Tuesday, August 29, 2023

என்னுரை- அம்மா எனும் மனுஷி

 

என்னுரை

வாழும் சமூகமே ஒரு எழுத்தாளனுக்குப்பள்ளி. அப்பள்ளியில் பயில்வதை அவன் தன் படைப்புகளில் கொண்டு தருகிறான்.கண்ணுக்கு நேராக நிகழும் சிறுமைகண்டு பதைத்துப்போகிறான். மனித நேய மாண்புகள் போற்றப்படுவது கண்டு நிறைவெய்துகிறான். மக்கள் சமூகம் ஒரு அங்குலமேனும்  பண்பில் தன்னை உயர்த்திக்கொள்வதைக்காண ஒவ்வொரு நொடியும் அவாவுகிறான்.

எப்படியும் பொருள் சேர்ப்பது என்கிற இழிநிலை மெத்தப் படித்தவர்களிடையே சர்வ சாதாரணமாக தொற்றிக்கொண்டு விட்டதை எண்ணிக்கவலைகொள்கிறான்.இவைகட்கு மத்தியிலும் தேர்ந்துகொண்ட நேர்மைப்பண்புகளுக்காக மட்டுமே வாழ்க்கை என்கிற உறுதிப்பாட்டோடு உலாவரும் மாந்தர்களைச் சந்தித்து மகிழ்கிறான்.

தனக்கு நேர்ந்த, தான் சந்தித்த சம்பவங்களைத் தான் கூர்ந்து பார்த்துத் தெரிந்துகொண்ட நிகழ்வுகளை அவை தன் மனதில் எழுப்பும் வினாக்களை அவைகட்குத்தான் கண்ட சமாதானங்களை விடைகளை அவை தருவிக்கும் சவால்களை மனத்திரையில்  காட்சிப்படுத்தி அவைகளைச் சிறுகதைகளாக்கி வாசகத்தளங்களில் படைப்பாளி கொண்டு நிறுத்துகிறான்.

உங்கள் கரங்களில் தவழும் இந்த ‘அம்மா எனும் மனுஷி’ என்னுடைய பதினொன்றாவது சிறுகதைத்தொகுப்பு. இதில் உள்ள 19 சிறுகதைகளில் சில உங்களுக்கு முன்னே நிகழ்ந்துவிட்ட சம்பவங்களாகக்கூட அனுபவமாகலாம். எங்கிருந்தாலும்  நாம் எல்லோரும் மனிதர்களென்பதுதானே யதார்த்தம்.

இச்சிறுகதைகளை வெளியிட்டு என்னைப்பெருமைப்படுத்திய இதழ்கள் சங்கு திண்ணை விருட்சம் சொல்வனம்  சிறகு என்பன . இதழாளர்கள் அனைவரும் என் அன்புக்குறியவர்கள்.

இப்புத்தகத்தை சிறப்பாகக்கொண்டுவந்து என்னை நெகிழவைத்த பதிப்பாளர் உதயகண்ணனுக்கு எனது நன்றி.

ஆற்றல்மிகு எழுத்தாளர்கள்  அன்புநிறை வாசகர்கள்   இச்சிறுகதைப்படைப்பை வாசித்து விமர்சித்து என் எழுத்தை மேம்படுத்த வேண்டுகிறேன்.

                                                                                                                                                                                      அன்புடன்

23ஏ இரண்டாவது தெரு                                                                                                                                          எஸ்ஸார்சி

நேதாஜி நகர் பழைய பெருங்களத்தூர்

சென்னை 600063

9443200455

 

 

No comments:

Post a Comment