Saturday, October 21, 2023

 

 

 கோவி. ஜெயராமனின்   ’சனாதன மறுப்பாளர் வள்ளலார்’  என்னும் நூல்  குறித்துச் சில பகிர்வுகள்                                                                      -எஸ்ஸார்சி

 

கோவி.ஜெயராமன் இயல்பாய் நல்ல கவிஞர் மார்க்சியவாதி. தொலைபேசித்துறையில்   அகில இந்திய அளவிலே தொழிற்சங்கத்தலைவர்.வடலூர் வள்ளல் ராமலிங்கர் பால் அளவிலா ஈடுபாடு கொண்டவர்.வடலூர் மண்ணில் வாழ்ந்து வள்ளலின் கருத்துக்களை உள்வாங்கிய  கொடுப்பினைக்காரர்.  அருள் வள்ளல்  ராமலிங்கரர் குறித்து  அனேக நூல்கள் எழுதியுள்ளார்.

 ’சனாதன மறுப்பாளர் வள்ளலார்’ என்னும் இந்த நூல் அணமையில் வெளிவந்தது. தாமரை இலக்கிய இதழ் ஆசிரியரும் இந்தியப்பொதுவுடமைக்கட்சியின் மூத்த தலைவருமான தோழர். சி .மகேந்திரன் இந்த நூலை வடலூரிலேயே வெளியிட்டதும்( 14/10/2023) குறிப்பிடப்படவேண்டும்.

சமீபமாய் வடலூர் இராமலிங்கர் குறித்து ‘வள்ளலார் சனாதனத்தின் உச்சம்’ என்று ஒரு பெரிய மனிதர் வடலூரில் பேசிவிட்டுச்சென்றதைக் கணக்கில் கொண்டு இந்த நூலை எழுதியதாக கோவி. ஜெயராமன் தனது என்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

சாதிய நஞ்சுக்கு எதிராகவும் சமயப்பிணக்குகளுக்கு எதிராகவும் ஜீவ காருண்யத்திற்கு ஆதரவாகவும் ஆன்ம நேய ஒருமைப்பாட்டைத்தூக்கிப்பிடித்தும் கவிதைகள் தந்தவர் இராமலிங்கர். அனைத்தும் எளிய நடையிலே  யாவருக்கும் விளங்கும் வகையிலே வெளிப்பட்ட கவிதைகள். ஒரு வகையில் மாகவி பாரதியாருக்கு  வடலூர்  வள்ளல் இராமலிங்கர் முன்னோடி என்று கூறமுடியும்.

இந்த நூலுக்கு எழுத்தாளர் பன்முக ஆளுமை  கடலூர் வளவ.துரையன் பொருத்தமானதொரு அணிந்துரை வழங்கிப்பெருமை சேர்த்துள்ளார்.

’சனாதனம் கூறும் சடங்குகளை வள்ளலார் வெறுத்ததையும், அவர் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்த்துக்குரல் கொடுத்ததையும் இந்நூல் விரிவாகப்பேசுகிறது’ என்று வளவ.துரையன் அணிந்துரையில் குறிப்பிடுகிறார்.

இந்நூல் ஆரியமும் சனாதனமும், வேதாந்தம் சைவ சித்தாந்தம், தமிழ் மரபில் சன்மார்க்கம், வள்ளலார் முதல் நிலை வழிபாடு, அருட்சோதி வழிபாடு இறுதிநிலை, வள்ளலார் கண்ட சன்மார்க்கம், மதம் சமயம், சாதி, சமூகப்பொருளாதாரப்பார்வை, சிதம்பரம், வள்ளலார் கண்ட நிறுவனங்கள், வள்ளலார் மறைவும் மறைவுக்குப்பின்பும், திருவருட்பா பாடல்கள் சில என்று பல்வேறு தளங்களில் வள்ளலார் பயணித்தத்  தடங்கள் குறித்து விரிவாகப்பேசுகிறது.

பிறப்பால் மனிதருக்குள் பேதம் கற்பிப்பதை நூலாசிரியர் கோவி.ஜெயராமன் கடுமையாகச்சாடுகிறார். அதனை அதர்மம் என்கிறார்.சமூக வேறுபாடுகளை வளர்த்தும் அவற்றை மைய்யப்படுத்தியும் உணவு உடை உறையுள் வாழ்வியல் இவற்றின் பேரால் மேல் நிலை கீழ் நிலை என்று உருவாக்கப்படுவதை ஒரு போதும் ஏற்க முடியாது என்கிறார்.

கோவி.ஜெயராமனின்  தமிழ் மரபில் சன்மார்க்கம் என்னும் கட்டுரை மிகச்சிறப்பாக காணப்படுகிறது. சைவ சமயத்து  அறுபத்து மூன்று நாயன்மார்களைச் சாதிவாரியாகக் கணக்குத்தருகிறார். அந்தணர் 12 அரசர் 12 வணிகர் 6 வேளாளர் 13 ஆதிசைவர் 4, குயவர், சான்றார்,வேடர்,இடையர்,பறையர்,வண்ணார், மாமாத்திரர்,பரதவர், சாலியர், பாணர், என்கிற மரபில் ஒவ்வொருவர், மரபு  அறியப்படாதவர் 6  ஆக அறுபத்து மூவர்.

ஆழ்வார்களில் திருப்பாணாழ்வார் என்னும் தாழ்த்தப்பட்ட குலத்துப் பாணரை தோளில் சுமந்து  தன் சந்நிதிக்கு  அழைத்து வருமாறு அந்தணர் லோகசாரங்கருக்குத்  திருவரங்கன் கட்டளையிட்டதாகவும்  அவரும் அப்படியே செய்த வரலாற்றையும் பதிவு செய்துள்ளார்.

நாயன்மார்கள் ஆழ்வார்களின் விக்கிரகங்கள்  சைவ வைணவ திருக்கோயில்களில் இன்றும் சாதி பேதமின்றி  வழிபாட்டில் உள்ளன என்பதை எழுத்து  நேர்மையோடு குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.

சங்கப்புலவர்களின் சான்றாண்மையை ஆதாரங்களோடு குறிப்பிட்டு இப்புத்தகம் தமிழ் மரபு பற்றி உயர்த்திப்பேசுகிறது.

முப்பத்து ஐந்து வயது வரை முருகப்பெருமான்,தியாகப்பெருமான்,துலுக்காணத்து அம்மன், வடிவுடையம்மன் என பற்பல தெய்வங்களை உருவ வழிபாடு செய்துவந்தவர் வள்ளலார்.  தில்லைமீது நாட்டம் கொண்டது உருவ வழிபாட்டிலிருந்து அருவுருவ வழிபாட்டை நோக்கி  முன்னெடுத்த அடுத்தகட்டமாகவே பார்க்கத்தோன்றுகிறது. சிதம்பரம் ஆகாயத்தலம் அங்கே சிதம்பரம் ரகசியம் என்கிற  வழிபாடு இன்றளவும்  நடைபெறுதலையும் வாசகர்க்குச்சொல்கிறார் ஜெயராமன்.

வள்ளலார் மரபு என்னும் கட்டுரை  இராமலிங்கரை தொழுவூர் வேலாயுத முதலியார் வள்ளலார் என்கிற பட்டப்பெயர் இட்டு அழைத்ததையும்  அதுவே வரலாற்றில்  பின்னர் நிலைத்துப்போனதையும் பற்றிப்பேசுகிறது.

பெண்களையும் ஆண்களையும்  உயர்த்திப்பிடித்து உலகுக்கு அறிவித்த வள்ளலார் எப்படி சனாதனி ஆக முடியும் என்று வினா வைக்கிறார் நூலாசிரியர். பெண்களை இழிவு படுத்தும் சனாதனத்துக்கு மாற்றடி  கொடுத்த வள்ளலார் ஒரு சன்மார்க்கி ஆவார் என்று  முடிவு சொல்கிறார்.

மதம் சமயம் சாதி என்னும் கட்டுரை வள்ளார் இவைகளை எப்படி வெறுத்து ஒதுக்கினார் என்பது பற்றிப்பேசுகிறது.

‘நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா

நவின்ற கலைச்சரிதமெலாம் பிள்ளை விளையாட்டே

மேல்வருணம் தோல்வருணம்

கண்டறிவார் இலை’                                                               ( 4174)

‘சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே

சாத்திரச்சந்தடிகளிலே  கோத்திரச்சண்டையிலே

ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்

அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே      ( 5566)

சாதி மதம் குலம் ஆச்சாரம்  வெறுத்து ஒதுக்கிய வள்ளலாரின்  பொறுத்தமான  அற்புத பாடல்  வரிகளை வரிசையாக அடுக்கிச்செல்கிறார் நூலாசிரியர்.

கண்முன்னே நிகழும் கொடுங்கோல்  வெள்ளைய அரசுக்கு எதிராகக்குரல் கொடுக்கும் வள்ளலாரை நமக்குக்காட்டிச் செல்கிறார் ஜெயராமன்.

‘உரங்காணும் அரசியற்கோல் கொடுங்கோல் ஆனால்

ஓடி எங்கே புகுவது எவருக்கு உரைப்பதம்மா’                   ( 2808)

 

பட்டினிக்கிடப்பாரைப் பார்க்கவும்நேரீர்

பழங்கஞ்சியாயினும் வழங்கவும் நினையீர்                          (5561)

‘கருணை இலா ஆட்சி கடுகி ஒழிக

அருள் நயந்த நன்மார்க்கர்  ஆள்க                                             (5618)

 வருணாச்சிரம மயக்கம்,  சமயம் மதம் எனும் பேதமை, ஆச்சார கொதிப்பு வேதாகமக்கூச்சல் , கொலை களவு புலை இவை அனைத்தும் நீங்கும் ஓர்நாள்.

அந்தத்தருணம் நல்ல தருணம். அருள் செய்ய ஏற்ற தருணம் என்கிறார் அருட்ஜோதி இராமலிங்கர்.

 அந்தத் தருணத்தை நோக்கிப்பயணிக்க  எளிய  மக்களை  சாதாரணர்களை  வள்ளல் இராமலிங்கர்  அன்போடு  அழைக்கிறார்.

அது எல்லார்க்கும் எல்லாம் என்கிற பொதுவுடமை.  அதுவே  எல்லோருக்கும்  ஏற்ற நல்வாழ்வு  நிறைவாழ்வு.  வள்ளல் இராமலிங்கர்  விழைவது  அன்பு வழி  அற வழி  அருள் வழி.

வாழ்த்துக்கள் கோவி. ஜெயராமனுக்கு.

 

 

 

 

No comments:

Post a Comment