Wednesday, October 25, 2023

இணையக்கால கவியரங்கக் கவிதைகள் சில

 


 கவிதை -சிறைக்கைதிகள் 18/10/2023 இணையகாலக்கவியரங்கில் வாசித்தது.


சிறையில் இருப்பவர்கள் 

எல்லோருமா குற்றவாளிகள்

இல்லவே இல்லை

சிறைவாசிகளில் பாதிக்குமேல்

விசாரணைக்கைதிகள்

விசாரணை முடிவதற்குள்

பாதிவாழ்க்கைப் பைசலாகிவிடும்

கருப்புத்துணியால் கண்களைக்கட்டியபடியே

நீதிக்கடவுள்

கொலையே செய்யாதவனைக்

கொலையாளி ஆக்கலாம்

ஆயுள் கைதியாகி

வாலும் தோலுமாய் அவன்  வெளிவரலாம் ஓர்நாள்

ராக்கெட் விஞ்ஞானி

நம்பி நாராயணனை

பாகிஸ்தானுக்கு உளவாளியென

கேவலப்படுத்தியக் கீழ்மைக்கு

கங்கையில் மூழ்கிட்டாலும்

பாவம் தொலையுமா?

----------------------------


பொது நியாயம்                                19/10/23  இணையக்கால கவியரங்கு.


யாரேனும் ஒரு கன்னத்தில் அறைந்தால்

நீ மறு கன்னத்தையும் காட்டு

சொல்லிவிட்டுச் சிலுவைக்குச்

சென்றார் இயேசு

வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம் வாடினேன்

வருந்தினார் அருளாளர் இராமலிங்கர்

வள்ளலுக்குப்பின்னர்

வாடிய பயிருக்கு

யாரேனும் வாடினாரா என்ன

காவிரியில் தண்ணீர் விடாதே

அதற்கு ஒரு பந்த் கரந்நடகாவில்

காவிரியில் தண்ணீர் திறந்துவிடு

அதற்குக்கடை அடைப்பு தமிழ் மண்ணில்

உச்சநீதிமன்றம் உண்டு

காவிரி நீர் ஒழுங்காற்றுக்கமிட்டி உண்டு

எல்லாம்தான் உண்டு

யார் சொல்வதையும் யாரும் கேட்பதில்லை

பொதுவாய் நியாயம் சொல்ல ஆளும் இல்லை

கேட்க இங்கு மனிதர்களும் இல்லை..

----------------------


கல்விக்கூடம்                                                    இணைக்கவியரங்கு  20/10/23


எந்தக்கல்விகூடமும்

மாணவர்கள் பெற்றிட்ட

மதிப்பெண்ணையும் ராங்கையும்

பற்றித்தான் விளம்பரம் செய்கின்றன

நல்ல மாணாக்கர்களை

உயரிய சமூகத்தைப் படைப்பதில்

கல்விக்கூடங்கள் தம் பங்கு பற்றி

வாய் திறப்பதே இல்லை.

நோட்டுப்புத்தகம் ஆய்வகம் கணினி

யூனிஃபார்ம் கேண்டின் ஆஸ்டல் பேருந்து வசதியென

எல்லாவழியிலும் கொட்டுகிறது பணம்

பணிக்கு வரும் ஆசிரியர்களைச்சுரண்டி

பெற்றோர்களைக் கொள்ளையாய்ச் சுரண்டி

கொழுக்கின்றது கல்வி  வணிகம்

உயர்கல்வி நிறுவனங்களின்

எண்ணிக்கை அதிகம் தமிழ் மண்ணில்

அள்ளிக்கொள்ளலாம் பணம்

கல்வி ஒரு தொழில்

கலைமகளோ கார்ப்பரேட்கள்  முன்

கைகட்டி வாய் பொத்தி.

----------------------


மனிதன் அப்படித்தான்                                இணையக்கால கவியரங்கு   21/10/23


லஞ்சம் அழகு தமிழில் கையூட்டு

மறைவதே இல்லை அது

எத்தனை பேர் பிடிபட்டால் என்ன

வாழ்க்கையே மொத்தமாய்

பூச்சியமானால் என்ன

லஞ்சம் எங்கும் என்றும்

சிரஞ்சீவிதான்

அறிவீரோ லஞ்ச ஒழிப்புத்துறை

எது வந்தால் என்ன

நீதிமன்றங்கள் ஆயிரம் குட்டினால் என்ன

நீதிபதிகளே பதவி ஓய்வுக்குப்பின்னே

நியமன நாடாளுமன்ற உறுப்பினராம்

எத்தனை அவலம்

பிறப்பும் இறப்பும்

மனிதன் கையில் இல்லை

லஞ்சம் அங்கு மட்டுமே

கதவு தட்டுவதில்லை.

---------------------------------------------












No comments:

Post a Comment