Tuesday, August 14, 2018

kaliyugan gopl





கலியுகன் கோபியின் கவிதைக்கோலங்கள்-எஸ்ஸார்சி



கவியரசர் கண்ணதாசனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட கலியுகன் கோபியின் கவிதை நூல் 'மனச்சிற்பி'. இங்கே எளிமை,தெளிவு,செறிவு இவைகளின் எழுத்து வெளிப்பாடாக மலர்ந்துள்ளன கவிமலர்கள்.கவிஞருக்கு வாழ்த்து சொல்லும் கலை மாமணி சுரேந்திரன் கவிஞரின் பொதுவுடைமை எண்ணங்களை அழகாகவே சுட்டியுள்ளார்.
'குடிசைக்குள் கஞ்சி கொதிக்க வேண்டும்
குழந்தைகள் பசியாறக் குடிக்க வேண்டும்' இப்படி கவிதை சொல்லும் கலியுகன் நம் நெஞ்சைத்தொட்டுவிடுகிறார். பேராசிரியர் ஹரணி யின் அணிந்துரை எழுத்துத்தளத்தில் கவிஞரின் நம்பிக்கையை பறைசாற்றுகிறது. எளிமையே கவிதையின் மேன்மை என்பதை அற்புதமாகக்குறிப்பிடும் ஹரணி ஓர் ஆழமான படைப்பாளி. அவரின் வாழ்த்துக்கள் கவிதை நூலுக்கு வலு கூட்டுகிறது.
'குடும்பப்பாதை' கவிஞரின் மெருகு கூட்டிய கவிதை.அது வாசகனின் இதயம் தொடுகிறது.பளிச்சென்று வெடித்துக்கிளம்புகின்றன கவிதை வரிகள்.
'சூரியன் நிலவென இரண்டு
வானமொன்று' என்று ஆரம்பித்து கணவன் மனவி உருவமிரண்டு,குடும்பப்பாதை ஒன்றேதான் என்று முத்தாய்ப்பாக முடிகிறது. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த சியாமளா அதனை The Goal of The Life என அற்புதமாக மொழியாக்கம் செய்துள்ளார்.
'working hands are two
But the heart is one' என்கிற மொழிபெயர்ப்பாளரின் அந்தப்புரிதல் கூர்ந்து நோக்கத்தக்கது.
திருக்குறளை தேசிய நூலாக்கக் குரல் கொடுக்கிறார் கவிஞர்.தமிழை செம்மொழி என்று அறிவிக்க மய்ய அரசுக்கு அறுபதாண்டுகள் பிடித்தன.தமிழ் மா நில க்கட்சி ஒன்றின் ஆதரவு தேவை என்பது தவிர்க்கமுடியாததுவாக ஒரு நெருக்கடி.ஆக எம்தமிழ் செம்மொழி ஆனது.தொடர்ந்து தென் மாநில மொழிகள் எல்லாம் செம்மொழிகள் என அறிவிப்பு.. மய்ய அரசின் அழகு நடு நிலமை இது.யதார்த்தநிலமை இப்படி இருக்க திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க ஆசைப்படுகிறோம்.முயற்சி திருவினை ஆக்கலாம்.
டாக்டர்.அறிவுடை நம்பியின் ஆங்கில மொழியாக்கத்தில் 'In that hut' ஆக வந்துள்ளது 'அந்த குடிசைக்குள்' என்னும் கவிதை.குடிசை ஒன்றில் ஒரு தீக்குச்சி இல்லா சோகத்தை கொப்பளிக்கிறது'அந்த குடிசைக்குள்' என்னும் அந்தக் கவிதை.
'But in that small hut
the darkness hold permanent grip' நல்ல மொழியாக்கம்.
அரித்துவார் நகரில் திருவள்ளுவர் சிலைக்கு நிகழ்ந்த புறக்கணிப்பைக்கண்டு கொதித்துப்போகிறார் கலியகன் கோபி. நினைத்துப்பார்ப்போம்.பெங்களூரில் எத்தனை ஆண்டு காலம் துயில் கண்டது வள்ளுவர் சிலை.வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்ததுவாகப்பேசுவார் பாரதி.பிரபாகரனின் இந்தி மொழிபெயர்ப்பில் சில கவிதைகள் மலர்ந்து மணம் சேர்ப்பது பாராட்டுதலுக்குரியதாகும்
'மழைவெள்ளம்' என்னும் தலைப்பிட்ட கவிதை கச்சிதமாக ஒரு செய்தி தருகிறத்.
' ஆறுகள் ஏரிகள் சீரமைத்து இருந்தால்,அப்பாவி மனிதனை அவை விழுங்கி இருக்குமா'. 2015 ல் வந்த மழை வெள்ளம் ரொம்பவும்தான் மனிதனைப்புரட்டிப்போட்டது.தமிழகத்தின் வடகரையின் கடலோரம் சந்தித்த சோகம் இது.இயற்கைக்கு கோபம் வந்தால் அது கடலூரைத்தான் சீண்டி இன்பம் கொள்ளுமோ?என்னவோ.
'ஆகாய சொர்க்கம்' என்னும் கவிதை கவிஞரின் அகம் எனும் சுரங்கத்தைத்திறந்து காட்டுகிறது.மனதிற்குள்ளே விளைந்த ஒரு மாங்கனி,குணத்தில் பூத்ததோர் மல்லிகை,கவிதை வரிக்குள் ஊறும் ஒரு இனிப்பு,அன்பெனுமந்த ஈரப்பொழிவு என அடுக்கிக்கொண்டே போகிறது கவிதை.
இலவசங்கள் சமுதாய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை என்ற ஒரு விமரிசனத்தோடு இத்தொகுப்பு நிறைவுக்கு வருகிறது.
சமூக அக்கறையும்,மொழி மீது அன்பும் கொண்ட வெற்றிப்படைப்பாக இந்த நூல் அனுபவமாகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------

nadum nadappum





திரையுலகம்-ஆகிவந்த தடமே- எஸ்ஸார்சி

பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு.பல இன மத மொழிகளைக்கொண்டது நம் பாரத நாடு. பல கலாசாரக்கூறுகளைத்தன்னகத்தேப்பயிலும் விரிந்த நிலப்பரப்பு.மக்கள் தொகையில் உலகிலேயே இரண்டாவது இடம். மக்களாட்சி என்னும் மந்திரச்சொல்லை ச்சரியாக நடைமுறைப்படுத்தும் ஒரே நாடு என்கிற பெருமையும் நமக்குண்டு.
வல்லரசு நாடுகளில் தானும் ஒன்றாக வேண்டும் என்கிற பெருங்கனவோடு இருக்கின்ற இந்திய நாடு.புத்தரும் காந்தியும் அம்பேத்கரும் பிறந்து பெருமை சேர்த்துக்கொண்ட பூமி.
இந்திய விடுதலையை முன்னெடுத்துச்சென்ற அன்றைய காங்கிரஸ் கட்சியின் ஆளுகையில் பன்னெடுங்காலம் மைய அர்சு இருந்தது . ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட நேர்மையான அரசியல்வாதிகளை நம்பிக்கையோடு ஆதரித்தனர் இந்திய மக்கள். தன் இறப்புக்குப்பின் தன்னுடைய சிதையின் அஸ்தியை வான் ஊர்தியில் கொண்டுபோய் இந்தியா முழுவ்தும் தூவச்செய்து இந்திய விவசாயியின் காலடிக்கலப்பையின் மண்ணோடு கலந்துவிட ஆசைப்பட்ட பேரான்மாவுக்குச்சொந்தக்காரர் அந்த நேரு பிரான்.
அவர் மனிதருள் மாணிக்கம்.பொதுத்துறை நிறுவனங்களைக்கோயிலென நம்பிப்ப்போற்றிய நேர்மையாளர்.
காலம் செல்லச்செல்ல நேரு கண்ட கனவுகள் அவரின் வழிவந்த ஆளுங்கூட்டத்தாலேயே சிதைக்கப்பட்டன.உலக அரங்கில் இந்தியாவின் தனித்தனமை என்பது கொள்ளைபோனது. இன்று அது கார்ப்பொரெட்டுகளுக்கு மட்டுமே நிம்மதியான வாழ்வு என்பதில் முடிந்து போய் நிற்கிறது .பணபலமும் அரசியல் அதிகாரமும் பெறுதல் எப்படி என்பதுதான் இன்றைய பிரதான விஷயங்கள்.
எங்கு பார்த்தாலும் ஊழல் எதிலும் ஊழல் என்பதைப்பார்த்து பார்த்துச்சலித்துப்போன இந்திய மக்கள் சென்ற பாராளுமன்றத்தேர்தலில் வாக்குகளை மாற்றிப்போட்டார்கள்.வேறு வழி தெரியவில்லை.வாய்ப்பந்தல் போடும் வல்லமையும்,மதத்தை மய்யமாக்கி பிரித்தாளும் வித்தையும் கற்று அரங்கேற்றும் அரசியல்வாதிகள் அதிகாரத்துக்கு வந்தனர்.நான்காண்டுகள் முடியப்போகிறது
.ஆள்வோரின் வெற்றுக்கூச்சல் மட்டுமே நாடெங்கும் கேட்கிறது. தேசிய பொருளாதாரத்தை நிமிர்த்திவிடுகிறேன் பார் என்று ஆரம்பித்து புழக்கத்தில் இருந்த உய்ர் மதிப்பு ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று உத்தரவு வந்தது.சாதாரண மக்கள் ஆங்காங்கே நடுத்தெருவில் நிறுத்தப்பட்டார்கள். வாழ்வு சீரழிக்கப்பட்டது. அவர்கள் சிதைந்துபோனார்கள்.கருப்புப்பணம் ஒழிக்கத்தான் வந்ததாம் அந்த மோடிவித்தை. ஆனால் எந்தக்கதையும் ஆகவில்லை. ஆகூ ஊகூ என்கிற முழக்கத்தோடு சரி. நன்மை எதுவுமே நடைபெறவில்லை.நாட்டை கருப்புப்பண முதலைகளிடமிருந்து 'காக்க கசப்பு' மருந்தென்று மக்களிடம் பொய்சொன்னார்கள்.
ஜி எஸ் டி என்று வரிவிதிப்புத்திட்டத்தை அவசர கோலத்தில் நாடெங்கும் அரங்கேற்றம் செய்தார்கள்.சிறு வணிகர்களும் விவசாயிகளும் பெருமளவு பாதிப்புக்கு உள்ளானார்கள். குழப்பமே மிஞ்சியது.
நாட்டுடமை ஆக்கப்பட்ட வங்கிகள் மக்களின் நம்பிக்கைக்குரிய நிறுவனங்கள். அப்படிச் செயல்பட்டுவரும் காலம் இனி விடைபெற்றுக்கொண்டுவிடலாம் என்கிற தோற்றம் உருவாக்கப்பட்டு விட்டது.உழைத்துச்சம்பாதித்த பணத்தை,பணி ஓய்வு காலபண பலன்களை வங்கிகளில் வைப்பாகவைத்து நிம்மதியாக இருக்கமுடியாது என்பதாக மட்டுமே அனுபவமாகிறது. கொள்ளையர்கள் மல்லையா, நிராவ் மோடி போன்றோர் எண்ணிக்கையில் கூடிக்கொண்டு போகிறார்கள்.நமது தேசிய வங்கிகள் கொள்ளையடிக்கப்படுகின்றன.மாறாக சிறுகடன் பெற்ற விவசாயிகள் நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள்.
உச்ச நீதிமன்ற விவகாரங்கள் குழம்பிய ஆளுகையின் கீழ் சிக்கித்தவிக்கின்றன.நீதிபதிகளுக்குள்ளேயே முரண்பாடுகள் மனப்புழுக்கங்கள், ஒரு நீதிபதியின் மரணம் அது குறித்து விசாரிப்பதில் முரண்பாடுகள்.
சென்ற தேர்தல்களத்தில் வீதி எங்கும் உலாவந்த 2G வழக்கு சுருங்கிப்போன விவகாரம்,சென்னைத்தொலைபேசியில் முன்னாள் அமைச்சரின் தொலைபேசி துஷ்பிரயோக வழக்கு என நீீர்த்துப்போனதுகளைப் பட்டியலிடலாம்.
காவிரி நீர்ப்பங்கீடுப்பிரச்சனையில் ஓரளவுக்கு உச்ச நீதிமன்ற த்தீர்ப்பு என்கிற ஒன்று வெளிவந்தாலும் அதையெல்லாம் செவிமடுக்க ஆளும் கர்நாடக அரசுக்கு எங்கேமனம் இருக்கிறது. கர்நாடகமெங்கும் தேர்தலில் பெறும் வோட்டுக்கள் பற்றியும் அவை கொணரும் சீட்டுக்கள் பற்றியும் கவலைப்படும் பெரிய பெரிய அரசியல் கட்சிகள்.
ஜம்மு காஷ்மீரத்தில் எப்போதும்போல் அமைதியற்ற சூழல்,சீனாவின் நிரந்தர எல்லைப்பிரச்சனை அது கொண்ரும் முஸ்தீபுகள்,வந்து வந்து போகும் இந்திய நேபாள உறவு உரசல்கள்,ஓயாத இலங்கைக்கடற்படையின் தமிழக மீனவர்களுக்கு எதிரான அடாவடித்தனங்கள் என்று இவை தொடர்கதையாகவே இருக்கின்றன.
அட்டவணை இனத்தோர் மீது தொடரும் வன்முறை,ஆதிவாசிகள் மீது தொடரும் அடக்குமுறைகள், ஏதுமறியாச்சிறுமிகளின் மீது நடத்தப்படும் பாலியல் வன்மங்கள் என்பவைக் கூடிக்கொண்டே போகின்றன.
மையத்தில் ஆளும் அரசு தனது மதவாதப்போக்கினை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.அதற்கு தொடர்ந்து கிடைத்த தேர்தல் வெற்றி அதன் கண்களைக்குருடாக்கி இருக்கிறது.அண்மையில் நமக்கு முன்னே உ பி
யிலும் பிகாரிலும் குஜராத்திலும் நடைபெற்ற பல்வேறு தேர்தல் முடிவுகள். ஆரோக்கியமான தீர்மானகரமன நல்லதொரு மாற்றங்கள் இனி வரலாம் என்கிற ஒரு நம்பிக்கையை வழங்கி இருக்கிறது.
பெரும்பணக்காரர்களின் பசுமையான வாழ்க்கையே தனது மூச்சுக்காற்றாக ப்பாவித்துச் செயல்படும் ஆளும் கட்சிக்கு சாதாரண நடுத்தர மக்களை ஏழைகளைப்பற்றியகவலை எல்லாம் படுவதற்கான அக்கறையை எதிர்பார்க்க முடியுமா?.மதவாத அரசியல் ஆரோக்கியமான் அரசியல் அல்ல என்பதை வருங்கால தேர்தல்முடிவுகள்தான் அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.
இந்திய இடதுசாரி இயக்கங்களுக்குத் தங்களின் சமூக ப்பார்வையை ஆகச்சரியாகஅமைத்து ஜன நாயக சக்திகளின் பலம் சிதறிவிடாமல் பொறுப்போடு காத்து, தேசத்தை ப்பாசிச தீயசக்திகளிடமிருந்து மீட்கவேண்டிய பெரும் பொறுப்பு இருக்கிறது.மதவாத சக்திகளிடமிருந்து இத்தேசத்தை மீட்காது போனால் வரலாறு இடதுசாரிகளை மன்னிக்காது.
அந்த வகையில் மக்கள் இயக்கங்கள் ஆற்றவேண்டிய பெருங்கடமை அவர்கள் முன்னே நிற்கிறது.
'எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்டே' என்பார்களே அதனைத்தான் தமிழகத்தின் அரசியல்களத்திற்கு ஒப்பாகச்சொல்லமுடியும்.ராஜாஜியும்,ஓமந்துர்ராரும்,காமரஜரும்,அண்ணாதுரையும் ஆட்சிசெய்த தமிழகத்திற்கு இந்தியாவின் மாநிலங்களுக்கு மத்தியில் மிகப்பெரியமரியாதை உண்டு.பிரிட்டீஷ்காரர்கள் இந்தியாவின் ஆளுகையை கவர்னர் ஜெனரல் ராஜாஜியிடம் ஒப்படைத்துச்சென்றார்கள்,இந்தியாவுக்கு பிரதமராக இந்திராகாந்தி வரவேண்டும் என்பதை தமிழகத்து காமராஜர்தான் முடிவுசெய்தார். ஒப்பற்ற ஓமந்தூரார் நேர்மைக்கு இலக்கணமாக தமிழகத்தில் ஆட்சிசெய்தவர். பிரதமர் நேரு மாநில அரசியலில் ஒரு யோசனைவைக்க அவரோடு கருத்து முரண்பட்டு தன் ஆட்சிக்கட்டிலை தூக்கி எறிந்த நெஞ்சுரம் வாய்ந்தவர் அந்த ஓமந்தூரார்..
ஆனால் இன்று அரசியல் எப்படி ஆகிப்போய் இருக்கிறது முதல்வர் ஜெயலலிதா காலமான்பிறகு தமிழக அரசியல் மய்ய அர்சின் ஆடுகளமாகி இருக்கிறது.
அம்மையாரின் மறைவுக்குப்பின் கட்சி மூன்றாக ஏன் நான்காக உடைந்து போனது. தேறிய இரண்டு பிரிவுகளுக்கு பிரதமர் மோடி அவர்கள் ஒட்டுப்போட்டு வைத்தார். தமிழக ஆட்சி என்னும் வண்டி தள்ளாடி தள்ளாடி ஓடிக்கொண்டு இருக்கிறது.எல்லா அரசியல் அலங்கோலங்களுக்கும் சாட்சியாக கொலுவிருக்கும் அந்த தமிழகஆளுநர்.
போக்குவரத்துதொழிலாளிக்கு ஓய்வு ஊதியம் வழங்குவதில் கூட தீராத சிக்கல். அந்தப் போராட்டம் நடக்கும்போதே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் உயர்த்திக்கொண்ட அழகு இங்கே நிறைவேறியது..
இடது சாரிகளே இல்லாத சட்டசபையைப் பெற்றிட்ட தமிழகத்தை என்னவென்று சொல்வது. காசுகொடுத்து எப்படியும் பெற்றுவிடலாம் தேர்தலில் வோட்டு என்றாகிவிட்டஇச்சோகம் தமிழக மக்களை எங்கேயோ கொண்டு நிறுத்தி இருக்கிறது. அரசியலில் எரிமலையாய்ப்பொங்கிய பொதுவுடமைத்தோழர் பாலதண்டாயுதமும்,சட்டசபையில் கர்ஜித்த ஜீவாவும் விடுதலைப்போராளி ராமமூர்த்தியும் வாழ்ந்து மறைந்த மண்ணில்தான் இத்தனையும் காட்சியாகிறது. .
கல்வி சிறந்த தமிழ் நாட்டில் நல்ல கல்விக்கு எத்தனை விலை. பணம் லட்சக்கணக்காக நன்கொடையாகத்தந்து மழலைப் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்ப்பது.பட்டிதொட்டி எல்லாம் பொறியியல் கல்லூரிகள் த்ரம் பற்றிய அக்கறை இல்லை.மருத்துவப்படிப்புக்கு மய்ய அரசின் நீட் தேர்வுப்பிரச்சனை.சமச்சீர்கல்வி என்பது நீர்த்துப்போய் சி பி எஸ் ஸியின் பின்னால் ஓடுவது என்கிற அவலம்.துணைவேந்தர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பிறகு அவர்களின் நியமனத்தில் ஆயிரம் பித்தலாட்டங்கள். இன்னும் எத்தனையோ.
மஞ்சுவிரட்டுதல் என்னும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்குத்தடை அதை எதிர்த்துப் பிறகு வரலாறு காணாத மக்களின் எழுச்சிப்போராட்டம் அதனில் பெற்ற வெற்றி.
காவிரியில் நீர்ப்பங்கீடு குறித்து உச்ச நீதிமன்ற ஆணையை என்றும் மதிக்காத கர்நாடகம்,அதற்கு எதிராகத் தமிழக மக்களின் எழுச்சிப்போராட்டங்கள்,மய்ய அரசின் மெத்தனப்போக்கு, அதற்குக் காரணமான கர்நாடக மாநிலத்தில் வர இருக்கின்ற தேர்தல் அதன் தாக்கம். சென்னைக்கு வந்த ஆகப்பெரிய பிரதமரை திரும்பிப்போ என்று கருப்புச்சட்டை அணிந்து தமிழர்கள் நடத்திய எழுச்சிமிகு போராட்டாம்,ஐ பி எல் கிரிக்கெட்டு க்கு சென்னையில் நடந்த உணர்ச்சிமிகு எதிர்ப்பு.பிறகு அவ்விளையாட்டு பூனே நகருக்கு மாற்றம்.
தொடர்ந்து நமது தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் நசுக்கப்படுகிறார்கள்.முடிவில்லாத சோகம் இது. ஓகிப்புயலும் அவர்களின் வாழ்வை உலுக்கி எடுத்து மீளாத்துயர் தந்தது.
தமிழ் மண்ணில் சாராயாக்கடைமூடப்பட பெண்களின் போராட்டங்கள்,காவிரிப்படுகையில் ஹை ட் ரோ கார்பனுக்கு எதிரான டெல்டா மக்களின் போராட்டம், தூத்துகுடி ஸ்டெரிலிட் நச்சு ஆலை எதிர்ப்பு ப்போர் இவை இவை இங்கு ஆரோக்கியமான சமூக நிகழ்வுகள்.
.தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான அடக்குமுறை என்பதுவோ சாதிய அதிகாரமய்யங்களால் தொடர்கதையாக நிகழ்த்தப்படுகிறது.பெயருக்குப்பின்னால் இங்கே தமிழ்மண்ணில் சாதிப்பட்டம் இல்லை.வெறும் பெயருக்கு அது மட்டுமே இல்லை.
நம்மூர் பல்கலைக்கழக பெரும்பத்விகளில் எப்படி இத்தனை அழுக்கு. இவற்றிற்கு ச்சரியான பரிகாரம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை தென்படவில்லை.நம்பிக்கை இல்லாத மனிதன் வாழ்வதற்கே தகுதியற்றவன் என்கிறார்கள்.என்னசெய்வதோ?
வெண்திரையில் மக்கள் கண்ட காட்சி நாயகர்கள் இன்று தமிழக அரசியலுக்கு வந்து நல்லது சொல்லத்துவங்கியிருக்கிறார்கள்.போகப்போகத்தெரியலாம் போகும் இடம் எதுவென்று.நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.தமிழக அர்சியலுக்குத் திரையுலகம்கூட ஒரு ஆகிவந்த தடமே.
----------------------------------------------------------------.
---------------------------- எஸ்ஸார்சி -எழுத்தாளர்.

poypesi



'பொய் பேசி பலவானாக இருந்தாலும்'- எஸ்ஸார்சி


நான் எழுபதுகளில் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தேன்.நண்பர்கள் கல்லூரி முடிந்ததும் அன்றாடம் சிதம்பரம் காந்தி அமைதி நிலையத்தில் கூடுவோம்.அப்போது அந்த மன்றம் வடக்கு ரத வீதியில் இருந்தது.அங்கு பல்வேறு சேவைப்பணிகள் தொடர்ந்து நடக்கும்.ஏழைக்குழந்தைகளுக்கு இலவசமாக பாடங்கள் நடத்துவோம்.மருத்துவமனைக்கு ச்சென்று ஆதரவற்ற நோயாளிகளை கவனித்து வருவோம்.வீட்டில் உபயோகித்து மீதமாய் உள்ள நல்ல மருந்துகளை சேகரித்து மருத்துவமனைக்குக்கொண்டு செல்வோம்.யோகா வகுப்பும் இந்தி வகுப்பும் இந்த மையத்தில் சிறப்பாக நடைபெறும்.வெள்ளிக்கிழமை தோறும் சர்வ மதப்பிரார்த்தனை காந்தி பஜனை என்ற தலைப்பின் கீழ் நடைபெறும்.'ஈசா வாஸ்யாம் இதம் சர்வம் யத் கிஞ்ச்ச ஜகத்யாம் ஜகது' தவறாமல் உப நிடதத்திலிருந்து சொல்லப்படும்.பைபிளும் குரானும் வாசிக்கப்படும்.எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும் பாடுவோம். 'ரகுபதி ராகவ' தொடங்கி 'ஈசுவர அல்லா தேரே' நாம் வரை சென்று முடிப்போம்.தியானம் நிச்சயம் இருக்கும்.
முடிந்தவரை கதர் ஆடை மட்டுமே பயன் படுத்துவோம். காந்தி மன்றத்தில், குஞ்சிதபாதம், ஞானம்,குழந்தைசாமி,ம.ராமசாமி, பாலச்சந்திரன் முத்துசுப்ரமணியம் என இன்னும் எத்தனையோ நண்பர்கள் இருந்தார்கள்.
இயற்கைச்சீற்றம் வந்தபோதெல்லாம் 'மாணவர் அமைதிப்படை' என்கிற பதாகையின் கீழ் சென்று பணியாற்றுவோம்.அருள்மிகு சிவகாமித்தாய் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சியில் மக்களுக்கு ச்சேவையாற்றினோம்.மன்றத்திலிருந்து'தொண்டு' என்கிற இலக்கிய ஆண்டுமலர் வெளிவரும்.அதனில் இலக்கியப்பங்கு கொள்வோம்.
சாந்தி சேனா-என்கிற ஒரு தொண்டு அமைப்பு அப்போது வாரணாசியைத்தலைமை இடமாகக்கொண்டு இயங்கியது.தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் வழிகாட்டுதலில் அவ்வமைப்பு இயங்கிக்கொண்டிருந்தது.
நான்'சாந்தி சேனா' அமைப்பு நடத்திய அகில இந்திய முகாமில் கலந்து கொள்ளப் பணிக்கப்பட்டேன். தேசத்தந்தை மகாத்மாவின் செயலர் மகாதேவ தேசாயின் மகனார் நாராயண்தேசாய் எங்கள் முகாமுக்குத்தலைமை ஏற்றார்.முகாம் கர்நாடக(அப்போது மைசூர் மாநிலம்) மாநிலம் பெல்காமுக்கு அருகிலுள்ள கடோலி என்னும் கிராமத்தில் நடைபெற்றது.இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் நண்பர்கள் அழைக்கப்பட்டிருந்தன.பங்களாதேஷ் லிருந்தும் இருவர் வந்திருந்தனர். முகாமில் பங்கு கொண்டவர்களுக்கு அன்றைய மத்திய ரயில் நிர்வாகம் ஒருவழி பயணச்சலுகை அளித்து உதவியது.
தேசிய முகாமில் இறுதி நிகழ்வாக மே 28-30.1972ல் அகில இந்திய மாநாடு பெல்காம் நகரில் நடைபெற்றது.'what we have achieved and lost during 25 years of independence?'என்பதுவே மாநாட்டின் ஆய்படுபொருளாகும்.இது பற்றியே விவாதம் கருத்தரங்கம் அனைத்தும் நடந்தன..
அண்ணாமலைப்பல்கலைக்கழகத்திலிருந்து நான் ஒருவனே சென்றிருந்தேன்.சிதமபரத்திலிருந்து ரயில் பயணதொட்ங்கிக் கடலூர் வழியாக பெங்களூர் சென்றேன். பயணம் முழுக்க வினோபாஜி எழுதிய 'கீதைப்பேருரைகள்' படித்து படித்து ஆழ்ந்த சிந்தனை வசமானேன்.பெங்களூர் அப்போது ஒருவன் காலால் நடந்தே சுற்றி முடிந்துவிடும் ஒரு எளிய நகரமாக எனக்கு அனுபவமானது.
சிடி ஜங்க்ஷனிலிருந்து மிராஜ் எக்ஸ்பிரஸ் பிடித்து இரவு முழுவதும் பயணித்தேன். பெல்காமை விடியற்காலை நான்கு மணிக்கு அடைந்தேன்.சற்று குளிராகத்தான் இருந்தது.பொதுவாகத்தமிழ் மண்ணில் இருந்து பழக்கப்பட்டவர்களுக்கு வெளியிடம் சென்றால் சாதாரணக் குளிர்கூட தாங்கமுடியாமல்தான் இருக்கிறது.பெல்காம் ரயில் நிலையத்திலிருந்து வெளிவந்து டவுன் பஸ் பிடித்தாக வேண்டும்.முதலில் கிட்டூர் ராணி சின்னம்மா சிலை நிறுத்தத்திற்குச்சென்று பின்னும் ஒரு பஸ் பிடித்து அந்தக்கடோலி சென்றாகவேண்டும்.ரயில் நிறுத்ததிலிருந்து சின்னம்மா சிலை நிறுத்தம் செல்ல ஒரு டிக்கட் 'பந்த்ரா பைசா'.என்னோடு முகாமுக்குச்செல்பவர்கள் சிலரும் வண்டியில் ஏறி இருந்தார்கள். கொஞ்சம் தெம்பாக உணர்ந்தேன் கண்டக்டர் பேருந்தின் அடிக்கூரையில் நீளமாகத்தொங்கவிடப்பட்டிருந்த கயரை ஆட்டினால் டிரைவர் அருகே தொங்கவிடப்பட்டிருந்த கண்டா மணி 'ணங்க்' என ஒலித்தது.
'கடோலி' என்கிற கிராமம் ஏன் தேர்வு செய்யப்பது என்று அங்கு சென்றவுடன் தான் தெரிந்தது. கடோலி கிராம மக்கள் மராட்டி மொழி பேசினார்கள்.மகாராஷ்டிராவும் கர்நாடகாவும் பிரிகின்ற எல்லைக்கோட்டில் அந்தக்கிராமம் இருந்தது.மகாராஷ்டிரா, பெல்காம் பகுதியை தனது என்று உரிமை கொண்டாடி எல்லைப் பிரச்சனை எழுப்பியிருக்கிறது.இன்றுவரை கூட அது தீர்க்கப்படவில்லைதான். கடோலி கிராமத்தில் முத்ன் முதலில் ஒரு வீர சிவாஜி கோவிலைப்பார்த்தேன். மராட்டிய சிவாஜி அந்த மக்களுக்கு தெய்வமாக ஆக்கப்பட்டுவிட்டார் என்பது நமக்குச்செய்தி.
கடோலி கிராமத்தில் ஒரு மாந்தோப்பு.அதனுள்ளாக ஒரு நூறு மாமரங்கள் இருக்கலாம்.மே மாதம் என்பதால் காயும் பழமுமாக மரங்கள் கனத்துப்போய் இருந்தன.இந்த மாந்தோப்பில்தான் பதினைந்து நாட்கள் வாசம்.பத்துக் கூடாரங்கள் தார்ப்பாயால் போடப்பட்டிருந்தன. பெரிய கூடாரங்கள் உணவருந்தவும். விவாதத்திற்கும் என ஒதுப்பட்டிருந்தன.
இந்தியாவின் அனைத்து மாநில நண்பர்களும் ஒன்றாகக்கூடினோம். மகளிர் இருபது பேர்.ஆடவர் எண்பதுக்குக்குறையாது என ஞாபகம்.எல்லோருக்கும் வழிகாட்டியாக காந்தி அமைதி நிலையத்தின் எஸ்.என் சுப்பா ராவ் இருந்தார்.அரைக்கால் சட்டை அணிந்து அரை.குறையாக நரைக்கத்தொடங்கிய தலைமுடியுடன் காணப்பட்டார்.மிடுக்குடன் அவர் ஆங்கிலம் பேசியது எல்லோரையும் கிறங்க அடித்தது.
பத்து குடில்கள் அமைக்கப்பட்டு இருந்தன.குடிலுக்கு எங்களை அனுப்புவதில் ஒரு புதிய அனுபவம்.என் குடிலில் ஒரு அஸ்ஸாம்காரர்,ஒரு மராட்டியர்,ஒரு ஆந்திராக்காரர்,ஒரு ஒரிசாக்காரர்'ஆந்திராவின் வெங்கடேசலு,ஒரிசாவின் மொகந்தி,மராட்டிய ராமச்சந்திரபாகேல் இவர்களே நினைவுக்கு வருகின்றனர்.மொகந்தி மருத்துவ மாணவர்.அசாம்காரர் பெயர் மறந்து போனது.
முகாமில் இரவு முழுவதும் விழித்து இருந்து இருவர் காவல் பணி ஆற்ற வேண்டும்.விடியற்காலை ஐந்து மணிக்கு ஐவர் கொண்ட குழு ஒரு பாடலை இசைத்துக்கொண்டு அனைவரையும் எழுப்பும்.பிறகு சரியாக ஆறு மணிக்கு பிரார்த்தனை.தொடர்ந்து 'ஸ்ரமதான்' என்னும் உடல் உழைப்பு.இது 9 மணி வரை.சாலை அமைத்தல்,ஏரி ஆழப்படுத்துதல்,துப்புரவுப்பணி என்று வரையறை.பிறகு காலை உணவு. உணவு தயாரிப்பும் பரிமாறுதலும் முகாமில் பங்கேற்பவர்கள்தான்.உணவு உட்கொள்கின்றபோது ஒரு தேசியப்பாடல் பாடவேண்டும்.'நல்ல மனிதன் நல்ல காரியங்களை மட்டுமே செய்வான்.பொய் பேசுபவன் எவ்வளவு பலவானாக இருந்தாலும் நல்லகாரியங்களைச்செய்யமுடியாதவன்' இந்தக்கருத்தைச்சொல்லும் பாடல் அது.இன்று நினைத்தாலும் எனக்கு இந்த வரிகள் மன வலு சேர்க்கின்ற பாடல் வரிகளே..
துவக்க நாளில் அனேக நண்பர்கள் பரிமாறிய உணவில் மிகுந்த சேதத்தை ஏற்படுத்திவிட்டனர்.முகாமின் முன்னணித்தோழர்கள் வரணாசி அசோக் பங்க் என்பவரின் தலைமையில் புறக்கடையில் நின்று கொண்டு மீீீதமாய் எறியப்படுபவனவற்றை எல்லாம் சேகரித்து அவற்றைத்தாமே பங்கிட்டு உண்டனர்.உணவை மீதமாக்கி எறிந்தவர்கள் அவர்கள் முன் வெட்கித்தலைகுனிந்தோம்.அன்றிலிருந்து ஒரு பருக்கை உண்வு எறியப்படுதல் மனித உழைப்பை அவமதிப்பது என்பதனைப் புதியதாக்கற்றுக்கொண்டோம்
பத்து மணியிலிருந்து மாலை ஒரு மணி வரை கருத்தரங்கம் நடைபெற்றது.அனேகமாக இந்தியிலும் எப்போதேனும் ஆங்கிலத்திலும் சொற்பொழிவு இருந்தது.இந்தி தெரியாத ஒரு ஐந்து பேருக்கு ஒரு மொழி பெயர்ப்பாளர் இருந்தார். ஐந்து பேர் அனைவரும் தமிழர்களே.ஆந்திராக்காரரான அவர் ஆங்கிலத்திலும் இந்தியிலும் புலமை பெற்றவராக இருந்தார் தமிழும் அறிந்திருந்தார்.அவருக்கு தமிழ் நாட்டை அடுத்த அந்த சித்தூர் பக்கத்திலே ஒரு கிராமம் சொந்த ஊர்.
.'தமிழுக்குத்தாலாட்டு' இந்திக்கு .?' தமிழ் எங்கள் உயிர் இந்தி எங்கள் .?' என்றுகண்ட கண்ட சுவர்களில் எழுதி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வரை போராடியது எல்லாம் நினைவலையில் ஓடியது.வரலாறு என்ன எல்லாமோ செய்துவிட்டதுதான்.
எனக்கு இன்றும் நினைவில் இருப்பது' man and machine' ஒரு பேராசிரியர் எடுத்த வகுப்பு.. முடிவில் இயந்திரங்களின் வருகை மனித ஆன்ம நேயத்தை சுருக்குப்போட்டுவிட்டதாக உணர்ந்தோம்.
மதிய உணவிற்குப்பிறகு மீண்டும் கூடுவோம்.காலையில் நிகழ்ந்தவைகள் பற்றிய ஒரு ஆய்வு நடைபெறும். தேநீருக்குப்பதிலாக மாங்காய் ஜூஸ் கொடுப்பார்கள்.அது இளஞ்சூட்டில் இருக்கும்.அது அத்தனை இனிமையாக இருந்தது.பிறகு விளையாட்டு நிகழ்ச்சி.மைதானத்தில் ஒரு இந்தியாவே விளையாடுவது போன்ற உணர்வு இருந்தது.
அனேகமாக தமிழ் நாட்டுக்காரர்கள் தவிர ஆடவரும் பெண்டிரும் சகசமாக விளையாடிக்கொண்டிருந்தனர்.எங்களுக்கு அவ்விதம் பழக்கம் இல்லை என்று நாங்கள் சொன்னோம். உங்களுக்கு மனதில் அழுக்கு என்று துடுக்காக பதில் தந்தார்கள்.
மாலை ஆறு மணிக்குப் பிரார்த்தனை.அனைத்து சமயப்பிரார்த்தனை.அனைத்து மொழிகளின் பாடல்கள் இடம் பெற்றன. சுப்பா ராவ் தமிழ் பாரதியின் பாடல் ஒன்றைப்பாடினார். 'ஆத்திச்சூடி இளம்பிறை அணிந்து மோனத்திருக்கும் முழுவெண் மேனியான்' என்று தொடங்கும் அந்தப்பாடல்.
தாகூரின் பாடல்கள் வங்கத்து நண்பர்கள் பாடினார்கள்.பிறகு எளிய இரவு உணவு.இரவு பத்து மணிவரை கலை நிகழ்ச்சி.மனித நேயம் வலியுறுத்தும் கலை நிகழ்ச்சிகள்.ஒரு பிரார்த்தனைப்பாடல். அத்தோடு அவரவர் குடிலுக்குச்சென்று உறங்கிவிடுவோம்.
மருத்துவகுழுவில் ஒரு டாக்டர் இருந்தார். எங்கள் குடிலின் ஒரிய மொகந்தி மருத்துவ மாணவர், அவரோடு மருத்துவ சேவை செய்தார்.
குடில் அருகிலே ஒரு சிறு மலை இருந்தது.அங்கு அனைவரும் சென்று வந்தோம். அந்த மலைவாசிகளின் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதறிந்தோம்.முதலில் எங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்குள் அனுமதிக்க மறுத்தார்கள். கடோலி ஊர் மக்கள் அவர்களுக்கு எங்களை அறிமுகம் செய்துவைத்து உத்வினார்கள்
இப்படியாக ப்பதினைந்து நாட்கள் முடிந்தன.பெல்காம் கல்லூரி ஒன்றிலே தேசிய மாநாடு நடந்தது.கல்வித்திட்டத்தைத் தகுந்த முறையிலே மாற்றி அமைக்காமல் இந்தியாவில் எந்த சாதனையும் நிகழ்த்திவிட முடியாது என்ற முடிவுக்கு வந்தோம்.
யங் இந்தியாவில் 10.09.1931ல் மகாதமா காந்தி எழுதிய வாசகம்,' I shall work for an india,in which the poorest shall feel that it is their country,in whose making they have effective voice, an India in which there shall be no higher class and low class of people,an India in which all communities shall live in perfect harmony.There can be no room in such an India for the course of the intoxicating drniks and drugs.women will enjoy the same rights as men.'
இதுவே தேசிய மாநாட்டின் பிதான விவாதப்பொருளாக இருந்தது.
மாநாடு முடிந்து அனைவரும் கிளம்பிக்கொண்டிருந்தனர்.கல்கத்தாகாரர் சக்ரபர்த்தியும் உர்மிளாவும் அங்கிருந்து கோவாவுக்குச்சென்றுவிட்டனர்.இதனைச்சிலர் 'குசு குசு' என பேசிக்கொண்டனர்.இயற்கையும் அதன் திருப்பணியை செய்யாமல் இருக்குமா என்ன?தவறில்லை ச்சரியே.
மாநாடுமுடிந்து பெங்களூர் வழியாக சிதம்பரம் திரும்பினேன்.
இது எல்லாம் முடிந்து இன்று ஐம்பது ஆண்டுகள் ஓடி விட்டன. அந்த 'வசு தெய்வ குடும்பகம்' மனதில் நிழலாக வந்து வந்து போகிறது..
ஜயப்பிரகாஷ் நாராயணனை யருக்கேனும் தெரியுமா? தெரிந்தவர்களைத்தேடினேன். எங்கும் காணோம். 'வந்தேமாதரம்' பாடிய என் தேசத்தில்
குடியும்,போதைப்பொருளும், சாதிய வன்கொடுமையும்,பெண்களின் விசும்பலும் விசுவ ரூபமெடுத்து இருக்கக்காண்கிறேன்..
இன்றும் 'பொய் பேசுவோன் பலவனாக இருந்தாலும் நல்லவைகளைச்செய்துவிட முடியாது' என்று அந்தக்'கடோலி' முகாமின் பாடல் வரி மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது..
----------------------------------------------------------

.
.