Tuesday, December 17, 2024

சிகா நாவல்- முன்னுரை

 

 

வணக்கம்,  எஸ்ஸார்சி.

சிகா என்னுடைய  எட்டாவது புதினம்.

இப்பூவுலகம் பெண்களுடையது பெண்களின்  மகிழ்ச்சியில் வளர்ச்சியில் வெற்றியில்  ஒட்டு மொத்த மனித சமுதாயத்தின் உயிர்ப்பு அடங்கியிருக்கிறது. இந்த நிறை நம்பிக்கையோடு  முற்போக்குக்கருத்துக்களைத் தூக்கிப்பிடிக்கின்ற எண்ணற்ற எழுத்துப்போராளிகள் குழாத்தில் யானும் ஒருவன்.

எல்லையற்ற அந்தப் பெருங்கடவுளுக்குப் படைக்கும் தொழில் செய்யும் குருக்கள் சமுதாயம்,  சமுதாயத்தின் மேல்தட்டில் விளங்கும் சாதியினரால்  புறக்கணிக்கப்பட்டு, அதே நேரத்தில் பிற கீழ்த்தட்டு  சாதியினரால்   உயர்ந்தவர்கள் என்று தவறாகக் கருதப்பட்டு  இருதலைக்கொள்ளி எறும்பாய்  அல்லல்படும் ஒரு  பிரிவாகிக் கிடப்பதைக் கண்டவன் நான்.

குருக்கள் சமுதாயமே இப்படி இருக்கின்ற  இருட்சூழலில் அவர்கள் வீட்டுபெண்கள் படுகின்ற துயரும் அனுபவிக்கின்ற சோகமும் சொல்லில் அடங்காது.பள்ளி வகுப்பில் பின்தங்கிய பார்ப்பனர் வீட்டுப்பிள்ளைகளே பாடசாலையில் வேதம் படிக்க அனுப்பப்படுவது நடைமுறையாகி இருத்தலை யதார்த்தமாய்க் காண்கிறோம்.இந்திய  வரலாற்றில் பெளத்தத்தை சுருக்கிய காலடி  ஆதிசங்கரருக்குப்பிறகு  அவர் நிறுவிய நான்கு  சங்கர மடங்களில் நூற்றுக்கணக்கானவர்கள் பீடங்களை அலங்கரித்தார்கள். வெற்று எண்ணிக்கையில் இருந்தார்கள்,  இம்மண்ணின் ஞானவெளியில் ஏதேனும் ஒரு துரும்பைக் அசைத்துப்போட்டிருக்கிறார்களா என்றால் இல்லவே இல்லை. ஏன்.

இந்த புதினத்தில் வரும் வேதா என்கிற குருக்கள் வீட்டுப்பெண் ஐந்தாம் வகுப்பு மட்டுமே படிக்க அனுமதிக்கப்பட்டவள். அவளுக்கு படிப்பின் மீது இருந்த வெறியின் காரணமாக ஒரு தமிழ்ப்பேராசிரியரின் விசால மனத்தோடு  படிப்படியாக எப்படி மேல் நிலைக்கு வருகிறாள் என்பதைப்பேசும் புதினம் இது.

புதினத்தில் வரும் வேதா,  சிவகாமி என்னும் அந்தப்பேராசிரியரின் பெயரையே ’சிகா’  என்று  தன்னுடைய புனை பெயராக்கி ஒரு எழுத்தாளராக மலர்கிறாள். புதினத்தில் வரும் பிற சுவாரசியங்கள் வாசகர்கள்  சுவைத்துப் பகிர்வதற்காக அமையட்டும்.

இப்புதினம் உருப்பெற நல்லதொரு பதிப்பகத்துக்கு ஆற்றுப்படுத்தியத்திய பெருமை எனது நண்பர்  மொழிபெயர்ப்பாளர் அக்களூர் இரவியைச்சாரும்.  ஓர் எழுத்துபடைப்பை ஆழமாய்ப்படித்துப் பின் புத்தகமாக்கும் மரபு போற்றும் தமிழ்ப் பதிப்பகங்களில் ’சுவடு’ பிரதானமான ஒன்று.

 சுவடு பதிப்பக நல்லி. இ. லிங்கம் அவர்கட்கு நாம் மிகவும் நன்றியுடைவன்.

                                                                                                                                                               அன்புடன்

                                                                                                                                                                 எஸ்ஸார்சி

 

 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஆசிரியர் பற்றி…

எஸ்ஸார்சி என்கிற  புனை பெயரில் எழுதிவரும் எஸ். ராமச்சந்திரன் கடலூர் மாவட்டம் தருமநல்லூரில் பிறந்தவர். அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் பயின்றவர். மனித நேய மார்ச்கியத்தின் பால் மிகுந்த ஈடுபாடுடையவர்.  தமிழ் மொழியின்  திருக்கொடையாம் திருக்குறள் திருவாசகம் , திருமூலம் என்னும் மூன்று  இலக்கியப்பொக்கிஷங்களைப்போற்றிப்பேசுபவர்.

 தொலைபேசித்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். எட்டு புதினங்கள், பதினோரு சிறுகதைத்தொகுப்புக்கள், ஐந்து கவிதை நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள்,ஆறு கட்டுரை நூல்கள், இரண்டு ஆங்கில நூல்கள் என 35 படைப்புக்களைக் கொடுத்துள்ளார்.

தமிழக அரசின்  சிறந்த புதின விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, எட்டையபுரம் பாரதி விழா விருது, நெய்வெலி நிலக்கரி நிறுவன  எழுத்தாளர்  பாராட்டு, சேலம் தாரையார் விருது, கம்பம் பாரதி தமிழ்ப்பேரவை பரிசு மூன்று முறை, கரூர் சிகரம்  இலக்கிய விருது, பாரத ஸ்டேட் வங்கி பரிசு எனப்பல சிறப்புக்களைப்பெற்றவர்.

கடலூர் மாவட்ட  கலை இலக்கியப்பெருமன்ற செயலராகவும், கடலூர் தொலை பேசி ஊழியர்களின் சிரில் அறக்கட்டளையின் கன்வீனராகவும் பல்லாண்டுகாலம் பணியாற்றியவர். திசை எட்டும் மொழிபெயர்ப்பு இதழின் ஆசிரியர்  குழுவிலும் பணியாற்றி வருகிறார்.

---------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment