Tuesday, September 17, 2024

 

 

ப்ராப்தம்                                                 

 

கடப்பா நகரத்து  யோகி வேமனா பல்கலைக்கழகத்தில்  எல் எல் பி நான்காவது செமஸ்டர்  பரீட்சைஎழுதிவிட்டு வெளியில் வந்தேன். ஊர் பெயர் கடப்பா. அது  பற்றி  ஒரே ஒரு  சமாச்சாரம்.  சொல்லாவிட்டால்  என் தலை வெடித்து விடும் போல் இருக்கிறதே. சாதாரணமாக கடப்பா என்றால் கருப்பாக இருக்கும் கருங்கல்,  அடுப்பு மேடைக்கு உபயோகப்படுவது என்பதுவே நாம்  அறிந்து வைத்திருப்பது. இங்கு   ஆந்திரர்கள்  இந்த ஊரைக் கடப்பா என்று  அழைக்க மாட்டார்கள். ‘கடப ‘ என்கின்றனர். கடப என்றால் வாயில்படி.  திருப்பதி ஏழுமலையானைக்காணச் செல்லும்  பக்தர்களுக்கு  வாயில்படியாக அமைந்த ஊர் என்கிற பொருளில்  ‘கடப’ என்றழைக்கின்றனர். அது நிற்க.

மொபைலை  ஸ்விட்ச் ஆஃப்  செய்துத்  தேர்வு ஹாலுக்குவெளியே அதற்கென இருக்கும் வாட்ச் மென்னிடம்  பத்திரமாய் வைத்துவிட்டுப்போனேன்.  அவன் கொடுத்த டோக்கனை அவனிடமே   திரும்பவும் கொடுத்து  என்   மொபைலை வாங்கினேன்.   மொபைலை   ஆன் செய்தேன். மிஸ்ஸுடு காலில் எதுவும் முக்கியமாய்  இல்லை. ’இப்போதுதான் யாரோ அழைக்கிறார்கள். ஆமாம் சென்னையிலிருந்து என் மருமகள்  பேசுகிறாள்.

‘மாமா, எக்சாம் நல்லா  முடிந்ததா’  இந்த வயசுல  பரீட்சை இதெல்லாம் உங்களுக்கு வேணுமா என்பதுபோல் இருந்தது.

‘முடிந்தது’

‘ ஹாலை விட்டு வெளியில வந்தாச்சா’   மருமகளின் பேச்சே ஒரு தோரணையாக இருந்தது.  எதிர் முனையில் ஏதோ சிக்கல் என்பது மட்டும் உறுதியானது.

‘ஏன்’

‘ நான் சொல்றதை கேட்டுட்டு  பயந்துடாதிங்க   கொஞ்சம்  மனச திடப்படுத்திகுங்க. உங்க திருவல்லிக்கேணி சாரதா அக்கா காலமாயிட்டா’

‘எப்ப எப்ப ’ என் கண்கள் பனித்தன  துக்கம்  தொண்டையை  அடைத்தது.  குரல் குளறியது..’ அய்யோ என் அக்கா’  ஓங்கிக்கத்திவிட்டேன்.

’ தைர்யமாதான் இருக்கணும்  மாமா  என்ன செய்யறது. இப்பதான். சேதி வந்தது. நீங்க எக்சாம் முடிச்சிருப்பிங்க. அதான் உங்களுக்கு  நேரத்த  பாத்து  பாத்து  கரெக்டா போன் செஞ்சேன்’. முக்கியமா ஒரு சேதி சவத்த  நாளைக்கி  காலைல ஒன்பது மணிக்கு எடுத்துடுவாங்களாம்.  சரியாக பத்து மணிக்கு பாடி  மைலாப்பூர் எலக்டிரிகல் க்ரிமடோரியத்துல இருக்கணுமாம்’

‘அப்பிடியா நான் தான்  ராத்திரி ஒன்பது மணிக்குள்ள சென்னை வந்துடுவன் அப்பறம் என்ன’

‘ பிறந்த வீட்டு கோடி நாம  போடணும். ஜவுளிக்கட மூடுறதுக்குள்ள வந்தாதான் புது புடவை வாங்க முடியும். மாலையும் வாங்கணும். காலம்பற கடை தொறக்குறதுக்குள்ளாற சவம் எடுத்துடுவாங்கல்ல’

‘மும்பையிலேந்து வர்ர ட்ரைன்லதான்  ஏறி வருவேன், அது ஒன்பது மணிக்குத்தான் செண்ட்ரலுக்கே வரும்‘ நீங்க எல்லாம்’

‘நா கொழந்த எம் புருஷன் மாமியார் எல்லாரும் எழவு வீட்டுக்கு வந்துட்டம்’

‘அப்பசரி’   என்றேன்.

 மருமகள் அக்காவை சவம் சவம் என்று சொன்னதே கேட்க முடியாமல் நொந்து  போயிருந்தேன்.   அக்கா வீட்டை எழவு வீடு என்றாவது சொல்லாமல் இருந்திருக்கலாம். ஆனாலும் அது எழவு வீடுதான். யாரில்லை என்றார்கள்.

‘எம் பையன் கிட்ட சொல்லி கோடிதுணி வாங்கிடலாமே’

‘நா அதான் நெனச்சேன். மாமியார் நீங்க வந்துதான் அத எல்லாம் வாங்கணும்னு சொல்றாங்க.  என்ன சம்பிரதாயமோ சடங்கோ நான் என்னத்தைக் கண்டேன் மாமா’

‘என் வயிஃப் சொல்லிட்டா சரித்தான்.’  என்றைக்கு  அவள் சொல்வதற்கு நான்  மாற்றிப்பேசியிருக்கிறேன். மனதிற்குள்ளாகச்  சொல்லிக்கொண்டேன்.

’ நானே வர்ரேன். புடவை மாலை வாங்கிகிட்டு திருவல்லிக்கேணி அக்கா வீட்டுக்கே வந்துடறன்’

யோகி வேமனா பல்கலைக்கழக வளாகத்திலிருந்து கடப்பா நகரம் பத்து கிலோமீட்டருக்குள் இருக்கலாம். புலிவந்த்தலு  செல்லும் சாலையில்  இருக்கிறது அந்த  வேமனாபுரம். அதுதான் பல்கலைக்கழகப்  பேருந்து நிறுத்தம். அங்கிருந்து  தேர்வு மய்யத்திற்கு ஒரு  நூறு அடி நடக்கவேண்டும். அவ்வளவே.

 தேர்வு நேரம்  முடிவதற்குள்ளாக  ஒரு ஐம்பது ஆட்டோக்கள் வரிசையாக  வந்தன. தேர்வர்களை ஏற்றிச்செல்ல த் தயாராக நின்றுகொண்டிருந்தன. ஒரு ஆட்டோ பிடித்து ஏறி அமர்ந்து கொண்டேன்.  கடப்பா  ரயில்வே ஸ்டேஷன் ரோடில் விஷ்ணு பிரசாத் சைவ உணவகம் என்னும் நிறுத்தத்தில் இறங்கினேன். ஒரு அரை மணிக்குள் ளாக ஹோட்டலுக்கே  ஆட்டோ வந்து சேர்ந்துவிட்டது. அசுரவேகத்தில்அல்லவா  ஆட்டோக்காரன்  வண்டியை ஓட்டினான்.

நேற்றுமுன் தினம்தான் நாங்கள் எல்லோரும் திருவல்லிக்கேணி சென்று சாரதா அக்காவைப்பார்த்து வந்தோம். அக்கா உடம்பு முடியாமல்தான் இருந்தார்கள். அக்காவுக்குப்  புற்று நோய் மண்டைக்குள்ளாக இருப்பதாய்ச் சொன்னார்கள்.  கதிர் சிகிச்சை வைத்தியம் செய்வதும்  மிகவும் சிரமம் என்று அக்கா  வீட்டில் எல்லோரும்  பேசிக்கொண்டார்கள். ஆனால் இத்தனை சீக்கிரமாய்  அக்கா விடை பெற்றுக்கொண்டு விடுவார்கள் என்று யாரும் நினைக்க வேயில்லை.  என் மனைவி  மகன் மருமகள் பேரக்குழந்தையொடுதான் போனோம். அக்கா என் பேரன் பரத்தோடு சிரித்துப்பேசினாள். பரத்தின் தலை தொட்டு ஆசீர்வாதம் சொன்னாள்.  கட்டிலில் படுத்திருந்தவள் எழுந்து அமர்ந்து கொண்டாள். உடம்பு பலகீனமாய்த்தான் இருந்தது.

 என் அக்கா வீட்டுக்காரர் அருகிலேயே இருந்தார். அவர் முகம்  மிகச் சோர்வாய்க்காணப்பட்டது. ஒருவருக்குத்தன்  மனைவியின்  உடல்நிலை சரியில்லை என்பதைவிட வேறு என்ன கஷ்டம் வந்துவிடப்போகிறது. மனைவி இருக்கின்ற வரைதான்  ஒரு கணவனுக்கு மரியாதை, கவுரவம் எல்லாம். அதற்குப்பிறகு ஒரு குவளை வெந்நீர் வேண்டும் என்றாலும் யாரையாவது கெஞ்சித்தான் ஆகவேண்டும். ஆயிரம் மனஸ்தாபம் இருந்தாலும் நாம் சாப்பிட்டோமா இல்லையா என்பது குறித்துக் கவலை கொள்பவள் முதலில்  பெற்ற தாய் பிறகு தாரந்தான். தாயுக்குப்பின் தாரம் என்பது அந்தவகையில் மிகச்சரித்தான். மனைவியோடு அடிக்கடி   சண்டை வரும் திட்டுவாள் எல்லாம்தான். ‘என் தலை எழுத்து ஒரு பித்தை முண்டத்தைக்கட்டிக்கொண்டு  காலம் பூரா மாரடித்தேன்’ என்பாள். ஆனாலும் தன் புருஷன் வயிற்றுக்குச் சாப்பிட வேண்டும் என்று நினைப்பவளும்  அவள்தான்.

‘தம்பி பேரன் வந்திருக்கான்  முதல் முதலா நம் வீட்டுக்கு.  என்னாலதான் கொழந்தய  தூக்கி வச்சி கொஞ்ச  வாய்க்கல.  படுத்து இருக்கன். ஒரு ஐநூறு ரூவா எடுத்து  கொழந்த கைல குடுங்க.  சும்மா மச மசன்னு  பாத்துகிட்டே நின்னா என்னா அருத்தம்’

‘உனக்கு  உடம்பு சரியில்ல. அத்திம்பேர் ஆடிப்போய் இருக்கார். இப்படிபேசலாமா அக்கா’

‘அட போடா ராமு, இவர் எப்பவும் இப்பிடித்தான் இண்ணக்கிதான் இவர் சேதி எனக்கு தெரியுமா. ஒரு மொழம் மல்லிகப்பூ  பொண்டாட்டிக்கு  வாங்கக் கூட ஆயிரம் யோஜனை பண்ணுவார், இப்ப  எனக்கு கொள்ளையான்னா  வந்துட்து இனிமே என்னா இருக்கு சொல்லு’

அத்திம்பேர் எதுவும் பதில் பேசவில்லை. ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து வந்தார். அக்கா கையில் கொடுத்து அதனையே  வாங்கி என் பேரனுக்குக் கொடுத்தார். மனத்திரையில் பளிச்சென்று இந்த  முடிந்து  போய்விட்ட் நிகழ்வு கனமாக ஓடிக்கொண்டிருந்தது.  என் கண்கள் ஈரமாகிக்கொண்டே இருந்தது. என்ன இருந்தாலும் உடன் பிறப்பு ஆயிற்றே. தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும் என்கிறார்களே அது சும்மா இல்லை. என்ன என்னமோ மனம் நினைத்துக்கொண்டது.  அந்த அக்காவோடு  தருமங்குடி கிராமத்தில் விளையாடியது   அக்கா கையால் தருமங்குடி கிணற்றடியில் உப்புமா சாப்பிட்டது. நாய்க்குட்டியைக்காட்டிக் காட்டி  குழந்தை எனக்குச்  சோறு  ஊட்டி, என்னைக் கிணற்றுக்குள் தவறவிட்டது,  அடுத்த வீட்டு கல்யாண குருக்கள் மாமா  கிணற்றில் குதித்து என்னை வெளியில் எடுத்துப்போட்டது  என் சட்டைத்துணியை அக்கா நீலக்கலர்   பவர் லைட் சோப் போட்டு துவைத்துக்கொடுத்தது  வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுத்தது  எல்லாம் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வந்தது.

விஷ்ணு பிரசாத் உண்வகத்தில் எப்போதும் ‘மஜ்ஜிய புலுசு’ என்னும் மோர்க்குழம்பு பிரமாதமாய்ப் போடுவார்கள். அதனை மட்டும் சாப்பிட்டுவிட்டு எழுந்துகொண்டேன். ஒன்றும் பிடிக்கவில்லையே. நேற்று இரவு ப்ளெசண்ட் கஸ்ட் அவுஸ்  விடுதியில் வந்து தங்கினேன். இரவு முழுவதும் தேர்வுக்குப்  படித்தாயிற்று. தேர்வு முடிந்தது.  கெஸ்ட் அவுசுக்குச் சென்று அறையைக்காலிசெய்து கொண்டு கடப்பா ரயில் நிலையத்துக்குப் புறப்பட்டேன். சாலையில் ஆட்டோக்கள் ஒன்றன்பின் ஒன்றாக கூவிக்கூவி அழைத்து மக்களை ஏற்றிக்கொண்டு சென்றன. ஒரு ஆட்டோவில் அமர்ந்து கடப்பா ரயில் நிலையம் வந்து சேர்ந்தேன். மும்பை யிலிருந்து வரும் ரயில் சரியான நேரத்துக்கு வந்து விட்டது.  ஸ்லீப்பர் கிளாஸ் இருக்கை.  என் பெட்டியில் ஏறினேன்.  டாப் பெர்த்தில் காலை நீட்டிப்படுத்துக்கொண்டேன். பெட்டி முழுவதும் இந்திக்காரர்களும் தமிழர்களும்  வள  வள  என்று பேசிக்கொண்டே இருந்தார்கள். திருப்பதி ரயில் நிலையத்தில் வண்டி நிற்க டீ ஒரு கப்  வாங்கிக் குடித்தேன்.

சென்னை செண்ட்ரல் நிலையத்துக்குச்சரியாக ஒன்பது மணிக்குச் சற்று முன்னதாகவே வண்டி வந்துவிட்டது. மனம்  அக்காவைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தது. செண்ட்ரல் ஸ்டேஷனை விட்டு வெளியில் வந்தேன். ஒரு ஆட்டோக்காரனைப்பிடித்தேன்.திருவல்லிக்கேணி சிடி செண்டர் போகவேண்டும் என்றேன். இருநூறு ரூபாய் என்று ஆரம்பித்து நூற்றி ஐம்பது ரூபாயுக்குப்படிந்தான்.

‘சீக்கிரமா போவணும்’

‘ட்ராஃபிக் பாத்திங்கள்ள நா என்ன பண்ண’

அண்ணா சாலையிலுள்ள ஒரு மால் வாயிலில் வண்டியை நிறுத்தினான்.’ எறங்கு’ என்றான் ஆட்டோக்காரன்.

‘என்னா இது மவுண்ட்ரோடுல்ல’

‘பின்ன எங்க போவுணும்’

‘திருவல்லிக்கேணி சிடி செண்டர்ல நா  சொன்னது’

‘அப்ப எரநூறு குடு’

‘சரி தரேன்  வண்டிய எடு, போ, எனக்கு என் பிரச்சனை உன்கிட்ட பேசிகிட்டு இருக்க நேரமில்ல’

ஆட்டோக்காரனிடம் மேற்கொண்டு பேசப்பிடிக்கவில்லை.

என் பையன் எனக்குப் போன் போட்டான்.

‘வந்தாச்சா’

‘வந்துட்ருக்கன்’

‘அய்ஸ் அவுஸ் போலிஸ் ஸ்டேஷன் கிட்ட நா  நிக்குறன்’

‘சரி நா சிடி செண்டர் வந்து வரலாம்னு பாத்தன்’ என் பையனிடம் பேசிக்கொண்டு இருந்தேன்.

‘இப்ப நீ எங்கதான் போவுணும்’ ஆட்டோக்காரன் குறுக்கிட்டான்.

‘இப்ப அய்ஸ் அவுஸ் போலிஸ் ஸ்டேஷன் கிட்ட போவுணும்’

‘அப்பிடி சொல்லு’

‘ சிடி செண்டர்  பெரிய மாலு  அந்த லேண்ட் மார்க் தெரியுமே உனக்குன்னு சொன்னேன்’

‘அய்ஸ் அவுஸ் போலீஸ்ஸ்டேசன் தான் பெரிய லேண்மார்க்கு அதவுட என்ன’

‘சரி பின்ன அங்கயே போ’

வண்டியை வேகமாய் ஓட்டினான். பத்து நிமிடத்தில் அய்ஸ் அவுஸ் போலிஸ் ஸ்டேஷன் முன்பாக வண்டியை நிறுத்தினான்.

‘நம்ம கிட்ட தெளிவா பேசுனும்’ நெஞ்சை நிமிர்த்திப் பேசினான்.

நாம் இருநூறு ரூபாய் எடுத்து நீட்டினேன்.

சிரித்துக்கொண்டான்.’ குவார்ட்டர்க்கு தேத்திட்டேன் ’சொல்லிக்கொண்டான். ஏற்கனவே  மட்டும்  அங்கு என்ன வாழ்ந்தது.

என் பையன் ‘வா வா வா’  என்று என்னை அழைத்துக்கொண்டு ஜவுளிக்கடை ஒன்றிர்க்கு விரைந்தான்.

‘கடை மூடப்போறன் ஜல்தி ஜல்தி’ ஜவுளிக்கடைக்காரன்  உஷார் படுத்தினான். சிவப்பு நிறத்தில் புடவையொன்று வாங்கினேன். என்னிடம் சுத்தமாய் பணம் இல்லை. ஏதோ சில்லறை இருந்தது.

என் பையன் தன் சட்டைப்பையில் இருந்து ஐநூறு ரூபாய் எடுத்தான். ஜவுளிக் கடைக்காரரிடம் கொடுத்தான்.

‘கோடித்துணிதானே’ கடைக்காரன் கேட்டான்.

‘ஆமாம்’

‘ஆம்பள வந்து புடவ வாங்கறத பாத்தா தெரியாதா’

‘மால வாங்குணும்’

‘அந்த பூக்கட எல்லாம் ராத்திரி பதினோறு மணி வரைக்கும்கூட தொறந்திருக்கும்’ ஜவுளிக்கடைக்காரன் எங்களுக்குச்சொன்னான்.

‘அப்பா அன்னிக்கி  அதான்  முந்தாநா நாம  அத்தய பாக்க போனோம்ல.  அன்னிக்கி   திருவல்லிக்கேணி     அத்த  என் பையனுக்கு  ஆசீர்வாதமா குடுத்த ஐநூறு ரூவா’

‘அதயா இதுக்கு  குடுத்த’

‘ஆமாம்’

என் பையனுக்கு பதில் எதுவும்  நான் சொல்லவில்லை. சொல்லி ஒன்றும் ஆகப்போவதுமில்லை.

பூக்கடை வாயிலில் நின்று இருநூறு ரூபாயுக்கு ஒரு மாலை வாங்கிக்கொண்டோம்.

கோடிப்புடவை சவத்திற்கு மாலை இரண்டையும் தூக்கிக்கொண்டு என் பையன் நடந்தான். அவ்வை சண்முகம் சாலையில்  பாலாஜி மெடிகல்  அருகே வள்ளலார் ஃபிளாட்ஸ்ல்  சொந்த அக்காவின்  வீடு.

அக்கா வீட்டு வாயிலில் ஷாமியானா. நடுவில் ஒரு பெரிய குண்டு பல்ப் எரிர்ந்தது. அக்காவை பெஞ்சொன்றில் கிடத்தி இருந்தார்கள். கால் கட்டை விரல்கள் பிணைத்துக்  கட்டப்பட்டிருந்தன. கைகளும்தான்.  நெற்றியில் பெரிய பொட்டு . சிரித்த முகமாய் அக்கா படுத்துக்கொண்டிருந்தாள். கண்கள் தானமாகக்கொடுத்து இருந்தது முகத்தில்  பச்சை நூல் தையல் தெரிந்தது.

அத்திம்பேர் ஒரு நாற்காலியில் அமர்ந்து தலையில் கை வைத்துக்கொண்டு ‘சாரதா  நீ  என்ன அனுப்பி வச்சிட்டு போயிருக்கலாமேடி   முந்தினூட்டயே’ என்றார். அவரைப்பார்க்கபார்க்க  எனக்குப் பரிதாபமாக இருந்தது.

காது கேடகாத என் சதாசிவம்  அண்ணா,  பள்ளிக்கூட வாத்யார்தான்  சொன்னார்.’   அக்காவுக்கு ரொம்ப குடுத்து வச்சிருக்கு. ஏகாதசில மரணம்,  நாளக்கி துவாதசில தகனம். துளசி பூஜ விடாம பண்ணினா. அக்கா  பூவோட பொட்டோட போயிட்டாடா தம்பி’ என்னைக்கட்டிக்கொண்டார்.

அத்திம்பேர் எங்களையே உற்று பார்த்துக்கொண்டிருந்தார். அவர் கண்கள் குளமாகியிருந்தது.

-----------------------------------------

















 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment