Friday, January 24, 2020

enakkuppitiththa kathaikal-paavannan 2




எனக்குப்பிடித்த கதைகள்- பாவண்ணனின் சாகித்ய சஞ்சாரம்




பாவண்ணனின் அனேக படைப்புக்களில் ’ எனக்குப்பிடித்த கதைகள்’ வித்தியாசமான ஒன்று. புதிய தடத்தை வாசகனுக்கு அறிமுகமாக்கிய விஷயமது .தனக்கு நேர்ந்த அல்லது தான் சந்தித்த ஒரு நிகழ்வினை ஒரு சிறுகதைப்படைப்பின் மூலத்தோடு உரசிப்பார்க்கின்ற ரம்மியமான அனுபவமே இங்கு வெளிப்பட்டிருக்கிறது. இது விமர்சனமாய் படைப்பாய் ஏன் ஒருபடைப்புச் சந்திப்புமாகி வாசகனுக்கு முன் விரிந்து நிற்கிறது. எந்தச்சிறுகதையையும் அப்படிப்படிப்பார்க்கிற புதிய வெளிச்சத்தை தந்து நிறைவு செய்கிறது .பாவண்னனின் நினைவுத்தோயலுக்கும் இது ஒருவகையில் சரி வெளிப்பாடாய்க் கொள்ளலாம். ஆகப்பெறும் படைப்புச்சிகரங்களை தரிசிக்க வாய்ப்பு ஏற்படுவதோடு படைப்பாளியின் சொந்த அனுபவங்கள் இடை இடையே விரவி நெகிழவும் வைக்கிறது. அன்பெனும் பிடியுள் அகப்பட்டுக்கொள்கிறது மலை.
தமிழ் நாட்டுச்சிற்றூர் பாவண்ணனின் வளவனூர். இங்குதான் எத்தனைபேர் பாசத்தால்
இந்த படைப்பாளியைக்கட்டிப்போட்டு வைத்திருக்கிறார்கள். எல்லோரும் சாதாரண மனிதர்கள். அம்மனிதர்கள் சரிப்பொருத்தமாய் பாவண்ணனோடு இயைந்து வளவனூரை வலம் வந்தவர்கள் என்கிற விஷயம் படைப்பில் அவிழ்த்துக்கொள்கிறது
எந்தரோ மகானுபாவுலு- என்று நம்மை சொல்ல வைத்து விடுகிறார் பாவண்ணன்.. பாவண்னன் அவர்கட்கெல்லாம் உறவென்றால்
நமக்கும்தான் என்கிறது வாசக மனம். நாமும் அவர்களின் பெயர்களைச்சொல்லிப்பார்க்கலாம். இந்த அத்தனை பேரும் சேர்ந்து நமக்கு
பாவண்ணனாய் க்காட்சி அளித்திடலாம்.
வளவனூரின் திருக்குறள் கழகம், ஏரிக்கரை,ரயில்வேநிலையம்,சைக்கிள் பயணத்தின் போது
திருவக்கரையின் சாலைக்காட்சி, இவைஇவைகளோடு ,தையல்கார சித்தப்பா,சித்தி, வளவனூர் தபால்க்காரர்,படைப்பு சமர்ப்பணம் பெறும் திருஞானசம்பந்தம்.ரோஜாமண ,தங்கப்பா,மதிவாணன்,சுப்பிரமணியன்,பழனி ,பண்ணையார், அவர்மனைவி ,தியாகராஜன்,
குமாரசாமி உ,டற்பயிற்சி ஆசான்செல்வராஜ் கணேஷ¤, அவன் அக்கா ஓவிய ஆசிரியர் ,ரவி, கலைக்டருக்கு ப்படித்த உள்ளூர்க்காரர், டூங்கிலிசு ரங்கனாத அய்யர் அறிவியல் குலசேகரன் சரித்திர சுப்பையா, தமிழரசிஅக்கா ,குறள் ரங்கனாதய்யா,காத்தவராயன், ஓணான் பிடிக்கும் ஜெயபாலன், வேலு பெரியப்பா ,நட்பு- பாட்டி இந்த இரண்டுமான ஆயா ராஜாராமன் கணேசனார் அபசு ,பொன்னம்பலம் துரைசுந்தரமூர்த்தி, துரக்கண்ணு பழனிச்சாமி, தாமு கிருட்டினன், என எத்தனை மனிதர்கள் படைப்பாளியின் பாச வலையில்சிக்குண்டு நிற்கிறார்கள்.
இந்த நூலுக்கு நினைவில் பதிந்த சித்திரங்கள், என்கிற முன்னுரை தரும் பாவண்ணன் ஏரிக்கரை பற்றி தான் ஆரம்ப கால புராணம் எழுதியதைச்சொல்கிறார் .பழனி என்கிற நண்பனோடு தான் பேசுகின்ற வாசகம் , ‘ இப்படி இருப்பது நல்லது என்று வலியுறுத்துவது இலக்கணம் இ,ப்படி இருக்க முடியாமையின் அவத்தைதான் இலக்கியமோ’ ராமாயணமும் சிலப்பதிகாரமும் பாவண்ணனுக்குத் துணைக்கு வருகின்றன. எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இருக்க முடியாமையின்வரவு செலவுகளாகவே அக்காப்பியங்களை நாம் இன்றும் உணர்கிறோம்.
புதுமைப்பித்தனின் ‘மனித இயந்திரம்,’ பாவண்ணனின் ‘கழிமுகம் ஒ ’ப்பிட்டுக்காண வாய்ப்பு தருகிறார் ஆசிரியர்.
கிளிகள் ஒன்றையன்று சண்டையிட்டுக்கொண்டு ஜோடி பிரிதல் நிகழ்கிறது .பறத்தல் ஒன்றன் சுதந்திரமாய் க்காண முடியாமல்
சோகம் விஞ்சுகிறது. தவிப்பு தவிர்க்கமுடியாதது புதுமைப்பித்தனின் மீனாட்சிசுந்தரம் பிள்ளையை அலசிப்பார்க்கிறார் பாவண்ணன்.
வரவும் செலவுமே வாழ்க்கை, மானுட சுவாசம் அய்ந்தரைப்பெட்டி மணியமே ஒரே பணி என்பதாய் கழிந்துபோகிறது மனித வாழ்வு. யந்திரம் போலவா பிள்ளை யந்திரமேதான் பிள்ளை.
சிறு பிசகு செய்து தப்பித்தல் இங்கே; ஏது அதனைத் தாங்கும் திறம் கொண்டவரா பிள்ளை. இல்லை மீன்டும் விலங்கிட்டுக்கொள்வதே அவருக்குசாத்தியமாகிறது .’நடுத்தெருவுக்கு வந்து நாறிப்போகாமல் மத்திய தர வர்க்கம் தன்னை க்காத்துக்கொள்ள யந்திரமாகி இயங்குதல் பயில்கிறது புதுமைப்பித்தனை வாழ்க்கையும் ஏமாற்றித்தானே விட்டது.
ஒவ்வொரு கதை அலசலுக்கும் முன்பாக அந்த படைப்பாளியின் அழகு கோட்டுச்சித்திரம். ஆகப்பெரிய மரியாதை . அவ்வாசிரியரைப் பற்றிய சில குறிப்புகள் கூட. ..தனக்கு நேர்ந்ததோடு எதனையும்பொருத்திப்பார்க்கிறார் பாவண்ணன். அனுபவம் தரும் அருஞ்செல்வம் இது.
ந. பிச்சமூர்த்தியின் படைப்பு  ‘தாய்’ அற்புதமாய் இங்கே எடையிடப்படுகிறது. விமர்சகனாய் இங்கே பாவண்ணனைக் காணமுடியாது ஒரு படைப்பு தந்து வாசகனை நெஞ்சம் நெகிழவைக்கிறார். இலக்கிய சம்பந்தம் உள்ளவர்கள் பாவண்ணனைப் படித்து ரசித்து வசப்பட வேண்டிய இடம் இது. விமர்சகனுக்கு கட்டுப்படாமல் படைப்பு ஊற்று துருத்திப்பார்க்கிறது. ஞானப்பழம் கிடைக்க வாகனமும், பயணித்தலும் தேவைஓடும் ரயிலை ஞான ரதமாய்க்காட்டுகிறார் பாவண்ணன் . பிராந்திபாட்டிலைத்திறந்து இருமலால் அல்லல் படும் குழந்தைக்குப்பால் கொடுக்க முற்படும் முட்டாள் தந்தையைப் புறந்தள்ளி, தாயை இழந்த அக்குழந்தைக்கு தன் முலைச்சுரப்பை அளிக்க ஆவேசமாய் எழும் தாய்மையை வாசகனுக்குத் தருகிறார் பிச்சமூர்த்தி. ஞானப்பால் கொடுத்தவள் பராசக்தி. கண்கள் பிசைந்து அழும் கழுமலச் சம்பந்தனை சிரிக்கவைத்தவள் மாகாளி. யாதுமாகி இப்படி நிற்கமுடியும் ஒருதாயால்.. நாயுடு ப்பெண் தன் குழந்தக்கு மட்டுமே தாய் என்கிற நிலையிலிருந்து பசியால் அழும் இன்னுமொரு குழந்தைக்கு தாயாக தன்னை நகர்த்திக்கொள்வதைபிச்சமூர்த்தி காட்டுகிறார். பிரபஞ்சத்தில் பயணமே இப்படி மேதமை வளர்க்கிறது அது நிதர்சனமாய் என்கிறார் பாவண்னன். ஒரு ரயில் பயணமே மோகன்தாசு காந்திக்கு தென்னாப்பிரிக்காவில் தர்மாவேசம் தருவித்தது, ஞானவிளக்காம் ரமணரை திருவண்ணாமலைக்கு ரயில் பயணமே கொணர்ந்தது., ரவீந்திரரின் கப்பல்பயணமும் விவேகாநந்தனின் சிகாகோ பயணமும் மனத்திரைக்கு வருகின்றன. சொல்லப்போனால் குறிஞ்சி வேலனை , பாவண்ணனை, சுப்பிரபாரதிமணியனை
பயணங்கள் மட்டுமே மேதமை தந்து ஆழ அகல சிந்திக்க வைத்திருக்கின்ன.
மெளனியின் சிறுகதைபடைப்பு பற்றி, ‘ படிக்க நேரும் ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு விதமான அனுபவம் பெறுவதைக்குறிப்பிடுகிறார் பாவண்னன்.
உபநிடதங்கள் படிக்கும்போது ஏற்படும் அனுபவம் இது. பன்னரும் உன்னத நூல்கள் அவை. அதுவா குப்பை என்று சொல்லி இறுமாந்து போவது மெருகிட்ட அகம்பாவம் மட்டுமே. திருக்குறளும் ,திருவாசகமும் படிக்கும் தோறும் பெறும் சுகானுபவத்தை வள்ளல் வடலூரார் வாய் சொல்லி கேட்டுப்பார்க்க ஓரளவு நமக்குத் தெரியலாம். கீட்சின் கவிதைகள் ஷெல்லியின் கவிதைகள் எப்போதும் அப்படித்தான். வயதான கணவர் இளைய மனைவி இந்தப்பொறுத்தப்பிசகு பற்றிப்பேசுகிறார் பாவண்னன். ‘சாவில் பிறந்த சிருஷ்டி’யோடு இதனை ஆய்கிரார், புகைவண்டி நிலைய பிளாட்பாரத்தில் மூன்றுமணி அடித்தலையும், இரண்டு மணி அடித்தலையும் மெளனியின் கதை வழி ச்சென்று மணவாழ்வின் படிமமாக தான் பார்த்தலை வாசகனுக்குச்சொல்கிறார் பாவண்ணன். நன்மைக்கும் தீமைக்கும் இடை மனிதன் அல்லல் படுவதைச்சுட்டுகிறார்.
தள்ளாத வயது அப்பர் பெருமானுக்கு அந்திமகாலத்து ஈசனின் காட்சி. வழுக்கைத்தலையில் ஒரு வைர ராக்கொடி. இன்று ஞானபீடமாம் ஜெயகாந்தனுக்கு. அதுவேறு.கதை பாவண்ணனும் ஜெயகாந்தனும் பக்கத்து பக்கத்து ஊரார்கள். அந்த வளவனூரும், கடலூரும். பக்கம் பக்கம்.
மனிதனின் இடது பக்க சிந்தனையை அழகாய் மீட்டி ஆலாபனை செய்யத்தெரிந்தவர் ஜெயகாந்தன். ஜெயகாந்தனின் குருபீடம் படித்துப்பேசுகிற பாவண்ணனை அடையாளம் காணாதவர்கள் மன்னிக்கப்படுதல் சிரமமே. க்ரீஷ் கர்னாட்டின் பலிபீடம் மொழியாக்கம் செய்தபாவண்ணனை புரிந்துகொள்ள தமிழ் இலக்கிய உலகுக்கு ஏதோ தடை இருக்கிறது. தடை உடைபடலாம். நேரும்போது பலருக்கு விலாசம் இல்லாமல் போகவும் கூடும்.
ஞானம் என்பது ஆழமும் எல்லையும் காணமுடியாத கடல். ஒவ்வொருவர் நெஞ்சிலும் சேகரமாவது ஒரு துளி மட்டுமே. துளி
கடலின் பகுதி மட்டுமே எப்போதும் அது கடலாவதில்லை.. ஆனால் தன் அடர்த்தியைப்பெருக்கிக்கொள்ளவே ஒவ்வொரு
துளியும் விழைகிறது. பாவண்ணன் இங்கு காலடி சங்கரரின் கடாகாசம் பேசுகிறார் .கற்றலும் ஞானமும் எல்லைகள் அற்றவை .
பிரமிக்க வைக்கும் உன்னதங்கள் அவை.
கி. ராஜநாராயணின்’கன்னிமை’ பாவண்ணனின் கண்களில் பட்டு வாசகனைக்கட்டிப்போடுகிறது. கன்னிப்பெண்ணும் ,மணமாகிய
பெண்ணும் என்கிற விசயங்கள் இந்தியக்கலாசாரத்திற்கே உரித்தான பொக்கிஷங்கள் .மக்களை ஈரம் காயாப்பசுமையோடு மட்டுமே
பார்ப்பவர் கி.ரா. பேச்சுமொழிக்கு மகுடம் சூட்டக்குரல் கொடுத்தவர் கி .ரா.. குக்கிராமத்து ஆதி திராவிடத் தாய்மார்கள் மத்தியில் பொதிந்து கிடக்கும் தூய தமிழ்ச்சொல் பற்றி என்றும் பெருமைப்பட பேசும் கி.ரா. ,கன்னிமையை கி.ரா ஆராதிக்க வழி மொழிகிறார் பாவண்னன்.
தாசுதாயெவ்சுகியின்’நாணயமான திருடன்’ பாவண்ணனுக்கு ஹாஸ்பெட் வாழ்க்கையில் தான் சந்தித்த ஒருவரை நினைவுக்குக்கொண்டுவருகிறது. நண்பன் கொடுத்து வைத்திருந்த பணத்தை இல்லை என்று சாதித்து விட்டு வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டு மரணம் வரும் தருவாயில் குற்றம் உலுக்கி எடுக்க கட்டிலில் சயனித்து இருக்கும் ஒரு நடுத்தர விவசாயி பற்றிய வாழ்வானுபவத்தை எடுத்து வைக்கிறார் பாவண்ணன். மரணத்தின் முன்னால் தன் அகங்காரங்களையும் பெருமைகளையும் மறந்து ஒருவன் மண்டி இடுகின்ற தருணம் முக்கியமானது.மரணத்தை இருளாய்ப்பார்க்கும் தாழ்ந்த தளம் தவிர்த்து மரணம் என்பது அழுக்குகளைப்பொசுக்கி மனிதனை நெறிப்படுத்தும் நெருப்புக்கோளமாய் ஒர் சூரியனாய் வாசகனைக்காணவைக்கிறார் பாவண்ணன்.
நடு இரவில் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்று தன் அம்மாவிடமே ரெண்டு ரூபாய் கடன் வாங்கி சாராயம் வாங்கிக்குடித்து சரிந்து கிடக்கும் தந்தையின் முன்னால் குழந்தையின் சவம். நேரில் தான் கண்ட அனுபவத்தை பிரேம்சந்த்தின் ‘தோம்புத்துணி’யோடு எண்ணிப்பார்க்கிறார். மாமனாரும், மகனும் பிரசவத்தில் இறந்துபோன மருமகளின் பிணைத்தைக்காட்டி காசு பெற்று சாராயம் குடித்துவிட்டு அந்தச்சவத்தை இருட்டியபின் அம்மணமாய் அடக்கம் செய்கிறார்க:ள். பிரேம்சந்த் மாபுருடன்தான். கட்டிக்கொண்டவளை சூதாட்டத்தில் தோற்று மானபங்கம் செய்ய அலிகளாய் நின்ற மாபாரத வீரர்களை நினைவு படுத்திப்பார்க்கிறார்பாவண்ணன்.
முல்க்ராஜ் ஆனந்த் எழுதிய’குழந்தை மனம்’ பாவண்ணனைத் தொட்டுப்பேசுகிறது. இலக்கியச்சிந்தனை விருது பெற்ற ‘முள்’ பாவண்ணனின் படைப்பு. இந்து நாளிதழில் மொழியாக்கமாய் வந்தது. அவரின் குழந்தை மனம் அதனில் வெளிப்பட்டது.
வீட்டுச்சாமான்கள் அளவுக்கு நான்கைந்து சாக்கு மூட்டைகள் விளையாட்டுச்சாமான்கள் குழந்தைக்கு வாங்கி ஆனந்தப்படும் நண்பர் ஒருவரைப்பற்றிச்சொல்கிறார். முல்க்ராஜின் கதையில் பெற்றோர்கள் அருகிருக்கும்போது பர்பி ,பூ ,பலூன் ,குடைராட்டினம் என்று அடம் பிடிக்கும் குழந்தை அவர்கள் தொலைந்துபோன சமயம் அவை எதுவும் வேண்டாம் என அழுது அடம் பிடிப்பதைப்பார்க்கமுடிகிறது.
சிறு கதைகள் எழுதுவதில்’ அந்தோன் செகாவ். இணை இல்லாச்சிகரம் என்றே எழுதுதல் தெரிந்தவர்கள் குறிப்பிடுவார்கள். வான்கா
என்கிற சிறுவன் பற்றிய செகாவின் கதையை தான் சந்தித்த ஒரு ஏழைச்சிறுமியோடு ஆசிரியர் இணைத்துச் சிந்தித்துப்பார்க்கிறார்.. ஒரு சட்டை எடுத்துத் தர வேண்டும் என நினைத்து கொடுக்காமலேயே அந்த ஊரைவிட்டு வந்துவிட்டதை நினைத்து மனம் ரணமாகிறது பாவண்ணனுக்கு. கவிஞர் பழமலய்ஒரு கவிதையில் ராமசாமி என்கிற சொந்த ஊர் காரனுக்கு சட்டை எடுத்து தருவதாய் வாக்குக்கொடுத்து அடுத்தமுறை வாயேன் என்பார். அடுத்த முறை ராமசாமி வரவில்லை. இறந்து போகிறான். மேற்சட்டை கேட்டவன் மெய்ச்சட்டை தொலைத்த சோகம் சொல்வார். எத்தனையோ ராமசாமிகள் எல்லோர்க்கும். மொழி தேசம் இனம் கடந்து வறுமையின் முகவிலாசம் தெரிந்தவன் மட்டுமே படைப்பாளி யாகிறான். பாவண்ணனுக்கு இது சாத்தியப்படுதல் அனுபவமாகிறது.
மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் படைப்பு’ மசுமத்தி. ‘அது ஒரு கிழவன் வரைந்த ஒவியம். முற்றுப்பெறா ஒன்று. படம் வரைந்து முடிப்பதற்குள்ளாய் ஊர்க்கோட்டையில் அந்நியன். ஆம் அந்த ஒவியம் பாதியில் நின்று போகிறது. குழந்தைக் கண்ணன். அவன் அருகே பசுவின் ஒவியம். முற்றுப்பெறாமல், வயிற்றுப்பசியால் ஓடிவந்த கன்று. கண்ணன் குழல் கேட்டு மெய்மறந்து நிற்கிறது. வயிற்றுப்பசியை தாயின் மடியும் ஆன்மப்பசியை கண்ணனின் குழலும் ஓவியத்தில் சுட்டுகிறது.
நண்பர் ஒருவருக்கு மரச்சாமான்கள் வாங்கப்போய் ஒரு பெரியவரையும், புராதன வேலைப்பாடு மிகுந்த அவரின் பொருட்களையும் கண்டு எதுவுமே வாங்காமல் திரும்பிவிடுதல் நிகழ்கிறது .பாவண்னனுக்கு மரச்சாமான்கள் உயிரோடு இருப்பதாய் இங்கு அனுபவமாகிறது.
‘பாழடையத்தொடங்கிய ஒன்று என ஆள்ஆளுக்கு இடிக்கத்தொடங்கினால்,’ என்னும் மாஸ் தியின் வார்த்தைகளை பாவண்ணன் ஓங்கி வழி மொழிகிறார்.
எனக்குப்பிடித்த கதைகள் கனமானது. படைப்பாளிகள் படிக்க பாவண்ணன் உதவி செய்துள்ளார் வாழ்த்தலாம்.. மனம்தான் வேண்டும்.

No comments:

Post a Comment