Tuesday, December 17, 2024

லேசுபட்டதில்லை மனசு -முன்னுரை.

 

 

கவியுரை

வணக்கம். நான் எஸ்ஸார்சி. ’லேசுபட்டதில்லை மனசு’ இது என்னுடைய  ஐந்தாவது கவிதைத்தொகுப்பு.

எழுத்துலகில் கவிதைதான் ஆதி. பிற  எழுத்து வடிவங்கள்  காலவெள்ளம் கொணர்ந்தவை. கவிதை மொழியில்தான் வால்மீகி இராமாயணத்தை நமக்குத்தந்தார். திருவள்ளுவர் இளங்கோ கம்பர்  தமிழுக்கு அரணாகி நின்ற கவிவாணர்கள். தொடர்ந்து  மாகவிபாரதி தமிழை உயர்த்திப்பிடித்தார். இந்த நால்வரும் தமிழுக்கு நான்கு தூண்கள். நால்வரும் பெருங்கவிஞர்கள். அவர்களின்  பெயரைச் சொல்லச்சொல்ல எழுந்து நின்று வணங்கத்தோன்றுகிறதே நமக்கு  அது எப்படி.  கவிதை மொழியின் சூக்குமம் அது.

உள்ளத்தின் மொழி கவிதை. உண்மை உரைப்பது கவிதை. மக்களோடு மக்களாய்ப் பின்னிக்கிடப்பது கவிதை. சூது வாதற்ற எளியவர் பேசும் மொழி கவிதை. அன்பின் வெளிப்பாடு. அறத்தின் வெற்றி. படைப்பு மொழியின்  வசந்த காலமே  கவிதை வெள்ளத்தின்  ஊற்றுக்கண்.

அறிவியல்  வழங்கிய கொடை இணையம். அது வழி கவியரங்கம் நடத்திய புதுமைக்காரர் விருட்சம் அழகிய சிங்கர். முயற்சித்திருவினையாக்கியிருக்கிறது. நூறு நாட்கள்  நிகழ்ந்தது  இணையகால கவியரங்கம்.  அன்றாடம் குறைந்தது,  கவிஞர்கள் பதின்மர் பங்கேற்பு. கவிதைகள் எண்ணிக்கையில் ஆயிரத்தைத் தொட்டிருக்கலாம்.  இது  அற்புதத்தொடக்கம். நல்லது பெரிதாகும்.

’லேசு பட்டதில்லை மனசு ‘இந்த கவிதைத்தொகுப்பை நண்பர் இதழாளர் கவிஞர்  விருட்சம் அழகிய சிங்கருக்கு மெத்தப்பணிவோடு சமர்ப்பிக்கின்றேன்.

இத்தொகுப்பு வெளிவரத் தோழமையோடு உதவிய  நல் மனம்,  குவிகம் கிருபானந்தன் அவர்கட்கு நன்றி.

வாசகர்கள் கவிதைகள் நுகர்ந்து என்னோடு பேசவேண்டுகிறேன்.

                                                                                                                                                                                        அன்புடன்

2/2/2024

சென்னை                                                                                                                                                                            எஸ்ஸார்சி

 

No comments:

Post a Comment