Monday, September 19, 2022

பூனைக்கு மணி கட்டுவோம்

 

                              பூனைக்கு மணி கட்டுவோம்                 

எவ்வழி நல்லவர் ஆடவர்

அவ்வழி நல்லை வாழிய நிலனே –என்றார் அவ்வை.

 திருக்குறளும்  விவிலியமும்  புத்தரும்  தோன்றி ஆயிற்று  இரண்டாயிரம் ஆண்டுகள்.  மனிதர்கள் தம்மை திருத்திக்கொண்டு செம்மயுற  வாழ்வதை மட்டும்  பயில மறுக்கிறார்கள்.

உலகம் இன்றைக்கு  மனிதனின் சிறுமதியால் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறது. இயற்கையை அனுசரிக்காத ஒரு வாழ்க்கையை தொடர்ந்து மேற்கொண்ட மானிட சமூகம் அதற்கான விலையைக்கொடுத்துத்தானே ஆகவேண்டும். ஆகத்தான் இயற்கையின் சீற்றங்கள். பருவ நிலை மாற்றங்கள் புவி வெப்பமயமாதல்,  காற்று மாசடைதல்,கடல் சீற்றங்கள் எனத்துயரங்கள்தொடர்கின்றன.

கொரானா என்னும்   தொற்று த்துயரம்  இன்னும் தொடர்கதை..  சீனாவின் வூகான்  ஆய்வகம் கொரானாவை  உலகிற்கு  வழங்கிற்றா என்னும் அய்யம் எழுந்தது. அவ்வாய்வுகள்  முடிந்தபாடில்லை.

 கொரானாப்பெருந்தொற்று  உலகினின்று விடைபெற்றுக்கொண்டதா  என்றால் இல்லை. ஈடில்லாச் செல்வ வளம் பெற்ற அமெரிக்காவுக்கு  மனித இறப்புக்கள் 9,86,000   இறப்புப்பட்டியலில் முதலிடம். 

ஐரோப்பிய நாடுகள் மனித உயிர்களை லட்சம் லட்சமாய்ப் பலிகொடுத்தது. உயிர்வளிக்கு ஏங்கித்தவித்து  மருத்துவ மனைக்குள் நுழையவே இடமில்லாமல் வீதிகளிலேயே பிணமாகிப்போனவர்கள் எத்தனையோ லட்சம்பேர். ஏழையென்ன பணக்காரன் என்ன எல்லோரும் மாண்டார்கள்.

அறிவியலாளர்களின் தடுப்பூசிக்கண்டுபிடிப்பு  எனும்   அற்பணிப்பால்,  மருத்துவ சமுதாயத்தின் ஈடில்லா  கடமை உணர்ச்சியால்,  மனிதகுலம் எஞ்சியிருக்கிறது. மனித முயற்சி  திருவினை ஆக்கியிருக்கிறது என்பது நிதர்சனம்.

தொடர்ந்து வந்தது ருஷ்ய உக்ரேனிய ச்சண்டை. ரஷ்யாவின்  அதிபர் புடின் உக்ரைன்  முதலாளித்துவ நேடோவின் வலைக்குள் சிக்கிவிடாமல்  இருக்கவேண்டும் என்பதே குறிக்கோளாய்ப் பிரச்சனையை ஆரம்பித்தார். அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் உக்ரேனுக்கு ஆதரவு நிலை எடுத்தன.  சீனாவும் பாகிஸ்தானும் ரஷ்ய  நிலையை ஆதரித்தன. இந்தியா நடு நிலை வகித்தது. இந்தியாவின் பாதுகாப்பு,  காலம் காலமாக   ரஷ்ய இந்திய   நல்உறவின் அடையாளமாக இருந்துவருதல் நிதர்சனம். ரஷ்யப் பொதுஜனம் உக்ரேன் போர் வேண்டாம் என்று  மாஸ்கோ  மாநகர வீதிகளில்  அதிபர் புடினுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.

  இதுவரை ஐம்பதாயிரம் மனித உயிர்கள் பலியாகிய சோகம். தொடர்கிறது போர். உலகயுத்தமாக மாறாமல் இது நிறுத்தப்படவேண்டும்.

 சோவியத் என்னும்  சோஷலிச அமைப்பு கோர்பசேவின் போதாமையாலும்  முதலாளித்துவ அரசுகளின் சூழ்ச்சிகளாலும் இல்லாமல் போனது. போர்க்குண மிக்கதோர் மனிதகுலம் ஈட்டிய மாபெரும்   பொக்கிஷமான   சோஷலிசம்   மீண்டும் எழுமா என்னும் அய்யம் இடது சாரி அமைப்புக்களைப்பற்றி உலுக்குகிறது.

இன்று ரஷ்ய மக்கள்    உலக அரங்கில் தாங்கள் தொலைத்துவிட்டஇணையற்ற  அமைப்பை ப்பற்றிச்சிந்திக்கத் துவங்கியிருக்கிறார்கள்.  

அமெரிக்கா  ஒருவழியாக ஒதுங்கிக்கொண்டாலும் ஆப்கானிஸ்தானில் புதிய வெளிச்சம் எதுவும்  தென்படவில்லை.

ஸ்ரீலங்காவில்,  கொரானாவைத்தொடர்ந்து ,  பொருளாதாரப்பிரச்சனை தலை விரித்தாடுகிறது. , ஸ்ரீலங்காவையே திக்கு குமுக்காடவைக்கும் சோகம் சூழ்ந்து நிற்கிறது. மக்கள் உணவுக்கு வீதிகளில் மன்றாடுகிறார்கள்.

தைவான் பிரச்சனையைத் தீர்க்கமுடியவில்லை.

 ஒரு நல்ல தலைமையின் வழிகாட்டுதல் இன்றி  பிரச்சனைகள் சிக்கலாகி விடுகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிகள் வெற்றுத் தீர்மானங்களாகவே முடிந்துபோகின்றன.                                         

 நமது நாட்டில் மக்கள்தொகை அதிகம். பல மதங்கள் பல மொழிகள் பல இனங்கள் பல கலாசாரங்கள். மக்களாட்சி இந்தியாவில்  தொய்வின்றி வெற்றி நடை போடுகிறதா என்றால் அது சரியே. ஆயின் கடையனுக்கும் கடைத்தேற்றம் என்னும் நல்லறத்தைப்பேண விரும்பினார்  நம் தேசபிதா. இன்று நிகழ்வது என்ன?  டாடாவும் அம்பானியும் அதானியும் செல்வதாரத்தை ப்பெருக்கிக்கொண்டு மேலே மேலே உச்சம்  போகிறார்கள்.

அன்றாடம் காய்ச்சிகளின் எண்ணிக்கையோ கூடிக்கொண்டே போகிறது. ஏர் இந்தியாவை டாடா லாபகரமாய் நடத்துவாராம் நமது ஆட்சியாளர்களால் அப்படிச்சாத்தியமே இல்லையாம். விமான நிலையங்கள் துறைமுகங்கள் ஏலம் போகின்றன.

பொதுத்துறையை அழிப்பதுவே லட்சியமாய்ச்செயல்படும் மோடி அரசாங்கத்தின் கண்கள் தேச நலனைப்பார்ப்பதில்லை. பெரும் முதலாளிகள் கொழுக்கத்தான்   நரேந்திர மோடி  இரவு பகலாய் காரியம்  ஆற்றுகிறார்.  இந்திய மக்களின் சொத்தான  எல் ஐ சியை ரயில்வேயை ஏலம் போட்டு விற்கத் தொடர்கிறது முயற்சி.  அரசின்  பி எஸ் என் எல் சுருங்கி முடமாய்ப்போக எத்தனை சூட்சிகளை  ஆட்சியாளர்கள் அரங்கேற்றுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் பிரதமர் நரசிம்ம ராவ் கோடு போட்டார். இவர்கள் ரோடு போட்டு உலா வருகிறார்கள்.

