Wednesday, September 25, 2024

கதை- சந்திராஷ்டமம்

 


 

சந்திராஷ்டமம்            

 

என் மனைவிக்கு  முட்டிக்கால் வலி.    கொடியை   நாட்டிக்கொண்டு   அந்த முட்டிக்கால் வலி  வந்து ஆண்டுகள்  பலவாயிற்று. எத்தனையோ களிம்புகள் தைலங்கள் எண்ணெய்கள், மருந்துகள்  மாத்திரைகள்,  காலுக்கு உறை  எனும் தகரத்துணிகள்  என்று அத்தனை   ராஜ உபசாரங்களும் செய்தாயிற்று.  கிலியுற்ற  அந்த மனிதர்களை  யூடியூப்   என்னும்  பேய் பிடித்து ஆட்டுகிறதே  வேறு என்னதான் செய்வது.    முட்டிக்கால் வலி எப்படித்  தீரும் என்றுதான்  தெரியவில்லை.  ஒரேதான்  வழி உண்டு. கால் மூட்டு அறுவை சிகிச்சை செய்யலாம். எலும்பு  நோய்க்கு வைத்தியம்  பார்க்கும் மருத்துவர்கள்  எவ்வளவு  பவ்யமாய் ஆலோசனை  சொல்கிறார்கள்.

 இதில் மட்டும் இல்லை  எதிலும் எனக்கு அரை மனசுதான். ஒருக்கால்   அவளுக்கு   உடன் இருந்து ஒப்பேற்றும்  அந்த நொண்டிக்காலும் போய்விட்டால் என்ன செய்வது. ஓடுகிறவரை இப்படியே ஓடட்டும் என்று விட்டு விட்டேன்.

 இதற்கிடையில் கலிபோர்னியாவில் இருக்கும் என் பெரிய பையன் எனக்கும் என் மனைவிக்கும் விமான  டிக்கட் வாங்கி அனுப்பிவிட்டான். எதிர்பார்த்ததுதான்.

மனப்பத்தாயத்தில் கிடந்த அமெரிக்க பயணத்தை மூன்றாண்டுகள் கொரானா  என்னும் ராட்சசன் வந்து தள்ளிப்போட்டது.   வயதோ ஆகிக்கொண்டே போகிறது. சரி விடு அந்தக் கழுதையை என்று ஒரு வழியாய்   வெளிநாட்டுப் பயணத்தை நாங்கள் மறந்துவிட்டுதான் இருந்தோம். ஆனால் கதே பசிஃபிக்  விமான   டிக்கட்   ஈ மெயிலில் வந்து விட்டதே. என் மனைவிக்குக்  கால்கள்  எப்படி வலிக்கிறதோ  என்னிடம் அதிகம் வலி மகாத்மியம் சொல்வதைக் குறைத்துக் கொண்டு விட்டாள்.

 அப்படியே  கால்களைச் செங்குத்தாய்  வைத்துக்கொள்ள வேண்டும். ஒருவர் சென்னையிலிருந்து லாஸேஞ்சலிஸ்  இருபது மணிநேர எலிப்பொறி விமான இருக்கைப்  பயணத்திற்கு சவுகரியப்படுமா என்றால்  படவே  படாது. இது பச்சைக்குழந்தைக்கும் தெரிந்த செய்தி. என் பையனுக்குத் தெரியாதா  என்ன? தெரிந்துதான் இருந்தது.. ஆக லெக் ரூம் வசதி  கொண்ட   விமான சீட்டு வாங்கி அனுப்பியிருந்தான்.அதன்படி   பயணிக்கு கால்கள் வைத்துக்கொள்ள சற்றே இடம் கிடைக்குமாம். ஒரு சாணிலிருந்து ஒண்ணரை சாண் அகலத்திற்கு  அந்த இடம் வரலாம். வெளிநாட்டு  விமான பயணத்திற்கு மாத்திரம் விவரம் சரியாய்ச் சொல்பவர்கள் கண்ணில் அகப்படவே மாட்டார்கள். சாதாரணமாய்  எகானமி வகுப்பு டிக்கட்டிற்கும் அந்த  லெக் ரூம் வசதி கொண்ட எகானமி வகுப்பு  சீட்டிற்கும்  வித்தியாசம்  உண்டு. அந்த  வகையில் எங்கள் இருவருக்கும் ஐம்பத்து ஒன்பதாயிரம் அதிகம் கொடுத்து  விமான சீட்டு வாங்கியிருப்பதாய்  பையன் சொன்னான்.

பயணநாளன்று முன்னதாகவே புறப்பட்டு சென்னை விமான நிலையம் வந்தாயிற்று. சீட் அலாட்மெண்ட்  எது என உறுதிசெய்து போர்டிங் பாஸ் வாங்கவேண்டும். கதே பசிஃபிக் என்னும்  பெயர் தொங்கும் விமானப்  பயண சேவை நிறுவன கவண்டரைத் தேடினோம். அவர்களிடம்  நாம்  வாங்கியிருக்கிற   விமான டிக்கட் காபியைக் காண்பிக்கவேண்டும்.  அந்த கவண்டரைத் தேடிக் கண்டு பிடிக்கவே  ஒருவர் உதவ வேண்டியிருந்தது. மெகாபோனில்  சொல்லப்படுகின்ற அறிவிப்புக்கும் டிஸ்பிளே யில் தெரியும் எண்ணுக்கும் தொடர்பு இருப்பதாகவே தெரியவில்லை. நாங்கள் இப்படியும் அப்படியும் அல்லாடுவதைப் பார்த்து எங்களுக்கு உதவுவதற்கென்று  ஒரு நபர் குறுக்கிட்டார். அப்படி எத்தனையோ பேர் வழிகள்.  என்னையும் என் மனைவியையும் வீல் சேரில் அமர்த்தி  அழைத்துக்கொண்டு போன  அந்த நபர்  ஒரு  கண்ணாடிக் கதவைத் திறந்தார்.  வீல் சேரை  நகர்த்திக்கொண்டே பத்து தப்படி நடந்திருப்பார். அந்த ’’கதே பசிஃபிக்’ கவுண்டர் வந்துவிட்டது. விமான டிக்கட் பிரிண்ட் அவுட்டை  எங்களிடமிருந்து வாங்கிக் கவுண்டரில்  நீட்டினார். அத்தோடு அந்த நபரின் வேலை முடிந்து போனது.  ஐநூறு ரூபாய் தனக்குக் கூலியாக வேண்டும் என்றார்.  நான் தான் அவருக்கு  ஐநூறு ரூபாய்  எடுத்துக் கொடுத்தேன்.  அவர் அங்கிருந்து   அகன்றதும் வேறு  இரண்டு நபர்கள்  எங்கள் வீல் சேரைத் தொட்டுக்கொண்டு நின்றனர்.

கவுண்டரில் இருந்தவர் எங்களை அழைத்தார். ‘ நீங்கள் இருவரும் சீனியர் சிடிசென்கள். அவசரகால திறப்புக்கதவு அருகே சீட் அலாட் ஆகி  டிக்கட் கொடுத்து இருக்கிறார்கள். இது தவறு. சீனியர் சிடிசென்கள் அதிலும்  வீல் சேர் வசதிப்பயணிகள். நீங்கள் வேறு இருக்கை பெற்றுக்கொள்ளுங்கள்.’ என்றார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘தவறாக இருக்கை கொடுத்து இருக்கிறார்கள் என்றால், உங்கள் விமான நிறுவனம்தானே அதனைக் கொடுத்திருக்கிறது. நீங்களே சரி செய்யுங்கள்’ என்றேன்.

‘இருக்கை எண் மறிவிடும்’

‘எது சரியோ அப்படிச்செய்யுங்கள்’  நான் பதில் சொன்னேன்.

லாஸேஞ்சலிசில் இருக்கும் பையனுக்குப் போன் செய்தேன்.  மொபைல் வாட்ஸ் ஆப்பில்தான்.என்  பையனிடம் விமான நிறுவன கவுண்டரில் அவர் சொன்னதைச்சொன்னேன்.

பையன் மொபைலை  கவுண்டரில் உள்ள நபரிடம் கொடுக்கச்சொன்னான். நானும் அப்படியே செய்தேன்.

‘ எகானமி ஃப்லெக்சிப்ல் என்று  எங்கள் பெற்றோர்களுக்கு சீட் அலாட் ஆகியது. வயதான பெற்றோர்கள்.  லெக் ரூம் வசதி சற்று வேண்டும். ஆகத்தான்  ரூபாய் ஐம்பத்தொன்பதாயிரம்  எக்ஸ்ட்ரா  கட்டியிருக்கிறேன். நீங்கள்  இப்போது சீட் மாற்றுகிறேன் என்றால் அந்த லெக் ரூம் வசதி வேண்டுமே’ என்று குரல் கூட்டிப் பேசினான்.

‘இதோ பாருங்கள். வீல்சேர் பயணித்து  வரும்  நபர்கள்  விமானத்தின் எமர்ஜென்சி  கதவு அருகே அமரக்கூடாது. அது விதி. ஆக வேறு இடம்தான் வேறு இருக்கை எண்தான்.  அவர்களிடம் சொன்னேன்.அவர்களும் ஒத்துக்கொண்டு விட்டார்கள்’

‘அவர்கள் விபரம் தெரியாதவர்கள்.ஒத்துக்கொண்டு விட்டார்கள்.   அவர்கள் கால்களை  வசதியாய் வைத்துக்கொள்ள  நான் இத்தனை ஆயிரம் அதிகம் கொடுத்திருக்கும் விஷயம் தெரியாதவர்கள்’

‘வீல் சேர் வசதி  உபயோகிப்போர்   விமானத்தின் எமர்ஜென்சி கதவருகே அமரக்கூடாது அந்த விதியை நான் கடைபிடித்தாக வேண்டும். மற்றபடி ரூபாய் அதிகம் கொடுத்த  சமாச்சாரத்திற்கு  விமான கம்பெனிக்கு எழுதிக்கேட்டுக்கொள்ளுங்கள்’ முடித்துக்கொண்டார் கவுண்டர் பொறுப்பாளர்.

அமெரிக்காவில் இருக்கும் பையனும் போனை வைத்துவிட்டான். நாங்கள் கொண்டு வந்த மூன்று பெரிய பெட்டிகளையும்  கதே பசிஃபிக்  கவுண்டரில் ஒப்படைத்து விட்டுக்க் கிளம்பினோம். பயந்து பயந்து முக்கால் பாகம் நிரப்பப்பட்ட  எங்களின்   சூட் கேஸ்கள் எடை போடப்பட்ட்ன.  விரைத்துக்கொண்டு நிற்கும் ஸ்டிக்கர்கள் அவைகளில்  ஒட்டப்பட்டன.

‘லாஸ் ஏஞ்சலிஸ்  ஏர் போர்ட்ல எடுத்துகலாம்  போங்க’ கவுண்டர் பொறுப்பாளர் எங்களுக்குச்சொன்னார்.

நானும் என் மனைவியும்  போர்டு பாஸ்கள்  வாங்கிக்கொண்டு  இம்மிக்ரேஷன் அதிகாரியைப் பார்க்க வீல் சேரில் புறப்பட்டோம். அவ்வதிகாரி  கடமைக்கு இரண்டு கேள்வி கேட்டார்.  பதில் சொன்னோம். பாஸ் போர்ட் புத்தகத்தில் சீல் போட்டார், ’போயிட்டே இரு  போ’ என்றார். வீல் சேர் தள்ளும்  அந்த ஆட்கள் இருவரும் எங்களோடு இருந்தார்கள். பிறகு செக்யூரிடி செக் கவுண்டருக்குப் போனோம். அங்கே எங்கள் கைப் பையில் உள்ள சாமான்கள், மேல் சட்டை பேண்ட், பாக்கெட்கள், பாஸ்போர்ட் போர்டிங்க் பாஸ்  எல்லாம் ஆய்வு செய்து அனுப்பி வைத்தார்கள். வீல் சேர் தள்ளுவோர் எங்களை தள்ளிக்கொண்டு போய்   விமான கேட் அருகே விட்டார்கள்.

‘’காசு ‘ என்றார்கள்.

இரண்டு பேருக்கும் தலா  ரூபாய் நூறு கொடுத்தேன்.

‘நீங்களே வச்சிகுங்க’ சொல்லிப்போனார்கள். ‘இதெல்லாம் ஒரு பணம்’ நான் மொழி பெயர்த்துக்கொண்டேன்.

விமான கேட் அருகே நிற்கும் கதே பசிஃபிக் அதிகாரியிடம் விமான சீட் மாற்றிப்போட்டது குறித்து விசாரித்தேன். வீல் சேர் வசதியில் பயணிப்போர் எமர்ஜென்சி கதவருகே அமரக்கூடாது இது விதி என்று சொல்லி  என்னை அனுப்பி வைத்தார்கள்.

இரவு ஒரு மணி.  வீல் சேர் தள்ளும் பையன்கள்  அதே  இருவர் வந்தார்கள்.  இரண்டு மணிக்கு  எங்கள் விமானப்புறப்பாடு. விமான கேட் அருகே நின்ற அதிகாரியைப் பார்த்தோம். போர்டிங் பாஸ்  பாஸ் போர்ட் காட்டி விட்டுப் புறப்பட்டோம். விமானக்கதவு வரை வீல் சேர் தள்ளிக்கொண்டு வந்த  இருவரிடம்

‘மீண்டும் தலா  நூறு ரூபாய்  என்று எடுத்துக்கொடுத்தேன்.

‘ இத நீங்களே வச்சிகுங்க’  அதே பதிலைச் சொல்லி விட்டுப்புறப்பட்டார்கள்.

ஆறு மணி நேர விர் விர்  பயணம். ஹாங்காங்க்  ஏர்போர்ட் வந்தது. இங்கு  கனெக்டிங்க் விமானம் மாற வேண்டும். அதுவும் கதே பசிஃபிக் நிறுவன விமானம் தான். ஹாங்காங்க்  ஏர்போர்ட்டில்  செக்யூரிடி செக் முடித்து லாஸேஞ்சலிஸ்க்குப்  புறப்படும்  விமானத்துக்கு வந்தோம். இங்கு  வீல் சேர்  உருட்டியவர்கள் சீனாக்காரர்கள் . அவர்கள் யாரும் எங்களிடம்  காசு கேட்க வில்லை. நான் டாலர் நோட்டுகள் சில தயாராய் வைத்திருந்தேன். கேட்டால் கொடுக்கலாம் என்று இருந்தேன். அவர்கள்தான்  கேட்கவில்லையே.

விமான அதிகாரிகள் இருவர் வந்து எங்களை விசாரித்து ‘ உங்களுக்கு இருக்கை மாற்றியிருக்கிறோம். இது கொஞ்சம் வசதியாய் இருக்கும்  அமர்ந்து பயணியுங்கள்’ என்றனர். போர்டிங் பாஸ் முன்பு கொடுத்ததை வாங்கிக்கொண்டு புதியதாய்த் தந்தார்கள். லாஸ் ஏஞ்சலிஸ் பயணம் இது பதிநான்கு மணி நேரப்பயணம். இப்போது  அலாட் ஆன  சீட்டுக்களோ ஒன்றன் பின் ஒன்றாக அடுத்த அடுத்த வரிசையில் இருந்தன. கால்கள் வைத்துக்கொள்ளச் சற்று இடம் கிடைத்தது. கடவுளின் ஆசீர்வாதம்.

‘சீட் மாத்திடணும் நாம  பக்கத்துல பக்கத்துல உக்காரணும் இல்லன்னா ரொம்ப சிரமம்’ என்றாள் மனைவி. நான் விமானப்பணிப்பெண்ணிடம் விபரம் சொன்னேன். அவர் எங்களுக்கு அடுத்த அடுத்த சீட் இருக்கிறமாதிரி யாரோ ஒரு  சப்பை மூக்கு மஞ்சள் வண்ணப்  பெண் மணியிடம் பேசி வாங்கித்தந்தார்.. நாங்களும் அப்படியே அடுத்த அடுத்த சீட்டுக்களில் ஒரே வரிசையில்  அமர்ந்து  கொண்டோம். லாஸேஞ்சலிஸ் விர் விர் பயணம் நீல நிற வெள்ளை நுரை பசிஃபிக் சமுத்திரத்தின் மீது தொடர்ந்தது.

 உணவு கொடுக்கும் பணிப்பெண்  எனக்கு  உனவு கொடுத்துப்போனாள். என் மனைவிக்குக் கொடுக்கவில்லை. அதுவும்  வரட்டுமே என்று காத்திருந்தாள். அது வந்தது.  எனக்கு வந்த பிளேட்டில்  என் மனைவிக்கு  வந்த உணவு போலில்லை. உணவாய் வந்த  எதற்கும் எங்களுக்குப் பெயர் தெரியாதுதான்.

‘இது   பாக்கட்  வேற  மாதிரி இருக்கு’

‘என் பேரு போட்டு ஒரு ஸ்லிப் என் பாக்கெட் மேல ஒட்டி  இருக்கு’

‘என் பிளேட்டுல  இருக்குற பாக்கெட்ல  என் பேரு போட்ட ஸ்லிப் எல்லாம் ஒட்டி  இல்ல’

விமானபணிப்பெண்ணை அழைத்து விபரம் கேட்டேன். ‘இரு வருக்கும் ஒரே மாதிரிதானே உணவு இருக்க வேண்டும்’ என்றேன்.

‘என் பிளேட்டில்  பெயர் இருந்தது. அவர் பிளேட்டில் அவர் பெயர் இல்லை’ என் மனைவி சொன்னாள்.

‘சீட் சேஞ்ச் பண்ணிகிட்டிங்களா’

‘ஆமாம்’

அப்ப உங்க பிளேட் அந்த நபர் கிட்ட போயிருக்கும்’

நான் சீட் மாற்றிக்கொண்ட அந்தப் பெண்ணைப் பார்த்தேன். அவர் தன் உணவை முடித்து விட்டு  ரெஸ்ட் ரூமுக்கு விரைந்து போனார்.

விமானப் பணிப்பெண் சிரித்துக்கொண்டார். ’சீட் உங்களுக்குள்ளாக மாற்றிக்கொண்டீர்கள். இந்த  விபரம்  விமான கேடெரெர் வரைக்கும் சென்று இருக்காது’

‘’ எனக்கு வந்த உணவு அந்தப்பெண்மணிக்குப்போனது. அவர் சாப்பிட்டாயிற்று. நான் சைவ உணவு மட்டுமே சாப்பிடுவேன். இப்போது என்ன செய்வது’

‘உங்களுக்கு வழங்கப்பட்டிருப்பது அசைவ உணவுதான்’

;அய்யோ’ என்றேன். ‘பணிப்பெண்ணிடம்  என் மனைவி ‘ இது அசைவம்.  எங்களுக்கு வேண்டாம்’ என்றாள்.

‘வெஜ்  மட்டுமேவேண்டும்’ என்றேன் நான்.

உங்களுக்கு வந்த வெஜ் உணவை  அந்தப்பெண் சாப்பிட்டு விட்டாள். உங்களுக்கு   நான்வெஜ்ஜே வழங்கப்பட்டுள்ளது’

‘நான் அசைவம்  தொட மாட்டேன்.’

விமான பணிப்பெண் புன்னகை செய்தாள்.  எங்கள் இடம் விட்டு நகர்ந்தாள்.

‘என் மனைவிக்கு வந்த சைவ  உணவை ஆளுக்கு ஒரு வாய் எடுத்துக்கொண்டு இரவு உணவு முடித்தோம்.

சீட் மாற்றிக்கொண்ட அந்தப்பெண்ணிடம்  விமான பணிப்பெண் நடந்து போன விஷயத்தை எடுத்துச்சொன்னாள். ‘  என் பெயர் போட்டு வரும்  அந்தச் சைவ உணவை  அவள் என்னிடம் ஒப்படைத்துவிடவேண்டும் என்றாள்.’

 எனக்கு வழங்கப்படும் உணவை அந்தப்பெண்ணிடம்   தரச்சொல்லி என்னிடம்  உத்திரவாய்ச் சொல்லிப்போனாள்.

அதற்குப்பிறகு  சப்பை மூக்குக்காரி  இரண்டு பெரிய ஆப்பிளையும் ஒரு ரஸ்க் பாக்கெட்டையும் என்னிடம் கொடுத்தாள்.

‘ஃபார் யூ ப்ளீஸ்’

‘ப்லெண்டி’ என்றேன்..

நான் வெஜ் சாப்பாடு பாக்கெட்டை அவளிடம் நீட்டினேன்.

‘சாரி ‘ என்றாள்.

அருகிருந்த விமானபணிப்பெண் அதனை  லபக்கென்று வாங்கிக்கொண்டாள். ’தாங்க் யூ’ இரண்டு முறை சொன்னாள்.

‘நல்ல காலம் பாக்கெட்டை பிரித்து சாப்பிடாமல் இருந்தீர்களே’ சொல்லிய மனைவிக்கு

‘ எனக்கு  இன்று சந்திராஷ்டமம் அதான் இப்படி எல்லாம்’  பதில் சொன்னேன்.

லாஸேஞ்சலிஸ் ஏர்போர்ட்   வந்தது. விமானத்தை விட்டு இறங்கினோம். வீல் சேர் வைத்துக்கொண்டு தயாராக நின்ற  இரண்டு கருப்புப் பெண்மணிகள் எங்களை அழைத்துக்கொண்டு போனார்கள்.  என் மொபைலில் வைஃபை வசதி கிடைக்கவில்லை. இளித்துக்கொண்டு நின்றது.

இம்மைக்ரேஷன் ஃபார்மாலிடிஸ் முடித்தோம். லக்கேஜ் யார்டு க்கு வந்து  கன்வேயரில் ஓடிக்கொண்டு இருந்த மூன்று சூட் கேஸ்களையும் எடுத்துக்கொண்டு   புறப்பட்டோம். தூண்கள்  அடர்ந்து காணப்படும் ஏர்போர்ட்  வெளி கேட் டுக்கு வந்தோம். சுற்றும் முற்றும்  நோட்டம் விட்டுப் பார்த்துக்கொண்டே வந்தேன்.

என் பெரியபையனும் மருமகளும் பேரக்குழந்தையொடு எங்களுக்காகக் காத்திருந்தார்கள்.

‘யோர் பீபல் ஷூர்’

ஆம் என்றேன்.  வீல் சேர்  தள்ளி வந்த  கருப்புப் பெண்கள்  எங்களுக்கு நன்றி சொல்லிப் புறப்பட்டார்கள்.  .காசு  எதுவும் எதிர் பார்க்கவும் இல்லை நாங்களும் கொடுக்கவில்லை.  நாங்கள் எங்கள் பையன் காரை நோக்கி நடந்து சென்றோம்.

வழி மறித்துக்கொண்டு எந்த டாக்சி டிரைவரும் சென்னை ஏர்போர்ட்  மாதிரி வம்பு பண்ணவில்லை. கூட குறைய சொல்லவில்லை. நான்  நடந்தது மட்டுமே சொன்னேன்.

------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 


No comments:

Post a Comment