Sunday, September 25, 2022

கவிதை- வினை புரி

 

வினை புரி                                           

  எஸ்ஸார்சி


காரியங்கள் ஆயிரமுண்டு

செயலாற்றிட ஓயாது

முனைகிறது மனம்

கொள்ளையாய்  இடையூறுகள்

அடுக்கித்தான் வருகின்றன அவை

அத்தனையும் வென்றாக

வேண்டுமே நீ 

வேறில்லை

வெல்லும் மார்க்கம் 

மந்திரத்தில் காய்க்காது மாங்காய்

வானத்திலிருந்து குதிக்காது

யோசனைகள்

உன்கை பிடித்து  எழுதாது

வழிபாடும் வந்தனமும்

யார் துணைக்கு வருவார்

எட்டி ஏன் பார்க்கிறாய் நீ

வரமாட்டார் யாருமே

அறிந்திடுவாய் காலத்தே

வினை ஆற்று

உறுதிசெய் நின் முடிவை

தொடங்கு நின் செயலை

சாக்கும் போக்கும்

சொல்லி ஓய்ந்து உறங்காதே

கை கட்டி நிற்காது  காலம்.

கவிதை- கிரகசாரம்

 

கிரக ….. சாரம்

               


ஆட்சி  செய்கிறது

சென்னையை வெள்ளம்.

கோடிஸ்வரர்களாயினும்

கோவண்டிகளாயினும்

கண்களில் அச்சம்.

உதிரத்தை விற்று

உழைப்பிலே வாங்கிய

அபார்ட்மென்ட்கள்

அரிதாரம் பூசிக்கொண்டு

என்னை ஏமாற்றிய கதை

ரெண்டு நாள் மழையில்

வெளிச்சமானது அப்பட்டமாய்.

புரசை  கொளத்தூர்

வேளச்சேரி மாம்பலம்

இன்னும் இவை  எத்தனையோ

வெள்ளத்தில் திணறி

மாய்ந்தன ஓய்ந்தன.

சோத்துப்பொட்டலமும்

குளிருக்குப்போர்வையும்

வழங்கிட வரலாம் யாரும்.

குந்திப்படுக்க ஈரமிலா

குடிசைபோதுமெனக்கு

இடுப்பளவு மழை நீர்

வாழும் தெருவில்

குமட்டுகிறது துர் நாற்றம்

கவிதை - பாரதி எம் உறவு

 

பாரதி எம் உறவு/எஸ்ஸார்சி

தமிழ் மொழிக்கு வீரம்
கொடையாக்கிய மாகவி
பெண்மைக்கு
மகுடம் சூட்டிய மாமனிதன்
சாதிய நஞ்சிற்கு எதிராகச்
சமர் புரிந்த சாகசக்காரன்
கோவில் இருக்கட்டும் ஓய்
பள்ளியை எழுப்பு
படி படி படி
காலை எழுந்தவுடன் படிப்பு பாப்பாவுக்கு
அடித்துச் சொன்ன தயாநிதி
வாழும் இத்தேசம்
ஞாலம் நடுங்க வரும்
கப்பல் செயக்
கனாக்கண்டவன்
உழவனை உச்சிமீது
வைத்துத்தொழுத பேருள்ளம்
பேரண்டம் என் உறவு
பெருவெளி என் வாசம்
தனியொருவனுக்கு உணவிலையா
அழியட்டும் இவ்வுலகு
கர்ஜித்த பொதுவுடமைக்காரன்
காக்கையை நாயை
நேசித்த மாஞானி
தமிழின் இமயம்
பாரதி எங்கள் கண்ணானான்
ஒளிபெற்றோம் யாம்
பாரதியைப்பயின்று அல்லவா
மனிதரானோம்
நீங்களும் நானும்.

கவிதை -சொல்லுங்களேன்

 

 

 

 

 

 

சொல்லுங்களேன்              

 

புரியாத புதிர்களா இவை

விவேகானந்தருக்கோர் ராமகிருஷ்ணர்

பீமராவுக்கோர் அம்பேத்கர்

சுப்புரத்தினத்திற்கு பாரதி

காமராஜருக்கு சத்தியமூர்த்தி

அமைந்ததெப்படி

காந்தியும்  நேருவும்

பட்டேலும்  போசும்

சாதியொட்டுப்பெயர்கள்

அப்படியொரு நினைப்பு

உண்டா  நமக்கு?

தாழ்த்தப்பட்டோர் வேதமாணிக்கம்

முதுகுன்ற பொதுத்தொகுதியில்

நெல்லைச்சீமையிலோ

பார்ப்பனர் சோமயாஜுலு

சட்டசபைக்கு நின்றார்கள் வென்றார்கள்

சாத்தியமானது அன்று.

பொதுடமைக்காரனே ஆனாலும்

சாதி பார்த்து நிறுத்தக்

கற்றுக்கொண்டோமே

எப்போதிருந்து தோழா?

------------------------------------------

 


Monday, September 19, 2022

புறம் கூறும் அறம்

 

புறம் கூறும் அறம்              

இங்கு  புறம் என்று கூறும்போது புற நானூறு பற்றித்தான் குறிப்பிடுகிறேன். தமிழர்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் போற்றத்தக்க உயரிய பண்பாடு மிக்கவர்களாக வாழ்க்கை நடத்தியுள்ளார்கள்.இதனை உள்ளங்கை நெல்லிக்கனியென நமக்குக்காட்டுவது புறநானூறு என்று சொன்னால் மிகையாகாது.

திருக்குறள் அறம் பொருள் இன்பம் பற்றிப்பேசுகிறது. தொல்காப்பியர் பொருள் அதிகாரத்தில் நல்ல பல வரையறைகளைத்தருகிறார்.ஆயினும் நம் மனதோடு ஒட்டிப் பேசுகிற சூழல் புறநானூற்றுப்பாடல்களில் மட்டுமே வாசகனுக்கு அனுபவமாகிறது.நமது பாட்டனோ பூட்டனோ நம்மோடு உரையாடி  ஒரு சேதி சொல்வது போன்று பாடல்கள் அமைந்து நிற்றலை இங்குஇயல்பாகக்காணமுடிகிறது.

பண்பாட்டின் உச்சம் இங்கே பயிலப்படுவதை நோக்கும்போது தமிழ் மக்கள் எத்தனை அரிய அறஞ்சார்ந்த வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து நாம் பெருமைப்படலாம். உலகில் எந்த மூலையிலும் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு இத்தனைப்பண்பாளர்களாக மக்கள் வாழ்ந்திருப்பார்களா என்று வினா வைத்தால் அது  நிச்சயம்   சாத்தியமில்லை என்றுதான் உறுதியாய்ச்சொல்ல முடியும்.

பண்டைய தமிழ் இலக்கிய நூல்களில் எட்டுத்தொகை  எவை என்பன நாம் அறிவோம்.அவை  நற்றிணை குறுந்தொகை பதிற்றுப்பத்து பரிபாடல் ஐங்குறு நூறு  கலித்தொகை அகநானூறு  புறநானூறு என்பன. இவைகளில்  அகமும் புறமும்’ அதி சிறப்பானவை.அகம் காதலை அக வாழ்க்கையைப்பற்றிபேசுகின்ற நூல்.  வீரம் கொடை  அறம் பற்றிப்பேசுவதே புறம் என்னும் இலக்கியம்

வயதில் மூத்த  பெரும்புலவர் பிசிராந்தயாருக்கு அகவை இத்தனை ஆகியும் தலை முடி அப்படியே கருமையாகக் க்காட்சி அளிக்கிறது. அதன் ரகசியம் என்ன? அதனை நோக்கிய ஒருவர் புலவரிடமே  வினவுகிறார் பிசிராந்தையார் அவ்வினா வைத்தவருக்குத்   தரும் பதிலாக வரும் புற நானூற்றுப்பாடல் நம்மைக்கிறங்க வைக்கிறது. பாடல் இதோ.

’யாண்டு பலவாக நரையில ஆகுதல்

யாங்காகியர் என வினவுதிர் ஆயின்

மாண்ட என் மனைவி யோடு மக்களும் நிரம்பினர்

யான் கண்டனையர் இளையரும் வேந்தனும்

அல்லவை செய்யான் காக்க அதன் தலை

ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்

ச்சான்றோர் பலர் யான் வாழும் ஊரே.’     ( 191)

வேந்தன் அல்லவை செய்யாதிருத்தலை க்குறிப்பிடும் பிசிராந்தையார் ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்சான்றோர் பலர் தன்னோடு ஊரில் வாழ்தலைக்குறிப்பிடுகிறார். நல்ல விஷயங்களைக் கசடறக்கற்று  அறிவுச்செல்வமாகி ஐம்புலன்களும் அடங்கிய பெரு நெறி பிடித்தொழுகும் பெரியோர் தன்னோடு வாழ்வதை த்தன் ஆரோக்கியத்துக்கு அடித்தளம் என்கிறார்.

ஐக்கிய நாடுகள் சபை வரை இன்றைக்கும்  தமிழரின் பெருமையை பறை சாற்றும்  மிக உயர்ந்த பாடலை சங்க காலத்தே தந்தவர் கணியன் பூங்குன்றனார்.

யாது ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர் தர வாராநோதலும்

 தணிதலும் அவற்றோர் அன்னசாதலும்

 புதுவதன்றே வாழ்தல்இனியது என

 மகிந்தன்றும் இலமே முனிவின்

இன்னாதென்றலும் இலமே

 மின்னொடு

வானம் தண்துளி தலை இ

 ஆனாதுகல்பொருது இரங்கும் மல்லலற்

பேர்யாற்றுநீர் வழிப்படுஉம்

 புணைபோலஆருயிர்  முறை வழிப்

படுஉம் என்பதுதிறவோர் காட்சியின் தெளிந்தனம் ஆகலின்

 மாட்சியின் பெரியோரை வியத்தலும்

இலமேசிறியோரை இகழ்தல்

அதனினும் இலமே.( 192)

சாதலும் வாழ்தலும்  இலக்கணச்சுத்தமாக அன்றைய தமிழ் மக்களால் புரிந்துகொள்ளப்பட்ட விதம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.எத்தனைப்பக்குவத்தை அவர்களின்  கவிதை மொழி நமக்கு ச்சொல்லிக்கொடுக்கிறது. புகழ்பெற்ற பெரியோரைக்கண்டு

நாங்கள்  யாம் வியப்பதுமில்லை . எளியவர்களைக்கண்டு யாம் இகழ்தல் அதினினும் இல்லை.அதனிலும்   இலமே என்று அழுத்திச்சொல்கின்றபோது எளிய மக்களை எப்படி அணுகுவது எப்படி நாம் அவர்களை விளங்கிக்கொள்வது என்கிற விசாலமான சிந்தனை  இவண்சொல்லப்படுகிறது.

இன்றைய டிஜிடல் பானரும் கட் அவுட்டுக்கு ப்பாலாபிஷேகமும் நமது ஆன்றோர்கள்  அன்று எண்ணிப்பார்த்து இருப்பார்களா ?நமக்கு ச்சொல்லித்தரப்படாத உள்ளீடற்ற விஷயங்களே இன்று நம்மை ஆட்சி செய்ய.த்துடிக்கின்றன

பக்குடுக்கை நன்கணியார் என்னும் புலவர் படைப்புக்கடவுள் எப்படி இவ்வுலகை இவ்வுலகமக்களின் வாழ்க்கையை   ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாமல் படைத்துவிட்டு நிம்மதியாய் இருக்கின்றானோ என்றுவினவுகிறார். அறச்சீற்றம் பீறிட்டுக்கொண்டு வருகிறது புலவருக்கு.

ஒருவீட்டில் இழவுப்பறை அடுத்த வீட்டில் மங்கலப்பறை ஒரு வீட்டில்  மணக்கும் பூக்கள் மாலைகள் சொறிகின்றன அடுத்த வீட்டில் கைம்மை நோன்பு அனுசரிக்கப்படுகிறது. இந்த உலகம் பொல்லாதது. மன்றப்பண்பு தெரிந்தவன்தானா ?பிரம்மன் அந்த படைப்புக்கடவுள்.அப்பாடலைப்பார்ப்போம்.

’ஒரில் நெய்தல் கறங்க ஓரில்

ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்

புணர்ந்தோர் பூவணி அணியப்பிரிந்தோர்

பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்

படைத்தோன் மன்ற அப்பப்ண்பிலாளன்

இன்னாது அம்ம இவ்வுலகம்

இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே’( 194)

நரிவெரூஉத்தலையார் என்னும்  புலவர் வேறுஒரு செய்தி சொல்கிறார் ’உங்களால் அடுத்தவருக்கு ஒரு நன்மையும் செய்ய முடியாமல் இருக்கலாம்அதனால் ஒன்றும் தவறில்லை. நீங்கள் கெடுதலாவது.அடுத்தவர்க்கு செய்யாதிருங்களேன்.அது போதும்’.

நல்லது செய்தல் ஆற்றீராயினும்

அல்லது செய்தல் ஓம்புமின் அதுதான்

எல்லோரும் உவப்பதன்றியும்

நல்லாற்றுப்படூஉம் நெறியு மாறதுவே. (195)

எத்தனை அழகாக வாழ் நெறி  இப்படி க் கவிதையாய்  வருகிறது.. பாருங்களேன் எல்லோரும் உவப்பது எது  என்று வினா வைத்தார் அதற்கு அவர் விடையும்  தருகிறார். நல்லது செய்யவேண்டாம் கெடுதலாவது அடுத்தவர்க்கு செய்யாதிருங்கள் அது எல்லோருக்கும் மகிழ்ச்சி தருவது மட்டுமில்லை. நல்வழிக்கு நம்மைஇட்டுச்செல்லும் பெரிய பாதையும்  அதுதானப்பா என்கிறார்.  இன்றும்கூட  பலர் பல இடங்களில் இந்த அற நெறியைச்சட்டமாய்ப்பயன்படுத்துவதை ப்பார்க்கிறோம்.

அடுத்து கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரனார் என்னும் புலவர்வருகிறார்

. ’எனக்கு எவ்வளவோ  பெரிய பெரிய துன்பங்கள் வரும். அதற்காக மனித  உணர்வே இல்லாத வசதிபடைத்த மனிதர்ளிடம் உதவிக்குப்போய் நிற்க மாட்டேன் நல்லறிவு படைத்த ஏழைகளிடம் மகிழ்ச்சியோடு செல்லவே விரும்புவேன். எத்தனை செந்நெறி.இந்த ப்பெரிய மனதிற்கு.பாடலை அனுபவிப்போம்.

மிகப்பேர் எவ்வம் உறினும் எனைத்தும்

உணர்ச்சி யில்லோர் உடமை உள்ளேம்

நல்லறிவுடையோர் நல்குரவு

உள்ளுதும் பெரும யாம் உவந்து நனி பெரிதே.(  197)

பண்பாட்டின் உச்சமாய் ஒவ்வொரு செய்தியும்  புற நானூற்றின்கண் நம்மை வியக்கவைக்கிறதுதான்.

மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்னும்  புறநானூற்றுப்புலவர் அரண்மனையில் வாழும் மன்னனையும் தெருவில் ஏதுமற்று நடந்து செல்லும் ஒரு குடியானவனையும்  ஒப்பீடுசெய்கிறார். பிறக்கிறது கவிதை.

 தெண்கடல் வளாகம்  பொதுமையின்றி

வெண்குடை நிழற்றிய ஒருமையோற்கும்

ஒரு நாள் யாமத்தும் பகலும் துஞ்சான்

கருமா பார்க்கும் கல்லா ஒருவற்கும்

உண்பது நாழி உடுப்பவை இரண்டே

பிறவும் எல்லாம் ஒரோக்கும்மே

செல்வத்துப்பயனே ஈதல்

துய்ப்போம் எனினே தப்புந பலவே.( 189)

 சங்ககாலக் கவிதையில் இப்படித் தருமம்பேசப்படுவதைத் திருவள்ளுவரும்  வலியுறுத்துகிறார்.

’அற்றார் அழிபசி தீர்த்தல் அக்தொருவன்

பெற்றான்  பொருள்வைப்புழி’

என்பார் .திருவள்ளுவருக்கு ப் பொருள் பெற்ற ஒருவன் தன் பொருளை சேமித்துவைக்கும் இடம் ஏழைகளின் வயிறாகும். புற நானுற்றுப்புலவனோ செல்வத்துப்பயனே ஈதல்  என்று அடித்துச்சொல்கிறார்.

  புற நானூற்று வாசகன் இங்கே மெய் சிலிர்த்துப்போகிறான்உண்பது நாழி உடுப்பவை இரண்டே  நீ யாராகவே இருந்தால் என்ன? என்று பொதுமை பேசும் புலவன் என்றைக்கோ தமிழ் மண்ணில் சமூக நீதி  கேட்டு முழக்கமிட்டு இருக்கிறான் என்பதறிந்து நிறைவெய்துகிறோம்.

அவ்வையார் என்கிற பெண்பாற்புலவர் இயற்றியக் கவிதைக்கு வருவோம். ஆண் மக்கள்ஒழுக்கத்தோடு வாழ்ந்தால்  உலகம் செழித்து இன்பம் பயக்கும் என்கிறார் அவ்வை.. வாழ்விக்க வந்த தாய்க்குலம் தீமையை விதைப்பதில்லை.ஒவ்வொரு தாயுக்கும் இந்தமண் பந்தப்பட்டதாயிற்றே. ஆடவன் ஆகாயம் நோக்குபவன்.மண்ணை  நோக்குபவள்  பெண்.  மிதிலையின் சீதை மண்ணில் பிறந்தவள். அவள் துயர் உற்ற போது பூமித்தாய்  வெளிப்பட்டு அவளை அரவணைத்தாள்.பாதாளம் உள்ளே அழைத்துக்கொண்டாள். அப்படித்தானே பெருங்காவியங்கள்  செய்தி சொல்கின்றன.அவ்வையின் பாட்டுக்கு வருவோம்.

 நாடாகு ஒன்றோ காடாகு ஒன்றோ

அவலாகு ஒன்றோ மிசையாகு ஒன்றோ

எவ்வழி நல்லவர் ஆடவர்

அவ்வழி நல்லை வாழிய நிலனே.( 187)

உலகம் நன்றாக இயங்குவதற்கு  ஆண்மக்கள் தான் பொறுப்பு. கெட்டுப்போவதற்கும்  அவர்களே பொறுப்பு. பெண்கள் எப்போதும் நன்மக்களாகவே தம்மை நடத்திக்கொள்வர். ஏன் எனில் அவள் ஒவ்வொருத்தியும்  ஒரு  தாய். அன்னை.

ஒவ்வொரு ஆடவரும் சிந்தித்துப்பார்த்து செயல்பட வேண்டிய கவிதை வரிகள் இவை. இன்றைய அவசர  கணிப்பொறி உலகம்  நமது பெண்மக்களை   ஆன்றோர்கள் பேணிப்போற்றிய  தமிழ்ப்பண்பாட்டினின்றும் தடமிரங்கிப்போகவே  வழிகாட்டுகிறது.   வருத்தமே விஞ்சுகிறது.

நீரின்றி அமையாது உலகு நாம் படித்து இருக்கிறோம். அன்னமயம் பிராண  மயம்  என்பார்கள். உண்டிகொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்பதும் அறிவோம்.புற நானூற்று ப்புலவர் மோசிகீரனார் பேசுவதைப்பாருங்கள்.

’நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே

மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம்.

அதனால் யானுயிர் என்பது அறிகை

வேன்மிகு தானை வேந்தற்குக்கடனே’                                                                           (186)  

நீரும் நெல்லும் இருக்கட்டும்.ஆட்சிபுரியும் மன்னன் கேடுகெட்டவனாக இருந்தால் நாடு என்னவாகும் குடிமக்கள்என்ன ஆவார்கள். மோசிகீரனார் சொல்கிறார் நல்லாட்சி புரியா அரசன் வாழும் நாடு  எத்தனை வளங்கள் பெற்றும் என்னத்திற்கு ஆகும் ?. நல்லரசு அமைதல் பற்றி அந்தக்கால புலவர்கள் அடிமனத்திலிருந்து கவலைப்பட்டு இருத்தலை இவண்காண்கிறோம்.

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் மன்னனாகவும் கவி பாடும்புலவராகவும் காட்சிதருகிறார். கல்வியின் முக்கியத்துவம் பற்றி எத்தனை  ஆழமாக அழகாகக்குறிப்பிடுகிறார்.

உற்றுழி உதவியும் உரு பொருள் கொடுத்தும்

பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே

பிறப்பு ஓர் அன்ன உடன் வயிற்றுள்ளும்

சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்

ஒருகுடிப்பிறந்தபல்லோருள்ளும்

மூத்தோன் வருக என்னாது அவருள்

அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்

வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

மேற்பால் ஒருவனும் அவன்கட்படுமே.  (பாடல் 183)

கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவன் அவனுக்குக்கீழ்ப்பபடிந்து நடப்பான். கல்வி ஒருவனை எப்படி  உயரிய மேல் நிலைக்கு க்கொண்டு  வந்து வைக்கிறது என்பதனை அழகாகக்குறிப்பிடுகிறார். பிரரமண க்‌ஷ்த்ரிய வைசிய சூத்திர வகுப்பினை நாற்பால்  என்பதறிந்தே கூறுகிறார் புலவர். அறிவுடையோன் சொல்வதை  கேட்டு  நாட்டை ஆள்கின்ற அரசனும் செயல்படுவான். பெற்ற தாயின் மனம் கூடபடித்த பிள்ளையின் மீது சற்றுக்  கூடுதலாகவே அன்பு கொள்ளும்.

‘யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையும் கல்லாதவாறு’ என்கிறது திருக்குறள். பாடை ஏறினும் ஏடது கைவிடேல்  என்பார் அவ்வை.

கற்றோர்க்கு க்கல்வி நலனே  கலனல்லால்

மற்றோர் அணிகலம் வேண்டாவாம் –முற்ற

முழுமணிப்பூணுக்கு ப்பூண் வேண்டா யாரே

அழகுக்கு அழகு செய்வார்.

என்று பேசுகிறது நீதி நெறி விளக்கம் என்னும் அற நூல்.தமிழ் இலக்கியங்கள் கல்வி என்னும் செல்வத்தை உய்ர்த்திப்பிடித்தலை எங்கெங்கும் காணலாம்.

கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி  என்னும் புலவர் தமிழர் தம் பண்பு நலன் குறித்து புற நானூற்றின் கண் பேசுகிறார்.

’உண்டாலம்ம இவ்வுலகம் இந்திரர்

அமிழ்தம் இயைவதாயினும் இனிது எனத்

தமியர் உண்டலும் இலரே

துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவதஞ்சி ப்

புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின்

உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்

அன்னமாட்சி அனையராகித்

தமக்கென முயலா நோன்தாள்

பிறர்க்கென முயலுநர்  உண்மையானே  (182)

தமக்கு என சுய நலத்தோடு இல்லாமல் பிறர்கென உண்மையாக  உழைக்கும் நல்ல மனிதர்கள் இவ்வுலகில் இருப்பதால்தான்  இந்த  உலகம் இயங்குகிறது. பழி தனக்கு  வருமென்றால்  இவ்வுலகத்தையே பரிசாகக்கொடுத்தாலும்  அந்தஒன்றையும் பெற்றுக்கொள்ள மாட்டார்கள். இன்றைய அரசியல் வாதிகள் நம் நினைவுக்கு வந்து போகின்றனர். அன்றைய முன்னோர்கள்  மாட்சியோ நம்மை  திக்குமுக்காட வைக்கிறது

எறும்பு போல் ஊர்ந்து செல்லும் எளியவர்கள் பண்ணன் வீடு நோக்கிச்செல்கின்றனர்.பண்ணன் ஒரு கொடையாளி. அவன் இல்லம்  வந்து கேட்போருக்கு வாரி வாரி வழங்கிக்கொண்டே இருப்பவன். பசிப்பிணி மருத்துவன் அவன்.அவன் திருப்பெயர் சிறுகுடிகிழான்.அவனைப்பாடிய புலவன் சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன்.

‘யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய’ என்கிறார். பண்ணனைத்தேடிவரும் எளியவர்கள் ,

’பசிப்பிணி மருத்துவன் இல்லம்

அணித்தோ சேய்த்தோ( 173)

கூறுமின் எமக்கே’ என வினவிக்கொண்டே இருக்கின்றனர் என்கிறார் அப்புலவர்.

கருவூர் கந்தப்பிள்ளை சாத்தனார் என்னும் புலவர்  தமிழகம் என்னும் சொல்லை தன் பாடலில் பெய்து எழுதுகிறார். பிட்டங்கொற்றன் பற்றி ப் புகழ்ந்து பாடுகிறார்.

‘வையகப்ப்ரப்பில் தமிழகம் கேட்ப

பொய்யாச்செந் நா நெளிய ஏத்திப்

பாடுப என்ப பரிசிலர் நாளும்

ஈயா மன்னர் நாண

வீயாது பரந்த நின் வசையில் வான் புகழே. ( 168)

பொய்யாச்செ ந் நா  கொண்டுகவி பாடுகின்ற புலவர்களை ப்புகழ்கிறார் அவர்.

பெருந்தலைச்சாத்தனார் என்னும் புலவர் மன்னன் இளங்குமனனிடம்  பேசுகிறார். இதோ வாள்.உன் தமயன் கா’ட்டில் வாழ்பவன் எனக்குத் தந்தது.தன் தலையை வெட்டிக்கொண்டுபோய் உன்னிடம் தந்து பொருள் பெறுக என்றான் அப்பெருங்குமணன்.

‘பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என்

நாடு இழந்ததனினும் நனி இன்னாது என வாள் தந்தனனே’ என்றுபேசுகிறார்.

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்

தம் புகழ் நிறி இ தாம் மாய்ந்தனரே   (165)

’ இப்படிக்குறிப்பிடுவதன் மூலம் புலவர் அக்கால மக்கள் தீமைக்கு எவ்வளவு  தூரம் அஞ்சி  அஞ்சி வாழ்ந்தனர் என்பதை எடுத்தியம்புகிறார்.

மருதன் இள நாகனார் என்னும் புலவர்  நாஞ்சில் வள்ளுவன் பற்றி ப்பாடுகிறார்.

‘வாழ்தல் வேண்டிப்

பொய்கூறேன் மெய் கூறுவல்’  ( 139)

வாழ்தல் வேண்டிப்பொய்கூறுதல். இது மட்டுமே இன்றைக்கு  நடைமுறை என்றாகி விட்டப்பொல்லாக்காலமிது. சங்க கால தமிழ் மக்கள் பொய் கூறுதலை எத்தனை இழிசெயலாகக்கருதியிருக்கின்றனர் என்பதறிந்து வியந்து வியந்து நோக்குகிறோம்.

உறையூர் ஏணிச்சேரி முட மோசியார் என்னும் புலவர்  வேள் ஆய் அண்டிரன் பற்றி ப்பாடுகிறார்.

‘இம்மைச்செய்தது மறுமைக்கு ஆம் எனும்

அறவிலை வணிகன் ஆஅய் அலன் பிறரும்

சான்றோர் சென்ற நெறியென

ஆங்கு பட்டன்று அவன் கைவண்மையே’  (143)

தம் உயிர் போன்றே பிற உயிர்களை எண்ணுதல் சான்றோர் நெறி.ஊதியங்கருதி அறம் செய்பவன் அல்லன் ஆய் அண்டிரன். சான்றோர் பெருமக்கள் எப்படி  எப்படி வாழ்ந்தோர்களோ அப்படி  அப்படி வாழ்பவன் அவன். இம்மையிலும் மறுமையிலும் பயன் கருதாது ஈதலைச்செய்பவன் ஆய் அண்டிரன் என்கிறார் முட மோசியார் .அறம் விலை யாதல் பற்றி அன்றே  புலவர் யோசித்திருப்பது நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது.

‘சோழியன் குடுமி சும்மா ஆடாது’ என்பதுவே நாம் இன்று காண்கிற யதார்த்தம்.

