Friday, October 18, 2024

அரங்கக் கவிதைகள் 4

 

மழைக்காலம் 1

முடிச்சூர்சமீபம்
அடையாற்றங்கரையில்
வீடு கட்டிக் குடியிருப்பதால்
அக்டோபர் மாதம் தொடங்கி
புலம்புவதே வாடிக்கை
மழை என்று வந்துவிட்டால்
அடையாற்றில் தண்ணீர்
எவ்வளவு போகிறது என்பதைப்
பார்ப்பதுதான் முதல் திருப்பணி
ஆறு நிரம்பிக் கரை வழிய ஆரம்பித்தால்
தரைதளவாசிகள் மூட்டைக்கட்டிக்கொண்டு
புறப்படத் தயாராகிறார்கள்
வீதிக்குத் தண்ணீர் வரும்
வாயில் தாண்டி வரும்
வீட்டுக்கள் நுழையும்
பின் எல்லாம் நாஸ்திதான்
இங்கிங்கெல்லாம் வெள்ளம் வரும்
கட்டாதே வீடு
சொல்லியிருக்கலாம்
சென்னையை பாதி காணாமல் போயிருக்கும்.

மழைக்காலம் 2

வடகிழக்குப் பருவமழை
ஆரம்பிக்கின்ற அன்றே
ஏகப்பட்ட கெடுபிடி
வருகுது சென்னையில்
பேய்மழை
ஊரெல்லாம் இதே பேச்சு
ரெட் அலர்ட்சொன்ன
நாளன்று பூமி மீது
சொட்டு மழை விழவில்லை
சூரியன் சுட்டெரித்தது
பட்டாணி வேர்க்கடலை
முட்டைப்பொரி ரொட்டி
காய்கறி கனிகள்
விலை ஏறின விஷமாய்
மெழுகுவர்த்தி ரூபாய் 35
கடைக்காரன் சொன்னதே விலை
ரெட் அலர்ட் என்றால்
மழை பெய்ய வேண்டுமென்று கட்டாயமில்லை
எச்சரிக்கை மட்டுமே தெரிந்து கொள்
வியாக்கியானம் விளம்பி னார்கள்
தெரிந்து கொள்ளலாம் நிறையவே
வயதுதான் போதாது.

மழைக்காலம் 3

வள்ளுவர் கோட்டம் அருகே லேக் வ்யூ
மேற்கு மாம்பலம் ரயில் நிலையம்
அருகே லேக் வ்யூ
லேக்குகள்தான் அம்பேல் ஆகிவிட்டன
ஏரிக்கு நடுவே வீடு கட்டிக்கொண்டு
லபோ திபோ என்கிறோம்
வீடு கட்டிக் குடியிருக்க
இந்த இடங்களில் அனுமதியில்லை
என்று ஒரே ஒரு போர்டு
சென்னை முழுதும்
தேடினாலும்
எங்கேயும் காணோம்
கடல் உயரமாயும்
சென்னப் பள்ளமாயும்
எனக்குத்தோன்றும்
சிலர் அப்படித்தான் என்கிறார்கள்
தப்பு தப்பு என்கிறார்கள் பலர்
சென்னையே இல்லாது போகும் கடல் விழுங்கி
என்பாரும் இல்லாமலில்லை
யார் யாருக்குப்
பிராப்தம் என்னவோ.

உலகம் 4

இசுலாமிய தலைவரைக்
கொன்று விட்டதாய்
இசுரேலிய வீதிகளில்
துள்ளிக்குதிக்கிறார்கள்
அவர் சாகவேயில்லை
மறுக்கிறது ஹமஸ்
காசாவில் தொடர்ந்து குண்டுமழை
ஆயிரமாயிரம் அப்பாவிகள்
மடி கிறார்கள் கட்டிடங்கள்
இடிபடுகின்றன
காசா பிடித்து வைத்திருக்கும்
இசுரேலியர்கள்
விடுபடும்வரை
ஓயாது போர்
கர்ஜிக்கிறார் நேதன்யாஹு
போரை நிறுத்த ஒரு ஆளில்லை
கொம்பு சீவிகள் ஏராளமாய்.

No comments:

Post a Comment