Monday, September 2, 2019

vellam 10


சென்னையில்வெள்ளம்-10

என் பெரிய மகனும் மருமகளும் ஆதம்பாக்கத்திலிருந்து  ஓ எம் ஆர் மென்பொருள் பணிக்குச்சென்று வந்தார்கள். என் பேத்தியை அண்ணி மட்டுமே பார்த்துக்கொண்டாள். 
அண்ணனிடம்  போய் நின்றேன் 
‘அண்ணா நான் பழைய பெருங்களத்தூர் செல்கிறேன். கீழ் வீட்டை சுத்தம் செய்து கழுவி விட வேண்டும்.குரோம்பேட்டையில் ஒரு வாடகை வீடு பார்த்து இருக்கிறேன்.அங்கு நாங்கள் சென்று தங்கினால்தான் நேதாஜி நகர் வீட்டை ச்சரி செய்து ஒருவழிக்குக்கொண்டு வர முடியும்’
‘அதற்குள் என்ன அவசரம். இங்கிருந்து மெதுவாக ச்செல்லலாம் தானே’
‘வீடு சரிசெய்ய  நாங்கள் அருகிலிருந்தால்தான் சாத்தியப்படும்.தினம் தினம் இங்கிருந்து நேதாஜி நகருக்குப்போய்வர சிரமம் ஆகத்தான். இப்படி.இங்கிருப்பதில் எங்களுக்கு  வேறு ஒன்றும் பிரச்சனை இல்லை.’
’‘எப்படி வீட்டைச்சுத்தம் செய்வாய் அதற்குத் தண்ணீர் வேண்டுமே’
‘மழைத்தண்ணீர் அங்கங்கே நிற்பதை வைத்துதான்’
‘அங்கே உனக்கு  அந்த வெள்ளத்தண்ணீர் சுத்தமாக இருக்குமல்லவா’
‘டவுனுக்குள்  இருக்கும் அளவுக்கு தண்ணீர் மோசம் இல்லை’
‘ நானும் உன்னுடன்  வருகிறேன்’
’உனக்கு சிரமம் ஏன். நான் மட்டுமே போய் வருகிறேன்’
‘ நானும் வருகிறேன்’ என் மனைவி ஆரம்பித்தாள்.
‘உன்னைத்தான் குரோம்பேட்டை போகச்சொன்னேனே’
‘ நேதாஜி நகருக்கு நான் உடன் வந்தால் உங்களுக்கு ஒத்தாசையாக இருக்கும்.அங்கு வேலை தலைக்கு மேல் இருக்கும்’
’ நீ சொல்வதும் சரி’
ஆக நாங்கள் மூவரும் பழையபெருங்களத்தூருக்கே ப்புறப்பட்டோம். காலை உணவு முடித்தாயிற்று.
‘மதியத்திற்கு என்ன செய்வீர்கள். நான் மதியத்திற்கும் உணவு தருகிறேன் எடுத்துப்போய் அங்கேயே சாப்பிட்டுவிட்டு குரோம்பேட்டைக்கு கிளம்பலாம்’
மன்னி யோசனை சொன்னார். அதுவும் சரி என்று தோன்றியது.மதியத்திற்கு ஒரு பெரிய டப்பாவில்  மதிய உணவு தந்தாள்.
‘இதை திரும்ப கொண்டு சேர்க்கவேண்டுமே’
என் மனைவி மன்னியிடம் சொல்லிக்கொண்டாள்.
‘அதற்கென்ன அவசரம்.எப்ப வேணும்ன்னாலும் எடுத்துகறம்’
‘அது ஒரு விஷயமே இல்லை’ என்றார் அண்ணா.
ஆக என் அண்ணன் என் மனைவி நான் என்று மூவரும் காலையிலேயே கிளம்பி நேதாஜி நகருக்குச்சென்று வேலையை த்தொடங்கிவிடுவதாக முடிவாகியது.
‘குரோம்பேட்டை ஜாகை என்றாயே,அது எப்படி இருக்கிறது.சவுகரியமாக இருக்குமா போய் போய் வரவேண்டுமே. உன் மகன் மருமகள் என்ன சொல்கிறார்’
‘ நேதாஜி நகரில் அடுத்த வீட்டில் குடி இருந்த பரணிதான் குரோம்பேட்டை வாடகை வீட்டை பார்த்துக்கொடுத்து இருக்கிறார் ’
‘போய்பார்த்து வந்தாயா’
‘ நன்றாக இருக்கிறது.குமரன் குன்றம் போகும் தெரு வழியில்தான் ஒரு மாடி போர்ஷன்’
‘எப்படி குரோம்பேட்டையில் தண்ணீர் கஷ்டம் இருக்குமே
‘  'இந்த வெள்ளத்திலும் இப்படிக்கேள்வி வருகிறது தண்ணீர் வசதி  எல்லாம்  நன்றாகவே இருக்கிறது’
‘கொஞ்சமாய் பொருட்களை எடுத்துப்போ. கொஞ்ச நாள் ஜாகைதானே’
‘அப்படித்தான்’ பதில் சொன்னேன்.
மூவரும் காலை உணவை முடித்துக்கொண்டு புறப்பட்டோம்.அண்ணன் எங்கள் கூட வருவது பெரிய ஒத்தாசை
‘பேத்தி இன்னும் தூக்கத்தில் இருக்கிறாள்.மருமகளுக்கு இன்று அலுவலகம் செல்ல வேண்டாம்.ஆஃப் தான்.ஆக பேத்தியை ப்பார்த்துக்கொள்ள வசதியாகப்போயிற்று. மருமகளும் தூக்கத்தில்தான் இருந்தாள். மென் பொருள் வேலை என்பது மனிதர்களை இயந்திரமாகக்கருதி வேலை வாங்குவதே.
 எப்பொழுது வேலை எப்பொழுது ஓய்வு என்கிற நியதி கிடையாது.எல்லோரும் இயந்திர அடிமைகள். காசு மட்டுமே வாழ்க்கை என்றாகிய பின் வாழ்க்கையில்  ஒழுங்கு அழகு என்பதற்குப்பொருள்தான் என்னவோ?
ஒரு ஆட்டோ பிடித்து மவுண்ட் ஸ்டேஷன் வந்தோம். பிளாட்ஃபாரத்தில் மக்கள் கூட்டம் இல்லை. வெறிச்சோடிக்கிடந்தது.
‘அடுத்த வண்டி செங்கல்பட்டுன்னு போட்டு இருக்கான்’
‘தாம்பரம்னு போட்டு வர்ர வண்டியில ஏறுவோம்’ என் மனைவி யோசனை சொன்னாள்
‘ஏன்’ என் அண்ணன் கேள்வி வைத்தார்.
‘தாம்பரம் வண்டின்னா பிளாட்ஃபாரம் ஒண்ணு ரெண்டுல நிக்கும்.மாடிப்படி ஏறவேண்டி இருக்காது’ அவளின் பிரச்சனை என்றும் ஒயாதது 
‘அப்படிச்சொல்லவும் முடியாது.தாம்பரம் வண்டிகூட சில நேரம் மூணு நாலுல நிக்கும்’
‘’அது எப்பவாவதுதான். பெரும்பாலும் ஒண்ணு ரெண்டுலதான் தாம்பரம் வண்டி நிக்குது’
ஆக தாம்பரம் வண்டிக்கே செல்லலாம் என முடிவோடு இருந்தோம்.
கூட்டம் கொஞ்சம் அதிகமாகியது.அந்த செங்கல்பட்டு வண்டியே இன்னும் வரவில்லை. அதற்குப்பிறகுதானே தாம்பரம் வண்டி வரும். மழை வெள்ளம் வந்த சூழ்நிலையில் எது எப்படியோ சொல்லவும் முடியாதுதான்.
‘வண்டி வந்தா ஏறிடுங்க செங்கல்பட்டு தாம்பரம்னு பாக்கவேண்டாம்.எதையும் ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல.இப்பத்தான் ஒவ்வொண்ணா சீர் பண்றாங்க’
கொடியை கையில் பிடித்துக்கொண்ட நிலைய அதிகாரி எங்களுக்கு யோசனை சொன்னார்.
‘இன்னும் நிலமை சரியாக எவ்வளவு நாள் ஆகும்’ என் அண்ணன் விசாரிக்க ஆரம்பித்தார்.
‘அந்த கிண்டி ஸ்டேஷன் தாண்டி அடையாற்று எறக்கத்துல மண்ணு அரிப்பு ரொம்ப. பள்ளம் விழுந்து போச்சி டிராக் டேஞ்சர்ல இருக்கு வண்டிவ இஞ்ச் இஞ்சா நவுறுது’ சபரிமலைக்கு மாலை போட்டுக்கொண்டிருந்த அந்த வெண்தாடி ஸ்டேஷன் மாஸ்டர் சொல்லிக்கொண்டார்.
வண்டி தாம்பரம் என்றுதான்  ஒரு பலகையை தொங்க விட்டுக்கொண்டு உறுமி உறுமி  பிளாட்ஃபாரத்தில் வந்து நின்றுகொண்டது.
எல்லோரும் எச்சரிக்கையாக ஏறி இறங்க வேண்டும் என்பதைச்சொல்லி போலிஸ்காரர் ஒருவர் நெடிய விசில் ஒன்று அடித்துக்கொண்டிருந்தார். எப்போதும் நான் வெண்டர்களுக்கான கம்பார்ட்மெண்டை த்தேடி ஏறுவேன். அங்குதான் இடம் தாராளமாக இருக்கும். நிற்பது நடப்பது சவுகரியமாக இருக்கும்.
இனி பழவந்தாங்கல்,மீனம்பாக்கம்,திரிசூலம்.பல்லாவரம்,குரோம்பேட்டை தாம்பரம்,சானடோரியம் தாண்டித்தாண்டி அந்த தாம்பரம் வரும். வண்டி மெதுவாகவே சென்றது. வேடிக்கை பார்த்துக்கொண்டே வண்டியில் அமர்ந்திருந்தோம். தாம்பரம் நிலையம் வந்தது. என் மனைவி விரும்பிய படி முதல் பிளாட்ஃபாரத்திலேயே வண்டி நின்றது. எல்லோருக்கும் சவுகரியம்.
‘ஆவின் பூத்துல ஒரு பால் சாப்புடலாம்’ நான் சொன்ன யோசனைக்கு எல்லோரும் ஆமாம் போட்டனர்.
‘பசியா இருக்குதா’
யாரும் பதில் சொல்லவில்லை.
என் அண்ணனையும் என் மனைவியையும்  இருப்புப்பாதை போலிஸ் நிலையம் வாயிலில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர வைத்துவிட்டு நான் பால் பூத்துக்கு சென்றேன். நான் ஒரு மசாலபால் குடித்துவிட்டு இன்னும் இரண்டு என கையில் வாங்கிக்கொண்டு முதல் பிளாட்ஃபாரத்தில் நின்று கொண்டிருந்த அந்த ரயிலின் பெட்டி வழியே இந்த பக்கம் எளிதாக வந்துவிட்டேன்.
‘வண்டி இன்னும் நிக்குது’
‘ஆமாம் அது ஒரு சவுகரியம்’’ அவளுக்கு நான் பதில் சொன்னேன்.
அனைவரும் தாம்பரம் மேற்கு ஸ்டேஷனின் நுழைவுப்பகுதிக்கு வந்தோம்.
‘ஐம்பத்தைந்து எண் கொண்ட நகரப்பேருந்து செல்ல ஆரம்பித்துவிட்டதா’ என விசாரித்தேன். ஒன்றிரெண்டு செல்வதாக அங்கிருந்தவர்கள் எனக்குப்பதில் தந்தார்கள்.அப்படியெல்லாம் சென்னைவாசிகளிடம் நாம் பதில் எதுவும் வாங்கிவிடமுடியாது. இந்த மழை வெள்ளம் கொஞ்சம் அவர்களை மாற்றித்தான் வைத்திருக்கிறது.
‘எதாவது வாங்கணுமா’
‘குடிக்கறதுக்கு  தண்ணி பாட்டில் வாங்கிகலாம்.அங்க கெடைக்குமோ’ என் மனைவி உஷாராகப்பதில் சொன்னாள். நான்கைந்து பாட்டில்கள் வாங்கி வைத்துகோண்டோம்.
‘தண்ணீர் கையில் இல்லாவிட்டல் தாகம் அதிகம் எடுக்கும்.இருந்துவிட்டால் அவ்வளவு தெரியாது’ என் அண்ணா சொல்லி சிரித்துக்கொண்டார்.
ஐம்பத்தைந்து எண்  போட்டுக்கொண்ட பேருந்து ஒன்று ஊர்ந்து ஊர்ந்து வந்து சாலை ஓரமாக நின்றது. ஒரே மூத்திர நேடி. எந்த பேருந்து நிலையமும் இப்படித்தான் நாறுகிறது.இதை எல்லாம் மாற்றமுடியுமா  இல்லை அது முடியாதா என்றுதான் தெரியவில்லை. மூக்கைப்பிடித்துக்கொண்டே பேருந்தில் ஏறிவிட்டோம்.
‘வண்டி பார்வதி நகர் போகுதா’
‘ நீங்க எங்க போவுணும்?’
கண்டக்டர் எங்களைக்கேட்டார்.
‘ நாங்க பார்வதி நகருதான் போவுணும்’
‘அப்ப ஏறுங்க சட்டுனு’ என்றார். மூவரும் ஏறி அமர்ந்துகொண்டோம்.அனேக இருக்கைகள் காலியாகக்கிடந்தன. மீன் கூடைக்காரிகள் இருவர் மீன்களை கூடையில் நிரப்பிக்கொண்டு வந்திருந்தனர்.
‘இதுகள் நாங்க ஏத்த மாட்டம்’
‘எப்பிடி நாங்க எடுத்துகினு போவுறது’
அவர்கள் கேள்வி வைத்தார்கள்.
‘அத யாருகிட்ட கேக்குறது’
‘ஏன் ஒங்கிட்டதான். மீனு திம்பியா மாட்டியா இல்ல  நான் கேக்குறன்’ ஒரு மீன் கூடைக்காரி கண்டக்டரிடம் கேள்வி வைத்தாள்.
கண்டக்டர் பதில் ஏதும் சொல்லவில்லை. அவர் அவரின் பணியைப்பார்த்துக்கொண்டிருந்தார்.
‘பாப்பார சனமே கெனமா மீனு திங்குது. ஆனா வெளியில. வூட்டுல வாங்கி ஆக்கறதுதான்  இல்ல.’
ஒருகூடைக்காரி சிரித்துக்கொண்டே சொன்னாள்.
‘ஏன் மீனுவ சமச்சி சம்மணம் போட்டுக்கிட்டு திங்குற பாப்பார சனம் கூட  இருக்கு அது .கலுகத்தாவுல. நானு ஒரு மொற போய்வந்தன்’ 
‘ நீ ராச்சியம் சுத்தி இருக்குற’ அடுத்தவள் பதில் சொன்னாள். வண்டி கிருஷ்ணா நகர் தாண்டிக்கொண்டிருந்தது. பெங்களூரு செல்லும் புறவழிச்சாலையில் பேருந்துகளும் சுமையுந்துகளும் வரிசையாக சென்றுகொண்டே இருந்தன. கிருஷ்ணா நகர் சாலையில் இன்னும் வெள்ள நீர் வழிந்தபாடில்லை. பேருந்து தத்தி தத்தி சென்றது.
‘இந்த எரியா ரொம்ப பள்ளம்.ரவ மழை பேஞ்சாலும் ரோடுவ நாஸ்தி.எப்பவும் இந்த பிரச்சனை உண்டு.’
என் மனைவி சொல்லிகொண்டிருந்தாள்.
‘ நாம அடையாத்துக்கு பக்கத்துல வீடு கட்டினது. நம்ப தப்பு’ என் அண்ணன் ஆரம்பித்து வைத்தார்.
‘ நாம என்ன செய்யறது. எங்க  நாம குடி இருக்குணும்னு விதி இருக்கோ அங்கதான் அத அத செய்யமுடியும்’ என் மனைவி சொல்லிக்கொண்டிருந்தாள்.
பாரதி நகர் வந்தது. பெரிய நகரங்களில் ஊர் பெயர் குழப்பம் மிகையாக அதனை அனுபவிக்கலாம். நாங்கள் பார்வதி நகர் இறங்க வேண்டும். பாரதி நகருக்கும் பார்வதி நகருக்கும் இடையே குழப்பம் வந்து சிலர் விழிப்பதைப்பார்த்து இருக்கிறேன். பார்வதி நகருக்கு வரவேண்டியவர்கள் பாரதி நகரில் இறங்கி ஆட்டோகாரனோடு தகறாறு செய்துகொண்டு நிற்பதைப்பார்த்து இருக்கிறேன்.
ல‌ஷ்மி புரம் என்று ஒரு நிறுத்தம் ஷ்மி  நகர் என்று இன்னொரு நிறுத்தம்.இதற்கும் அதற்கும் குழப்பிக்கொண்டு நிற்கும் வெளியூர்க்காரர்கள் இதே சாலையில் எத்தனையோ பேர்.
 மொபைல் தொலைபேசி வந்த பிறகு  ஆட்டோக்காரன் சண்டை வெகுவாக  குறைந்துதான் இருக்கின்றது. ஆனாலும் சண்டைகள் இல்லாமல் இல்லை. கை தொலை பேசி இல்லாத அந்தக் காலத்தில் மாப்பிள்ளை வீடு பார்க்க வந்த திருச்சிக்காரர்கள் என் சொந்த ஊர் தருங்குடிக்கு ப்பதிலாக  பத்து கிலோமீட்டருக்கு தூரமாக இருக்கும்                                                                        (நெய்வேலி ) தர்மல் ஸ்டேஷன் நிறுத்தம் போய் திரு திரு என்றுவிழித்துவிட்டுப் பின் எங்கள் கிராமம் தருமங்குடிக்கு வந்து சேர்ந்த கதை அடிக்கடி என்  நினைவுக்கு வந்துபோகும்.
  பழைய பெருங்களத்தூர் தாண்டி பார்வதி நகரில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம். ரேஷன் கடை இருக்கும் தெரு தான் நாங்கள் எப்போதும் வழக்கமாக செல்லும் தெரு.ரேஷன்கடை பூட்டிக்கிடந்தது. இந்த மழை வெள்ள க்காலங்களில் என்ன பொருள் வரப்போகிறது யார் வாங்கப்போகிறார்கள். பிள்ளையார் கோவில் தெரு தாண்டினோம்.
நேதாஜி நகர் வந்தது.  இரண்டாவது தெருவில் இருக்கும் என் வீட்டிற்கும் வந்தாயிற்று.தெருவில் இன்னும் சேரும் சகதியும் வீச்சமடித்துக்கொண்டேதான் இருந்தது.என் அண்ணன்  வீடுகளையெல்லாம் மேலும் கீழுமாக பார்த்தபடியே ஏதோ யோசனையில் இருந்தார்.
‘என்ன யோசனை’
‘ஏன்தான்  இங்கே வீடு  நமக்கு அமைந்து போனது. நீ இப்படி எல்லாம் அவஸ்த்தை படத்தான் வேண்டுமா யோசித்துக்கொண்டே இருக்கிறேன்.யார் யாருக்கு எங்கே எப்படி  குப்பை கொட்டவேண்டும் என்று விதித்து இருக்கிறதோ அப்படித்தானே’ அண்ணன் தனக்குத் தானே  ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார். 
                     அந்தப்   பரணிதான் அண்ணா  பையன் வீட்டில் குடியிருந்தார். இப்போது வீடு பரிதாபமாய் பூட்டிக்கிடந்தது. யாரும் இல்லை. அண்ணன் அத்தனையும் நோட்டம்விட்டு  பார்த்துக்கொண்டார்.
கீழ் வீட்டைத்திறந்து என்மனைவி உள்ளாக பார்த்துக்கொண்டே இருந்தாள். மூக்கை மூடி மூடித்திறந்து அனுபவிக்கும் துர் நாற்றத்தை அறிவித்தபடி இருந்தாள்.
‘ரெண்டு ஆளு இருந்தாதான் இந்த வேலைக்கு சரியா இருக்கும். ஆளு கெடைக்குதான்னு பாருங்க’
’ நம்மால ஆவுற கதை ஒண்ணும் இல்லயா’
நான்தான் என் மனைவியைக்கேட்டேன்..
‘யாராவது செஞ்சா கூட மாட நிக்கலாம். வேற ஒண்ணும் செய்ய முடியாது.ஒரே சேறு சகதி குப்பை நாற்றம்.வேற சொல்ல என்ன இருக்கு’
நான் தெருவுக்குச்சென்று ஆட்கள் ஏதும் கிடைப்பார்களா என தேடிக்கொண்டே இருந்தேன். தூரத்தில் இரண்டு பெண்கள் நடந்து வந்துகொண்டிருந்தார்கள்.
‘அம்மா இங்க வர்ரீங்களா’
‘வீடு சுத்தம் பண்ணணுமா’ அவர்கள் எதிர் கேள்வி வைத்தார்கள்.
’ஆமாம் ஆளுவ உடனே வேணும். வாங்க’
‘தோ வர்ரம்’ அவர்கள் வந்துகொண்டிருந்தார்கள்.பிரச்சனை ஒருவிதமாக தீர்ந்துவிடும் என முடிவு செய்தேன்.
அண்ணன் தன்னால் முடிந்த வேலைகளை விடாமல் செய்துகொண்டே இருந்தார். அவர் சுபாவம் அது. எங்கள் தந்தையும் இப்படித்தான் இருப்பார். உறங்குகின்ற நேரம் தவிர்த்து ஏதும் செய்துகொண்டேதான் இருப்பார்.யார் வீடு யார் செய்யும் வேலை இதெல்லாம் அவருக்கு ஒருபொருட்டே இல்லை
‘வூட பாக்குறம் மொதல்ல அதுக்கு தக்கன கூலி பேசிக்குவோம்’
இருவரும் ஒருமித்த குரலில் சொன்னார்கள்.
என் மனைவி அவர்களுக்கு கீழ் வீட்டை க்காட்டிக்கொண்டு இருந்தாள்.
‘வூடு சின்னது ஆனா வேல கெனம்’ குள்ளமானவள் சட்டமாக சொன்னாள்.
‘மொதல்ல பேசிக்கறம் ஆளுக்கு ஆயிரம்னு ரெண்டாயிரம் குடுங்க. நாங்க வேலய தொடங்கறம்’
 நான் யோசிக்க தொடங்கினேன்.
’‘இதுல என்னா யோசனை’ என் மனைவி மெதுவாகச்சொன்னாள்.
‘ஒண்ணும் தப்பில்ல வேல ஆவுறதுதான் நாம பாக்குணும்’ என் அண்ணன் முடிவாகச்சொன்னார்.
இரண்டு பெண்களும் வேலயை ஆரம்பித்தனர். இருவரும் கையில் வைத்திருந்த பையிலிருந்துபழந்துணி  ஒன்றை எடுத்து மேலாகச்சுற்றிக்கொண்டனர். அழுக்குப்படாமல் இருப்பதற்கான ஏற்பாடு இது.
 நனைந்த சாமான்கள் எல்லாம் சேறு பூசிகொண்டு காட்சி அளித்தன. என் சின்ன மகனின் புத்தகங்கள் ஒரு அம்பாரம் இருக்கும்.அது கொழ கொழ என்று குவியலாகக்கிடந்தது.ஸ்டீல் பீரோ வில் இருந்த துணிமணிகள் எல்லாம் நொத நொத என காணப்பட்டன.மளிகை சாமான்கள் கன்னா பின்னாவென்று நாற்றமெடுத்துக்கொண்டு சமையல் அறையில் நாறிப்போய்க்கிடந்தது. இரண்டு பெண்களும் பம்பரமாக வேலை செய்தார்கள்.
எங்கள் வீட்டின் அடுத்த மனை காலியாகத்தான் கிடந்தது.அங்கே ஒரு மாமரம் நின்றுகொண்டிருக்கும் முதல் வீட்டு  ராஜசேகர் சார் வைத்ததுஅது. இந்த ப்பகுதி சிறுவர்களுக்கு  தின்னக்காய் மாங்காய் கொடுத்து உதவியது. அதன் கீழாக வெள்ள நீர் நின்று கொண்டிருந்தது.அந்த நீரை த்தான் வாளி வாளி யாக மொண்டு வந்து ரெண்டு பெண்களும் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தனர்.பாத்திரங்கள் துணிமணிகள் சுத்தமாக்கப்பட்டுக்கொண்டிருந்தன. எறியப்படவேண்டிய குப்பைகள் ஏகத்துக்கு இருந்தன.அவை தெருவுக்கு வந்தன. புத்தகங்கள் ஏதேனும் தேறுமா எனப்பார்த்துக்கொண்டிருந்தேன்.என் சின்ன பையனின் புத்தகங்கள் என்ஜினீரிங் புத்தகங்கள் கோவிந்தா ஆகியிருந்தது.ஃப்ரிஜ் செத்துப்போயிருந்தது.சாம்சங் டிவி வெளி நாட்டிலிருந்து சின்னவனின் நண்பன் அனுப்பியிருந்தது கொழ கொழத்துக்கிடந்தது.மடிக்கணினி லெனொவா ஜலசமாதியாகிக்காட்சி தந்தது. மின் விசிறிகள் சேறு பூசிக்கொண்டு காட்சி தந்தன. எல்லாவற்றிலும் தண்ணீர் புகுந்து மொத்தமாய் பெறுத்த நஷ்டத்தை கொண்டு வந்திருந்தது. தரையில் இரண்டு அங்குலத்திற்கு மண் படுக்கை. நண்டும் நத்தையும் பூரானும் அதன் மீது ஊர்ந்து கொண்டிருந்தன.எல்லாவற்றையும் சரியாக அந்த இரண்டு பெண்களும் சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.
என் அண்ணன் கூடமாட ஒத்தாசை செய்துகொண்டே இருந்தார்.என் மனைவி அசந்துபோய் உட்கார்ந்து விட்டாள்.
தெருவில் ‘சார் சார்’ என அழைக்கும் ஒலி கேட்டது. யாரென்று எட்டிப்பார்த்தேன்.
‘இங்க ரெண்டு பொம்பள ஆளுவ வேல செய்யுதா’
‘ஆமாம்’
‘அதுவுள கூப்பிடுங்க’
தலையில் முண்டாசுகட்டிய ஒருவன் என்னை விரட்டிக்கொண்டு இருந்தான்.
‘ நீங்க யாரு ஏன் அவுங்கள் கூப்பிடுறீங்க’
நான்தான் அவர்களுக்கு பாதுகாவலன் என்பதாகக்காட்டிக்கொண்டேன்.
‘யாரு அண்ணனா’ கேட்டுக்கொண்டே இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்தனர்.
’வா வா வெளியில வா’
நான் வாயடைத்துப்போய் நின்றுகொண்டிருந்தேன்.ஏன் இப்படி இவர்களை க்கூப்பிடுகிறான்?
இரண்டு பெண்களும் கைகளைக்கட்டிக்கொண்டு அந்த ஆள் முன்னே வந்து நின்றனர்.ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
‘ஆர கேட்டுகிட்டு இந்த வேலைக்கு வந்தீங்க’
‘தெருவுல போனம் கூப்புட்டாங்க வந்தம்’
இருவரும் கோரஸாக  பதில் தந்தனர். நான் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றேன்.
‘இப்ப என்ன செய்யுணும்’ என் அண்ணன் அவனைக்  கேட்டுவிட்டார்.                           அண்ணனுக்கு எதிலும் சட்டென்று கோபம் வந்துதான் விடுகிறது. எங்கள் தருமங்குடி வாழ்க்கையின் போது என் அம்மா எவ்வளவோ சொல்லித்தான் பார்த்தாள். அண்ணன் அம்மாவை இந்த விஷயத்தில் மாத்திரம் லட்சியமே செய்யமாட்டார்.அம்மாவை தெய்வம் என மதித்தவர் தான்.ஆனால் சில விஷயஙளில் மொரட்டு பிடிவாதக்காரர்.
‘இந்த வூட்டுக்கு முன்னாடி அட்வான்சு வாங்கன வூட்டு வேல கெடக்குது. இங்க வந்து புது வேல தொட்டுகிட்டு நிக்குறீங்க.அவவுளுக்குவதில் சொல்லுறது எப்பிடி.சரி அது என் சோலிகெடக்குட்டும்.இங்க என்ன பேசிக்கிட்டு வந்து வேலய தொட்டிங்க’
‘ஆளுக்கு ஆயிரம்னு பேசி இருக்கம்’
‘அடி செருப்பால. ஆளுக்கு ரேண்டாயிரம்னு பேசி இருக்கணும். பேசத்தெரியாம பேசிபுட்டு வேலய தொடுறீங்க யாரு செமக்குறது. இந்த கசமாலத்தை எல்லாம் கழுவுரதுன்னா சும்மாவா. நாளைக்கு சொரம் வாந்தின்னு வந்தா இவுங்க பின்னாடி தொறத்திகிட்டு போவியா. கைகாலு கழுவ மூணு சோப்பு ஆவும் அத்தினியும் நரவ. அதுவுளுக்கு வேல ஆனா போதும்னு நிக்கும். நாம தெனம் வேலக்கிபோவுணும். ஒரு நாளய கூத்தா ஆடிபுட்டு மூலையில மொடங்கிகறதா தெரிய வேணாம்’
அந்த பெண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஏசிக்கொண்டு நின்றார்கள்.
‘ஒன்னால நான் கெட்டன் என்னால நீ கெட்ட சமாச்சரம் இல்ல’ வந்தவன் விரட்ட ஆரம்பித்தான்.
நான் இதை எப்படி சமாளிக்கலாம் என யோசனையில் இறங்கினேன்.’ என் மனைவி என்னிடம் வந்தாள். வந்தவனுக்கு என்ன வேண்டும் என்பதில் குறியாக இருந்தாள்.
‘’இப்ப எப்பிடி வேல ஆவுறது’
‘சாரு அந்த பொம்பளவ ரெண்டாலும் கெட்டது. வேல உங்களுக்கு பட்டுன்னு ஆவுது அது பெரிசு. இன்னும் ஒரு ஆயிரம் ரூவா குடுத்துடுங்க ஒண்ணும் பாக்காதிங்க.’
‘இது ஒண்ணும்  சரியா தெரியல’
‘சாரு எவ்வளவோ போவுது எவ்வளவோ வருது இப்ப வெள்ளம் வரும்னு யாரு கண்டா.ஆச்சி போச்சி எம்மானோ ஆயிபோச்சி.ரடசக் கணக்குல நஸ்டம்னு தெரிஞ்சிதான் பெறவு சீரு பண்றம். அப்படியே உட்டுடமுடியுமா சொல்லுங்க இதுல கணக்கு பாக்காதிங்க’
அந்த பெண்கள் இருவரும் வேலையைத்தொடர்ந்துகொண்டனர்.
‘ நீங்க போயி ஆவுற கதையை பாருங்க. சாரு கொஞ்சம் யோசனை பண்ணுறாரு அதுல என்னா இருக்கு.ஒரு குடும்பஸ்தன்னா இது கூடம் இல்லன்னா என்னா ஆவுறது. ஆருக்கும் இருக்குறதுதான’
அவன் சொல்லிக்கொண்டே போனான். நான் ஒன்றும் பதில் பேசவில்லை.என் அண்ணன் அவர் வேலையை ஏதோ பார்க்க ஆரம்பித்தார். என் மனைவி அந்தப்பெண்களோடு ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.வந்து சத்தம் போட்ட அந்த ஆசாமியும் இடத்தைக்காலிசெய்து புறப்பட்டார்.
‘ நாங்க எங்க வேலைக்கு போனாலும் அந்த அசாமிக்கு ஒரு நாளைக்கு அய்நூறு ரூவா குடுத்துடணும்,ரெண்டு பேருக்கும் தலா அய்நூறுன்னு ஆயிரமாவுது அதான் கணக்கு.இந்தக்கழுத எங்கயோ ஊருக்குப்போயிருக்குன்னு யாரோ சொன்னாங்கன்னு நாங்க கெளம்பிவந்தம்.அது தான் இமுஷை.'என்றாள்  வந்த இருவரி;ல் உயரமான பெண்.
அனேகமாக வந்த வேலை அனேகமாக முடிந்தும் விட்டது. சும்மா சொல்லக்கூடாது. பம்பரமாகவே வேலை செய்து ஒருவழியாக அதை அதை அசமடக்கிவிட்டார்கள்.ப்ளீச்சிங் பவுடர் போட்டு கழுவி வீடு சுத்தமாகிவிட்டது.வீடு பளிச்சென்று இருந்தது.
ரெண்டாயிரத்தோடு ஆயிரம் கூட்டி மூவாயிரம் கொடுத்து அந்த பெண்கள் இருவரையும் அனுப்பிவைத்தோம்.
‘ஆயிரம் அவுருக்கு ப்பூடும்’ என்றாள் அந்த உயரமானவள்.’
‘அதுக்கு என்ன வெட்டிப்பியா  குத்திப்பியா கெளம்பு கெளம்பு’ என்றாள் அடுத்தவள்.
வீதியில் ஐந்து பேருக்கு நின்று வெள்ளச்சேதம் கணக்கு எடுத்துக்கொண்டு இருந்தார்கள். தூரத்தில் அரசாங்க ஜீப் ஒன்று நின்று கொண்டிருந்தது. வீட்டுக்கு வீடு ஒருவிண்ணப்பம் வழங்கிக்கொண்டிருந்தார்கள்.அந்த விண்ணப்பம் பூர்த்திசெய்து அதனொடு ரேஷன் கார்டு செராக்ஸ் வங்கிக்கணக்கின் புத்தக முதல் பக்க செராக்ஸ் இணைத்து அதனை அந்தந்த பஞ்சாயத்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று சொன்னார்கள். எனக்கும் ஒரு விண்ணப்பம் வந்தது. வாங்கி பத்திரமாக வைத்துக்கொண்டேன்.
அரசாங்க ஜீப்பிற்கு பின்புறமாக ஒரு வேன் வந்து நின்றது. அங்கிருந்து ஒரு அறிவிப்பு வந்தது. ஒலி பெருக்கி வைத்து இருந்தார்கள்.’உணவுப்பொட்டலங்கள் வேனில் அடுக்கி வைத்திருந்தார்கள்.தமிழ் நாடு தொலைபேசி ஊழியர் சங்கம் என்று சிவப்பு எழுத்துக்களால் எழுதப்பட்ட பேனர் ஒன்று வேனில் மய்யமாய் கட்டப்பட்டிருந்தது.அதனிலிருந்து நான்கு பேருக்கு இறங்கி உணவுப்  பொட்டலங்களை விநியோகித்துக்கொண்டிருந்தார்கள்.
‘’ நீங்க எல்லாம் எந்த ஊர் காரங்க’
என் அண்ணன் அவர்களை க்கேட்டார்.
‘ நாங்க கடலூர்ல இருந்து வர்ரோம். கடலூர் டெலிபோன் ஆபிசுல வேல செய்யுறவங்க’
‘ நீங்க இவ்வளவு தூரம் வந்து எங்களுக்கு உதவி செய்றீங்களே’
‘’மனுஷங்க எங்க கஷ்டப்பட்டாலும் ஒண்ணுதானே.கொஞ்சம் தூரம் வந்து இருக்கம் அவ்வளவுதான். எங்க ஊர் கடலூர்ல சுனாமி வந்துது.   அப்ப யாரு யாரு எல்லாம் எங்க எங்கேந்தோ வந்து உதவினாங்க. நாங்களும் அப்பிடி எங்கயாவது கஷ்டம்னா போயிடுவோம்.’
‘உங்க சம்பளம் போனசுன்னுதானே நீங்க தெருவுக்கு வருவீங்க இப்படி க்கூட வருவீங்களா’’
‘இல்ல நாங்க அப்பிடி இல்லே. இந்த சமுதாயத்தை நேசிக்கணும்னு எங்க தலைவருங்க சொல்லிகொடுத்து இருக்காங்க.சுய நலமா வாழுறது வாழ்க்கை இல்லேன்னு  எங்களுக்கு சொல்லிதான் குடுத்து இருக்காங்க.’
உயரமான ஒரு மனிதர் சொல்லிக்கொண்டிருந்தார். வெள்ளை சட்டையும் வெள்ளை வேட்டியும் கட்டியிருந்தார்.அவரின் கட்டளைகளை அவரோடு வந்திருந்த அனைவரும் கேட்டு நடந்துகொள்வதாகவே தெரிந்தது.
என் அண்ணன் எங்களுக்கு நான்கு பொட்டலங்களை வாங்கி வந்தார். தண்ணீர் பாட்டில்களும் தந்தார்கள் கருணைமிக்க அந்த தொலைபேசி ஊழியர்கள்.
என் அண்ணன் மகிழ்ச்சியாகவே காணப்பட்டார்.
‘ நம்பிக்கை இருக்கு அவ்வளவு சீக்கிரம் ஒண்ணும் ஒலகம் அழிஞ்சிடாது’ சொல்லிக்கொண்டே எல்லோரும் உணவு சாப்பிட்டோம்.
அண்ணி மதிய உணவுக்கென நாங்கள் கிளம்பும்போது எங்களோடு அனுப்பியது அப்படியே இருந்தது.
‘அந்த உணவு நாம் ஆதம்பாக்கத்திலிருந்து கொண்டுவந்தது குரோம்பேட்டைக்கே எடுத்துச்சென்றுவிடலாம்’ நான்தான் சொன்னேன்
‘அதுவும் சரி’ என் அண்ணன் ஆமோதித்தார்.
வீதியில் பிஸ்கெட் பாக்கெட்டுகள் நிரப்பிய பைகளை இரண்டு கைகளிலும் வைத்துக்கோண்டு கொடுத்துக்கொண்டே ஒரு சொட்டைத்தலை மனிதர் போனார்.தலை சொட்டையாக இருந்தது அப்படிச்சொல்வதினால்.அவர் மீது எனக்கு மரியாதை இல்லை என்றெல்லாம் நீங்கள் ஒரு தப்புக் கணக்குப்போட்டுவிடாதீர்கள்
‘இந்தாங்க மூணு பேருன்னா மூணு பாக்கெட்டு’ எங்களிடம் கொடுத்துப்போனார்.
‘ நீங்க யாருன்னு தெரியல’ நான்தான் கேட்டேன்.
‘’உங்க ஒறவு க்காரந்தான்’ சொல்லிவிட்டு போய்க்கோண்டே இருந்தார்.இப்படி எத்தனையோ பேர் உதவி செய்துகொண்டே போனார்கள். தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் ஷண்முகக்கடவுளை வணங்கிப்பாடுவார் வள்ளலார். 
இந்த மழை வெள்ளம் வந்து சென்னை மக்களின்  மனம் எத்தனைப்பெரியது என்பதை உலகுக்கே அறிவிப்பு செய்தது.துணிமணிகள் சோப்புக்கள் தின்பண்டங்கள் ஆயத்த ஆடைகள் போர்வைகள் கம்பளிகள்  கோரைப்பாய்கள் வேட்டிப்புடவைகள் மருந்துப்பொருள்கள் என கொடுத்துக்கொண்டே இருந்தனர். 
வீட்டுக்கு மின்சாரம் வந்துவிட்டது என்றால்தான்  நிலமை சரியாக த்தொடங்கிவிட்டது எனக்கொள்ளமுடியும். அது என்று வருமோ மின்கம்பங்கள் மின்மாற்றிகள் வயர்கள் இன்சுலேட்டர்கள் என்று இருக்கும் தேவைகள் சொல்லிமாளாது. நிலமையைச்சீர்செய்ய  நுணுக்கம் அறிந்த மனிதர்கள் எங்கிருந்தோ வந்து ஆகவேண்டும்.அதற்கான அரசு உத்தரவுகள்: வெளிவந்து அவை அமல் ஆகவும் வேண்டும்.
என் அண்ணனிடம் சொன்னேன் ,’ நீ பார்வதி நகர் பேருந்து நிறுத்தம்வரைக்கும் போ. ஒரு குட்டியானை கிடைக்கிறதா என்று பார். நமக்கு அவசரத்துக்கு த்தேவையான பாத்திரங்கள் மளிகை சாமான்கள் அடுப்பு சிலிண்டர் கொஞ்சம் துணிமணிகள் ஏற்றிக்கொண்டு குரோம்பேட்டை வீட்டுக்குச்சென்றாகவேண்டும்’
‘அது என்னப்பா குட்டியானை’
‘மினி லாரியைவிட இன்னும் கொஞ்சம் சின்ன வண்டி உனக்குத்தெரியாதா’
‘இருந்தாலும் கேட்டுக்கொள்ளலாம் என்றுதான்’
‘பெரிய பேரம் ஒன்றும் பெசவேண்டாம்.வண்டி கிடைத்தால் போதும்’
‘சரி நான் போய் வருகிறேன்’ அண்ணன் கிளம்பினார்.
என் மனைவி தேவையான பாத்திரங்களையும் மளிகை சாமான்களையும் ஒரு ஓரமாக அடுக்க ஆரம்பித்தாள் நான் கேஸடுப்பை சிலிண்டரைக்கொண்டுவந்து அவைகளோடு சேர்த்தேன். இன்னும் என்ன என்ன தேவையோ அவைகளை அவள் கொண்டு வந்து கொண்டு வந்து அடுக்கினாள்..
‘ நாம வச்சிருந்த ஆல்பம் எல்லாம் போயிடுச்சி பாத்தியா’
‘அதை பார்த்தேன்’ என்றாள் நான்கைந்து ஆல்பங்களுக்கு இருக்கலாம்.என் திருமண ஆல்பமும் அதனில் இருந்தது.என் தய் தந்தையர் என்னுடன் பிறந்தோர் நண்பர்கள் என எல்லோரும். போட்டோக்கள் எண்ணிக்கை  ஐநூறு இருக்கலாம்.எல்லாம் கொழ கொழ என்று இருந்தன.
‘இவைகளை மொட்டை மாடியில் முதலிலேயே காயவைத்து இருக்கலாம்’
‘கடைசியாகத்தானே அவைகளை ப்பார்த்தோம்’
‘மேல்தள வீட்டினுள்ளேயே அவைகளை பிரித்து பிரித்து வைத்துவிட்டு சென்றும்  இருக்கலாம்’
’அவை போனது போனதுதான்’
‘முயற்சி செய்வோம் பார்க்கலாம். பஸ் ஸ்டாப்பிங் அருகே ஒரு ஸ்டுடியோக்காரன் இருக்கிறானே'’
என்றாள் மனைவி.
வெள்ளம் எத்தனையோ விழுங்கியிருக்கிறது.. கடலூரில் சுனாமி வந்தபோது இவை எல்லாம் பார்த்த விஷயங்கள். வரலாற்றில் தமிழ் நாட்டை எத்தனையோ கடல் சீற்றங்கள் பாதித்து இருக்கின்றன. முதல் சங்கம் இரண்டாவது தமிழ் சங்கம் குமரிக்கு தெற்கே இருந்த நிலப்பரப்பு  காவிரி கடல் சேரும் பூம்புகார் நகரம் இன்னும் எத்தனையோ. திருச்சி அரியலூர் பகுதியே ஒரு காலத்தில் கடலாக இருந்ததென்று ஆராய்ச்சிக்காரர்கள் அங்கு கிடைக்கும் சுண்ணாம்புக்கல்லை வைத்துச்  செய்திசொல்கிறார்கள். பிரபஞ்சத்தை நோக்க இந்த மனிதன் ஒரு கொசு மாதிரிதான் மனம் சொல்லிக்கொண்டே போனது.
‘என்ன யோசனை’
‘ஒன்றுமில்லை’ அவளிடம் பொய்தான் சொன்னேன்.
அதற்குள்ளாக மினி லாரி யை அழைத்துக்கொண்டு அண்ணன் வீட்டுவாசலுக்கு வந்து விட்டார்.மினி லாரியின் டிரைவர் வண்டியைவிட்டு கீழே இறங்கி’ சாமானுவுள ஏத்துங்க பட்டு பட்டுன்னு ஆவுட்டும் வேல’
சத்தம் போட்டார். அண்ணன் தயாராக இருந்த சாமான்களை ஒவ்வொன்றாக லாரியில் ஏற்றிக்கொண்டிருந்தார்.  எடுத்துச்செல்ல வேண்டிய எல்லாசாமான்களும் ஏற்றிமுடித்து அண்ணன் லாரியின் பின்னே ஏறி அமர்ந்துகொண்டார். நானும் என் மனைவியும் டிரைவர் பக்கத்தில் ஏறி அமர்ந்துகொண்டோம்.
‘வண்டிக்கு என்ன பேசியிருக்காரு உங்க அண்ணன்’
என் மனைவி என்னிடம் கேட்டாள்.
‘அவரத்தான் கேட்கணும்’
‘ நீங்க  குடுக்கறத குடுங்க நா ஒண்ணும் கூட கேட்டுடமாட்டன்’ வண்டியின்’ டிரைவர் சொல்லிக்கொண்டான்.
நாங்கள் இருவரும் உட்கார இடம் பத்தவே இல்லை. அண்ணன் வண்டியின் பின்னே சாமான்களோடு சாமான்களாக உட்கார்ந்து வந்துகொண்டிருந்தார்.
வண்டி குரோம்பேட்டை நோக்கிச்சென்று கொண்டிருந்தது.குமரன் குன்றம் போகும் வழியில்தான் அந்த மேல் போர்ஷன் வீடு.  வெள்ளம் புகுந்த நேதாஜி நகர் என்  வீட்டுக்குப்பக்கத்து வீட்டுக்காரர் அந்த பரணிதான் பார்த்துக்கொடுத்து இருக்கிறாரே அங்கேதான் சென்றுகொண்டிருக்கிறோம். .
----------------------------------------------------




 ...





 .



.


.

No comments:

Post a Comment