கவிதை- பள்ளிக்கூடம் இணையக்காலகவியரங்கம் 10/11/23
கோவில்கள் இருந்தன கிராமங்களில்
சாவடி இருந்தது
சத்திரம் இருந்தது
மாடு அடைக்க பட்டி இருந்தது
கக்கூசெல்லாம் யாருக்குத்தெரியும்
ஏரிக்கரைதான் எல்லாத்துக்கும்
பள்ளிக்கூட கட்டிடம் இல்லை
வாகன மண்டபத்தில்
வகுப்புக்கள் நடக்கும்
வெள்ளியோ சனியோ
மாலை நேரம்
சாணம் போட்டு வகுப்புத்தரையை
மெழுகி முடிப்பர் மாணவர்கள்
குடி தண்ணீருக்குப்பானையொன்று
வட்டமாய் மடக்கொன்று.
சர்க்கார் கிணறு அருகிருக்கும்
சேந்தி வருவார் தண்ணீரை
இன்ன கிழமையில் இன்ன வேலை
அட்டைப்பட்டியல் தொங்கிக்கிடக்கும்
அதுப்படிதான் எல்லாம் நடக்கும்
வீடு வீடாய்ச் சுற்றிச்செல்வோம்
பிள்ளைகளைக்கொண்டு வருவோம்
காமராஜர் அருளிய மதிய உணவு
பள்ளிப்பிள்ளைகள் தானே வந்தனர்
கரும்பலகை அழிக்கக் கோவை இலைகள்
தண்டனைக்கு
நீட்டுக்குச்சி
கட்டாயம் இருக்கும் மேசை மீது.
காதைப்பிடி போடு தோப்புக்கரணம்
விரட்டி எடுப்பர் ஆசான்கள்
கண்ணு ரெண்டு இருக்கட்டும்
பாக்கி எதுவும் போனாலும்
புள்ள மட்டும் நல்லா படிக்கணும்
வேண்டிச்சென்றனர் அப்பாக்கள்
ஆசிரியர்கள் ராப்பட்டினி
அக்கறையோடு பாடம் சொன்னார்
அரி நமோத்து சிந்தம்
குரு வாழ்க குருவே துணை
சொல்லிச்சொல்லி பாடம் துவங்கும்
இப்படித்தானே பள்ளிக்கூடம்
இப்போது சொன்னால் ஒப்புவார்களா.
No comments:
Post a Comment