Thursday, November 7, 2024

கதை- நிஜம் சுடும்

 

 

 

 நிஜம் சுடும்                                      - எஸ்ஸார்சி

 சென்னைத்  தியாகராயநகரில் திருமலைப்பிள்ளை மண்டபத்தில்  நடக்கும் இந்தக் கல்யாணத்திற்கு அரை மனசோடுதான் அம்மா  கிளம்பி வந்தாள். தனது மகனுக்குப் பெண் கொடுத்தவர் வீட்டுத் திருமணம்.  தன் நாட்டுப்பெண்ணின் தங்கை திருமணம். உறவு என்னவோ பெரிய உறவுதான். ஆனாலும் இந்த உறவுக்கெல்லாம் இணையாகச் சொல்லிக்கொள்ள தன் குடும்ப  ஸ்திதி இல்லையே என்கிற கவலை. அம்மாவுக்கு. ‘தாய் இறந்து  போனால் தந்தை  தாயாதி’என்கிற பிரயோகத்தை  எப்போதேனும் அம்மா சொல்வாள். அவன்  கேட்டதுண்டு. அம்மாவுக்குத் தன் சின்ன வயதில் தாய் தவறிப்போனாள்.தனது அப்பா  ஒரு நல்ல   இடம் பார்த்துத் தன்னைக் கல்யாணம் செய்துகொடுக்கவில்லை என்கிற மனக்குறை  இருந்தும் இருக்கலாம். இதனையெல்லாம் விஸ்தாரமாய் அம்மாதான் அவனிடம் சொல்வாளா இல்லை  அவன்தான் கேட்டுத்தெரிந்துகொள்வது சரியாக  இருக்குமா என்ன?  அது அதை  அப்படியே விட்டு விட்டான்.

 தனது பையனுக்குப் பெரிய உத்யோகம் என்று எதுவுமில்லை.  சொல்லிக்கொள்கிற மாதிரியும்  சொத்து சுகம் எதுவுமில்லை .ஆனாலும் ஒரு பெரிய இடத்தில் பெண் கொடுத்திருக்கிறார்கள்.வசதி படைத்தவர்கள் தமது பெண்ணை  உழைத்தால்தான் சாப்பாடு என்கிற ஒருவனுக்குக் கொடுத்திருக்கிறார்கள். அதில் ஏதேனும் சூட்சுமம் இருக்கலாம். அது எல்லாம் விளங்கிவிடுமானால்  அவர்கள்  ஏன் எப்போதும்  உழைப்பவர்களாகவே  இருக்கப் போகிறார்கள்.

திருமணத்தில்  அவன் அம்மா அடக்கம் ஒடுக்கமாக இருந்தாள்.திருமணத்திற்கு வருகை தரும் ஒவ்வொருவரும் சொந்தக்காரில்தான் வந்திறங்கினார்கள். அம்மா மாம்பலம் ஸ்டேஷனில் இறங்கி ஆட்டோ பிடித்துத்தான் திருமண மண்டபம் வந்தாள். ஒருவர்  கையில் எடுத்துக்கொண்டுவரும் ஹேண்பேக்கோ சூட் கேசோ  அவர் எத்தனை வசதிக்காரர்கள் என்பதை அறிவித்து விடும்.   கட்டியிருக்கும் சேலையும்   ஜாக்கெட்டும்  என்ன தலையில் சூடியிருக்கும் மல்லிகைப்பூச் சரம் கூட  ஒருவர் வசதியை பட்டியலிட்டுக்காட்டும்.

அம்மா தனது மகனைத்தேடிப்பார்த்தாள்.கல்யாண மண்டபத்தில் மகன் கண்ணில் படவேயில்லை. வசதி இல்லாதவர்கள் வசதி நிறைந்தவர்களோடு  திருமண விழாவில் எப்படித் தம்மைப் பொருத்திக்கொள்வார்கள்.  உடலுழைப்பைக் கொடுத்து மட்டுமே  அது  சாத்தியப்படலாம். இது எழுதப்படாத நியதி. தன்னுடைய மருமகள் அவர் பிறந்த வீட்டு ஜனங்களோடுபேசிக்கொண்டே இருந்தாள். அம்மா  தன்னுடைய மகனைத்தேடினாள். மகனை எங்கும் காணவில்லை. ஒரு கல்யாண  மண்டபத்தில் ஆயிரம் வேலைகள் இருக்கலாம்.  தன் மகனுக்கு  ஏதேனும் ஒரு வேலையைக் கொடுத்திருப்பார்கள். அதற்காக வெளியில் எங்கேனும் சென்றும் இருக்கலாம். கல்யாண  மண்டபத்தில் இருந்தும்  இங்குள்ள வேலைகள் சிலதை கவனிக்கலாம். தான் இருக்கும் நிலமைக்கு அது எல்லாம் சரிப்பட்டு வராது என்பதை உணர்ந்து அவன்  ஊர் சுற்றி வருகின்ற வே;லைகள் எதாவது வாங்கிக்கொண்டு புறப்பட்டுமிருக்கலாம்.

அவன் அம்மா தனியாகவே சென்று டிபன் காபி சாப்பிட்டாள். அவன் அப்பாவோ  இந்தத் திருமணத்திற்கு வரவே இல்லை. அப்பாவால் இது மாதிரி திருமண நிகழ்வுகளுக்கு வரவும் முடிவதில்லை. அவர் பார்க்கும் புரோகிதர் உத்யோகம். அப்படி. உறவினர் வீட்டில்  நண்பர்கள் வீட்டில் ஏதும் சுப நிகழ்ச்சிகள் ஏதும் வரும் நாளன்று அவன் அப்பாவுக்கும் தானே புரோகிதராய் இருந்து நடத்தி வைக்கவேண்டிய  கல்யாணங்கள் இருக்கும். ஊரார்  பத்திரிகை கொடுத்துப் பாக்கு வைத்து விட்டு சென்றிருப்பார்கள். ஆக அவன்  அம்மாதான் வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் போய் வரவேண்டியிருக்கிறது.

விடிந்தால் திருமணம். மாலையில் ரமணியின் புல்லாங்குழல் கச்சேரி ஏற்பாடு ஆகியிருந்தது.. கல்யாண வீட்டில் ஜானுவாச டிபன் சாப்பிட்டவர்கள் கச்சேரி கேட்டுக்கொண்டு இருந்தார்கள். அவன் அம்மாவும் ஒரு சேரில் அமர்ந்து  புல்லாங்குழல் கேட்டுக்கொண்டிருந்தாள். மாப்பிள்ளையின் தந்தை  பெயர் பெற்ற வயலின் வித்வானாம். அம்மா கல்யாண மண்டபத்தில்தான்  இவைகள் எல்லாம் கேள்விப்பட்டாள். எம் எஸ். சுப்புலட்சுமியோடு அமெரிக்கா சென்று கச்சேரி வாசித்தவர். பெயர் வயலின்  தியாகராஜன் என்று பேசிக்கொண்டார்கள். எம் எஸ் அம்மாவும் அவர் கணவர் சதாசிவமும் கல்யாண ரிசப்ஷனுக்கு வந்திருந்தார்கள்.தன்னுடைய மருமகளின் தந்தை அவர்களோடு பேசிக்கொண்டே கச்சேரிப்பந்தலில் சோஃபாவில் அமர்ந்திருந்தார். அவன்  அம்மா அவர்களைப்பார்த்துக்கொண்டார். சென்னை நகரின் இசைக் கலைஞர்கள் பலர் ரிசப்ஷனுக்கு வந்திருந்தார்கள். கல்யாண மண்டபத்தை அப்படியும் இப்படியும் பார்த்துக்கொண்ட அம்மா இங்கெல்லாம் வருவதற்கு  தனக்கு என்ன தகுதி இருக்கிறது என்றும்  எண்ணிப்பார்த்தாள்.

திடீரென்று அரங்கத்தில் போலிசார்களின் வருகை அதிகமானது. இப்படியுமா, என்ன விஷயம், யாரோ ஒரு பெரிய வி ஐ பி வரவிருப்பதாகப் பேசிக்கொண்டார்கள். கூடுதல் சங்கடமாக உணர்ந்தாள். தன்னுடைய மகனைத்தேடினாள். எங்குதான் சென்று இருப்பானோ  அவன். யோசனையில் இருந்தாள். மாலை டிபன் போண்டா, கேசரி சாப்பிடும்போதே அவன் நினைப்பு வராமலா வந்ததுதான். அவன் ஏதேனும் முக்கிய வேலையாகப் போய் இருக்கலாம். சமாதானம் சொல்லிக்கொண்டாள். ஜானுவாச டிபன் அம்மாவுக்கு மிகவும் பிடிக்கும். அதைப்பற்றி பிரஸ்தாபித்தும் பேசக்கூடியவள்தான். அன்று மாலை கிடைக்கின்ற  ஃபில்டர் காபிக்கு இணையாய் வேறு எங்கும் பார்க்க முடியாதுதான். ஆனால்  அந்தஸ்த்தில் பொருத்தமே இல்லாது  ஒரு சம்பந்தம்  மகனுக்குச் செய்தது  தவறுதானோ என்று எண்னினாள். இதில் அம்மா தன் கருத்துச்  சொல்ல இடம் இருந்ததா என்ன, யார்  அந்த அம்மாவிடம் யோசனை கேட்டார்கள்.  

எப்படியோ தன் மகனைக்கண்டுபிடித்து விட்டாள் அம்மா. அவனே அம்மாவைத்தேடியும்  வந்து விட்டான். அவன் இந்த இடத்தை விட்டு நகராதே என்று கண்டித்துச்சொல்லிவிட்டுப்போன அதே இடத்தில்தான் அவன்  அம்மா இன்னும் அமர்ந்திருக்கிறாள்.

‘டிபன் ஆச்சா அம்மா’

‘ஆச்சு. நன்றாக இருந்தது. நீதான் சாப்பிட்டாயோ இல்லையோ’

‘நான் கொத்தவால்சாவடி போயிருந்தேன். காய்கறி பழங்கள் இலைகள் வாங்க. அதற்கே நேரம் சரியாய்ப்போச்சு. டிபன் பற்றி எல்லாம் நினைக்கக்கூட தோன்றவில்லை’

‘இந்தப்பொறுப்புக்குத்தான் உனக்கு இங்கு இடம் கிடைத்துமிருக்கிறது’ மெதுவாகச்சொல்லிக்கொண்டாள்.

‘என்ன ஏதோ சொல்கிறாய்’

‘யாரோ வி ஐ பி வருவதாய்ப்பேசிக்கொள்கிறார்கள். அது யாரோ உனக்குத்தெரியுமா’

பேச்சை மாற்றிப் பேசினாள்.

‘பம்பாய்லேந்து ஒரு வி ஐ பி வறார். மஹாராஷ்ட்ரா மாநில  ஐ ஜியாம். என் ஆத்துக்காரிக்கு சித்தப்பா முறையாம்.ஏர்போர்ட் மீனம்பாக்கத்துக்கு  என் மாமனார் போயிருக்கார். சென்னை ஐ ஜி ஏர்போர்ட்டுக்கு வருவார். அவர்தான்  அந்த வி ஐ பி  யை  கூட்டிண்டு வருவாராம். அங்கங்க போலிசு வந்துருக்கு பாத்தியா. ரெண்டு ஐ ஜி இங்க வரப்போறா. இன்னும் பத்து நிமிஷத்துல வி ஐ பி எல்லாரும் வந்துடுவா’

‘எம் எஸ்  சுப்புலடசுமி , அவர் புருஷர் சதாசிவம் வந்துருக்காங்க பாத்தியா’

‘பாத்தேன்.  புது சம்பந்தியா வர்ர மாமா  அந்த  எம் எஸ்அம்மாவோட பல கச்சேரிகள்ள வயலின் வாசிச்சி இருக்காறாம். அதான் அவா வந்துருக்கா’ அவன் தன் அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.

பந்தலில் சைரன் ஒலி கேட்டது. வி ஐ பிக்கள் வந்து விட்டார்கள். காவல் அதிகாரிகள் அனேகம் பேர் வந்திருந்தனர்.  பந்தலில் ஒரு சல சலப்பு.       சில நிமிடங்கள் சென்றன. கச்சேரி  மேடை  அருகே மஹாராஷ்ட்ர  ஐ ஜியும் சென்னை ஐ ஜியும் அருகு அருகே அமர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்கள். ரமணியின் புல்லாங்குழல் கச்சேரி  சிறப்பாகப் போய்க்கோண்டிருந்தது.  அவன் அம்மாவுக்குக் கர்நாடக சங்கீதம் தெரியும். பெரிய பாண்டித்யம் என்றெல்லாம் சொல்ல முடியாது.  அவன் அம்மாவுடைய அம்மா இருந்தவரை சங்கீதம் கற்றுக்கொண்டாள். அம்மாவுக்கு அம்மா சீக்கிரமே காலமாகிவிட்டபடியால் சங்கீதம் கற்றுக்கொள்வது நின்று போனது.  அவன் அம்மா சிதம்பரம் நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் எத்தனையோ கச்சேரிகள்  கேட்டிருப்பாள்.

இப்போது மாதிரி விஞ்ஞான முன்னேற்றம்  எல்லாம் ஏது. இன்று உலகமே மாறிக்கிடக்கிறது. க்ளோபல் மீட்  எல்லாம் லேப்டாப்பில் முடிந்து விடுகிறது.  வேப்ப மரத்தின் கிளையில்  மெகா போன் புனல் கட்டி,   மாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் போது பெங்களூர் ரமணியம்மாள் வேல் முருகா பாட்டும், மதுரை சோமுவின் தேவர் மலை பாட்டும் கேட்டதும் ஒரு காலம். அதுவே  ஆகப்பெரிய காரியமாக உணர்ந்த காலம் ஒன்று இருந்தது.  எப்போதோ  காலமாகிவிட்ட  எம் எஸ் அம்மா  பாடும் குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா எனும் ராஜாஜி  பாட்டை  எத்தனை  முறை ஆனாலும்  உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கேட்க முடிகிறது. அறிவியல் இன்னும் என்ன என்னத்தை கொண்டுதருமோ. அவனுக்கு அவன் அம்மாவைப்பார்த்தால் கருப்பு எம் எஸ் என்று சொல்லத்தோன்றும். ஆனால் வெளியில்  எல்லாம்  அப்படிச் சொன்னதில்லை.

பம்பாயிலிருந்து வந்த  ஐ ஜியும் அவர் குடும்பமும் மாப்பிள்ளையும் பெண்ணையும் பார்த்து  வாழ்த்து  சொன்னார்கள். உள்ளூர் ஐ ஜி  விடை பெற்றுக்கொண்டார். போலீசு கெடுபிடி குறந்தது. ஓரிருவர் அங்கங்கு நின்று கொண்டிருந்தார்கள். ரிசப்ஷன் செக்‌ஷன் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. புல்லாங்குழல் ரமணி தன் கச்சேரியை முடிவுக்குக் கொண்டு வந்தார். விஐபி க்கள் விடைபெற்றுச்சென்று கொண்டிருந்தார்கள்.  வந்த விருந்தினர்கள்  டின்னர் சாப்பிட்டு விட்டு செல்லவேண்டும்  என்கிற வேண்டுகோளை அவன் மைக்கில் ஓங்கிச் சொல்லிய வண்ணமே இருந்தான்.

தேங்காய் பழம் வெற்றிலை அன்பளிப்பு ஒரு சிறிய தஞ்சாவூர் தட்டு என ஒரு பெரிய பிளாஸ்டிக் பேக் ஒன்றை மண்டப வாயிலில் விடைபெற்றுச்செல்பவர்களுக்கு  வழங்கிக்கொண்டிருந்தார்கள். அவன் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து எல்லாவற்றையும் கவனித்த வண்ணம் இருந்தான். அவன் அம்மா அவனை சாப்பிடக்கூப்பிட்டுக்கொண்டிருந்தாள். அவன் மனைவியோடு வந்து அம்மாவை இரவு விருந்துக்கு அழைத்துப்போனான். அனேகமாக மண்டபம் பாதி காலியாகி விட்டிருந்தது.  விடிந்தால் முகூர்த்தம்.  அனேகமாக விருந்தினர்கள் மட்டுமே பாக்கியிருந்தார்கள். அதிலும் உள்ளூர் உறவுகள் வீட்டிற்குப்போய் காலை வருவதாய்ச் சொல்லிச் சென்றார்கள்.

அவன் மாமனார் மாமியார் இருவரும் மகாராஷ்ட்ர ஐ ஜி அவர் சம்சாரத்தை இரவு விருந்துக்கு அழைத்துப்போனார்கள்.

அவனும் அவன் மனைவியும் தாயாரும் இரவு விருந்துக்குச் சென்றார்கள். தஞ்சாவூர் வாழை இலையில்  தட புடல் விருந்து.   கும்பகோணம் சாட்டைமாமா   சமையல்.  எதை விடுவது எதைத்தின்பது என்கிற மாதிரிக்கு இருந்தது.  அவன் மாமனாருக்கு ரிசப்ஷன் அன்று  பஃபே சிஸ்ட விருந்து வழங்குவதில் பிரியம் இல்லை. சாப்பாட்டு பந்தியைச் சரியாகக் கவனிக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையோடு இருந்தார்.

ஐஜியும் அவர் மனைவியும் உணவருந்தி முடித்து ஐஸ் க்ரீம் இத்யாதிகள் சுவைத்துக்கொண்டு  இருந்தார்கள். பிறகு  தாம்பூலம் போட்டுக்கொண்டு ஹாயாய் உட்கார்ந்திருந்தார்கள். அவன் மாமனாரும் மாமியாரும் அவர்கள் அருகே நின்று சிரித்து சிரித்துப் பேசிக்கொண்டே இருந்தார்கள்.

அவன் விருந்து முடித்துத் தன் தாயோடு தனது மனைவியை அழைத்துக்கொண்டு  நடந்து வந்து கோண்டிருந்தான்.

‘இதுதானே பெரிய  உங்க பொண்ணு’ ஐ ஜி விசாரித்தார்.

அவன் மனைவி ஐ ஜியின் கைகளைப் பிடித்துக்கொண்டார்.

‘என் கல்யாணத்துக்கு நீங்க வரல. கிஃப்ட் அனுப்பிட்டு இருந்திட்டிங்க’ என்றாள் அவன் மனைவி. அம்மா ஒரு ஓரமாய் ஒதுங்கி நின்றாள். அவன் தன் மனைவியோடு நின்றுகொண்டிருந்தான். அவன் மாமாவும் மாமியும் அவர்கள் அருகே வந்தார்கள்.

‘இவர் தான் மொத மாப்பிள்ளை, பிசினஸ் பண்றார் என்ன மாதிரி.  இது அவர் அம்மா’

அம்மா தன் இரு கைகளாலும் வணக்கம் சொன்னாள்.

‘அப்பா வரலையா’ என்றார் ஐ ஜி.

‘வர முடியல’ அவன் சொன்னான்.

‘ ஊரு சொல்லலயே’

‘ஊரு தருமங்குடி. சிதம்பரத்துக்கும் முதுகுன்றத்துக்கும் நடுவுல இருக்கற கிராமம். மாப்பிளக்கி பிசினஸ் சென்னையில. அதான் இந்தக்கல்யாணம் நிச்சயத்துக்கும்  காரணம்’

‘என்னது தருமங்குடி’

‘ஆமாம்’ என்றார்  அவன் மாமனார்.

‘ நீங்க தருமங்குடிக்கு போயிருக்கிங்களா’

‘ஆமாம் போகாம முடியுமா’

‘ வளையமாதேவி தெரியுமா’ ஐ ஜி கேட்டுக்கொண்டே போனார்.

‘ஏன் என் பக்கத்து ஊரு அது’ அவன் சொன்னான்.

‘அங்க  வேதநாராயணப் பெருமாள் கோவில் தெரியுமா’

‘ ஏன் தெரியாமலா, அண்டையூர் தானே’

‘அதுதான்  உங்க அம்மாவா’

‘ஆமாம்’

‘அம்மா இங்க வாங்களேன்’

அம்மா தயங்கித்தயங்கி ஐ ஜியிடம் வந்து நிறாள்.

‘உங்களுக்கு வளையமாதேவி கோவில் சந்நிதில சத்திரம் தெரியுமா’

‘தெரியாம என்ன ஆயிரம் தடவை போயிருப்போம்’

ஐ ஜி மெதுவாக  சிரித்துக்கொண்டார். அவன் மாமனாரும் மாமியாரும் இங்கு நடக்கும் சம்பாஷணையைக் கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தனர்.

‘மாமி உங்களுக்கு சத்திரம் துரைசாமி அய்யரை தெரியுமா’

‘நல்லா தெரியும். அவர் சத்திரத்துல விளக்கேத்தி வைப்பார்.  சத்திரத்து வாசல்ல ஒரு பெரிய டூம் போட்ட லாந்தர் விளக்கு  இருக்கும். அது ஒரு கருங்கல் தூண் மேல இருக்கும்’

‘நான் சத்திரம் துரைசாமி அய்யர் புள்ள’

‘ என்ன,  அப்படியா,  அவன் பேரு ராமுன்னா.  ஒரே புள்ள. எஸ் எஸ் எல் சி  படிச்சானோ படிக்கலையோ தெரியல.  செறுவயசுலயே ஓடி போயிட்டானே. அந்த விசாரத்திலேயே அந்த தொரசாமி அய்யர் காலமாகி போனார். அந்த சத்திரம்  தொரசாமி அய்யர் புள்ளயா நீங்க’

‘ஆமாம். ஆமாம்.   எம் பேரு, டி. ராமச்சந்திரன்.  நான் அப்பாவோட வளையமாதேவி சத்திரத்துல இருந்தேன். அம்மாதான் எப்பவோ காலமாயிட்டா.’

அவன் அம்மா அவரை மீண்டும் ஓர் முறை  அழுத்தமாய்ப் பார்த்துக்கொண்டாள்.

’கடலூர்  மஞ்சகுப்பம் மைதானத்துல மிலிட்டரிக்கு ஆள் எடுத்தா. நா அங்க எப்பிடியோ போனேன். அப்பா கிட்ட சொல்லாமயே  கெளம்பி வந்துட்டேன்.  மிலிடரிக்கு செலெக்ட் ஆனேன். அங்க ஸ்கூலு காலேஜ் எல்லாமே வசதியா கெடச்சிது. நா  விட்டது எல்லாம் படிச்சேன். படிச்சிகிட்டே இருந்தேன்.அப்புறம் எனக்கு வாழ்க்கை பூரா வட இந்தியாதான். மிலிட்டரி உத்யோகம். நல்லா படிக்க வாய்ப்பா அமைஞ்சிது. எனக்கு படிப்பு வந்துது.  பெரியவா ஆசீர்வாதம்.  மிலிடரிய விட்டு ரிடையர் ஆனேன். யூ பி எஸ் சிசர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதினேன். பாஸாயிட்டேன். போலீஸ் டிபார்ட்மெண்ட்ல டிஎஸ் பி ஆனேன். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா புரமோஷன். இப்ப  ஐ ஜி பம்பாயில’ புன்னகையோடு முடித்தார் ஐ ஜி.

‘நெஜத்த சொல்றயா ராமு’ உரிமையோடு அவன் அம்மா பேசினார்.

‘ என்ன ராமுன்னு  நீங்க கூப்பிடறது  பரம  திருப்தியா  இருக்கு.  நா சொன்னது எல்லாமே சத்தியம் மாமி’

‘சினிமாக்கதை மாதிரி இருக்கு’

‘ஆமாம்.  எப்பவும் கதையவிட நெஜம்தான் சுள்ளுன்னு இருக்கும்’

‘ஊர் பக்கம் வரவேல்லியே’

‘ என் அப்பா காலம் ஆயாச்சு. எனக்கு அங்க என்ன வேல இருக்கு’

‘அப்பா  காலத்துல எங்களுக்கு  சாப்பாட்டுக்கே கஷ்டம். ரைட்டர் துரைசாமி அய்யர் பொண்ணுதான நீங்க’

‘எங்கப்பாவ தெரியுமா உங்களுக்கு அவர் பேரும் உங்கப்பா பேருதான்’

‘அப்பா சொல்லியிருக்கார். கேள்விப்பட்ருக்கேன். எதோ அரச பொரசலா ஞாபகம் இருக்கு’

ஐஜி உட்கார்ந்திருந்தவர் சட்டென்று  எழுந்தார். அவர் மனைவியை அழைத்தார். ‘ தோ பாரு நா  பொறந்து பையனா  வளந்த ஊர்காரா. என் அப்பாவ தெரிஞ்ச மனுஷா. என் அப்பாவையே நேரா பாக்கற மாதிரி இருக்கு. எங்கப்பா இருக்கும்போது ஒரு வேள சாப்பாட்டுக்கே கஷ்டம். பெருமாள் கோவில் சத்திரத்துல ஜாகை. சத்திரத்த கூட்டி பெறுக்கி  சாயந்திரம் ஆனா,  ஒரு டூம் கண்ணாடி கூண்டு  உள்ள இருக்குற விளக்கு ஏத்தற வேல அப்பாக்கு. பிள்ளைமார் வீடுகள்ள ஒரு கட்டள குடுப்பா. அரிசி பருப்பு சாமான்கள் அப்ப அப்ப வரும். ஒரு கூடையை எடுத்துப்பேன். அப்பா என்னையும் கூட்டிண்டு போவார். பிச்சபுள்ளன்னு ஒரு பெருமாள் கோவில் டிரஸ்டி இருந்த காலம். வருஷம்  எவ்வளவோ ஆயிடுச்சி. இப்ப யாரு  என் அப்பாவ ஞாபகம் வச்சிருப்பா. அப்பாவோட நான்  தருமங்குடி  இவா ஆத்துக்கு அனேகதடவை போயிருப்பேன். தருமங்குடி பக்கமா இருந்துது.’

ஐ ஜியும் அவர் சம்சாரமும் அம்மாவிற்கு நமஸ்காரம் செய்தனர்.  அவன் அம்மாவிடம்  அவர்கள் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டார்கள்.

‘நா எதாவது உங்களுக்கு செய்யணுமா இருந்தா சொல்லுங்க’

‘நீங்க வளையமாதேவி சத்திரத்த பெருமாள் கோவில உங்க அப்பாவ  மறக்காம ஞாபகம் வச்சிண்டு பேசறேள். இதவிட எனக்கு என்ன வேணும். தருமங்குடி எங்க வீட்டுக்கு பின்னால சத்திரம் தொரசாமி அய்யருக்கு விட்ட நெலம்னு இருக்கு.  நஞ்சை கால் காணி. அதுல சாகுபடி செஞ்சி வர்ர நாலு மூட்டை நெல்லுதான்  உங்க  அப்பாக்கு வருஷ கூலியா  பெருமாள் கோவில் டிரஸ்டி பிச்சபுள்ள குடுப்பார்.  நா சொல்ற இது எல்லாம்  அந்தக்கால குப்பை’ என்றாள் அவன் அம்மா.

அவனும் அவன் மனைவியும்  ஐ ஜியை வணங்கி நின்றார்கள்.

‘சவுக்கியமா இருக்கணும் குழந்தைங்க’ ஐ ஜி  தன் மனைவியோடு  அவர்களை  ஆசீர்வாதம் செய்தார்.

அவன் மாமனாரும் மாமியாரும் ஐ ஜி க்கு  பின்னே இத்தனை பெரிய விஷயம்  மறைந்து இருப்பதை  இப்போதுதான் தெரிந்துகொள்கின்றனர்.

அவன் அம்மா அந்தக்கணம்தொட்டு   தலை உயர்த்தி  நடக்க ஆரம்பித்தாள்.

-------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment