Wednesday, January 22, 2020

akniyum mazaiyum grish karnad -paavannan 5




5 அக்னியும் மழையும் ‘ – கூர்மையான உரையடல்களைக் கொண்ட நாடகம் (பாவண்ணன் மொழிபெயர்த்துள்ள கிரிஷ் கர்னாட் நாடகம்)





இந்தியப் பண்பாட்டுப் பெட்டகமாய் இன்றளவும் இயங்குவது இதிகாசங்கள். மகாபாரதத்தையோ இராமாயணத்தையோ புரட்டிப் போட்டு அதன் மீது நிமிர்ந்து பேசுகின்ற ஒரு படைப்பினை நம்மால் கடந்த ஆயிரம் ஆயிரமாண்டுகளாய்க் கொடுத்து விட முடியவில்லை. அப்படி ஒரு தேவை எழாததும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்தியாவில் எங்கே சென்றாலும் ஐந்து பேர்களில் ஒருவன் ராமன் அல்லது கிருட்டிணனாகப் பெயர் தாங்கி உலா வருவதைப் பார்க்க முடிகிறது. இந்த இதிாகசங்களில் ஏதேனும் ஒரு சிறு நிகழ்ச்சியை நினைவு படுத்திக் கொள்ளாது அவனுக்கு ஒருநாள் முடிவதில்லை. அப்படைப்பாளியின் ஒப்புமை இல்லாத பெருவெற்றியை இது பறைசாற்றி நிற்கிறது.
‘அக்னியும் மழையும் ‘ நாடகம் கருக்கொள்ள கிரீஷ் கார்னாடுக்கு மகாபாரதம் ஏதுவாகிறது. வனபர்வத்தில் இடம்பெறும் யவக்கிரிதனைப் பற்றிய சிறுவிளக்கம்- தருமனால் பெறப்படுகிற விளக்கம் – இந்த நாடகம் உருக்கொள்ளத் துாண்டுதலாகியிருக்கிறது. தொன்மங்களைச் செரித்து வெளிச்சம் பெறுதல் ஓர் அருதிறன். அதனைப் படைப்பாக்கங்களில் மீட்டுருவாக்குதல் தான் தெரிந்து கொண்டவைக்குத் தன்னை நிலைநிறுத்துதல் என்பதாகக் கொள்ளலாம்.
மொழிபெயர்ப்புத்தளத்தில் தொடர்ந்து சாதித்து வருபவர் பாவண்ணன். பலிபீடம், நாகமண்டலம் இப்படி  கிரீஷ் கார்னாடின் நாடகங்களை ஏற்கனவே தமிழில் மொழிபெயர்த்தவர். தொடர்ந்து  கன்னடத்தின் பெருஞ்சிந்தனையைத் தமிழுக்குக் கொண்டு சேர்ப்பதில் பெருவெற்றியை ஈட்டிவரும் பாவண்ணனுக்குத் தமிழ் உலகம் நன்றிக்கடன் பட்டுள்ளது. அவருடைய மொழிபெயர்ப்புகளின் வரிசையில் சமீபத்தில் நமக்குக் கிடைத்திருக்கும் வரவு ‘அக்னியும் மழையும் ‘.
‘அக்னியும் மழையும் ‘ நாடகப் படைப்பில் இந்திரனை வேண்டி யாகம் நடக்கிறது. மழை கொணர்வான் இந்திரன் என்று வேத கோஷங்கள் ஒலிக்கின்றன. இடையே ஒரு நாடகக் குழு நுழைகிறது. நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டுத் தாள்பணிந்து நிற்கிறது. நடிப்பு முதலான கலைகளைத் தொன்மைக்கால அரசனும் புரோகிதர்களும் எப்படி கேவலப்படுத்தி இருக்கிறார்கள் என்பதைச் சொல்லி நாடகம் தொடங்குகிறது.பரத முனிவரின் பிள்ளைகள் கூட நாடகத்தில் பங்கேற்று நடித்ததால் சாதியிலிருந்து வெளியேற்றப் பட்டார்கள் என்றும் இதே சாதியில் இருக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தால் ஆட்ட பாட்டங்களையெல்லாம் விட்டுவிடு என்ற வரிகள் பராவசுவின் தம்பியின் விண்ணப்பமாய் நாடகக் குழுத் தலைவன் சொல்கின்ற வசனத்தில் இடம்பெறுகின்றன. அசுரர்களுக்கும் வேதம் ஓதும் கும்பலுக்கும் ஓயாத பிணக்கு இருந்து வந்திருப்பதை நாடகம் தொட்டுப் பேசுகிறது.
பராவசு சொல்கிறான்
‘யாகத்திலிருந்து ராட்சசர்களை முழுக்கத் தள்ளி வைக்க முடியறதில்லை. அது கூட ஒரு பந்தம்தான் ‘
இப்படிச் சொல்லும்போது பாற்கடலைக் கடையும் நிகழ்வில் அசுரபலம் தேவையாகி நிற்பதையும் அதனைப் புறந்தள்ளி ஒன்றும் நடைபெற்று இருக்காது என்பதையும் நினைவுபடுத்திக் கூடுதலாகச் சிந்திக்க வழிவகுக்கிறது.
நித்திலை வேட்டுவப்பெண். அரவசு பார்ப்பனன். இந்த இருவரிடையே நிகழும் உரையாடல் மிகவும் ஆழமாக அர்த்தம் செறிந்ததாகக் காட்சி அளிக்கிறது. நித்திலை சொல்கிறாள் ‘ டேய் சாதிக்காரங்களை பொறுத்தவரையில் அவுங்க ஆசைப்பட்டு வஞ்சிக்கறதுக்குத்தான் கீழ்ச்ாதிப் பொண்ணுங்க வேணும். கட்டிக்கும் போது மேல்சாதிப் பொண்ணுங்களத்தான் கட்டிக்குவாங்களாம் ‘ என்று சாதாரண தளத்தில் இருந்து பேசுகிறாள். சமூகப் பார்வை நல்ல விமர்சனமாய் வந்து விழுகிறது. அதே பெண், யவக்கிரிதன்போன்ற ஞானிகளிடம் கேட்பதற்கு தன் தளத்தை உயர்த்திக் கொண்டு விடுகிறாள். மற்றொரு இடத்தில் ‘மழை ஏன் பெய்யலங்கறது ஒரு கேள்வி. உன்னுடைய சாவு எப்பன்னு உனக்குத் தெரியுமாங்கறது ரெண்டாவது கேள்வி. ரெண்டுக்கும் அவர் தெரியாதுன்னே பதில் சொல்லிட்டா அவர் ஞானம் அடைஞ்சி எந்தப் பிரயோஜனமும் இல்லன்னு அர்த்தம் ‘ என்கிறாள் நித்திலை. கிரிஷ் கார்னாட் இவ்விடத்தில் நித்திலை வாயிலாக ஞானம் என்பது என்ன என்கிற விளக்கத்தை அளிக்கிறார்.
‘தவத்தால் ஞானம் அடைய முடியாது. அது வாழ்க்கையிலிருந்து கனிந்து பெருகி வரணும் என்கிற வரியும்ஆனா எதுவுமே கிடைக்காதுங்கற உண்மையாவது புரிஞ்சிது. அதுவும் ஒருவகையில ஞானம்தானே ‘ என்று யவக்கிரிதனே சொல்லும் வரியும் வாசகனைக் கிறங்க வைக்கின்றன. விசாகை தனக்கு இஷ்டமில்லாதவனை மணந்து காதலைத் துய்க்கிறாள். கணவன் அரசனின் அழைப்பை ஏற்றுப் பஞ்சத்தைப் போக்க நிகழ்த்தப் படுகிற யாகத்தை நடத்தச் சொல்கிறான். விசாகைக்குத் தன் கணவன் வேண்டும். அவனோ அரசனுடைய கட்டளைக்குக் கட்டுப்பட்டவன். விசாகை தன் அவஸ்தையை யவக்கிரிதனுடன் பகிர்ந்து கொள்கிறாள்.
நாடகத்தில் யவக்கிரிதன் தன் தந்தைக்கு நேர்ந்த சோகத்தை எண்ணிப் பேசுகிறான். ரைப்ய மகரிஷிதான் தன் தந்தையை எப்படி எல்லாம் அவமதித்தார் என்று பேசுகிறாள். யாகம் நடைபெற்ற போது தன் தந்தைக்கு வரவேண்டிய தலைமைப் பொறுப்பு இடம்மாறிப் போனதைப் பற்றியும் பேசுகிறான். தான் காட்டுக்குச் சென்று தவம் இயற்றியற்கான காரணங்களைப் பட்டியலிடுகிறான் யவக்கிரிதன். ஒரு கட்டத்தில் ‘ஞானம் எனக்கு வேணாம். கோபம், குரோதம், மோகம் எல்லாவற்றையும் சுட்டுச் சாம்பலாக்குகிற ஞானம் தனக்கு வேணாம் என்று பேசுகிறான். இந்த மன விசாரங்கள்தாம் நான். என் துஷ்டத்தனங்களையும் ஒத்துக் கொண்டு இடம் தருகிற ஞானம்ான் எனக்கு வேணும்ன்னு சொன்னேன் ‘ என்று சொல்லும் வார்த்தைகள் நம் சிந்தனையைத் துாண்டுகின்றன.
‘பூத்து வாடிக் கீழே விழத்தான் போறோம்ன்னு முதலிலேயே பூவுக்கு தெரியாம இருந்தா என்னைக்காவது பூ பூத்திருக்குமோன்னு அடிக்கடி தோணும் ‘ என்ற நித்திலையின் வார்த்தைகள் அற்புதமான தத்துவச் சொடுக்கு. சாவு என்பது எவனுக்கு நேருமோ அவனே விஷயங்களைச் செரித்துக் கொள்ள முடியும். சாவு ஒரு வாய்ப்பு, சாவு ஒரு கொடுப்பினை என்கிற எண்ணங்களுக்கு இட்டுச் செல்வதாக இவ்வரிகள் அமைகின்றன. ‘முகமூடிய ஒரு முறை போட்டுகிட்டா அதை உறுதியா பிடிச்சிக்கணும். இல்லன்னா அது உன்னை ஆட வச்சிடும். முகமூடியிலிருந்து சக்திய நீ உறிஞ்சி எடுத்துக்கணுமே தவிர நீ அதுக்கு அடிமையாக கூடாது ‘ என்கிற உரையாடல் மிக முக்கியமான ஒன்று. இவ்வரிகள் நாடகத்தை விட்டு வெளியேயும் பொருள் பொதிந்த ஒன்றாக விளங்குகின்றன.
பொய்யான வேத ஆகமவரைவுக் கோட்டினை புறந்தள்ளி மனித மனங்கள் பொதுவாக மேல் எழ விழைகின்றன. சமூகம் தனக்குக் கற்பித்தக் கொண்ட நியாயம் என்னும் தளைகள் இடையறாது துளிர்விட்டுக் கொண் டே நிற்கின்றன. உடலின் பசி அறிவியல் விஷயமாகிக் கற்பனை எல்லைகளைத் தவிடுபொடி ஆக்குகிறது. ஆதிக்க வர்க்கம் தனது கொடு விஷத்தை விளைவிப்பதைத் தடுத்து நிறுத்த முடியாமல் கைகட்டிச் சேவகம் பண்ணுகிறது அறிவு முதலாளிகளின் மந்தை. அக்னியும் மழையும் நாடகத்தில் கிரிஷ் கார்னாட் அற்புதமான பெண் பாத்திரங்களை உலவ விட்டு நிம்மதி பெற்றிருக்கிறார். கம்பன் சானகியின் துயர் பற்றிக் குறிப்பிடும் போது பெருங்கடவுள்கள் மூவராலும் கூட பெண்களின் அடிமனம் படும் துயரைக் காண முடியாது என்று குறிப்பிடுவதை நோக்கலாம். தீயைத் தீய்த்துத்தான் தன் கற்பு களவு போகாததைப் புருடோத்தமனுக்குமே அவள் அறிவிக்க வேண்டிய சிறுமை ஏற்கிறாள்.
பாவண்ணன் தொடும் பல மொழிபெயர்ப்புகள் நல்ல வாசிப்பு அனுபவங்கள் கொண்டவையாக உள்ளன. நல்ல நாடக தரிசன அனுபவங்களையும் கொண்டுள்ளன. மொழிபெயர்ப்புகள் வழியாக் ஊக்கம் பெற்று நல்ல படைப்புகள் தமிழில் தோன்றக் கூடும் என்று அவருக்கு நம்பிக்கை இருக்கிறது. அது உருவம் காண தமிழ் எழுத்துலகம் புதிய ஒளிக்கீற்றைத் தனதாக்கலாம். கனியட்டும் கருவும் காலமும் என்பதே இன்றைய விழைவாகிறது. நிறைவும் அதுவே.
***

No comments:

Post a Comment