Wednesday, September 25, 2024

கதை- பிசகு

 

 

 

 

     பிசகு                                                                                        

கொனஷ்டை  ஒரு எழுத்தாளரின் புனை பெயர். அவர் யாரென்று கேட்கிறீர்களா   சென்னையில் உயர்நீதிமன்ற  நீதிபதியாய் உத்யோகம் பார்த்த சீனுவாசாச்சாரியார் அவரே தான். அழகிய சிங்கரின் இணையதள ’ கதை புதிது’ நிகழ்வில் பேசுவதற்கு அவரின் கதைத்தொகுப்பிலிருந்து சில கதைகளைத் தேர்வு செய்து கொடுத்திருக்கிறார்கள்..

எனக்குக் கொனஷ்டையின் ’துப்பறிவு’ என்னும் சிறுகதையை அழகிய சிங்கர் அனுப்பியிருந்தார். அந்தக்கதை ஏ 4  சைசில்  பத்து பக்கத்திற்கு வந்தது. இரண்டு மூன்று பக்கங்கள் மங்கலாகவே தெரிந்தன.  அவைகளை ஒரு ஊகமாய்ப்படிக்கலாம் அவ்வளவே. எப்படியோ கதையைப்படித்து முடித்தேன். இரண்டு மூன்று தடவை மொபைல் போனிலேயே  கதையை வாசித்துவிட்டேன். கண் வலிக்கத்தான் செய்தது. இதெல்லாம் பார்த்தால் முடியுமா.

 துப்பறிவு   கதையில் வரும்  கணவனும் மனைவியும் தடக் புடக் என்று நடந்து கொள்கிறார்கள். எந்த வீராப்புக்கும் குறைச்சல் இல்லை.கற்பனை செய்து  விஷயத்தை நீட்டிச் சொல்வதில் ஒருவருக்கொருவர் போட்டாபோட்டி நடக்கிறது. மனைவிபெயர் லலிதா. அனேக தமிழ்க் கதைகளில் இந்த லலிதா என்கிற பெயர் தொத்திக்கொண்டேதான்   வருகிறது. மனைவி ஒரு வீணை வித்வானிடம் பாட்டு சொல்லிக்கொள்கிறாள்.’ சச ரி ரி கக மம பப தத நிநி’ என்கிற ஜண்டை வரிசை பாடம் நடக்கிறது.கணவனுக்கோ அந்த இசைப்பாடமே பிடிக்கவில்லை. மனைவியை கத்தி கத்தி அழைக்கிறான்.அவள் எதிரே வந்து நிற்கிறாள்.’பாட்டுக்கார வாத்யார் போயாச்சா’ என்கிறான்.’’ நீங்க என்ன கூப்பிட்ட உங்க குரல்  சுரத்தைக் கேட்டதுமே புறப்பட்டு விட்டார்’ என்று கச்சிதமாய்ப் பதில் சொல்கிறாள்.

அவர்கள் வழ்ந்துவரும் தெருவின் கோடியில் ரோஸ் கலர் பெயிண்ட் அடித்த ஒரு வீடு. அந்த  வீட்டில் திருடு போய் விட்டதாகக் கதையை கதா நாயகன்  ஆரம்பிக்கிறார். திருடு போன சாமான்களில் விலை உயரந்த கமல மோதிரமும் உண்டென்று அவன் சொல்கிறான். கமல மோதிரம் போட்டுக்கொண்டு   வீணை வாசித்தால் மிகச்சிறப்பாக இருக்குமென்றும் ஆகக் கமல மோதிரம் வேண்டுமென்றும் அவள் முன்னமே கோரிக்கை வைத்தவள்.   இப்படியெல்லாம் சொன்னால் தான்  அவள் கமல மோதிரம் வேண்டுமெனத்திரும்பவும்  கேட்கமாட்டாள் என்கிற கேவலமான  எண்ணமா  தன்  கணவனுக்கு என்றுகூட அவள்  கேட்டு விடுகிறாள். அந்த ரோஸ் கலர்  வீட்டில் குடியிருப்பவர்களைத் தனக்கு தெரியும் என்றும் அந்த வீட்டு  மாமி தனது பாட்டிக்கு சிநேகிதி என்றும் நடந்துவிட்ட  இந்த நிகழ்வை தான் போய் விசாரித்துவிட்டு வருவதாய் அவன் மனைவி புறப்படுகிறாள்.

கிளப் செகரட்ரியாக இருக்கும் அவள் தன் அலுவலகப்பையனை வைத்து முதலில் அங்கு  என்ன நடந்தது என்று விசாரித்து வரச்சொல்லிவிட்டு பின்னர் தான் போகலாம் என முடிவு செய்கிறாள். ரோஸ் கலர் வீட்டில் கமல மோதிரம் திருடிய திருடன்  விலை உயர்ந்த பச்சை மோதிரம் ஒன்றை  அதே இடத்தில் வைத்துவிட்டுச்சென்றுவிட்டானாம். இதை  அவர்களே  தன்னிடம் சொன்னதாக  மனைவி  கணவனிடம் சொல்கிறாள்.

 தனது  நண்பனிடம் இருந்து  போலிஸ் உடையை  இரவல் வாங்கி போட்டுக்கொண்டு இன்ஸ்பெக்டர் கணக்காய் தானே போய் அந்தத் திருட்டை விசாரித்துவிட்டு வந்ததாகவும் அப்போது பச்சை மோதிரத்துக்குப் பக்கத்தில் ஒரு விரல் வெட்டப்பட்டு  அங்கேயே  வைக்கப்பட்டுள்ளதாகவும் அவன் வந்து தன் மனைவியிடம் சொல்கிறான்.

 அவளோ திரும்பவும் ரோஸ் கலர் வீட்டுக்குச்சென்று தனது கணவன்தான் போலிஸ் உடையில் வந்து திருட்டை விசாரித்ததாகச்சொல்கிறாள். அவர்கள் இந்த வெட்டப்பட்ட விரலை அவள் கணவனே  அந்தப்பெட்டியில் கொண்டு வந்து  வைத்துவிட்டுச் சென்றிருக்கலாம் என்கிறார்கள்.அவள் கணவனின் இந்தச்செயல் குறித்து போலிசில் புகார் செய்ய இருப்பதாகச்சொல்கிறார்கள். லலிதாவுக்கு அச்சம் வந்துவிடுகிறது. ’ நாம் இருவரும் இந்த  ஊரைவிட்டு  இப்போதே ஓடிவிடுவோம்’  சொல்லிய அவள் அவர்களது துணிமணியை புதிய சூட்கேசில்  அடுக்குகிறாள். இஸ்திரி  மடிப்பு செய்யப்பட்ட தனது சட்டை கலைக்கப்படுவது கண்டு அவனுக்கு மனம் பதறுகிறது.

 அவன் இந்தத்தெருவில்  ரோஸ் கலர் வீடும் இல்லை. அங்கு யாரும் குடிவரவும் இல்லை  அந்த வீட்டில் கமல மோதிரம்  திருடு போகவும் இல்லை.  இன்னும் இவை  இவை எல்லாமே மொத்தமாய்  டூப் என்கிறான்.

 ஒரு மோதிரத்தை    தன்மனைவிக்கு அவள்  கேட்டபடியே  வாங்கி வந்து வீட்டில் வைக்கிறான்.

அவளோ ‘நான் தூங்கும் போது நீங்கள் விரல் அளவு எடுத்தது எனக்குத்தெரியும்’ என்கிறாள்.

’விரல் அளவே நான்  எடுக்கவில்லை.  தோராயமாய் ஒரு  அளவில் வாங்கியதே இந்த மோதிரம்’ என்கிறான் அவன்.   அவ்வளவுதான் கதை.

இந்தக்கதையத்தான் நான் இணைய தளத்தில் அன்பர்களுக்குச்சொல்லவேண்டும்.  துப்பறிவு  என்கிற  தலைப்புக்கும் இந்தக்கதைக்கும் என்ன சம்பந்தமோ, நீங்கள்  யாரேனும் துப்பறியலாம்.

அன்று மதியம் சாப்பிட்டு எழுந்தேன். பல்லில் ஏதோ ஒட்டிக்கொண்ட மாதிரி தெரிந்தது.  வலி நம நம என்று  எடுக்க ஆரம்பித்தது. கை  விரலால் ஒன்றும் காரியம் ஆகவில்லை.  சுவாமி பிறையில் ஊது வத்தி எரிந்து பாக்கி இருக்கும் அதன் கட்டைக்குச்சியில் ஒன்றை எடுத்து வந்தேன். பல்லில் உறுத்துகின்ற இடத்தில்  வைத்து குத்தி குத்திப் பார்த்தேன்.  மாட்டிக்கொண்ட ஒன்றும் வெளிப்படவில்லை. பல் லேசாக ஆடுவதைக் கவனித்தேன்.  ஆட்டிப்பார்த்தால் எல்லா பல்லுமே ஆடுவதுபோல்தான் தெரிந்தது.  பல் வலி குறைந்த பாடில்லை. மணி  மலை ஐந்தரை. இன்னும் ஒரு மணி இருக்கிறது. ஆறரைக்குத்தான் இந்தக் கொனஷ்டையின் கதையை ஆன் லைனில் சொல்லவேண்டும். அதற்குள்ளாக  நாம்  பல் டாக்டரிடமிருந்து திரும்பி வந்து விடலாம்.  பல் டாக்டர் என்ன ஒரு பத்து நிமிடம் எடுத்துக்கொள்வாரா அதற்கு மேல் என்னவாகிவிடப்போகிறது. பாட்டி வைத்தியமாய் கிராம்பு ஒன்றை பல் வலிக்கின்ற இடத்தில் சற்று நேரத்திற்கு வைத்துக்கொண்டால் பல் வலி நின்று போய்விடலாம். அது எல்லாம்  சரியான  தீர்வா என்ன என்று குரங்கு மனம் யோசனை சொல்ல ஆரம்பித்தது.

நான் குடியிருக்கும் பழைய பெருங்களத்தூரிலிருந்து தாம்பரம் போனால்தான் பல் டாக்டரைப்பார்க்கமுடியும். விவரமான பல் டாக்டர் அங்கேதான் இருக்கிறார். என் வீட்டு  அருகில் போர்டு போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கும்  பல் டாக்டர்களுக்கெல்லாம் அவ்வளவாக விஷயம் போதாது என்பது ரொம்ப நாளாக என் அபிப்ராயம். இதுகள் எல்லாம்   மனப்பிராந்தியோ  என்றுகூட எனக்குத்தோன்றும். சோதிடம் பொய் என்று வியாக்கியானம் செய்ய முடிகிறது. யதார்த்தத்தில் அஷ்டமி நவமி  திதி நாட்களில் ஒரு திருமணம் கூட கல்யாண மண்டபத்தில் புக் ஆவது இல்லையே அது மாதிரிதான். கருப்புக்கொடி வைத்துக்கொண்டு  சுனா மனாவைத் தூக்கிப் பேசுபவர்கள் ராகு கால நேரத்தில் தாலி கட்டுவது எல்லாம் ஒரு காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றும் நிகழ்ந்ததுண்டு. நானும் பார்த்தும் இருக்கிறேன். அது கூட இப்போது எல்லாம்  நிகழமாட்டேன் என்கிறது. அதுதான் யதார்த்தம். அறிவியல்   ஆராய்ச்சிகள்   அன்றாடம்  விரிந்துகொண்டே போகும்  மூட நம்பிக்கைகள்  மட்டும் சும்மா இருக்குமா என்ன.

என்னுடைய டூவீலரை எடுத்துக்கொண்டு தாம்பரம் கிளம்பினேன். ஹெல்மெட் போட்டுக்கொள்ளாமல் தாம்பரம் போகமுடியாதுதான். போலிசுகாரர்களின் கெடுபிடிக்குப் பயந்துத்தானே ஹெல்மெட் அணிகிறோம். தவிர ஆத்மார்த்தமாய் அதை எல்லாம் நாம் எங்கே அனுசரிக்கிறோம். இன்னும் ஒரு மணிநேரம் மட்டுமே பாக்கி இருக்கிறது. அதற்குள்ளாய் டூவீலரில்  வீட்டுக்குத் திரும்பி வந்துவிடவேண்டும். வந்து இந்த கொனஷ்டை அய்யா எழுதிய துப்பறிவு கதையை இணைய அரங்கில் சொல்லியாகவேண்டும். நமது பெயரைப்போட்டு கொட்டையாய் அறிவிப்பும் வெளியிட்டு இருக்கிறார் அழகிய சிங்கர். அதற்கு நேர்மையாய் இருக்கவேண்டியது ரொம்ப ரொம்ப முக்கியம். மீண்டும் ஒருமுறை உறுதி  சொல்லிக்கொண்டேன். தாம்பரத்தில் முத்துலிங்கம் தெருவில் தான் அந்த   பல் டாக்டர் கிளினிக் வைத்திருக்கிறார். டூ வீலரை உருட்டிக்கொண்டு முடிச்சூர்  தாம்பரம் சாலையில் சென்றேன்.முத்துலிங்கம் தெரு வந்தாயிற்று. பல் டாக்டரின் ரிசப்ஷனிஸ்ட்டிடம் நேராகச் சென்றேன்.  கடிகாரத்தில் மணியைப் பார்த்துக்கொண்டேன். இன்னும் நாற்பது நிமிடங்களே இருந்தன. அதற்குள்ளாக வலிக்கும்  பல்லைக்காட்டி  வைத்தியம் செய்துகொண்டு வீடு திரும்பவேண்டும். கொனஷ்டை சாருக்கு நாம் நியாயம் செய்தாகவேண்டும்.  பல் டாக்டர் ஆலோசனைக்கு என்று ஒரு ஐநூறு ரூபாயைக்கொடுத்தேன்.  பாக்கி இருநூறு என்று எழுதி  ரிசப்ஷனிஸ்ட்டிடம் வாங்கிக்கொண்டு டாக்டரிடம் சென்றேன்.

‘டாக்டர் சார் என்ன நீங்க ஒரு இருவது நிமிஷத்துல அனுப்பிடுவிங்களா’

‘நீங்க எதுக்கு வந்திங்க உங்களுக்கு என்ன பிரச்சனன்னு சொல்லவேயில்ல.’

‘ஆமாம் மறந்து போனேன். எனக்குப் பல் வலி’  வலிக்கும் பல்லைக்காண்பித்தேன்.

‘ஏறிப்படுங்க’ நாற்காலியும் பெஞ்சுமாய் தன் உருவை ஒரு  மண் புழு போல் சுறுக்கி சுறுக்கி மாற்றிக்கொள்ளும் ஒரு பல்  சிகிச்சை படுக்கை அமைப்பின் மீது ஏறிப்படுத்துக்கொண்டேன்.  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கிருபானந்தன் சாரை போனில்  அழைத்தேன்.’ சார் பல் வலி தாங்க முடியலேன்னுட்டு பல் டாக்டர் கிட்ட வந்துட்டன். இன்னிக்கு கொனஷ்டை சாரோட சிறுகதை சொல்லணும். நாந்தான் மொதல் ஆளுன்னு போட்டு இருக்காங்க. மொத கத என்னுதுதான்  தலைப்பு  துப்பறிவு. அத   கொஞ்சம் கடைசில கொண்டு போய்ட்டிங்கன்னா  பெரிய உதவி’

’ நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது உங்கள காணலன்னா,  அத கடைசில தள்ளி விட்டுடறேன்.  ஆனா நீங்க  நிகழ்ச்சிக்கு வந்து இருக்கிங்களா இல்லையான்னு பாத்துகிட்டுதான்  அதை செய்யுவேன்’ எனக்கு சாதகமாகத்தான் சொன்னார் கிருபானந்தன்.

பல் டாக்டர் நான் வலி என்று கூறிய அந்தப்பல்லத் தட்டி தட்டிப் பார்த்தார். ஒரு நர்ஸ் ஹோஸ் ஒன்றை வைத்துக்கொண்டு என் வாயில் தண்ணீர் விட்டுக்கொண்டே இருந்தார். பல் கரைந்து  நிஜமாகவே பல் பொடி வயிற்றுக்குள் சென்றுகொண்டிருந்தது. பல் தீயும் துர்நாற்றம் லேசாக வந்தது. புகை வரவில்லை.

‘ஆ’ என்றார் டாக்டர். நான் வாயைதிறந்து வைத்தேன்.

‘நல்லா நல்லா’

என் வாய் வலிக்கின்ற வரைக்கும் திறந்தேன்.

‘பல்லு கூசுதா’

‘ஆமாம் டாக்டர்’  உளறி உளறிப் பேசினேன்.

‘கடிச்சுகுங்க நல்லா கடிச்சுகுங்க’

டாக்டர் சொல்வதை எல்லாம் செய்தேன். எனக்குக் கொனஷ்டை சாரின் துப்பறிவு கதை மட்டுமே நினைவுக்கு வந்துகொண்டிருந்தது. ஒரு ஒரு விஷயமாக சொல்லிப்பார்த்துக்கொண்டேன். ‘சரி இது போதும்’ என்று முடிவுக்கு வந்தேன். நேரம் ஆகிக்கொண்டே இருந்தது. டாக்டர் என்னைச் சற்று ‘ போய் வா’ என்று விட்டால் தேவலை. மொபைலில் யாரோ என்னை அழைக்கிறார்கள். ஒருக்கால் அழகியசிங்கர் கூட என்னை  அழைக்கலாம். நிகழ்ச்சிக்கு நேரமாகிவிட்டதோ. ஒரே  பரபரப்பாக இருந்தது.

‘இந்த பல்லு இனி சரிப்பட்டு வராது’

‘சொல்லுங்க டாக்டர்’

‘இத எடுத்துடுவேண்டியதுதான்’

‘ஓ கே டாக்டர்’

‘வாயில மரத்து போகிறமாதிரிக்கு ஒரு ஊசி போடறேன்’

‘ டாக்டர் இன்னும்  கொஞ்ச நேரத்துல ஒரு ப்ரொக்ராம்ல நா பேசுணும்’

‘பேசலாம் ‘பேசறதுக்கு ஒண்ணும் எடஞ்சல் வராது’

எனக்கு ஆறுதலாக டாக்டர் செய்தி சொன்னார். வாயில் மரத்துப்போகிற ஊசியைப்போட்டார்.

‘இன்னும் பதினைஞ்சி நிமிஷம் வைட் பண்ணுங்க’

‘நா அந்த ப்ரொகிராமுக்கு போகணும்’

‘’எத்தனி நிமிஷம் ப்ரொகிராம்’

‘ஒரு அஞ்சி நிமிஷம்’

‘அப்பறம் என்ன அத முடிச்சிட்டு இங்க  வந்துடுங்க. நா பல்ல எடுத்தன்னா நீங்க அரை மணி நேரத்துக்கு பேசக்கூடாதுன்னு சொல்லிடுவேன்’

‘சரிங்க டாக்டர் நா அத முடிச்சிட்டு வந்துடறேன்’

‘ஓகே’ என்றார் டாக்டர்.

என்னுடைய லேப் டாப்போ வீட்டில் இருக்கிறது. அதுதான்  இணையதள  நிகழ்ச்சியில் பங்கேற்க  சவுகரியமாக இருக்கும்.  பல்   மருத்துவ மனைக்கு  வந்தாயிற்று. என்ன செய்வது. இனி அதெல்லாம் சாத்தியப்படாது. மொபைலை வைத்துக்கொண்டு ஜூம் ஆப் பை த்தேடிக்கண்டு பிடித்தேன்.  அய்  டி பாஸ்வேர்ட் எல்லாம் நினைவில் இருந்ததால்  தப்பித்தேன். நான் தற்சமயம்  இருப்பது பல் ஆஸ்பத்திரி. அப்போதைக்கு அப்போது ஜனங்கள் எதோ சம்பந்தா சம்பந்தமில்லாமல்  சப்தம் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்.  எனக்கு   வசதியாய் ஒரு இடம் வேண்டுமே. நேரம் ஆகிக்கொண்டேயிருந்தது. பல் ஆஸ்பத்திரியின் மொட்டை மாடிக்குப்போகும் படிக்கட்டில் வந்து நின்று கொண்டேன்.  வாயெல்லாம் வீங்கிப்போனமாதிரிக்கு இருந்தது. இன்று  இங்கு வந்திருக்கவே வேண்டாம். நம் கணக்குத்தவறாக ஆகிவிட்டது. நாம் நினைத்த மாதிரிக்கு  எல்லாம் காரியங்கள் நடந்துவிட்டால் பிறகென்ன இருக்கிறது. அதுதான் இல்லையே.

ஜூமில் என்  வெண்தலையைப்பார்த்த்வர்கள் ‘ எஸ்ஸார்சி வந்து விட்டார். அவர் இப்பவே பேசிடுவார்’ என்றனர். எனக்கும் கேட்டது. ‘ எல்லோருக்கும் வணக்கம் என்று ஆரம்பித்து’ துப்பறிவு’ கதைக்கு வந்தேன். நாம் ஒன்று சொல்ல அடுத்தவர்க்கு வேறு ஏதும் கேட்குமோ என்று சந்தேகம் வந்தது. நாக்கு  தடித்து குளறுகிற மாதிரி இருந்தது.  விரைத்துக்கொண்ட உதடுகள்  மரக்கட்டை மாதிரிக்கு உணர ஆரம்பித்தேன். இது பற்றி எல்லாம் யோசிக்க நேரம் ஏது. கொனஷ்டையின் துப்பறிவு கதையை ஒரு வழியாய்ச் சொல்லி முடித்தேன். பொன்னான வாய்ப்பு தந்த அழகிய சிங்கருக்கும் மற்றும்  நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எல்லோருக்கும் எனது நன்றி பலவும்  சொல்லி வெளியேறினேன். ‘லீவ்’ பட்டனைத் தொட்டு முடித்தேன்.

 பல் டாக்டர் எங்கே என்று தேடினேன். விட்ட குறை தொட்டகுறை இருக்கிறதே. அதனை  முடித்தாக வேண்டுமே.

‘ஏறிப்படுங்க’ என்னைத்தான்.

யார் இப்படி  நம்மைப் படுக்கச்சொல்கிறார்கள்.காலை நீட்டிப் படுத்துக்கொண்டேன். டாக்டர் என்னை நிகழ்ச்சி முடிந்ததா என்று கூடக் கேட்கவில்லை. அவருக்கு இதற்கெல்லாம் நேரம் வேறு இருக்கிறதா என்ன ? கொறடா மாதிரி ஒரு சாமானைக்கையில் எடுத்து பிடுங்கவேண்டிய பல்லின் மீது வைத்தார்.  வலிதெரியாமல் இருக்க மரத்துப்போகும் ஊசி போட்டிருக்கிறார்தான். இருந்தாலும் பயம் இல்லாமலா. உச்சி மண்டையில் யாரோ பளார் என்று அறைந்தமாதிரிக்கு உணர்ந்தேன். டாக்டர் என் உடைந்த  கடைவாய்ப் பல்லை வேறோடு பிடுங்கி எடுத்து அதன் பீங்கான்  கிண்ணத்தில் வைத்தார்.

‘இதான் அந்த பல்லு’

நான் அந்த பல்லைப் பார்த்துக்கொண்டே இருந்தேன்.

பிரஸ்கிரிப்ஷனில்  மாத்திரை எதையோ எழுதிக் கொடுத்து ‘ரொம்ப ஜில்லினு ரொம்ப சூடா எதுவும் இண்ணைக்கு வேணாம்’ என்றார்.

தலையை ஆட்டிவிட்டுப்புறப்பட்டேன்.

ரிசப்ஷனிஸ்ட் தரவேண்டிய முந்நூறு ரூபாய் பாக்கி நினைவுக்கு வந்துவிட்டது. அதை ஞாபகமாய் அவரிடம் இருந்து  வாங்கிக்கொண்டேன்.

இன்னுமொரு ஆயிரம் ரூபாயுக்கு பில்லை  ரிசப்ஷனிஸ்ட் நீட்டினார். க்யூ ஆர் கோடு  படம் பார்த்து   ஜிபேயில் அதனைச் சரிசெய்தேன்.

என்னதான் பல் வலி  அமர்க்களம் என்றாலும் சாமர்த்தியமாய்  எனக்கு  வரவேண்டிய பாக்கியை  ரிசப்ஷனிஸ்ட்டிடம் திரும்ப   வாங்கி விட்டதற்காய் சந்தோஷப்பட்டுக்கொண்டேன். அல்ப சந்தோஷங்களுக்குத்தான் அலாதி மரியாதை.

பல் டாக்டரைப்பார்ப்போமே  என்று முடிவு  எடுத்தேன்.   அவசரமாய்   ஒரு முடிவு.  அது நிறைவேற நான் பட்ட அவஸ்தையை எப்படிச் சொல்வது. தலைவலியும் திருகு வலியும்  அவரவர்க்கு வந்தால்தான் தெரியும் என்கிறார்களே அது சரித்தான்.

முடிந்துபோன  இணையவழிக் கதை சொல்லல் நிகழ்ச்சியை   வீடியோ வில் ரெண்டு நாள் கழித்துப்போடுவது அழகிய சிங்கரின் வாடிக்கை. நாட்கள் எவ்வளவோ ஓடிவிட்டன. அவர் போடவேயில்லை. மறந்துமிருக்கலாம். எனக்கும் கூட அதில் வருத்தமில்லை.

----------------------------------

 

No comments:

Post a Comment