Tuesday, February 23, 2016

கலில் ஜிப்ரான் கவிதைகள்l




ஆத்ம ஞானம் -கலில்ஜிப்ரான்

 மனிதன் கேட்கிறான்.
ஆத்ம ஞானம் பற்றிக்கூறுங்கள்'
அவர்  சொன்ன விடை .
பகல் இரவின் அந்தரங்கங்களை
உங்கள் இதய அமைதியில் தெரிந்திருப்பீர்கள்
ஆத்ம ஞானம் பற்றிக்கேட்க
 உங்கள் செவி 
விடாய் பெற்றிருக்கும்
சிந்தனை செறிந்த 
அச்சொற்களை நீங்கள் அறிவீர்கள்
அக்கனவின் நிர்வாணக்கனவுகளை
உங்கள் விரல்கள் 
 ஸ்பரிசிக்கலாம் நிச்சயமாக
ஆன்ம ஊற்று எழ விழையும்
சிற்றுருமல் சாதிக்கும்
 கடல் நோக்கி ஓடும்
ஆழம்காணாமுடியா ஆன்மக்கருவூலம்
கண்களே  அறியும்
அறியமுடியா ச்செல்வத்தை எது கொண்டு அளப்பது
கம்போ அல்லது வேறு கருவிகொண்டோ 
அளவிட விழைவாயோ
கங்குகரைகாண்முடியாத 
அளப்பரிய ஆன்மக்கடல்.
உண்மையை அறிந்தேன்
 சொல்லாதே அப்படி
உண்மை யொன்று 
தெரிந்ததாய்ச்சொல்
ஆன்மாவின் பாதையைக்
கண்டதாய்ச்சொல்லாதே
ஆன்மாநின்வழி 
நடை பயில்வது கண்டதாய்ச்  சொல்
ஆன்மா எத்தடத்திலும் பயணிக்கும்
ஆன்மா கோடு வரைந்து பயணிக்காது 
 ஒரு செடியின் தண்டென நீட்டமாய் வளராது
எண்ணிலடங்கா இதழ்கள்
 போர்த்திய  ஓர்  தாமரைப்பூ
தன்னில் மலர்வதே ஆன்மா.
------------------------------------------.

கலில் ஜிப்ரான் கவிதைகள்l



உள்கட          -கலில்ஜிப்ரான்

பெண் பூசாரி கேட்டார்.
'இறைவழி பாடு பற்றிச்சொல்லுங்கள்.'
அவரின் விடை வந்தது.
துயரமும் தேவையும் 
நெருக்கத்தானே உமது வழிபாடு
மகிழ் நிறைவும்
 வாழ்செழிப்பும் உறுதிப்படுகிறது
அத்தருணம் இறை வழிபாடு ஏதுமுண்டா?
இறைவழிபாடென்பது 
உம்மையே விரித்து வாழும்
பெருவெளியொடு ஏகமாகிடும் அனுபவம்
உமது இருள்துயரத்தை
 மாத்திரமா பெருவெளியொடு பகிருதல்
இதயம் மலருதலை
 மகிழ்வையும் கூட்டித்தான்
ஆன்மா வழிபாடென்று
 அழைப்பு விடும்பொதெல்லாம்
 அழுகை அழுகை
ஆன்மா கடையப்படுதல் தொடர்கிறது.
தொடரும் அழுகை 
அது மகிழ்சிரிப்பாகும்வரை.
வழிபடு போதெல்லாம்
வான்வெளியில் வழிபடு
 பிறரோடு சந்திப்பு
வழிபாடில்லை எனில் 
 அச்சந்திப்புத்தான் நிகழுமா?
ஆலயத்துக்கு ச்செல்கிறாய்
தேடும்அது கண்ணுக்குத்தெரிந்தாலென்ன
 இல்லை என்றால் என்ன
ஆனந்தப்பரவசமும்
 இனிய சந்திப்பும் நிச்சயம்
வேண்டும் இது வேண்டும் அது
இப்படித்தானா  செல்வாய் ஆலயம்
கேட்பது கிடைத்தும் விடுமா
குறுகி குறுகிக்
கெஞ்சி அஞ்சியுமா நீ
எப்படி கிட்டும் உய்ர்வு
அடுத்தவன் ஒருவனுக்கு நன்மையே
 வேண்டுமென ஆலயம் போனதுண்டா
உன் வேட்டல் 
அவன் செவி அப்போதும் ஏறாது
கண்ணுக்குப்புலனாகா ஆலயம்
நின்னுள்  கட உள்
எப்படி கடப்பது 
நான் சொல்லவும் மாட்டேன்
கடவுள் நீ சொல்வது கேட்கவும்மாட்டர்ர்
அவராக உன் வாய்வழி வந்து
 ஏதும் உரைக்கக் 
அது கேட்கும் அவர்க்கு.
கடலும் மலையும் வனமும் பிரார்த்திக்கிறது 
உனக்கு அது கற்பிக்க முடியுமா
கடலொடு மலை வனம்
 நின் பிறப்பிற்கு ஆதாரம்
நின் இதயம் அறியும் அது
நடு நிசிப்போதில் அவைகளின் வேட்டல்
 கவனி  அது கேட்டிருக்கும்

' கடவுள் நம் இருப்புக்கும்
 நம் விருப்புக்கும் மூலம்
கடவுளின் விருப்பே 
உள் போய் நம் விருப்பாகிறது

நம்முன் பகலும் இரவுமாய்
 மாறி மாறி விரிவது
இறை விருப்புத்தான்

யான் என்ன கேட்க
என் தேவை யாவும்
இறை முன்னம் அறிந்து
 எம்பாற் பின்னே பிறப்பது
இறைநீயே எமது விருப்பு.
நின்னை எமக்கு நீயே கொடுக்கிறாய்
 யாம் அனைத்தும் பெறுகிறோம்'

----------------------------------------------------------------








Monday, February 1, 2016

கலில் ஜிப்ரான் கவிதைகள்




கலில் ஜிப்ரான் 

அழகென்பது


'அழகு எது என்று சொல்வாயோ'
 கவியின் கேள்வி
 விடையோ வினாவாய் .
எங்கே அழகைத்தேடுவாய் நீ?
அழகே வழி சமைத்து
அவ்வழகே வழிகாட்டி
அமைய க்கிடைக்கலாம் அழகு

அழகு பற்றி இன்னும்  ?
அழகே மனமிறங்கி அதனை 
அமைத்துக் கொடுக்க 
அது சாத்திய மாகலாம்.

மனம் துன்புற்றவனும் 
உடல் புண்பட்டவனும் சொல்கிறான்.
அழகென்பது கருணை
அழகென்பது அனுசரணை.
இளந்தாய் ஒருத்தி
 தன் பெருமையின் பிடியில்
கொஞ்சமாய் வெட்கப்பட்டு
 நம்மிடையே  நடப்பதொப்பது அழகு.

உணர்ச்சி வயப்பட்டோன் சொல்வான்.
'அப்படி இல்லை
அழகென்பது வலிமை
 அது அஞ்சவும் வைப்பது.
கீழிருக்கும் இப்பூமியை
 மேலிருக்கும் அந்த விண்ணை
உலுக்கிப்போடும் இளம் புயல் அது.

களைப்பும் சலிப்பும் கொண்டவன்
 விடை சொன்னான்.
அழகு மென்மையின் அழைப்பு.
அழகு நம் உணர்வின் உயர் தளத்தில்
 நம்மிடம் சம்பாஷிப்பது..
ஒரு சிறிய ஒளிக்கீற்று
 சூழ்நிழலைக் கிழித்துக்கொண்டு ப்
பாய்வதொக்கும்.

ஆயின் மனக் கவலையில் 
தோய்ந்தவன் சொல்கிறான்.
மலைகளின் நடுவே
 அழகு எழுப்பும் பேரொலி
நாம் கேட்டிருப்போம்.
அதனைத்தொடர்ந்துதானே
புரவிகள் குளம்பொலி
இறக்கைகளின் படபடப்பு
சிங்க கர்ஜனை.

மா நகர இரவுக்
காவலாளி பகர்கிறான்.
அழகென்பது புலரும் காலையில் கிழக்கின் உதயம்.

நண்பகல் உழைப்போனும்
 நடைப்பயணம் செல்வோனும் சொல்கிறார்கள்.
கதிரவன் மறை போதே சாரளமாகி
அழகுப்பெண் பூமி மீது
 ஒய்யாரமாய்ச்சாய்ந்திருப்பாள்.

மாரிக்கால ப்பனி
 போர்த்தியவை சொல்லும்
குன்றின் மீது தவழ்ந்து
வசந்தகாலத்தில் உலா வரும் அழகு.

கோடை வெயிலில்
 கதிர் அறுப்போர் சொல்வர்,
உதிர்ந்த இலைகளிடை 
 அழகுக் கூத்திடுவாள்
 கண்டோம் யாம்
அவள் கூந்தலிடை
 பனி தழுவிச்சென்றதங்கே.

 அழகு குறித்து ப்
 பலரும் பகன்றவை.
அழகு குறித்தா இல்லை இல்லை

உம்  நிறைவேறாத் தேவைகள் அவை
அழகு, தேவையொடு 
தொடர்புடைத்தா என்ன
அது பேரானந்தச்சிலிர்ப்பு.
நாவில் நீர் சொட்டவைக்கும் விடாயோ 
வெறுங்கையின் நீட்சியோ இல்லை அது
இதயம் தரும் ஒளிப்பிரவாகம் 
ஆன்மாவின் ஆனந்த லயிப்பு

பார்க்கும் உருவும்
 நீ கேட்கும் பாடலும் இல்லை அது.

கண்களை மூடிட க்காட்சி யாவது
 செவிகளை ப்பொத்திடக்கேட்க முடிவது
பிளவுண்ட மரக்கிளையின் மையப் பகுதி
 சொட்டும் அத்திரவமில்லை அது
நகத்தொடு ஒட்டித்தொங்கும் 
சிறகும் இல்லை அது
பொதெல்லாம் மலர் அவிழும் நந்தவனம் 
தேவ கன்னியர் கூட்டத்து ஓயாப்பேரணி.
.
 ஆர்ஃபலிசு ( Orphalese)  நகரத்து  மாசனங்களே
வாழ்க்கையின் புனித முகம் 
தெரியத்தெரிய
 மனித வாழ்க்கை அழகு.

வாழ்க்கை நீ
அவ்வாழ்க்கையைத் தொலைப்பது நீ.
இதோ ஆடி முன்னே 
தன் அழகு பார்க்கிறது
அமரத்துவ அழகு.

காலத்தை வெல்பவன் நீ
நின்முன்னே நிற்கும் அவ்வாடியும் நீ..
-----------------------------------------------------




Saturday, January 16, 2016

paazum manam - story



பாழும் மனம் -எஸ்ஸார்சி

டெலிபோன் மணி கிர்ரிங்க் கிர்ரிங்க் என் அடித்துக்கொண்டே இருந்தது.ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இப்படித்தான்.காலை ஒன்பது மணி ஆனால் இந்த டெலிபோன் மணி அடிக்கத்தானே செய்கிறது.நானும் இந்த ஊருக்கு வந்து ஒரு ஐய்ந்து ஆண்டுகள் ஆகி யிருக்கும்.இன்னும் இந்த டெலிபோன் அழைப்பு விடாமல் தொடர்கிறதே.
'யார் நீங்க்'
''ச்சீனு இருந்தா பேசச்சொல்லுங்....க'
' இங்க சீனுன்னு யாரும் இல்லை.உங்களுக்கு சீனு என்ன வேணும்'
'அந்த மயிதிலியானு பேச்சொல்லுங்கோ'
'இது ராங்க் நம்பர். நீங்க போன கட் பண்ணுங்க'
வயதான ஒரு பெண்மணியின் குரல் என் டெலிபோனிலிருந்து இற்றுக்கொள்கிறது.ஒவ்வொரு ஞாயிறு அன்று என் மனைவி இல்லை என் மகன் இல்லை நான் என்று பதில் பேசுகிறோம். பேச்சு எப்பவும் இவ்வளவுதான்.எத்தனை முறை ராங்க் நம்பர் ராங்க் நம்பர் என்று அடித்துச் சொன்னாலும் அந்தப்பெண் நாம் சொல்வதை எங்கே கேட்டாள்.
எந்த எண்ணிலிருந்து இந்த அழைப்பு வருகிறது என்பதை அறிய முடியவில்லை. நானும் என்னவளும் யோசித்தோம். அதன்படியே நான் அருகிலிருக்கும் தொலைபேசி நிலையம் சென்றேன்.
'உங்க கிட்ட டிஸ்பிளே வர்ர டெலிபோன் இல்லயா' டெலிபோன் நிலையத்து வாசலில் நீல நிற யூனிஃபாரத்தில் இருந்தவர் என்னிடம் கேள்வி வைத்தார்..
'இல்லை சார்'
'ஒண்ணு ப்ண்ணுங்க அந்த லேடி பேசும்போது நீங்க போன் ரிசிவர தூக்கி தூரமா வச்சிட்டு உடனே இங்க வாங்க அந்த நெம்பரை அப்பத்தான் கண்டு பிடிக்க முடியும். என்ன நான் சொல்றதைச்செய்வீங்களா'
' அப்படியே செய்யறேன் சார்'
சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தேன்.மனைவியிடம் இது விஷயம் சொன்னேன்.
'போன் ரிசிவர எடுத்து தூரமா வச்சிட்டு அப்படியே டெலிபோன் ஆபிசுக்கு எல்லாம் ஓட முடியுமா என்ன? நீங்க டெக்னிகலா விஷயம் தெரிஞ்ச சரியான செக்ஷன்லதான் பேசுனிங்க்ளா இல்ல ஒரு காலத்துல உங்க தங்கச்சிக்கு மாப்பிள்ள பார்த்த கணக்கா அதான் யாரோ தெருவுல நின்னுகிட்டு இருந்த ஒரு மூணாவது மனுசன் கிட்ட விசாரிச்ச அந்த கதையா'
எனக்குப்பதில் சொல்ல வரவில்லை. ஒன்றும் பேசாமல் நின்று இருந்தேன்.
'நான் அந்த டெலிபோன் நெம்பரை என்னன்னு கண்டுபிடிச்சு உங்ககிட்ட சொல்றேன்.அப்புறம் நீங்க என்ன செய்யுறீங்கன்னு பாக்கலாம்'
'எப்படி'
'பாருங்களேன்'
அவள் அவளுக்குத்தெரிந்த நண்பர் ஒருவர் வீட்டிலிருந்து டெலிபோன் எண்களை டிஸ்பிளே செய்யும் ஒரு இன்ஸ்ட்றுமென்ட்டை இரவலாக வாங்கி வந்தாள்.அதுவரைக்கும் என் வீட்டு டெலிபோன் அவர்கள் வீட்டில் பதிலியாக இருந்தது. வழக்கம் போல் ஞாயிற்றுக்கிழமையும் வந்தது ஒன்பது மணிக்கு ச்சரியாக டெலிபோன் மணியும் அலறி அடித்தது. நான்தான் ரிசிவரை எடுத்தேன்

'கொஞ்சம் சீனுவ பேசச்சொல்லுங்க'
'இங்க யாரும் அந்த பேரில இல்ல'
'மயிதிலி இருப்பாளே'
'இது ராங் நெம்பர். இனி இந்த நெம்பரைக் கூப்பிடாதிங்க' எத்தனை தரமோ இப்படி சொல்லி ஆயிற்று.
டெலிபோனில் டிஸ்பிலே ஆன நெம்பரைச்சரியாக்குறித்துக்கொண்டேன்.
'இப்ப டெலிபோன் ஆபிசுக்குப்போங்க இந்த நெம்பரு வேல செய்யுற விலாசம் வாங்கியாங்க மொதல்ல' அவள் கட்டளை தந்தாள். நான் பழைய பரமசிவமாய் அந்த டெலிபோன் ஆபிசுக்குப்போனேன். நான் எடுத்துகொண்டுபோய் காட்டிய அந்த எண்ணுக்கு 'மேற்கு தாம்பரம் சண்முகம் தெருவில் ஒரு வறுகடலை வியாபாரி' விலாசம் தந்தார்கள்.இனி அங்கு சென்று விசாரிக்க வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தேன்.
'சார் நீங்க் இந்த ஏரியாவுக்கு எப்ப குடி வந்தீங்க'
டெலிபோன் ஆபிசுக்காரர்கள்தான் கேள்வி கேட்டார்கள்
'அய்ந்து வருடம் இருக்கும்'
'அப்ப இந்த அஞ்சி வருஷமா இப்படி ஒரு கால் வருதா'
'ஆமாம் சார். இப்பத்தான் இது என்ன விஷயம்னு கண்டுபிடிக்க யோசனை வந்திச்சு'
'சார் அஞ்சி வருஷத்துக்கு முன்னால சீனுவாசன்னு ஒருத்தருக்கு இதே டெலிபோன் நெபம்ரு வேல செஞ்சிது..அவரு போஸ்ட் ஆபிசுல வேலையும் செஞ்சாரு குடியும் இருந்தாரு. அப்புறம் அவருக்கு திருநெல்வேலி வேல மாற்றலாயிடுச்சின்னு மட்டும் எனக்கு நல்லா தெரியும் நானும் அவரும் மலயாள மாமி மெஸ்சுல அப்பப்ப ஒண்ணா லன்ச் சாப்பிடுவோம்.' கணினித்திரையயை உற்றுப்பார்த்துக்கொண்டே ஒருவர் எனக்குப்பதில் சொன்னார்.
நான் கட கட என் வீடு திரும்பினேன். நடந்த விபரத்தைக் காத்துக்கொண்டிருந்த அவளிடம் சொன்னேன்.
'வருகிற ஞாயிறு காலை ஒன்பது மணிக்கு நேரா தாம்பரம் போயி அந்த பட்டாணிக் கடைக்குப்பக்கத்தில நில்லுங்க. யாரு வர்ரா எப்படி பேசுறான்னு பாருங்க'
மீண்டும் அவள் எனக்கு யோசனை சொன்னாள். எப்படியும் வயதான ஒரு பெண் வந்து போனில் பேசப்போகிறாள்.நாமும் போய் பார்த்துவிட்டு ப்பிறகு இன்னது செய்வது என்று முடிவுக்கு வரலாம். எண்ணினேன்.
மறு நாள் ஞாயிற்றுக்கிழமை .காலையிலேயே கிளம்பினேன். எட்டரை மணிசுமாருக்கு என்னுடைய டூவீலரை எடுத்துக்கொண்டு தாம்பரம் சண்முகம் தெரு முழுதும் தேடினேன். எனக்குத் தெரிந்த அரசாங்க நூலகத்துக்கு அருகே ஒரு செருப்புக்கடைக்கு ப்பக்கமாய் அந்த பட்டாணிக்கடை இருந்தது. கடை வாசலில் போய் நின்றுகொண்டேன்.
'பாண்டு பட்டாணிக்கடை' அழகிய கொட்டை எழுத்துக்கள் வா வா என்று தெருவில் போவோர் வருவோரை அழைத்துக்கொண்டிருந்தது.பட்டாணிக்கடையில் ஒரு ஓரமாக அடுப்பு எரிந்து கொண்டிருந்தது.தலையில் முண்டாசும் முண்டா பனியனும் போட்டிருந்த ஒரு நடுத்தர வயதுக்காரர் பட்டானி வறுத்துக்கொண்டிருந்தார்.மஞ்சள் கரைத்த சிறு சட்டி வாயைப்பிளந்துகொண்டு அருகிருந்தது.வெள்ளை மணலும் கருகிய மணலும் சிறு சிறு முட்டுக்களாய் ஒரு பக்கத்தில் அமர்ந்திருந்தன. அவர் அடிக்கொருதரம் வெற்றிலை போடுபவர் போலிருக்கிறது.வாயைக்குதப்பிக்கொண்டிருந்தார்.அடுப்பிலிருந்து எழும் புகை வெளிப்போகஒரு உயரக்குழாய் அவருக்கு முன்பாக விரைத்துக்கொண்டு நின்றது,
மணி சரியாக ஒன்பதை நெருங்கிகொண்டிருந்தது.எனக்கு மனம் படக் படக் என்று அடித்துக்கொண்டிருந்தது.நான் தவறு ஏதும் செய்யவில்லை இருந்தாலும்தான் என்ன.
தூரத்தில் ஒரு பெண்மணி நடந்து வந்தாள்.தலை வெள்ளை வெளேர் என நரை தட்டியிருந்தது. இரண்டு கைகளிலும் ஒவ்வொரு துணிப் பை,அவை நிறைத்துக்கொண்டிருந்தன அவள்.கடை அருகே வந்து விட்டாள்.முகம் வாடி க்கருத்து இருந்தது.வயது அறுபதுக்கும் எழுபதுக்கும் இடையில் இருக்கலாம்.தலை வாரி பல காலங்கள் ஆகியிருக்குமோ. என்னவோ அப்படித்தானே இருந்தது.காதி மூக்கில் எந்த அணிகலனுமில்லை.கழுத்தில் ஒரு மஞ்சள் நிற மணி மாலை மட்டும் அழகாகக்கிடந்தது.
தன் ஜாக்கெட்க்குள்: கை விட்டு குட்டை நோட்புக்கை கையில் எடுத்தாள்.
'சாரு'
கல்லாவில் இருந்த பட்டாணிக்கடை நாடார் டெலிபோனை ரிசிவ்ரோடு எடுத்து அந்தப்பெண்மணியிடம் கொடுத்தார். குட்டைப்புத்தகத்தைப்பார்த்துக்கொண்டே அந்தப்பெண் டெலிபோன் எண்ணை தட்டினாள். ரிசிவரைக்காதில் வைத்துக்கொண்டாள்.
'ச்சீனுவ பேசச்சொல்லுங்கோ'
'அப்ப மயிதிலி' அந்தப்பெண் டெலிபோனில் பேசுவது(?) எனக்குக்கேட்கிறது. ஒரு நிமிடம் கூட இல்லை. அந்தப்பெண்
டெலிபோனை ரிசிவரோடு அந்த பட்டாணிக்கடை நாடாரிடம் ஒப்படைத்தாள். தயாராக வைத்திருந்த நாணயம் இரண்டை அவரிடம் நீட்டினாள். கீழே கிடத்தி வைத்திருந்த இரண்டு பைகளையும் திரும்பவும் எடுத்துக்கொண்டாள். ஆகாயத்தைப் பார்த்து ஒரு முறை லேசாக ச்சிரித்துக்கொண்டாள்.
தாம்பரம் ரயில் நிலையம் பக்கமாகத்தான் நடையைக்கட்டினாள்.
நான் பட்டாணிக்கடை நாடாரிடம் நேராக சென்று என் மனைவிக்குப்பிடித்த உப்புக்கடலை நூறு கிராம் வாங்கினேன்.
''இப்ப கூட இந்த இந்த மாதிரி டெலிபோன் பேசறதுக்கு எல்லாம் ஆளு இருக்காங்க போல'
'சாரு.இந்த பொம்பள எத்தினி வருஷமாவோ இந்த நம்பருக்கு கால் போடும்.ஞாயிற்றுக்கிழமையே தவறினாலும் இந்த அம்மா வர்ரது மட்டும் நிக்காது. நானு ரூவா ரெண்டு வாங்கிகறேன் பேச வுடுறேன்.இந்த அம்மா தன் தம்பியதான் டெலிபோனில் கூப்பிடுது. நல்ல குடும்பத்து பொம்பளயாவே கூடம் இருக்கும். அந்த அம்மா தேடுற தம்பி அவுரு உயிரோடத்தான் இருக்காரோ அப்படி இருந்தா எந்த ஊருல இருக்காரோ. இந்த பொம்பளைக்கி மூள கொஞ்சம் கோளாறுன்னு தெரியுது.தாம்பரம் ரயில்வே பிளாட்பாரத்துல உக்காந்து கைய நீட்டும்.பிச்சை கிச்சை யாராவது போடுறாங்க:ளே உலகம் இன்னும் ஒண்ணும் அழிஞ்சிடலயே'
சண்முகம் தெருவில் நடந்து போன அந்த பெண்ணின் உருவம் மறைந்து போனது.உப்புக்கடலை பொட்டலத்தைக்கையில் வாங்கினேன்.கை லேசாச்சுட்டது.
'இப்பக்கி அடுப்பிலேந்து எடுத்த சரக்குல்ல' பட்டாணிக்கடைக்காரர் சொல்லிக்கொண்டார்.
டூவீலரை எடுத்துக்கொண்டு நான் என் வீடு திரும்பினேன்.மனம் என்னவெல்லாமோ செய்தது.சுகர் வியாதியும் வந்து மூளையும் சற்று கோளாறாகி வயது நாற்பது கூட தொடாமல் பாதியிலே போய்விட்ட என் தங்கையின் நினைவு வந்து உறுத்திற்று.
வீட்டுக்கு வந்து நடந்த விபரம் முழுவதுமாய் என் மனைவியிடம் சொன்னேன்..
' 'அந்த டெலிபோன் நெம்பர் வேண்டவே வேண்டாம் அத உடனே மாற்றிட்டு வேற நல்ல நெம்பரு ஏதாவது வாங்கிடுங்க' அவள் எனக்குக் கட்டளை தந்தாள். எனக்குத்தானின்னும் மனம் ஒப்பவே இில்லை.
-------------------------------------------------




.. ..

Friday, August 14, 2015

saivam -story




சைவம் -எஸ்ஸார்சி



அவன் தன் வீட்டை வாடகைக்கு விட்டிருந்தான்.தனக்கு அலுவலத்துப்பணியில் சமுத்திரகுப்பம் மாற்றல்.முதுகுன்ற நகரத்திலிருந்து ஒரு மணி பேருந்தில் பயணிக்க அந்த சமுத்திரகுப்பம் போய்ச்சேரலாம்.முதுகுன்ற நகரில் அவன் ஒரு வீடு சொந்தமாகக்கட்டி அதனில்தானே குடியிருந்தான். பணி இடம் மாற்றல் ஆக அவன் முதுகுன்ற வீட்டை வாடகைக்கு விடவேண்டும்.வீடு வாடகைக்கு என வெள்ளைத்தாளில் ஸ்கெச் பேனா கொண்டு எழுதி காம்பவுண்ட் சுவரில் ஒட்டினான்.மறக்காமல் தன் தொலைபேசி எண்ணையும் அதனில் எழுதி வைத்துவிட்டுத்தான் சமுத்திரகுப்பம் சென்றான்.
அவன் அலுவலகத்தொலைபேசி எண்ணைத்தான் எழுதி உடன் பி பி என்றும் போட்டிருந்தான்.இது இப்போதைய செல் பெசி ஜனங்களுக்கு விளங்காதுதான். தொலைபேசி சாம்ராஜ்ஜியத்தில் கைபேசி பிறப்பதற்கு முன் என்கிற காலம் ஒன்று இருந்தது. அப்போதெல்லாம் எப்போதும் பி பி கால் பேசும் இனம் ஒன்று உண்டு.
ஒரு சிலர் போனில் அவன் வாடகைக்கு விடும் வீடு பற்றி விசாரித்தார்கள். அந்த முதுகுன்றத்து வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொள்ள எனக்கு உனக்கு என போட்டி போட்டுக்கொண்டு யாரும் வரவில்லை.
திடீரென ஒரு நாள் முதுகுன்ற நகரில் அவன் வீட்டுக்குப்பின்புறம் குடியிருப்பவரின் பையன் சமுத்திரகுப்பம் வந்தான். அவன் வேலை பார்க்கும் டெலிபோன் அலுவலகத்துக்கு நேராக வந்து 'வீடு வாடகைக்கு வேண்டும்' என்றான்.'யாருக்கு' என்றான் அவன்.'என் நண்பர் ஒருவருக்கு' வந்தவன் பதில் சொன்னான். வீீடு பூட்டிக்கிடப்பதில் என்ன பிரயோசனம் என்று எண்ணி ' நீங்கள் சொன்னால் சரிதான்' என்றுமுடித்தான்.அட்வான்ஸ் தொகையொன்று கை மாறியது. ஏதோ தொகை. கைவசம் அவன் தயாராக வைத்திருந்த முதுகுன்ற வீட்டுச் சாவியை அவனிடம் ஒப்படைத்தான்.'மாதம் ஆயிரம் வாடகை' சொல்லியாயிற்று. ஆயிரமே பெரியதகைதான். சிறியது வீடு.ஒரு வழியாக முதுகுன்ற வீட்டை வாடகைக்கு விடுவது என்கிற பிரச்சனை முடிவுக்கு வந்தது.மனம் லேசாக சந்தோஷப்பட்டது.மனைவிக்கு போன் போட்டான்.'வாடகைக்கு வர்ர ஆளு சைவமான்னு கேட்டிங்களா' அவள் கேள்வி வைத்தாள்.'சைவமாதான் இருக்கும். இல்லாகாட்டி நமக்கு தெரிஞ்ச ஒரு பையன் நம்மகிட்ட அந்த மனுஷனை வாடகைக்குன்னு கொண்டு வந்து விடுவானா' அவன் சமாளித்தான்.அவள் அமைதி ஆனாள்.
இரண்டு வாரம் சென்றது.அவனும் அவளும் விடுமுறைத்தினதன்று முதுகுன்றம் புறப்பட்டார்கள். அவன் வீட்டையும் வீட்டில் குடியிருப்பவரையும் பார்த்துவரலாம் என்பதாக யோசனை.இருவரும் முதுகுன்ற நகரில் பேருந்தை விட்டு இருந்து இறங்கினார்கள். வாடகைக்கு விட்ட அந்த வீடு திருவள்ளுவர் நகரில் இருந்தது. இருவரும் பைய நடந்தார்கள்.தன் வீட்டு வாசலில் நாற்காலிபோட்டுக்கொண்டு ஒரு ஆள் உறங்கிக்கொண்டிருந்தார்.ஒரு பெண் புழுங்கல் அரிசியை கும்பலாகக்கொட்டி அதனை முறத்தால் கிளறியபடியே இருந்தாள்.
'சார் நாங்கதான் வீட்டு சொந்தக்காரங்க வந்துருக்கம்' அவன் கொஞ்சம் உரத்துக்குரல் தந்தான்.'யாரு வூட்டுக்காரரு' அந்தப்பெரியவர் ஆரம்பித்தார்.
'நீங்க குடியிருக்குற வீட்டுக்கு சொந்தகாரரு'
'அப்படியா எம் மருமொவள கூப்பிடறேன்.இதுல எனக்கு சோலி என்னா இருக்கு'
மருமகள் வீட்டின் உள்ளிருந்து வெளியே வந்தாள்.
'யாரு யாரு'
'நாங்கதான் வீட்டுக்கு சொந்தக்காரங்க'
'வாங்க வாங்க சரியான நேரத்துக்கு தான் வந்துருக்கீங்க. வூட்டு உள்ள இருக்குற முனிசிபாலிடி கொழாயில தண்ணி வருல.தெருவுல பூமிவுள்ளாற போற மெயின் கொழாயிக்கு நேரா பள்ளம் எடுக்கணும். ஒரு துண்டு குழாய் போட்டு இழுத்துடணும். நம்ம வூட்டு வாசல்ல ஒரு தொட்டியும் கட்டுணும்'
'இது என்னா புது சேதி' அவன் மனைவி தொடர்ந்தாள். வீட்டு சொந்தக்காரரைப் பார்த்த உடனே இப்படியுமா ஆரம்பித்துவிடுவார்கள் அவனின் அவளுக்கு சங்கடமாக இருந்தது..
'ஒண்ணும் புது சேதி இல்லே. தண்ணி வரவேண்டிய போர்சுல வருல. வர்ர தண்ணியும் வூட்டுக்கு ஏறமாட்டேங்குது.அதான் குழி வெட்டி கொஞ்சம் வேல செயிணும் ஒரு தொட்டி கட்டணும்.அது உள்ள அந்த தண்ணி உழுவுணும். அதுல சின்னதா ஒரு மோட்டார் போட்டு அத வூட்டு உள்ளாற கொண்டாறணும்.வேல இருக்கு'
'இப்பதான நீங்க வந்து பதினைஞ்சி நாளு ஆவுது'
'அதுக்குன்னு தண்ணி இல்லாம என்னா செய்யிறது'
'ரொம்ப செலவு வரும்போல' அவன் அச்சத்தோடு சொன்னான். அவன் மனைவிக்கு எரிச்சலாக வந்தது.அமைதியாகவே இருந்தாள்.
'ஒண்ணும் பெரிய விஷயம் இல்லே.நேரா பீச்ச கை வாட்டமா தார் ரோட்டே பொனீங்கன்னா ஒரு எண்ணெ மில்லு வரும். வெங்கடேஸ்வரா ஆயில் மில்லுன்னு நெனைக்கிறேன்.பக்கத்துல தனலச்சுமி ரைசு மில்லு அதுக்கு பக்கத்துல சிமெண்டி தொட்டி செய்யுற கடை.அந்த ஓனரு.இந்த வேலய எல்லாம் காண்டிராக்டா எடுத்து செய்யுறாரு.ஒரு எட்டு போங்க பேசுங்க.காசு என்னா ஆவும் அது அது எவ்விடம்னு தெரிஞ்சிகிட்டு வந்துடுங்க'
'அவுரு இந்த தெருவுல இது மாதிரி வேல செஞ்சி இருக்குறாரா?'
அவன் மனைவி ஒரு கேள்வி கேட்டாள்.
;ஓ ரைட்டா இதே தெருவுல மூணு பேரு வூட்டுல இந்த வேல பாத்து இருக்குறாரு.வூட்டுக்கு பதினைஞ்சி ரூவா வாங்குனாருன்னு கேள்வி'
'என்னம்மா சொல்றீங்க ஒரு ஆயிர ரூவா வாடகைக்கு வந்துட்டு இப்ப பதினைஞ்சி ஆயிரம் செலவு சொல்றீங்க'
'வொங்க வூடு நீங்க செய்யுறீங்க.தண்ணி முக்கியமில்ல ஒரு குடுத்தனகார பொம்பள தண்ணி இல்லாம என்ன செய்வா'
'எம் மூஞ்சில அப்பிடி என்னா இருக்கு.எதுக்கு என்னை பாக்குறது.போயி அந்த காண்டராக்டரை பாத்துட்டு வாங்க' செலவு என்று வந்துவிட்டால் இப்படியாக சூடாப்பேசுவது அவளுக்குப்புதிதல்ல.அவன் அறிவான்.
'காசி குடுக்குணுமுல்ல'
'குடுக்குறதுதான் அப்புறம் என்ன செய்யுவே' அவன் மனைவி அதட்டலாய்ச்சொன்னாள். .
அவன் நேறாகப்புறப்பட்டு அந்த சிமென்ட் காங்கிரீட் செய்யும் கடைக்குச்சென்றான்.தொட்டிகள் சின்னதும் பெரியதுமாக அங்கங்கே நின்று கொண்டு இருந்தன.பாத் ரூமுக்குள் வைக்கப்படும் ஜன்னல் ஜாலிகள் அடுக்கப்பட்டுக்கிடந்தன.என்றோ செய்த அண்ணா சிலையொன்று கேட்பாரற்றுக்கிடந்தது.
'சாருக்கு என்ன வேணும்'
அறுபது தாண்டிய ஒருவர் கைலி கட்டிக்கொண்டு மர நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
'நானு சமுத்திர குப்பத்திலிருந்து வர்ரன் என் வீடு இங்க திருவள்ளுவர் நகர் மூணாவது தெருவுல இருக்கு. வீட்டுல இருக்குற முனிசிபாலிடி குழாய்ல வர்ர தண்ணி வீட்டுக்குள்ள ஏறமாட்டேங்குது. நீங்க அந்த வேலயா காண்ட்றாக்டா செய்யுறதா சொன்னாங்க அதான் வந்தன்'
'சொல்லுங்க உங்க தெருவுல மூணு வூட்டுல செஞ்சி குடுத்துருக்கன். நீங்க பாருங்க. நம்மகிட்டவேல சுத்தமா இருக்கும்.வூட்டுக்கு பதினஞ்சி ஆயிரம் வாங்க்றன்.சாரு நீங்க எங்க வேல செய்யுறீீங்க'
'நானு சமுத்திரகுப்பத்துல இருக்கன்.கணக்கு அதிகாரியா வேல பாக்குறன்'
'எதுல'
'டெலிபோன்ல'
'தேவுலாம் டெலிபோன் சொன்ன உடனே எனக்கு பழைய நெனப்பு வருது. சிரிப்பாவும் இருக்குது. நீங்க யாரோ எவுரோ. ஒரு முப்பது வருஷத்துக்கு முன்னால இதே டவுன்ல டெலிபோன வேல செய்யுற பசங்களோட நானும் தங்கி இருந்தன். நல்லா படிச்ச பசங்க. ரூமு பஸ் ஸ்டேண்டு கிட்ட இருந்துது. காமாட்சி நாயரு தியேட்டரு பக்கத்துல. அந்த பசங்க பேருகூடம் மறந்துபோச்சி.பாலு சாலுன்னு செல்லமா கூப்பிடவும்.அது என்ன பாலுவோ அது என்ன சாலுவோ முழு பேரு எனக்கு நெனப்புல இல்ல'
'அது என்ன சேதி'
'அதாங்க நானு ஒரு நாலு பேருக்கு இட்டுகிணுபோய் டெலிபோனு ஆபிசுல வேல பாக்குற ஒரு ஆள நாலு தட்டு தட்டுனம்.ராத்திரி பன்னெண்டு மணி இருக்கும். டூட்டி முடிச்சிட்டு அந்த ஆளு மணிமுத்தாத்து பாலத்துமேல சைக்கிளு உட்டுகினு வந்தாபுல. சைக்கிள ஹாண்டில்பாரை புடிச்சி நிறுத்துனும் போட்டம் ஒரு போடு அந்த ஆளு நானு டெலிபோன் ஆபிசுகாரன் நான் உங்களை என்னய்யா பண்ணுனேன்னு ஓங்கி கத்துனான் நாங்க வுடுவுமா'
'அப்புறம்'
'அவ்வவுளதான் இண்ணைக்கி பழச நெனச்சி பாக்குறேன் நீங்களும் டெலிபோன் ஆபிசுன்றீங்க'
'எதுக்கு அவர அடிச்சிங்கன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்'
'அதெல்லாம் இப்ப ஞாபகமா இருக்கு. ஆபிசுல ஓயாம குடைச்சலு குடுத்தாராம் அவரு. அந்த ஆள கொஞ்சம் தட்டிவக்கணும்னு சாலுவும் பாலுவும் என் கிட்ட பேசுனாங்க.அவரு பாப்பார சாதின்னும் சொன்னாங்க..அவருக்கு என்னாத்துக்குதான் அம்மாம் கிருதோ'
'யாரு உங்களை அடிக்கச்சொன்னாங்கன்னு சொன்னீங்க'
'அந்த பாலுவும் சாலுவும்தான்.ஆனா அவுங்க அந்த பாலக்கரை ஸ்பாட்டுக்கு வருல. நாந்தான் நாலு பேர இட்டுகினு போயி அந்த அடிக்குற காரியத்தை செஞ்சன்.இண்ணைக்கு நெனச்சாலும் ரவ மனசுக்கு கஸ்டாமாதான் இருக்கு. அப்ப எங்களுக்கு செறு வயசு. அப்புறம் மூலைக்கு ஒருத்தரா அவுங்க அவுங்க பிரிஞ்சி போயிட்டம்'
'கெடக்கு வுடுங்க. நம்ம காரியத்த பாக்குலாம்.அட்வான்சா அய்யாயிரம் தர்ரேன் வச்சிகினு வேலய ஆரம்பிங்க.பாக்கி பத்தும் உங்களுக்கு கரெக்டா வந்துபுடும்'
' உங்க வூடு எதுன்னு சாரு சொன்னிங்க'
திருவள்ளுவர் நகர் மூணாவது தெருவுன்னு சொன்னேனே. வூட்டு நெம்பர் 9. போஸ்டாபீசு இருக்குற தெருவு'
'ஆமாம் அந்த வூட்டுல இப்பதான் வீராணம் ஏரி மீனுவ விக்குற ஆசாமி குடிவந்தாரு'
'அப்படியா சொல்றீங்க. வீட்டு வாசல்ல கூட ஒரு பெரியவரு இருந்தாரு'
'ஆம் அதே வூடுதான். மீனு காரரு இந்நேரம் வீராணம்.ஏரிக்கரைக்கு போயி இருப்பாரு.சரக்கு புடிச்சாரணுமே'
'வூட்ட வாடகைக்கு நானு வுட்டன் அதான்.வேற ஒண்ணும் எனக்கு தெரியல'
'ஆமாம் சாரு. அந்த வூட்டு பொன்ண ஒரு பையன் காதலிச்சான் அவன் ஒசந்தசாதி. பையன் வூட்டுல கல்யாணத்துக்கு ஒத்துகுல.ஆனா பொழங்கின பொண்ண அவன் வுடுலயே. கட்டிகினான். நல்ல பையன்.பட்னமோ பம்பாயோ பூட்டான்'
'யாரு அந்த பையன் சாரு'
'அந்த வூட்டுக்கு பின்னாடி வூட்டுக்காரன் சாரு அவனும் அவன் தகப்பனுக்கு ஒரே பையன் அவுங்க கறீ மீனு திங்குற சாதி இல்ல'
'அது கெடக்கு வுடுங்க நமக்கு எதுக்கு ஊரு கதை. என் வூட்டுல கொழாதண்ணி சுகுறா வர்ராமாதிரி உங்க வேல இருக்குணும். நானு கெளம்புறேன் என்ன'
அவன் தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான்.அவனுக்குள் இத்தனை நாளாய் அவனை முதுகுன்ற மணிமுத்தாறு பாலத்தில் அடித்தது யாரென்று தெரியாமல் இருந்தது. அலுவலப்பணியின்போது ஏதோ பேசி ப்பேசி அது இழுத்துக்கொண்டு போனது. இப்படி அப்படி என்றாகி அவன் பாலக்கரையில் அடிபடுவதில் முடிந்து போனது. அவன் நெஞ்சறிய யாருக்கும் தவறு ஒன்றையும் செய்துவிடவில்லை. ஆனாலும் யாருக்கோ அவன் மீது தீராக்கோபம். அது மெய்யாக இருக்கலாம் யார் அவனை அடித்தார்கள் என்பதே அவனுக்குத் தெரியாமல் இருந்தது. முதுகுன்ற போலிசில் புகார் கூட செய்தான். அரசாங்க உத்தியோகத்தில் இருந்துகொண்டு யாரைக்கேட்டுக்கொண்டு நீ போலிஸ் ஸ்டேசனுக்குப் போனாய் புகாார் கொடுத்தாய் என்று ஆரம்பித்த அதிகாரிகள் அவனுக்குத் தண்டனை மட்டுமே தந்தார்கள். யார் அவனை அடித்தார்கள் என்பதே விளங்காமல்தான் இக்கணம்வரை இருந்தது.. அவனுக்கு இன்றுதானய்யா அதற்கு ஒரு விடை கிடைத்தது. பாருங்கள் விஷயம் இன்று நடந்ததுபோல் இருக்கிறது. அதற்குள் எத்தனையோ ஆண்டுகள் ஓடியேதான் விட்டன. அவனுக்கு அந்த பாலுவும் சாலுவும் இன்றும் இனிய நண்பர்களே.
. எல்லோருக்கும் வயதுமட்டும் ஆகிவிட்டிருக்கிறது.அவ்வளவுதான். மீண்டும் பொடி நடையாய் தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான். போஸ்டாபீஸ் தெருவில் அவன் வீட்டுக்கு நேராக பெரிய மீன் கூடை கட்டிய சைக்கிள் நின்றது. வீட்டிலிருந்து ஒரு நடுத்தர வயது ஆள் தெருவுக்கு வந்தார்.
'வாங்க சாரு நீங்க வந்தீங்கன்னு என் வூட்டுக்காரி சொன்னாங்க எனக்கு ரொம்ப. சந்தோஷோம்'
' நீங்க தான் குடியிருக்குறதா' அவனிடம் கேட்டு முடித்தான்.
அவன் மனைவி திடு திடு என்று வாசலுக்கு வந்தாள்.தோட்டத்தில் இருக்கும் மாமரத்து நிழலில் அமர்ந்திருந்தவள்.
'கிளம்புலாமா' என்றாள்.துளசி மாடமும் பாரிஜாத ச்செடியும் தோட்டத்தில் விட்டுவிட்டுப்போனதைக் காணவில்லை.மனம் சற்று அவளுக்குக் கனத்துப்போனது.
'ஏன் ஒரு மாதிரியா'
'ஏனா. நம்ம வூட்டு மொட்ட மாடி பூரா கருவாடு காயுது. எனக்கு இங்க நிக்கமுடியல' அவனிடம் மெதுவாகச் சொன்னாள்.
'சும்மா சொல்லக்கூடதுங்க வுங்க வீடு ராசிதான். எம் பொண்ணுக்கு இந்த வூட்டுக்கு வந்த ஒரு வாரத்துலயே கல்யாணம் முடிஞ்சி போச்சி. மாப்பிளதம்பி வீடும் தே இருக்குதே பின் வீடு. பையனும் நல்ல பையன் உங்களுக்கு தெரிஞ்சிம் இருக்கும்.' மீன் கூடை கட்டிய சைக்கிள் வண்டிக்காரர் அவனிடம் சொல்லிக்கொண்டார்.
'கெளம்பலாம் நேரம் ஆவுது' என்றாள் அவள்.
'முனிசிபாலிடி தண்ணி வூட்டு க்குள்ள வர்ரதுக்கு ஏற்பாடு பண்ணி அட்வான்சும் நீங்க சொன்ன அதே ஆளுகிட்ட கொடுத்து இருக்கன். சாய்ந்திரமா வேலை ஆரம்பிக்க ஆளுங்க வரும்'
'அதாங்க ரைட்டு. போனமா வேல முடிஞ்சிதான்னு இருக்குணும். உங்களை எனக்கு ரெம்ப புடிச்சிருக்குது சாரு' மீன்காரரின் மனைவி சொல்லி நிறுத்தினாள்.
வீட்டு வாசலில் இருந்த பெரியவர் 'புதுசா வந்த சரக்குல வீராணம் ஏரி வாளைவ இருந்தா குடுத்தனுப்புலாம். சமுத்திரகுப்பத்துலயும் மீனுவ இருக்குதுன்னு சொன்னாலும் ஏரி மீனுவ எண்ணைக்கும் ராசவம்ஷம்' என்றார்.
யாருக்குமே ஏனோ இது காதில் விழவில்லை.பெரியவர் அமைதி ஆனார்..
தன்னை எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பாக இந்த ஊர் பாலக்கரையில் மறித்து அடித்தவர்கள் யாரென்பதை தான் தெரிந்துகொண்டசெய்தியை அது நல்லதோ அல்லது கெட்டதோ அவளுக்குச்சொல்வதா இல்லை வேண்டாமா என்கிற தீவிர யோசனையில் அவன் இருந்தான்.
'நான்தான் வீட்டுக்கு குடி இருக்க வர்ரவங்க சைவமான்னு கேட்டு அத மொதல்ல தெரிஞ்சிகணும் அப்புறமா அந்த அடவான்சை வாங்க்ணும்னு படிச்சி படிச்சி உங்ககிட்ட சொல்லி இருந்தனே' அவள் ஆரம்பித்தாள்..
-----------------------------------------------------------------------
..

Friday, August 7, 2015

bantham- story



பந்தம் -எஸ்ஸார்சி


நேற்று எம் ஜி ஆர் நகர் மாரி அம்மன் கோவில் பூசாரி எங்கள் வீட்டிற்கு வந்தார்.எம் ஜி ஆர் நகர் என்றால் அது ஒன்றும் சென்னையிலுள்ள அண்ணா நகர் போன்றது இல்லை.முதுகுன்றமே ஒரு சிறு நகரம்தான்.இப்போதுதான் அது தன் கால்களை அகலமாக்கி 'இதோபார் என்னை 'என்கிறமாதிரி வளர்ந்துவிட்டிருக்கிறது. அந்த முதுகுன்றத்து கிழக்குப்பகுதியில்தான் இருக்கிறது இந்த எம் ஜி ஆர் நகர். ஒரு நூறு சலைத்தொழிலாளர்க்கு அன்றைய முதல்வர் இனாமாக மனை ப்பட்டாவழங்கியதுதான் இதன் ஆரம்ப வரலாறு.
.நம் நாடே கொஞ்சம் வளர்ச்சி பெற்று இருக்கிறது என்பதுண்மை.முதுகுன்றம் மட்டும் விதிவிலக்கா என்ன.இல்லையென்றால் பேருந்திலும் ரயிலிலும் பிச்சை எடுப்பவர்கள் சட்டமாக பிச்சை கொடு என்று கேட்பதும், அவர்களே நூறு ரூபாய் நோட்டினை சர்வ அலட்சியமாக பார்ப்பதும் பிரத்யட்சமான பின்னே நாம் என்னத்தைச் சொல்வது.
செல் போன் இல்லாத பிச்சைக்காரர்களை எனக்குக் காட்டுங்களேன். பார்ப்போம்.இல்லை அய்யா. .அது எப்படி இதுகள் சாத்தியமா என்று கேட்கா தீர்கள்.நான் காலில் மாட்டிக்கொண்டிருக்கும் செருப்பைவிடவும் அணிந்திருக்கும் சட்டையைவிடவும் என் தோளில் தொங்கும் பேக்கைவிடவும் நான் தெருவில் சந்திக்கும் பிச்சைக்காரர்கள் நன்றாகவே வைத்துக்கொண்டு இருப்பதை நான் பார்த்த பிறகுதான் உங்களுக்குச் செய்தி சொல்கிறேன்.
. எம் ஜி ஆர் நகருக்கு அருகிலேதான் நாங்கள் குடியிருக்கும் திருவள்ளுவர் நகர். அதனில் மூன்றாவது தெருவில் ஒன்பது எண் கொண்டது என் வீடு.நேற்று இரவுதான் என் வீட்டில் பூட்டியிருந்த பீரோவில் இருந்த நகையும் பணமும் திருடுபோனது. முதுகுன்ற கடைதெருவுக்குப் போய் கொஞ்சம் மளிகைசாமான்கள் வாங்கி அந்தக் கொளஞ்சி அப்பனை த்தரிசித்துவிட்டு வீடு திரும்பி வருவதற்குள்ளாக இப்படி எல்லாமா நடக்கும் என்றால் நடந்து விட்டதே. வீடு திரும்பிய நான் வீட்டின் கதவைத்திறக்க சாவி எடுத்தால் வாயில் கத்வு உள் புறமாக தாளிடப்பட்டு இருந்தது. ஏதோ ஞாபகத்தில் வீட்டில் யாரோ நம்மவர்கள் தான் உள்ளே இருக்கிறார்கள் என்கிற நினைப்பில் நான் காலிங் பெல்லை வசமாக அமுக்கினேன். வீட்டின் கதவுபடார் எனத் திறந்து கொண்டது. வீட்டின் உள்ளிருந்து ஜட்டி மட்டுமே போட்டிருந்த இரு திருடர்கள் வீச்சென்று எங்களைத்தாண்டிக்குதித்து புயலாகச் சென்று மறைந்தனர். வீட்டின் உள்ளே சென்றேன். என் மனைவி வாசலிலிருந்து திருடன் திருடன் என் அலறினாள்.நான் தினம் சோறு போட்டு ஜீவிக்கும் நாயொன்று தனக்கு எதுவும் தெரியாது என்கிறபடிக்கு வாசலில் படுத்துக்கிடந்தது.அக்கம் பக்கத்துக்காரர்கள் நான்கு பேருக்கு வந்து வாசலில் நின்றனர். காலிங்க் பெல்லை அமுக்கி நான் இமாலயத்தவறு செய்துவிட்டதாகச்சொன்னார்கள். வாயில்கதவை அப்படியே நாதாங்கி போட்டிருந்தால் திருடனை லட்டு மாதிரி பிடித்திருக்கலாம் என்றும் இலவச யோசனை சொன்னார்கள்.பாப்பான் வீட்டு நாயும் அரிவாளும் எதுக்கும் தேறாது என்றுகூடப் பேசிக்கொண்டார்கள்.
மறு நாள் முதுகுன்ற நகரத்துப் போலிசுகாரர்கள் என் வீட்டிற்கு விஜயம் செய்தார்கள். நான் போய்ச்சொல்லிதான் அழைத்து வந்தேன். அவர்கள் வீட்டை ஒரு சுற்று வந்து பிறகு எங்களை விசாரித்தார்கள். என்னையும் என் மனைவியையும்தான். விசாரணையை எப்படி எனக்கேட்டால் அசந்துபோவீர்கள்.என் மனைவி மிகவும் பயந்தே போனாள்.திருடுபோன நகை வைத்திருந்த இரும்பு பீரோவின் சாவிக்கொத்து எங்கே வைப்பீர்கள் அந்த சாவிக்கு டூப்ளிகேட் உண்டா எப்போதும் பீரோ பூட்டி இருக்குமா இரவில் மட்டும் பூட்டுவதா கடைத்தெருவுக்குப்போனால் பூட்டுவீர்களா வெளியூர் போனால்தான் பூட்டுவீர்களா,வேலைக்காரி வைத்துக்கொண்டு வீட்டு வேலை செய்கிறீர்களா இல்லை நீங்களே வீட்டு வேலை செய்துகொள்கிறீர்களா திருடு போன இரண்டு தங்க வளையல்களை எங்கே வாங்கினீர்கள்,அதற்கு ரசீது இருக்கிறதா அவை உங்களுடையது தானா இல்லை இரவல் நகையா. உங்களுக்கு கவரிங் நகை அணியும் பழக்கம் உண்டா இப்படிக் கேள்வி மேல் கேள்விகள். வீட்டில் திருடு போய்விட்டது என்று போலிசில் சொன்னால் அவர்கள் நம்மோடு சேர்ந்துகொண்டு கண்ணை கசக்கிக்கொண்டு நிற்பார்கள் என நான் முதலில் நினைத்ததுண்டு. போகட்டும் விடுங்கள்.. விசாரணை ஒரு வழியாகமுடிந்தது. தடய சாஸ்திரம் பயின்ற விரல் ரேகை வித்துவான்கள் தாம் கொணர்ந்த வெள்ளை நிற பவுடர் ஒன்றை பீரோவின் மேலும் கீழும் இடுக்கிலும் கைப்பிடியிலும் தடவித்தடவி ஒரு நோட்டு புத்தக விஷய்த்தோடு ஒத்து பார்த்தார்கள்.
அப்புறம்தான் அந்த நாய் வருகை.போலிசு இலாகாவின் செல்ல மோப்ப நாயை சமுத்திரகுப்பத்திலிருந்து ஒரு கருப்பு வேனில் அழைத்துக்கொண்டு வந்தனர். அதனை என் வீடெல்லாம் சுற்றி வந்து காண்பித்து பின் ஓட விட்டார்கள். 'ரன்' 'ரன்' என்று ஆங்கிலத்தில்தான் நாயிக்கு க்கட்டளைதந்தார்கள். மோப்ப நாயின் பெயர் 'ரோஸ்'. அதன் உயரம் நம் இடுப்பு வரைக்கும் இருந்தது. அது ஓயாமல் காதுமடல்களை மடக்கி மடக்கி த்திறந்தது கண்கள் ஏதோ செய்தி சொல்வதுபோல இருந்தன.
.அது என்னவோ பாருங்கள் நான் பார்த்தவரையில் நாய்களுக்கு யாரும் தமிழில் பெயர்வைப்பது இல்லை.ஜெனி,ஜூலி,பிரவுனி,ஜில்ஸ்,ஃபெர்ரோ,டார்கி, ரைனி., சைனி,இவை எல்லாம் நாய்களுக்கு வைத்திட்ட திருப்பெயர்கள். ஏனோ தமிழ்ப்பெயர் ஒன்று கூட இல்லை.ஒருக்கால் தமிழில்பயர்வைத்தால் நாயின் மதிப்பு கன்னாபின்னா என்று குறைந்துபோவிட்டால் என்னசெய்வது என்கிற அச்சம் ஒரு இருக்கலாம்.சரியாக வேட்டை கீட்டை பிடிக்காவிட்டாலும்தான் என்ன செய்வது.ராமு மணி அப்பு அம்மு இவைகூட நாய்களின் பெயர்கள்தான் இவை 'ட்ரோதா' என்று கூப்பிட்டால் நாம் விட்டெறியும் எச்சிலையை நக்கி விட்டு வால் மட்டும் ஆட்டி க்காண்பிக்கும் பீ யைத்தின்னும் நாட்டு நாய்கள்.
நேற்று அதான் இப்படித் திருடு போவதற்கு முதல் நாள் என் வீட்டில் ஒரு சமாச்சாரம் நடந்தது. மீண்டும் அதனைச்சொல்ல ஆரம்பிக்கிறேன்.
எம்ஜியார் நகர் மாரியம்மன் கோவில் பூசாரி என் வீட்டிற்கு வந்திருந்தார்.எங்களை சத்தம்போட்டு 'சார்' என அழைத்தார்.
'கோவிலுக்கு திருவிழா வருது மாரியாத்தாளுக்கு என்ன காணிக்கை செலுத்துறீங்களோ செலுத்திடுங்க. நானும் தே இருக்கே அந்த எம் ஜி ஆர் நகர்தான்.அந்த நகருல மெயின் ரோடுல இருக்குற அந்த ஆத்தா கோவில்லதான் நான் பூச செய்யுறேன்'
'வேற எதாவது சேதி இருக்கா' என் மனைவி கேட்டாள்.பூசாரியை நன்கு அறிந்தவள் மாதிரி. எனக்குத்தான் ஒன்றுமே புரியவில்லை..
' நான் இப்ப என்ன கேட்டுட்டன் நீங்க ஏன் மூஞ்சில அடிச்சமாதிரி பேசுறீங்க'
'வேற ஒண்ணும் சேதி இல்லன்னா நீரு போயிகிட்டே இருக்கலாம் பூசாலியாரே'
'இது நல்லா இல்லே'
'எது'
பூசாரி என் வீட்டிலிருந்து இறங்கி விறு விறு என நடந்துகொண்டிருந்தார்.இப்படி என் மனைவி பேசியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.வருத்தமாகவும் இருந்தது.நான் குறுக்கே புகுந்து எதுவும் பேசிவிடலாம்.ஆனால் நாம் ஒன்று நினைத்துக்கொண்டு பேச அது அடுத்தவர்களுக்கு அனேக நேரங்களில் தப்பாகவும் போய்விடுகிறதே.என் அம்மாதான் சொல்வார் நாம் 'தாயே' என்றுதான் அழைத்து இருப்போம் ஆனால் எதிரே இருப்பவர்கள் 'யாரைபார்த்து நாயே என்கிறாய்' என்று சொல்லி பிலி பிலி என்று சண்டைக்கு வந்துவிடுவார்கள்.ஆக நான் மவுனமாகவே இருந்தேன். பிறகு ஆரம்பித்தேன்.
'ஏன் இப்படி பூசாரியிடம் பேசினாய் இது சரியா உன்னிடம் இருந்தால் கொடு இல்லையென்றால் எதற்கும் ஒரு மரியாதை இல்லையா என்ன'
'எனக்குத்தெரியும் நீங்கள் உங்கள் வேலை ப்பாருங்கள்'
'இது சரியா என்கிறேன்'
'நான் அந்த மாரி கோவிலுக்கு சென்ற வெள்ளிக்கிழமை சென்று வந்தேன்.அங்கு இந்த பூசாரியை ப்பார்த்தேன்'
'என்ன பார்த்தாய்'
'அது உங்களுக்கு வேண்டாம் விட்டு விடுங்கள்'
'நீ செய்ததுதான் சரி என்று சாதிக்கிறாயா'
'வீட்டிற்கு வந்த கோவில் பூசாரியிடம் எப்படி ப்பேசுவது என்பது அறியாதவளா நான்'
எனக்கு ஒன்றுமே பிடிபடவில்லை.ஏதோ ஒரு உறுத்தல் மனத்தில் இருந்துகொண்டே இருந்தது. அன்று இரவேதான் என் வீட்டில் திருடு போனதும் போலிசு காரர்கள் வந்ததும் பின் அந்த விரல் ரேகைக்காரர்களைத், தொடர்ந்து மோப்ப நாய் வந்ததும் என் கண் முன்பாக நடந்துகொண்டிருந்தது.
போலிசுகாரர்கள் கொணர்ந்த சமுத்திரகுப்பத்து மோப்ப நாய் 'ரன்' என்ற கட்டளையைப் பெற்றுக்கொண்டவுடன் மின்னலென ஓடியது.ஓடியது ஓடிக்கொண்டே இருந்தது.. எம் ஜி ஆர் நகர் மாரியம்மன் ஆலயம் வரை ஓடியது. கோவில் பூசாரி அம்மன் சன்னதி முன்பாக நின்று ஏதோ சேவார்த்திகளிடம் பேசிக்கொண்டிருந்தார்.மோப்ப நாயோடு ஒடிய இரண்டு காவலர்கள் அந்த நாய் நிற்க அவர்களும் நின்று கொண்டார்கள்.நான் மெதுவாக என் சைக்கிளை எடுத்துக்கொண்டு மாரியம்மன் கோவில் வாசலில் போய் நின்று கொண்டேன்.
'இதுவரைக்கும் திருடன் நடந்து அல்லது ஓடி வந்து இதற்கு ப்பிறகு ஏதோ ஒரு வெய்கிளில் ஏறி சென்று இருக்கவேண்டும். அதுதான் இப்பத்திக்கு சொல்லமுடியும்' என்றனர் நாயுடன் ஓடிவந்த காவலர்கள். வேறு ஒன்றும் அங்கு நடந்துவிடவில்லை.முதுகுன்ற நகர் எங்கும் சுற்றி என் வீட்டில் திருடிய அந்தத் திருடனை மோப்ப நாய் ரோஸ் கையைக்கவ்வி என் முன்னால் கொண்டுவந்து நிறுத்தி விடும் என எதிர்பார்த்தேன். எனக்கு ஏமாற்றமாகத்தான் இருந்தது.
திருடு போன தங்கவளையல்கள் இரண்டும் என் அண்ணன் மனைவியுடையவை.அண்ணன் அதனை வங்கியில் வைத்து பணம் வாங்கித்தரும்படி என்னிடம் கேட்டிருந்தார்.பிரோவில் இருந்தபணம் பத்தாயிரமும் என் அப்பா கொடுத்தது. நான் பாதுகாப்பாகத்தானே வைத்திருந்தேன். வரவிருக்கும் அவரின் சதா அபிஷேகச்சிலவுக்கு அது என அவர் என்னிடம் கொடுத்து வைத்திருந்தார்.
அண்ணனுக்கு அவர் மனைவியின் தங்க வளையல்கள். அதுவும் அவை என் வீட்டில் வைத்து திருடுபோனது எனக்கு என்னவோ போல் இருந்தது.நான் ஒன்றும் செய்வதற்கில்லை. என் அண்ணன் 'சரி விடு இதற்கு யார்தான் என்ன செய்வது' என்றார்.அப்பாவின் சதாபிஷேக ச்செலவுக்குத்தான் நான் பத்தாயிரம் கடன் வாங்க வேண்டியதாயிற்று.
எனக்குள் இன்னும் அந்த மாரிகோவில் விசேஷத்துக்கு காணிக்கை கேட்டு என் வீடு தேடிவந்த பூசாரியிடம் அன்று என் மனைவி பேசியவிதம் ரணமாய் உறுத்திக்கொண்டே இருந்தது.
போலிசின் மோப்ப நாய் திருடுபோன என் வீட்டிலிருந்து ஓடியது. அது சரி. ஏன் அந்த நாய், மாரியம்மன் கோவில். வாசல்வரை ஓடி பின் நின்றுகொண்டது.இதனை அடிக்கடி யோசித்துப்பார்த்துக்கொள்வேன்..
இந்த இரண்டிற்கும் கொஞ்சமும் சம்பந்தம் கிடையாதுதானே...
-------------------------------------------------------------------------------------------------------------




Friday, July 31, 2015

amaavaasai -story





அமாவாசை -எஸ்ஸார்சி




'நீர் எப்பிடி என் கார் பார்கிங்க்ல வண்டிய நிறுத்தலாம். உம்ம பவுன்டரிக்குத்தான் பளிச்சின்னு எல்லோ மார்க் இருக்கு. அப்புறம் எங்கிட்டே எதுக்குவரணும்?'
'சிடியில பிளாட் வீடு வாங்கிட்டு அதுவும் இந்த கன்னா பின்னா ஆளுவுளு கூட மல்லுக்கட்டவேண்டிருக்கு'
'எனக்கு இப்ப வண்டி வாங்க முடியல்லே. பிளாாட் கடன மொதல்ல அடைக்கணும் நான் என்ன பண்ண முடியும்'
'சார் அது வரைக்கும் என் பெரிய வண்டி கொஞ்சம் முன்ன பின்ன நிக்கட்டுமே'
'என்ன சாரு நீங்க பேசுறது.எனக்குன்னு மார்க்கு பண்ணினது எனக்கு. உங்க வண்டி ஒரு அங்குலம் கூட எனக்குன்னு உள்ள இடத்துல நுழையக்கூடாது'
'இப்ப என்னன்னுதான் சொல்றீங்க'
'உங்க வண்டிய எடுத்து நவுத்துங்க. ஏன் எடம் கெடக்கும் சும்மாகூட கெடக்கும் இல்ல செமந்துகிட்டு கெடக்கும்'
'மதியம் எடுத்துவைக்கறன்'
'செய்யற்து தப்பு அப்புறம் என்ன அத மதியம் வந்து சரிபண்ணுறது'
'நீர் போஸ்ட் ஆபிசுல வேல செய்யுறாஅளு அதான் அந்த இந்த புத்திய காமிச்சீட்டீறு'
'நா எங்க வேல செஞ்சா உமக்கு என்ன நீரு கோயம்படுல மாம்பழ லோடு வியாபாரம் பண்ற அந்த புத்திய பத்தி நான் ஏதாவது சொன்னேனா'
' வாய மூடும் அல்பை' சொல்லிய வண்டியின் சொந்தக்காரர் வண்டியை எடுத்து நகர்த்தி தன் மஞ்சள் கோட்டுக்குள் நிறுத்திக்கொண்டார்'
''இப்ப் திருப்திதான'
'ஆமாம் சார்.நமக்குன்னு வேண்டாம் உங்களுக்கும்னு வேண்டாம். என்ன சொல்றீங்க'
'போதும் நிறுத்துங்க.நான் பாத்துகுறேன்.ஆப்பு வைக்க எனக்கும் தெரியும் நீர் தாங்க மாட்டீரு பாரும்'
தரைதளத்தில் குடியிருக்கும் அவர் தன் வீட்டுக்குள் சென்று கதவை மூடிக்கொண்டார்.அவனுக்கு கொஞ்சம் அச்சமாக இருந்தது.இருந்தாலும் நாம் என்ன தப்பாக க்கேட்டுவிட்டோம். நம் உரிமை நாம் கேட்டோம். சமாதானப்படுத்திக்கொண்டான்.
ஒரு பத்து நாள் ஆனது.
வாசல் கதவை யாரோ தட்டிய மாதிரி இருக்கவே போய் திறந்து பார்த்தான்.
'நீங்க யாரு'
'நாங்க இப்ப டிஸ்டிரிக்ட் கோர்ட்டுலேந்து வர்ரம் அய்யாவுக்குதான் நெனக்கிறேன் ஒரு தபால் இருக்கு நீங்கதான் கே.கிருட்டினமூர்த்தியா'
''பேரு. ஒ கே எனக்கும் கோர்ட்டுக்கும் சம்பந்தம் இல்லையே.எனக்கு எதுக்கு தபால்.ஏதோ தப்பு இருக்கு. நல்லா பாருங்க'
'உங்க அப்பா பேரு கண்ணுசாமி சரியா'
'ஆமாம் சாரு'
'அப்ப நீங்கதான் விலாசத்துல இருக்குற பிளாட் நம்பர் ஃப்ளோர் நெம்பர் அபார்ட்மென்ட் பேரு தெரு பேரு எல்லாம் சரித்தானே'
'இல்ல நா வாங்க மாட்டேன் இதுல தப்பு இருக்கு'
'வாங்குன வாங்குங்க வாங்கல்லேன்னா வாரண்டுதான் வரும் அய்யா கவுர்மென்ட் வேல பாக்குறது எண்ணைக்கும் நெனப்பு இருக்கட்டும்'
'இப்ப என்ன சொல்றீங்க'
'யோவ் கையெழுத்துபோடு தபால வாங்கு உம்மகிட்ட ஒரு காபிக்கு வழி இருக்காது சட்டம் மட்டும் நல்லா பேசுவீரு'
அவன் கையெழுத்துபோட்டு தபால் வாங்கினான்.
'எதனா ஒரு நல்ல வக்கீல பாரு உனக்கு எது உள்ளாற என்னா இருக்குதுன்னு வெளங்கிடப்போவுது' வந்தவன் உடனே அங்கிருந்து கிளம்பினான்.தபாலை வாங்கிய அவன் அதை நேராக அவன் குலதெய்வம் மதுரகாளி படத்தின் முன்னே வைத்து பிரார்த்தனை செய்துவிட்டு பிரித்தான்.
'இப்பவும் நீர் 25 அக்டோபர் 2014 அன்று உம் வீட்டு ஜன்னலைத்திறந்து காக்கைக்கு சோறு வைப்பதகாச்சொல்லி கா கா என்று அழைத்து காகமும் வந்து கீழ் வீட்டுக்காரரின் விலைஉயர்ந்த கோட்டு மற்றும் பட்டு ஆடைகளை நாசம் செய்ய காரணமாகி பின்னர் உம்மை வந்து 'ஏன் அய்யா இப்ப்டி செய்யலாமா? என்று கேட்ட உம் குடியிருக்குக்கு நேர்கீழ் தள குடியிருப்புக்காரர் திரு ஜீவநாதன் த/பெ காப்ரியேல் என்பவரிடம்' உன்னால என்னாத்த புடுங்க முடியுமோ புடுங்கிக்க' என்று கேட்டு மிக மிக அவமானப்படுத்திவிட்டதாகவும் ஆக உம் மீது இரண்டு குற்றங்கள் சுமத்தப்பட்டு இருக்கிறது.இது சம்பந்தமாக நீர் இன்னும் பதினைந்து தினங்களுக்குள் உமது பதிலை உமது வக்கீல் மூலமாகவோ அல்லது நீர் தனித்தோ இந்த கோர்ட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டியது. இது தவறும் பட்சத்தில் உம் மீது மேலும் மான நஷ்ட மற்றும் கிரிமினல் வழக்குத்தொடர்ந்து பிடி வாரண்ட் பிறப்பிக்க ஏதுவாகும் என்பதை நீர் அறியவும்'
அவனுக்குத்தலை கிர்ரென்று சுற்றியது.காலண்டரை எடுத்துப்பார்த்தான். அக்டோபர் 25 மகாளய அமாவாசை என்று போட்டிருந்தது.அன்று அவன் மகாளய தர்ப்பணம் முடித்து காக்கைக்குச்சோறு வைத்தது உண்மை.காகங்கள் வந்தன. உண்டன.தன் தாயும் தந்தையும் அவன் பாசமாய் வளர்த்த தங்கையும் காக்கை உருவில் வந்து சோறு உண்டு போனதாக அகமகிழ்ந்துபோனதும் கூட உண்மை.ஆனால் கீழ் வீட்டுக்காரர் பட்டுச்சேலையும் கோட்டும் காயவைத்ததும் அவை விஜயம் செய்த காக்கைகள் எச்சத்தால் விணாகிப்போனதும் அவர் அது கேட்கத்தன்னிடம் வந்துபோது தான் அவரைக்கண்டபடி திட்டியதாகச்சொல்வதும் எல்லாம் திட்டமிட்ட சதிவேலை.அவரை ஒரு நாள் அவருடைய காரை நகர்த்தி அதனை தன் மஞ்சள் கோட்டுஎல்லைக்குள் நிறுத்திவைக்கச்சொன்னதற்கு அவரின் எதிர்வினை இது என்பது அவனுக்கு மண்டையில் சட்டென்று உரைத்தது.
இனி செய்வதற்கு என்ன இருக்கிறது.யாரைக்கலந்து ஆலோசிப்பது.கோர்ட்டு அதன் வழி வழி சமாச்சாரங்கள் இதுவரை அவன் பார்த்தது இல்லையே.திடீரென யூனியன் தலைவரின் நினைவு வந்தது.அப்படி ஒன்றும் அவன் யூனியன் தலைவர்களுக்கெல்லாம் அவன் பரிச்சியமானவனும் இல்லை.யூனியன் காரர்கள் அவன் போன்றோரை இம்சிப்பதற்கு மட்டுமே அவதாரம் எடுத்து வந்திருப்பதாகத்தான் அவனுடைய கணக்கு..இந்த கோர்ட்டு நோட்டிசு விவகாரம் அலுவலகத்தில் யாருக்கும் தெரிந்தால் என்னாகும்.அதுவேறு அச்சமாக இருந்தது.தன் அலுவலகப்பணிக்கு இடையே யூனியன் தலைவரை எப்படியும் சென்று பார்த்துவிடுவது என்ற முடிவோடு புறப்பட்டான். அலுவலகத்தில் யூனியனுக்கு என்று ஒரு அறை இருந்தது.அதனுள்ளாக தலைவர் அமர்ந்து ஏதோ படித்துக்கொண்டிருந்தார்.
'யாரு சாரு இந்த பக்கம் காத்து அடிக்குது.ஒரு நாளும் இல்லாத திரு நாளா'
'வணக்கம் சார். இத படிச்சு பாருங்க' அவன் வந்த கோர்ட்டு நோட்டிசினை ஒப்படைத்தான்.
தலைவர் தான் அணிந்திருந்த கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு படிக்க ஆரம்பித்தார்.கவனமாகவே படித்தார். படித்து முடித்து விட்டு அவன் பக்கம் திரும்பினார்.
'கொஞ்சம் கதவ சாத்திட்டு ப்பேசுணும்'
அவன் கதவை ச்சாத்திவிட்டு வந்து நின்றான்.
'இப்ப நான் என்ன செய்யுணும்'
'எனக்கு பயமா இருக்கு சார்'
'பயப்பட்டு ஒண்ணும் ஆவாது.நாயி இருக்குன்னா அது நம்மை கடிச்சிடுமேன்னு பயப்படலாம். அதான் இப்ப நல்லா புடிங்கி வச்சிடுச்சில்ல இப்புறம் அந்த நாயிகிட்ட நமக்கு வேல என்ன? மேங்கொண்டு நாம பொழைக்க என்ன செய்யுறதுன்னுதான் பாக்குணும்'
'அதான் சார்'
'இது விஷயம் ஆபிசுல யாருக்கும் தெரியக்கூடாது. தெரிஞ்சா பெரிய பிரச்சனை.ஆபிசுல சொல்லிக்காம போலிசு கோர்ட்டுன்னு எங்கயும் நாம போகக்கூடாது சட்டம் அப்பிடி இருக்குது'
'அப்ப என்ன செய்யுறது'
' அது கெடக்கட்டும் உம்ம பிரச்சனை எப்பிடி ஆரம்பிச்சுது?'
பிளாட் குடியிருப்பில் கீழ்த்தள காரேஜில் வண்டியை மஞ்சள்கோட்டுக்குள் நிறுத்துவது தொடர்பாக வந்த வாய்த்தகறாறு பற்றி விளக்கிச்சொன்னான்.
யூனியன் தலைவருக்கு சிரிப்பு வந்தது.
'சாரு நாம எல்லாம் கவர்மென்ட் சர்வன்ட் நமக்கு.கையி வாயி இன்னொண்ணு.மூணும் பதனம் வேணும். மாச சம்பளத்துல பத்து ரூபா கொறஞ்சா நமக்கு அழுவ வந்துடும்.எந்த கூட்டத்துக்கு எந்த போராட்டத்துக்கு நீரு வந்து இருக்குறீரு. ஒண்ணலயும் உங்க மூஞ்சிய நானு பாத்தது இல்லையே . எப்பனா பத்து காசு யூனியனுக்கு நன்கொடை குடுத்து இருப்பீரா இப்ப வந்து தலய சொறிஞ்சிகிட்டு நிக்குறீருல்ல'
அவன் பேசாமல்தான் இருந்தான்.எல்லா விஷயமும் பேசத்தெரிந்தவன்தான்.ஆனாலும்...
'கோர்ட்டுபக்கம் ஒரு வக்கீலு ஆபிசு பக்கம் நீரு போயிடாதீரு தெரிதா. நம்மஆபிசுல பாத்துகிட்டேதான் இருப்பாங்க. அங்கங்க ஆளுங்க போவும் வரும். நாமள பலான எடத்துல பாத்துட்டான்னா புள்ளி வச்சிடுபுடுவான்.அப்புறம் குய்யோ முறையோன்னா ஒண்ணுமாவாது.நொண்டிகிட்டுதான் சொச்ச காலமும் ஆபிசுல தள்ளுணும். எவன் எப்ப மாட்டுவான்னுதான் சுத்தி இருக்குற எல்லாரும் மனசுல கணக்கு போடுவான். வெளில பாக்க உம்மகிட்ட பல்ல காட்டுவான் சிரிப்பான் கொஞ்சுவான் அது பொய்யி. பொய்யி.எங்க மேல அதிகாரிவுளுக்கு ரவ ரவ பயம் இருக்குன்னா அது சின்ன விஷயம் இல்ல. அதுக்கு எம்மானோ வெல குடுத்துகிட்டு இருக்கம். அது எல்லாம் உமக்கு வெளங்காது'
'இப்ப நானு என்ன செய்யுணூம்'
'இந்த நோட்டிசை ரெண்டு செராக்ஸ் எடும். அதோடு ஒரு அஞ்சி ரூவா வச்சி எங்கிட்ட குடுத்த்ட்டு போவுணும்'
'அஞ்சி ரூவான்னா'
'இது. வெளங்குலயா ஐயாயிரம்'
'வேற என்ன நானு செய்யுறது'
' கட்ட பஞ்சாயத்து வச்சி இந்த பிரச்சனைய ராசி பண்ண பாக்குணும்.உம் எதிரி எதுல எப்பிடி மடங்குவான்னு பாத்து அத சரிப்பண்ணி அப்புறம் சமாதானம் ஆவுணும். இந்த அஞ்சி ரூவா காணாது இது ஆரம்பம்தான். நம்ம ரூமு கதவு இன்னும் மூடிதான இருக்கு. எந்த கழுதயாவது காது வச்சிகிட்டு நாயாட்டம் கேட்டுகிட்டு நிக்கும்'
'மூடிதான் இருக்கு சார்'
'அப்ப சரி இன்னும் இருவது ஆவும்னு நெனக்கிறேன்.அப்புறம் நானு உம்மை பாக்குறேன்'.
அவன் இடத்தைக்காலி செய்தான். உள்ளுக்குள் சொர சொர என பயமாக இருந்தது.ரெண்டு செராக்ஸ் காபி கேட்டதில் ஒன்று தலைவரே எடுத்துக்கொண்டு போய் அலுவலத்தில் கொடுக்கவேண்டிய இடத்தில் கொடுத்துவிட்டால் நம் கதி என்னாகும் மனம் என்னவெல்லாமோ யோசித்தது. அருகில் இருக்கும் தன் வீட்டுக்கு நடந்தான்.
குடியிருக்கும் அபார்ட்மென்ட் வாயிலில் ஒரு பிள்ளையார் கோவில் இருந்தது.அதன் பூசைக்கார அய்யர் பிள்ளையார் சிலைக்கு நல்லெண்ணெய் தடவிக்கொண்டு இருந்தார்.அவன் பிள்ளையார் சிலையைப்பார்த்தான்.
'இங்க தான் குடியிருக்குறீங்க பத்து நிஷம் கழிச்சிகூட நீங்க சாமிய வந்து பாக்கலாம் சேவிக்கலாம்'
'அதுவும் சரி சாமி' சொல்லி அபார்ட்மென்ட் வாசலுக்கு ப்போனான்.
வண்டி நிறுத்துமிடத்திற்குச்சென்று பார்த்தான்.அவனுக்குச்சொந்தமான இடத்தில் யாரும் வண்டியை நிறுத்தவில்லை.அவரவர்கள் வண்டி அவரவர்கள் கோட்டுக்குள் சமத்தாக இருந்தது.அவசரப்பட்டு விட்டோமோ என்று நினைத்தான்.பிறகு பிள்ளையாரைச்சென்று சேவித்தான். விபூதி வாங்கி நெற்றியில் இட்டுக்கொண்டான்.
'இண்ணைக்கு சாயந்திரம் ஒரு நல்ல சேதி வரும்.வந்தா பிள்ளையாருக்கு ஒரு அபிஷேகத்துக்கு கொடுக்கணும்'
'சாமி நல்லது செய்யட்டும் நானு அபிஷேகத்துக்கு கொடுத்துடறன்' அவன் பதில் சொன்னான்.மனதிற்கு கொஞ்சம் நிம்மதியாத்தான் இருந்தது.பிரச்சனை வராதவரை கோவில் கோபுரங்கள் எல்லாம் சிறியதாக க்கண்ணுக்குத்தெரிந்தன.பிரச்சனையில் மாட்டிக்கொண்ட பிறகு கோபுர உயரங்கள் ஏனோ கூடிக்கொண்டன.
அன்று மாலையே அவன் வீட்டுக்கு யூனியந்தலைவர் ஆள் அனுப்பினார்.கோயம்பேடு மார்கெட் வாசலில் ஏழுமணிக்கு நிற்க வேண்டும் என்று சேதி வந்தது.அவன் பிள்ளையாரை மனதில் நினைத்துக்கொண்டு புறப்பட்டான்.கோயம்பேடு மார்கெட்டில் நல்லகூட்டம்.காய் கனிகள் அழுகிய துர் நாற்றம்.அவன் மூக்கைப்பிடித்துக்கொண்டான்.
கீழ்த்தள ஜீவ நாதன், யூனியன் தலைவரோடுபேசிக்கொண்டே நின்றுகொண்டிருந்தார்.அவரோடு பழ வணிகர் சங்க செயலாளரும் இடை இடையே பேசிக்கொண்டிருந்தார்.யூனியன் தலைவர்தான் அவனுக்குஅந்த பழ வணிகர் சங்கத்தலைவரை அறிமுகம் செய்துவைத்தார்.
'எனக்கு கோர்ட்டு செலவு அது இதுன்னு ஆயிடிச்சி என் வக்கீலுக்கு நான் காசி தரணும்.ஒரு பத்து ரூவா கொடுங்க முடிச்சிகிடலாம்'
'அப்புறம் இதுல பேச என்னா இருக்கு ராசியாவுறதுன்னுதான முடிவு' என்றார் பழ வணிகச்செயலர்.
யூனியன் தலைவர் அவனைப்பார்த்தார்.
'அய்யா எப்பிடி சொல்றிங்களோ அப்பிடி' என்றான் அவன்.
'இது எப்பவும் கவனத்துல இருக்குணும்' என்றார் பழ வணிக சங்கத்துக்காரர்.
யூனியன் தலைவரே பத்தாயிரம் ரூபாயை தன் வசமிருந்து எடுத்து ஜீவ நாதனிடம் ஒப்படைத்தார்.தான் தயாராக வைத்திருந்த காகிதத்தை எடுத்து யூனியன் தலைவர் நீட்ட அதில் பிரச்சனை சுமுகமாக முடிந்தது என எழுதி நால்வரும் கையொப்பமிட்டனர்.
'என் வக்கீலுகிட்ட இத குடுத்து நான் முடிச்சுகுறன்' என்றார் ஜீவ நாதன்.
'சாரிங்க'
'அண்ணைக்கு நா ரொம்ப அலச்சல்ல வந்தன் வண்டி ரவ நவுத்தி நிறுத்திபுட்டன். கரண்டும் சரியா இல்ல வந்து வந்து போச்சி. அத இவ்வளவு தூரம் கொண்டுனு போயிட்டு இப்ப ராசியாகி திரும்பறம்'
'வெரி சாரிங்க வெரி வெரி சாரிங்க' அவன் சொல்லி முடித்த்தான்.பழ வணிக சங்கத்தலைவரும் ஜெப நாதனும் புறப்பட்டனர்.
தான் தயாராக க்கொண்டுவந்த செக் புக்கை எடுத்து ஒரு செக் ஸ்லிப்பில் அவன் கையெழுத்து மட்டும் போட்டு யூனியன் தலைவரிடம் கொடுத்தான்.
'மொதல்ல அஞ்சி குடுத்து இருக்கன்.இப்ப எவ்வளவு இன்னும் தரணும்' அவனே அறியாமல் அவன் முகம் மகிழ்ச்சிப்பிரவாகத்தில் மலர்ந்து இருந்தது.
' உம்ம பேங்க் அக்கவுண்ட்ல எவ்வளவு பணம் இருக்குது'
'ஒரு பதினைந்து ஆயிரத்துக்குள்ள இருக்கும்'
'அதான் பிளாங்க் செக்க நீட்டுறீரு' சொல்லிய தலைவர் புறப்பட்டார்.பிள்ளையார்கோவில் குருக்கள் சொன்ன மாதிரியே அதுவும் அன்று மாலையே அந்த நல்லது நடந்துவிட்டதாகவும் அபிஷேகத்துக்கு சாமான்கள் வாங்க ஒரு லிஸ்ட் தயாரிக்கவேண்டும் என்றும் மனதில் எண்ணினான்.
'ஒரு சேதி நீரு காரு கீரு வாங்குனப்பறம் அத நிறுத்தற எடத்த பாத்துக்கலாம்.அதுவரைக்கும் கொஞ்சம் அடக்கி வாசியும்' என்றார் கொஞ்ச தூரம் போய் திரும்பிய யூனியன் தலைவர்.'ஒரு நன்றிகெட்ட வேல வொலகத்துக உண்டுன்னா அது எங்க தொழிற்சங்கவேலதான்' சொல்லிக்கொண்டே தலைவர் நடந்தார்.அவனுக்கு அதெல்லாம் காதிலா விழுந்தது.
ஒன்று அவனுக்கு மறந்துபோனது. இனி அமாவாசைக்கு அமாவாசை காக்கைக்கு எப்படிச்சோறு வைப்பது என்பதுதான் அது.
-------------------------------------------------------


.