எட்டுமா என்ன?

சாமி சற்று தூரத்தில் சகடையில் தெரிந்தது.

செல்லமுத்துவும் சந்திரனும் சாமியைக்கும்பிட்டுத் திரு நீறு வாங்கிப்பூசிக்கொண்டார்கள். சகடையை ஒரு சுற்று சுற்றி வந்த செல்லமுத்து பூசாலிக்கு நூறு ரூபாய் கொடுத்தார். ஆட்டக்காரர்களுக்கும்  ஒரு நூறு ரூபாய் கொடுத்தார்.

பூசாரி அந்த  நூறு ரூபாய் பெற்றுக்கொண்டு

 ‘வார வார கோடி  தனம்,

 வட மலையான் சன்னிதிபோல்’

அள்ள அள்ள கோடி தனம்

 அலமேலுமங்கா சன்னிதி போல்,’ 

அய்யா நல்லா இருக்கோணும் கொலம் விளங்குணும்  கொடி கொடியோடணும்’ செல்லமுத்துவை வாழ்த்தி முடித்தார்.

குறவன் குறத்தி டான்ஸ்காரர்கள் ’ ’அதாகப்பட்டது என்னனா   முதுகுன்றம்  நகரத்துல  டெலிபோன் ஆபிசில வேல பாக்குற  பெரிய எசமான், தருமதொர மவராசன்  தஞ்சாவூர் குறவன்   குறத்தி டான்ஸ் மக்கள வாழ்த்திக்கொடுத்தது ஒரு லச்சம்’ என்று வசனம் பேசிவிட்டு பாட்டுக்கு வந்தார்.

’குலம்  செழிக்கணும்

குபேரர் ஆவுணும்

பட்ட  கஸ்டமெல்லாம்

பட்டுனு தொலையணும்

வாயி வார்த்தை   

சொல்லுற சொல்லு

அஸ்திரமா  நிக்கணும்

 நின்னுதான  நிலைக்கணும்

சென்னிமலை ஆண்டவரு

கொட்டி அளக்கோணும்.’

 குறவன் குறத்தி வேடம் கட்டியவர்கள் பாட்டு பாடி முடித்தனர்.

சந்திரன் அந்த பஃபூனை ப்பார்த்துக்கொண்டே நின்றான்.

‘ வாங்க சந்திரன், பாருங்க இந்த அஞ்சி ஆறு வீடுங்கள . கதவு அடச்சி கெடக்கது. தெருவுல கோலம் கீலம் எதுவுமில்ல. ஆரவாரமில்ல. இது வள்ளுவர் சனம் குடியிருக்குற  வீடுங்க’

. கொஞ்சம்   தள்ளி பாருங்களேன்   அருந்ததியருங்க வீடுங்க. அவுங்க  சாமிக்கு  தீவர்த்தனைக்கு குடுத்தா  வாங்க மாட்டங்க. அவுங்கங்களுக்கு சாமி வேற வேற . என்ன செய்ய.  அம்பேத்கர்  அய்யா மகர்னு   சக்கிலியர் இனம்தான்.  சக்கிலியர்ல 134 பிரிவு இருக்குன்னு அந்த அய்யா  சொல்றாரு தெரியுமா சந்திரன்’

சந்திரன் வள்ளுவர் வீடுகளையும் சக்கிலியர் வீடுகளையும் கவனித்துப்பார்த்துக்கொண்டான். அந்த மக்கள் சகடை மாரியம்மன் உலா பற்றி எந்தக்கவலையும் இல்லாமல் இருந்தார்கள்.

செல்லமுத்து சார் மீண்டும் தொடர்ந்தார்.

‘ இங்க எதுல ஜாதி இல்ல  ஜாதி நாய், ஜாதி மாடு ஜாதி மரம்னு எல்லாமுண்டு’

‘ ஜாதி முல்லை, ஜாதி நாரத்தை ஜாதி கொய்யான்னு ஜாதிப்பாக்கு ஜாதிஅடின்னு கேள்விப்பட்டிருக்கேன்’ தன் பங்காக சந்திரன் சொன்னான்.

‘ இப்ப நாம நடந்தே ஊரு பக்கம் போறம்.  மூணு பர்லாங்கு தூரம் இருக்கும். இப்ப தார் ரோடு இருக்கு. அங்கயும் இதே ஆடிப்பருவத்துக்கு  மாரியம்மன் சாமி சகடையில ஊர்வலம் உண்டு. ஆட்டம் பாட்டம் எல்லாம் உண்டு. வாண வேடிக்கை உண்டு. நல்ல வெவரமா நாதசுரக்காரங்க வந்து இருப்பாங்க. கொஞ்சம் ராகம் தாளம் தெரிஞ்ச மக்கள் இருப்பாங்க. முதுகுன்றத்து  குருக்களு அய்யிரு வந்து சாமிய அலங்காரம் பண்ணுவாரு’

இருவரும் நடக்க ஆரம்பித்தனர். வாணவெடிகள் வெடிக்கத்தொடங்கியிருந்தன. சாமி அலங்காரம் நிறைவு பெற்று ஊர்வலத்திற்குத்தயார் என்று அறிவிப்பாக அதிருக்கலாம்.

‘ சந்திரன் இங்க பாருங்க, ஊருலயும் மாரியாயி. காலனியிலயும் மாரியாயி. ஆனா ரெண்டு சாமியும் வேறதான்.. எப்பிடி பாருங்க  ஊரு காரங்க யாரும் காலனி சாமிக்கு ஒரு கல்பூரம்கூட ஏத்தமாட்டாங்க. காலனி சனம் ஒரு சூடம் கொடுத்தா  ஊரு  கோவிலு சாமிக்கு வாங்கிக்கவும் மாட்டாங்க.  சாமி பேரு ஒண்ணுதான்.  மாரியாயி விநாயகர் அய்யனார் பிடாரின்னு. ஆனா காலனி சாமிங்க வேற ஊரு சாமிங்க வேற   இது என்ன கொடுமை’

‘ இது பத்தி எல்லாம் ஆழமா யோசிச்சது இல்லை சார்’

‘இதுதான யதார்த்தம்’

மதுரவல்லி ஊர்  மாரியம்மன்  கோவிலுக்கு இருவரும் வந்து சேர்ந்தார்கள். சாமி கும்பிட்டார்கள். திரு நீறு பெற்று பூசிக்கொண்டார்கள். தேவாரம் பாடும் இருவர் மைக் முன்னால் கைகளில் தாளத்தோடு பாடிக்கொண்டே இருந்தார்கள். நாதசுரக்காரர் மல்லாரி வாசிக்க ஆயத்தமானார்.

‘ சிவன் கோவில். பெருமாள் கோவில்னு காலனியில் எங்காவது இருக்கா சார்’

‘ நல்ல கேள்வி கேட்டிங்க. அதெல்லாம் பெரிய சாமிகள் ஆச்சே. சின்ன சின்ன சாமிங்க மட்டும்தான் காலனியில இருக்கும். அதான் வழக்கம். பாடல் பெற்ற  தலங்கள், மங்களா சாசனம் பண்ணின கோவிலுங்க எல்லாம் காலனியில இருக்குமா என்ன’

‘ வாய்ப்பே இல்லை சார்’

‘ ஊர்வலத்தின் போது  சாமிக்கு தீவட்டி என்னும் தீப்பந்தத்தை இங்க நாவிதரும் வண்ணாரும் தூக்கிக்கொண்டு நிற்பதைப்பாருங்க’

‘இது தருமங்குடியிலயும் இப்பிடிதான் சாரு’

‘ ஊர் சனங்க அந்த உழைப்பாளி மக்களை மரியாதையா நடத்தறது எப்பவும்  இல்லே. அவுங்க வீட்டு விசேஷத்துல உக்காந்து சாப்பிடமாட்டாங்க. தான் வீட்டு காரியத்துலயும் அவுங்கள  பந்தில உக்காரவச்சி  நல்ல சோறு போடமாட்டாங்க.  காத்தாடி ஏனத்துல குண்டான்ல கொவளையிலதான் சோறு கொழம்பு கொடுப்பாங்க’

‘ நானும் பாத்து இருக்கன்’

‘ காலனியில இருக்குற வண்ணாரும் நாவிதரும் இன்னும் கொடுமை. கேபுலம்’ சொல்லி நிறுத்தினார் செல்லமுத்து.

ஆட்டக்காரர்கள் வேஷம் போட்டுக்கொண்டு ஒவ்வொருவராக வந்துகொண்டிருந்தனர். மக்கள்  சாமியை தூக்கிக்கொண்டு  கோவிலை ஒரு முறை வலம் வந்து   சகடை வண்டிக்குப்போனார்கள். ஊர் தொழிலாளிகள் துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு தீவட்டியை த்தூக்கிப்பிடித்துக்கொண்டு நடந்தார்கள். கரகம் தூக்கும் பூசாலி சாமிக்கு முன்பாக கும்மி அடித்து நடந்து கொண்டிருந்தார். மதுரவல்லி  பம்பைக்காரர் பம்பையை ஓங்கி ஓங்கி அடிக்க ஒரு பெரியவர் அம்மன் பாடலைத்   தொடர்ந்து பாடிக்கொண்டு இருந்தார்.

‘மதுரவல்லி மாரி                                                                     

ஆயி  தங்க  தாயி

துயரம்கெல்லி தூரம்பண்ணு

நோவு   போவணும்

மாரி வந்து ஆறு கொளம்

சாரமாவுணும் வெள்ளாம

நெல்லு  நீரு

அமோகம்  ஆணும்

மதுரவல்லி மாதா நீ

 பெரிய மனசு வக்கோணும்.

மதுரவல்லி சாதிசனம்

குலம் விளங்கோணும்’

மாரியின் கரகம் தூக்கியவர் வளைந்து வளைந்து ஆடிக்கொண்டிருந்தார். கீழ்ப்பாய்ச்சியாய் வேட்டிகட்டிக்கொண்ட கொம்பு ஊதுபவர் நீண்ட பித்தளைக்கொம்பு வைத்து பூம் பூம்  என்று ஊதிக்கொண்டிருந்தார். வெண்சங்கு ஊதுபவர் வட்ட  வடிவ வெங்கல சைகுண்டு ஒன்றைத்தட்டிக்கொண்டும் இருந்தார்.

மதுரவல்லி ஊர் மாரியம்மன் ஆடிப்பருவ விழாவுக்கும்  அதே தஞ்சாவூர் கரக  ஆட்டக்காரர்கள்தான் வந்திருந்தனர்.  காலனி மாரியம்மன் திருவிழாவில்  ஆடும் ஆட்டக்காரர்களோடு சேர்ந்து  எல்லோரும் ஒரே வேன் வைத்துக்கொண்டுதான் வந்திறங்கினார்கள்.

குறவன் குறத்தி, புலிவேஷம், ஆஞ்சனேயர் வேஷம், கரகாட்டம், உருமி மேளம் ,சின்ன நாதஸ்வரக்காரர்கள் என ஒரு பத்துபேருக்கு தஞ்சாவூரிலிருந்து வந்திருந்தார்கள்.

’ என்ன யாரும் விசாரிக்கல. எனக்குத்தெரிஞ்சவங்களையும் நான் பாக்குல’

‘என்ன சொல்றீங்க சார்’

‘ நா யாரு எவுருன்னு சரியா தெரிஞ்சவங்க என்ன   ஊர் கோவிலுள்ள பாத்தா  பிரச்சனை  இப்பவேவிபரீதமாயிடும் சந்திரன், நாம சட்டுனு கெளம்பிடலாம்’

‘சரி சார்’

 ‘இனி இங்க என்ன பாக்குறத்துக்கு இருக்கு. எல்லாம் பாத்துட்டம். நாம முதுகுன்றம் பொறப்படவேண்டியதுதான். ஆனா இந்த நேரத்துக்கு வண்டி இருக்காது.’

’அப்ப என்ன செய்யலாம்’

‘ திரும்பவும் ஊர் ஸ்டாப்பிங்க்ல போயி நிக்கணும். விடிய காலையில நாலரை மணிக்கு இங்கிருந்து  டவுன் பஸ் மொத ட்ரிப்  முதுகுன்றம் கெளம்பும். அதுல போகவேண்டியதுதான்’

‘’அதுவரைக்கும் என்ன செய்யலாம் சார்’

‘டவுன்பஸ் லாஸ்ட்  ட்ரிப். வந்து இருக்கும். அது அந்த புளியமரத்துக்கும் கீழ ஹால்ட் பண்ணியிருப்பாங்க, நாமளும் அந்த வண்டில ஏறி படுத்துடுவம். வண்டிய எடுக்கும்போது அப்பிடியே போயிடலாம்’

‘ கண்டக்டரு டிரைவரு ஏதும் சொல்வாங்களா சார்’

‘அத அப்ப பாக்கலாம்’

இருவரும் ஸ்டாப்பிங்க் நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். முதலில் அக்கிரகாரம் வந்தது. நான்கைந்து வீடுகள் இருந்தன. வாயில் சுவரில் வெள்ளையும் சிவப்புமாய் பட்டை அடிக்கப்பட்டிருந்தது. ஒன்றிரெண்டு வேப்ப மரங்கள் தெரிந்தன. அரசமரம் ஒன்று வளர்ந்து வானைத்தொட்டுக்கொண்டிருந்தது. பசு மாடுகள் சில  வீதியில் படுத்து எப்போதோ  மேய்ந்தவற்றை அசைபோட்டுக்கொண்டிருந்தன

எல்லா வீடுகளின் வாசலிலும் கோலம் அழகாகப்போடப்பட்டிருந்தது.  தண்ணீர் தெளிக்கப்பட்ட வீதி ஜிலு ஜிலு என்றிருந்தது. அக்கிரகாரம் தாண்டி வெள்ளாளர் வீதி. பத்து வீடுகள் இருக்கலாம். எல்லோருமே கார்காத்த வெள்ளாளர்கள். சைவர்கள். திருவாசகமும் தேவாரமும் படிப்பவர்கள். வெள்ளாளர் தெருவில் இரண்டு டிராக்டர்கள் டிரக்கோடு நின்றுகொண்டிருந்தன. வீதி பளிச்சென்று இருந்தது.  தண்ணீர் தெளிக்கப்பட்டு கோலம் போட்டு வீதிக்கு  இன்னும் அழகு சேர்த்து இருந்தார்கள்.  மின்சாரக்கம்பத்தில்  குழாய் விளக்குகள்  பிரகாசமாய் எரிந்துகொண்டிருந்தன.

‘இங்க ஒரு விஷயம் கவனிக்கணும் சந்திரன். ஊரு பகுதியில மாரியம்மனுக்கு எல்லோருமே சிறப்பு செய்கிறார்கள். தீபாராதனைக்கு தேங்காய்த்தட்டு எடுத்து வருகிறார்கள். ஒரு வீடு பாக்கி இல்லாமல் எல்லா வீடுகளும்  மாரியம்மன் சாமியின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக்காத்திருந்தார்கள். சாமி புறப்பாட்டினைக்காண சுற்றுப்பட்டு ஊர்களிலிருந்து  உறவினரின் வருகை  பல வீடுகளில் இருக்கவே செய்கிறது.  ஊர் ப்பகுதியில் சாமிவீதியுலாவின் போது  நிகழும்  இந்த  நல்ல  விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ளத்தான் வேண்டும்’

சந்திரன் தருமங்குடியில்  இது  எல்லாம் எப்படி நிகழ்கிறது என்பதனை எண்ணிப்பார்த்தான்.

‘இது மாதிரிதான் சார் எங்க கிராமத்துலயும் நடக்கும்’

‘’எல்லாம் ஒண்ணுதான் இதுல என்ன இருக்கு’

முதுகுன்றம் செல்லும் டவுன்பஸ் பேருந்து நிறுத்தத்தில் ஹால்ட் செய்யப்பட்டுக்கிடந்தது.

‘வண்டில ஏறி படுப்பம்’

சந்திரன் செல்லமுத்துவோடு வண்டியில் ஏறினான்.  வண்டியில் யாருமில்லை. பேருந்தின் இரண்டு வாசல் படியிலும் ஷட்டர் இறக்கி விட்டிருந்தார்கள். ஆளுக்கொரு சீட் பார்த்து படுத்துக்கொண்டார்கள்.

‘இந்த வண்டில மூணுபேரு உக்கார்ர சீட்டு ரெண்டு  பேரு உக்கார்ர  சீட்டுன்னு இருக்கு. அதனாலே  படுக்க சவுகரியம். வெறும் ரெண்டு ரெண்டு பேர் உக்கார்ர சீட்டு  மட்டும் இருந்தா கஸ்டம்தான்.  சும்மா உக்காந்துதான் கண்ண மூடி மூடி பாக்கலாம்’ சொல்லிக்கொண்டே செல்லமுத்து உறங்கிப்போனார். சந்திரன் உறக்கம் பிடிக்காமல் சமுதாயத்தில் எத்தனை எத்தனை  சிடுக்குகள்  என்கிற யோசனையில்ஆழ்ந்தபடி இருந்தான்.

‘டிரைவரும் கண்டக்டரும் சாமி பாக்க ஆட்டம் பாக்க கோவிலுக்கு போயிருப்பாங்களா’

சந்திரன் சொல்லிக்கொண்டான். செல்லமுத்துசாரிடம் இருந்து பதில் இல்லை.

‘ சார்  நல்லா தூங்கிட்டாரு’ சொல்லிய சந்திரன் கண்களை மூடி மூடித் திறந்தான்.

நான்கு மணி சுமாருக்கு டிரைவரும் கண்டக்டரும் பேருந்தை நோக்கி வந்தார்கள். முதுகுன்றம் செல்லும் பத்து பேர் அதற்குள்ளாக பேருந்தின் அருகே நின்று வண்டி எப்போது கிளம்பும் என விசாரித்துக்கொண்டிருந்தார்கள்.

டிரைவர் வண்டியின் லைட்டைப்போட்டார். வண்டியை ஒரு முறை ஸ்டார்ட் செய்து நான்கு தப்படி அரக்கி நிறுத்தினார். ஒரு முறைக்கு இரு முறை ஹார்ன் சப்தத்தைக்கொடுத்தார்.

‘ யாருப்ப வண்டில தூங்குறது எழுந்திரு எழுந்திரு’

கண்டக்டர் செல்லமுத்துவையும் சந்திரனையும் விரட்டிக்கொண்டு இருந்தார்.

‘ முதுகுன்றம் போவுணும், வண்டிய உட்டுறப்போறம்னுட்டு  பயந்து ஏறி படுத்தம்’

‘’எழுந்து குந்துங்க  சாமி கும்புடணும்  கல்பூரம் ஏத்துணும் வண்டி பொறப்படணும் தெரிதா,’

‘சரிங்க’ சொல்லிய செல்லமுத்துவும் சந்திரனும் எழுந்து அமர்ந்து கொண்டார்கள். சற்று நேரத்திற்கெல்லாம் வண்டி புறப்பட்டது. அசுர வேகத்தில் வந்த வண்டி இருபது நிமிடத்தில் முதுகுன்றம் வந்து சேர்ந்தது.

இருவரும் தொலைபேசி நிலையம் நோக்கி நடந்தார்கள். செல்லமுத்து  நிறுத்திவைத்திருந்த தனது சைக்கிளை எடுத்துக்கொண்டார்.

‘ நான் வீட்டுக்கு போய் குளிச்சிட்டு டிபன் சாப்பிட்டு டூட்டிக்கு வருணும்’

‘ நான் சேக்கிழார் லாட்ஜ் போறேன் என் ரூமுக்கு போயி நாளாச்சி. கொஞ்சமா ரெஸ்ட் எடுப்பேன். ரொம்ப அசதியாவே இருக்கு.. அப்புறம் குளியல், மலயாள மாமி மெஸல டிபன் இதெல்லாம் முடிச்சிட்டு  டூட்டிக்கு  சரியா வந்துடறன்’ சொல்லிகொண்ட சந்திரன் அய்யனார் கோவில் தெரு கோடியில் இருக்கும் சேக்கிழார் லாட்ஜ் நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

------------------------------------------

                                                               12

அய்யனார் கோவில் ஒன்று  அந்தத் தெருவின் கோடியில் இருந்தது ஆகத்தான் இது அய்யனார் கோவில் தெரு  மக்கள் செல்லமாக’ஐ நா கோவில் தெரு என்று அழைத்துப்பழகியிருந்தனர். கோவிலை ஒட்டி மணிமுத்தாறு ஓடிக்கொண்டிருந்தது..  பழைய காலத்தில் முதுகுன்றம் இத்தோடு முடிந்துபோய் இருக்கலாம். அய்யனார் கோவில்கள் ஊரின் எல்லையில்தான் பெரும்பாலும் காணப்படுகின்றன. சைவ செட்டியார் ஒருவர் இந்தத்தெருவில்  சபாபதி தேவார பாடசாலை வைத்திருந்தார். அவர்தான் சேக்கிழார் லாட்ஜ்க்கும் பொறுப்பாக இருந்தார். சேக்கிழார் என்ற பெயரே பெரியபுராண ஆசிரியரின் பெயர்தானே. அந்தச்செட்டியார் இந்த லாட்ஜ்க்கு அந்த சைவத்திருமுறை நூலான பெரியபுராணம் பாடிய சேக்கிழார் பெயரைவைத்து அவருக்குப்பெருமை சேர்த்து இருக்கிறார். கீழ்தளம் மேல்தளம் இரண்டு தளங்கள் அதனில் இருந்தன. ஒவ்வொரு தளத்திலும் பத்து அறைகள். சேக்கிழார் லாட்ஜில். ரூம்    பிடிப்பதற்குப் போட்டாபோட்டி நடக்கும். அரசு ஊழியர்கள்,வ்ங்கி ஊழியர்கள் தொலைபேசி ஊழியர்கள் போஸ்டாபீஸ் ஊழியர்கள் என லாட்ஜ் எப்போதும் ஜே ஜே என்றிருக்கும். லாட்ஜ்க்குப்பின் பின்னே இருபது  யாழ்ப்பாண தென்னை மரங்கள் குலை குலையாய் காய்த்துத்தொங்கும். தோட்டத்தின் மய்யமாய் ஒரு மோட்டார் தென்னை மரங்களுக்குத்  தண்ணீர் இறைக்கும்.  மங்களூர் டைல்ஸ்  போர்த்திய இரண்டு பாத்ரூம்கள் இரண்டு கழிப்பறைகள். ஒவ்வொரு அறை வாசலிலும் தண்ணீர்  பக்கெட்டை கையில் வைத்துக்கொண்டு அறை ஆசாமிகள் காத்துகொண்டு  நிற்பார்கள்.

தென்னைமரங்களுக்கிடையே விஸ்தாரமான இடைவெளி. அந்த இடைவெளியில் எப்போதேனும் செட்டியார்கள் இறப்புக்கு பத்தாம் நாள்  காரியங்கள் நடைபெறும். அப்போது மட்டும் வெளியார்கள் வருகை அங்கே கட்டாயம் பார்க்கமுடியும்

அறைவாசிகள் இள நீர் குடித்த மிச்சம்தான்  தேங்காய்ப் பறித்து தின்ற மிச்சம்தான் அந்த  சைவச்செட்டியாருக்குப்போய்ச்சேரும். குரங்குகள் அவ்வப்போது தென்னைமரங்களில் குடும்பத்தோடு அமர்ந்து  தேங்காய்கள் உறித்துத் தின்னும். குரங்குகளின் பற்கள் கூர்மையாக வெள்ளை வெளேர் என்று காட்சி தரும். எங்கிருந்து வருமோ  அந்த குரங்குகள்.ஞாபகமாய்  மாதம் ஒரு முறை அவை விஜயம் செய்யும்.

சந்திரன் அறை மேல்தளத்தில் இருந்தது. அந்த அறை எண் 6. அதனில் மூவர் தங்கியிருந்தனர். மற்ற இருவரும் அதே தொலைபேசி ஆபிசில்தான் வேலை செய்தார்கள்.

அறையில் நண்பர்கள் ரகு என்கிற ரகு நாதனும், மாத்ரு என்கிற மாத்ருபூதமும் இருந்தனர். இருவருக்கும் தொலைபேசி நிலயத்தில்  சர்க்யூட் என்கிற செய்தித்தடங்களை பராமரிக்கும்பணி.

‘ஆள கொஞ்ச நாளா லாட்ஜ் பக்கமே பாக்கமுடியல’

   ரகு என் டூட்டி அப்பிடி. தெனம்  எனக்கு சிக்ஸ் டூடி. காலையில் வருவேன் அத  பாத்துட்டு அப்பிடியே வீட்டுக்கு போய்டுவேன். இங்க வரவேண்டியத்தேவையே எழல’

‘தேவை எழுந்தாதான் வருவீரு.   இப்ப எப்பிடி ஆறு மணி டூட்டிக்கி அப்பிடியே  ஆபிஸ் போகாம  இந்தபக்கம் காத்து அடிக்குது’ மாத்ரு கேட்டார். அவரின்  பேச்சுக்கள் அன்பின் வெளிப்பாடு. அது எப்பொழுதும்தான்.

‘மாத்ரு நான் நேற்று ராத்திரி மதுரவல்லி போயிருந்தேன்’

‘ மதுரவல்லியா அது என்ன புது சேதி  அந்த  ஊரு எங்க சந்திரன்  இருக்கு’

‘ அது சூபர்வைசர்  செல்லமுத்துசார் ஊரு,’

‘’ அங்கென்ன  உமக்கு ஜோலி’

‘ நேற்று ஆடிப்பருவம் மதுரவல்லியில சாமி புறப்பாடு. மாரியம்மன் கோவில்ல கரகாட்டம் குறவன் குறத்தி டான்ஸ். வாணவேடிக்கை. சும்மா வாங்களேன்   போய் வரலாம்னு  சார் சொன்னார்’

‘பரவாயில்ல. அங்கங்க போனாதான் நாலு விஷய.ங்கள் நமக்கும் தெரியும்’ என்றார் ரகு.

ரகுவுக்கும் மாத்ருவுக்கும் தினம் பத்து மணி டூட்டிதான். அதனில் எந்த மாற்றமும் இல்லை. ஞாயிறு அன்று வார ஓய்வு. ரகுவுக்கு கும்பகோணம் அடுத்த குடவாசல் சொந்த ஊர். மாத்ருவுக்கு திருச்சி. வாரம் ஒரு நடை இருவரும் சொந்த ஊருக்குப்போய் வருவார்கள்.

சேக்கிழார் லாட்ஜில் குடியிருப்பவர்கள் அனேகமாக பேச்சிலர்கள்தான்.ஒன்றிரெண்டு முதியவர்களும் அரிதாக இருக்கலாம்.

‘சரி சரி  நீரு குளிச்சிட்டு கெளம்பலாம். நேரமாச்சி’ மாத்ரு சந்திரனிடம் சொல்லிமுடித்தார்.

சந்திரன் அரையிலிருந்து  பிலாஸ்டிக் வாளி மக்கோடு தரைதளம் வந்து மோட்டார் அறை எதிர் இருந்த தண்ணீர் தொட்டியில் நீர் பிடித்துக்குளித்தான்.  தண்ணீர் ஜில்லென்று இருந்தது. ஆறு மணி டூட்டிக்கு  சேக்கிழார் லாட்ஜ்லிருந்து யாரும் புறப்படவில்லை. சந்திரன் அறைக்கு வந்து டிரஸ் செய்துகொண்டு புறப்பட்டான். அறையில் இரண்டு ஜோடித் துணிமணிகள் ஜமக்காளம் போர்வை இத்யாதிகளை சந்திரன் வைத்திருந்தான்.

’மதுரவல்லிக்குப்போன சேதி சாமி கும்பிடவா இல்ல வேறு எதனா உண்டா’ மாத்ரு சந்திரனைக்கேட்டார்.

‘அவரை விடுங்க டைம் ஆச்சி  அவருக்கு டூட்டி இருக்கே’ ரகு மாத்ருவுக்கு ப்பதில் சொன்னார்.

‘வாங்களேன் ஒரு காபி சாப்பிட்டு வரலாம்’

‘ நீங்க மெஸ்ஸுக்கு போவீங்க’

‘காபி சாப்பிடன்னா அது குட்டிக்கடைதான்.’ சந்திரன் மாத்ருவுக்குப்பதில் சொன்னான்.

மூவரும் முதல் பாடியிலிருந்து கீழிறங்கித் தெருவுக்கு வந்தார்கள். அய்யனார் கோவிலின் வாயிலில் நின்றார்கள்.

‘சொர்க்க ரதம் ஒன்று’ சவத்தை சுமந்துகொண்டு அய்யனார் கோவில் தெருவில் வந்துகொண்டிருந்தது பறை மேளம் வாசிப்போர் டகர டகர டண் டண் டகர டகர டண் டண் டகர டகர’ என்று விடாமல் அடித்துக்கொண்டு வந்தார்கள். ஒரு நூறு பேருக்கு சவ வண்டியை ப்பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தார்கள். டொய் டொய் என்று வானத்தில் சென்று வாணங்கள் வெடித்தன.

பறை அடிப்பவர்கள்’ டண் டண் டண் என்று மூன்று முறை அடித்து நிறுத்தினார்கள். எங்கும் மயான அமைதியாக இருந்தது. அய்யனார் கோவில் தெரு நாய்கள் இவை அத்தனையும் பழகிக்கொண்டு அலட்டிக்கொள்ளாமல் அமைதிகாக்கின்றன.

‘அய்யனார் கோவில் முன்பாக சவம் செல்லும்போது ஒலி எழுப்புதல் கூடாதுன்னு நிறுத்திட்டாங்க’ சந்திரன் ஓங்கிச்சொன்னான்.

இது பறை அடிப்ப்வர்களில் ஒருவர் காதில் விழுந்திருக்கலாம்.

‘ எந்த கோவில்னாலும் சரி மசூதின்னாலும் சரி சர்ச்சுன்னாலும் சரி பதனமாதான் போவுணும்.  அங்கெல்லாம் சவம் ஓசை எழுப்பிகிட்டு போவப்படாது’ அறிவிப்பு போன்று  விஷயத்தை ச்சொல்லி முடித்தார்.

சந்திரனைப்பார்த்து சிரித்து முடித்தார் மாத்ரு. சவ ஊர்வலம் அய்யனார் கோவில் தாண்டி அச்சுதம்மன் கோவில் தெருவழியாக சென்றுகொண்டிருந்தது. அச்சுதம்மன் கோவிலைத்தாண்டும்போதும் பறை அடிப்பவர்கள். அமைதி காத்தார்கள். ஊர்வலத்தில் ஒருவர் கையை மேலே  உயரமாய்த்தூக்கி அமைதி காக்கக் கட்டளை தந்தார்.

‘ ஏன் ரகு  சொர்க்க ரதம்னு  சவ வண்டி மேலே கொட்டையாய் போட்டுருக்காங்களே,  செத்துப்போனவரு சொர்க்கத்திற்கு போவுறாரா  இல்ல நரகத்துக்கு போவுறாரான்னு   எப்பிடி தெரியும்’

’,சொர்க்கம் அல்லது நரகம்னு  எழுதிப் போட்டு இருக்கலாம்னு ஒரு கரெக்‌ஷன் தர்ரீங்க’

சந்திரன் சிரித்துக்கொண்டான்.

‘ நீடூழி வாழ்கன்னுதான்  நாம யாருக்கும்  வாழ்த்து சொல்லணும்.’ என்று முடித்தார் ரகு.

மூவரும் நடந்து கொண்டிருந்தார்கள்.

‘ நான் டூட்டிக்கு போவுணும்’

‘ சந்திரன் சொல்றது சரிதான்’

’யுனைடெட்  நேஷன்ஸ் டெம்புள் தெருவ  அப்பப்ப  ஞாபகத்துல வச்சிகுங்க’

‘ ஐ நா கோவில் தெருவத்தான் மாத்ரு அப்பிடி சொல்றாரு’ ரகு சொல்லி சிரித்துக்கொண்டார்.

மூவரும் அஞ்சலக வாயிலில் வந்து திரும்பினார்கள். கடை வீதியிலுள்ள  குட்டிக்கடை வாயிலில் ஒரே கூட்டம்.  சைவ ஓட்டல்  கிருஷ்ண பவனைத்தானே  குட்டிக்கடை என்று மக்கள் அழைக்கிறார்கள்.  காபி சாப்பிட வருபவர்களின் கூட்டம் அதிகம்தான். தானும் சாப்பிட்டு வீட்டிலுள்ளவர்களுக்கும் பார்சல் காபி வாங்கிச்செல்பவர்கள்  எண்ணிக்கையில் அதிகம் இருந்தார்கள்.

‘ மாத்ரு சித்த அர்ஜெண்ட், டூட்டிக்கு போகணும்னு சொல்லுங்க’ என்றான் சந்திரன்.

கல்லாவில் அமர்ந்திருந்த குட்டி அய்யர்’ மூணு காபி அர்ஜெண்ட் டெலிபொன் ஆபிசுகாரங்களுக்கு’ குரல் கொடுத்தார்.

‘ டெலிபோன் ஸ்டாப்க்கு  நாலு காபி’ மாத்ரு ஓங்கிச்சொன்னார்.

‘இன்னும் ஒத்தர் வராரா’

‘ ஆமாம்’; குட்டி அய்யருக்குப் பொய்தான் சொன்னார் மாத்ரு. சந்தனப்பொட்டு நாராயண அய்யர்  நான்கு பித்தளை டபரா செட்களில் காபியை எடுத்து வந்து மேஜையில் வைத்தார்.

மாத்ரு ஒரு காபியை எடுத்து அதனை மூன்று பேருக்கும் நிரவி ஊற்றினார். நான்கு மீண்டும் மூன்றானது.

‘இப்ப சரி’ மாத்ரு சொல்லிக்கொண்டார்.

மூவரும் காபி சாப்பிட்டு முடித்தனர்.

‘ இந்த கிருஷ்ண பவன் காபி மணம் எங்க சுத்தினாலும் கிடைக்காது’ ரகு சொல்லிக்கொண்டார்.

குட்டி அய்யர் நான்கு காபியை மூவர் குடித்ததை ப்பார்த்துக்கொண்டார்.

’ ஒவ்வொருத்தருக்கு ஒரு டேஸ்ட்’ சொல்லிக்கொண்டார் குட்டி அய்யர்.

‘மதுரவல்லிக்கு போய் வந்த கதை இன்னும் பாக்கி இருக்கு.’ சந்திரன் சொல்லிக்கொண்டான்..

‘அத இன்னொரு நாள் வச்சிப்போம்’ ரகு சொல்லி முடித்தார்.

‘ நான் வரேன்   எனக்கு நேரமாச்சு’ சந்திரன் தொலைபேசி நிலையம்  நோக்கிப்புறப்பட்டான்.

‘ இன்னிக்கு டிபன்  மதியம் சாப்பாடு எல்லாம்  மலையாள மாமி மெஸ்ல தானே’

‘ ஆமாம்’ சொல்லிக்கொண்டே வேக வேகமாக நடந்தான்.

மாத்ருவும் ரகுவும் சற்று மெதுவாக வந்துகொண்டிருந்தார்கள். பத்து மணி டூட்டிக்காரர்கள் ஆகத்தான். வழக்கம்போல் ரகுதான்  குட்டிக்கடை காபிக்குக்காசு கொடுத்தார். ரகுவுக்கு இப்படித்தான் எப்போதும்  வழக்கம். எல்லோராலும் இப்படி இருக்கமுடியுமா என்றால்  அது எப்படி ? .

ரகுவும் மாத்ருவும் பேசிக்கொண்டே நடந்தார்கள். சந்திரன் மதுரவல்லிக்குப்போனது குறித்தும் பேசினார்கள். செல்லமுத்துவோடு சந்திரன் கொஞ்ச நாளாக நெருக்கமாய் இருப்பதை அவர்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள்.

ரகு ஒரு பெட்டிக்கடை பார்த்து இந்து நாளிதழ் வாங்கிக்கொண்டார். பெண்ணாடம் அருணா சர்க்கரை ஆலைக்குச்செல்லும் கரும்பு லாரிகளும் டிராக்டர்களும் சாலையை அடைத்துக்கொண்டு சென்றன. கரும்பு சுமையைப் பெண்ணாடம் ஆலையில்  இறக்கி விட்டு வரும்  காலி வண்டிகளும் எதிரே வந்துகொண்டிருந்தன. காலி டிரக்குகள் எழுப்பும் ஒலி நாராசமாய் இருந்தது.

‘சரக்கு ஒண்ணும் இல்லேன்னா சத்தம் பெரிசா வரும் போல’ மாத்ரு சொல்லிக்கொண்டார். ஒரு ஆசாமி போலிஸ் ஸ்டேஷன் எதிரே சாலையை கடக்க முயற்சித்து சாலையில் பொத்தென விழுந்தார். சாலையில் சக்கரனகளுக்கிடையே  நீட்டமாய்க்கிடந்த  அவர் மீது டிராக்டரின் எஞ்சின் சென்றது. காலி டிரக்கும் சென்றது .டிரக்கு சென்று முடித்தவுடன்  சாலையில் கிடந்த அந்த ஆசாமி  சிராய்ப்பு எதுவுமின்றி  டக்கென எழுந்தார். நடந்தார். சென்றுகொண்டே இருந்தார்.

‘ மாத்ரு அந்த ஆள பாத்தீங்களா’

‘ பாத்தேனே. சக்கரத்துக்கு இடையில் சரியாக படுத்துக்கொண்டார். வண்டியின் எஞ்சினும் டிரக்கும் அவரைக் கடந்து சென்றன. அவரை எதுவும் தொட்டுக்கூட பார்க்கவில்லை.  இது என்னவோ அதிசயம் ரகு’

‘இப்படி எல்லாம் கூட நடக்குமா மாத்ரு. யாராவது சொன்னால் நம்புவார்களா என்ன’

‘ நாம் கண்ணால் பார்த்தோம், இனி ஒரு முறை இப்படிப்பார்க்கமுடியாதுதான்’

‘அவர் பாட்டுக்கு ஒண்ணுமே நடக்காதமாதிரி எழுந்தார் நடந்தார்’

 கடைத்தெருவே அவரை அதிர்ந்துபோய் பார்த்துக்கொண்டிருந்தது.

‘ பெரிச்சி சந்தாட்டி போய் லாட்ஜ்க்கு போயிடலாமா’

‘ சரி ரகு எப்பிடி போனாலும் ஒண்ணுதான். நாலு மூணும் ஏழு. மூணு நாலும் ஏழு’

பெரிச்சி சந்தில் இருவரும் திரும்பி நீளமாய் நடந்தார்கள். சந்து முடியும் திருப்பத்தில் ’அய்யோ’ என்று அலறும் சத்தம் கேட்டது.

’ரகு என்னவோ அலறல் சத்தம் கேக்குது’

‘ரகுவும் மாத்ருவும் திரும்பவும் வந்த வழி நோக்கி நடந்தார்கள். பெரிச்சி சந்தின் நடு நாயகமாய் அடை ராயர் வீட்டுக்கு அருகே திபு திபு என்று மக்கள் கூட்டம். தெருவில் மின்சாரக்கம்பி அறுந்து கிடந்தது. பக்கத்துத்தெருவிலுள்ள  நெடிது வளர்ந்த தென்னை மரமொன்று படீரென முறிந்து வீழ்ந்து இருக்கிறது. அது பெரிச்சி சந்தின் மின்சாரக்கம்பிகளின் மீது வீழ மின் கம்பி அறுந்து அடை ராயரின் மனைவி மீது பட்டிருக்கிறது. அந்த மாமி பால்வாங்கிய குவளையோடு மின்சாரம் தாக்கி நொடிப்பொதில் மரணமடைந்து இருக்கிறாள். பால் கொடுத்த பால்காரன்  சைக்கிளை மிதித்துக்கொண்டு அவன் போய்ச்சேர்ந்துவிட்டான். இங்கு என்ன நடந்தது என்ன என்பதை அவனே அறிய வாய்ப்பில்லை.

‘ பழமலை நாதர் கோவிலுக்கு வடக்கே அடை ராயர்  என்பவர்  மாலை வேளையில் டிபன் கடை வைத்திருக்கிறாரே.. அவருக்கு ராமச்சந்திர ராவ் என்றுதானே பெயர். அவர் டிபன் கடையில்  போடும்  பருப்பு அடையால் முதுகுன்ற நகரில் ராயர் பிரபலமாகி இருந்தார்.   அடை ராயர் என்றால் எல்லோருக்கும் தெரியும் அவரின் மனைவிதான் இப்போ மின்சாரம் தாக்கி காலமாகி இருக்கா’

மாத்ரு ரகுவுக்கு விளக்கமாய்ச்சொன்னார்.

 தன் வீட்டு வாயிலில்  சைக்கிள்காரனிடம் பால்வாங்கிய மாமி வீட்டுக்குள்ளே செல்லவில்லை. உலகத்தை விட்டே போய்விட்டார். பாலும் தெருவில் கொட்டிக்கிடந்தது. பால் வாங்கிய குவளை அருகிருக்கும் சாக்கடையில் விழுந்து கிடந்தது

’ நிமிஷத்துல என்னவோ நடந்து விட்டதே மாத்ரு.  ராயர் மாமி பாவம் அடைராயர் இன்னும் பாவம். மனசுக்கு வேதனை’

‘ இனி ஈ பி காரன் வரணும் போலிஸ் வரணும் ஆஸ்பத்திரிக்கு பாடிய எடுத்துண்டு போய் போஸ்மார்டம் ஆகணும் சொந்தக்காரன் வேண்டியவன்  எல்லாம் வரணும். அப்புறம் இன்னும் அந்த மேற்படி  காரியங்கள் எல்லாம் இருக்கு’

‘அதிசயமா இருக்கு. எதையும்  நம்ப முடியலே.’ மாத்ரு சொல்லிக்கொண்டார்.

டூட்டினு ஒண்ணு இருக்கு. நாம அங்க போகணும்’ சொல்லிய ரகு மாத்ருவோடு சேக்கிழார் லாட்ஜ் நோக்கி நடந்தார்கள். குளித்து முடித்து  தயாரானார்கள்.டிபன் சாப்பிட  அவர்களிருவரும் மலையாள மாமி மெஸ் ஸுக்குப்போகவேண்டும்..

‘ இண்னைக்கு மெஸ் இருக்குமா, இந்த ராயர் மாமி  டெத் இன்சிடெண்ட் வேற இருக்கே’

‘மெஸ் இருக்கும். அது  வயித்துப்பொழப்பாச்சே’

‘ நாம டூட்டிக்கு போறமாதிரி’ ரகு பதில் சொல்ல இருவரும் மெஸ்ஸுக்கு டிபன் சாப்பிடச்சென்றார்கள்.

----------------------------------

                                                     13.

செல்லமுத்து சார் சரியான நேரத்துக்கு அலுவலகம் வந்துவிட்டார். நேற்று இரவு மதுரவல்லி போனது வந்தது எல்லாம் பற்றி சந்திரனும் அலுவலகத்தில் பிரஸ்தாபிக்கவில்லை. ரகுவுக்கும் மாத்ருவுக்கும் மட்டும் மதுரவல்லிக்குப்போய் வந்ததாய்ச் சந்திரன்  சொல்லியிருக்கிறான். அவர்கள் இருவரும்  பணி செய்யும் பகுதிக்கும்  டெலிபோன் ஆப்ரேட்டர்கள் பணிசெய்யும் பகுதிக்கும் தொடர்பென்பது பெரியதாக இல்லை. அவர்கள் டெக்னிகல் ஸ்டாஃப் என்றும் டெலிபோன்  ஆப்ரேடர்கள் ட்ராஃபிக் ஸ்டாஃப் என்றும் அழைக்கப்பட்டனர். சந்திரன் டிபன் சாப்பிட மலையாள மாமி மெஸ்ஸுக்குச்சென்றுவந்தான். மதியமும் அதே மெஸ்ஸில்தான் சாப்பிட்டான்.

செல்லமுத்து’ இன்று கூடிப்பேசுவது வேண்டாம்,’ என்று மட்டும் சந்திரனிடம் சொல்லியிருந்தார். மதுரவல்லிக்குப்போய் வந்தது சற்று களைப்பைத்தந்திருக்கலாம். சந்திரன் கூட அப்படித்தான் உணர்ந்தான். மனம் கனத்துபோய்தான் மதுரவல்லியிலிருந்து திரும்பினான். சமூகம் பெரியஅளவில் சாதிப்பிரிவினையால்பாதிக்கப்பட்டிருப்பதைப்பிரத்தியடசமாகப்பார்த்தான்.

கையில் வயர் கூடையோடு நடந்தான். வெயில் அவ்வளவாக இல்லை. ஆற்றங்கரயை ஒட்டிய செக்கு மேட்டில்  எண்ணெய்ச் செக்கு ஓடிக்கொண்டிருந்தது.  செக்கில் பூட்டப்பட்டமாடுகள் களைப்பே இல்லாமல் சுற்றிச் சுற்றி வந்தன. தலையில் முண்டாசோடு செட்டியார் செக்கில் கைவிட்டு பிண்ணாக்குக்கட்டிகளை அப்புறப்படுத்திக்கொண்டிருந்தார்.   மணிலா எண்ணெய் மரச்செக்கின் வட்ட அடித்தட்டில் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது.  பிழியப்பட்ட எண்ணெய் செப்புக்குடங்களில் நிரப்பப்பட்டு சிறிய கொட்டகை வாயிலில் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன.

‘ எண்ணெ செலவு இல்லியா, வாங்கறது’

செட்டியார் சந்திரனிடம் சொல்லி நிறுத்தினார்.

‘கடைத்தெருவுல உங்க கடையிலதான் வாங்குறேன். தருமங்குடி ராதாகிருஷ்ணன் செட்டியார்தானே உங்க கடையில வியாபாரம் பாக்குறார் அவுரு எங்க ஊருதான்.  அவுரு வூட்டைத்தாண்டிதான் எங்க வீடு. அவரு அண்ணன் நாராயணசாமி செட்டியார்னு மளிகைக்கடை வச்சிருக்காரு  எங்க ஊர்ல.  கிராமத்துல அவுருகிட்டதான்  நாங்க சாமான் வாங்குவம். உங்க செக்கெண்ணெய் அந்த கடைக்கும் வருதே.  உங்களுக்கு அவுங்க  ஏதும் உறவாகூட இருக்கும்னு   நினைக்கிறேன்.எனக்கும் நல்ல செனேகிதம் அவுரு’

‘ஆமாம் சார்.  ராதாகிருஷ்னன் செட்டியார் எம்மொவளைதான் கட்டிருக்காரு. உறவு இல்லாம என்ன இந்த  எண்ண  செக்க ஏதோ உத்து உத்து பாத்திங்களேன்னு கேட்டேன்’

‘சும்மா பாத்தேன் வேற ஒண்ணும் இல்ல’

சந்திரன் ஆற்றில் இறங்கி நடக்க ஆரம்பித்தான்.ஆறு முழுவதும்  மாடுகள் அங்கங்கு நின்று கொண்டிருந்தன. மாட்டுத்தரகர்கள் இப்படியும் நடந்துகொண்டு ஜம்பம் காமித்துக்கொண்டிருந்தார்கள். கைகளில் கட்டை விரல் தவிர்த்து அனைத்து விரல்களிலும் மோதிரம் அணிந்திருந்தார்கள். தோளில் துண்டொன்று தொங்கிக்கொண்டிருந்தது. எல்லா தரகர்களும்   யுனிஃபாம் மாதிரி   வேட்டிதான் கட்டிகொண்டு  இருந்தார்கள்.யாரும் முழுக்கால் சட்டை இத்யாதிகளை அணிய மாட்டார்கள். மாடு விற்பவர்களும் மாடு வாங்குபவர்களும் தரகர்களை சுற்றி சுற்றி வந்தார்கள். மாட்டுக்குக் கொம்பு சீவி  அழகு செய்யும் குறவர்கள் தம் தொழிலில் மும்முரமாய் இருந்தார்கள். காளை மாடுகளுக்கு  பாதத்தில் லாடம் கட்டும்  தொழிலாளர்கள்  பரபரப்பாக  வேலை செய்து கொண்டிருந்தனர்.சலங்கை மணி, ஒத்தை மணி வெண் சங்கு கருப்பு கயறு  கொம்பு வர்ணம் மூக்குக் கயிறு, முகக்கயிறு,மாடு கட்டும் கயறு வண்டியில் பிணைக்கும், பூட்டாங்கயிறு  என ரகம் ரகமாய் விற்கும் கடைகள் சில வியாபாரம் செய்துகொண்டிருந்தன. நோஞ்சானாய் த்தெரியும் மாடுகளின் வயறு நிறைத்து பார்க்கத்தக்க மாடுகளாய் அவைகளை மாற்ற  தவிட்டுத்தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. மாடுகளின் வாயை அகற்றி ப்பிடித்துக்கொண்டு குறுக்கே மூங்கில் குச்சியை ச்செறுகிவிட்டு,  தவிட்டுக்கரைசலை  மாடுகளின் வாய் வழியே புனல் வைத்து வயிறு நிரப்பும் அந்த திரு ப்பணியும் நடந்துகொண்டிருந்தது. மாடுகள் செயற்கையாய் புஷ்டியாக இருப்பது போன்ற தோற்றத்தை அவை நல்கின. அது ஒரு தொழிலாய்ப்பழகிக்கொண்டு பணி செய்பவர்களும் இருக்கவே செய்தார்கள். மாட்டுத்தரகர்கள் கை விரல்களை மேல் துண்டால் மறைத்துக்கொண்டு மாட்டின் விலையில் ஏற்றம் இறக்கம் இவைகளை ச்சம்பாஷித்துக்கொண்டார்கள்.தரகர்கள் சிலர் கறா புறா எனக்கத்திக்கொண்டு திரிந்தனர். மாடுகளின் கயிறை க்கையில்பிடித்துக்கொண்டு  மாடுகளின் பெருமை ப்பேசிக்கொண்டிருந்தார்கள். வாங்குவோரின் தரகர்கள் அவர்களோடு வாக்குவாதம் செய்து மாடுகளின் விலை குறைக்கத் தொடர்ந்து முயன்றார்கள் மாடு விற்போரும் மாடு வாங்குவோரும் தாம் சாதித்து விட்டதாய் எண்ணி ஆற்று மணலில் நடைபயின்றார்கள்.

வியாழக்கிழமை தோறும் மாட்டுச்சந்தை முதுகுன்றத்தில் நடந்துவருகிறது. திருவண்ணாமலையிலிருந்து அனேக மாடுகள் இங்கு விற்பனைக்கு வருகின்றன. சந்திரன் எல்லாவற்றையும் நோட்டம் விட்டுக்கொண்டே நடந்தான்.

‘எம்மாட்ட கருக்கலோட  திருடிக்கொண்டாந்து இங்க சந்தையில  விக்குறான். அந்தப் பேமானிகிட்ட  திருட்டு  மாட்ட வாங்கிகினு சட்டமா பேசுறீரு’

‘பத்தாயிரம்  ரூவா சொளயா அவுத்துப்புட்டு நா  இந்த மாட்ட ஓட்டியாறன். மாட்டுக்காரன் எங்க  போனானோ  ஆரு கண்டா. மாடு திருட்டு மாடுன்னு  அது நெத்தில எழுதியிருக்கா’

இருவர்  இப்படியாய் அந்த மணிமுத்தாற்றகரை செல்லியம்மன் கோவில் வாயிலில் வாய்ச் சண்டைபோட்டுக்கொண்டார்கள்

விலை மாதர்கள் நான்குப்பேருக்கு ஒரு புளிய மரத்தடியில் அமர்ந்து யாரேனும் வருவார்களா  வந்து அவர்களுக்குக்  காசு ஏதும்  தருவார்களா என  எதிர்பார்த்து  அமர்ந்திருந்தனர்.

‘ இந்த பக்கமும்  சாடமாடயாய்  வந்துட்டு போவுலாம். நீங்க  உங்க சவுகரியத்துக்கு  ரோட்டு மேல  நீட்டா போயிகினே இருந்தா அது தப்பு’ நால்வரில் ஒரு பெண் ஓங்கிக்கத்தினாள்

சந்திரன் அதனைக்காதில் மட்டுமே  வாங்கிக்கொண்டான்..

‘ தலைய சாச்சிட்டு போவுது பார்

‘ஒண்ணுந்தெரியாதா பாப்பா போட்டுகிட்டாளாம் தாப்பா’

அந்தப்பெண்களில் இருவர் பேசிக்கொண்டனர்.

பானையில் சாராயம் கொண்டுவந்து சைக்கிள் காரியரில் வைத்துக்கொண்டு வருவோர் போவோர்க்கு  விற்பனை செய்யும் ஒருவர் நின்று  இருக்க, அவரிடம்  தனக்கு அத்துப்படியான  அரசியல் பேசிக்கொண்டிருந்தார் ஒரு வாடிக்கையாளர்.

மணிமுத்தாற்றைத்தாண்டி நடந்து வந்த சந்திரன் கடலூர்தார்ச் சாலையில் வந்து ஏறிக்கொண்டான்.

எதிரே குஞ்சிதம் பஸ் வந்துகொண்டிருந்தது. பாலக்கரையில்தான் பேருந்து நிறுத்தம். சந்திரனைப்பார்த்துவிட்ட குஞ்சிதம் பஸ்ஸின் ஓட்டுனர் வண்டியை நிறுத்தி சந்திரனை ஏற்றிக்கொண்டார்.

‘ தேங்க்ஸ் டிரைவர் சார்’

‘ ஆள பாத்துட்டன் நிறுத்திட்டன். ரெகுலரா வர்ர மனுஷன்’

டிரைவர் சொல்லிக்கொண்டே வண்டியை ஓட்டினார். சந்திரன் டிரைவர் அருகிலேயே அமர்ந்துகொண்டான். கண்களில் உறக்கத்தின் தாக்கம் இருப்பதை உனர்ந்தான். வீட்டிற்குப்போய் நல்ல உறக்கம்  ஒன்று போட வேண்டும். மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.

வண்டி வேகமாகவே சென்றது. சந்திரன் கண்களை மூடி மூடித்திறந்தான், தருமங்குடி  நிறுத்தத்தில் இறங்கி கப்பிச்சாலையில் நடக்க ஆரம்பித்தான்.

                                        14.

வீட்டு வாயிலில் உள்ள சிமெண்ட் திண்ணை மீது சந்திரனின் அப்பா உட்கார்ந்துகொண்டு இருந்தார். சிமெண்ட் திண்ணையில் எதிரே இருக்கும் வானளாவிய அரச மரத்தின் கீழ் பொறுக்கிய அரசங்குச்சிகள் காயவைப்பட்டிருந்தன. ஹோமத்திற்கு அவை தேவைப்படும் என்பதால் அதனை சந்திரனின் அப்பா விடாமல் பொறுக்கிக் காயவைத்து சிறிய  சிறிய கட்டாகக்கட்டிப் பதனம் செய்வார். அதே போல் பட்டினத்தான் வாய்க்கால் கரையில் தர்பைப்புல்லை அறுத்தும் கொண்டு வந்து சீர் செய்வார். இவை அவர் செய்யும் தொழிலுக்கு தேவையாயிற்றே.

‘என்னடா  நேற்று வரல’

‘ சேதி குருக்கள் மாமா சொல்லல’

‘ சொன்னார்தான். இல்லன்னா இன்னும் கவலையாகி இருக்கும்’

‘ என்ன பண்றது நம்மூர்ல ஒரு டெலிபோன் இல்ல, இருந்தா அப்பப்ப சேதி சொல்லிடலாம்’

‘ நீங்கதான பாத்து செய்யணும்’

‘ வந்தா மொதல்ல போஸ்டாபீசுக்குத்தான் வரும்’

‘ அதுல என்ன பிரயோஜனம்.  போஸ்டாபீஸ்ன்னா அது காலனில இருக்கே’

‘ அப்பிடி சொல்லக்கூடாது. அது இங்க இருந்தா, அங்க இருக்கறவங்க  நீ  இப்ப சொல்றமாதிரித்தானே சொல்லுவாங்க’

‘ஆமாம்’

; போன் தருவாங்கன்னா நம்மூர்ல பத்துபேராவது அத வாங்கிப்பாங்க’

‘அது இப்பக்கி முடியுமா, சொல்லமுடியாது. இன்னும் பல வருஷங்கள் ஆகலாம்’

‘ அண்ணைக்கி நானும் அம்மாவும் இருக்கப்போறமா சொல்லு’

‘போன் வச்சிகிறதுன்னா அதுக்கு தேவை  அவசியமா இருக்கணும் அதுக்கு தொடர்ந்து  பில் வரும் அத கட்டணும். அது நம்மால முடியணும்’

‘மேலைக்கு வாக்கப்படறேன் கழுத்தே சுகமா இருதான்’

‘அப்பிடின்னா என்னப்பா’

‘இப்பக்கி ஆகபோறது ஒண்ணும் இல்லே உன்  வேலயைப்பார்னு அர்த்தம்’

‘ ரொம்ப சரி’

‘ சரி நீ  உள்ள போ களைப்பா வந்துருப்ப நா வேற  உங்கிட்ட பேசிண்டே போறேன்

சந்திரன் வீட்டினுள் நுழைந்தான். அம்மா கூடத்தில் படுத்திருந்தவள் எழுந்து அமர்ந்துகொண்டாள்.

‘ தீர்த்தம் சாப்பிடறியா’

‘இல்லே.’

‘காபி போடப்போறேன்’

‘ரொம்ப சரி காபி குடும்மா’

‘ நேற்று என்ன சேதி வரல தங்கிட்ட’

‘ அதான் பக்கத்தாத்து குருக்கள் மாமாண்ட சொல்லி அனுப்பினேனே’

‘ மாமா சொன்னார். அப்பறம்தான் மனசு நிம்மதியாச்சு’

‘ செல்லமுத்து சார் ஊர் மதுரவல்லின்னு.  வேப்பூர் பக்கத்துல அதான் நல்லூர் கிட்ட இருக்கு. அங்க ஆடிப்பருவம். சாமி புறப்பாடு. அதுக்கு சாரும் நானும் போயிட்டு வந்தம்’

‘ தரிசனம் நல்லா ஆச்சா’

‘ ஆகாம என்ன பேஷா ஆச்சு’

‘ என்னடா ஏதோ  கொனஷ்டயா  சிரிக்கற மாதிரி தெரியர்து’

‘ ஒண்ணும் இல்லே. நீ காபிய போடு’

அம்மா அடுப்பங்கரைப்பக்கம் போனாள். காபியை குமுட்டி அடுப்பில்தான் அம்மா போடுவது வழக்கம். அதற்கென அடுப்புக்கரி வாங்கி வைத்திருப்பாள். தேங்காய் நார் சிறிது எடுத்து அதனில் கொஞ்சம்   மண்ணெண்ணெய் ஊற்றி  விசிறி மட்டை கொண்டு பரக் பரக் என்று விசிறி முடிப்பாள். அடுப்புக்கரி பற்றிக்கொண்டு தக தக என நீலமாய் ஜ்வாலை வந்துவிடும்.

முதுகுன்றத்திலிருந்து சந்திரன் வழக்கமாய் வாங்கிவரும் முத்துராம் காபி பவுடரை பில்டரில் திணித்து வெந்நீர் ஊற்றுவாள். காபியின் மணம் வீடெங்கும் பரவி தூள் கிளப்பும்.

பால் பொங்கும் சமயம் இறக்கிப் பித்தளை டபரா டம்ளரில் தயாராய் இருக்கும் ஜீனி கலந்த காபி டிகாக்‌ஷனுடன் கலக்கி கம கம என  காபியை ச்சூடாக வழங்குவாள். காபி போடுவதில் அம்மாவை யாராலும் வெல்லவே முடியாது.

சந்திரனின் அம்மா காபி கொண்டு வந்து வைத்தாள்.

சந்திரன் அதனை ஆசையோடு ஆற்றிக்குடித்து முடித்தான்.

‘கொஞ்சம்  படுத்து எழுந்திரிக்கணும், களைப்பா  இருக்கு’

‘படுடா’  அம்மா மீண்டும் அடுப்படிக்குச்சென்றாள்.

சந்திரன் கூடத்தில் இருந்த பெஞ்சில் படுத்துக்கொண்டான். சந்திரனின் அப்பா உள்ளே வந்தார். சந்திவேளை நெருங்கிக்கொண்டிருந்தது. கைகால் அலம்பிக்கொண்டு நெற்றியில்  திரு நீறு  குழைத்து  மூன்று விரல்கள் வைத்து பூசிக்கொண்டார். பஞ்சபாத்திரம் உத்திரணியோடு சந்தியாவந்தனம் செய்ய மணப்பலகை போட்டு அமர்ந்துகொண்டார்.யோகமுத்திரையில் அமர்ந்து காயத்ரி ஜபம் செய்ய ஆரம்பித்தார்.

‘ஓம் பூர்ப்புவஸ்ஸுவஹ  தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோன ப்ரசோதயாத்’

’மூன்று உலகங்களையும் படைக்கக் காரணமாகி ஒளிபொருந்திய வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். மேலான உன்மையை உணர அந்தப்பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிப்பதாகட்டும்’

சந்திரன் மனதிற்குள் காயத்திரி மந்திரத்தின் பொருளை இப்படி நினைத்துப்பார்த்தான்.   காயத்திரி மந்திரத்துக்கு தமிழில் மாகவி பாரதி எழுதிய கவிதை வரிகளைச் சொல்லிக்கொண்டான்.

‘செங்கதிர்த்தேவன் சிறந்த ஒளியினைத்தேர்கின்றோம்

அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக’

‘என்னடா அங்க மொண மொணப்பு’ சந்திரனிடம் அப்பா கேட்டார்.

‘பாரதியின் காயத்ரி மந்திர தமிழ்க்கவிதையைச்சொல்லிப்பார்க்கிறேன்’

‘சொல்லேன் நானும் கேட்கிறேன்’

‘அறிவினைத்தூண்டும் ஒளியினை தியானிப்போம். அவ்வறிவே எம்மை வழி நடத்தட்டும்’

‘ரொம்ப நல்லா இருக்கு’

‘அறிவு  நம்மை  வழி நடத்துகிறதான்னு சொல்லு’

  மந்திரம் சொல்றவா யாரும் இப்படி  யோஜிக்கிறது  இல்லே’

‘டேப் ரிகார்டர் சொல்ற மாதிரி சொன்னதையே திருப்பி திருப்பிச் சொன்னாப் போறுமா’

‘ ரொம்ப ப்போகாதேடா’

‘எதுவரைக்கும் போகுணும்னு எதாவது கணக்கு இருக்கா’

அம்மா விஷ்ணு சஹஸ்ர நாமம் சொல்லிக்கொண்டிருந்தாள். சந்திரன் காதில் அதுவும் விழுந்துகொண்டிருந்தது. சந்திரனின் அம்மா தினம் தினம் சொல்வதுதான்.

‘வேதாந்த கோப்ராஹ்மணே; ,ஸ்யாத்

க்‌ஷத்ரியோ விஜயீ பவேத்II;

வைஸ்யோ தந ஸம்ருத்த, ஸ்யாச்

சூத்ர;ஸுகமவாப்நுயாத்II சந்திரனின் அம்மா சொல்லிக்கொண்டேபோனாள். சந்திரன் அதனைக் கூர்ந்து கவனித்தான்.

‘அம்மா இங்க வா’

‘சஹஸ்ர நாமம் முடியணும்’

‘ இல்ல வா அம்மா ரொம்ப முக்கியம்’

‘ அப்படி என்ன அவசரம்’

‘அவசரம்தான்  வா’

‘வந்துட்டேன்  சொல்லு’

‘ அது என்ன பிராம்ண க்‌ஷத்ரிய வைஸ்ய சூத்ர ன்னு என்னமோ சொன்னயே’

‘அது சஹஸ்ர நாமத்தில வர்ரது’

சந்திரனின்  அப்பா,அம்மாவும் பிள்ளையும் பேசிக்கொள்வதைக்கவனித்தார்.

‘அதுக்கு அர்த்தம் வேணுமா உனக்கு, நா சொல்றேன், பிராம்ணனுக்கு அறிவு, க்‌ஷ்த்ரியனுக்கு வெற்றி,வைஸ்யனுக்கு செல்வம், சூத்திரனுக்கு சுகம்  இவை இவை  விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் செய்தால் கிடைக்கும்.’

  ஆக சமூகம்னா இந்த நாலு பிரிவுதானா’

‘மகாபாரதம் எழுதின  வேதவியாசர்தான் இந்தக்கேள்விக்கெல்லாம் பதில் தெரிஞ்சவர்’

‘ அவர எங்கே போய் தேடறது’

‘ ஒரு காலத்துல நாலு வர்ணமா மட்டும்தான் பிரிஞ்சி இந்த சமூகம் இருந்திருக்கணும்.’

‘’ அப்போ  பஞ்சமரா இருக்கறவா  இந்த விஷ்ணு சஹஸ்ர நாமம் படிச்சா அதனால பிரயோசனம் ஒண்ணுமில்ல. அந்த நாலு வர்ணக்காரா மட்டும் படிச்சா போறுமா, என்ன சொல்ற’

‘பகவானே  இது என்னப்பா சோதனை  இப்பிடி கோணல் கோணலா பேச்சு வர்ரது’ சந்திரனின் அப்பா அச்சத்தோடுதான்  பேசினார்.

சந்திரனின் அம்மா  திருவிளக்கு ஏற்றிய  ஸ்வாமி மாடம் அருகே சென்று  விஷ்ணு சகஸ்ர நாம  பாராயணத்தைப்பூர்த்தி செய்தாள்.

’காயேன வாசா  மனசேந்த்ரியைர்வா

புத்தியாத்மனா வா ப்ரக்ருதே ஸ்வபாவாத்

கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை

நாராயணாயேதி ஸமர்ப்பயாமி’

சந்திரன் அம்மா சொன்ன மந்திரத்தின் ஆழ்ந்த பொருளை நினைத்துப்பார்க்கிறான். உடலாலும் வாக்கினாலும் மனசாலும்  ஐந்து   இந்திரியங்கலாலும் புத்தியாலும் ஆத்மாவினாலும்   பூமியின் இயற்கையின் குண விசேஷங்களாலும்  நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் பெருங்கடவுள் அந்த நாராயணனுக்கே அர்ப்பணிக்கின்றோம்.

‘எல்லாருக்கும் நல்ல புத்திய குடுடா பகவானே’

சந்திரனின் அம்மா ஓங்கிச்சொல்லிக்கொண்டாள். கீழே விழுந்து நமஸ்கரித்து எழுந்தாள்

சந்திரன் இதற்குமேல் ஒன்றும் பேசவேண்டாம் என்று முடிவுக்கு வந்தான்.

’சப்கோ ஷண் மதி தே பகவான்’  என்னும் தேசபிதாவிற்கு மிகவும்பிடித்த அந்த வரியைஒரு முறைச்சொல்லிப்பர்த்தான்.

 மூவரும் இரவு சாப்பாடு முடித்தனர்.

‘ நாளைக்கு என்ன டியூட்டின்னு  சொல்லலியா’

‘ நாளைக்கு வீக்லி ஆஃப். முதுகுன்றம் போற வேல இல்ல’

  வெடிகார்த்தால மூணு மணிக்கு உங்க அம்மா எழுந்திரிக்க வேண்டாம். கொஞ்ச நாழி கூடவே தூங்கலாம்’

’ஏண்டா உனக்கு பொண்டாட்டி வந்தா அவ இப்பிடி மூணு மணிக்கு முழிச்சிண்டு  டிபன்  எல்லாம் பண்ணி கட்டிக்குடுத்து அனுப்புவாளா’ சந்திரனின் அம்மா அவனைக்கேட்டாள்.

‘ நன்னா இருக்கு கதை. மருமக வந்தா அவ இந்த பட்டிக்காட்டுல குடித்தனம் வச்சிண்டு இருப்பாளா’

சந்திரனின் அப்பா பட்டென்று பதில் சொன்னார்.

--------------------------------

                                                15.

தருமங்குடியில் பள்ளி செல்லும் பையன் கிருஷ்ணனுக்கு சில வருடங்களுக்குமுன்  சந்திரன் டியூஷன் சொல்லிக்கொடுத்தான். சந்திரன் கம்மாபுரம் அரசு உயர் நிலைப்பள்ளியில் அப்போது படித்துக்கொண்டிருந்தான். வகுப்புக்கள் ஓன்பது பத்து பதினொன்று வரை  அவனுக்கு அங்குதான் படிப்பு. காலை எட்டு மணிக்கு  பள்ளிக்கூடம் கிளம்பவேண்டும்.  தருமங்குடியிலிருந்து கம்மாபுரம் நான்கு மைல் தூரம் இருக்கும். பள்ளிக்கு நடந்தேதான் செல்லவேண்டும்.

முதுகுன்றம் சாலையில் ஆதனூர் சாத்தப்பாடி சிறுவரப்பூர் கைகாட்டி என சிறு சிறு கிராமக்குடியிருப்புக்களைத்  தாண்டினால் கம்மாபுரம் வந்துவிடும். அந்த ஊர் உயர் நிலைப்பள்ளிதான் அன்று அருகில் இருந்த உயர் நிலைப்பபள்ளி.. சந்திரன் வயது ஒத்தோருக்குத்தான் தருமங்குடியில் முதன் முதலாய்  பஞ்சாயத்து  ஆரம்பப்பள்ளியே வந்தது. அதற்கு முன்பு எல்லாம் ஒன்றாம் வகுப்பிற்கே  தருமங்குடியிலிருந்து  வெளியூர்தான் செல்லவேண்டும்.  தருமங்குடியில் திண்ணைப்பள்ளிக்கூடம் மட்டுமே இருந்தது. தருமங்குடிக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமம் பொட்டைவெளி. அந்த பொட்டைவெளி கிராமத்திலிருந்து   தலையில்  கட்டுக்குடுமி வைத் துக்கொண்டிருந்த ஒரு ஆசிரியர் தருமங்குடிக்கு வந்து திண்ணைப்பள்ளிக்கூடம் நடத்திவந்தார்.  கிராம மக்கள் அவரவர்கள் தம் கையில் கிடைத்த நெல் கேழ்வரகு கம்பு  பயிறு உளுந்து  துவரை என தானியங்களை, புளி தேங்காய் என தம் தோட்டத்தில் விளைந்த பண்டங்களைத் திண்ணைப்பள்ளி ஆசிரியருக்கு ஊதியம் எனக் கொடுத்துவிடுவார்கள்.அந்தக்காலம்  எப்போதோ விடைபெற்றுக்கொண்டது.

தருமங்குடியில் மேலத்தெருவில் பஞ்சவர்ண சேதுவராயர் என்று ஒரு பெரியவர்  இருந்தார். அவருக்கு ப்பூணல் உண்டு. அவரை ப்பூணல் கார படையாச்சி என்றும் அழைப்பார்கள்.அவருக்கு ஒரு பேரன். பெயர் கிருஷ்ணன்  . அவனுக்குத்தான் ஐந்தாம் வகுப்புவரை சந்திரன் டியூஷன் சொல்லிக்கொடுத்து வந்தான். மாதம் ஐந்து ரூபாய் டியூஷனுக்கு சம்பளம். அதனை சேதுவராயர் கொடுத்து வந்தார். அந்த ஐந்து ரூபாயே சந்திரன் குடும்பத்துக்கு பெரிய ஒத்தாசையாக இருந்தது.  கிராமங்களுக்கு  மின்சார வசதி எல்லாம் இல்லாத காலம். வீட்டில்  கிளாஸ் மாட்டிய லாந்தர் இருந்தால் அது பெரிய சமாச்சாரம்.  உடைந்துபோன லாந்தர் கிளாசுக்கு வீட்டுக்கு  பட்டுவாடா ஆன மஞ்சள் தபால்கார்டை  மடித்துக் குறுக்கே செறுகியிருப்பர்கள் மாணவர்கள் பெட்ரூம் விளக்கிலும் சிம்னி அல்லது   காடா விளக்கிலும் படிப்பார்கள்.

 கிருஷ்ணனுக்கு டியூஷன் முடித்து சந்திரன் வீடு திரும்ப ஒரு எவெரெடி பாட்டரி விளக்கைக் கையோடு எடுத்துப்போவான். அதே பெரிய ஜபர்தஸ்து.  தெரு எல்லாம் ஒரே இருட்டாகத்தான் இருக்கும். மூலைக்கு மூலை நாய்கள் குரைத்து இடை மறிக்கும்.

சந்திரனிடம் டியூஷன் படித்த கிருஷணனுக்குத்த்தந்தை இல்லை. வண்டி இழுக்கும்  காளை மாட்டிற்கு வைக்கோல்போரில் வைக்கோல் பிடுங்கச்சென்ற கிருஷ்ணனின் தந்தை நல்லப்பாம்பு கடித்து இறந்துபோனார். தன் பாட்டனாரின் பராமரிப்பில்தான்  தாயொடு கிருஷ்ணன் இருந்தான். அந்தக்கிருஷ்ணன் ஐந்து வகுப்பு முடித்தான். ஆறாம் வகுப்பில் அருகிலிருக்கும் சேத்தியாத்தோப்பு என்னும் ஒரு சிறு நகரத்திலிருந்த தனியார் உயர் நிலைப்பள்ளியில் பஞ்சவர்ண சேதுவராயர் சேர்த்துப்படிக்கவைத்தார் கிருஷ்ணன் எட்டாம் வகுப்புவரை நன்றாகப்படித்தான். தருமங்குடியிலிருந்து தினம் தினம்சைக்கிளில்தான் சேத்தியாத்தோப்பு ப்பள்ளிக்குச்சென்றுவந்தான்.

அப்போது தருமங்குடியில் அரசு உயர் நிலைப்பள்ளி இயங்கிக்கொண்டிருந்தது.  அந்தப்பள்ளிக்கட்டிடம்  காலனிப்பகுதியில் இருந்தது தினம் தினம்  தருமங்குடி ஊர்ப் பகுதி மாணவர்கள் காலனிக்குச்சென்று படித்து வருவார்கள். சேதுவராயருக்குத் தன் பேரனை அந்தக்காலனிப்பள்ளிக்கு அனுப்ப மனம் ஒப்பவில்லை. சாதியம் தன்  வீர்யத்தை  இழக்க  அவ்வளவு சுலபமாக சம்மதிக்கிறதா என்ன?.

பையன்களுக்கு ஒன்பதாம் வகுப்பென்பது சோதனக்காலம். பருவம் விழித்துக்கொண்டுப் படுத்த ஆரம்பிக்கும் நேரம்.. எத்தனையோ மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பில்தான் கல்வி நிலையங்களை விட்டு நின்றுவிடுகின்றனர். அப்படித்தான் சேதுவராயர் பேரன் கிருஷ்ணனும் சேத்தியாதோப்புப் பள்ளியைவிட்டு  நின்று தருமங்குடியை வலம் வந்து பொழுது போக்கினான்.

சந்திரன் நேராக பஞ்சவர்ண சேதுவராயர் வீட்டுக்குக்காலையிலேயே சென்றான்.

‘ வாங்க அய்யா’

‘ வணக்கம்’

‘பேரன் கிருஷ்ணன் ஸ்கூல் போறது இல்லயா’

‘ வருஷம் ரெண்டாச்சு, அது பள்ளிக்கூடம் போய்’

‘ என்ன சொல்றான் கிருஷ்ணன்’

‘ வாத்தியார் ரொம்ப கண்டிக்கிறாரு அவனுக்குத் தாங்கல. ஏன் படிக்குணும்னு முடிவு பண்ணிட்டான். அங்க அவன் கூட்டாளிங்க எல்லாருமே ஸ்கூல விட்டு நின்னு போனானுவ, இவனும் ஊர சுத்துறான்’

‘எங்க அவன்’

‘ தே தோட்டத்துல நின்னு அவன் அம்மாகிட்ட ஏதோ பஞ்சாயம் பண்றான்’

‘ கூப்பிடுங்க பேசுவம்’

‘ என்னன்னு சொல்லுங்க அய்யா’

‘ இல்ல அவன அப்பிடி வுடக்கூட்டாது’

‘ அய்யா  கடவுள் மாதிரி பேசுறீங்க.  அவன்  தகப்பன தொலச்சிட்டு நிக்கறவன். அவன் உருப்படி ஆவணும்னுதான் ஆரம்ப காலத்துலே உங்க கிட்ட டியூஷன் எல்லாம் வச்சேன்.  பிரமன் போட்ட எழுத்து  சரியில்ல போல’

‘’அவன கூப்பிடுங்க’

‘எலே தம்பி கிருஷ்ணா எலே தம்பி கிருஷ்ணா’ இரண்டு முறை அழைத்தார் சேதுவராயர்.

‘என்னா தாத்தா ஏங்கூப்பிடறே’

‘ எலே இங்க வாடா’

மேல் சட்டையில்லாமல் தலை கலைந்துபோயிருக்க கிருஷ்ணன் வாயிலுக்கு வந்தான்.

‘யார் வந்து இருக்கா பாரு’

‘அய்யிரு சாரு’

‘ அந்த நெனப்பு இருக்கு’

‘ கிருஷ்ணா இங்க வா, ஏன் நீ ஸ்கூலுக்கு போவுலயா’

‘ இல்ல சார்’

‘ஏன்’

‘புடிக்கல’

‘ யாரை புடிக்கல எது புடிக்கல’

‘அந்த ஸ்கூலுல சாரை பிடிக்கல’

‘ படிக்க புடிக்குதா’

‘படிக்க புடிக்கும்’

‘ அது போதும் கிருஷ்ணா, வேற ஸ்கூல்ல சேத்தா படிப்பியா’

அமைதியாக இருந்தான். தாத்தாவப்பார்த்தான். மீண்டும்  பார்த்தான்.

‘ இஸ்க்குல் விட்டு நின்னு ரெண்டு வருஷம் ஆயிடுச்சே’ என்றார் சேதுவராயர்.

‘ மனுஷன் எப்பவும் படிக்கலாம் மனசு வைக்கணும்’

‘ வேற ஸ்கூல்ல உன்ன  சேத்தா படிப்பியா’

‘ படிப்பேன்’

‘ அப்ப நாம கெளம்பி போயி  சர்டிபிகேட் வாங்கிகிட்டு வந்துடுவம்’

‘ சேத்தியாதோப்பு போவுணும் அவ்வளவுதானே’

என்றார் உற்சாகமாக  சேதுவராயர்.

‘ஆமாம் ; சந்திரன் பதில் சொன்னான்.

‘ எங்க சேக்குறது பேரனை’

‘ எங்க சேத்தா என்ன, பள்ளிக்கூடத்துல சேக்கணும்’

‘ மொதல்ல டி சி வாங்குவம்’

‘சரி’ சந்திரன் அழுத்தமாகச்சொன்னான்.

‘ கிருஷ்ணன் என்ன சொல்ற’

அவன் பதில் எதுவும் சொல்லவில்லை. அமைதியாக இருந்தான்.

‘ படிக்க ஆசை உள்ளவன் சொல்லி இருக்கலாம்ல. வாய தொறக்குல படுவா, காலம் போயிடுச்சில்ல, அவன் ஆத்தா தெனம் அழுவுறா வெண்டாத சாமி இல்ல’

  ’அதை எல்லாம் விடுங்க இப்ப நாம மூணு பேரும் கெளம்புறம். சேத்தியாத்தோப்பு ஸ்கூலுக்கு போறம்’

’ என்ன எதிர் பாக்காதிங்க நா வரமாட்டன்’   கிருஷ்ணன்.

‘ நீ வராம எப்பிடிப்பா’

‘எனக்கு அங்க வர புடிக்கல’

‘இப்பிடி சொன்னா எப்பிடியப்பா கிருஷ்ணா’ சந்திரன் தன்மையாகத்தான் பேசிப்பார்த்தான்.

‘ஏன் வரமாட்ட சொல்லு’ தாத்தா கிருஷ்ணனை வேகமாகக்கேட்டார்.

‘ வரமாட்டன்னா வரமாட்டன்தா’

‘அது ஏன்னேன்?’

‘ அப்ப வுடு. நா படிக்கவே இல்ல’

‘இப்பிடி பேசுனா எப்பிடி கிருஷ்ணா நீ படிக்க ஆசை இருக்குன்னு சொன்ன’

‘ இப்பவும் சொல்றேன். என்ன எங்கனா சேரு. ஒரு பீ காட்டுல சேரு. அங்க பள்ளிக்கூடம் இருந்தா சரி’

‘ அப்ப நீ வர மாட்ட’

‘வர மாட்டன்’’

சந்திரன் குறுக்கிட்டான். கிருஷ்ணனுக்கு அந்தப்பள்ளியைப்பொறுத்த மட்டில் மனதில் ஏதோ ஒரு ரணம் இருக்கிறது. அது  இன்னும் ஆறாமல்தான் இருக்கிறது. அதனை நம்மிடம் சொல்லவே மறுக்கிறான். அதை வெளிச்சொல்ல ஏனோ அவனுக்குப்பிடிக்கவில்லை.

‘ நாம ரெண்டு பேரும் சேத்தியாத்தோப்பு போவும். ஸ்கூல் ஹெட் மாஸ்டரை பாப்பம். கிருஷ்னன் டி சி கேப்பம். அவுரு என்ன சொறாருன்னு பாப்பமே’

‘அதுவும் சரி’

‘வேற இஸ்கூல்ல சேத்தா நீ படிக்குற. எனக்கு சத்தியமா சொல்லு’

கிருஷ்ணனின் தாயார் நடக்கும் பேச்சுவார்த்தைகளை வீட்டின் உள் இருந்து கவனித்த வண்ணம் இருந்தார்.

‘சத்தியமா நா படிக்குறேன்’

‘ என் கையில அடிச்சி இது சத்தியம்னு சொல்லு’

கிருஷ்ணன் அப்படியே தாத்தாவின் கையில் அடித்து ‘ நா இனிமே படிக்குறேன் இது சத்தியம்’ என்றான்  ’என்ன வேற ஸ்கூல்ல சேத்துவிடுங்க தாத்தா  அது போதும்’

சேதுவராயர் கண்களில் பொல பொல என்று கண்ணீர் பெருகியது. உன்னை ஒரு ஆளாக்கி விடணும் ஒசக்க இருக்குற உன் அப்பனுக்கு நா போய் நல்ல சேதி சொல்லணும்’   சேதுவராயருக்குக்குரல் கம்மிப்போனது.

சந்திரன் வீட்டுக்கு வந்தான். குளித்து முடித்து டிபன் சாப்பிட்டான். சேத்தியாத்தோப்பு வரை செல்வதாய் அம்மாவிடம் சொல்லிவிட்டு அப்பாவின் சைக்கிளை உருட்டிக்கொண்டு புறப்பட்டான்.

‘சேத்தியாதோப்புல என்ன விசேஷம்’

‘முக்கியமான விசேஷம்தான். நம்ம மேலத்தெரு பஞ்சவர்ண சேதுவராயர் பேரன் கிருஷ்ணன் ஞாபகம் இருக்கா’

‘என்னடா கேக்குற எனக்கு தெரியாம என்ன’

‘ அவன் ஸ்கூல் சர்டிபிகேட் வாங்கிவரணும். வேற ஸ்கூல்ல சேக்கணும்’

‘ நல்ல சமாச்சாரம் அவன் நல்லா படிக்கட்டும், உன்கிட்ட டியூஷன் படிச்சவன் அவன் மேல மேல படிக்கணும்னு உனக்கும் ஆசை இருக்குமே’

‘ நான் போயிட்டு வரேன் அப்பா எங்கே’

‘ அவர் பிள்ளமார்தெரு பக்கம் வேல இருக்குன்னு போனார்’

‘வந்தவுடன் அவரண்ட சொல்லிடுமா’

‘சைக்கிள்ள போறியா’

‘ நானும் சேதுவராயரும்தான் போறோம், கிருஷ்ணன் வரல நான் ஸ்கூலுக்கு வரமுடியாதுன்னுட்டான்’

‘ அவனுக்கு என்ன கஷ்டமோ நீங்க ரெண்டு பேரும் சைக்கிள்ள போறேள், நீ தான் சைக்கிள் மிதிக்கணும் அவர் பெரியவர் ஜாக்கிரதயா போயிட்டுவா. குறுக்கு ரோடு தாண்டினா அந்த வெள்ளாறு ராஜன் வாய்க்கால் வளைவு வரும். அந்த திருப்பத்துல பாத்துப் போகணும் எறங்கிடுங்கோ நடந்துபோங்கோ’

‘ அப்பா சைக்கிள் வேணும்னா’

‘ நீ போறது ரொம்ப முக்கியமான காரியம், நா சொல்லிக்கறேன். அப்பிடி வெளில போறதா அவர் ஒண்ணும் என்னண்ட சொல்லவும் இல்ல’

’ சரி பாத்துகோ வரேன்’

‘ சரிப்பா பத்ரமா போயிட்டுவா’

பஞ்சவர்ண சேதுவராயர் சைக்கிளில் பின் அமர  சேத்தியாதோப்பு நோக்கி சைக்கிளை மிதித்தான். தருமங்குடியிலிருந்து சேத்தியாதோப்பு ஐந்து மைல் இருக்கலாம். வளையமாதேவி எரும்பூர் ஆனைவாரி என  ஊர்கள். இவைகளைத்தாண்டினால் குறுக்கு ரோடு வரும், அங்கிருந்து கும்பகோணம் சாலையில் இரண்டு கிலோ மீட்டர்.  சேத்தியாதோப்பு  போய்ச்சேர்ந்துவிடலாம்.

சேதுவராயருக்கு வயது எண்பதுக்கு மேலாகியிருக்கலாம். தெளிவான பார்வை  திடமான பேச்சு நல்ல நடமாட்டம் எல்லாம் இருந்தது.பற்கள் அத்தனையும் உறுதியாக இருந்தன. ஒரு சில பற்கள் காவி நிறத்தில்  தெரியும்.தலையில் வெள்ளையும் கருப்புமாய் சின்ன சின்ன முடி. காதில்  வெள்ளைக்கல்லில் ஒரு கடுக்கன். மேலே துண்டு மட்டுமே எப்போதும் அணிவார்.  சேதுவராயருக்கு மேல்சட்டை. அணிவது ஆடம்பரம் என எண்ணம்.

வளையமாதேவி திருக்குளத்தில் நீர் நிறைந்து இருந்தது. அதன் நடுவே நீராழி மண்டபம் இருந்தது. அம்மண்டபத்தின் உச்சியில் ஒரு கருடன் அமர்ந்து கழுத்தை இப்படியும் அப்படியும் ஆட்டிக்கொண்டிருந்தது. சிலர் குளத்தில் நீராடி மகிழ்ந்துகொண்டிருந்தார்கள். திருக்குளத்தின் கரை மீது ஒரு விநாயகர் கோவில் இருந்தது. கோவில் சுவரில் சினிமா நோட்டிசுகள் வரிசையாக ஒட்டப்பட்டிருந்தன. நெய்வேலியில் உள்ள கணபதி திரைஅரங்கின் நடப்புக்களை மக்கள் அப்படித்தான் அறிந்துகொண்டார்கள். சைக்கிள்  ஹாண்டில் பாரில் கூழ் டப்பாவை மாட்டிக்கொண்டு காரியரில்  போஸ்டர்களை சுமந்துகொண்டு  ஒருவன் சைக்கிளை அழுத்தி அழுத்தி மிதித்தான்.

‘ சனியன் மிதி வாங்குது’ சொல்லிக்கொண்டான்.

சேதுவராயர் பெருமாள் கோவில் கோபுரத்தை த்தரிசித்துக்கொண்டார்.

‘ ’பெருமாளே வேத நாராயணா  நல்ல வழி காட்டுப்பா’ பிரார்த்தித்துமுடித்தார்.

அந்த சைக்கிள்காரன் நெய்வேலி செல்லும் சாலையில் திரும்பிக்கொண்டான்.

‘வவுறு ஒண்ணு இருக்கு என்னா செய்வ’

  சேதுவராயர்  மெதுவாகச்சொல்லிக்கொண்டார்.

வளையமாதேவி கிராமத்தின் காலனி எதிர்பட்டது. சாலையின் தெற்குப்பகுதியில் ஒரு மாதா கோவில் அழகாக இருந்தது.  காலனியில் அனேகர் கிறித்துவ மதத்தினர். சந்திரன் எட்டாம் வகுப்புவரை வளையமாதேவி வள்ளலார் பள்ளியில்தான் படித்தான்.மரியதாஸ் என்னும் நண்பனும் அவனோடு அப்பள்ளியில் படித்தான். மரியதாஸ் கொடைக்கானலில்  கிறித்துவ  மத போதனைப்பள்ளியில் படித்து ஃபாதர் ஆகி சர்ச் ஒன்றில்பணிஆற்றுவதாகக்கேள்விப்பட்டான்.

‘ அய்யா டிபன் சாப்பிட்டிங்களா’

‘ சாப்பிட்டேன் நீங்க’

‘ நான் சாப்பிடலே’ என்றார் சேதுவராயர்.

‘ எறும்பூர்ல அந்த திரெளபதி கோவிலண்ட நிப்பாட்டுங்க, ரெண்டு இட்டலி சாப்பிடலாம்’

சைக்கிள் எறும்பூரை நெருங்கியது. எறும்பூர் ஏரிக்கரையில் பனை மரங்கள் உயரமாய் வரிசை வரிசையாய்த்தெரிந்தன.  சின்ன நெற்குணம் கைகாட்டி தாண்டி எறும்பூர் ரைஸ் மில் வந்தது. சந்திரன் திரெளபதி அம்மன் கோவில் வாசலில் வண்டியை  நிப்பாட்டினான்.

‘ டீக்கடயில சாப்பிட்டு வாங்க நா இப்படியே நிக்கறேன்’

‘ நீங்க டீ சாப்பிடலாம்ல அய்யிராச்சே’

  நா காபி சாப்பிட்டுதான் கெளம்பினேன்’

சேதுவராயர் சாலையின் இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் நோட்டம் விட்டு மெதுவாகச் சாலையைத்தாண்டி டீக்கடையுள் நுழைந்தார்.

சந்திரன் அம்மன் கோவிலை பார்த்துக்கொண்டு நின்றான். பாரதக்கதை இந்த மண்ணில் எத்தனை ஆழமாய் வேரூன்றி இருக்கிறது என்று எண்ணிப்பார்த்தான். ராமாயணமும் பாரதமும் எழுத்தின் வெற்றி என்று சொல்லிக்கொண்டான். அந்தக் காவியங்களில் வரும் பாத்திரங்களின் பெயர்கள் எப்படி எல்லாம் நிலைபெற்றுவிட்டன. இந்தியாவில் ஐந்து பேரைச்சந்தித்தால் அதில் ஒருவன் ராமன் அல்லது கிருஷ்ணனாய்த்தான் பெயர் கொண்டிருப்பானாம்  சமூகவியலாளர்கள் சொல்கிறார்கள்..

சைக்கிள் டயரை அழுத்திப்பார்த்தான். இரண்டு வீலும் நன்றாகத்தான் இருந்தது. அப்பா சைக்கிளை நன்குதான் பார்த்துக்கொள்கிறார் சொல்லிக்கொண்டான்.

டிபன் சாப்பிட்ட சேதுவராயர் திரும்பி வந்துகொண்டிருந்தார்.

‘ நாம கெளம்பலாம்’

சந்திரன் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான்.

‘ ஆனை வாரி வந்ததும் நிறுத்திடுங்க’

‘ஏன்’

‘ நா எறங்கி குறுக்கால நடந்து வந்துடுவன். அப்பிடியே  வயக்காட்டுமேலேயே வந்து  வெள்ளாறு ராஜன் வாய்க்கால் மதுவுல உங்கள புடிச்சிடுவன். நீங்க சைக்கிள்ள ஒண்டியா போங்க’

‘ஏன் நடக்கணும் என்னோட  சைக்கிள்ளயே வரவேண்டியது தானே’

‘எனக்கு சங்கடமா இருக்கு நீங்க வண்டிய மிதிக்கிறது’

‘ஒண்ணும் சங்கடமில்ல நீங்க வாங்க’

‘ இல்ல என்ன ஆனைவாரில எறக்கி விடுங்க’

எரும்பூர் தாண்டியது. தத்துவராயர் என்னும் மகான் சித்தியடைந்த திருத்தலம் செல்லும் பாதையைக் காட்டும் கைகாட்டி வந்தது. அடுத்து ஆனைவாரிதான். சந்திரன் வண்டியை நிருத்தினான்.

சேதுவராயர் வண்டியைவிட்டு இறங்கி தெற்கு நோக்கிச்செல்லும் மண் ரோடில் நடக்க ஆரம்பித்தார்.

‘ நீங்க போவுலாம்’

சந்திரன் வண்டியை மிதிக்க த்தொடங்கினான். இந்த வயதில் இந்த பெரியவருக்கு கால்கள் திடகாத்திரமாக இருக்கின்றன. எப்படியும்  சேத்தியாத்தோப்பு இன்னும்இரண்டு மைல்கள் இருக்கலாம். தார்ச்சாலை வழியே போனால் மூன்று மைல் இருக்கலாம்.

சிதம்பரம் செல்லும் சாலையில் தொடர்ந்து பேருந்துகள் சென்றுகொண்டே இருந்தன. ஒரு பேருந்து மட்டுமே செல்லமுடியும் சாலைதான் அது. மற்றொரு பேருந்துக்கு வழிவிட சிரமமாகத்தான் இருந்தது.

 குறுக்கு ரோடு வந்தது. வெள்ளாறு ராஜன் கால்வாயில் புதிய பாலம்  கட்டியிருந்தார்கள். வாய்க்காலில் சீராகத்தண்ணீர் சென்றுகொண்டிருந்தது. வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் பாழும் வாய்க்கால் வழியாக வெள்ளாற்றை அடையும். வெள்ளாற்றின் குறுக்கே சேத்தியாதோப்பு அணை கட்டப்பாட்டிருப்பதால் தண்ணீர்த் தேங்கி வெள்ளாறு ராஜன் கால்வாய் வழியாக புவனகிரி நஞ்செய் நிலங்களை வளப்படுத்துகின்றன.

 குறுக்கு ரோடு சாலை நடுவே முன்னாள் முதல்வர் எம் ஜி ஆருக்கு ஒரு சிலை வைத்திருக்கிறார்கள். முதுகுன்றம் நகர் நோக்கி அந்தச்சிலை கை காட்டிக்கொண்டு நின்றது.

சந்திரன் கும்பகோனம் செல்லும் சாலையில் திரும்பினான். சென்னையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலை அது. அந்த வெள்ளாறு ராஜன் கரை ஓரமாகச் சென்று கொண்டிருந்தான்.

‘தோ வந்துட்டேன்’

சேதுவராயரின் குரல் கேட்டது. சேதுவராயர் வெள்ளாறு ராஜன்  கால்வாயைத்தாண்டி கும்பகோணம் சாலைக்கு வந்தார்.

‘ சைக்கிள்ள உக்காருங்க’

 சேதுவராயர் சைக்கிளில் உட்கார்ந்து கொண்டார். சைக்கிள் சமதள தார்ச்சாலை என்பதால் நல்ல வேகத்தில் சென்றது. வாசவி தியேட்டரை த்தாண்டி கடைத்தெரு வந்தது. சந்தானமய்யர் ஹோட்டல் சமீபித்தது. இடது பக்கமாய்த்திரும்பி பள்ளியை நோக்கிச் சந்திரன் சைக்கிளை விட்டுக்கொண்டு போனான்.

‘ வழி சரியாவே  போறிங்க’

‘ நா இந்த ஸ்கூலுக்கு ஏற்கனவே போயிருக்கேன்’

 பள்ளிவாயிலில் வண்டியை நிறுத்திவிட்டு இருவரும்  உயர் நிலைப்பள்ளியின் அலுவலகம் நோக்கிச்சென்றார்கள். பள்ளியில் வகுப்பு நடந்துகொண்டிருந்தது. அங்கங்கு ஆசிரியர்கள் வகுப்பெடுத்துக்கொண்டிருந்தார்கள்.

நேராகத்தலைமை ஆசிரியர் இருக்கை நோக்கி ச்சென்றார் சேதுவராயர்.

‘ ஐயா வணக்கம்’

‘என்ன வேணும் உங்களுக்கு’

‘ பையன் என் பேரன்  சர்டிபிகெட்  வேணும்’

‘ பையன் படிக்கிறானா’

  இப்ப இல்லங்க அவன் பள்ளிகூடத்த விட்டு  நின்னு ரெண்டு வருஷம் ஆச்சிங்க’

‘ பெயர் பேரு  படிச்ச வகுப்பு  சொல்லுங்க’

’கிருஷ்னன் ஒன்பதாம் வகுப்பு’

அலுவலகத்திலிருந்து  அலுவலக எழுத்தர் தலைமை ஆசிரியரிடம் வேக வேக மாக வந்தார்.

‘ சார் காடு பதுங்குன பசங்க   கேசு  சார். இந்த பையன் அதில ஒண்ணு .ஒரு  நாலு பசங்க பள்ளிக்கூடம் வராமலே  வந்து போனதா பேரண்ட்ஸ்ஸை  ரொம்ப நாளைக்கு ஏமாற்றினாங்களே அந்த கேசு’

‘ அவுங்கள எல்லாம்  டி சி கொடுத்து அனுப்பிட்டோம்ல’

சேதுவராயருக்கு திக் என்றது. கிருஷ்ணனா இப்படி எல்லாம் செய்தான் அவர் மனம் வேதனைப்பட்டது.

சந்திரன் சேதுவராயர் முகம் சுறுங்குவதைக்கவனித்தான்.

‘ விடுங்க அதை. இப்ப நினைக்க வேண்டாம்’

‘ குழந்தைகளால அவசொல் வரக்கூடாது  ஆனா வந்துபோச்சே’

‘ நாம வந்த வேலய பாப்பம் மொதல்ல’ என்றான் சந்திரன்.

‘இந்த கிருஷ்ணன் மட்டும் அந்த க்ரூப்ல பாக்கி சார்’

‘ நீங்க யாரு’ ஹெட்மாஸ்டர் சேதுவராயரைக்கேட்டர்

‘ நான்  அந்த பையனுக்கு தாத்தா’

‘ பேரண்ட்ஸ்  வரலயா’

‘ அப்பன் இல்ல. காலமாயிட்டான். பெத்த அம்மாவும் படிக்காதது நாந்தான் அவனுக்கு கார்டியன். ஒரே பேரன இங்க கொண்டாந்து நானேதான் சேத்தேன். வெளங்குலயே’ கண்கள் ஈரமாயின.

’ஊரு’

‘தருமங்குடி’

‘ அங்க நல்ல  ஹை ஸ்கூலு இருக்குதே’

சேதுவராயர் மவுனம் காத்தார்.

‘ இவுரு யாரு’

‘ இவுரு  எனக்கு செனேகிதம் எங்க ஊரு ஐயர் வூட்டு தம்பி. கிருஷ்னனுக்கு அடி நாள்ள படிப்பு சொல்லிகுடுத்தவரு. அதான்’

‘ இது உங்க யோசனையா’

‘ ஆமாம்சார் நல்ல பையன். நான் கிருஷ்ணனுக்கு  படிப்பு சொல்லி குடுத்து இருக்கிறேன். ஏதோ நேரம் இப்பிடி ஆயிட்டுது’

சந்திரன் பதில் சொன்னன்.

‘ நீங்க’

நான் டெலிபோன் ஆபிசுல வேல பாக்குறன் என் பேரு சந்திரன்’

‘எங்க’’

’முதுகுன்றத்து டெலிபோன் ஆபிசுல’

கிளார்க்கை   மீண்டும் அழைத்த தலைமை ஆசிரியர். ’ கேஸ் ஜென்யூன் டி சி கொடுத்துடுங்க. கார்டியன் வந்து இருக்காரு’ கட்டளை தந்தார்.

ஒரு பத்து நிமிடம் காத்திருந்தார்கள். டி சி ரெடியானது. எழுத்தர்’ வாங்க’ என்றார்.

பஞ்சவர்ண சேதுவராயர் என்று கையெழுத்துப்போட்டு டி சி யை ப்பெற்றுக்கொண்டார். ஹெட் மாஸ்டரிடம் சென்று.

‘ நான் வரேன் சார்’

‘ நல்லா படிக்குற பையன்னு தெரியுது விட்ராதிங்க’ ஹெட்மாஸ்டர் சந்திரனுக்கும் சேத்து சேதி சொல்லி அனுப்பினார்.

இருவரும் கிளம்பி கடைத்தெருவுக்கு வந்தனர்.சந்தானமய்யர் கிளப்பிற்குள் நுழைந்து  பெஞ்சில் அமர்ந்தனர்.

‘ வீட்டுக்குப் போய்  சாப்பாடு சாப்பிட்டுக்கலாம்’  சந்திரன் சொன்னான்.

‘அது சரியில்ல இங்கயே சாப்பாடு  சாப்பிடுவோம், நேரமாச்சி’

‘’காபி போதும்’

‘ உறும நேரத்துல போயி காபியா’

சந்தானம் அய்யர் இருவருக்கும் நீண்ட வாழையிலையைப் போட்டார். மணக்க மணக்க பொரியல் கூட்டு என வைத்து பச்சரிசி சாப்பாட்டை அவர்கள் போதும் என்கிறவரைப்பரிமாறி முடித்தார்.

‘ பெரியவங்கள அடிக்கடி பாத்து இருக்கன்’

‘ நானு தே தருமங்குடிதான்’

‘ கடையில அடிக்கடி பாத்து இருக்கன்’

   ’சந்தைக்கு வருவேன், பொதன் கெழமையில சந்த நடக்குதுல்ல. சேத்தியாதோப்பு சந்தன்னா சும்மா இல்ல. காயும் கனியும் அம்மாம் ஜோரா இருக்கும்,  குடிக்கிற தண்ணி அதோட  ருசின்னா காவேரி கீவேரி எல்லாம் இந்த வெள்ளாத்து தண்ணிக்கிட்ட பிச்ச வாங்கணும். ஓகோன்னேன்.. பாண்ச்சர் சும்மா அப்படியே கருப்பஞ்சாறுல்ல கல்கண்டாட்டம்’

ஓண்ணேகாலும் ஒண்ணேகாலும் ரெண்டரை. ரெண்டரை ரூவா கொடுங்க’ என்றார் சந்தானமய்யர்.

சேதுவராயர் ஐந்து ரூபாய் நோட்டை எடுத்துக்கொடுத்து பாக்கியைப்பெற்றுக்கொண்டார்.

‘இது ஒரு செலவு’

‘ இது செலவு இல்லே. இதுதான் வரவு. நல்ல மனுஷாளுக்கு சோறு போட  எல்லாருக்கும் வாச்சிடாது.  அது அதுக்கு ஒரு கொடுப்பினை இருக்கணும்’

சந்தானமய்யர்  இப்படிச்சொன்ன  தருமங்குடி சேதுவராயரை ஒருமுறை  நிறைவாகப்பார்த்துக்கொண்டார்.

‘வெத்துல இருக்கு லால்பேட்டை  கொடி சரக்கு’

‘ வீராணம் ஏரி தண்ணில வெளஞ்சது. அது  கரையுமே அலுவாதுண்டுல்ல’

சுருட்டப்பட்டு மேசையில் கிடந்த இரண்டு வெற்றிலை சுருள்களை சந்தானமய்யர் சேதுவராயருக்கு நீட்டினார்.

‘ தம்பி போடாது நா போடுவன் வெத்துல போடுலன்னா  இந்த ஜன்மம்  வீணுதான்’ சொல்லி ரெண்டு பீடாக்களையும் வாங்கி வாயில் அமுக்கிக்கொண்டார் சேதுவராயர்.

‘ நாம கெளம்பலாம்’

‘சந்திரன் வண்டியை மிதிக்க ஆரம்பித்தான்’ சேதுவராயர் காரியரில் அமர்ந்துகொண்டார்.

‘ பாத்து மெதுவா போங்க’

‘ நா போறது எப்பிடி தெரியுது’

‘ அடுத்து கிருஷ்னன என்னா செய்யுறது’

‘ ஸ்கூல்ல சேர்க்கறதுதான்’

‘ எங்க ‘

‘ தருமங்குடி ஸ்கூல்லதான்’

‘ தம்பி என்ன சொல்றீங்க நீங்க’

‘ இதுல என்னா தப்பு  பேரன் கண் எதிரிலே இருப்பான்ல, காடு பதுங்க முடியாதுல்ல’

‘அப்பிடி ஒரு கணக்கு கொண்டாறீங்க’

‘ நானும் பாத்துகுவென்ல. கிருஷ்ணன் சேத்தியாதோப்பு ஸ்கூலு வேணான்னான் அவ்வளவுதானே’

‘ நாந்தான் அந்த காலனி பள்ளிக்கூடம் வேணாமுன்னு சேத்தியாதோப்புல கோண்டாந்து சேத்தேன்’

‘ இப்ப பையனுக்கு ரெண்டு வருஷம்ல  வீணா போயிடுச்சி’

சேதுவராயர் அமைதியாகவே இருந்தார்.

ஆனைவாரி எறும்பூர் வளையமாதேவி என ஊர்கள் வந்தன. இருவரும் சைக்கிளில் பயணித்து தருமங்குடி வந்தனர்.

சேதுவராயர் வீட்டு முன்பாக கிருஷ்ணன் மாடுகளை குளிப்பாட்டிக்கொண்டு இருந்தான்.

‘கிருஷ்ணா சட்டை யை போடு கெளம்பு’

‘ டீ சி வாங்கியாச்சா சார்’

‘ வாங்கியாச்சி கிருஷ்ணா’

‘ இப்ப எங்க போறம்’

‘ தருமங்குடி  இலுப்பை தோப்பு  காலனி ஹைஸ்கூலுக்கு’

‘ சார் தாத்தா’

நாம மூணு பேரும் போறம்தான். அந்த ஸ்கூலுக்கு போறம்’

‘இப்பவா’

‘ சட்டய போடு’

கிருஷ்ணன் சட்டையை  மாட்டிக்கொண்டான். தனது அம்மாவைத்தேடினான். அம்மாவைக்காணவில்லை. அம்மா கடைக்குச்சென்று திரும்பிக்கொண்டு இருந்தாள். இரண்டு பூரணி மார்க் கலர் சோடா பாட்டில்களை வாங்கிவந்து ‘எடுத்துகுங்க’ என்றாள்.

நல்ல களைப்பு. சந்திரன் இப்படி எல்லாம் சைக்கிள் மிதித்து வெகு காலம் ஆகிவிட்டது.

‘ எடுத்துகுங்க’ என்றார் சேதுவராயர்.

‘ சாப்பாடு’

‘ சந்தானமாய்யரு கடையில சாப்பிட்டு வர்ரம்’

‘என்ன சொல்ற மருமவளே  உள்ளூர் ஸ்கூல்ல  தம்பிய சேர்க்கணும்னு அய்யிரு தம்பி சொல்லுது’

‘ அது சரிதான்’

கிருஷ்ணனின் தாயார் நிறைவாக பதில் சொன்னார்.

மூவரும் வன்னியர் தெரு தாண்டி பெரிய இலுப்பை தோப்பு தாண்டி சின்ன இலுப்பை தோப்பு   காலனி  பள்ளிக்கு வந்தார்கள்.

சந்திரன் தலமை ஆசிரியரிடம் பேசினான். சேத்தியாதோப்பு பள்ளியில் வாங்கிய டீ சியை க்காண்பித்தான்.

 நடுவுல இந்த ரெண்டு வருஷம் என்ன ஆச்சின்னு பதில் சொல்லணும்’’

 பையனோட ‘அப்பா  இல்லாததாலே குடும்பம் செறுமப்பட்டுது. இப்ப கொஞ்சம் தேவுலாம்.  எப்பிடியோ சமாளிச்சிகிலாம்னு  ஒரு முடிவு எடுத்து பள்ளிக்கூடத்துல சேக்க வந்துருக்கம்’

சேதுவராயர்  கச்சிதமாப் பதில் சொன்னார்.

‘ அப்பிடியே இந்த விஷயத்தை  எழுதி குடுங்க, நீங்க கார்டியன்தானே’

சந்திரன் அப்பிடியே எழுதி சேதுவராயரிடம் கையொப்பம் வாங்கி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தான்.

‘ என்னடா இனிமேலுக்கு நல்ல படிக்கணும்’

‘ படிப்பேன் சார்’

‘ குட்.  இந்த  வாழ்க்கை எவ்வளவு கஷ் டமானதுன்னு ஒனக்கு  இப்ப நல்ல அனுபவமாயிருக்கும். அதான் படிக்கணும்னு முடிவு எடுத்து இருக்கே. அனுபவம் உன்ன இங்க கொண்டாந்து சேத்து இருக்கு’ நல்லா படி, போ’

தலைமை ஆசிரியர் பையனை வாழ்த்தி வகுப்புக்கு அனுப்பிவைத்தார்.

‘ இங்க நோட்டு புத்தகம் யூனிபாரம் எல்லாம் இலவசமா தருவாங்க. நீ  பொறுப்பா படிச்சிக’

தலைமை ஆசிரியர் சொல்லி அனுப்பினார். தலைமை ஆசிரியரின் பாதம் தொட்டு கிருஷ்ணன் வணங்கினான். சேதுவராயர் நிறைவானார்.

 எல்லோருக்கும் வணக்கம் சொல்லி சேதுவராயரும் சந்திரனும் பள்ளியிலிருந்து புறப்பட்டார்கள்.

‘ நாட்டாமை பேரன் கிருஷ்ணன் இப்ப  நம்ம ஸ்கூல்ல சேந்து படிக்கிறான்’ காலனியில் இருவர் பேசிக்கொண்டே போனார்கள்.

‘ அது மெய்தானே’ சந்திரன் சொல்லிமுடித்தான். தருமங்குடியில் பஞ்சவர்ண சேதுவராயரை நாட்டார் என்றே அழைப்பார்கள். நாட்டாண்மையைத்தான் நாட்டார் என்று சுருக்கிக்குறிப்பிடுகிறார்கள். தருமங்குடியில் ஊர் மக்களுக்கிடையே எழும் சில சில பிரச்சனைகளை நாட்டாண்மையிடம் சொல்லியே தீர்த்துக்கொள்வார்கள்.

பஞ்சவர்ண சேதுவராயர் சந்திரனின் கையைப்பிடித்துக்கொண்டு தன் கண்களில் ஒத்திக்கொண்டார்.

‘ நா தான் சரியா யோசனையில்லாம அவசரப்பட்டு கிருஷ்ணனை சேத்தியாத்தோப்புல கொண்டுபோய் சேத்துட்டேன். ரெண்டு வருஷம் வீணா போயிடுச்சி..இனி அவன காப்பாத்த முடியாதுன்னுதான் நினச்சேன். ஆனா உங்க மனசுல எப்பிடியோ இது தோணியிருக்கு.  ஒரு நல்ல முடிவு கொண்டு வந்து இருக்கிங்க. அதுக்கு உங்க முயற்சிதான் காரணம்.பெற்ற தந்தையோடு கல்வி போம்னு சொல்லுவாங்க. அப்பிடி தகப்பன் இல்லாத இந்த புள்ளக்கி ஆயிடுச்சின்னு  முடிவுல இருந்த எனக்கு ஒரு வெளிச்சம் காட்டியிருக்கிங்க. கிருஷ்ணன் தாயார்  எம்மருமொவ உங்கள வாழ்த்துவாங்க. நீங்க நல்லா இருக்கணும்’

‘ படிக்கிற பையன் வீணா போகறது எனக்கு சம்மதமில்ல. அதனால்தான் உங்க வீட்டுக்கு வந்தேன். இனி அவன் படிச்சிடுவான். கவலையை விடுங்க. நீங்க என் முயற்சிக்குத் துணையா இருந்தது நா எதிர் பார்க்குல. தருமங்குடி ஸ்கூல்ல கிருஷ்ணன  திரும்பவும் சேர்க்க  நீங்க ஒத்துக்கணுமேன்னு எனக்கக்கவல இருந்தது.’

‘படிப்பு பெரிசு. படிப்புதான் பெரிசுன்னு நா தெரிஞ்சிக்கிட்டவன்.. மனம் அப்ப அப்ப குரங்காயிடுது. அத  ஒழுங்கு படுத்தறது சின்ன வேல இல்ல’

‘’ ‘இண்ணைக்கு  ஒரு முக்கியமான  வேல.  அது நல்லபடியா முடிஞ்சிது.  நீங்க ஒத்துழைச்சதுதான் எல்லாத்துக்கும் ஆதாரம்.  உங்க பேரன் கிருஷ்ணன் இனி  ரொம்ப நல்லாவே படிப்பான் அதுதான் பிரதானம்  அதுவே மகிழ்ச்சி’

‘சந்திரன் தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

--------------------------------------------------  

                                                            16.

மணி நான்கு இருக்கலாம். மாலை மஞ்சள் வெயில் அடித்துக்கொண்டிருந்தது.  சந்திரன் வீட்டு வாயிலில் இருந்த அரச மரத்துக் கிளைகளில்  அனேக பசைக்கிளிகள் அமர்ந்து பறந்து   கிறீச் கிறீச் என்று ஓசை எழுப்பி மகிழ்ச்சி பாவித்தன. அந்தப்பெரிய அரச மரத்தின் கீழ் இருந்த விநாயகர் சிலையைச் சந்திரன் பார்த்துக்கொண்டான். அப்படிப்பார்ப்பதும் அந்தக்கடவுளை வணங்குவதும்  ஒன்றென சந்திரன் எண்ணிக்கொள்வான்.

வீட்டு வேலை பார்க்கும் தங்காயாள் தன் வேலைகளை முடித்துவிட்டு சந்திரன் வீட்டைவிட்டுக்கிளம்பி ஆளோடியில் நின்ற வண்ணம் இருந்தாள்.

‘என்ன அய்யா எங்க போயிட்டிங்க அம்மா புலம்பிகிட்டே இருந்தாங்க. தம்பி  மதியம் எங்க சாப்பிட்டுதோ இல்லையோன்னு’

  நான் சாப்பிட்டுட்டுதான் வரன்’

‘ அப்ப காபி சாப்பிடுங்க’

‘இது சரி’ தங்காயாவிடம் சொன்னான். தங்காயா சந்திரன் அம்மாவிடம் பெற்றுக்கொண்ட காய்கறி சிலதுகளை தன் கையில் வைத்துகொண்டே நடந்தாள்.

‘ஒரு பை கிடைக்கலியா கையில வச்சிகினு போற’

‘அது எல்லாம் எதுக்கு தே  இருக்குற என்  வூட்டூக்கு’ சந்திரனுக்குப்பதில் சொன்னாள்.

அம்மாவிடம் தேங்காய் வாழைக்காய் வாழைத்தண்டு கொத்தவரங்காய் பாகற்காய்  வெண்டைக்காய் சேப்பன்கிழங்கு என அவள் பெற்றுக்கொண்டு செல்வது வழக்கம். ஒரு தரத்துக்கு வெற்றிலையும் பாக்கும் என அதனையும் பெற்றுக்கொள்வாள்.

தங்காயாள் தயங்கித்தயங்கி நின்றாள்.

சந்திரன் வீட்டினுள் நுழைந்தான்.

‘ மத்தியானம் சாப்பிட்டயா’

‘சாப்பிட்டேன்,’

‘ எங்க’

‘ சந்தானமய்யர் ஓட்டல்ல’

‘அளவு சாப்பாடா அது போதுமா எப்பிடி இருந்துது’

‘வேணுங்கிறது வாங்கிகலாம்,  அது போதும் நல்லாதான் இருந்துது. எப்பவும் அங்க  நல்லாதான் இருக்கும்’

‘ அது சரி போன காரியம் என்னாச்சு’

‘ நல்லாவே முடிஞ்சிது. நானும் சேதுவராயரும் சேத்தியாத்தோப்பு ஸ்கூலுக்குப் போனோம். கிருஷ்ணனோட  டீ சி வாங்கினம். ஒட்டல்ல சாப்பிட்டம்  திரும்ப ஊருக்கு வந்தம். நேரா தருமங்குடி  ஹைஸ்கூலுக்குப்போனோம். கிருணனையும் கூட்டிண்டு போயி அந்தக் ஸ்கூல்ல சேத்தோம். ஒரு வேல முடிஞ்சிது’

 அம்மா முற்றத்திலிருந்த துளசிமாடத்தை ஒரு முறை பார்த்து நிறைவாக மகிழ்ச்சி பாவித்தாள்.

‘ தங்காயா தங்காயா’

ஆளோடியில் நின்றிருந்த தங்காயா’ சொல்லுங்க அம்மா’

என்று வேக வேகமாக வந்தாள்.

‘ தம்பி சாப்பிட்டு வந்துடிச்சி. ஆக அந்த சாப்பாடு மிச்சம். அத தர்ரேன்’

 இரண்டு மூன்று பாத்திரங்களில் சந்திரனுக்கு எடுத்து வைத்திருந்த சாதம் சாம்பார் இத்யாதிகளை தங்காயாவிடம் சந்திரனின் அம்மா கொடுத்தாள்.

‘ இன்னிக்கி அய்யா சாப்பாடு எனக்கு’

‘ எண்ணைக்கும் அய்யா சாப்பாடு உனக்கு’ தங்காயாவுக்கு ப்பதில் சொன்னாள் அம்மா.

‘ நா வர்ரேன் மா’

தங்காயா விடை பெற்றுக்கொண்டாள்.

‘ அய்யா வந்தாச்சா’ என்ற குரல் கேட்டது.

‘ எந்த அய்யா’

‘ முதுகுன்றத்து அய்யாவ கேக்குறன்’

அம்மா எட்டி வாசலைப்பார்த்தாள்.

‘ யாரது’ என்றான் சந்திரன்.

‘ தேவாரம் ராஜகோபால் பிள்ளைதான் வந்துருக்கார்’

‘ பிள்ளே  திண்ணையில உக்காருங்கோ  நா வந்துகுடறேன்’ சந்திரன் பிள்ளைக்கு ஓங்கி  ச்சொல்லிக்கொண்டிருந்தான்.

‘ ஆவுட்டும் மெதுவா வாங்க’

பிள்ளை திண்ணையின் மீது தனது மேல் துண்டை விரித்துப் போட்டு அதன் மீது படுத்துக்கொண்டார். தனது வலது கையை மடக்கித்தலையணை ஆக்கிக்கொண்டு நீட்டிப்படுத்தார். அவரின் தலை திண்ணைச் சுவரில் முட்டிக்கொண்டு நின்றது.

 திண்ணைச் சுவரில் அடித்த வெள்ளைச் சுண்ணாம்பு திண்ணையில் படுத்து படுத்துத்  தலையை  சாய்த்தவர்களின் தலை எண்ணெயினால்  நிறமாறி விகாரமாகிக்கிடந்தது.

‘கை கால அலம்பு, காபி சாப்பிடு’

‘ சரிமா,  காபிதான் எனக்கு வேணும்’ சந்திரன் முகம் கழுவிக்கொண்டு வந்து பெஞ்சில் அமர்ந்துகொண்டான்.

அம்மா காபி போட்டு எடுத்துவந்து பெஞ்சின் மீது வைத்தாள்.

‘சேத்தியாத்தோப்புக்கு எப்பிடி போனேள் எப்பிடி வந்தேள்’

‘ நம்மாத்து சைக்கிள்ள தான்’

‘ மூணு பேருமா’

‘ இல்லம்மா கிருஷ்ணன் வரமுடியாதுன்னாட்டான்’

‘ ஏனாம்’

‘ அந்த சமாச்சாரம் ஸ்கூல்ல  போயிதான் வெடிச்சது’

‘ இவனோட இன்னும் நாலு பசங்க மொத்தம் அஞ்சி பேர் ஸ்கூலுக்கு போகாம காடு பதுங்கி இருந்துட்டு  பள்ளிக்கூடம் விடற நேரத்துக்கு கெளம்பி வீட்டுக்குப்போய்விடுவாங்களாம். அப்படி கிருஷ்ணனும்  ஸ்கூலுக்கு போகாம காடு பதுங்கி இருந்துட்டான். இந்த விஷயம் ஸ்கூலுக்கு தெரிஞ்சி  அந்த நாலு பசங்களுக்கு டீ சி  கொடுத்து அனுப்பியாச்சாம்.  இந்த கிருஷ்ணன் தான் பாக்கி’

‘ அதான் அவன் தப்பு பண்ணியிருக்கான் அதான் ஸ்கூலுக்கு வரமுடியாதுன்னு சொல்லியிருக்கான் அதுவும் சரிதான்’

‘இப்ப கிருஷ்ணன தருமங்குடி ஹை ஸ்கூல்லயே ஒன்பதாவதுல சேத்தாச்சி’

’அதான் நீ சொன்னயே, நல்ல காரியம் ஆகியிருக்கு. ரெண்டு வருஷம் போச்சு’

‘ இப்ப படிக்கிறேன்னு கிருஷ்ணன் ஒத்துண்டு ஸ்கூலுக்கு போறானே’

‘அய்யா நா  இங்க இருக்கேன்’

தேவாரம் ராஜகோபால் பிள்ளையின் குரல் கணீரென்று கேட்டது.

‘ தோ வந்துட்டேன் பிள்ளை’ சந்திரன் சொல்லிக்கொண்டே வாசலுக்கு வந்தான்.

‘வாங்க புள்ள நா சேத்தியாத்தோப்பு போயிருந்தேன். பஞ்சவர்ண சேதுவராயர் பேரன் கிருஷ்ணன் சர்டிபிகேட் வாங்கிவந்து அவன நம்ப ஊர் ஸ்கூல்ல சேத்தாச்சு’

‘சேதுவராயர் கூட வந்தாரா’

‘ அவர் வந்தாதனே காரியம் ஆகும்’

‘அவுருதான் பிடிவாதமா  தம்பேரன அங்க கொண்டு போயி சேத்த மனுஷன்’

‘ அந்த தப்ப அவரே சரி செஞ்சிட்டாரு’

‘ நீங்க வழி காட்டி இருக்கிங்க அதான்  காரியம் ஆகியிருக்கு. அவ்வளவுதான்

‘ சரி. நாம நம்ப  விஷயத்துக்கு வருவம்  பிள்ள’

‘ இண்ணைக்கு நாம  திருமூலர் பத்தி பேசுவமா’

‘ திருமந்திரம்னு ஒரு புத்தகத்த எழுதினவரு. அதுல மூவாயிரம் பாடல்கள் இருக்கு நானும் பாத்து இருக்கன்’

‘ ரொம்ப நல்ல செய்தி இது. இந்த திருமூலருக்கு விஞ்சி ஆன்மீக விஷயம் சொல்லத் தமிழ் மொழியில வேற யாரு இருக்கா’

சந்திரனின் அப்பா சைக்கிளை உருட்டிக்கொண்டு அப்போதுதான் உள்ளே வந்துகொண்டிருந்தார்.

‘ என்னடா இண்ணைக்கு ஒனக்கு லீவுன்னு சொன்னாளே’

‘ ஆமாம் எனக்கு  லீவுதான் உன்னதான் காணல. இப்பதான் வர’

’ கம்மாபுரம்  வெங்கட்ராம அய்யர் வரச்சொன்னார், அவர்  ஆத்துல ஸ்ரார்தம், பிராம்ணார்த்தத்துக்கு வாப்பா ன்னு சொன்னார்’ அவர் எனக்கு ஆத்மார்த்த  செனேகிதர். அவர் ஒத்தாச எனக்கும்  எப்பயும் வேணும் அதான் கம்மாபுரம்  போயிட்டு வர்ரன்’

‘சரிப்பா செத்த புள்ளகிட்ட பேசிட்டு வரேன்’

‘ செத்த என்னடா இதுல  நீ பேசு  சாவுகாசமா வா. நா  ஆத்து உள்ள போறன்’

‘ போயி கொஞ்சம் ஓய்வு எடுங்க. கம்மாவரம் நாலு மைலு போயி வந்து இருக்கிங்க. சைக்கிளு மெதிச்சது வேற’

பிள்ளை சந்திரனின் அப்பாவுக்கு சொல்லி அனுப்பினார்.

‘பிராம்ணார்த்தம் வேற’ சந்திரன் சொல்லிக்கொண்டான்.

‘சாப்பாட்ட சொல்றீங்க நாம நம்ம கதைக்கு வருவம்.‘ ஒரு பாட்டு திருமூலர்து சொல்லுங்க தம்பி’  பிள்ளை சமயங்களில் தம்பி என்றும் சந்திரனை அழைத்துப்பேசுகிறார்.

சந்திரன் எதனைச்சொல்லலாம் என யோசனை செய்தான். அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் அதனை ஓங்கிச்சொன்னான்.

’படமாடக்கோவில் பகவற்கொன்று ஈயில்

நடமாடக்கோவில் நம்பர்க்கங்காகா

நடமாடக்கோவில் நம்பர்க்கு ஒன்று ஈயில்

படமாடக்கோவில் பகவற்கு அது ஆமே’

  ஆகா ஒரு அற்புதமான பாட்டு சொன்னிங்க. இது ரொம்ப ஒஸ்தியான சமாச்சாரம்’

சந்திரனின் பக்கத்துவீட்டு சாமி நாத சிவாச்சாரியார் சிவன் கோவில் சாயரட்சைக்குப் போய்க்கொண்டு இருந்தவர் இந்த பாட்டைக்கேட்டுவிட்டு அப்படியே நின்றார்.

‘ என் காதுலயும்  விழுந்துது ஏ, சந்திரன் சத்தான ஒரு சேதி சொன்னே. எப்பிடிதான் இதுகள் எல்லாம் தேடி எடுத்துண்டு வந்து   ஒரு சபையில  சட்டமா வக்கிறீங்களோ அதானப்பா இங்க பெரிசு. ஆனா  ஒரு முக்கியமான  விஷயம் அதயும் சொல்லணும். எங்களுக்கு கோவில்ல வயித்து  பொழைப்பு இருக்கு. கோவிலுக்கு வராம எல்லாரும் படமாடக்கோவில விட்டுட்டு நடமாடக்கோவிலுன்னு போயிட்டா நா என்ன பண்ணறது’

பிள்ளை கட கட என சிரித்தார்.

‘ என்ன குருக்களய்யா இது திருமூலர்னு ஒரு சித்தர்  அவுரு பாடல். திருமந்திரம் கேள்விபட்டு  இருப்பிங்க.  இத  எல்லாம் கோவில்ல பாடுறது இல்லே.

 ’நட்ட கல்லை தெய்வமென்று

நாலு புஷ்பம் சாத்தியே

சுற்றி வந்து  மொண மொண என்று சொல்லு

மந்திரம் ஏதடா

நட்ட கல்லும் பேசுமோ

நாதன் உள்ளிருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

இதுவும் சித்தர் சிவவாக்கியர்  பாடல்தான். இது என்னா பண்ணிடுச்சி  உங்க  சாமி படைக்கிற தொழில.’

’ சும்மா வெளயாட்டுக்குச் சொன்னேன். தேவாரம் பாடுற பிள்ளை எங்கெங்கயோ போயிட்டார். நா வரம்பா  என்ன ஆள வுடுங்க’

சொல்லிக்கொண்டே தருமை நாதன் கோவில் நோக்கி ச்சென்றார்.

‘ சாயரட்சை என் டூட்டி இருக்கு நா போகணும்’ சொல்லிக்கொண்டேதான் கடந்து போனார்.

‘ அய்யாவுக்கும் நல்ல  சேதி காதுல கேட்டிருக்கு’

‘ நா என் குரலை உயர்த்தி  வேகமா சொன்னேன்  குருக்களய்யா காதுல கேட்டிருக்கும் அதான்’

‘ நல்லத  வேகமாத்தான் சொல்லணும்,  ஏழைங்கள தேசபிதா காந்தி தரித்திர நாராயணன்னுதான் சொல்லுவார். ஏழைங்களுக்கு நாம  செய்யுறதுதான் தெய்வத்துக்கு செய்யுறது. ஏழையின் சிரிப்பில் இறைவனைப் பாக்கணும்னு சொன்னா அது இப்பிடிதான்.  ஏழையின் பசிக்கு நாம  உணவு கொடுக்கறது  அந்த தெய்வத்துக்கே போய்ச்சேரும்னு  திருமூலர் சொல்றாரு.  படமா சிற்பமா இருக்குற தெய்வத்துக்கு நாம எது படைச்சாலும் அது ஏழைக்கு போயிச்சேர்வது இல்லன்னும் அடிச்சி சொல்லி இருக்குறாரு’

‘ நீங்க ஒரு பாட்டு சொல்லுங்க புள்ள’

 பிள்ளை தன் கண்களை மூடிக்கொண்டார்.  பிள்ளைக்கு மனத்திரையில் ஆயிரம் பாடல்கள் ஒடிக்கொண்டிருக்கலாம்.

‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

நன்றே நினைமின் நமனில்லை நாணாமே

சென்றே புகுங்கதி இல்லை நுஞ்சித்தத்து

நின்றே நிலைபெற நீர் நினைந்துய்மினே’

ராகமாய் பாடிமுடித்தார் பிள்ளை.

‘ இதுக்கு விளக்கம் சொல்லணுமா என்ன’

‘வேண்டாங்க புள்ள, அதான்  ஒரு தேங்காய ரெண்டா ஒடச்சாபுல விஷயம் புரியுதே’

‘ ஒன்றே குலம் ஒருவனே தேவன். இத சித்தத்து இருத்துவோம். அந்த நினைவோடு வாழ்வோம். தலை  நிமிர்ந்து  ஒருவன் செல்லும் வழி அதுமட்டுமே. இன்னும் சொல்ல என்ன இருக்கிறது. எதுக்கு சண்டை எதுக்கு வழக்கு எதுக்கு  வம்பெல்லாம்.’

‘ மனுஷன்கிட்ட இந்த மாதிரி சாரம் போய்சேரல்ல. திருக்குறள்னு ஒரு    நீதி நூல்வந்து எத்தனைக்காலம் ஆயிடிச்சி. இன்னும் அதன் தேவை கூடிகிட்டுத்தான் போவுது’

‘ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக்காட்டுன்னு பைபிள் சொல்லுது.  ஆனா எத்தினி யுத்தம் இங்க நடந்திருக்கு எத்தனி கோடி பேர் செத்துபோயிருக்காங்க’

திருமூலருக்கு தமிழ் மொழி மேல உயர்வான அபிப்ராயம். தமிழ் மொழி அது தேவ பாஷை என்று சொல்றாங்களே அந்த வடமொழியையைவிட இன்னும் பல மடங்கு உயர்ந்தது.  தமிழ் அது தெய்வ மொழி. கடவுளே கவிதைபாடிய மொழி..அவ்வைக்கிழவி தமிழ்க்கடவுள் முருகனோடு விவாதித்த  மொழி. அந்த மொழியை திருமூலர் எப்பிடிப்பேசுகிறார் பாருங்க,

பின்னை நின்றென்னே பிறவி பெறுவது

முன்னை நன்றாக முயல் தவம் செய்கிலர்

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

தன்னை நன்றாகத்தமிழ்ச்செய்யுமாறே.

இறை தொடர்பான உயர்  சமாச்சாரங்களை தெய்வத் தமிழில் வெளிப்படுத்தவே தன்னை அந்த இறைவன் நன்றாகப்படைத்தனன் என்று வாக்குமூலம்ல  கொடுக்கிறாரு..

‘ரொம்ப சிறப்பு இது. இந்தத் திருமூலம் என்பது இறைத்தமிழ் தெய்வத்தமிழ்.’’

‘இப்ப  நாம பேசுறது நல்லாவே போகுது’

‘’ இன்னும் ஒரு விஷயம் திருமூலர் சொன்னது. ஆடம்பரமான வழிபாடு ஆரவாரமான வழிபாடு இவை தேவையேயில்லை. மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம்னு  சொல்லுவாங்க. மனம் செம்மையானமாதிரி  நமக்குத் தெரியும் அது பொய்த்தோற்றம்னு அப்புறமா நமக்கு த்தெரியவரும்.

‘யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை

யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை

யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி

யாவர்க்குமாம் பிறர்க்கின்னுரைதானே’

ஒரு இனிய சொல்லுக்கு எவ்வளவு மரியாதை தருகிறார் திருமூலர்.

‘ போதும்னு நினைக்கிறேன். இண்ணைக்கி இத்தோட. நீங்க ஓய்வெடுங்க. இன்னொரு நாள் வேற ஒரு பெரிய மனுஷாள பத்தி பேசுவம்’

‘ நல்லாரைக்காண்பதுவும் நன்றே

நலமிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே

நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே

அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று’

‘ அவ்வையார் பாட்டு பொருத்தமா முடிச்சிட்டிங்க அய்யா, நா பொறப்படுறேன்’

‘ சரிங்க புள்ள’

சந்திரன் திண்ணையைவிட்டு எழுந்து வீட்டின் உள்ளே வந்தான்.

‘ என்னடா இண்ணைக்கி ஏகபட்ட காரியம் பண்ணினாயாம் அம்மா சொல்றா’

‘ ஆமாம் அப்பா’

’ படிக்கற பசங்க  ஸ்கூல விட்டுநின்னு போகாம இருக்குனும். அது ரொம்ப முக்கியம்’

‘இண்ணிக்கிதான் இது தோணித்தா’

‘ நல்லாவே கேட்டே. இண்ணைக்குத்தான் எனக்கு   செய்யணும்னு தோணித்து. ஏதோ அடி மனசுல இந்த  ஒரு சமாச்சாரம் உறுத்திண்டே இருந்திருக்கு’

‘ அந்தப்பையனுக்கு ஒரு  நல்ல நேரம். இனி அவன் முன்னுக்கு வரணும்’

‘ நிச்சயம் வருவான் எனக்கு நம்பிக்கை இருக்கு’ சந்திரன் பதில் சொன்னான்.

இரவு உணவு முடித்து களைப்பாக  உறங்கிப்போனான்.

----------------------------------. 

                                                 17.

சந்திரன் மறு நாள் விடியற்காலைப்பணிக்குக்கிளம்பினான். தருமங்குடி நிறுத்தத்தில் சிமெண்ட் கட்டையில் அமர்ந்திருந்தான். அந்த செஞ்சி செல்லும் பஸ் இன்னும் வரவில்லை.  லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றுகொண்டிருந்தன. எல்லாமே காலியாகச்சென்றன. சுமை ஏதும் இல்லாமல் அவை செல்வதால் அவை எழுப்பும் ஒலி நாராசமாய் இருந்தது.

ஒன்றிரெண்டு லாரிகளுக்கு முன்னால் கை நீட்டிப்பார்த்தான். யாரும் அவனை சட்டை செய்யவே இல்லை.’ நிறுத்தாட்டி போவுட்டும்’ அவன் சொல்லிக்கொண்டான். செஞ்சி பஸ் ஓரு லாரியின்பின்னால் உறுமிக்கொண்டு வந்தது. சந்திரனைப்பார்த்ததும் வண்டியின் டிரைவர் பிரேக் போட்டு நிறுத்தி வண்டியை ஓரமாக்கினார். சந்திரன் பேருந்தில் ஏறி அமர்ந்தான். பேருந்து நிறைத்துக்கொண்டு கூட்டமாய் இருந்தது. திருமண நாட்களில் இப்படித்தான்.மக்களின் போக்கும் வரத்தும் கூடிப்போகிறது. சந்திரனுக்கு உட்கார இடம் இல்லை.

‘ முதுகுன்றம் வரைக்கும் இப்பிடித்தான்’

கண்டக்டர் சந்திரனிடம் சொல்லிக்கொண்டார்.

‘ வழி சீட்டே இல்லயா’

‘ இல்ல. நீங்க என் சீட்டுல குந்துங்க’

‘ இல்ல நானு நின்னுகிறேன்’

‘ சீட்டு போட்டு கணக்கு பண்ணி முடிக்கணும். அதுவரைக்கும் உக்காருங்க’

சந்திரன் கண்டக்டர் இருக்கையில் போய் அமர்ந்துகொண்டான். அதுவரை அது காலியாக இருந்ததே பெரிய சமாச்சாரம்தான்.

கண்டக்டர் கண்டிப்பானவர்.’ என்  சீட்டு  காலியாவே இருக்கட்டும் நா வந்துருவேன்’ சொல்லிவிட்டு வந்திருக்கிறார். ஆக,

‘ கண்டக்டரு வருவாரு உக்காராதிங்க’ ஒரு இளைஞன் சந்திரனை அமர விடாமல் தடுத்தான்.’

‘ அவுருதான் என்ன உக்காருன்னாரு’

‘ நாங்க ஏன் நிக்குறோம் நங்க  உக்காரமாட்டாம’

அந்த இளைஞன் சட்டமாய்ப்பேசினான்.

சந்திரன்  கண்டக்டர்சீட்டில் அமராமல் நின்றுகொண்டே இருந்தான். பேருந்து விரைவாகச்சென்று கொண்டே இருந்தது. கம்மாபுரம் தாண்டியாயிற்று. வண்டிதான் எந்த ஊரிலும் நிற்கவில்லையே. வண்டியில் இடமே இல்லை. கண்டக்டர் டபுள் விசில் அடித்துக்கொண்டுஇருந்தார்.

.

கண்டக்டர் தன் இருப்பிடம் நோக்கி வந்தார்.

‘ நீங்க உக்காருலயா’

‘ இருக்கட்டும் பரவாயில்ல’

‘ நீங்க உக்காருங்க நான் இப்ப  இறங்கிடுவேன்.’

கண்டக்டர் தன் இருக்கையில் அமர்வதுகண்டு சந்திரனிடம் முறைத்த இளைஞர் சமாதானம் ஆனார்.

‘ நாந்தான் டிரைவர் கிட்ட சொல்லி தருமங்குடில நிப்பாட்ட சொன்னன். அவுருக்கு உங்கள தெரியாது. இல்லன்னா வண்டி நிக்காம போயி இருக்கும். ‘

‘ ரொம்ப நன்றிசார்.’

  என்ன தெரிஞ்சவங்களுக்கு நா இது கூட செய்யாம இருந்தா எப்பிடி’

சந்திரனிடம்   கண்டக்டர் உட்காரும் இடத்திற்காகச் சண்டைக்கு வந்த இளைஞர் கண்டக்டர் சொல்வதைக் கவனமாகக்காதுகொடுத்துக்கேட்டார்.

சந்திரனை ஒரு முறை விரைப்பாகப் பார்த்துக்கொண்டார்.

வண்டி பூதாமூரை நெருங்கியது.

‘ பூதாமூர் எறங்குதா’

 நான்கைந்து பேருக்கு இறங்குவதற்குத்தயார் ஆனார்கள். மூட்டை முடிச்சுக்களை நகர்த்திக்கொண்டு இருந்தார்கள்.

நன்றாக விடிந்து விட்டது. பூதாமூரில் நின்ற  வண்டி   மள்ளாட்டை கமிட்டி யைத்தாண்டி பாலக்கரையைத்தொட்டது. வண்டி அனேகமாய் முழுவதும் காலியாகிவிட்டது.

‘ பஸ் ஸ்டேண்டு போனா  பத்து .சீட்டு ஏறும் அதுவும் உளுந்தூர்பேட்டை சீட்டுதான். பெறகுதான் செஞ்சி கிஞ்சி எல்லாம்’ கண்டக்டர் சொல்லிக்கொண்டார்.

சந்திரன் கண்டக்டரையே பார்த்துக்கொண்டு இருந்தான். வண்டியை விட்டு இறங்கிய சந்திரன் மணிமுத்தாற்றுக் குறுக்கு வழியாக நடக்க ஆரம்பித்தான்.

அதிகாலைவேளையில் ஆற்றுப்படுகையில்  சங்ககடமாகத்தான் இருக்கும். இயற்கை அழைப்புக்குப்பதில் சொல்ல பாதி மக்கள் ஆற்றுக்குத்தானே வருகிறார்கள். இன்னும்அனேக வீடுகளில் நவீன கழிப்பறை எல்லாம் முழு உபயோகத்திற்கு வந்தப்பாடில்லை. ஆண்களின் நிலையே இப்படி எனில் பெண்களின் கஷ்டங்கள் சொல்லி மாளாது.

‘ நீங்க சூத்து கழுவத்தான்  ஆத்து மணல்ல  நா   ஊத்து போட்டு வச்சிருக்கனா ஒங்களுக்கு சுதி மதி இருக்குதா’ஒருவன் கத்திக்கொண்டே வந்தான். கையில்  காலிக்குடங்கள் இரண்டு வைத்திருந்தான்.  கடைத்தெரு குட்டிக்கடை காபி ஓட்டலில் அவனை ச்சந்திரன் பலமுறை ப்பார்த்தும் இருக்கிறான்.

ஊத்துக்குழியில்  கீழே இறங்கியவன் வேக வேகமாய் வெளியே வந்தான்.

‘ நா வெளியூரு. எனக்கு  இது விசயம் புரியில.  நா ஒண்ணும் இதுங்குல சாமி.  நா ஊத்து   பாதையில எறங்கினன். அவ்வளவுதான்.  யாரோ திட்டுறாங்க அந்த  அரவம்   கேட்டிச்சி.  சட்டுனு ஓடியாந்தேன் வெளியில நின்னுட்டன்’

’ நீ தானா  ஊத்து பாத தொறப்புல  கெடந்த இந்த  முள்ளு மெலாறு எடுத்து ஓரம் பண்ணினது’

‘ ஆமாம்’

‘ என்ன ஆமாம். செத்த  ஓமாம்.  போ போ அங்கன காலு கழுவன்னு வேற  எடம் இருக்கு.    சனம் லைனா போவுறது  கண்ணு தெரியில.அங்கன நாலு  தகர கொவளவ  கூடவே கெடந்துது. வெஷயம்  தெரியலன்னா அடுத்தவன  கேக்குணும்.  மனுஷாளுக்கு வா இருக்குதுல்ல’

‘ நீ  ஒன் கைய கிய ஊத்து தண்ணில   உள்ற வுட்டு கொழப்பியிருந்தா நா மழங்கி மழங்கி நிப்பன்.  இங்கன என்னா பண்றதுன்னு முழிப்பன்.  நீதான்   சுதாரிச்சிகினு டாண்ணு  மேல வந்துட்ட.  என் நல்ல நேரம்  நா பொழச்சண்டா சாமி’ சொல்லிய அந்த தண்ணீர் க்குடம் சுமக்கும் ஆள் ஊத்துக்குழிக்குள்  காலிக்குடங்களோடு இறங்கினான்.

சந்திரன் எல்லாவற்றையும் நோட்டமிட்டுக்கொண்டே நின்றான். பிறகு நட க்க ஆரம்பித்தான்.

சந்திரன் மணிமுத்தாற்றைக்கடந்து அரசமரத்துப் படித்துறையில் கரை ஏறினான். செக்கும் செக்கு மாடுகளும் உறக்கத்தில் இருந்தன. அரச மரத்தடி பிள்ளையார் மட்டும் கண் விழித்துக்கொண்டு வருவோர் போவோரை கண்காணித்தபடிக்கு அமர்ந்திருந்தார். நேற்று நல்ல அபிஷேகம் நடந்து சிறப்பு பூசைகள் நடந்திருக்கலாம். அருகன் புல் மாலைகள் சூடி பிள்ளையார் நிறைவாகவே காணப்பட்டார்.

‘ ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றினை

நந்திமகன்தனை ஞானக்கொழுந்தினைப்

புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே’

தலையில் இரண்டு பக்கமும் மூன்று குட்டு குட்டிக்கொண்டான்.

இடது கையால் வலது நெற்றியிலும் வலது கையால் இடது நெற்றியிலும் குட்டிக்கொண்டான்.

பூக்காரி ஒருத்தி ரெட்டை பாப்பாரத்தெரு வழியாக பூக்கூடையோடு நடந்து சென்றாள். மல்லிகை மொட்டுக்களின் மணம் கம்மென்று வந்துகொண்டிருந்தது.  சந்திரன் பிள்ளையார் சிலை முன்னர்  கும்பிட்டு வழிபாடு செய்வதைக்கவனித்தாள்.

‘ இது என்ன  சாரு  அந்த அந்த கையால அந்த அந்த நெற்றியில குட்டிக்கணும். அத வுட்டுட்டு கை மாறி குட்டிக்கறிங்க. தோப்புக்கரணம் போடும்தான் காது மாறி மாறி புடிச்சிகிணும் என்னா போ’

திருமூலரின் பாடலை  அமைதியாய் ஒருமுறை சொல்லிமுடித்த சந்திரன்  பூக்காரி சொல்வதைக் கவனமாய்காதில் வாங்கிக்கொண்டான். யாரும் இதுவரை  இப்படி அவனுக்குச்சொன்னதில்லை. யார் சொன்னால் என்ன? தப்பு என்றால் தப்புதான் அவன் சொல்லிக்கொண்டான்.கழட்டிய  தன் செறுப்புக்களை மீண்டும் போட்டுக்கொண்டான்.

சரியான நேரத்திற்கு சந்திரன்  அலுவலகம் வந்து சேர்ந்தான். செல்லமுத்து சார் அவனுக்குப்பின்னால்தான் அலுவலகம் வந்தார். அவரவர்கள் தங்கள் தங்கள் பணியை த்தொடர்ந்து கொண்டார்கள். அலுவலகப்பணிகள் ரொட்டீனாக சென்றுகொண்டிருந்தன.

அலுவலக வாட்ச்மென் வேக வேக மாக செல்லமுத்துசாரைப்பார்க்க வந்தான்.

‘சார் உங்கள பாக்க நாலைந்து பேர்  வந்திருக்கிறார்கள். கேட்டில் நிற்கிறார்கள். என்ன சொல்வது’

‘என்னைப்பார்க்கவா’

‘ செல்லமுத்து சார் பார்க்கணும் என்றுதான் சொன்னார்கள்’

‘ மதுரவல்லி கிராமத்து ஆட்களாக இருக்கலாம்’

‘பாத்தா ஊர் காரங்க மாதிரிதான் தெரியுது’

‘ நா இப்ப   அங்க,வரேன், வந்தவங்கள  இருக்க சொல்லுங்க’

செல்லமுத்து தனக்கு அடுத்த சீனியரிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டார்.

சந்திரன் நடப்பவை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டான்.

‘என்ன சார் சேதி’

‘வந்து சொல்றன். கத்தரிக்காய் முத்துனா கடைத்தெருவுக்கு வந்துதான ஆவுணும்’

சொல்லிக்கொண்டே கேட்டின் பக்கம் சென்றார்.

‘சார் வணக்கம் உங்கள பாக்கத்தான் வந்து இருக்கோம்’

‘ வாங்க வங்க’

‘ நம்ம  நொண்டி  மினி கோவிலு கும்பாபிசேகம்  ஆவுணும். கோவிலு சொத  வேல ஆகிடுச்சி. ரெண்டு   குதிர  ஒரு நாயி ரெண்டு  போலிசு  வர்ண வேல பாக்கியா இருந்துது  அதுவும் பூர்த்தியாயிட்டுது. கும்பாபிசேகம் ஆவுணும் அது சம்பந்தமா  உங்கள பாத்து பேசிட்டு போவுலாம்னு வந்தம்’

‘ ஏட்டுதான உன் பேரு . நா  சமீபத்துல ஊருக்கு வந்தன். யாரும் இந்த மாதிரி  சேதி எதுவும் சொல்லல’ 

‘ அய்யா நீங்க மாரி கோவிலுக்கு பவுர்ணமி பொறப்பாட்டுக்கு  வந்தீங்க. ஒரு நா சாயந்திரமாதான்.  அப்புறம் உடனே கெளம்பிட்டதா சேதி’

ஏட்டுதான் பதில் சொன்னான்.

அந்த ஏட்டோடு இன்னும் மூன்று பேர் வந்திருந்தனர்.

அனைவரும் அலுவலகத்துக்கு எதிர் வீடு திண்ணை பார்த்து அமர்ந்துகொண்டனர்.

‘ ரவ நேரம் குந்தி பேசிக்கறம் பாட்டி’

எதிர்வீட்டில் ஒரு பாட்டி இருந்தாள். பாட்டிக்குச் சொந்த வீடு. கணவர் உள்ளூர் ஹைஸ் கூலில் ட்ராயிங்  மாஸ்டராக இருந்தவர்.   பணிக்காலம் முடிந்தது. பணி ஓய்வில் பென்ஷன் வாங்கிக்கொண்டு இருந்தார். அவர் வீட்டின் உள்ளே எப்போதும் எதையாவது படித்துக்கொண்டேதான் இருப்பார்.  சொச்ச நேரத்தில் விளம்பர தட்டிகள் எழுதுவார். பாட்டி எந்நேரமும் வாயில் திண்ணையில்தான் அமர்ந்து தெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பார்.

‘ எனக்கு ஆபிசு வேல இருக்கு, சட்டுனு வெஷயத்தை சொல்லுங்க’

‘ நொண்டி வீரனுக்கு கொவிலு  கட்டட வேல  முடிஞ்சி போச்சி. நீங்க வருணும்  சாமிக்கு கண்ணு தொறக்கணும் கலசத்துல  தண்ணீ ஊத்தி  பூர்த்திபண்ணணும்’

‘சாமிதான் நமக்கு கண்ண தொறக்குணும்,  நா இப்ப என்ன செய்யிணும்’ என்றார் செல்லமுத்து.

  புது  கோவிலு சாவி எங்ககிட்ட இருக்கு. மேங்கொண்டு கும்பாபிசேக வேல நீங்க வந்து  பாக்குணும்’ நேராக விஷயத்துக்கு வந்தான் ஏட்டு.

‘ பொறுப்ப எங்கிட்ட குடுக்கறீங்க’

‘ நாங்க ஒங்க கூடயே இருப்பம். நீங்க வழி முறை தெரிஞ்சி செய்வீங்க அதனாலதான்’

‘ சரி நா என்ன என்ன செய்யிணும் அது தெரியணும்’

  நாளு நடசத்திரம் பாத்து  ஒரு தேதி வச்சி  மஞ்ச பத்திரிகை அடிச்சி புது கொவிலுக்கு  கலசத்துல  தண்ணி ஊத்துணும்’

‘ சரி நா செய்யுறேன்’

‘ இப்புறம் எங்க வேல சுளுவு. நீங்க  காலால வுடுற வேலய  நாங்க கையால  செய்வம்.’

‘ இப்ப  எனக்கு  வெளக்கமா  பேச  நேரம் இல்ல.  வீர பாண்டி தெரு  திருவிக நகரு என் வீட்டுக்கு  நீங்க  எல்லாரும் நேரா வந்திருந்தா சாவுகாசமா பேசுலாம். ஒரு டீ யாவது போட்டு குடுத்து இருப்பன்’

‘ பரவாயில்ல. இங்கன பாக்குறது  இல்லன்னா அங்கன வருலாம்னு எங்க  ரோசனை.  கிணத்து தண்ணிய வெள்ளமா கொண்டு போய்டும். நாங்க  எங்க போயிடறம். மேலைக்கு அங்கயும் வருவம்  அங்கயும் பாக்குலாம்’ என்றான் ஏட்டு.

‘ என்ன உங்களுக்கு நல்லா  தெரியும். இந்த மூணு பேருல பேண்ட் போட்டவன் என் மொவன். காலேஜ் படிக்குறான். என்னமோ ஒண்ணு  அங்க படிக்குறான். பாக்கி இன்னும்  ரெண்டு பேரு.ஒத்தன் நம்ம எடத்துல  மளிக கட வச்சிருக்கான். பேரு ரஞ்சிதம்.   பஞ்சம் பொழக்க வந்தவன். சேலம் போற வழில  ஒரு டவுனு  அதான் தலவாசல்.  அதுக்கும் பக்கத்துல தியாகனூர்னு பெரிய ஊர் இருக்குது. அந்த ஊர்க் காரன்.  செத்த குள்ளமா இருக்குறது அடுத்தவன்.  அவன் பேரு குஞ்சிதம் நம்ம  காலனியில வண்ணான் வேல பாக்குறான். அவன் அப்பன உங்களுக்கு நல்லா தெரியும்’

‘ ஏகாலி கூழு மொவனா. கூழு தானடா உங்க அப்பா. நா பாத்து இருக்கன்.  எனக்கு நல்லா பழக்கம். மதுரவல்லி  ஏரி மோட்டுல வெள்ளாவி வைப்பாரு. வெள்ளாவின்னா இப்ப யாருக்கும் விளாங்காது. ஒழ மண்ணுன்னா  எங்க புரியும். அந்த மண்ணுதான் சோப்பு. அத  வெந்நீருல கொதிக்கக்கவுடுவாங்க. அந்த மண் பானையிலேந்து  வெள்ள ஆவி வரும். அதுல அழுக்கு துணி வுள ஒண்ணு மேல ஒண்ணு  அடுக்கி சுத்தப்படுத்துவாங்க. மதுரவல்லி  கூழுதான் நம்ம  காலனி ஏகாலி. அவர எனக்கு நல்ல பழக்கம்’ என்றார் செல்லமுத்து.

மதுரவல்லியிலிருந்து வந்திருந்த நால்வரும் செல்லமுத்துவுக்கு வணக்கம் சொல்லிப்புறப்பட்டனர்.

ஏட்டு வீர நடை போட்டு வந்த காரியம் முடிந்ததாய் டாக் டாக் என்று நடந்தார்.

அவர்கள் நடந்து செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த செல்லமுத்து

‘பரவாயில்ல  நம்ம சனத்துக்கு கொஞ்சம் விஷயம் புரிய ஆரம்பிச்சி இருக்கு. இன்னார  பாக்கலாம். இன்னாரு இன்னது செய்வாருன்னாவது தெரியுதே அதே பெரிசுதான்’ சொல்லி அலுவலத்திற்குள் நுழைந்து கொண்டார்.

டூட்டி முடிந்தது. சந்திரனும் செல்லமுத்துவும் கிளம்பினார்கள்.

‘ நா மெஸ்ல சாப்பிட்டு வந்துடறன்’

‘ நா சைக்கிள மெதுவா உருட்டிகிட்டு போறன் நீங்க வாங்க’

‘ சார பாக்க காலையில யாரோ வந்தாங்க போல’

‘மதுரவல்லி ஆளுங்கதான்.  உங்க கிட்ட சொல்லாமலா பெறகு நா  செல்வராஜு பார்க்குல  அந்த விவரம் எல்லாம் சொல்லுறன்’

‘ நாம அங்க எப்பவும் போல  கூடுறம் பேசுறம்’

‘ அதே எடம்தான். சந்திரன்  நா போயிட்டு இருக்குறன். நீங்க வந்து சேருங்க என்ன’

செல்லமுத்து கடைத்தெரு பக்கமாகச்சென்றுகொண்டிருந்தார்.

சந்திரன் மெஸ்ஸுக்கு ச்சென்று மதிய உணவு சாப்பிட்டான். எப்போதும் அவசர அவசரமாய்த்தான் சாப்பிடுவான். அதுவே அவனுக்கு ப்பழகியும்விட்டது. டூட்டிக்கு  பஸ்  பிடிப்பது என்பதுவே பெரிய வேலை. ஆக சாப்பாடு எப்போதும் அவசர கதியில்தான். மெஸ்ஸில் நண்பர்கள் மாத்ருபூதமும் ரகு நாதனும் உணவு சாப்பிட நுழைந்துகொண்டிருந்தார்கள்.

‘ நாங்க லேட்’

‘லெட்டுன்னா சாம்பார் ரசம் மொர் எல்லாம் நீர்க்கத்தான் வரும்’

சொல்லிவிட்டு சந்திரன் மெஸ் மாமி மாமா  அருகில் இருக்கிறார்களா என்று பார்த்துக்கொண்டான்.

‘செவுத்துகும் காது கேக்கும்’

மாத்ரு சொல்லி நிறுத்தினார்.

‘ அந்த செல்லமுத்து சாரோட நீங்க  ஒரு நாள் அந்த  கிராமத்துக்கு போன கத  இன்னும் சொல்லல’

ரகு ஆரம்பித்தார்.

‘ இன்னொரு நாளக்கி அத  வச்சிகலாம்’

‘ அண்ணிக்கி விட்டம்னா எதுவும் அப்புறம் அப்புறம்னு போயிண்டே இருக்கும்’

‘ சார் வெயிட் பண்ணுவார். நா வரேன். நேரமாச்சு’

‘ எந்த சார் வெயிட் பண்றார்’ மாத்ரு கேள்வி கேட்டார்.

‘சந்திரன் சார்னா அது ஒரே சார்தான், அது தெரியாதா’

‘அதே சார்தான்’ சந்திரன் சொல்லிக்கொண்டே மணிமுத்தாற்றை நோக்கி நடந்தான். நல்ல வெயில். ஆற்றில் அனல் வீசிக்கொண்டிருந்தது. மணல் நெருப்பாகச்சுட்டது. காலில் போட்ட செறுப்பு சூடாகி பாதத்தை ச்சுட்டு க்கொண்டிருந்தது.

காலையில் ஊற்று  தண்ணீர் வீணாகிவிடக்கூடாது என்று சண்டை போட்ட அதே ஆள் இன்னும்  அந்த ஊற்றின் கரையில்  வேலிகாத்தான் முள்ளைக்கச்சிதமாக  நறுக்கி படல் கட்டி வைத்துக்கொண்டிருந்தான்.

சந்திரன் வேக வேகமாக நடந்தான். பாலக்கரை ஏறி செல்வராஜு பூங்கா வந்து  சேர்ந்தான். சிமெண்ட் பெஞ்சொன்றில்  செல்லமுத்து சந்திரன் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தார்.

‘ சார் வந்துட்டேன்’

செல்லமுத்து புன்னகை செய்தார்.

‘ இண்ணைக்கு உங்க மதுரவல்லி ஊர்க்காரங்க  உங்கள பாக்க வந்தாங்களே, என்ன சமாச்சாரம் சார்’

‘அது தானே நா முக்கியமா சொல்லுணும்’

‘ சொல்லுங்க சார்’

‘ மதுரவல்லி கிராம க்காலனியில ஒரு நொண்டி முனி சாமி கோவிலு கட்டியிருக்காங்க. அதுக்கு குட முழுக்கு பண்ணணும். அந்த பொறுப்ப எங்கிட்ட ஒப்படைச்சிட்டு போயி இருக்காங்க’

‘ நீங்க என்ன என்ன செய்யிணும்;

  குட மொழுக்கு செய்ய நாளு நடசத்திரம் பாத்துட்டு பெறகு  மஞ்ச சிவப்பு பத்திரிகை அடிக்கணும். அய்யிருவ ஏற்பாடு செய்யிணும். அங்க கோவிலுக்கு குட முழுக்கு சமாச்சாரம் முடிக்கணும்’

‘ நல்ல காரியம்தான்’

‘ நாளு நட்சத்திரம் பாக்குறது  அது நீங்கதான் செய்யிணும். அந்த நாளு தேதி நேரத்த குறிச்சிகிட்டு வந்து குடுங்க நா முதுகுன்றத்துல  எனக்கு . தெரிஞ்ச பிரஸ்ல குடுத்து பத்திரிகை அடிச்சிகிறன். கலசத்துல தண்ணி ஊத்துற அந்த காரியத்தையும் நீங்கதான்  முடிச்சி கொடுக்கணும்’

‘ குடமுழுக்குக்கு   நாளு நட்சத்திரம்  எல்லாம்  அப்பா பாத்து குடுத்துடுவாரு. நா அத  ஒரு சீட்டுல குறிச்சி வாங்கிகிட்டு வந்துடுவன்’

‘ அப்புறம் கும்பாபிஷேகத்துக்கு அய்யிரு அமத்துணும். அத உங்க அப்பாகிட்ட யோசனை கேளுங்க’

‘ கோவிலு காரியம் அப்பா செய்யறது இல்ல’

‘என்ன சந்திரன் சொல்றீங்க’

‘ அதுக்கு சிவாச்சாரியார்னு இருக்காங்க. அவுங்கதான் செய்யிணும்’

‘தருமங்குடியில எப்பிடி’

‘ எங்கயும் அப்பிடிதான்’

‘’ சாமிகிட்ட நீங்க போறது  விக்கிரகத்தை தொடறது எல்லாம்’

‘அது எல்லாம் முடியவே  முடியாது அனுமதிக்க மாட்டாங்க’

‘ உங்க ஊர் சிவன்கோவிலு  அய்யிரு  சாமி நாத சிவாச்சாரியாரகிட்ட போயி ஒரு  யோசனை கேளுங்க அவுரு ஏதும் சொல்லுவாரு.. நா  தருமங்குடி வந்த அண்ணிக்கி அய்யாவ  பாத்தேனே அந்த அய்யிரு உதவி செய்வாருன்னு நினைக்கிறன்’

சந்திரன் யோசனை செய்தான். செல்லமுத்து சார் சரியாகச்சொல்வதாகவே அவனுக்கும் தோன்றியது.

‘ இனி இந்த பொறுப்பு உங்களோடது’ சிரித்துக்கொண்டே சொன்னார் செல்லமுத்து.

‘ நிச்சயமா சார். நா இதுல உங்களோடவே இருப்பேன்’

‘ அப்புறம் என்ன காரியம் நல்லபடியா முடிஞ்சிடும்’

அவர்கள் இருவரும் அமர்ந்திருந்த சிமெண்ட் பெஞ்ச் இன்று சற்று சூடாகவே இருந்தது. சந்திரன் சற்று நெளிந்து கொண்டிருந்தான்.

‘ ரொம்ப சுடுதா’

இருவரும் எழுந்து வேறு இடம் தேடினர்.  ஒரு செம்பருத்திச்செடி நிழலில் கிடந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து கொண்டனர்.

சந்திரன்,  தருமங்குடி கிருஷ்ணன் தன்னிடம் படித்ததையும் அவன் தாத்தா சேத்தியாதோப்பு பள்ளியில்  அவனைச்சேர்த்ததையும் அவன் படிப்பை நிறுத்திவிட்டு ஊர் சுற்றி வந்து கொண்டிருந்ததையும் செல்லமுத்துவிடம் சொன்னான்.

‘ அவன் நல்லா படிக்குற பையனா’

‘ ஆமாம் சார்’

‘ எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. அவனை தருமங்குடி ஸ்கூல்லயே இப்ப சேத்து விட்டேன்.’

‘ அவன சேத்தியாதோப்புல ஏன் சேத்தாங்க’

‘ தருமங்குடி ஸ்கூலு காலனில இருந்துது. அங்க அனுப்ப மனசு ஒப்புல’

‘ எப்ப திருந்துவாங்க இவுங்க’

‘ பையனுக்கு ரெண்டு வருசம் படிப்பு போச்சி. இப்ப தருமங்குடி ஸ்கூல்லயே சேத்தாச்சி’

‘ நீங்க சேத்து விட்டு இருக்கிங்க’

‘ பையன கேட்டேன் நா எங்க சேத்துவிட்டாலும் மேல்கொண்டு படிக்குறேன்னு என்கிட்ட  உறுதியா  சொன்னான்’

‘ தாத்தா’

‘ தாத்தாதான் டீ சி வாங்க சேத்தியாதோப்பு ஸ்கூலுக்கு  என்னோட வந்தாரு. பையன் வரமாட்டேன்னு சொல்லிட்டான். அப்புறம்  அவன கூட்டிகினு  தருமங்குடி ஹை ஸ்கூலுக்கு  போனம்.  தாத்தாதான் கார்டியன் அவுனுக்கு.  அப்பா இல்லாத பிள்ள,  அவன் அம்மாவும் படிக்காதது’

  தருமங்குடி ஸ்கூலுக்கு உங்களோட  வந்தானே அது பெரிய சமாச்சாரம். ஒரு  நல்ல காரியம் செய்தீங்க மகிழ்ச்சி சமூகம் அவ்வளவுக்கு சாதிச்  சகதியில  இறுகிப்போய் கெடக்குது’

  இது எல்லாம்  எப்ப சரியாகும்  அதுக்கு இன்னும் எத்தினி காலம் பிடிக்கும்னு சொல்லமுடியுமா’

‘ கல்விக்கூடங்கள்  மட்டும்தான் இத எல்லாம்  மாத்தும். ஆனா காலம் ஆகும் தான் எவ்வளவு காலம்னு அத எல்லாம் சொல்லமுடியாது  ரவ  அசஞ்சி கொடுக்குதே. அதுவே நமக்கு நம்பிக்க’’ சொல்லி நிறுத்தினார் செல்லமுத்து.

இருவரும்  அந்த பூங்காவைவிட்டு வெளியே வந்தனர். குஞ்சிதம் பஸ் வருகிறதா என ஒரு முறை பார்த்துக்கொண்டான். அது ஒன்றும் கண்ணில் படவில்லை.

‘ நீங்க   வீட்டுக்கு போய்  சாப்டுங்க. உங்க வீட்டுல வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க, நா மெஸ்ல சாப்பிட்டு வந்தவன், நானு பஸ் ஏறிக்குவேன நீங்க போங்க’

செல்லமுத்து சைக்கிளில் ஏறி அமர்ந்து கொண்டார். கடலூர் சாலையில் சைக்கிளை மிதித்துக்கொண்டு போனார்.

‘ என்ன எக்சேஞ்ச் என்ன சேதி’

தருமங்குடி மாடசாமிதான் சந்திரனை வழக்கமாக அப்படி அழைப்பார். சந்திரன் திரும்பிப்பார்த்தான்.

கையில் ஏகப்பட்ட சாமான்களோடு மாடசாமி நின்று கொண்டிருந்தார். தலைமுடி தலையை நிறைத்துக்கொண்டிருந்தது. தாடி விட்டிருந்தார்,

‘ ரொம்ப நாளா தாடியோட இருக்குறீங்க’

‘ யாரும் இண்ணவரைக்கும் இப்படி கேட்டது இல்ல’

‘ நானும் நினைச்சிப்பேன்  ஆனா கேக்குல, இண்ணைக்கு அத  கேட்டுபுட்டன்’

‘ஒரு வேண்டுதல’

‘ அது என்னவோ’

‘ சொல்லக்கூடாது  நினச்ச காரியம் ஆவுணும். அப்புறம் பேசிக்கலாம்’

குஞ்சிதம் பஸ் வந்து கொண்டிருந்தது.

‘ ஆரு உங்கிட்டபேசிகினு இருந்துட்டு போனது’

‘ எங்க ஆபிசருதான்’

‘ அண்ணிக்கு தருமங்குடிக்கு வந்தாரே  ஒரு பசு மாடு கண்ணு போட்டுருக்குன்னு சொல்லிகிட்டு’

‘ அவரே தான்’

‘ எங்கயோ பாத்த மாதிரிக்கும் இருக்கு பாக்காத மாதிரியும் தெரிது’

‘ நீங்க அண்ணிக்கு அவுர பாத்திங்க பேசுனீங்க’

‘ பசு மாட்டதான்  கோட்ட விட்டுபுட்டன். அஞ்சாபுலி கொண்டு போயிட்டான்’

இருவரும் குஞ்சிதம் பஸ்ஸில் ஏறிக்கொண்டார்கள். இருவர் அமரும்  இருக்கையொன்று காலியாகக்கிடந்தது. அதனில் அமர்ந்து கொண்டார்கள்.

‘பலான ஆளுதானே அவுரு’

‘ அதெல்லாம் நா கேட்டுகறது இல்ல’  மாடசாமி எந்த விஷயத்திற்கு வருகிறார் என்பது சந்திரனுக்குச்  சட்டென விளங்கியது.

‘ நீம்புரு ரொம்ப யோக்கியரு’

சந்திரன் எதுவும் பேசாமல்  அமைதியாக இருந்தான்.

மனிதர்கள் அடுத்தவன் என்ன இனம் என்பதை அறிந்துகொண்டுவிட ஏனோ இப்படி துடியாய் துடிக்கிறார்கள். அதனை அறிந்து கொள்வதால் நன்மை ஒன்றும் விளைந்துவிடப்போவதில்லை.

கண்டக்டர் அவர்கள் அருகே வந்து நின்றார்.

‘ யாரு சீட்டு’

‘ ரெண்டு தருமங்குடி’ மாடசாமி சொல்லி முடித்தார்.

‘ நா வாங்குறேன்’

‘ ஏறுனது  நாம ரெண்டு பேரு. இதுல தனி தனியா சீட்டு வாங்குணுமா’

‘ என் சீட்டயாவது நா வாங்கிகிறேன்’

‘’ வார்த்தய  சுருக்கி பேசுணும், எப்பவும்  பழசு நெனப்புல இருக்கணும்’

‘ உங்களுக்கு ஏன் செருமம்னுதான் சொன்னேன் வேற எதுவுமில்ல’

‘ இது ஒரு செருமம்னா அப்புறம்  நா என்னா சொல்றது’

கண்டக்டர் மாடசாமியிடமிருந்து காசு பெற்றுக்கொண்டு தருமங்குடிக்கு ரெண்டு சீட்டு கொடுத்துவிட்டு சென்றார்.

‘ நீங்கதான்  தெனம்  சீட்டு வாங்குறீங்க அவுங்க எப்பவாவுதுதான வர்ராங்க’’ சந்திரனைப்பார்த்து கண்டக்டர் சொல்லிக்கொண்டார்.

‘ சரியா சொன்னீங்க கண்டக்டர். அதான் சரி’  என்று கண்டகடர் சொல்வதை  மாடசாமி ஆமோதித்தார்.

‘ஒங்கிட்ட ஒண்ணு கேக்குணும் எக்சேஞ்சு’

‘கேளுங்க நா சொல்லுறேன்’

‘அது சேதுவராயர் பேரன தருமங்குடி ஹைஸ்கூல்ல கொண்டுபோயி சேத்துவுட்டீராமே’

‘ அந்த  கிருஷ்ணன் பள்ளிக்கூடம் போகாம வீணாபோயிட்டு இருந்தான். நல்லா படிக்குற பையன். அவுனுக்கு சேத்தியாதோப்பு பள்ளிக்கூடம் சரியா வருல. வேற எங்க சேத்தாலும் நா படிக்குறேன்னு எங்கிட்ட அவனேதான்  சொன்னான். அவுங்க அம்மா ரொம்ப வருத்தத்துல இருந்தாங்க. அவன்  தாத்தாவும்தான். நா டூஷன் சொல்லிகுடுத்த பையன் தானே அவன். தகப்பனில்லாதவன் அவுனுக்கு ஒதவுணும்னு தோணிச்சி’

‘ எப்பவும் பேசறது மாத்ரம் சட்டமா  பேசுறீரு’

‘ இதுல வேற ஒண்ணும் இல்லயா’

‘ எனக்கு தெரியில’

‘ என்ன தெரியில. ஊருல ஒரு ஸ்கூலு இருக்கவே அசலூர்ல கொண்டு போயி  அந்த சேதுவராயர்  தான் அவரு பேரன சேத்தாரு‘ அப்ப நீரு எங்க போனீரு’

‘ ஆனா  படிப்ப  பாதியில வுட்டுட்டானே அதனாலதான் நான்  உதவுணும்னு போனேன்’

‘ நா கேட்டது என்னா நீ வதிலு சொல்றது என்ன’

‘அவன் அங்கயே படிச்சிட்டு அப்பிடியே  முடிச்சிட்டு நல்லபடியா வந்து இருந்தா நா இத பத்தி எதுக்கு பேசறேன்’

‘ அப்ப ஒன் வேலதான் இது’

‘ நீங்க தப்பா பேசுறீங்கன்னு தோணுது’

‘ எங்களுக்கு ஒண்ணுமே தெரியாது  நீருதான் வெளிச்சம் காட்டுறீரு’

சந்திரன் எதுவும் பேசாமல் இருந்தான்.

‘ பசு மாடு ஓட்டிகிணு போக நம்மூருக்கு வந்த  உங்க  ஆபிசு ஆள அக்கிரகாரத்து நடு  ஊட்டுல குந்த வச்சி சோறு போட்ட.   அவர  நம்மூர் செவன் கோவிலுக்கு போவ வச்ச  அங்கயும்  தீவார்த்தன காட்ட வச்சி  மரியாத எல்லாம் பண்ணின. கறக்குற பசு மாட்ட நோவாம அந்த காலனிகார அஞ்சாபுலிக்கு  காசு கீசு வாங்காம சும்மா புடிச்சிகுடுத்த’

‘ நா தப்பா கிப்பா எதுவும் செய்யில.’

‘ வாயில வெரல வச்சா கடிப்பியா மாட்டியா’

மாடசாமி ஏதோ கோபத்தில் இருப்பதை சந்திரன் உணர்ந்துகொண்டான்.  இனி இவரிடம் பேசி ப்பயன் எதுவுமில்லை என்பதறிந்தான்.

‘தருமங்குடி எறங்கு’

கண்டக்டர் விசில் அடித்து நிறுத்தினார். இருவரும் ஒருவர் பின் ஒருவராக பேருந்திலிருந்து இறங்கி செம்மண் பாதையில் நடந்தனர்.

ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக்கொள்ளவேயில்லை.

 எந்த தீய நோக்கமும் இல்லாமல் செய்யப்பட்ட காரியங்கள் எப்படி வேறு வேறு  உருவங்களை எடுத்துக்கொள்கின்றன. தான் எதிரே பார்க்காமல் எப்படி  அவற்றிர்க்கு  பலப்பல   வர்ணங்கள் பூசப்படுகின்றன.  சந்திரனின் அம்மாதான்  அவனிடம் சொல்லிக்கொண்டு இருப்பார்  ‘ நாம் தாயே என்று ஒருவரை  அழைத்தால் அவர்கள் காதில் நாயே’ என்று விழுமாம். அவர்கள் நம்மிடம்  பிலு பிலு என்று சண்டைக்கு வருவார்களாம் என்று அந்தக்கதையாகத்தான் இருக்கிறது. இப்படியே சிந்தித்துக்கொண்டு சந்திரன் தன் வீடு நோக்கி நடந்தான். செல்லமுத்து சார் அவனிடம்  மதுரவல்லி குடமுழுக்கு விழாவுக்கு நாள் குறித்து வரச்சொன்னது அடிக்கடி நினைவுக்கு வந்து போனது. மாடசாமி  பேருந்தில் அவனோடு பேசிய  விஷயம் குறித்து அவனது பெற்றோர்களிடம்  விவாதிக்க வேண்டும் என்றும் முடிவு செய்துகொண்டான்.

எதிரே அஞ்சாபுலி  நடந்து வந்துகொண்டிருந்தான். சந்திரன் அவனை எதிர்பார்க்கவுமில்லை.

‘ அய்யா’

‘யாரு அஞ்சாபுலியா’

‘ ஆமாங்க அய்யா’

‘ என்ன சேதி ‘

‘ நல்ல சேதிதான்’

  பசு மாடு எப்பிடி கறக்குது  பால என்ன பண்றீரு’

‘ நா வளையமாதேவி எடுத்துகுனுபோயி டீ கடையில  அதான் அந்த கூடலூராருகிட்ட போடுறன் காசு குடுக்குறாரு. தங்கமான மனுசன். அவுரு குடுத்த ரூவாயில  ஐநூரு ரூவா சேத்து வச்சி இருக்கன் அதயும் இங்க  எடுத்துகினு வந்து இருக்கன். நீங்க  எப்பவுமே இந்த  செதம்பரம் போற குஞ்சிதம் பஸ்ல தான வருவீங்க   ஆக நேரா உங்கள பாக்குலாம் பணத்த  குடுத்துட்டு போலாம்னு கெளம்பி வந்தன். இந்த பணத்த அப்பிடியே  அந்த அய்யாகிட்ட சேத்துடுங்க. அவுரு எதானா கேட்டாரா, சாரு  நல்லா இருக்குறாரா. அவுரு சேஞ்சது பெரிய ஒதவி. எனக்கு  இப்ப வூட்டுல ஒரு பசு மாடு ஒரு   காள கண்ணு ஆயிடுச்சி. எனக்கும் எம்பொண்டாட்டி சாரதத்துக்கும் ஒரு வேல குடுத்த மாதிரியும் இருக்கு  கெடக்கிற  பாலு காசு கை செலவுக்கும் ஆவுது. இந்தாங்க ஐநூறு ரூவா. பத்திரம் எண்ணிக்குங்க.  எதுலயும் கணக்கு  கணக்கா இருக்கணும்.  தாயும் புள்ளயும்னு ஆனாலும் வாயும் வயிறும்  வேற வேறல்ல’

சந்திரன் பணத்தை அப்பிடியே வாங்கிச் சட்டைப்பையில் வைத்துக்கொண்டான்.

  பணத்த எண்ணி புட்டு பாக்கெட்டுல வக்கலாம்’

சந்திரன் லேசாக புன்னகை செய்தான்

‘ யாரு யாரு  கொடுக்குறத நாம  எண்ணி பாக்குணும்னு இருக்கு’

மாடசாமி   மணிபிள்ளை மோட்டார் கொட்டகையிலிருந்து வெளியே வந்து அஞ்சாபுலியும் சந்திரனும் சந்தித்துக்கொள்வதைக்கவனித்தார். மோட்டார் ஓடிக்கொண்டிருந்தது. தாகத்திற்கு த்தண்ணீர் குடித்துவிட்டு அவர் வந்திருக்கலாம்.

‘ஆரு தாயி  இங்க ,ஆரு புள்ள ஒண்ணும் வெளங்குல’ மாடசாமி சொல்லிக்கொண்டார்.

  ஒரு இதுக்கு சொன்னன்’

‘எதுக்கு அஞ்சாபுலி   நீ சொல்லுணும். சரி அத வுடு எக்சேஞ்ச் ‘அவன்  பணத்த  உம்ம கையில குடுக்குறான். அத அப்பிடியே வாங்கிகிறீரு. அப்புறம் இதுல என்னா இருக்கு’

‘ பெறகு எப்பிடி பணத்த வாங்குறது’

  அஞ்சாபுலி  மண் ரோட்டுல  அந்த  பணத்த  வச்சா அத  நீரு எடுத்துகலாம்ல.  ஊருல  தெருவுல  வழங்குற மொற என்னா. ஒப்பா இப்பிடி அஞ்சாபுலிகிட்டேந்து பணத்த  வாங்கிகுவாரா’

அஞ்சாபுலி அமைதியாக நின்றான்.

‘ ஏண்டா அஞ்சாபுலி உனக்கு  ரவ சுதி மதி இருக்கா. அப்பிடியே கைய தொட்டு  நொட்டுற’

‘ நீங்க பொசுக்குன்னு  இங்க வருவீங்கன்னு  எனக்கு தெரியாது’

‘ அரிச்சந்திரனாட்டமே  நீ பேசுற  அஞ்சாபுலி. உம்மேல குத்தமில்ல.’

‘ ஆண்ட   அரிச்சந்திரன கண்டிங்களா’

மாடசாமி அஞ்சாபுலியை முறைத்துப்பார்த்தார்.

‘ சரி அஞ்சாபுலி  நீ குடுத்த   பசுமாட்டு பணத்த  சாரு கிட்ட குடுத்துடுறன். எனக்கும் வேல கெடக்கு அப்புறம் பாக்குலாம்’

சந்திரன் விடைபெற்றுக்கொண்டான்.

‘ அய்யிரு தய்யிரு

ஆட்டுக்குட்டி மய்யிரு’

தரையைப்பார்த்து ச்சொல்லிக்கொண்ட மாடசாமி அந்த  இடத்தைக்காலி செய்தார்.

‘ தெய்வம் ஒண்ணு இருக்குதா, இல்லயான்னுதான் எனக்கும் தெரியில’ அஞ்சாபுலி  மெதுவாகச் சொல்லிக்கொண்டான். அஞ்சாபுலி சொன்னதுதான் யாருக்கும் கேடகவில்லை..

சந்திரன் வெள்ளாழத்தெரு வழியாக தன் வீடு போய்ச்சேர்ந்தான்.

‘ என்ன இப்பதான் வரியா’

‘ ஆமாம் அப்பா’

  மதியம் சாப்பிட்டுதான வர்ர’

‘ ஆமாம் மெஸ்ல சாப்பிட்டுதான் நா வரேன்’

சந்திரனின் தாயார் கூடத்து ஊஞ்சலில் படுத்துக்கொண்டு இருந்தார். கண்களை மூடி மூடி த்திறந்தார்.

‘ காபிக்கு சித்த போலாம் இல்லயா’

‘ஒண்ணும் அர்ஜெண்ட் இல்ல. மெதுவா காபி சாப்பிடலாம்’

‘அப்பா உங்கிட்ட ஒரு சேதி. என்னோட பஸ்ல  மாடசாமி வந்தார். அவுருக்கு எம்மேல கோவமாம். அவரே சொன்னாரே’

சந்திரனின் தாயார் ஊஞ்சலைவிட்டு எழுந்து சந்திரன் அருகில் வந்து நின்றுகொண்டார்.

‘ சொல்லுடா சொல்லு’

  முதுகுன்றத்துலேந்து செல்லமுத்து சார் நம் வீட்டுக்கு வந்து போனது  தருமை நாதர் கோவிலுக்கும்  அவர் போனது, நம் வீட்டு கூடத்துல டிபன் சாப்பிட்டது, அஞ்சாபுலி  செல்லமுத்து சார்  பசு மாட்ட ஓட்டினு போனது எதுவும் புடிக்கல’

‘ ஹா ஹா’ என்று சிரித்தார் சந்திரனின் அப்பா.

‘ என்ன சிரிக்கிறிங்க அப்பா நீங்க’

‘ இது என்னடா புது சேதி. மனுஷாள்னா அப்பிடித்தான் இருப்பா.. இது  எல்லாம் என்ன இண்ணைக்கு நேத்திக்கு சமாச்சாரமா. அவர் உனக்கு ஆபிசர் அவர் உன் வீட்டுக்கு  வறார். அவ்வளவுதான்’

‘ இதெல்லாம் தெரியாதா அந்த   மாடசாமிக்கு’ சந்திரனின் அம்மா தொடர்ந்து கொண்டாள்.

‘ தெரியாம என்ன  இந்த கிராமத்து சம்பிரதாயம் சடங்கெல்லாம் எத்தினி நாளுக்கு ஓடும்னேன். அவன் கெடக்கறான் வுடு’

‘ இன்னொரு சேதியும்  மாடசாமி சொன்னார்’

‘ அது என்ன சேதி’

‘ சேதுவராயர்  பேரன  அந்த  கிருஷ்ணன  நம்ம ஊர் ஹைஸ்கூல்ல கொண்டு போய் சேத்தியே உனக்கு ஏன் இந்த  வேலன்னார்’

‘ இது எல்லாம்  நேக்கு தெரிஞ்ச சமாச்சாரம்தான். உனக்கு வேணுன்னா புதுசா இருக்கும். அந்த காலத்து குப்பைய எல்லாம் இன்னும் கட்டிண்டு அழணுமா என்ன, ஆகாசத்துலல்ல  மனுஷன் பறக்குறான். லண்டன்  அமெரிக்கான்னு போறான். கடவுள்  பரமசிவன் நெத்தில பொற நெலா இருக்கு. அதுக்கும்தான்  ராக்கெட்ல போறான்.  நாறிப்போன  பழச பல்லாக்குல வச்சிண்டு ஊர்கோலம்  இன்னும் போகணுமா என்ன’.

சந்திரனின் அம்மா வாயில்கதவை நன்றாக  மூடிவிட்டு பின் வந்து அதே அந்த இடத்தில் வந்து நின்றுகொண்டார்

‘ சரித்தான். பகல்ல பக்கம் பாத்துபேசணும். ராத்திரில அதுவும் தப்பும்பா. கதவு மூடிதான் இருக்கணும்’

சந்திரனுக்கு க்கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

‘ நீ செஞ்சதுல என்ன தப்பு இருக்கு. உன் மனசாட்சிக்குத்தெரியாதா என்ன. வுடு. பாத்துகலாம்’

சந்திரனின் தாயாருக்கும் நிறைவாகத்தான் இருந்தது.

‘ அஞ்சாபுலி ஐநூறு ரூவா குடுத்தான் அந்த பசு மாட்டுக்கு வெலயா. அத அவரண்ட சேக்கணும்’

‘ வழில வரும்போது  பாத்தியோ’

‘’ ஆமாம் அவன் என் கையில பணத்த குடுத்தத  மாடசாமி பாத்துட்டு. உங்கப்ப இப்பிடி செய்வாரான்னு அவன் மின்னாடியே கேட்டார்’

‘ நீ என்ன சொன்ன’

‘ நா ஓண்ணுமே சொல்லல’

‘ அஞ்சாபுலி’

‘ நீங்க வருவீங்கன்னு எனக்கு  தெரியாதுன்னு  அஞ்சாபுலி சொன்னான்’

’ஹா ஹா’ என சிரித்துக்கொண்டார் சந்திரனின் தந்தை.

‘ விவரமாத்தான் இருக்கான் அஞ்சாபுலி’  சந்திரனின் தாய் சொல்லிக்கொண்டார்.

‘ நம்மள உலகம் பாத்துண்டே தான் இருக்கும். நாம நிதானமா இருக்கணும். சாமிக்கு கட்டுபட்டு இருக்கணும். பொய்யும் வேண்டாம் பித்தலாட்டமும் வேண்டாம். மனசாட்சியோட இருக்கணும்’

‘ அப்பிடி நீங்க இருக்கேளா’

‘ வேண்டாம் அத பேசாதடா. எனக்கு  வயிறு இருக்கு  பசிக்கறது. எங்கப்பா  எனக்கு .என்ன சொன்னாரோ அத  நா செய்யறேன். அவர் தாத்தா அவுருக்குச் சொன்னது அது. இப்பிடியே போகுண்டா  நீளமா அந்தக் கதை. உனக்கு இந்தப்பாவம்  எல்லாம் வேண்டாம்.   தர்மாம்பா உனக்கு வேற  நல்ல வழிய  காட்டியிருக்காளே அதுபோதும் எனக்கு’

சந்திரனின் அம்மா சுவாமி பிறையை ஒருமுறை பார்த்துக்கொண்டாள். சந்திரன் அதனையும் கவனத்தில் கொண்டான்.

‘அப்பா இன்னும் ஒரு சமாஜாரம் உங்கிட்ட’

‘குண்டு குண்டா தூக்கி போடறயே நீ’

‘ இல்லப்பா, மதுரவல்லின்னு ஒரு கிராமம். அதுதான் செல்லமுத்து சாரோட சொந்த ஊரு. அங்க ஒரு கும்பாபிஷேகம். அதுக்கு நாள் பாத்து நட்சத்திரம் பாத்து வைக்கணும். அத பாரு   குறிச்சி குடு  எடுத்துண்டு போகணும்’

‘தேவலயே இப்படியும் உண்டா, கோவில் குளம்னு  நீங்கள் போறேளா என்ன’

‘ ஏம்பா அந்த ஊர்லயே கொஞ்ச நாள் முன்னாடி சாமி பொறப்பாடுன்னு நாங்க ரெண்டுபேரும் போயிட்டு வந்தமே’

‘ பேஷ் பேஷ் அந்த க்கதய சொல்றயா. அப்படியே  நீங்க ரெண்டு பேரும் பக்திமானா போயிட்டு வந்தேளாக்கும். சும்மா என்ன அங்க  நடக்கறதுன்னு ஆராய்ச்சி பண்ணி கொற நெறனு எதாவது பாக்க போயிருப்பேள்’

‘ சரியா சொன்னேள். அங்க போயிட்டு வந்தது எல்லாம் விஷயம் என்னன்னு தெரிஞ்சிகணும்னுட்டுதான். ஸ்வாமி  பக்தில இவா போறாளா’

‘ அப்பாவுக்கு மேல இருக்கம்மா நீ’

‘எனக்கு மனசுல  பட்டத சொன்னேன்.  உங்க மொகம் சொல்றதே உங்க உள்ள என்னா இருக்குன்னு’

‘ மொகம் கண்ணாடி மாதிரி ஒருத்தர்  மனசுல என்ன இருக்குன்னு காட்டிடுமா’

‘ ஆமாண்டா அதுல என்ன சந்தேகம்’

‘ சரி வுடு’

’அப்பா எனக்கு கும்பாபிஷேகத்துக்கு நாள் சொல்ற’

‘ பத்திரிக அடிக்கப்போறேளா என்ன’

‘ ஆமாம்  செல்லமுத்து சார் அடிக்கணும்னு சொன்னார்’

‘ நா  தேதிய நேரத்த குறிச்சி தரேன். அத எடுத்துண்டு போயி அவரண்ட குடு’

‘ சரி தேதிய பாரு நீ’

‘ இப்ப  நா என்ன பண்ணிண்டு இருக்கன். அதான் பாக்கறேன்.கும்பாபிஷேகத்துக்கு நாள் பாக்கறதுன்னா சும்மாவா’

சந்திரன் சிரித்துக்கொண்டான்.

‘ என்னடா சிரிப்பு’

‘ என்னமோ கோடாலி எடுத்துண்டு விறகு பொளக்கற வேலயா அது’

‘ டேய் இப்பிடி எல்லாம்   கொழந்த மாதிரி பேசக்கூடாது எதுக்கும் சிரத்தை வேணும். லேசுபட்ட சமாஜாரம் இல்ல.  தெய்வம்னா நூறு பேருக்கு   நம்பிக்க இருக்கு. அவா அவாளோட  மனசு இருக்கு. அத அனுசரிக்கணும். எடுத்தேன் கவுத்தேன்னு பேசாதே’

‘ நா வாய தொறக்கல நீ நாள பாரு’

‘ ஆடி மாசம் ஒண்ணும் பண்ண வைக்காது. ஆவணி மாசத்துல வளர் பிறையா பாத்து  நல்ல நாளா மேல் நோக்கு நாளா பாத்து வைக்கணும்’

‘பாருங்கோ’

‘ நா குறிச்சி வக்கறேன் நாளைக்கு காலம்பற நீ ஆபிசுக்கு பொறப்படும்போது அது  உன் கையில இருக்கும். நீ கவல படாதே’

‘ சாப்பிடலாம் டிபன் ரெடியா இருக்கு. ‘ அம்மா சொல்லி  நிறுத்தினாள்.

‘ அதுக்குள்ள சாபிடற நேரம் வந்துட்தா என்ன’

‘ ‘ஊரு கத உலகத்து கத பேசினா நேரம் போறது தெரியுமா என்ன’

அம்மா சொல்லி முடித்தாள்.

மூவரும் சாப்பிட்டு முடித்தனர். சந்திரன்  ரேடியோவை வைத்து ஏதோ  ஸ்டேஷனுக்காக திருகிக்கொண்டு இருந்தான். ஆங்கிலத்தில் செய்திகள் கேட்பான். சினிமாவில் பழைய பாட்டுக்கள் கேட்பான். எப்போதும் திருச்சி வானொலி நிலையம் மட்டுமே தருமங்குடியில் கேட்கிற மாதிரிக்கு இருந்தது. அம்மா அடுப்பங்கரையில் நாளை டிபனுக்கு த்தயார் செய்துகொண்டு இருந்தாள். அப்பா பாம்பு பஞ்சாங்கத்தோடும்  காகித பென் சிலோடும் நாள் குறிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்.

                                                        18.

 முதுகுன்றம் பாலக்கரை இறக்கத்தில் இறங்கி கடைத்தெரு வழியாகப்போகலாமா இல்லை ஆற்றில் இறங்கிப்போகலாமா என சந்திரன் சற்று யோசித்தான்.

‘ சந்திரன் சந்திரன்’

யாரோ அவனைக்கூப்பிடும் ஒலி கேட்டது. இந்த விடியற்காலையில் டூட்டிக்கு வருபவர்கள் பிசியாக இருப்பார்கள். இது யார் தன் பெயர் சொல்லி அழைப்பது என குரல் வரும் திசை நோக்கிப்பார்த்தான்.

மாத்ருவும் ரகு நாதனும் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களோடு மூன்றாவதாக யாரோ நிற்கிறார்கள். அது யாரென்று தெரியவில்லை.

‘என்னப்பா இது நீங்க இங்க வந்து நிக்கறிங்க’ அவர்களை நோக்கி நடந்தான். அவர்கள்

 மூவரும் அவனை நோக்கி நடந்து வந்தார்கள்.

‘ நாங்க மூணு பேரும் காபி சாப்பிடகெளம்பினம். உன்ன பாத்து சில செய்திகள் சொல்லி ஆகணும்னு முடிவு. உன்னோடவே காபியும் சாப்பிடலாம்னு பாலக்கரைக்கு வந்துட்டம்’

‘ இவரை தெரியுதா சந்திரன்’ மாத்ரு கேட்டார்.

‘’ஏன் தெரியாம என்ன. மணா மகேந்திரன்னு பேரு. போஸ்டாபீசுல கிளார்க்கா இருக்கார். ஹெட் போச்டாபிசுல. என் ஊருக்கு பக்கத்து ஊரு.வளையமாதேவி.’

‘வணக்கம் சார்’ என்றான் மணா.

சந்திரன் மணாவுக்கு வணக்கம் சொன்னான்.

 ரகு நேராக விஷயத்துக்கு வந்தார்.

‘ மணா போஸ்டாபிசுல ஒர்க் பண்ற ஒரு பொண்ண லவ் பண்றார்’

‘ அந்த பொண்ணும் இவர லவ் பண்றா’ மாத்ரு குறுக்கே புகுந்து பேசினார்.

‘ அந்த பொண்ணுக்கு மஞ்சகுப்பம். அவா அய்யங்கார்’  ரகு அவ்வளவுதான் சொன்னார்.

‘வட கலை தெங்கலையா’

‘ எதா இருந்தா என்ன’ சந்திரன் மாத்ருவுக்கு ப்பதில் சொன்னார். இது  மாத்ருவின் கேள்விக்கு பதிலா என்றால் இல்லைதான்.

‘ அது அதுலயும்  ஒரு விஷயம் இருக்குதான்’ மாத்ரு தொடர்ந்துகொண்டார்.

‘ வட கலை தென்கலை அது இப்ப  நம்ம சமாச்சாரம் இல்ல’ ரகு முடித்துவைத்தார்.

‘ ரகு, மணா அப்பாவயே எனக்கு தெரியும்.  மணா என்ன விட நாலு கிளாஸ் கீழ  படிச்சிண்டு இருந்தான். நாங்க ரெண்டு பேரும் படிச்சது எலிமெண்ட்ரி ஸ்கூல் ஒண்ணுதான் வள்ளலார் ஹையர் எலிமெண்ட்ரி அந்த வளையமாதேவி மேல் பாதிம்பா அங்க அது இருந்துது’

‘ சாரு எனக்கு சீனியர்’

‘ மணா  இப்ப நீர் சீனியர் ஆகி இருக்கீர்’ சந்திரன் சொல்லி ச்சிரித்தான்.

‘ இதுல என்ன விஷயம் இருக்கு சொல்லுங்க’

‘ சந்திரன் அந்த பொண்ணு அய்யங்கார்’

‘ அது வட கலை வேற’ மாத்ரு திரும்பவும் சொன்னார்.

‘கஜாவோட அப்பா அம்மா என்ன பண்றாங்க’

‘ ரெண்டு பேருமே ஸ்கூல் வாத்யாருங்க. கடலூர் முனிசிபல் ஸ்கூல்ல வர்க்பண்றாங்க. இது மொத பொண்ணு. ரெண்டாவது பொண்ணு காலேஜ் படிக்குது. பையன் அடுத்தவன் ஹைஸ்கூல்ல படிக்குறான்’‘மணா குழப்பத்தில் இருந்தார். அவரே ஆரம்பித்தார்.

‘ நாங்க செம்படவங்க. அப்பா சைக்கிள்ள கூட வச்சி  மீன் விக்கிறது நீங்களே பாத்து இருப்பீங்க’

‘ வீராணம் ஏரி மீனு, வீராணம் ஏரி மீனு’ உங்கப்பா கூவி கூவி விற்றது என் காதுகளில் இன்னும் ஒலிக்கிறதுதான்.

 ‘ அந்தப்பொண்ணு கஜலட்சுமி. கஜான்னு கூப்பிடுறாங்க. அவுங்க பேரண்ட்ஸ்க்கு எங்க லவ் மேட்டர் இன்னும் தெரியாது.  பொண்ணோட அப்பாவும் அம்மாவும் கஜா ஜாதகத்த பல பேருக்கு அனுப்பி  அனுப்பி மாப்பிள்ள தேடுறாங்க. நாங்க ரெண்டு பேரு சின்சியரா ஒத்தர ஒத்தர் லவ் பண்றம்’

‘ இந்த கஜா அவுங்க  வீட்டுல எத்தினியாவது குழந்த’

‘ இது தான் தலச்சன் ஒரு தங்க ஒரு தம்பி இருக்காங்க’

‘ இதுலயும் சிக்கல் இருக்கு,  இது ஒரே பொண்ணுன்னாலும் இந்த பொண்ணுக்கு  அப்புறம்  குடும்பத்துல  வேற யாரும் கல்யாணம் காட்சிக்கு யாரும் இல்லேன்னாலும் நல்லது ஆனா  சுச்சுவேஷன்  அப்படி இல்லயே  தம்பி தங்க இன்னும்  இருக்காங்க. பேரண்ட்ஸ்க்குன்னு கடமைங்க இருக்குது.   ஆனா  நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்க. அப்புறம் பேச ஒண்ணும் இல்ல’

 மணா சந்திரனின் கையைப்பிடித்துக்கொண்டார்.

‘ நீங்கதான் எங்க கல்யாணத்த முடிச்சி வைக்கணும். மொதல்ல ரிஜீஸ்டர் ஆபிசுல கல்யாணத்த முடிச்சிட்டு பெறகு சம்பிரதாயமா ஒரு கோவில்ல கல்யாணத்த நடத்துணும். உங்கப்பாதான எங்க குடும்பத்துக்கு  அய்யிரு அவரே புரோகிதரா இருந்து கல்யாணத்த  நடத்தி முடிக்கணும், நீங்கதான் எனக்கு ஒதவி செய்யணும்’

‘ மணா நீ கவலைப்படாதே. நீங்க லவ் பண்றது மெய். ஆக உங்க கல்யாணத்த நாங்க எல்லோரும் சேந்து நடத்தி வப்போம் கவலய விடு’

சந்திரனின் கைகளை மீண்டும் பிடித்துக்கொண்டான் மணா.

‘ வேல முடிஞ்சிது’ என்றார் மாத்ரு.

‘ வேல  இப்பதான் ஆரம்பிக்குது’ ரகு பட்டென்று சொன்னார்.

‘ குட்டிக்கடை வந்தாச்சி நாம  காபிக்கு போறோம் மாத்ரு ஓங்கிச்சொன்னார்.

குட்டிக்கடை நாராயண அய்யர் காபி ஸ்டாலில் தயாராக இருந்தார்.

‘ நாலு காபி’  நாராயண அய்யரிடம்  சொன்னார் மாத்ரு.

ரகுவும் சந்திரனும் புன்னகைத்தார்கள்.

‘ நாலு காபி வாங்கி நாம மூணு பேரு சாப்பிடறது எல்லாம். இப்ப கெடயாது. அது நாம மூணு பேரு வந்தாதான்’

மாத்ரு சொன்னதை கல்லாவில் அமர்ந்திருந்த குட்டி அய்யர் கவனித்து சிரித்துக்கொண்டார்.

மணாதான் காபிக்கு காசு கொடுத்தான்.

‘ இருக்கட்டும் தப்பில்ல. நல்ல ஆரம்பம்’ ரகு சொல்லி முடித்தார்.

‘ எனக்கு நேரம் ஆறது நா டூட்டிக்கு போறன்’ சந்திரன் விடை பெற்றுக்கொண்டார்,

‘’ மணா கவலய விடுங்க’ சொல்லிவிட்டு சந்திரன் தொலைபேசி நிலையம் நோக்கி நடந்தார்.

‘ மதுரவல்லிக்கு போய் வந்த சமாச்சாரம் பெண்டிங்க் இருக்கு நீங்க இன்னும் சொல்லல’

‘ ஆகட்டும் சொல்றேன்’ சொல்லிக்கொண்டே  பெரிச்சி சந்தில் திரும்பினார்.

‘ எது ஆகணும்’

‘ எல்லாமே  இனிமேதான் ஆகணும்’ சந்திரன் மாத்ருவுக்குப்பதில் சொன்னான். மாத்ரு மணா ரகு மூவரும்  அய்யனார் கோவில் தெருவில் திரும்பி சேக்கிழார் லாட்ஜ்க்கு விரைந்தார்கள்.

சந்திரன் அலுவலகம் சென்று பணியைத்தொடர்ந்தான். செல்லமுத்து சார் முன்னமேயே பணிக்கு வந்திருந்தார்.

‘ என்ன சந்திரன் என்ன விசேஷம்’

‘ வணக்கம் சார். விசேஷம் இல்லாம என்ன. நேற்று நான் டூட்டி முடிஞ்சி ஊருக்குப்போனேன். பஸ்லேந்து இறங்கி மண் சாலையில் நடந்துகொண்டிருந்தேன். அஞ்சாபுலி என்னை எதிர்பார்த்து வந்துகொண்டிருந்தார்.’

‘யாரு அது’

‘உங்க கிட்ட மாடு வாங்கினாரே அவருதான் அஞ்சாபுலி’

’ ஆமாம் அந்த தருமங்குடி அஞ்சாபுலி மறந்தே போனேன்’

‘அவுரு உங்களுக்கு  மாட்டுக்கு பணம் தரணும் அது ஞாபகம் இருக்கா’

‘ இப்பதான் ஞாபகமே வருது’

’ அஞ்சாபுலி ஐநூறு ரூவா கொடுத்து இருக்கிறார். இந்தாங்க சார்’

‘ அஞ்சாபுலிய பாத்திங்கன்னா எனக்கு  இந்த பணம் போதும்னு சொல்லுங்க  என்னோட பசுமாட்டுக்குன்னு  இனி  எதுவும் அவரு அனுப்பவேணாம்’

‘என்ன சார்  கெட கட்டுற அந்த   சந்திரகாசுக்கோனார பாத்து மாட்டு வெலய முடிவு பண்ணி அத  கொஞ்சம் கொஞ்சமா அனுப்பலாம்னு நாம் பேசி இருந்தம்’

‘ அதெல்லாம் உடுங்க.  அஞ்சாபுலி நல்ல மனுஷன் அவருக்கு ஒரு உதவி செஞ்சம்னு இருக்கட்டும்’

  இந்த நல்ல சேதிய அஞ்சாபுலிகிட்ட சொல்லிடுறேன்  இன்னொரு விஷயம் சார். அப்பா குடமுழுக்குக்கு நாள் பாத்து  குறிச்சிகொடுத்து இருக்கிறார் இந்தாங்க சார்’ தன் தந்தை கொடுத்த சீட்டையும் செல்லமுத்துவிடம் கொடுத்தான் சந்திரன்.

செல்லமுத்து சார்  சந்திரன் கொடுத்த அந்த சீட்டைத்தன் சட்டைப்பையில் பத்திரப்படுத்திக்கொண்டார்.

‘மதியம் பேசிக்குவம்’

‘சரிங்க சார்’

சந்திரன் தன் பணியை தொடர்ந்துகொண்டான். செல்லமுத்து தன் இருக்கைக்குப்போய் அமர்ந்துகொண்டார்.

அன்றைய பணி முடிந்து சந்திரன் மெஸ்ஸுக்குப்போனான்.

‘ நான் எப்பவும்  வெயிட் பண்ற எடத்துல இருக்கேன். நீங்க வந்துடுங்க’ சொல்லிய செல்லமுத்து தன் சைக்கிளை உருட்டிக்கொண்டு கடைத்தெரு பக்கமாக ப்போனார்.

மலையாள மாமி மெஸ்ஸில் இன்று மதியம் வித்தியாசமாய் வரைட்டி ரைஸ் போட்டிருந்தார்கள்

‘ என்ன மாமி சாப்பாடு இல்லயா’

‘ இல்ல சந்திரன் இண்ணைக்கு கலவ சாதம். ஒரு மாத்தா இருக்கட்டுமேன்னுட்டு. ஏன் உங்களுக்கு சாப்பாடுதான் வேணுமா’

‘ இல்ல இல்ல மாமி இது புதுசா இருக்கேன்னு கேட்டேன்’

‘ அவியல் பண்ணி இருக்கேன். சிப்ஸ் இருக்கு’

‘ போறும் இதவிட என்னவேணும்’

‘சாப்பாட்டுக்கு என்ன வெலயோ அதேதான் இண்ணைக்கு கலவ சாதத்துக்கும் ஒண்ணும் வெலயில  மாத்தமில்ல .’ என்றார் மெஸ்மாமா.

‘ உங்களுக்கு கைய கடிக்க போகுது’

‘ கடிச்சா கடிக்கட்டும்’

‘அதெல்லாம் ஒண்ணுமில்ல.  வர்ரவா எல்லாம் நம்ப மனுஷா இதில் என்ன இருக்கு ஏதோ ஒரு நாள் ஸ்பெஷலா பண்றம்’ மாமா பேசிக்கொண்டே போனார்.

மாத்ருவும் ரகுவும் மெஸ்ஸுக்குள் நுழைந்துகொண்டிருந்தார்கள்.

‘ இண்ணைக்கு வரைட்டி ரைஸ்’

‘என்ன மாமா புதுசா இருக்கே’

‘ மாத்ரு சாருக்கு புடிக்குமேன்னுதான்’

மெஸ்மாமியும் அந்த உரையாடலில் நுழைந்துகொண்டார்.

‘கலவ சாதம்னா சக்கரைபொங்கல் உண்டா மாமா’

‘ சுவீட் பிரியராச்சே நீர். அதான் அப்பிடி கேக்கறீர். கலவ சாதத்துல சக்கரைபொங்கல எப்பவும்  சேக்கறது இல்ல.  சாதத்த வடிச்சி அதுல கலக்கணும் அப்பதான்  அது கலவ சாதம். பொங்கல்னா  வெங்கலபானைய அடுப்புல வச்சி பொங்கறதாச்சே’

‘ மண் பானைய வச்சி பொங்கல் பொங்கறது இல்லயா’ ரகு தன் பங்குக்கு அதனில் பங்கு கொண்டார்.

  அந்த புண்ட வடையெல்லாம் தனியா  ஒரு பாத்திரத்துல எடுத்து வை. நாம சாப்பிடும்போது வச்சிகலாம். அத சாப்பிட  வர்ரவா யாருக்கும் பரிமார வேண்டாம்’

மலயாள மாமி தன் பெண்ணுக்கு உடைந்த வடைகளைப்பற்றித்தான். கட்டளை தந்தார்.

‘தமிழ் பாஷ சரியா தெரியிலன்னா இப்பிடி  தர்ம சங்கடங்கள் வர்ரதுண்டு’ சந்திரன் மாத்ருவுக்கு ச்சொல்லிக்கொண்டான்.

‘ மாமா உடைந்தபோன   இட்டலி நமக்கு பரிமாறுவார். நாமளும் சாப்பிட்டு இருக்கம்.  அந்த இட்லிய மாமி என்னன்னு சொல்லுவா’

சந்திரன் மீண்டும் மாத்ருவிடம் சொல்லிக்கொண்டான்.

‘ ஸ்டாப்,  இந்த டாபிக்க மாத்துங்கோ  வேற எதாவது பேசலாம்’ ரகு கட்டளை தந்தார்.

’ நா பொறப்படுறேன்’ சந்திரன் மெஸ்ஸை விட்டு வெளியே வந்தான். காலில் செறுப்பை மாட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

நல்ல வெயிலாக இருந்தது. மணிமுத்தாற்றின் குறுக்கே மணலில் நடந்து போவது சிரமமாகத்தான் இருந்தது.

‘ கையில சின்ன கொட வச்சிகணும்’

 எதிரே வந்த  மூதாட்டி சொல்லிக்கொண்டே போனாள்.

புடவையின் தலைப்பால் தன் தலையில் முக்காடிட்டுக்கொண்டிருந்தாள் அந்தப்பாட்டி.

ஆற்று மணலில் நான்கு நாய்கள் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. அந்த சண்டை எதற்காகவோ அவைகளுக்குத்தான் வெளிச்சம். மணிமுத்தாற்று பாலத்தின் மீது ஊர்ந்து செல்லும் வாகனங்கள் அசையாமல் நின்றுகொண்டிருந்தன. என்ன காரணமோ தெரியவில்லை. ஏதேனும் ஒரு விபத்து நேர்ந்தும் இருக்கலாம். விபத்தின் ஆரவாரம் குறையும்வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டும் இருக்கலாம். யாரேனும் பெரிய மனிதர்களின் வருகைக்காக சாலை ஒழுங்கு செய்யப்பட்டு வாகனங்கள் தற்காலிகமாக  ஓரங்கட்டப்பட்டு இருக்கலாம். சந்திரன் லாரி ஷெட் பக்கத்திலிருக்கும் சந்தின் வழியே கடலூர் சாலையை அடைந்தான்.

பாலத்தில் ஒரு விபத்தென்று ஆங்காங்கே நின்றவர்கள் பேசிக்கொண்டார்கள். முதுகுன்றம் கோவிலில் தேவாரம் ஓதும் ஓதுவாரின்  ஒரே பிள்ளை. அவன்  சைக்கிளில் வந்து ஒரு மணல்  லாரியின் பின் சக்கரத்தில் மாட்டிக்கொண்டானாம்.  சம்பவ இடத்திலேயே  சிறுவன் மரணமடைந்து விட்டதாகவும் செய்தி  பரவியது. உயர் நிலைப்பள்ளி செல்லும் சிறுவன் என்றும் சைக்கிள் புதிதாகக்கற்றுக்கொண்ட பையன் என்றும் கூடுதலாகத்தகவல் சொன்னார்கள். தேவாரம் ஓதும் ஓதுவாரின் குரலை சந்திரன் அனேக முறை கேட்டும் இருக்கிறான். கம்பீரமாகப்பாடும் குர்லுக்குச்சொந்தக்காரர் அவர். பழமலை நாதர் கீழைக் கோபுர வாசலுக்கு வடபுறமாய்த்தான் அடைராயரின் டிபன் ஸ்டால் இருக்கிறது. மாத்ருவோடு ரகுவோடு எத்தனையோ முறை அந்த டிபன் கடைக்கு சந்திரன் சென்று வந்திருக்கிறான். சாயரட்சை வேளையில் பழமலை நாதர் கோவிலிலிருந்து தேவாரமும் திருப்புகழும் திருவாசகமும் ஓதுவாரின்  வசீகரக்குரலில் மனதிற்கு இனிமையாய்  பாடிக்கொண்டிருப்பார். அவரின் ஒரே பிள்ளை இப்படியா துர்மரணம் அடைவது. சந்திரனுக்கு இனம் புரியாத கலக்கமாய் இருந்தது. சிறுவனின் இழப்பு என்பது கூடுதலாய் மனத்தை வாட்டிக்கொண்டிருந்தது. செல்வராஜு பூங்காவை எட்டிப்பார்த்தான். யாருமில்லை. செல்லமுத்து சாரும் சந்திரனும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் சிமெண்ட் பலகை காலியாகக்கிடந்தது. செல்லமுத்து இன்னும் பாலத்தைக்கடந்து இந்தப்பகுதிக்கு வரவில்லை. இன்னும் சற்று நேரம் பிடிக்கலாம்.  விபத்தில் சிக்கிய சிறுவனின் சடலம் இன்னும் அரசு மருத்துவமனைக்கு க்கொண்டு செல்லப்படவில்லை. போலிசாரின் ஊதல் ஒலிகள் தொடர்ந்து கேட்டவண்ணம் இருந்தன. ஆம்புலன்சின் வருகை அதன் எச்சரிப்பு ஒலியால் அறிந்துகொள்ளமமுடிந்தது. சில நிமிடங்கள்தான் தாமதம் பாலத்தில் வாகனங்கள் மீண்டும் நகரத்தொடங்கின. வாகனங்கள் ஒலி எழுப்பி  கலையக்கலைய  சாலை பழையபடி சீரானது.

செல்லமுத்து சார் எங்கே என்று சந்திரன் தேடினான். சார்தான் சைக்கிளை உருட்டிக்கொண்டு பாலத்தில் மெதுவாக வந்து கொண்டிருந்தார்.

‘ இந்த ஆக்சிடெண்ட்டால டிராபிக் அதுல மாட்டிகிட்டிங்க போல’

‘ நானே கண்ணால அந்தப்பையன் பாடிய லாரி சக்கரத்துக்கு கீழ பாத்தன்.  கொழ கொழன்னு கெடந்தது. மனம் என்னவோ செய்யிது, ஆயிரம் படிக்கலாம்  பேசலாம். ஆனா ஒரு மரணம்னு  வந்து அதை க்கண்ணால பாக்குறப்ப நாம உடஞ்சிதான் போயிடறம்’

‘ அந்த பையன் அப்பா பெரிய கோவில்ல தேவாரம் பாடுறவராம்’

‘ எனக்கும் தெரியும் நல்ல மனுஷரு. நல்ல குரலு. நல்லா தூக்கி பாடுற சாரீரம் அவரது.  அவரு  தேவாரம் திருவாசகம்  பெரியபுராணம்னு  பாடி நெறய கேட்டு இருக்கன்.

 உலகெலாம் உணர்ந்து ஓதர்க்கறியவன்

நிலவுலாவிய நீர் மலி வேலியன்

அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்

மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

 இந்தப்பாட்டுல உயிர்ப்பே அந்த முதல்வரிதான்  உலகத்து மக்கள் எல்லாம் இறைவனை  மனதால் உணரலாம் ஆனால் சொற்களாலே  விளக்க முடியாதுன்னு பேசுற அந்தவரிய சுழற்றி சுழற்றி அவுரு பாடுறது அப்பிடியே என் கண் முன்னாடி நிக்கும்.

 இதோ செத்துப்போனவனும் அப்பாவோட  கூடபாடி இருக்கான். நா கேட்டுமிருக்கேன். ‘ கைத்தல நிறைகனி அப்பொமொடவல் பொரி’ ன்னு அழகா தாளத்தோடு பாடுனது இன்னும் என் காதிலேயே ஒலிச்சிட்டு இருக்குது சந்திரன். இந்த பழமலை அப்பன் அவரயும் சோதிச்சிட்டான் பாருங்க’

இண்ணைக்கு நாம பார்க்குல  உக்காந்து பேசறமா’

‘ வேணாம் சந்திரன் நேரம் ஆயிடுச்சின்னு நெனக்கிறேன் உக்காந்து பேசுற மாதிரியும் மனசு கல கலன்னு இல்ல பெறகு பாப்பம் நீங்க உங்க பஸ்ஸ புடிங்க’

‘ நீங்க சொல்லுறது சரி சார். நானும் கெளம்புறேன்’

சந்திரன் பாலக்கரை நிறுத்தத்திற்கு வந்தான். வழக்கமாக வரும் குஞ்சிதம் பஸ்ஸின் வருகைக்காக நின்று கொண்டிருந்தான்.

                                                                                   19.

 ஒரு நாள் மாலை. முதுகுன்றம் திருக்கோவிலில்   முதுகுன்றம்   தலைம அஞ்சலகத்து மணா வும் கஜாவும் சந்தித்துக்கொண்டார்கள். கீழைக் கோபுர வாயில் வழியாக  கோவிலுக்குள் நுழைந்து  முதல் பிரகாரத்தில் இருக்கும் வாகன மண்டபத்து வாயிலின்  நெடிய  கருங்கல் படிக்கட்டுகளில் அமர்ந்துகொண்டார்கள்.

‘ இன்னும் சூடு குறையல  படி எல்லாம்  சூடாத்தான் இருக்கு’

‘ கர்சிப் போட்டு உக்காரலாம் , பகல் முழுக்க வெயில்ல கெடக்கே’ கஜா பதில் சொன்னாள்.

‘ ஏன் இண்ணைக்கு  சாயந்திரமே  அவசரமா பேசணும் , அதுவும் இப்பவே பேசணும்னு சொன்ன’

‘அப்பா மும்முரமா எனக்கு மாப்பிள்ள தேடறார்னு சேதி.’

‘அது யார் சொன்னா’

‘என் தங்கை எனக்கு இன்லண்ட் லெட்டர் எழுதி இருக்கா’

‘ உன் தங்கைக்கு நம்ம காதல் சமாச்சாரம் தெரியும்’

‘ அவ எப்பிடியோ கண்டுபிடிச்சிட்டா, அது எப்பிடின்னுதான் தெரியல, ஒரு நா ராத்திரி தூக்கம் வராம வீட்டுல புரண்டு புரண்டு படுத்துட்டு இருந்தேன், அப்பவே கண்டு புடிச்சி கேட்டா எங்கயோ  உன்னை பறிகொடுத்துட்டே இல்லையான்னா’

‘ எனக்கு கண் கலங்கி போச்சி, ஆமாம் இது  விஷயம்  யாரு கிட்டயும் சொல்லிடாதேன்னு அவகிட்ட ப்ராமிஸ் வாங்கிகிட்டேன். அவ நல்லவ ரொம்ப நல்லவ. அவதான் இந்த விஷயத்தை எனக்கு லெட்டர் மூலம் தெரிவிச்சா’

‘ நா யாரு என்னன்னு கேட்டாங்களா’

‘ அதெல்லாம் இல்ல.. ஆபிசுல என்னோட வேல பார்க்கறார்னு மட்டும் சொன்னேன்’

‘ரொம்ப சங்கடமான விஷயம்’

‘ என் அம்மா எதிலும் அதிகமா நுழையமாட்டாங்க   எங்களுக்கு அப்பாதான் எல்லாமே’

‘உங்கப்பாவுக்கு நாம ஒத்தர ஒருத்தர் விரும்பறோம்னு தெரியணும், இப்ப இந்த விஷயம் நம்மளோட மட்டுமே இருக்குது. இன்னும்  உங்கப்பாகிட்ட சொல்லாம சும்மாவே இருந்தம்னா, ஊர் உலகத்துக்கு எல்லாம்  நம்ம பிரச்சனையை இழுத்துவிட்டுடுவம் இன்னும்  முழிப்பம்’

‘பொண்ணு பாக்க மாப்பிள்ள வீட்டுலேந்து ஆட்கள் வராங்கன்னு அப்பா இனி என்ன  வீட்டுக்கு கூப்பிட ஆரம்பிச்சிடுவார். அத மொதல்ல நிப்பாட்டணும்’

‘இப்ப கொஞ்ச நாளா ஞாயத்துக்கிழமையில கூட நீ ஊருக்குப்போறது இல்ல’

‘ இங்கதான் அப்பாவுக்கு  ஏதோ பயம் வந்து இருக்கணும்’

‘ இங்க நாம சந்திக்கறது பேசறது உங்கப்பாவுக்கு சேதி எப்பிடியாவது போயிருக்குமோ’

‘அதெல்லாம் இல்ல அப்பிடி போயிருந்தா எங்கப்பா இங்க ஓடி வந்து இருப்பாரே’

மாலை நேரம் என்பதால் கோவிலுக்கு சாமி கும்பிட வருவோரின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக கூடிக்கொண்டே போனது. ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் என வந்துகொண்டே இருந்தார்கள். வயதில் மூத்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது.

‘ ‘எங்கப்பாவுக்கு  நம்ம சேதி போயிடணும் அதுக்கு ஒரு வழி வேணும்’

  உனக்கு முக்கியமா  ஒரு விஷயம் சொல்லணுமே. நா சந்திரன் ஒரு நண்பரை பிடிச்சி இருக்கேன்’

‘யாரு’

‘டெலிபோன் ஆபிசுல வேல பாக்குறாரு. என் ஊருக்கு பக்கத்து ஊரு. என் ஊரு வளையமாதேவி. அவுரு ஊர் தருமங்குடி.. அவுரு அய்யிரு. அந்த  சந்திரனோட அப்பா  எங்க வீட்டு திவசம் நல்லது கெட்டதுக்கு புரோகிதரா  வர்ர மனுஷன். அப்புறம் நா தங்கி இருக்குற லாட்ஜ்ல இன்னும் நண்பர்கள் ரெண்டு பேரு. அவங்களும் டெலிபோன் ஆபிசுலதான் வேல பாக்குறாங்க.  பேரு மாத்ரு, ரகு.. அவுங்களும் எனக்கு உதவறேன்னு சொல்லி இருக்காங்க. எல்லார்கிட்டயும்  நம்ம லவ் மேட்டர் பேசி இருக்கன்.  அடுத்து என்ன செய்யிறதுன்னு இன்னும் முடிவு பண்ணல’

‘ அய்யிருன்னு சொல்றீங்க’

‘ அந்த மூணு பேருமே அய்யிருங்கதான்’

‘ அப்புறம் எப்பிடி அய்யிருங்க வந்து  நமக்கு  உதவுவாங்க’

‘ நட்புன்னா அது  வேற.     அதுக்கு பார்வையே தனி.  மெய்யான நண்பர்கள் உதவறதுன்னு ஒரு முடிவெடுத்துட்டா உயிர கொடுக்கவும் தயங்க மாட்டங்க. அப்பிடித்தான் எங்க நட்பும்’

‘ கேக்க மகிழ்ச்சியா இருக்கு‘ அவுங்க மூலமா எங்கப்பாவுக்கு நம்ம லவ் பண்றம்கற சேதி போகணும். எனக்கு அப்பாகிட்ட  நேரா சொல்ற தைர்யம் இல்ல. அவுங்க அதை செய்வாங்களா’

‘ நிச்சயமா செய்வாங்க. நான் பேசறேன்’

‘ அத உடனே செய்யணும்’

‘பிரச்சனை கொழப்பிக்கிறதுக்கு முன்னாடி அத செய்யிணும்’’

கஜாவின் கண்கள் குளமாகி இருந்தது. கஜா கண்களைத்துடைத்துக்கொண்டாள்.

‘ ஏன் அழறே’

‘ என் நிலமை என் அப்பாவின் நிலமை நினச்சி அழறேன்’

‘ அழாதே கஜா  நாம முடிவு எடுத்துதான் இதுல எறங்கி இருக்கம். எத்தினி  நாளு இத பத்தி  யோஜன பண்ணி இருப்பம்’

‘ எனக்குதானே சிக்கல்’

‘ஆமாம்.’

‘ ஆனா இப்ப யோசிச்சி என்ன செய்ய இருக்கு. இனி  நம்ம பாதையில  நாம போயிட்டேதான் இருக்கணும்’

மணா கஜாவை  கருங்கல் படியிலேயே விட்டு விட்டு  வாகன மண்டப வாயிலில் உள்ள  பிரசாத ஸ்டாலுக்கு வந்து இரண்டு லட்டும் இரண்டு முறுக்கும் வாங்கினான். புளியோதரை சாதம் ஒரு பொட்டலம் வாங்கிக்கொண்டான்.

 நடுத்தர வயதுக்காரர் ஒருவர்  தாடி வைத்துக்கொண்டு மணாவையே பார்த்துக்கொண்டிருந்தார். மணா பிரசாத ஸ்டாலில் வாங்கிய பொட்டலங்களோடு கஜாவை நோக்கிச்செல்வதையும் கவனித்தார்.

‘ பொஸ்தகம் கையோட படிக்க வரான்

பொம்பளய  தொட்டுகினு காதலிக்க வறான்

பொழுதுபோகாத கெழவனும் வரான்

பொங்கலு திங்கறேன்னு பொரம்போக்கு வரான்

பழமலையாருக்கு  திண்டாட்டம்தான்.’

தாடிக்காரர் பாட்டொன்றை பாடிக்கொண்டே போனார். மணா தாடிக்காரரை கவனித்துக்கொண்டான். அவர் சொல்வதும் அவனுக்கு ச்சரியாக காதில் விழவே செய்தது.

‘ அவருக்கென்ன கவலையோ’

  கஜா அவர் என்ன கவிதை படித்தார் தெரியுமா’

‘ நான் அதை கவனிக்கவில்லையே. அத எல்லாம்  கவனிக்கிற மாதிரியா என் சூழ் நிலை இருக்கு’

கஜா சொல்லி நிறுத்தினாள்.

‘ நா சந்திரனோட பேசி உங்கப்பாவுக்கு நம்ம லவ் மேட்டர தெரிவிச்சிடறன். அது எப்பிடின்னு நா பாத்துகிறேன் கஜா இந்தக்  கவலையே வேண்டாம் உனக்கு’

பழமலையப்பனுக்கு தீப ஆராதனை நடைப்பெறுவதற்கான  சமயம். ஆராய்ச்சி மணி தொடர்ந்து ஒலித்தது.  மங்கல வாத்யங்கள் முழங்கின.

‘ நாம சாமியவே பாக்குல’

‘ இப்ப  கண் தொறந்து  அந்த சாமிதான் நம்மள பாக்குணும்’  மணா சொல்லிக்கொண்டான்.

 மணா வாங்கி வந்த பிரசாத பொட்டலங்கள் எல்லாமே காலியாகி விட்டன.

‘ நல்ல பசி’

இருவரும் கீழைக்கோபுர வாயில் நோக்கி நடந்தார்கள். கஜா தோழியர்கள் இருவரோடு ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தாள்.

‘ நா ரூமுக்கு போறன்’

‘ சரி  நான் சேக்கிழார் லாட்ஜ்க்கு போறன்’ மணா புறப்பட்டான்.

                                                20.

சந்திரன் தருமங்குடி நிறுத்தத்தில் இறங்கி மண் சாலையில் நடந்தான். தருமங்குடி சுடலையில் சவம் புதைக்க குழி ஒன்றை எடுத்துக்கொண்டிருந்தார்கள். சவத்துக்கு ச்சொந்தக்காரர்கள்தான் சவஅடக்கத்திற்கான  வேலைகளைக்கவனித்துக்கொள்ள வேண்டும். மூன்றாண்டுகள் முடிந்திருக்கலாம். காலனியிலிருந்து இடுகாட்டு  வேலை செய்வதற்கு யாரும் வருவதில்லை. மாடுகள் இறந்தாலும்  அவரவர்கள்தான் அப்புறப்படுத்திக்கொள்ளவேண்டும்.

பறை அடிப்பது சாவு வேலைகள் கவனிப்பது  சவத்திற்கு பாடை கட்டுவது இடுகாட்டில் பிணம் எரிப்பது எல்லாம்  அவரவர்கள்  உற்றார் உறவினர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படித்தான் தருமங்குடியில் இப்போதைய நடப்பு.  இனி எப்போதும் அப்படித்தான் .இதில் ஒன்றும் தவறுமில்லை. ஊரின் நான்கு தெருக்களை ச்சுற்றி வந்த  இடுகாட்டு  ஊழியர்கள்  ’’இனி  சொடலைக்குப்போறது வெட்டியானுங்க வேலை  பார்க்கிறது என்பதெல்லாம் தருமங்குடியில்  கிடையாது. வெளி ஊரிலிருந்து  யாரும் இங்கு வந்து  அந்தக்காரியம் பார்க்கவும் கூடாது.  தருமங்குடியில் அந்த  சொடலைக்காரியம் பார்ப்பதெல்லாம் அவரவர்கள்  பொறுப்பு. .  செத்த மாடு அப்புறப்படுத்தறதும் இனிமேலுக்கு அவரவர்கள் செய்துக்கிற வேலை. எங்கள  ஏவறது கேவறது எல்லாம் இண்ணையோட முடிஞ்சிபோச்சி’’ என்று அறிவித்துவிட்டு பறைமேளத்தை ஊர் நடுவில் உடைத்துப்போட்டுவிட்டுப்போனார்கள்.

‘யாரோ தருமங்குடியில் இறந்து போயிருக்கலாம்’ சந்திரன் யோசித்துக்கொண்டே நடந்தான்.

பட்டினத்தான் வாய்க்கால் மதகின் மீது இரு சிறுவர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்களைக்கேட்க விபரம் தெரியலாம்.

‘ ஆரு நம்மூர்ல செத்துப்போனது’

‘ சிவாலிங்கம் தாத்தா தெற்கு தெருகாரரு எறந்துட்டாரு’

சிறுவர்கள் பதில் சொன்னார்கள்.

‘ மாரியம்மன் கோவில்ல  உடுக்கை அடிப்பாரே அவரா’

  அந்த தாத்தா  அவரேதான் டுன் டுன் டுன், டுன் டுன் டுன்’

சிரித்துக்கொண்டே சொன்னான் சிறுவன்.

எத்தனயோ அற்புத கவிதை வரிகளை அவர் வாயிலாக க்கேட்டிட்ருக்கிறான் சந்திரன்.

’தருமங்குடி வாழும் பூரணி

அன்னம் தண்ணி அள்ளித்தரும்

மூல காரணி ஆயா  சிம்ம  வாகனி

கிருஷ்ண மாரி கிருபை காட்டம்மா’

அடுக்கடுக்காக பாடிக்கொண்டு மாரியம்மன் திரு உலாவில் உடுக்கையைத்தூக்கித்தூக்கி  அடிப்பார் சிவாலிங்கம். அவரின் கலையை தருமங்குடியில் யாருமே கற்றுக்கொள்ளவில்லை. அவரோடு அந்தக்கலை அழிந்தேதான் போய்விடும். அந்தக்கலையின் அழகை எடுத்துச்சொல்வார் இல்லாமல் ஏற்றுக்கொள்வார் இல்லாமல்தான் இன்றைக்கு நிலமை.

‘ அவரும் போயாச்சி’ சொல்லிக்கொண்டே நாகமணிந்த விநாயகர் கோவில் வழியாக வந்துகொண்டிருந்தான் சந்திரன்.

எதிரே சந்திரனின் அப்பா சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். சைக்கிள் பெல்லை ஒத்தை ஒத்தையாய் அவர் மாதிரிக்கு யாரும் அடிப்பதில்லை. அதில்கூட ஒரு  அழகை ரசனையை எற்படுத்த அவரால் முடிந்திருக்கிறது.

‘ இப்பதான் வரயா,  நான் அகரம் வரை போயிட்டு வரேன்’

அப்பா சந்திரனிடம் சொல்லிக்கொண்டு சென்றார்.

சந்திரனின் அப்பா மாலையில் வெளியே போகின்றார் என்றால் திவசம் சொல்லப்போவார். இல்லை ஜாபிதா கொடுத்துவிட்டு வருவார். முகூர்த்த ஓலை எழுதவெண்டும் என்று வருபவர்களும் மாலையில் வருவதுண்டு.

சந்திரன் அரசமரம் தாண்டினான். அம்மா ஆளோடியில் ஏதோ சுத்தம் செய்துகொண்டு இருந்தார்.

‘ இண்ணைக்கு கருடாம்  வத்தல் போட்டேன். அது அடிச்ச வெயில்ல  நல்லா காஞ்சிது.  அத எடுத்து உள்ள வச்சேன். கீழ கன்னா பின்னான்னு எறஞ்சி  கெடந்துது. அத கூட்டி சுத்தம் பண்ணினேன்’

‘ சுமாரா அலட்டிகோ போறும்’

சந்திரன் சொல்லிக்கொண்டே வீட்டினுள் நுழைந்தான்.

‘ அப்பா சைக்கிள்ள எங்கயோ போறார் பாத்தேன்’

‘ அகரம் போறார் வந்துடுவார்’

‘ என்ன விசேஷம்’

‘ காமனுக்கு காப்பு கட்டறதுன்னு சொன்னார்’

‘அதென்னம்மா’

‘இது தெரியாதா நோக்கு.  அந்தக்கோவில்ல மன்மதன் ரதி  ரெண்டுவிக்கிரகம் இருக்கும். அதுக்கு கையில  மஞ்சள்  காப்பு கட்டணும். எல்லாரும் உக்காந்து  ரதி மன்மதன் கதய படிப்பா அதுக்கு  ஒரு பூசாலி இருப்பார்  பரமசிவனுக்கு காம இச்சையை மூட்ட மன்மதன் முயற்சி பண்ணி அவர் கோபத்தால  எரிஞ்சி சாம்பலாயிடுவான்.  ரதிக்கு  மன்மதனை இழந்ததுல ஆத்திரம்  தீராக்கோபம். ஊருக்கு ஊர்  இப்படி  காம தகனும் நடக்கும்  அந்த எடத்த  சதுரமா கல் அடுக்கி. மூடி சாணியால   மொழுகி  ஒரு கொம்ப நடுவா. கிராமத்துல  காலம் காலமா நடக்கற கதடா’

 ’இதுல விசேஷம் எதாவது’

‘ நல்ல மாரி  பெய்யும்  நல்ல மகசூல் வரும்னு  ஜனங்களுக்கு ஒரு நம்பிக்கை’

‘ பரவாயில்ல  அது இருக்கட்டும்  எனக்கு  நீ காபி கொடென்’

அம்மா காபி கலக்க அடுப்படிக்குப்போனாள்.

சந்திரன் தபால் ஏதும் வந்திருக்கிறதா என்று அலமாரியைத்திறந்து பார்த்தான். வீட்டுக்கு வரும் கடிதங்களை அப்பா அலமாரியில் பத்திரமாக எடுத்துவைப்பார். ஒவ்வொரு நாளும் தபால்காரனின் வருகையை சந்திரன் குடும்பத்தில் எதிபார்த்துத்தான் இருப்பார்கள். நீளக் கவர் ஒன்று பிரிக்காமல் கிடந்தது. அதனை எடுத்தான். நான்கு மூலைகளிலும் மஞ்சள் தடவிய கவராக இருந்தது. அதனைப்பிரித்துப்பார்த்தான். பெண் வீட்டார் யாரோ எழுதிய கடிதம்தான். பெண்ணைப்பற்றிய குறிப்போடு பெண் ஜாதகமும் சிறு கடிதமும் இணைக்கப்பட்டிருந்தது.

அம்மா காபி எடுத்துக்கொண்டு வந்தாள்.

‘ காபிய சாப்பிடு’

கையில் அந்தக் கவரோடு சந்திரன் நாற்காலியில் அமர்ந்து காபி சாப்பிட்டான்.

‘அந்தக்கவரை இப்படி கொடு’

சந்திரன் கவரை அம்மாவிடம் கொடுத்தான். கடிதத்தைப்பிரித்துப்பார்த்தாள் அம்மா.

‘ பொண்ணு பையன்னு இருந்தா இப்படி கடிதங்கள் வரும்தான், நீ என்ன சொல்ற’

‘ கல்யாணம் குடும்பம் இது பத்தி எல்லாம் இப்போதைக்கு யோஜனை இல்ல’

‘ எல்லாத்துக்கும் ஒரு டைம் டேபிள் இருக்கட்டும்’

‘இப்ப   வாழும் மக்கள் சமூகத்த சரியா படிக்கணும் நல்லா புரிஞ்சிக்கணும்னு முடிவோட இருக்கன். அது அதுக்கான நேரம் வரும்  அது அத அப்ப பாக்கலாம்’

‘ அவாளுக்கு ஒரு பதில் போடணும்’

‘ கொஞ்சம் நாளாகும். இப்போதைக்கு இல்லன்னு எழுதிடலாம்’

‘ அப்பாகிட்ட சொல்றன்’

சந்திரனின் அப்பா அகரத்திலிருந்து திரும்பி இருக்கவேண்டும். வாசலில் சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டின் உள்ளே நுழைந்தார்.

‘சைக்கிள ரேழில எடுத்து வச்சிடலாம்’

‘ வக்கிறேன்  கொஞ்சம் பொறேன்’ குரல் உயர்த்தி அப்பா பதில் சொன்னார்.

கைகால்களை சுத்தம் செய்துகொண்டு நெற்றியில் விபூதி இட்டுக்கொண்டார். சுவாமி படத்திற்கு முன்பாக சற்று நேரம் நின்று கண்களை மூடித்திறந்தார். ‘ராம ராம’ சொல்லிவிட்டு பெஞ்சில் அமர்ந்துகொண்டார்.

‘ காபி வேணுமா’

‘ காபி சாப்டுதானே போனேன்’

‘இப்ப ஒரு வாய் தரட்டா’ விடாமல் சந்திரனின் தாய் தொடர்ந்தாள்

‘ வேண்டாம்  ராத்திரி சாப்பிடணுமே’

‘ ஏண்டா கும்பாபிஷேகத்துக்கு நாள் குறிச்சி குடுத்தேனே அத குடுத்திட்டயா’

‘ ஆச்சு அப்பா’

‘ வேற என்ன சேதி’

 அஞ்சாபுலி பசு மாட்டுக்கு ஐநூறு ரூவா கொடுத்தான் அதயும் சாரு கிட்ட கொடுத்தாச்சி. சார் அஞ்சாபுலி  பசு மாட்டுக்கு பணம் குடுத்தவரைக்கும் போறும். இனி வேண்டாம்னு சொல்லிட்டார். அதயும்  அவனண்ட  சொல்லணும்’

‘ இன்னும் சொல்லலயா’

‘ நான் எங்க பாத்தேன்’

‘ சரி விடு’

‘ அப்பா வேற ஒரு சேதி. முதுகுன்றம்  பெரிய போஸ்டாபிசுல வளையமாதேவி பையன் மகேந்திரன்னு ஒரு பையன் வர்க் பண்றான்’

‘ இந்த மீன் காரன் பையன். சைக்கிள்ள வீராணம் ஏரிக்கரைக்கு போயி சரக்கு எடுத்துண்டு வருவான். மீன் வியாபாரி அவன் அவன் புள்ள மணாவை சொல்ற’

‘ ஆமாம் அவனேதான்’

‘அவனுக்கு என்ன’

‘ அவன் ஒரு பொண்ண லவ் பண்றான்’

‘ சரி நமக்கென்ன அது அவனவன் சவுகரியம்’

‘ பொண்ணு அய்யங்காரு ஊரு கடலூரு’

‘ போச்சிடா போ’

‘ அந்த மணா எங்கிட்ட வந்தான். கூடவே மாத்ரு ரகுன்னு எங்க ஆபிசுக்காரா வந்தா. நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றம் கல்யாணம் பண்ணிக்கணும். நீங்கதான் கைடு பண்ணணும்னு சொல்றான்’

‘ உனக்கு என்ன இதுல தெரியும்’

‘ நானு இன்னும் யாரையாவது கேட்டுதான் செய்வேன்’

‘எனக்குமிது எல்லாம் புதுசு’

‘ அவா ஆத்துக்கு நீ தான் புரோகிதர்’

‘ ஆமாம்  ஆமாம்.  இண்ணிக்கி நேத்தி சமாஜாரமா இது.  மணா அவன் அப்பன் சந்திரகாசி. தாத்தா பூராசாமி எல்லாம் மீன்காரா.  செம்பட ஜனம்’

‘அவா ஆத்து கல்யாணம் நீதான பண்ணி வப்ப’

‘ ஆமாம்’

‘ அப்ப மணா கல்யாணம் நீ தான் புரோகிதரா இருந்து பண்ணி வக்கணும்’

‘ பேஷா எனக்கு  இதுல என்ன இருக்கு. அவா அவா சமாஜாரம். நாம செத்த நேரம் ஒக்காந்து கல்யாணம் பண்ணி வக்கறம்’

‘ நீதான் பண்ணிவக்கணும் நாமங்கறே’

‘ என்னடா ரொம்ப குசும்பு பண்றே’

‘ பத்திரிக அடிச்சிண்டு வருவா  அது உங்கிட்ட வரும்’

‘ சந்திர காசு  கண்டிப்பா எனக்கு  பாக்கு வைப்பான்’

’ பொண்ணோட அப்பா அம்மா என்ன சொல்றா’

‘ என்ன சொல்லுவா’

‘சண்டக்கி வருவா. ஒத்துக்க மாட்டா வேறென்ன’

‘ அவ்வளவுதான்’

‘அதெல்லாம் அசமடக்கிண்டுவரணும். ரிஜீஸ்டர் ஆபிசுல மொதல்ல அவா கல்யாணத்தம் பதிவு பண்ணணும் அப்புறம்தான் கல்யாணம்’

‘ கல்யாணமானாத்தான் பதிவு நீ என்ன பெறட்டி சொல்ற’

‘ இந்த மாதிரி கல்யாணம்ன்னா. மொதல்ல பதிவு பண்ணிட்டா சிக்கல் இல்லே. சடங்கு சம்பிரதாயம் எல்லாம் ஊருக்கு அவா புருஷன் பொண்டாட்டின்னு தெரியறதுக்குத்தான்’

‘ நன்னா பேசறேடா சந்திரன்’

‘ கல்யாணம்  அனேகமா கொளஞ்சியப்பர் கோவில்ல நடக்கும்’

‘ அண்ணிக்கி உள்ளூர்ல எதாவது கல்யாணம் வந்தா என்ன கூப்பிடுவாளே’

‘ இன்னும் நாளு வக்கல’

‘ நீ தான நாள் பாக்குற.’

‘ அந்த அய்யங்கார் பொண்ணோட அப்பா என்ன பண்றார்’

‘ அதெல்லாம் எனக்கு தெரியாது’

‘ போலிஸ்  இன்ஸ்பெக்டரா இருந்தா என்ன பண்ணுவ’

‘ யாரா இருந்தா என்ன அவா ரெண்டு பேரும்  உத்யோகம் பாக்கறவா.  நன்னா படிச்சவா.ஒருத்தர ஒருத்தர் விரும்பறா. அப்பா அம்மா ஒத்துண்டா சரி. அப்படியே இல்லேன்னாலும் அந்தக்கல்யாணம் நிக்கப்போறது இல்ல’

‘ வம்பு தும்பு எதனா வரப்போறது’

‘ எல்லாத்தையும்  பாக்கணும்தான்’

‘ ஜாக்கிரதடா’

‘ எல்லாம் காதுல வுழுந்துது. சந்திரன் உனக்கே இன்னும் கல்யாணம் ஆகல. நீ கல்யாண பேச்சுவார்த்த வம்பு தும்புன்னு போறேன்னு சொன்னா சரியா’

சந்திரன் சிரித்துக்கொண்டான்.

‘ உனக்கே இன்னும்  கல்யாணம் ஆகலே நீ என்ன  இன்னொருத்தனுக்குப் பேச வந்துட்ட  ன்னு யாராவது  கேட்டா என்ன பண்ணுவ’

‘ சரியான கேள்வி’ சந்திரனின் அப்பா சேர்ந்துகொண்டார்.

‘ எல்லாரும் இப்ப  சாப்பிட வரலாம் அந்தக்கல்யாண சமாச்சாரம் அப்பறம் ஆகட்டும்’ அம்மா ஓங்கிச்சொன்னாள்.

எல்லோரும் சாப்பிடத்தயாரானார்கள்.

                                                              21.

சந்திரன் காலை டூட்டிக்கு அலுவலகம் வந்திருந்தான். செல்லமுத்து சார் ஏனோ இன்னும் அலுவலகத்துக்கு வரவில்லை.  சந்திரனின் நண்பர் ஆப்ரேடர்  நல்லதம்பிக்கும் இன்று காலை டூட்டி.

‘ என்ன நல்லதம்பி  இன்னும் சாரக்காணும்’

‘ அவர் இண்ணைக்கு ஃபஸ்ட் ஆஃப் சி எல். சொந்த  கிராமத்துக்கு போயிருக்கிறார்.’

‘ எதாவது விசேஷமா’

‘ ஏம்பா நீங்க ரெண்டு பேரும் எழையோ எழையோன்னு  எழையரீங்க. சேதிய என்ன கேக்குற’

‘ அப்பிடி தப்பா ஒண்ணும் இல்ல நல்லதம்பி’

‘தப்புன்னு நா சொன்னனா’

‘சரி விஷயத்துக்கு வருவம் சார் எங்க போயிருக்குறாரு’

‘’ நீ டிபன் சாப்பிட்டு வா. சார் செகண் ஹாஃப் டூட்டிக்கு வந்துடுவார்’

‘ அப்புறம் அவரு சேதி உனக்கு தெரியாதா’

‘ அட நீ வேற என் கிட்டயாரும் சொல்லுல’

’ தெரியாத சமாச்சாரத்துக்கு இவ்வளவு பிகு காட்டுற’

‘அய்யா யாரு’ நல்ல தம்பி சொல்லிக்கொண்டான். சந்திரன்  அலுவலக வருகைப்பதிவேட்டை ஒரு முறை புரட்டி ப்பார்த்துக்கொண்டான். அதனில் செல்லமுத்து சாரின் லீவு லெட்டர் மடித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த லெட்டரை எடுத்துப்படித்தான். சொந்த ஊர் செல்வதால் விடுப்பு என்று எழுதப்பட்டிருந்தது. குடமுழுக்கு சமாச்சாரமாய் போயிருக்கலாம் என்று சந்திரன் முடிவுக்கு வந்தான். அம்மா செய்துகொடுத்த டிபனை  லைன்ஸ்டாஃப் ரெஸ்ட் ரூம் சென்று சந்திரன் சாப்பிட்டு முடித்தான். அங்கே ஒரு மர்ஃபி ரேடியோ வைத்திருந்தார்கள். அது மின்சாரத்தில் இயங்குவது. அதற்கு தேக்கு சட்டத்தில் ஒரு பெட்டி அழகாகச்செய்யப்பட்டு சுவரில் தொங்க வைக்கப்பட்டிருந்தது. அந்தபெட்டிக்குள்ளாக அந்தரேடியோ சிறை வைக்கப்பட்டிருந்தது ரேடியோவின் திருகு சக்கரங்கள்  பெட்டிக்கு வெளியே தெரிந்தன .  ரேடியோ எந்த ஸ்டேஷனில்  இயங்குகிறது என்பதறிய அதற்கேற்ப மரப்பெட்டியில் கச்சிதமாக சன்னல் வெட்டப்பட்டிருந்தது. ஊழியர்கள் ஒய்வு நேரத்தில் ரேடியொ கேட்பது வழக்கமாகியிருந்தது.

நல்லதம்பி ரேடியோவில் செய்தி கேட்டுக்கொண்டிருந்தான். சந்திரன் அங்கு தொங்கவிடப்பட்டிருந்த  தினசரி, வாராந்திரிகளை நோட்டமிட்டபடி இருந்தான்.

‘என்ன படிக்கலாம்னு பாக்குற’

  தின மணி , இந்து பேப்பர் தேடுறேன்’

  அந்த ஏ என் சிவராமன்,  ஜி கே ரெட்டி இவுங்கதான் உனக்கு அறிவாளிங்க இல்லையா’

‘ சிவராமன் கிட்ட  சொல்ற விஷயத்துல அலசல் இருக்கும் நேர்மை தொனிக்கும், ஜி கே ரெட்டியின் ஆங்கிலத்துல  ஒரு கிக்கு இருக்கும்’

அந்தப்பக்கம் வந்த சுதாகர் என்னும் சீனியர் ஆப்ரேடர்’ சிவராமனுக்கு ஒரு  அரசியல் உண்டு அது தெரியுமா’

‘எப்பா சுதா எதுல  அரசியல் இல்ல’ நல்லதம்பி சுதாகருக்குப்பதில் சொன்னார்.

சந்திரன் எதுவும் பேசாமல் அமைதியாக  அமர்ந்திருந்தான். சாப்பாட்டு ஓய்வுக்குப்பிறகு சந்திரன் தரைதளத்தில் இருந்த  பணியிடம் சென்றான்.

மணி பத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. செல்லமுத்து சார் அலுவலகத்தில் நுழைந்து தன் இருக்கையில் போய் அமர்ந்தார். சந்திரன் எழுந்து நின்றான்.

‘ வணக்கம் சார்’

‘ அப்பிடி எல்லாம் எழுந்து வணக்கம் சொல்லணும்னு இல்ல’

‘ டூட்டி ஃபஸ்ட்  பாக்கி எதுவும் அப்புறம்தான்’

‘ என்ன சார் மதுரவல்லி போனீங்களா’

‘ஆமாம் உங்கப்பா குறிச்சிகுடுத்த  குடமுழுக்கு நாள நம்ம ஸ்ரீதரன் பிரஸ்ல குடுத்தேன். அவுங்க பத்திரிக அடிச்சி குடுத்தாங்க. எல்லாத்துக்கும் மாடல் இருக்குதே. அச்சகத்துக்காரங்களுக்கு   நாம ஜஸ்ட் நாளு நடசத்திரம் ஊர் பேரு குடுத்தாபோதும் பத்திரிக ரெடியாயிடுது. மொத மாதிரி செருமம் இல்ல’

‘யார பாத்திங்க ஊர்ல’

 யாரு அந்த ஏட்டு ரஞ்சிதம் குஞ்சிதம்தான்’

‘ அண்ணிக்கு வந்தவங்கதான் இல்லயா’

‘ ஆமாம்  மஞ்ச சிவப்பு பத்திரிக குடுத்தாச்சி இனி அந்த குடமுழுக்கு விழாவ நல்லபடியா  நடத்தி முடிக்கணும்’

 ‘ நாளு இருக்கே சார்’

‘ அதெல்லாம் ஒண்ணும் இல்லே அது அதுக்கு  சரியான ஆள் அமுத்துணுமே’

‘ எல்லாம் செஞ்சிடுவம் சார்’

அவ்வளவுதான் பேசிக்கொண்டார்கள். சந்திரன் தன் பணியில் மூழ்கிபோனான்.. செல்லமுத்து சாரும் யார் யாருக்கு எவ்வளவு எக்ஸ்ட்ரா டூட்டி  அதாவது எவ்வளவு ஓவர் டைம் பார்த்து இருக்கிறார்கள் என்று கணக்கெடுத்துக்கொண்டிருந்தார்.

‘மதியம் சந்திப்போம் அப்ப பேசிக்கலாம்’

‘சரி சார்’ சந்திரன் பதில் சொன்னான். மதியம் பணி முடிந்து சந்திரன் மெஸ்ஸுக்கு சாப்பிடப்போனான்.

மெஸ்ஸில் மணா சாப்பிட வந்திருந்தான்.

‘ என்ன சார் நானே உங்களை ப்பார்க்கணும்னு யோசனையில இருந்தேன்’

‘ என்ன டெவெலப்மெண்ட்’

‘ நானும் கஜாவும்  பெரிய கோவில்ல  சந்திச்சி பேசினோம். கஜா அவருடைய அப்பாவுக்கு  எங்க ளோட இந்தக்காதல் சமாச்சாரம் சேதி போகணும். இல்லன்னா கஜாவோட பெற்றோர்  வேற எங்காவது  மாப்பிள்ள விஷயமா பேச்சு கொடுத்து பிரச்சனை சிக்கலாயிடும்னு கஜா பயப்படுறங்க’ மணா பிரச்சனையை எடுத்து வைத்தான்.

‘இதுல என்ன இருக்கு. கஜா அப்பாகிட்ட பேசிடுவம்’

‘ யாரு பேசறது’

 மாத்ரு ரகு ரெண்டு பேரையும் கடலூருக்கு  அனுப்புவம். நீங்க கஜா அப்பாவோட வீட்டு விலாசம் கேட்டு அத குறிச்சி அவுங்ககிட்ட  குடுங்க.  அப்பிடி போனாத்தான் விஷயம் சரியாவரும்’

சந்திரன் சாப்பிட்டு முடித்தான்.

‘ மாத்ருவும் ரகுவும் ஏதோ ஆழ்ந்த பிரச்சனை ஒன்றைபற்றி விவாதித்துக்கொண்டே வந்தார்கள்’

‘ என்ன சூடா விவாதம்’

‘ காவேரி ஆத்துல  தண்ணி திறந்து விடற பிரச்சனையில ஒரு தேசியக்கட்சிக்கு எப்பிடி ரெண்டு நிலைபாடு இருக்கமுடியும். கரு நாடகாவுல இருக்குற மாநில காங்கிரஸ், தமிழ் மா நிலத்துல இருக்குற காங்கிரஸ், ரெண்டு இருக்கு. அவன்  காவேரில  தண்ணீ உடவே முடியாதுங்கறான்,  இவன் நீ தண்ணீ  உட்டே ஆகணும்னு  சொல்றான்’ என்றார் மாத்ரு.

‘ கம்யூனிஸ்ட் கட்சியில மட்டும் எப்பிடி அந்த மா நிலக்கட்சி  கிருஷ்ண ராஜ சாகர்ல ஷட்டர் திறக்கமுடியாதுன்னா இந்த மா நிலக்கட்சி  அந்த ஷட்டரை  திறந்தே ஆகணும்னு தீர்மானம் போடுறாங்க’

‘இது எல்லாம் என்ன? உண்ணாவிரத போராட்டம் ஒருத்தன் நடத்தினா அதுக்கு எதிரா உண்ணும் போராட்டம்னு இன்னொருத்தன் நடத்தின நாடு நம்ம தமிழ் நாடு’ மாத்ரு பட்டென்று ஒரு சேதி சொன்னார்.

‘ மாத்ரு ரகு ரெண்டு பேரும் இந்த வாரம் வீக்லி ஆஃப்ல கடலூர் போறீங்க. அந்த கஜா அப்பாவை பாக்குறீங்க. அவர்கிட்ட இந்த சேதிய எந்த சேதியன்னா மணாவும் கஜாவும் லவ் பண்றாங்க அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணிவக்கணும். ஒரு பெற்றோரா நீங்க என்ன சொல்றீங்க’ அப்படி  அந்த விஷயத்தை அவர் காதுல கரெக்ட்டா போட்டுட்டு வரீங்க’

‘ ரொம்ப சுலுவா இந்த விஷயத்தை சொல்லிட்டிங்க’ ரகு  சந்திரனிடம் சொன்னான்.

  கடலூர்ல  நா கஜா வீட்டுவிலாசம் வாங்கி  உம்ம கிட்ட குடுத்துடறேன்.’

மணா தனக்கு உள்ள பொறுப்பைச்சொல்லிக்கொண்டார்.

‘ மணா கடலூருக்கு வரணுமா வேண்டாமா’

‘ மாத்ரு அவர் எதுக்கு வேண்டாம்’

மாத்ரு ரகுவை ப்பார்த்துக்கொண்டார்.

’மாத்ரு கூட இருக்குறது ஒரு யானை பலம்’

‘ ரகு நீங்க முந்தினூட்டிங்க நான் இத சொல்லணும்’

‘ ரெண்டு பேருமே சூப்ப்ர்தான்’ சந்திரன் சொல்லிக்கொண்டார்.

 மணா அட்ரெஸ் வாங்கி குடுத்துடுங்க என்ன’

‘ இண்ணைக்கே குடுத்துடறேன் சார்’ பவ்யமாய் ஆமோதித்தான் மணா.

  சாப்பாட்டு எலக்கி ஜலம் தெளிச்சிகிங்க’ மெஸ் மாமா  அவர்கள் மூவருக்கும் சேதி

சொல்லிக்கொண்டார்.

‘ நாங்க முக்கியமா பேசிண்டு இருக்கோம்’

‘ யார் இல்லேன்னா அது முக்கியம்  அதுவே தான் பிரதானம்’

‘ மெஸ் மாமா சந்துல சிந்து பாடாறார்’ என்றார் மாத்ரு.

’காரியம் முடிச்சிட்டு எங்கிட்ட பேசுங்க’ மூவருக்கும் அன்புக்கட்டளையிட்டான் சந்திரன். தன் கையில் பையோடு மெஸ்ஸை விட்டுப்புறப்பட்டன்.

சந்திரன் மணிமுத்தாற்றை க்கடந்து கடலூர் சாலையைத்தாண்டி செல்வராஜ் பூங்காவுக்குள் நுழைந்தான். அங்கு செல்லமுத்துசார் தயாராக  அமர்ந்துகொண்டு சந்திரனை எதிர்பார்த்துக்காத்திருந்தார்.

‘சார்  வந்தாச்சா’

சொல்லிகொண்டே வந்து சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து கொண்டார்.

‘ நானே ஆரம்பிக்கிறேன். மதுரவல்லி குடமுழுக்கு விழாவுக்கு பத்திரிகை அடிச்சாச்சி. அத கொண்டு போய் கொடுத்துட்டு வந்தேன். இனி அந்த விழாவை நடத்தி முடிக்கவேண்டும். அது நம்ப பொறுப்பு’

‘ ஜமாய்ச்சிடலாம் சார்’

‘குடமுழுக்க தமிழ்ல நடத்துவோம்’

‘சார் பெரிய விருப்பம் சார் உங்களுக்கு’

‘ திருவாசகம் திரு மூலம் தேவாரம்  பெரியபுராணம்  நாலாயிர திவ்யபிரபந்தம் இவைதான்   தெய்வத்தமிழுக்கு ஆதாரம். இவைகளை  ஓதுவார வச்சி ஓதணும். ஓமம் வளர்த்து அந்த க்கலச நீரை கோவில் கலசத்துல  கொண்டுபோய் ஊத்துணும் குடமுழுக்குக்கு, என்ன என்ன சம்பிரதாயம்  செய்யணும்னு ஒரு சிவாச்சாரியாரகிட்ட  யோசனை கேட்டுகுவம். ஆனா தமிழ்லதான் அதனை செய்து முடிக்கணும் வடமொழியே இங்க  வேண்டாம்’

‘ நா தருமங்குடிலேந்து சாமி நாத சிவாச்சாரியரை கூப்பிட்டு வரேன். அவர் என்ன  என்ன செய்யிணும்னு சரியாச்சொல்லுவார்.  எங்க ஊர் ராஜகோபால் பிள்ளயையும் கூப்பிட்டு வர்ரன் அவர்  ஓதுவார் திருப்பணியை செய்துடுவார்’

‘ அப்புறம் என்ன’

. ஆகமம் படிச்ச அட்டவணை இனத்துக்காரர் ஒருவரை  அர்ச்சகரா   கேரள மா நிலம்  மணப்புரம் சிவன் கோவில்ல  நியமிச்சி இருக்காங்க.  அவுரு பேரு ’யது க்ரிஷ்ணா’.  அந்த கோவில்ல  அவுரு  மேல் சாந்தி.  அப்படின்னா   தலைமை  சிவாச்சாரியார்னு சொல்லுணும். அவர பிரதானமா வச்சி குடமுழுக்கநடத்தி  சிறப்பா முடிக்கறம். இன்னும் நாளு  இருக்கு. அதுக்குள்ள நா எல்லார் கிட்டயும் பேசி சம்மதம் வாங்கிடுறேன்.   போன் போட்டு அந்த மேல் சாந்தி அய்யா கிட்ட  பேசிகிடுறேன்.  ஒரு  கடிதமும் அவருக்கு  எழுதணும்  பத்திரிகையும் அனுப்பணும். .அது மொதல் வேல’

‘ சபாஷ். அட்டவணை இனத்து ஆகமம் படித்த அர்ச்சகர் ஒருத்தரைக்கூப்பிடனும்னு எனக்கு ஏனோ தோணல.  உங்களுக்கு சரியா தோணியிருக்கு’

  நல்ல விஷயங்களை  தொடங்கிப் பார்ப்பம். பிரச்சனைகள் வரலாம்.  வரட்டும்.. அதுக்குன்னு நாம தொடங்குன வேலய  விடமுடியாது. தொடர்ந்து நடத்தித்தான் ஆகணும் சார்’

‘இதுல சோடபோயிடக்கூடாது. எனக்கு குடமுழுக்கு நல்லபடியா முடிஞ்சிப்போன சந்தோஷம் இப்ப’

‘கர்நாடகா மா நிலத்துல  அரபிக்கடலோரம்  இருக்குது மங்களூரு மா நகரம்.  அது  கிட்ட  இருக்கு  குத்ரோலின்னு ஒரு   ஊரு.  அங்க  ஸ்ரீ கோகர்ண நாதேஸ்வரர்க்கு ஒரு கோவிலு. அந்த திருக்கோவில்ல  கணவனை இழந்த தலித் பெண்கள்  ரெண்டு பேரு  அர்ச்சகர்களா வேல செய்றாங்க. அவங்கள்ள  கூட யாரையும் நாம  கூப்பிடலாம்’

 ‘ யார கூப்பிடறது  எது செய்யுறது எப்பிடி விருப்பம்னாலும்  நீங்க முடிவு பண்ணுங்க.  ஒவ்வொருத்தர ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு  கூப்பிடுவம்.  இன்னும் எவ்வளவோ  விஷயங்கள் இருக்குது.  இவ்வளவு விவரங்கள நா கேட்டு வக்கல  கிராமத்துல என் வீடு இருக்கு. நீங்கதான் வீட்டுக்கு  வந்து இருக்கிங்க.  பெரிய வீடு. அத பளிச்சின்னு  சவுகரியமா இருக்குற மாதிரி  மாத்திடுவம்.   கெஸ்ட் வர்ரவங்க போறவங்க நல்லபடியா தங்கிட்டு போகணும்ல ’

  நமக்கு   அதோட தேவையும் இப்பதானே.’’

’ அப்புறம் இந்த வார ஆஃப்ல நாம ரெண்டு பேரும் காஞ்சிபுரம் போறம்’

‘ இது என்ன சார் புதுசா இருக்கு’

‘ ஆமாம் புதுசுதான்’

‘அங்க என்ன சேதி’

‘ சங்கர மடத்துக்குத்தான் போறம்’

‘ போயி’

‘ மடத்த  பாக்குறம் வந்துடறம்’

‘ கொழப்பமா இருக்குது சார்’

‘என்ன கொழப்பம்’

‘ஸ்வாமிகள் கிட்ட ஆசீர்வாதம் வாங்கீக, இல்லன்னா எதாவது அட்வைஸ் கேக்க   அப்படியும் இல்லேன்னா எதாவது  பொருளாதார ஒத்தாசை வேணுன்னா மட்டும்தான்  போவாங்க’

‘ இந்த மூணு வேலயும்    நமக்கு  இல்ல. ஆனா நாம  போறம். இதுல  கொழப்பமே இல்ல  நாம   தெளிவா இருக்கணும்.  அதுதான் முக்கியம் சந்திரன் நீங்க  வாங்க’

இருவரும் எழுந்தார்கள். அவ்விடத்தை விட்டுக் கிளம்பினார்கள்.  செல்லமுத்து தன் இருப்பிடம் நோக்கி சைக்கிளை உருட்டிக்கொண்டு போனார்.

‘சைக்கிளை   சீட்டில் அமர்ந்து விடுவதைவிட சாலையில்  உருட்டிச்செல்வதில்தான் அவருக்குப்பிரியம் அதிகம்’ சந்திரன் சொல்லிக்கொண்டான்.

சிதம்பரம் பஸ் இன்னும் வந்தபாடில்லை.

‘வணக்கம் அய்யா’

‘யாரது’

‘ நான் தான் தருமங்குடி அஞ்சாபுலி.’

‘வா அஞ்சாபுலி இண்ணைக்கு இங்க ஏதோ ஜோலிபோல.’

‘வீட்டுக்காரிய  டாக்டர் கிட்ட இட்டாந்தேன். அவளுக்கு ஒரே இருமலு . தூக்கமே இல்ல ராவெல்லாம்’

‘எந்த டாக்டருகிட்ட காமிச்ச’

‘கோவிந்தசாமி டாக்டருகிட்டதான்’

‘மருந்து வாங்கியாச்சா’

‘ அவரண்டையே  மருந்துகடையும் இருக்கு. மருந்து  வாங்கிகினு போயி காட்டுணும். அந்த  டாக்டரு  நாம  வாங்குன மருந்த அவுரு எழுதின சீட்ட வச்சி பாத்துதான் நம்மள  அனுப்புவாரு. நல்ல மனுஷன். நம்ம ஊருக்கு அசலூர் அந்த விளக்கப்பாடிதான் அவுரு சொந்த ஊர்’

‘ எனக்கு நல்லா தெரியும். அவுரு அப்பா ராமசாமி படையாச்சியைக்கூட எனக்குத்தெரியும்   விளக்கப்பாடி  நஞ்ச  வயல்ல அவுரு ஏர் புடிச்ச ஓட்டுனத பாத்து இருக்கன். அவுங்க  வீட்டுல   டாக்டரோட அம்மா சந்திராவர்ணம்னு. அவங்க கையால மோர் வாங்கி குடிச்சி இருக்கன்.  கோவிந்தசாமி  டாக்டரோட தம்பி  வெங்கடாசலம்னு என்னோட பள்ளிக்கூடத்துல  காலேஜில  படிச்சாரு. இப்ப அமெரிக்காவுல அந்த   நியூ யார்க்குல பெரிய எஞ்சினீயர்.  சந்திரா கம்ப்யூட்டர்ஸ்னு வச்சிருக்காரு. அது  எல்லாம் இருக்கட்டும்.  இண்ணைக்கு  ஆஸ்பத்திரில  எவ்வளவு செலவு’

  டாக்டர பத்தி  ரொம்ப சேதிவ  சொன்னீங்க   இவ்வளவுக்கு எனக்கு தெரியாது.  இண்ணைக்கு  ஆஸ்பத்திரில செலவு ஆச்சி பெரிய நோட்டு ஒண்ணு. எல்லாம் மருந்து எக்ஸ்ரேன்னுதான். அந்த  டாக்டரு  என்கிட்ட  ஃபீஸ் னு எதுவும்  வாங்குல’

  சாரதம் வா புள்ள வா வண்டி வருது’ தன் மனைவிக்குக்கட்டளை தந்தார் அஞ்சாபுலி.

சாரதம் ஆடி அசைந்து வந்தாள்.

‘ நல்லா இருக்கிங்களா’ சந்திரனைக்கேட்டாள்.

‘ உடம்பு தேவலாமா இப்ப’

 ’இந்த டாக்டரு ரவ மருந்து குடுத்தாலும் பட்டுனு கேக்கும் டாக்டரு .கொவிந்தசாமின்னா அந்த ஏழுமலையாந்தான்’

குஞ்சிதம் பஸ்ஸில் மூவரும் ஏறிக்கொண்டனர்.

அஞ்சாபுலியும்  சாரதமும் இருவர் அமரும் சீட்டொன்றில் அமர்ந்துகொண்டார்கள். அந்த இருக்கைக்குப்பின்னால் இருந்த காலி இருக்கையில் சந்திரன் அமர்ந்துகொண்டான்.

‘ மூணு தருமங்குடி’ சந்திரன் கண்டக்டருக்கு சொல்லி நிறுத்தினான்.

‘அய்யா நாங்க ரெண்டு பேரு. நாங்க எங்க  சீட்டு வாங்கிகறம்’

‘பரவாயில்ல. நா வாங்குனா அது ஒண்ணும் தப்பில்ல அஞ்சாபுலி’

‘ நா என்னா சொல்ல இருக்குது’

சாரதத்தைப்பார்த்து ‘பாத்தியா சாமிய’ என்று சொல்லிக்கொண்டார்.

‘ உங்கிட்ட  ஒரு சேதி மறந்து போனேன்’

‘என்ன சேதி’

‘ நீ வாங்குன  பசுமாட்டுக்கு எங்க ஆபிசு அய்யாவுக்கு நீ ஐநூறு கொடுத்த. அத அய்யாகிட்ட சேத்துட்டேன். அய்யா  அவுரு பசுமாட்டுக்கு  இது போதும்னு  உங்கிட்ட  சொல்ல சொல்லிட்டாரு’

‘ அந்தப்  பசுவ எப்பிடி கெட்டாலும் இண்ணைக்கு ரூவா  மூவாயிரத்துக்கு கொறஞ்சி வாங்க முடியாது.   அந்த கெட கட்டுற  கோனார கேட்டாலும் அதுதான் சொல்லுவாரு. கறக்குற பாலுவச்சிதான  மாட்டுக்கு வெல. நா இன்னும் ரெண்டாயிரத்து ஐநூறு குடுக்கணும். பாத்து குடுத்துடுவேன்னு சொல்லுங்க’

‘ அதெல்லாம் இல்ல அஞ்சாபுலி. சார் சொன்னா சொன்னதுதான். சாருக்கு எதுவும் நீ தரவேணாம். உம்  மாட்ட நீ  நல்லா  பாத்துக்க அந்தப்பசு மாடு இனி உன்னுது’

அஞ்சாபுலி கையெடுத்து கும்பிட்டு’ மகராசன் எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும். கொடுக்குற கை கொடுக்குற கையிதான்.  பூமில மழ மாரி பின்ன எப்பிடி பேயுதுன்ற’ சொல்லி நிறுத்தினான்.

சாரதமும் இந்த சம்பாஷணையை க்கேட்டுக்கொண்டேதான் இருந்தாள்.

‘ நல்ல மனுஷாள்  பூமில  அத்துடல ’ சாரதம் அவள் பங்குக்கு சொல்லி முடித்தாள்.

‘எல்லாம் உங்க ராசில. எனக்கும் கொஞ்சம் வெளிச்சம் கெடச்சி இருக்குன்னு சொல்லுணும்’

 மாடு  ரொம்ப ‘ராசியான மாடு’ சாரதம் அஞ்சாபுலியோடு சேர்ந்துகொண்டாள்.

பேசிக்கொண்டே  மூவரும் வந்ததில் நேரம் போனதே தெரியாமல் இருந்தது.

வண்டி தருமங்குடி நிறுத்தத்தில் நின்றது. மூவரும் இறங்கினர்.

எதிரே மாட்டுவண்டியை ஓட்டிக்கொண்டு  மாடசாமி வந்துகொண்டிருந்தார். சந்திரன்  பேருந்திலிருந்து இறங்கி நடந்து வருவதைப்பார்த்துவிட்டார்.

அஞ்சாபுலியும் சாரதமும் பைய நடந்து வந்தனர்.

‘என்ன எக்சேஞ்ச் என்ன சேதி  அஞ்சாபுலியோட வரீர்’

‘ நா எப்பவும் வர்ர வண்டில வர்ரன்’

‘ என் வீட்டுல கொஞ்சம் உடம்பு முடியல. நா அத இட்டுகினு  டாக்டர பாத்துட்டு வர்ரன்’

‘ஆக எல்லாம் ஒண்ணா வர்ரீங்க’

‘ ஆமா அதுவும் சரிதான்’ என்றான் அஞ்சாபுலி.

‘ எனக்கு வரவேண்டிய பசு மாடு உங்கிட்ட போயி சேந்திடுச்சி. அண்னைக்கு சேத்தியாதோப்பு சந்தையில ஒரு திருட்டு மாடு வாங்குன பஞ்சாயம் நா போயிட்டேன். இல்லன்னா நா தான் கெடைக்கு போயி இருப்பேன். மாட்ட  அந்த ஆபிசருகிட்டேந்து விலைக்கு புடிச்சி இருப்பன். உனக்கு நரி முகம், இந்த  அய்யிரு உனக்கு ஒத்தாசை அத்தையும் சொல்லுணும்’

‘ உங்க கிட்ட இல்லாத மாடா என்ன ஆண்ட நீங்க பேசுறது’

‘ ஆண்டம்ப  பூண்டம்ப ஆனா மாடு  எனக்கு வருமா சொல்லு, அந்த மாட்டு கடன அடச்சிட்டு வர்ரியா என்ன’

‘ நா  அந்த பசு மாட்ட ஒங்களுக்கு ஓட்டிவுடறன் நீங்க வச்சிகுங்க, ஆச படுரீங்க’

‘என்ன பேசுறே’ என்றாள் சாரதம்.

‘ எனக்கு அந்த மாடு வேணாம். ஊர சுத்திபுட்டு வர்ர அந்த பசு மாட்ட  நீ பாத்து எனக்கு  குடுக்கணும் நா அத உன்கிட்டேந்து  வாங்கிகிணும்’

‘ இப்புரம் மாட்ட பத்தி நீங்க பேசப்பிடாது’

‘ வார்த்த தடிச்சி வருது’

‘இந்தா அரீ இந்தா அரீ’ வண்டி மாடுகளை தட்டி ஓட்டினார் மாடசாமி.

சந்திரன் எதனையும் காதில் வாங்கிக்கொள்ளாமலேயே வேக வேகமாய்த்தன் வீடு நோக்கி நடந்தான்’

‘ நீ நானும் களத்து மோட்டுல பேச்சிக்கிணும் கொண்டுகிணும். நாளயும் பின்னயும் அந்த ஜோலிவ  இருக்கு.  அஞ்சாபுலி. நினப்புல வயி’

வண்டியை சிதம்பரம் சாலையில் திருப்பி ஓட்டிக்கொண்டு போனார்  மாடசாமி.

‘ மாட்டுக்கு தீனி  பாத்து வாங்குணும். காளைக்கு லாடம் தேஞ்சி மாஞ்சி  கெடக்கு. அத வெள்ளாத்தங்கரை ஆசாரிகிட்ட போயி சரி பண்ணணும்.  பெறவு தான் வருணும்’ சொல்லிக்கொண்டே வண்டியை ஓட்டினார்.

                                                22.

மாத்ருவும்  ரகுவும் கடலூருக்குப்போவதற்குத்தயாரானார்கள். மணா அவர்களோடு சேர்ந்துகொண்டார்.

‘என்ன மணா  இன்னும் கடலூர் விலாசம் தரலியே’ மாத்ரு ஆரம்பித்தார்.

‘விலாசம்  இதோ  நான் என் வாயாலேயே சொல்றேன். நீங்க கடலூர் பஸ் ஸ்டேண்டுல இறங்குறீங்க. மஞ்சகுப்பத்துக்கு ஷேர் ஆட்டோவில இல்லன்னா டவுன் பஸ்ல  போங்க.. போஸ்டாபீஸ்   ஸ்டாப்பிங்ல எறங்கி  கலெக்டர் ஆபிசு ரோடு மேல போனீங்கன்னா எஸ்.பி ஆபிசு வரும்.. எஸ் பி ஆபிசுக்கு லெஃப்ட் ஒரு சந்து அதுல திரும்பி  இன்னொரு   ஒரு லெஃப்ட்ல  போனா கடைசி வீடு அந்த  மாடி  வீடு. பத்திரம் எழுதுறவர்  அதாவது  டாகுமெண்ட் ரைட்டர் கருணாகரன் வீடு. அவர் வீட்டுல முதல்மாடி. அதுல குடியிருக்காங்க கஜாவோட அப்பா அம்மா வாடகை வீடுதான்’

‘கிழக்க பாத்த வீடா மேற்கு பாத்த வீடா’

மேற்கு பாத்த வீடு’

’ அவுங்க வீட்டுல இருப்பாங்களா’

‘இருப்பாங்க கஜா சொன்னதுதான்’

ரகு,   மணா மாத்ரு  பேசிக்கொண்டிருப்பதைக்கவனித்தார்.

‘ எங்களுக்கு  கடலூர்ல  கரெக்டா என்ன வேல அதச்சொல்லுங்க’

‘ என்ன மாத்ரு விடிய விடிய கத கேட்டு சீதைக்கு  ராமன் சித்தப்பன்றீர்’

‘ எதயும் கரெக்டா பேசுணும்ல’

‘ கஜா மணா ரெண்டு பேரும்  ஒரே ஆபிசுல  உத்யோகம் பாக்குறாங்க. ஒத்தரை ஒத்தர் விரும்புறாங்க. அவுங்க  ரெண்டு பேரும் திருமணம் பண்ணிக்கணும்னு  தீர்மானமா இருக்காங்க.. இந்த  சமாச்சாரம்  அவுங்க பேரண்ட்ஸ்க்கு போகணும். இதுதான் உங்க வேல’

‘ ரகு வேற எதாவது’

‘ மணா என்ன ஜாதி மதம்னு கேப்பாங்க’ ரகு  பயணத்தின் முக்கியமான  பகுதிக்கு வந்தார்.

‘எது உண்மையோ எது நமக்கு தெரியுமோ அத சொல்லிடறம்’

’ நாங்க ஜாதியில  செம்படவங்க இத   அவுங்ககிட்ட  கண்டிப்பா சொல்லிடுங்க’  மணா அழுத்தமாகச்சொன்னார்.

  கடலூர் அட்ரஸ் சொல்லியாச்சி அங்க  என்ன  பேசணும் செய்யணும்னு சொல்லியாச்சி அவ்வளவுதான்’ மாத்ரு முடித்துக்கொண்டார்.

‘மணா கஜாவோட அப்பா பேரு அம்மா பேரு உத்யோகம் ஒண்ணும் சொல்லல’

‘ரகு,  கஜா  அப்பா  பேரு ராகவன் அம்மா பேரு ராஜி ,ரெண்டு பேரும் டீச்சர் கடலூர் முனிசிபல் ஸ்கூல்ல’

‘பேரு எல்லாம்  ஞாபகம் வச்சிகுங்க ரகு’

‘அட்ரஸ்ஸ நீங்க மறந்துடாதீங்க மாத்ரு’

ரகுவும் மாத்ருவும் கடலூருக்குப்புறப்பட்டார்கள்.

‘ வெற்றியோடு திரும்புக’  மணா  அவர்களுக்கு ச்சொல்லி அனுப்பினான். சேக்கிழார் லாட்ஜ் லிருந்து ரகுவும் மாத்ருவும் மணிமுத்தாற்றங்கரைக்கு நடந்து வந்தார்கள்.

‘ ஆத்து வழியாதான் போறம்’

‘அதுதான் ஷார்ட் கட்’

இருவரும்  மணலில் நடந்து ஆற்றைக்கடந்து கடலூர் சாலையில் போய் ஏறிக்கொண்டார்கள். பாலக்கரை பேருந்து நிறுத்தத்தில்தான் கடலூருக்கு பஸ் பிடிக்கவேண்டும். கடலூருக்கு ஒன்றன் பின் ஒன்றாக பேருந்து வருவது வழக்கம்.

‘ நல்ல பஸ்ஸா பாருங்க மாத்ரு’

‘ இடமும் இருக்கணும் அதுல’

இருவரும் பேசிக்கொண்டார்கள்.

வீடியோ வைத்த முருகன் பஸ் வந்தது. அதன் பின்னால் அரசுப்பேருந்து வந்தது.

இருவரும் அரசு ப்பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டார்கள்.

‘இது திருச்சிலேந்து வர்ர பஸ் நெய்வேலி வடலூர்  குறிஞ்சிப்பாடி குள்ளன்சாவடி அப்புறம் கடலூர் ஓட்டி ங்கற ஒல்ட்  டவுன் இதுதான் ஸ்டாப்பிங்க் வண்டி  சீக்கிரம் போயிடும்’

‘ரொம்ப சவுகரியம்’

 பெரியார் நகர் முந்திரி பண்ணை என வண்டி சென்றுகொண்டிருந்தது. கோவை வேளாண் பல்கலைக்கழத்துக்குச்சொந்தமான  முந்திரி ஆராய்ச்சிப்பண்ணைதான் இது.

‘செம்மண் பூமி முந்திரி செழிப்பா வளரும் அதனாலதான் இந்த பண்ணய இங்க வச்சிருக்காங்க பூவராகன்னு ஒரு அமைச்சர் அப்ப   பெரும்தலைவர் காமராஜர் முதல்வரா இருந்தாரு.இந்த முதுகுன்றத்துக்காரர்தான் பூவராகன். அவர் முயற்சிலதான் இந்த ஆராய்ச்சி பண்ணையும் வந்துதும்பாங்க’

மாத்ரு விளக்கமாகச்சொன்னார்.

நெய்வேலி சமீபித்தது. நிலக்கரி சுரங்கத்திலிருந்து அகற்றப்பட்ட களிமண் மலையெனக்கொட்டிக்கிடந்தது. அனல் நிலைய கோபுரங்கள் கண்களில் பட்டன. சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் பெரிய ஏரி ஒன்றில் சமுத்திரமாய் க்காட்சி தந்தது.

‘ காடுதான் மண் உள்ள போய் கரியா மாறி இருக்குன்றாங்க. அப்ப அங்க இருந்த விலங்கு மனுஷன் எல்லாம் என்ன ஆனாங்களோ’

‘ விலங்குகள்  எல்லாம் பெட்ரோலா மாறியிருக்கும்னு சொல்றாங்க’

‘இங்க நிலக் கரி கிடைக்குது சரி  ஆனா பெட்ரோல் கிடைக்கலியே’

‘அது எல்லாம்  வேற ஒரு எடத்துக்கு போய் இருக்கும்’

மாத்ருவும் ரகுவும் பேசிக்கொண்டார்கள். பேருந்து நெய்வேலியைத்தாண்டி போய்க்கொண்டிருந்தது.

‘இப்ப வடலூர் வரும் பாருங்க ரகு’

‘ வள்ளல் ராமலிங்கர் ஊரு தானே’

‘ ராமலிங்கர் ஆண்டவனை ஜோதியா வழிபட்ட இடம் சத்ய ஞானசபைன்னு பேரு தோ தோ தெரியர்து பாருங்க’

‘ தைப்பூசம் இங்க விசேஷம் மாசா மாசம் பூச நட்சத்திரம் அண்ணைக்கும் ஜோதி காட்டுவா ஆனா ஏழு திரை நீக்க மாட்ட ஆறு திரை நீக்கிதான் ஜோதி காட்டுவா’

‘திரைன்னா’

‘அக்ஞானம் சொல்லுறது’

  ஏழு திரைய எண்ணைக்கு நீக்கி நாம ஆண்டவனை பாக்குறது’

‘ ஒரு ஐதீகம் அவ்வளவுதான்’

‘ரொம்ப  உள்ள போக வேண்டாம் அப்பிடி அப்பிடி போயிண்டே இருக்கணும்’

‘வாடி பயிரைக்கண்டபோதெல்லாம் வாடினேன் இது வள்ளலார் வாசகம்’

‘ ரொம்ப ஃபேமஸ் வரி’

இருவரும் பேசி முடித்தனர்.

‘ வடலூர் குறுக்கு ரோடு எறங்கு’ கண்டக்டர் கத்திக்கொண்டு இருந்தார். வெள்ளரிப்பிஞ்சு விற்கும் சிறுவர்கள் ஓடி ஓடி பேருந்தில் அமர்ந்துள்ள மக்களுக்கு போணி செய்துகொண்டு இருந்தார்கள்.

‘ ஒரு நாளைக்கு உனக்கு என்ன  தம்பி சம்பளம்’

‘ வெள்ளரி பிஞ்சு வேணுமா  மொத  நீ அத சொல்லு’

மாத்ரு ஏம் மாத்ரு இதெல்லாம்’

‘சும்மா கேட்டேன்’

வண்டி குறிஞ்சிப்பாடி சாலையில் சென்றுகொண்டிருந்தது.

‘ வடலூர்ல பீங்கான் ஃபேக்டரி ரெண்டு இருக்கு’

 நம்ம‘சந்திரன் இங்க மொதல்ல சேஷசாயின்னு ஒரு இன்சுலேட்டர் ஆலையில் வேல பாத்தாராம். அப்பறம்தான் டெலிபோனுக்கு வந்து இருக்கார்’

‘ என்னண்டயும் சொன்னார்’

பேருந்து வேகம் வேகமாய்ச்சென்றது.

‘அடுத்து குள்ளன் சாவடி அப்புறம் கடலூர் ஓல்ட் டவுன் அதான்ஓ டிம்பாங்க’

‘ கடலூர்  கிட்ட வரவர கொஞ்சம் பயமாகூட இருக்கு ரகு’

‘இதுக்கே  நமக்கு பயம்னா கஜா அந்த பொண்ணுக்கு அவ நிலமை எப்பிடி இருக்கும்’

‘பொண்கள் தைர்யமா இருக்காங்க. எப்பவும் நம்ப தாய் தந்தையர விட்டு  ஒரு நாள் போயிடுவோம்னு மெண்டலா பிரிபேர் ஆயிடறாங்கன்னு நினைக்கிறேன்’

பொண்களுக்கு தைர்யம் ஜாஸ்தி ஆனா வெளியில தெரியாது’

‘ வெல் செட்’ 

கடலூர் நெருங்கிக்கொண்டிருந்தது.  வங்கக்கடல் காற்று ஜில்லென்று வீசியது. பேருந்தில் இருந்தவர்கள் சற்று மகிழ்ச்சி பாவித்தார்கள்.

‘ ரகு பாருங்க இம்ப்ரியல் ரோடுன்னு போட்டு இருக்காங்க’

‘ நா பாத்து இருக்கேன், இங்கதானே  வெள்ளக்காரன் செயின் டேவிட் கோட்டையை கட்டி இருக்கான்’

‘அது மஞ்சகுப்பத்துல’

‘அடுத்த ஊரு.  மஞ்சசகுப்பம் . அங்க  அந்த கலக்டரேட்.  போலிஸ் எஸ்பி ஆபிசு  டிஸ்ட்ரிக்ட்  கோர்ட் எல்லாம் பாருங்க . எல்லாம் அவன் கட்டுனது’

வண்டி கடலூர் பேருந்து நிலயம் அடைந்தது. ரகுவும் மாத்ருவும் ஆட்டோ ஒன்று பிடித்தார்கள்.

‘எதானு வாங்கிண்டு  போகணுமா’

‘ ஏன் சும்மா இருங்க மாத்ரு அவுங்க கடுப்பு ஆயிடுவாங்க’

‘ நீங்க சொல்றத பாத்தா பயமாகூட இருக்கு’

‘ பயம் வேண்டாம் விடுங்க’

ஆட்டோ அசுர கதியில் சென்றது. மஞ்சகுப்பம் பெரிய மைதானம் தாண்டியது/ இருவரும்  மாவட்ட அலுவலகங்களை ப்பார்த்துக்கொண்டே வந்தார்கள்.

‘ டாகுமென் ரைட்டர் வீடுதானே’ ஆட்டோக்காரன் கேள்வி வைத்தான்.

‘ வந்தாச்சி இறங்குங்க’

ரகுவும் மாத்ருவும் இறங்கி கேட்டைத்திறந்துகொண்டு மாடிப்படி ஏறிப்போனார்கள்.

  நெற்றியில் வடகலை நாமத்தோடு ராகவன் வீட்டு வாயிலில் நின்றுகொண்டிருந்தார்.

‘வாங்கோ நமஸ்காரம் நாங்க’

  நமஸ்காரம் சார்’

‘ நாங்க முதுகுன்றத்துலேந்து வர்ரம்’

‘’எம் பொண்ணு கஜலக்‌ஷ்மி அங்க போஸ்டாபீசுல இருக்கா’

‘ நாங்களும் உங்ககிட்ட ஒரு சமாஜாரம் பேசணுன்னுதான் வந்தம்’

 ’நாங்க  ஸ்ரீவைஷ்ணவா’

மாத்ரு அதிர்ந்துபோனான்.

‘ உங்களத்தான்  பாத்துட்டு ஒரு  விஷயம் பேசிட்டு போலாம்னுதான் வந்தோம்’

‘ எங்காத்துல பொண் கொழந்த  கல்யாணத்துக்கு இருக்கா அதான் வந்தேளோ நாங்க வடகல ஸ்ரீவைஷ்ணவாளாச்சே’

ராகவனின் மனைவி வீட்டின் உள்ளேயிருந்து வந்தாள்.

‘ எல்லோரும் வாங்கோ’

மாத்ருவும் ரகுவும் வீட்டின் உள் நுழைந்து அமர்ந்துகொண்டனர்.

’ தேர்த்தம் தரட்டா’ மாமி கேட்டாள்.

‘ கையில வச்சிண்டு இருக்கம்,  வாட்டர் பாட்டில்  எங்க கிட்ட இருக்கு’

ராகவன் எதுவும் பேசாமல் அமைதி ஆனார்.

‘ நான் மாத்ருபூதம் இவர் ரகுநாதன் நாங்க முதுகுன்றம் டெலிபோன் ஆபிசுல  வர்க் பண்றம். உங்க பொண்ணு கஜலக்‌ஷ்மிய தெரியும்’

‘இப்பதான் வரன் பாக்க ஆரம்பிச்சி இருக்கன்  திருவந்திபுரம்  தேவ நாதன் கண்ணு திறக்கணும்’ ராகவன் சொல்லிக்கொண்டார்.

மாமி காபி இரண்டு டம்ளர்களில் கலந்துகொண்டு டீபாயில் வைத்தார்.

காபியின் மணம் ஜம்மென்று வந்துகொண்டிருந்தது.

ரகுவும் மாத்ருவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

‘ வெள்ளி டம்ளர் காபி’

‘மாத்ரு  அய்யங்கார் மாமா  ஆத்துக்கு எல்லாம்  போனதில்லையா என்ன’

‘ போகாம என்ன’

ரகுவும் மாத்ருவும் காபி சாப்பிட்டு முடித்தனர்.

 மாத்ரு ஆரம்பித்தார்.

‘ நீங்க ரெண்டுபேரும்  கஜாவுக்கு அப்பா அம்மா.  ஒரு சேதி உங்களுக்கு சொல்லப்போறேன். நீங்க அத எப்பிடி எடுத்துப்பேளோ. ஆனா அத உங்களுக்கு சொல்லிடணும்னுதான் நாங்க வந்திருக்கம்’

‘ என்ன பெரிய பீடிக போடறேள்’

 மாமாவின் முகம் ஜிவு ஜிவு என்று ஆகிப்போனது. மாமி குழம்பிப்போயிருந்தாள்.

ரகு ஆரம்பித்தார்.

‘ உங்க பொண்ணு ஒரு பையனை லவ் பண்றா. அவனும் அந்த ஆபிசுல வேல ப்பாக்கறான்’

‘என்ன சொல்றேள் அநியாயமா அபாண்டமா பேசிண்டே போறேள் நீங்க  மொதல்ல எழுந்திருங்கோ. எடத்த காலி பண்ணுங்கோ உங்களுக்கு ஒரு நமஸ்காரம் ஸ்வாமிகளே’ ராகவன் ஆரம்பித்தார்.

‘ அவன் அவன்னா யாரு சொல்லுங்கோ’

‘ அவன்  பிராம்ணன் இல்ல’ மாத்ரு மெதுவாகச்சொன்னார்.

‘ தேவ நாதா என்ன கவுத்துட்டயே நா  என்னப்பா தப்பு பண்ணினேன்’ தனது கன்னத்தில் பளார் பளார் என்று அடித்துக்கொண்டார்.

‘ நிஜமாதான் சொல்றேளா’

‘ தெய்வ சாட்சியா’ மாத்ரு சொல்லி நிறுத்தினார்.

மாமியின் கண்கள் பனித்தன.

‘ ஹேமாம்புஜவல்லி நீ என்ன கை விட்டுட்டயே நா என்ன பண்ணுவேன்’ தன் தலையில் இரண்டுமுறை அடித்துக்கொண்டார்.

ராகவன் தன் மனைவியின் கரங்களை ப்பிடித்துக்கொண்டு அழுதார். கண்களிலி ருந்து நீர்  கொட்டிக்கொண்டிருந்தது.

‘ மோசம் போயிட்டோம்டி ராஜி  நா  படிக்க வச்சேன்  எனக்கு மொதல் போயிட்துடி’

‘ நீங்க பொய் ஒன்ணும் சொல்லலயே’

ரகுவும் மாத்ருவும் அமைதி ஆயினர். மாத்ருவுக்கு கண்கள் பனித்தன.

‘ மாத்ரு கண்ட்ரோல் யுவர் செல்ஃப்’ ரகு  சொல்லிக்கொண்டார். அவருக்கும் நிலமை கஷ்டமாகவே இருந்தது.

‘ என் பாக்கி குழந்தைகள் ரெண்டு சாப்பிட ஆத்துக்கு வர்ர நேரம். நீங்க  இப்பவே எடத்த காலி பண்ணுங்கோ.  நாங்க ரெண்டு பேருமா  முதுகுன்றம் வரம்.  என் கொழந்தைகிட்ட பேசணும். அந்த கஜாகிட்ட  நாங்க பேசணும். கடவுள் என்ன  பிச்ச எனக்கு  போடறாரோ தெரியல’ மாமி சொல்லி முடித்தாள்.

மாத்ருவும் ரகுவும் எழுந்துகொண்டனர்.

‘இந்த சமாஜாரம் ஊர்ல யாருக்கும் தெரியுமா என்ன’

‘தெரியும்’ மாத்ரு பதில் சொன்னார்.

‘ஸ்வாமி’ என்றார் அழுதுகொண்டே ராகவன்.

மாமி கண்களை மூடிக்கொண்டு பெருமாளை தியானித்துக்கொண்டு இருந்தார்.

ராகவன் கட கட என்று ஒரு சொம்பு தண்ணீரைக்குடித்து முடித்தார்.

‘எனக்கு வயித்த கலக்கறது ராஜி’ சொல்லிக்கொண்டே பாத் ரூமுக்குள் சென்றார்.

ரகுவும் மாத்ருவும் வீட்டைவிட்டு வெளியே வந்தனர்.

‘ ரொம்ப சங்கடமா இருக்கே’

‘ சங்கடம்தான் வேற வழி இல்லயே மாத்ரு’

இருவரும்  நடந்து மஞ்சகுப்பம் போஸ்டாபீஸ் ஸ்டாப்பிங்க் வந்து  சேர்ந்தார்கள். அருகிலிருந்த ஆனந்த பவனில் மதிய உணவு முடித்துக்கொண்டு கடலூர் பேருந்து நிலையம் வந்தார்கள்.  முதுகுன்றம் பேருந்து எங்கே என்று தேடிப்பிடித்து  அமர்ந்துகொண்டார்கள். வண்டி முதுகுன்றம் நோக்கிப்புறப்பட்டது

                                            23.

ராகவன் சாரும் ராஜி டீச்சரும்  அரவர் மனதோடு போராட்டம் நடத்திக்கொண்டிருந்தனர்.

‘ராஜி எனக்கு இப்பவே கஜாவ பாக்கணும்’

’எனக்கும்தான்’

கஜாவின் தங்கையும் தம்பியும் மதியம் லஞ்சிற்காக வீடு வந்தனர். குழந்தைகளிடம்  கஜா சம்பந்தமாய் எந்த விஷயமும் சொல்லவேண்டாம் என முடிவு செய்தனர்

‘ஏம்மா அப்பா முகமே நன்னா இல்ல’

‘என் முகம்’

‘ உன் முகமும்தான் என் என்ன ஆச்சுமா’

‘ ஒண்ணும் இல்லேடி’

தங்கையும் தம்பியும் சாப்பிட்டு முடித்தனர்.

‘எப்ப வருவேள்’

‘இது என்ன கேள்வி எப்பவும் மாதிரிதான். அக்கா காலேஜ் விட்டு வருவா. நா ஸ்கூல் விட்டா வருவேன்’

‘இல்ல நானும்  அப்பாவும் இண்ணைக்கு கொஞ்சம்வெளில போலாம்னு இருக்கம்’

‘ நானும் வரேன்’

‘ நானும்தான்’

‘இல்லப்பா ஒரு மாப்பிள்ள ஆத்துக்கு போறம். கஜாவுக்குதான்’

‘கஜாவுக்கா’ என்றாள் அவள்.

‘ஆமாம் பின்ன உனக்கா’ என்றான் அவன்

‘ மாப்பிள்ள ஆத்துக்கு  மொதல்ல போறச்சே கூட்டமா போப்படாது’

‘அது சரிதான்’ என்றனர் இருவரும்.

‘ நாங்க முதுகுன்றம் போறம்’

‘ அப்பிடியா’ என்றாள் அவள்.

‘ என்னமோ தெரிஞ்ச மாதிரி பேசறே’

‘இல்லம்மா எனக்கு என்ன தெரியும்’

‘ குழந்தைகள் கிட்ட விளையாடாதே ராஜி’ ராகவன் கெஞ்சிக்கேட்டுக்கொண்டார்.

‘ ஏம்மா நீங்க இன்னும் சாப்பிடலயா’

‘பசிக்கல’

‘அப்பிடியா’ என்றாள் அவள்.

‘ உங்க ரெண்டு பேருக்கும் லீவு அதான். எங்களுக்குதான் ஸ்கூல் காலேஜ் ரெண்டுமே லீவு விடல ஸ்பெஷல் கிளாஸ் அது இதுன்றா’

‘ நீங்க படிக்கறதுன்னா தனியார் நிறுவனம்ல அதெல்லாம். சுய நிதில நடத்தறா சுய ஆட்சி மாதிரின்னா’

ராகவன் விளக்கமாகச்சொன்னார்.

குழந்தைகள் இருவரும் மதியம் சாப்பாடு முடித்துத் தங்கள் தங்கள் கல்விக்கூடங்களுக்குச்சென்றனர்.

‘ கீழ் வீட்டுல சாவி  அவுஸ் ஓனர் கிட்ட  குடுத்துட்டு போறன்’

ரெண்டு குழந்தைகளும் தலையை ஆட்டினர்.

’ நமக்கு சாப்பாடு’

‘ அது ஒண்ணுதான் குறச்சல்’

பெண் குழந்தை தந்தை சொல்வதைக்கவனித்தாள்.

குழந்தைகள் இருவரும் புறப்பட்டனர்.

ராகவனும் ராஜியும் ரசம் மோர் இவைகளை சாதத்தில் போட்டு க்கரைத்து தலா ரெண்டு டம்பளர்கள் குடித்து பசியாற்றிக்கொண்டனர்.

‘ நடக்க தெம்பு வேணுமே’

‘ ஆமாம் ராஜி’

‘துக்கம் வந்தா செத்த கூடப்பசிக்கறது’

‘ நாம கடலூர் பஸ்ஸ்டேண்டு போறம்.   அங்க எதிர்த்தாப்புல கடில நதிக்கரையில இருக்கற ஆஞ்சனேயர சேவிச்சிண்டு பொறப்படறம்’

   சேதிய சொல்லிட்டு பொறப்படலாம்’

’ அவ  கஜா இருக்கணுமே’

‘ இல்லாம எங்க போறா’

‘ அவ ரூம்ல இருப்பா. முதுகுன்றம் டவுன்ல ஜெயில் தெருன்னு இருக்கு. அந்த தெரு கடைசில அந்த ஹாஸ்டல் இருக்கு’

‘ நீங்கதான் பாத்து இருக்கேள்’

வீட்டுகதவை ப்பூட்டி சாவியை கீழ்வீட்டு ஹவுஸ் ஓனரிடம் கொடுத்துவிட்டு இருவரும் நடந்தே மஞ்சகுப்பம் வந்தனர். போக்கு ஆட்டோ ஒன்றில் ஏறிப்பேருந்து நிலையம் வந்தனர்.

ஆஞ்சனேயர் கோவில் நோக்கி விரைந்தனர். துளசி  மாலை ஒன்றை வாங்கி ஆஞ்சனேயருக்கு சாத்திப் பிரார்த்தனை செய்தனர்.

‘ எல்லாம் நீதாண்டா அப்பனே’

சொல்லிக்கொண்டு பேருந்து நிலையம் வந்து திருச்சிராப்பள்ளி செல்லும் பேருந்து ஒன்றைத்தேடி அமர்ந்துகொண்டனர்.

ராகவனின் கண்கள் மீண்டும்  குளமாகி இருந்தது.

‘ நான் என்ன பண்ணுவேன்’ ராஜி சொல்லிக்கொண்டாள்.

பேருந்து புறப்பட்டது. விரைவாகவே சென்றது.

‘எங்க எறங்கறம்’

‘ முதுகுன்றம் பாலக்கரையிலதான்’

‘ அங்கேந்து எப்பிடி’

‘ஆட்டோ வச்சிகலாம் நடந்து போலாம்’

‘இத்தன சட்டுனு வந்துட்டம்’

பேருந்து பாலக்கரை நிறுத்தத்தில் நின்றது. ராகவனும் ராஜியும் இறங்கி நடந்தார்கள். மணி முத்தா நதி பாலத்தின் மீது  சென்றுகொண்டிருந்தார்கள்.

கடைத்தெரு வந்தது. நான்கு முனை சந்திப்பொன்று கடந்தார்கள்.

‘ நம்ம கஜா மாதிரிக்கு இருக்கு’

‘ஆமாம்’

 கணேஷ் பவன் வாயிலில் இருவரும் நின்றுகொண்டிருந்தார்கள். பெற்றோர் வருவதை  கஜா கவனித்து விட்டாள்.

‘ மணா  தோ  எங்க அம்மா அப்பாதான்  வராங்க’

‘ மாத்ரு ரகு கடலூர்  போனதும் இந்த  எஃபக்ட் இருக்கலாம்’

‘ஆமாம் நான் பாத்துட்டு வந்துடறேன்’

‘ எங்க வர்ரது நீ,     பெறகு சேதி சொல்லு.  நான் என் ரூமுக்கு போறன் கடலூர் போன  மாத்ருவும் ரகுவும்  இந்நேரம்   ரூம்ல இருப்பாங்க’

‘ அவுங்க பின்னாடியே இவுங்க வந்திருக்காங்க மணா’

‘ இருக்கலாம்’

‘ நான் கெளம்பறேன் நீ பாத்துகோ. பொறுமைதான் முக்கியம்’

‘ஏண்டி அந்த கழிசடயா கூட நிக்கறான்’ ராகவன் ராஜியிடம் கேட்டார்.

‘ வாய பொத்துங்கோ’

‘ மீச கிருதா வச்சிண்டு கண்றாவியா இருக்காண்டி’

‘இப்ப  நாம அவ  ரூமுக்கு போயி என்ன பண்ணறது’

‘ நா கூப்பிடறேன் கஜான்னு’

‘ அது சரிதான். இப்படியே பெரிய கோவில் தெற்கு கோபுர வழியா உள்ள போயி அங்க  நாம பேசிண்டு இருக்கலாம்’

‘ கஜா பாத்துட்டா  நம்மள   தோ  வராளே’

‘ அந்த பிர்மகத்தி வேற எங்கயோ போறான்’

‘சும்மா இருக்கமாட்டேளா’

கஜா அருகே வந்தாள்.

‘ அம்மா அப்பா எல்லாரும்’ வாங்கோ’ கஜா ஓங்கிச்சொன்னாள்.

‘வயத்துல நெருப்ப கட்டிண்டுன்னா வரம்’

‘ ஏன்’

‘ ஏனா  நன்னா இருக்கு’

‘ அவன் யாரு உன்கிட்ட பேசிண்டு இருந்தவன்

‘அவர்தான் அவர்’

‘யாரு’

‘இன்னும் என்ன யாரு மணான்னு பேரு மகேந்திரன் என்னோட வர்க் பண்றார்’

‘இவந்தானா அது’

‘ நாம மூணு பேரும் கோவிலுக்கு தெக்கு கோபுரம் வழியா போறம். ஆழப்புள்ளயார் கோவில் பிரகாரத்துல ஒக்காந்துண்டு பேசறம் உங்கிட்ட  நிறைய பேசணும்’

‘ரொம்ப சரி போலாம்’ கஜா பதில் சொன்னாள். மூவரும் பெரிய கோவிலுக்குள் நுழைந்து ஆழத்துப்பிள்ளையார் பிரகாரத்தில் அமர்ந்துகொண்டார்கள்.

‘ உம் முடிவு என்ன சொல்லு’

‘ எம்முடிவு அதுதான்’

‘ அவந்தானா’

‘ஆமாம்பா’

‘ அப்பாவா   சரிதான்   ஒரு அப்பா மாதிரி என்ன வக்கலயே நீ’

கஜா பேசாமல் இருந்தாள்.

‘டீ என்னடி இது பச்ச கொழந்தையா நீ நம்ம ஆச்சாரம் என்னன்னு தெரியுமா’

கஜா  வாய் திறக்கவேயில்லை.

’ பிராம்ண ஜன்மா நாசமபோயிடும்’

கஜா மவுனம் காத்தாள்.

எந்தக்கேள்விக்கும் பதில் வரவில்லை.

‘உம் மனசுல என்ன நினைச்சிண்டு இருக்கே’

கத்திப்பேசினார் ராகவன்.

‘எங்களுக்கு என்ன சொல்ற நீ’

கஜாவின் தாய் கெஞ்சினாள்.

‘ கஜா இன்னும் ரெண்டு  பேர் உனக்கு அப்பறமா இருக்கா ஞாபகம் இருக்கா’

எதற்கும் பதில் இல்லை.

‘கல்லு பிள்ளையாரா இருக்காளே’

ஆழத்துபிள்ளையார் கோவிலில் அவ்வளவாக யாரும் உள்ளே வரவில்லை.

ஒரு கிழவி ‘ பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும்  இவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன்  கோலம் செய் துங்கக்கரி முகத்துத்தூமணியே நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா’ என்றாள். ஆழத்துப்பிள்ளையாருக்கு இந்தக்கிழவி எதுவும் தரப்போவதில்லை. இருந்தால்தானே கொடுக்க? ஆழத்துப்பிள்ளையாரும் சங்கத்தமிழ் மூன்றும் இந்தக்கிழவிக்குத்தரப்போவதில்லை. இனி அந்த கிழவிக்குத் தந்துதான் என்ன ஆகப்போகிறது.

சிவாச்சாரியார் கையில் மணி, நிவேதன நீர் சொம்பு இவைகளோடு படிகளில் இறங்கி உள்ளே வந்தார்.

‘என்ன பஞ்சாயமா’ சொல்லிக்கொண்டார்.

‘ வைஷ்ணவா இந்த கோவிலுக்கு வர மாட்டா’ நிவேதனம் தூக்கி வந்த பிராம்ணபிள்ளை அவர் பாட்டுக்கு சொல்லிக்கொண்டார். சிவாச்சாரியாரும் பிராம்ணபிள்ளையும் சாமிக்குப் பூஜை முடித்து படி ஏறி வெளியே போனார்கள்.

ராகவனும் ராஜியும் பிள்ளையாரையே பார்த்துக்கொண்டு கண்களை மூடி மூடித்திறந்தனர்.

’ நாங்க போவேண்டிது தானா’

‘ கெளம்புங்கோ’

‘ அவ்வளவுதானா’

‘ அவ்வளவுதான்’

‘ தல முழுகிடவேண்டிதுதானா’

கஜா மவுனமானாள்.

‘ உன் அப்பா அம்மா உன் எதுத்தாப்புல நிக்கறம். சொல்லு. உன் முடிவுல மாத்தம் வராதா’

‘ வராது’

‘அம்மா’ என்று அலறி அழுதாள் ராஜி.

‘ இது கோவில் ராஜி’

‘ தெய்வம் என்ன கைவிட்டுட்தே’

ராகவனும் ராஜியும் எழுந்து நின்றார்கள்.

‘ வாசல்ல கணேஷ் பவன் இருக்கு டிபன் சாப்புட்டு போகலாம்’

  நா பெத்த பொண்ணு , இதுவே கடைசியா’ சொல்லித் தேம்பித் தேம்பி அழுதார் ராகவன்.

ராகவன் ராஜி கஜா மூவரும் கணேஷ் பவனில் டிபன் சாப்பிட்டார்கள்.

ஸ்வீட் ஆர்டர் செய்தாள் கஜா.  மூவருமே ஸ்வீட் தொட்டுப்பார்க்கவில்லை.

வேண்டா வேறுப்பாய் ரவா தோசை சாப்பிட்டு முடித்தார்கள். காபி சாப்பிட்டு முடித்தார்கள்.

ராஜி கஜாவின் கைகளை கெட்டியாகப்பிடித்துக்கொண்டாள்.

‘ தைர்யமா இரு’ ராகவன் சொன்னார். அவளை ப்பார்க்கவில்லை. அவர் கண்கள் சிவந்திருந்தன.

‘ தேவ நாத ஸ்வாமி துணை உனக்கு’ அம்மா சொன்னாள்.

ராகவனும் ராஜியும்  விருட்டென்று  ஒரு ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தார்கள்.

‘ எம் பொண்ணு கஜா செத்துப்போயிட்டாடி செத்துப்போயிட்டா  ஏ ராஜி என் அடி வயறு எனக்கு பெசையறதேடி,’

கஜாவின் காதுகளில்  அப்பாவின் வார்த்தைகள்  நஞ்செனப்பாய்ந்தன

ஆட்டோ நகர்ந்து போயிற்று.

கஜா கண்கள் கலங்கி ஜெயில் தெரு நோக்கி தள்ளாடி தள்ளாடி  நடந்தாள். நாளைக்கும் அவளுக்கு  அலுவலகம் இருக்கிறது. ஸ்டேசுடரி ஆடிட் பார்டி நாளை வருகிறார்கள். அந்த நினைவு எங்கோ  ஒரு மூலையில் இருக்கத்தானே செய்கிறது.

‘எல்லாம் இந்த  பாழாய்ப்போன படிப்பால் பார்க்கும்  உத்யோகத்தால்,  அப்பா அம்மா என்னை மன்னிவே மாட்டார்கள். எப்படி மன்னிப்பார்கள்’  முணுமுணுத்துக்கொண்டே லேடிஸ் ஹாஸ்டல் படி ஏறி தன் அறைக்குச்சென்றாள். இரவு கஜா உறங்குவாளா என்ன?

ராகவனும் ராஜியும்  முதுகுன்றம் பேருந்து நிலையம் சென்று கடலூர் பஸ்பிடித்தார்கள்.  அங்கு   அவர்களின்  இரண்டு குழந்தைகள்  பெற்றோர்களின்  வருகைக்காய்க்  காத்திருக்கிறார்கள்.                                    

மணா மாத்ரு ரகு மூவரும் சேக்கிழார் லாட்ஜ் மொட்டை மாடிக்குச்சென்று பேசிக்கொண்டார்கள். மாத்ருவும் ரகுவும் கடலூர் சென்றதும் ராகவன் சாரைப்பார்த்து சொல்லவேண்டிய விஷயத்தைச்சொல்லிவிட்டு வந்ததையும் ஒன்றுவிடாமல் எடுத்துச்சொன்னார்கள்.

கஜாவின் பெற்றோர்கள் மணா கஜா காதல் செய்தி கேட்டு ஆடிப்போனார்கள். பார்ப்பதற்கே மிகச்சங்கடமாக இருந்தது. எப்படியோ அந்த காதல் விஷயத்தை அவர்களிடம் தெரிவித்துவிட்டோம். ராகவன் தன் பெண்ணிடம் இது விஷயம்  பற்றிபேசிக்கொள்வதாகச்சொல்லி எங்களை விரட்டித்தான் அனுப்பி வைத்தார்’

‘ இருக்காதா அப்பா ஆச்சே’

‘ அவர் இண்ணைக்கே  இப்பவே கூட வரலாம்’

‘ கஜாவின்  அம்மாவும் அப்பாவும் முதுகுன்றம் வந்துவிட்டார்கள். நானும் கஜாவும் கணேஷ் பவனில் காபி சாப்பிட்டுவிட்டு வெளியில் வந்தோம். அவர்கள்தான் முதலில் எங்களைப்பார்த்துவிட்டார்கள். என்னை கஜா  உடனே   இங்கே அனுப்பி வைத்துவிட்டு தன் பெற்றோரைச்சந்திக்கச்சென்று விட்டாள்

‘அனேகமாக பெரிய கோவிலுக்குச்சென்று பேசியிருப்பார்கள்’

‘ எங்க போனா என்ன எதையும் மாத்த முடியாது’

‘ அவுங்களுக்கு கஷ்டம் இருக்கத்தானே செய்யும்’

‘அது இருக்கும்தான்’

மூவரும் பேசிக்கொண்டார்கள். சந்திரனுக்கு  நடந்த இவ்வளவு விஷயத்தையும் சொல்லியாகவேண்டும் மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்பதைத்திட்டமிடவும் வேண்டும்.

’இனி  மேரேஜ்ஜை ரிஜிஸ்டர் செய்யணும் பிறகு ஒரு நாள் கொளஞ்சியப்பர் கோவில்ல திருமணத்த நடத்தி முடிக்கணும்’

‘’ இல்ல மணா மொதல்ல ரிஜிஸ்டர் மாரேஜ் பிறகு சம்பிரதாய மாரேஜ் அப்பிடி சொல்லுங்க

‘சந்திரனோட சேந்து  நாம பிறகு பேசிக்கலாம்’ ரகு முடித்து வைத்தார்.

                                                   24.

செல்லமுத்து சாரும் சந்திரனும் காஞ்சிபுரம் செல்வதாக முடிவு செய்திருந்தனர். இருவருக்கும் அன்று வீக்லி ஆஃப். ஆறு மணி டூட்டிக்கு வருவதுபோலவே சந்திரன் முதுகுன்றம் பேருந்து நிலையம் வந்துவிட்டான். அவன் பெற்றோர்கள் இது என்ன விஷயம் ஒன்றும் விளங்கவில்லையே என்றார்கள். போய்விட்டு வந்து விபரமாகச்சொல்கிறேன். இப்படிச்சொல்லிவிட்டுத்தான் தருமங்குடியிலிருந்து புறப்பட்டான். செல்லமுத்து சார் பைய நடந்தே பேருந்து நிலையம் வந்துவிட்டார்.

‘ சார் சார்’

‘ நான் பாத்துகிட்டேதானே வரேன்’

‘ காஞ்சிபுரம் பஸ் இங்கிருந்து எல்லாம் கிடையாது.  சென்னை பஸ் ஏறி செங்கற்பட்டு போய்விடலாம் அங்கிருந்து காஞ்சி பஸ்ஸை பிடிச்சிடலாம்’

‘ நல்ல யோசனை சார்’

‘ வேற வழி இல்லே சந்திரன்’

’ திண்டிவனத்தில் இறங்கி வந்தவாசி வழியாவும் காஞ்சிபுரம் போலாம் சார்’

‘அதுவும் தெரியும். அந்த பாதை நல்லா இருக்காது. காஞ்சிபுரம் போக நேரமாயிடும். வண்டிங்க  நெறயவும் இருக்காது. நல்லாவும் இருக்காது. வண்டி எல்லா ஊர்லயும் நிறுத்தி நிறுத்தி கிட்டுதான் போவான்’

‘ நீங்க சொல்றது கரெக்ட் சார்’

‘ நீங்க போயிருக்கிங்களா’

  என் அப்பா அம்மாவோட போயிருக்கேன்’

‘எப்ப’

‘ நான் சின்ன பையனா இருந்தேன். ஞாபகத்துல சரியா இல்ல’

‘சரி இப்ப போய் பாப்பம்’

இருவரும் சென்னை பேருந்து ஒன்றில் ஏறி செங்கற்பட்டு டிக்கட் எடுத்துக்கொண்டார்கள். டிரைவருக்கு பின் சீட்டுதான் காலியாக இருந்தது.

‘ ஹார்ன் சத்தம் ஜாஸ்தியா இருக்குமே’

‘ இருக்கட்டும்’

‘ ஒரு சேதி உங்கிட்ட சொல்லணும். முதுகுன்றம்  போஸ்டாபிசுல மணா ன்னு ஒரு பையன் கஜான்னு ஒரு பொண்ணு வேல பாக்குறாங்க. ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க. அந்தபொண்ணு வடகலை அய்யங்கார் அந்தப்பையன் செம்பட ஜாதி. அந்த மணா என் ஊருக்கு அடுத்த ஊர்க்காரன். எனக்கு நெருங்கிய நண்பன். அவுனுக்கு உதவி செய்யணும்னு முடிவு. நம்ம ஆபிசுல   டிரான்ஸ்மிஷன் சைடுல  இருக்குற  மாத்ருபூதம் சாரும் ரகு நாதன் சாரும் பொண்ணோட தாய் தந்தைகிட்ட இந்த விஷயம் சொல்ல கடலூர்  போயிருக்காங்கபோயிருக்காங்க. போய் வந்திருப்பாங்க. ‘

‘ரொம்ப நல்ல விஷயம் ரெண்டு பேரும் மெய்யாவே ஒருத்தரை  ஒருத்தர் விரும்புராங்கன்னா சரி, நீங்க  கட்டாயம் உதவி செய்யுங்க, ரெண்டு பேருக்குமே உறவினர்கள் யாரும்  கிட்டயே வரமாட்டங்க’

‘அடுத்து திருமணம் பதியணும். உளுந்தூர்பேட்டையில  நண்பர்  மெய்ராஸ் கான் ஒரு நண்பர் இருக்கார். உளுந்தூர்பேட்டை  சார்- பதிவாளர் அலுவலகத்துல அவுருக்குத்தெரிஞ்ச பதிவாளர் இருக்கார். நல்ல மனுஷன். மணா கஜா திருமணத்த அங்க பதிஞ்சிட்டு அப்புறமா சம்பிரதாயமா  கொளஞ்சியப்பர் கோவில்ல வச்சி முடிக்கணும். அந்த திருமண   சடங்குக்கு எல்லாம் எங்க அப்பாகிட்ட சொல்லி இருக்கன், அவர் வருவார். மணா வீட்டு புரோகிதரும் எங்க அப்பாதான்’

‘ விஷயம் முடிஞ்சி போச்சி நல்லாதான் பண்றிங்க சந்திரன் தொடருங்க வாழ்த்துகள் பலப்பல’

இருவரும் பெசிக்கொண்டே வந்தார்கள்.

செங்கல்பட்டு சமீபித்தது.

‘காஞ்சிபுரம் போறவங்க எறங்கிகலாம்’ கண்டக்டர் விசில் கொடுத்தார். வண்டி ஓரமாக நிறுத்தப்பட்டது.

‘ அந்த பாலத்துகிட்ட நில்லுங்க. காஞ்சி வண்டிங்க லைனா வரும்’

கண்டக்டர் சொல்லிவிட்டு விசில் கொடுத்தார்.

செல்லமுத்து சாரும் சந்திரனும் ஒரு காஞ்சிபுரம் பஸ்பிடித்து காஞ்சிப் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தார்கள். அங்கிருந்த சக்தி உணவகத்தில நுழைந்து காபி சாப்பிட்டார்கள். உணவகம் முழுவதும் மொட்டைத்தலையர்களாக இருந்தார்கள்.

‘ திருப்பதி போயிட்டு வந்த சனம்’

‘ ஆமாம் சார்’

‘ சாமிக்குன்னு  தாடி  வளக்கறது மொட்டை போடறது எல்லாம் வேடிக்கதான்’

‘ ரொம்ப காலமா தொடருது’

‘ மனுஷனுக்கு எதயாவது புடிச்சிகிட்டு தொங்கணும்’

‘ நம்பளயும் சேத்துதானா சார் சொல்றீங்க’

‘ நாமளும் மனுஷங்கதானே’

நடந்தே சங்கரமடம் சென்றுவிடலாம் என்று விசாரித்து செல்லமுத்துவும் சந்திரனும் நடக்க ஆரம்பித்தார்கள்.

‘ ஊரு சுத்தி பாக்கணுமா சாரு’ டூரிஸ்ட்காரர்கள் வந்து வந்து பேச்சுக்கொடுத்தார்கள்.

‘ சங்கர மடம் போறம்.’

‘ அங்க பாக்க என்னா இருக்குது’

சந்திரனுக்கு ப்பதில் சொன்னான் ஒரு டூரிஸ்ட் ஏஜண்ட்.

செல்லமுத்து அவனை ப்பர்த்துக்கொண்டார்.

‘ சந்திரன் நாம அங்கேந்து இங்க வரம். ஆனா இங்க இருக்குற ஆசாமி அங்க ஒண்னுமில்லன்னு சொல்றாரு’  செல்லமுத்து புன்னகை செய்தார்.

‘பார்வைகள் பலவிதம்’

இருவரும் சங்கரமடத்தின் வாயில் அருகே வந்து நின்றார்கள். எதிரே  சற்று அருகில் தந்தை பெரியாரின் மார்பளவு சிலை இருந்தது. கடவுளைக்கற்பித்தவன்,  முட்டாள். கடவுளைப்பரப்புகிறவன் அயோக்கியன்  கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்கிற நாத்திக கோஷங்கள் அந்த சிலைக்குக் கீழே பொறிக்கப்பட்டிருந்தன. இன்னும் சற்று அருகே ஒரு மசூதி ஒன்று கம்பீரமாக இருந்தது. அது இஸ்லாமியர்களை தொழுகைக்கு அழைத்துக்கொண்டிருந்தது. சங்கர மடம் ஒன்றும் கம்பீரமான கட்டிடம் எதனையும் வைத்துக்கொள்ளவில்லை. சாதாரணமாகத்தன் தெரிந்தது.

அருகில் துளசி மாலை வியாபாரம் செய்யும் கடை ஒன்று இருந்தது.

‘ எந்த சாமி ஊர்ல இருக்கு’ செல்லமுத்து கேட்டார்.

துளசி கட்டிக்கொண்டு இருப்பவன் பதில் சொன்னான்.

‘ பெரிய பெரியவர் காலமாயிட்டாரு.  அடுத்த பெரியவரு இருக்காரு.  இளைய பெரியவரு  சாஸ்திரங்க படிச்சிகிட்டு அதுகள தெரிஞ்சிகிட்டு வர்ராரு. ஒரு மால வாங்கிகுங்க. இருவது ரூவா குடுங்க, மேல் சட்ட கழட்டி இடுப்புல சுத்திகிலாம். அது நல்லது. நெற்றில ஒண்ணும் இல்ல ரவ சந்தனம் இல்ல குங்குமம் இல்ல திரு நீறு இருக்கணும்’

கடைக்காரரே சந்தனம் குழைத்ததுக் கிண்ணத்தில் வைத்திருந்ததைக்கொடுத்தார்.

இருவரும் சந்தனம் வைத்துக்கொண்டனர்.

‘பாழும் நெற்றியா போவக்கூடாது’

செல்லமுத்து இருபது ரூபாயை எடுத்து க்கொடுத்தார்.

‘செறுப்ப கீழ வுட்டுட்டு போங்க போவும்போது எடுத்துகலாம்’

 இருவரும் அப்படியே செய்தனர்.

‘செறுப்பு  பாத்துகறதுக்கு  எனக்கு காசி வேணாம்’

கடைகாரர் சிரித்துக்கொண்டார்.

செல்லமுத்துவும் சந்திரனும் சங்கர மடத்தினுள் நுழைந்தார்கள். முன் பக்கம் இருந்த அலுவலகத்தில் குமாஸ்தாக்கள் இருவர் மூவர் கணக்கு பார்த்துக்கொண்டிருந்தனர். மானேஜர் ஒருவர் அவர்களுடன் அதிகார தொனியில் பேசிக்கொண்டிருந்தார். அந்த நால்வரும் பிராமணர்கள் என்பது அவர்களின் பேச்சுக்களால் அறியமுடிந்தது.

எதிரே சந்திரமெளலீசுவரர்  திரிபுரசுந்தரி  விக்கிரகங்கள் அலங்கரிக்கப்பட்டு பூஜை முடிந்து கொலுவிருந்தன. ஸ்வாமிக்கு எதிரே இருந்த தாழ்வாரத்தில் மொட்டை அடித்துக்கொண்டு வெள்ளைப்புடவைக்கட்டியிருந்த பாட்டிமார்கள்  சம்மணமிட்டு அமர்ந்து ஜபம் செய்து கொண்டிருந்தனர்.

 அவர்க:ளை அடுத்து ஒரு மாமி கீச்சுக்குரலில் தியாகராஜ கீர்த்தனைகளை மனம் உருகி பாடிக்கொண்டிருந்தார்.

‘சக்கநி ராஜ மார்க்கமுலண்டக  சந்துல  தூரனேல’  ஓ மனசா’  சந்திரன் அதனைக்காதில் சிரத்தையாக வாங்கிக்கொண்டான்.

‘ எங்க அம்மா பாடுவாங்க இந்த பாட்டு’

‘இது தெலுங்கு பாட்டுதானே’

‘தியாகராஜர் கீர்த்தனை இது தெலுங்கு தான்’

அந்த இடத்தைத்தாண்டி இருவரும் வந்தனர்.  துளசி மாடம் ஒன்று பெரியதாகக்காட்சி தந்தது. அதற்கு எதிரே  பெரிய பெரியவரின் மெழுகு  சிலை ஒன்று வைக்கப்பட்ட அறை.   சிலை தத் ரூபமாக இருந்தது . உயிரோடு அவர் அமர்ந்து காட்சி அளித்துக்கொண்டிருப்பதாகவே தோற்றமளித்தது.

பிரதானமாக ஒரு பிரசங்க மண்டபம் பளிங்கு கற்களால் கட்டப்பட்டு இருந்தது. அதனை வட இந்திய பெரும் பணக்கார பிர்லா குடும்பத்தினர் அமைத்துத் தந்ததாகக்  கல்வெட்டுத் தூண் ஒன்றில் பொறிக்கப்பட்டிருந்தது.

பிராமண குடும்பங்கள் கணவன் மனைவி குழந்தைகள் என நான்கைந்துக்கு அங்கே பெரியவரின் ஆசிக்காகக்காத்திருந்தனர்.   ஆண்கள்   பஞ்ச்ச கச்சத்திலும் பெண்கள் மடிசாரிலும்  இருந்தார்கள். அவர்கள் பழக்கூடை மலர்க்கூடை என அடுக்கடுக்காக கைகளில் வைத்துக்கொண்டிருந்தனர்.

வடமொழி தேர்ந்த அறிஞர்கள் வேதம் பயின்ற கனபாடிகள் கோவில்   தர்மகர்தாக்கள் என ஒரு வரிசைக்கு அமர்ந்திருந்தனர்.

‘ ஓம்  பூர்ணமதக பூர்ணமிதம் பூர்ணாத் பூரணம் உதச்ச்யதே

பூர்ணஸ்ய பூர்ண்மாதாய பூர்ணமேவா வசிஷ்யதே

  ஓம்  ஷாந்தி ஷாந்தி ஷாந்தி ;||

மந்திரங்களைச்சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.

 இந்த மண்டபத்தை அடுத்து ஒரு தங்குமிடம் இருந்தது. சங்கராச்சாரியர்கள் உள்ளே  தங்கியிருக்கிரார்கள் என்று  அங்கிருந்த மக்கள் பேசிக்கொண்டார்கள். அந்த அறைக்கு அடுத்து பசுக்கள் சில கட்டப்பட்டு இருந்தன. கன்றுக்குட்டிகள் சில அங்குமிங்கும் ஓடிக்கொண்டு இருந்தன. அதனையும் தாண்டி ஒரு கட்டிடம் அங்கு சமையல் கூடம் மளிகை ஜாமான்கள் வைக்கும் அறை என பரந்து கிடந்தது.

 நிவேதனத்திற்கு அன்னங்களை தயாரிக்கும் பரிசாரகர்கள், அவர்களுக்கு அனுசரணையாக சில பிராமணர்கள் உடன் இருந்தனர். சமையல் பாத்திரங்கள் தாம்பாளங்கள் தூக்குகள் துலக்கப்பட்டு  பளிச்சென்று அடுக்கி வைத்தார்கள்.

வட்ட வடிவ கருங்கல்லில் சந்தனக்கட்டைகொண்டு  சந்தனத்தை அரைத்தபடி ஒரு பிராமணர் நின்றுகொண்டிருந்தார்.

‘ இங்க யாரும் வரப்பிடாது’

ஒரு குரல் அதிந்து வந்தது.

செல்லமுத்துவும் சந்திரனும் உடன் திரும்பி பளிங்கு மண்டபத்திற்கு வந்தனர்.

‘ ஜெய ஜெய சங்கர ஹர ஹர  சங்கர’ கோஷங்கள் சொல்லி அனைவரும் தொழுதபடி சம்மணமிட்டு அமர்ந்திருந்தனர்.

சிறிய பெஞ்சொன்று  கொண்டு வைத்தார்கள். அந்த பெஞ்சின் மேல் வெள்ளி த்தகடு போர்த்தப்பட்டு இருந்தது. அதனில் வீபூதியும் குங்குமமும்  வெள்ளி கிண்ணத்தில் வைக்கப்பட்டிருந்தது.. சந்தனக்கரைசல் தாங்கிய வெள்ளிக்  குவளை,  மஞ்சள் அரிசி புஷ்பம் கொண்ட தங்கத்தாம்பாளம்  இவை இவை பெஞ்சில் வரிசையாக வைக்கப்பட்டன.

 தங்க முலாம் பூசிய  தகடு போர்த்திய  தேக்கு மர நாற்காலியொன்றை தூக்கிவந்து இரண்டு பிராம்ண பிள்ளைகள்  அந்த பெஞ்சருகே வைத்தனர்.

நாற்காலியில் பட்டு பீதாம்பரங்கள் விரிக்கப்பட்டு இருந்தன. குங்கிலியப்புகை மண்டபம் எங்கும் கம்மென்று மணம் பரப்பிக்கொண்டிருந்தது.

‘ நாராயண நாராயண நாராயண’ என்ற கோஷமிட்டபடி சிவப்பு பட்டு தலையில் போர்த்திக்கொண்டு  எழுந்தருளிய  ஸ்வாமி தனது இருக்கையில் வந்து அமர்ந்தார். புன்னகைத்தார். கைகளைத்தூக்கி ஆசிர்வதித்தார். எல்லோரும் எழுந்து நின்று ஆரவாரம் செய்து ‘ நாராயணா சங்கிருஷ்ணா வாசுதேவா’ என்று முழக்கமிட்டனர்.

ஒவ்வொரு குடும்பமாக பழக்கூடை மலர்க்கூடை சமர்ப்பித்து ஆசி பெற்றுக்கொண்டனர்.  ஜாதக  நகல்கள் கல்யாண பத்திரிகை ள் கிரகப்பிரவேச பத்திரிகைகள்  குடமுழுக்கு பத்திரிகைகள்  ஜாதக நகல்கள் தொழில் தொடங்கும் ஆவணங்கள்   கல்விச் சான்றிதழ்கள்    பாஸ்போர்ட் விசாக்கள்  பணப்பெட்டிகள் சாவிக்கொத்துகள் என வைத்து வைத்து  ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டார்கள்.

சிலர் தங்கள் மனக்குமுறல்களை ஒப்புவித்துக் கண்கலங்கி நின்றார்கள்.

அனேகமாக பிராமணர்கள் மட்டுமே இருந்தார்கள். பிறர்  மிகக்குறைந்த எண்ணிக்கையில் இருந்தார்கள்.

‘ நாராயண நாராயண நாராயண’ சொல்லியபடி ஸ்வாமி  சேவார்த்திகளுக்கு அருள்பாலித்துக்கொண்டிருந்தார்.

துளசிமாலையை தட்டொன்றில் சமர்ப்பித்துச் செல்லமுத்து ஸ்வாமியை பவ்யமாய் வணங்கி நின்றார்.

சந்திரன் அருகில் நின்றான் இருவரும் மேல் சட்டை இல்லாமல்தான் இருந்தார்கள்.

‘ ஸ்வாமி  நாங்க  மதுரவல்லி கிராமம். முதுகுன்றத்துக்கு மேற்கே இருக்கு. ஊர்ல கிராம பரிவார தேவதைக்கு கும்பாபிஷேகம் ஸ்வாமி ஆசீர்வாதம் செய்யணும்’

‘ முதுகுன்றமா  அது  மணிமுத்தாற்றங்கரை ஊர்தானே’

‘ சரிதான் ஸ்வாமி’

‘ ஸ்வாமி விருத்தகிரீஸ்வரர் விருத்தாம்பிகை’

‘அப்படியே ஸ்வாமி’

‘ ஊருக்கு மேற்கே ஒரு முருகர் கோவில் தெற்கே ஒரு முருகர் கோவில் பேரென்ன’

‘ கொளஞ்சியப்பர் வேடப்பர் ஸ்வாமி’

‘ரொம்ப சந்தோஷம் கும்பாபிஷேக பத்திரிகை மடத்துக்கு அனுப்பி வையுங்கோ. நம்ப ஆசீர்வாதம் பலமா இருக்கும்’

செல்லமுத்து தலையை தாழ்த்தி ஆமோதித்தார்.

‘ கூட இருக்குறவர் ரொம்ப மவுனமா இருக்கார்’

‘ சுபாவம்ங்க வேற ஒண்ணுமில்லங்க ஸ்வாமி’

சந்திரன் தலையைத்தாழ்த்தி வணக்கம் சொன்னான்’

‘ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர சொல்லு’

சந்திரன்  ஓங்கிச்சொன்னான். ‘ஜெய சங்கர ஜெய சங்கர ஹர ஹர சங்கர’

‘’ஆசீர்வாதம் உனக்கு இருக்கு போ’

செல்லமுத்துவும் சந்திரனும் தரையில் வீழ்ந்து வணங்கி எழுந்தார்கள்.  வருகை தந்த எல்லோரும் அப்படித்தான் செய்தார்கள்.

’சங்கரமடத்தை நன்றாகப் பாத்தாச்சா’ செல்லமுத்து கெட்டுக்கொண்டார்.

‘ ஆமாம்’

  மடத்துக்குள்ள எங்க பாத்தாலும் யாரா இருக்காங்கன்னு பாத்துகிட்டிங்களா’

‘ திரும்பவும் பாத்துகுறேன்’ சந்திரன் பதில் சொன்னான்.

 நெற்றியில் சந்தனம் வைத்திருந்த  அய்யர்  வந்திருந்த எல்லோருக்கும் பொறச சருகு தொன்னையில் கொண்டை க்கடலை சுண்டல் வழங்கிக்கொண்டு இருந்தார்.

தலா ஒரு தொன்னை சுண்டல்  வாங்கிய செல்லமுத்துவும் சந்திரனும் சங்கரமடத்தை விட்டு வெளியில் வந்தார்கள்.

‘தரிசனம் ஆச்சா’ துளசி மாலைக்கடைக்காரன் விசாரித்தான்.

‘ ஆச்சு’

‘ அவுங்க அவுங்க கொடுப்பினைங்க’

செல்லமுத்துவுக்கு ப்பதில் சொன்னார் கடைக்காரர்.

செறுப்பை மாட்டிக்கொண்ட இருவரும் மீண்டும் பேருந்து நிலையம் நோக்கி நடந்தார்கள்.

‘வந்த வேல ஆச்சி’

‘ஆமாம்சார்’

‘கொறயை பஸ்ல வச்சிகுவம் சந்திரன்’

சக்தி பவனில் இருவரும் டிபன் சாப்பிட்டார்கள்.

‘ செங்கல்பட்டு பஸ் பிடிப்பம்’

காஞ்சிபுரத்தில் இருந்து செங்கற்பட்டுக்கு அனேக பஸ்கள் இருந்தன. புரோக்கர்கள்  வாலாஜா  செங்கல்பட்டு வாலாஜா செங்கல்பட்டு என்று கூவிக்கொண்டே இருந்தார்கள்.

பளிச்சென்று ஒரு பேருந்து பார்த்து இருவரும் ஏறிக்கொண்டார்கள். நல்ல இருக்கை பார்த்து அமர்ந்துகொண்டார்கள்.

‘செங்கல்பட்டு ரெண்டு’ சந்திரன் டிக்கட் வாங்கினான்.

 ’இண்ணைக்கு  சங்கரமடம் வந்தம், என்ன தெரிஞ்சிகிட்டம் சந்திரன் சொல்லுங்க’

‘எதுக்கு வந்தம்னு இன்னும் எனக்கு பிடிபடல சார்’

‘பிடிபட்டுத்தான் இருக்கும்’

‘ நீங்களே எனக்கு  சொல்லுங்க சார்’

‘ நான் கேள்வி கேக்கறேன் நீங்க பதில் சொல்லுங்க அது போதும்’

‘ ரொம்ப சரி சார்’

‘சங்கர மடத்துல காலனி ஜனங்க யாராவது உங்க கண்ணில் பட்டார்களா?’

‘இல்லயே சார்’

‘ சங்கர மடத்துல எந்த ஜனங்கள  நீங்க அதிகம் பாத்தீங்க?’

‘ பிராம்ணர்கள’

‘இதுவரைக்கும் 69 ஆச்சாரியர்கள் இந்த மடத்துல வந்திருக்காங்க அவர்கள் என்ன  என்ன ஜாதின்னு தெரியுமா?’

‘’எல்லோரும் பிராமணர்களாத்தான் இருப்பாங்க’

‘இதுல என்ன சந்தேகம் சந்திரன் எல்லாரும் பிராமணர்கள்தான்’

‘மொட்ட அடிச்சி வெள்ள புடவையில சில  மாமிகள பாத்திங்கதானே?’

‘ ஆமாம் அவுங்க விதவைங்க கணவனில்லாத கைம்பெண்கள்.’

‘ சங்கர மடத்துல  ஆபிசு இருந்துது அங்கயும் யாரு இருந்தா?’

‘ பிராமணர்கள்தான்’

‘பிராமணர் அல்லாதவர்கள பாத்திங்களா?’

‘ மடத்து வாட்ச்மென் மடத்து பசுமாடுகள் பாத்துகறது எல்லாம்  அபிராமணர்கள்’

‘பரவாயில்ல நீங்க  அபிராமணர்களைக் கவனிச்சு இருக்கிங்க’

‘ கவனிச்சேன்’

‘ இது நாள்வரைக்கும்   தகுதியுள்ள ஒரு பெண் கூட  மடத்து பொறுப்புக்கு வரல’

‘சாத்தியமில்லயே சார்’

    நல்ல ஒழுக்கத்தோட இருக்குற   விவரமா வேதம் சாஸ்திர அறிவு  முழுமையா இருக்குற     அபிராமணன் மடத்து பொறுப்புக்கு வரமுடியுமா’

‘ சாத்தியமில்ல சார்’

‘ ஒரு தலித்  எல்லாத்தகுதியும் இருந்தாலும் மடத்து பொறுப்புக்கு வர முடியுமா?’

‘ ரொம்பவும்  இருட்டா இருக்குது’

‘ ஒரு தலித் பெண்மணிக்கு எல்லாத்தகுதியும் இருந்தா?’

‘ நா என்னத்தைச் சொல்றது சார்’

‘ மடத்துல  தத்துவ ஆராய்ச்சி  தத்துவ விவாதம்   எங்கயாவது நடக்குதா,  ஒரு நூலகம் அதனுள் ஆராய்ச்சிக்கான நூல்கள் எங்கய்யாவது தெரிஞ்சிதா?’

‘ இல்லவே இல்ல’

 ‘எங்கயாவது தமிழ் மொழியில ஒரே ஒரு வரி  கடவுள  வழிபட்டமாதிரி தெரிஞ்சிதா?’

‘இல்லவே இல்லை சார்’

’போதும் சந்திரன் சங்கர மடத்தையும் பாத்தாச்சி, உங்க கிட்ட சில கேள்விகளையும் கேட்டாச்சி, இதுக்கு மட்டுமே தான் நான்   கஞ்சிபுரம்  வந்தேன்’

செல்லமுத்துசாரின் கைகளை கெட்டியாகப்பிடித்துக்கொண்டான் சந்திரன்.

‘போதும் சார் எனக்கு சொல்லவேண்டிய செய்திகளை ச்சொல்லிட்டிங்க’

‘எல்லாரும் இப்பிடி  யோசிச்சி பாக்கணும்.  மதம்னா அது எப்பிடி  அந்த மதத்த பின்பற்றுகிற எல்லார்க்கும் பொதுமையான ஒன்றாக இருக்கணும்ல’ அது  இல்லாம எப்பிடி   ஒரு மதம் இருக்கமுடியும்? அது உலகத்துல எந்த மதமாதான் இருக்கட்டுமே’

‘சார்  எக்ஸ்பிரஸ் புடிக்கறவங்க  எல்லாரும்  இங்க இறங்கிகுங்க. அடுத்தது  செங்கல்பட்டு பஸ்ஸ்டேண்டுதான் நிக்கும்’ கண்டக்டர் சத்தமாகக்குரல் கொடுத்தார்.

செல்லமுத்துவும் சந்திரனும் இறங்கினார்கள். திட்டக்குடி செல்லும் பேருந்து தயாராக நின்றது. ‘வா வா விழுப்புரம் உளுந்தூர்பேட்ட விருத்தாலம்’ என்று கூவிக்கொண்டிருந்தார் அதன் நடத்துனர்.

இருவரும் திட்டக்குடி பேருந்தில் ஏறி அமர்ந்துகொண்டார்கள். செல்லமுத்துசார் டிக்கட் எடுத்தார்.

‘செத்த ரெஸ்ட் எடுப்பம் சந்திரன்’

‘ அப்படியே சார்’

இருவரும் கண்களை மூடி ஓய்வு எடுத்தார்கள்.

வண்டி அசுரகதியில் சென்றுகொண்டிருந்தது.

சற்று நேரத்திற்கெல்லாம் செல்லமுத்து விழித்துக்கொண்டார். ‘சந்திரன் சந்திரன்’ இரண்டுமுறை அழைத்தார்.

சட்டென்று விழித்துக்கொண்ட சந்திரன் செல்லமுத்து சார் என்ன சொல்கிறார் என்று காதுகொடுத்தான்.

‘சந்திரன்,  கோவிச்சுகாதிங்க தொந்தரவுதான்  வேற என்ன செய்யறது.  சைவத்துல இருக்குற  அறுபத்திமூன்று நாயன்மார்ல  காலனிக்காரங்க காட்டுவாசிங்க  சலவைத்தொழிலாளிங்க விவசாயிங்க பெண்கள் குயவர் மீனவர் இடையர்னு  எல்லாரும் உண்டுதானே’

‘ஆமாம் சார்’

‘ வைணவம் கொண்டாடுற  பன்னிரு ஆழ்வார்களில் காலனிக்காரங்க உண்டு பெண்களும் உண்டுதானே’

‘ ரைட்டா சார்

  சித்தர்கள் அனேகரும்    வங்காளத்து விவேகானந்தரும்  மலையாளத்து நாராயணகுருவும் வடலூர் வள்ளல் ராமலிங்கரும் ராஜஸ்தானத்து  மீராபாயும் அப்பிராமணர்கள்தானே’

‘ ஆமாம் சார்’

‘ அப்ப ஏன் இந்த  மடத்துக்கு பொறுப்பாமட்டும் இவுங்கள்ள யாருமே வரமுடியாதுன்னு சொல்றாங்க’

‘ நியாயமான கேள்வி சார்’

‘ யோசிச்சி பாருங்க,  இதுல ஏதோ சதி இருக்குதா இல்லையா’

சந்திரன் திக்குமுக்காடிப்போனான். எந்த கேள்விக்கும் அவனால் பதில் சொல்லமுடியவில்லை.

‘ கொஞ்சம் ஓய்வு எடுங்க ஊரு வரப்போகுது எறங்கப்போறம்’

இருவரும் இறங்கத்தயார் ஆனார்கள்.  அதிகாலை நான்கு  மணிக்கு முதுகுன்றம் பேருந்து நிலையம்  வந்து சேர்ந்தார்கள்.

‘ நீங்க சேக்கிழார் லாட்ஜ்க்கு போறிங்க’ நான் வீட்டுக்கு போறன். ஆறு மணி டூட்டிக்கு வந்துடலாம் என்ன சந்திரன் சொல்றீங்க’

‘ நா போய் கொஞ்சம் படுத்து தூங்கிடறேன்.  அப்புறம்  குளிச்சி தயார் ஆகி  டூட்டிக்கி வந்துடறேன்’

இருவரும் இறங்கி பைய நடந்தார்கள்.

                                                        25.

காலை டூட்டிக்கு சந்திரன் கிளம்பினான். மணாவும் மாத்ருவும் சந்திரனிடம் நடந்தவற்றை ச்சொல்லிக்கொண்டிருந்தார்கள். கடலூரிலிருந்து கஜாவின் பெற்றோர்  முதுகுன்றம் வந்து  கஜாவை சந்தித்துப்போனதுவும் ஒன்றுவிடாமல் மணா சொல்லிமுடித்தான்.

‘ கஜா உங்கிட்ட அவுங்க பேரண்ட்ஸ் வந்து போனது பற்றி ச்சொன்னர்களா’ மணாவை சந்திரன் கேட்டான்.

‘ இன்னும் நான் கஜாவை பாக்கல.’

‘இதுல சொல்ல ஒண்ணும் இல்ல. அவுங்க வருத்தப்பட்டு போயிருப்பாங்க அவ்வளவுதானே அத விடுங்க. அது நமக்கு உதவாது.  நா உளுந்தூர்பேட்டை மெய்ராஸ் கான் கிட்ட பேசுறேன். அவருக்கு தெரிஞ்ச சார்பதிவாளர் அங்க இருக்காரு. நீங்க கஜா மாத்ரு ரகு நாலுபேரும் போங்க. உங்க   அடையாள அட்டைகள் ரொம்ப முக்கியம் , பாஸ்போர்ட் போட்டோ எடுத்துகுங்க எதுக்கும்  பத்தாயிரம் ரூவா கையில வச்சிகுங்க. கேக்கறத குடுங்க. நா எண்ணைக்கு அங்க போறதுன்னு கேட்டு சொல்றன், சரியா’

மணா தலையை பலமாக ஆட்டினான்.

‘எங்க ரகு’

‘குளிச்சிட்டு இருக்காரு’

‘அவர்கிட்ட செய்தி சொல்லுங்க’

‘ நேத்திக்கி எங்கயோ போனிங்க போல’

‘ காஞ்சிபுரம் போனோம்’

‘என்ன விசேஷம்’

‘சும்மாதான் மாத்ரு’

‘செல்லமுத்து சார் கூடவா’

‘ஆமாம்’

‘என்னத்துக்குன்னு’

‘சங்கர மடத்துக்கு போய்வந்தோம்’

‘ரொம்ப நல்லா இருக்கு’ மாத்ரு சொல்லிக்கொண்டார். சந்திரன் நகர்ந்துபோனார்.

‘எனக்கு டூட்டி இருக்கு வரேன்’

‘எலி எட்டு மொழம் வேட்டி ஏன் கட்டிகிது’ மாத்ரு சொல்லிக்கொண்டே தன் அறைக்குள் சென்றார்.

ரகு குளித்துமுடித்து அறைக்குத்திரும்பினார்.

‘சந்திரன் டூட்டிக்கு கெளம்பிட்டார்’

‘ நேரமாச்சே’

‘ நேற்று காஞ்சிபுரம் செல்லமுத்து சாரோட போயிருக்கார். சங்கரமடத்துக்கு ப்போனாங்களாம்’

‘ நல்லா இருக்கு கத. நா நம்பணுமா’

‘இல்ல ரகு அவர்தான் சொன்னார்’

‘விஷயம் இல்லாம யார் போவா. அண்ணைக்கு சந்திரன் மதுரவல்லிக்கு  செல்லமுத்து சாரோட போனாரே. அதுவே இன்னும் நமக்கு சேதி வரலயே’

‘வரும் வரட்டும். நம்ப ரெண்டு  பேர் கஜா மணா ஆக நாலு பேர் உளுந்தூர்பேட்டைக்கு போறம். அங்க மெய்ராஸ்கான பாக்கறம். சார்பதிவாளர் அலுவலகத்துக்கு போறம். சேதிய சொல்லிட்டார் சந்திரன்.  போற தேதியதான் சொல்லணும். சொல்லிடுவார். நாம ரெடியா இருக்கம்’

‘ சரி பாக்கலாம் மணாகிட்ட சொல்லியாச்சா’

‘ அவரும் கூட இருந்தாரே’ மாத்ருவும் ரகுவும் சாப்பிட மெஸ்ஸுக்குக்கிளம்பினார்கள்.

செல்லமுத்து சார் டூட்டிக்கு க்ரெக்டாக வந்திருந்தார். சந்திரன் தன் பணியைத்தொடங்கி இருந்தான். நைட் டூடி முடித்த நல்ல தம்பி  சோற்றுப்பையை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.

‘ராத்திரி பூரா பிசி சார் ஒரே டெத் கால்தான்   பாலக்கரை பட்டாணிகடை ராமசாமி உடையார் மண்டையை போட்டுவிட்டார்.  காலு மாத்தி காலு எல்லாம் சேலம் ஈரோடு திருப்பூர்னு வந்துகிட்டெஇருந்துது’

‘ நல்லதம்பி அதுக்குதான நம்ப சேவயே. சம்பளமும் அதுக்குத்தானே’

‘ நா நைட்டே வர்ரதில்ல வந்த ஒரு நாளும் இப்பிடி’

சொல்லிக்கொண்டே பையைத்தூக்கிகொண்டு கிளம்பினார்.

’வரேன் சந்திரன் இன்னும் டெத் காலு வரும், உடையார் பாடிய சாயங்காலம் எடுக்குறாங்க’

நல்லதம்பி வீட்டுக்குக்கிளம்பினார்.

மெய்ராஸ்கான் உளுந்தூர்பேட்டை டெலிபோன் ஆபிசில் சூப்பர்வைசராக வேலை செய்கிறார். சந்திரனுக்கு மிக நெருங்கிய நண்பர். அவரிடம் சந்திரன் கஜா மணா பதிவுத்திருமணம் பற்றி ப்பேசினார்.

‘ நாளைக்கே அனுப்பிவங்க.  அவுங்க  எல்லாரும் பத்துமணிக்கு இங்க இருக்கட்டும்.  அடையாள அட்டை. பாஸ்போர்ட் போட்டோ, சாட்சிக்கு ரெண்டுபேர் கையில  கொஞ்சம் பணம், அவ்வளவுதான், நான் பேசி வச்சிடறேன். போறவங்க  டெலிபோன் மெய்ராஸ்கான் அனுப்பினாருன்னு சொன்னா போதும் அங்க ராமானுஜம்னு பியூன் இருக்காரு. அவர மொதல்ல பாக்குணும் அவ்வளவுதான். பாக்கிய எல்லாம் நா சொல்லி வச்சிடறேன்.அந்த ஆபிசருக்கும் டிரான்ச்ஃபர் வரும்னு பேசிக்குறாங்க அதுக்குள்ள  நாம வேலய முடிச்சிக்கிணும் சந்திரன்’

மெய்ராஸ்கான் சொல்லிமுடித்தார். சந்திரன் மாத்ருவுக்கும் ரகுவுக்கும் சேதி சொன்னார். மறு நாள் விடுப்புக்கு  அவ்விருவரும் மேல் அதிகாரியிடம் சொல்லி வைத்தனர். மணாவையும் கஜாவையும் தொலைபேசியில் கூப்பிட்டு சந்திரனே  விஷயத்தைச்சொல்லிமுடித்தார். நாளைக்கு  உலுந்தூர்பேட்டையில் பதிவுத்திருமண விஷயங்கள் பூர்த்தியானால் கொளஞ்சியப்பர் கோவில் சம்பிரதாய த்திருமணம்மட்டுமே பாக்கியிருக்கிறது. அப்பாவிடம்  விஷயம் சொல்லவேண்டும் சந்திரன் மனதிற்குள் சொல்லிக்கொண்டார்.

‘சந்திரன் இண்ணைக்கு நேரா வீட்டுக்கு போயிடுவம். சந்திப்பு இல்லே’

‘ஆமாம் சார்’

மணி ஒண்ணரை நெருங்கிற்று. சந்திரன் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு ஆற் றைக்கடந்து பாலக்கரை வந்து வழக்கம்போல் பஸ்பிடித்தான்.

‘’காஞ்சிபுரம் போயிட்டு வந்தாச்சா’ சந்திரனை அம்மா விசாரித்தார்.

‘ஆசீர்வாதம் பலமா’ அப்பா சந்திரனைக்கேட்டார்.

சந்திரன் சிரித்துக்கொண்டான்.

‘ நமுட்டு சிரிப்பு சிரிக்கறே’

‘இல்லப்பா’

‘சும்மா சொல்லாதே, செல்லமுத்து சாரும் கூட வந்து இருக்கார்’

‘ஆமாம் அதுக்கென்ன’

சங்கரமடத்தில் கொடுத்த அட்சதை என ஒரு சிறு பொட்டலத்தை அம்மாவிடம் கொடுத்தான்.

‘ சாமி,கிட்ட வைடா  ஸ்நானம் பண்ணிட்டு எடுத்துக்கலாம் இப்ப விழுப்பான்னா இருக்கம்’ அம்மா சொன்னாள்.

காபி சாப்பிட்ட சந்திரன் இரட்டை பெஞ்சில் படுத்து  ஓய்வு எடுத்துக்கொண்டான். சற்று நேரத்துக்கு எல்லாம்  உறங்கிப்போனான்.

‘ இவன் காஞ்சிபுரம் போயிட்டு வந்த்ருக்கான்’

‘ போறேன்னு சொன்னான் அவ்வளவுதான்’

‘அங்க போயி பெரியவாளை சேவிச்சி ஆசிர்வாதம் வாங்கிண்டு வரவா போயிருக்கான்’

பதில் ஏதும் சொல்லாமல் இருந்தாள் சந்திரனின் தாயார்.

‘ படிச்சம் ஒரு உத்யோகம் வந்துது மேல படிச்சம் இன்னும் மேல மேல போனம் ஒரு கல்யாணம் பண்ணிண்டம் குடும்பமாச்சி  சம்பாரிச்சம் ஒரு வீடு நெலம் நீச்சுன்னு வாங்கினம் ராமா கிருஷ்ணான்னு சொன்னம்னு இருக்க மாட்டான்போல’

‘ஒரு வித்யாசமாத்தான் தெரியர்து’

‘என்ன விபரீதமா தெரியர்தா வித்யாசமா தெரியர்தா’

‘தப்பு ஒண்ணும் இல்ல. ஆனா என்ன யோசனைன்னு புடிபடலயே’

‘ ஒரு கல்யாணத்த பண்ணிண்டா சரியா இருப்பனோ’

‘எனக்கும் அந்த யோஜன தோணாமவா  தோணறது. வண்டில பாரம் இல்லன்னா  இழுக்கற மாட்டுக்கு சரியா வராது கன்னா பின்னான்னு இழுத்துண்டு ஓடுமே அந்தமாதிரி இருக்கானோ’

’பாரம் வைக்கணும்னு சொல்ற’

‘கெட்ட பழக்கம் கெட்ட சக வாசம் இல்லே அதுவரையிலும் திருப்திதான்’

‘குரு பலன் வரணும் இன்னும் ஒரு வருஷம் போகணும், வயசும் ஆகணுமே’

‘எதனா மேல படிக்கலாம்’

‘ சமூகம் அரசியல்  கஷ்டப்படுற மக்கள்ன்னு தான் எப்பவும் பேசறான் மேல படிடான்னு நாம  சொல்லணும்’

‘ நல்ல யோசனையெல்லாம் வேணும்தான்.  பாக்குற உத்யோகத்தயும் காப்பாத்திகணும் மேல மேல வரணும்’

‘விஷ்ணு சஹஸ்ர நாமம் தெனம் படிடான்னு சொல்லுங்கோ’

‘சொல்றேன்’

இரவு டிபன் செய்வதற்காக சந்திரனின் அம்மா அடுப்படிக்குப்போனாள். பாத்திரங்கள் உருட்டும் ஒலி சன்னமாய்க்கேட்டது.

சந்திரன் மெதுவாகக்கண்களைத்திறந்தான்.

‘என்ன தூங்கியாச்சா’

‘தூங்கினேன் போறும்’

‘ அப்பா மணான்னு சொன்னேனே. அவன் கூட ஒரு அய்யங்கார் பொண்ண லவ் பண்றான்னு சொன்னேனே’

‘ அந்த மீன்காரன் சந்திரகாசு பையந்தானே’

‘ஆமாம். அந்த பொண்ணோட அப்பா அம்மாகிட்ட  இந்தவிஷயம் சொல்லியாச்சு’

‘அவா அம்மாவும் அப்பாவும் பொண்ணு கிட்ட பேசிபாத்தா ஒன்ணும் கத ஆகல, எப்பிடியாவது போன்னு சொல்லிட்டு  அவா  கோவிச்சிண்டு போயாச்சு’

‘அடுத்தது’

‘ அவாளுக்கு பதிவுத்திருமணம் நாளைக்கு ஆகப்போறது. ஏற்பாடு எல்லாம் பண்ணியாச்சு’

‘ரொம்ப சரி’

‘பத்திரிக அடிச்சி வரும் உனக்கு தறேன்’

‘ஏய் அவன் அப்பன் எனக்கு  கல்யாண பத்திரிக பாக்கு  வச்சிட்டு கல்யாண சாமான் ஜாபிதா என்னண்ட வாங்கிண்டு போகணும். அவா ஆத்துல பந்தக்கால் முகூர்த்தம் பண்ணணும். ஊர்  ஜனங்களுக்கு த்தெரியணும் அவா ஆத்துல புள்ளக்கி கல்யாணம்னு . சும்மா இல்லெடா சேதி’

‘அப்பா சாரி அவசரப்பட்டுட்டேன். மணா அப்பா பத்திரிக வைப்பார்’

‘அப்புறம் நானாச்சு,  சந்திரகாசு அவர் ஆச்சு உனக்கு இதுல வேல சொல்லு’

‘ வக்கீல் மாதிரி  பேசற’

‘ அந்த காலத்துல  இருந்தாளே  அந்தக்கண்ணகி வக்கீலுக்கு படிச்சாளா மதுரையில பாண்டிய ராஜா  முன்னாடி என்ன பேச்சு பேசியிருக்கா’

‘ஒன் டூட்டின்னா சட்டம் திட்டம் எல்லாம் கரெக்டா பேசறே’

சந்திரனின் தந்தை சிரித்துக்கொண்டார்,

‘ அவா ரேண்டு பேரும் க்‌ஷேமமா இருந்தா அதுவே போறும்’

சந்திரனின் அம்மா டிபன் தயார் என்று குரல் கொடுத்தாள்.

‘ டேய் சாயந்திரம் ஆனா விபூதி நெத்தில இட்டுகோ விஷ்ணு சஹஸ்ர நாமம் ஒரு நடை படி அப்புறம் சாப்பிடுடா’

‘ எனக்கு சொல்றயா’

‘ உனக்குதான்’

‘ இப்ப என்ன புதுசா’

‘ ஆமாண்டா நீ செய்வேன்னு பாத்தேன்  ஒண்ணையும் காணும் நா தகப்ப்னாச்சே  நல்லதை சொல்லணும். என் கடமை. ஆனா பொம்மனாட்டி கொழந்தளே இந்தக் கலி காலத்துலே  அப்பா அம்மா பேச்ச மதிக்க மாட்டேன்றா காதுல போட்டுகறது இல்ல’

‘யார மனசுல வச்சிண்டு சொல்ற’

‘ நானே தான் சொல்றேன்’

சந்திரன் நெற்றியில் விபூதி இட்டுக்கொண்டான். விஷ்ணு சஹஸ்ர நாம புத்தகம் எடுத்துக்கொண்டு  அதன ஒரு முறை வாசித்து முடித்தான். விபூதியும் விஷ்ணு சஹஸ்ர நாமமும் ஒன்றும்  முரணில்லைதான்.

இருவரும் சாப்பிட்டு முடித்தனர்.

                                                                  26.

தருமங்குடியிலிருந்து சந்திரன் காலை டூட்டிக்கி வந்திருந்தான். செல்லமுத்துசாரும் காலை பணிக்கே வழக்கம்போல் வந்திருந்தார்.  சந்திரன் மணப்புரம் சிவன் கோவில் தேவஸ்தானத்திற்கு ஒரு டிரங்கால் புக் செய்தான். யது கிருஷ்ணா என்று பர்டிகுலர் பர்சன் கால் புக் செய்தான். உடனேயே அந்தக்காலும் கிடைத்தது. அவனுக்குத்தெரிந்த குட்டிக்கடை அய்யரின் போனிலிருந்துதான் புக் செய்தான். அய்யரிடம் இந்த சேதியை சொல்லித்தான் கால் புக் செய்தான்.

 ’கிராம  காலனி மக்களிடையே உள்ள கிராம தேவதைக்கு.  குடமுழுக்கு விழா. உள்ளூர் சிவாச்சாரியார்  சர்வசாதகம்  என இருவர்  எல்லா யாக பூஜைகளையும் செய்வார்கள்.   தாங்கள்  உடன் இருந்து  ஆசிர்வதித்தால் போதும் . அதுவே எங்கள்  ஊருக்கு க்கொடுப்பினை’ என்றான்.  வாடகைக்காரிலேயே  மணப்புரத்திலிருந்து  அய்யா  வரவேண்டும். முதுகுன்றம் வந்துவிட்டால் மதுரவல்லி கிராமத்திற்கு தானே அழைத்துச்செல்வதாகவும் கூறினான். போக்குவரத்துப்படியோடு சிவாச்சாரியருக்கு குரு  தட்சணை  எவ்வளவோ அதனைத்தர தயாராக இருப்பதாகவும் உறுதியாய்ச்சொன்னான். யது கிருஷ்ணாவின் வங்கிக்கணக்கு எண் விபரம் வாங்கிக்கொண்டான்.  குடமுழுக்குப் பத்திரிகை அனுப்பிவைப்பதாய் ச்சொன்னான். ஆயிரம் ரூபாய் முதலில் வங்கி வழி அனுப்பிவிடுவதாகவும் சொல்லி யே முடித்தான்.

‘சந்திரன் அவருக்கு த்தமிழ் வருகிறதா’

‘ நன்றாக த்தமிழ் பேசுகிறார்’ சந்திரன் பதில் சொன்னான்.

‘ நமக்குத்தான்  தமிழை விட்டால் ஒன்றும் தெரியாது’

மாத்ருவும் ரகுவும் அலுவலகத்தில் நுழைந்தார்கள்.

‘ சக்சஸ்’ ரகு சந்திரனிடம் சொன்னார்.

‘மெய்ராஸ்கான் எல்லா ஏற்பாட்டையும் பக்காவாக பண்ணியிருந்தார். சார்பதிவாளர் அலுவலகத்தில்  எங்களுக்கு சிரமமே இல்ல’ மாத்ரு சேர்ந்து கொண்டார்.

‘ வாழ்த்துக்கள்’ செல்லமுத்து சார் இருவருக்கும் சொன்னார்.

‘மதியம் ஸ்வீட்டோட சாப்பாடு குட்டிக்கடையில். மணாவும் கஜாவும் வெயிட் பண்றாங்க. நாம போறம். செல்லமுத்து சாரும் வரணும்’ ரகு சொல்லி முடித்தார்.

நல்லதம்பி அப்போதுதான்  டூட்டிக்கு வந்து சேர்ந்தார்.

‘ ஜமாய்ங்க,‘’ஸ்வீட் எனக்கு அனுப்பி வையுங்க’

அனைவரும் குட்டிக்கடைக்குச்சென்றார்கள். நாராயண அய்யர் அனைவருக்கும் ஸ்பெஷல் மீல்ஸ் பரிமாறி முடித்தார். பீடா வோடு சாப்பாடு முடிந்தது.

‘ வாழ்த்துகள் பல. இனிதே வாழ்க’ செல்லமுத்துசார் மணாவையும் கஜாவையும் நிறைவாக  வாழ்த்தினார்.

ரகு எல்லோருக்கும் ஃபைவ் ஸ்டார் சாக்லேட் வாங்கிக்கொடுத்துத்தன் மகிழ்ச்சி தெரிவித்தார். ரகுவின் பழக்கம் அது.

கஜாவுடன் ரூம் வரைக்கும் சென்று  வருவதாய்ச்சொல்லி மணா புறப்பட்டார்.

‘ இனி ஒம் பாடு கஜா பாடு ’ மாத்ரு வாழ்த்தி அனுப்பினார்.

’மாத்ரு ரகு இருவரும்  என் வாழ்க்கையில் மறக்கமுடியாத முக்கியமான மனிதர்கள்.’

‘ மணா நான்’

‘ நீங்கள் இல்லாமலா’ மணா பட்டென்று  சந்திரனுக்கு ப்பதில் சொன்னான்

மாத்ருவும் ரகுவும் லாட்ஜ் க்கு ப்புறப்பட்டார்கள்

செல்லமுத்துசாரும் சந்திரனும் நடந்தே கடைத்தெருவை க்கடந்தார்கள்.

‘ இனி குட முழுக்கு வேலய  கவனமா பாக்கலாம்.’

‘ நானு  குடமுழுக்குக்கு சிவாச்சாரியார் ஓதுவார் இவர்களை அழைத்து வந்துவிடுவேன்’

இருவரும் செல்வராஜு பார்க்கை அ டைந்தார்கள். வழக்கமாக அமரும் சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்துகொண்டார்கள்.

‘சார் இது நாள வரைக்கும் உங்க குடும்பத்த பத்தி நானும் கேக்கல நீங்களும் சொல்லல’

‘இதுல சொல்ல எதுவும் இல்ல. எனக்கு ஒரே பையன்  கெட்டிக்காரன் கொல்கத்தாவுல இருக்கான். அவன் ஐ ஏ எஸ்.  அங்க  மா நில சர்க்கார்ல  செக்ரட்ரி. அங்கயே  ஒரு பெங்கால் பொண்ண கட்டிகிட்டான். அந்தபொண்ணும்  பெரிய வேலயில இருக்கா.  அந்த பொண்ணு என்ன ஜாதி அதெல்லாம் எனக்கு தெரியாது. நானும்கேக்குல. இங்க்லீஷ்ல தான் அவகிட்ட பேசுணும். ஒரு பேத்தி இருக்கா. மூணு இல்ல நாலு படிக்கலாம். அவ்வளவுதான். இங்க நானு என் மனைவி இருக்கம்.  எங்க  மதுரவல்லி கிராமம் இருக்கு ஏதோ ஓட்டிகிட்டு இருக்கம்’’

’‘ நல்லா சொன்னீங்க மகிழ்ச்சியா இருக்கு’

‘இப்பகூட நா வேலய வேணாம்ட்டு  எழுதி குடுத்துட்டு போயிடுவேன். பென்ஷன் நல்லாவே வரும், கூடாதுன்னு இருக்கன்’

‘மதுரவல்லி குடமுழுக்கு செலவுக்கு என்ன செய்வீங்க’

‘ஊர்ல வசூல் பண்ணுவாங்க. நானும் தேவயானதை கொடுத்துடுவேன்’

‘ இத  எல்லாம்  சரியா கேட்காம நா அந்த கேரளா மணப்புரம்  சிவாச்சாரியர எல்லாம் கூப்பிட்டோமே அதிகப்பிரசங்கியா எதுவும் செஞ்சிட்டுமோன்னு பயம் ஆனா ஆசை   இருந்துது அதான்’

‘ஒண்ணும் தப்பு இல்ல சந்திரன் நீங்க சிவாச்சாரியார் ஓதுவார் இன்னும் யாரு எவரோ  உங்க நண்பர்கள் மாத்ரு ரகு இன்னும் மணா கஜா யாரா இருந்தாலும் வரட்டும், மலயாள மாமா கிட்ட சொல்லிடுங்க  மதுரவல்லி குடமுழுக்கு விழாவுல சமையலுக்கு வந்துடுவாரு. என்ன  கூலியோ அத குடுத்துடுவம்  நம்ம வீட்டுலதான் தங்கபோறம் ’

‘ நாதஸ்வர செட் சொல்லிடணும் வாண வேடிக்கைக்கு வெடி வாங்கணும்’

‘அதெல்லாம் பாத்துகலாம்’

‘அந்த கேரளா சிவாச்சாரியாருக்கு ஆயிரம் ரூவா அனுப்பிட்டேன்.  குடமுழுக்கு பத்திரிகை  அனுப்பியாச்சு அவுருகிட்டயும் பேசிட்டேன்’

‘ ரொம்ப சரி’

‘ மணா கஜா கல்யாணம் இருக்கு’

‘அத சிறப்பா செஞ்சிட்டா போச்சி’

‘மணா பத்திரிகை வந்திடும்  அதுக்கு ஏற்பாடு நடக்குது’

‘வேற என்ன’

‘கெளம்புவமா’

‘சரி சந்திரன்’

இருவரும் கலைந்து சென்றார்கள்.

தருமங்குடி சென்ற சந்திரன் சாமி நாத சிவாச்சாரியரிடம் மதுரவல்லி கும்பாபிஷேகம் பற்றி விவரமாகச்சொன்னான். செல்லமுத்து சார்தான் பிரதானம் என்றும் சொல்லிவைத்தான். அவர் ஒரு குடமுழுக்கு ஜாபிதா தருவதாகவும் அதனை முதுகுன்றம் கேகேபி செட்டியார் கடையில் கொடுக்க  அவர்கள் பொருட்கள் அத்தனையும் செட்டாக  ஒரு வேனில் அனுப்பிவிடுவார்கள் என்றும் சொன்னார். குயவர் சாமான்கள் மடக்கு பானை இத்தனை இத்தன  என்று எழுதிவிட்டால் அதுவும் வந்துவிடும் என்றார்.

‘ கோவில்ல ஒரு சாமிதானே’

‘ஒரே சாமிதான் நொண்டி முனின்னு சொன்னார்’

’ நா ஜாபிதா தரேன்  நீ காரியத்தை பாரு. எனக்கு தட்சணை எல்லாம் அதுலயே எழுதி இருப்பேன் ஒத்தாசைக்கு ஒரு குருக்கள் வேணும். முதுகுன்றம் கோவில்ல நடராஜன்னு ஒரு பையன் இருக்கான் ஒணசலா ஒயரமா இருப்பான் . நா தமாஷா ஏணி ஏணி ம்பேன். கடைத்தெருவுல அவன்  வீடு. அவுனுக்கு நா  சேதி சொல்லிடுவேன். கூட அழைச்சிண்டு வந்துடுவேன்’

‘ரொம்ப சரி அப்புறம் பேசிகலாம்’

‘ஜாபிதா கொடுத்தா அட்வான்ஸ் தரணும்’

‘குடமுழுக்கு பத்திரிகை குடுத்துட்டு அதயும் தந்துடறேன்’

சிவாச்சரியார் அமைதியாக இருந்தார்.

 ஒரு நூறு ரூபாய் நோட்டை  சிவாச்சரியாரிடம் கொடுத்தான் சந்திரன்’

நேராக தேவாரம் ராஜகோபால்பிள்ளையை தேடிக்கொண்டு போனான்.

அவரே எதிரில் வந்தார்.

‘’ நானே உங்கள பாக்குணும்னு இருந்தேன்’

‘ உங்ககிட்ட ஒரு சேதி. முதுகுன்றம் ஊருக்கு மேற்கே மதுரவல்லி கிராமம் அங்க ஒரு கும்பாபிஷேகம் நீங்க வரணும் தேவாரம் பாடணும்னு எனக்கு ஆசை’

‘ ரைட்டா வரேன்  யாரு என்னை கூப்பிடறாங்க .அது பெரிய கொடுப்பினை இல்லயா’

‘தட்சணை’

‘ நா தேவாரம் பாடுவேன் ஒரு ரூவா வாங்க மாட்டேன் அது எனக்கு பிடிக்காது. இண்ணைக்கு நேத்திக்கு சமாச்சாரம் இல்ல இது’

‘ நா குடமுழுக்கு பத்திரிகை தரணும்’

‘மெதுவா குடுங்க  உங்களோடதானே வரப்போறேன்’

‘ ரொம்ப பெரிய ஒத்தாசை பிள்ளைவாள்’

இருவரும் பெசிக்கொண்டே அரசமரத்தடியில் நின்றனர்.

சந்திரனின் தந்தை அவனை நோக்கி வந்தார். ’இண்ணைக்கு அந்த மீன்காரன்  சந்திரகாசு என்னைப்பார்த்து கல்யாணப்பத்திரிகை வைத்தான். நான் அவனுக்கு ஜாபிதா கொடுத்தேன். கொளஞ்சியப்பர் கோவிலுக்கு வந்துடணும்னு’ சொன்னான்.

‘உங்களவங்க பொண்ணுதான்’ என்றான்.

’பிள்ளை அப்புறம் பாப்பமா’ எனக்கழண்டுகொண்டார்.

சந்திரனும் அவன் அப்பாவும் பேசிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தனர்.

’ஏண்டா காபி சாப்பிடாம போயிட்டே’

சந்திரனின் அம்மா கடிந்து கொண்டாள்.

‘ நம்ப உடம்ப நாம பாக்கணும். சுவர் இருந்தாதான் சித்திரம் எழுதமுடியும் ஞாபகம் வச்சிகோ’

அம்மா கொண்டு வந்த காபியை சாப்பிட்டு முடித்தான்.

                                                          27.

மணாவும் கஜாவும் அலுவலக நண்பர்களுக்கு மட்டும்  திருமண பத்திரிகை கொடுத்தனர். மலையாள மாமி மெஸ்ஸில்  வரும் விருந்தினர்களுக்கு கிராண்ட் டிபன் சொல்லியாயிற்று, அதனை கொளஞ்சியப்பர் கொவிலுக்கே கொண்டு தருவதாக பேச்சு.  ஐம்பது காபி ஃபிளாஸ்க்கில்  கொண்டுவரவேண்டும்.

பூக்காரன் மாலை இத்யாதிகளை திருமண மண்டபத்திற்கே கொண்டு தர ஏற்பாடு.. கல்யாணப்புடவை வேஷ்டி திருமாங்கல்யம் எல்லாம் கஜாவும் மணாவும் முதுகுன்றம் கடை வீதியிலேயே  வாங்கி விட்டார்கள்.

திருமணத்தன்று  விடியற்காலையே வளையமாதேவியிலிருந்து மணாவின் அப்பா அம்மாவும் காரில் புறப்பட்டு மண் டபம் வந்து சேர்ந்தார்கள். சந்திரனின் அப்பா வந்தார். அவர்தானே புரோகிதர். மாத்ருவும் ரகுவும் நல்லதம்பியும் செல்லமுத்துவும் கல்யாண  டிப் டாப்பாக வந்திருந்தனர். உளுந்தூர்பேட்டை மெய்ராஸ்கான்  வந்திருந்தார்.  டெலிபோன் லைன்மென்கள் ஜகநாதன் மோஹன்ராஜ்  சையத் மஜ்கர்,அஞ்சலக தந்தி கிளார்க் டி பி ஜெயராமன்  வங்கி ஊழியர்கள் வள்ளியப்பன் கந்தசாமி  கிருஷ்ணன் என நண்பர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. பூபதி ஸ்டுடியோ க்காரர்  திருமண விழாவை அமர்க்களமாக போட்டோ எடுத்து முடித்தார்.

 கொளஞ்சியப்பர் கோவில் மேளக்காரர்  இரண்டு மோஹன ராக  கீர்த்தனைகளைக் கச்சிதமாக வாசித்தார்.

கஜாவீட்டிலிருந்து யாரும் வரவில்லை. வர மாட்டார்கள்தான். அலுவல நண்பர்கள் மட்டுமே வந்திருந்தார்கள். மலையாள மாமா மாமி வந்திருந்தனர்.  அவர்களிருவருக்கும் பாதபூஜை செய்தார் கஜா. அவர்களே கல்யாணப்பெண்ணுக்குத்தாய தகப்பனாய் இருந்தனர். அவர்கள்தானே வந்திருந்தோருக்கு  டிபன் ஏற்பாடும்.

மணா பட்டு வேஷ்டி பட்டு சொக்கயில் கஜாவுக்கு தாலி கட்டினான். வந்திருந்தவர்கள் நிறைவாக ஆசீர்வதித்தனர். கெட்டி மேளம் வாசிக்க தீயை வலம் வந்தனர். கொளஞ்சியப்பரை பிரதட்சிணம் வந்து மண விழா சுபமாய் முடிந்தது.

மாத்ரு ரகு சந்திரன் நல்லதம்பி செல்லமுத்து என அனைவரும் தம்பதியர்க்கு மஞ்சள் அரிசி மலர் போட்டு ஆசீர்வதித்தனர்.

கடைத்தெருவில் கனரா வங்கி அருகே  கோதண்டபாணி நாயுடு காம்ப்ளக்ஸில் ஒரு சிங்கிள் ரூம் பார்த்து அட்வான்ஸ் கொடுத்திருந்தான் மணா. புது மண தம்பதியர் அந்த வீட்டிற்குச்சென்றார்கள். மணாவின் தாயும் தந்தையும் உடன் சென்றார்கள்.

‘ என் வேல முடிஞ்சிது’ சந்திரனின் அப்பா தருமங்குடிக்குப்புறப்பட்டார்.

‘ சொன்னத செய்துட்டே’ சந்திரன் அப்பாவுக்கு ச்சொன்னான். முதுகுன்றம் பேருந்து நிலையத்திற்கு ஒரு ஆட்டோவில் அப்பாவை ஏற்றி அனுப்பினான். மதுரவல்லி நொண்டி முனி கோவில் கும்பாபிஷேக பத்திரிகை ஒரு பத்து இருக்கும் அதனைக் கொடுத்து அனுப்பினான். ‘ நீ குருக்கள் மாமாட்ட குடு , தேவாரம்  ராஜகோபால் பில்ளைக்கு குடு அது போதும், நா வந்து அவாள குடமுழுக்குக்கு கூட்டிண்டு போவேன் அது தெரியும் அவாளுக்கு’

  சரிடா  இனி நா போயிக்கிறேன் உன் வேலயைப்பார்’ என்று சொல்லி அவர் கிளம்பி விட்டார்.

‘ எனக்கு மதுரவல்லி கும்பாபிஷேகம் சம்மந்தமா  இங்க வேல இருக்கு’

‘ஆகட்டும் அது சாமி காரியம்’

சந்திரனின் அப்பா  விடைபெற்றுக்கொண்டார்.

தருமங்குடி சந்திரன் வீட்டுத்திண்னையில்  திருமணமான  மணாவின் சொந்த  தாய் மாமா கோபமாய் அமர்ந்திருந்தார்,

சந்திரனின் தாயாரைப்பார்த்த அவர் ‘அய்யர் வரட்டும் பேசிக்குறேன்’ என்று கர்ஜித்தார்..

சந்திரனின் அம்மா அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்துவிட்டு சமாதானமாய்ப் பேசிக்கொண்டு இருந்தார்.

‘ என் பொண்ண கட்டிக்குறேன்னு பேச்சு இப்ப ஒரு பாப்பாமுட்டு பொண்ண கட்றானாமே எப்பிடி. தருமங்குடி  அய்யிரு மொவந்தான் ஏற்பாடுன்னு சேதி. என் வவுறு எரியுதுல்ல. ஊரு கூடி கல்யாணமா இல்ல கண்ணு காணாத போய் திருட்டு கல்யாணம் பண்ணிகிட்டு வருவியா. இனி   என் மச்சான் வூட்டுல எனக்கு வேல இல்ல.  எல்லாம் முடிஞ்சிபோச்சி தல மொழுவி புட்டன். அய்யிரு வரட்டும் அவுருகிட்ட  பேசிக்குறன்’

சொல்லி அமர்ந்திருந்தார்.

சந்திரனின் அப்பா பேருந்து நிறுத்தத்தில் இறங்கி  மெதுவாக வீடு வந்து சேர்ந்தார்.

‘ வாங்க என்ன சேதி’

‘ நீ செய்தது தேவலாமா’

‘ எம் பொண்ண கட்டுறவன்,  அந்த  மீன் காரனுக்கு நா அண்ணைக்கு பொண்ணு குடுத்தன்.. அந்த மணா பயலுக்கு நா  தாய் மாமன், எம் மச்சான்  மொவன் இன்ணைக்கு பாப்பார பொன்ண கட்டிகுறானா,  ஒன் மவன்தான் கவுட்டுத்தனமா  எல்லா ஏற்பாடும் செஞ்சான்னு கேள்விப்பட்டன் என் வவுறு  கப்பு கப்புன்னு எரியுதுல்ல, செய்யுலாமா,திருட்டு கல்யாணத்துக்கு நீம்புரு ஒடந்தையா, நீ தான் வளயமாதேவிக்கு இனி வந்துடுவியா  கூட்டுல உசுரோடு திரும்ப மாட்டா அய்யிரே நீ’

கத்து கத்தென்று கத்தினான்.

தெருவே போன மாடசாமி எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டே இருந்தார்.

‘அவுரு கிட்ட  உனக்கு என்ன ஜோலி எல்லா கிருதும்  இங்க அந்த சின்ன அய்யிரு வேல.நாம அந்த அய்யிருகிட்ட வச்சிகுவம்  நாளைக்கு இருக்குது  நீ வா வளையமாதேவியாரே, பெரிய அய்யிரு இதுக்கு முடிவு தெரியாம ஒன் ஊருக்கு  தொழில் பண்ண வரமாட்டாரு நீ வா’

‘ பேச்சு பேச்சா இருக்கணும் பஞ்சாங்கத்த இடுப்புல சொறுகினு , நாண புல்ல முடிஞ்சிகினு  எங்க தெருவழி நீ வரக்கூடாது மனசுல வச்சிக்கு நா வரேன்’

‘ அவுரு கிட்ட என்ன நீ எட்ட வா வயசானவரு’

‘ கிறுக்கு கனமா இருக்குதுல்ல’

சந்திரனின் அப்பா கண்கள் கலங்கி திண்ணையில் அமர்ந்து கொண்டார்.

‘ ராம ராமா’ என்று இருமுறை சொல்லி நிறுத்தினார்.

 நெற்றியில் திரு நீற்றை பூசி ’தருமை நாதா’ என்றார்.

.

                                                             28.

குடமுழுக்கு விழாவுக்கு முதல் நாள் காலையிலேயே  கேரளாவிலிருந்து யதுகிருஷ்ணா சிவாச்சரியார் முதுகுன்றம் வந்து சேர்ந்தார். அவரை சந்திரன் வரவேற்றான். குட்டிக்கடைக்கு அழைத்துப்போய் டிபன் காபி வாங்கிக்கொடுத்தான்.

செல்லமுத்துசார் அந்த சிவாச்சாரியாருடன் மதுரவல்லிக்கு க்காரிலேயே புறப்பட்டுச்சென்றார்.

முதுகுன்றம் கேகேபி மளிகைக்கடையிலிருந்து ஜாடா கும்பாபிஷேக சாமான்களும்  மதுரவல்லி போய் சேர்ந்தன. மலையாள மெஸ் மாமா டவுன் பஸ் பிடித்து மதுரவல்லி போய்ச்சேர்ந்தார்.

மற்றொரு காரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு சந்திரன் தருமங்குடி சென்றான். சாமி நாத சிவாச்சாரியரை அழைத்துக்கொண்டான்.  தேவாரம் ராஜ கோபால் பிள்ளை கையில் வெண்கல தாளத்தோடு ரெடியாகவே இருந்தார். அவரையும் கூடிக்கொண்டான். முதுகுன்றம் வந்து நடராஜ சிவாச்சாரியாரையும் அந்தக்காரிலேயே  கூட்டி வந்தார்கள்.

செல்லமுத்து சார் வீட்டில் ஏக தடபுடலாக ஏற்பாடுகள் இருந்தன. ராஜகோபால் பிள்ளை சவுகரியமாகவே  அங்கு தங்கியிருந்தார்.

நொண்டி முனி கோவில் வாயிலில் பெரிய கீற்று கொட்டகை போட்டிருந்தார்கள். கலசங்கள்  தெய்வீகமாய்  அழகு செய்யப்பட்டன தொரணங்கள் ஜோடிக்கப்பட்டன. முதுகுன்றத்து நடராஜ சிவாச்சாரியாரும் தருமங்குடி சாமி நாத குருக்களும் ஓமகுண்ட வேலையை பார்த்துக்கொண்டார்கள்.  மதுரவல்லிக்காலனி  ஏட்டு ,ரஞ்சிதம், குஞ்சிதம் என மதுரவல்லிக்காரர்கள் பம்பரமாய்ச்சுழன்று பணி செய்தார்கள்.

கோவில் வாயிலில் பிரதானமாய் யது கிருஷ்ணா அமர்ந்திருந்தார். அவருக்கு அருகில் ராஜகோபால் பிள்ளை தேவாரத்தை திருவாசகத்தை  திருமூலத்தை  வர்ஷித்துக்கொண்டிருந்தார்.

யது கிருஷ்ணா வந்திருந்தோர்க்கு எல்லாம்   விபூதியை வழங்கிக்கொண்டிருந்தார். அவருக்கு மதுரவல்லி காலனி மக்கள் வீழ்ந்து வீழ்ந்து மரியாதை செய்தனர். யது கிருஷ்னாவுக்கு  பாத பூஜை செய்யவே பெரிய கூட்டம் கூடி நின்றது.

யாகசாலைக்கு பெரிய தீப ஆராதனையை  யது கிருஷ்ணாவே நடத்தி முடித்தார்.

செல்லமுத்து சார் யது கிருஷ்ணா நம்மவர் என்று பெரிய தட்டியில் எழுதி கோவில் வாயிலில் வைக்க உத்தரவிட்டார். மஞ்சள்  பை ஒன்று எப்போதும்  செல்லமுத்து  கைவசம் இருந்தது. அதனுள் கத்தை கத்தையாய் குடமுழுக்கு ச்செலவுக்குப்பணம் இருந்தது. கோவில் தங்கமயமாய் ஜொலித்துக்கொண்டிருந்தது. மதுரவல்லி காலனி சொர்க்கபுரியாய் க்காட்சி தந்தது. மதுரவல்லி டீகடைகாரர்,  அவரின் துணைவியார்   சுசீலா செல்லமுத்துசாரின் சித்தப்பா , ஊர் தொழிலாளிகள், அவர்களின் குழந்தைகள் குடும்பங்கள் என அனைவரும் குடமுழுக்கு விழாவுக்கு உழைத்துக்கொண்டிருந்தார்கள்.

யது கிருஷ்ணா செல்லமுத்து சாரையும் அவரின் மக்கள் அவருக்குத்துணையாய் இருப்பதையும் பார்த்துப் பெருமிதம் அடைந்தார்,

யது கிருஷ்ணா  தெய்வீக மலையாளப்பாடல்கள் பல உருக்கமாய்ப்பாடி  மதுரவல்லி மக்களை  உணர்ச்சியால் கட்டிப்போட்டார்.

மதுரவல்லி மக்கள் அனைவரும்  உலக நன்மைக்காக  பிரார்த்தனை செய்ய ’’யது கிருஷ்ணா’ முன் நின்றார்.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ரு மூன்று முறை ஒவ்வொருவரும் சொல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 நொண்டிமுனி கோவில்  கோபுரக்கலசத்திற்கு  ஏணிப்படி வழியே  யாக சாலையில்  பூஜை செய்து  எல்லோரும் வணங்கிய பெரிய  குடத்தை எடுத்துப்போனார்.

‘ கலசத்தில் புனித நீர் ஊற்றினார். கல்பூர ஆரத்தி காட்டினார். புனித நீரை காணுமிடமெல்லாம்   மேலிருந்து  தெளித்தார்.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று ஓங்கி மூன்று முறை  கோஷமிட்டார். சாமி நாத சிவாச்சாரியாரும் நடராஜ சிவாச்சாரியாரும் யது கிருஷ்ணா சிவாச்சாரியரை வணங்கிக்கொண்டு நின்றார்கள்.

யதுகிருஷ்ணா விடம் ஆசி வாங்கிக்கொள்ள நீண்ட  மக்கள்

வரிசை  காத்து இருந்தது. குடமுழுக்கு புனித நீரை அவர் வழங்கிக்கொண்டிருந்தார்.

 நல்லதம்பி விபூதி பட்டை பட்டையாய் இட்டுக்கொண்டு வரிசையில் நின்றுகொண்டிருந்தான். மாத்ருபூதம் ரகு நாதன் இருவரும் அவரோடு வரிசையில் நின்றார்கள்.

‘கஜா மணா வந்திருக்கலாம்’

‘இல்ல மாத்ரு அவுங்களுக்கும்  எவ்வளவோ பிரச்சனைகள் இருக்குதே’

’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ சொல்லி முடித்ததும் குடமுழுக்கு ப்புனித நீரை  அவர்களுக்கு வழங்கினார் யது கிருஷ்ணா.

கார் வாடகைக்கான பணத்தை மட்டுமே பெற்றுக்கொண்ட யது கிருஷ்ணா தனக்குக் குரு தட்சணையாக்கொடுத்த ரூபாய் பத்தாயிரத்தை இந்தக்காலனியில எத்தனை பெண்குழந்தைகள் இருக்கங்களோ அவுங்க   எல்லாரும்  சமமா பிரிச்சி எடுத்துகுங்க’ என்று சொல்லிவிட்டுப்புறப்பட்டார்.

‘காலனியில பொறந்தவன் . நா இப்ப  மேல்சாந்தியா ஒரு  பெரிய கோவில்ல பணி ஏற்றுகிட்டு இருக்கன். என் தாத்தா பாட்டிய கண்ணால  பாத்தாலே  தீட்டு  நீ தூரப்போன்னு   தொரத்துன  இதே  சமூகம் என்ன   மணப்புரம்  திருக்கோவில்ல கையெடுத்து கும்பிட்டு போகுது திரு நீறு என் கையால் வாங்கி நெத்தில பூசுது இத உங்களுக்கு த்தெரியப்படுத்தணும்னுதான் நான் இங்க  வந்தேன்’

‘செல்லமுத்துவும் சந்திரனும்  மேல்சாந்தியை பார்த்தபடியே கைகளைக்கூப்பி நின்றனர்.

சாமி நாத சிவாச்சாரியாரும் தேவாரம் ராஜகோபால் பிள்ளையும் நொண்டி முனி சாமி கோவிலை ஒரு சுற்று சுற்றி தரை வீழ்ந்து வணங்கினர்.

‘கிராம தெய்வம்’ ரகுவும் மாத்ருவும் கோவிலின் சுற்றுப்புறங்களை ப்பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

மேல் சாந்தி யின் கார் புறப்பட்டது.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ மாத்ரு ஓங்கி ஒங்கி க்குரல் கொடுத்தார்.

மலையாள மெஸ் மாமா செல்லமுத்துசார் வீட்டில்  வந்திருந்த எல்லோருக்கும் மதிய உணவு பிரசாதமாகவே வழங்கினார்.

‘ சந்திரன் நீங்க சாமி நாத சிவாச்சாரியரை ராஜகோபால் பிள்ளையை கொண்டுபோய்  தருமங்குடியில் விடுங்க.’

‘சம்பாவனை’

’தேவாரம் பாடுற பிள்ளை ஒரு பைசா வாங்கீக  முடியாதுன்னு சொல்லிவிட்டார்.சிவாச்சாரியாருக்கு திருப்தியா தட்சணை கொடுத்து இருக்கம். நீங்க  இவுங்கள அவுங்க  ஊர்ல கொண்டு போய் விடலாம்’

‘ சரி  நா பொறப்படுறேன்’

‘ நா இங்க எல்லாத்தையும் அசமடக்கிட்டு  வந்துடறேன்’ செல்லமுத்து சந்திரனிடம் சொன்னார்.

ஒரு வாடகைக்காரில் சந்திரன் பிள்ளையோடும் குருக்களோடும் புறப்பட்டான்’.

விழாமுடிந்து எல்லோரும் கலைந்து சென்றார்கள்.

‘ஊர்லேந்து இந்த காலனிக்கோவிலு குடமுழுக்கு நிகழ்ச்சிக்கு யாரும் வரல’

‘ அவுங்களுக்கு காலனி  சாமிங்க  விலாசம்  தெரியாது’

 கூடியிருந்தவர்கள் இருவர் பேசிக்கொண்டனர்..

காரில் சந்திரன் வந்துகொண்டிருந்தான். தருமங்குடி நிறுத்தத்தில் சந்திரன் வந்த கார் மறிக்கப்பட்டது.

தலைப்பாகை க்கட்டியிருந்த ஆசாமிகள் நான்கு பேர் சந்திரன் வந்த காரை,  வழி மறித்தார்கள்.

‘ சந்திரன்  மட்டும் இங்க எறங்கக்கூடாது.  கோவில் படைக்கிற குருக்கள் அய்யிரு, அந்த தேவாரம் ஓதுற  பெரிய  புள்ள   இவுங்கள மாத்திரம் எறக்கி வுடுங்க.  இனிமே  அய்யரு மொவன்  சந்திரன் இந்த  ஊர் வழி  வரக்கூடாது. அவுருக்கு ஊர்ல வேலயும் ஜோலியும் இல்ல. இது  இங்கிட்டு பெரியவங்க  எடுத்த  முடிவு.  அவுரு  செய்திருக்கிற காரியம்  அப்பிடி’ கார் கதவு திறந்தது. அவர்கள் இருவரும் இறங்கிக்கொண்டனர்,

‘மாமா  என்னோட அம்மா அப்பா கிட்ட சொல்லுங்கோ நா முதுகுன்றத்துலதான் இருக்கேன்’ தைர்யமா இருக்கேன்.  பயப்படவேண்டாம்னு.’

‘சரி சந்திரன்  சொல்லிடறேன் இது எல்லாம்தான்  என்னடா விபரீதம்னு  நேக்குப் புரியல’

‘ மனுஷாள்னா இப்பிடிதான். கொஞ்சம் மின்ன பின்னதான் இருப்பாங்க. என்ன செய்ய’ என்றார் பிள்ளை.

கார் டிரைவர் பயந்து நடுங்கிப்போனார்.

‘ நீரு வந்த வழியே போலாம் ரைட் ரைட்’ என்றனர் நால்வரும்

‘ நீங்க யாரு’

‘’ சந்திரன் மூடுங்க வாயை. தொறந்தா  கிறந்து  எத்னா பேசுனா உங்க ஆயி அப்பன் ஊர்ல இன்னும்  கொறகாலம் இருந்து ஓட்ட முடியாது’

‘ இது அநியாயம்’

‘ வண்டிய எடுப்பா டிரைவர்’

‘ வண்டி டிரைவரே  உனக்கு  வண்டி முழுசா வேணுமா இல்ல அதயும் தோத்துட்டு நிக்கப்போறயா’

கார்  டிரைவர் குழம்பிப்போனார். வந்த வழியே  கார் திரும்பச்சென்றது.

சந்திரன் திணறிப்போனான்.  அவன் கண்கள் குளமாகியிருந்தன.

 முதுகுன்றம் சேக்கிழார் லாட்ஜ்க்கு  சந்திரன் போனான்.  அறையில் சற்று ஓய்வு எடுத்துக்கொண்டான்.  முகம் கழுவிக்கொண்டு புறப்பட்டான்.  கடைத்தெரு குட்டிக்கடையில் மாலை காபி சாப்பிட்டு விட்டு மெதுவாக நடந்தான்.

திரு வி க நகர் வீரபாண்டியன் வீதியில் இருக்கும் செல்லமுத்துசார் வீட்டுக்கே போனான். அவரும்  மதுரவல்லியிலிருந்து வீடு வந்திருந்தார்.

‘ என்ன சந்திரன் வாங்க ‘

சந்திரன் தருமங்குடி நிறுத்தத்தில் நடந்தவைகளைச் சொன்னான். சந்திரனுக்கு க்கண்கள் கலங்கியிருந்தது.

‘ நீங்க முதுகுன்றத்துல இருக்கிங்க. உங்க பெற்றோர்களைப்பற்றி உங்களுக்கு  கவலை வரும் அவுங்க ளுக்கு உங்கள நினச்சி  நினச்சி கவலை. இப்பிடித்தான் சமூகம்ன்னா  அது  லேசுபட்டது இல்ல’

‘ நாம தப்பு செய்யுலயே’

‘அதுதான் உங்க பலம். அந்த பலம் கொறயாம பாத்துகுங்க’

‘ நல்ல விஷயங்கள்  ஆனா  ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி பாக்குறாங்களே சார்’

‘இப்பிடித்தான் இருக்கும். எதுவுமே தானா நடந்துடாது சும்மா வந்திடாது. எதிர்ப்புக்கள் இருக்கவே செய்யும். நாம நம்ம மனச்சாட்சிக்கு  நேர்மையா செயல்பட்டா போதும்.  ஆனா  செயல் படணும்  அது மிக முக்கியம் மற்றதை காலம் பாத்துகும்’

‘காலம்னா’

‘மக்கள்தான்’

இருவரும்   வீட்டு ஹாலில் அமர்ந்து  நடந்து முடிந்த விஷயங்கள் பற்றி ப்பேசிக்கொண்டார்கள்.

 ’கிராமங்கள் ஒரு நாள்  சாதிச்சகதியிலிருந்து மீண்டெழும்.  சமூகப் பெரியார்கள்  சொன்ன வார்த்தை  பொய்யாகிவிடாது ஆயிரம் இடர் வரினும் நமது பணி தொடர்ந்து செயல் படுவதுதான்.’ செல்லமுத்து முடித்துவைத்தார்.

 செல்லமுத்து சார் வீட்டின்  ஹால் சுவரில் ’இந்தியாவின்  ஆன்மா அதன் கிராமங்களில்தான் வாழ்கிறது’ - மகாத்மா காந்தி .  என்று எழுதியிருந்தது.

அதன் கீழாக சந்திரன் ‘ இந்தியாவின் ஆன்மா அதன் கிராமங்களில்  எங்கே வாழ்கிறது?  வினாக்குறியிட்டு மாற்றி எழுதினான்.

’-------------------------------------------------------------

  திருபெரும்புதூர் ராமானுஜர்  தமிழ் நாட்டில் செய்தசமூகப் புரட்சிகளை  முன் எடுத்துச்சென்றிருந்தால்  சாதிப்பிரச்சனை இத்தனைச் சிக்கலாகியிருக்காது..  வரலாறு நமக்கு விருப்பமானதை எங்கே  நிகழ்த்தி முடிக்கிறது.

   சித்தர்கள் அனேகரும்    வங்காளத்து விவேகானந்தரும்  மலையாளத்து நாராயணகுருவும் வடலூர் வள்ளல் ராமலிங்கரும் ராஜஸ்தானத்து  மீராபாயும் அப்பிராமணர்கள்தானே’

‘ ஆமாம் சார்’

‘ அப்ப ஏன் இந்த  மடத்துக்கு பொறுப்பாமட்டும் இவுங்கள்ள யாருமே வரமுடியாதுன்னு சொல்றாங்க’

‘ நியாயமான கேள்வி சார்’

‘ யோசிச்சி பாருங்க,  இதுல ஏதோ சதி இருக்குதா இல்லையா’

சந்திரன் திக்குமுக்காடிப்போனான். எந்த கேள்விக்கும் அவனால் பதில் சொல்லமுடியவில்லை.

‘ கொஞ்சம் ஓய்வு எடுங்க ஊரு வரப்போகுது எறங்கப்போறம்’

இருவரும் இறங்கத்தயார் ஆனார்கள்.  அதிகாலை நான்கு  மணிக்கு முதுகுன்றம் பேருந்து நிலையம்  வந்து சேர்ந்தார்கள்.

‘ நீங்க சேக்கிழார் லாட்ஜ்க்கு போறிங்க’ நான் வீட்டுக்கு போறன். ஆறு மணி டூட்டிக்கு வந்துடலாம் என்ன சந்திரன் சொல்றீங்க’

‘ நா போய் கொஞ்சம் படுத்து தூங்கிடறேன்.  அப்புறம்  குளிச்சி தயார் ஆகி  டூட்டிக்கி வந்துடறேன்’

இருவரும் இறங்கி பைய நடந்தார்கள்.

                                                        25.

காலை டூட்டிக்கு சந்திரன் கிளம்பினான். மணாவும் மாத்ருவும் சந்திரனிடம் நடந்தவற்றை ச்சொல்லிக்கொண்டிருந்தார்கள். கடலூரிலிருந்து கஜாவின் பெற்றோர்  முதுகுன்றம் வந்து  கஜாவை சந்தித்துப்போனதுவும் ஒன்றுவிடாமல் மணா சொல்லிமுடித்தான்.

‘ கஜா உங்கிட்ட அவுங்க பேரண்ட்ஸ் வந்து போனது பற்றி ச்சொன்னர்களா’ மணாவை சந்திரன் கேட்டான்.

‘ இன்னும் நான் கஜாவை பாக்கல.’

‘இதுல சொல்ல ஒண்ணும் இல்ல. அவுங்க வருத்தப்பட்டு போயிருப்பாங்க அவ்வளவுதானே அத விடுங்க. அது நமக்கு உதவாது.  நா உளுந்தூர்பேட்டை மெய்ராஸ் கான் கிட்ட பேசுறேன். அவருக்கு தெரிஞ்ச சார்பதிவாளர் அங்க இருக்காரு. நீங்க கஜா மாத்ரு ரகு நாலுபேரும் போங்க. உங்க   அடையாள அட்டைகள் ரொம்ப முக்கியம் , பாஸ்போர்ட் போட்டோ எடுத்துகுங்க எதுக்கும்  பத்தாயிரம் ரூவா கையில வச்சிகுங்க. கேக்கறத குடுங்க. நா எண்ணைக்கு அங்க போறதுன்னு கேட்டு சொல்றன், சரியா’

மணா தலையை பலமாக ஆட்டினான்.

‘எங்க ரகு’

‘குளிச்சிட்டு இருக்காரு’

‘அவர்கிட்ட செய்தி சொல்லுங்க’

‘ நேத்திக்கி எங்கயோ போனிங்க போல’

‘ காஞ்சிபுரம் போனோம்’

‘என்ன விசேஷம்’

‘சும்மாதான் மாத்ரு’

‘செல்லமுத்து சார் கூடவா’

‘ஆமாம்’

‘என்னத்துக்குன்னு’

‘சங்கர மடத்துக்கு போய்வந்தோம்’

‘ரொம்ப நல்லா இருக்கு’ மாத்ரு சொல்லிக்கொண்டார். சந்திரன் நகர்ந்துபோனார்.

‘எனக்கு டூட்டி இருக்கு வரேன்’

‘எலி எட்டு மொழம் வேட்டி ஏன் கட்டிகிது’ மாத்ரு சொல்லிக்கொண்டே தன் அறைக்குள் சென்றார்.

ரகு குளித்துமுடித்து அறைக்குத்திரும்பினார்.

‘சந்திரன் டூட்டிக்கு கெளம்பிட்டார்’

‘ நேரமாச்சே’

‘ நேற்று காஞ்சிபுரம் செல்லமுத்து சாரோட போயிருக்கார். சங்கரமடத்துக்கு ப்போனாங்களாம்’

‘ நல்லா இருக்கு கத. நா நம்பணுமா’

‘இல்ல ரகு அவர்தான் சொன்னார்’

‘விஷயம் இல்லாம யார் போவா. அண்ணைக்கு சந்திரன் மதுரவல்லிக்கு  செல்லமுத்து சாரோட போனாரே. அதுவே இன்னும் நமக்கு சேதி வரலயே’

‘வரும் வரட்டும். நம்ப ரெண்டு  பேர் கஜா மணா ஆக நாலு பேர் உளுந்தூர்பேட்டைக்கு போறம். அங்க மெய்ராஸ்கான பாக்கறம். சார்பதிவாளர் அலுவலகத்துக்கு போறம். சேதிய சொல்லிட்டார் சந்திரன்.  போற தேதியதான் சொல்லணும். சொல்லிடுவார். நாம ரெடியா இருக்கம்’

‘ சரி பாக்கலாம் மணாகிட்ட சொல்லியாச்சா’

‘ அவரும் கூட இருந்தாரே’ மாத்ருவும் ரகுவும் சாப்பிட மெஸ்ஸுக்குக்கிளம்பினார்கள்.

செல்லமுத்து சார் டூட்டிக்கு க்ரெக்டாக வந்திருந்தார். சந்திரன் தன் பணியைத்தொடங்கி இருந்தான். நைட் டூடி முடித்த நல்ல தம்பி  சோற்றுப்பையை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.

‘ராத்திரி பூரா பிசி சார் ஒரே டெத் கால்தான்   பாலக்கரை பட்டாணிகடை ராமசாமி உடையார் மண்டையை போட்டுவிட்டார்.  காலு மாத்தி காலு எல்லாம் சேலம் ஈரோடு திருப்பூர்னு வந்துகிட்டெஇருந்துது’

‘ நல்லதம்பி அதுக்குதான நம்ப சேவயே. சம்பளமும் அதுக்குத்தானே’

‘ நா நைட்டே வர்ரதில்ல வந்த ஒரு நாளும் இப்பிடி’

சொல்லிக்கொண்டே பையைத்தூக்கிகொண்டு கிளம்பினார்.

’வரேன் சந்திரன் இன்னும் டெத் காலு வரும், உடையார் பாடிய சாயங்காலம் எடுக்குறாங்க’

நல்லதம்பி வீட்டுக்குக்கிளம்பினார்.

மெய்ராஸ்கான் உளுந்தூர்பேட்டை டெலிபோன் ஆபிசில் சூப்பர்வைசராக வேலை செய்கிறார். சந்திரனுக்கு மிக நெருங்கிய நண்பர். அவரிடம் சந்திரன் கஜா மணா பதிவுத்திருமணம் பற்றி ப்பேசினார்.

‘ நாளைக்கே அனுப்பிவங்க.  அவுங்க  எல்லாரும் பத்துமணிக்கு இங்க இருக்கட்டும்.  அடையாள அட்டை. பாஸ்போர்ட் போட்டோ, சாட்சிக்கு ரெண்டுபேர் கையில  கொஞ்சம் பணம், அவ்வளவுதான், நான் பேசி வச்சிடறேன். போறவங்க  டெலிபோன் மெய்ராஸ்கான் அனுப்பினாருன்னு சொன்னா போதும் அங்க ராமானுஜம்னு பியூன் இருக்காரு. அவர மொதல்ல பாக்குணும் அவ்வளவுதான். பாக்கிய எல்லாம் நா சொல்லி வச்சிடறேன்.அந்த ஆபிசருக்கும் டிரான்ச்ஃபர் வரும்னு பேசிக்குறாங்க அதுக்குள்ள  நாம வேலய முடிச்சிக்கிணும் சந்திரன்’

மெய்ராஸ்கான் சொல்லிமுடித்தார். சந்திரன் மாத்ருவுக்கும் ரகுவுக்கும் சேதி சொன்னார். மறு நாள் விடுப்புக்கு  அவ்விருவரும் மேல் அதிகாரியிடம் சொல்லி வைத்தனர். மணாவையும் கஜாவையும் தொலைபேசியில் கூப்பிட்டு சந்திரனே  விஷயத்தைச்சொல்லிமுடித்தார். நாளைக்கு  உலுந்தூர்பேட்டையில் பதிவுத்திருமண விஷயங்கள் பூர்த்தியானால் கொளஞ்சியப்பர் கோவில் சம்பிரதாய த்திருமணம்மட்டுமே பாக்கியிருக்கிறது. அப்பாவிடம்  விஷயம் சொல்லவேண்டும் சந்திரன் மனதிற்குள் சொல்லிக்கொண்டார்.

‘சந்திரன் இண்ணைக்கு நேரா வீட்டுக்கு போயிடுவம். சந்திப்பு இல்லே’

‘ஆமாம் சார்’

மணி ஒண்ணரை நெருங்கிற்று. சந்திரன் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு ஆற் றைக்கடந்து பாலக்கரை வந்து வழக்கம்போல் பஸ்பிடித்தான்.

‘’காஞ்சிபுரம் போயிட்டு வந்தாச்சா’ சந்திரனை அம்மா விசாரித்தார்.

‘ஆசீர்வாதம் பலமா’ அப்பா சந்திரனைக்கேட்டார்.

சந்திரன் சிரித்துக்கொண்டான்.

‘ நமுட்டு சிரிப்பு சிரிக்கறே’

‘இல்லப்பா’

‘சும்மா சொல்லாதே, செல்லமுத்து சாரும் கூட வந்து இருக்கார்’

‘ஆமாம் அதுக்கென்ன’

சங்கரமடத்தில் கொடுத்த அட்சதை என ஒரு சிறு பொட்டலத்தை அம்மாவிடம் கொடுத்தான்.

‘ சாமி,கிட்ட வைடா  ஸ்நானம் பண்ணிட்டு எடுத்துக்கலாம் இப்ப விழுப்பான்னா இருக்கம்’ அம்மா சொன்னாள்.

காபி சாப்பிட்ட சந்திரன் இரட்டை பெஞ்சில் படுத்து  ஓய்வு எடுத்துக்கொண்டான். சற்று நேரத்துக்கு எல்லாம்  உறங்கிப்போனான்.

‘ இவன் காஞ்சிபுரம் போயிட்டு வந்த்ருக்கான்’

‘ போறேன்னு சொன்னான் அவ்வளவுதான்’

‘அங்க போயி பெரியவாளை சேவிச்சி ஆசிர்வாதம் வாங்கிண்டு வரவா போயிருக்கான்’

பதில் ஏதும் சொல்லாமல் இருந்தாள் சந்திரனின் தாயார்.

‘ படிச்சம் ஒரு உத்யோகம் வந்துது மேல படிச்சம் இன்னும் மேல மேல போனம் ஒரு கல்யாணம் பண்ணிண்டம் குடும்பமாச்சி  சம்பாரிச்சம் ஒரு வீடு நெலம் நீச்சுன்னு வாங்கினம் ராமா கிருஷ்ணான்னு சொன்னம்னு இருக்க மாட்டான்போல’

‘ஒரு வித்யாசமாத்தான் தெரியர்து’

‘என்ன விபரீதமா தெரியர்தா வித்யாசமா தெரியர்தா’

‘தப்பு ஒண்ணும் இல்ல. ஆனா என்ன யோசனைன்னு புடிபடலயே’

‘ ஒரு கல்யாணத்த பண்ணிண்டா சரியா இருப்பனோ’

‘எனக்கும் அந்த யோஜன தோணாமவா  தோணறது. வண்டில பாரம் இல்லன்னா  இழுக்கற மாட்டுக்கு சரியா வராது கன்னா பின்னான்னு இழுத்துண்டு ஓடுமே அந்தமாதிரி இருக்கானோ’

’பாரம் வைக்கணும்னு சொல்ற’

‘கெட்ட பழக்கம் கெட்ட சக வாசம் இல்லே அதுவரையிலும் திருப்திதான்’

‘குரு பலன் வரணும் இன்னும் ஒரு வருஷம் போகணும், வயசும் ஆகணுமே’

‘எதனா மேல படிக்கலாம்’

‘ சமூகம் அரசியல்  கஷ்டப்படுற மக்கள்ன்னு தான் எப்பவும் பேசறான் மேல படிடான்னு நாம  சொல்லணும்’

‘ நல்ல யோசனையெல்லாம் வேணும்தான்.  பாக்குற உத்யோகத்தயும் காப்பாத்திகணும் மேல மேல வரணும்’

‘விஷ்ணு சஹஸ்ர நாமம் தெனம் படிடான்னு சொல்லுங்கோ’

‘சொல்றேன்’

இரவு டிபன் செய்வதற்காக சந்திரனின் அம்மா அடுப்படிக்குப்போனாள். பாத்திரங்கள் உருட்டும் ஒலி சன்னமாய்க்கேட்டது.

சந்திரன் மெதுவாகக்கண்களைத்திறந்தான்.

‘என்ன தூங்கியாச்சா’

‘தூங்கினேன் போறும்’

‘ அப்பா மணான்னு சொன்னேனே. அவன் கூட ஒரு அய்யங்கார் பொண்ண லவ் பண்றான்னு சொன்னேனே’

‘ அந்த மீன்காரன் சந்திரகாசு பையந்தானே’

‘ஆமாம். அந்த பொண்ணோட அப்பா அம்மாகிட்ட  இந்தவிஷயம் சொல்லியாச்சு’

‘அவா அம்மாவும் அப்பாவும் பொண்ணு கிட்ட பேசிபாத்தா ஒன்ணும் கத ஆகல, எப்பிடியாவது போன்னு சொல்லிட்டு  அவா  கோவிச்சிண்டு போயாச்சு’

‘அடுத்தது’

‘ அவாளுக்கு பதிவுத்திருமணம் நாளைக்கு ஆகப்போறது. ஏற்பாடு எல்லாம் பண்ணியாச்சு’

‘ரொம்ப சரி’

‘பத்திரிக அடிச்சி வரும் உனக்கு தறேன்’

‘ஏய் அவன் அப்பன் எனக்கு  கல்யாண பத்திரிக பாக்கு  வச்சிட்டு கல்யாண சாமான் ஜாபிதா என்னண்ட வாங்கிண்டு போகணும். அவா ஆத்துல பந்தக்கால் முகூர்த்தம் பண்ணணும். ஊர்  ஜனங்களுக்கு த்தெரியணும் அவா ஆத்துல புள்ளக்கி கல்யாணம்னு . சும்மா இல்லெடா சேதி’

‘அப்பா சாரி அவசரப்பட்டுட்டேன். மணா அப்பா பத்திரிக வைப்பார்’

‘அப்புறம் நானாச்சு,  சந்திரகாசு அவர் ஆச்சு உனக்கு இதுல வேல சொல்லு’

‘ வக்கீல் மாதிரி  பேசற’

‘ அந்த காலத்துல  இருந்தாளே  அந்தக்கண்ணகி வக்கீலுக்கு படிச்சாளா மதுரையில பாண்டிய ராஜா  முன்னாடி என்ன பேச்சு பேசியிருக்கா’

‘ஒன் டூட்டின்னா சட்டம் திட்டம் எல்லாம் கரெக்டா பேசறே’

சந்திரனின் தந்தை சிரித்துக்கொண்டார்,

‘ அவா ரேண்டு பேரும் க்‌ஷேமமா இருந்தா அதுவே போறும்’

சந்திரனின் அம்மா டிபன் தயார் என்று குரல் கொடுத்தாள்.

‘ டேய் சாயந்திரம் ஆனா விபூதி நெத்தில இட்டுகோ விஷ்ணு சஹஸ்ர நாமம் ஒரு நடை படி அப்புறம் சாப்பிடுடா’

‘ எனக்கு சொல்றயா’

‘ உனக்குதான்’

‘ இப்ப என்ன புதுசா’

‘ ஆமாண்டா நீ செய்வேன்னு பாத்தேன்  ஒண்ணையும் காணும் நா தகப்ப்னாச்சே  நல்லதை சொல்லணும். என் கடமை. ஆனா பொம்மனாட்டி கொழந்தளே இந்தக் கலி காலத்துலே  அப்பா அம்மா பேச்ச மதிக்க மாட்டேன்றா காதுல போட்டுகறது இல்ல’

‘யார மனசுல வச்சிண்டு சொல்ற’

‘ நானே தான் சொல்றேன்’

சந்திரன் நெற்றியில் விபூதி இட்டுக்கொண்டான். விஷ்ணு சஹஸ்ர நாம புத்தகம் எடுத்துக்கொண்டு  அதன ஒரு முறை வாசித்து முடித்தான். விபூதியும் விஷ்ணு சஹஸ்ர நாமமும் ஒன்றும்  முரணில்லைதான்.

இருவரும் சாப்பிட்டு முடித்தனர்.

                                                                  26.

தருமங்குடியிலிருந்து சந்திரன் காலை டூட்டிக்கி வந்திருந்தான். செல்லமுத்துசாரும் காலை பணிக்கே வழக்கம்போல் வந்திருந்தார்.  சந்திரன் மணப்புரம் சிவன் கோவில் தேவஸ்தானத்திற்கு ஒரு டிரங்கால் புக் செய்தான். யது கிருஷ்ணா என்று பர்டிகுலர் பர்சன் கால் புக் செய்தான். உடனேயே அந்தக்காலும் கிடைத்தது. அவனுக்குத்தெரிந்த குட்டிக்கடை அய்யரின் போனிலிருந்துதான் புக் செய்தான். அய்யரிடம் இந்த சேதியை சொல்லித்தான் கால் புக் செய்தான்.

 ’கிராம  காலனி மக்களிடையே உள்ள கிராம தேவதைக்கு.  குடமுழுக்கு விழா. உள்ளூர் சிவாச்சாரியார்  சர்வசாதகம்  என இருவர்  எல்லா யாக பூஜைகளையும் செய்வார்கள்.   தாங்கள்  உடன் இருந்து  ஆசிர்வதித்தால் போதும் . அதுவே எங்கள்  ஊருக்கு க்கொடுப்பினை’ என்றான்.  வாடகைக்காரிலேயே  மணப்புரத்திலிருந்து  அய்யா  வரவேண்டும். முதுகுன்றம் வந்துவிட்டால் மதுரவல்லி கிராமத்திற்கு தானே அழைத்துச்செல்வதாகவும் கூறினான். போக்குவரத்துப்படியோடு சிவாச்சாரியருக்கு குரு  தட்சணை  எவ்வளவோ அதனைத்தர தயாராக இருப்பதாகவும் உறுதியாய்ச்சொன்னான். யது கிருஷ்ணாவின் வங்கிக்கணக்கு எண் விபரம் வாங்கிக்கொண்டான்.  குடமுழுக்குப் பத்திரிகை அனுப்பிவைப்பதாய் ச்சொன்னான். ஆயிரம் ரூபாய் முதலில் வங்கி வழி அனுப்பிவிடுவதாகவும் சொல்லி யே முடித்தான்.

‘சந்திரன் அவருக்கு த்தமிழ் வருகிறதா’

‘ நன்றாக த்தமிழ் பேசுகிறார்’ சந்திரன் பதில் சொன்னான்.

‘ நமக்குத்தான்  தமிழை விட்டால் ஒன்றும் தெரியாது’

மாத்ருவும் ரகுவும் அலுவலகத்தில் நுழைந்தார்கள்.

‘ சக்சஸ்’ ரகு சந்திரனிடம் சொன்னார்.

‘மெய்ராஸ்கான் எல்லா ஏற்பாட்டையும் பக்காவாக பண்ணியிருந்தார். சார்பதிவாளர் அலுவலகத்தில்  எங்களுக்கு சிரமமே இல்ல’ மாத்ரு சேர்ந்து கொண்டார்.

‘ வாழ்த்துக்கள்’ செல்லமுத்து சார் இருவருக்கும் சொன்னார்.

‘மதியம் ஸ்வீட்டோட சாப்பாடு குட்டிக்கடையில். மணாவும் கஜாவும் வெயிட் பண்றாங்க. நாம போறம். செல்லமுத்து சாரும் வரணும்’ ரகு சொல்லி முடித்தார்.

நல்லதம்பி அப்போதுதான்  டூட்டிக்கு வந்து சேர்ந்தார்.

‘ ஜமாய்ங்க,‘’ஸ்வீட் எனக்கு அனுப்பி வையுங்க’

அனைவரும் குட்டிக்கடைக்குச்சென்றார்கள். நாராயண அய்யர் அனைவருக்கும் ஸ்பெஷல் மீல்ஸ் பரிமாறி முடித்தார். பீடா வோடு சாப்பாடு முடிந்தது.

‘ வாழ்த்துகள் பல. இனிதே வாழ்க’ செல்லமுத்துசார் மணாவையும் கஜாவையும் நிறைவாக  வாழ்த்தினார்.

ரகு எல்லோருக்கும் ஃபைவ் ஸ்டார் சாக்லேட் வாங்கிக்கொடுத்துத்தன் மகிழ்ச்சி தெரிவித்தார். ரகுவின் பழக்கம் அது.

கஜாவுடன் ரூம் வரைக்கும் சென்று  வருவதாய்ச்சொல்லி மணா புறப்பட்டார்.

‘ இனி ஒம் பாடு கஜா பாடு ’ மாத்ரு வாழ்த்தி அனுப்பினார்.

’மாத்ரு ரகு இருவரும்  என் வாழ்க்கையில் மறக்கமுடியாத முக்கியமான மனிதர்கள்.’

‘ மணா நான்’

‘ நீங்கள் இல்லாமலா’ மணா பட்டென்று  சந்திரனுக்கு ப்பதில் சொன்னான்

மாத்ருவும் ரகுவும் லாட்ஜ் க்கு ப்புறப்பட்டார்கள்

செல்லமுத்துசாரும் சந்திரனும் நடந்தே கடைத்தெருவை க்கடந்தார்கள்.

‘ இனி குட முழுக்கு வேலய  கவனமா பாக்கலாம்.’

‘ நானு  குடமுழுக்குக்கு சிவாச்சாரியார் ஓதுவார் இவர்களை அழைத்து வந்துவிடுவேன்’

இருவரும் செல்வராஜு பார்க்கை அ டைந்தார்கள். வழக்கமாக அமரும் சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்துகொண்டார்கள்.

‘சார் இது நாள வரைக்கும் உங்க குடும்பத்த பத்தி நானும் கேக்கல நீங்களும் சொல்லல’

‘இதுல சொல்ல எதுவும் இல்ல. எனக்கு ஒரே பையன்  கெட்டிக்காரன் கொல்கத்தாவுல இருக்கான். அவன் ஐ ஏ எஸ்.  அங்க  மா நில சர்க்கார்ல  செக்ரட்ரி. அங்கயே  ஒரு பெங்கால் பொண்ண கட்டிகிட்டான். அந்தபொண்ணும்  பெரிய வேலயில இருக்கா.  அந்த பொண்ணு என்ன ஜாதி அதெல்லாம் எனக்கு தெரியாது. நானும்கேக்குல. இங்க்லீஷ்ல தான் அவகிட்ட பேசுணும். ஒரு பேத்தி இருக்கா. மூணு இல்ல நாலு படிக்கலாம். அவ்வளவுதான். இங்க நானு என் மனைவி இருக்கம்.  எங்க  மதுரவல்லி கிராமம் இருக்கு ஏதோ ஓட்டிகிட்டு இருக்கம்’’

’‘ நல்லா சொன்னீங்க மகிழ்ச்சியா இருக்கு’

‘இப்பகூட நா வேலய வேணாம்ட்டு  எழுதி குடுத்துட்டு போயிடுவேன். பென்ஷன் நல்லாவே வரும், கூடாதுன்னு இருக்கன்’

‘மதுரவல்லி குடமுழுக்கு செலவுக்கு என்ன செய்வீங்க’

‘ஊர்ல வசூல் பண்ணுவாங்க. நானும் தேவயானதை கொடுத்துடுவேன்’

‘ இத  எல்லாம்  சரியா கேட்காம நா அந்த கேரளா மணப்புரம்  சிவாச்சாரியர எல்லாம் கூப்பிட்டோமே அதிகப்பிரசங்கியா எதுவும் செஞ்சிட்டுமோன்னு பயம் ஆனா ஆசை   இருந்துது அதான்’

‘ஒண்ணும் தப்பு இல்ல சந்திரன் நீங்க சிவாச்சாரியார் ஓதுவார் இன்னும் யாரு எவரோ  உங்க நண்பர்கள் மாத்ரு ரகு இன்னும் மணா கஜா யாரா இருந்தாலும் வரட்டும், மலயாள மாமா கிட்ட சொல்லிடுங்க  மதுரவல்லி குடமுழுக்கு விழாவுல சமையலுக்கு வந்துடுவாரு. என்ன  கூலியோ அத குடுத்துடுவம்  நம்ம வீட்டுலதான் தங்கபோறம் ’

‘ நாதஸ்வர செட் சொல்லிடணும் வாண வேடிக்கைக்கு வெடி வாங்கணும்’

‘அதெல்லாம் பாத்துகலாம்’

‘அந்த கேரளா சிவாச்சாரியாருக்கு ஆயிரம் ரூவா அனுப்பிட்டேன்.  குடமுழுக்கு பத்திரிகை  அனுப்பியாச்சு அவுருகிட்டயும் பேசிட்டேன்’

‘ ரொம்ப சரி’

‘ மணா கஜா கல்யாணம் இருக்கு’

‘அத சிறப்பா செஞ்சிட்டா போச்சி’

‘மணா பத்திரிகை வந்திடும்  அதுக்கு ஏற்பாடு நடக்குது’

‘வேற என்ன’

‘கெளம்புவமா’

‘சரி சந்திரன்’

இருவரும் கலைந்து சென்றார்கள்.

தருமங்குடி சென்ற சந்திரன் சாமி நாத சிவாச்சாரியரிடம் மதுரவல்லி கும்பாபிஷேகம் பற்றி விவரமாகச்சொன்னான். செல்லமுத்து சார்தான் பிரதானம் என்றும் சொல்லிவைத்தான். அவர் ஒரு குடமுழுக்கு ஜாபிதா தருவதாகவும் அதனை முதுகுன்றம் கேகேபி செட்டியார் கடையில் கொடுக்க  அவர்கள் பொருட்கள் அத்தனையும் செட்டாக  ஒரு வேனில் அனுப்பிவிடுவார்கள் என்றும் சொன்னார். குயவர் சாமான்கள் மடக்கு பானை இத்தனை இத்தன  என்று எழுதிவிட்டால் அதுவும் வந்துவிடும் என்றார்.

‘ கோவில்ல ஒரு சாமிதானே’

‘ஒரே சாமிதான் நொண்டி முனின்னு சொன்னார்’

’ நா ஜாபிதா தரேன்  நீ காரியத்தை பாரு. எனக்கு தட்சணை எல்லாம் அதுலயே எழுதி இருப்பேன் ஒத்தாசைக்கு ஒரு குருக்கள் வேணும். முதுகுன்றம் கோவில்ல நடராஜன்னு ஒரு பையன் இருக்கான் ஒணசலா ஒயரமா இருப்பான் . நா தமாஷா ஏணி ஏணி ம்பேன். கடைத்தெருவுல அவன்  வீடு. அவுனுக்கு நா  சேதி சொல்லிடுவேன். கூட அழைச்சிண்டு வந்துடுவேன்’

‘ரொம்ப சரி அப்புறம் பேசிகலாம்’

‘ஜாபிதா கொடுத்தா அட்வான்ஸ் தரணும்’

‘குடமுழுக்கு பத்திரிகை குடுத்துட்டு அதயும் தந்துடறேன்’

சிவாச்சரியார் அமைதியாக இருந்தார்.

 ஒரு நூறு ரூபாய் நோட்டை  சிவாச்சரியாரிடம் கொடுத்தான் சந்திரன்’

நேராக தேவாரம் ராஜகோபால்பிள்ளையை தேடிக்கொண்டு போனான்.

அவரே எதிரில் வந்தார்.

‘’ நானே உங்கள பாக்குணும்னு இருந்தேன்’

‘ உங்ககிட்ட ஒரு சேதி. முதுகுன்றம் ஊருக்கு மேற்கே மதுரவல்லி கிராமம் அங்க ஒரு கும்பாபிஷேகம் நீங்க வரணும் தேவாரம் பாடணும்னு எனக்கு ஆசை’

‘ ரைட்டா வரேன்  யாரு என்னை கூப்பிடறாங்க .அது பெரிய கொடுப்பினை இல்லயா’

‘தட்சணை’

‘ நா தேவாரம் பாடுவேன் ஒரு ரூவா வாங்க மாட்டேன் அது எனக்கு பிடிக்காது. இண்ணைக்கு நேத்திக்கு சமாச்சாரம் இல்ல இது’

‘ நா குடமுழுக்கு பத்திரிகை தரணும்’

‘மெதுவா குடுங்க  உங்களோடதானே வரப்போறேன்’

‘ ரொம்ப பெரிய ஒத்தாசை பிள்ளைவாள்’

இருவரும் பெசிக்கொண்டே அரசமரத்தடியில் நின்றனர்.

சந்திரனின் தந்தை அவனை நோக்கி வந்தார். ’இண்ணைக்கு அந்த மீன்காரன்  சந்திரகாசு என்னைப்பார்த்து கல்யாணப்பத்திரிகை வைத்தான். நான் அவனுக்கு ஜாபிதா கொடுத்தேன். கொளஞ்சியப்பர் கோவிலுக்கு வந்துடணும்னு’ சொன்னான்.

‘உங்களவங்க பொண்ணுதான்’ என்றான்.

’பிள்ளை அப்புறம் பாப்பமா’ எனக்கழண்டுகொண்டார்.

சந்திரனும் அவன் அப்பாவும் பேசிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தனர்.

’ஏண்டா காபி சாப்பிடாம போயிட்டே’

சந்திரனின் அம்மா கடிந்து கொண்டாள்.

‘ நம்ப உடம்ப நாம பாக்கணும். சுவர் இருந்தாதான் சித்திரம் எழுதமுடியும் ஞாபகம் வச்சிகோ’

அம்மா கொண்டு வந்த காபியை சாப்பிட்டு முடித்தான்.

                                                          27.

மணாவும் கஜாவும் அலுவலக நண்பர்களுக்கு மட்டும்  திருமண பத்திரிகை கொடுத்தனர். மலையாள மாமி மெஸ்ஸில்  வரும் விருந்தினர்களுக்கு கிராண்ட் டிபன் சொல்லியாயிற்று, அதனை கொளஞ்சியப்பர் கொவிலுக்கே கொண்டு தருவதாக பேச்சு.  ஐம்பது காபி ஃபிளாஸ்க்கில்  கொண்டுவரவேண்டும்.

பூக்காரன் மாலை இத்யாதிகளை திருமண மண்டபத்திற்கே கொண்டு தர ஏற்பாடு.. கல்யாணப்புடவை வேஷ்டி திருமாங்கல்யம் எல்லாம் கஜாவும் மணாவும் முதுகுன்றம் கடை வீதியிலேயே  வாங்கி விட்டார்கள்.

திருமணத்தன்று  விடியற்காலையே வளையமாதேவியிலிருந்து மணாவின் அப்பா அம்மாவும் காரில் புறப்பட்டு மண் டபம் வந்து சேர்ந்தார்கள். சந்திரனின் அப்பா வந்தார். அவர்தானே புரோகிதர். மாத்ருவும் ரகுவும் நல்லதம்பியும் செல்லமுத்துவும் கல்யாண  டிப் டாப்பாக வந்திருந்தனர். உளுந்தூர்பேட்டை மெய்ராஸ்கான்  வந்திருந்தார்.  டெலிபோன் லைன்மென்கள் ஜகநாதன் மோஹன்ராஜ்  சையத் மஜ்கர்,அஞ்சலக தந்தி கிளார்க் டி பி ஜெயராமன்  வங்கி ஊழியர்கள் வள்ளியப்பன் கந்தசாமி  கிருஷ்ணன் என நண்பர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. பூபதி ஸ்டுடியோ க்காரர்  திருமண விழாவை அமர்க்களமாக போட்டோ எடுத்து முடித்தார்.

 கொளஞ்சியப்பர் கோவில் மேளக்காரர்  இரண்டு மோஹன ராக  கீர்த்தனைகளைக் கச்சிதமாக வாசித்தார்.

கஜாவீட்டிலிருந்து யாரும் வரவில்லை. வர மாட்டார்கள்தான். அலுவல நண்பர்கள் மட்டுமே வந்திருந்தார்கள். மலையாள மாமா மாமி வந்திருந்தனர்.  அவர்களிருவருக்கும் பாதபூஜை செய்தார் கஜா. அவர்களே கல்யாணப்பெண்ணுக்குத்தாய தகப்பனாய் இருந்தனர். அவர்கள்தானே வந்திருந்தோருக்கு  டிபன் ஏற்பாடும்.

மணா பட்டு வேஷ்டி பட்டு சொக்கயில் கஜாவுக்கு தாலி கட்டினான். வந்திருந்தவர்கள் நிறைவாக ஆசீர்வதித்தனர். கெட்டி மேளம் வாசிக்க தீயை வலம் வந்தனர். கொளஞ்சியப்பரை பிரதட்சிணம் வந்து மண விழா சுபமாய் முடிந்தது.

மாத்ரு ரகு சந்திரன் நல்லதம்பி செல்லமுத்து என அனைவரும் தம்பதியர்க்கு மஞ்சள் அரிசி மலர் போட்டு ஆசீர்வதித்தனர்.

கடைத்தெருவில் கனரா வங்கி அருகே  கோதண்டபாணி நாயுடு காம்ப்ளக்ஸில் ஒரு சிங்கிள் ரூம் பார்த்து அட்வான்ஸ் கொடுத்திருந்தான் மணா. புது மண தம்பதியர் அந்த வீட்டிற்குச்சென்றார்கள். மணாவின் தாயும் தந்தையும் உடன் சென்றார்கள்.

‘ என் வேல முடிஞ்சிது’ சந்திரனின் அப்பா தருமங்குடிக்குப்புறப்பட்டார்.

‘ சொன்னத செய்துட்டே’ சந்திரன் அப்பாவுக்கு ச்சொன்னான். முதுகுன்றம் பேருந்து நிலையத்திற்கு ஒரு ஆட்டோவில் அப்பாவை ஏற்றி அனுப்பினான். மதுரவல்லி நொண்டி முனி கோவில் கும்பாபிஷேக பத்திரிகை ஒரு பத்து இருக்கும் அதனைக் கொடுத்து அனுப்பினான். ‘ நீ குருக்கள் மாமாட்ட குடு , தேவாரம்  ராஜகோபால் பில்ளைக்கு குடு அது போதும், நா வந்து அவாள குடமுழுக்குக்கு கூட்டிண்டு போவேன் அது தெரியும் அவாளுக்கு’

  சரிடா  இனி நா போயிக்கிறேன் உன் வேலயைப்பார்’ என்று சொல்லி அவர் கிளம்பி விட்டார்.

‘ எனக்கு மதுரவல்லி கும்பாபிஷேகம் சம்மந்தமா  இங்க வேல இருக்கு’

‘ஆகட்டும் அது சாமி காரியம்’

சந்திரனின் அப்பா  விடைபெற்றுக்கொண்டார்.

தருமங்குடி சந்திரன் வீட்டுத்திண்னையில்  திருமணமான  மணாவின் சொந்த  தாய் மாமா கோபமாய் அமர்ந்திருந்தார்,

சந்திரனின் தாயாரைப்பார்த்த அவர் ‘அய்யர் வரட்டும் பேசிக்குறேன்’ என்று கர்ஜித்தார்..

சந்திரனின் அம்மா அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்துவிட்டு சமாதானமாய்ப் பேசிக்கொண்டு இருந்தார்.

‘ என் பொண்ண கட்டிக்குறேன்னு பேச்சு இப்ப ஒரு பாப்பாமுட்டு பொண்ண கட்றானாமே எப்பிடி. தருமங்குடி  அய்யிரு மொவந்தான் ஏற்பாடுன்னு சேதி. என் வவுறு எரியுதுல்ல. ஊரு கூடி கல்யாணமா இல்ல கண்ணு காணாத போய் திருட்டு கல்யாணம் பண்ணிகிட்டு வருவியா. இனி   என் மச்சான் வூட்டுல எனக்கு வேல இல்ல.  எல்லாம் முடிஞ்சிபோச்சி தல மொழுவி புட்டன். அய்யிரு வரட்டும் அவுருகிட்ட  பேசிக்குறன்’

சொல்லி அமர்ந்திருந்தார்.

சந்திரனின் அப்பா பேருந்து நிறுத்தத்தில் இறங்கி  மெதுவாக வீடு வந்து சேர்ந்தார்.

‘ வாங்க என்ன சேதி’

‘ நீ செய்தது தேவலாமா’

‘ எம் பொண்ண கட்டுறவன்,  அந்த  மீன் காரனுக்கு நா அண்ணைக்கு பொண்ணு குடுத்தன்.. அந்த மணா பயலுக்கு நா  தாய் மாமன், எம் மச்சான்  மொவன் இன்ணைக்கு பாப்பார பொன்ண கட்டிகுறானா,  ஒன் மவன்தான் கவுட்டுத்தனமா  எல்லா ஏற்பாடும் செஞ்சான்னு கேள்விப்பட்டன் என் வவுறு  கப்பு கப்புன்னு எரியுதுல்ல, செய்யுலாமா,திருட்டு கல்யாணத்துக்கு நீம்புரு ஒடந்தையா, நீ தான் வளயமாதேவிக்கு இனி வந்துடுவியா  கூட்டுல உசுரோடு திரும்ப மாட்டா அய்யிரே நீ’

கத்து கத்தென்று கத்தினான்.

தெருவே போன மாடசாமி எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டே இருந்தார்.

‘அவுரு கிட்ட  உனக்கு என்ன ஜோலி எல்லா கிருதும்  இங்க அந்த சின்ன அய்யிரு வேல.நாம அந்த அய்யிருகிட்ட வச்சிகுவம்  நாளைக்கு இருக்குது  நீ வா வளையமாதேவியாரே, பெரிய அய்யிரு இதுக்கு முடிவு தெரியாம ஒன் ஊருக்கு  தொழில் பண்ண வரமாட்டாரு நீ வா’

‘ பேச்சு பேச்சா இருக்கணும் பஞ்சாங்கத்த இடுப்புல சொறுகினு , நாண புல்ல முடிஞ்சிகினு  எங்க தெருவழி நீ வரக்கூடாது மனசுல வச்சிக்கு நா வரேன்’

‘ அவுரு கிட்ட என்ன நீ எட்ட வா வயசானவரு’

‘ கிறுக்கு கனமா இருக்குதுல்ல’

சந்திரனின் அப்பா கண்கள் கலங்கி திண்ணையில் அமர்ந்து கொண்டார்.

‘ ராம ராமா’ என்று இருமுறை சொல்லி நிறுத்தினார்.

 நெற்றியில் திரு நீற்றை பூசி ’தருமை நாதா’ என்றார்.

.

                                                             28.

குடமுழுக்கு விழாவுக்கு முதல் நாள் காலையிலேயே  கேரளாவிலிருந்து யதுகிருஷ்ணா சிவாச்சரியார் முதுகுன்றம் வந்து சேர்ந்தார். அவரை சந்திரன் வரவேற்றான். குட்டிக்கடைக்கு அழைத்துப்போய் டிபன் காபி வாங்கிக்கொடுத்தான்.

செல்லமுத்துசார் அந்த சிவாச்சாரியாருடன் மதுரவல்லிக்கு க்காரிலேயே புறப்பட்டுச்சென்றார்.

முதுகுன்றம் கேகேபி மளிகைக்கடையிலிருந்து ஜாடா கும்பாபிஷேக சாமான்களும்  மதுரவல்லி போய் சேர்ந்தன. மலையாள மெஸ் மாமா டவுன் பஸ் பிடித்து மதுரவல்லி போய்ச்சேர்ந்தார்.

மற்றொரு காரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு சந்திரன் தருமங்குடி சென்றான். சாமி நாத சிவாச்சாரியரை அழைத்துக்கொண்டான்.  தேவாரம் ராஜ கோபால் பிள்ளை கையில் வெண்கல தாளத்தோடு ரெடியாகவே இருந்தார். அவரையும் கூடிக்கொண்டான். முதுகுன்றம் வந்து நடராஜ சிவாச்சாரியாரையும் அந்தக்காரிலேயே  கூட்டி வந்தார்கள்.

செல்லமுத்து சார் வீட்டில் ஏக தடபுடலாக ஏற்பாடுகள் இருந்தன. ராஜகோபால் பிள்ளை சவுகரியமாகவே  அங்கு தங்கியிருந்தார்.

நொண்டி முனி கோவில் வாயிலில் பெரிய கீற்று கொட்டகை போட்டிருந்தார்கள். கலசங்கள்  தெய்வீகமாய்  அழகு செய்யப்பட்டன தொரணங்கள் ஜோடிக்கப்பட்டன. முதுகுன்றத்து நடராஜ சிவாச்சாரியாரும் தருமங்குடி சாமி நாத குருக்களும் ஓமகுண்ட வேலையை பார்த்துக்கொண்டார்கள்.  மதுரவல்லிக்காலனி  ஏட்டு ,ரஞ்சிதம், குஞ்சிதம் என மதுரவல்லிக்காரர்கள் பம்பரமாய்ச்சுழன்று பணி செய்தார்கள்.

கோவில் வாயிலில் பிரதானமாய் யது கிருஷ்ணா அமர்ந்திருந்தார். அவருக்கு அருகில் ராஜகோபால் பிள்ளை தேவாரத்தை திருவாசகத்தை  திருமூலத்தை  வர்ஷித்துக்கொண்டிருந்தார்.

யது கிருஷ்ணா வந்திருந்தோர்க்கு எல்லாம்   விபூதியை வழங்கிக்கொண்டிருந்தார். அவருக்கு மதுரவல்லி காலனி மக்கள் வீழ்ந்து வீழ்ந்து மரியாதை செய்தனர். யது கிருஷ்னாவுக்கு  பாத பூஜை செய்யவே பெரிய கூட்டம் கூடி நின்றது.

யாகசாலைக்கு பூரணாஹுதியையும்  மகா தீப ஆராதனையையும் மேல் சாந்தி யது கிருஷ்ணாவே நடத்தி முடித்தார்.

செல்லமுத்து சார் யது கிருஷ்ணா நம்மவர் என்று பெரிய தட்டியில் எழுதி கோவில் வாயிலில் வைக்க உத்தரவிட்டார். மஞ்சள்  பை ஒன்று எப்போதும்  செல்லமுத்து  கைவசம் இருந்தது. அதனுள் கத்தை கத்தையாய் குடமுழுக்கு ச்செலவுக்குப்பணம் இருந்தது. கோவில் தங்கமயமாய் ஜொலித்துக்கொண்டிருந்தது. மதுரவல்லி காலனி சொர்க்கபுரியாய் க்காட்சி தந்தது. மதுரவல்லி டீகடைகாரர் செல்லதுரை,  அவரின் துணைவி,  சுசீலா, செல்லமுத்துசாரின் சித்தப்பா , கடைகாரர்  ரஞ்சிதம்,  ஏகாலி மகன் குஞ்சிதம்  இன்னும்   ஊர் தொழிலாளிகள், அவர்களின் குழந்தைகள் குடும்பங்கள் என அனைவரும் குடமுழுக்கு விழாவுக்கு உழைத்துக்கொண்டிருந்தார்கள்.

யது கிருஷ்ணா செல்லமுத்து சாரையும் அவரின்  காலனி மக்கள் அவருக்குத்துணையாய் இருப்பதையும் பார்த்துப் பெருமிதம் அடைந்தார்,

யது கிருஷ்ணா  தெய்வீக மலையாளப்பாடல்கள் பல உருக்கமாய்ப்பாடி  மதுரவல்லி மக்களை  உணர்ச்சியால் கட்டிப்போட்டார்.

மதுரவல்லி மக்கள் அனைவரும்  உலக நன்மைக்காக  பிரார்த்தனை செய்ய ’’யது கிருஷ்ணா’ முன் நின்றார்.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ரு மூன்று முறை ஒவ்வொருவரும் சொல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 நொண்டிமுனி கோவில்  கோபுரக்கலசத்திற்கு  ஏணிப்படி வழியே  யாக சாலையில்  பூஜை செய்து  எல்லோரும் வணங்கிய பெரிய  குடத்தை எடுத்துப்போனார். நாய்  போலீசு குதிரை ஆகிய காவல் தெய்வங்களுக்கு மாலை மரியாதகள் செய்யப்பட்டன.

‘ கலசத்தில் புனித நீர் ஊற்றினார். கல்பூர ஆரத்தி காட்டினார். புனித நீரை காணுமிடமெல்லாம்   மேலிருந்து  தெளித்தார்.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று ஓங்கி மூன்று முறை  கோஷமிட்டார். சாமி நாத சிவாச்சாரியாரும் நடராஜ சிவாச்சாரியாரும் யது கிருஷ்ணா சிவாச்சாரியரை வணங்கிக்கொண்டு நின்றார்கள்.

யதுகிருஷ்ணா விடம் ஆசி வாங்கிக்கொள்ள நீண்ட  மக்கள்

வரிசை  காத்து இருந்தது. குடமுழுக்கு புனித நீரை அவர் வழங்கிக்கொண்டிருந்தார்.

 நல்லதம்பி விபூதி பட்டை பட்டையாய் இட்டுக்கொண்டு வரிசையில் நின்றுகொண்டிருந்தான். மாத்ருபூதம் ரகு நாதன் இருவரும் அவரோடு வரிசையில் நின்றார்கள்.

‘கஜா மணா வந்திருக்கலாம்’

‘இல்ல மாத்ரு அவுங்களுக்கும்  எவ்வளவோ பிரச்சனைகள் இருக்குதே’

’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ சொல்லி முடித்ததும் குடமுழுக்கு ப்புனித நீரை  அவர்களுக்கு வழங்கினார் யது கிருஷ்ணா.

கார் வாடகைக்கான பணத்தை மட்டுமே பெற்றுக்கொண்ட யது கிருஷ்ணா தனக்குக் குரு தட்சணையாக்கொடுத்த ரூபாய் பத்தாயிரத்தை இந்தக்காலனியில எத்தனை பெண்குழந்தைகள் இருக்கங்களோ அவுங்க   எல்லாரும்  சமமா பிரிச்சி எடுத்துகுங்க’ என்று சொல்லிவிட்டுப்புறப்பட்டார்.

‘காலனியில பொறந்தவன் . நா இப்ப  மேல்சாந்தியா ஒரு  பெரிய கோவில்ல பணி ஏற்றுகிட்டு இருக்கன். என் தாத்தா பாட்டிய கண்ணால  பாத்தாலே  தீட்டு  நீ தூரப்போன்னு   தொரத்துன  இதே  சமூகம் என்ன   மணப்புரம்  திருக்கோவில்ல கையெடுத்து கும்பிட்டு போகுது திரு நீறு என் கையால் வாங்கி நெத்தில பூசுது இத உங்களுக்கு த்தெரியப்படுத்தணும்னுதான் நான் இங்க  வந்தேன்’

‘செல்லமுத்துவும் சந்திரனும்  மேல்சாந்தியை பார்த்தபடியே கைகளைக்கூப்பி நின்றனர்.

சாமி நாத சிவாச்சாரியாரும் தேவாரம் ராஜகோபால் பிள்ளையும் நொண்டி முனி சாமி கோவிலை ஒரு சுற்று சுற்றி தரை வீழ்ந்து வணங்கினர்.

‘கிராம தெய்வம்’ ரகுவும் மாத்ருவும் கோவிலின் சுற்றுப்புறங்களை ப்பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

மேல் சாந்தி யின் கார் புறப்பட்டது.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ மாத்ரு ஓங்கி ஒங்கி க்குரல் கொடுத்தார்.

மலையாள மெஸ் மாமா செல்லமுத்துசார் வீட்டில்   தங்கியிருந்த எல்லோருக்கும் மதிய உணவு பிரசாதமாகவே வழங்கினார்.

‘ சந்திரன் நீங்க ,  சாமி நாத சிவாச்சாரியரை ராஜகோபால் பிள்ளையை கொண்டுபோய்  தருமங்குடியில் விடுங்க.’

‘சம்பாவனை’

’தேவாரம் பாடுற பிள்ளை ஒரு பைசா வாங்கீக  முடியாதுன்னு சொல்லிவிட்டார்.சிவாச்சாரியாருக்கு திருப்தியா தட்சணை கொடுத்து இருக்கம். நீங்க  இவுங்கள அவுங்க  ஊர்ல கொண்டு போய் விடலாம்’

‘ சரி  நா பொறப்படுறேன்’

‘ நா இங்க எல்லாத்தையும் அசமடக்கிட்டு  வந்துடறேன்’ செல்லமுத்து சந்திரனிடம் சொன்னார்.

ஒரு வாடகைக்காரில் சந்திரன் பிள்ளையோடும் குருக்களோடும்  தருமங்குடிக்குப் புறப்பட்டான்’.

விழாமுடிந்து எல்லோரும் கலைந்து சென்றார்கள்.

‘ஊர்லேந்து இந்த காலனிக்கோவிலு குடமுழுக்கு நிகழ்ச்சிக்கு  ஒரு ஈ காக்கா  வரல’

  காலனி  சாமிங்க  விலாசம்  தெரியாதுல்ல’

 கூடியிருந்தவர்கள் இருவர் பேசிக்கொண்டனர்..

காரில் சந்திரன் வந்துகொண்டிருந்தான். தருமங்குடி நிறுத்தத்தில் சந்திரன் வந்த கார் மறிக்கப்பட்டது.

வெள்ளைத்  தலைப்பாகை க்கட்டியிருந்த ஆசாமிகள் நான்கு பேர் சந்திரன் வந்த காரை,  வழி மறித்தார்க.ள்.

‘ சந்திரன்  மட்டும் இங்க எறங்கக்கூடாது.  கோவில் படைக்கிற குருக்கள் அய்யிரு, அந்த தேவாரம் ஓதுற  பெரிய  புள்ள   இவுங்கள மாத்திரம் எறக்கி வுடுங்க.  இனிமேலுக்கு  அய்யரு மொவன்  சந்திரன் இந்த  ஊர் வழி  வரக்கூடாது. அவுருக்கு ஊர்ல வேலயும் ஜோலியும் இல்ல. இது  இங்கிட்டு பெரியவங்க  எடுத்த  முடிவு.  அவுரு  செய்திருக்கிற காரியம்  அப்பிடி’ .    கார் கதவு திறந்தது. அவர்கள் இருவரும் இறங்கிக்கொண்டனர்,

‘மாமா  என்னோட அம்மா அப்பா கிட்ட சொல்லுங்கோ நா முதுகுன்றத்துலதான் இருக்கேன்’ தைர்யமா இருக்கேன்.  பயப்படவேண்டாம்னு.’

‘சரி சந்திரன்  சொல்லிடறேன் இது எல்லாம்  என்ன விபரீதம்னு  நேக்குப் புரியல’

‘ மனுஷாள்னா இப்பிடிதான். கொஞ்சம் மின்ன பின்னதான் இருப்பாங்க. என்ன செய்ய’ என்றார் பிள்ளை. சைவ வைணவ  சமண பவுத்த சண்டைப் பலதுகள் படித்தவர் அல்லவா அவர்.

கார் டிரைவர் பயந்து நடுங்கிப்போனார்.

‘ நீரு வந்த வழியே போலாம் ரைட் ரைட்’ என்றனர் நால்வரும்

‘ நீங்க யாரு’

‘’ சந்திரன் மூடுங்க வாயை. தொறந்தா  கிறந்து  எத்னா பேசுனா உங்க ஆயி அப்பன் ஊர்ல இன்னும்  கொறகாலம் இருந்து ஓட்ட முடியாது’

‘ இது அநியாயம்’

‘ வண்டிய எடுப்பா டிரைவர்’

‘ வண்டி டிரைவரே  உனக்கு  வண்டி முழுசா வேணுமா இல்ல அதயும் தோத்துட்டு நிக்கப்போறயா’

கார்  டிரைவர் குழம்பிப்போனார். வந்த வழியே  கார் திரும்பச்சென்றது.

சந்திரன் திணறிப்போனான்.  அவன் கண்கள் குளமாகியிருந்தன.

 முதுகுன்றம் சேக்கிழார் லாட்ஜ்க்கு  சந்திரன் போனான்.  அறையில் சற்று ஓய்வு எடுத்துக்கொண்டான்.  முகம் கழுவிக்கொண்டு புறப்பட்டான்.  கடைத்தெரு குட்டிக்கடையில் காபி சாப்பிட்டு விட்டு மெதுவாக நடந்தான்.

திரு வி க நகர் வீரபாண்டியன் வீதியில் இருக்கும் செல்லமுத்துசார் வீட்டுக்கே போனான். அவரும்  மதுரவல்லியிலிருந்து வீடு வந்திருந்தார்.

‘ என்ன சந்திரன் வாங்க ‘

சந்திரன் தருமங்குடி நிறுத்தத்தில் நடந்தவைகளைச் சொன்னான். சந்திரனுக்கு க்கண்கள் கலங்கியிருந்தன.

‘ நீங்க முதுகுன்றத்துல இருக்கிங்க. உங்க பெற்றோர்களைப்பற்றி உங்களுக்கு  கவலை  அவுங்களுக்கு உங்கள நினச்சி  நினச்சி கவலை. இப்பிடித்தான் சமூகம்ன்னா  அது  லேசுபட்டது இல்ல’

‘ நாம தப்பு செய்யுலயே’

‘அதுதான் உங்க பலம். அந்தப் பலம் கொறயாம பாத்துகுங்க’

‘ நல்ல விஷயங்கள்.  ஆனா  ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி பாக்குறாங்களே சார்’

‘இப்பிடித்தான் இருக்கும். எதுவுமே தானா நடந்துடாது சும்மா வந்திடாது. எதிர்ப்புக்கள் இருக்கவே செய்யும். நாம நம்ம மனச்சாட்சிக்கு  நேர்மையா செயல்பட்டா போதும்.  ஆனா  செயல் படணும்  அது மிக முக்கியம் மற்றதை காலம் பாத்துகும்’

‘காலம்னா’

‘மக்கள்தான்  எதுவும் இப்பிடியே போயிடாது. நா தருமங்குடிக்குப் போவேன். உங்களோடத்தான் போவேன். பேசுவம். யார் வரான்னு பாப்பம்.  அநீதி  எண்னைக்கும் தானே சாகாது. அநியாயம்னா மோதிதான்  ஆகணும்..  உச்சிமீது வான் இடிந்து வீழுகின்ற போதினும் அச்சமில்லை அச்சமில்லைன்னு பாரதி பாட்டை எதுக்கு நாம பாடுறம் ? தாலாட்டா அது.

இருவரும்   வீட்டு ஹாலில் அமர்ந்து  நடந்து முடிந்த விஷயங்கள் பற்றி ப்பேசிக்கொண்டார்கள்.

 ’கிராமங்கள் ஒரு நாள்  சாதிச்சகதியிலிருந்து மீண்டெழும்.  சமூகப் பெரியார்கள்  சொன்ன வார்த்தை  பொய்யாகிவிடாது ஆயிரம் இடர்  வரும் வரட்டும்.  பணி  செய்து கிடப்பதே  எம் கடன்.’ செல்லமுத்து முடித்துவைத்தார்.

 செல்லமுத்து சார் வீட்டின்  ஹால் சுவரில் ’இந்தியாவின்  ஆன்மா அதன் கிராமங்களில்தான் வாழ்கிறது’ - மகாத்மா காந்தி .  என்று எழுதியிருந்தது.

அதன் கீழாக சந்திரன் ‘ இந்தியாவின் ஆன்மா அதன் கிராமங்களில்  எங்கே வாழ்கிறது?  வினாக்குறியிட்டு மாற்றி எழுதினான்.

’-------------------------------------------------------------

No comments:

Post a Comment