Tuesday, November 28, 2023

கவிதைகள் 2

 

இணையக்கால கவியரங்கம்                                    24/11/23



சின்னத்திரைக்குப்பின்னால்


சின்னத்திரைக் கலைஞர்களை

யாராவது நினைத்துப்பார்க்கிறார்களா?

அழுவதும் சிரிப்பதும்

அடுத்தவனோடு படுத்துச்சுகிப்பதுமாய்

நடிப்பதுவும்

உன்னையும் என்னையும்

மகிழ்விக்கத்தான்

தனது சொந்த வாழ்க்கையைச் 

சுட்டுச்சாம்பலாக்கி

அதில் கிடைக்கும் காசுக்காய்

தன்னையே விற்றுக்கொள்கிறார்கள்.

தம்மை ஊரே கொண்டாடுவதாய்

ஏமாந்து போகிறார்கள்

தலை நரைத்துப்பல்

விழுந்து கூனாகிக் குறுகி

கண்ணீர் விடுகிறார்கள்

தன்னந்தனியாய்.

மேடைக்கலைஞர்களில்

ஆண் எப்படியோ தப்பித்துப்போகிறான்.

அதுதான் பார்க்கிறோமே நடைமுறையில்

பெண்கள் எதை இழந்தார்கள்

என்பதை அறியவே மாட்டார்கள்

பளபளக்கும் ஆடை

வெளிச்ச வெள்ளம்

மயக்கும் இசை

சுற்றியும் ஆரவாரம்

கட்டுக்கட்டாய்ப்பணம்

உயரமான மேடை உல்லாசமான வாழ்க்கை

காரும் பங்களாவும்

வேலை ஆட்கள் பலரும்

மானுடப்பிறப்பு மட்டுமே பூச்சியமாய்.


இணையக்கால கவியரங்கம்        26/11/23


அப்படியும் இப்படியும்


ஏக்கர் ஆராயிரம் என்று 

என்றோ வாங்கிய

நிலத்தைச்சதுரடி

ஆராயிரம் என்று விற்று

கோடி கோடியாய்

மூட்டை கட்டுகிறார்கள்

சிஎம் டி ஏ அப்ரூவலுக்கு

சமையல் கட்டொன்றுக்கு

முப்பதாயிரம் லஞ்சம்

என்று சம்பளத்தோடு  எந்த முதலும் 

போடாத அதிகாரிகள்

கோடி கோடியாய்ச் சம்பாதிக்கிறார்கள்

வீட்டுக்கு த்ரீ ஃபேஸ் வாங்க

ஈபி காரருக்கு லஞ்சமாய்

நாற்பதாயிரம் ஒரு இணைப்புக்கு

அலுவலக சம்பளத்தோடு 

அவர்கள் அள்ளிப்போகிறார்கள்

வீடு கட்டுவதற்கு ச. அடிக்கு

இத்தனை ஆயிரம் என்றுக்கணக்குப்போட்டு

கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள்

அய்ம்பது லடசம் கடனுக்கு

ஐம்பது லட்சம் வட்டியாம்

வங்கிக்கடனுக்கு இரவு பகலாய்ப்

படித்து மார்க்கு வாங்கிய இளைஞர்கள்

கண்காணாத தேசத்தில்

தேகம் அழிக்கிறார்கள்

கிழவனும் கிழவியும்

ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு

வாங்கிய வீட்டுக்கு வாட்ச்மென்களாய்

வானம் பார்த்து

நாட்களை எண்ணுகிறார்கள்.


 நாள்    27/11/23


புத்தகக்கண்காட்சி


புத்தகக்கண்காட்சி

வரவிருக்கிறது சென்னையில்

ஆயிரம் அரங்குகளில் புத்தகம் விற்பார்கள்

ஒவ்வொருவரும் தமக்கென்று

நான்கு அரங்குகளைத் 

தேர்வு செய்யுங்கள்

போதும் அதற்கே

 நேரம் சரியாக இருக்கும்

நான்கு நண்பர்களைச் சந்தியுங்கள்

அதுவே போதும் மீறினால்

நட்பு நீர்த்துப்போகும்

சில அரங்குகளைக்கண்களை மூடிக்கடக்கலாம்

சில அரங்குகளை விட்டு வெளிவர மனசே வராது

ஆனால் வருவோம்

திரு வேறு தெள்ளியராதலும் வேறு

பணம் செலவாக செலவாகக் 

கையில் வாங்கிய புத்தகங்கள் எடை கூடும்

அட்டை மட்டுமே அழகாக இருக்கும் புத்தகம்

தலைப்பு மட்டுமே அழகாக இருக்கும் புத்தகம்

முதல் அத்யாயம் மட்டுமே நமக்குப்பிடித்த புத்தகம்

இப்படி இப்படி.

 முழுவதும்  சிறப்பாய் இனிதான் எழுதுவார்கள்

வாங்கிய புத்தகங்களை வீட்டுக்கு வந்து பார்த்தால்

ஏற்கனவே அதனை  இருமுறைவாங்கி

ஓரமாய்க்கிடக்கும்

நுழைவு டோக்கனை விலாசம் எழுதி

பெட்டியில் போட்டு ஆனந்தப்படாதீர்கள்

எனக்குத்தெரிந்துப் பரிசு பெற்றவர்களை

நான் கண்டதே இல்லை

யாரேனும் பதிப்பகத்தார் ஃப்ரீ டோக்கன் இதோ சாப்பாட்டுக்குப்

போங்கள் என்றால் போகலாம்

சந்திராஷ்டமம் உங்களுக்கு

நூலரங்கிற்குச்செல்லுமுன் பழைய

புத்தகக்கடையில் எப்போதேனும்

அரிய புத்தகங்கள் முன்னோர்

விட்டுச்சென்றது நம்மை ஈர்க்கலாம்.

ஆயிரம் கொனஷ்டைகள் சொல்லலாம்

ஆனாலும் புத்தகக்கண்காட்சி

அழகுதான் போங்கள்.







Thursday, November 23, 2023

கவிதை- வீடு வாங்கணும்

 


கவிதை-   வீடு வாங்கணும்                    இணையக்கால கவியரங்கம்  35    23/11/23


சென்னையில்தான் வீடொன்று வாங்கணும்

என்றான் பையன்

இரண்டாயிரத்து பதினைந்து வெள்ளம் வந்த ஏரியா வேண்டாம்

இடுகாட்டுக்குச் சவம் போகும் தெரு வேண்டாம்

தெருவின் கடைகோடி வீடு வேண்டாம்

சி எம் டி ஏ அப்ரூவல் கட்டாயம் இருக்கவேண்டும்

தண்ணீருக்குப்போரும் கழிநீர் சாக்கடையும்

சரியாக இருக்கவேணும்

வீட்டு வாசலில் டிரான்ஸ்ஃபார்மர்  நிற்கக்கூடாது

வீடு கட்டி பத்து வருஷத்திற்குள்ளாவது இருக்கவேணும்

சொத்து டாகுமெண்ட் வில்லங்கம் இல்லாது

சரியாக இருக்கவேணும்

அடி மண் இரண்டாயிரம் சதுர அடி குறையக்கூடாது

டியூப்லெக்ஸ் வீடு வேண்டாம்

வாசப்படி வடக்குப் பாத்து இருக்கணும்

சந்து குத்து தெருக்குத்து வேணாம்

பக்கத்துல பஸ் ஏற ரயில் ஏற

சவுகரியம் இருக்கணும்

பள்ளிக்கூடம் ஆஸ்பத்ரியும்தான்.

வீட்டுக்கு நெருக்கமா சர்ச்சோ கோவிலோ

வேண்டவே வேண்டாம்

இன்னும் சில சொல்லி

கொஞ்சம் பாரேன் என்றான் பையன்

எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்

எது கொஞ்சம்?.





Wednesday, November 22, 2023

கவிதை புதிர்

 

கவிதை         புதிர்                                இணையக்கால கவியரங்கம்  34        22/11/2023


காகத்திற்குச் சோறு வைக்க

தினம் மொட்டை மாடிக்குப் போய்வருவேன்

படியேறி மேல் செல்ல

சோம்பேறித்தனம்

அதே காக்காய்க்கு

ஜன்னல் வழியாய்ப் போடலாமென

மாற்றிக்கொண்டேன்

எப்போதும்போல் கா கா என்றால்

அதே காகங்கள் வர மறுக்கின்றன

வருத்தம் என்னவோ

 அறிவார் யார்?

காக்காய்க்கு வைத்த சோறு

உண்ணாமல் காய்ந்திருக்க

நாயுக்கு அதை மடை மாற்றினேன்

நாய் உண்டு சமத்தாய்ப் போனது

சாப்பிடறதுக்கு முன்னாடி சோறு

காக்காய்க்கு வைக்கணும்

சாப்பிட்ட பின்னாடி சோறு

நாயுக்குப்போடணும்

அது அதுக்கும் ஒரு மொறன்னு இருக்கு

மொட்ட மாடிக்கே போய் வாங்க

சட்டமாய்ச்சொன்னாள் அவள்.

















காக்காய்க்கு











உண்ணாமல்







Tuesday, November 21, 2023

கவிதை- என்னைத்தான்

 இணையக்கால கவியரங்கம்                21/11/23   எண் 33


என்னைத்தான்


ஜன்னல் துடைக்கமாட்டீர்

கதவுப் பூட்டுக்கு எண்ணெய் விடமாட்டீர்

ஒட்டடை அடிக்க மாட்டீர்

ஸ்டவ் க்ளீன் செய்யவும் மாட்டீர்

வாஷிங் மெஷினில் துவைத்த துணியை

காயவைக்கவும் மாட்டீர்

காய்ந்த துணியை எடுத்து

மடிக்கவும் மாட்டீர்

சூடு ஏறாது மக்கார் செய்யும்  அயர்ன் பாக்சைப்

பற்றிக்கவலைப்பட மாட்டீர்

காய்கறி கறிவேப்பிலை

பால் தயிர் இருப்பு

எதுவுமே தெரியாது

பூக்காரி தெருவில் வந்தால்

பூ ஒரு முழம் வாங்க மாட்டீர்

இலக்கியக் கூட்டத்திற்கு மட்டும்\

சட்டைபோட்டு தலைவாரி

எப்படி அய்யா கிளம்புகிறீர்

நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு

என்னைத்தான் கேட்கிறாள்

வேறு யாரையும் இல்லை அய்யா.


Sunday, November 19, 2023

கவிதைகள் 2

 


இணையக்கால கவியரங்கம்                                        18/11/2023


நடப்பு


தேசத்தின் வளர்ச்சிக்கு

சாலை அமைக்கிறார்கள்

உத்ராகண்டில்

சுரங்கப்பாதை அமைப்பு

இடிபாட்டுக்குள் ஐம்பது தொழிலாளர்கள்

செத்துக்கொண்டிருக்கிறார்கள்

இந்நேரம் என்ன ஆனார்களோ

முன்னம் இங்கே அணை  ஒன்று 

கட்டினார்கள்

நூற்றுக்கணக்கில்

மக்கள் செத்துப்போனார்கள்

இமய மலையின்

நில ஆய்வு அரைகுறையாய்

எந்தத்திட்டமும் அவசர கதியில்

நிறைவேற்றம்

சூழலியல் பின் தள்ளப்பட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட்

ஆமதாபாத்தில் கொண்டாட்டம்

எப்படித்தான் மகிழ்ச்சி தருமோ.


சூட்சுமம்                                                                   19/11/2023



சின்ன வயதில்

பேருந்துப்பயணம்

எனக்குப்பிடித்திருந்தது

காரணம் இதுதான்

என் அப்பா என்னையும்

என் அம்மா தம்பியையும்

தூக்கித்தூக்கி

வைத்துக்கொள்வார்கள்

ரொம்ப நாளாக

விஷயம் புரியவில்லை

கண்டக்டருக்குச்சேதி

சொல்ல ஏற்பாடாம்

தம்பி சின்னவன்

டிக்கட் இல்லை

எனக்கு அரை டிக்கட்

கண்டக்டர் போடத்தான்

இந்தத்தூக்கல் கொஞ்சல்

ஏற்பாடு அத்தனையும்

கொஞ்ச நாளாகித்தான்

உரைத்தது சூட்சுமம் எனக்கு.





கவிதைகள் 4

 


கவிதை வாசிக்கலாம் வாங்க         17/11/2023


1.சங்கடம்

ஒரு வாரம் ஊரில் இல்லை

வந்து வீட்டைத்திறந்தால்

கப் என்று இருக்கிறது

ஜன்னல் திறந்து 

வீடு கூட்டி

ஃப்ரிட்ஜை நேருக்கு

கொண்டு வரணும்

பால் தயிர் தோசைமா

பச்சை மிளகாய் தேங்காய்

காய்கறி சிலவோடு

வீடு வந்தாயிற்று

டிவியை ஆன் செய்தேன்

ரெண்டு ரிமோட்டையும்

 அழுத்தி அழுத்திக் கைதான் 

வலித்தது.

டி வி இல்லாத வீட்டில்

ஏதோ ஒரு பெருங்குறை

நாளை மறுநாள்

உலகக் கோப்பை கிரிக்கெட்

இந்தியா ஃபைனலில்

கவிதை நோட்டைக்

கையில் எடுத்தால்

அவள் தான் என்னிடம்

பேசுகிறாளா

இல்லை ஏசுகிறாளா.



2. நியாயம்


நேற்றுக் கவிதை எழுதி

முடித்த பக்கத்தில்

இன்னும் பாதி காலியாக இருந்தது

புதிய பக்கத்தைப்புறட்டி

தேதி போட்டுக் 

கவிதை எழுதினேன்

பேரன் பார்த்துக்கொண்டே

இருந்தான்

என்ன பார்க்கிறாய் என்றேன்

‘அப்பா கிட்ட சொல்றேன் பார்’ என்றான் என்னிடம்

அலுவலகம் முடிந்து

அவன் அப்பா வந்தான்

‘தாத்தா பாதி பேஜை காலியா வுட்டுட்டு

புது பேஜுல எழுதறார்

நீயே பாத்துகோ’ என்றான்

என் மகன் என்னைப்பார்த்தான்

நான் பேரனைப்பார்த்தேன்

‘ஆள் ஆளுக்கு ஒரு நியாய்மா’

என்கிறான் பேரன்.


3. நீட்சி

இது நாள் வரை யான்

பார்த்த கவியரங்கங்களில்

சிறப்பு

இணையக்கால கவியரங்கம்

அழகிய சிங்கரின் கண்டுபிடிப்பு

பல்வேறு கருத்துக்கள்

பலப்பல குரல்களில்

யாருக்குத்தெரியும்

எத்தனை நாள் தொடருமோ

அறிவியலின் சாதனையை

அழகாய்க் கையாளும்

இணையக்கால கவியரங்கம்

விருட்சத்தின் நீட்சி

விருட்சத்தின் வெற்றி.


4. எங்கே போனார்கள்


தலையில் முண்டாசு கட்டிய

பெட்ரோமாக்ஸ்காரன்

ரேடியோ டிரான்சிஸ்டர் ரிப்பேர்காரன்

பாத்திரத்திற்கு ஈயம் பூசி

சைக்கிளுக்குப் பஞ்சர் ஒட்டி

‘அம்மா சோறு’ என்னும்

ராப்பிச்சைக்காரன்

எல்லோரும் மொத்தமாய்ச்

சமூக மேடையைக்

காலி செய்துதான்

விட்டார்கள்

சாதித்துவிட்டு நிற்கிறது அறிவியல்.




Thursday, November 16, 2023

கவிதை- டிஜிடல் மயம் ஜகது

 


இணையக்கால கவியரங்கம்                                          29        16/11/2023



டிஜிடல் மயம்   ஜகது


நடுத்தர வயதிருக்கும்

கிராமத்துப்பெண்

மூன்று சக்கர வண்டி ஓட்டுகிறாள்

காய்கறிகள் வண்டி நிறையக்

கொட்டிக்கிடக்கிறது

இன்ன இன்ன காய்கள்

இன்ன இன்ன விலை சொல்லி

டேப்ரெகார்டெர்’ வாங்க அம்மா வாங்க’

அம்சமாய்ப்பேசுகிறது

வண்டியை நிறுத்தி நிறுத்தி

வியாபாரம் நடக்கிறது

டிஜிடல் தராசில்

எடை போடுகிறாள்

வேலையை அசமடக்கி

திரும்பவும் வண்டியை எடுக்கிறாள்.

தொண்டை வறளத்  தெருவில்

கத்தி கத்தி  விற்கும் காலம்

மலையேறிப்போச்சு.

‘சில்லரை குடுங்க’

‘என்னா இது நோட்டு கந்தலா இருக்கு’

பத்து ரூவா துட்டு நா வாங்குறதே இல்ல’

எந்த கூப்பாடும் இல்லை

க்யூ ஆர் கோடு வைத்து

ஜம்ஜம்மென்று  நடக்கிறது 

வியாபாரம்

டிஜிடல் உலகு யாரை

விட்டு வைத்திருக்கிறது

மின்சார ரயில் பிச்சைக்காரியிடம்

டேப்ரெகார்டர் உண்டு

நல்ல செறுப்பும் ஹாண்ட் பேக்கும் 

உண்டு அவர்களிடம்

க்யூ ஆர் கோடு மட்டுமே பாக்கி.


Wednesday, November 15, 2023

கவிதை- வரலாறு





இணையக்கால கவியரங்கம் எண் 28         15/112023



கவிதை


 வரலாறு


கணக்குப்போட்டு விளம்பரப்படுத்தி

காய் நகர்த்துபவர்கள்

மேடையில் தொடர்ந்து

பிரகாசிக்கிறார்கள்

நொடிப்போதும் தந்நலமற்று

வாழ்ந்த வாழ்க்கை

சமூகத்தால் கவனிக்கப்படுகிறதா

என்றால் இல்லை

சமூகம் அவரைக்

கணக்கில் கொள்கிறதா

அது பற்றி அவரும் 

கவலைப்பட்டால்தானே

எல்லோர்க்கணக்கும்

நேராக வேண்டுமென்று

ஆசைப்படலாம்

ஆசைப்படுவது நிகழ்த்தப்பட

வேண்டுமென்று

வரலாற்றுக்குக்கட்டாயமில்லை

நேர் செய்யப்படாத

கணக்குகள் ஏராளமுண்டு

எப்போதும் வரலாற்றில்.. 

Tuesday, November 14, 2023

கவிதை- நம்பிக்கை

 

இணையக்கால கவியரங்கம்           14/11/2023



     நம்பிக்கை


உதிக்கும் கதிரவனும்

பொழியும் மழையும்

சிரிக்கும் மழலையும்

பூக்கும் மலர்க்கொடியும்

பசுமைப் புல்வெளியும்

நம்பிக்கையின் ஊற்றுக்கண்

மானுட வாழ்க்கையில்

நம்பிக்கை தரும் கவிதைகளை

எழுதிட எனக்கும் ஆசைதான்

நம்பிக்கைத் தருவிக்கும்

சமாச்சாரங்கள் கண்முன்னே

நிகழ்ந்தால் மகிழ்வேன்

எழுதுவேன் கவிதைகளை

சமூக நடப்புக்கள்

எல்லாவற்றுக்கும் பின்னேவோர்

அரசியல் ஒளிந்துகொண்டு

நகைப்பதைக் காண்கிறேனே

காக்காய்க்குச்சோறு போடுவதிலிருந்து

கப்பல் கட்டுவதுவரை

எல்லாவற்றுக்குள்ளும்

கள்ளமொன்று கண் சிமிட்டுகிறதே

எதையும் ஏறெடுத்துப்பார்க்காமல்

எந்நேரமும் உழைக்கும்

விவசாயி தொழிலாளி

நேர்மையின் மீதுதான் தோழா

இப்பூவலகம் சுழல்கிறது.


Monday, November 13, 2023

கவிதை -மனிதன்

 


கவிதை- மனிதன்       இணையக்கால கவியரங்கம்      13/11/2023


போக்குவரத்தின் ஆக்கிரமிப்பு

எங்கும் இரைச்சல்

மனிதர் வாழ் நகரங்கள்

இரைச்சலின் மொத்த குத்தகை

காடுகளுக்குச்சென்று 

தவமியற்றி அமைதியாய்

வாழ்ந்த காலம் இருந்தது

இப்போது வீடுகளுக்குள்ளாக

எத்தனைத் தொலைக்காட்சி சேவைகள்

எப்போதும் ஏதேனும்

தொலைக்காட்சி விளம்பர ஒலி

தொடரும் கைபேசி ஆரவாரம்

அளவுக்கு மிஞ்சினால்

அமிர்தமும் நஞ்சென்பதே

இவைகளின் அறிவிப்பு

யாரும் யாருடனும் 

பேசக்கூச்சப்படுகிறார்கள்

எல்லோருக்கும் மொபைலும் கையுமாய்

வாழ்க்கை

மொபைல் மனிதனின் 

இன்னுமொரு இதயம்

மானிடர்க்கு விடுதலை

இனி சாத்தியமே இல்லை.

Sunday, November 12, 2023

கவிதை- மனமும் உறவும்

 

கவிதை- மனமும் உறவும்            இணையக்கால கவியரங்கம்   12/11/23


மனித உறவுகள்

அரிய சூட்சுமம்

அதை நிர்வகித்தல்

எளிதானதல்ல

மனித உறவுகள் கண்ணாடியாலானது

கவனம் தேவை

எப்போதும்தான்

வாய்தவறி விழும் வார்த்தை

ஆண்டாண்டு உறவினை

 விழுங்கி விடும்

மன விலாசமே 

மனித உறவுகளின் அடிப்படை

மன விலாசம் எப்படியோ

அப்படிக்கு உறவு ஆழப்படும்

மனித மனம் விசாலப்படத்தான்

மார்க்கம் தெரிவதேயில்லை.



Saturday, November 11, 2023

 

இணையக்கால கவியரங்கம்                                        11/11/2023    


எஸ்ஸார்சி


முயற்சித் திருவினையாக்கும்

 

உழைத்தவர்கள் எல்லோருமே

உச்சத்தைத் தொட்டுவிட மாட்டார்கள்

விடுதலைக்குப் போராடியவர்களில்

எத்தனை பேர் தேச விடுதலையைக்

காணமுடிந்தது

எழுதிக்குவித்தவர்களில்

எத்தனை பேருக்கு அங்கீகாரம்

சாத்தியமானது

அற்புதக்குரலும்

இணையிலா இசைஞானமும் பெற்றவர்கள்

எத்தனை பேர்

மேடை ஏறாமலே முடிந்து போனார்கள்

நிலவுக்குப்பயணம் போன

விஞ்ஞானிகளில்

நீல் ஆம்ஸ்ட்ராங்க் மட்டுமே

நினைக்கப்படுகிறார்

முயற்சிகள் தொடர்கதை

முயலாமல் வாளா நிற்பது

மானுட விழுமியமாகாதே.



Friday, November 10, 2023

கவிதை- பள்ளிக்கூடம்

 


கவிதை-    பள்ளிக்கூடம்                      இணையக்காலகவியரங்கம்  10/11/23


கோவில்கள் இருந்தன கிராமங்களில்

சாவடி இருந்தது 

சத்திரம் இருந்தது

மாடு அடைக்க பட்டி இருந்தது

கக்கூசெல்லாம் யாருக்குத்தெரியும்

ஏரிக்கரைதான் எல்லாத்துக்கும்

பள்ளிக்கூட கட்டிடம் இல்லை

 வாகன மண்டபத்தில்

வகுப்புக்கள் நடக்கும்

வெள்ளியோ சனியோ

மாலை நேரம்

சாணம் போட்டு வகுப்புத்தரையை

மெழுகி முடிப்பர் மாணவர்கள்

குடி தண்ணீருக்குப்பானையொன்று

  வட்டமாய் மடக்கொன்று.

சர்க்கார்  கிணறு அருகிருக்கும்

சேந்தி வருவார் தண்ணீரை

இன்ன கிழமையில் இன்ன வேலை

அட்டைப்பட்டியல்  தொங்கிக்கிடக்கும்

அதுப்படிதான் எல்லாம் நடக்கும்

வீடு வீடாய்ச் சுற்றிச்செல்வோம்

பிள்ளைகளைக்கொண்டு வருவோம்

காமராஜர்  அருளிய  மதிய உணவு 

பள்ளிப்பிள்ளைகள் தானே வந்தனர்

கரும்பலகை அழிக்கக் கோவை இலைகள்

தண்டனைக்கு

நீட்டுக்குச்சி

கட்டாயம் இருக்கும் மேசை மீது.

காதைப்பிடி போடு தோப்புக்கரணம்

விரட்டி எடுப்பர் ஆசான்கள்

கண்ணு ரெண்டு   இருக்கட்டும் 

பாக்கி எதுவும்  போனாலும்

புள்ள மட்டும் நல்லா  படிக்கணும்

  வேண்டிச்சென்றனர் அப்பாக்கள்

ஆசிரியர்கள்  ராப்பட்டினி

அக்கறையோடு பாடம் சொன்னார்

அரி நமோத்து சிந்தம்

 குரு வாழ்க குருவே துணை

சொல்லிச்சொல்லி பாடம்  துவங்கும்

இப்படித்தானே  பள்ளிக்கூடம்

இப்போது சொன்னால் ஒப்புவார்களா.





Wednesday, November 8, 2023

 


கவிதை- காலம்               இணையக்கால கவியரங்கு   6/11/2023


அது அதுவும் அங்கங்கே

நிகழ்ந்து கொண்டேதான்

யார் எங்கு போனால் என்ன

போகாவிட்டால் என்ன

எதற்காகவும் நிற்பதில்லை எதுவும்

புலம்பல்கள் இருக்கலாம்

புகழ்ச்சிகள் இருக்கலாம்

வசைகள் இருக்கலாம்

வம்புகள் இருக்கலாம்

வழிபடல் இருக்கலாம்

யாருக்காகவும் எதுவும்

காத்திருப்பதில்லை

அதன் ராஜபாட்டையில்

தொடர்கிறது காலம்

யாரையும் சட்டைசெய்யாமல்

கதியைக்கூட்டுவதுமில்லை

குறைப்பதுமில்லை காலம்

யாரிட்ட கட்டளையோ

வரம்பு எதுவும் உண்டோ

யார் அறிவார்

யார் புகல்வார்பார் சுழலும் ரகசியத்தை

யாரே பகர வல்லார்.

----------------------


கவிதை- நீவழிப்படுஊம் புணை        நாள்   7/11/2023


தருமங்குடி சிவன் கோவில் அக்கிரகாரத்தில்

எங்களின் ஓட்டு வீடு

தாத்தாவுக்குப் பிறகு

அப்பா இருந்தார்

பிள்ளைகள் நாங்கள்

மாநகரம் வந்தாயிற்று

துளசி பூஜை

விடாமல் நடந்த வீட்டின்

முற்றத்தில் காட்டுப்பூனைகள்

அட்டகாசமாய்க்

குடும்பம் நடத்துகின்றன

நாட்டு ஓடுகளை பிரித்துப் பிரித்து

குரங்குகளின் கும்மாளம்

காஞ்சி சங்கராச்சாரியார் வந்திறங்கி

நெல் குவியலில் சம்மணமிட்டு  அமர்ந்து

ஆசீர்வதித்த நடுக்கூடத்தில்

வவ்வால் புழுக்கைகளின் ஆட்சி

தாத்தா ஜோசியம் சொன்ன

வீட்டுத்திண்ணையில்

சாராயம் குடித்துவிட்டு சீட்டாடும் கிராமத்தார்

வீட்டை விற்க மனம் வரவில்லை

கட்டி அழவும்  முடியவில்லை

வயதுகூடி கிழடு தட்டிப்போகிறது

எங்கள் வாரிசுள் அந்நிய மண்ணில்

எது பற்றியும்  சட்டையே செய்யாமல்.

----------------------------------





Saturday, November 4, 2023

கவிதை- வன்மம் குறையவில்லை

 



 கவிதை-  வன்மம் குறையவில்லை        இணையக்கால கவியரங்கம்   5/11/23

  

புத்தனும் ஏசுவும்

தோற்றுப்போனார்கள்

வாழும் மாந்தரிடை வன்மம் குறையவில்லை

அகிம்சையைத்தூக்கிப்பிடித்த

காந்தியின் தேசமிது

தேசபிதாவைக்காப்பாற்றிக்கொள்ள முடியாமல்

கொன்றுபோட்டோமே நாம்.

அறிவினான் ஆகுவதுண்டோ

பிறிதின் நோய்  தந்நோய் போல்

போற்றாக்கடை சொன்ன வள்ளுவமும்

வாடிய பயிரைக்கண்போதெல்லாம்

வாடினேன் வழங்கிய வள்ளலாரும்

ஹமசிடமும் இஸ்ரேலிடமும்

நின்று பேசிடத்தான் முடியுமா ?

அறிவுக்குருடர்கள் 

கேள்விச்செவிடர்கள் முன்னே

ஆயிரம் ஆயிரமாய்

மாண்டு போவது பெண்களும் குழந்தைகளும்.

ஐக்கிய நாடுகள் சபையொன்றுண்டு

அறிவீரோ

மார்கழியில் பஜனை செய்வார்களாம்...




கவிதை- செயற்கை அறிவு

 


கவிதை- செயற்கை அறிவு    

                                                                                    இணையக்கால கவியரங்கு   4/11/23

 செயற்கை  அறிவு எங்கெங்கும்

செயலாற்றத்தொடங்கி விட்டதாம்

கற்ற அனைத்து ஊறும் அறிவு

மனிதர்க்குத் தெரிந்த குறள்

இயந்திரங்கள் செயற்கை அறிவோடு

செயல்கள் பல ஆற்றக்

காத்துக்கொண்டிருக்கின்றன

கவிதை எழுதுமாம்

மொழிபெயர்ப்பு செய்யுமாம்

புனைகதை படைக்குமாம்

பிரச்சனை சொன்னால்

விடை கொடுக்குமாம்

கனிப்பொறியோடு 

ரோபோ ஒன்று பிணையக்

கிடைக்குமாம் செயற்கை அறிவு

மக்களிடை புரட்சி செய்யத்தான்

கைகட்டி நிற்கிறது அது

சிந்திக்க ஒரு இயந்திரம்

வந்த பின்

மனிதன்  உச்சமாய் செய்ய   எதுவுமில்லை

மனிதன் சிந்திப்பதை நிறுத்தினால்

செத்துப்போவேனே.




Friday, November 3, 2023

கவிதை -அரசியல்


கவிதை  -அரசியல்                 இணையக்கால கவியரங்கு   3/11/2023

 

எங்கும் அரசியல்

எதிலும் அரசியல்

கட்சியில் சேர்ந்தால்

கணம் கணம் அரசியல்

சங்கத்தில் சேர்

பொறுப்புக்களைத்

தீர்மானிக்கும் அரசியல்

இலக்கிய அரங்கமா

அசடுக்குப்புரியாதா நுண்ணரசியல்.

அழகாய்ச்சொல்வார்கள்

அரசியல் கலவாமல்

எழுதுங்கள் கவிதை

அதுவுமே அரசியல்.

மலரை மகளிரை

தாயைத்தனயனை

வானைக்கடலை

மலையை அருவியை 

காகத்தைக் கொக்கைப்பார்

கெஞ்சு கொஞ்சு

எழுது கவிதை

யார் செத்தாலென்ன

யார் பிழைத்தாலென்ன.


Thursday, November 2, 2023

கவிதை- நன்றி சொல்லிமுடியுமா.

 


 கவிதை -நன்றி சொல்லி முடியுமா       2/11/23 இணையக்காலக்கவியரங்கம்


செய்த உதவிக்கு

நன்றி என்று எழுதுகிறோம்

நன்றி நன்றி என்று

உரக்கச்சொல்கிறோம்

உதவி சிறிதெனினும்

நன்றி மறத்தல் நன்றன்று

பொய்யாமொழி அல்லவா.

பொழியும் மழைக்கும்

காக்கும் கதிரோனுக்கும்

உயிர் வளி  அருளும்

விருட்சங்களுக்கும்

சோறு போடும் உழவனுக்கும்

தம்மை உருக்கி நம்மை ஈனும்

தாய்மார்களுக்கும்

நன்றி சொல்லி முடியுமா

நெஞ்சிருக்கும்வரை

நினைவில் வைத்துப் போற்றலாம்

ஈடாகாது அப்படியும் 

அவர்களிடம் நாம் பெற்ற கடன்.

பெற்றதாயொடு எண்ணக்கடவுளும் இல்லைதானே.