Monday, July 14, 2025

தொறகுனா இடுவண்டி சேவா கட்டுரை

 

 

தொறகுனா  இடுவண்டி  சேவா

 

ஓசை உடைத்த கவிதைகளில் இசை என்னும் தலைப்பில் இசையையும் இலக்கியத்தையும் பிசைந்து ஒரு எழுத்துப் படைப்பைக்கொண்டு வந்துள்ளார் ரவிசுப்ரமணியன். காலச்சுவடு பதிப்பகம் அப்புத்தகத்தை வெளியிட்டுப் பெருமை பெறுகிறது. இசையைத்  ஆழத்தெரிந்து அதன் கலா பரிமாணங்களை முற்றாய் ஓர்ந்து மோகமுள் புதினத்தில் தி.ஜானகிராமன்  ரங்கண்ணாவைக் கொண்டு வந்திருப்பார். மோகமுள் ரங்கண்ணா இசையின் தாளகதியைத் தன் குருதியில் எதிரொலிக்கக் காண்பவர். தம்புராவை மீட்டுவது அவருக்கு  ஆன்ம சம்பாஷணை.சங்கீத ஞானமு பக்தி வினா என்பதற்கு சாட்சியமாய் நிற்கும் இலக்கிய பிம்பம். மோகமுள்  ரங்கண்ணாவைத்தாண்டிய சமாச்சாரத்தை இசைபயில் இலக்கிய மேதமையை இலக்கியப்படைப்பாளிகள்   வேறு யாரும் வாசகர்க்குப் பிரயத்திட்சமாக்கி உலவ விடவில்லை.  இப்படைப்பில் ரவிசுப்ரமணியன் 13 கட்டுரைகளோடு இரண்டு பின்னிணைப்புக்களையும் சேர்த்து 15 கட்டுரைகள் எனக்கொண்டு வந்துள்ளார். ஆசிரியரின் உடன் பிறவாத்தங்கை காமாக்‌ஷி ஸ்வாமிநாதனுக்கு இப்புத்தகம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் இக்கட்டுரைகள் பேசும் புதிய சக்தியில் வெளிவந்தவை. அவ்விதழின் ஆசிரியர் ஜெயகாந்தன்  சஹ்ருதயர் ரவிசுப்ரமணியத்தின் மேல் வைத்துள்ள நம்பிக்கை மிகச்சரியானது என்பதனை வாசகன் வழிமொழிகிறான்.

 என்னுரையில் ரவிசுப்ரமணியம் இசையின் வல்லமை குறித்து   இப்படிப்பேசுகிறார்.

‘வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளக்காதல் கொண்ட நோயாளியாய்’ நீங்கள் அதைத் தொடர்கையில், முதலில் ரசிகனாக்கி,  உணரவைத்து பின் விதிர்க்கவைத்து, மகிழ்ச்சி பரப்பி பின் உங்களையே தனக்குப் பிரச்சாரகராகவும் ஆக்கிவிடுகின்ற வல்லமை இசைக்கு உண்டு’

இசைப்பேராசிரியர் திவாகர் சுப்ரமணியம் ‘தொகையறா’ என்னும் தலைப்பிட்டு  இந்நூலுக்கு ஒரு முன்னுரையைத்தந்துள்ளார். மாமேதை பீத்தோவன் இசையால் உலகத்தை மாற்றமுடியும் என்றார். அத்தகைய ஒரு சமுதாய மாற்றத்திற்கு அணிவகுக்கும் படைப்புக்களில் இந்தக்கட்டுரைத்தொகுப்புக்கு இடமுண்டு என்கிறார் திவாகர்.

 அ. முத்துலிங்கத்தின் மார்க்கஹிந்தோளம் என்பது முதல் கட்டுரை. இது கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் 22.10.22 அன்று  நடந்த அ. முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்த கட்டுரைத்தொகுப்பு வெளியீட்டு விழாவில் ரவிசுப்ரமணியனால்  வாசிக்கப்பட்டது. இதனில் இசையை அனுபவிக்கத் தெரிந்து எழுத்திலும் கொணர்பவர்கள்  யார் யார் என்கிற ஒரு பட்டியல் தருகிறார். சுவாமிநாத ஆத்ரேயன்,சிதம்பர சுப்ரமணியன், கு. அழகிரிசாமி, கி. ராஜநாராயணன்,தி. ஜானகிராமன்,எஸ். வைத்தீஸ்வரன், கிருஷாங்கினி,ஆர். ராஜகோபாலன்,ஆனந்த், அபி, பிரம்மராஜன்,நா. விச்வநாதன்,ரெங்கநாயகி, லலிதாராம், சுகா, அருண்மொழிநங்கை. இசைப்பற்றித்தெரியாது ஆனால் இசையை எப்படி அனுபவிப்பது  என்பது தெரியும் இப்படி ஒரு பட்டியலில் அ. முத்துலிங்கத்தை  ரவிசுப்ரமணியன் முன் நிறுத்துகிறார். முத்துலிங்கத்தின் ‘ரி’  என்னும்  ஒரு கதை.  ஒரு தேர்ந்த கலைஞன் எதையெல்லாம் எப்படியெல்லாம் புனைந்து கதைக்குள்  அதனைக்கொண்டு வருகிறான்,  வித்தை காண்பிக்கிறான்,  என்பதற்கு  இக்கதை ஒரு சான்று என்கிறார் ரவிசுப்ரமணியன். அ.முத்துலிங்கத்தின் ராகம் பற்றிய  ஒரு விளக்கம் வாசனைக் கிரங்கச்செய்வதைத் தவறாமல் சுட்டுகிறார்.’

‘இது மார்க்க ஹிந்தோளம். அடிமுடியைக்கண்டுபிடிக்க முடியாதபடிக்கு ஓர் அபூர்வமான ராகம். ஆயுள் முழுக்க சாதகம் செய்தாலும் இந்த ராகத்தில் மறைந்துகிடக்கும் சூட்சுமங்களை ஆழம் காணமுடியாது. எனக்குப் பிடித்தராகம்.’

றொறன்றோ பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைக்காக நிதி திரட்ட ஒரு வேண்டுகோள்.அ. முத்துலிங்கம் அதற்கு ரவி சுப்ரமணியத்திடம் இப்படி   ஒரு உதவி கேட்கிறார்.

 ‘ ஒரு நிமிடப்பாடல் எழுதி மெட்டமைத்து பின்னணி இசை அமைத்து  கடைசியில் நிதி கேட்கும் கோரிக்கையாக வாய்ஸ் ஓவர் ஒருவர் தரவேண்டும்’

 ரவி சுப்ரமணியம் ஒத்துக்கொள்கிறார்.பாடல் எழுதி இசை அமைக்கிறார். பாரதிராஜா  வாய்ஸ் ஓவர் குரல் கொடுக்கிறார். வெற்றிகரமாய் அந்தத் திட்டம் உருப்பெறுகிறது. அ.முத்துலிங்கம் இப்படி ஒரு விபரத்தை மட்டும்தான் வெளியில் சொல்கிறார்.  தமிழ் இருக்கை அமைப்பதற்கு  ரவிசுப்ரமணியத்தின்  பாடலும், பாரதிராஜாவின் கோரிக்கையும் வெளியிடப்படுவதற்கு முன்பாகவே  தேவைப்படுகின்ற டோலர்கள்  தமிழன்பர்கள்  பலரிடமிருந்து வந்து குவிந்துவிடுகின்றன.  அ.முத்துலிங்கம் எண்ணியாங்கு  தமிழ் இருக்கை நிறுவப்படுகிறது.  இவை அத்தனையும் முத்து முத்தாய் இக்கட்டுரையில் வாசகனுக்குச் சொல்லப்படுகிறது.

’ தடமில்லாப் பாதைவழி பயணமேகிய கத்ரி கோபால்நாத்’ என்னும் கட்டுரை அடுத்ததாய் வருகிறது. கத்ரி கோபால்நாத் சிகரம் தொடக்காரணமான ஒரு நிகழ்வைப் பதிவு செய்கிறார் கட்டுரையாளர். இசைமேதை     டி. வி கோபாலகிருஷ்ணன் கோபால் நாத்தை சென்னைக்குக் கூட்டிவந்து மயிலாப்பூர் முருடீஸ் ல் தங்கவைத்து ’இனி நீ என்கிட்டதான் இருக்கவேண்டும்’ என்று சொல்லி தனக்குத்தெரிந்த எல்லா  இசைக்கலை நுணுக்கங்களையும் சொல்லித்தந்திருக்கிறார். தரையில் அமர்ந்து கோபால் நாத் டி வி ஜி முன்பாக பத்துமணிநேரம்கூட அசுர சாதனை செய்தவர் என்பதைப் பகிர்கிறார் ரவிசுப்ரமணியன். கற்கும் நேரத்தில் அவர் காட்டிய அந்த ஈடுபாடான அர்ப்பணிப்புதான் பின்னாளைய அவரது எல்லாப் பரிமளிப்புக்கும் அடித்தளம் என்பதைச் சுட்டுகிறார் கட்டுரையாளர்.

மூன்றாவது கட்டுரையாக வருகிறது தமிழ்+ அன்பு+ பதிப்பகம்=மீரா.  கவிஞர் மீரா பற்றியும் அவரோடு ரவிசுப்ரமணியத்திற்கு இருந்த தோழமை பற்றியும்  அறிந்து நாம் துள்ளிக்குதிக்கலாம். அப்படிச்செல்கிறது அவ்விஷயங்களின் கோர்வை.

‘பின்னாளில் அந்தக்கவிஞரை நான் சந்திப்பேன் என்றோ, என் முதலிரு கவிதைப்புத்தகங்களை அவரது அன்னம் பதிப்பகம் வழியாக அவர் வெளியிடுவார் என்றோ, என்னைத்தம்பியாக ஏற்று என் விடுதியிலேயே எனது விருந்தினராக இரண்டு ஆண்டுகள் தங்கியிருப்பார் என்றோ, எண்பதுகளின் தொடக்கத்தில் நான் வாசித்த அவரது கவிதைகளில் இரண்டு மெட்டமைக்கப்பட்டு 2019 இல் பாடலாய்ப் பதுவாகுமென்றோ அப்போது நான் நினைத்திருக்கவில்லை’

படித்துப் பரவசமாகி நிற்கிறோம்.

மீராவின் ‘ என்னை மீண்டும் இசைக்க வைத்துள்ளாய்’   ‘நீ தாமதிக்காதே’ என்கிற இரண்டு கவிதைகளுக்கும் இசை அமைத்துள்ளார் ரவிசுப்ரமணியன். முதல் கவிதைக்கு ‘தேஷ் ராகத்தைத்தேர்ந்தெடுத்திருக்கிறார். தேஷ் ராகத்தைப்பற்றிய ஆசிரியரின் ஒரு விளக்கம் நம்மை அசைத்துப்பார்க்கிறது. தேஷ் -அது மென்மையான ராகம் உணர்வுகளுக்கு ஏற்றது. தீன பாவத்திற்குப் பொருந்தி வருவது மெலங்க்கலியான அனுபவத்தைக் கொணர்வது என்கிறார். ஒரு படி மேலே செல்கிறார்.’ வெல்லப்பாகை மேலிருந்து ஊற்றினால் மடிந்து மடிந்து   குழைவதுபோல் குழைகிற ஒரு வடநாட்டு ராகம். மனசை உருக்கக்கூடிய ராகம்’  இப்படியாய் அழகு விளக்கம் வாசகனுக்குச் சொல்லப்படுகிறது. ’ துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ’ என்னும் பாரதிதாசனின் பாடலுக்கு தண்டபாணி தேசிகர் மெட்டமைத்துப்பாடியிருப்பார். அது தேஷ் ராகத்தில் பூத்தது என்று சொல்லிச்செல்கிறார்.

இரண்டாவதாக வரும் கவிதைக்கு கானடா ராகத்தைத் தேர்வு செய்துள்ளார் ரவிசுப்ரமணியன். மீராவின் ‘ நீ தாமதிக்காதே’ கவிதையை மெட்டமைத்துப்பாடி அதனை இசை ஆர்வம் உள்ள முந்நூறு நண்பர்களுக்குமேலாகவும்  அனுப்பிவைக்கிறார். எழுத்தாளர் வண்ணதாசன் மட்டுமே இந்தப்பாடலுக்கு இந்த மெட்டு  அமைத்துள்ளீர்கள் என்பதனைச்சரியா கண்டுபிடித்துச்சொல்கிறார். மாதவம்பட்டி சத்யன் மங்கையர் திலகம் படத்தில் பாடிய பாடலின் ராகமது என்கிறார் ஆசிரியர்.

நகுலனின் ஊர்ந்து செல்லும்நினைவு என்கிற கட்டுரை அடுத்ததாக வருகிறது.  இக்கட்டுரையில் வருகிறது இப்படி.  நண்பர் தேனுகா  ஒருமுறை  ‘நல்ல கவிஞனாக வரவேண்டுமா பெரிய கவிஞனாக வரவேண்டுமா என்கிற கேள்வியை  நூலாசிரியரிடம் வைக்கிறார். ‘நான் வைரமுத்து மாதிரி’ பெரிய கவிஞனாக வரவேண்டும் என்கிறார் ரவிசுப்ரமணியன். அந்த சம்பாஷணை  இப்படி நீள்கிறது ,

‘ சுத்தம். அந்தக்கசண்டெல்லாம் வேண்டாம்னுதான உங்கள நான் திருப்பப்பாக்குறேன். அங்கயே போய் போய் நிக்கிறிங்க’

‘ஏன் அவர்ல்லாம் பொயட் இல்லியா சார்?’

‘அத காலமே சொல்லிடும். ஹீ ஈஸ் ய லிரிக் ரைட்டர் அவ்ளோதான்.அத தாண்டி ஒரு மண்ணும் இல்ல’

நகுலனின் கவிதை ஒன்றைப் படிக்கத் தொடங்குகிறார் ரவிசுப்ரமணியன்.

‘ரயிலை விட்டிறங்கியதும்

ஸ்டேஷனில் யாருமில்லை

அப்பொழுதுதான்

அவன் கவனித்தான்

ரயிலிலும்யாருமில்லை

என்பதை

ஸ்டேஷன் இருந்தது

என்பதை

‘அது ஸ்டேஷன் இல்லை’

என்று நம்புவதிலிருந்தும்

அவனால் விடுவித்துக்கொள்ள

முடியவில்லை

ஏனென்றால்

ஸ்டேஷன் இருந்தது’

2007 ல் துவங்கி இதுவரை (ஆகஸ்ட் 2021) 85 கவிதைகளுக்கு மேல்   ரவிசுப்ரமணியன் மெட்டமைத்துள்ளார். முதன் முதலில் மெட்டமைத்தது  நகுலனின் கவிதைக்குத்தான். இசையோடு கூடிய பாடலாக அது பதிவாகுதல் மட்டும் கைகூடவில்லை. வருத்தப்படுகிறார் நூலாசிரியர். நகுலனின்  இக்கவிதையோடு இந்தக்கட்டுரை முடிகிறது.

‘இருப்பதற்கென்று

வருகிறோம்

இல்லாமல்

போகிறோம்’

நகுலன் இல்லாது தமிழ்க்கவிதை வெளிதான்  எப்படிச்சாத்தியம்.

அடுத்து வரும் கட்டுரை  ‘உணர்வுகளின் குரலொலியாய் உலவும்  எஸ். பி.பி. அவரைத் ’தான்மையற்றவர் ’என்று குறிப்பிடுகிறார் நூலாசிரியர். எதனிலும் தான்  தான் என்று தன்னை முன் நிறுத்திக்கொள்ளாதவர்  என்பதால் தான்மையற்றவர் என்கிற புது வார்த்தைப் பிரயோகத்தை நிறுவுகிறார். மெச்சத்தக்க வரிகள் எஸ்.பி.பி யின் பெருமை பேசுகின்றன.

‘ எஸ் பி பி  அவர் இன்று இல்லை.ஆனால் அவர் குரல் நம் சந்ததிகள் வாழும் வரை வாழும்.கேட்டதும் சட்டெனக் கடந்து வேறு வேலைகளில் ஈடுபட வைக்கிற ஒரு சராசரிக்குரல் இல்லை அது.நம்முள் ஊடுருவி ஏதோ செய்துவிடுகிற குரல்.அது வெறும் குரல் மட்டுமா…? நூறு சதவிகித அர்ப்பணிப்போடு ,சங்கதிகள்,அஹாரங்கள்,சிட்டா ஸ்வரங்கள்,ப்ருகாக்களென உணர்ச்சிப்பெருக்கோடு, நம்மோடு இருந்த  பல தருணங்களின், குரல்.  ’என் உணர்வு உன் குரலில்’  என்று பல சமயம் நம்மை நெகிழவைத்த குரல். மகிழ்ச்சி, காதல்,துள்ளல்,நையாண்டி,கழிவிரக்கம் பேச்சு,இருமல்,துயரம், காமம், உரையாடலெனப்பலவிதமான பாவங்களோடு என் வாழ்வின் பல சமயங்களில் என்னோடு இருந்தது போலவே  என் பிள்ளைகளோடும்என் பேரப்பிள்ளைகளோடும் இருக்கப்போகிற குரல் அது.  இதுதானே ஒரு கலைஞனின் உண்மையான அசாத்திய வெற்றி. சரியான அர்த்தத்தில் அசல் கலைஞனாக வாழ்ந்தவனுக்கு ஒரு போதும் சாவு இல்லை. அது வெந்ததைத்தின்று விதியின் கூற்றுக்குக் காத்திருந்து மாயும் பிரகிருதிகளுக்கு மட்டுமே’

இவற்றை வாசிக்கின்ற வாசகனுக்கு  பாரதியின் ‘தேடிச்சோறு நிதம் தின்று  பல சின்னஞ்சிறு கதைகள் பேசி’ என்னும் கவிதை வரிகள்  மனதில் நிழலாடவே செய்யும். எஸ். பி.பியின் வருகையை ‘ அரியவை எப்போதாவது நிகழும்’ என்று நெஞ்சம் திறக்கிறார் ரவிசுப்ரமணியன். இவற்றை  எல்லாம் இருந்து கேட்க அவரை   இயற்கை விட்டுவைக்கவில்லையே என்று வாசக மனம் ஏங்குகிறது.

’தமிழிசையே ஆதி இசையென நிறுவும் மம்மது’ என்னும் அடுத்த கட்டுரை வேறு ஒரு புது செய்தியைச்சொல்கிறது.

‘ஸ்ருதி என்று இன்று நாம் அழைக்கும் சொல்லுக்குத்தூய தமிழ் சொற்கள் இருபத்திரெண்டு உள்ளன.ஆனால் அத்தனையும் வீழ்த்தி  ‘ஸ்ருதி’என்ற சொல் வழக்கிற்கு வந்துள்ளதே! தமிழன் எவ்வளவு ஏமாந்த சோணகிரி’ என்று மம்மது  விசனத்தோடு சொல்லும் போது,  அது குறித்தும் அதன் பின்னுள்ள மொழி அரசியல் குறித்தும் நாம் யோசிக்காமல் இருக்க முடியவில்லை’  என்கிறார் ரவிசுப்ரமணியன்.

பாடித்திரிந்த பாடினிகள் என்னும் அடுத்து வரும் கட்டுரையில் , தாம்பரம் கிருத்துவக்கல்லூரிப் பேராசிரியர் முனைவர். சு. சதாசிவம் 50 பெண்பாற்புலவர்களைப் பெயர்களோடு கண்டடைந்து நிறுவுகிறார் என்பதை ஆசிரியர் குறிப்பிடுகிறார். இது ‘சங்கப்பெண்பாற்புலவர் வரலாறு’ என்னும்  அவரது நூலில் வருகிறது என்பதை அறிகிறோம்.

நெஞ்சு, மிடறு, நாக்கு, மூக்கு, அண்ணம், உதடுகள்,பற்கள்,தலை இவை எட்டு உடல் உறுப்புகள். எடுத்தல், படுத்தல்,மெலிதல்,கம்பிதம்,குடிலம்,ஒலி, உருட்டு, தாக்கு  இவை எட்டும் முறையே அவற்றின் செயல்பாடுகள். இவை அனைத்தும்  இசைந்து  செயல்படுவதால்’ பண்’’ஆயிற்று, என்கிறார் அடியார்க்குநல்லார். இப்படியொரு காத்திரமான விளக்கம் இந்தக்கட்டுரையில் கிடைக்கிறது. அடியார்க்குநல்லார் தமிழ்ப்பண்கள் மொத்தம்  11991 இருந்தன என்கிறார். அறிவியல் தொழில்நுட்பக் கருவிகளின் நிழலே இல்லாத ஒரு காலத்தில் இத்தனை அற்புதங்கள் இம்மண்ணில் சாத்தியமாகி இருக்கிறது.

’காலத்தைத் தன் கலைக்குள் உறையவைத்த கலைஞன் இளையராஜா’  எனும் அடுத்த கட்டுரை ஆசிரியர் இசைஞானியை எப்படிப்புரிந்திருக்கிறார் என்பதனைத் தெரிவிக்கிறது. இளையராஜாவை எல்லோரும் நன்றாகவே அறிவோம் என்றாலும் ரவிசுப்ரமணியத்தின் எழுத்து வழி அறிதல் நம்மை நெகிழச்செய்கிறது. இதற்கு மேலுமா ஒரு கலைஞனை வாழ்த்திவிட முடியும் என்று வாசகனைப் பிரமிக்க வைக்கிறது. ஜெயகாந்தன் திராவிட இயக்கத்திற்கு ஒவ்வாதவர். ஆனால் திராவிட இயக்கத்தினரால்  கொண்டாடப்பட்டவர்.  எழுத்துக்கலை அவரைக் கொண்டு போய்  அங்கே  சேர்க்கிறது. இளையராஜா ஆத்திகர்.   கடவுளை மறுத்த ஈ.வெ ரா பெரியார் திரைப்படப் பாடலுக்கு  இசை அமைக்க ஒப்பாதவர். கோடிக்கணக்கான தமிழர்களை இசையால் வசப்படுத்தியவர்.அவர் கருத்தோடு முரண்படும் தமிழர் உண்டு. ஆயின் அவரின் இசையைப் போற்றாத தமிழர் உண்டோ?

அற்ப, லெளகீக லாப நஷ்ட விஷயங்களின் வழியே ,  அதுவும் நமக்குத்தெரிந்த  பாமர அளவீடுகளின் வழியே ஒரு தேர்ந்த கலைஞனை  அளவிடுதல் சரியாகாது என்கிறார் ஆசிரியர்.

ஓசை உடைத்த கவிதைகளில் இசை என்னும் கட்டுரை பக்தி இலக்கியங்கள் தமிழிசைக்கு  அளித்த கொடை பற்றிப்பேசுகிறது. உலக அளவிலும் கூட இந்தப் பங்களிப்பை வேறு எந்த மொழியிலும்  காண்பதரிது என்கிறார் கட்டுரையாளர். புதுக்கவிதை யுகம் வந்தது கவிஞர்கள் கவிதை  தந்தார்கள்.இசையின் பிரக்ஞை இல்லாத கவிதைகள் பிறந்தன. கவிதைக்கலைக்கும் இசைக்குமான தொடர்பு விட்டுப்போயிற்று. இரண்டு கலையும் முகிழ்த்தலில் கிடைக்கும் அரும் பயன் வாராது போயிற்று. தமிழ்  மொழி நஷ்டப்பட்டுப்போனது.

மணிக்கொடி எழுத்தாளர்கள் இந்தியவிடுதலைப்போரை மறந்து இலக்கியம் படைத்தார்கள்.  அது ஒப்பவே சமகாலக் கவிஞர்கள் இசையைப் புறந்தள்ளி கவிதை பொழிகிறார்கள். எது இவண்  குறையோ அதனை லாகவமாய்ச் சுட்டுகிறார் ரவிசுப்ரமணியன்.

வள்ளலாரின் வானத்தின் மீது மயிலாடக்கண்டேன்              ( மாண்ட்)

பாரதியின்  சின்னஞ்சிறு கிளியே                                                     ( காபி)

பாரதிதாசனின்   துன்பம் நேர்கையில் யாழெடுத்து   நீ                    ( தேஷ்)   இவையும் இவைபோன்ற பிறவும் இசையால் கவிதைக்குச் சேர்ந்த  சம்பத்து என்கிறார் நூலாசிரியர்.

அடுத்துவரும் கட்டுரை ‘மல்லாரி-நாத லயத்தின் வழியே ஒரு வாசமாலை.  கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் சந்நிதியிலேயே பிறந்து வளர்ந்தவன் நான் என்கிறார் ஆசிரியர். ’கோயில் என்பது வெறும் மூலஸ்தான விக்ரஹத்தை வணங்கி வழிபடும் ஒரு இடம் மட்டுமேயல்ல, இசை, கதை சொல்லும் கதாகாலட்சேபம்,பிரவச்சனம்,தமிழ்க்கல்வெட்டுகள்,நாட்டியம், ஓவியம் ,சிற்பம்,ஆடு மாடு  பாம்பு பறவைகள் போன்ற உயிரினங்கள், நந்தவனம்,ஸ்தல விருட்சம்,மூலிகைகள்,கேணிகள்,குளங்கள்,பூஜை சின்னங்களின் வகைகள் தீப தூப வகைகள், பூ வாசனாதி திரவிய ஆடை அலங்கார வகைகள்,பாத்திர சமையல்வகைகள்,வான சாஸ்திரம்,கட்டிடக்கலை,ஸப்ததாள படிக்கட்டு, இசைத்தூண்கள் என இப்படி நூறு நூறு கலாச்சார சம்பத்துகள் நிறைந்த புனித இடம்’.  கோயிலுக்கு முன்னும் பின்னும் நிகழும் அனைத்து செயல்பாடுகளையும் உள்ளடக்கிய ஒரு சூட்சுமத்தை நமக்குக்கொண்டு தருகிறார் நூலாசிரியர். சிதம்பரம்  நடராஜர் திருக்கோயில்  மல்லாரி வாசிப்பு பற்றி அரியதொரு விளக்கம் இந்தக்கட்டுரையில் காண்கிறோம்.

’… முதல் நாள்     சங்கராபரணம் தொடங்கி,     ரீதி கெளளை, சக்கரவாகம்,ஹம்சபிரமரி, என நான்கு நாட்கள்

ஐந்தாம் நாள்                              ஐந்து தாளத்தில் மல்லாரி

ஆறம் நாள் சண்முகப்பிரியா,  ஏழாம் நாள்  காம்போதி,   எட்டாம் நாள்   ஒடக்கூறு எனும் தனி உருப்படி.

(தாருகா வனத்து ரிஷிகளுக்கு நிலையற்ற இந்த உடல் கூற்றின் இரகசியத்தை பிட்சாடனர் உருக்கொண்டு  சிவபெருமான் பாடம் போதித்த  உணர்வே ஒடக்கூறு.  நாதநாமக்கிரியா ராகம் அன்று வாசிக்கப்படும்’

ஒன்பதா நாள் அன்று                தேர் மல்லாரி

பத்தாம் நாள்   முத்துத்தாண்டவர்  அம்பலவன் மீது பாடிய பாடல்கள்.

பதினொன்றாம் நாள்     உசேனி  வாசிக்கப்படும்.  உடன் விழா நிறைவெய்தும் என்று பட்டியல் தருகிறார் ரவி சுப்ரமணியன். கேரளத்து செண்டை மேளம்  இங்கே வரலாம் அது நாகஸ்வரத்தின் இடத்தை ஆக்கிரமித்தல் அழகல்ல என்கிறார் கட்டுரையாளர்.

’பாமரர்  மெட்டிலும் பாடிய பாரதி’  என்னும் அடுத்து வரும் கட்டுரை வாசகனைக் கிறங்கச்செய்துவிடும். பாரதி இசை அறிந்த தமிழ்க்கவிஞன்.’தமிழ்ழ்சபைகளிலே எப்போதும் அர்த்தம் தெரியாத பிற பாஷைகளில் பழம் பாட்டுக்களை  மீட்டும் மீ ட்டும் சொல்லுதல் நியாயமில்லை.அதனால் ,நமது ஜாதி சங்கீத ஞானத்தை இழந்து போகத்தான் நேரும்’ என்று பாரதி நெஞ்சம் வருந்திச் சொன்னதை மேற்கோள் காட்டுகிறார் கட்டுரையாளர். பாரதியாருக்கு தியாகராஜ சுவாமிகள் முத்துசாமி தீட்சிதர்   ஆகியோர் மேல் மிகுந்த மரியாதை இருந்திருக்கிறது. தியாகய்யரைப் பாரதி ரஸக்கடல் என்றழக்கிறார். தீட்சிதரின் கீர்த்தனைகள்  கங்கா நதி. கம்பீரமானது என்கிறார் பாரதி.   ஆயினும் பாமரர்க்குப்புரியும்படி தமிழில் பாடவேண்டும் என்பதே பாரதியின் விருப்பமாக எப்போதும் இருந்தது.

‘எந்த ஜில்லாவுக்குப் போ,எந்த கிராமத்துக்குப் போ எந்த வித்வான் வந்தாலும் இதே கதைதான். தமிழ் நாட்டு ஜனங்களுக்கு இரும்புக்காதாக இருப்பதால், திரும்பத்திரும்ப ஏழெட்டுப் பாட்டுக்களையே வருஷக்கணக்கில் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்’ என்று சாடுகிறார் பாரதி.

‘பொதுப்பள்ளிக்கூடத்திலே சங்கீதம் கற்றுக் கொடுக்க வேண்டும். இது மற்ற நாகரீக தேசங்களிலே  சாதாரணமாக நடந்து வருகிறது. உயிரிலே பாதி சங்கீதம்’ இப்படிப் பாரதி  முத்தாய்ப்பாய்ச் சொல்வதை  ரவிசுப்ரணியன்  குறிப்பிட்டு  இக்கட்டுரையை முடிக்கிறார்.

தி.ஜானகிராமனின்’ நாத மோக உபாசனை’ என்னும் அடுத்த கட்டுரைக்கு வருவோம்.  தி. ஜா வின் சிருஷ்டியில் ரங்கண்ணா  என்னும்   மோகமுள் கதாபாத்திரம்  இசையும் இலக்கியமுமாய், நாத பிந்துவாய்  வாசகனுக்குத்தெரிகிறார். மோகமுள் நாவல் நெடுகிலும் இசை ஒரு தோன்றாத் துணைவனாய் வாசகர்க்கு  அனுபவமாதலை உணரமுடியும்.

‘பிராண பலம் வேணும் , மனோ பலம்,ஆத்ம பலம், எல்லாம் இருக்கணும். எல்லாத்துக்கும் சரீரம் வேணும். ஆனா இதுக்கு சரீரம் ரொம்ப ரொம்ப வேணும், டாப்பா ரொம்ப வேணும்.பிராண சக்தி கண்ணுக்குத்தெரியாது. அதைத்தான் முரட்டுத்தனமா  வளர்த்தாகணும். ஜெண்டை வரிசை ஆகும்போது வெள்ளைக்கடுக்கன் வேணும் போலிருக்கும்,வர்ணம் வந்தா மயில்கண் வேஷ்டி, மல்லுச்சட்டை., கீர்த்தனம்  வந்தா கொஞ்சம் அத்தர் இருந்தாத் தேவலை போலிருக்கும். அப்புறம் எங்க தேவடியா வீடு இருக்குன்னு உடம்பு அலையும்.’ தி.ஜா வாசகனை அசரவைத்துவிடுவார்.

’மோகமுள்ளில்  புரளும் மொழியின் சரளம் அறுபதுகளில் சுழித்தோடிய காவேரி ஜலம். தன் பெருக்காத மார்பைப்பிடித்து பிடித்து அடிக்கடி ரகசியமாய் வருடிப்பார்க்கிற ருதுவானவளின் கை போல இயல்பாய் வந்து வந்து  செல்லும் காமம். நம்முள்ளிருக்கும் கசடுகளை நோக்கி நீளும் கேள்விகள்  இயற்கையின் ஏகாந்தம் என்று சொல்லித்தீருமோ மோகமுள்’ என்கிறார் கட்டுரையாளர்.

இப்புத்தகத்தின் பின் இணைப்பாக  ரவி சுப்ரமணியனின்  இரண்டு  நேர்காணல் கட்டுரைகள். ஒன்று  சுவாமிநாத ஆத்ரேயனுடன்.   தி.ஜானகிராமன் பற்றி   அவர்   சுழித்தோடும்  காவிரிபோல் பொங்கிப்பொங்கிப்பேசுகிறார்.

‘அவர் (.தி.ஜா)  வந்து சம்பாஷ்ணயையே சங்கீதமாக்கிப்புடுவார் எம்ட்டன் லயத்தையே  சங்கீதமாக மாத்தி –சங்கீதமா, லயமா, பாவமா, வார்த்தையான்னு தெரியாம ஒண்ணுக்கொன்னு,  மலைத்தேனும் பசும்பாலும் குடிக்கும் சூட்டில் கலந்தாற்போல, செய்ஞ்சு பதமா  தர  வித்தை, அவர்கிட்ட குடிகொண்டிருந்தது’

கொஞ்சமாவது அகம்னு வச்சுக்கலைன்னா’ என்கிற தலைப்பில் நெய்வேலி சந்தானகோபாலனுடன்  அடுத்த ஒரு நேர்காணல்.  உங்களுக்கு ஒரு சான்று சந்தான கோபாலினின் பதிலிலிருந்து.

‘தியாகராஜ சுவாமிகள்லாம் பொறக்கறதுக்கு மின்னயே தமிழ் நாட்ல் தமிழிசைதான் இருந்திருக்கு. அதைத்தான நம்ம முன்னோர்லாம் பாடிண்டு இருந்துருக்கா? சரபோஜி வந்தப்புறம்தானே தெலுங்கு அவ்ளோ பிராபல்யம் ஆயிருக்கு………  தமிழிசைதான் முதல்ங்கிறதுல , மூத்ததுங்கறதுல  இங்க யாருக்கும் அபிப்ராய பேதமில்லே!

ரவிசுப்ரமணியனின் இந்தப்புத்தகம் தமிழ் படைப்புலகம் ஆழ்ந்து வாசிக்கவேண்டிய ஒன்று. வாசகர்களின் புரிதலை ஆழப்படுத்திட இத்தகைய புத்தகங்களின் வாசிப்பு கட்டாயம் என்பதுவே  என் பணிவான அபிப்ராயம்.

-----------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

என்னத் தவம் செய்தோம் கட்டுரை

 

 

என்னத் தவம் செய்தோம்.                                                

 

’இலக்கியச்சோலையின் ஆலமரம்’ இது நூலின் தலைப்பு.  38 கட்டுரைகளக் கொண்ட ஒரு தொகுப்பு  நூல். தொகுத்தவர் நாடறிந்த நல்ல எழுத்தாளர் பாவண்ணன். எங்கே இருக்கிறது இலக்கியச்சோலை? யார் இந்த ஆலமரம்?   இக்கேள்விகளுக்கு விடை சொல்லித்துவங்கலாம்.

இலக்கியச்சோலை கடலூரில் இருக்கிறது. ஆலமரமாய் வாழ்பவர் வளவ. துரையன். எழுபத்தைந்து அகவை நிறைந்த இந்தத் தமிழ்ப்பணியாளர் கடலூரில் வாழ்கிறார். ஆசிரியராகப்பணி புரிந்து ஓய்வு பெற்ற வளவ.துரையன் வளவனூர்க்காரர். அண்ணாதுரையின் மீது தனக்கிருந்த  பற்றுதலால் துரையன் என்பதை ஊரோடு சேர்த்துக்கொண்டு வளவ. துரையன் ஆனார்.

 சங்கு இலக்கியக்காலாண்டிதழின் ஆசிரியர்.  கடலூர் இலக்கியச்சோலை என்னும்  பேரமைப்பின் மூல வேர்.  அன்னாருக்குச் சிறப்பு சேர்க்கத் தமிழ் அன்பர்களால் எழுதப்பட்டக் கட்டுரைகளின் தொகுப்பையே சந்தியா பதிப்பகம் அழகிய புத்தகமாக  வெளியிட்டுள்ளது.

முதல் கட்டுரை நாஞ்சில் நாடன் ’எம்முளும் ஒரு பொருநன்’  என்று தலைப்பிட்டு எழுதியிருக்கிறார். அதன்  இறுதி வரிகளில் இப்படிப்பேசுகிறார்.

‘வாழ்த்தவும் பாராட்டவும் மதிப்புரை எழுதவும் முக நூலில் பதிவிடவும் சினிமா அரசியல் சாதி பின்புலங்கள் இன்றியமையாதனவாகக் கருதப்படும் சம கால இலக்கியச் சூழலில் வளவ. துரையன் போன்ற மூத்த தமிழ் எழுத்தாளருக்குச் சிறப்பிதழ் வருவது உவப்பானது.’  இதைவிடக்  கருத்துச்செறிவாய் வளவ. துரையன் பற்றிச் சொல்வதற்கு ஏதுமில்லை.

 மன்றவாணன் என்னும் எழுத்தாளர்’ தமிழ்தான் முதல், அப்புறம்தான் நீ’ என்னும் தலைப்பிட்டுத் தமிழாகவே வாழும் வளவதுரையனுக்குப் பெருமை சேர்த்துள்ளார். பிராமண குலத்தில் பிறந்த யாரும் தம் பிள்ளைகளுக்குத் தனித்தமிழில் பெயர்கள் சூட்டுவதில்லை. இறைவன் பெயரே ஆனாலும் முருகன் என்ற பெயரை வைப்பதில்லை. ஆனால் இவர் தம் பிள்ளைகளுக்கு எழிலன், முகிலன், அல்லி என அழகு தமிழ்பெயர்களைச்சூட்டித் தமிழுணர்வில் திளைத்தவர் என்று பெருமையோடு குறிப்பிடுகிறார்.

எழுத்தாளர் அன்பாதவன்  வளவதுரையன் பற்றி,’ ஏரியின் சில்லிப்பு, ஏரிக்காற்றின் குளிர்மை, தாகம் தீர்க்கும் தாய்மை, கரைகளால் காவல் என வளவனூரின் படிமமாகவே இனியவர் வளவ. துரையனின் இலக்கியப்பயணத்தைக் காண்கிறேன்’ என்கிற பட்டயம் வழங்கிச் சிறப்பு செய்துள்ளார்.

முனைவர் பாஸ்கரன் தனது படைப்பில் ’ ஒரு பருந்துப்பார்வையில் முப்பது ஆண்டுகளாய் எழுதிவரும்  வளவ. துரையனின் படைப்புகளை ஒரு குறுக்கு வெட்டுத்தோற்றத்தில் பார்க்கும் போதுவெவ்வேறு வண்ணங்களிலும் கோணங்களிலும்  எழுதப்பட்ட  தவிப்பின் சித்திரங்கள்  நிறைந்திருப்பதை உணரமுடியும்’ என்று முடிக்கிறார்.

எழுத்தாளர்  எஸ். ஜெயஸ்ரீ ,’ கால் நூற்றாண்டாக இவ்வளவு பெரிய ஆளுமை நம்மோடு  இருப்பதற்கு நாம் என்ன தவம்  செதிருக்கிறோம் என்று பல சமயங்களில் நான் வியந்து போயிருக்கிறேன் என்று உணர்ச்சி மேலிடக் குறிப்பிடுகிறார்.

கோவி. ஜெயராமன் என்னும் எழுத்தாளர் ‘நிழல் தரு’ என்னும் தனது கட்டுரையில் இப்படி எழுதிச்செல்கிறார்.

‘எந்த இலக்கிய இசங்களுக்குள்ளும் அடங்கிவிடாமல் அதே சமயம் எல்லாவற்றையும் உள்வாங்கிக்கொள்ளும் கடல் போன்றது இவருடைய மனம். எதன் மீதும் இவருக்கு வெறுப்பு இல்லை’  எத்தனை கச்சிதமான வரையறை.  நூலை வாசிக்கும்  வாசகன் நெகிழ்ந்துதான் போகிறான்.

கடலூர் சீனு என்னும் சீரிய வாசகர், தனது ‘ அபூபுர்வ மனிதர் என்கிற கட்டுரையில், எழுத்தாளர் வளவ. துரையன் அவர்களின் பெயரை நான் கேள்விப்பட்டது எழுத்தாளர் ஜெயமோகன் வசமிருந்துதான். எழுத்துலக ஜாம்பவான் ஜெயமோகன் சொல்ல  அவரைத்தான்  அறிந்து கொண்டதாய்க் குறிப்பிடுகிறார்.

தாமே செம்மைப்படுத்திக்கொண்ட பாதையில் வளவதுரையனுடைய தேர்  சீரான வேகத்தில் நகர்ந்துகொண்டே இருக்கிறது என்று  முத்தாய்ப்பாகப்  புத்தகத்தை முடிக்கிறார் பாவண்ணன்.

தமிழ் எழுத்துலகில் இப்படி ஒரு சிறப்பை  ஒரு எழுத்தாளன்  சக எழுத்தாளனுக்குச் செய்ததில்லை. இதுவே ஒரு வரலாறு. ஆலமரத்தை  அறிவோம்  வாருங்கள்.

 

 

தொகுப்பாசிரியர்        பாவண்ணன்

 சந்தியா பதிப்பகம்  பக்கங்கள்  286 விலை ரூ 350  பதிப்பு 2025.

---------------------------------------------

ஜூன் 2025 சிறுகதை குவிகம் தேர்வு

 

ஜூன் 2025  ல் வெளிவந்த சிறுகதைகள் குறித்து.

எல்லோருக்கும் வணக்கம். நான் எஸ்ஸார்சி

குவிகம் நிர்வாகிகள் ஜூன் மாதம் வெளியான . 54 சிறுகதைகளை எனக்கு அனுப்பிவைத்தார்கள் அவைகளை நான் மூன்று தவணைகளில் பெற்றுக்கொண்டேன். அவை அத்தனையும் படித்துப் பரிசீலித்துக் கீழ்க்கண்ட  முடிவுகளைத் தெரிவிக்கிறேன்.

முதல் தகுதி பெறும்  சிறுகதையாக ஜூன் மாதம் அம்ருதாவில் வெளியான’’காலியாகுதல்’ என்னும் சிறுகதையைத்தேர்வு செய்கிறேன். சிறுகதையை எழுதியவர் வண்ணதாசன். சிறப்பான கதைக்கரு.  அற்புதமான நடை.

சிறுகதையில்  வரும் நடராஜன் என்னும் ஆசிரியர் சொர்ணாம்மாவைத்  திருமணம் செய்துகொள்கிறார். தம்பதியர் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள்.  ஆனால்  ஒரு கொடுமையான விஷயம் நடந்து விடுகிறது.   சொர்ணாம்மாள்  தனது  முன்னாள் காதலன் சரவணனுக்கு உடல் நிலை சரியில்லை ஒரு நடை  பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று போய் விடுகிறாள். ஆனால்  அவள்  திரும்பி வரவேயில்லை.

நடராஜன்,  பெருமாள் லட்சுமியை இரண்டாவது திருமணம்  செய்து கொள்கிறார்.

 சொர்ணத்தோடு  தான் வாழ்ந்தபோது கேட்ட அந்தக் கிளிச்சத்தம் மட்டும்  ஏனோ அவருக்குத்திரும்பக் கேட்கவேயில்லை.

இந்த இரண்டு திருமணத்தையும் நண்பர் ஆயான் முன்னின்று நடத்துகிறார்.

சரவணனோடு  வாழ்ந்து வந்த நடராஜனின்  முதல் மனைவி சொர்ணம் செத்துப்போகிறாள்.  சாவு செய்தி  வருகிறது.  ஆயான்  சொர்ணம் சாவுக்குச் சென்று வருமாறு  நடராஜனை வேண்டுகிறார். அவரும்  அதற்குச்செல்லத்தயார் ஆகிறார். அவரோடு பெருமாள் லட்சுமி என்னும் அவரின் இரண்டாவது மனைவியும் மகனும்  இணைந்து செல்லவேண்டும்.  அவரை   எப்போதும் ஆற்றுப்படுத்தும் அனுபவஸ்தர்  ஆயான் அவர்களோடு  உடன் வரவேண்டும் என இருவருமே விரும்புகின்றனர்.

ஓடிப்போன அந்த சொர்ணத்தோடு வாழ்ந்த  சரவணன்,

 ‘நீங்க மூணு பேரும் வந்து அவளை நல்லபடியா வழி அனுப்பி வைக்கணும்’ என்று  சொல்லி அனுப்பிய  சேதியோடு சரவணனுக்கு வேண்டிய இருவர் நடராஜன்  இல்லம் வருகின்றனர்

பெருமாள் லட்சுமி   அவர்களை வரவேற்கிறாள். இருவருக்கும் பவண்டோ  கொடுக்கப்படுகிறது. ஒருவர் உடனே குடித்துவிட்டுக் காலி செய்துவிடுகிறார்.. மற்றொருவர் பாட்டிலைக் கையில் வைத்துக்கொண்டே குடிக்காமல் இருக்கிறார். இதற்குக்காரணம் ஏதுமில்லை. அப்படி அமைந்து விடுகிறது மனித வாழ்க்கை என்கிறார் வண்ணதாசன்.

மனிதன் நிகழ்ந்துவிட்ட கசப்பான விஷயத்தை மனதிலிருந்து அகற்றி வாழ முயற்சித்தல் சிறந்தது  என்னும் உயரிய மானுடப் பண்பு போற்றும்  சிறகதை.  சிறப்பான படைப்பு.

நன்றல்லது அன்றே மறத்த்ல் நன்று என முடியும்  குறளை வாசகன் எண்ணிப்பார்க்கிறான்.

பிற கதைகள் பற்றி,

உயிர் எழுத்து வில் வெளியான இன்னொரு கதை’ முறிவு’ எழுதியவர் அபிமானி. அணிலுக்குச் சாப்பாடு கொடுத்து மகிழும் கதாநாயனின் கதை. எச்சில் சோறு கொடுத்தால் தொடாத அணில் பற்றிய செய்தியொன்று கேட்கிறோம். கல்வியில் வேலை வாய்ப்பில் இடது ஒதுக்கீடு பற்றி ஒரு விவாதத்தை அணிலின் கதையோடு முடிச்சுப்போடுவதுதான் நெருடலாக எனக்குப்படுகிறது.   மற்றபடி அபிமானியின் கதை சொல்லல் சிறப்புத்தான்.

மீண்டும் ஒரு உயிர் எழுத்து கதை.’ ஒரு பைத்தியக்காரனும் ஒரு சைக்கோகாரனும்’ எழுதியவர் கோவிந்த் பகவான். சிறப்பான நடை. செழுமையான விவாதம் .  ’அவன் அப்படித்தான் காபி சாப்பிடும் போது காபியை மட்டுமே சாப்பிடுவான். நல்ல கழுகுப்பார்வை ஆசிரியருக்கு

.பவா செல்லதுரை எழுதிய  வீணை என்னும் சிறுகதை  விகடனில் வெளியானது. காதல் படுத்தும் பாடு பேசு பொருளாகியிருக்கிறது. வீணைஎன்னும் இசைக்கருவி காதலர் இடை கிடந்து திண்டாடுகிறது. விரு விருப்பான கதை.

’இன்றைக்கு என் பெயர்’  நெய்வேலி பாரதிக்குமார்  எழுதி குமுதத்தில் வெளியான  படைப்பு.   தமிழ் ஆசிரியர்  பரிதி அய்யா பற்றிய ஒரு புதுமையான கதை.’ நதியில் விளையாடி கொடியில் தலை சீவி’ கரும்பலகையில் எழுதிப்போட்டு எதுகை மோனை இலக்கண விளக்கம் தரும்  ஒரு தமிழ் ஆசான் பற்றிய கதை. அற்புதமான எழுத்து.

ரேவதி பாலு எழுதிய  ’மது ஒழிப்பு மாநாடு’  சிறுகதை நடுகல்லில்  வெளி வந்திருக்கிறது. பேசுபொருள்  சாராயக்கடை திறப்பதை எதிர்த்து ஒரு இயக்கம்.  உயரிய நோக்கம். வாழ்த்துக்கள்.

பொதுவாக சில  சிறுகதைகள் சாதாரணமாகவே  இருந்தன. பாலியல் மிகையாய்ச் சில கதைகள் காணப்பட்டன.

25, 26  பக்கங்கள் எழுதி அதனைச்சிறுகதையெனச் சொல்லும் படைப்புக்களும் உண்டு.  சிறுகதை எழுத்தாளர்கள்  எல்லோருக்கும்  எனது வாழ்த்துக்கள்.

நல்வாய்ப்பு வழங்கிய குவிகத்திற்கு எனது நன்றிகள்.

மிக்கஅன்புடன்

எஸ்ஸார்சி

 

 

 

 

கொடுமை - கவிதை

 

 கொடுமை              

 

வீடு தேடி வந்த

காமாந்தகனுக்கு

‘அய்யாவுக்கு எப்படி இருந்தா பிடிக்கும்

சைவமா வைணவமா’

வினாவைத்தானாளாம் விலைமகள்

பட்டமளிப்புவிழா பல கண்ட பேராசிரியர்

இந்நிலத்துக்கு அமைச்சரும்கூட

கொடுத்திட்ட சைவ வைணவ விளக்கம்                   

உலகமே கேட்டுத்தானிருக்கிறது

வானாகி மண்ணாகி

பாடிய மணிவாசகரும்                                                                

சிற்றம் சிறுகாலே பாடிய

திருவில்லிப்புத்தூர் நங்கையும்

ஏன் பெரியபுராணம் தந்த சேக்கிழாரும்

திருபெரும்புதூர் ராமானுஜரும்

வெண்ணீரணிந்த வள்ளலாரும்

கல்லரையில்  இந்நேரம் புரண்டு புரண்டு படுத்திருப்பார்கள்

தெய்வத்தமிழ்தந்த தேவர் மண்

பெரிதாய் அலட்டிக்கொள்ளவுமில்லை

நெஞ்சு கனக்கிறது

காலம்தான் விடை தரணும்.

-----------------------------

 

 

பிரம்மமுடிச்சு -கதை

 

 

 

 

பிரம்ம முடிச்சு                                           

 

’மணவிலக்கு பெற்றவரோ  கணவனை இழந்தவரோ ஒரு குழந்தையுடன் இருந்தாலும் சரியே ஜாதியோ மதமோ பார்க்காமல் திருமணம் செய்துகொள்ள சம்மதம்.ஆங்கிலம் ஓரளவுக்குத் தெரிந்திருந்தால் சிறப்பு .வயது முப்பதுக்குள் இருத்தல் நலம்’ இப்படி வந்திருந்தது விளம்பரம்.  மணமகனுக்கு ஹைதராபாத்தில் வேலை. ஐடியில்  போதுமான வருமானம். வயது முப்பத்தைந்து. அப்பாதான் விளம்பரத்தைக்கொண்டு வந்து காட்டினார். நான் வாங்கிப் படித்துப்பார்த்தேன். விளம்பர அழகே என்னைத் திரும்ப திரும்ப  வாசிக்க வைத்தது. தொடர்புகொள்ள தொலைபேசி எண்ணைக் கொடுத்திருந்தார்கள்.

‘இது இரண்டாவது மணமாக இருக்கும். அப்படித்தான் தோன்றுகிறது எனக்கும்’ அம்மா சொன்னாள்.அம்மா எப்போதும் அப்பாவின் கோணத்திலிருந்து  எதையும் பார்க்க மாட்டாள்தான்.

‘அப்படித்தான் இருக்கட்டுமே.’ அப்பா பட்டென்று சொன்னார். என்னைப்பார்த்தார். அவன் எப்படி வேண்டுமானால் இருக்கட்டும். உள்மனம்  சேதி சொல்லிற்று. அப்பாவுக்கு  நான் பதில் ஏதும் சொல்லவில்லை. என்னைப்பற்றி உங்களுக்கு முதலில் சொல்லி விடவேண்டும். அதுதானே பிரதானமானது.

தாமிரபரணி ஆற்றங்கரையிலுள்ள சிறு நகரம் சேரன்மாதேவி நான் பிறந்தது.  ஊருக்கு வடக்கே ஆற்றங்கரை.பெரிய பெரிய புளிய மரங்கள் வானைத்தொட்டுக்கொண்டு நிற்கும். புளியந்தோப்பு முழுவதும் . குரங்குகளின் ஆட்சி. ஆற்றோரமாய் ஓரமாய் ஒரு விநாயகர் கோவில். கோவிலைச்சுற்றிலும் தடித்தடியாய் செம்பட்டை நிறத்தில் படுத்துக்கிடக்கும்  பாறாங்கற்கள். கோவில் சுவரைத் தொட்டுக்கொண்டு மங்களூர் ஓடு போட்ட அர்ச்சகர் வீடு.   கோவில் தர்மகர்த்தாதான்  அப்பாவுக்குக் கொடுத்திருக்கிறார். அப்பாவுக்கு விநாயகர் கோவிலில் பூஜை முறை. பூஜை நேரம் முடிந்தகையோடு தாமிர பரணி ஆற்றின் கரையில் திதி கொடுப்பவர்கள் தானம் கொடுப்பவர்கள் அப்பாவைக்கையோடு கூட்டிப்போய்விடுவார்கள். அப்பா வெறுங்கையோடுதான் ஆற்றுக்குப் போவார். கூடைகள் பல அரிசி காய்கறியோடு  வீட்டிற்கு வந்துவிடும். அமாவாசையன்று  ஆற்றில் நல்ல கூட்டமிருக்கும். அப்பா எல்லாவற்றையும் சமாளிக்கவே திணறிப்போவார்.

‘ஒரு  ஆம்ள புள்ளயா நீ பொறந்திருக்கக் கூடாதா.’ அம்மா அடிக்கடி சொல்லிக்கொள்வாள். அப்பா அதற்கெல்லாம் பதில் சொல்லவே மாட்டார்.

‘உங்களுக்கு ஒரு  கை ஒத்தாசையா இருக்குமேன்னுதான் சொல்றேன்’ அம்மா அழுத்திச்சொன்னாள்.

‘ஒருத்தர் எங்க பொறக்கணும் எப்ப பொறக்கணும் எப்பிடி பொறக்கணும்னு யார் தீர்மானம்பண்றா. இல்ல ஒருத்தர் எப்பிடி  முடியணும் எப்ப  முடியணும்னுதான் யாரானு தீர்மானம் பண்ணிக்க முடியுமா.’

அப்பா அம்மாவுக்கு விளங்காததையெல்லாம் பேசிவிட்டு ஒதுங்கிவிடுவார்.

சரி  என் கதைக்கு வருகிறேன். விநாயகர் கோவிலுக்கு  பூ மாலை கட்டி ஒரு பெண்மணி அன்றாடம் அனுப்பிவைப்பார். அந்த அம்மாவின் பையன் தான் ஒரு தென்னங்குடலையில் பூ மாலையை எடுத்து வந்து கொடுப்பான். அவ்வப்போது அந்த மாலை கட்டும் பெண்மணியும்  ஸ்வாமிக்கு மாலையை எடுத்துக்கொண்டு வருவதுண்டு. சேரன்மாதேவி பேருந்து நிலையத்தில் இவர்களுக்கு ஒரு பூக்கடை இருந்தது. அப்பா மாலையை கோவிலில்  வாங்கி வைப்பார். அன்றாடம்  விநாயகருக்குச் சாத்துவார்.  அப்பா எங்காவது வெளியில் சென்றிருந்தால் நான்  அந்த பூவை வாங்கி வைப்பேன். அப்பாவிடம் சேர்த்துவிடுவேன். இது எத்தனையோ வருஷமாகத் தொடர்ந்து கொண்டிருந்தது. அந்த பூக்காரியின் பையன் பத்தாம் வகுப்பு வரை படித்தான். பள்ளியை விட்டு நின்று போனான்.

‘பாக்குற பூ கட்டுற வேலைக்கு  பத்து கிளாஸ் வல்ரைக்கும்  பெரிய ஸ்கூலு  போய் வந்தது  போதாதா.  இவுரு மேலைக்கு என்ன  கலைக்டரு  ஒத்யோகம் பாக்க போறாரு’ என்றாள் அவனின் தாய். அவன்  தினம் பூக்கூடை எடுத்து வருவான். நான் தான் ஒருநாள்  விநாயகருக்கான  அந்த மாலையை வாங்கி வைத்தேன்.  பூமாலையை என்னிடம் கொடுக்கும்போது அவன் கை என் கை மீது பட்டது. பளிச்சென்று ஒரு மின்னல் தாக்கியதாய் உணர்ந்தேன். இது தெரிந்தே அவன் செய்தானா அவனை அறியாமல்  இப்படி நிகழ்ந்ததா எனக்குப்பிடிபடவில்லை. ஏன் இப்பிடி இது நிகழ்ந்தது என்று மனம் விசாரிக்க ஆரம்பித்தது. நல்ல விசாரணையாய்த்தான்   முதலில் ஆரம்பித்தது. மற்றொரு நாள்  என் கை அவன் கை மீது பட்டது. ஏதோ அத்தொடுகை  ஒரு பூரிப்பை மகிழ்ச்சியைத் தந்ததாய் உணர்ந்தேன். இத்தொடுகை தொடர்ந்தது.  விளையாட்டாய் நீண்டது. ஒரு நாள் திருநெல்வெலி இருட்டுக்கடை அல்வா வாங்கி வந்தான்.  பூமாலையோடு  அல்வா பொட்டலத்தைக்  கொடுத்துவிட்டுப்போனான். நான்தான் சரியாய்ப் பார்க்கவேயில்லை. அப்பா  அல்வாவை பார்த்துவிட்டு ’இது ஏது அல்வா பொட்டலம்’ என்று என்னைக்கேட்டார். நான் எனக்கும் தெரியாது என்றேன். அவன் இதை என்னிடம் சொல்லித்தான் கொடுத்தானா நான் தான்  அதைக்காதில் சரியாக வாங்காமல் இருந்துவிட்டேனா ஐயம் வந்துகொண்டே இருந்தது. விநாயகருக்கு மாலையோடு எனக்கு ஒரு முழம் ஜாதி மல்லி யை ஒரு பொட்டலாய்க்கட்டி எடுத்து வந்தான்

.’ ஒனக்கும் பூ கொண்டாந்து இருக்கன்’ என்றான்.

 ‘ உன்னை  யார் கேட்டா பூ’ என்றேன்.

 ’நானேதான் கொண்டு வந்தேன்.’ என்றான்.

 ’எடுத்துக்கொள்’  அழுத்திச்சொன்னான்.

 வேண்டா வெறுப்பாக அப்பூவை எடுத்து தலையில் வைத்துக்கொண்டேன். அப்பா இது பற்றி எல்லாம் கண்டுகொள்ளவேயில்லை. அம்மா மட்டும்

 ’ஏது பூ’ என்றாள்.

’கோவிலுக்கு வந்தது. கொஞ்சம் தலைக்கு வைத்துக்கொண்டேன்’ பொய் சொன்னேன்.

எனக்கு பூக்காரியின் மகன் நினைவே அடிக்கடி வந்து  போனது. ’இது தவறல்லாவா’ என்றது  என் மனம். ’ஒன்றும் தவறில்லை’ விடு என்றது இன்னொரு  சமயம் அதே மனம். எனக்கு  அவ்வப்போது அவனைப்பார்க்கவேண்டும் என்று  தோன்றிக்கொண்டே இருந்தது. தூக்கம் அரைகுறையானது. ஒரு நாள் பேருந்து நிலையம் அருகேயுள்ள  அவன் பூக்கடைக்குப் போய் நின்றேன். அவனைச் சும்மா பார்த்துவிட்டு வந்துவிடுவோம் என்று தான்  கிளம்பினேன். பூக்காரியைக் காணவில்லை.

‘அம்மா இல்லையா’

‘சரக்கு வாங்க டவுண் போயிருக்காங்க’

அதற்குமேல் என்ன செய்வது என்று தெரியவில்லை. நான் அங்கேயே  தயங்கி நின்று கொண்டு இருந்தேன்.  நான் அப்படி  ஏன் நின்றேன்.

‘கடை உள்ளார வரலாம். செத்த உக்காரலாம்’ அவன்.

நான் கடைக்குள்ளாகச் சென்றேன். கடைக்குப்பின்னால் சிறிய புழக்கடை. குடத்தில் தண்ணீர்.  அதன் வாயில்  ஒரு குவளை.ஒரு நாடா கட்டில்  பாவமாய்க்கிடந்தது. அந்தக்கட்டிலில் சற்று உட்கார்ந்து பார்த்தேன். நன்றாகத்தான் இருந்தது. அவன் கடையின் வாயிலில் சுருட்டிக் கட்டப்பட்டிருந்த  சிமெண்ட் சாக்கை அவிழ்த்து விட்டான். கடை சாத்தப்பட்டிருப்பதாக வெளியே இருப்போர்க்கு  அது  அறிவித்தது. நான் அந்த கட்டிலிலேயே இன்னும் அமர்ந்து தானே இருக்கிறேன்.’ பரவாயில்லை’ என்று பாழும் மனம் சொல்லியது. அவன் கட்டில் அருகில் வந்தான். நான் அவனையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்.அவன் என் அருகில் அமர்ந்தான். என் கைகளைத் தொட்டான். நான் அவன் மடியில் சாய்ந்தேன். அவன்  கதகதப்பான மடி. அது  மட்டுமே  இன்னும் இன்னும் வேண்டுமென்று  மனம்  என்னைக் கெஞ்சியது. அவன் கைகளை நானே எடுத்து என் மார்போடு இருக்கி வைத்தேன்.சற்று இருக்கியும் வைத்தேன்.அவன் என் உடல் முழுவதும் முத்தமிட்டான். நானும்தான். அவனை மொத்தமாய்க்கடித்துத் தின்று விடவேண்டும் என்று எனக்குத் தோன்றியது. இருவரும் சர்ப்பமாய் இருக்கிக்கொண்டோம்.  பிறகு  அதுதான் நிகழ்ந்தது. ஆம் அதுவே நிகழ்ந்தது. உடல் சிலிர்த்தது. ஆகாயத்தில் பறந்து  கருமேகத்தை எல்லாம் தொட்டுக் கொஞ்சிப் பேசி விட்டு  வந்ததாய் உணர்ந்தேன். அவன் பைய எழுந்தான்.  முகம் துடைத்துக்கொண்டான்.அவன் கடைப்பகுதிக்குச் சென்றான். தொங்கிக்கொண்டிருந்த சாக்கை மீண்டும் சுருட்டி மேலே கட்டி விட்டான். பூக் கடை திறந்து கொண்டது.

சாதித்துவிட்டதாய்த்தோன்றியது   முதலில்  எனக்கு. சற்றைக்கு எல்லாம் வயிற்றைக் கலக்கியது. மனம் ’தொலைந்து போனாயடி நீ’ என்று விரட்டியது. கள்ள மனம் திருட்டுப்பூனையாய் இயங்குவதை நன்கு உணர்ந்தேன்.என் அப்பாவுக்கோ உள்ளூர்  விநாயகர் கோவில் பூஜை. வீதியில் வருவோரும் போவோரும் அவரை ‘வணக்கம் சாமி’ என்று மட்டுமே  மரியாதை செய்வதைத் தினம் பார்த்து வருபவள் நான்.

அவனே தான் தினம் தினம் விநாயகர் கோவிலுக்கு மாலை எடுத்து வருவான். கூடவே எனக்கும் பூக் கொண்டு தருவான்.என்  அம்மாவும் அதனைத்தவறாகவே எடுத்துக்கொள்ளவில்லையே. நானும் பூக்காரி இல்லாத நேரங்களில் கடைக்குப்போவேன்.  ஆசை விரட்டியது. அந்த தவறை தொடர்ந்து செய்துகொண்டே இருந்தோம். ஒரு நாள் இனி நான்  என் வீட்டுக்குப் போக மாட்டேன். உன்னோடேயே இருப்பேன் என்று இருந்து விட்டேன். பூக்காரிக்குத் தெரிந்து போனது விஷயம்.

‘அடி ஜோட்டால. அவுக யாரு. நாம யாரு. நீ மாபாவியா இருப்பயா, இது அடுக்குமா. சாமின்னு நாம கீழ உழுந்து கும்புடற சனம். நாம கண்ட  கசமாலத்த திங்குற ஈன சாதின்னு  ஒரு ஒணக்க வேணாமா. இப்ப அந்த  கோவிலு அய்யிரு  மொகத்துல நா எப்பிடி முழிக்குவேன். தீயில்ல  வச்சிட்ட  அவுக சாகையிலே. இந்த பாவத்ததான் நா எப்பிடி வெளிய சொல்லுவேன் இத ஆராலயும்  கழுவத்தான்  வைக்குமா’  பூக்காரி ஒப்பாரி வைத்து அழுதாள்.

‘நீ ஒசந்தகுடி பிலஸ் டூ வல்ரைக்கும்  படிச்ச பொண்ணு. ஆயி அப்பன நெனச்சி பாக்கமாட்டியா.‘  பீயதுன்னுப்புட்டயே. இது அடுக்குமா. பொறப்புலயே ஆம்பள சனம்  மொத்தமா நாயிவதான, என் சாமி  நீ  ஏமாந்து பூட்டயே.  தங்கமே நீ  என்னாத்த தொலச்சிபுட்டு  நிக்குறன்னு ஒனக்கு வெளங்குதா  இது என்னடா தும்பம்’.  புலம்பினாள்.

என்னைத்தேடிக்கொண்டு என் அப்பா அம்மா யாரும் பூக்கடைக்கு வரவில்லை. வந்துதான் இனி என்ன ஆகப்போகிறது. அவர்கள் அப்படி வரத்தான்  முடியுமா  வருவார்களா, வரலாமா, ஊராருக்கு இல்லை  கோவில் தருமகர்த்தாவுக்கு  இது விஷயம் தெரிந்தால் அப்பாவை அம்மாவை எத்தனைக்கேவலமாக பார்ப்பார்களோ. என் கண்கள் நீரைச்சொறிந்து சிவந்து போயின. என் மனம் கனத்தது.

‘ நா அந்த அய்யிரு மூஞ்சில முழிக்க மாட்டன். எந்த மொகத்த வச்சி  இனி அவுர பாக்குறது’ என்ற பூக்காரி அந்த ஊரை விட்டே கிளம்பினாள். ‘ கெளம்புங்க இங்க  என்ன ஜோலி நமக்கு’ எங்களையும் வேண்டினாள். அருகேயுள்ள பாபநாசம் ஈசுவரன் சந்நிதிக்கு நாங்கள் மூவரும் புறப்பட்டுச்சென்றோம். பூக்காரிக்குத் தெரிந்தவர்கள் ஒரு கடை போட உதவினார்கள்.  பூக்கடைதான் வைத்தோம். காலம் கைவரிசை காட்டியது. எனக்கு ஒரு பையன் பிறந்தான். அம்மா அப்பா என் மனதிற்குள் மட்டுமேயிருந்தார்கள்.  இனி நாம் எங்கே சேரன்மாதேவி போவது என்றிருந்தேன்.

 தினம் தினம் தாமிரபரணியில் குளித்துவிட்டு வரும் என் கணவன் ஒரு நாள் வெகு நேறம் ஆகியும் வீடு திரும்பவில்லை. நானும் பூக்கார மாமியாரும்  குளிக்கப்போன ஆளைக்காணவில்லையே என யோசனையில் இருந்தோம். தாமிரபரணியில் அன்று வெள்ளம். அணை திறந்திருந்தார்கள். தாமிரபரணிச் சுழலில் மாட்டிய என் கணவன் பிணமாகத்தான் வீடு திரும்பினான்.  கதை முடிந்துபோனது. நடக்கவேண்டியவைகள் எல்லாம்  சட்டப்படியே ஆயிற்று.  கைக்குழந்தையோடு நானும் என் மாமியாரும் மட்டுமே வீட்டில் இருந்தோம். விதி  என் வாழ்க்கையை  எப்படியெல்லாம் சின்னாபின்னமாக்கியது  நான்  நினைத்து நினைத்து  அழுதுகொண்டேயிருப்பேன்.பூக்காரியான  மாமியார் தன் மகன் இறப்புக்குப்பின் சுத்தமாய் நொடிந்துபோனாள்.

‘என் தங்கமே நீ  ஒன் அப்பா ஆத்தா வூட்டுக்கு போயிடு.  அவுக  ஒனக்கு ஒரு வழிய காட்டுவாக.  ஒன்னய வுட்டுட மாட்டாங்க. கை புள்ளக்காரி நீ’ என்றாள். ஏதோ   கொஞ்சம் உடம்புக்கு  முடியவில்லை என்று  படுத்தாள். அவ்வளவுதான் பொசுக்கென்று போய்ச்சேர்ந்தாள். நானும் என் இரண்டு வயது பையனும்  பாபநாச நாதர் சந்நிதியில் விழுந்து கும்பிட்டு விட்டுப் புறப்பட்டோம்.  எனக்கு அச்சமாக இருந்தது. எப்படியோ  சேரன் மாதேவிக்கு வந்து சேர்ந்தோம்.  அங்கு  பேருந்து நிலையமே பிரம்மாண்டமாய்  மாறியிருந்தது.  சுற்றிலும் நோட்டம் விட்டேன். அந்த  பூக்கடயைத்தான் நான்   இனி  எங்கே தேடுவது.  சேரன்மாதேவியில் அதே விநாயகர் கோவில் வீட்டில்தான் அம்மாவும் அப்பாவும் மெலிந்து  உடல் மெலிந்து  வாழ்ந்து கொண்டிருந்தார்கள். நான்’ அம்மா’ என்று அலறினேன். வீட்டு வாயிலில் போய் நின்றேன். அம்மா என்னைப்பார்த்துவிட்டாள்.

‘ஒனக்கு கருமாதி பண்ணியாச்சி.  அந்தத் தாமிரபரணில எள்ளும் தண்ணி விட்டாச்சே. நீ  தெருவோட போயிண்டே இரு. என் முன்னாடி  நிக்காதே’  ஓங்கிச்சொல்லிய என் அம்மா கதவை பட்டென்று சாத்தினாள். நான் கையில் குழந்தையோடு   வீதியில் நின்று கொண்டிருந்தேன். அப்பா கதவைத்திறந்து கொண்டு வெளியே வந்தார். என்னருகேயே  வந்தார். என் கைகளைப் பிடித்துக்கொண்டார். நரைத்த முடி அடர்ந்த மார்பு துள்ளத் துள்ள குலுங்கி அழுதார்.

‘ ஒனக்கு விஜயகணபதின்னு நாந்தான் பேர் வச்சேன். நா  பூஜையில என்ன கொற வச்சேண்டா .. இப்பிடி என்ன செதச்சிட்டயேடா  என் அப்பனே என்  தெய்வமே’ என்று விநாயகரைப்பார்த்துக் கத்தினார். என் குழந்தை அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். அப்பா  என்னைப்பார்த்தார். ‘ வா எம் பின்னால’ என்றார். விநாயகர் கோவில் சந்நிதிக்கு அழைத்துப்போனார். கோவில் ராட்டினக்கிணற்றில் மூன்று வாளி தண்ணீர் சேந்தி என் தலையிலும் என் பிள்ளைத்தலையிலும் ‘கணபதி கணபதி ’ ன்னு சொல்லிக் கொட்டினார். ‘புள்ளயார ஒரு சுத்து சுத்திவா.   அந்த தெய்வத்துக்கு ஒரு  நமஸ்காரம் பண்ணு. ஆத்துக்கு போ’ என்றார். எனக்கு என்ன  நிகழ்ந்தது எதுவும் அப்பா கேட்கவில்லை. நான் அழுதுகொண்டே சொன்னேன். பாபநாசம் வாழ்க்கையை முழுவதுமாய்ச்சொன்னேன். என் கணவர் தாமிரபரணிச் சுழலில்  முடிந்துபோனதை அந்த சோகத்தில் பூக்காரி இறந்ததைச் சொல்லி முடித்தேன் அப்பா பின்னாடியே பைய நடந்தேன்..தலையில் நீர் சொட்ட சொட்ட நானும் என் பிள்ளையும் வீட்டுக்குள் நுழைந்தோம். அவ்வளவுதான்.

அம்மா மட்டும்  என்னோடு சரியாகப்பேசுவதில்லை.  நான் என்ன என்றால்  அவள் என்ன என்பாள் அவ்வளவே. அம்மாவின் மன ரணம் ஆரவேயில்லை. என் அப்பாதான் எனக்குத்  தாயுமானார்.

ஆரம்ப கதைக்கு வரவேண்டாமா.  என் அப்பா அந்த ஹைதராபாத் விலாசத்துக்குப் போன் போட்டார். கேட்ட  விபரம் சொன்னார். அந்த ஐ டி மாப்பிள்ளை உடன் புறப்பட்டு  சேரன்மாதேவிக்கே வந்தார்.  என்னை என் குழந்தையைப் பார்த்தார்.  ‘ ஓகே’ என்றார்.

‘உனக்கு’ என்றார்.

நான் அவர் காலைப்பிடித்துக்கொண்டேன்.  ‘ என்ன இது’ அதிர்ந்து பேசினார்.

‘நீ பேருஏமி ’ குழந்தையைக் கேட்டார்.

‘விஜய்’ என்று  மழலையில் உளறினான் குழந்தை. அம்மா முகத்தில்  சிரிப்பு.  அதனை முதல் தடவையாகப்பார்த்தேன்.

அப்பா நித்யபடி   பூஜை செய்யும்  அந்த விஜயகணபதி சந்நிதியில் எங்களுக்குத் திருமணம். மாலை மாற்றிக்கொண்டோம்.சேரன்மாதேவியிலேயே திருமணப்பதிவு முடித்தோம். காச்சிகூடா ரயிலுக்கு முன்பதிவு செய்து மூவரும்  ஹைதராபாத்  புறப்பட்டோம்.

அம்மா அப்பா நெல்லை சந்திப்புக்கு வந்து எங்களை வழி அனுப்பிவைத்தனர்.

‘ மாப்பிள்ளயோட கொலம் கோத்ரம் ஜாதி பாஷ  ஜாதகம் எதுவுமே விஜாரிக்கல நாம’ என்றாள் அம்மா.

‘அவரும் எதையும் நம்மள கேக்கல’ என்றார் அப்பா. வடக்கு நோக்கி புறப்பட்டது எங்கள் ரயில்.

----------------------------------------------------------