Wednesday, October 21, 2020

அப்பாவின் நாற்காலி - வளவதுரையன்

 



 வளவதுரையனின்  கவிதைத்தொகுப்பு அப்பாவின் நாற்காலி – எஸ்ஸார்சி

 

விருட்சம் வெளியீடாக வெளிவந்துள்ள ஒரு அற்புதமான கவிதைத்தொகுப்பு. தமிழக அளவில் பல்வேறு விருதுகளைப்பெற்றுள்ளது இந்நூல். நல்ல கதாசிரியர் வளவதுரையன். பல சிறுகதைத்தொகுப்புக்களை வாசகர்களுக்குத் தந்தவர். புதினங்கள் சிலவும் சிறப்பாகப்படைத்துள்ளார். எழுத்தாளர் பாவண்ணனுக்கு மிக நெருக்கமானவர். வளவனூரார்.. வளவனூர் மண்ணை மறக்காமல் தன் பெயரோடு இணைத்துக்கொண்டு எழுத்துலகில் வெற்றி நடை போடுகிறார்.

பெருமிதமாகவே இது என்றும் எல்லோருக்கும் இருக்கிறது கடலூர் மண் அற்புதமான மக்களைப்பெற்றுப் பலபெருமை கொண்டுள்ளது தமிழ் .இலக்கியச்செல்வர்கள் அங்கு இன்றும் ஏராளமானவர்களே.  நடு நாட்டு வட்டாரத்தில்  மனம் விசாலமானவர்களை அந்தப்பாடலீசனின் கடலூர் நகரமே வளர்த்து ஆளாக்கித் தந்திருக்கிறது.  இன்று நேற்று என்று இல்லை. காலம் காலம் காலமாய் கடலூர் அப்படி.

 கல்லைக்கட்டி  வங்கக்கடலோடு விட்டபோதும் நமசிவாய என்று சொல்லி கரை ஏறி நின்ற திருநாவுக்கரசர் உலாவிய புனிதமண் இது. நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்று கோஷித்த மண்.

வாடிய பயிரைக்கண்டு வாடிய வல்ளல் ராமலிங்கருக்கும் சிறுகதையாளர் புதுமைப்பித்தனுக்கும்  சொற்கனல் ஜெயகாந்தனுக்கும் உறவான பூமியல்லவா.  இந்து மதத்தை சொற்சாட்டையால் அடித்த  ஈ வெ ரா பெரியார் போற்றி வணங்கிய தமிழ்ப்பெரியவர் தூயவர் ஞானியார் அடிகள் வாழ்ந்திட்ட மண். தென்னாட்டு வீர மங்கையாம் விடுதலைச்செல்வி அஞ்சலை அம்மாளின் வரலாறு படைத்திட்ட ஊரல்லவா இது. மனம் குளிர இந்தக்கடலூரை வாழ்த்துங்கள். வணங்குங்கள்.

வளவதுரையனுக்கு கடலூர் வாழும் பூமி. இந்நகரில் இவர்  சங்கு இலக்கியச்சிற்றிதழின் ஆசிரியராய் கூத்தப்பாக்கம் இலக்கிய பேரவை எனும் அற்புதத்தின் ப்பெருஞ்செல்வமாய்த்திகழ்பவர்.

இனி வளவதுரையனின் கவிதைத்தொகுப்பு ‘அப்பாவின் நாற்காலி’க்கு வருவோமா நாம்.

அழகான மரபுக்கவிதைகளை நன்கு ப்படைக்கத்தெரிந்தவர் வளவதுரையன் இந்நூலிலோ மத்தாப்புக்களாய் விரியும் புதுக்கவிதைகளை அள்ளி அள்ளித்தருகிறார் .பல் வேறு இலக்கிய இதழ்களில் நாம் பார்த்திட்ட கவிதைகள்தான் என்றாலும் அவை இங்கு ஒரு தொகுப்பாகக்காணும் போது வாசக மனம் நெகிழ்வை உணர்கிறது.பெருமகிழ்ச்சி கொள்கிறது.

‘அப்பாவின் நாற்காலி’ என்று கவிதை நூலுக்கு தலைப்பாய் அமைந்த அக் கவிதையிலிருந்து  நாம் தொடங்கலாம். இந்தப்புத்தகத்தின் மேலட்டையில் அப்பாவின் நாற்காலி ஒன்றைக்காண்கிறோம்.  காலம் தேய்த்த ஒரு நாற்காலி. தேக்கு மர நாற்காலிதான். எத்தனை கம்பீரம். உயிர்ப்புடன் அந்த நாற்காலியை வெளியிட்ட விருட்சம் பதிப்பாளர் அழகிய சிங்கர் பாராட்டுக்குரியவர். காலம் எனும் மாயாவி ஒரு நாள் அப்பாவை அழைத்துக்கொண்டுவிட அந்த நாற்காலியின் இடத்தை ஒரு சோபா தனதாக்குகிறது. வளவதுரையன் கச்சிதமாகக்குறிப்பிடுகிறார்.

‘எப்போது அவர் மறைவாரென்று

காத்துக்கிடந்தது.இப்போது

அந்த இடத்தை

அடைத்துக்கொண்டிருக்கும் சோபா.

 ஒரு அப்பாவின் இடத்தை யாராலும் நிறைவு செய்யவே இயலாது. இடம் பெயர்ந்து அவ்விடம் வந்த  ஒரு சோபா இடத்தை அடைத்துக்கொண்டு கிடக்கிறது என்கிறார் கவிஞர்.   அடைத்துக்கொண்டு கிடப்பது என்பது நிறைவாகித்தான் முடியுமா? கவிஞரின் உள்ளம் எழு வினா அதுவே.

’அம்மாவின் கொடி’ என்கிற கவிதை அப்பாவின் நாற்காலி என்னும் கவிதையோடு ஒட்டித்தான்  இத்தொகுப்பில் இடம் பெறுகிறது .துணிகள் காயபோடும்  ஒரு கொடியை நிர்வகிக்கும் ஒரு தாய் அதனை அவள் ராஜாங்கமாய் ப்பார்க்கிறாள்.

‘குருவியும் காக்கையும் கூட

அம்மா இல்லாத போதும்

பயந்துகொண்டே உட்காரும்.

ஆனால் அடுக்குமாடி குடியிருப்புக்கு அம்மா வந்தபின்னோ மின் விசிறிக்குக்கீழாக த்துணியை உலர்த்துகிறாள் அவளின் அரசாட்சிக்கு ச்சான்றாய் இருந்த  அந்தக்கொடிமரம் விடைபெற்றுக்கொண்டது.அம்மாவின் கம்பீரமும்  இப்போது சுருங்கிப்போயிற்று.

அம்மாவும் அப்பாவும் வண்ணம் தொலைத்த யாந்திரீக வாழ்க்கையைச்சந்திக்க நேர்கிறது என்பதைத்தான் சூசகமாய் எடுத்து வைக்கிறார் வளவதுரையன்.

’இயலாமை’ என்னும் தலைப்பில் வரும் ஒரு கவிதை. அன்றாடம் பேப்பர் போடும் பையன் நியூஸ் பேப்பரை  வாயிலில்  குட்டையாய்த்தேங்கி  நிற்கும் மழை நீரில் வீசிவிட்டுப்போகிறான்.. அவனைக்கண்டிக்க முடிகிறதா? தண்ணீர் மோட்டார் போடுபவன் காலை ஏழு மணிக்கே அதனை நிறுத்திவிட்டுச்செல்கிறான் அவனைக்கேட்கத்தான் முடிகிறதா?.கல்லூரி மாணவன் பேருந்தில் ஆசிரியரின் காலை மிதித்துவிடுகிறான். அவனிடம் கோபிக்கத்தான் முடிகிறதா? சிரித்து சிரித்து வெற்றுக்கதைப்பேசி வேலையை கெடுத்து நிற்கும் ஒரு ஸ்டெனோவைக் கோபித்துக்கொள்ள முடிகிறதா? எதையுமே செய்ய முடியாமலே அவன்.  ஒரு கவிஞன்தான் அவன்  என்று அவனுக்கு அடையாளம் சொல்கிறார் வளவ துரையன்.

’சாட்சி’ என்னும் தலைப்பிட்ட கவிதை  படைப்பாளியின் அழகான அனுபவத்தைச்சுட்டுகிறது.

’அந்த இனிய மாலையில்

நன்றாகப்புரிந்துவிட்ட

நல்ல நவீனகவிதைப்போல

தென்றல் வீசிக்கொண்டிருந்தது’

புரியாத நவீன கவிதைகள் எழுதும் கவிஞர்களை  விமரிசனத்திற்கு கொண்டு வருகிறார் வள்வதுரையன். சில கவிதைகள் அதை எழுதிய கவிஞர்களுக்கே பிடிப்டாமல் மிரட்டுவதை வாசகர்கள் நாம் கண்டுதான் இருக்கிறோம். அதை அப்போது எழுதினேன் இப்போது வந்து என்னைக்கேட்டால் என்கிற விடைதான் சில சமயங்களில் நமக்குக்கிட்டுகிறது.

‘வாக்குறுதிகள் பல அளித்து

மன வாக்குகளுடன் சென்றாய்

பதிப்பகத்தில்மாட்டிக்கொண்ட

கவிதை வருமா எனத்

தெரியாததுபோல் காத்திருக்கிறேன்’

பதிப்பகத்தாரோடு கவிஞருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் சில கருக்கொண்டு இவ்வரிகள் வெளிப்பட்டிருக்கலாம். அனேகமாக எல்லா படைப்பாளிகளும் படுகின்ற அவஸ்தைதான். பதிப்பாளர்களை விசாரித்தால் அவர்கள் படும் சிரமங்கள் சொல்லிமாளாது.இவைகட்கு மத்தியிலும் சிற்றிதழை நடத்துவது இலக்கிய அமைப்பை இயங்கவைப்பது  நல்ல படைப்புக்களை புத்தகமாக வெளிக்கொணர்வது மிகப்பெரிய ஆசீர்வாதம் என்றே சொல்லவேண்டும். வளவதுரையன்  இப்படியாய் எல்லாவகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்றே சொல்லவேண்டும்.

’சாதகப்பறவை’ என்னும் கவிதை இத்தொகுப்பில் சில அற்புதம் பேசுகிறது.மனமெங்கும் கருப்பு நிழல்கள் என்கிறார் கவிஞர். வளவதுரையனைச் சந்திக்கிறவர்கள் நம்பிக்கை வெளிச்சத்தைத்தான் பெறுவார்கள். அவருக்குள்ளாக உள்ள மன ரணங்கள்  ஏதும் இருக்கலாமோ அது கவிதையாய் கனிந்திருக்கலாம்.

வெயிலில் உருகுகின்ற தார்ச்சாலை, பாம்பின் வாயில் அபயக்குரல் எழுப்பும் எலி ,துடுப்புகளைத்தவறவிட்டு ப்பின் கைகளால் முயலும் படகு அனுபவம் ,அறுந்துவிழும் நூலிழையில் போராடும் சிலந்தி மழைவேண்டி யாசிக்கும் சாதப்பறவை, இவை எல்லவற்றுடனும் தன்னை அடையாளம் காணும் கவிஞனை இந்தக்கவிதையில் வாசகன் தரிசிக்கலாம்.  ‘If winter comes can spring be far behind ?  என்னும் ஆங்கிலக்கவி ஷெல்லிதான் படைப்பாளிக்கு வலு கூட்டுகிறான். இப்படி அசைபோடவும் வாய்க்கிறது வாசகனுக்கு.

’விதைக்குள் உயிர்’’ என்கிற கவிதை  நம்பிக்கையைத்தந்து முடிகிறது.

‘வாழ்க்கை அதன் போக்கில்

என்னைப்புதைக்கப்பார்க்கிறது

விதைக்குள் உயிராகித்

தலை நிமிர்ந்து காட்டுவேன்

ஒரு தீக்குச்சி போதும்

இந்த இருட்டை அகற்றித்தொலைக்க.’

இந்த நம்பிக்கைதான் படைப்புலகில் வளவதுரையனுக்கு தொடர்ந்து வெற்றியை எளிதாக்குகிறது தனதாக்குகிறது.கவிஞருக்கு என் அன்பு நிறை வாழ்த்துகள்.

-----------------------------------------------------------

 

 

.

 


No comments:

Post a Comment