அரங்கக் கவிதைகள்
15/11/24
1 காலம்
மாநகரை ச்சுற்றித்தான்
வருகிறான் போகிறான்
வந்து வந்து போகிறான்
பூஞ்சை யானது கண்ணும் காதும்
பேசி பேசிச் சிரிக்கிறான்
உடம்போ சுகமில்லை
வந்தவனும் முடமானாள்
வாய்த்ததுவும் பொய்த்துப்போனது
கூடிப் போனது வயது
கேட்டுக்கொண்டா கூடுமது
சட்டையே செய்யாது
கழிகிறது காலம்
அது ஒன்றே எவரையும்.
2. தோற்றம்
காசும் பணமும்
பொருட்டா எனக்கு
நீட்டு நீட்டாய் பேசலாம்
தோற்றம் மட்டுமே அது
காமம் இற்றுக்கொண்ட தாய்
கர்ஜனைகள் செய்யலாம்
தோற்றம் மட்டுமே அது
கோபமே வாராது எனக்கு
சத்தியம் செய்யலாம் அடித்து
தோற்றம் மட்டுமே அது
என்னைப் புகழ்தல்
எனக்குப் பிடிக்காது எப்போதும்
வீம்புக்குப் பேசலாம்
தோற்றம் மட்டுமே அது
பொறாமையா அதெல்லாம்
நான் படுவதேயில்லை
தோற்றம் மட்டுமே அது.
3. எப்படி
வாழும் புவியில்
ஓர் உயிரினம்
இன்னொரு உயிரினத்திற்கு உணவு
தாவரம் விலங்கோ
யாதும் உயிர்தானே
ஆகக்கொல்.
கொன்றால் மட்டுமே
தொடரும் வாழ்க்கை
கொலைகளம்தான்
இப்பூலகம்
அய்யமேஇல்லை
அன்பும் அருளும்
கருணையும் கடவுளின்
பண்பாய்க் கொள்வதெப்படி.
4.நாடும் நடப்பும்
நாடு விடுதலை யடைந்து
எழுபத்தேழு ஆண்டுகள்
உருண்டோடின
மக்களாட்சி நடக்கிறதாம் இங்கு
மதமும் சாதியும் இனமும்
இணைந்தும் பிரிந்தும்
தேர்தலைச் சந்திக்கின்றன
பணப்பட்டுவாடா அது
அதன் வேலை செய்கிறது
அம்பானி யும் அதானி யும் இன்னும்
அந்த வகையறாக்களும்
ஓகோ வென்று கொழிக்கிறார்கள்
நீதிமன்றங்கள் சப்பைத்தீர்ப்பு வழங்குகின்றன
அப்படியும் இப்படியும்.
அரசுத்துறை நிறுவனங்களைத்
திட்டம் போட்டு அழிக்கும்
சதிச்செயலை
ஆட்சிபுரிந்த எல்லோரும்
செய்தார்கள் செய்கிறார்கள்
தனியார் வங்கிகள் தலைதூக்கி ஆள்கின்றன
அரசு வங்கிகள் அன்றாடம் நொண்டி
அடிக்கின்றன
அரசு மருத்துவமனைகள்
பேர் கெட்டுப்போகின்றன
தனியார்
மருத்துவச் சதிவணிகம்
கொடிகட்டிப்பறக்கிறது
எங்கள் தலைவர்கள்
ஆண்டுக்கு இருமுறை
தேசியக்கொடி ஏற்றி
டில்லிக்கு தலைநகரில்
பாப்கான் சாப்பிடுகிறார்கள்.
No comments:
Post a Comment