கலியுகன் கோபியின் கவிதைக்கோலங்கள்-எஸ்ஸார்சி
கவியரசர் கண்ணதாசனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட கலியுகன் கோபியின் கவிதை நூல் 'மனச்சிற்பி'. இங்கே எளிமை,தெளிவு,செறிவு இவைகளின் எழுத்து வெளிப்பாடாக மலர்ந்துள்ளன கவிமலர்கள்.கவிஞருக்கு வாழ்த்து சொல்லும் கலை மாமணி சுரேந்திரன் கவிஞரின் பொதுவுடைமை எண்ணங்களை அழகாகவே சுட்டியுள்ளார்.
'குடிசைக்குள் கஞ்சி கொதிக்க வேண்டும்
குழந்தைகள் பசியாறக் குடிக்க வேண்டும்' இப்படி கவிதை சொல்லும் கலியுகன் நம் நெஞ்சைத்தொட்டுவிடுகிறார். பேராசிரியர் ஹரணி யின் அணிந்துரை எழுத்துத்தளத்தில் கவிஞரின் நம்பிக்கையை பறைசாற்றுகிறது. எளிமையே கவிதையின் மேன்மை என்பதை அற்புதமாகக்குறிப்பிடும் ஹரணி ஓர் ஆழமான படைப்பாளி. அவரின் வாழ்த்துக்கள் கவிதை நூலுக்கு வலு கூட்டுகிறது.
'குடும்பப்பாதை' கவிஞரின் மெருகு கூட்டிய கவிதை.அது வாசகனின் இதயம் தொடுகிறது.பளிச்சென்று வெடித்துக்கிளம்புகின்றன கவிதை வரிகள்.
'சூரியன் நிலவென இரண்டு
வானமொன்று' என்று ஆரம்பித்து கணவன் மனவி உருவமிரண்டு,குடும்பப்பாதை ஒன்றேதான் என்று முத்தாய்ப்பாக முடிகிறது. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த சியாமளா அதனை The Goal of The Life என அற்புதமாக மொழியாக்கம் செய்துள்ளார்.
'working hands are two
But the heart is one' என்கிற மொழிபெயர்ப்பாளரின் அந்தப்புரிதல் கூர்ந்து நோக்கத்தக்கது.
திருக்குறளை தேசிய நூலாக்கக் குரல் கொடுக்கிறார் கவிஞர்.தமிழை செம்மொழி என்று அறிவிக்க மய்ய அரசுக்கு அறுபதாண்டுகள் பிடித்தன.தமிழ் மா நில க்கட்சி ஒன்றின் ஆதரவு தேவை என்பது தவிர்க்கமுடியாததுவாக ஒரு நெருக்கடி.ஆக எம்தமிழ் செம்மொழி ஆனது.தொடர்ந்து தென் மாநில மொழிகள் எல்லாம் செம்மொழிகள் என அறிவிப்பு.. மய்ய அரசின் அழகு நடு நிலமை இது.யதார்த்தநிலமை இப்படி இருக்க திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க ஆசைப்படுகிறோம்.முயற்சி திருவினை ஆக்கலாம்.
டாக்டர்.அறிவுடை நம்பியின் ஆங்கில மொழியாக்கத்தில் 'In that hut' ஆக வந்துள்ளது 'அந்த குடிசைக்குள்' என்னும் கவிதை.குடிசை ஒன்றில் ஒரு தீக்குச்சி இல்லா சோகத்தை கொப்பளிக்கிறது'அந்த குடிசைக்குள்' என்னும் அந்தக் கவிதை.
'But in that small hut
the darkness hold permanent grip' நல்ல மொழியாக்கம்.
அரித்துவார் நகரில் திருவள்ளுவர் சிலைக்கு நிகழ்ந்த புறக்கணிப்பைக்கண்டு கொதித்துப்போகிறார் கலியகன் கோபி. நினைத்துப்பார்ப்போம்.பெங்களூரில் எத்தனை ஆண்டு காலம் துயில் கண்டது வள்ளுவர் சிலை.வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்ததுவாகப்பேசுவார் பாரதி.பிரபாகரனின் இந்தி மொழிபெயர்ப்பில் சில கவிதைகள் மலர்ந்து மணம் சேர்ப்பது பாராட்டுதலுக்குரியதாகும்
'மழைவெள்ளம்' என்னும் தலைப்பிட்ட கவிதை கச்சிதமாக ஒரு செய்தி தருகிறத்.
' ஆறுகள் ஏரிகள் சீரமைத்து இருந்தால்,அப்பாவி மனிதனை அவை விழுங்கி இருக்குமா'. 2015 ல் வந்த மழை வெள்ளம் ரொம்பவும்தான் மனிதனைப்புரட்டிப்போட்டது.தமிழகத்தின் வடகரையின் கடலோரம் சந்தித்த சோகம் இது.இயற்கைக்கு கோபம் வந்தால் அது கடலூரைத்தான் சீண்டி இன்பம் கொள்ளுமோ?என்னவோ.
'ஆகாய சொர்க்கம்' என்னும் கவிதை கவிஞரின் அகம் எனும் சுரங்கத்தைத்திறந்து காட்டுகிறது.மனதிற்குள்ளே விளைந்த ஒரு மாங்கனி,குணத்தில் பூத்ததோர் மல்லிகை,கவிதை வரிக்குள் ஊறும் ஒரு இனிப்பு,அன்பெனுமந்த ஈரப்பொழிவு என அடுக்கிக்கொண்டே போகிறது கவிதை.
இலவசங்கள் சமுதாய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை என்ற ஒரு விமரிசனத்தோடு இத்தொகுப்பு நிறைவுக்கு வருகிறது.
சமூக அக்கறையும்,மொழி மீது அன்பும் கொண்ட வெற்றிப்படைப்பாக இந்த நூல் அனுபவமாகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment