பிரம்ம முடிச்சு
’மணவிலக்கு பெற்றவரோ
கணவனை இழந்தவரோ ஒரு குழந்தையுடன் இருந்தாலும் சரியே ஜாதியோ மதமோ பார்க்காமல்
திருமணம் செய்துகொள்ள சம்மதம்.ஆங்கிலம் ஓரளவுக்குத் தெரிந்திருந்தால் சிறப்பு .வயது
முப்பதுக்குள் இருத்தல் நலம்’ இப்படி வந்திருந்தது விளம்பரம். மணமகனுக்கு ஹைதராபாத்தில் வேலை. ஐடியில் போதுமான வருமானம். வயது முப்பத்தைந்து. அப்பாதான்
விளம்பரத்தைக்கொண்டு வந்து காட்டினார். நான் வாங்கிப் படித்துப்பார்த்தேன். விளம்பர
அழகே என்னைத் திரும்ப திரும்ப வாசிக்க வைத்தது.
தொடர்புகொள்ள தொலைபேசி எண்ணைக் கொடுத்திருந்தார்கள்.
‘இது இரண்டாவது மணமாக இருக்கும். அப்படித்தான் தோன்றுகிறது
எனக்கும்’ அம்மா சொன்னாள்.அம்மா எப்போதும் அப்பாவின் கோணத்திலிருந்து எதையும் பார்க்க மாட்டாள்தான்.
‘அப்படித்தான் இருக்கட்டுமே.’ அப்பா பட்டென்று சொன்னார்.
என்னைப்பார்த்தார். அவன் எப்படி வேண்டுமானால் இருக்கட்டும். உள்மனம் சேதி சொல்லிற்று. அப்பாவுக்கு நான் பதில் ஏதும் சொல்லவில்லை. என்னைப்பற்றி உங்களுக்கு
முதலில் சொல்லி விடவேண்டும். அதுதானே பிரதானமானது.
தாமிரபரணி ஆற்றங்கரையிலுள்ள சிறு நகரம் சேரன்மாதேவி நான்
பிறந்தது. ஊருக்கு வடக்கே ஆற்றங்கரை.பெரிய
பெரிய புளிய மரங்கள் வானைத்தொட்டுக்கொண்டு நிற்கும். புளியந்தோப்பு முழுவதும் . குரங்குகளின்
ஆட்சி. ஆற்றோரமாய் ஓரமாய் ஒரு விநாயகர் கோவில். கோவிலைச்சுற்றிலும் தடித்தடியாய் செம்பட்டை
நிறத்தில் படுத்துக்கிடக்கும் பாறாங்கற்கள்.
கோவில் சுவரைத் தொட்டுக்கொண்டு மங்களூர் ஓடு போட்ட அர்ச்சகர் வீடு. கோவில் தர்மகர்த்தாதான்
அப்பாவுக்குக் கொடுத்திருக்கிறார். அப்பாவுக்கு
விநாயகர் கோவிலில் பூஜை முறை. பூஜை நேரம் முடிந்தகையோடு தாமிர பரணி ஆற்றின் கரையில்
திதி கொடுப்பவர்கள் தானம் கொடுப்பவர்கள் அப்பாவைக்கையோடு கூட்டிப்போய்விடுவார்கள்.
அப்பா வெறுங்கையோடுதான் ஆற்றுக்குப் போவார். கூடைகள் பல அரிசி காய்கறியோடு வீட்டிற்கு வந்துவிடும். அமாவாசையன்று ஆற்றில் நல்ல கூட்டமிருக்கும். அப்பா எல்லாவற்றையும்
சமாளிக்கவே திணறிப்போவார்.
‘ஒரு ஆம்ள புள்ளயா
நீ பொறந்திருக்கக் கூடாதா.’ அம்மா அடிக்கடி சொல்லிக்கொள்வாள். அப்பா அதற்கெல்லாம் பதில்
சொல்லவே மாட்டார்.
‘உங்களுக்கு ஒரு
கை ஒத்தாசையா இருக்குமேன்னுதான் சொல்றேன்’ அம்மா அழுத்திச்சொன்னாள்.
‘ஒருத்தர் எங்க பொறக்கணும் எப்ப பொறக்கணும் எப்பிடி பொறக்கணும்னு
யார் தீர்மானம்பண்றா. இல்ல ஒருத்தர் எப்பிடி முடியணும் எப்ப முடியணும்னுதான் யாரானு தீர்மானம் பண்ணிக்க முடியுமா.’
அப்பா அம்மாவுக்கு விளங்காததையெல்லாம் பேசிவிட்டு ஒதுங்கிவிடுவார்.
சரி என் கதைக்கு
வருகிறேன். விநாயகர் கோவிலுக்கு பூ மாலை கட்டி
ஒரு பெண்மணி அன்றாடம் அனுப்பிவைப்பார். அந்த அம்மாவின் பையன் தான் ஒரு தென்னங்குடலையில்
பூ மாலையை எடுத்து வந்து கொடுப்பான். அவ்வப்போது அந்த மாலை கட்டும் பெண்மணியும் ஸ்வாமிக்கு மாலையை எடுத்துக்கொண்டு வருவதுண்டு.
சேரன்மாதேவி பேருந்து நிலையத்தில் இவர்களுக்கு ஒரு பூக்கடை இருந்தது. அப்பா மாலையை
கோவிலில் வாங்கி வைப்பார். அன்றாடம் விநாயகருக்குச் சாத்துவார். அப்பா எங்காவது வெளியில் சென்றிருந்தால் நான் அந்த பூவை வாங்கி வைப்பேன். அப்பாவிடம் சேர்த்துவிடுவேன்.
இது எத்தனையோ வருஷமாகத் தொடர்ந்து கொண்டிருந்தது. அந்த பூக்காரியின் பையன் பத்தாம்
வகுப்பு வரை படித்தான். பள்ளியை விட்டு நின்று போனான்.
‘பாக்குற பூ கட்டுற வேலைக்கு பத்து கிளாஸ் வல்ரைக்கும் பெரிய ஸ்கூலு
போய் வந்தது போதாதா. இவுரு மேலைக்கு என்ன கலைக்டரு
ஒத்யோகம் பாக்க போறாரு’ என்றாள் அவனின் தாய். அவன் தினம் பூக்கூடை எடுத்து வருவான். நான் தான் ஒருநாள்
விநாயகருக்கான அந்த மாலையை வாங்கி வைத்தேன். பூமாலையை என்னிடம் கொடுக்கும்போது அவன் கை என் கை
மீது பட்டது. பளிச்சென்று ஒரு மின்னல் தாக்கியதாய் உணர்ந்தேன். இது தெரிந்தே அவன் செய்தானா
அவனை அறியாமல் இப்படி நிகழ்ந்ததா எனக்குப்பிடிபடவில்லை.
ஏன் இப்பிடி இது நிகழ்ந்தது என்று மனம் விசாரிக்க ஆரம்பித்தது. நல்ல விசாரணையாய்த்தான்
முதலில்
ஆரம்பித்தது. மற்றொரு நாள் என் கை அவன் கை
மீது பட்டது. ஏதோ அத்தொடுகை ஒரு பூரிப்பை மகிழ்ச்சியைத்
தந்ததாய் உணர்ந்தேன். இத்தொடுகை தொடர்ந்தது. விளையாட்டாய் நீண்டது. ஒரு நாள் திருநெல்வெலி இருட்டுக்கடை
அல்வா வாங்கி வந்தான். பூமாலையோடு அல்வா பொட்டலத்தைக் கொடுத்துவிட்டுப்போனான். நான்தான் சரியாய்ப் பார்க்கவேயில்லை.
அப்பா அல்வாவை பார்த்துவிட்டு ’இது ஏது அல்வா
பொட்டலம்’ என்று என்னைக்கேட்டார். நான் எனக்கும் தெரியாது என்றேன். அவன் இதை என்னிடம்
சொல்லித்தான் கொடுத்தானா நான் தான் அதைக்காதில்
சரியாக வாங்காமல் இருந்துவிட்டேனா ஐயம் வந்துகொண்டே இருந்தது. விநாயகருக்கு மாலையோடு
எனக்கு ஒரு முழம் ஜாதி மல்லி யை ஒரு பொட்டலாய்க்கட்டி எடுத்து வந்தான்
.’ ஒனக்கும் பூ கொண்டாந்து இருக்கன்’ என்றான்.
‘ உன்னை யார் கேட்டா பூ’ என்றேன்.
’நானேதான் கொண்டு
வந்தேன்.’ என்றான்.
’எடுத்துக்கொள்’
அழுத்திச்சொன்னான்.
வேண்டா வெறுப்பாக
அப்பூவை எடுத்து தலையில் வைத்துக்கொண்டேன். அப்பா இது பற்றி எல்லாம் கண்டுகொள்ளவேயில்லை.
அம்மா மட்டும்
’ஏது பூ’ என்றாள்.
’கோவிலுக்கு வந்தது. கொஞ்சம் தலைக்கு வைத்துக்கொண்டேன்’
பொய் சொன்னேன்.
எனக்கு பூக்காரியின் மகன் நினைவே அடிக்கடி வந்து போனது. ’இது தவறல்லாவா’ என்றது என் மனம். ’ஒன்றும் தவறில்லை’ விடு என்றது இன்னொரு
சமயம் அதே மனம். எனக்கு அவ்வப்போது அவனைப்பார்க்கவேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. தூக்கம் அரைகுறையானது.
ஒரு நாள் பேருந்து நிலையம் அருகேயுள்ள அவன்
பூக்கடைக்குப் போய் நின்றேன். அவனைச் சும்மா பார்த்துவிட்டு வந்துவிடுவோம் என்று தான்
கிளம்பினேன். பூக்காரியைக் காணவில்லை.
‘அம்மா இல்லையா’
‘சரக்கு வாங்க டவுண் போயிருக்காங்க’
அதற்குமேல் என்ன செய்வது என்று தெரியவில்லை. நான் அங்கேயே
தயங்கி நின்று கொண்டு இருந்தேன். நான் அப்படி ஏன் நின்றேன்.
‘கடை உள்ளார வரலாம். செத்த உக்காரலாம்’ அவன்.
நான் கடைக்குள்ளாகச் சென்றேன். கடைக்குப்பின்னால் சிறிய
புழக்கடை. குடத்தில் தண்ணீர். அதன் வாயில்
ஒரு குவளை.ஒரு நாடா கட்டில் பாவமாய்க்கிடந்தது. அந்தக்கட்டிலில் சற்று உட்கார்ந்து
பார்த்தேன். நன்றாகத்தான் இருந்தது. அவன் கடையின் வாயிலில் சுருட்டிக் கட்டப்பட்டிருந்த
சிமெண்ட் சாக்கை அவிழ்த்து விட்டான். கடை சாத்தப்பட்டிருப்பதாக
வெளியே இருப்போர்க்கு அது அறிவித்தது. நான் அந்த கட்டிலிலேயே இன்னும் அமர்ந்து
தானே இருக்கிறேன்.’ பரவாயில்லை’ என்று பாழும் மனம் சொல்லியது. அவன் கட்டில் அருகில்
வந்தான். நான் அவனையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்.அவன் என் அருகில் அமர்ந்தான்.
என் கைகளைத் தொட்டான். நான் அவன் மடியில் சாய்ந்தேன். அவன் கதகதப்பான மடி. அது மட்டுமே இன்னும் இன்னும் வேண்டுமென்று மனம் என்னைக்
கெஞ்சியது. அவன் கைகளை நானே எடுத்து என் மார்போடு இருக்கி வைத்தேன்.சற்று இருக்கியும்
வைத்தேன்.அவன் என் உடல் முழுவதும் முத்தமிட்டான். நானும்தான். அவனை மொத்தமாய்க்கடித்துத்
தின்று விடவேண்டும் என்று எனக்குத் தோன்றியது. இருவரும் சர்ப்பமாய் இருக்கிக்கொண்டோம்.
பிறகு அதுதான் நிகழ்ந்தது. ஆம் அதுவே நிகழ்ந்தது. உடல்
சிலிர்த்தது. ஆகாயத்தில் பறந்து கருமேகத்தை
எல்லாம் தொட்டுக் கொஞ்சிப் பேசி விட்டு வந்ததாய்
உணர்ந்தேன். அவன் பைய எழுந்தான். முகம் துடைத்துக்கொண்டான்.அவன்
கடைப்பகுதிக்குச் சென்றான். தொங்கிக்கொண்டிருந்த சாக்கை மீண்டும் சுருட்டி மேலே கட்டி
விட்டான். பூக் கடை திறந்து கொண்டது.
சாதித்துவிட்டதாய்த்தோன்றியது முதலில்
எனக்கு. சற்றைக்கு எல்லாம் வயிற்றைக் கலக்கியது.
மனம் ’தொலைந்து போனாயடி நீ’ என்று விரட்டியது. கள்ள மனம் திருட்டுப்பூனையாய் இயங்குவதை
நன்கு உணர்ந்தேன்.என் அப்பாவுக்கோ உள்ளூர் விநாயகர் கோவில் பூஜை. வீதியில் வருவோரும் போவோரும்
அவரை ‘வணக்கம் சாமி’ என்று மட்டுமே மரியாதை
செய்வதைத் தினம் பார்த்து வருபவள் நான்.
அவனே தான் தினம் தினம் விநாயகர் கோவிலுக்கு மாலை எடுத்து
வருவான். கூடவே எனக்கும் பூக் கொண்டு தருவான்.என் அம்மாவும் அதனைத்தவறாகவே எடுத்துக்கொள்ளவில்லையே.
நானும் பூக்காரி இல்லாத நேரங்களில் கடைக்குப்போவேன். ஆசை விரட்டியது. அந்த தவறை தொடர்ந்து செய்துகொண்டே
இருந்தோம். ஒரு நாள் இனி நான் என் வீட்டுக்குப்
போக மாட்டேன். உன்னோடேயே இருப்பேன் என்று இருந்து விட்டேன். பூக்காரிக்குத் தெரிந்து
போனது விஷயம்.
‘அடி ஜோட்டால. அவுக யாரு. நாம யாரு. நீ மாபாவியா இருப்பயா,
இது அடுக்குமா. சாமின்னு நாம கீழ உழுந்து கும்புடற சனம். நாம கண்ட கசமாலத்த திங்குற ஈன சாதின்னு ஒரு ஒணக்க வேணாமா. இப்ப அந்த கோவிலு அய்யிரு மொகத்துல நா எப்பிடி முழிக்குவேன். தீயில்ல வச்சிட்ட
அவுக சாகையிலே. இந்த பாவத்ததான் நா எப்பிடி வெளிய சொல்லுவேன் இத ஆராலயும் கழுவத்தான் வைக்குமா’ பூக்காரி ஒப்பாரி வைத்து அழுதாள்.
‘நீ ஒசந்தகுடி பிலஸ் டூ வல்ரைக்கும் படிச்ச பொண்ணு. ஆயி அப்பன நெனச்சி பாக்கமாட்டியா.‘
பீயதுன்னுப்புட்டயே. இது அடுக்குமா. பொறப்புலயே
ஆம்பள சனம் மொத்தமா நாயிவதான, என் சாமி நீ ஏமாந்து
பூட்டயே. தங்கமே நீ என்னாத்த தொலச்சிபுட்டு நிக்குறன்னு ஒனக்கு வெளங்குதா இது என்னடா தும்பம்’. புலம்பினாள்.
என்னைத்தேடிக்கொண்டு என் அப்பா அம்மா யாரும் பூக்கடைக்கு
வரவில்லை. வந்துதான் இனி என்ன ஆகப்போகிறது. அவர்கள் அப்படி வரத்தான் முடியுமா வருவார்களா, வரலாமா, ஊராருக்கு இல்லை கோவில் தருமகர்த்தாவுக்கு இது விஷயம் தெரிந்தால் அப்பாவை அம்மாவை எத்தனைக்கேவலமாக
பார்ப்பார்களோ. என் கண்கள் நீரைச்சொறிந்து சிவந்து போயின. என் மனம் கனத்தது.
‘ நா அந்த அய்யிரு மூஞ்சில முழிக்க மாட்டன். எந்த மொகத்த
வச்சி இனி அவுர பாக்குறது’ என்ற பூக்காரி அந்த
ஊரை விட்டே கிளம்பினாள். ‘ கெளம்புங்க இங்க
என்ன ஜோலி நமக்கு’ எங்களையும் வேண்டினாள். அருகேயுள்ள பாபநாசம் ஈசுவரன் சந்நிதிக்கு
நாங்கள் மூவரும் புறப்பட்டுச்சென்றோம். பூக்காரிக்குத் தெரிந்தவர்கள் ஒரு கடை போட உதவினார்கள். பூக்கடைதான் வைத்தோம். காலம் கைவரிசை காட்டியது.
எனக்கு ஒரு பையன் பிறந்தான். அம்மா அப்பா என் மனதிற்குள் மட்டுமேயிருந்தார்கள். இனி நாம் எங்கே சேரன்மாதேவி போவது என்றிருந்தேன்.
தினம் தினம் தாமிரபரணியில்
குளித்துவிட்டு வரும் என் கணவன் ஒரு நாள் வெகு நேறம் ஆகியும் வீடு திரும்பவில்லை. நானும்
பூக்கார மாமியாரும் குளிக்கப்போன ஆளைக்காணவில்லையே
என யோசனையில் இருந்தோம். தாமிரபரணியில் அன்று வெள்ளம். அணை திறந்திருந்தார்கள். தாமிரபரணிச்
சுழலில் மாட்டிய என் கணவன் பிணமாகத்தான் வீடு திரும்பினான். கதை முடிந்துபோனது. நடக்கவேண்டியவைகள் எல்லாம் சட்டப்படியே ஆயிற்று. கைக்குழந்தையோடு நானும் என் மாமியாரும் மட்டுமே வீட்டில்
இருந்தோம். விதி என் வாழ்க்கையை எப்படியெல்லாம் சின்னாபின்னமாக்கியது நான் நினைத்து
நினைத்து அழுதுகொண்டேயிருப்பேன்.பூக்காரியான
மாமியார் தன் மகன் இறப்புக்குப்பின் சுத்தமாய்
நொடிந்துபோனாள்.
‘என் தங்கமே நீ ஒன் அப்பா ஆத்தா வூட்டுக்கு போயிடு. அவுக ஒனக்கு
ஒரு வழிய காட்டுவாக. ஒன்னய வுட்டுட மாட்டாங்க.
கை புள்ளக்காரி நீ’ என்றாள். ஏதோ கொஞ்சம் உடம்புக்கு முடியவில்லை என்று படுத்தாள். அவ்வளவுதான் பொசுக்கென்று போய்ச்சேர்ந்தாள்.
நானும் என் இரண்டு வயது பையனும் பாபநாச நாதர்
சந்நிதியில் விழுந்து கும்பிட்டு விட்டுப் புறப்பட்டோம். எனக்கு அச்சமாக இருந்தது. எப்படியோ சேரன் மாதேவிக்கு வந்து சேர்ந்தோம். அங்கு பேருந்து
நிலையமே பிரம்மாண்டமாய் மாறியிருந்தது. சுற்றிலும் நோட்டம் விட்டேன். அந்த பூக்கடயைத்தான் நான் இனி எங்கே தேடுவது. சேரன்மாதேவியில் அதே விநாயகர் கோவில் வீட்டில்தான்
அம்மாவும் அப்பாவும் மெலிந்து உடல் மெலிந்து
வாழ்ந்து கொண்டிருந்தார்கள். நான்’ அம்மா’
என்று அலறினேன். வீட்டு வாயிலில் போய் நின்றேன். அம்மா என்னைப்பார்த்துவிட்டாள்.
‘ஒனக்கு கருமாதி பண்ணியாச்சி. அந்தத் தாமிரபரணில எள்ளும் தண்ணி விட்டாச்சே. நீ
தெருவோட போயிண்டே இரு. என் முன்னாடி நிக்காதே’ ஓங்கிச்சொல்லிய என் அம்மா கதவை பட்டென்று சாத்தினாள்.
நான் கையில் குழந்தையோடு வீதியில் நின்று கொண்டிருந்தேன். அப்பா கதவைத்திறந்து
கொண்டு வெளியே வந்தார். என்னருகேயே வந்தார்.
என் கைகளைப் பிடித்துக்கொண்டார். நரைத்த முடி அடர்ந்த மார்பு துள்ளத் துள்ள குலுங்கி
அழுதார்.
‘ ஒனக்கு விஜயகணபதின்னு நாந்தான் பேர் வச்சேன். நா பூஜையில என்ன கொற வச்சேண்டா .. இப்பிடி என்ன செதச்சிட்டயேடா
என் அப்பனே என் தெய்வமே’ என்று விநாயகரைப்பார்த்துக் கத்தினார்.
என் குழந்தை அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். அப்பா என்னைப்பார்த்தார். ‘ வா எம் பின்னால’ என்றார்.
விநாயகர் கோவில் சந்நிதிக்கு அழைத்துப்போனார். கோவில் ராட்டினக்கிணற்றில் மூன்று வாளி
தண்ணீர் சேந்தி என் தலையிலும் என் பிள்ளைத்தலையிலும் ‘கணபதி கணபதி ’ ன்னு சொல்லிக்
கொட்டினார். ‘புள்ளயார ஒரு சுத்து சுத்திவா. அந்த தெய்வத்துக்கு
ஒரு நமஸ்காரம் பண்ணு. ஆத்துக்கு போ’ என்றார்.
எனக்கு என்ன நிகழ்ந்தது எதுவும் அப்பா கேட்கவில்லை.
நான் அழுதுகொண்டே சொன்னேன். பாபநாசம் வாழ்க்கையை முழுவதுமாய்ச்சொன்னேன். என் கணவர்
தாமிரபரணிச் சுழலில் முடிந்துபோனதை அந்த சோகத்தில்
பூக்காரி இறந்ததைச் சொல்லி முடித்தேன் அப்பா பின்னாடியே பைய நடந்தேன்..தலையில் நீர்
சொட்ட சொட்ட நானும் என் பிள்ளையும் வீட்டுக்குள் நுழைந்தோம். அவ்வளவுதான்.
அம்மா மட்டும் என்னோடு சரியாகப்பேசுவதில்லை. நான் என்ன என்றால் அவள் என்ன என்பாள் அவ்வளவே. அம்மாவின் மன ரணம் ஆரவேயில்லை.
என் அப்பாதான் எனக்குத் தாயுமானார்.
ஆரம்ப கதைக்கு வரவேண்டாமா. என் அப்பா அந்த ஹைதராபாத் விலாசத்துக்குப் போன்
போட்டார். கேட்ட விபரம் சொன்னார். அந்த ஐ டி
மாப்பிள்ளை உடன் புறப்பட்டு சேரன்மாதேவிக்கே
வந்தார். என்னை என் குழந்தையைப் பார்த்தார். ‘ ஓகே’ என்றார்.
‘உனக்கு’ என்றார்.
நான் அவர் காலைப்பிடித்துக்கொண்டேன். ‘ என்ன இது’ அதிர்ந்து பேசினார்.
‘நீ பேருஏமி ’ குழந்தையைக் கேட்டார்.
‘விஜய்’ என்று மழலையில் உளறினான் குழந்தை. அம்மா முகத்தில் சிரிப்பு. அதனை முதல் தடவையாகப்பார்த்தேன்.
அப்பா நித்யபடி பூஜை செய்யும்
அந்த விஜயகணபதி சந்நிதியில் எங்களுக்குத் திருமணம்.
மாலை மாற்றிக்கொண்டோம்.சேரன்மாதேவியிலேயே திருமணப்பதிவு முடித்தோம். காச்சிகூடா ரயிலுக்கு
முன்பதிவு செய்து மூவரும் ஹைதராபாத் புறப்பட்டோம்.
அம்மா அப்பா நெல்லை சந்திப்புக்கு வந்து எங்களை வழி அனுப்பிவைத்தனர்.
‘ மாப்பிள்ளயோட கொலம் கோத்ரம் ஜாதி பாஷ ஜாதகம் எதுவுமே விஜாரிக்கல நாம’ என்றாள் அம்மா.
‘அவரும் எதையும் நம்மள கேக்கல’ என்றார் அப்பா. வடக்கு நோக்கி
புறப்பட்டது எங்கள் ரயில்.
----------------------------------------------------------
No comments:
Post a Comment