Wednesday, March 18, 2020

அன்பே சிவம்





அன்பே சிவம்                             

கொரானாவின் வருகை
யார் எதிர்பார்த்தார்கள்
சீனத்தலைவர் ஜின்பிங்கும்
அமெரிக்கத்தலைவர் டிரம்பும்
வந்துதான் போயினர்
வேட்டிகட்டி மாமல்லபுரத்தில்
மோடியொரு கவிஞராய்
கடல் கவிதை தந்ததும்
நமஸ்தே டிரம்ப் கூவிக்
குடிசைகள் மறைய
பெருமதில் மதில் எழுப்பி
மங்கலம் காண்பித்த
வாணவேடிக்கை அழகும் சரி.
அப்புறம் கூட்டமேது கும்மாளமேது
டில்லித்தலை நகரில்
சி ஏ ஏ க்கு எதிரான போராட்டம்
நாட்டைக் கலங்கடிக்க.
விருந்தோம்பல்  ஓர்புறம்
ஐம்பது பேரை பலிகொண்ட
பெருங்கலகம் மறுபுறம்.
ராஜாதி ராஜன் வந்தேனே சொல்லி
வந்தது கொரானா
சீனாவில் ஜனித்த வைரஸ்
சொந்த மக்களை சொந்த ராணுவம்
நிணக்கூழாய் மாற்றிய
தியானமென் சதுக்கத்து
மனித ஆணவத்தை அசைத்துப்பார்த்தது.
சீனாவைத்தொடர்ந்து
இத்தாலி ஈரான் பிரான்ஸ்
ஜப்பான் அமெரிக்கா ஆஸ்த்ரேலியா
இந்தியா என்ன
உலகமே நொண்டி அடிக்கத்தொடங்கியது.
இருள் விழிப் புதினம்
இந்த வைரஸ் பற்றி எப்படி
என்றோ செய்தி சொல்லியது
விவாதப்பொருளானது. அதுவே.
மசூதிகள் தேவாலயங்கள் கோவில்கள் குருத்வாராக்கள்
இறையிடங்கள் இன்னும் மெளனமாயின
கண்ணுக்குத்தெரியாத
கொரானா முன்பாக
வல்லரசுகள் மண்டியிட்டன.
கொரானா அழியட்டும்
அறிவியல் வெளிச்சத்தில்.
சாதி மத இனப்பிணக்குகள்
சாம்பலாகிட இனியேனும்
பிரார்த்தனை செய்வோம்
அன்பே சிவமென்போம்
உலகம் ஒரு குடும்பம் உணர்வோம்.
---------------------------------------------------------------------------






No comments:

Post a Comment