Monday, January 20, 2020

paaymarakkappal -paavannan.6

6 பாவண்ணனின் பாய்மரக்கப்பல் ஓர் மீள்வாசிப்பு. எளிமையும் நேர்மையும் அணிகலனாய்க்கொண்ட அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை பாவண்ணனைவிட அழகாகச்சொல்ல யார் இருக்கிறார்கள்.கண்ணியமான  எழுத்துச் சித்தரிப்பின் வழி ஒரு பாத்திரத்தின் மெருகு கூட்டுதல் பாவண்ணனுக்கு இயல்பாகவே அமைந்து விடுகிறது
.விவரம் பெரிதாக ஏதும் அறியாத ஒரு உழைப்பாளியின் வாழ்க்கை எத்தனை அழகானது ஆழமானது அர்த்தமானது என்பதனை பாவண்ணனின் கண்கள் யதார்த்தமாய் நோக்குகின்றன. அதனை வாசகனுக்கு தன்பாணியில் கொண்டு தருகிறார் பாவண்ணன்.. வாசகன் ஒரு புன்னகையோடு படைப்பாளிக்கு சபாஷ் சொல்லிவிட்டு வாசித்தலைத் தொடர்கிறான்.ஓவ்வொரு படைப்புமே ஒரு செய்தியை வாசகனோடு பகிர்ந்துகொள்ள  மட்டுமே என்பதுவாய் தனது எழுத்தின் நேர்மையை நிறுவுகிறார் பாவண்ணன்.
காவ்யா தனது பதிப்புரையில் குறிப்பிட்டுள்ளபடி’ பாவண்ணன் தமிழ் நாவலாசிரியர்கள் வரிசையில் தனிரகம்தான். இவர் தனக்கென ஒரு பாதையைத்  தேர்ந்து  அதனில் பயணம் செய்வதை வேள்வியாகச்செய்து வருபவர்.
பாய்மரக்கப்பல் என்னும் புதினம் பாவண்ணனின் எழுத்து லட்சியத்தை  வாசகர்களோடு மிகச்சரியாய் பகிர்ந்து கொள்கிறது. எத்தனை இடர்கள் அடுக்கி வரினும்  மனித வாழ்க்கையில் சோரம் போகா எளிய மனிதர்களின் பெரு மனக்கார்ர்களின் வாழ்க்கைச்சித்திரத்தை எழுதிக்காட்டுகிறது.
‘பெரிய பாட்டாளி. முத்துசாமிக்கவுண்டர்னா ஊருக்கே தெரியும்.இந்த சொத்தெல்லாம் அந்த ஆளு சம்பாதிச்சதுதான்.தாத்தா சம்பாதிச்சதை பேரன் அழிக்கிறான்.எல்லாம் தலை எழுத்து’   நாவலில் மேஸ்திரி சித்தாளுக்கு சொல்கிற செய்தி இது. நம் எல்லோருக்கும் படைப்பாளி சொல்கிற தொடக்கச்செய்தியாகவும் இதனைப் பார்க்கலாம்  நமது .தாத்தா தலைமுறையினர். வாழ்ந்த வாழ்க்கை நமது பேர்க்குழந்தைகளுக்கு பிடிபடவில்லை.
தொண்ணூறு வயதைக்கடந்து விட்டவருக்கு உலகமே தலைகீழாக மாறிவிட்டதை உணரமுடிகிறது. அந்தப்பெரியவரைப்பற்றி ப்படைப்பாளி இப்படிச்சொல்கிறார்.
‘மண்ணின் சூட்சுமங்களை அவர் மனசு அறியும். காற்று மழையின் வரவுகளைத்துல்லியமாய் அவர் மூக்கு உணர்ந்துவிடும். இயற்கையைப்பற்றி கொண்டிருந்த ஞானம் எந்த விஞ்ஞானப்புத்தகத்திலும் சேகரிக்க முடியாத சொத்து..தெருவில் யார் நிறுத்திப் பேசினாலும் அவர் நாலு நிமிடம் பேசத்தயங்குவதில்லை. எல்லாக்குழந்தைகளையும் தலைத்தொட்டு ஆசிகள் வழங்குவார்.திருமண ஜோடிக்கு த்தாலியை முதலில் தொட்டு ஆசீர்வாதம் செய்து அவர்தான் கொடுப்பார்.விரோதம் கொள்ளும் புருஷன் மனைவியைக்கூப்பிட்டுப்பேசி ராசியாக்கி அனுப்புவார். இப்படிப்பட்ட ஒரு பெரிய மனசுக்காரரைத்தான் ஊராட்சித்தலைவராக்கிப்பார்க்க அந்த மக்கள் முயற்சிக்கிறார்கள் அவர் ஒத்துக்கொள்ளவில்லை. ஒரு தேசியக்கட்சி அவரை பாராளுமன்ற உறுப்பினராக்கிவிடலாம் எனத்தீர்மானிக்கிறது. ஆனால் தோல்வியே கண்டது. எந்தச்சபலமும் இல்லாத அவரது மன உறுதி பலரையும் வெட்கிக்கூசவைத்தது இப்படிக்கூறும் பாவண்ணன்  தாய் நாட்டுவிடுதலைக்கு ப்போராடிய கள்ளமில்லாத ஒரு தலைமுறையை நம் கண்முன்னே  காட்சிடாக்குகிறார்..
 இன்று இறைவழிபாட்டையும் அதன் வழி எழும் பூசலையும் வாக்கு வாங்கியாக மாற்றி அரியணையில் அமர்ந்திருக்க வாய்த்திருக்கிறது. வாழ்ந்துமுடித்த பெரியவர்களை நோக்கக் காலம் நம்மை எங்கேயோ கொண்டு சேர்த்து க்கேலியாய்ச்சிரிப்பதைக்காண வாய்த்திருக்கிறது.கண்கள் செய்துவிட்ட பாவம்தான் அத்தனையும்.
 பாவண்ணன் படைப்பு என்றால் ஏரி பற்றி நிச்சயமாய் சித்தரிப்பு இருக்கும்.வர்ட்ஸ்ஒர்த் என்னும் ஆங்கிலக்கவி எப்படி இயற்கையை ஆராதித்தானோ அப்படி ஏரிக்கரைகளை கண்மாய்களை நீற்றொழுக்கை ஆறுகளை மலை முகடுகளைச் சிலாகித்துச் சிலாகித்து எழுத்தில் கொண்டு வருபவர் பாவண்ணனுக்கு அவர்  பிறந்து வளர்ந்த  வளவனூரின்  ஏரி அவருக்குக் குலதெய்வமோ என்கிறபடிக்கு வாசகன் உணர்கிறான்.
’மாடுகள் மேயத்தொடங்கியதும் முத்துசாமி மரத்திலேறி ஆடுகளுக்குத்தழை பறித்துப்போடுவான்.ஆடுகளின் சிவந்த நுனி நாக்கு பார்க்க அழகாக இருக்கும்.ஓவென்று கூவியபடி ஏரியை நோக்கி ஓடும் மற்ற பிள்ளைகளோடு சேர்ந்துகொள்வான்.’  இப்படி அடுக்கிச்சொல்கிறார் பாவண்ணன். ஆடுகளின் சிவந்த நுனி நாக்கைத்தவறாமல் குறிப்பிடும் பாவண்ணன் இயற்கையை நன்றாகவே ஆராய்கிறார்.
விவசாயக்குடும்பத்தோடு நெருங்கிய படைப்பாளி என்பதை அவரின் எழுத்து வாசகனுக்கு அறிவித்துச்செல்கிறது.’ வயலில் உழவின் போது மாடுகளின் பின்னால்  ஓர் ஏரோட்டி கால்களை அகட்டி அழுந்திச்செல்லும் நடையை பாவண்ணன் சரியாக குறிப்பிடுகிறார். வளைவுகளில் கலப்பையை ஊன்றி அழுத்திக்கொண்டு மாடுகளை லாவகமாய் வளைக்கிற வித்தை பாவண்ணனுக்கு பரிச்சயமாகி இருக்கிறது. அழுத்திப்பிடித்த உள்ளங்கைகள் ரத்தம் கட்டிப்போவதும் அதற்கு மஞ்சள் அரைத்து பத்து போடுதல் வரை உள்வாங்கியிருப்பது படைப்பாளியின் சொந்த பந்தங்கள் பட்ட பாட்டை நேரில் கண்டதன் விளைவாகவும் இருத்தல் சாத்தியமே.
விவசாயிக்கு ஆயிரம் கஷ்டங்கள் இருந்தாலும் விவசாயி என்று சொல்லிக்கொள்வதில் இருக்கிற ஆனந்தத்தைப்பற்றி ச்சொல்கிறார் பாவண்ணன். இவ்வானந்தத்தை வைத்துத்தான் அரசியல் சொக்கட்டான் ஆடுகிறது இன்றைய அரசியல்.
‘மண்ணில் தூவிய விதைமணிகள் கண்முன்னாலேயே பயிராய்மாறி நிற்கிற அழகு கண்கொள்ளாத காட்சி.அந்தப்பயிரில் இருந்து எழும் பச்சை மணம் நெஞ்சை அள்ளும்.அதன் நிறம் தெளிவு குளுமை எல்லாமே நிகரற்றவை.காற்றுடன் அது உறவு கொண்டாடிக்குழைந்து சாய்வதும் சரிவதும் நிமிர்வதும் இனிமையான நாடகம். ஒரு நடனக்காரிபோல நாலு புறமும் திரும்பிச்சுழன்று குலுங்கும் அதன் குதியாட்டத்தில் அடிமையாகும் மனம்’                     
சொல்லிக்கொண்டே போகிறார் பாவண்ணன். வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம் வாடினேன் என்பார் வடலூர் அருட்பிரகாச வள்ளலார்.விவசாயி ஒருவனுக்கும் இந்த ஆன்மீக ஞானிக்கும் ஒரு பந்தம் இல்லாமலா இப்படிப் ‘பயிர்’ என்ற சொல்லை அவர் பயன்படுத்தி இருக்கமுடியும்.
பாகப்பிரிவினை சமாச்சாரம்  குறித்து பாவண்ணன் நன்கு அலசி எழுதுகிறார். ஒரு தாயின் மூன்று மக்களில்  ஒருவன் ஒரு ஆட்டுக்குட்டி தனக்கு வேண்டும் என எத்தனை ஆவேசம் கொள்கிறான். அதனை மூன்றாக ப்பிய்த்து தரமுடியாது ஆக அது  பெற்ற அம்மாவிடம் இருக்கட்டுமே என்ர்று பஞ்சாயத்தார் முடித்து வைத்தால் அதனை ஏற்க மனம் வரவில்லயே.. நானும் காசாம்புக்கவுண்டனுக்குப்பொறந்தவந்தான் அத ஞாபகத்தில் வச்சிக்கோ’ என்கிறான்.ஆட்டை காலாலே எட்டி உதைக்கிறான். அந்த ஆட்டுக்குட்டி சின்னா பின்னப்பட்டு நிற்கிறது. அண்னன்கள் மேல் பக்தியும் பாசமும் பிள்ளைகள் மேல் அன்பும் நெருக்கமும் கொண்டிருந்த ஒருவர் அனைத்தையும் ஒரே இரவில் துறந்துவிட்டு எப்படி மாறமுடிந்தது. என்பது புரியாத புதிராக அமைகிறது.. கண்ணாறு மட்டும்தான்  எல்லா பிரச்சனைக்கும் காரணம் என்று ஆயா புலம்பி அழுவதை அழகாகக்குறிப்பிடுகிறார் பாவண்ணன்.
நமது பழம்பெரும் காப்பியங்கள் நமக்கு மனத்திரையில் வந்து போகின்றன. சகோதரர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ராமாயணத்தையும் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு மகாபாரதத்தையும் அசைபோட்டவர்கள் தானே நாம்.  நம் நாடு விடுதலை பெறும்போது இனக்கலவரம் வந்து லட்சக்கணக்கில் சோதரர்கள் மாய்ந்து மடிந்த சோக வரலாறு நமக்கு இருக்கத்தானே செய்கிறது. எங்கோ  ஒட்டமன் நாட்டில்  ஒரு சுல்தானுக்கு  நடந்த ஒரு விஷயத்துக்கு  இந்த மண்ணில்  ஒற்றுமையாக   கிலாஃபாத்  இயக்கம் கண்ட நமக்கு இந்தியப்பிரிவினை நிகழ்வு சாபந்தானே. கிலாஃபாத் இயக்கம்  என்னும் ஒற்றுமை விருட்சம் காப்பாற்றப்பட்டிருந்தால் இந்தியா பாகிஸ்தான் பங்ளாதேஷ் என்கிற கூறு போடுதல் நிகழ்ந்திருக்காது.  ஆயிரம் சோகங்களை மக்கள் சுமந்து கொண்டு அங்கங்கு சொந்தங்கள் வாழ்கிறார்கள். இன்று  இந்தியக்குடியுரிமைச் சட்டத்திருத்தம் வரைக்கும் வந்து அது விளங்க மறுக்கும் அவஸ்தையில் அல்லவா நாட்கள் நகர்கின்றன.

ஒரு கிழவனும் ஒரு கிழவியும் எப்படி எல்லாம் வாழ்க்கை வாழ்ந்திருந்தார்கள்.ஒருவரை ஒருவர் எப்படி புரிந்துகொண்டு காலம் சென்றது. தாம்பத்தியத்தின் கம்பீரம் எப்படி ஒரு ஆலமரம் போல் தழைத்துக்குளிர்ச்சி தந்தது என்பதைத்துல்லியமாக  குறிப்பிடுகிறார் பாவண்ணன்.
’கிழவர் பழசை எல்லாம் நினைத்து நினைத்து உருகுவதைக்கண்டு பரிதாபப்பட்டாள் நாவாம்பாள். அவர் நினைத்த திசையில் குடும்பம் செல்லவில்லை என்பது ஒரு மர்ம அடிபோல அவர் நெஞ்சில் விழுந்துவிட்டது. அத்தோல்வி தந்த நுணுக்கமான  அவமானத்தில் அவர் நெளியத்தொடங்கிவிட்டார் என்பதும் அந்த வேதனையிலிருந்து அவராகவே மீண்டுவந்தாலொழிய வேறு மீட்சி எதுவுமில்லை என்பதும் அவளுக்குத்தெரிந்தே இருந்தது..தனக்கென்று அந்த பிரத்யேகமான உலகமும் இல்லாதவள் அவள்.’ ஒரு கணவனும் மனைவியும் ஒரு உயிர் இரு உடலாக வாழ்ந்திருந்ததை நமக்கு சொல்லிச்செல்கிறார் பாவண்ணன். தன்னைக்காத்துக்கொண்டு தன்னை மணந்தானை க்காத்து இல்லறத்துக்கு பெருமைதரும் சொற்களையே பேசி சோம்பல் இல்லாதவளாக நாவாம்பாள் பாத்திரத்தைக்கொண்டு நிறுவுகிறார்   வாழ்வியல் அறம் சொன்ன திருவள்ளுவர் இப்படித்தானே இல்லறம் பேணும்  மனையாளுக்கும் வரையறை தருகிறார்.
 வளர்க்கப்படும் விலங்குகள் மனிதரோடு இணக்கமாய் வாழ்வன. அவற்றில் பசு எல்லாவற்றையும் விஞ்சியது.  வளமான ஏரியுடைய ஒரு கிராமத்து.ப்பசுக்கள் அவ்வூரின் செல்வ ஆதாரம்.. ஒரு பசுவை வைத்து ஒரு குடும்பமே தன் பசி ஆற்றிக்கொண்டு வாழ்ந்துவிடும்.அப்படிப் பசுக்கள்  காலம் காலமாய் வள்ளல்களாய் வாழ்ந்து வருபவை. பாவண்ணன் பசுவைப்பற்றி எழுதிக்கொண்டே போகிறார்.
‘’அப்பசுக்கள் வேண்டுவதெல்லாம் நிற்க ஒரு நிழலும் புல் நீட்ட ஒரு ஆதரவானகையும்தான். பசுவோ தன்னை அந்தக்கையிடமே ஒப்படைத்து விடுகிறது. அந்தக்கைக்காகத்தாய்மை அடைகிறது.அந்தக்கைகளிடமேயே தன் கன்றுகளைத்தருகிறது.அதற்காகவே சலிக்காமல் சுரந்து ஊட்டுகிறது’
உண்மையில் மனிதர்களைவிட விலங்குகள் மேலானவையாகவும் அன்பை எதிர்கொள்ளவும் அன்புக்கு வணங்கவும் தமக்குத்தெரிந்தவிதத்தில் அன்பைக்காட்டவும் தெரிந்து வைத்திருக்கின்றன. இப்படி  அவை குறித்து விளக்கம் கொடுக்கிறார் பாவண்ணன்.
பிரெஞ்சுக்காரத்துரையை நத்தி வாழும் சீத்தாராம ரெட்டியார் குறித்து அறிய விவரணைகள் தொடர்கின்றன.பிர்ஞ்சுக்காரர்கள் இந்த ப்புதுச்சேரிப்பகுதியை கைப்பற்றி ஆண்டதினால் மட்டுமே இந்த ஊரின் வளர்ச்சி விரிவு செல்வாதாரம் அத்தனையும் என்கிற கருத்தில் ரெட்டியாருக்கு அய்யமே இல்லை. இந்த ஊருக்கு நாகரீகம் எப்படி வந்தது என்ற கேள்விக்கு விடை சொல்லவேண்டுமானால் அது பிரஞ்சுக்காரர்கள் வழியேதான் வந்தது என்று சொல்லவேண்டும். இப்படி இப்படியாய்  சீத்தாராம ரெட்டியார் குண நலன் பற்றி  வாசகன் அறிய வாய்க்கிறது..அந்த ரெட்டியாரின் மகன் உள்ளூர் கவுண்டர் ஒருவரின் மகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குகிறான். அந்தபெண்ணைக் கொன்று மண்ணில் புதைத்துவிடுகிறார்கள். மண் வாய் திறக்கப்போவதுமில்லை.பெண்களின் சோகம் தீரப்போவதுமில்லை.
சனங்களின் கதை கவிதை நூல் எழுதிய கவிஞர் பழமலய்  தான் வசித்த உள்ளூரில் ரெட்டியார் ஒருவர் பண்ணையாராக இருந்தார். அவருக்கு கீழான சாதிக்காரர்கள் கல்லூரிக்கு ச்சென்று மேற்படிப்பு படித்தால் பிடிக்கவே பிடிக்காது என்கிற செய்தியை ’‘இவர்கள் வாழ்ந்தது’’ தொகுப்பில் கவனமாய்க் குறிப்பிடுவார்.
சமூக சாதிய அமைப்புக்கள் எப்படி எப்படி தன்னை நிலை நிறுத்திக்கொண்டு நகர்கின்றன என்பதைப்படம் பிடித்துக்காட்டுகிறார் பாவண்னன். மேல் தட்டு சாதியினர் பணக்காரர்களாக பண்ணையார்களாக தங்களை எப்படியாக தொடர்ந்து நடத்திக்கொள்கிறார்கள் என்பதை ச்சித்திரமாக தீட்டுகிறார். நாவலில் வரும் பார்த்தசாரதி அய்யர் வாசகனுக்கு எத்தனை கம்பீரமாகக்காட்சியாகிறார். அவரிடம் ஒரு யோசனையோ உதவியோ கேட்க வருகின்ற கீழ்த்தட்டு மக்கள் ‘கும்புடறன் சாமி கும்புடறன் சாமி’ என்று தொழுது நிற்கின்றனர். முத்துசாமியும்  அய்யரிடமிருந்து ஒரு துண்டு நிலம் வாங்கிவிட கைகளைக்கட்டிக்கொண்டு நிற்கிறான்.
‘ம்ம் என்னடா என்ன விஷயம்’
‘எந்த ஊருடா நீ’
‘என்னடா பேரு’
‘தோப்பனார் பேரு’
‘கவுண்டனா?’
‘அந்த ஊர்ல என்ன செஞ்சிண்டு இருந்தே’
’ அப்பறம் எதுக்குடா இங்க வந்த?’
‘இந்த ஊரு புடிக்கலைன்னா இன்னொரு ஊருக்குப்போவே,அப்படித்தானே?’
வினாக்கள் அடுக்காக கச்சிதமாக மேட்டுக்குடித்தனம் விரவி அய்யரிடமிருந்து வருவதை எண்ணிப்பார்க்கிறோம்..
கோர்க்காட்டிலிருந்து கட்டை வண்டி புறப்படுகிறது. வண்டியில் ரங்கசாமி.அவன் அப்பா.அம்மா .அமாசி வண்டியை ஓட்டிவருகிறான். வண்டி வளவனூர் நோக்கி பயணமாகிறது.
பிரஞ்சுக்கொடி பறக்கும் ஒரு குடிசை இடை வருகிறது. நான்கைந்து போலிசுகாரர்கள் அங்கே நிற்கிறார்கள்.அவர்கள்  அந்தக்கால கம்யூனிஸ்ட்காரர்களை தேடுகிறார்கள்..
‘யாருடா நீங்க? எங்க போறிங்க இந்த நேரத்துல’ என்கிற அவர்களின் வினாவுக்கு ரங்கசாமி பதில் சொல்கிறார்.வளவனூருக்குச் சென்று பிழைப்பு  ஏதும் தேடவிருப்பதாகச்சொல்கிறார்.
‘எவந்தான் நா காங்கிரஸ் காரன் இல்ல. கம்யுனிஸ்ட் காரன்னு சொல்லிட்டுப்போறான்.’என்று ஆரம்பிக்கிறார் போலிசுகாரர்.
சரி சரி பாஸ்போர்ட் வச்சிருக்கயா புதுச்சேரி பார்டரைத்தாண்டறதுக்கு பர்மிஷன் வச்சிருக்கயா’
புதுச்சேரி பார்டர்லேந்து இந்தியா பார்டருக்குள்ள போவனுமின்னா பாஸ்போர்ட் வேணுமின்னு தெரியாதா ஒனக்கு’
‘ஒழுங்கா உண்மையைச்சொல்லு. இல்ல முட்டிக்கு முட்டி பேத்துருவேன்.காங்கிரஸ் காரந்தானா நீ?’
‘அப்ப கம்யூனிஸ்டா?’
‘சுப்பையாவ தெரியுமா உனக்கு?’
‘தெரிஞ்சா சொல்லு சர்க்கார்ல பணம்கொடுப்பாங்க’
‘ஒழுங்கா ஒத்துக்கோ வீணா ஒதப்பட்டுச்சாவாத’
அன்றைய ந,மது மக்களின் யதார்த்த வாழ்க்கை விஷயத்தை அழகாக எடுத்துச்சொல்கிறார் பாவண்ணன். புதுச்சேரி விடுதலைக்குப்போராடிய வ.சுப்பையாவை நாட்டுப்பற்றுள்ள ஒவ்வொரு இந்தியனும் மறக்கத்தான் முடியுமா? அவர் பட்ட சிறைவாசமும் கொடுமையும் சொல்லிலடங்குமா?.கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தனது சொத்தை புச்சேரி மக்களுக்காகத்தந்த பெரிய மனதுக்காரர் .பாண்டிச்சேரியின் நேருபிர்ரன் என்றழைக்கப்பட்டவர். அவர் மனைவி சரசுவதி சுப்பையா புரட்சிக்கவிஞர் பாரதிதாசனோடு தேர்தலில் சட்டமன்ற உறுப்பினருக்கு நின்று தோற்றுப்போனார்.. இந்த மண்ணில் பொது உடமை ச்சிந்தனை சிறுத்துப்போனதில் திராவிடக்கட்சிகளுக்கும் பேராயக்கட்சியின் பிரதமர் நேருக்கும் பங்கில்லாமல் என்ன?.
அந்த காலத்திலேயே காவல் துறை ஒரு ஆட்டுக்குட்டியை லஞ்சமாகப்பெற்றுக்கொண்டு சாலைக்குக்குறுக்கே நின்ற கம்பை விலக்கிக்கொண்டு வண்டிக்கு வழி விடுகிறது. இவ்விஷயத்தை அற்புதமாகச்சொல்கிறார் படைப்பாளி.இந்த விவரணையில் படைப்பின் யதார்த்தம் வாசகனுக்கு அனுபவமாகிறது.
‘எல்லாம் ஒன்னிதா’
‘ஆமாங்க’
‘சரி சரி அத அவுத்து தூண்ல கட்டு’
என்று ஒரு ஆட்டைச்சுட்டிக்காட்டுகிறான் போலிஸ்காரன் .மனசில்லாமல் ஓர் ஆட்டைக்கும்பலிலிருந்து பிரித்துக்குடிசையின் தூணில் கட்டிவிட்டு போலிஸ்காரர்களைப்பார்த்துக்கும்பிடுகிறார் அந்த க்குறுக்குக்கம்பம் உயர்ந்து வண்டிக்கு வழிவிட்டது. அதிகாரக் கம்பம்  வழிவிட  (உயர)  மனிதன் மனிதன் தாழவேண்டிய நிலமை அன்று இன்று நாளைக்கும்தான். இங்கே .கூர்மையான அரசியல் பார்வை  படைப்பில் பீறிட்டுக்கொண்டு  நமக்குக் காட்சியாகிறது.
நதிகளைப்பற்றி விளக்கிப்பேசும்போது பாவண்னன் எழுத்தின் உச்சத்தைத்தொட்டு விடுகிறார். செடியில் விரிகின்ற   மலரின் இதழ்களென வார்த்தைகள் பிறப்பெடுக்கின்றன. அந்த ரசானுபவம் நம்மை உலுக்கிப்பார்க்கின்றது.எல்லா படைப்பாளிக்கும் இப்படி எழுத்து நளினம் வசப்பட்டுவிடும் என்று சொல்ல முடியாது.
‘ நதிகள் பகல் இரவு பார்ப்பதில்லை.வெயில் மழையைப்பொருட்படுத்துவது இல்லை. தன் போக்கில் வந்து கலந்துவிடும் எந்த களங்கத்துக்கும் அது கலங்குவதுமில்லை.களங்கங்களே தன் ஆகிருதியை மறைத்துப்போலிதோற்றம் காட்டினாலும் அவற்றின் அடியில் அமைதியாய் ஓடிக்கொண்டிருக்கும் அவை.. அவற்றின் எழுச்சியான தோற்றமோ பொங்குதலோ எந்த வசீகரத்தையும் புலப்படுத்துவதற்காக அல்ல.அதன் பாய்ச்சலும் ஓட்டமும் எதையும் யாருக்கும் நிரூபித்துக்காட்டுகிற துடிப்பில் உருவாகுபவையல்ல. நதிகளின் சுபாவமே அதுதான்.’ நதி என்ற சொல்லை எடுத்துவிட்டு  மேற்கண்ட வரிகளில் பாவண்ணன் என்று  நாம் மாற்றிப்போட்டுப்பார்க்கலாம். அது மிகச்சரியாகவே இருக்கும் என்பதை நான் உணர்கிறேன்.
இப்புதினத்தில் காங்கிரஸ் காத்தவராயன் என்னும் ஒரு பாத்திரத்தை வாசகர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கிறார் பாவண்ணன்.மகாத்மா காந்தி கி ஜெய் .பாரத் மாதா கி ஜெய். இரண்டு கோஷங்களும் அவருக்கு இதயத்துடிப்பு மாதிரி என்கிறார் பாவண்ணன். தன்னுடைய மனைவிக்கு ஒரு புடவை வாங்க காத்தவராயன் விழுப்புரம் நகருக்கு  வருகிறார். புடவைக்குப்பணம் அவளே சம்பாதித்துக்கொடுத்தது.அவள் வயிற்றில் ஒரு குழந்தையும் உருவாகி இருக்கிறது. காத்தவராயனின் தாய் அந்த பிள்ளைத்தாய்ச்சியின்  புடவைஆசையை. பூர்த்தி செய்து வைக்க த்தன் மகனைப்பணிக்கிறார். விழுப்புரம் ரயில் நிலயத்திலோ பெருங்கூட்டம். மறு நாள் சென்னையில் மறியல் போராட்டம். வெள்ளையனே வெளியேறு என்பது மட்டுமே பிரதான கோஷம். அந்தக்கூட்டத்தைக்கண்ட காத்தவராயன் சென்னைக்கு ரயில் ஏறிவிடுகிறார். கைதாகிறார். ஜபல்பூருக்கு அழைத்துச்செல்லப்படுகிறார். மூன்றாண்டுகளுக்குமேலாக சிறைவாசம். திரும்பி ஒரு நாள் காச நோயாளியாக வளவனூர் திரும்புகிறார். அவரை மனைவிக்கே அடையாளம் தெரியாமல் இருக்கிறது. உருவமே சிதைந்து போய் காட்சி தருகிறார். அவரின் தாய் இறந்துபோய் வெகு காலமாகிவிட்டது. அவள் மனைவி சுமந்திருந்த வயிற்றுக்குழந்தைக்கு  இப்போது மூன்றரை வயதாகிறது.
காங்கிரஸ் கட்சி  ஜவுளிக்கடை நாயுடுவுக்கும், நகைக்கடை முதலியாருக்கும், மருந்துக்கடை சேட்டுக்கும் வருநாளில் சொந்தமாகிப்போனது. காங்கிரஸ் காத்தவராயன்கள் அவர்கள் தயவில் வாழப்பழகிக்கொண்டார்கள். சுதந்திரம் வந்த பிறகு  காத்தவராயனுக்கு தியாகி என்ற பட்டத்தைக்கொடுத்தார்கள்.  வாழும் ஊரைத்தாண்டி எங்கோ ஒரு ஏக்கர் நிலம் இனாமாகத்தந்தார்கள்.  அவ்வயலில் முதல் மகசூல்காணும்போதே மகாத்மா கொல்லப்படுகிறார். காத்தவராயன் மூன்று நாட்கள் உணவருந்தாமல் திக்கித்திணறிப்போகிறார். இரண்டாம் மகசூல் பார்த்த அவர் மூன்றாம் மகசூலுக்கு இறந்தே போகிறார். இப்படி  எழுதிச்செல்லும் பாவண்ணன் சமுதாயத்தின் மீது எத்தனை ஆழமான விமரிசனத்தை எழுத்தில் தந்திருக்கிறார். ஏழைப்பங்காளர்கள் காமராஜுக்கும் கக்கனுக்கும் இன்று எங்கே போவது நாம்.
காங்கிரஸ் காத்தவராயனுக்குப்பிறந்த குழந்தைக்குத்தாண்டவராயன் என்ற பெயரை அவன் மனைவி சூட்டியிருந்தாள். சிவகாமி அப்படி வைத்த பெயரைத்தான் காத்தவராயன் ‘சத்யசீலன் என்று மாற்றி வைத்தார்.அவருக்குத்தன் மகன் மகாத்மாகாந்தி போல் வரவேண்டும் என்கிற ஆசை.
விதி வேறுவிதமாக இருந்தது. அந்த சத்யசீலனோ சினிமாவில் சண்டை போடும் ஸ்டண்ட் மாஸ்டரானான். ஒரு சண்டைக்காட்சியை ப்படமாக்கும் சமயம்  அவன் கொடுத்த அடி எக்கு தப்பாகிப்போனது. ரஜினியின் மூக்கு கிழிந்து ரத்தம் வழிந்தது. அது ரஜினியின் தவறுதான் என்பதை சத்யசீலன் அழகாகப்பேசுகிறான் இன்றைய  பிடிபடாத அரசியல் சூழலில் அந்தப்பெயர் தாங்கிய நடிகரை எங்கோ உச்சியில் கொண்டு போய்வைத்துவிட்டு இந்தத் தமிழ்ச்சமூகம் காத்துக்கிடக்கிறது என்பது வேறுகதை.
துரைசாமியின் சாராய வியாபாரம் அதனில் குடுமியான்குப்பத்துக்காரனின் சரக்கு கலந்திருப்பது என்று புதினம் நகர்கிறது. சரக்கு கலந்த  அச்சாராயம் குடித்த நால்வரின் மரணம் துரைசாமியை உலுக்கி எடுக்கிறது. எதிர்க்கட்சிக்காரர்கள் இதனைச்சாக்காகவைத்து நிகழ்த்தும் போராட்டங்கள்.தொடர்கின்றன. கட்சி அரசியலில்  பெரிய புள்ளிக்கு இந்த விஷயம் எட்டினால் துரைசாமி நிலமை பூஜ்ஜியமாகிவிடும்.துரைசாமி திணறிப்போகிறான். தனது அப்பாவையும் தனது தாத்தாவையும்  துரைசாமி நினைத்துப்பார்க்கிறான். பாவண்ணன் இங்கே விவசாயிக்காக தன் எழுத்தை ப்பயன்படுத்துகிறார்.அற்புதமான ஓர் இடம் இது .இந்த பாவண்ணன் வேறு எங்கே தேடினும் கிடைக்கமாட்டார்தான். தன் குருதியோடு ஒன்றாகிப்போன ஒரு தொழில் பற்றி எழுதும் தருணம் அல்லவா இது.
‘வெறும் நிலத்துக்காகவே தம் வாழ் நாளை ஒப்படைத்துக்கொண்ட விவசாயிகள் அவர்கள்.பயிரிடுவதைத்தவிர எந்த ஞானமும் இல்லாதவர்கள்.தன் செல்வத்தைத்தானே அறியாத அஞ்ஞானிகள்.’ சமீபத்தில் புது டில்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய தொடர் போராட்டம் மனக்கண் முன் வந்து போகிறது.  அதனை த்தவிர்க்கமுடியவில்லை. உழைப்பாளியை ஒரு விவசாயியை அவமானப்படுத்திய பெரும்பதவிக்காரர்களை யாரேனும் மன்னிக்கத்தான் முடியுமா.சுழன்றும் ஏற்பின்னது உலகம் என்பதை ஒரு முறை சொல்லிப்பார்க்கிறோம். அவ்வளவே.
புதினத்தின் இறுதிப்பகுதியில் ஒரு முனிவரின் கதை வருகிறது. முனிவருக்கு ஐந்து பெண்மக்கள் ஐந்து ஆண் மக்கள். காடுகளில் திரிந்து பழங்கள்  விறகுகள் சேகரித்த ப்பெண்களை ராஜகுமாரன் கண்டு ஆசை கொள்கிறான். முனிவர் அவனிடம் இந்த ஆசை நிறைவேறாது என்று அடித்துச்சொல்கிறார். அவனை ஆண்மக்கள் ஐவரும் காட்டைவிட்டு அப்புறப்படுத்துகின்றனர். அர்சனுக்கு இந்த விஷயம் எட்ட அவர் முனிவரோடு பெண்கேட்டுப்பேசிப்பார்க்கிறார். முனிவர் முடியவே முடியாது என்று மறுத்துவிடுகிறார்.அரசன் முனிவரை சிறையிலடைக்க உத்தரவிட்டான். முனிவன் சிறைப்பட்டால் அவரின் பெண்கள் தன் வசம்தானே என அரசன் தப்புக்கணக்குப்போட்டான். முனிவரின் மந்திரத்தால் பெண்கள் ஐவரும் ஐந்து  பசுக்களானார்கள். ஆண்கள் ஐவரும் காளைகள் ஆனார்கள். ராஜா மனம் திருந்தவில்லை. முனிவரைச்சித்திரவதைப்படுத்தி மீண்டும் செபித்து அவர்களை ஆண்களும் பெண்களுமாக  மாற்ற  நிர்பந்தித்தான். முனிவர் மறுத்தார். மரணித்தார்.அதிலிருந்து அந்த பசுக்களையும் காளைகளையும் இன்னும் யாராலும் மீட்டு எடுத்து மனிதர்களாக்கமுடியவில்லை. அவை மிரள மிரள விழித்துக்கொண்டு நம்மைப்பார்ப்பதற்கு இதுவே காரண விஷயம்.  ஆக ஒவ்வொரு பசுவும் விமோசன மந்திரத்துக்குக்காத்திருக்கும் ஒரு பெண் என்பார்கள் என்று முடிக்கிறார் பாவண்ணன்.
ஆறுமுகம் நிலைகுலைந்து போய் நிற்கிறான். கிழவரோ அவனோடு கிடந்து போராடிப்பார்க்கிறார். அப்போது பசுக்களிடையே வரும் கிழவர் சொல்லும் அழகான கதை. தான் மேலே சொல்லப்பட்டது. ஒரு ஷேக்ஸ்பியரின் கிங்லியருக்கு இணையாக மன அசை போடும் ஒரு பாத்திரமாக அமையும்  இந்தக்கிழவரோ வாசக நெஞ்சங்களைத்தொட்டுவிடுகிறார்.
தென்னங்கன்றுகள் மனிதர்களை விட பண்பு நலன் கொண்டவை. அவைகளை நடுவதில் கிழவர் நிறைவு எய்துகிறார்.
’‘இனிமே இதுதான் புள்ள பேரன் பேத்தி’ என்று சொல்லும் கிழவரின் செய்தியே. சமுதாயத்தின் மீது வைக்கப்படும் விமரிசனமாக வாசகன் தெரிவு செய்யலாம். அமைந்து நிற்கும் இயற்கைச்சூழலை த்தேர்ந்த அறிவோடு பயன்படுத்திக்கொள்ளத்தவறிவிட்ட மனிதர்கள் பற்றிப்பேசுகின்றது பாய்மரக்கப்பல்.
பாவண்ணனின் வெற்றிப்படைப்பு இப்புதினம்..


.

No comments:

Post a Comment