Thursday, August 1, 2019

kankalizanthum kavippani- miltan



கண்களிழந்தும் கவிப்பணி –மில்டன்
ஆங்கிலத்தில் ’மில்டானிக் க்ராண்ட் ஸ்டைல்’ என்று சொல்கிற மரபுண்டு. ஒரு மாபெரும் எழுத்தாளனின் பெருமை பேச இது போதுமானதே.’இம்மண்னுலகில் கதிரவன் மறையாத எங்கள் ஆட்சியை ஒருக்கால் இழக்கத்தயார் ஆவோம்.ஆனால் ஒரு போதும் ஷேக்ஸ்பியரையும் மிலடனையும் இழக்கமாட்டோம்’ என்று வெள்ளையர்கள் பெருமை கொள்வதாய்க்குறிப்பிடுவதுண்டு நாடகாசிரியர் ஷேக்ஸ்பியருக்கு இணையாகக்கவிதையுலகில் முடிசூடா மன்னனாக இன்றைக்கும் உலகம் போற்றுவது ஜான் மிலடனைத்தான்.
கண்கள் இரண்டையும்  முற்றாய் இழந்தவன் மில்டன்.இருளிலே ஒளியைத்தரிசித்தவன்.அவனது படைப்பு’இழந்த சொர்க்கம்’ ஓர் ஒப்பற்ற காவியம்.அவனது படைப்பு’இழந்த சொர்க்கம்’ ஓர் ஒப்பற்ற காவியம்.முப்பது ஆண்டுகள் தன் சிந்தையில் ஊறித்தோய்ந்ததை எட்டு ஆண்டுகள் உழைத்து எழுத்தோவியமாய் வடித்த மாகவி.தன்னம்பிக்கை மட்டுமே மூலதனமாய்க்கொண்டு கவிதை உலகின் சிகரத்தை எட்டிப்பிடித்தவன்.
ஜான் மில்டன் 09.12.1608 ல் லன்டனில் தோன்றி கேம்பிரிட்ஜில் பயின்று முதுகலை பட்டம் பெற்றார். மதத்தின் பிடியிலிருந்து அரசை முற்றாய் விடுவிக்க அவாவியவர்.மதத்தைத்தூய்மைப்படுத்தும் ப்யூரிடனிசமே அவர் பின்பற்றியது.
குடும்பவாழ்க்கை என்னும் நாடகத்தில் மில்டன்  மனைவி என்னும் பாத்திரத்தின் வழி அனுபவித்த கொடுமைகள் சொல்லி மாளாது.ரோஜா மலரை மகளிருக்கு உலகமே ஒப்பிடும்போது மில்டன் மகளிரை அம்மலருக்கும் அடியில் கருமையாய் கூர்மையாய் நீட்டி நிற்கும் முள்ளுக்கு இணையாக்குகிறார்.’’Daffodils fill their cups with tears’ என்பது மில்டனின் பட்டறிவுதான்.
1651ல் மில்டன் ‘டிஃபன்ஸ் ஆஃப் தி இங்லிஷ் பீப்பல்’ என்பதனைப்படைக்கும்போது தனது இடதுகண் பார்வையை இழந்துவிடுகிறார்.அடுத்த கண்ணையும் அவரின் தொடர் உழைப்பு விழுங்கி விடும் என எச்சரிக்கப்படுகிறார்.’iit is better to sacrifice my eye sight than to neglect my duty’  என்பதனை நெஞு நிறைவாக செயல் படுத்தியவர் மில்டன்.
1652 ல் 43 வயது நிரம்பிய மில்டன் முழுப்பார்வையையும் இழந்து இருளில் ஆழ்ந்து விடுகிறார். தன்னம்பிக்கை ஒளி மட்டும் கூடுதலாய்ச்சுடர்விட்டுப்பிரகாசிக்கிறது..அவரது முதல் மனைவி மறைந்து போகிறார். பிறகு அவரது இரண்டாவது மனைவியையும் பிள்ளை பேற்றில் பறி கொடுக்கிறார். மில்டன் மலையாக நம்பி இருந்த நண்பன் கிராம்வெல்லும் மறைந்து போகிறார். மத விடுதலைச்சிந்தனையில் மில்டனுக்கு உறுதுணையாக இருந்தவர் இந்த கிராம்வெல்.
அடுத்து மில்டன் இலத்தீன் செயலகப்பணியிலிருந்து விரட்டப்படுகிறார். சிறைய்ல் அடைக்கப்படுகிறார்.கொடுஞ்சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகிறார். அவர் பெண்குழந்தைகளோ  ஷேக்ஸ்பியரின் கிங்லியரில் வருவதற்கு இணையாக அவரை சொத்துக்காக இம்சிக்கின்றன.
‘’ I leave to the unkind children I had by her’  என்று குறிப்பிட்டு முடிக்கிறார் மில்டன்.
அந்தகாரத்தில் வாழ்ந்த மில்டன் 1658 ல் இழந்த சொர்க்கம் என்னும் மாகாவியத்தினை எழுதத்தொடங்கி 1663 ல் முடிக்கிறார்.அது 1667 ல் பெரும் படைப்பாய் வெளிவருகிறது.
மீண்ட சொர்க்கம் இதனை 1671ல் நான்கு காண்டங்களாக மில்டன் படைக்கிறார்.’சம்சன் ’அகனாஸ்டிஸ் என்னும் படைப்பு பின்னர் மலர்கிறது. பெருமைக்குரிய நாடகாசிரியர் ஷேக்ஸ்பியர் பற்றி’
Dear son of memory, great heir of fame,what needs it thou  such weak witness of thy name name ?’ என்று குறிப்பிட்டுச்சொல்கிறார் மில்டன். புகழ் பற்றி குறிப்பிடும் போது,’Fame is the spur that clear doth raise,That last infirmity of noble mind,To scorn delights and live laborious days’  என்று பேசுகிறார். புகழ் ஆன்மாவின் ஊற்றுக்கண்ணை அடைத்துவிடும் என்று எச்சரிக்கை தருகிறார்..இழந்த சொர்க்கத்தில் முதல் மனிதனும் அவனின் பேரன்புக்குப்பாத்திரமான முதல் பெண்மணியும், மானம் மறைக்க’ தழை ஆடை எடுத்த விதம் பற்றி,,
’But such as this day to Indians known
In malabar or deccan spreads her arms
…………………………………………………………
There off Indians herds man shining heate
Shelters in coole and tends pesting Herds’
என்ற விபரம் தருகிறார். தன் மீது கழிவுரக்கம் காட்டவேண்டும் என்றும் தன்னைக்கைதூக்கி விட ஆள் இல்லை என்றும் ஓலமிடும் சாதாரண மனிதனுக்கு மில்டன் ஒரு பெரும் புதிர். தன் குடும்பம் சமுதாயம் இவற்றுக்கு மேலாகப்படைத்தவனே மில்டனுக்கு எதிராக அவன் கண்களைப்பறித்த போதும்,
God doth not need
Either man’s work or his own gifts who best
Bear his mild yoke they him best.
என்று நிறைவாகக்கவிதை த்த்ருகிறார் மில்டன்.
கண்களை இழந்த மில்டனுக்காகக்கண்ணீர் சிந்த வருவோரை அவர் அனுமதிப்பதில்லை.. ஆம்,
‘To be blind is not miserable
Not to be able to bear blindness that is miserable’
என்று பேசுகிறார் மில்டன்.
தன்னால் தன் பணிகளை முற்றாகசெய்ய இயலாது என்கிற சூழலில் மூன்றாவதாய் ஒரு பெண்ணை 1664 ல் மணம் முடிக்கிறார்.1674 ல் நவம்பர் 8 ல் மில்டன் இவ்வுலக வாழ்வை முடித்துக்கொள்கிறார்.
‘இடமும் காலமும்
என்ன செய்துவிடும் மனத்தை
மனம் மலையாய்
குன்றா உறுதி துணை வரவே
கொடு நரகம் பொடிபடவும்
எழுமொரு பொன்னுலகம் நிரந்தரமாய்’
என்று பேசும் மில்டன் அடைந்த எழுத்துல உச்சத்தை மீண்டும் ஒரு முறை இலக்கிய உலகம் தொடுவது இயலுமா ? என்னும் வினா நிரந்தரமாய் நம் முன்னே.
---------------------------------------

No comments:

Post a Comment