பாவம் அப்பா
’ சார் சார்’ என்று வீதியில் யாரோ என்னத்தான் கூப்பிடுகிறார்கள். தோட்டத்தில்
மாமரத்துக்குக் கீழாக நின்றுகொண்டிருந்தவன் சட்டென்று தெருவுக்கு வந்தேன். கார்குடல் அருணாசல வாத்தியார்தான் நின்றுகொண்டிருந்தார்.
அவருக்குப் பக்கத்தில் என் அப்பா.
‘ பூதாமூர் ஸ்டாப்பிங்கல இறங்கின
உங்கப்பா உங்க வீட்டைத்தான் தேடியிருக்காரு எப்படியோ எங்க தெருவுக்கு வந்துட்டாரு. அதான் நானே
கையோட அழச்சிண்டு வந்தேன்’
என் அப்பாதான் கையில் ஒரு மஞ்சள் பையோடு வந்திருந்தார்.
அது நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. அவருடைய வயதுக்குத் தூக்க முடியாத சுமை. எப்போதும் சும்மாவே வரமாட்டார்.
தருமங்குடி வீட்டில் கிடைக்கும் தேங்காய் கருவேப்பிலை வாழைக்காய் நார்த்தங்காய் எலுமிச்சங்காய்
என்று பையில் திணித்து வைத்துக்கொண்டுதான் என் வீட்டிற்குப்புறப்படுவார். நான் தருமங்குடி போனாலும் அப்படித்தான் என் குடும்பத்திற்குத் தேவை என்று தோன்றுவதை அவரே சேகரிப்பார். என் பையை நிரப்பி நிரப்பி வைத்துப் பேருந்து நிறுத்தம்வரை
தூக்கிக்கொண்டு நடந்தே வருவார். பேருந்து நிறுத்தத்திற்கு நடந்துதான் வரவேண்டும். அங்கு வேறு எந்த வசதியும்
கிடையாதே.
‘வாப்பா, வா எங்க போயிட்ட நீ, நம்ம தெரு
அடையாளம் உனக்கு தெரியலயா’
‘நீ இருக்குற தெருவுல ஆரம்பத்திலேயே ஒரு போஸ்ட் ஆபிசு இருக்கும்.
அந்த செகப்பு போர்டை , தபால் பெட்டியைப் பாத்துண்டுதான்
தெருவுக்குள்ளே வருவேன்.இன்னிக்கு அத எல்லாம்
காணல. கொஞ்சம் குழப்பம். அதனால அடுத்த தெரு, அடுத்ததெருன்னு பாத்துண்டே போனேன். நாலாவது தெருவுக்கே போயிட்டேன்.அங்கதான்
இந்த சார் என்ன பாத்தாரு’
‘அந்த போஸ்டாபீசை
இப்பதான் எடம் மாத்தி இருக்கா. அதனாலதான்’ நான் அப்பாவுக்குச் சொன்னேன்.
உடன் அருணாசல வாத்தியார் ஆரம்பித்தார்,
‘புது மனுஷா ஒத்தர்
தெருவுல வர்ரதை பாத்தேன். தலயில சிண்டு, இடுப்புல பஞ்ச கச்சம் மேல அங்க வஸ்த்ரம் நெத்தில வெண்டக்காய தலை கீழா நிக்க வச்ச மாதிரிக்கு சந்தனம்.
இந்த பெரியவர் ஒண்ணு என் ஆத்துக்கு வரணும் இல்ல உங்காத்துக்கு வரணும். நாம ரெண்டுபேர்தான்
இந்த முதுகுன்றம் நகரத்து தெற்குப் பெரியார்
நகர்ல இப்பிடி அப்பிடி
இருந்துண்டு இருக்கம்.
பெரியவர் ஏதோ திண்டாடற மாதிரி தெரிஞ்சது. ‘யாரத் தேடறேள்’ னு கேட்டேன்.
’என் பையன் வீட்டைத்தேடறேன்.
அவன் பேர் ராமு. அவுனுக்கு டெலிபோன் ஆபிசுல வேல’ன்னார். அப்பறம் என்ன?
அது நீரேதான். ‘ பெரியவரை வாங்கோ என் பின்னாடின்னேன்’ வந்தார். கொண்டு வந்து
உங்காத்துல விட்டுட்டேன்’ அருணாசல வாத்தியார் முடித்துக்கொண்டார்.
‘வாங்கோ உக்காருங்கோ ஒரு வாய் காபி சாப்டுட்டு போலாம்’
‘இல்ல நேக்கு தலைக்குமேல வேல இருக்கு’ அவர் கிளம்பி விட்டார். நான் அப்பாவை வீட்டுக்குள்ளாக
கூட்டிப்போய் உட்காரவைத்தேன்.
’வாங்கோ மாமா’ அடுப்படியில் வேலையாய் இருந்த என் மனைவி அப்பாவை வரவேற்றாள். அப்பா தான் கொண்டு வந்த மஞ்சள்
பையை அவளிடம் கொடுத்து,’ இது எடுத்துகோ’ என்றார்.
‘இது எல்லாம் தூக்கிண்டு எதுக்கு அவஸ்தை’
‘எனக்கு இதுலதான் சந்தோஷமே’
‘உங்களுக்கு வயசு ஆகறது நீங்க ஒண்டியா பஸ் ஏறி வர்ரதே பெரிசு’
அவள் பேசி முடித்தாள்.
‘பேரக்குழந்தைகள் எங்கே’
‘ரெண்டும் டியூஷனுக்கு பூதாமூர் கோர்ட்டர்ஸ்க்கு போயிருக்கு.
வரணும். வர்ர நேரம்தான்’ மருமகள் மாமனாருக்குப்பதில் சொன்னாள்.
‘ஏய் ராமு இங்க வா’ அப்பா குரல் உயர்த்திப்பேசினார்.
‘நா தினமும் தருமங்குடில
சாமிதுரை பழைய பிரெசிடெண்ட் ஆத்துக்கு போய் தினமலர் தமிழ் பேப்பர் படிக்கறது பழக்கம். உனக்குதான் தெரியுமே. சேதி ஒவ்வொண்ணா படிச்சிண்டே வந்தேன். திடீர்னு பாத்தா
டெலிபோன் ஆபிசர் வீட்டில் திருட்டுன்னு போட்டிருந்தது. நா பாட்டுக்கு படிச்சிண்டே போறேன். உம்பேரு உன் வீடு எல்லாம் வர்ரது. இது என்னடா விபரீதம்னு படிச்சேன். தங்க வளையல் வெள்ளி சாமான்கள் ரொக்கம் ஐயாயிரம் களவு போனதுன்னு
எழுதியிருக்கான். சம்பவத்தண்ணிக்கி ராத்திரி பத்து மணிக்குள்ள இத்தனையும் நடந்துருக்குன்னு
படிக்கும்போது பகீர்னு இருந்துது. மறு நாள் போலிஸ் நாய் வந்தது அது ஊர சுத்தி சுத்தி போச்சின்னு பேப்பர்ல எழுதியிருந்தா . ஆத்துக்கு வந்து உன் அம்மா கிட்ட
எதுவும் பேசவேயில்லை. வாயத் தெறந்து ஒரு வார்த்த இத பத்தி யார் கிட்டயும்
நான் கேட்கவுமிலை. பட்டுன்னு கெளம்பிட்டேன் இங்க வந்துட்டேன்
. ’ உங்கம்மா எங்க திடீர்னு
போறேள்னா’
’பக்கத்துல கத்தாழை
கிராமத்துல ஒரு காமன் கோவில்ல ’ தீ வைபவம் ’ நான் தானே அந்த ஊருக்கும் புரோகிதர். அத
பண்ணியும் வைக்கணும். அது முடியறதுக்கு ராத்திரி பத்து மணிகூட ஆயிடும்னு சொன்னேன்.’
‘சரி ஆகட்டும் ’ன்னா அம்மா.
தான் எடுத்து வந்த மஞ்சள் பையை மட்டும் எப்படி நிரப்பி எடுத்துவந்தாரோ அப்பா என்று
நான் யோசித்துக்கொண்டிருந்தேன்.
’நா பொறப்டு வந்துட்டேன்.
உன்ன நேரா பாத்து விஜாரிக்கணும். என்னதான்
இங்க நடந்துதுன்னு தெரிஞ்சிண்டு போகணும்னு வந்தேன். நேக்கு மண்ட வெடிச்சுடும்
போல இருந்துது இது என்ன கொடுமைடா’
‘ அப்பா உனக்கு
இது எல்லாம் தெரிய வேண்டாம்னு இருந்தோம். நேத்துதான் உனக்கு சதாபிஷேகம் நடந்துது. திருமுதுகுன்றம் வடக்கு கோட்டை வீதி கோமுட்டி செட்டியார்
கல்யாண மண்டபத்துலதான். ஆனா பாரு ரெண்டு நாளுக்கு
மின்னாடி என்னாத்துல இந்த திருட்டு நடந்துருக்கு. நான், என் ஆம்படையா ,என் அண்ணா, மன்னி எல்லோருமா சிதம்பரம்
போய் உன் சதாபிஷேகத்துக்கு ஜவுளி வழக்கமா
போடற அதே கஸ்தூரிபாய் கடையில போட்டம். செதம்பரம் மாதிரி திருமுதுகுன்றத்துல பல தினுசுகள்
கெடைக்காது. சிதம்பரம்னா புடவைகள் பலதும் இருக்கும்னுதான் போனம். எல்லாமே இருந்துது. மத்தியானமாதான் கெளம்பிப் போனம். பர்சேஸ் எல்லாம் முடிச்சிண்டு அங்கயே தெற்கு சந்நிதி லட்சுமி பவன்ல டிபன முடிச்சிண்டம்.
தெற்கு வீதியிலயே இந்தியன் பாங்க்கண்ட திருமுதுகுன்றம்
பஸ்ச புடிச்சம். எடமும் இருந்துது. அண்ணா மன்னியும் தருமங்குடியில எறங்கினூட்டா. நாங்க
திருமுதுகுன்றம் வந்துட்டம். வாங்கின ஜவுளிய
எல்லாம் நாலு கட்டை பையில அடச்சி கொண்டுனு
வந்தம். பூதாமூர்ல எறங்கி நடந்தே ஆத்துக்கு
வந்தம். நம்ம ஆத்து வாசல்ல கேட்டு சும்மா சாத்தியிருந்தது.
அத திறந்துண்டு போய் முன்னால இருக்குற நாலு
படி ஏறினேன். பேண்ட் பாக்கெட்லேந்து வீட்டு
சாவிய எடுக்கறேன். வராண்டா வாசல்ல இருக்குற தள்ளு கேட்டுல பூட்டிட்டு போன
திண்டுக்கல் பூட்ட யே காணல்ல. ஆகா என் கையில சாவி இருக்கு. இது என்னடா விபரீதம்னு சொல்லிண்டே இரும்பு
கேட்ட தள்ளி விட்டுட்டு வெராண்டாவ தாண்டி போறன். நெலக்கதவு உள் பக்கமா தாப்பா போட்டுருக்கு.
போச்சிடா ஆத்துல யாரோ இருக்கா. கள்ளன் தான் இருக்கான்னு நேக்கு
தெரிஞ்சி போச்சி. இப்ப என்ன பண்றதுன்னு. தோட்டத்து பக்கமா போய் பாத்தேன். அங்கயும்
உள் பக்கமா கதவு தாப்பா போட்டபடி இருக்கு. எம் பொண்டாட்டிக்கு வெட வெடன்னு கை கால் நடுங்கிண்டு இருக்கு. நாங்க ஆத்துக்கு வந்தது, வாச கதவ தட்டினது, தோட்டக்கதவ
தட்டினது, எல்லாம் உள்ள இருக்குற திருடனுக்கு தெரிஞ்சி அவன் வெளில வர தயாராயிட்டான்.
எம் பொண்டாட்டி வாசல்ல இருந்த காலிங் பெல்லயும் நீட்டா
அடிச்சிட்டா. நானும் அவளும் ஜவுளி மூடட்டையோட வாசல்ல பக்கத்துல பக்கத்துல நிக்கறம்.
நிலக்கதவு பட்டுன்னு தெறந்துது. ரெண்டு திருடனுங்க சேப்பு ஜட்டிபோட்டுண்டு இருக்கான் கையில பிச்சுவா கத்தி. உடம்பெல்லாம் வெளக்கெண்ண தடவிண்டு
இருக்கான். மொகத்துல கருப்பு கர்சிஃப் கட்டிண்டு
இருக்கான். எங்க ரெண்டு பேரையும் பாத்து பள
பளங்கற கத்திய காமிச்சிண்டே ஓடிட்டானுக. நாங்க அப்பிடியே மரம் மாதிறி நிக்கறம்’
‘என்னடா சினிமால வர்ர மாதிரி இருக்கு. எனக்கே பயமா இருக்கேடா’
‘கேளு. கேளு. அதுக்குள்ள அக்கம் பக்கம் இருக்குறவா வந்தா.
கூட்டம் கூடிட்து. ‘ நீங்க வாசக்கதவு நாதாங்கிய இழுத்து மாட்டி
இருந்தா திருடனுங்க உங்க வீட்டுள்ளாரயே மாட்டியிருப்பானுக. போலிசுக்கு சேதி சொல்லி உடனே
வரவழிச்சம்னா திருட்டு நாயுவுள இங்கயே புடிச்சிருந்து இருக்கலாம். உட்டுட்டிங்க
நீங்க’ என்று எங்களுக்குக் குற்றப்பத்திரிக்கை
வாசித்தனர். ’
’திருடர்கள் கையில் பிச்சுவா கத்தியோடு இருக்கிறார்கள்.
சும்மா போவார்களா. ஒரு சொறுகு சொறுகியிருந்தால் என்ன ஆகியிருக்கும்’ நான் சொன்னேன்.
‘கொழந்தகள் ரெண்டும் என்ன பண்ணித்து அதுங்கள பத்தி ஒண்ணுமே சொல்லல
‘ ராத்திரி மணி பத்து. ரெண்டும் திண்டாடறது. அரகொற தூக்கத்துல முழிச்சிண்டு அலறிண்டு நிக்கறது’
‘அய்யோ பாவமே’ ஓங்கிக்கத்தினார் அப்பா.
‘எந்த பாவத்த பாக்கறது. என் சைக்கிள எடுத்துண்டு அந்த அர்த்த ராத்திரில டவுன் போலிஸ் ஸ்டேஷனுக்குப்
போனேன். என்ன நடந்ததோ அதச் சொன்னேன். போலிஸ் ஸ்டேஷனில் ரெண்டு போலிசுகாரர்கள் மட்டுமே இருந்தா. அவாளும்
அரைகுறை தூக்கம்தான். ஒரு போலிஸ்காரர் பெரிய மோட்டார் பைக் எடுத்துக்கொண்டு என் வீட்டுக்குப்புறப்பட்டார்.
’உங்க ‘வூடு எங்க’ என்னைக்கேட்டார்.
‘தெற்கு பெரியார் நகர் திருவள்ளுவர் வீதி மூணாவது தெரு.
மூணாவது வீடு. போஸ்டாபீசு இருந்தது மொதல் வீடு.
அடுத்து ரெண்டு மூணாவது வீடு. வீட்டு வாசல்ல ஜனம் கூடி நிக்குது.’ நான் அவருக்குப் பதில் சொன்னேன்.
‘நா பாத்துகறேன் நீங்க சைக்கிள்ள வாங்க. நா போயிகிட்டே
இருக்கன்’ என்றார் அந்த போலிஸ்காரர். அவர்
முன்பாகச் செல்ல அவர் பின்னே சைக்கிளில் தொடர்ந்து
வந்தேன். என் வீட்டுக்கு வந்த போலீஸ்காரர் வீட்டைச் சுற்றி வந்தார்.
வாயில் கதவைப் பார்த்தார்.’ திருடன் ரூம்ல
நொழஞ்சிதான் வேல பாத்துருக்கான் அந்த பீரோவயும் தொறந்து இருக்கான்’
‘ஆமாம் சார்’
‘இப்ப என்ன என்ன களவு போச்சுது ’ தொடர்ந்தார்.
‘ஐயாயிரம் ரொக்கம், ரெண்டு பவுன் வளையல் கொஞ்சம் வெள்ளி
சாமான்’ என்றேன்.
‘பீரோ சாவி எங்கிருந்துது’
‘பீரோ மேலயே இருந்துது’ நான் பதில் சொன்னேன்.
‘பீரோவ பூட்டி அந்த சாவிய மேல வச்சா என்னா அருத்தம்’
‘தொறக்க கொள்ள சவுகரியமா இருக்குமேன்னு அப்பிடி வக்கறது’
‘பேசுறது நல்லா யில்லயே. தப்பா இருக்கே. பீரோ சாவிய நீங்க வேற எடத்துல எங்கயாவது ஒளிச்சில்ல வக்கணும்’ கோபமாய்க்கேட்டார்.
‘வக்கிலயே சார்’
பயந்துகொண்டே சொன்னேன்.
‘வளையலு வாங்குனதுக்கு நகைக்கடை ரசீது இருக்கா’
‘அது எப்பவோ வாங்குனது. ரசீது எல்லாம் என்கிட்ட இருக்காதுங்க’
’தங்க வளையல் ரெண்டு
களவு போயிடுச்சினு நீங்க சும்மா கூடம் சொல்லுலாம்ல’
‘அப்பிடி சொல்லுலாங்களா’ நான்தான் இழுத்துச் சொன்னேன்.
‘வெள்ளந்தியா பேசுறீங்க சரி நாளைக்கி காலையைல வந்து களவு போனதுக்கு கம்ப்ளெய்ண்ட் எழுதி குடுங்க. நா கெளம்புறேன். இப்பக்கி பெட்ரோலுக்கு மட்டும் ஒரு ஐம்பது ரூபா குடுங்க’ என்றார்.
என்னிடம் சட்டைப்பையில் பார்த்தேன். அஞ்சோ பத்தோதான் இருந்தது.
என் மனைவி வீட்டு வாயில் கேட் ஓரமாய் ஒரு ஐம்பது
ரூபாய் நோட்டு கீழே கிடந்தது என்று சொல்லி
அந்தத் திருடன் விட்டுப்போன பணத்தை என்னிடம்
கொடுத்திருந்தாள். அதைப் போலிசுகாரரிடம் கொடுத்தேன்.
‘திருடனுவ ஓடகுள்ள
வுட்டுட்டு போனதா’ என்றார். வாங்கிக்கொண்டார்.
மறு நாள் போலிஸ் மோப்ப நாய் கடலூரிலிருந்து
ஒரு வேனில் வந்தது. கை ரேகை நிபுணர்கள் இருவர்
கூடவே வந்தனர். ரெண்டு மணி நேரம் பீரோவைக் குடைந்தனர். கள்ளனின் கைரேகை எடுப்பதாய் ஆங்காங்கு வெள்ளைப் பவுடரை இரைத்தனர். குறிப்பேட்டில்
ஏதோ
சில எழுதிக்கொண்டனர். போலிஸ் நாய் வேகம் வேகமாக என் வீட்டிலிருந்து ஓடியது. முதுகுன்றம்
வண்ணார் குடியிருப்புக்குச் சொந்தமான ஒரு மாரியம்மன்
கோவில் வாசலில் போய் நின்றது. அதற்குப்பிறகு திருடர்கள் நடந்து செல்லவில்லை. ஏதோ வாகனத்தில் ஏறிச்சென்றுவிட்டார்கள்
என்கிற ஒரு சேதி மட்டும் தெளிவாய்ச் சொன்னார்கள். நாய்க் கதை அவ்வளவே .
அப்பாவின் கண்கள் கலங்கியிருந்தன. அவர் கண்களைத் துடைத்துக்கொண்டார்.
‘கிரகசாரம்’ என்றார்.
‘மறுநாள்தான் உனக்கு சதாபிஷேகம். கோமுட்டி செட்டியார் மண்டபத்தில். எல்லா ஏற்பாடுகளும்
செய்தாயிற்று. மேளக்காரன் சமையல்காரன் சாஸ்திரிகள் எல்லோருக்கும் அட்வான்ஸ் கொடுத்து இருக்கிறோமே. பிறகென்ன ? இந்தக்
களவுபோன விஷயம் யாருக்கும் தெரியவேண்டாம் என்று
நானும் என் மனைவியும் முடிவெடுத்தோம். உன் எண்பது சாந்தி விழா நன்றாகவே நடந்தது. வைபவத்தில் எந்த குறையும் இல்லையே. உறவினர்கள் நண்பர்கள் ஒருத்தர் பாக்கியில்லாமல் எல்லோரும் வந்திருந்தனர்.
களவுபோன விஷயம் வெளியில் தெரியாமல் நானும்
என் மனைவியும் எப்படியோ சமாளித்து விட்டோம். நண்பர்கள் எனக்கு கடன் கொடுத்து உதவினார்கள்.
பாக்கியம் செட்டியார் மளிகைக்கடை பாக்கிதான்
இன்னும் அப்படியே இருக்கிறது. அவ்வளவுதான்.’
‘ரொம்ப சமத்துதான் நீங்க ரெண்டு பேரும். தினமலர்க் காரன் இந்த சேதியபோட்டிருக்கான். அத நா படிச்சேன்.
பதறிப்போனேன். ஓடி வந்தேன். எம்மனசு கேக்கலடா’ அப்பா சொன்னார்.
என் பையன்கள் இருவரும் டியூஷன் முடித்து வீட்டுக்குள் நுழைந்தனர்.
தாத்தா அவர்களை அன்போடு கட்டி அணைத்துக்கொண்டு பேசினார். பேச்சுத்தான் சற்றுக் குளறியது.
‘ பாட்டி எங்களுக்குனு என்ன குடுத்தனுப்பினா, தாத்தா நீங்களும் வெறுங்கையோட வரமாட்டேளே’ பேரக்குழந்தைகள் தாத்தாவிடம்
கேட்டுக்கொண்டிருக்க, அப்பா மேலும் கீழும் பார்த்து விழித்துக்கொண்டிருந்தார்.
என் மனைவி ’ பசங்களா
உங்களுக்குன்னு கருப்பட்டில மள்ளாட்ட உருண்ட புடிச்சி பாட்டி ஒரு டப்பா
நிறைய அனுப்பி இருக்கா எடுத்துகுங்கோ’ சொல்லி அந்த டப்பாவைக்கொண்டு வந்து கூடத்தின் மய்யமாய் வைத்தாள். நான் தான் இன்று மதியம் வீதியில் மணிலாகொட்டை விற்கும் கார்குடல் ஆயா விடம்
அந்த உருண்டைகளை வாங்கினேன். மனைவியிடம்
கொடுத்திருந்தேன்.
‘ரொம்ப பேஷ்’ சொல்லிய அப்பா அயர்ந்துபோய் உட்கார்ந்திருந்தார். கண்கள்
குளமாகியிருந்தன. அவரைப் பார்க்கவே பாவமாய்
இருந்தது.
-------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment