கொரோனா காலம்
கல்யாண மண்டபங்கள்
மாதங்கள் பலவாகி மூடிக்கிடக்கின்றன
தெருவில் தினம் தினம் வந்த சலவைக்காரன்
மாதங்கள் ஓடிப்போயின ஆளைக்காணோம்.
சலூன்கடை பக்கம்தான் யார் போனார்கள்
கழித்தலும் அந்த வழித்தலும்
அவரவர் வீட்டுக்குள்ளேயே
பாத்திரம் தேய்க்கும்
வீடுபெருக்கும்
பாப்பாவுக்கு எத்தனையோ மாதமாய் விடுப்பு
பள்ளிகள் எல்லாம் சாத்தித்தான்
கிடக்கின்றன.
கோவிலும் இல்லை குளமும் இல்லை
உண்மையுமாய் இன்மையுமாய் தானேயது.
அவசியமாய் மட்டுமே கடைக்குப்போதல்
அச்சப்பட்டுக்கொண்டே காரியம் பார்த்தல்
முகக்கவசம் சமூக இடைவெளி
உண்டென்றால் இவை உண்டு
இல்லையென்றால் அவை இல்லை.
தோன்றியது செய்யும் நம் மக்கள்
இல்லாதவர்களுக்குச் சொர்க்கமாய்த்திகழ்ந்த
ரயில் நிலையங்கள் பாழ்பட்டுககிக்கிடக்கின்றன.
பேருந்துகள் சரியாய் இயங்கி எத்தனையோ
காலம் ஆயிற்று சாலைகளோ நெடு உறக்கத்தில்.
பேத்தியை உடன் வந்து கூட்டிப்போவதாய்
கலிஃபோர்னியா போன மகன் மருமகள்
அபார்ட்மெண்ட் அறையொன்றில்
அடைந்து போய்க் கிடக்க
கொள்ளை நோய் கோவிட் பத்தொன்பது
உலகெங்கும் பேயாட்டம் போடுகிறது.
தாத்தாவும் பாட்டியும் பேத்தியோடு
தூக்கம் தொலைத்து
தருமங்குடி குக்கிராமத்தில்.
ஆண்டவனின் ஆயிரம் நாமங்களை
சொல்லிச் சொல்லிக்
காலம் எப்படியோ கழிகிறது
உயிருடன் இருப்பதே இக்கணம் பெரும் பேறு.
அந்தத்தடுப்பூசியின் வருகையைத்தான் யார் அறிவார்.
-------------------------------------------------------
.
அந்தத்தடுப்பூசியின் வருகையைத்தான் யார் அறிவார்
ReplyDeleteஅருமை எஸ்ஸார்சி