Wednesday, September 18, 2024

குறுநாவல் - கொடுப்பினை

 

கொடுப்பினை    குறுநாவல்                                                                                                                        

   வனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவன் பெயரைச் சொல்லித்தான் அழைத்தார்கள்..’ நாளை மாலை என்னுடைய  திராவிடம் லாரி  ஏஜன்சீஸ் அலுவலகத்துக்கு சரியாக ஆறு மணிக்கு வர்ரீங்க,   என்னைச் சந்திக்கறீங்க’. அழைத்தது யார்?  அவன் யோசித்தான். அவருக்கும் அவனுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை.    இந்த நகரத்தில் அவனை   வரச்சொல்லி அழைத்திருக்கும் அந்த நபர்  ஒரு முக்கிய புள்ளி.   மிகப்பெரிய அளவில்  அவர் லாரி  ஏஜன்சி வைத்துத் தொழில் செய்து வந்தார்.

வட்டத்தின்  தலைநகரம் இது. இந்த நகரத்தின்  மைய்யமாய்  ஒரு ஆறு ஓடுகிறது. எப்போதேனும்  அதனில் செம்பட்டைத் தண்ணீர் வெள்ளமாய்ப்போகும்.  அந்த ஆற்றின் மீது பிரிட்டீஷார் எப்போதோ கட்டியுள்ள பாலம் இருகூறாய்ப்பிரிந்து கிடக்கும்  இந்நகரை இணைத்து அழகு பார்க்கிறது. ஆற்றின் மேலண்டைக் கரையில் புராதன  சிவாலயம்  வானாளவிய கோபுரங்கள் சிலவோடு நின்றுகொண்டிருக்கிறது. பாலத்தின் கீழண்டைக்கரையில்தான்  அவனை  வரச்சொல்லி   அழைத்த அந்த முக்கியப் புள்ளியின்  லாரி அலுவலகம் இருந்தது.

இந்தப் பக்கத்து விவசாயிகள் எண்ணெய் வித்துக்களை உற்பத்தி செய்து மொத்தமாய்க் கட்டை வண்டியில் கொண்டுவருவார்கள். விற்பனைக்கு என்று டோக்கன் வாங்கி  இவ்வூர் கமிட்டியில் வைப்பார்கள். அதனை’ மல்லாட்ட கமுட்டி’ என்று ஊர் மக்கள் செல்லப்பெயர் வைத்து அழைத்தார்கள்.

 மணிலாகொட்டை  என்கிற  வேர்க்கடலை வியாபாரமே எத்தனையோ காலமாய் இவ்வூரில் பிரசித்தம்.  தமிழகத்தில் எண்ணெய் வித்துக்கள்  மொத்தமாய் வியாபாரம் செய்யும் புகழ் பெற்ற கமிட்டிகளில் இவ்வூர் கமிட்டியும் ஒன்று.கோயம்புத்தூர் திருப்பூர்  பல்லடம் காங்கேயம் ஈரோடு பக்கத்து வியாபாரிகள் இக்கமிட்டியில் அதிகமாய்  வணிகப்புழக்கத்தில் இருந்தார்கள்.

எதற்காக  அந்தப்பெரிய மனிதர் அவனை  அவர் அழைத்தார் என்பது மட்டும் அவனுக்கு விளங்கவில்லை. அவனுக்கு உள்ளூர் தொலைபேசியகத்தில் வேலை.தொலைபேசி சேவையில் இத்தனை அசுர வளர்ச்சியை இப்போதுதானே காணவாய்க்கிறது. அன்று  கனக்கும் கருப்புத்தொலைபேசியை கையில் எடுத்துக்கொண்டு உள்ளூர் தொலைபேசியைத் தொடர்பு கொள்ளவே காத்திருக்க வேண்டும்.

 ’நம்பர் ப்ளீஸ்’ என்று ஓர் குரல் தொலைபேசியகத்தில் இருந்து கேட்கும்.  நீங்கள்  உங்களுக்குத் தேவையான எண்ணைச்  சொல்லவேண்டும்.அந்த எண்ணுக்கு ரிங்க் கொடுத்து உங்களுக்கு  தொலைபேசி இணைப்பு  கொடுப்பார்கள். தொலைபேசியில் சம்பாஷணை முடிந்த பின்னே இருவரும்  டெலிபோனை அதனதன் இருப்பில் வைத்துவிடுவார்கள். தொலைபேசியகத்தில்  உள்ள  இணைப்புத் தளத்தில்  இருவரும் போனை வைத்துவிட்டதற்கான சிறு மின் விளக்கு எரியும்.  டெலிபோன் ஆப்ரேட்டர்  அவர்கள் இருவரின் இணைப்பைத்துண்டித்துவிடுவார்.அவ்வளவே.

வெளியூர் தொலைபேசி, வெளிநாட்டுத்தொலைபேசி  இவை ஏதும் தேவை என்றால் டிரங்கால், ஓவர் சீஸ் கால் புக் செய்யவேண்டும். டெலிபோன் ஆப்ரேடர்கள் போன் புக் செய்தவர்களை அழைப்பார்கள் அவர்களுக்கு டிரங்கால் இணைப்பைக் கொடுப்பார்கள். போன் பேசும் போது  ஒலி கூடும், குறையும் குரைக்கும், குளறும், நின்றே போகும் அடுத்தவர் குரல் இடை கேட்கும் எல்லாமும்தான்.  இந்தநகரிலும் தொலைபேசி சேவை அப்படித்தான் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அவன்  அவன் வேலை பார்க்கும் தொலைபேசியகத்தில் ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்ததாய் அவனுக்கு அவன் நண்பர்கள் சேதி சொன்னார்கள்.அந்த  நம்பர் ப்ளீஸ் தொலைபேசி நிலையத்தில் நல்ல பிசி நேரம்.  அது எப்போதும்  பதினோரு மணிக்கு ஆரம்பிக்கும் மதியம்  ஒன்று வரை நீடிக்கும்.

 திராவிடம் லாரி ஏஜன்சீஸ் ஓனர் போனை எடுத்து ‘டிரங்க் புக்கிங்’ வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.புக்கிங்  ஜங்க்‌ஷன் அனைத்துமே உபயோகத்தில் இருந்ததனால்’எங்கேஜ்டு ப்ளீஸ்’ என்று சொல்லி  ஒரு நிமிடம் காத்திருக்குமாறு  அவருக்குப் பதிலும் தரப்பட்டிருக்கிறது.

வாடைக்கையாளர் இப்படிச் சொல்லி இருக்கக்கூடாதுதான் ஆனாலும்  அவருக்கு  அங்கு  என்ன சூழ்நிலையோ, என்ன நெருக்கடியோ,

‘புக்கிங்கில என்னாத்த  புடுங்குறானுவ இம்மாம் நேரமாவுது’

அந்த லாரி ஏஜன்சீஸ் உரிமையாளர் சொல்லியிருக்கிறார். இந்த வார்த்தையைக்கேட்ட  அந்த டெலிபோன் ஆப்ரேட்டர்   உணர்ச்சி வயப்பட்டு, ‘நீங்க எப்பிடி புடுங்குவிங்களோ அப்பிடிதான்’ என்று அதற்கு உடனே பதில் தந்து விட்டார். தவறுதான். என்ன செய்வது  எல்லோரும் மனிதர்களே.

அவ்வளவுதான் சற்று நேரத்திற்கெல்லாம் ஒரு லாரியில் பத்து ஆட்களுக்கு ஏறிக்கொண்டு டெலிபோன் எக்சேஞ்ச் வாயிலுக்கு  வந்திருக்கிறார்கள். லாரியை விட்டிறங்கிய அவர்கள், ‘யாருடா அது எங்க அய்யாவ மரியாதை இல்லாம பேசுனது’ என்று  கூச்சலிட்டுக்கொண்டு நின்றார்கள்.

’ப்ரொஹிபிடெட் ஏரியா, டிரெஸ்பாஸெர்ஸ் வில்  பி  ப்ரொசிகூடெட்’  என்கிற  அறிவிப்புப்பலகையைக்காட்டி தடுத்து நிறுத்திய தொலைபேசி நிலையக் காவலாளியை ‘போய்யா  பெரிசா வந்துட்ட இங்க’  என்று  சொல்லி  அப்புறப்படுத்திவிட்டு ஆக்ரோஷமாய் சத்தமிட்டனர். கும்பலாய் வந்த அவர்களை அலுவலக மேற்பார்வையாளர்கள், பொறியியல் அதிகாரிகள் சமாளித்து அனுப்ப சிரமப்பட்டார்கள். ‘தகாத வார்த்த பேசுனவன அடையாளம் காட்டுங்க நாங்க ஒரு கை  பாத்துக்கறம்’’ அவன யாருன்னு தெரிஞ்சிக்காம இங்கேந்து நவுறமாட்டம்’ திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.

’நீங்க லாரி எடுத்துகிட்டு, ஆட்கள அழச்சிகிட்டு இந்த ஆபிசுக்கு வந்து மெரட்டறது மொறயில்ல. எதுவா இருந்தாலும் கம்ப்ளெயிண்ட் லெட்டர் குடுங்க. நாங்க நடவடிக்கை எடுக்கறம், இது  தடுக்கப்பட்ட  ஏரியா இங்க,  நீங்க வந்து சத்தம் போடறது ரொம்ப தப்பு’ என்று சமாதானம் பேசி அதிகாரிகள் வந்தவர்களை அனுப்பி வைத்தார்கள். தொலைபேசி நிலையத்தில் இருந்து  அப்படிப்பேசிவிட்ட  அந்த டெலிபோன் ஆப்ரேட்டரும் பணியில்தான் இருந்தார்.

அவனோ  அன்று பணிக்குச்செல்லாமல் விடுப்பு எடுத்திருந்தான்.  அவனுக்கு  ஒரு முக்கியமான வேலை. அந்த நகரத்து புறநகர்ப்பகுதியில் மனை ஒன்று வாங்க ஏற்பாடாகியிருந்தது. அந்த மனையின் கிரையப்பத்திரம்  அன்றுதான் ரிஜிஸ்டர் செய்யப்பட்டது.  அவன் மறுநாளே வேலைக்குப்போனான்.  தொலைபேசி நிலையத்தில் முதல் நாள் நிகழ்ந்துவிட்ட இந்தப்பிரச்சனை குறித்து  அவன் மறுநாள்தான் தெரிந்துகொண்டான். அவனுக்கும் அந்த நிகழ்வுக்கும் துளிக்கூட தொடர்பு இல்லை.

ஆனாலும் அந்த லாரி ஏஜன்சி ஓனர் அவனை ஏன் அவர் அலுவலகத்துக்கு கூப்பிட்டு இருக்கிறார் என்பது பெரிய விஷயமானது. அவர் லாரி அலுவலகத்துக்கு போகாமல் அவனால் இருக்க முடியுமா, அது இன்னும் பிரச்சனையை சிக்கலாக்கிவிடாதா என்கிற யோசனை வேறு. இது குறித்து அவன் யாரோடும் விவாதிக்கவில்லை. விவாதிக்க அச்சமாகவும் சங்கடமாகவும் உணர்ந்தான். அன்று மாலை பணி முடித்து வீடு திரும்பும் சமயம் அச்சத்தோடே படபடப்பாய்  இருந்தான். அவன் தினமும் அலுவலகத்துக்கு சைக்கிளில்தான் வந்து போவான். அந்த லாரி ஏஜன்சிக்காரரின்  அலுவலகம் தாண்டித்தான் அவன் தன்  வீட்டுக்குச்செல்லவும் வேண்டும். நகரின் பிரதான கடைத்தெரு தாண்டினான். நகரின் மய்யமாய் இருக்கும் ஆற்றுப்பாலம் தாண்டி வலதுபுறம் திரும்பினான். அந்த லாரி ஏஜன்சியின் அலுவலக வாயிலில் சைக்கிளை நிறுத்தினான்.

திராவிடம் லாரி ஏஜன்சியின் ஒனர் கடை வாயிலில் நின்றுகொண்டிருந்தார். மணி ஆறு. மாலை நேரம். வெள்ளிக்கிழமை என்பதால் சுவாமி படங்களுக்கெல்லாம் மாலை அணிவித்து கற்பூரம் காட்டிய ஒரு ஊழியர் கற்பூரத்தட்டை எடுத்து வந்து முதலாளியிடம் காட்டினார்.

‘யாரு டெலிபோன் ஆப்ரேட்டரா’

‘வணக்கம் சார். டெலிபோன் ஆப்ரேட்டர்தான்’

கற்பூரதட்டில் எரிந்துகொண்டிருந்த கற்பூரத்தைத்தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டார். சிறிது திருநீறு எடுத்துத்தன்  நெற்றியில் இட்டுக்கொண்டார்.

‘வந்திருக்கரவருக்கும் காட்டு’ என்றார்.

அவனும் சிறிது திருநீறு எடுத்து நெற்றியில் அனிந்துகொண்டான்.

‘இன்னிக்கி வெள்ளிக்கிழமல்ல அதான்’

என்றார் லாரி ஏஜன்சி ஓனர்.

அவன் லாரி ஷெட்டிற்குள்ளாய் நுழைந்து அமர்ந்துகொண்டான்.

‘உம்ம பேரு சொல்லும்’

‘சந்திரன்’

‘சரிதான், நேற்று என்னா நடந்துது உங்க ஆபிசுல’

‘கேள்விப்பட்டேன்’

‘என்ன கேள்விப்பட்டேன்’

’என்ன நட ந்துதுன்னு கேள்விப்பட்டேன்’ அவன் பதில் சொன்னான்.

’நேற்று மதியம் பதினொரு மணிக்கு நா போன் எடுத்தேன். டிரங்க் புக்கிங் கேட்டேன். நீம்புருதான் தடிச்ச வார்த்தையில பேசுனதா’

அவன் மவுனமாய் இருந்தான். ஏதோ விபரீதம் நடந்துதான் இருக்கிறது அத்தனையும் அவனுக்கு சொல்லிதான் இருக்கிறார்கள்.

‘நான் இல்லிங்க’

‘என்ன இல்லிங்க’

‘நானு நேத்து ஆபிசுக்கு லீவு போட்டு இருந்தேன்’

‘அப்பிடி போவுது கத’ நக்கலாய்ச் சிரித்தார்.

‘ நேத்து நா வாங்குன மனைக்கு  ரிஜிஸ்ட்ரேஷன்’

‘எங்க மன வாங்குனீரு’

‘பூதாமூர்ல, அவுசிங்க் போர்டுக்கு கிழக்கால’

‘யாருகிட்ட’

‘வள்ளல்ங்கறவர்தானே பூதாமூர் அந்த ஏரியாமுச்சூடும்   கள்ளக்கா வெளயற புஞ்ச வயலை எல்லாம் அசமடக்கி ஏஜண்ட்டா இருந்து   மனபோட்டு விக்கிறாரு. அவுருகிட்டதான்’

‘அப்ப நீரு அந்த தடிச்ச வார்த்த பேசுல, நீருதான்   அப்பிடி பேசுனதா  எனக்கு   நம்பிக்கையான   ஒங்க ஆபிசு ஆளு  சொல்லிச்சு’

‘தப்பா சொல்லியிருக்காங்க’

‘நீ ரோக்கியருன்னு வச்சிகுவம், ஆருகிட்ட பேசுனா உம்ம   வரலாறு எனக்குப் புரியும் நீரே சொல்லுமே’

‘ சாமி  டாக்டர் கிட்ட கேளுங்க’

‘டாக்டர் சாமி ரயில்வே ஸ்டேஷன் ரோடுல ஒரு ஆஸ்பத்திரி வச்சிருக்காறே அவருதானே’

‘ஆமாம்’

‘அவர எப்பிடி உங்களுக்கு தெரியும்’

‘அவுரும் நானும் ஒரே ஸ்கூல்ல படிச்சம்’

‘ஒரே ஸ்கூல்னா’

‘ அவரு என்னைவிட ஒரு வகுப்பு கூட படிச்சாரு’

‘அவரு தம்பி வெங்கடாசலம்  என் வகுப்பில படிச்சாரு இப்ப நியூயார்க்ல சந்திரா கம்ப்யூட்டர்ஸ்னு ஒரு கம்பெனி வசிருக்காரு’

‘எந்த ஊரு ஸ்கூல்ல படிச்சிங்க’ 

‘வளையமாதேவி, கம்மாபுரம் தாண்டுனா சிறுவரப்பூர் சாத்தப்பாடி கத்தாழை அகரம்னு வரும். பெறவு வர்ர தருமநல்லூரருக்கு அடுத்தாப்புல இருக்குது வளையமாதேவி’

‘பஸ் கண்டக்டர் ஊரு பேரு சொல்றமாதிரி வரிசையா  சொல்லுறீரு’

‘அவுரு ஊரும் என் ஊரும் பக் கம் பக்கம்’

’அவுரு போன் நெம்பர் என்ன சொல்லுமே’

‘321’ பட்டென்று சொன்னான்.

லாரி ஏஜன்சீஸ் ஓனர் டாக்டருக்குப் போட்டார். ’டாக்டர்   ஒரு  சின்ன தொந்தரவு,   நானு பாலக்கரை  திராவிடம் லாரி ஏஜன்சீஸ் ஓனர் பேசுறேன். உங்களுக்கு டெலிபோன் ஆப்ரேட்டர் சந்திரன தெரியுமா’

‘ஏன் தெரியாம, நல்லாதெரியுமே.அவரு குடும்பமே எனக்கு தெரியும், நல்ல மனுஷங்க, தருமநல்லூர் பஞ்சாங்க அய்யிரு பையன்’

‘அந்த சந்திரன் இப்ப  என் மின்னாலதான் என் ஆபிசுல உக்காந்து இருக்காரு’

‘என்ன சேதி’

‘நேத்து ஒரு ஆசாமி டெலிபோன் ஆபிசுல என்கிட்ட கொஞ்சம் ரப்பா பேசிட்டாரு. அது சந்திரன்னு எனக்கு சேதி. அதான் கூப்பிட்டு வெசாரிச்சிகிட்டு இருக்கன்’

‘உங்களுக்கு தப்பா தகவல் சொல்லியிருக்காங்க, அந்த தம்பி அப்பிடிபட்டவரு இல்லே. வேற யாரு அதுன்னு பாருங்க, அந்த ஆபிசுல சங்கம் ரெண்டு இருக்குதுன்னு கேள்வி.   எந்நேரமும் எதாவது பிரச்சனை. ஒரு சங்கத்துக்காரரு டீ குடிச்ச  கடையில அடுத்த சங்கத்துக்காரரு குடிக்கமாட்டாரு. ஒத்தரு மருந்து மாத்திர வாங்குற கடையில் அடுத்த சங்கத்துக்காரரு வாங்கமாட்டாரு. ஆனா எப்பவும் தொழிலாளர் ஒத்துமை ஓங்குகம்பாங்க. கத்தி கத்தி  கோஷம் போடுவாங்க. அவாளுக்குள்ள இருக்குற சண்டய வச்சி யாரும் உங்ககிட்ட இப்பிடி சேதி சொல்லியிருப்பாங்க’

‘ஓ அப்பிடி போவுதா கத அப்ப கொஞ்சம் ஆழமாதான் வெஷயத்தை பாக்குணும்’

‘நா வச்சிடறேன்’ டாக்டர் சட்டென முடித்துக்கொண்டார்.

அப்படியே அமைதியாக உட்கார்ந்திருந்தார் லாரி ஏஜன்சீஸ் ஓனர். அவன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான்.

பெரியார் போக்குவரத்துக்கழக கண்டக்டர் ஒருவரும், பாஸ்கர் பஸ்சர்வீஸ் கண்டக்டர் ஒருவரும்  லாரி ஆபிஸ் வாயிலில் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களுக்குள்  பஸ்ஸுக்கு  சீட்டு ஏற்றுவதில் சண்டை. அது அடிதடியில் முடிந்து விட்டிருக்கிறது. அவர்களுக்குள் ஒரு சமரசம் ஏற்படத்தத்தான் லாரி ஏஜன்சீஸ்க்கு வந்திருக்கிறார்கள்.

‘கவர்மெண்ட் பொழக்கைணுமா இல்லெ கவுண்டர் பொழக்கணுமாங்கறதுல சண்ட. நாயுவ  ரெண்டும் பெரிய  பஸ் ஸ்டேண்ட்டுல கட்டி புடிச்சி பெறண்டு இருக்கானுவ’ லாரி ஏஜன்சீஸ் ஓனர்  சொல்லிக்கொண்டார். அவன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான்.

‘வாரும் உள்ளார வந்து பாரும்  எக்சேஞ் காரரே’ அவர்தான் அவனை அழைத்தார். டெலிபோன் எக்சேஞ்சில் அவன் வேலை செய்வதால் அவனை எக்சேஞ்ச் என்று பெயர் சூட்டி அழைத்தார். லாரி ஷெட்டில் திருப்பதி ஏழுமலையான் படம் பெரிய சைசில் மாட்டப்பட்டிருந்தது. ஏழுமலையான்  படத்தின்  சட்டத்திற்கு சந்தனப்பொட்டு அழகாக வைத்திருந்தார்கள். சந்தனத்தின் மீது குங்குமப்பொட்டும் கச்சிதமாய்  வைத்திருந்தார்கள். பெருமாள் படத்திற்கு அடுத்தபடியாய் ஒரு சந்தன மாரியம்மன் செடல் உற்சவ போட்டோவும் மாட்டப்பட்டிருந்தது. அதனுள்ளாக வேப்பிலைக்கரகம் தூக்கிக்கொண்டு இரண்டு கையிலும் சிலம்பு வைத்துக்கொண்டு லாரி ஏஜன்சீஸ் ஓனர்தான் தெய்வக் களை தெரிய காட்சியானார்.இடுப்பில் சிவப்பு பட்டு கீழ் பாய்ச்சியாகக் கட்டியிருந்தார்.

‘என்ன சாரு பாக்குது’

‘அய்யாவதான் தலையில கரகத்தோட பாக்குறேன்’

’ஏன் இப்பதான் பாக்குறீரா’

‘ஆமாம் சார்,இப்பதான் பாக்குறேன்’

’கோவிலு கொளம்னு போறதுண்டா  இல்ல  சொம்மா வெறுவாலியாதான் காலம் ஓடுதா’

‘அப்ப அப்ப கோவிலுக்கு  போறதுண்டு’

‘ என்ன அலட்சியமா பேசுறீரு. இந்த ஊர்ல குப்ப கொட்டி பொழக்கிறீரு, இந்த ஊர்  கோவிலு சாமிவுள தெரியுமா இல்ல  இல்ல மெதப்புமேலதான்  போவுறது வர்ரதா’

‘இல்ல சார் கோவிலுக்கு போறதுண்டு’

‘ஒண்ணும் விசுவாசமா சாமி கும்பிடறமாதிரி தெரியல’

‘அப்படி எல்லாம் இல்லங்க’

‘என்ன நொள்ளங்க’

அவனுக்கு மரியாதை  சட்டென்று குறைந்து போனதை அவனே உணர்ந்தான்

‘கொஞ்சம் பின் பக்கமா வரீறா’

அவனைத்தான் லாரி ஓனர் அழைத்தார். அவன் தயங்கித்தயங்கி பின் பக்கமாய்ச் சென்றான்.அவனுக்கு அச்சமாக இருந்தது. லாரி ஏஜன்சீஸ் ஓனர் கம்பீரமாய்  முன்னே நடந்துகொண்டிருந்தார்.

‘இங்க கொஞ்சம்  வாரும் பாரும்’

இரண்டு ரூம்கள் தனித்தனியே பூட்டிக்கிடந்தன. ஒவ்வொன்றாய் அவர் திறந்தார். முதல் ரூமுக்குள் நுழைந்தார்.

‘வாய்யா டெலிபோன் ஆப்ரேட்டரே’

அவன்  கைகால்கள் நடுங்க உள்ளே சென்றான். உள்ளே  சலூன் கடை கட்டைச்சுழல் நாற்காலி போடப்பட்டிருந்தது. எதிரே  முகம் பார்க்கும் கண்ணாடி பெரிதாக மாட்டப்பட்டிருந்தது. தடிகள் சிறியதும் பெரியதுமாக இரண்டு மேலிருந்து தொங்கிய கயிற்றில் மாட்டப்பட்டிருந்தன. முகப் பவுடர்  விபூதி குங்குமம்  பிளாஸ்டிக் சீப்பு ஒரு டவல் என வரிசையாக கண்ணாடி முன்பாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. வாஷ் பேசின் ஒன்று சோப்பு இத்யாதிகளோடு தயாராய் கண்ணில் பட்டது. எதிரே பாத் ரூம் ஒன்று பளிச்சென்று இருந்தது. விநாயகர் சிலை ஒன்று சிறிய அளவில் அறையின் மய்யமாய் வைக்கப்பட்டிருந்தது.

‘என்னங்க சார்’

‘அரசாங்க அதிகாரி எவனாவது  எனக்கு  குறுக்கு சாலு ஓட்டுனானா அவன இங்க வரவழிச்சி இந்த சுழல் ஆசனத்துல உக்கார வச்சி நாலு சாத்து நறுக்கா சாத்துவன். ஒவ்வொரு நபராத்தான்  இந்த மண்டகப்படி நடக்கும். பூச முடிஞ்ச பிறவு மூஞ்ச கழிவிகினு, டவல்  தொங்கிகிட்டு இருக்கு  நல்லா  மொகத்த தொடச்சிகினு  சீப்பால  தலய சீவிகினு பூதர மாவு பூசிகினு  விவிதி கொங்குமம் வச்சிகினு   வெளிய வந்துடலாம். மண்பானையில் குடிக்கும் தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது. வர்ர ஆசாமிய சும்மா வுட்டுட மாட்டேன். சாப்பாட்டுக்கும் காசு குடுப்பேன் மேங்கொண்டு எதுகேட்டாலும் உண்டுதான்’

அவன் அந்த சுழல் நாற்காலியைப்பார்த்துக்கொண்டான். தொங்கும் கயிற்றில் பிணைந்திருக்கும் இரண்டு தடிகளையும் பார்த்துக்கொண்டான். இதயம் திக் திக் என்று அடித்துக்கொண்டது.

‘அப்பிடியே செத்த அடுத்த ரூம்பையும் பாரு சாரு’

அந்த அறையின் கதவு திறக்கப்பட்டது.

‘உள்ளாற போய் பாரும் நீரும் பலானதுன்னா என்னன்னு  தெரிஞ்சிகணும் இல்லையா’

அவன் அந்த அறைக்குள் நுழைந்தான். சுழல் நாற்காலி இல்லை. ஒரு பெஞ்ச் மட்டும் நடுவாய்க்கிடந்தது. இரண்டு தடிகள் ஒரே அளவில் கயிற்றில் கட்டப்பட்டு தொங்கிக்கொண்டிருந்தன. மண் பானையில் குடிக்கத்தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது.

‘இவ்விடத்துக்கு வர்ர ஆளுவ  கையி ரெண்டையும் கட்டிபுட்டு  பெஞ்சில குந்த வச்சிடுவன்.பெறவு அடி வுழுவும். பூசை முடிஞ்சிதின்னா  செம்பு தண்ணி குடுப்பன். குடிச்சிட்டு மொகத்த கழுவிகிட்டு ரூம்ப வுட்டு போயிடவேண்டியதுதான். சாப்பாட்டு காசு குடுத்துதாம் அனுப்புவேன்.  யாரையும்  வவுத்து பசியோட அனுப்ப மாட்டேன்’

‘இந்த ரூம்பு யாரு யாருக்கு’ வாய் குழறிக் கேட்டுவிட்டான்.

‘வேட்டி கட்டிகிட்டு வர்ரவன் ஆராயிருந்தாலும் சரி அவனுக்கு இந்த ரூம்புதான், கவர்மெண்ட் காசி எதுவும்  சம்பளமா வாங்காதவனா இருக்கணும் அவ்வளவுதான். ’

’அந்த ரும்பு’

’முழுகை சட்டை, முழுகால் பேண்ட் போட்ட உத்யோகஸ்தனுவ,   பள்ளிக்கூட காலேஜி வாத்தி மாருங்க, அரசாங்க ஆபிசருவ,, இவங்களுக்கு படையல் போடத்தான் அந்த ரூம்பு’

அவன் கண்கள் ஈரமாகியது. அவைகளைத் துடைத்துக்கொண்டான்.

‘தண்டனை குடுக்கறதுலயும் வர்ணபேதங்க இருக்கத்தானே செய்யும்’

அவன் பதில் ஏதும் சொல்லாமல் அந்த ஆபிசின் முன்பகுதிக்கு வந்தான். கண்டக்டர்கள் இருவரும் இன்னும் வெளியில் நின்றுகொண்டிருந்தார்கள். இருவரும் முழுக்கால் சட்டை அணிந்து வந்திருந்ததைப் பார்த்துக்கொண்டான்.

‘கொஞ்சம் பதனமா இருந்துகறது உமக்கு  நல்லது. போய் வாரும் எக்சேஞ்சு’ லாரி ஏஜன்சீஸ் உரிமையாளர் அவனுக்கு உத்தரவு கொடுத்தார்.

‘டாக்டரு புண்யம் கட்டிகினாரு இல்லன்னா மொத ரூம்புதான்’ லாரி ஏஜன்சீஸ் ஓனர் சன்னமாய் சொல்லியது அவன் காதில் விழாமல் இல்லை.

‘கண்டக்டருவ உள்ள வருலாம்’ சொல்லிய  அந்த அலுவலக சிப்பந்தி அந்த இருவரையும் அழைத்துக்கொண்டுபோய்  அந்த அலுவலகத்தின் மய்யப்பகுதியில் நிற்க வைத்தார்.

‘கண்டக்டருங்களுக்கு வாயும் டிரைவருவுளுக்கு கையும் சும்மாவே இருக்காது’ சொல்லிய லாரி ஏஜன்சீஸ் ஓனர் அந்த இருவரையும் முதல் அறைக்குப்போக உத்தரவிட்டார்.

இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பாராமலேயே தலை கவிழ்த்தபடி அந்த அறைக்குள் நுழந்தனர்.

’ ஒத்தர் ஒத்தரா ரூம்புவுள்ள வருணும்’

இருவரும் தயங்கித்தயங்கி அறைக்கு வெளியே  வந்துநின்றுகொண்டனர்.

அவன் அவர்களைப்பார்த்துக்கொண்டே தன்  சைக்கிளை அங்கிருந்து  நகர்த்தினான். சாலையில் மாடுகள் கூட்டம் கூட்டமாகச் சென்றுகொண்டிருந்தன.அவை கிடை மாடுகள். மேல் சட்டை அணியாது தலையில் முண்டாசு கட்டிக்கொண்டக்  கோனார்கள் மாடுகளைப் பெண்ணாடம் நோக்கி ஓட்டிச்செல்வதாய்ப் பேசிக்கொண்டார்கள்.மாடுகள் ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு சென்றன.சில தாயும் கன்றுமாகச் சென்றுகொண்டிருந்தன. நகரின் மணிலா மார்க்கெட் கமிட்டி  வாயிலில் வரிசையாக லாரிகள் நின்றுகொண்டிருந்தன. அவைகளில் மூட்டைகளை ஏற்றி இறக்கிக்கொண்டு சில தொழிலாளர்கள் மும்முரமாக வேலைசெய்தனர். அவர்கள் எழுப்பும் ஒலி அவ்வப்போது  அவன் காதைப்பிளப்பதாய்  இருந்தது. சிதம்பரம் செல்லும் சாலையில் திரும்பினான். பூதாமூர்  அவுசிங்க் போர்ட் செல்லும் கப்பிச்சாலையில்  சைக்கிளை மிதித்துக்கொண்டு போனான்.

அவ்வூர் அரசு நூலகத்தில் பணிபுரியும் எழுத்தர் அவனின் நண்பர். அவர் அவுசிங் போர்டு வீட்டில்தான் குடியிருந்தார். கையில் ஒரு சாக்குப்பையோடு பேருந்து நிறுத்தத்தில் காத்துக்கொண்டு நின்றார்.

‘என்ன சந்திரன் எப்பிடி இருக்கிங்க’

‘சவுகரியம்தான், ஆமாம் ஐய்யா எதுவரைக்கும் பயணம்’

‘ஊறுகா போடுறதுக்கு மாவடு வேணும்னு வீட்ல கேட்டாங்க, பெரியார் நகரு தாண்டி இருக்குற  முந்திரி பண்ண ஆபிசுல  மாமரம் இருக்குது.  அந்த  மாமரத்துல நேத்தி ஒருமரம் வுழுந்துபோச்சி. நேத்தி சூரக் காத்து அடிச்சிது அதுலதான்.   பிஞ்சுவ ஏகத்துக்கு இருந்துச்சாம் . நானும் ஒரு எட்டு போய்  கெடச்சவரைக்கும் கொண்டாந்துள்ளாம்னு பாக்குறேன்’

‘இருட்டி போச்சுது’

‘கரண்டு லைட்டுவ பகலா எரியுது பெறகு என்ன’ நூலகர் பதில் சொன்னார்.

‘நேத்தில்ல  மரம் வுழுந்திருக்கு, இந்நேரம் வெறும் மரந்தான் அங்க  கிடக்கும், இல்ல அது கூடம் இருக்காது’ அவனுக்குத்தெரிந்ததைச் சொன்னான்.

‘அங்க வாட்ச்மென் எனக்கு வேண்டியவரு. என் கூட்டாளிதான். மாம்பிஞ்சிங்க பறிச்சி வச்சிருக்கேன். வான்னு சொல்லியிருக்காரு அதான் போறன் அவுர மீறி யாரும் ஒண்ணும் செய்ய வைக்காது’

‘சரி போய் வாங்க’

அவன் சைக்கிளை மிதித்துக்கொண்டு தன் வீடு நோக்கிச்சென்றான். பூதாமூர் அவுசிங் போர்டுக்கு கிழக்கே திருவள்ளுவர் நகர் மூன்றாவது தெருவில் அவன் வீடு. அவன்  மனைவி அவன் வருகைக்காக காத்துக்கொண்டே இருந்தாள்.

‘டூட்டி முடிஞ்சா நேரா   வீட்டுக்கு வருணும்னு வரமாட்டிங்க’

’ஏன் இப்ப என்ன ஆயி போச்சி’

‘இருட்டி போச்சி கரண்டு இல்ல வூட்டுல’

’கரண்டு இல்லயா’

‘தெருவுல எல்லார் வீட்டலேயும் லைட்டு எரியுது நம்வீட்டுலதான் எரியுல. கரண்டு இல்ல’

‘அப்பிடியா சேதி’

அவன் சைக்கிளை சுவர் ஓரமாக சாத்திவைத்துப் பூட்டினான்.  வீட்டு வாயிலில் இருக்கும்  சுவிட்சுகளைப் போட்டு போட்டுப் பார்த்தான்.

‘இது என்ன துன்பமோ’

‘பாப்பம்’

‘அரிசி ஊறபோட்டுறக்கன். அரைக்கணும்’

‘அப்பிடிபோடு, தருவி தருவி பேசும்போதே தெரிதே’

‘நா  அரிசி பருப்பு ஊற போடும்போது கரண்டு இருந்துதே’

‘கரண்டுன்னா அப்பிடிதான் கடவுளு மாதிரி’

வீட்டில் மீட்டர் போர்டு அருகே இருந்த ஃப்யூசை பார்த்தான். அது சரியாகவே இருந்தது. அவன் வீட்டின் முன்னால் இருக்கும் கரண்டு மரத்தில் ஏதேனும் கோளாறு இருக்கலாம். அதனை சரி செய்ய ஈபி ஆட்கள்தான் வரவேண்டும். அவர்களுக்கு சேதி போகவேண்டும். எதுவும் மறுநாள்தான் சரி ஆகும்.

‘அரிசி பருப்பு ஊற போட்டன் அத என்ன செய்ய

‘அக்கம் பக்கத்துல செத்த கேட்டு  பாரு. இல்லன்னா நா பெரியார்நகர் போவுணும் அங்கதான் போயி மாவு அரச்சிகிட்டுவரணும்’

‘அந்தக்கதய நா பாக்குறேன்’ அவள் அவனுக்குப் பதில் சொன்னாள்.

‘அப்புறம் ஒங்கிட்ட ஒரு சேதி. நேத்தி நாம ரிஜீஸ்தர் வச்சிருந்தம்.  நானு ஆபிசுக்கு லீவு போட்டேன். நேத்திக்கு பாத்து  பாரு  எங்க ஆபிசுல ஒரு பிரச்சனை. ஒரு லாரி ஏஜன்சீஸ் காரருக்கு போன் குடுக்கறதுல லேட்டாயி அது ஆப்ரேட்டருக்கும் அந்த போன் காரருக்கும்  சண்டையில முடிஞ்சிடுச்சி.  போன் எடுத்தவரு கன்னா பின்னான்னு பேச்சு பேசியிருக்காரு.  ரெண்டு பேருக்கும் தகறாறு ஆயிடுச்சி. அந்த லாரி ஏஜன்சீஸ் காரரை நான் தான் அப்படி  மரியாதை இல்லாம பேசிட்டேன்னு அவுருகிட்ட யாரோ  வேணுமின்னு போட்டுவிட்டுருக்காங்க. அத அவுரு  உண்மைன்னு  நம்பிட்டாரு. என்ன அவுரு ஆபீசுக்கு வரசொன்னாரு. நா அந்த லாரி ஆபிசுக்கு போனேன்.’

அவன் மனைவி சட்டென்று இடைமறித்தாள். கண்கள் கலங்கியிருந்தன.

‘இது என்ன கொடுமை, நீங்க  நேத்து  ஆபிசுக்கு லீவு போட்டுட்டு  நாம வாங்குன மனை பதிவுக்கு  ரிஜிஸ்தர் ஆபிசுக்குல்ல போயிருந்தீங்க. உங்க பெயரை  லாரி ஆபிஸ்காரங்க கிட்ட சொல்லி மாட்டிவிட்டது யாரு. உங்க ஆபிஸ்காரங்க யாராவதுதான்  இந்த கேவலத்த  செய்திருப்பாங்க. ஒங்க ஆபிசுலதான் எப்பவும் யூனியன் விரோதம்  உண்டாச்சே.அதுல யாராவது உங்கள பழிவாங்கணும்னுட்டு திட்டம் போட்டுருப்பாங்க. யாருக்கோ  உங்க மேல  இம்மாம் காண்டு. இப்பிடி எல்லாம் கூட செய்வாங்களா, நீங்களும் எப்பிடி தகிர்யமா அந்த லாரி ஆபிசுக்கு  ஒண்டியா போனீங்க. யாரையாவது கூட கூப்பிட்டுகிட்டு போயிருக்கலாமுல்ல.கேக்கவே பயமால்ல இருக்கு’

 ’எனக்கும் பயமாத்தான் இருந்துச்சி.   லாரி ஏஜன்சீஸ்காரர் என்னை மட்டும்தானே வரச்சொன்னாரு. நான் போகலேன்னா தப்பாயிடுமே. அதான் போனேன்.’

‘அப்புறம் என்ன நடந்துதுன்னு சொல்லுங்க’

என்னை  விசாரிச்சாரு. நேத்து  போன்ல ராங்கா என்கிட்ட  பேசுனது யாரு? நீங்கதானேன்னு ஆரம்பிச்சாரு.நா நேத்து ஆபிசுக்கே வரல்லே.  லீவு போட்டிருந்தேன். ரிஜிஸ்தர் ஆபிசுல  எனக்கு  முக்கியமா ஒரு சொந்த வேல இருந்துச்சின்னு சொன்னேன். என்னை பத்தி நல்லது கெட்டது கேக்க  இந்த ஊர்ல ஒரு பெரிய மனுஷன் பேர் சொல்லுங்கன்னு  கேட்டாரு. நா அந்த  ஜங்க்‌ஷன் ரோடுல கிளினிக் வச்சி நடத்துற  டாக்டர் சாமி பேற சொன்னன்.அவுருகிட்ட என்னப்பத்தி விசாரிச்சாரு. அவுரு என்னபத்தி நல்லவிதமாவே சொன்னாரு. நானே என் காதால கேட்டேன். அதோட  விஷயம்  முடியல. அவுரு  அந்த லாரி ஆபிசுல ரெண்டு ரூம் வச்சிருக்காரு.  அத எனக்கு  காட்டுனாரு. உத்யோகம் பாக்குறவங்கள்ள தப்பு செய்றவங்கள   தண்டிக்க ஒரு ரூமு. வேட்டி  கீட்டி கட்டிகிட்டு சாதாரணமா அத்து கூலிக்கு வேல பாக்குற ஆளுவுள தண்டிக்க வேற ரூமு.’

‘எல்லாமே புது புது  சேதியா இருக்கு’

‘ரெண்டு ரூம்புலயும் ஆள அடிக்கற தடிங்க  எல்லாம் ரெடியா இருக்கு’

‘உங்கள யாரும் அடிச்சி கிடிச்சி புடலயே’ பதறிப்போய்க் கேட்டாள் அவன் மனைவி.

‘அதெல்லாம் இல்லே’

‘நாம வாங்குன மனைராசிதான்  நம்மள காப்பாத்தி இருக்கு, அன்னிக்கு ரிஜிஸ்தர் வச்சிருந்தம். இல்லன்னா  எப்பவும் போற மாதிரிக்கு  நீங்க உங்க ஆபிசுக்கு போயிருப்பிங்க,  நடந்த சண்டையில உங்கள வசமா மாட்டிவுட்ருப்பாங்க, ஏதோ நம்ம  நல்ல நேரம் தப்பிச்சிட்டிங்க,  என் அப்பனே ஆண்டவரே கொளஞ்சியப்பா’ கண் கலங்கிப்பேசினாள்.

’நா  அன்னிக்கு டூட்டிக்கு போகாத இருக்கும்போதே இதுல என்ன மாட்டவுட்டவங்க  போயிருந்தா என்ன செஞ்சி இருப்பாங்களோ’

‘எதுக்கும் ஜாக்குரதயா இருக்குணும்’

மின்சாரம் இல்லாமலே இரவு கரைந்துகொண்டிருந்தது. அவன் வீட்டில் யூபிஎஸ் வசதி எல்லாம் பொருத்தப்படவில்லை. அதன் தேவை அவ்வளவாக இல்லாமலும் இருந்தது. இப்போதும்கூட அவன் வசிக்கும் தெருவில் மின்சாரம் இல்லாமல் இல்லை. அவன் வீட்டுக்கு வரும் மின்சாரம்தான் தடைபட்டு இருக்கிறது.

‘நாளைக்கு முதல் வேலயா கரண்டுகாரன பாருங்க,’

‘அது சரி’

அவன் சொன்ன செய்தி கேட்டு  மனைவி சோர்ந்துபோய் காணப்பட்டாள். அவள் இனி அக்கம் பக்கத்தில் கேட்டு ஊறவைத்த அரிசி  அரைக்க  ஒரு வழி செய்யப்போவதில்லை. மனைவி ஊறவைத்த அந்த  அரிசி பருப்பை எடுத்துக்கொண்டு  அவனே சைக்கிளில் பெரியார்நகர் போனான். பெரியார் நகரில் பஸ் ஸ்டாப்பிற்கு எதிரே  மாவு அரைக்கும் ஆலை. மாவு அரைப்பதற்காக நான்கு பெண்கள் காத்துக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு முன்னரே  ஊறவைத்த  அரிசி உளுந்தை பாத்திரங்களில் சிலர் வைத்துவிட்டு  சென்றிருந்தனர். அவர்கள் அரிசியைஆலைக்காரர் அரைத்துக்கொண்டிருந்தார்.

‘நாங்க காத்துகிட்டு  நிக்கறம்,  அரிசிய வச்சிட்டு வூட்டுக்கு போனவங்கள்து அரைக்கிறீங்க, எங்களது அரைச்சிட்டு அப்புறமா அவுங்களத அரைக்கலாமுல்ல’ நால்வரும் ஏகோபித்து சத்தம் போட்டார்கள்.

‘என்கிட்ட அரிசிய வச்சிட்டு போனவங்க வைக்கும்போது  லயன்ல அவுங்க நெம்பர் என்னன்னு கேட்டுட்டுதான் வைக்கிறாங்க. உங்க நெம்பர் என்னன்னு பாருங்க அதுபடிதான் அரைக்கணும்’

‘அது எங்களுக்கு தெரியும்’ என்றாள் ஒரு பெண்.

அவன் சைக்கிளை நிறுத்திவிட்டு அரிசி உளுந்து வாளியை எடுத்துக்கொண்டு அங்கு வந்து நின்றான்.

‘சாரு எங்களுக்கு பெறவுதான் நீங்க’

‘தெனம் தெனம் வர்ரவனில்ல நான். இண்ணிக்கி வீட்டுல கரண்டு போயிடுச்சி அதான் வந்தேன்’

‘அண்னாடம் வர்ரவங்களுக்கு ஒண்ணு அப்பப்ப வர்ரவங்களுக்கு இன்னொண்ணு இங்க இல்ல’ ஆலைக்காரர் அவனிடம் சொல்லி அந்த நான்குபெண்களின் வாளிகளுக்கு  அடுத்து அவன் அரிசி உளுந்து வாளியை வைத்தார்.

‘இன்னிக்கி ஒரு நாளைக்கு பாக்கெட் மாவு வாங்கிகலாம்ல’

‘ஊற போட்ட பிறவு  வீட்டுல ஃபூஸ் போயிட்டுது’

‘’வூட்டுல ஃபூஸ் பூட்டுதுன்னா அத சரிப்ண்ணிகலாமுல்ல’

‘கரண்டு மரத்துலேந்து  வீட்டுக்கு கரண்டு வருல,  வீட்டுல இருக்குற  ஃபூஸ் நல்லா இருக்குது’ அவன் ஒரு பெண்ணிற்குப் பதில் சொன்னான்.

‘ஒரு மணி சென்னு வருலாம்,  வந்து மாவ டாண்ணு  எடுத்துகலாம்’ ஆலைக்காரர் அவனிடம் சொன்னார். அவன் சைக்கிளை எடுத்துக்கொண்டு வடக்குப்பெரியார் நகரில் முந்திரி பண்ணை வரை போனான்.மாநில அரசு  நிர்வகிக்கும் முந்திரி ஆராய்ச்சி நிலையம்தான் அங்கிருந்தது.  அதன் மெயின் கேட் பூட்டிக்கிடந்தது. அதன் அருகில் ஒரு ஆள் சென்று திரும்பும்  சிறிய கேட் மட்டும்  திறந்திருந்தது.  திருக்கோவில்களில் திட்டிவாயில்  என்று பிரதானக்கதவுக்குள்ளாக ஒரு சிறு கதவு போட்ட வாயில்இருக்கும். அதன் வழியே கோவில் சிப்பந்திகள் மட்டும்  வருவார்கள் போவார்கள்.அவனுக்கு அந்த திட்டிவாயில் நினைவுக்கு வந்தது.

 பண்ணை உள்ளே மின்சார விளக்குகள் இரவைப் பகலாக்கிக்கொண்டிருந்தன. முந்திரி மரங்கள் புதர் புதராய் வளர்ந்து ஆங்காங்கே தெரிந்தன. முந்திரி மலரின்  விரவிய  வாசனை அவனால்  நன்கு உணரமுடிந்தது. பெரிய மாமரம் ஒன்று கீழே வீழ்ந்து கிடந்ததை அவன் பார்த்துக்கொண்டான். அவனுடைய நண்பர் உள்ளூர் நூலகர் அந்த மரத்திலிருந்து  வடு மாங்காய் எடுத்துவரச் செல்வதாக அவனிடம் கூறியிருந்தது அவனுக்கு நினைவு வந்தது. சைக்கிளை வைத்துக்கொண்டு சிறிது நேரம் அங்கே நின்றான். அதற்குள்ளாய் பண்ணை வாட்ச்மென் ஒடி வந்து ‘யாரு பாக்குறது என்ன வேணும்’ என்றார். ’சும்மா பாக்குறன் அவன் பதில் சொன்னான்

‘சும்மா என்ன பாக்குறது’

‘மாவடு கெடைக்குமான்னு பாக்குறன்’

‘இது முந்திரி பண்ண’

‘மாமரம் வுழுந்து கெடக்கேன்னு கேக்குறன்’

மாமரத்த நாளைக்கு  காலைல பத்து மணிக்கு ஏலம் வுடுறம் அதுக்கென்ன இப்ப,‘எதா இருந்தாலும் நாளைக்கு காலையில் பத்து மணிக்கு வா,  இப்ப  எடத்த காலி செய்யி  கெளம்பு கெளம்பு’

அவன் சைக்கிளை மிதித்துக்கொண்டு மாவு அரைவை ஆலைக்குத்திரும்பினான்.  ஆலைக்காரர் தயாராய் அரைத்துவைத்திருந்த மாவை எடுத்துக்கொண்டு வீட்டுக்குத்திரும்பினான்.

திராவிடம் லாரி ஏஜன்சீஸ் ஓனர்  டெலிபோன் ஆபிசிலிருந்து அவரை மரியாதை குறைவாய்ப்பேசியது யார் என்பதை இன்னும்  தெரிந்துகொள்ளவில்லை.  அங்கு   ஒரு  ஆள் அவருக்கு  இல்லாமலா என்ன? பெரியநெசலூர் பெரியசாமியை அவருக்கு நன்றாகவே தெரியும்.  வயதில் மூத்தவர். பதவி உயர்வில் மேல் நிலைக்கு வந்தவர். அவரும்  அவ்வூரில் தொலைபேசி இயக்குனராகத்தான், அங்கு பணியாற்றிக்கொண்டிருந்தார். அவரைக்கேட்டுத்தெரிந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடுதான் இருந்தார். நெல் மூட்டைகள் எள் மூட்டைகள் ஏற்றிவர வேப்பூர் அருகேயுள்ள பெரியநெசலூருக்கு அவர் அடிக்கடி போவது வழக்கம்.  சேலத்து பெரிய பெரிய  தானிய வியாபாரிகள் மொத்த தானிய வாங்குகைக்காக இந்தப்பகுதிக்கு அடிக்கடி வருவார்கள்.

பெரியநெசலூரில்  இலுப்பைதோப்புக்கு அருகேயுள்ள  பெரிய நெற்களத்தில் வைத்துத்தான்  அந்தப்பெரியசாமியை  திராவிடம் லாரி ஏஜன்சீஸ் ஓனர் சந்தித்தார்.  அவரோடு பேசிக்கொண்டிருந்தார். அவருடைய  ஷெட்டிலிருந்து எடுத்துக்கொண்டு வந்த ஒரு லாரியில்தான் அந்தக் கிராமத்திற்கு நெல் பிடிக்க  மொத்த வியாபாரியோடு வந்திருந்தார். நெல் எடை போடும் மெஷினும், கித்தான் சாக்குகள்பல கட்டு கட்டாயும் லாரியினுள்ளே  கிடந்தன. ராட்சச தார்ப்பாய் ஒன்று லாரியின் கொண்டையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.

‘வணக்கம் அண்ணே’ பெரியசாமிதான்

‘வாங்க பெரியசாமி சார்’

‘கொஞ்சம் நெலம் எனக்கு இந்த ஊர்ல இருக்கு, அப்பா குடுத்துட்டு போனது. அதுல ஒரு சின்ன வேல. வயல்ல  ஒரு கெடக்கி ஒரு கெட மோடு பள்ளம். வெகுநாளா அப்பிடியே கெடக்குது. அந்த மண்ண  கொஞ்சம் கழிச்சி மோட்டாம்கையிலேந்து பள்ளகையிலே போடலாம்னு யொசனை. ஆளுவுள வரச்சொல்லியிருந்தேன். கொல்லையில அந்த வேலதான் நடந்துகிட்டு இருக்குது’

‘என்னண்ட சொல்லியிருந்தா ஜேசிபி  அனுப்பி வுட்ருப்பேன்’

‘உங்க கிட்ட ஜேசிபி இருக்குன்னு எனக்கு தெரியாது’

‘கேக்குலாமுல்ல’ சரி அத வுடுங்க.  அன்னிக்கு  ஒரு தகறாரு நடந்துதே அது யாபகம் இருக்கா’

‘எங்கன்னு சொல்லாம இப்பிடி மொட்டையா சொல்லுறீங்க’

‘உங்க  டெலிபோன் ஆபிசுலதான்’

‘ஆமாம் அய்யா டிரங்க் புக்கிங் கேட்டிங்க அது கொஞ்சம்  டிலே ஆயிடிச்சி, வாய் வார்த்த தப்பு தப்பா வந்துபோச்சி, அப்புறம் லாரில உங்க ஆளுவ  பத்து பேர் எங்க ஆபிசுக்கு வந்து ஒரே கலாட்டா ஆயிட்டுதே அததான சொல்றீங்க’

‘ அததான் சொல்றேன். சரி அன்னிக்கி தப்பா பேசுனது யாரு’

‘அதெல்லாம் எதுக்கு சார்  இப்ப’

‘ என்னண்ட ஒரு ஆசாமி  வந்து அது தருமங்குடி சந்திரன்னு சொல்லிச்சி’

‘இது என்னா புது சேதியா இருக்கு எந்த ஆசாமி  உங்க கிட்ட சொல்லிச்சி’

‘அது உங்களுக்கு எதுக்கு’

‘தகவல் தப்பா இருக்குதே’

‘நா அந்த சார என் லாரி ஷெட்டுக்கு வரவழிச்சேன். நேராவே  விஷயத்தைக் கேட்டுபுட்டன்’

‘அய்யய்யோ  தருமங்குடி  சந்திரன் பிரச்சனை நடந்த  அன்னிக்கி ஆபிசுக்கே வருல’

‘அப்ப என்னண்ட  தாறு மாறா பேசுனது யாருன்னு சொல்லுங்க’

‘அத நா என் வாயால  சொல்லுலாமா’

‘அன்னிக்கி நீங்க டூட்டி தான’

‘ஆமாம்’

‘அப்ப அய்யாவுக்கு தெரிஞ்சிருக்குமே’

பெரியசாமி சன்னமாய் சிரித்துக்கொண்டார்.

‘யாரு அப்பிடி  பேசினதுன்னு எனக்குத்தெரியாமலா போயிடும். அத நானும் கண்டு புடிக்காம வுட்டுடுவனா’

‘நீங்களும் அந்த ஆப்ரேட்டரை தப்பா  பேசிட்டிங்க’

‘இது தேவலாமே, நாழி பாட்டுக்கு ஆயிட்டு இருக்கு. எனக்கு ஆயிரம் புடுங்கலு  அர்ஜெண்டா  டிரங்கால் போட்டாவுணும்  பெறவு   ஒரு வியாபாரிக்கு கோவம்  வருமா வராதா’

‘நீங்க சொன்ன அதே  வார்த்தயதான அந்த ஆப்ரேட்டரும் திரும்பவும்  உங்க கிட்ட சொன்னார்’

‘நீங்க  கருப்பூர் பஞ்சாயம் பண்றீங்க பெரியசாமி’

‘அது என்னங்க  கருப்பூர் பஞ்சாயம்’

‘இது தெரியாதா பெரியசாமி,  ஒரு சண்டையில  யாரு அடிவாங்கிகிட்டு வர்ரானோ அவுனுக்கே அபராதம் போடறது  யார்  அடிச்சனோ   அவனை  வுட்டுடுறது,

‘உங்களுக்கு கோவம் வந்தமாதிரி நீங்க அந்த வார்த்த பேசுனமாதிரி அவருக்கும் கோவம் வந்து அப்பிடி பேசியும் இருக்கலாமுல்லே’

‘நீங்களும் அவுரு பக்கம்தான் பேசுறீங்க’

‘அவுரும் நல்ல மனுஷன். அப்பிடி தப்ப பேசுற ஆளு இல்லே’

‘நீங்களே சாட்சி சொல்லுவீங்க போல’

‘ஆமாம் சார், அவரு நல்ல மனுஷருதான்’

‘பேர சொல்லுங்களேன்’

‘அது முட்டும் வேணாம்  என்ன ஆள வுட்டுடுங்க, எனக்கு வேல பலானது கெடக்குது நா போவுணும்’ பெரியசாமி தன்னுடய வயல்வெளிக்குச் சென்று விட்டார்.

பெரியநெசலூர் பெரியசாமி மறுநாள் டெலிபோன் ஆபிஸ் டூட்டிக்கு வந்தார். அவரும் டெலிபோன் ஆப்ரேட்டாராக அதே ஆபிசில்  வேலை செய்பவர்தான். லாரி ஏஜன்சீஸ் ஓனரோடு பிரச்சனை ஆகிவிட்ட ஆப்ரேட்டரைத்  தனியா அழைத்துப்போய் பேசினார். தொலைபேசி நிலையம் அருகேதான் அந்தக்காய்ந்து  மணலாய்க்கிடக்கும் ஆறு ஓடிக்கொண்டிருந்தது.  ஆறு எங்கே ஓடியது,  ஆறு இருந்தது என்பதே சரி. அந்த ஆற்றங்கரை ஓரத்தில், எப்போதேனும்  மாடுகட்டி  எண்ணெய்  ஆட்டும்  மரச்செக்கும், பாப்பாரத்தெரு பிள்ளையார் கோவிலும்  காலம் காலமாய் இருந்து வருகின்றன.  பெரியசாமியும்  அந்த ஆப்ரேட்டரும் பேசிக்கொண்டே வந்தனர்.

‘நேத்து என்  கிராமம்வரைக்கும் போய் வந்தேன்’

‘என்ன வேல’

‘என் வயல்ல ஒரு பிரச்சனை. ரொம்ப நாளா இருந்துது. ஒரு துண்டு வயல்ல ஒரு பக்கத்துக்கு ஒரு பக்கம் ஏத்த எறக்கம் இருந்துச்சி.  பாயிற தண்ணி ஒத்தாபுல பாயாது. அத சரி பண்ணாம வெகு காலமா கெடந்து போச்சி. எங்கப்பா காலத்திலயே அப்பிடிதான் கெடந்தது. அதுக்கு இப்பதான் ஒரு   நேரம் வந்துது. அத சரிபண்ணிடத்தான் ஆளுவுள வரச்சொல்லி இருந்தேன். அந்த வேல முடிஞ்சிபோச்சி. அது அதுக்கும் ஒரு  நேரம் வருணும். நாம குதிக்கறதுல ஒண்ணும்  காரியம் ஆவாது.’

‘ இது பேசவா நாம இங்க வந்தம்.’

‘வேற சேதி இருக்கு’ பெரியசாமி சிரித்துக்கொண்டார்.

’அது கெடக்கட்டும் , என்னமோ புது சேதின்னிட்டு இட்டாந்தீரு’

‘ஆமாம் புது சேதிதான்’

‘பெரியநெசலூர்ல    நம்ம  திராவிடம் லாரி ஏஜன்சீஸ் ஓனரைப் பார்த்தேன்.  அவரு நம்ப ஆபிசுல அன்னிக்கி  நடந்துபோன அந்த தகறாறு பத்தி ஆரம்பிச்சாரு, என்னடா புது  பிரச்சனயா இருக்குன்னு பயந்தேன். அவுருகிட்ட  நம்ப ஆபிஸ் சந்திரந்தான் அப்படி ராங்கா  பேசுனதா ஒரு தப்பான தகவல் போயிருக்கு. சந்திரனை வரச்சொல்லி அவுரு ஷெட்ல வச்சி விசாரிச்சி இருக்காங்க’

‘அய்யய்யோ இது என்ன விபரீதம்’

‘எப்பிடி விசாரிச்சாருன்னு  ஆரு கண்டா. சந்திரனுக்குத்தான் அது முழுசா தெரியும். நாம அவர கேக்க முடியுமா, இல்ல அவுருதான் நம்மகிட்ட அது எல்லாம் சொல்லவைக்குமா. அந்த  லாரி ஏஜன்சீஸ் ஓனர் தான் ஆவுட்டும்  நம்மகிட்ட’ நான் இப்படி  இப்படி   அந்த சந்திரனை  விசாரிச்சேன்னு’ சொல்லுவாரா,அது எல்லாம்  நாம அவர கேக்குறது மொறயும் இல்லயே’

‘உங்கள என்ன கேட்டாரு’

‘ நீங்க   டூட்டில இருந்திங்களா  யாரு அன்னிக்கி  எங்கிட்ட  அப்படி ராங்கா பேசுனது. அவுரு பேரு என்னன்னாரு’

‘நானு டூட்டிதான்  உங்க கிட்ட அவுரு பேரு சொல்றது சரியில்ல,  என்ன ஆளவுடுங்கன்னுட்டு வந்துப்டன். அவுருக்கு எம் பேர்ல வருத்தம்தான். அதுக்குன்னு நா உங்க பேர சொல்ல முடியுமா அது சரியாதான் இருக்குமா, அந்த சந்திரன் பெயர  அவர்கிட்ட சொன்ன  நம்ப ஆபிஸ் ஆளு ஆருன்னு தெரியல. அப்பிடி  எல்லாம் போய் தப்பு தப்பா  ஒருத்தர்கிட்ட சொல்லுலாமா அது என்ன நெயாயம்’

‘சந்திரன் பேர ஆரு சொல்லியிருந்தாலும் அது தப்பு. சந்திரனுக்கு  அவரண்ட என்ன பாட்டு கெடச்சிதோ தெரியல’

‘பாட்டென்ன, அங்க பூசையும் உண்டுன்னு  கேள்விபட்டிருக்கேன்’

‘பூசைன்னா

‘அடி  தான்  ராங்க் ரப்பா  நடந்துகற ஆளுவுளுக்கு  அது நிச்சயம்  உண்டும்பாங்க’

‘இது ரொம்ப அநியாயமா இருக்கு.. சந்திரன தெனமும் பாக்குறன் அவுர் ஒரு சேதியும் சொல்லுல’

‘என்கிட்டயும்தான் ஒண்ணும் சொல்லுல’

‘உங்களுக்கு ரெம்ப வேண்டபட்டவராச்சே’

‘ஆமாம் என் சொசைட்டி லோன் எல்லாத்துக்கும் அவுரு சாமீன் கையெழுத்து போடுறவரு. நானும் அவுரு  சொசைட்டி லோனுக்கு சாமீன் கையெழுத்து போடுறவன்’

‘சந்திரன் நல்ல மனுஷன். இதுக்கு நா ஒரு வழி பண்ணணும். இத இப்பிடியே உட்டுடக்கூடாது.’

‘என்னதான் செய்வீங்க’

‘அது செஞ்சிட்டுதான் வெளியில சொல்லுணும்’

‘’என்னண்ட சொல்லுலாமே’’

‘அந்த  திராவிடம் லாரி  ஏஜன்சீஸ் ஓனர பாத்து நடந்து  போன விஷயத்த பத்தி பேசிடணும். அதுக்கு தக்கன மனுஷாள் எனக்கு  கடலூர்ல இருக்குது. அவர வச்சி இந்த ஊர்லயும் ஒரு பெரிய மனுஷாள் மூலமா அந்த லாரி ஏஜன்சீஸ் ஓனர் கிட்ட இத எல்லாம் பேசி முடிச்சிடணும். அப்பதான் சரியா வரும் இல்லன்னா மேலும் மேலும் சிக்கலுதான் நாம எல்லாருக்குமே’

‘அப்பிடி எதாவது செய்யுங்க மொதல்ல’ என்றார் பெரியசாமி. இருவரும் ஆற்றங்கரையிலிருந்து அலுவலகம் திரும்பினார்கள். பெரியசாமி ஆற்றங்கரைப் பிள்ளையாருக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டுத்தான் வந்தார்.

பெரியசாமி இப்போது தான்  சற்று நிம்மதியாக உணர்ந்தார்.

சம்பவ நாளன்று தவறாகப்பேசிய  திராவிடம் லாரி ஏஜன்சீஸ் ஓனரிடம்  தவறாகத் திரும்பவும் பேசிவிட்ட அந்த டெலிபோன் ஆப்ரேட்டர் நிலமையை உணர்ந்துகொண்டார். அவர் பொதுவுடமைக்கட்சியின் விசுவாசியோ இல்லை  உறுப்பினராகக்கூட இருக்கலாம். மாவட்ட பொதுவுடமைக் கட்சியின் செயலாளரை நேரில் சந்தித்து நிலமையை விளக்கி ஏதேனும் ஒரு சமாதானத்திற்கு முயற்சி செய்யலாம் எனத் தீவிரமாய் யோசித்தார். அடுத்த நாளே அவர் வீக்லி ஆஃப்  எடுத்துக்கொண்டார். கடலூர் சென்றார். அவரின் சொந்த ஊருக்கு அருகில்தான் அந்த மாவட்டத்தலை நகரும் இருந்தது.

கடலூர் மாவட்ட பொதுவுடமைக் கட்சி அலுவலகம்  பேருந்து நிலையத்திற்கு அருகில்தான் இருந்தது. கெடிலம் ஆற்று பாலத்தின் மீதுள்ள அண்ணா  புதிய பாலம் துவங்கும் இடத்தில்தான் அது. கடலூர் பெரிய பேருந்து நிலையத்தில் இறங்கி அந்தக் கட்சி  அலுவலகம் நோக்கி அவர் நடக்க ஆரம்பித்தார். கட்சி அலுவலகம் பரபரப்பு நிறைந்ததாகக் காணப்பட்டது. கட்சிக்கொடி வானைத்தொடும் உயர சிவப்புக் கம்பத்தில் பறந்து கொண்டிருந்தது. கட்சித்தோழர்கள் சிவப்பு காகிதக்கொடிகளைக் கட்டு கட்டாய் அடுக்கிக்கொண்டிருந்தனர். அன்று மாலை நகரின் ரயில்வே நிலையம் திருப்பாதிரிப்புலியூர் அருகில் ஒரு பொதுக்கூட்டம் இருப்பதாயும் அதற்கான ஏற்பாடுகள் நடப்பதாகவும் அறிந்து கொண்டார்.புதுடில்லியிலிருந்து ஒரு அகில இந்தியத் தலைவர் உடனேயே அங்கு வந்து சேர்வார் என்று கட்சித்தொண்டர்கள் பேசிக்கொண்டார்கள்.

‘வணக்கம் தோழர் நலமா’ மாவட்டச் செயலர் அவரைப்பார்த்ததும் உற்சாகமாய்க்கேட்டார்.

‘’நலம்தான்’ பதில் சொன்னார். மாவட்டச்செயலரை நன்கு அறிந்திருந்தார் அவர்.

‘மாலையிலதான்  கடலூரில்  பொதுக்கூட்டம்’

‘நா ஒங்க கிட்ட வேற ஒரு  சொந்த வேலையா வந்தேன்’

‘அப்பிடியா, கூட்டத்துக்கு வருலயா நீங்க’

‘எனக்கு இந்த சேதி  தெரியாது. இங்க வந்துதான் தெரிஞ்சிகிட்டேன்’

‘சரி தோழர்  மொதல்ல உங்க பிரச்சனை என்ன சொல்லுங்க’

‘நா டெலிபோன் ஆப்ரேட்டரா வேலைபாக்குறது  உங்களுக்கு தெரிஞ்சிம் இருக்கலாம்’

‘தெரியும். நல்லா தெரியும்’

முன்பகுதியில் அனேக  இரும்பு நாற்காலிகள் அடுக்கிக்கிடந்தன. இருவரும் அங்கு கிடந்த  மர நாற்காலிகளில் அமர்ந்து பேசிக்கொண்டார்கள். அவர்  கட்சி அலுவலகச் சுவரில் மாட்டப் பட்டுள்ள அனேக தலைவர்களின் படங்களை ஒரு முறை பார்த்துக்கொண்டார்.அனேகமாய் எல்லா தலைவர்களும் வட இந்தியர்களாய்த் தெரிந்தார்கள். மூலையில் அச்சிடப்பட்ட புத்தகங்கள் நோட்டிசுகள் கட்டு கட்டாய்க்கிடந்தன. மெகாபோன் ஆம்ளிஃபயர் மைக்செட் அனைத்தும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கார்பன் வைத்து  ரசீது போட்டுக்கொடுக்கும் குட்டை நோட்டுக்கள் ஒரு  நெடுக்கு வரிசைக்கு இருந்தன. கட்சிக்கு நிதி திரட்டும் தகர உண்டியல்கள் சிவப்பு வண்ணம் பூசப்பட்டு பளிச்சென்று இருந்தன. அவன் எல்லாவற்றையும் நோட்டம் விட்டான்.

‘நா டெலிபோன் எக்ஸ்சேஞ்ல  டியூடி பார்க்கும்போது ஒரு நாள் ரொம்ப பிசியா இருந்துது. நா லோகல் போர்டு எடுத்து வேல செஞ்சிகிட்டு இருந்தேன். மணி பதினொன்று இருக்கும். திராவிடம் லாரி ஏஜன்சீஸ் ஓனர் போன் எடுத்து  டிரங்க் புக்கிங் வேணும்னு கேட்டார்.  டிரங்கால்  புக் பண்ண  அஞ்சி ஜங்ஷன்  இருக்கும்.எல்லா ஜங்க்‌ஷனும் பிசியா இருந்துது. புக்கிங் பண்ணுறதுக்கு ஒரு ஆப்ரேட்டர்தான். அதுலயும்   யாராவது   ஒண்ணு ரெண்டு வெளிநாட்டுக்கால்  புக் பண்ணணும்னு வந்துட்டாங்கன்னா  நேரம்  சற்று அதிகம் இழுக்கும். கொஞ்சம் வெயிட் பண்ணுங்கன்னு சொன்னேன். அந்த லாரி ஆபிஸ் ஓனர்  என்னை   கெட்ட வார்த்தையாலே திட்டினார். எனக்கும் கோபம் வந்துது. நானும் அவர் சொன்னதயே ரிபீட் பண்ணித் திட்டிட்டேன்.  உடனே அவர் ஆட்கள் கொஞ்சம் பேர் லாரி எடுத்துகிட்டு எங்க டெலிபோன் ஆபிசுக்கு வந்து சத்தம் போட்டாங்க. யாரு எங்க மொதலாளிய  திட்டுனது அந்த ஆளு  எங்க கண்ணுல காட்டுங்கன்னு  அடம் பிடிச்சாங்க. ஆபிசுல இருந்தவங்க எவ்வளவோ எடுத்து சொன்னாங்க. ஒருவழியா எப்படியோ   சமாதானம் பண்ணி அனுப்பி வச்சாங்க. அவங்களும் அப்புறம் போயிட்டாங்க. இதுக்கு நடுவுல அவருகிட்ட அப்பிடி தப்பா பேசுனது சந்திரன்னு ஒரு ஆப்ரேட்டர்தான்னு  யாரோ தவறான தகவல கொடுத்துட்டாங்க. திராவிடம்  லாரி ஏஜன்சீஸ் ஓனர் அந்த சந்திரன கூப்பிட்டு அனுப்பிச்சி அவர் லாரி ஷெட்டிலேயே  விசாரிச்சி இருக்காரு. அவரோ இந்த சம்பவம் நடந்த அண்ணிக்கி லீவு போட்டுட்டு  சொந்த வேலையா இருந்துருக்காரு. அவருக்கு முக்கியமா ஒரு ஜோலி  இருந்துருக்கு.  அத எல்லாம் சொல்லிட்டு லாரி ஏஜன்சீஸ் ஓனர் கிட்டேந்து   ஆப்ரேட்டர் சந்திரன்  வெளியில வந்துருக்காரு. இப்ப அந்த லாரி ஷெட் ஓனர் கிட்ட பேசணும் இந்த பிரச்சனை  சுமுகமா ஒரு  முடிவுக்கு  வரணும்’

‘ரைட்டா சொல்லிட்டிங்க, ரெண்டு பேர் பேர்லயும் தப்பு இருக்கு, அவரும் அப்பிடி பேசியிருக்கக்கூடாது. நீங்களும் அப்பிடி சொல்லியிருக்கக்கூடாது. உங்க ஊர்ல  நம்ம  தாலுக்கா செகரட்ரி இருக்காரு. அவரு பேரு என் ஆர் ஆர். உங்களுக்கு தெரிஞ்சிம் இருக்கலாம். அவர் கிட்ட நானு பேசுறேன். அவர் அந்த லாரி ஓனர்கிட்ட பேசிடுவாரு. நீங்க வருத்தம் தெரிவிச்சதா நா சொல்லச் சொல்லிடுறேன். அவரு அப்பிடி பேசுனது தப்புன்னும் அவுருகிட்ட சொல்லிபுடுறேன். இத்தோட இந்த பிரச்சனை  முடிஞ்சி போச்சின்னு வச்சிகிங்க.  அவர் கிட்ட என் ஆர் ஆர்  பேசிடுவாரு, பிறகென்ன’

‘அவ்வளவுதாங்க தோழர் வேற ஒண்ணும் சேதி இல்லே. இத உங்ககிட்ட சொல்லணும். ஒரு யோசனை கேட்டு இந்த  பிரச்சனைக்கு  சுமுகமா ஒரு  முடிவு  கொண்டுவரணும். அதுக்குத்தான் நான்  இங்க வந்தேன்.’

‘ரைட் நீங்க உங்க வேலய பாக்கலாம் எனக்கும் பல வேல இருக்கு. இது மாதிரி பிரச்சனை இனி வராம பாத்துக்கணும். நாம  பலருக்கு யோசனை சொல்லுணும். நமக்கு ஒருத்தர் யோசனை சொல்லும்படியா நாம நடந்துக்காம இருக்கணும். அதுக்குன்னு ரோசம் கோபம் இல்லாம ஒரு  மனுஷன் இருக்கவும் முடியாது. அதையும் நா ஒத்துகறேன்.  ஒரு சேதி  மாவட்டக் கட்சிக்கு  கல் கட்டிடம் கட்டிகிட்டு இருக்குறம்.  உங்களுக்கு தெரிஞ்சிம் இருக்கும் அதுக்கு ஒரு அன்பளிப்பு குடுத்துட்டு போனா நல்லா இருக்கும். நீங்க எல்லாம்  மாச சம்பளம்  வாங்குற க்ரூப் ஆச்சே. நாமளும் வேற யாருகிட்ட  போய் டொனேஷன் கேக்கமுடியும் சொல்லுங்க’

‘ரைட்டா  டொனேஷன் தரேன் தோழர், யாருகிட்ட தரணும் எவ்வளவு தரணும் சொல்லுங்க’

‘குடுங்க உங்களுக்கு தெரியாதா’

சிவப்புச்சட்டை போட்டுக்கொண்டு அங்கு நின்றிந்த ஒரு தோழரை  மாவட்டச்செயலர் அழைத்துச் சில விபரங்கள் சொன்னார்.  அந்தத்தோழரிடம் ஐந்து நூறு ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்து  அவர் கட்டிட நிதிக்கான ரசீதைப் பெற்றுக்கொண்டார்.

‘சரிங்க தோழர்  நா புறப்படுறேன்’ சொல்லிய அவர் கட்சி அலுவலகம் விட்டு  கடலூர் பேருந்து நிலையம் நோக்கிப்புறப்பட்டார்.  மாவட்டக் கட்சி அலுவலகத்தில் அவ்வளவாகத் தோழர்கள் யாரும் இல்லை. ஓரிருவர் மட்டும்  அங்கங்கு நின்றுகொண்டிருந்தனர்.  மேடை ஏற்பாடுகள் அலங்காரங்கள்  செய்ய வேண்டி  எல்லோரும் திருப்பாதிரிப்புலியூரில் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கும் இடத்திற்குச் சென்று இருக்கலாம். அவர்  பேருந்து நிலையம் வந்து   ஒரு டவுன் பஸ்  பிடித்து தன்  சொந்த ஊர் வந்து சேர்ந்தார்.

பொதுவுடமைக்கட்சியின் மாவட்டச் செயலர்,  உடனே உள்ளூர்  கட்சித்தோழர் என் ஆர் ஆர் அவர்களை  அழைத்து பிரச்சனை தீர்வுக்கு   யோசனை சொன்னார்.

‘வணக்கம் தோழர் நான் பாலு பேசுறேன்

‘வணக்கம் என் ஆர் ஆர்’

‘நலமா, ஒரு சேதி, உங்க நகரத்துல டெலிபோன் ஆபிசுல ஒரு தோழர் என்கிட்ட வந்தார். உங்க ஊரு திராவிடம் லாரி ஏஜன்சீஸ் ஓனர்கிட்ட ஒரு பிரச்சனை. கால் குடுக்கறதுல டிலே ஆகியிருக்கு. லாரி ஏஜன்சீஸ் ஓனர் தப்பா வார்த்தைய உட்ருக்காரு. நம்ப டெலிபோன் ஆப்ரேட்டரும் அதயே ரிபீட் பண்ணிட்டாரு.  லாரி ஆபிஸ்லேந்து ஒரு லாரியில  சில ஆட்களோட டெலிபோன் ஆபிசுக்கு போயிருக்காங்க. தகறாறு ஆகியிருக்கு. ரெண்டு தரப்புலயும் தப்புதான். கொஞ்சம் சமாதானம் பேசி  ராசி பண்ணிவைக்கணும்.  இது நம்ம தோழர் பிரச்சன  இத கொஞ்சம் கவனமா செய்யுங்க,  மத்திய கவர்மெண்ட் சமாச்சாரம்.  ஆறுன கஞ்சி பழங்கஞ்சினு ஆயிடும் உடனே கவனிக்கணும்’

‘நா பேசிடறேன் திராவிடம் லாரி ஏஜன்சீஸ் ஓனர்  எனக்கு வேண்டப்பட்டவருதான் நா பாத்துகறேன்’

‘இன்னிக்கி மாலையில் கடலூர்  ரயில்வே ஸ்டேஷன் கிட்ட  ஒரு பொதுக்கூட்டம் இருக்கு. நானும்  கொஞ்சம் பிசி. வேற எதாவது  வேணும்னா  கேளுங்க’

‘நா பாத்துகறேன் தோழர்’  என் ஆர் ஆர் போனை வைத்துவிட்டார்.

என் ஆர் ஆர் யோசனை செய்தார். நம்மிடம் இந்தத்தகவலைத் தெரிவித்து இருக்கலாம். ஏன் இது கடலூர் மாவட்டக்கட்சி  அலுவலகம் வரை செல்லவேண்டும். ஒருக்கால் அந்தத்தோழர் கடலூர்க்காரராய் இருக்கலாம். எது எப்படி இருந்தால் என்ன, மேலிடத்து யோசனைப்படி  உடனே அவரிடம் பேசியே விடுவோம் என டெலிபோனை எடுத்தார்.மாவட்டச்செயலர் வழிகாட்டுதல்படி  அந்த  உள்ளூர் தோழர் என் ஆர் ஆர்,  திராவிடம் லாரி ஏஜன்சீஸ்  ஓனரோடு சமாதானத்திற்காய்ப் பேசவேண்டும். பிரச்சனையும்  ஓர் முடிவுக்கு வரவேண்டும். திராவிடம் லாரி ஏஜன்சீஸ் ஓனரை லைனில் வாங்கிக்கொண்டார்.

‘அய்யா நான் என் ஆர் ஆர் பேசுறேன்’  திராவிடம் லாரி ஏஜன்சீஸ் ஒனர்  போனில் எதிர் முனையில் இருந்தார்.

 ‘யாரு யாரு பேசுறது’

‘திராவிடம் லாரி ஏஜன்சீஸ் ஓனர்தான்  பேசுறதா’

‘ஆமாம் நானேதான்,  அய்யா யாரு’

‘என் ஆர் ஆர் பேசுறேன்’

‘என் ஆர் ஆர்ரா யாரு’

‘கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர்  என்.ஆர்.ஆர்’

‘ தெற்கு பெரியார் நகர்ல  கான்வெண்ட் ஸ்கூலுகிட்ட  வீடு.  கம்யூனிஸ்ட் கட்சி   இந்த நகர செயலாளர்தானே சொல்லுங்க’

‘ ஒரு காரியம் ஆவுணும் உங்களாலே’

‘என்ன செய்யுணும்ன்னு சொல்லுங்க, நீங்க எல்லாம் எங்ககிட்ட லேசுல வர்ர ஆளு இல்லயே’

’இந்த ஊர்  டெலிபோன் ஆபிசு ஸ்டாஃபுக்கும் உங்களுக்கும் ஏதோ பிரச்சனை  நடந்திச்சுன்னு கேள்வி பட்டேன்’

‘ அப்பிடி போடு , உங்க வரைக்கும்  அது வந்துபோச்சா,  ஒரு சின்ன வெஷயம் எதுவரைக்கும் போயிருக்கு பாருங்க’

‘அவுரு நமக்கு வேண்டப்பட்ட  ஆளுதான். உங்களுக்கும் அவசரம் பல ஜோலி வேல தொந்தரவு. அந்த பையனும் மற்றபடி நல்ல பையந்தான். தப்பாவும்  தடிப்பாவும்  பேசுற ஆளு இல்லே. ஏதோ வாய் தவறி பேச்சு வந்து போச்சி’

‘நானு  லாரிக்காரன்.  பார மூட்டைங்க  ஏத்தி இறக்குற ஆட்களோட அன்னாடம் பொழங்குறவன். அல்லு அவசரத்துல நா எதோ தப்பாகூடம் பேசி இருக்கலாம். ஒரு  மத்திய சர்க்கார் உத்யோகம் பாத்து மாச சம்பளம் வாங்குறவரு, படிச்சவரு  பொறுப்பா ஒரு  ஆபிசுல  வேல பாக்குறவரு,இப்பிடி பேசுலாமா, என் வயசு  என் அந்தஸ்து ஏதும் தெரியுமா அவுருக்கு’

‘நாங்க  சும்மா வுட்டுடல  அவுரு பேசுனதும்  தப்புதான்னு   அவரண்ட சொல்லிபுட்டம்.  அவுரு அதுக்கு  வருத்தமும் தெரிவிச்சிட்டாரு’

‘நீங்களே இவ்வளவுதூரம் பேசுறீங்க.  ஏதோ கெட்ட நேரம்னு சொல்லுணும், அவ்வளவுதான்.  சரி வுடுங்க . நானும்  என் வருத்தத்த உங்ககிட்ட  சொல்லிகறன்’

‘ பெரிய வார்த்தை. நீங்களே  வருத்தப்படுறதா சொல்றீங்க.  உங்க நல்ல மனசு.  இத்தோட  அந்த  பிரச்சன முடிஞ்சிடுச்சின்னு வச்சிகுவம். அவுருகிட்டயும் நா  சொல்லிபுடறேன். ரொம்ப ரொம்ப  சந்தோஷம்.  இந்த விஷயத்துல  பெரும்தன்மையா நடந்துகிட்ட உங்கள  எப்பவும்   நா  ஞாபகம் வச்சிகுவேன்’

நடந்துவிட்ட தேவையற்ற நிகழ்வுக்காக இரு தரப்பும் வருத்தம் தெரிவித்ததோடு அந்தப்பிரச்சனை ஒரு  முடிவுக்கு வந்தது.

அவன்  மறு நாள் மாலை நேர டியூட்டிக்கு டெலிபோன் எக்சேஞ்ச்சுக்குப் போனான்.  அந்த திராவிடம் லாரி ஏஜன்சீஸ் ஓனர் அவனை டெலிபோனில் அழைத்தார்.

‘யாரு  டெலிபோன் ஆப்ரேட்டர் சந்திரன் சாரா’

‘ஆமாங்க சந்திரன் பேசுறேன்  வணக்கம்ங்க’

   டெலிபோன் ஆபிசுல நடந்த பிரச்சனைக்காக  வடக்கு பெரியார் நகர்ல இருக்குற என் ஆர் ஆர்  என்கிட்ட பேசுனாரு.  எனக்கு நல்லா தெரிஞ்சவரு.  நல்ல மனுஷன். காட்டுமன்னார்குடி பக்கத்து ரெட்டியாருதான். சிவப்பு துண்டோட எப்பவும் அவர பாக்குலாம் உங்களுக்கும் தெரிஞ்சி இருக்கும். இந்த நகரத்துக்கு  பொதுவுடமைக்கட்சிக்குச் செயலாளர் என்னண்ட விவரமா  பேசினாரு.   என்னண்ட  ராங்கா  போனில்  பேசுனது  நீங்க  இல்லங்கறது இப்ப  உறுதியாயிடுச்சி. என்கிட்ட   டெலிபோனில  தப்பா பேசுன அவுரும்  அந்த என் ஆர் ஆர் மூலமா   வருத்தம் தெரிவிச்சிட்டாரு. நானும் சாரி சொல்லிட்டேன்.  எப்பிடி  இது   நடந்திச்சுன்னு சொல்றன். என்னை  அன்னிக்கி  அப்பிடி  தடுப்பா பேசுனவரு, அந்தக்கட்சி விசுவாசியா இல்லை,  உறுப்பினரான்னு தெரியல,  கம்யூனிஸ்ட் கட்சி  மாவட்டச்செயலர் கிட்ட நேராவே  போயி  இதுக்கு ஒரு யோசனை கேட்டிருக்காரு. அந்த மாவட்டச்செயலர்  நம்மூர் என் ஆர் ஆர்  கிட்ட பேசியிருக்காரு. அவர்தான்   இந்த பிரச்சனையை சுமுகமா முடிச்சி வச்சவரு’

‘ரொம்ப சந்தோஷம் சார்’

‘உங்ககிட்ட இப்பிடி  பேசுனதுயாருன்னு தெரிஞ்சிபோச்சா’

‘ அப்பிடி பேசுனது யாரு, அவுரு பேரு இன்னது  அவர பத்தி   இன்னும் வெவரங்கள்  எதுவுமே நா  கேட்டுக்கல. கேட்டு  இனி என்ன ஆவணும்னு உட்டுட்டன்’

‘ தப்பா பேசுனது நா இல்லங்கறது  உறுதியாயிடுச்சி அது போதும்’

‘அது உறுதியாயிட்டுது. அன்னிக்கி சாமி  டாக்டர்பேசும்போதே உங்களபத்தி  விவரம் சொல்லிட்டாரு. அவர் சொன்னா போதுமே,  அப்போதே  நானு  உறுதிபடுத்திட்டேன். இப்ப அது இன்னும்  கூடுதலா  உறுதி ஆயிடுச்சி. பொதுவுடமைக்கட்சிக்காரங்களும் எங்கிட்ட நல்லவிதமா பேசிட்டாங்க’

‘இது போதும் சார்’

‘நீங்களாவது இப்ப சொல்லுங்க யாரு அந்த தம்பி அவுரு பேரு என்ன’

‘அது வேணாம் சார்’

‘ஏன் வேணாம்’

‘நா போன வச்சிடறேன்’

‘ ஒரு சேதி    நானு  பெரியநெசலூர் பெரியசாமி இருக்காரே அவர சந்திச்சி பேசிட்டு இருந்தேன். அவர் சொந்த கிராமத்துலதான்.    சேலத்து பெரிய வெயாபாரியோட நெல்லு மூட்டைவ  லாரில ஏத்ததான் போனோம். என்னண்ட  பெரியசாமி  உங்கள பத்தி  நல்ல விதமா சொன்னார். அவர கூட கேட்டேன் இப்பிடி பேசுனது யாருன்னு’

‘அவுரு என்ன சொன்னாரு’

‘அவுரும் பேரு எல்லாம் வேண்டாம் வுடுங்கன்னுட்டு போயிட்டாரு’

‘என் ஆர் ஆர் கிட்டகூட அவுரு பேரு என்னன்னு  நீங்க கேட்டு இருக்கலாம்’

‘நல்லா பேசுறீங்க. அவரே சொல்லுல.  எனக்கும் அவர் கிட்ட  அந்த ஆசாமி  பேரு கேக்க விருப்பம் இல்லே. அவர் மட்டும்  சொல்லவா போறாரு.எனக்கு வேண்டப்பட்டவரு  நீங்களே சொல்லுலயே’

‘சார் உங்க கிட்ட  சந்திரன் ஆப்ரேட்டர் தான் தப்பா பேசுனாருன்னு சொன்ன  எங்க  ஆபிஸ் ஆளு பேரு சொல்லுங்களேன்’

‘அது  வேணாம்  எதுக்கு’

‘நா அன்னிக்கி ஆபிசுக்கே வருல. லீவு போட்டு இருந்தேன். எனக்கு சொந்தவேல இருந்துச்சி. ஆனா தப்பா பேசுனது  நான்தான்னு உங்க கிட்ட ராங்கா இன்ஃபர்மேஷன் குடுத்தது,  அது யாருன்னு  எனக்கு  தெரியணுமே’

‘சார், இந்த விளையாட்டுக்கு நா  வரல வச்சிடறேன்’

லாரி ஆபிஸ் ஓனர்  போனை வைத்துவிட்டார்.

அப்போதுதான் அன்றைய மாலைநேர டியூட்டிக்கு தொளார் கிராமத்திலிருந்து வரும்  அழகு டெலிபோன் ஆப்ரேட்டர்  அலுவலகத்துக்குள்ளே வந்தார்.  சந்திரன்னு ஒரு   ஆப்ரேட்டர்தான்    திராவிடம் லாரி ஏஜன்சீஸ்  ஓனரிடம் ராங்காப்பேசினார் என்று தவறான தகவல் கொடுத்தவர் அந்த அழகு  ஆப்ரேட்டர்தான்.

‘யார்கிட்ட பேசிகிட்டு இருந்தீங்க’ அழகு அவனைக்கேட்டார்.

‘திராவிடம் லாரி ஏஜன்சீஸ் ஓனர்கிட்ட’

‘என்ன சேதி’

‘அந்த டெலிபோன் நெம்பர்லதான அன்னிக்கி ஒருநாள் தகறாறு. லாரில ஆட்கள் வந்து தகறாறு பண்ணினாங்களாமே. அவரு தப்பா பேச நம்ப ஆப்ரேட்டரும் தப்பா பேசுன விஷயம்தான். அந்த ஆப்ரேட்டரு மாவட்ட பொதுவுடமைக்கட்சி செயலாளர், இன்னும் இந்த ஊர் நகர செயலாளர் மூலமா சமாதானம் பேசி பிரச்சனையை  முடிச்சிவச்சிட்டாங்களாம் அதான் சொல்லிகிட்டு இருந்தாரு’

‘நல்ல விதமா முடிஞ்சிபோச்சின்னா நல்லதுதான்’ எதுவுமே தனக்கு சம்பந்தமில்லை என்கிறமாதிரி அழகு  பேசினார்.

அவன்  டியூட்டியின் போது அழகுவிடம் வேறு  எதுவும் பேசவில்லை.

இருவரும்  அலுவலகப்பணியை பார்த்துக்கொண்டே இருந்தனர்.

‘சந்திரன் எம் பொண்ணு அஞ்சாவது படிக்குது. அதுக்கு மகாத்மா காந்திய பத்தி ஒரு  பாடம் வந்திருக்கு. அதுல ஒரு திருக்குறளும்  வந்துருக்கு. அதுக்கு என்ன அர்த்தம்னு விளங்குல, உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்களேன்’

சந்திரன் அவர் சொல்வதை கூர்ந்து கேட்டான்.

‘என்ன குறளு அது’

தன் சட்டைப்பையிலிருந்து ஒரு சீட்டை எடுத்து அழகு  படிக்க ஆரம்பித்தார்.

‘நத்தம் போல் கேடும் உளதாகும் சாக்காடும்

வித்தகர்க்கல்லால் அரிது’

இதுல நத்தம்னா என்ன அதுதான் விளங்குல’

அவனுக்கும் அது புரியாமல்தான் இருந்தது. அந்த வார்த்தையைக் கேள்விப்பட்டிருக்கிறான்.  நெல் சாகுபடி செய்யும்  வயல் பிரிவுகளில் நத்தம் என்கிற சொல் அடிக்கடி புழக்கத்தில் வருவதைக்கேட்டிருக்கிறான்.

‘எனக்கும் அது சரியா புரியல’ அவன் பதில் சொன்னான்.

‘இங்க பெரியார் நகர்ல சபாநாயகம்னு ஒரு ஹெட்மாஸ்டர் இருக்காரு அவர கேட்டா விளக்கம்  சொல்லுவாரு. அவருக்கு போன் போடறேன்’

‘போடுங்க அழகு’

அந்த  ஹெட்மாஸ்டருக்குப்போன் போட்டான்.

‘சார் நான்  டெலிபோன் ஆப்ரேட்டர் அழகு’

‘சொல்லுங்க அழகு’

‘என் பொண்ணு ஒரு  திருக்குறளுக்கு பொருள் கேட்டா. எனக்கு தெரியல’

‘அப்பிடியா அந்த திருக்குறள  சொல்லுங்க’

‘நத்தம் போல் கேடும் உளதாகும் சாக்காடும்

வித்தகர்க்கல்லால் அரிது’

‘எந்த பாடத்துல வருது’

‘மகாத்மா காந்தி பத்தினபாடம்’

‘அது சரிதான், நோகடிக்கிற  துன்பமும், உறுதியாக வர இருக்கிற  சாவும்  அறிவில் சிறந்தவர்க்கு மட்டுமே புகழைத்  தேடித்தரும்.’

‘நத்தம்னா என்ன பொருள் சார்’

‘நந்துதல்ன்னா கஷ்டப்படுதல், துன்பத்தை அனுபவித்தல், அதாவது ஒருவனை நோக அடிக்கின்ற துன்பம்னு பொருள் சொல்லலாம்’

’ரொம்ப நன்றி சார்’

‘மகாத்மா காந்திக்கு  நேர்ந்த  இறப்பு  அவருக்கு இன்னும்  நிலைத்த  பெருமையைக் கூட்டியதுதானே’

‘ஆமாம் சார்.  மதச்சண்டை  எதுவும்  கூடாது. மக்கள் ஒற்றுமையா வாழணும்னுதான்  மகாத்மா காந்தி  தன் உயிரை விட்டு இருக்காரு.’

‘சரியா சொன்னீங்க’

‘அரிச்சந்திரன் பட்ட துயரங்கள் அவன் பெருமையைக் கூட்டியது. அவன்  உண்மை மட்டுமே பேசுவேன்னு எடுத்த  வைராக்கியம்  அவன் வாழ்வில் ஒளி பாய்ச்சியது. அதுதான் நத்தம்போல் கேடுங்கறது’

‘நல்லா புரிஞ்சிடுச்சி சார்’

அவன் அவர்கள் பேசுவதையெ கவனித்துக்கொண்டிருந்தான். சபாநாயகம் என்றவுடன் அவனுக்கு வே. சபாநாயகம் பெயர் நினைவுக்கு வந்தது.

அவனுக்கு இலக்கியத்தில் நாட்டமுண்டு. சில இலக்கிய இதழ்கள் வாங்குவான். அவைகளில் கணையாழியும் ஒன்று. அதனில் சமீபத்தில் ‘அசல் திரும்பவில்லை’ என்னும் குறுநாவல் வெளிவந்திருந்தது. அது போட்டியில் பரிசு பெற்ற குறுநாவல்.   கணையாழி இதழ் ஆண்டுதோறும் குறுநாவல் போட்டி நடத்திக்கொண்டிருந்த சமயம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வே. சபாநாயகம் எழுதிய குறுநாவல்கள் பரிசுக்குத் தேர்வாகியிருந்தன. ’ஆனை இளைத்தால்’, ’இனியொருதடவை’, என்பவை மற்ற இரு குறுநாவல்கள்  அவை அவன் நினைவுக்கு வந்தன. அந்தக்குறுநாவல்களை  படைத்தவர்  வே. சபா. அது ஒருக்கால் இந்த மனிதராக இருக்குமோ என்று அவனுக்கு பொறி தட்டியது.அப்படியெல்லாம் இருக்குமா என்ன? திருக்குறளுக்கு விளக்கம் சொன்னதைக் கேட்ட அவனுக்கு இவர் அந்த வே. சபாநாயகமாகவே இருக்கக்கூடும்  அவருடன் பேசிப்பார்த்தால் தெரிந்துவிடும் என்று மீண்டும் மீண்டும்  தோன்றியது.

அவருக்கு ஒரு போன் போட்டான்.

‘யாரு’

‘நான் சந்திரன் டெலிபோன் ஆப்ரேட்டர் பேசுகிறேன்’

‘இப்பதானே திருக்குறளுக்கு ஒருவர் சந்தேகம் கேட்டாரு’

‘ஆமாம் சார், அவர் கிட்ட நீங்க பேசுனதைக்கேட்டேன். அத கேட்டபிறகுதான் உங்ககிட்ட பேசுணும்னு தோணிச்சு’

‘உங்களுக்கு என்ன  சந்தேகம்’

‘சார். நீங்க வே. சபாநாயகமா’

‘ஆமாம் வே. சபாநாயகம்தான்’

‘அசல் திரும்பவில்லை குறுநாவல் எழுதிய வே. சபாநாயகம் சாரா’

‘அடடா,  கரெக்ட்டா சப்ஜெக்ட்டுக்கு  வந்துட்டீங்க’

‘சார் அப்படியா’

‘அப்படியேதான் . நான்தான் அந்த வேலாயுதம்பிள்ளை. சபாநாயகம்,  வே. சபாநாயகம்’

‘நான் உங்க கதைகளை படிச்சிருக்கேன், ஆனந்தவிகடன்ல ‘ குயில்குஞ்சு’ ஜாக்பாட் பரிசு வாங்கின சிறுகதை எழுதியிருந்தீங்க, நா தொடர்ந்து கணையாழி படிக்கிறவன்’

‘ரொம்ப சந்தோஷம், நீங்க எழுதுவீங்களா’

‘அப்ப அப்ப எழுதுவேன்’

‘என்ன பேருல’

‘எஸ்ஸார்சிங்கற பேர்ல  எழுதுவேன் சார்’

‘நான் உங்க  சிறுகதைகள் சிலத படிச்சிருக்கேன், காரணமாய் பகவானும்னு ஒரு சிறுகதை கணையாழியில பாத்தேன். நல்லா ஞாபகத்திலே இருக்கு’

‘மகிழ்ச்சி சார்’

‘நீங்க எங்க இருக்கிங்க’

‘பூதாமூர்ல, அவுசிங் போர்டு கெழக்கால திருவள்ளுவர்நகர் மூன்றாவது தெருவுல என் வீடு. அந்த முத்து கட்டிடம் தெரியுங்களா, அதுக்கு கிழக்கால ஒரு சப் போஸ்டாபீஸ்  இருக்கும். அதே தெருவு’

‘நா வடக்கு பெரியார் நகர்ல இருக்கன். அந்த ரொட்டிக்கடை ராஜு தெரியுமா, மதிமுக வுல  பிரபலமான தலைவரு அவர் கடைக்கு பின்னால  பாரதியார் வீதி அங்க இருக்கேன்’

‘அவசியம் ஒங்களை வந்து பார்க்கிறேன் சார்’

‘வாங்க  அவசியம் வாங்க.  நா இப்ப வடலூர் டீச்சர் டிரெயினிங் ஸ்கூல்ல உதவிப் பேராசியரா வேல பாக்குறேன்.  தெனம் தெனம் பஸ் ல போயிட்டு வந்துடறேன்’

‘அப்ப அய்யாவை நேராவே வந்து பார்க்கிறேன் சார்’

‘கண்டிப்பா வாங்க இதவிட சந்தோஷம் என்ன இருக்கு’

இருவரும் போனை வைத்துவிட்டார்கள்.

அவன் மிக மகிழ்ச்சியாக இருந்தான். ஒரு எழுத்துப்படைப்பு  வாசித்ததில் பிடித்து அந்த படைப்பாளியை நேரில் சந்தித்து உரையாடுவது என்பது மிகப்பெரிய கொடுப்பினை. அது வாய்க்க இருப்பதை எண்ணி எண்ணிப் பெருமைப்பட்டான்.

அடுத்த நாள் ஒரு சனிக்கிழமை. சபாநாயகம் சார் நிச்சயம் வீட்டில் இருப்பார். அவரைப்போய்ப் பார்த்துவரலாம் என முடிவு செய்தான். அவர் வீடு மிஞ்சிப்போனால் ஒரு கிலோமீட்டர் இருக்கலாம். தனது சைக்கிளை எடுத்துக்கொண்டான். வடக்குப் பெரியார்நகர் நோக்கி சைக்கிளை மிதித்தான். ராஜுவின் ரொட்டிக்கடை தாண்டினான். சந்திரா பேக்கரி என்கிற பெயர்ப்பலகையைப்பார்த்துக்கொண்டான். பாரதியார் வீதி எங்கே என்று தேடினான். காம்பவுண்ட் சுவரில் பாரதியார் தெரு என்று எழுதியிருந்த வீட்டின் முன்னால் நின்று பார்த்தான். அந்த வீட்டு கேட்டுக்கு அருகில் ஒரு சிறிய கல்வெட்டு சுவரில் பதித்து  இருந்தது. அதனைப்படித்துக்கொண்டான். வே. சபாநாயகம் தலைமை ஆசிரியர்,   என்று எழுதி தேவகி என்றும் எழுதியிருந்தது.

‘யாரது’ ஒரு கம்பீரமான குரல் கேட்டது.

‘சபாநாயகம் சாரை பாக்கணும்’

‘வாங்க வாங்க  நான்தான்’

‘நீங்க’

‘டெலிபோன் ஆப்ரேட்டர் சந்திரன்’

‘வாங்க வாங்க’ என்றார் சபா சார்.

நீட்டு வாக்கில் அடியில்  உருளை பொறுத்தப்பட்ட  தள்ளு இரும்பு கேட் இருந்தது. அதனை சபாவே தள்ளி விட்டார்.

அவன் சபா வீட்டினுள் நுழைந்தான்.

‘வாங்க மெத்தைக்கி போயிடலாம்’

அவன் முதல் மாடிக்கு அவரோடு சென்று அமர்ந்தான். அறை முழுவதும் புத்தகங்கள் கட்டுக்கட்டாய் அடுக்கியிருந்தன. இலக்கிய இதழ்கள் மேசையில் அடுக்கப்பட்டிருந்தன. அலமாரிகள் முழுவதும் புத்தகங்கள் அழகாக அடுக்கப்பட்ட்யிருந்தன. கருப்பு மொத்த டெலிபோன் ஒன்று மேசையின் ஓரமாய் அமர்ந்திருந்தது.

‘என்ன சேதி  அப்புறம் சொல்லுங்க’

‘உங்கள சந்திக்கிறதுதான்  சேதி’

‘அது இருக்கவே இருக்கு’

‘உங்கள் குறுநாவல் ‘ அசல் திரும்பவில்லை’ ரொம்ப பிடிக்கும் சார். அதுல ஒரு பெரியம்மா மாடு மேய்க்கும் வேலைக்கு வருகிற மாட்டுக்காரனிடம் காலையில் அவன் வருகையைப்பார்த்து  இதான் மாட்ட மேய்ச்சலுக்கு ஓட்டிக்கிட்டு போகிற லச்சனமா, மணி  என்ன ஆவுது, மாடுவ பசியில கெடக்கு இப்பவே மதியம் ஆவப்போவுது சூரியன் உச்சிக்கு  நேரா வரப்போறான் என்பாள். மாலையில் மாடுகளை மேய்த்துவிட்டு  திரும்பவும்  அவன்  வீட்டுக்கு ஓட்டி வருவதைப்பார்த்துவிட்டு,’ மாடு வவுறு அடஞ்சிதான்னு பாத்தியா, மணி என்னா ஆவுது, சூரியன் அதுக்குள்ள  எறங்கிடிச்சா,  அதுவும் உறுமத்துக்கேவா மாடுவள  இப்படி  வூட்டுக்கு ஓட்டியாந்துடுவ’ என்பாள். அந்த பெரியம்மாவுக்கு கடியாரம் என்பது  காலையில் வேகம் வேகமாய் ஓடிவிடும், மாலையிலோ ஓடவே தயங்கித் தயங்கி நிற்கும்’

‘கை குடுங்க’ சபா சார் அவனுக்குக் கை கொடுத்தார்.

‘இப்பதான் எனக்கு மனசு நெறஞ்ச மாதிரி இருக்குது’

‘யாரு சார் கதையில் வரும்  அந்த ஆயா’

‘வேற யாரு எங்க தாயார்தான்’ சபாசார் சிரித்துக்கொண்டார்.

‘ஒங்க கையாலே ஒரு புத்தகம் குடுங்கசார் படிச்சிட்டு கொண்டு வந்து குடுத்துடறேன்’

தன் புத்தக அலமாரியிலிருந்து ‘துப்பறியும் சாம்பு’ புத்தகத்தை எடுத்து’ இத படிச்சிட்டு பத்திரமா கொண்டு வாங்க, நா யாருக்கும் புத்தகம் இரவல் குடுக்கறது இல்லே இரவல்  வாங்கவும் மாட்டேன்’

அவனுக்கு சார் கறாராய்ப்பேசுவது என்னமோபோல் இருந்தது.

தேவன் எழுதிய அந்த புத்தகத்தை அவன் ரொம்ப நாளாய்த்தேடிக்கொண்டுதான் இருந்தான்.

‘புத்தகம் அழுக்காகப்பிடாது மூல மடங்காம திரும்ப வரணும், எந்த எடத்திலயும் பேனாவால, இல்ல பென்சிலால கிறுக்கிடாதிங்க’ அழுத்தமாய்ச்சொன்னார்.

‘தேவகி தேவகி’ என்று குரல் கொடுத்தார். அது தன் மனைவிக்கு ஏதும் சங்கேத மொழியாகவும் இருக்கலாம் அவன் நினைத்துக்கொண்டான்.

அவனும் அவரும் மாடிப்படிகளில் இறங்கினர். சபா சார் வளர்க்கும் நாய் வாலைக்குழைத்துக்கொண்டு கம்பீரமாய் நின்றது. மாடிக்குப்போகும் சமயம் அவன் அதனைப்பார்க்கவில்லை. சபா சார் மனைவி தரைதளத்தில் ஹாலில் நின்றுகொண்டு’ வாங்க சார் டீ சாப்பிட்டு விட்டு போகலாம்’ என்றார்.

’வாங்க சந்திரன்’ என்றார் சபாசார்.  அவர் தன் மனைவியிடம் அவனைப்பற்றி அவன் வர இருப்பது பற்றி முன்னமே சொல்லியிருக்கவும் கூடும்

டீ இரண்டு கோப்பைகளில் இருந்தது. சர்க்கரை ஒரு டப்பாவில் இருந்தது.

‘எவ்வளவு  சக்கர வேணுமோ போட்டுகுங்க நாங்க அது போடுறது இல்ல,  சர்க்கரை ஒவ்வொருத்தருக்கு ஒரு மாதிரி’

அவர் மனைவி சொன்னாள். இருவரும் தேநீர் அருந்தினர்.’ நா ஜீனி போட்டுகறது இல்ல’ என்றான் அவன்

‘ஏதும் சக்கரை உண்டா’

‘இல்ல கொஞ்சம் முன் ஜாக்கிரதயா’

‘முன் ஜாக்கிரத முத்தண்ணா’

‘ஆமாம் சார்’

‘வர்ரது வரும்தான்’

‘கொஞ்சம் லேட்டாவாவது அது வரட்டும்னு’

‘நீங்க இன்னும் கொஞ்சம் வயசானவரா இருப்பிங்கன்னு நினச்சேன் ஆனா அப்பிடி இல்லே’

ஒரு பதினைந்து வயது அவனுக்கும் அவருக்கும் வித்தியாசம் இருக்கலாம் அவன்  எண்னிக்கொண்டான் . கேட்கவில்லை. வயது அவர் அவரே சொன்னால்தான் சரி. அவன் கணக்கு அப்படி.

ஹாலில் தனது தந்தையின் படத்தினை வரைந்து மாட்டியிருந்தார். பக்கத்தில் தனது படத்தினையும் மாட்டியிருந்தார். இரண்டுமே அழகான  கோட்டோவியமாக இருந்தது. தந்தையின் பெயர் தெற்கு வடக்கு புத்தூர் வேலாயுதம் பிள்ளை என்று போட்டிருந்தது. தலையில்  சிண்டு வைத்திருந்தார்.

‘நானே வரைஞ்சது’

‘இரண்டுமே’

‘ஆமாம்’

அற்புதமாக படம் வரைந்திருந்தார் சபா. அவர் நல்ல ஓவியர் என்பதும் போட்டோகிராபர் என்பதும் அவனுக்குக் கூடுதல் தகவல்கள்.

‘குடும்பத்த பத்தி சொல்லுலயா’ என்றாள் ஆச்சி.

‘ரெண்டு பையங்க   ஸ்கூல்ல படிச்சிகிட்டு இருக்காங்க’

‘ஒரு பொண்ணு சீஷல்ஸ்ல இருக்கு. மாப்பிள்ளை சிங்கப்பூர்ல வக்கீல். என் பையன் உள்ளூர்ல ஒரு பேங்குல வேல பாக்குறான்’

‘ரொம்ப சந்தோஷம் சார்’

அந்த ஆச்சி ஒரு  மஞ்சள் பையில் கொய்யாபழங்களும், மாங்காய்கள் சிலதும் போட்டுக்கொடுத்தாள்.

‘ரொம்ப தாங்க்ஸ்ங்க’ அவன்சொன்னான்

‘கொய்யா மா ரெண்டுமே வூட்டுல இருக்கு’ ஆச்சி சொல்லிக்கொண்டாள். சபா சார் அதனில் எல்லாம் பட்டுக்கொண்டமாதிரியே தெரியவில்லை.

’நா வரேன்  சார், வரேங்க’

சபா சார் கேட் வரை வந்து வழியனுப்பினார். அவனுக்கு ஒரு புது உலகமே திறந்துவிட்டமாதிரிக்கு உணர்ந்தான்.

‘அடிக்கடி போன்ல பேசுங்க சந்தர்ப்பம் கெடைக்கும்போது சந்திக்கலாம்’ சபா சார் சொல்லிக்கொண்டார்.

அவன் தன் சைக்கிளை உருட்டினான். ராஜு ரொட்டிக்கடைக்கு வந்தான். நகரில் பிரபலமான ரொட்டிக்கடை அது. வீட்டிற்கு பப்ஸ் சிலதுகள் வாங்கினான். ராஜுதான் அன்று கடையில் இருந்தார். இலங்கத்தமிழர் பிரச்சனையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் அவர். அவர்களுக்கு ஆதரவாக நடைபெறும் அத்தனை நிகழ்ச்சிகளிலும்  நிறைவாகப் பங்கேற்பார். அவர் கடைக்கு முன்பாக  வாயிலில் உதய சூரியன் சின்னம் சலவைக்கல்லில் ஓவியமாக வரையப்பட்டு அழகாகக் காட்சி தந்தது.  ராஜு வைகோவுக்கு ஆதரவாளர்.   திமுகவை விட்டு  வைகோ பிரிந்தபோது  ராஜுவும்   மதிமுகவுக்கு வந்தார்.

‘உதய சூரியன் சின்னத்த பாக்குறீங்களா’ 

அவன் தரையில் இருந்த சலவைக்கல் ஓவியத்தை முறைத்துப் பார்த்துக்கொண்டே இருந்தான்.

‘ஆமாம்’ என்றான்.

‘ஈவெரா பெரியார் கூட  அடிநாள்ள காங்கிரஸ் காரர்தான், அது வரலாறு’

அவன் சரி என்று சொல்கிறமாதிரிக்குப் புன்னகை  செய்தான்.

‘எங்க இவ்வளவு தூரம்’

‘சபாநாயகம் சார பாக்க வந்தேன்’

‘அப்பிடியா என்ன விசேஷம்’

‘அவரு பெரிய எழுத்தாளராச்சே அதனால’

‘உங்களுக்கும் இலக்கிய ஈடுபாடெல்லாம் உண்டா’

‘ஆமாம் சார்’

‘நல்ல சேதி,  எழுத்துப்பணி அது இது உண்டுமா’

‘கொஞ்சம் கொஞ்சம்’

‘ரொம்ப அடக்கமா சொல்லிகிறிங்க, நல்லா எழுதுங்க, தமிழுக்கு இணையா மொழி உலகத்துல எங்க இருக்கு’

‘தமிழுக்கும் அமுதென்று பேர்’  அவன் சொன்னான்.

‘பாவேந்தர்  கவிதை வரி’ என்றார் ரொட்டிக்கடை ராஜு.

 அவரிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டான்.

நேராக சைக்கிளை வீட்டிற்கு ஒட்டினான்.  அருகில் இருக்கும் சுரேஷ் தியேட்டரில் பதினோரு மணி காட்சி விட்டிருப்பார்கள். மக்கள் கூட்டமாய் சாலையில் போய்க்கொண்டிருந்தார்கள்.

அவன் அவர்களைத்தாண்டிக்கொண்டு தன் வீட்டிற்குப்புறப்பட்டான். சைக்கிளில் சபா சார் வீட்டு ஆச்சி கொடுத்த பழப்பையை  பத்திரமாக மாட்டியிருந்தான். அதனை ஒரு முறை  சரிபார்த்துக்கொண்டான்.

பெரியநெசலூர் பெரியசாமி கறிகாய் ஏதேனும் வாங்கவேண்டும் என்று பாலக்கரை நிறுத்தத்திற்கு வந்தார். அருகில் உள்ள செல்வராஜ் பூங்காவில்தான் உழவர் சந்தை நடைபெறுகிறது. சில கறிகாய்களை வாங்கிக்கொண்டார். விவசாயிகள்  விளை நிலத்திலிருந்து கொண்டு வருபவை அவை. வாழைக்காய் வாழை இலை வாங்கவேண்டுமென்றால் அனேகமாய் அனைவரும் உழவர் சந்தைக்குத்தான் வருகிறார்கள். மறுநாள் அமாவாசை என்பதால் உழவர் சந்தையில் சற்று கூட்டம் அதிகமாகவே இருந்தது. உழவர் சந்தையிலிருந்து வெளியே வரும் தருணம் திராவிடம் லாரி ஏஜன்சீஸ் ஓனரை எதேச்சையாகப்பார்த்துவிட்டார் பெரியசாமி.

‘வாங்க பெரியசாமி’

‘வணக்கம் சார்’

‘வணக்கம் உங்ககிட்ட ஒரு சேதி சொல்லணும்னு  நெனச்சேன். நீங்களே நேர்ல ஆப்டுடுங்கே, நல்லது’

‘அப்படி என்ன சேதி’

‘அத போன்ல பேசவேணாம்னு இருந்தேன்’

‘சொல்லுங்க சார்’

‘அண்ணிக்கு உங்க ஆபிசுலேந்து என்னண்ட  ராங்கா பேசுன ஆளு கம்யூனிஸ்ட் கட்சி காரங்களுக்கு வேண்டியவருபோல. பெரியார் நகர் தெக்குல இருக்குற என் ஆர் ஆர் என்னண்ட பேசுனாரு. மாவட்ட   செயலாளர்  கம்யூனிஸ்ட்  கட்சி அவருகிட்ட  சொல்லி இருக்காராம் ஒண்ணும் பிரச்சனை வேண்டாம் சமாதானமா போயிடலாம்னு. அவுரு என்னண்ட பேசினாரு. வருத்தம் தெரிவிச்சாரு. நானும் என்னுடைய வருத்தத்தை சொன்னேன். நம்ம மேலயும் பெசகு இருக்கு.  எனக்கு  என் அவசரம் அர்ஜெண்ட்ல தப்பா பேசிட்டேன்.’

‘ரொம்ப சந்தோஷம்’

‘அப்பிடி என்னண்ட பேசுனது யாரு எவுரு அவுரு பேரு என்னங்கறத நானும் கேக்குல அவுரும் சொல்லுல’

‘அதெல்லாம்  இனி எதுக்கு  விடுங்க’

‘இப்ப பிரச்சனை முடிவுக்கு வந்துபோச்சி’

‘ஆமாம் பெரியசாமி, ஒண்ணு  எனக்கு தெரியணும்’’

‘என்ன  தெரியணும் சார்’

‘இப்பிடி என் ஆர் ஆர் மூலமா ஒரு சமாதானம் வர்ரதுக்கு நீங்கதான் ரூட் போட்டு குடுத்து இருக்கணும்னு நெனக்கிறேன்’

‘அதெல்லாம் இல்லங்க.   சம்பந்தப்பட்ட ஆப்ரேட்டர்கிட்ட    அய்யா விசாரிச்சதைச் சொன்னேன். சம்பந்தமே இல்லாத ஆப்ரேட்டர் சந்திரனை இதுல யாரோ மாட்டி வுட்டுட்டாங்க. அவுர நீங்களும்  கூப்பிட்டு விசாரிக்கும்படி ஆயிட்டுது. அதுல அவுருக்கு மனம் சங்கடப்பட்டிருக்கும்னு நெனக்கிறேன்’

‘அப்படியா.  எது எப்படியோ  இப்ப  ஒரு சமாதானம் வந்தாச்சி. சரிதானே’

‘இப்பவாவது சொல்லுங்க யாரு உங்க கிட்ட சந்திரன் தான் அப்பிடி ராங்கா பேசுனதுன்னு தவறா தகவல் சொன்னது’

‘அது வேணாம் பெரியசாமி’

‘கொஞ்சம் ஜாக்குரதையா இருக்குலாம் அதுக்குதான் கேக்குறேன்’

‘சரியாதான் கேக்குறீங்க, அந்த சந்திரன்கிட்டயே அத  சொல்லிடுறேன். அவுருதான் ஜாக்குரதையா இருக்குணும்’

‘அதுவும் சரி அவுருகிட்டயாவது  அவர்  யாருன்னு சொல்லுங்க’

‘கண்டிப்பா சொல்வேன்’

‘நாளைக்கி அமாவாசை, வாழைக்காய் வாழையில வாங்க வந்தேன் உழவர் சந்தைக்கி’

‘அதுவும் சரிதான்’

‘சார் உங்ககிட்ட ராங்கா இன்ஃபர்மேஷன் கொடுத்த  அந்த ஆளு கிட்ட  எச்சரிக்கையா இருங்க அதான் சொல்லணும்னு நெனச்சேன்’

‘அது எனக்கு தெரியாதா நா பாத்துகறேன்’

அவர் அவருடைய லாரி ஆபிசுக்குச் சென்றுவிட்டார். பெரியநெசலூர் பெரியசாமி தன் இல்லம் நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

திராவிடம் லாரி ஏஜன்சீஸ் ஓனர்  அடுத்தநாள் நாள் சந்திரன் சைக்கிளில் அலுவலகம் செல்லும்போது நிறுத்தி நடைபெற்ற விஷயத்தை சொல்லிவிடவேண்டும் என்று தீர்மானித்தார். சந்திரன் அப்படியே  நாள் சைக்கிளை மிதித்துக்கொண்டு அலுவலகம் செல்லும்பொழுது ஒருவர் இடை மறித்தார்.

‘சார் கொஞ்சம் நில்லுங்க’ என்றார் லாரி ஷெட்டிலிருந்து வந்த ஒரு நபர்.

சந்திரன் வண்டியை நிறுத்தினார்.

‘யார் நீங்க உங்களுக்கு என்ன வேணும்’

‘லாரி ஷெட் வரக்கும் வாங்க’

‘யார் கூப்பிட்டா’

‘திராவிடம் லாரி ஏஜன்சீஸ் ஓனர்தான்  உங்கள அழச்சிகிட்டு வரசொன்னாங்க’

சந்திரனுக்கு சொர சொர என்று இருந்தது. பிரச்சனை முடிந்துவிட்டிருக்கும் என நினைத்திருந்தவனுக்கு திடீரென அச்சம் பற்றிக்கொண்டது. அந்த லாரி ஷெட்டினுள் இருக்கும் இரண்டு தண்டனை அறைகள் மனதிற்குள் நிழலாய்த்தெரிந்தன.

‘வாங்க வாங்க’

‘என்ன விஷயம்’

‘எங்கிட்ட சொல்வாங்களா, இட்டார சொன்னா வந்து  உங்க கிட்ட சொல்வேன் அவ்வளவுதான்’

சந்திரன் லாரி ஷெட்டை நெருங்கினான். முழுக்கை சட்டை பேண்ட் போட்டுகொண்ட  ஒருவர் தலையை வாரிக்கொண்டு பளிச்சென்று வெளியே வந்துகொண்டிருந்தார். தண்டனை அறையிலிருந்துதான் அவர் வெளிவந்திருக்க வேண்டும் என்று அவனுக்குத்தெரிந்தது.

லாரி ஏஜன்சீஸ் ஓனர் சேரில் அமர்ந்திருந்தார்.

‘வாங்க சார்’

‘வணக்கம் சார்’

‘உக்காருங்க சந்திரன்’

அவன் காலியாக இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான். லாரி ஏஜன்சீஸ் ஓனருக்கு தலைக்கு மேலாக  மாட்டப்பட்டிருந்த சுவாமி படங்களையெல்லாம் ஒரு முறை பார்த்துக்கொண்டான். அவை உயிர்பெற்ற கடவுள் உருவங்களாய்க்கூட அவன் கண்ணுக்குத்தோன்றியது. ‘இது எல்லாம் நியாயமா’ என அந்தப்படங்களைப்பார்த்துக் கேட்டுக்கொண்டான்.

‘அன்னிக்கி எங்கிட்ட ராங்கா பேசுனது யாருன்னு தெரிஞ்சி போச்சி. நம்மூர் என் ஆர் ஆர் மூலமா சமாதானம் பேசி பிரச்சனை முடிஞ்சிபோச்சி. எந்நேரமும் தோளில சிவப்பு துண்டோட வீதியில வரும்  அவர தெரியாதவங்க இந்த ஊர்ல யாரு இருப்பா. என் கிட்ட போனில  தப்பா பேசின அவரே மாவட்டசெயலாளர் பொதுவுடமைக்கட்சி கிட்ட  நடந்த விஷயத்தை முழுசா  சொல்லியிருக்காரு. மாவட்டசெயலாளர்  இந்நகர பொதுவுடமைக்கட்சி செயலாளர் என் ஆர் ஆர் கிட்ட சொல்லி என்னண்ட பேச சொல்லியிருக்காரு. எப்பிடியோ விஷயம் ஒரு வழியா  முடிஞ்சி போச்சி’

‘ரொம்ப நல்லது சார்’

‘இதுக்கெல்லாம் நடுவுல நல்ல மனசோட வேல பாத்தது  அந்தப்பெரியநெசலூர் பெரியசாமி உங்க ஆபிசுக்காரருதான்’

‘உங்களுக்கு அவர் பழக்கமா’

‘நெல்லு புடிக்க அவர் ஊருக்கு  வாடிக்கையா   நா போவேன் வருவேன் அதான்’

‘உங்க கிட்ட  நான் தான் அப்பிடி பேசுனேன்னு  தப்பா சொன்னவர் யாருன்னு தெரிஞ்சிக்கலாமா சார்’

‘பிரச்சன முடிஞ்சிபோச்சி, இனிமேலுக்கு என்ன, உங்க கையில மட்டும் சொல்றன் வேற யாருக்கும் சொல்ல மாட்டன். அந்த  தொளார் அழகு  டெலிபோன் ஆப்ரேட்டர்தான் என்னண்ட சொன்னாரு  நீங்கதான்  தப்பா பேசுனதா.  எதுக்கும் அவரண்ட  நீங்க கொஞ்சம்  எச்சரிக்கையா இருங்க சந்திரன்’

‘நானே நெனச்சன் அவரா இருக்கலாம்ன்னுட்டு’

‘அதெப்படி’

‘அவர் உங்க கிட்ட அப்படி  சொன்னதிலேந்து  என்ன பாக்கிறப்ப எல்லாம்   ஆப்ரேட்டர் அழகு முகம் நல்லாவே இல்ல. அவர் நடப்பும் எனக்கு  இந்த சேதிய சொல்லிகிட்டே இருந்துது. நானும் அவர்கிட்ட எதுவும் கேக்குல. எப்படி அப்படி  கேக்கவும் முடியும்’

‘இனியும் கேக்கவே  வேணாம்,  இது பத்தி   கிளறவும் வேணாம்’ என்றார் லாரி ஏஜன்சீஸ் ஓனர் அவனிடம்.

‘ நிச்சயமா அவரண்ட எதுவும் கேக்க மாட்டன்’

‘சரி நீங்க போவுலாம், உங்களுக்கு டூட்டிக்கு நேரமாகப்போவுது’

‘வணக்கம் நான் வரங்க’ சொல்லிய சந்திரன் ஆபிசுக்குக்கிளம்பினான். சைக்கிளில் ஏறி அமர்ந்துகொண்டான். துப்பறியும் சாம்பு புத்தகம் சபா சாரிடம் வாங்கி வந்தது சைக்கிள் காரியரில் பத்திரமாக இருந்தது. அதனைப்படித்து முடித்தாயிற்று. இப்படிக்கூட எழுத முடியுமா  அவன் வியந்துபோனான். நகைச்சுவையை காவியமாக்கியவர் தேவன். அப்புத்தகத்தை சபா சாரிடம் திரும்பவும் கொண்டு சேர்க்கவேண்டுமெனத் தீர்மானித்தான்.

 ஆப்ரேட்டர் தொளார் அழகு  ஒரு திருக்குறளுக்கு  சந்தேகம் கேட்கப்போய்தான்  அந்த எழுத்தாளர்  வே. சபாநாயகம் அவனுக்குத் தொடர்பாகக் கிடைத்தார். பல்லாண்டுகாலம் விருட்சமாய் இருக்கப்போகும்  ஓர் இலக்கண நட்பு. அதற்கு  வித்தாகியது அந்தத் தொளார் அழகு வழியே தனக்குக்கிடைத்த  அந்தப்  பெரிய  உள்ளத்தின் உறவல்லவா.

அந்தத்தொளார் அழகு தான்  அவனைப்பற்றித் தவறாக  லாரி ஏஜன்சீஸ் ஓனரிடம் சொல்லியிருக்கிறார் அது ஏன் என்றுதான் இன்னும் அவனுக்குப் பிடிபடவில்லை. மனித வாழ்வில் அவனுக்கு இன்னும்  எத்தனையோ விஷயங்கள் பிடிபடாமல் இருக்கத்தான் செய்கின்றன.

-----------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment