Wednesday, February 5, 2020

நண்பர் மாத்ரு




  நண்பர் மாத்ரு

 நண்பர் மாத்ரு
கோவையிலிருந்து பேசுகிறார்
எப்போதும் நல்ல விஷயங்கள்.
எல்லோருக்கும் நல்லவைகள் மட்டுமே
ஓயாமல் அவர் பேசுவது
என்னைப்பிரமிக்க வைக்கிறது.
அவருக்கென்று சில நண்பர்கள்
ஆத்ம நண்பர்கள்
யாருடனும் கோபிக்கத்தெரியாத
அன்பின் உருவம்
எத்தனை அவமதிப்புக்கள்
எத்தனை மன ரணங்கள்
தாண்டித்தாண்டி வரும் மாத்ரு
சிற்றுயிர் ஒன்றைக்கூட
கவனத்தில் கொள்ளும்
கருணைக்கு உறைவிடம்.
மாத்ருவை நண்பராகப்பெற்றது
யான் செய்த தவமால்.
மாத்ருவின் நண்பர்கள்
ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்
இரண்டாம் கருத்துக்கு
என்றும் இல்லை இடம்.


சின்ன விஷயமில்லை


குப்பையைத்தெருவில்
எங்கேனும் நீங்கள்
கொட்டிவிட முடியாதுதான்.
வீட்டின் சேரும் குப்பையை
அன்றன்றைக்கு அகற்றாவிட்டால்
கொசுக்கள் உற்பத்தி.
டெங்கு  கொரானா இத்யாதிகள் எத்தனையோ.
அதற்கென நியமிக்கப்பட்டவர்கள் இருக்கலாம்.
தெருவில் குப்பையை அள்ளிச்சுத்தம்
செய்வோரை எங்கே பார்க்கமுடிகிறது.
என்றேனும் வருகிறார்கள்
நம் புத்திக்கு எட்டாக்
காரணங்கள் இருக்கலாம். 
தெய்வத்தைப்பார்ப்பதாய் இருக்கிறது
அவர்களின் வருகை.
குப்பயை மூட்டையாய்க்கட்டி
தூரமாய் ச்சென்று  
விட்டெறிந்தே  வரவேண்டும்.
சாகசமாகத்தான் இருக்கிறது.
செய்து பார்க்கிறேன்.
யாரேனும் பார்த்துவிடப்போகிறார்கள்
அச்சம் இருக்கிறது மெய்யாக
குப்பைகள் தவிர்க்கமுடியாதன
அவைகளை நிர்வாகம் செய்தல்
ஆரோக்கியத்துக்கு அடித்தளம்
அது சின்ன விஷயமில்லை.
சுவரெங்கும் எழுதித்தான் இருக்கிறார்கள்
சுத்தம் பிரதானமானது
காரியங்கள் எப்படி நிகழும்தானாக.

 நித்யானுபவம்
.
கூவம் நதியை
அடையாற்றை
பக்கிங்காம் கால்வாயை
காணச்சகிக்கவில்லை
நித்யானுபவம் சென்னை வாசிக்கு.
அங்கங்கு குப்பயை
அள்ளி அள்ளிக்   குவித்திட்ட சிறு சந்தோஷம்
அனுபவமாகலாம் அவ்வளவே.
ஏதேனும் நீர்த்தடம்  ஒன்றிற்கு
நிலையான தீர்வை
கொண்டுவர உருப்படியான
திட்டங்கள் பிறக்கவேயில்லை.
ஆயிரம் தொடக்கங்களுண்டு
எதுவுமே  நிறைவேற இல்லை
சென்னையின் குப்பையைச்
சுமக்க அவ்வாறுகளின்றி
பிறிது ஏது என்பார்கள் அதிகம்.
அவைகள் இல்லா சென்னையைக்
கற்பனை செய்
குப்பைக்  
குன்றுகள் வரிசைவரிசையாய்


பிழைப்பு

எழுதி வைக்கலாம்
என்றாவது அவை போணியாகலாம்.
ஆகாவிட்டால் போகட்டும்
பதிப்பகத்தாரை அணுகுவது
எளிதாக இல்லை
அவர்கள் நம்மை அணுகி
படைப்பைப்பெறுவது
சாத்தியமே இல்லை.
வாய்ப்பில்லாதவர்கள்
தொடங்கலாம் தானே
பதிப்பகம் ஒன்று
தொடங்கியும் பார்த்ததுண்டு.
அது இனி சாத்தியப்படுமா என்ன
சொல்வதற்கில்லை.
காலம் மாறிப்போனது
வணிகயுக்தி அறிந்தவர்கள்
வீரமாக உலா வருகிறார்கள்
 நூலக ஏற்புக்கு அனுப்பி
 நட்டம் தவிர்த்தவர்களுண்டு
அது பழங்கதை..
அரசும் கற்றுக்கொண்டது
கூடாதவைகளை.

வாய்ப்புக்கிட்டாதவன்  
பிதற்றுவான்தான். தெரிகிறதா 
என்னைத்தான் சொல்கிறார்கள்.

வாழ்க்கை

சூழலின் கைதியாகத்தான்
மனிதன் வாழ முடிகிறது.
அவன்  ஒரு சமூக விலங்கு
கூட்டாகத்தான் நடத்தமுடியும் வாழ்க்கை.
துறவிக்குக்கூட தனித்து
வாழ்ந்திடலாம் என்பது நடவாதது.
அடுத்தவரின் தலையீடு
அது உனக்கு ஒத்தாசையோ உபத்திரவமோ
எதுவாக வேண்டுமானாலும் அமையும்.
நின்னிருப்பும் நினது செயல்பாடும்
அடுத்தவர்க்கு அப்படியே 
அமைந்து நிற்கும் யதார்த்தம் அது.
இதற்குள்ளாகத்தான்
நல்லதைத்தேடு  நின் செயல் பாட்டில்
கொஞ்சமாவது அஃது வெளிப்பட
ஓயாது முயலு.
வெற்றியும் கிட்டலாம். 
ஒன்றும் நிச்சயமான விஷயமில்லையது.
தேர்ந்துகொண்ட நல்லதற்கு
முனைதலும்
நேராய் நிற்றலும் போதும்
நிறைவுதான் அது
பிறிதெதுவுமில்லை நிறைவு.

உலகம்
.
உலகம் ஒரு குடும்பம்
நன்மைகள் எத்தனையோ.
இப்புரிதல் அவசியமானது.
அம்மையும் காலராவும்
பிளேக்கும் போலியோவும்
தடுத்து நிறுத்தினோம்
இன்று கொரானா 
நாளை வேறேதோ  
உலகம் ஒரு குடும்பம் என்கிற
கருத்தின் நீட்சிதான்.அது 
அறிவியலின் ஆயிரம் வசதிகள்
அனுபவிக்கிறோம்
இல்லையென்று சொல்லிவிடுவோமா
தெருவில் பூ விற்கும்
பூக்காரி கையில் கைபேசி
வைத்துக்கொண்டு நடக்கிறாள்.
மின்சாரரயிலில் பிச்சைக்காரர்கள்
கை பேசி இல்லாதவர்களில்லை.
அறிவியல் சாத்தியமாக்கி
அள்ளித்தந்திருக்கிறது எத்தனையோ.
மனம் விசாலப்படும்
யுக்தி மாத்திரம் மனிதற்கு வசப்படவில்லை
அறிவியல்  அங்கேயும்
எட்டிப்பார்க்கலாம் பின்பு  ஒரு நாள்.
------------------------------------------------------------


யோசனை

1மனிதனாக மட்டுமே சிந்திப்போம்
வேறு யோசிப்பு ஏதும்
வேண்டாமே இப்போது
இலங்கையில் குண்டுவெடிப்பு
மனமெல்லாம் நிறைகிறது ரணம்
இயேசு உயிர்த்தெழுந்த நாள்
எப்படிக்குறித்தார்களோ நேரம்
தேவாலயங்கள் மூன்று
துண்டு துண்டாய் மனித உடல்கள்
சுற்றுலா காண வந்த விருந்தினர்கள்
இலங்கை மண்ணில்
சிதறிப்போயிருக்கிறார்கள்
உலக மக்களுக்கு
எச்சரிக்கை தருகிறார்களாம்
சுமந்து வளர்த்து ஆளாக்கிய அன்னையர்
உடன் நின்ற தந்தையர்
கல்வி புகட்டிய பள்ளிகள்
மொத்தமாய்ச்சுமந்தனர் சோக அறுவடை.
நியூசிலாந்தில் பாகிஸ்தானில் பலுசிஸ்தானில்
இலங்கையில் தொடரும்
மனிதக்கொலைகள் கொத்துக்கொத்தாய்
அன்பு தனில் செழிக்கும் வையம்
யாரேனும் சொல்லத்தான் முடியுமா
எங்கே யாரிடம் சொல்வது
தானும் மடிந்து மண்ணையும் மனிதக்குருதியால்
சேறாக்கிப்போனவர்களிடம் பேச முடியுமா
தீவிரவாதம் எப்படித்தான்
பெறுகிறது உயிர்ப்பு 
என்னதான் வேண்டும்
இம்மானுட  மூடர்களுக்கு.

என் தாய் நாடு
.
பாரத தேசத்தில் தேர்தல்
யார் வரப்போகிறார்கள் நாளை
ஆயிரம் ஆயிரம் கோடியாய்
கொட்டி முடித்து இருக்கிறார்கள்
மக்களின் தேர்தல் பெருவிழா
நாடாளும் இயந்திரங்களில்
மக்களாட்சியே சிறப்பு
யாரும் இல்லை என்று சொல்வதில்லை
அறிவியல் சாதனையால்
செவ்வாய் கிரகத்தில் காலடிவைக்கலாம் மனிதன்.
சாதிப்பிரிவினைகள் சாக மறுக்கிறதே.
பணமும் பலாத்காரமும் பல்லக்குத்தூக்க
சாதி அரக்கன் காண்கிறான் 
வீதி உலா..
மதம் எனும் பிசாசுகளுக்கு
சிறகு முளைத்து விட்டிருக்கிறது
வேத புத்தகத்தை சாத்தான்களிடம்
ஒப்படைத்த
தெய்வங்கள் நிம்மதியாய் நித்திரையில்
பகத்சிங் நேதாஜி வ உ சி வாழ்ந்த மண்ணில்
பொரி உருண்டை வழங்கினால்
போதும் மக்கள் தங்களையே 
விற்றுவிட ஓடுகிறார்கள்
காசு கொடுப்பவர்கள்
பின்னே கை கட்டி வாய் பொத்தி நிற்கும்
கயவர்களையா
கருச்சுமந்தாள் பாரதத்தாய்..


தினம் தினம்
.
இந்தியா என் தாய் நாடு
ஒரே நாடுதான் இது.
பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவதும்
ஏழைகள் மேலும் ஏழைகளாவதும்
அரங்கேறுகிறது அன்றாடம்..
குடிகாரர்கள் கூடிப்போகிறார்கள் எண்ணிக்கையில்
பள்ளிச்சிறுவர்கள் பிஞ்சுக்கைகளில்
போதைப்பொருள் பொட்டலங்கள்
மகளிர் சமூகத்தில் நிம்மதி தொலைத்து
எத்தனையோ காலமாயிற்று
மனிதனாக வாழத்தெரியாத நமக்கு
சந்திரனுக்குப்போய்க்  குடியிருக்க ஆசை
தேர்தல் நெருங்கிவர.
வோட்டுக்கு எவ்வளவு பணம் தேரும்
அதே நினைப்பு.த்தான் 
உறக்கம் வரவில்லை

பள்ளிகள்

குழந்தகளைப்பள்ளிகளில்
கொண்டுபோய் ச்சேர்க்கிறார்கள்
பள்ளிகளில்தான் எத்தனை வகை.
அரண்மனை வாசிகள் தொடங்கி
அன்றாடம் காய்ச்சிகள் வரை
ரகம் ரகமாய்ப்பள்ளிகள்
படிப்பு முடித்து வரும் பிள்ளைகள்
எல்லோரும் சகோதரர்களாம் 
அப்படிச்சொன்னால்
நகைப்புக்குத்தான் இடம்
சமூகம் பிரிந்து  பிரிந்து கிடப்பதுபோல்
கல்வி நிலையங்களும்தான்
இந்தியர் யாவரும் உடன் பிறந்தோர்
முழங்கியது  பழங்கதை.
பள்ளிகளில் அது உறுதிமொழியாயில்லை.
கல்வியில் தாராளமயம்
அரக்கனாய் அனுபவமாகிறது.
வெள்ளைத்தாமரை வீற்றிருப்பவள்
மெள்ள மெள்ள போகிறாள் வேறிடம் 
காத்துக்கிடக்கின்றனவே 
கொள்ளையர்களின் கல்விகூடங்கள்



சரவணபெலகெலா

சரவண பெலகெலா
சென்று பார்த்தேன்
பெங்களூருவிலிருந்து நூற்றைம்பது கிலோமீட்டர்
மேற்கில் பயணித்து.
மங்களுர் செல்லும் தார்ச்சாலை
தென்னை மரங்கள் அடர்ந்து
பாக்குத்தோட்டங்கள் இடை இடையே
எழு நூற்று ஐம்பது கல்படிகள்
கொண்ட குன்றின் மீது
கால்களில் செறுப்பின்றி செங்குத்தான ஏற்றம்
வெயில் இல்லா நேரம்
காற்று வீசி அடிக்கா  நேரம்
மழை பெய்யா நேரம்
வேண்டுமிவை முக்கியமாய்
 கோமதீசன் சிலை அறுபதடிக்கு
அம்மணமாய் நிற்கிறது உச்சியில்.
ஆயிரம் ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.
எல்லாம் கடந்த மாமனிதர்க்கு
இடைத் துணி தேவையில்லைதான் .
எதையும் இழக்க மனமே ஒப்பா நாங்கள்
சுற்றி வந்து வணங்கி நின்றோம்.
உடன் வந்த என் பேரக்குழந்தை
உச்சா சாமிய பாத்தாச்சி என்றான்
மீண்டும் எழு நூற்று ஐம்பது அடிகள்
மலை இறங்கி
மூச்சுமுட்ட 
முடிக்கவேண்டும் புனிதப்பயணம்.


மா நரகம்

 எல்லோரும் மா நகரம்
நோக்கித்தான் கூட்டமாய் வருகிறார்கள்
மா நகரம் மக்கள் தொகை கூடி
மா நரக மாகிற்று
சுவாசிக்கும் காற்றும்
குடிக்கும் தண்ணீரும்
தூய்மை தொலைத்தன.
முதியவர்களும் சிறார்களும்
அந்நியமாக உணர்கிறார்கள்.
இடைப்பட்டவர்கள் பணிச்சுமையிலும்
பயண நிர்பந்தத்திலும்
சிக்கித்தவிக்கிறார்கள்.
பெருகிய மக்கள் தொகையை
பெரு நகர வணிகர்கள்
பெரு லாபத்திற்கு வழியெனக்கண்டார்கள்.
ஆரோக்கியமாய் வாழ்வெதெல்லாம்
அவரவர் கொடுப்பினை, 
மருத்துவச்செலவு அது எட்டாக்கனி
சம்சாரிக்கு  என்று ஓயும் பிரச்சனை.
படுத்தவனுக்கு  எப்போது
 வரும் மீளாப்பயணம் 
என்பதிங்கு  இருப்பவனின் வினா,
அவனைச்சொல்லிக் குற்றமில்லை
மனிதனாக வாழ மறுத்திட்ட சூழல்
ஜடமாக்கி யிருக்கிறது அவனை.
காசு காசு அதுவே வாழ்க்கை.
செயற்கையாய் வாழலாம் முடியலாம்
சாத்தியம் அதுவே.


வேறு வழி

வயிறுதான் பசித்து
நம்மை மண் தொலைக்க வைக்கிறது.
திரைகடல் ஓடியும்
திரவியம் தேடலாம்
வாழ்ந்த மண்ணைத்தொலைத்து
வேறிடம் மீத வாழ்க்கை.
பண்பாடு கொஞ்சம் கொஞ்சமாய்
சிறுத்து விடை பெறுகிறது.
எங்கோ வந்து என்னவோ வாழ்க்கை
வங்கிக்கணக்கில் எஜமானர்கள் 
காசு போடுகிறார்கள்
பிடிக்காதவைகள் வாங்கி
வயிறு ரொப்பிக்கொள்ளத் தான்.
பேசிய தாய் மொழி
இற்றுக்கொண்டு விட்டது
வளரும்தலைமுறகள்
தாய்மொழியை தொலைத்துவிட்டு
அம்மணமாய் நிற்கிறார்கள் அறியாமல்.
திருக்குறளும் திருவாசகமும் திருமூலமும்
இனி எங்கே விளங்கப்போகிறது
மண் மாறி, மடை மாறிப்போன
சொந்த சொச்சங்களுக்கு.
எதை இழந்தோம் எத்தனை இழப்பு
அறியாமலே அப்பாவிகள்
நூறு மாடி க்கட்டிடத்தில்
ஏறி இறங்கி ஓடுகிறார்கள்
யாரோ  மூட்டைகட்ட
வாழ்வைத்தொலைத்தவர்கள்
மிடுக்காய் பவனிவந்து
யாரைப்பார்த்தோ 
ஏளனமாய்ச் சிரிக்கிறார்கள்.
-------------------

No comments:

Post a Comment