பெருங்குன்றூர் கிழார் என்னும் புலவர் மிகவும் வறுமையில் வாடுகிறார். இளஞ்சேட்சென்னியிடம்  அப் புலவர் இப்பாடலைப்படுவதாக இவ்விலக்கியத்தின் கண் அமைந்து கிடக்கிறது.

‘ உள்ளிய விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை           

பொறிப்புணர் உடம்பில் தோன்றி  

அறிவுகெட நின்ற நல் கூர்மையே’ (266)

விருந்தினரை உபசரித்தல் தமிழர் மாண்பு.சாவா மருந்தான அமிர்தம் என்றாலும் விருந்தினர்க்கு அளித்தல் இங்கு பண்பாடாக இருந்து வந்திருக்கிறது. ஆகத்தான்  விருந்தினர் உபசரிப்பைத் தான் இழந்து நிற்றலை சிலப்பதிகார நாயகி   கண்ணகிபெரிய குறையாக குறிப்பிடுவாள்.  தன் கணவன் கோவலன் மாதவியிடம் சென்றபின்னர்  தான்  விருந்தோம்பும்  செயலை அனுசரிக்க முடியாமல் போகிறது .அந்த பெரிய இழப்பை  கண்ணகி  மிகவும் வேதனைப்பட்டு உணர்ந்ததாக இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.

பெருஞ்சாத்தன்  என்னும் ஒல்லையூர் கிழார்மகன் மறைந்து போகிறார்.  குடவாயில் கீரத்தனார் என்னும் புலவர் அவர் இறப்பு பற்றிப்பேசுகிறார்.

‘வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை

முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே’ ( 242)

சாத்தன் மறைந்த துக்கத்தில் மக்கள் மலர் மாலைகள் அணிவதில்லை.வளை அணிவதில்லை. மக்கள் துக்கத்தில்  அல்லவா இருக்கிறார்கள். முல்லைச்செடியே நீ எப்படி த்தான் மனம் வந்து  பூத்தாயோ உன்னைக்கொய்து யார் இங்கே அணியப்போகிறார்கள் என்கிறார் புலவர்.

இரும்பிடர்த்தலையார் என்னும் புலவர்  பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர்   வழுதியிடம் இப்படிப் பாடுகிறார்.

’ நிலம் பெயரினும் நின் சொற் பெயரல்’ (3) அரசனுக்கு உயரிய நீதி  சொல்லும் மேல் நிலையில் தமிழ்ப்புலவர்கள் வாழ்ந்திருந்தனர் என்பதற்கு இதைவிட சான்று வேண்டுமா என்ன?

பெருஞ்சித்திரனார் என்னும் புலவர் அதியமான் நெடுமான் அஞ்சியை நோக்கிப்பாடியது நம்மை ஆழச்சிந்திக்கவைக்கும் விஷயமாகும்.

‘அருகிற்கண்டும் அறியாற்போல

அகம் நக வாரா முகன் அழி பரிசில்

தாள் இலாளர் வேளார் அல்லர்’ 

இப்படி இடித்துப்பேசுகிறார் புலவர்.

மேலும்

’பெரிதே உலகம் பேணு நர் பலரே’ என்றும் மொழிகிறார். (207

தன்னைக்காணாது ஈந்த பரிசினை ஏற்க மறுத்து பெருஞ்சித்திரனார் அதியமான் நெடுமான் அஞ்சியிடம் இப்படி அதிர்ந்து பேசுகிறார்.

‘காணாது ஈந்த இப்பொருட்கு யானோர்

வாணிகப்பரிசிலன் அல்லேன்’ பேணித்

தினையனைத்து ஆயினும் இனிது அவர்

துணை அளவு அறிந்து நல்கினர் விடினே  (208).

என்னை விரும்பி என் புலமை கல்வி முதலியற்றின் அளவறிந்து தினை அளவு பரிசளித்தாலும் இனிதென ஏற்பேன். ஊதியம் எனக்குப்பெரிதல்ல. யான்  ஒருவாணிகப்பரிசிலன் இல்லை என்கிறார் புலவர்

 புற நானூற்றுப்புலவரின் சுயமரியாதை நம்மை க்கிறங்கத்தான் வைக்கிறது

பாரிமகளிர் பாடுவதாக கபிலர் என்னும் பெரும் புலவர் இப்பாடலைப்பாடுகிறார்.அரசன் பாரியின் மக்கள் எத்தனைத்துயரத்தில் வாழ்ந்து இருக்கின்றனர் என்பதை நோக்குகிறபோது இந்த உலக வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மை பளிச்சென வெளிச்சமாகிறது.

‘அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்

எந்தையும் உடையேம் எம் குன்றும் பிறர் கொளார்

இற்றைத்திங்கள் இவ்வெண்ணிலவில்

வென்று எறி முரசின் வேந்தர் எம்

குன்றும் கொண்டார் எந்தையும் இலமே’.  (112)

கபிலர்  தமது ஆருயிர்  நண்பர் பாரியை ப்புகழ்தல்  இவண்மிக உச்சமாக அறியப்படுகிறது.  கீழ்க்காணும் பாடல் வாசகர்க்கு அதனை இயம்பும்.

‘பாரி பாரி என்று பல ஏத்தி

ஒருவர் புகழ்வர் செ ந் நாப்புலவர்

பாரி ஒருவனும் அல்லன்

மாரியும் உண்டீண்டு உலகு புரப்பதுவே’ (107)

மழைக்கு நிகராக  ப்பாரியை ப்பேசுகிற கபிலர் நட்புக்கு இலக்கணமாகி நிற்கிறார்.  தான் பெற்ற இரு பெண்மக்களை நண்பர் கபிலரிடம் ஒப்படைத்துவிட்டு இறந்துவிடுகிறார்  மன்னர்பாரி..  ஒருபுலவரின் அரச நட்பு எத்தனை உயர்ந்ததாக அன்னாளில் இருந்திருக்கிறது என்பதறிந்து மெய்சிலிர்த்துப்போகிறோம்..

அவ்வையார் என்னும் பெண்பாற்புலவர் மன்னன் அதியமான் பற்றி எத்தனைச்சிறப்பாகப்பேசுகிறார்.

‘ஒரு நாள் செல்லலம் இரு நாள் செல்லலம்

பன்னாள் பயின்று பலரோடு செல்லினும்

தலை நாள் போன்ற விருப்பினன் மாதோ’ (101)

புற நானூறு அன்றைய  தமிழ்மக்களின் வாழ் நிலையை பண்பாட்டை மானுட ஒழுக்கத்தை அளக்கும்கருவியாகப்பயன் படுகிறது.

இத்தனை உயர்ந்த பண்பாட்டை இரு ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்த தமிழ்ச் சமுதாயம் பெற்றிருந்தது என்பது மனித குல வரலாற்றில் உலகின் எந்த மூலை முடுக்கிலும் காணக்கிடைக்காத அருஞ்செய்தியாகும்.

புற நானூறு பேசும் அறம் தமிழ்ச்சமுதாயத்தை என்றைக்கும் வரலாற்றில் உயர்த்திப்பிடிக்கும் காரணியாக அமைந்து நிற்கும்.

புற நானூறு காட்டும்  வெளிச்சம் பிற நாட்டினரைத் தமிழர்தம் பண்பாடு பற்றிஆழ்ந்துயோசிக்க வைக்கும்.  என்றைக்கும் இது இலக்கியத்  தரவாக அமைந்து ப்பெருமை சேர்க்கும்.

 

Is there  a school?

 

What have religions taught us

do you know.

Why in the name of god

blood  and blood

wherever you go.

A God is to unite one and all

wherever we dwell and

whatever we do.

is that not so?

 

Why our fatherland India was divided in to two

oneIndia and the other Pakistan

when we got independence

from British.

Didn’t god make that division possible

on gushing  streams of blood

got  from

crushing more than one million human lives.

Hit they each other with what they had in their reach.

Rape and murder, peril nonstop

our own brothers and sisters

who yell yah Allah and Ram Ram

day and night  were put  shame

on their own soil.

Gandhi the great man of India preached and practised

truth and nonviolence

as tools for achieving every goal.

Freedom we got from British

but secular  Gandhi  was finished with a bullet 

a Hindu fanatic got a score.

.

Bangladesh was born

Pakistan got divided

on  streams of blood again

of their own children.

God is one Allah to every one.

 

Speak they one Language

will a language unite people?

History reveals never so.

Why Englandfought  America

Is that for some Tax meagre as you are told in History notes

Not that, not that

butEngland s’ ego grew bigger than its’ due

cutting its’ roots

cameUnited States out.

.

From one and the same bookshop

Bibles holy copies got

the blacks and  whites of African soil

keep them in their shelves.

Holy words read under one golden roof

meant differently to different men.

That is why they erected boards

in some African towns 

displaying, ‘Indians and dogs do not enter.

.put  they  Nelson Mandela behind the bars.

for more than two decades or so.

 

Ideology united  lands a lot

Soviet union was what we finally got.

to day where it is all we know.

Greater than the geatest

thinker till his last breathe

Lenin statue was pulled down

ghost like  bulldozers roar we heard.

Contribution of  Marx and Lenin

to mankind will cherish

till a man  breathes his last.

Socialism will never be wiped out

but rulers on earth may wither on times’ scythe.

 

Science and technology did a lot                                              

Cholera smallpox plague and polio.

where are those monsters now?

Viruses deadly you can master

Dinosaurs strength made you cipher

but indomitable is human ego.

Beads roll in your hand and shut you your eyes

reserve you a berth in heaven

don’t believe that you have overcome it.

Phoenix is one’s ego.

Dust from it will sprout

Beat the Everest in it’s height.

Alexander the great

or Hitler the racial beast

were toys of their ego tall.

All fights you witness

in sharing land water or air

green pasture of any kind you see

are of egoes born and nothing else.

Is there any school you find

to mend man

to keep him away

from unrighteous money

or to put him out of arrogant might.                                         –Essarci

-----------------------------------------------------------

 

 

Essarci  is a writer in Tamil and  English. His date of birth is 04.03.1954

.

The Tamil is a classical language of India. Essarci  believes in marxism and humanism. He is admirer of P.B.Shelly and Keats.  Among Indian writers  he prefers  Subramaniya Bharathi (Tamil)and Rabinranath Tagore(English). you can contact him on,essarci@yahoo.com..

-------------------------------------------------------------------------------------------------- 

 

 

 

 

 

 

 

.

 

 

.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

                     

 

தோழமை                           -எஸ்ஸார்சி

பணி ஓய்வு பெற்று பதினைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆச்சரியமாக  இருக்கிறது. திரும்பிப்பார்ப்பதற்குள்  வயது  ஓடிப்போய்விடும் என்பார்கள்.அது சரியாகத்தான் இருக்கிறது.. முதுகுன்றம் நகரில் அவனுக்கு ஒரு காலி மனை இருந்தது.அதனை சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ’ஏதாவது ஒன்று இருக்கட்டுமே’ என்று வாங்கிப்போட்டான்.

அந்த நகரத்தில் அரசாங்கம்  அவனுக்குக்  குடியிருப்பு வழங்கியிருந்தது. அதனில்தான் குடியிருந்தான்.பணி ஓய்வுக்குப்பின்னர் சென்னை மாநகருக்கு வந்துவிட்டான்.பெற்றபிள்ளைக்குச் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை.பிள்ளையோடு அவனுக்கு ஓய்வுக்காலம் சென்றுகொண்டிருந்தது.

முதுகுன்ற நகரில் இனி  ஆக வேண்டியது ஏதுமில்லை.. அங்கே இருக்கும் அந்தக்காலிமனையை விற்றுவிடலாம்.முடிவு செய்தான்.ஒரு நாள்காலை முதுகுன்றம் நகரத்துக்குப் ப்புறப்பட்டுபோனான்.

காலிமனை முதுகுன்றத்திலிருந்து சிதம்பரம் செல்லும் சாலையில்  தனலசட்சுமி எண்ணெய் ஆலைக்குப்பின்புறமாக இருந்தது. முதுகுன்றம் பேருந்து நிலையம் இறங்கி அங்கிருந்து ஆட்டோ பிடித்து அந்தக் கணபதி நகருக்குப்போனான்.கணபதி நகர் லேஅவுட்டில்தானே அந்தக்காலிமனை இருக்கிறது.

எண்ணெய் ஆலைக்கு ப்பக்கத்தில் ஒரு மாரியம்மன் கோவில். அதன் காம்பவுண்ட்டை ஒட்டித்தான்  கணபதி நகர் லே அவுட்.. ஓரிருவர் வீடு கட்டிக்கொண்டு அங்கே குடியிருந்தார்கள்.நேராகத் தன் காலி மனைக்கு நடந்தான்.ஒரே முள்ளும் புதருமாக இருந்தது.எல்லைக்கற்கள் எங்கே என்று தேடினான். நான்கு கல்லுக்கு ரெண்டு கற்கள் மட்டும் இங்கொன்றும் அங்கொன்றுமாக  அவன் கண்ணில் பட்டன.

‘சாரு வணக்கம்’  இப்படி வணக்கம் சொன்னான் ஒரு நடுத்தர வயதிருக்கும் ஒருவன்.

‘ என்ன சேதி’

‘ அய்யா இங்க வீடு கட்டிகிட்டு வர்ரதா இருக்கிங்களா’

‘ஏன் கேக்குறீங்க’

‘தெரிஞ்சிக்கலாம்னுதான். நானு ரியல் எஸ்டேட் புரோக்கரு’

யோசனை செய்தான்.புரோக்கர் என்றாலே அவனுக்கு அச்சமாகக்கூட இருந்தது.இருந்தாலும் இந்தக்காலிமனையை இனி வைத்துக்கொண்டும் என்ன செய்வது. தன் மகனுக்கு  இந்தப்பக்கம் வருவது என்பதில் எல்லாம் நாட்டம் இல்லை. ஆக இந்தக்காலிமனையை விற்றுவிட வேண்டியதுதான் அவன் மனம்  முடிவாய்ச் சொல்லியது.

புரோக்கருக்கு இவன் மனதில் எண்ணியது எப்படித்தெரிந்ததோ.அவன் விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினான்.

‘ தேவைக்கு என்ன கூப்புடுங்க . பேரு  பங்காரு.. நமக்கு இதுதான் தொழிலு. எதுலயும்  ஒரு  சுத்தம் இருக்கணும்’

அவன் விசிட்டிங் கார்டை வாங்க்கிகொண்டான்.

‘ இங்க செண்ட் என்ன வெல போவுது’

‘ ‘செண்ட் வந்து ரெண்டுக்குள்ள போவும். ஓரம் சாரம்  சந்துகுத்து மூல மொடக்குன்னு ஒண்ணரைதான்  போவும். மொத மாறி இல்லங்க இந்த பிசினசு. அதுலயும் இந்த் பாழாப்போன கொரானா வந்தப்பறம் சனங்ககிட்ட காசி ஏதுங்க. சனம் சின்ன படுதுல்ல’

‘ சரி தேவப்பட்டா போன் பண்ணுறன்’ பதில் சொன்னான்.

‘எல்ல கல்லு புடுங்கி கெடக்கு.ஒரே முள்ளு கள்ளு.ஆடு மாடு மேயுது.சாராயம் குடிக்கிறவன்க இங்கதான் இருட்டுனா வந்து ஒதுங்குறான்.  மோசம் மோசங்க. நீங்களும் எங்கயோ தூரத்துல இருக்கிங்க என்னா செய்விங்க. வயசும் ஆவுதுல்ல’

அவன் பேசுவது சரியாகத்தான் இருந்தது.

‘’உங்க போன் நெம்பரு விலாசம்’

  நானு இங்க  இந்த ஊர்ல இருந்தவந்தான். பூதாமூர் கோர்டர்ஸ்ல குடியிருந்தேன்..வேல முடிஞ்சி போச்சி.ரிட்டேரானேன். சோத்துக்கு  பென்சன் வருது. ஆண்டவன் என்னை கைவுடல. சென்னையில பையனோட இருக்குறன்’

அவன் பதில் சொன்னான்.

‘ ஊருக்குப்போயி போன்  பண்ணுங்க. இது தானே உங்க பிளாட்டு. என்னா ஒரு நாலு செண்ட் வரும்’

‘ஆமாம் நாலு செண்ட்தான்’

‘ பாக்குலாம்  ஒன்ண  மொத ஞாபகம் வச்சிகிங்க. இந்த இடம் ஒண்ணும் சரியில்லாத இடம். வா பந்தல் போட்டுதான் இத விக்குணும்.  விஷயம் தெரிஞ்சவன் இந்த பக்கம் பிளாட் வாங்கி வூடு கட்டி  குடி வரமாட்டான். குடிகார க்கழுதிவ வரும். இல்லன்னா பலான பலான  ஆளு வரும்’ சட்டமாய்ப்பேசினான் புரோக்கர்.

அவன் விடைபெற்றுக்கொண்டு சென்னைக்குத் திரும்பினான்

பத்து நாட்கள் சென்றது.  முதுகுன்றம்  ரியல் எஸ்டே புரோக்கர் சொன்னது அவன் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருந்தது.

புரோக்கர் கொடுத்திருந்த விசிட்டிங் கார்டை தேடிக்கண்டுபிடித்தான்.

முதுகுன்றத்துக்காலி மனையை விற்றுவிடுவது என்று முடிவு செய்தான்.அவனுக்குத்தான் போன் போட்டான்.

‘பங்காரு, நான் கணபதி நகரு பிளாட்காரன் பேசுறன்’

‘ சொல்லுங்க சாரு ரெம்ப சந்தோசம்’

‘ இப்ப செண்ட்  அங்க எப்பிடி போவுது’

‘ என்ன சாரு பத்து நாளு ஆவுல அதுக்குள்ள வெல ஏறிபுடுமா’

‘ இல்ல கேக்குறன்’

‘’ உறுதியா செண்ட் ரெண்டுக்கு முடிக்கிலாம்.ரெண்டுன்னா ரெண்டு லச்சம்.உங்களுக்கு தெரியும் இருந்தாலும் சொல்லுறன்.எனக்கு ரெண்டு பர்செண்ட் கமுஷன் தருணும்.அதுவும் சொல்லிபுடுறன்.அது எனக்கு பதினாறு ரூவா வரும்.’

‘கமுஷன் எவ்வளவு’

‘ இந்தக் கமுஷன்னா முட்டும்  சனங்களுக்கு காதுல  வுழுவாது.  ஆராயிருந்தாலும் இது இப்படிதான்.  எனக்கு  ரூவா பதினாறு ஆயிரம். உங்களுக்கு மொத்தமா எட்டு லச்சம்’ ’

‘ ஆவுட்டும் சட்டுனு ஒரு பார்ட்டிய பாரு. எனக்கு சேதி வரட்டும். மனைக்கு  அட்வான்சு தர்ரது அது இது எதுவும் வேணாம். நேரா கிரயத்துக்கு நான் வர்ரன் அண்ணைக்கு பணத்த மொத்தமா என் கணக்குல பாங்குல போட்டுடுணும்.  நானும் ரிஜிஸ்டர் ஆபிசுல கையெழுத்து போடுவேன்

‘ சட்டமா பேசுறீங்க’

‘ இது ரூவா சமாச்சாரம்’

‘ நானு எல்லாம் ரெடி பண்ணிகிட்டு சேதி சொல்லுறன். இதுதான உங்க போன் நெம்பரு. சாரு, நானு  பெறகு பேசுறன்’

புரோக்கர் போனை வைத்துவிட்டான்.

அவனிடமிருந்து போன் வரும் வரும் என்று அவன்  காத்திருந்தான். புரோக்கர் போன் செய்யவே இல்லை. வீதியிலிருக்கும் வழித்துணை  விநாயகருக்கு வேண்டியும் வைத்துள்ளான். முதுகுன்றம் காலிமனை விற்றுவிடவேண்டுமென்றும் அதற்கு.அவர்தான் கண்திறக்கவேண்டும் என்று காத்திருந்தான்.நாட்கள் ஓடின.

புரோக்கரிடமிருந்து  ஒரு போன் வந்தது.

‘ நானு  பங்காரு’

‘ சொல்லுங்க. ரொம்ப நாளா போன் வல்லியேன்னு இருந்தன்’

 

‘ நீங்க இண்ணைக்கு பதினைஞ்சா நாளு முதுகுன்றம் வர்ரீங்க. மொத்த பணம் நீங்க சொன்ன மாதிரிக்கு  பெரிய ரூவா எட்டும் பாங்குல வுழுந்திடும் பிளாட் சம்மந்தமா எல்லா ரெக்கார்டும் அப்ரூவல் சேத்து  ஒரு செராக்ஸ் அனுப்புங்க.  இண்ணைக்கே இப்பவே அனுப்பி நாளைக்கு எனக்கு  அதுவ என் கையுல கெடக்கிணும். ஒர்ஜினல் எல்லாம் ரீஸ்டர் அண்ணைக்கு  இக்கட வந்துபுடணும்’ புரோக்கர்  பங்காரு சொன்னான்.

அவன் எல்லா ரிக்கார்டுகளுக்கும் ஒரு நகல் எடுத்து முதுகுன்றம்  பங்காருக்கு  புரொஃபஷனல் கொரியரில் அனுப்பி வைத்தான்.

 அவன் ரிஜிஸ்டர் நாள் அன்று  அதிகாலை கிளம்பினான். எல்லா ஒரிஜினல் ரிகார்டுகளுடன் வங்கிப் பாஸ்புத்தகத்தோடு முதுகுன்றம் ரிஜிஸ்டர் ஆபிஸ்  முன்பாக வந்து நின்றுகொண்டான்..

பங்காரு புரோக்கர் அங்கே தயாராகக்காத்திருந்தான். அவன் வங்கி பாஸ்  புத்தகத்தை  பங்காருவிடம் நீட்டினான்.

‘ இன்னும் அரை மணியில பணம் உங்க கணக்குல வுழுந்துபுடும்’

வங்கி விபரம் எல்லாம் தன் கைபேசியில்  பங்காரு படமெடுத்துக்கொண்டான்

‘ இங்கயே இருங்க ரிக்கார்டுவ பத்திரம்’  பங்காரு சொல்லிப்போனான்.

ரிஜிஸ்டர் ஆபிஸ் முன்பாக  அவன் ஒரு கொடி மரத்தின் கீழ் அமர்ந்துகொண்டு இருந்தான். கொடிமரத்தில் கொடி ஏதுமில்லை வெட்டையாக இருந்தது..

ஒரு நடுத்தர வயது பெண் அவள் குழந்தை இருவரும்  ஒரு ஆட்டோவில் அங்கே வந்து அங்கே இறங்கினர்.  அவனுக்கு அந்தப்பெண்ணை எங்கேயோ பார்த்த மாதிரிக்கு இருந்தது.

‘ நீங்க  கிரயம் வாங்க வந்து இருக்கிங்களா’

‘ ஆமாம்.’

‘ எந்த மனை கிரயம்’ அவன் தொடர்ந்தான்.

‘ ‘ கணபதி நகருல ஒரு  நாலு செண்ட் கிரயம்’

‘ ‘ நாந்தாம்மா அது கிரயம் தர்ரது,. உங்க சாரு’

‘ அவரு  வரல்லே.  எங்கப்பா வருவாரு.பாங்குக்கு போயிருக்குறாரு பணம் போட்டுட்டு வருவாரு. அந்த பார்ட்டி நீங்கதானா’

‘ உன்ன எங்கயோ பாத்த மாதிரிக்கு இருக்குது’ அவன் சொன்னான்.

‘ எங்கப்பா மோகன்ராசு. டெலிபோன்ல லைன்மெனா வேல பாத்தாறு. உங்களுக்கு தெரியுமா என்னா’

அதற்குள்ளாக வங்கியில் பணம் செலுத்திவிட்டு பங்காரு ரசீதோடு அங்கு வந்துகொண்டிருந்தான்.கூடவே அந்த மோகன்ராசு வந்து கொண்டிருந்தார்.

‘ நீ மோகன் ராசுதானே’

‘ ஆமாம் சந்திரன்தானே நீங்க’

அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாகப்பார்த்துக்கொண்டார்கள்.. முதுகுன்ற நகரத்து பொதுவுடமை கிளையில் இருவரும் பலகாலம் உறுப்பினராக இருந்தவர்கள்..எத்தனையோ நிகழ்வுகளில் பங்கேற்றவர்கள். இருவரும் எத்தனையோ போராட்டங்களில் பங்கு பெற்றவர்கள்.. தண்டனைகள் பலபெற்றவர்கள்..

’சொல்லப்போனால்  ’’நாம் இருவரும் தோழர்கள்’’ சொல்லிக்கொண்டார்கள்.

‘’ நீந்தான்  தோழர் விக்கிற நான் என் பொண்ணுக்கு வாங்குறன்’ அவனிடம் மோகன்ராசு சொன்னான்.

‘ பேசினவரைக்கும் இருக்கட்டும் இது என்னா நேரம்.  உத்தி பிரியற நேரமா, ஒப்பு ஒறவு பேசுற நேரமா. உள்ள ஆபிசரு கூப்பிடறாரு  நேரம் ஆவுது. நம்ப செலாட் வந்து போச்சி   உள்ள போங்க .போயி ஆவுற காரியத்தை பாருங்க’ சத்தம் போட்டான் பங்காரு.

அவன் ரிஜிஸ்டர் அலுவலகம் சென்று கையெழுத்துபோட்டு முடித்தான்.மோகன்ராசுவின் பெண்ணும் தன் பணி முடித்தாள்.ரிக்கார்டுகள் கை மாறின.

தயாராக வைத்திருந்த பதினாறு ஆயிரத்தை புரோக்கர்  பங்காருவிடம் அவன் ஒப்படைத்தான்.  எல்லாம் முன்னரே முடித்துவிட்ட மோகன்ராசு தன் மகளோடு விடைபெற்றுக்கொண்டான்.

அவன் ஆட்டோ பிடித்து பேருந்து நிலையம் வந்தான்.சென்னை ப்பேருந்தைத்தேடினான்.ஒன்றையும் காணோம்.

’சந்திரன் சந்திரன்’ மோகன்ராசுவின் குரல் கேட்டது.

திரும்பிப்பார்த்தான்.

மோகன்ராசுதான்.விஷயத்துக்கு வந்தான்.

‘ நீ செண்ட்டு என்ன விலைக்கு கொடுத்த’ வேகமாய்க்கேட்டான்.

‘ நானு செண்ட் ரெண்டு லச்சம்னு. குடுத்தன்’

’ எங்கிட்ட செண்ட் மூணுன்னு  பங்காரு காசு வாங்கிகிட்டான். பத்திர செலவு ஒண்ணு  ஆயிடுச்சி எழுத்துக்கூலி,, பெறவு ரெஜிஸ்தர் ஆபிசுக்கு  கொடுக்குற மாமுலு பத்து’

    ஆக புரோக்கரு பங்காருக்கு  வரவு நாலு செண்டுக்கும் நாலு லச்சம். என்கிட்ட ஒரு  பதினாறு ஆயிரம் கமிசன்.. உங்கிட்டயும் கமிசன் வாங்கியிருப்பாந்தான்’

‘ நானும் பதினாறாயிரம் கமிசன் கொடுத்தேன், ’

‘ ’ரூவா பத்தாயிரம்  இந்த மன வாங்ககுள்ள  அப்பத்திய செலவு... . ஆயிடுச்சி  முப்பது  வருஷம் . இண்ணைக்கு அது  எட்டு லச்சம் . ஆனா இந்த புரோக்கரு பங்காருக்கு  கை மொதலே இல்லாம லபக்குன்னு   நாலரை.  லச்சம்  இது எப்பிடி இருக்கு’

  தோழர் இதுக  எல்லாம் நமக்கு எண்ணைக்கும் வெளங்காது. வுட்டுடு’.. இங்கன  நா  இன்னும்  நம்ம கச்சிலத்தான்  இருக்கேன்’’

   அங்க சென்னையில நானும்தான்’  அவன் பதில் சொன்னான். சென்னைக்குச்செல்லும் பேருந்து ஆரவாரமாக அங்கே வந்து நின்றது.

தோழர்கள் பிரிந்து  அவரவர்கள்  வசிப்பிடம் நோக்கிச்  செல்கிறார்கள்.

----------------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 .

 

 

 

.