படேலுக்கு வானத்தை தொடும் சிலை, நேதாஜிக்கு அதற்கு இணையாய் தலை நகரில் சிலை, அயோத்தியில் ராமர் கோவில் ,மக்கள் நலனில் அக்கறை த்துளிக்கூட இல்லை. அனுமார் ஜயந்தி ஊர்வலத்தில் எத்தனைக்கலவரங்கள். கர்நாடக மாநிலத்தில்  ஹிஜாப் பிரச்சனயை  அனாவசியமாகத்தூண்டி மக்களின் ஒற்றுமையைக்குலைப்பது யார் என்பது அறிவோம் நாம்.

விவசாயிகள் பிரச்சனை அதற்காக மூன்று கருப்புச் சட்டங்களை பாராளுமன்றத்தில் இயற்றிய மோடி அரசு உண்மையிலேயே விவசாயிகள் பிரச்சனையைத்தீர்க்கவா முயற்சித்தது. ஏறக்குறைய ஒரு ஆண்டு நடைபெற்றது தொடர் போராட்டம். எத்தனை எத்தனை மனித உயிர் இழப்பு. மாநிலத்தேர்தல் வந்தது. பஞ்சாபில் இன்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கிறது. சற்றே மன  நிம்மதி. இன்குலாப் ஜிந்தாப் முழக்கமும் , விடுதலைத்தியாகி  பகத்சிங்க்  புழங்கிய மண்ணில் பதவியேற்றுக்கொண்டதும்  அரசியலில்  நல்ல அறிகுறிகள்.

மதம் இனம் மொழி கலாசாரம் வேறு வேறு கொண்ட இப்பெரிய பாரத தேசத்தில் ’எல்லாம் ஒன்றே ஒன்று’ என்று மட்டும்  ஒற்றை நிலை பேசுபவர்கள் எதனைப்பிடித்துகொண்டு தொங்கி,   இந்திய நாட்டை  சிதைக்கிறார்களோ அதனைத்தான் நாம்  ’மத வெறி’ என்கிறோம்.

’மத வெறி வீழ்க’ என்று பதாகை ஏந்துபவர்கள் . தேசபக்ததh் தொழிலாளர்கள். கூடுதல் பொறுப்புள்ளவர்களாய்  இயக்கம் நடத்தப்பணிக்கப்பட்டு இருக்கிறார்கள். . இடதுசாரி அரசியல் கட்சிகள் இன்னும் பிரிந்து பிரிந்து கிடப்பதற்கான நேரமில்லையே இது. மேற்கு வங்கமும் திரிபுராவும் கற்பித்த பாடந்தான் என்ன?

தமிழ் நாட்டில் திராவிட முன்னேற்றக்கழக ஆட்சி நடைபெறுகிறது. இடது சாரிகள் சொல்வதைக்கேட்கக்கூடிய ஒரு அரசு ஆட்சிக்கு வந்திருக்கிறது என்பது கூடுதல்  மகிழ்ச்சி.

 சாமான்ய மக்களின் நன்மையைக் கருதி ‘’ நீட் தேர்வை’ எதிர்த்து  மாநில சட்டசபையில் தீர்மானம்  நிறைவேற்றும்   இந்த நல்லரசு  ‘ மத்திய அரசே பொதுத்துறையைச் சிர்குலை க்காதே’ என்று ஒரு தீர்மானம் கொண்டுவந்து அதனை நிறைவேற்றவும்  அதனையும் டில்லிக்கு அனுப்பிவைக்கவும்  கடமைப்பட்டதுதான்  என்பதனைத்தெரிவிக்க  இடதுசாரிகள் கடமைப்பட்டுள்ளார்கள்..

 காங்கிரஸ் கட்சிக்குப் பொறுப்புக்கள் கூடிக்கொண்டே போகின்றன. மக்கள்  அவர்களிடமிருந்து  நிறையவே எதிர்பார்க்கிறார்கள். நல்லது செய்ய யாரும் ஒன்று கூடலாம்.. மந்திப்பு த்தொலைக்குமா அத்தலைமை என்பதே வினா..

-------------------------------------------------

 

 

 

 

No comments:

Post a Comment