Friday, August 2, 2019

BambaaykkathaikaLill -Anbaathavan


பம்பாய்க்கதைகளில் அன்பாதவன்                             

அன்பாதவனின் ஒன்பது சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. இது பம்பாய்க்கதைகள் என்ற பெயரில் உதயக்கண்னன் பதிப்பகத்தாரின் வெளியீடாக வந்துள்ளது.ஒரு கவிஞராகவே அன்பாதவனின் மனம் போட்டுக்கொண்ட கணக்கு அவரை சிறுகதையாளராக அனுபவம் ஆகும்போது வேறு ஒரு படைப்புத்தளத்திற்கு வாசகனை இட்டுச்செல்கிறது. வெடிக்கும் புரட்சியைக்கொண்டுவரச்செம்பழுப்பும் நெருப்பும் எனக்கொப்பளிக்கும் கவிஞர் சிறுகதைகளில் எதார்த்த உலகை அனுபவித்து  தமக்கு முன்னே படமாக்கிக்காட்டுகிறார். செருப்பு மாலை என்னும் சிறுகதை யுகமாயினியில் வெளிவந்த கதை. இது சாதியும் மதமும் விடம் கக்கும் பம்பாய் நகரத்தை அம்மணமாக்கும் கதை. இங்கே அண்ணல் அம்பேட்கருக்கு திருப்பள்ளி எழுச்சி கூறும் அன்பாதவன் இயல்பாய்க்கவிஞன் ஆகி உயர்ந்து நிற்கிறார். இந்தக் கவிதையை வாசகன் படித்த பிறகு தெரிந்துகொள்ள வேறென்ன வேண்டிக்கிடக்கிரது என்கிற அறச்சீற்றம் நெஞ்சுக்குள் முந்திக்கொள்கிறது.
’இலவச உதவிகளில் எமதுரிமை மறந்திட்டோம்
சலுகைகளாம் துண்டெலும்பில் எமை நாங்கள் இழந்திட்டோம்’
எழுத்தாளர் பொன்னீலன் ஒரு சமயம் இப்படிக்குறிப்பிட்டதாக நினைவு.கடலூர் இலக்கியப்பெருமன்ற நிகழ்வொன்றிற்கு வந்து  சங்கு வளவதுரையனோடு ஏற்பாடு செய்யப்பட்ட பேட்டியின் போது ‘’உதவிகள் மட்டுமே செய்து அவர்கள் உறங்கிவிட்டால் போதும் என்கிற நிலை ஒரு நாள் மாறும்.அவர்களே தூக்கி எறிவார்கள்  சுய மரியாதை தவிர்த்து எதையும்’
இதுவே செருப்புமாலை கதைவாசிக்கும் போது எனக்கு சட்டென்று மனதிற்குள் ஒரு கணம் தோன்றி மறைந்தது.
‘உலகமயம் வளர்ந்தாலும் உன் சேரி மாறவில்லை’ என்று சொல்லும் அன்பாதவனின் அடிமனத்து உணர்வுகள் நம் மனதைத்தொட்டு நியாயம் கேட்கின்றன. நீதி நேர்மை நியாயம் உண்மை என்பதெல்லாம் பேசிய மகாத்மாக்கள் இன்று எல்லோரும் மொத்தமாய் நம் நாட்டைக்காலி செய்துவிட்டு போனதாலே இமயமலை நிகர்த்த ஊழல்கள் இங்கே அரங்கேறினாலும் வெட்கப்படக்கூட ஒரு ஜீவன் இல்லை மாகீழ்மை. ஊழல் என்னும் சகதியில் நிற்போர் பின்வெட்கம் தொலைத்துவிட்டு வெற்றுடம்பாய் நின்றாலும் யாருக்கும் உரைப்பதில்லை.இப்படி சமரசம் உலாவும் திரு நாடாக மாறிப்போய் இருக்கிறோம். உயன் நினைவிற்கு வருகிறது சத்யமேவ ஜயதே. ஆமாம் இதற்கு  இன்னும் ஒரு புதுவிளக்கம் விரைவில் வரலாம். மராத்திய தலித் கவிதையொன்றோடு நிறைவு செய்கிறார்.
இது என் ஊமியா ? கேள்வி வருகிறது.தாகம் தீர உள்ளங்கை தண்ணீர் அள்ளிக்குடித்தால் சாதிக்கத்தி எடுத்து சம்காரம் செய்யத்துடிக்கும் சூழலில் வாழும் தலித்துக்கு இது எப்படி அன்னை பூமியாகும்
அழகு என்னும் புதியகோடாங்கியில் வெளியான கதை அலிகளின் வாழ்வு பேசும் சித்திரம்.அன்பாதவனுக்கு இங்கே கூவாகம் கதைக்களமாக வருகிறது.ஆணும் இல்லை பெண்ணும் இல்லை பிறந்துவிட்ட திரு நங்கை இனத்துக்கு இழைக்கப்படும் அவமானம் சொல்லில் அடங்குமா சொல்லி முடியுமா.அருகன்புல்லை சாணிமேல் வைத்துச்சாமியாக்கிக்கும்பிடுவோர்க்கு அரவாணிகள் சோகம் எட்டுவதே இல்லை.அற்புதமாக அலசுகிறார் அன்பாதவன்.
எவரோ வெற்றிபெற வாக்களிக்கும் ஏமாளிகளைப்போல எந்தமன்னனோ வெற்றிபெற நான் முதல் பலி என்று பேசுகிறது.அரவாணியின் குரல் வல்லினமும் மெல்லினமும் இல்லா இடையினங்களைக்கேலிபேசும் பேசுகின்ற கடையினங்கள் படைப்பாளிக்கு எப்படி பீறிட்டு வறுகிறது தார்மீகக்கோபம்.
’மனிதரென உணருங்கள் அரவாணிகளும்
மனிதரென உணருங்கள்.
அழகென்பது முகமா உடலா ஒப்பனையா
இவை எதுவுமில்லை
மனசு மனசுதான் அழகு’
இலக்கணம் தருகிறார் அன்பாதவன். சாபவரம் என்னும் சிறுகதை ராமாயணத்திற்கு நம்மை இட்டுச்செல்கிறது.ஊர்மிளையின் வினா நம்மைச்சிந்திக்க வைக்கிறது.
‘உயிரற்ற கல்லைத்தீண்டி உயிர் கொடுத்தீர்கள்.உயிரோடு இருந்த பெண்ணின் மூக்கறுத்து மூளியாக்கினீர்கள்.எல்லாமே உங்கள் இஷ்டம்.உங்கள் விருப்பம்.மனைவியாய் வாய்த்தவளுக்கு மனமுண்டு இரசனையும் உண்டென்பதை உணரவேண்டும். பெண் என்பவளை சக்ரவர்த்தி தொடங்கி சாமான்யர்கள் வரைக்கும் அடிமையாக முட்டாளாக உங்கள் அபிலாஷைகளை தீர்த்துக்கொள்ளும் வடிகாலாகத்தான் பார்க்கிறீர்கள்.இப்படிப்பேசிக்கல்லாய் மாறுகிறாள் ஊர்மிளைபெண்ணியம் பேசி இங்கே மிளிர்கிறது இப்படைப்பு.
‘’பெய்யெனப்பெய்யும் பெருமழை’ என்னும் சிறுகதை மா நகரில் நிகழும் கிரிக்கெட் விளையாட்டு பற்றிப்பேசுகிறது. விளையாட்டு நிகழ்போது ஆணும் பெண்னும் அரைகுறை ஆடையில் உடல் குலுக்கும் நடனம். ஆடு களத்தில் பவுண்டரி சிக்சர் இல்லை.அவுட் என்கிற போது இடுப்பை அசைப்பதும் உடல் குலுக்குவதும் சிய்யர் லீடர்கள் காசுக்கு ஏலம் எடுக்கப்படுவது அண்மைக்கால சோகங்கள். இப்படைப்பில் விமரிசனம்  கூர்மையாக வருகிறது அன்பாதவனுக்கு..
இராஜவிதூஷகன் என்னும் சிறுகதை குடிப்பழக்கம் பற்றி அங்கதம் பேசி நாட்டு நடப்பினை விமர்சனம் செய்கிறது.இனிமேல் கள் வகைகளையோ பத நீர் போன்ற பானங்களையோ கண்டிப்பாகப்பருகக்கூடாது. நுங்கு இள நீர் போன்றவற்றை நுகர்வது ராஜதுரோக குற்றம்.உள் நாட்டில் தயாரான வெளி நாட்டு மதுவகைகளைத்தான் அருந்த வேண்டும்.அன்பாதவனின் நீதி காத்த நெடுஞ்செழியனைக்கண்டு வாசகர்கள்  அதிர்ச்சிக்குள்ளாக வாய்ப்பு உண்டாகிறது.
கணியன் பூங்குன்றனின் மரணம் என்னும் கதை தொழிலாளர் அரங்கு குறித்து ஒரு வினா வைக்கிறது.தத்துவம் தொலைத்துவிட்டு ஓட்டுக்குப்பின்னே ஓடும் தலைமை பற்றி விமரிசனம் வைக்கிறது.
‘பதவி நாற்காலியில்  ஒக்காந்து கிட்டாச்சு. கொள்கையாவது மசுராவது த்தூ’ வார்த்தைகள் கடினமானவைதான். ஆனால் மெய்யானவை.
கூடு என்கிறகதை பதவி உயர்வு பற்றிப்பேசுகிறது.பேய்க்கு வாழ்க்கைப்பட்டமாதிரி பதவி உயர்வை ஒத்துகிட்டாச்சு. டிரான்ஸ்பர் என்கிற புளியமரம் ஏறுவதைத்தடுக்க இயலாது. அன்பாதவன் மும்பையில் பட்ட அவஸ்தைகள்  அவிழ்படுகின்றன. அன்பாதவனுக்கு உற்ற துணையாய் இருந்த அந்த புதிய மாதவிக்கும் மதியழகன் சுப்பையாவுக்கும் இந்த விமர்சகனின் இனிய நன்றிகள் உரியதாகும்.
அன்பாதவன் பம்பாய்க்கதைகளில் வாசகனை நிறைவாகவே  அசத்திவிடுகிறார்.வாழ்த்துவோம் நல்லதொரு மனத்தை.
வெளியீடு  உதயக்கண்ணன், 10 கல்யாணசுந்தரம் தெரு,பெரம்பூர்,சென்னை பக்கம் 160,விலை ரூபாய் 80.
(சங்கு-139 ஜூன் 2011)   


No comments:

Post a Comment