’ஏகம் சத் ’ கதை
எனக்கு வில்லியம் என்றொரு நண்பன் இருந்தான். அவனும் நானும்
ஒன்றாகக்கல்லூரியில் பட்டவகுப்பு படித்தோம். நான் பட்ட வகுப்போடு அஞ்சல் இலாகாவில்
வேலைக்குச்சேர்ந்தேன். அவன் முதுகலை பயின்றான்.
தேர்வுகள் சில எழுதினான். நாங்கள் படித்த கல்லூரியிலேயே ஆசிரியராக வேலையில் சேர்ந்தான். எங்கள் நட்பு எப்போதும் ஒன்று
போலவே இருந்தது. அடிக்கடி நாங்கள் சந்திப்போம். ஏதேனும் சுவாரசியமாய்ப் பேசிக்கொண்டிருப்போம்.
கிரிக்கெட்டில் ஆரம்பித்து உலக நடப்புக்கள் எதையும் விடமாட்டோம். நாங்கள் மாறி மாறி விவாதம் செய்வோம். எனக்குத்தெரிந்ததை
அவனுக்குச்சொல்வேன். அவனுக்குத் தெரிந்ததை அவன் எனக்குச்சொல்வான்.
ஒருநாள் மாலை சோகமாய்
வந்திருந்தான். வழக்கமாக நாங்கள் தருமங்குடிக்கு
மய்யமாய் நிற்கும் பெரிய அரச மரத்தடியில்தான்
பேசிக்கொண்டிருப்போம். அந்த மரத்தின் கீழ் இரண்டு சிமெண்ட் பெஞ்சுகள் போடப்பாட்டிருக்கும்.
அதனில்தான் அமர்ந்திருப்போம்.
‘ஏன் ரொம்ப டல்லா இருக்கே’
‘மனசு சரியில்லைடா’ வில்லியம் சொன்னான்.
‘ஏன் என்ன ஆச்சு’
‘என் தங்கயை பெண் பார்க்க போன வாரம் ஒரு மாப்பிள்ளை வீட்டார்
வந்திருந்தார்கள். மாப்பிள்ளை சென்னையில் ஒரு
தனியார் வங்கியில் நல்ல வேலையில் இருப்பவன். என் தங்கையைப் பெண் பார்த்தார்கள். அவர்கள் ’ஊருக்குப்போய் நாங்கள் கடிதம் போடுகிறோம்’ என்றார்கள். எங்களுக்கும்
அந்த மாப்பிள்ளையைப்பிடித்துத்தான் இருந்தது. நல்ல குணம் நல்ல வேலை. நல்ல மனிதர்கள்
யாருக்குத்தான் அந்த வரனைப்பிடிக்காது. என் தங்கை நிறத்தில் கருப்புதான். ஆனால் முகம்
களையாக இருப்பாள். நீதான் பார்த்திருப்பாய்
உனக்குத்தான் அவளை நன்றாகத்தெரியுமே’
‘நான் பார்த்திருக்கிறேன்.
எனக்குத்தெரியாமல் என்ன’
‘கொஞ்சம் மாநிறமாக பெண் இருந்தால் தேவலை என்பதே எங்கள் எல்லோருக்கும் அபிப்ராயம். எங்களுக்குப்பொய்
சொல்லப்பிடிக்கவில்லை. சகுனம் போட்டுப்பார்த்தோம்
உத்தரவு சரியாக கிடைக்கவில்லை அது இது என்று
சாக்கு போக்கு சொல்லவும் மனம் வரவில்லை.
உண்மையைச்சொல்லிவிட்டோம்’ என்று கடிதம் எழுதிவிட்டார்கள். இந்த விஷயத்தை என் தங்கையிடம் நான் சொல்லவில்லை. என் பெற்றோர்களுக்கும் இப்படி
ஒரு கடிதம் வந்த செய்தி தெரியாது’
எனக்கும் வருத்தமாகவே இருந்தது.
’நான் நாளை ஊரில் இல்லை. திருப்பதி போகிறேன். திருவேங்கடவனைத் தரிசித்து ரொம்ப நாள் ஆகிவிட்டது’ என்றேன்
‘நாங்களும் வேளாங்கன்னிக்குச் செல்வோம் அப்படித்தான்’ அவன்
பதில் சொன்னான்.
‘நா ஒண்டியாதான் போறேன். என்கூட வீட்டிலிருந்து யாரும்
வரவில்லை. அவரவர்கள் ஏதோ ஒரு காரணம் சொல்லிவிட்டார்கள்.நீ
வருவியா என்னோடு’ வில்லியத்தைக்கேட்டுவிட்டேன்.
‘நான் எந்த மதம் என்பது உனக்குத்தெரியாததா என்ன. நான் திருப்பதிக்கு வரலாமா நீயே சொல்’
‘நீ விரும்பினால் வரலாம் சும்மா ஒரு
கம்பெனிக்காக வாயேன் என்னோடு’ நான் அழைத்தேன்.
‘உன்னோடு பயணத்துணைக்கு
நான்
வரவேண்டும் என்று சொல் வருகிறேன்’
‘அப்படித்தான் வைத்துக்கொள். எப்படியோ நீ வந்தால் மகிழ்ச்சிதான்’
வில்லியம் தன்
வீட்டில் தாய் தந்தையர்களிடம் திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் ஒரு தகவல் அறியவேண்டும்
அதற்காக திருப்பதி போகிறேன். மேற்கொண்டு படிக்க விரும்புகிறேன் என்று ஒரு சாக்கைச்
சொல்லிவிட்டு என்னோடு புறப்பட்டான். நாங்கள் இருவரும் திருப்பதிக்குப்புறப்பட்டோம்.
’பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்’ அப்படித்தான்.
‘திருப்பதிக்கு மட்டும் ஏழுமலையான் விருப்பப்பட்டால்தான்
நாம் போகமுடியும்’
‘அப்படியா சொல்ற. எனக்கும் அது பொறுந்துமா என்ன’’
‘எல்லோருக்கும் ஒரே பதில்தான். அவர் நம்மை திருமலைக்கு
அழைத்தால்தான் நாம் போகமுடியும்’
நானும் என் நண்பனும் தருமங்குடியிலிருந்து சிதம்பரம் புறப்பட்டோம்.
சிதம்பரத்திலிருந்து திருப்பதிக்குச்செல்லும்
பேருந்தில் ஏறி அமர்ந்துகொண்டோம். ஆறு மணி நேர பேருந்துப்பயணம். வழியில் திண்டிவனம்
காஞ்சிபுரம் சித்தூர் என ஊர்கள் வந்தன. ஒருவழியாய் திருப்பதி வந்து சேர்ந்தோம்.
ஒரு பேருந்து பிடித்துத் திருமலைக்கும் வந்தாயிற்று. தனியார் லாட்ஜ் ஒன்றில்
அறை போட்டோம். குளித்துமுடித்தோம். நாங்கள் ஏழுமலையானைத்தரிசிக்ககப் புறப்பட்டோம்.
தரும தரிசனம் காணத் தொடங்கும் பாதை எங்கே இருக்கிறது எனத்தேடினோம். எப்போதும் நான் தரும தரிசனப்பாதையில் சென்று அந்தத் திருவேங்கடவனைத்தரிசனம்
செய்வதையே வழக்கமாய்க்கொண்டிருந்தேன். வில்லியத்திற்கு உள்ளூர பயம்தான் யாராவது ஏதாவது சொல்லிவிடப்போகிறார்கள்
என்று. ஆனால் தனக்கு பயம் எதுவுமே இல்லை என்பதாய்க்காட்டிக்கொண்டேன்.
ஒரு பத்துமணி நேரம்
வரிசையில் காத்திருந்தோம். இது ஒன்றும் அதிகம் என்று சொல்லமுடியாது. தரிசனத்திற்கு வரிசையில்
அமர்வோர் நிற்போர் தங்கும் இடத்தில்
எல்லாம் வில்லியமும் நானும் பேசிக்கொண்டே இருந்தோம்.
‘கோவிலுக்கு வந்தா இப்பிடியா பேசுவிங்க. கேசவா கோவிந்தா
நாராயணான்னு இப்பிடி எதாவது சொல்லிகிட்டு வரலாமுல்ல’
கூட்டத்தில் ஒரு பெரியவர் எங்களைப்பார்த்துச்சொன்னார்.
நாங்கள் இருவரும் அமைதி ஆனோம். வில்லியம்சற்று அச்சமுற்றான்.
எங்களை அடுத்து
வட இந்திய பக்தர்களின் வரிசை. அவர்கள் என்ன மொழி பேசுகிறார்கள் என்றே தெரியவில்லை.
எங்களுக்கு முன்னால் கன்னட மொழி பேசிக்கொண்டும் கோவிந்தா கோவிந்தா என்று இடை இடையே
முழக்கிக்கொண்டும் மக்கள் இருந்தார்கள். இந்தியாவின் எந்த மூலையிலிருந்தும் திருப்பதிக்குப் பக்தர்கள் வந்துகொண்டேதான் இருக்கிறார்கள். இறைவனுக்கு மொழி யெல்லாம் ஒரு எல்லையா என்ன.
ஒருவழியாக உள்ளிருக்கும் பிரதான வாயிலை அடைந்தோம். அங்குதான் கூட்டம் மிக
அதிகமாக இருந்தது. உள்ளே போவோரும் வெளியே வருவோரும் முட்டிக்கொண்டு நின்றனர். கோவில்
நிர்வாகத்தார் என்ன என்னவோ முயன்றுதான் பார்க்கிறார்கள்.
ஆனால் ஒழுங்கு படுத்துதல் என்பது நிறைவாகவில்லை.
நானும் வில்லியமும் ஒருவரை ஒருவர் கைகளைப்பிடித்துக்கொண்டோம். யாரிடமும் எந்த லக்கேஜும்
இல்லை அதுவே ஒரு பெரிய சவுகரியம். எடுத்துப்போகவும் கூடாது என்று நிர்வாகம் தடை விதித்திருக்கிறது. குடிக்கத்தண்ணீரும்
பசிக்கு சிலவும் காத்திருப்போருக்கு கிடைக்கச் செய்திருக்கிறார்கள். சேவார்த்திகளின் இயற்கை அழைப்புக்கும் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
தூரத்தில் வெங்கடாசலபதி
என் கண்களில் ஜஜஜோதியாய்த் தெரிந்தார். நான்
என்னையும் அறியாது ’கோவிந்தா கோவிந்தா’ என்று கோஷம் கொடுத்தேன்.
வில்லியம் என்ன செய்கிறான் என்று பார்த்தேன். அவன் அமைதியாகத்தான்
நின்றுகொண்டிருந்தான். திருவேங்கடவனின் சந்நிதியை நெருங்கிவிட்டோம். கர்ப்பகிரகத்திலிருந்து தக தக எனும் ஒளிப்பிரகாசம் வெளிப்படுகிறது. அதன்
நடுவே வெங்கடாசலபதி நின்று அருள்பாலித்துக்கொண்டிருந்தார். ஜெரகண்டி ஜெரகண்டி என்று கோவில் சிப்பந்திகள் பாதுகாவலர்கள் வழிபட வந்தோரை விரட்டியடித்துக்கொண்டு இருந்தார்கள்.
தரிசிக்க வந்தவர்கள் கடவுளைப்பார்த்தார்களா
இல்லையா என்பதெல்லாம் யார் கவனிக்கிறார்கள் கேட்கிறார்கள். எப்போதும் ஜெரகண்டி சத்தம்தான். அப்படி இல்லை என்றாலும் கூட்டத்தை
எப்படித்தான் சமாளிப்பது அது தெரியவில்லையே. திருமலையில் திருக்கோவிலை கட்டிய போது வளர்ந்து
கொண்டே வரும் மக்கள் தொகையை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டா
கட்டியிருப்பார்கள். சாத்தியமே இல்லை. இன்றோ
போக்குவரத்து வசதிகள் பல்கிப் பெருகிவிட்டிருக்கின்றன. ஆகத்தான் நாட்டின்
எந்த மூலையில் இருந்தும் மக்கள் இங்கு வரமுடிகின்றது. பொதுமக்களுக்கு இக்கடவுள்
மீது இருக்கும் நம்பிக்கைக் கூடிக்கொண்டே இருக்கின்றது. அதற்கெல்லாம் விளக்கமோ வியாக்கியானமோ கொடுத்துவிட சாத்தியப்படுமா என்ன?
நான் ஒரு அரை நிமிடம்
கூட மூலவர் சந்நிதியைத்தரிசித்து இருக்கமாட்டேன். என்னை போ போ என்று தள்ளி விட்டு அனுப்பினார்கள். ஆனால் என்
நண்பன் வில்லியம் திருமலை கோவில் சிப்பந்தி
ஒருவரோடு நின்று ஐந்து நிமிடம் ஏழுமலையான் சந்நிதியைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
யாரும் அவனை ஜெரகண்டி என்று சொல்லவே இல்லை.
பிறகு அவனே என்னை நோக்கி வந்து சேர்ந்துகொண்டான்.
‘என்னோடு நின்ற எல்லோரையும் நெட்டித்தள்ளி விரட்டி விட்டார்கள்’ நான் சொன்னேன்.
‘என்னிடம் ஒருவரும் ஒன்றுமே சொல்லவில்லை. சுவாமியை நிறைவாகப்பார்த்துவிட்டு வந்தேன் நான்
சுவாமியைத்தரிசிக்கச் சற்று அதிக நேரம் எடுத்துக்கொண்டது
எனக்கே தெரிந்தது. பாதுகாப்புக்காக இருந்த செக்யூரிடி என் அருகே நின்றுகொண்டு எனக்கு உதவி மட்டுமே
செய்தார்’. வில்லியம் என்னிடம் சொன்னான். அவன் சொன்னது எனக்கு ஆச்சரியமாகக்கூட இருந்தது.
’சொர்க்கபுரி என்பது
ஒன்று உண்மையிலேயே இருக்குமானால் அது இப்படித்தான்
இருக்குமோ அத்தனைப் பிரகாசம் அத்தனை ஜ்வொலிப்பு’ வில்லியம் சொல்லிக்கொண்டான். விலையேதுமில்லாமல் விநியோகிக்கப்படும் பிரசாதத்தை
இருவரும் மறக்காமல் வாங்கிக்கொண்டோம். லட்டுப்பிரசாதம்
விற்கும் கவுண்டரில் திருப்பதி லட்டு இரண்டு
மட்டும் வாங்கினோம். அவனுக்கு ஒன்று கொடுத்தேன். அதனை எத்தனைப் பவ்யமாய் வாங்கிக்கொண்டான்.
பிரகாரத்தில் இருந்த ப்ரும்மாண்ட உண்டியலில் நான் ஓராயிரம் ரூபாய் மட்டுமே காணிக்கைச் செலுத்தினேன். வில்லியம் நான் என்ன என்ன செய்கிறேன் என்பதைக்கவனித்துக்கொண்டான். இருவரும் திருக்கோவிலை விட்டு வெளியே வந்தோம். கோவில் புஷ்கரணிக்கரையில்
சிறிது நேரம் அமர்ந்திருந்தோம். நல்ல குளிர் காற்று வீசிக்கொண்டு இருந்தது.
அன்னதான சத்திரத்திற்குச்சென்றோம். இருவரும் சாப்பிட்டோம். மக்களோடு மக்களாய் இங்கு வந்து சாப்பிடுவதுதான் எனக்குப்பிடிக்கும். தரும சத்திரத்தில் சாரை சாரையாய் ஜனம் வந்து சாப்பிட்டு
விட்டு சென்றுகொண்டே இருந்தார்கள்.’ பசி ஆற்றுதல்
பெரிய காரியம்தான்’ என்றான் வில்லியம்.
பொருள் வசதி படைத்தோர் தமது பொருட் செல்வத்தைச்சேமித்து
வைக்கும் இடம் ஏழைகளின் வயிறு என்பதனைத் திருவள்ளுவர் சொல்லியிருப்பது அறிவாயோ என்றேன்.
‘அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி’ வில்லியம் எனக்குக் குறளைச்சொன்னான்.
இருவரும் பேசிக்கொண்டே லாட்ஜ்க்கு வந்து அதனைக்காலி செய்தோம்.
திருமலைப்பேருந்து நிலையம் வந்து திருப்பதிக்கு
புறப்பட்டோம். கொண்டை ஊசிப்பாதைகள் அதிகம் இல்லை. திருப்பதியில் பேருந்து நிலையம் எத்தனை
விஸ்தாரமாய் வசதியாகக் கட்டியிருக்கிறார்கள். சிதம்பரம் செல்லும் பேருந்து ஒன்றையுமே
காணோம். முதுகுன்றம் செல்லும் பஸ் தயாராகக் காத்துக்கொண்டிருந்தது.
‘இப்படியும் நம்மூருக்கு போகலாம்’
‘அதுக்கென்ன போகலாமே’
இருவரும் முதுகுன்றம் பேருந்தில் ஏறிக்கொண்டோம். முதுகுன்றத்திலிருந்து சிதம்பரம் பஸ் பிடித்தால் தருமங்குடியை அடைந்து விடலாம். பேருந்து திருவண்ணாமலை திருக்கோவிலூர் உளுந்தூர்பேட்டை
எனப்பயணித்து முதுகுன்றம் வந்து சேர்ந்தது. போகும்போதும் சரி திரும்பி வரும்போதும் சரி மழை கிழை என்று எந்த தொந்தரவும் இல்லை. படுத்தி எடுக்கும் வெயிலுமில்லை.
ஒரு சிதம்பரம் பஸ் பிடித்து தருமங்குடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடக்க
ஆரம்பித்தோம்.
வில்லியம் திருமலைக்குச்சென்று வேங்கடவனை வணங்கிய அதே சிந்தனையில்
இருந்தான்.
‘என்னவோ போல் இருக்கிறாயே ஏன்’
‘சுவாமியைப்பார்த்ததிலிருந்து எனக்கு ஒரு குழப்பமாய்க்கூட உணர்கிறேன்.இப்படி நான் உணர்ந்ததே
இல்லை, இது ஒரு புது அனுபவமாக இருக்கிறது ‘
‘திருப்பதிக்குப்போய் வந்தால் ஒரு திருப்பம் வரும் என்று எல்லோரும் சொல்வார்கள்’
வில்லியம் லேசாகச் சிரித்துக்கொண்டான்.
தருமங்குடியில் வில்லியம் வீடு தாண்டிதான் என் வீடு. இருவரும்
நடந்து சென்றுகொண்டே இருந்தோம். வில்லியம் வீட்டு வாசலில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது.
‘என்னப்பா கார் நிக்குது உன் வீட்டு வாசல்ல’
‘ஆமாம், என்ன விஷயம்னு தெரியல’
‘நீயும்தான் வாயேன்
வீட்டுக்கு’ என்றான்
‘சரி போகலாம்’
இருவரும் வீட்டுக்குள் சென்றோம்.
வில்லியத்தின் பெற்றோர்கள் அவன் தங்கை என்று மூவர் மட்டுமே
வீட்டில் இருந்தார்கள். யாரேனும் விருந்தினர்கள்
வந்துமிருக்கலாம்.
‘வாங்க தம்பி’
சமீபமாய் அவன் வீட்டுக்குப்பெண்பார்க்க வந்துபோனவர்கள்
தான்.
‘வாங்க வாங்க’
அவனும் சொன்னான்.
என்னையும் அவன்
ஒரு நாற்காலியில் அமரச்சொன்னான்.
‘உங்களத்தான் எதிர்
பாத்துகிட்டே இருக்கம். நீங்க வந்துட்டீங்க. எங்கள மன்னிச்சுக்கணும்’
‘என்ன பெரிய வார்த்தையெல்லாம்’
‘இல்ல. இப்ப நானும் என் மனைவியும் வந்துருக்கம். உங்க வீட்டுல
பொண்ணு பாக்க வந்த அண்ணிக்கு என் பையன் வந்துருந்தான். நாங்க உங்களுக்கு ஒரு தபாலும்
எழுதிப்போட்டோம். என் பையனுக்கு ஆபிசுல ஒரு நெருங்கிய சிநேகிதன். அவன் என் பையன் கிட்ட இது பத்தி விவரமா பேசியிருக்கான். என் பையனுக்கும்
உங்களுக்கு இப்படிக் கடிதம் எழுதிய விஷயத்தில்
ஏற்கனவே உடன்பாடில்லைதான். அலுவலகத்திலிருந்து நேராக வீட்டுக்கு வந்தான்’ நீங்கள்
இருவரும் இப்போதே புறப்பட்டு தருமங்குடி செல்லுங்கள். நாம் பார்த்துவிட்டு வந்த அந்தப்பெண்ணை
நாம் திருமணம் செய்யச் சம்மதம் என்பதை அந்தப்பெண்ணின் பெற்றோர்களிடம் தெரிவியுங்கள்’
என்றான்.
‘ஏனிந்த மாற்றம்’ எங்கள் பையனைக்கேட்டோம்.
‘என் சிநேகிதன்
எனக்கு ஆலோசனை சொன்னான். மனிதர்களின் தரம்தான் பிரதானம். நிறமா பிரதானம் இல்லவே
இல்லை. நீ செய்தது தவறு என்றான். எனக்குச்சங்கடமாய்ப்போனது. ஆக உடனே தருமங்குடி புறப்படுங்கள்.
அவர்களுக்கு சம்மதம் சொல்லுங்கள்’ இதனை எங்கள்
பையன் எங்களிடம் சொன்னான். நாங்கள் அவனிடம்
பதில் ஏதும் பேசவில்லை. நானும் என் மனைவியும் புறப்பட்டு இங்கு வந்துவிட்டோம்.
வில்லியத்தின் பெற்றோர் அவன் என்ன சொல்கிறான் என்பதைப்பார்த்துக்கொண்டேயிருந்தனர்.
அவர்கள் எழுதிய அந்தக்கடித்தத்தை வில்லியம் தன்னிடம்தான் வைத்திருந்தான்.
எனக்கு மட்டுமே
கடிதத்தில் கண்டுள்ள அந்தத்தகவல் சொல்லியிருந்தான்.
‘ உங்களிடமிருந்து கடிதம் எதுவும் வரவில்லை. அதைத்தான்
நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்’ வில்லியத்தின்
பெற்றோர்கள் சொன்னார்கள்.
‘கடிதம் வரவில்லை
என்றால் மிகவும் நல்லது. அதான் நாங்கள்
வந்துட்டோமே. எங்கள் பையன் தனது பூரண சம்மதத்தை உங்களிடம் தெரிவிக்கச் சொன்னான்’.
‘ரொம்ப சந்தோஷம். மேற்கொண்டு நிச்சயதார்த்தத்துக்கு நாள்
பார்த்து தகவல் சொல்றோம். நீங்கள் ஒரு மண்டபம் பாருங்கள் வில்லியம் பிள்ளை வீட்டாரிடம்
சொன்னான்.
மாப்பிள்ளையின் பெற்றோர் காபி மட்டுமே சாப்பிட்டுவிட்டு
வில்லியத்தின் தங்கையைப்பார்த்து ‘ பாப்பா
நாங்க பொறப்படுறோம். அங்க வர்ரவரைக்கும் நீ பதனமா இருந்துகோ. உன் வீடு இனி எங்க வீடுதான். ஆக நம்ம
வீட்டுக்கு நீ வந்து சேரணும். தெரிதா. திருமணநிச்சயத்துல
மறுபடியும் சந்திப்போம். உனக்கு நாங்க பரிசம் போடுணும் . இப்பக்கி
போயி வரம்’ அவர்கள் இருவரும் காரில் புறப்பட்டுச்சென்றனர்.
வில்லியம் அவர்களிடமிருந்து வந்த கடிதத்தை ,அவனேதான் இன்னும் வைத்திருந்தான்.
’ நான் என் வீட்டுக்குப் புறப்படுறேன்’
‘ஜஸ்ட் வைட்’ என்றான் என்னிடம்.
நான் அவன் பெற்றொர்களிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டேன்.
என்னோடு அவன் திருப்பதி வந்ததும் அவர்கள் பெற்றோர்களுக்குத் தெரியாது.
அவனும் நானும் என் வீட்டு வாயிலில் உள்ள அரச மரத்தடிக்கு
வந்தோம். அவன் அவர்கள் போட்ட அந்தக்கடிதத்தையும் ஒரு ஆயிரம் ரூபாய் பணத்தையும் என்னிடம் கொடுத்தான்.’ நெக்ஸ்ட் டைம் திருப்பதி போனா இந்த
கடிதத்தையும் ஆயிரம் ரூபாய் பணத்தைடும் திருவேங்கடவனுக்கு
உண்டியல்ல என் காணிக்கையா சேர்த்துடு. நான்
இப்படி மாப்பிள்ளை வீட்டார் திரும்பவும் வருவாங்கன்னு நெனச்சிகூட பாக்குல . அவுங்க
கிட்டேந்து சம்மதம்னு நல்ல சேதி வரும்னு எதிரும் பாக்குல. ஒண்ணு மட்டும் நிச்சயம்
அந்த ஏழுமலையான் அருள் இல்லாம இது நடந்திருக்காது’
வில்லியம் என்னிடம் சொன்னன்.
‘ஏகம் சத் விப்ரா பஹுதா வதந்தி. இது வேத வாக்கியம்’ என்றேன் நான்.
‘தமிழ்ல சொல்லுலாமே’
‘கடவுள் ஒருவரே. அவரைத்தெரிந்தவர்கள் பல பெயர்களில் அழைக்கிறார்கள்.’
வில்லியம் என்னைத்தழுவிக்கொண்டான். நான் என் வீட்டுக்குத்திரும்பிக்கொண்டிருந்தேன்.
----------------------------------------------------------------------------------------------------------------------------