Tuesday, November 28, 2023

கவிதைகள் 2

 

இணையக்கால கவியரங்கம்                                    24/11/23



சின்னத்திரைக்குப்பின்னால்


சின்னத்திரைக் கலைஞர்களை

யாராவது நினைத்துப்பார்க்கிறார்களா?

அழுவதும் சிரிப்பதும்

அடுத்தவனோடு படுத்துச்சுகிப்பதுமாய்

நடிப்பதுவும்

உன்னையும் என்னையும்

மகிழ்விக்கத்தான்

தனது சொந்த வாழ்க்கையைச் 

சுட்டுச்சாம்பலாக்கி

அதில் கிடைக்கும் காசுக்காய்

தன்னையே விற்றுக்கொள்கிறார்கள்.

தம்மை ஊரே கொண்டாடுவதாய்

ஏமாந்து போகிறார்கள்

தலை நரைத்துப்பல்

விழுந்து கூனாகிக் குறுகி

கண்ணீர் விடுகிறார்கள்

தன்னந்தனியாய்.

மேடைக்கலைஞர்களில்

ஆண் எப்படியோ தப்பித்துப்போகிறான்.

அதுதான் பார்க்கிறோமே நடைமுறையில்

பெண்கள் எதை இழந்தார்கள்

என்பதை அறியவே மாட்டார்கள்

பளபளக்கும் ஆடை

வெளிச்ச வெள்ளம்

மயக்கும் இசை

சுற்றியும் ஆரவாரம்

கட்டுக்கட்டாய்ப்பணம்

உயரமான மேடை உல்லாசமான வாழ்க்கை

காரும் பங்களாவும்

வேலை ஆட்கள் பலரும்

மானுடப்பிறப்பு மட்டுமே பூச்சியமாய்.


இணையக்கால கவியரங்கம்        26/11/23


அப்படியும் இப்படியும்


ஏக்கர் ஆராயிரம் என்று 

என்றோ வாங்கிய

நிலத்தைச்சதுரடி

ஆராயிரம் என்று விற்று

கோடி கோடியாய்

மூட்டை கட்டுகிறார்கள்

சிஎம் டி ஏ அப்ரூவலுக்கு

சமையல் கட்டொன்றுக்கு

முப்பதாயிரம் லஞ்சம்

என்று சம்பளத்தோடு  எந்த முதலும் 

போடாத அதிகாரிகள்

கோடி கோடியாய்ச் சம்பாதிக்கிறார்கள்

வீட்டுக்கு த்ரீ ஃபேஸ் வாங்க

ஈபி காரருக்கு லஞ்சமாய்

நாற்பதாயிரம் ஒரு இணைப்புக்கு

அலுவலக சம்பளத்தோடு 

அவர்கள் அள்ளிப்போகிறார்கள்

வீடு கட்டுவதற்கு ச. அடிக்கு

இத்தனை ஆயிரம் என்றுக்கணக்குப்போட்டு

கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள்

அய்ம்பது லடசம் கடனுக்கு

ஐம்பது லட்சம் வட்டியாம்

வங்கிக்கடனுக்கு இரவு பகலாய்ப்

படித்து மார்க்கு வாங்கிய இளைஞர்கள்

கண்காணாத தேசத்தில்

தேகம் அழிக்கிறார்கள்

கிழவனும் கிழவியும்

ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு

வாங்கிய வீட்டுக்கு வாட்ச்மென்களாய்

வானம் பார்த்து

நாட்களை எண்ணுகிறார்கள்.


 நாள்    27/11/23


புத்தகக்கண்காட்சி


புத்தகக்கண்காட்சி

வரவிருக்கிறது சென்னையில்

ஆயிரம் அரங்குகளில் புத்தகம் விற்பார்கள்

ஒவ்வொருவரும் தமக்கென்று

நான்கு அரங்குகளைத் 

தேர்வு செய்யுங்கள்

போதும் அதற்கே

 நேரம் சரியாக இருக்கும்

நான்கு நண்பர்களைச் சந்தியுங்கள்

அதுவே போதும் மீறினால்

நட்பு நீர்த்துப்போகும்

சில அரங்குகளைக்கண்களை மூடிக்கடக்கலாம்

சில அரங்குகளை விட்டு வெளிவர மனசே வராது

ஆனால் வருவோம்

திரு வேறு தெள்ளியராதலும் வேறு

பணம் செலவாக செலவாகக் 

கையில் வாங்கிய புத்தகங்கள் எடை கூடும்

அட்டை மட்டுமே அழகாக இருக்கும் புத்தகம்

தலைப்பு மட்டுமே அழகாக இருக்கும் புத்தகம்

முதல் அத்யாயம் மட்டுமே நமக்குப்பிடித்த புத்தகம்

இப்படி இப்படி.

 முழுவதும்  சிறப்பாய் இனிதான் எழுதுவார்கள்

வாங்கிய புத்தகங்களை வீட்டுக்கு வந்து பார்த்தால்

ஏற்கனவே அதனை  இருமுறைவாங்கி

ஓரமாய்க்கிடக்கும்

நுழைவு டோக்கனை விலாசம் எழுதி

பெட்டியில் போட்டு ஆனந்தப்படாதீர்கள்

எனக்குத்தெரிந்துப் பரிசு பெற்றவர்களை

நான் கண்டதே இல்லை

யாரேனும் பதிப்பகத்தார் ஃப்ரீ டோக்கன் இதோ சாப்பாட்டுக்குப்

போங்கள் என்றால் போகலாம்

சந்திராஷ்டமம் உங்களுக்கு

நூலரங்கிற்குச்செல்லுமுன் பழைய

புத்தகக்கடையில் எப்போதேனும்

அரிய புத்தகங்கள் முன்னோர்

விட்டுச்சென்றது நம்மை ஈர்க்கலாம்.

ஆயிரம் கொனஷ்டைகள் சொல்லலாம்

ஆனாலும் புத்தகக்கண்காட்சி

அழகுதான் போங்கள்.







No comments:

Post a Comment